ஜூடோ

by ப.தெய்வீகன்
0 comment

அமெரிக்காவின் அரிசோனா சிறை வளாகத்தில் கைதிகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்வுகள் ஏற்பாடாயிருந்தன. அன்றைய தினம்தான் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஈழத்தமிழ் கைதியான ரொக்ஸி சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அதிகாரிகளின் கட்டளைப்படி கிறிஸ்துமஸ் உணவுக்கான வரிசையில் நின்றான். பல வகையான உணவுகள் பரிமாறப்பட்ட மேசைக்கு அருகில் சென்றபோது, ரொக்ஸிக்கு முன்னால் சென்றவன் கடதாசித் தட்டை எடுத்துக் கொடுத்தான். வறுத்த சோற்றையும் அதற்கு மேல் வார்க்கப்பட்ட குழம்பையும் எடுத்துக்கொண்டு, அவன் பின்னாலேயே ரொக்ஸியும் நடந்தான். வேறு கைதிகள் இல்லாத இடத்தில் இருவரும் குந்தினார்கள். பாதி வறண்ட வழிகள், பள்ளத்தில் வற்றிப்போன கன்னங்கள், தடித்த உதடுகள். தனது பெயர் ஜூடோ என்று கூறினான். ரொக்ஸி அவனிடம் கேட்டான்.

“உன்னுடைய வழக்கு என்ன, எத்தனை வருஷ தண்டனை?” ஜூடோவின் முகம் அமைதியாயிற்று. ரொக்ஸியின் கேள்வியால் அவன் சினமடையவில்லை. மாறாக இத்தனை வருடங்களில் சக கைதியொருவனின் நெருக்கத்தை மனத்தளவில் உணர்ந்தான். குற்றங்களுக்கு அப்பால் அவர்களைப் பிணைக்கும் ஒரு நேசமிருப்பதாக உணர்ந்தான்.

“என் முழுக்கதையையும் சொல்வதற்கு உனக்கு விதிக்கப்பட்ட ஏழு வருடங்களே போதாது” என்று புன்னகை புரிந்த ஜூடோ தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

2

ஆஸ்திரேலியாவை ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் துண்டுதுண்டாகத் தின்றுகொண்டிருந்த காலம். வடமுனையிலுள்ள கரமில பெருநகரம் முடிந்தளவு எதிர்த்துப் போரிட்டபோதும், ஈற்றில் ஆக்கிரமிப்பாளர்களிடம் வீழ்ந்தது. கரமில நகரின் தொல்குடிகள் அனைவரும் முழுநிலா இரவன்று ஒதுக்குப்புறக் கிராமத்திற்கு வேட்டை நாய்களின் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். கற்றைகளாக வெட்டி எரிக்கப்பட்ட வலபிப் புற்களைச் சுற்றித் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர். லோகன் என்ற பெருங்காட்டின் வழிகாட்டி, தனது மனைவி பாபராவுடனும் ஒரு வயது மகனோடும் அச்சத்தில் தன் செவ்விழிகளை உருட்டியபடி கூட்டத்தில் நடுவிலிருந்தான். ஊற்றுப்பாளையில் செய்த குடுவையில் எடுத்துவந்த தண்ணீரை, பாபரா களைத்திருந்த மகனுக்குப் பருக்கிவிட்டாள். தீ ஒளியில் தெரிந்தன முகங்கள். தொல்குடிகள் அச்சத்தில் தங்கள் குல மிம்மி தெய்வத்தைத் தடித்த உதடுகளால் உச்சரிப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கேட்டது.

இருளிலும் வெள்ளை நாகம்போலத் தெரிந்த உயரமான ஒருவன் நீண்ட கடதாசியுடன் எல்லோருக்கும் முன் வந்துநின்றான்.

‘கலப்படமற்ற குருதி பாயும் கரியவர்களே! இந்த இருட்டில் உங்களை இனம் காண்பதே பேரிடராயுள்ளது. அதிகம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். இந்த விலங்கு நிலத்தைச் சுத்திகரிப்பதற்கும் உங்கள் வருங்காலத் தலைமுறையை எங்களைப் போல உருவாக்குவதற்கும் இங்கு நாம் வந்திருப்பதை நீங்கள் பூரணமாய் அறிவீர்கள். காடுறை வாழ்வும் கரியதோலும் கொண்ட உங்களின் மீது ஒட்டியுள்ள அழுக்குகள் இனியாவது ஒழியவேண்டும். அவை உங்கள் அடுத்தத் தலைமுறைகளுக்கு வேண்டாம். இந்தத் திருமுழக்கத்தை உங்களின் முன்னால் கூறி, இறைச் சத்தியமான எங்களது காரியத்தை ஆரம்பிக்கிறோம். உங்கள் குழந்தைகளை நிரந்தரமாய் எங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறோம். அவர்கள் இனி எங்கள் பண்ணைகளில் பணிபுரியட்டும். மானிடம் போற்றும் வெண்சரும மேனியர்களாக வளரட்டும்” என்று படித்து முடித்தான்.

வாகனங்களிலிருந்து இறங்கிய சீருடைக்காரர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, எல்லோருடைய குழந்தைகளையும் வேக வேகமாக இழுத்துப் பறித்தனர். தொலைவில் நின்றுகொண்டிருந்த பச்சைப் படங்கு போர்த்திய நீண்ட வாகனத்துக்குள் கொண்டுசென்றனர். தாய்மார் பாய்ந்து தடுத்தபோது, உதைத்து வீழ்த்தப்பட்டார்கள். ஆண்கள் சிலர் ஆவேசத்துடன் தங்களது குழந்தைகளைப் பறிக்க முற்பட்டபோது, துப்பாக்கிப் பிடிகளால் தரையில் சரிக்கப்பட்டார்கள். சிலர் ஓடிச்சென்று எரிதணலை எடுத்து வீசி, ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்கினார்கள்.

குழந்தையை இறுகப் பற்றியபடி தரையோடு மடிந்திருந்த பாபரை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் பாய்ந்த லோகன், இருள் காட்டிய திசையில் பறந்தான். பல மாதங்களாகக் காடுகளில் பதுங்கி அலைந்து நெடும்பயணத்தைத் தின்று செமித்தனர். நியூ சவுத் வேல்ஸ் மாநில கிஞ்சலா நதிப்பக்கமாக வந்துசேர்ந்தபோது, மூவரும் உருமாறிப் போயிருந்தனர். லோகன் குடும்பத்திற்கு சுஸானா என்ற வெள்ளைப் பெண்ணொருத்தி தஞ்சமளித்தாள்.

3

சுஸானா இங்கிலாந்திலிருந்து பொலீஸ் உத்தியோகத்திற்காகக் கணவரோடு ஆஸ்திரேலியா வந்தவள். வேட்டையில் மிகுந்த ஆர்வமுடைய சுஸானா, கங்காருகளைத் தேடிக் காட்டுக்குள் சென்றபோது, அவளது கணவர் சர்ப்பம் தீண்டி இறந்துபோனான். சுஸானா கிஞ்சலா பகுதியில் தனியாக வசித்தாள். தன் வீட்டுப்பக்கமாக ஒதுங்கிய லோகன் குடும்பத்தினை சுஸானா பிரியத்துடன் அணைத்தாள். லோகன் – பாபரா தம்பதிகளின் மகனுக்கு சுஸானா தானே பெயரைச் சூட்டினாள்.

பாபராவின் முதுகில் குழந்தையை இறுக்கமான துணியில் கட்டியபடி, பகல் நேரத்தில் மூவரும் காட்டுக்குள் நெடும்பயணம் போய் வந்தார்கள். லோகனும் பாபராவும் காண்பித்த ஆழ்வனத்தின் அதரங்கள் சுஸானாவுக்குள் பல உலகங்களாய் விரிந்தது. மனிதர்களைவிட மரங்களை அதிகம் தெரிந்திருந்த லோகனின் கால் தடங்களைப் பற்றியபடி வேட்டைத் துப்பாக்கியோடு அலைந்தாள் சுஸானா. குட்டிப்பையன் முதல் தடவையாகக் காட்டுக்குள்தான் நடை பயின்றான். பாபரா அவன் விரல்களைப் பற்றியபடி –

“ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் ஒன்றையொன்று பார்த்தன.

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் நடை போயின

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் கொஞ்சம் பேசின

ஒரு நத்தை இரண்டு நத்தை 

எங்கள் வீடு ஒன்றே என்றன.”

குழந்தைக் குரலில் பாடுவாள். சிறு கணங்களையும் மகிழ்வோடு கொண்டாடும் அவர்களைப் பார்த்து சுஸானா பரவசமடைந்தாள். இருண்ட வனத்தின் ஆழத்தில எதிர்ப்படும் குளிர்ச்சுனைகளில் நீராடினாள். இயற்கையோடு குழந்தையை வளர்ப்பதில் சுஸானாவும் அதிகப் பிரியம் கொண்டாள்.

கிஞ்சலாக் காடுகளுக்குள் திரிந்த புதியவர்களின் சத்தம், காடுகளைத் தாண்டிப் பல காதுகளை எட்டியது. பூர்வகுடிப் பெற்றோர்களிடம் குழந்தைகளைப் பறிக்கின்ற துப்பாக்கிகள் கிஞ்சலா பகுதியை வந்தடைந்தன. விடிகாலைப் பொழுதொன்றில் வேட்டைக்குப் போவதற்கு முன் சுஸானாவின் வீடு ராணுவ வாகனங்களால் சூழப்பட்டது.

பேரச்சத்தின் கருகிய வாசனை வீட்டுக்குள் எட்டியது. லோகனும் பாபராவும் மகனைத் தூக்கிக்கொண்டு பின் வளவினால் பாய்ந்தார்கள். மூன்று நான்கு வேட்டொலிகள் அதிகாலையை உலுப்பியது. லோகனும் பாபராவும் முறிந்து விழுந்தார்கள். மகன் எழுந்து நின்று வானத்தைப் பார்த்தான். பின்னர், தரையில் விழுந்துகிடந்த தாயைப் பார்த்தான். அவன் பார்த்த முதல் குருதி.

பின் கதவைத் திறந்து ஓடிவந்த சுஸானா சடலங்களுக்கு நடுவில் விழுந்து குழறினாள். இருளின் பாதைகளையெல்லாம் மின்னலாக ஓடிக்கடந்த லோகன், வெளிச்சத்தின் பொறியில் சிக்கிச் சாய்ந்து கிடந்ததைக் கண்டு கதறியழுதாள். திறந்திருந்த அவன் கண்கள் பாபராவைப் பார்த்தபடியிருந்தன. சப்பாத்தொலிகள் சூழ்ந்தன. ஒருவன் எஞ்சியிருந்த சிறுவனைத் தூக்கினான். அவனோ பிடியிலிருந்து திமிறி அலறினான். சினத்தோடு எழுந்த சுஸானா துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தவர்களின் நெஞ்சில் ஒங்கி அறைந்தாள்.

“நானும் ஒரு வெள்ளைக்காரிதானே, என்னிடம் அந்தச் சிறுவனை  தாருங்களேன்.”

“இவர்களுக்கு நாங்களே பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது சுஸானா. உன் கணவரைப்போல நாங்களும் அரசு உத்தரவுகளைத்தான் நிறைவேற்றுகிறோம். குறுக்கே வராமல், தள்ளு.” அதிகாரி ஒருவன் சொன்னான்.

சீருடைக்காரர்களின் கால்களைக் கட்டியபடி சுஸானா கதறிக்கொண்டிருக்க, அந்தச் சிறுவனை ஜீப்பின் முன்னால் ஏற்றினார்கள். வாகனம் விரைந்தது.

சுஸானா காடதிர அவனதுப் பெயரைச் சொல்லி அழைத்தாள் – 

“ஜூடோ…”

4

பல நூற்றுக்கணக்கான தொல்குடிச் சிறுவர்களை அடைத்து வைத்திருந்த தொழுவமொன்றில் ஜூடோ சேர்க்கப்பட்டான். தடிகளால் அமைக்கப்பட்ட தனிக்கூடுகளில் அவர்கள் வெளியே பார்த்தபடி ஏக்கத்தோடு நின்றார்கள். எல்லோர் கன்னங்களும் கண்ணீரால் நொதித்திருந்தன. தொழுவத்திற்குள் வந்த வாகனங்கள், சிறுவர்களைத் தரம் பிரித்து ஏற்றிச்சென்றன. நீண்ட துப்பாக்கிகளும் வட்டத்தொப்பிகளும் அணிந்த பொலீஸார் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருந்தார்கள்.

தடிக்கூடுகளுக்கு வெளியே கூட்டிச்செல்லப்பட்ட உயரமான சிறுவர்களை வைத்து, அந்த வளவுக்குள்ளேயே பொலீஸார் ஒரு விளையாட்டை நடத்தினார்கள். ஒரு சிறுவனைத் தொழுவத்தின் வெளி மைதானத்தில் நிறுத்திவைத்து, பத்து சிறுவர்களை வரிசையில் சென்று அவனது முகத்தில் ஒருதடவை குத்தச் சொன்னார்கள். பத்து குத்துகளையும் சளைக்காமல் வாங்கிக்கொண்டு வலி பொறுத்த சிறுவர்கள், பாறை பிளக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டார்கள்.

தொழுவத்தின் பாதுகாப்பிலிருந்த தடித்த தொப்பை விழுந்த மரியோ என்ற பொலீஸ்காரன், அன்று இருள் கவிழ்ந்ததும் ஜூடோவைத் தனது ஜீப்பில் கூட்டிச்சென்றான். இரண்டு மரங்களுக்கு மத்தியில் உயரமாக அமைக்கப்பட்டிருந்த தனது தனி வீட்டிற்கு ஏணி வழியாக ஜூடோவை ஏற்றிப்போனான். ஜூடோவைப் பிரம்புக் கதிரையொன்றில் இருக்க உத்தரவிட்டான். தொழுவத்திலிருந்து மீண்டுவந்த திருப்தி ஜூடோவுக்குக் கண்களில் தெரிந்தது. தனது அறைக்குள் சென்று எடுத்துவந்த சிவப்புநிறக் குளிர்பானத்தை மரியோ, குடுவையொன்றில் ஊற்றி ஜூடோவுக்குக் கொடுத்தான். இதுவரை சுவைத்திராத இனிமையும் குளிர்மையும் சேர்ந்த அப்பானம் ஜூடோவின் தொண்டையின் வழியாகச் சிலிர்த்தபடி இறங்கியது. ஜூடோவின் கண்களில் தெரிந்த திருப்தியை மரியோ ரசித்தான். அவனது கண்களைப் பார்த்து புன்னகை செய்தான். ஜூடோவின் குளிர்ந்த உதடுகளை வருடினான். பின்னர், ஜூடோவின் முன்னால் மரியோ நிர்வாணமாய் எழுந்து நின்றான்.

அந்த வீட்டிற்குள்ளும் தொழுவத்தைப் போன்ற தடிகளாலான கூடிருந்தது. அது இலைகுழைகளால் மூடிக்கட்டப்பட்ட இருள் கரப்பு. பகலில் வெளியே போகும் மரியோ, ஜூடோவை அந்தக் கூட்டுக்குள் தள்ளிப் பூட்டிவிட்டான். மாலை வேளைகளில் வந்து ஜூடோவுக்குக் குளிர்பானத்தைக் கொடுத்தான். அவன் முன்னால் எழுந்து நின்றான். ஜூடோவின் குறியைத் திருகி, அவன் கதறியபடி கெஞ்சுகின்ற கண்களைப் பார்த்து ரசித்தான் மரியோ.

ஒருநாள் காலை மரியோ எழுந்திருக்கவில்லை. இருண்ட கூட்டுக்குள் அங்குமிங்கும் தனது உடலைப் புரட்டி ஒலியெழுப்பிய ஜூடோவுக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியே வாகனச் சத்தங்கள் கேட்டன. படுக்கையில் பிரேதமான மரியோவின் உடலைப் பொலீஸார் எடுத்துப்போனார்கள். கூட்டுக்குள்ளிருந்து சத்தமிட்ட ஜூடோவை அச்சத்தோடு திறந்து பார்த்த பொலீஸார் அதிர்ச்சியானார்கள். துப்பாக்கிப் பிடியால் அடித்து வெளியில் இழுத்துப் போட்டார்கள். அவனை விலங்கிட்டுத் தங்களது ஜீப்பில் தூக்கி ஏற்றினார்கள்.

மரியோவைப் புதைக்கும்போது அதனை ஜூடோ நேரில் கண்டான். அந்தப் பிரேதக்காட்டில் பணிபுரிபவனிடம் ஜூடோவை விட்டுச்சென்ற பொலீஸார், பிறகு வந்து வேறிடத்துக்கு மாற்றுவதாகச் சொன்னார்கள். ஜூடோ அங்கு எட்டு வயதுவரை பிரேதங்களைப் புதைக்கும் தொழிலைச் செய்தான். காட்டின் வேலியைத் தாண்டுவதற்கு அவன் எக்கணமும் எண்ணியதில்லை. பிரேதங்களோடு வருகின்ற பொலீஸார் கொடுக்கின்ற பழங்களையும் கிழங்குகளையும் தனது ஓலைக்கொட்டிலில் உள்ள பெட்டியில் போட்டுவைத்துத் தின்றான்.

ஒருநாள் தனது கணவரின் பிரேதத்தைப் புதைப்பதற்காக உயர் பொலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பிரேதக்காட்டுக்கு வந்தாள். அவளைப் பார்த்த ஜூடோ மிரண்டான். நீண்ட ஆடையோடு வந்த வெள்ளைத்தோலுடைய அந்தப் பெண்மணி கையுறைகள் அணிந்திருந்தாள். இதுவரை பார்த்திராத அந்த உருவம் ஜூடோவைத் தொந்தரவு செய்தது. பிரேதக்குழிக்கு அருகில் நின்று ஜூடோ அவளையே பார்த்தான். அவள் விம்மிய சத்தம், ஜூடோ இதுவரை கேட்டிராத புதிய ஒலியாக அவன் காதுகளில் ஒழுகி நுழைந்தது.

அந்தப் பெண், தன்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் யாரென்று பொலீஸாரிடம் கேட்டாள்.

பிறகு, தன் கணவரின் நினைவாக ஜூடோவைத் தன்னோடு அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தாள். 

5

தனது இரண்டு குழந்தைகளோடும் ஜூடோவைப் பாடசாலைக்கு அனுப்பினாள் ஒலிவியா. ஜூடோவின் மனம் நிச்சயம் மாறும் என்று நம்பினாள். அவனது கடந்தகாலங்களில் கணிசமானவற்றை மறக்கச் செய்தாள். ஜூடோ ஒழுங்காகத் தூங்கி எழுந்தான். மாத்திரைகளின் வழியாகப் பழைய நினைவுகளின் வேர்கள் அறுக்கப்பட்ட ஜூடோ, பாடசாலை சென்று வந்தான். ஒலிவியாவின் அன்பும் அரவணைப்பும் அவனைப் பரிதாபத்தின் வழியாகவே தீண்டிக்கொண்டிருந்ததால் வருடங்கள் போகப் போக அந்த அன்பு அவனை மேலும் சிதைத்தது. அவனது தலைதாழ்ந்த பாடசாலை வாழ்க்கையைப் போதைப்பொருட்கள் மீட்டன. அவனுக்குள் கேட்ட கூச்சல்களுக்கு அது விடையளித்தது. நிமிர்ந்து நடந்தான். வீடு அவனுக்கு அந்நியமானது.

அச்சத்தில் ஒலிவியா தனது இரண்டு பிள்ளைகளோடு வேறொரு நகரில் சென்று குடியேறினாள்.

போதைச் சரைகளுக்குப் பணமில்லாத ஜூடோ, திசைக்கொரு திருட்டுக்களில் ஈடுபடுவது பொலீஸாருக்குத் தெரியவந்தது. தேடுவதற்குச் சிறப்புப் படையமைக்குமளவுக்கு ஜூடோ நியூயோர்க் வீதிகளில் பிரபல குற்றவாளியாக மிளிர்ந்தான்.

சுற்றி வளைக்கும்போதெல்லாம், பொலீஸிடமிருந்து தப்பியோடுவதில் ஜூடோ மிகத் தேர்ந்தவனாக, நகரின் எல்லாப் பாதைகளையும் கால்நுனியில் அணிந்திருந்தான். திடமேறிய ஜூடோவுக்குப் புறநகரிலுள்ள “ஸ்னெய்ல்ஸ்” களியாட்ட விடுதி பல தேவைகளுக்கு இரவில் நிழல் கொடுத்தது. வயதான பெண்கள் அதிகம் வருகின்ற அந்த விடுதி, வார இறுதிகளில் போதையில் தள்ளாடும். அங்கு வந்த பெண்களுக்கு ஜூடோவின் சரீரம் இளமையை மீட்டுக்கொடுத்தது. அங்கு ஜூடோவின் நடமாட்டத்தை அறிந்த பொலீஸார் ஒருநாள் அவனைக் காரொன்றுக்குள் நிர்வாணமாக வைத்து மடக்கினார்கள். விலங்கிட்டுக் கொண்டுசென்றபோது, ஜூடோ பொலீஸ் துப்பாக்கியைப் பறித்து ஒருவனைச் சுட்டுவிட்டு இருட்டுக்குள் பாய்ந்து மறைந்தான்.

பொலீஸ் கொலையாளி ஜூடோவின் படங்கள் நியூயோர்க் நகரெங்கும் விநியோகிக்கப்பட்டன. கண்டவுடன் தகவல் தரும்படி பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டது. ஜூடோவின் பின்னணியைப் படிக்கத் தொடங்கிய அமெரிக்கப் பொலீஸ், ஒலிவியாவிடம் சென்று விசாரணை செய்தது. ஆஸ்திரேலிய பொலீஸாருக்கும் தகவல் அனுப்பியது.

ஒரு விடிகாலை வேளை “ஸ்னெய்ல்ஸ்” விடுதிப்பக்கமாக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் சிகரெட்டு வாங்குவதற்கு, தலையில் குல்லா அணிந்தபடி வந்த ஜூடோவைக் காலில் சுட்டுப்பிடித்தார்கள் பொலீஸார். கொலைக்குற்றசாட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டான். 

பதினைந்து வருடங்களாக அரிசோனா நீதிமன்றில் நடைபெற்ற ஜூடோ மீதான வழக்கில், இறுதியில் அவனைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, மரணத் தண்டனை வழங்கித் தீர்ப்பெழுதினார்.

6

கிறிஸ்துமஸ் இரவுணவின்போது ரொக்ஸியிடம் தனது கதையைக் கூறிய நான்காவது நாள், ஜூடோவுக்குரிய மரணத் தண்டனை உறுதியானது. கைதிகள் அனைவரும் அவரவர் அறைகளில் பூட்டப்பட்டிருந்த நள்ளிரவு நேரம், ஐந்தாறு அதிகாரிகள் ஜூடோவின் அறைக்கதவைத் தட்டி எழுப்பினார்கள். சாவு தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்துகொண்ட ஜூடோ திருப்தியோடு எழுந்து கதவைத் திறந்தான். அதிகாரிகள் அவனது கை கால்களுக்கு விலங்கிட்டு அழைத்துப்போனார்கள். தரையில் விலங்கு ஊர்கின்ற ஒலி கேட்ட கைதிகள், இருளின் சத்தத்தை கிழித்துக்கொண்டு கத்தினார்கள். அறைக்கதவில் ஓங்கி உதைத்தார்கள். தங்களில் ஒருவனைச் சாவின் மேடைக்கு இழுத்துச் செல்பவர்களை நோக்கிக் கொதிச் சொற்களை உமிழ்ந்தார்கள்.

கண்ணாடி அறையொன்றிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட ஜூடோவை மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்தார். அவனைச்சுற்றி நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளுக்கும் அச்சத்தில் விழிகள் சரிந்திருந்தன. சாவை ஏற்றுக்கொள்பவனின் கண்களை உலகில் எவரால்தான் எதிர்கொள்ள முடிந்தது! அந்தக் கணம் ஜூடோவின் அருகில் நின்றுகொண்டிருந்த அத்தனை அதிகாரிகளும் அவனது கைதிகள்போல உணர்ந்தனர்.

விருப்பமான கடைசி உணவை சிறைச்சாலை அதிகாரிகள் கேட்டார்கள். சிவப்புநிறக் குளிர்பானம் மாத்திரம் ஒரு குவளையில் தந்தால் போதும் என்றான் ஜூடோ. 

திடீரெனத் தூக்கத்திலிருந்து எழுந்த ரொக்ஸி தடித்த சிறைக்கண்ணாடிகளுக்கு வெளியே செந்நிறப் புதிய ஒளிக்கோளமொன்றைச் சில கணங்கள் கண்டான். அது வீசிய கசங்கிய ஒளி, விட்டுவிட்டுத் தன் அறைக்குள்ளே வெளிச்சம் சிந்திவிட்டு அணைவதை உணர்ந்தான்.

இறுக்கிக் கட்டப்பட்ட படுக்கையில் ஜூடோவுக்கு நச்சு ஊசி செலுத்தப்பட்டது. செவிகளை வருடிய ஆதிக்குரலொன்று தாலாட்டாய் தொடர்ந்து.

“ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் ஒன்றையொன்று பார்த்தன.

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் நடை போயின

ஒரு நத்தை இரண்டு நத்தை

இரண்டும் கொஞ்சம் பேசின

ஒரு நத்தை இரண்டு நத்தை 

எங்கள் வீடு ஒன்றே என்றன.”

ஜூடோவின் விழிகள் சிவந்து தழும்பியது. வலபிப் புற்களுக்கு நடுவிலிருந்து ஜூடோவை அவனது அன்னை அணைத்தெடுத்தாள். வானமில்லாப் பெருவெளியில் எறிந்து பிடித்தாள். ஜூடோ சிரித்தபடி அவள் கைகளில் விழுந்தான். அவனது தடித்த கன்னமெங்கும் மெல்லக் கடித்து முத்தம் வைத்தாள். ஜூடோ மெய்கூசிப் பெரிதாகச் சிரித்தான். பாபரா தன் கைகளெங்கும் குருதிகொட்ட ஜூடோவை மீண்டும் தன் கருவறையில் புதைத்தாள். எங்கும் இருள். கரிய மலர்க் கிடங்குகளில் ஜூடோ எடையற்றுப் புரண்டான். நிர்மலமான புதிய காற்று. தனக்கு மேல் இன்னொரு இதயம் துடிக்க ஜூடோ துயிலடைந்தான்.

இன்னொரு  தொல்குடியை அவர்கள் கொன்றார்கள்.