அலகிலா விளையாட்டு

2 comments

காரைகள் உதிர்ந்து எலும்பும் தோலுமாய்த் தளர்ந்து நிற்கும் முதியவரைப் போல உடம்பிலிருக்கும் செங்கற்கள் தெரியப் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது எங்கள் தெருவை நோக்கியபடி இருக்கும் பாலமுருகன் ஆலயத்தின் சதுர வடிவ சுற்றுச்சுவர்.

சுவரை ஒட்டியிருந்த நந்தியாவட்டை மரங்களின் துணைகொண்டு மதில்மீது ஏறி அமர்ந்து, துவார பாலகர்களென இணையாக நின்றிருந்த இரண்டு கல்தூண்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி மதிலைச் சுற்றி சதுரமிடுவதுதான் எங்களின் அன்றாட விளையாட்டுகளில் பிரதானமானது.

மதில் மேலே ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் பொக்கைகள் பட்டு, பின்பக்கத்தில் கால் சட்டைகள் கிழிவதும் அதற்காக வீட்டில் அடியும் திட்டும் பன்னெடுங்காலமாய் வாங்குவது தொடர்ந்தாலும் மதில் மீது ஏறினால்தான் அன்றைய நாள், எங்களுக்கு ஆடிக்களித்த நிறைவை அளிக்கும். பெரியவர்கள் யாராவது கோவில் பக்கமாகக் கடக்கும்போது மட்டும் இறங்குவது மாதிரி ஒரு காலைக் கீழே தொங்கவிட்டுப் பாவனை காட்டிவிட்டு அவர் தலை மறைந்ததும் மறுபடியும் தாவல் உடனடியாகத் தொடங்கும்.

என் ஆச்சி, தான் வாழ்க்கைப்பட்ட ஊரான தத்தனூரில் இருக்கப் பிடிக்காமல், தான் பிறந்த பனம்பள்ளிக்கே தாத்தாவுடன் வரும்போது இந்தக் கோவிலுக்கு மதில் சுவர் கட்டுவதற்காகக் குழி தோண்டிக்கொண்டிருந்தார்களாம். ஊர்ப்பஞ்சாயத்து முடிவுசெய்திருந்த வீட்டுக்கு இரண்டு ரூபாய் வரிப்பணத்தைக் கட்ட முடியாமல் அதற்குப் பதிலாக ஆச்சியும் தாத்தாவுமாகச் சேர்ந்து இங்கு கல், மண் சுமந்து உழவாரப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். முருகன் கோவிலில் விளையாடிவிட்டு வீட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் இந்தக் கதையை ஆச்சி எங்களுக்கு வரி மாறாமல் சொல்வது வழக்கம். 

இன்றைக்கு காணும் பொங்கல் நாள்!

வானம் இரவு உடையிலிருந்து பகல் உடைக்கு மாறிக்கொண்டிருக்கும்போதே மூன்று தெருவிலிருந்தும் பையன்கள் விளையாடுவதற்குக் கோவிலுக்கு இரண்டிரண்டு பேராக வரத்தொடங்கினார்கள். நேற்றே எல்லோரும் ஆறுமணிக்குக் கோவிலுக்கு வந்துவிட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டு தகவல் சொல்லப்பட்டுவிட்டது.

மார்கழி மிச்சம் வைத்திருந்த குளிரின் தடம் உடலில் ஏறிக்கொண்டிருந்ததால் அவ்வப்போது உள்ளங்கைகளை உரசி வெப்பம் உண்டாக்கிக்கொண்டிருந்தார்கள் வயதில் சற்றுப் பெரிய பையன்கள். அவர்களில் இளையவர்கள், இன்னும் முழுவதுமாகக் கலையாத தூக்கத்தை முகத்தில் வழியவிட்டுக்கொண்டே அண்ணன்களின் வாய் பார்த்து நின்றுகொண்டிருந்தார்கள்.

கதிரெழுந்ததும் பல வண்ணங்களில் அமிழ்த்தி எடுத்ததைப் போல வண்ணமடிக்கப்பட்ட வீடுகள் எல்லாமே புதுச்சட்டை போட்ட பையன்களைப் போலிருந்தன. புதுத் தாவணி அக்காக்களும், பழம் புடவை அம்மாக்களும் கோலம் போடும் வைபவம் எல்லா வாசல்களிலும் தொடங்கியிருந்தது. பால்காரர்களின் ஆரன் சத்தமும், மாடுகளைக் குளிப்பாட்டவும் மூக்கணாங்கயிறு போடவும் நாக்கை மடக்கி மேலண்ணத்தைத் தட்டி எழுப்பப்படும் தாஜா சத்தமும் அக்கம்பக்கத்திலிருந்து வந்தபடியே இருந்தது. மண்டிக்கொல்லை தென்னை மரத்திலிருந்து குயில் கேட்ட கேள்விக்குக் கோவிலுக்குப் பின்னாலிருந்த நாவல் மரத்திலிருந்து மைனா பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

எங்களுக்குப் பொங்கல் கொண்டாட்டம், மாட்டுப்பொங்கல் அந்தியிலிருந்து தொடங்கும். பெரிய குளத்திலும், ராஜா குளத்திலும் மாடுகளைக் குளிப்பாட்டி, நெட்டிலிங்க, நெல்லிக்கொத்து மாலைகள் அணிவித்து, கொம்பில் விதவித வர்ணமடித்து, புதிய பூட்டாங்கயிறு கட்டி, நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்து, மஞ்சள் குங்குமச் சோறை மாடுகளுக்குப் படையல் வைத்து, சூடம், சாம்பிராணி காட்டிக் குடும்பத்தோடு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி, பின் கரும்பைக் கடித்துக்கொண்டே டயர்வண்டியில் ஊர்முழுக்க வலம் வருவோம்.

மறுநாள் காணும் பொங்கலன்று பசி மறந்து, உடல் மறந்து, உலகெலாம் மறந்து ஆடி ஆடிக் களைத்தே அன்றைய நாள் களை கட்டும்!

எங்கள் எல்லோரையும் வட்டமாக அமரவைத்து அன்றைக்கு நாள் முழுக்க விளையாடப்போகும் விளையாட்டு நிரல்களை சுந்தரம் அண்ணனும், குளஞ்சி அண்ணனும் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தரை அதிர ஓட வேண்டுமென டைவ் அடித்த மனத்தை அடக்கிக்கொண்டு அனைவரும் கண்களில் ஆர்வத்தோடு கேட்டுகொண்டு அமர்ந்திருந்தோம். 

வருடத்தில முந்நூற்று அறுபத்து நான்கு நாள்களும் கிரிக்கெட் விளையாடுவதால் இன்று ஒருநாள் மட்டும் கிரிக்கெட்டுக்கு விடுமுறை. முதலில் கிட்டிப்புள், அதற்கடுத்து ஓட்டப்பந்தயம், அது முடிந்து கபடி, பின்னர் ஸ்லோ சைக்கிள் பந்தயம் (நான் அப்போதுதான் குரங்கு பெடலில் இருந்து கம்பிக்கு மாறி சீட்டில் அமர்ந்திருந்தேன்.. இரண்டு வாரமாகப் பள்ளிக்குச் சென்று வரும்போது மாலை நேரத்தில் மெதுமெதுவாக ஓட்டுவதற்குப் பயிற்சி எடுத்திருந்தேன்), இறுதியாகப் பானை கட்டி உறியடித்தல் (அதற்காக மூன்று பானைகள் வாங்க ரோட்டுத் தெரு மண்ணுடையார் வீட்டிற்கு இரண்டு பேர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.)

கிட்டிப்புள் செய்வதில் வினைஞனான குளஞ்சி அண்ணன் எங்கள் கொல்லைப்புற வேலியோரம் நின்றிருந்த பூவரச மரத்தில் சத்தம் வராமலும், சந்தேகம் வராமலும் உள்பக்கமாகக் கிளைத்திருந்த ஒரு போத்தை வெட்டி எடுத்து வந்திருந்தான். அதை அவன் அறிவாளால் இழைத்துச் செய்துகொண்டிருந்ததைப் பார்க்கும்போதே தொட்டுப் பார்க்க ஆவலாக இருந்தது.

கபடிக்காக நேற்றே மண்ணடித்துச் சமன்படுத்தி நிரவப்பட்டிருந்தது மண்டிக்கொல்லையின் மேற்குப் பகுதி. மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுப் புலிப்பாய்ச்சலாகச் சென்று மின்னல் வேகத்தில் ஆள்களை அவுட் செய்து வரும் கனவு இரண்டு நாள்களாகவே வந்துகொண்டிருக்கிறது. கபடி ஆரம்பிக்கும் முன்பு வீட்டிற்குப் போய் உடம்பில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு வரவேண்டும்.  

மற்ற விளையாட்டுகளுக்கெல்லாம் ஆயத்தமாக நேரம் எடுத்துக்கொண்டிருந்ததால் நாங்கள் மதில் மீது ஒவ்வொருவராக ஏறத் தொடங்கினோம். நான் இடதுபக்கக் கல்தூணிலிருந்து வலது தூணுக்குத் தாவத் தயாராகும்போது ஒரு ஆட்டோ எங்கள் தெருவிற்குள் நுழைந்தது. என் கண்கள் ஆட்டோவோடு சென்று எங்கள் வீட்டு வாசலில் நின்றது.

சட்டெனக் குதித்து நான் வீட்டை நோக்கி ஓட ஆரம்பிக்க, என் தம்பிகள் எனக்குப் பின்னால் ஓடி வந்தார்கள். வாயில் முந்தானையைப் பொத்தி நின்றுகொண்டிருந்த அம்மா எங்களைப் பார்த்துக்கொண்டே ஆட்டோவில் ஏறி அமர, என் இரண்டாவது தம்பி கணேஷ் கைகால்களை உதறிக்கொண்டு கத்தி அழ ஆரம்பித்தான்.  நாங்கள் பதற்றத்தோடு ஆட்டோவைச் சமீபிக்கும்போது அப்பா ஒரு குழந்தையை ஏந்தி வருவதைப்போலப் பச்சை வண்ணத் துப்பட்டிக்குள் சுற்றப்பட்டிருந்த ஆச்சியை வீட்டிலிருந்து தூக்கி வந்து ஆட்டோவிற்குள் அமர வைக்க, அம்மா ஆச்சியின் தோளைப் பற்றி சரியாக அமர வைத்தாள். ஆச்சி பற்களை நரநரவெனக் கடித்துக்கொண்டு, கண்ணை இறுக மூடி, மார்புக்கு நடுவே இரண்டு கைகளையும் அழுத்திப் பிடித்தபடி உடலை முறுக்கிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போதே அவளது முகம் அவள் அனுபவிக்கும் வலியைத் துலக்கமாக்கிக் காட்டியது. இதுபோல் ஆச்சிக்கு ஏற்கெனவே நெஞ்சு வலி வந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அன்று இரவு வந்த வலி இன்றைக்குக் காலையிலேயே வந்திருப்பது விநோதமாக இருந்தது.

ஆச்சிக்கு என்ன துக்கம் நேர்ந்தாலும் முருகனைத்தான் அழைப்பாள். இப்போதும் அவள் மனத்தில் முருகனை ஒருமையில் திட்டிக்கொண்டே வேண்டிக்கொள்வாளாக இருக்கும். ஒருமுறை ஆச்சிக்குச் சின்னம்மை போட்டு கண்களைத் தவிர உடல் முழுக்கக் கொப்புளங்களாக இருந்திருக்கிறது. நெருப்பை அள்ளிக் கொட்டியது போன்ற காய்ச்சல் அடித்து, கொப்புளங்கள் உடையும் போதெல்லாம் ஊசி குத்தியது போல வேதனை அங்கம் முழுக்கப் பரவியிருக்கிறது. தன் எட்டுப் பிள்ளைகளுக்கும் பத்து பட்டுவிடக்கூடாது எனத் தாத்தாவைக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு வாரம் பாலமுருகன் கோவில் பிரகாரத்திலேயே படுத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறாள்.

“ஒடம்புக்கு என்னா வந்தாலும் செரிதான் தம்பி.. முருகா இது நீ குடுத்த உசுரு எனக்கும் என் குடும்பத்துக்கும் நீதான் கெதின்னு சொல்லி உழுந்து கும்புட்டுட்டா போதும்.. விறுவிறுன்னு ஓடியாந்துருவான் முருகன்.”

இரு கரங்களையும் நெஞ்சுக்கு நேரே குவித்துச் சொல்லும்போது ஆச்சியின் விழிகளில் கண்ணீர் தளும்பி நிற்கும். 

வலியில் துடித்துக்கொண்டிருந்த ஆச்சியின் கண்கள் இறுக்கமாக மூடியிருந்தன. பற்களைக் கடிக்கும் சத்தம் வந்துகொண்டேயிருந்தது. தாங்க முடியாது உடலை முறுக்கி எழும் ஆச்சியின் தோள்களை அம்மா பற்றிக்கொண்டிருந்தாள்.

அம்மா என்னிடம், ”ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு வர்றோம் வீட்லயே இருங்க” என்று கலவரமான முகத்தோடு சொன்னாள். ’சரி’யென்று தலையாட்டினாலும் நிரந்த எதிரிகளான அம்மாவும் ஆச்சியும் அருகருகே ஒற்றுமையாக உட்கார்ந்திருக்கும் காட்சியை முதன்முறையாகப் பார்த்த அதிர்ச்சியிலேயே நான் உறைந்துபோய் நின்றுவிட்டேன். சில நொடிகள் அவர்கள் இருவருக்குமிடையே நடந்த சண்டைகளையெல்லாம் மனத்திரையில் கொண்டுவர முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன். ஆச்சியின் கேவல் சத்தம், வலி உயர்ந்துகொண்டே இருந்ததை உணர்த்தியது. அப்பா தன் கைப்பையை உள்ளேயிருந்து எடுத்துக்கொண்டு, பொத்தான்கள் போடாத சட்டையுடன் வந்து டிரைவரிடம் ”புறப்படலாம்” என்று சொன்னார்.

அப்பாவைப் பார்த்ததுமே கணேஷின் முகத்தில் அழுகை நின்றிருந்தது. ஆனந்த், ‘நாங்களும் வரலாமா?’ என்ற கேள்வியோடு அப்பாவின் முகத்தையே பார்த்தபடி அவர் எதிரில் நின்றான். அப்பா எங்கள் யாரையுமே பார்க்காமல் உள்ளே ஏறி ஆச்சியின் பக்கம் அமர்ந்தார். அவரது பார்வை எங்கோ பார்த்து நிலைகுத்தியிருக்க, கண்களில் நீர்முத்து மின்னிக்கொண்டிருந்தது. ஆட்டோ டிரைவர் வண்டியைக் கிளப்ப, மஞ்சளும் கறுப்புமான அந்த வாகனத்தைத் துரத்திக்கொண்டு எங்களின் மனங்கள் ஓடத்தொடங்க, நாங்கள் மூவரும் அப்படியே வாசற்படியில் நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ”ஆட்டத்துக்கு உத்திப் பிரிக்கப் போறோம் வாங்கடா” என்ற குரல் கவனத்தைக் கலைத்தது.

குளஞ்சி அண்ணனும், சுந்தரம் அண்ணனும் உத்தி கேட்டு நின்றிருந்தார்கள். இரண்டு இரண்டு பேராகத் தனியாகச் சென்று, “நீ புலி, நான் சிங்கம்” என்று பேசி வைத்துக்கொண்டு, உத்தி கேட்பவர்களிடம், “புலி வேணுமா, சிங்கம் வேணுமா?” என்று கேட்போம். யார் எதைக் கேட்கிறார்களோ அதுவானவர்கள் அந்த அணியில் விளையாடுவார்கள். அப்படித்தான் அணிகள் பிரியும். வழக்கம்போல, நான் குளஞ்சி அண்ணன் அணியிலும், என் தம்பி சுந்தரம் அணியிலும் வெள்ளைக்குதிரையாகவும் கறுப்புக் குதிரையாகவும் பிரிந்தோம்.

மண்ணுடையார் வீட்டுக்குச் சென்று வந்திருந்தவர்கள் நான்கு அழகான பானைகளை வாங்கி வந்திருந்தார்கள். அதில் தண்ணீர் ஊற்றிப் பக்கத்து வீடுகளில் கலர் கோலமாவுகளைக் கலந்து சில சில்லறைக் காசுகள் போடப்பட்டது. சற்று நேரத்திற்கெல்லாம் அதிலொரு பானையில் தண்ணீர் கசிந்து ஒழுகத் தொடங்கியதும் பானை வாங்கச் சென்றவர்களுக்குக் கண்களில் பீதி கிளம்பியது. அதற்குப் பிராயச்சித்தமாக அவர்கள் வீட்டிலிருந்து பானை எடுத்துவர வேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறமாகப் போய் பழைய பானைகளைப் பொறுக்கச் சென்றார்கள்.

மண்டிக்கொல்லையில் கபடிக்காகச் செதுக்கப்பட்டிருந்த புல் தரையில் வெயில் ஏறத் தொடங்கும் முன்பே மணலை நிரவிவிட மண்வெட்டியோடு நின்றிருந்த கலியனுக்கும் மாரிக்கும் குடத்தில் நானும் ஆனந்தும் தண்ணீர் எடுத்துச் சென்றோம். ஒட்டுப்பில்லும், கீழாநெல்லியும், காட்டாமணியும், பூண்டுச்செடிகளுமாகப் புழுதியோடு ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது. கலியன் இருவரும் குடித்தது போக மீதியிருந்த தண்ணீரை நிரவப்பட்ட தரையில் தெளித்தான். குமரனும் சீனுவும் முக்கோண வண்ணத்தாள்களைச் சணலில் ஒட்டத் தொங்கினார்கள். இரண்டு பக்கமும் ஊன்றப்பட்டிருந்த நுணா கழிகளை இணைத்து வண்ணத்தாள் சணல் கொடியைக் கட்டியதும் அந்த இடத்துக்கு ஒரு திருவிழாக் களை வந்துவிட்டதாக மாரி சொன்னான். சுருள் வண்ணத்தாள்களை ஆங்காங்கே மரங்களில் நானும் தம்பியும் ஒட்டினோம். மரங்களுக்குத் திடீரென்று சிறகு முளைத்ததைப்போல அவை படபடத்துப் பறந்துகொண்டிருந்தன.

சற்று நேரத்திற்கெல்லாம் மண்டிக்கொல்லையில் நெல் மண்டியைக் காவல் காக்கும் கோமன் அங்கு வந்தான். பளிங்கு போல மின்னும் வழுக்கைத் தலையைத் தடவியபடியே வெற்றிலைப் பாக்கு எச்சிலைப் ’பொளிச்’ எனக் கபடி விளையாடச் செதுக்கிய இடத்தில் துப்பினான். கலியனுக்கும் மாரிக்கும் ஆத்திரம் நெற்றிப்பொட்டில் துடித்தது, மூக்கின் நுனியில் இருந்த கோபத்தைக் கலியன் துண்டால் துடைத்துத் தணித்துக்கொண்டான்.

“யாரக் கேட்டுடா இங்க மம்புட்டி போட்டு செத்துனீங்க? வரப்பு ஓரத்துல தேக்கங்கன்னு போட்ருக்குன்னு தெரியிலியா?.. என்னாடா கூத்துக் கட்டி அடிக்கிறீங்க?” என்று சொல்லியபடி கொடிக்கயிறை அவிழ்க்கப் போனான். அப்போதுதான் வைத்தியநாதன் பெரியப்பா மாடு ஓட்டிக்கொண்டு அந்தப் பக்கமாக வந்தார். 

“டேய் ஆனையன் மொவனே, சின்னப்புள்ளைங்க வெளையாடுற எடத்துல என்னடா பிரச்சன பண்ணிகிட்டு இருக்க?.. பயலுவோ நல்லா வெளையாடட்டும் போடா அந்தாண்ட.”

அவரது குரல் அதட்டியதும் கோமன் முகம் ‘மு’வாகச் சுருங்கிப்போய் அங்கிருந்து சென்றான். நாங்கள் பார்வையால் நகைத்து வைத்தி பெரியப்பாவுக்கு நன்றி சொன்னோம்.

“நல்லா வேர்வ ஆறா ஊத்துற மாதிரி வெளையாடுங்கடா புள்ளைங்களா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் பெரியப்பா.

திடீரென அப்போது, “புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது” என்று பாடல் காற்றில் பறந்து வந்தது.

“டேய் திரவியம் வந்துட்டான் ஓடியாங்கடோய்” என்றான் கலியன். நாங்கள் அவன் பின்னால் பனிமழையில் நனைந்துகொண்டே ஓட ஆரம்பித்தோம்.

திரவியம் ரேடியோ சர்வீஸ் வைத்திருப்பவர். அவரது டேப்ரெக்கார்டரையும் ஸ்பீக்கர்களையும் பார்த்துக்கொண்டே அதீத ஒலியில் செவிகள் அதிரப் பாடல்கள் கேட்பது எங்களுக்கு எந்தச் சாதாரண நாளையும் திருநாளாக்கிவிடும். 

திரவியம் தனது ஆம்பிளிஃபயர், டேப் ரெக்கார்டர் சகிதம் கேஸட்டுகளை அடுக்கி வைத்திருந்தான். எம்ஜிஆர் பாடல்கள், சிவாஜி தத்துவப் பாடல்கள், அம்மன் பாடல்கள், சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள், நாதஸ்வர மேளக் கச்சேரி எனக் கேஸட்டுகளின் மீது என் கண்கள் சில நொடிகளில் பந்து போலப் பட்டெழும்பித் திரும்பி வந்தது. சற்று நேரத்திற்கு முன்பு மின்கம்பத்தில் அவன் கட்டியிருந்த குழாய் ஸ்பீக்கர்கள் ரெட்டை ஜடை மீது செருகி வைக்கப்பட்டிருக்கும் ரோஜாக்களை நினைவுபடுத்தும் விதமாகத் திசைக்கொரு தெருவாகப் பார்த்துப் பாடிக்கொண்டிருந்தது.

”நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கின்றது…”

எங்கள் ஊரின் தீவிர எம்ஜிஆர் ரசிகரான பாவாடைப் பிள்ளை, பச்சைநிறச் சால்வை விரிக்கப்பட்ட நாற்காலியின் மீது எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வைத்து, அதன் எதிரில் ஊதுவத்திகள் செருகிய வாழைப்பழம் இரண்டையும் வைத்து, “இன்று நம் புரட்சித்தலைவர் பிறந்தநாள்.. வாழ்க பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர்” என்று புகைப்படத்தின் முன் நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் அடித்தார். அப்போது ஒருகணம் திரவியம் ஒலியைக் கீழே இறக்கி மேலே உயர்த்தினார்.

பாவடைப் பிள்ளை மிட்டாய் ஏதாவது கொடுப்பார் என்று நாங்கள் நாக்கில் எச்சில் ஊற அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் தான் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து அங்கு  நின்றிருந்த எல்லோருக்கும் “மஹா லேக்டோ” சாக்லேட்டுகளைக் கொடுத்தார். தெருவில் போவோர் வருவோர், வாசலில் நின்றிருந்த பெண்கள் எனக் கூட்டம் அந்தக் கணத்தில் எம்ஜிஆராக மாறியிருந்த பாவாடைப் பிள்ளையை மொய்த்திருந்தது.

கிட்டிப்புள் விளையாடத் தொடங்கினோம், சுந்தரம் அண்ணன் அணியினர்தான் முதலில் கிந்தினார்கள். நாங்கள் புள்ளைப் பிடிப்பதற்காக நின்றுகொண்டிருந்தோம். குமணன் கிந்தியது நின்றிருந்த ஏழு பேரையும் தாண்டிப்போய் விழுந்தது. எத்தனை தூரத்திலிருந்தும் புள்ளை எறிந்து அவுட் ஆக்கக்கூடிய குளஞ்சி அண்ணனே அன்று பத்து கிட்டி அளக்கும் அளவிற்குத் தள்ளியே எறிய முடிந்தது. குமணன் கில்லி போட்டு அடிக்க ஆரம்பித்தான். பூவரச மரக்கட்டைகள் ஒன்றோடொன்று பட்டு எழும் சத்தம், நாக்கால் மேலன்னத்தைத் தொட்டு உண்டாகும் ’டொக்’ ஒலி போல ஒருவித கிளர்ச்சியை உண்டாக்கியது.. காற்றில் பறக்கும் புள்ளைப் பிடிக்க நினைக்கும் யாருக்குமே தானும் அப்படி கில்லி போட்டு அடிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். சுந்தரம் அணியினர் கிட்டிப்புள்ளில் வெற்றி பெற்று எங்கள் அணியினர் கீ எடுத்து ஓடத்தொடங்கினோம். ஒவ்வொருவராக மன்மதன் கோவிலிலிருந்து முருகன் கோவிலை நோக்கி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தோம். அப்போது ஆரன் சத்தத்துடன் ஆட்டோ எங்களைத் தாண்டி போனதும் உள்ளே கேட்ட அம்மாவின் அழுகைச் சத்தம் எங்கள் எல்லோரையும் பிடித்து நிறுத்தியது.

நான் ஆட்டோவைப் பின்தொடர்ந்து ஓடினேன். அம்மா அழுதுகொண்டேயிருக்க அப்பாவும் எதிர்வீட்டு மாமாவும் வாசலில் கிடந்த விசுபலகைகளை எடுத்து நடுவீட்டில் போட்டார்கள். ஆச்சியை அதில் கிடத்தி வைத்தார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆச்சியைப் பார்த்ததும் வயிற்றுக்குள் வெந்நீர் ஊற்றியதைப் போலிருந்தது. சட்டெனக் காய்ச்சல் பரவுவதைப்போல உடலெங்கும் அனலெழுந்தது. அக்கம் பக்கத்துவீட்டு பெண்களெல்லாம் உயர்ந்த குரலில் அழத்தொடங்கினார்கள். அவர்கள் எழுப்பிய அழுகைச் சத்தம் கிழக்கே ஐயனார் கோவிலில் பட்டுத் தெறித்து ஊர் முழுக்க எதிரொலித்தது. ஆச்சியைப் பார்த்து எனக்கு அழுகை வரவில்லை. மாறாக ஆச்சியையே பார்த்துக்கொண்டிருந்தேன், திடீரென அப்பா ஓடி வந்து.. வெள்ளைத்துணியால் கட்டுப்போட்டிருந்த ஆச்சியின் இரண்டு காலையும் பிடித்துக்கொண்டு, “அம்மா என்னை விட்டுட்டுப் போக ஒனக்கு எப்படிம்மா மனசு வந்தது.. இனிமே உன் புள்ள யாரம்மா அம்மான்னு கூப்புடுவேன்” என்று சொல்லிக்கொண்டே அழுதார். இதுநாள் வரைக்கும் அப்பா அழுது பார்க்காத எனக்கு அப்பா அழ அழ கண்ணீர் பொத்துக்கொண்டு கொட்டியது.. ஓடிப்போய் அப்பாவைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலத் தோன்றியது. என் அம்மா இறந்துவிட்டாலும் இப்படித்தான் நானும் அழுவேனோ.. என் அம்மாவுக்கெல்லாம் சாவு வராது. எதற்கு இப்படி யோசிக்கிறேன்? ஐயோ அப்பா அழுகிறார். அம்மாவும் நெஞ்சில் அடித்துக்கொண்டு பக்கத்து வீட்டுப்பெண்களைக் கட்டிக்கொண்டு அழுகிறாள். இந்நேரம் ஆச்சி மரிக்காமல் இருந்திருந்தால் கபடி விளையாடிக்கொண்டிருப்போம். ரைடு போகவும் மூச்சடக்கவும் தினமும் பள்ளி முடிந்து வந்த மாலை வேளையில் பெரியகுளம் களத்துமேடு எனப் பயிற்சி செய்திருந்தேன்.. குளத்தில் குளிக்கச் செல்லும்போது சற்று கூடுதலான நேரம் குளத்தில் மூச்சடக்க வேண்டும்.

தெருக்காரர்களில் சிலர் எங்கள் கொல்லையில் மூங்கில் கழிகளை வெட்டத்தொடங்கினார்கள். என் வயதொத்த நண்பர்கள் விசுபலகைகளிலும் நாற்காலிகளிலும் நிறைந்திருந்தார்கள். சற்று முன்னர் எதிரெதிர் அணித்தலைவர்களாகக் கிட்டிப்புள் ஆடிய குளஞ்சி அண்ணனும், சுந்தரம் அண்ணனும் பக்கத்துப் பக்கத்தில் நின்று கீற்றைச் செருகிப் பந்தல் போட்டுக்கொண்டிருந்தார்கள். கலியனும் மாரியும் கபடி விளையாடும் இடத்தைச் சுத்தப்படுத்தியது போலவே எங்கள் வீட்டு வாசலைச் சுற்றிப் படர்ந்திருந்த புற்காட்டை ஆளுக்கொரு மண்வெட்டியால் செதுக்கிச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். காணும் பொங்கலான இன்று விளையாட முடியாமல் போனது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், இன்னொரு புறம் விளையாடுகிறவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்பது ஆறுதலாக இருந்தது.

நேரம் ஆக ஆக ஊர்க்காரர்களும் உறவினர்களும் கூடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டிக்கு விழுந்த மாலைகளை வாசலில் அடுக்கி வைத்தார்கள். சற்றுநேரத்தில் அவ்விடம் ஒரு மலர்க்குன்றென மாறிப்போனது.

ஆட்டோக்களிலும் பைக்கிலும் உறவினர்கள் வந்து இறங்கிக்கொண்டேயிருந்தார்கள், ஒரு கார்கூட இன்னும் வரவில்லை என்பது ஏக்கமாக இருந்தது. ரோட்டுத் தெருவில் ஒரு வீட்டுச் சாவுக்கு ஏழு கார்கள் வந்திருந்ததைப் பள்ளிக்கூடம் போகும்போது நானும் ஆனந்தும் எண்ணியிருக்கிறோம். அட அதோ ஒரு வெள்ளைக் கார் வருகிறது. கும்பகோணம் பெரியப்பாவும் பெரியம்மாவும் வருகிறார்கள். பெரியப்பா வந்த காரின் முன் ஒரு கொடி காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. காலையில் நாங்கள் மரத்தில் கட்டியிருந்த வண்ணக் காகிதங்கள் தற்போது தனியாக மண்டிக்கொல்லைக் காற்றில் துடித்துக்கொண்டிருக்கும். ஒட்டுமொத்தப் பனம்பள்ளிக் கிராமமும் எங்கள் வீட்டுக்குள்ளும் வெளியிலும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. 

யாருமற்று தனித்துக் கிடந்த தெருவில் இரண்டு மஞ்சள் சிட்டுக்குருவிகள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன. பேனா முள் போன்ற அலகால் ஒருமுறை நிலத்தைக் கொத்துவதும் மறுமுறை கூட்டமாக இருக்கும் எங்கள் வீட்டு வாசலைப் பார்ப்பதுமாக இருக்கும். மனிதர்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் பறவைகள் விளையாடி இதுவரை நான் பார்த்ததில்லை. மனிதர்களைப் பற்றி குருவிக்குத் தெரியும் போல.

திடீரென லாரியிலிருந்து ஜல்லிகொட்டுவது போலச் சத்தம் கேட்டு வாசல் பக்கம் நின்றிருந்த எல்லோரும் திரும்பிப் பார்த்தோம். முருகன் கோவிலின் முகப்பில் இருந்த சுற்றுச்சுவர் மரமென வீழ்ந்தது. அழுதுகொண்டிருந்தவர்கள், வெளியில் நின்றிருந்தவர்கள் என எல்லோர் வாயிலிருந்தும் சில வார்த்தைகள் ஒன்றுபோல, மந்திரமெனத் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன..

“நல்ல வேளை.. யாரும் அங்க இல்ல.” 

“புள்ளைங்க அங்க இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?”

எனக்கு உடனே ஆச்சியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.. வெளியிலிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினேன்.

2 comments

Ranjith Kumar January 17, 2024 - 10:52 am

அருமை செந்தில் 💐

Raguvaran January 17, 2024 - 11:49 pm

கிளைமாக்ஸ் சூப்பர் கிராமத்தை விரிவாக உங்கள் எடுத்துக்காட்டியது

Comments are closed.