தமிழ்ச் சித்தர் நெறி

0 comment

உலகளாவிய தத்துவ வரலாற்றையும் அதன் வகைமைகளையும் ஆன்மீக மரபு என்ற அதன் ஒரு கிளைப் பிரிவையும் இந்தியச் சமய தத்துவ மரபையும் தமிழர் தத்துவ மரபையும், உலகளாவிய சித்தர் மரபுகளின் ஊடாட்டங்களையும் தொடர்ச்சிகளையும் இவைகளில் துலங்கி நிற்கும் நமது தமிழ்ச்சித்தர் மரபின் நெறிமுறைகளையும் குறித்த செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும் நிலையில் எழுதப்பட்ட “இந்தியத் தத்துவத்தில் ஆன்மீக மரபும் தமிழ்ச் சித்தர் நெறியும்” என்ற நெடுங்கட்டுரையின் ஒரு பகுதியான தமிழ்ச் சித்தர் மரபு பற்றி மட்டும் இப்போதைக்கு இங்கே காணலாம். மரபான சிந்தனைகள் மட்டுமே இங்கே நேர்நிலையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

(தமிழில் சித்தர் பாடல்கள் என்று அழைக்கப்படும் சித்தர் ஞானக்கோவை தோன்றிய பின்பே சித்தர் இலக்கியம் என்ற ஒன்றும் சித்தர் தத்துவம் என்ற ஒன்றும் கட்டமைக்கப்பட்டது, சித்தர்களின் பட்டியல், சித்தர்-பித்தர்-எத்தர், உலகாயதச் சித்தர் (கோவேந்தன்) என்ற போலிச் சித்தர் பாடல்களை வைத்துக்கொண்டு சித்தர்கள் பொருள்முதல்வாதிகள் என்று இடதுசாரிகள் கொண்டாடியது, ரசவாதத்தின் வரலாற்று உண்மை, தத்துவம்-மெய்யியல்-மெய்ப்பொருளியல், ஆன்மீகம்-அனாத்மவாதம், இவை பற்றிய இலக்கிய அரசியல், எதிர்மறை விமர்சனங்கள் என்பவை பற்றியெல்லாம் இன்றைய விமர்சன ஆய்வு நோக்கில் வேறொரு பகுதியில் தனியே விரிவாகப் பார்க்கப்பட்டுள்ளது.)

தமிழர் மெய்யியல்

தமிழ்ச் சூழலிலும் மரபிலும் தமிழ்மொழியில் முதன்மையாக உருவான தத்துவம், தமிழர் தத்துவம் அல்லது தமிழ் மெய்யியல் ஆகும். இந்தத் தத்துவம், தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடனும் அணுகுமுறையுடனும் உலகை எதிர்நோக்கி விளங்கிக்கொண்டார்கள் என்று அறிய உதவுகிறது. தமிழர் மெய்யியலை அறநூற்களிலும் இலக்கியங்களிலும் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே தத்தவத்தை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும் அறிவியல் வளர்ச்சிக்கேற்றாற்போல் தத்துவம் மாறும். அவ்வாறே தமிழர் தத்துவவியலும் மருவி வந்திருக்கிறது (ஆர்.கே.குப்புசாமி, 2003).

சித்தர் நெறி

சித்தர்கள் சித்திபெற்றவர்கள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் வழியாக எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள் சித்தர்கள்.

எண்வகை யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம் –

  1. இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம். 
  2. நியமம் – நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல். 
  3. ஆசனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல். 
  4. பிராணாயாமம் – சுவாசத்தைக் கட்டுப்படுத்தல். அதாவது உயிர்வளி (பிராணவாயு)யைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச் செலுத்துதல். 
  5. பிராத்தியாகாரம் – புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனதை உள்ளே நிறுத்திப் பழகுதல். 
  6. தாரணை – பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனதை நிலைபெறச் செய்தல். 
  7. தியானம் –  மனதை ஒருமுகப்படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல். 
  8. சமாதி – மனதை கடவுளிடம் நிலைக்கச்செய்வது.

எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்.

அணி மாதி சித்திகளானவை கூறில் 

அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே. (668)

என்று திருமந்திரம் கூறுகிறது.

1. அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2. மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.

3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4. கரிமா – கனமாவது – மலைகளாலும் வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5. பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப்படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடுவிட்டுக்  கூடு பாய்தல்)

7. புருஷத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

8. வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

இத்தகைய எண் பெருஞ் சித்திகளை எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர் என்பார்கள்.

ஆகமங்களும் சித்தர்நெறியும்

தொடக்கத்தில் சித்தர் பாடல்களைத் தொகுத்தவர்கள் சைவம் சார்ந்த தமிழ் அறிஞர்கள் என்பதால், சைவம் சார்ந்த சித்தர்களையே அதிகம் வெளிப்படுத்தினர். சைவ ஆகமங்கள் கூறும் முப்பத்தாறு தத்துவங்களைச் சித்தர்களின் நெறிமுறைகளில் காணும் சைவம் சார்ந்த ஆய்வாளர்கள் உண்டு. இவற்றைச் சிவ தத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம் என்று வகைப்படுத்துவர். 

சிவனோடு அன்பு கொள்ளும் முறைகளான சிவதத்துவங்கள் வருமாறு: 1. சுத்த வித்தை – அறிவு குறைவாக இருந்து செயல் அதிகமாக இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது. கண்ணப்ப நாயனாரது பக்தி சுத்த வித்தை. 2. ஈசுவரம் – அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்ததால் அடக்கம் வருகின்றது. 3. சாதாக்கியம் – சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது. 4. விந்து – இது சக்தியின் வடிவம். 5. நாதம்: இது சிவாநுபூதி, சிவனோடு ஒன்றுபட்டிருத்தல்.

வித்தியா தத்துவங்கள் ஏழு ஆகும்.  அவை : 1. காலம், 2. நியதி, 3. காலை, 4. வித்தை, 5. அராகம், 6. புருடன், 7. மூலப்பிரகிருதி. ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு ஆகும். அவை : 1. பஞ்சபூதங்கள் (5) – நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு. 2. சூட்சும பூதங்கள் (5)- ஒளி, சுவை, ஓசை, நாற்றம், உணர்ச்சி  (இவை ஐம்பொறிகளாலும் உணரப்படும் பண்புகள்). 3. ஐம்பொறிகள் (5) – கண், வாய், செவி,; மூக்கு, மெய். 4. செயலுறுப்புகள் (5) – கை, கால், நாக்கு, குதம், குறி. 5. உட்கரணங்கள் (4) – மனம், குணம், அறிவு, அகங்காரம்.

ஆகமங்கள் கூறும் முப்பத்தாறு தத்துவங்களையே சித்தர்கள் முத்தியை அடைவதற்குரிய ஏணியாகக் கொண்டு, நிகரில்லாச் சிவானந்தத்தைத் தரும் பேரொளியில் புகுந்து, சொல்லுதற்கு அரிய பெருமையுடன் சிவத்தைத் தரிசித்து, தான் யார் என்பதை உணர்ந்து, சிவமாகவே விளங்கியிருப்பர் என்பர். முப்பத்தாறு தத்துவத்தினையும் கடந்த நிலையே நாத முடிவாகும். அதுவே நாதாந்த நிலையாகும். இவ்வாறு நாதத்தினைக் கவனித்தபடி பேரின்ப நிலையில் இருப்போர் சித்தர்கள் என்பர்.

யோகமும் சித்தர் நெறியும்

யோகம் என்றால் ஒன்றிணைதல் எனப் பொருள். பிரிந்த ஒன்று மீண்டும் அத்துடன் இணைவது யோகம். ‘யோக்’ எனும் (தென்னகத்தில் உருவான) வடமொழி வார்த்தையின் தமிழ் வடிவம்தான் யோகம். பரமாத்ம சொரூபத்தில் இருந்து பிரிந்து சீவாத்மாவாக இப்பிறவியை எடுத்த மானிடர் மீண்டும் பரமாத்மாவுடன் ஐக்கியமாவதை யோகம் எனக் கூறலாம்.

யோகம் பலவகை. யோக முறைகளில் முக்கியமானவை: ஜப யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹட யோகம், கர்ம யோகம் ஆகியன. பகவத் கீதையில் ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் என்ற மூன்றும் விளக்கப்பட்டுள்ளது.

1. ஞான யோகம் : தன்னை முழுமையாக அறிதல் ஞானயோகம். தான் யார் என்று தனது இருப்பின் நிலையை உணர்வது ஞானயோகம். ஞான யோக வழிவந்தவர்கள் ஆதிசங்கரரும் ரமணரும் ஆவர்.

2. பக்தியோகம் : இறைவனைப் பக்தி செய்வதை காட்டிலும் வேறு செயல் இல்லாமல் பக்தியாலேயே இறைவனுடன் இரண்டறக் கலப்பது பக்தியோகம். மீரா, புரந்தரதாசர், ஞானசம்பந்தர், ஆண்டாள் போன்றவர்கள் பக்தியோகம் செய்தவர்கள்.

3. கர்மயோகம் : கடவுளுக்கு சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டு சேவையிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல். அப்பர், முதலான சிவனடியாருக்குச் சேவை செய்த பிற நாயன்மார்கள் போன்றோர் இவ்வகையினர்.

4. ஜபயோகம்: கடவுளைவிட கடவுளின் நாமத்தில் தம்மை ஐக்கியமாக்கிக்குள்ளுதல் ஜபயோகம். இடைவிடாது மந்திரத்தை ஜபம் செய்வதால் இறைவனுடன் இரண்டறகலத்தலை ஜெபயோகம் குறிக்கிறது. நாரதர், வால்மீகி, யோகி ராம்சுரத்குமார் எனப் பலர் நாம ஜபத்தால் ஜபயோகத்தைச் செய்தவர்கள்.

5. ஹடயோகம் : பிற யோகமுறைகள் மனதின் விழிப்புணர்வு நிலையையும் பண்பையும் சார்ந்து இருக்கிறது. ஹடயோகம் உடல் சார்ந்தது எனலாம். உடலை இறைவனின் இருப்பிடமாக எண்ணி, உடலைத் தூய்மையாகவும் சக்தியுடனும் பராமரிப்பது ஹடயோகம். 

யோகத்தில் முக்கியமான இந்த ஐந்து யோகமுறைகளும் பஞ்சபூதத்தின் வடிவங்களாக உள்ளது. ஆகாயத்தின் தன்மையை ஞானயோகமும் நீரின் தன்மையை கர்மயோகமும் காற்றின் தன்மையை ஜபயோகமும் நெருப்பின் தன்மையை பக்தியோகமும் மண்ணின் தன்மையை ஹட யோகமும் குறிப்பிடுகின்றன. பஞ்சபூதங்களில் ஏதாவது ஒரு பூதத்தின் தன்மை இல்லை என்றாலும் பிரபஞ்ச இயக்கம் செயல்படாது. அதுபோல அனைத்து யோகமுறையும் இன்றியமையாதவை.

சித்தர்கள் என்றாலே யோகிகளை நினைப்பது வழக்கம். பதஞ்சலி யோக சாத்திரத்தின் மூலம் பிற்காலத்தில் இந்தியச் சமயங்களில் ஆசன யோகப் பயிற்சிகள், தியான யோகப் பயிற்சிகள் இணைந்தன. ஹடயோகம் யோகிகளின் தனிச்சிறப்பாக வளர்ச்சி பெற்றது. மனித உடலின் அனைத்துப் பகுதியையும் அவனே இயக்குவது இல்லை. அதனால் மனதிலும் உடலிலும் ஓர் இறுக்க நிலை தோன்றும். இயற்கைப் பொருள்களின் அசைவுநிலையைப் பயன்படுத்தி மனிதன் தன் உடலைத் தயார்படுத்திக்கொள்ளல் ஹடயோகம் எனப்படும் யோகமுறை. ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தங்கள், கிரியா எனப் பல உட்பிரிவுகளைக் கொண்டது ஹடயோகம். 

1. ஆசனம் : உடலை சில இயக்க நிலைக்கு உற்படுத்தி அதை இயக்கமற்ற நிலைக்கு மாற்றுவது ஆசனம். 

2. பிராணாயாமம் : யோக முறைகளில் முதன்மையானது பிராணாயாமம். பிராணன் என்பது உயிர்சக்தி. நமது சுவாசம் மூலம் உயிர்சக்தியானது பிரபஞ்ச ஆற்றலுடன் இணைகிறது. பிராணனை வளப்படுத்துதல் தமது உயிர்சக்தியை மேம்படுத்தும் முறைக்குப் பிராணாயாமம் எனப் பெயர். 

3. முத்திரைகள் : உடலில் சில பகுதிகளை குறிப்பிட்ட வகைமுறையில் வைப்பது முத்திரை எனலாம். இறை உருவச்சிலைகளில் அவர்தம் கைகள் ஒருவிதச் சைகைநிலையில் இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக அம்மன் சிலைகளில் உள்ளங்கைகள் ஆசிர்வதிப்பதைப் போன்று இருக்கும். இதற்கு அபயஹஸ்த முத்திரை எனப் பெயர். யோகநிலைகளில் முத்திரைகளைக் கைக்கொள்வர். 

4. பந்தங்கள் : நமது சுவாசத்திலும் உடலிலும் உள்ள மின்சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைநிறுத்திக் கட்டிவைப்பது பந்தங்கள். இதனால் அந்தச் சக்தியானது குறிப்பிட்ட உடல்பகுதியில் வலிமையைச் சேர்க்கும். வடமொழியில் ‘பந்தா’ என இதற்குப் பெயர். 

5. கிரியா : கிரியை என்றால் செயல் என பொருள் கொள்ளலாம். ஹடயோகத்தில் கிரியை என்றால் உடலை தூய்மையாக்கும் செயல் எனப் பொருள். உடலில் கழிவுகள் சேருவது இயற்கை. அதைத் தக்கமுறையில் தூய்மையாக்க ஆறு வழிகளை ஹடயோகம் கூறுகிறது. இவை ‘ஷட்கிரியா’ என வழங்கப்படுகிறது.

ஹடயோகத்தைப் பயன்படுத்தும் தேவையைப் பற்றிப் பல நூல்கள் கூறினாலும், ‘ஹடயோக பிரதீபிகா’ எனும் நூல் ஹடயோகம் செய்யும் முறையை விரிவாக எடுத்துரைக்கிறது. இந்த நூல் மிகப்பழமையானது. ‘பதஞ்சலி யோக சூத்திரம்’ எனும் நூலில் ஆசனம் செய்வதின் அவசியத்தையும் அவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் பதஞ்சலி முனிவர் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறார்: “ஸ்திரம் சுகம் ஆசனம்.” தியானத்திற்கு ஸ்திரமாக அமருவதற்கு ஆசனம் தேவை. ஆசனம் செய்யும் பொழுது உடல் சிரமப்படக்கூடாது. ஸ்திரமாகவும் சுகமாகவும் வைத்திருக்க எது உதவுமோ அதுவே ஆசனம்.

ஹட யோகம் என்ற பெயர்க்காரணம்: ஹட என்றால் இருபுலம் என மொழிபெயர்க்கலாம். காந்தம் எவ்வாறு இரு புலத்துடன் செயல்படுகிறதோ அதுபோல நமது உடல், மனம் ஆகியவை இரு புலத்திற்கு இடையே ஊசலாடியபடி இருக்கும். அவற்றை ஒருநிலைப்படுத்தி இரு துருவங்களுக்கு நடுவில் இருக்க வைப்பது ஹட யோகம் ஆகும்.

மாதொருபாகம் என்ற அர்த்தனாரிஸ்வரத் தத்துவம் போல, நமது உடல் சூரியனுக்கு உண்டான நெருப்புத்தன்மையை வலது பக்கமும் சந்திரனுக்கு உண்டான குளிர்ச்சியை இடது பக்கமும் கொண்ட அமைப்பால் ஆனது. இருதன்மைகளில் ஏதாவது ஒன்று மிகும் சமயம் நமது வாழ்க்கை தன்மை சமநிலை தவறுகிறது. சூரிய-சந்திர மையத்தில் இருக்க செய்வது ஹடயோகம். ‘ஹ’ என்றால் வெப்பம் – ‘டா’ என்றால் குளிர்ச்சி என்றும் வழங்குவர். தமிழில் இவ்விரு நாடிகளையும் வடகலை, பிங்கலை என்ற பகுத்து மூச்சுப்பயிற்சியின்போது செயல்படுத்துவர்.  உடலைப் பாதுகாத்து ஆசனங்கள் செய்வது ஆன்மிக வாழ்க்கையில் நன்மையை கொடுக்கும். திருமூலர் இதையே,

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே. (704)

என்று திருமந்திரத்தில் பாடுகிறார்:

எத்தனை யோகமுறைகள் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றும் மனிதனுக்கு அவற்றைச் சிறப்பாக செய்ய உடலும் உயிரும் அவசியம். உடல் என்பது உயிரைத் தாங்கும் பாத்திரம். உடல் அழிந்தால் உயிர் அதில் தங்க இயலாது. மேலும் ஞானம் அடைய எந்த ஒரு யோகமுறையையும் பயன்படுத்த முடியாது. திருமூலர் ‘உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தேன்’ என ஹடயோகத்தை குறிக்கிறார். ஹடயோகத்தால் உடம்பு வலுப் பெறும். அதனால் உயிர் அழியாது ஞானத்தை நோக்கிச் செல்லும்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.

உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (705)

என்று திருமூலர் இதையே திருமந்திரத்தில் பாடுகிறார்:

திருமூலர் தனது நிலையைத் தெள்ளத்தெளிவாக்கி, ஹடயோகத்தின் அவசியத்தையும் உடலை நன்மையாகக் காக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறுகிறார். உடலின் உள்ளே இறைவன் வசிக்கிறார். அதனால் உடலை பேணிக்காப்பது அவசியம். உடல் இறைவன் வசிக்கும் கோவில் என்பதால் உடலை கவனிக்கத் தவறுவது கோவிலை சரியாகப் பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கும் பாவத்திற்குச் சமமானது. இதனால் உடலை மேம்படுத்துகிறேன் என்கிறார் திருமூலர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்

தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே. (1792) 

என்றும் திருமந்திரத்தில் பாடுகிறார் திருமூலர்.

உள்ளமும் உடலும் ஆலயத்திற்கு ஒப்பாகும். உணர்வு உறுப்புக்கள் அதில் இருக்கும் விளக்காகவும் ஆன்மா சிவலிங்கத்திற்கு சமமாகவும் கூறி ஹடயோகத்திற்கான அவசியத்தை திருமூலர் வலியுறுத்துகிறார்.

மருத்துவமும் சித்தர்களும்

மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இது நோய்த்தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல்நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல் முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம் காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு உடல்நல அறிவியல், உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில் நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறான குணப்படுத்தல் பெரும்பாலும் மருந்துகள், அறுவை மருத்துவம், பிற சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் இன்றியமையாதவை.

வரலாற்றுக்கு முந்திய கால மருத்துவத்தில் தாவரங்கள், விலங்கு உறுப்புகள், கனிமங்கள் அடங்கியிருந்தன. பல வேளைகளில் இவை சடங்குகளோடு மந்திர சக்தி வாய்ந்த பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற ஆன்மிக முறைகளில் ஆன்மவாதம், ஆன்மிகவாதம்,  ஆவித்தொடர்பு, குறிசொல்லல் என்பவை அடங்கும். மருத்துவ மானிடவியல் பல்வேறு வரலாற்றுக்கு முந்திய மருத்துவ முறைகள் குறித்தும் அவற்றுக்குச் சமூகத்துடன் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆய்வு செய்கிறது. 

மருத்துவம் குறித்த பழைய பதிவுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் (சித்த மருத்துவத்தை முறைப்படுத்திய) ஆயுர்வேத மருத்துவம், பண்டைய எகிப்திய மருத்துவம், மரபுவழிச் சீன மருத்துவம், அமெரிக்கப் பழங்குடிகளின் மருத்துவம், பண்டைக் கிரேக்க மருத்துவம் போன்றவை உள்ளன. பழங்காலக் கிரேக்க மருத்துவர்களான கிப்போக்கிரட்டீஸ், காலென் ஆகியோர் பிற்கால மருத்துவம் பகுத்தறிவு சார்ந்த முறையில் வளர்வதற்கு அடித்தளமிட்டனர். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாமிய மருத்துவர்கள் இத்துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். கிபோக்கிரட்டீசு, காலென் நூல்களின் அரபி மொழிமொழிபெயர்ப்புக்கள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன. தற்கால மருத்துவத்தின் தந்தை எனப்படும் பொலிமத் அவிசென்னா, அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அபுல்காசிஸ், சோதனை அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அவென் சோவார், சுற்றோட்ட உடற்றொழிலியலின் தந்தை என வழங்கப்படும் இபின் அல் நாபிஸ்ரூபவ் அவெரோஸ் என்போர் இஸ்லாமிய மருத்துவத்தின் முன்னோடிகள் ஆவர்.      

தமிழ்ச் சித்தர் மரபு

பண்டைக்காலத் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்தி, மருத்துவம், இரசாயனம், இயற்கை அறிவியல், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய ஞானிகளை, சித்தர்கள் என்று அழைத்தனர். பதினெண் சித்தர்கள் என்று இவர்களைக் குறிப்பிடுவது தமிழ் மரபு. 

சித்தர்கள்

“சித்தர்கள் பாடல்கள் சமயத்திற்கு எதிரானதாக இருக்கின்றன. சாதிக்கு எதிரானதாக இருக்கின்றன. சமூக அவலங்கள் பற்றிய பேச்சாக இருக்கின்றன. நிறுவனமயப்பட்ட சமயங்கள், கொள்கைகள் போன்று சித்தர்கள் தம்மை நிறுவனமயப்படுத்திக்கொள்ளவில்லை. சித்தர்கள் பலர் ஒன்றுசேர்ந்து வேலைகள் செய்ததாகச் செய்திகள் இல்லை. சித்தர்கள் இன்னார் என்று இன்றுவரை நம்மால் வரையறுக்க முடியவில்லை. சித்தர்களுடைய கொள்கைகளுக்கு இந்திய மெய்யியல் போக்குகளுக்கு உள்ள, குறிப்பாகத் தாந்திரிகத்திற்கும் சாங்கியத்திற்கும் உள்ள, தொடர்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு நமக்குப் போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை; பாடல்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இவையெல்லாம் செய்தால் பேசமுடியும். அதற்குமுன் சொல்லப்படுவதெல்லாம் வெறும் அபிப்பிராயங்களாக மட்டுமே இருக்கும்.’’ (பொ.வேல்சாமி) 

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வுமுறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வையும் வழிமுறைகளையும் உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் – அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள் – அறிவு படைத்தவர்கள் சித்தர்கள் என்பர்.

சித்தர்கள் (Supernatural) சக்திகொண்டவர்கள் என்று சிலர் கூறுவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயத (Material) இயல்புகளைச் சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆன்மீக ஈடுபாடுகளின் வெளிப்பாடுகள் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல்வாதிகள் (Materialists) அல்லர். மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும் மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ வகைப்படுத்தலுக்கோ எளிதில் சித்தர்களை உட்படுபடுத்தமுடிவதில்லை. எனினும், தமிழ்ச் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் எப்போதும் இருந்துவந்திருக்கின்றனர்.

சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொதுவான இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வுமுறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவுத் தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய பண்புகள் சித்தர்களை வருணிப்பன எனலாம். இப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பையும் (existence) உடம்பையும் சிந்தையையும் சுற்றத்தையும் இவ்வுலகின் இயல்பை நோக்கித் தெளிவான புரிதலையும் அறிநிலை உணர்வையும்  மெய்யுணர்வடைதலையும்  கொண்டவர்கள். 

தமிழ் மரபில் சித்தர்கள் எனப்படும் குழுவினர் பல காலமாக இருக்கின்றனர். ‘சித்துக்கள் கைவரப்பெற்றவர் சித்தர்’ என்று பொருள்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுமட்டும்தான் பொருள் என்று பொருளின் விரிவை ஒடுக்கிவிட இயலாது.

சித்தர்களைப் புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சந்நியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாட்டையும் சாதிய அமைப்பையும் வலியுறுத்தும் சைவமரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் “ஆத்மா”, ‘சம்சாரம்’ போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர்மரபு அறிவியல் மரபுகளுடன் ஒத்து ஆராயப்படுகிறது. சித்தர் மரபைத் தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்துக் குறுகிய ஆய்வுக்கு இட்டுச் செல்லும். 

இறைவன் தனியாக எங்கும் இல்லை. நமது உடம்புதான் இறைவனின் இடம். ஆதலால் கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி. உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை எனலாம். 

சித்தர் இயல்புகள்

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன்படாதவர்களாக, தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழிமுறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவர். அறிவாகிய சித்தை உடையவர்களாய்   நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் ‘நிறைமொழி மாந்தர்’ என்றும் ‘அறிஞர்கள்’ என்றும் பொருள்படுவதாகப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய துறைகளைத் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மெய்ப்புலன் காண்பது அறிவுஎன்பதிற்கிணங்க உண்மை அல்லது நிசநிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள். சாதி, சமய, சடங்குகளைக் கடந்து, சமுகத்தில் பயனுடையவை எவை என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதிசமய மனமாச்சரியங்களை மாற்றக் கருதிய சீர்திருத்தவாதிகளாகவும் சித்தர்கள் வாழ்ந்தனர். விந்தையான செயல்கள், பட்டறிவுத் தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய பண்புகள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பு (existence), உடம்பு, சிந்தை, சுற்றம், இவ்வுலகின் இயல்பை நோக்கிய தெளிவான புரிதல் (Understanding), புறநிலை உணர்வு (External Awareness), மெய்யடைதல் (Actuality) ஆகியவற்றில் சித்தி அடைந்தவர் சித்தர் எனலாம்.

சித்துகள்

பரஞ்சோதி முனிவர் இயற்றிய ‘திருவிளையாடல் புராணம்’, மதுரையம்பதியில் சொக்கேசப்பெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கூறும் புராணம். பழைய ‘திருவிளையாடல் புராணம்’, ‘ஹாலாஸ்ய மாஹாத்மியம்’ போன்ற பழம் நூல்களும் உண்டு.  பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில், சொக்கேசப் பெருமான் சித்தராக வந்து சித்துவிளையாடிய படலங்கள் சில இருக்கின்றன. அவற்றில், எல்லாம் வல்ல சித்தரான படலம், அஷ்டமாசித்து உபதேசித்த படலம், கல்லானைக்குக் கரும் பருத்திய படலம் ஆகியவை முற்றிலும் சித்து விளையாட்டுகள் பற்றியவை. நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வைகையில் வெள்ளம் வரச்செய்தது, வெள்ளத்தை அடக்கியது, இரசவாதம் செய்தது போன்றவையும் சித்துகள்தாம். 

சேயவெற்பினை அணியதாய்ச்செய்து, மற்று அணித்தாய்

மேய வெற்பினைச் சேயதா விடுத்து, மெய்ம்முதுமூப்பு

ஆயமக்களை இளையவர் ஆக்கியும், குதலை

வாயமக்களைக் கழிமுது மக்களா வகுத்தும். (9)

ஆணைப் பெண்ணுருவாக்கியும், பெண்ணை ஆணுருவா

மாணக்காட்டியும், மலடியை மகப்பெறச் செய்தும்

கோணற் கூன்செவிடு ஊமைகண் குருடுபங்கெவரும்

காணத்தீர்த்து, நாலுலோகமும் கனகமாகச்செய்தும், (10) 

வீசிமாத்திரைக் கோலினை விண்ணின் இட்டு அதன்மேல்

ஊசிநாட்டியிட்டு ஊசிமேல் பெருவிரலூன்றி

ஆசிலாயும் ஊசிமேல் தலைகிழக்காக –

மாசில் சேவடிப்போதுவான் மலர்ந்திடச் சுழன்றும், (13)

சண்ட வெம்பணிப் பகையெனப் பறந்து, விண்டாவிக்

கொண்டலைப் பிடித்து இடியொடும் குடித்தநீர் பிழிந்து

கண்டவர்க்கதிசயம் பெறக்காட்டியும் காண

விண்டலத்தினில் பண்டுபோல் இறைகொளவிடுத்தும். (14) 

என்று ‘எல்லாம் வல்ல சித்தரான படல’த்தில் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

சித்திகளைப் பற்றி ஏராளமாகப் பெரும் சித்தர்களே பாடியுள்ளனர். தாயுமானவரின் ‘தேஜோமயானந்தப் பத்து’ பாடலில் ஒரு பட்டியலைக் காணலாம்.

“கந்து உக மதக்கரியை வசமா நடத்தலாம்;

    கரடி,வெம்புலி வாயையும்

     கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;

       கட்செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்

    வேதித்து விற்று உண்ணலாம்;

       வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

       விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு

    சரீரத்திலும் புகுதலாம்;

       ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;

       தன்னிகரில் சித்தி பெறலாம்;

சிந்தையை அடக்கியே “சும்மா” இருக்கின்ற

    திறம் அரிது! சத்து ஆகி என்

       சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

        தேஜோ மய ஆனந்தமே! (8)

சித்தர்களின் அறிவியல்

சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தை, சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளின் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை, கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். இன்றிருப்பதைப்போல பரிசோதனைச் சாலைகள் அன்று இருக்கவில்லை. காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்து சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய அறிவியல் ஆய்வுடன் ஒத்திருக்கின்றன. 

சித்தர்களின் ஞானம்

மதவாதிகள், ஆத்திகர்கள், ஏதோ ஒருவகையில் இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும், மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கையும் கொள்கையுமாகும்.

யோகியரின் அடையாளங்கள்

ஆன்மிகம் என்றவுடன் அனைவரும் மதத்துடன் அதை தொடர்புபடுத்திக் குழப்பிக்கொள்கின்றனர். ஆன்மிகம் என்பது மதம், பண்பாடு, சடங்குகள், மொழி முதலானவற்றைக் கடந்தது. ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு பல நிலைகளும் தன்மைகளும் உண்டு. இயல்புவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களை பார்த்தால் வேறுபாடு தெரிவதில்லை. சாதுக்கள், சந்நியாசிகள், சுவாமிகள், யோகிகள், ரிஷிகள், மகரிஷிகள், சித்தர்கள் என பல வடிவங்களில் அவர்கள் இருக்கின்றனர். தாந்திரிகம் செய்பவர்களும், மந்திரங்கள் மூலம் தீமை விளைவிப்பவரும் இந்த அடைவுக்குள் வந்துவிடுகின்றனர்.

ஞானிகள் என்போர் இறைவனாகவே இருப்பவர்கள்; சுவாமிகள் என்போர் ஆன்மாவை உணர்ந்தவர்கள்; யோகிகள் என்போர் இறைநிலையில் இரண்டறக் கலந்தவர்கள் என எளிமையாக விளக்கப்பட்டாலும், உள்நிலையில் ஆன்மிகவாதி எப்படிபட்டவர் என கூறுவது கடினம். ஆன்மிக நிலையில் இருப்பவர்களின் நடை, உடை பாவனைகளைக் கொண்டு அவர்கள் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள் என முடிவு செய்ய முடியாது.

‘அகோராத்ரா’ என்றால் காலம் எனப் பொருள். அகோராத்ரத்தைக் கடந்த ஆன்மிகவாதிகள் அகோரிகள். காலத்தை கடந்த நிலையில் இருப்பதால் இவ்வகை யோகிகள் காலபைரவ அம்சமாக வணங்கப்படுகின்றனர். 

யோகிகள் தங்களின் இறையாற்றலை உயர்ந்த நிலையில் பயன்படுத்துவர். தங்கள் வாழ்க்கையையே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்களாக இருப்பர். சில யோகிகள் நிர்வாணமாக இருப்பர் என்றாலும் சில காரணங்களால் சமூகத்துடனும் கலந்து இருப்பர்.  தன்முனைப்பு கொண்டவர்கள், சமுக முனைப்பு கொண்டவர்கள் என யோகிகளை இரு நிலையில் வகைப்படுத்தலாம். தன்முனைப்புக் கொண்ட யோகிகள் தங்களுக்கென ஆன்மிகப் பயிற்சிகள் அமைத்துகொண்டு செயல்படுபவர். சமுக முனைப்புக் கொண்டவர்கள் சமுகத்தை அறவழியில் கொண்டுசெல்ல செயல்படுபவர். யமுனோத்ரி, கங்கோத்ரி, நேப்பாளம் முதலிய இமாலய மலைப் பகுதிகள் இவர்களின் முக்கிய வாழிடங்க¬ளாக இருக்கின்றன. கும்பமேளா தவிரப் பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் யோகிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்குச் சென்றாலும் இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள். 

யோகிகளுக்குத் தங்கள் உடலின் சக்திநிலை மிகவும் முக்கியமானது. யோக சக்தியின் உயர்நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்கமாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படிச் சக்தியை பெறுவது என்பது இவர்களுக்குத் தெரியும். மயானம், ஆறு, வனங்கள் போன்றவற்றில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவர். தங்கள் யோக சக்தியைப் பிறருக்கு அநாவசியமாகக் காட்டமாட்டார்கள். சமுகத்தில் தர்மம் தடுமாறும்பொழுது சூக்குமமாகச் செயல்பட்டுத் தர்மத்தை நிலைநிறுத்துவர்.

உலக மக்கள் ஆன்மிக நாட்டம் உள்ளவர்கள், ஆன்மிகத் தன்மை பற்றி உணர்வற்றவர்கள் என இரு பிரிவாக அமைந்துள்ளனர்:. இந்த இரு பிரிவில்,  இருவருமே உயர்ந்தவர்கள்தாம். பூமியின் ஏதாவது ஒரு பகுதியில்  காலம் சுழலும்போது இரவு பகலாகும், பகலும் இரவாகும். ஆனால் பூமியின் தொடர்பற்று ஆகாயத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு இரவு பகல் என்பது கிடையாது.  மனிதர்கள் பூமியில் தொடர்பு கொண்டு வாழ்வதால் அவர்களுக்கு மாற்றம் என்பது இருக்கிறது. ஆன்மிகவாதிகள் இதிலிருந்து விடுபட்டு உள்ளதால் காலத்தாலும் மாற்றத்தாலும் கட்டுவிக்கப்படாமல் விடுபட்டு இருக்கின்றனர்.

ஆன்மிகவாதிகள்  பாரத தேசத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுதும்  உள்ளனர். பாரத தேசத்தில் மட்டுமே ஆன்மிகவாதிகள் பெருக காரணம் சூழல்தான். தாங்கள் செய்யும் ஆன்மிக சாதனைகள் (பயிற்சிகள்) முதலியவற்றுக்கு இடையூறு வராத சூழல் இங்கு உள்ளது எனலாம். ஞானம் அடைய தனிமனித முயற்சி இருந்தாலும் அதற்கான சூழல் வேண்டும். 

திபத்தில் இருக்கும் மக்கள் முக்கியமாக ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கடவுளை வேண்டுவர் : ‘கடவுளே எனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் என்னை பாரதத்தில் பிறக்க வை’ என்பதே அம்மந்திரம். வேறு இடங்களில் ஒரு மனிதன் பிறந்தால், தானே ஞானமடையும் முயற்சியில் இறங்க வேண்டும். பாரதத்தில் பிறந்தாலே போதும் என்பது அவர்களின் எண்ணம். ஆன்மிக நாட்டமுள்ளவனும் பிறரிடம் தான் கண்ட ஆன்மிகவாதிகளைப் பற்றி வெளியே சொல்ல முடிவதில்லை.

சித்தர் எனும் பெயர்வழக்கு தமிழில் மட்டுமே உண்டு. யோகிகள் என்பவர்களைத்தான் சித்தர்கள் எனத் தமிழ்ப் படுத்தியுள்ளதாகக் கருதலாம். அவர்கள் பதினெட்டு என்ற எண்ணிக்கையில் தான் இருக்கவேண்டும் என  வரையறைப் படுத்துவர். உண்மையில் சித்தர்கள் மதம் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் தங்கள் உடலாலும் உயிராலும் மேன்மை அடைய ஆன்மிகப் பயிற்சி செய்பவர்கள் எனலாம். அகோரிகள் எனும் சொல்லாடல் தமிழ்நாட்டில், சித்தர்கள் என்பதன் வடமொழி வழக்கு எனலாம். தமிழில் வடமொழிச் சொற்கள் தவறான பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. தம்மைக் கண்டவர்கன் பணியத்தக்க நிலையில் இருப்பவர்களே அகோரர்கள். வடநாட்டில் அகோரிகள் என அழைக்கப் படுபவர்கள் யோகிகளே. நவ நாத சித்தர்கள், நாக சந்யாசிகள் அல்லது நாகா பாபா என அழைக்கப்படுபவர்களும் இவர்கள்தான். இந்தியில், நங்கா என்றால் நிர்வாணம் எனப் பொருள். நங்கா பாபா எனும் சொல் வழக்கு, பின்னாளில் நாகா பாபா என மாற்றமடைந்தது. உடலில் ஆடைகள் இல்லாமல், தலையில் நீண்ட முடியுடன் முகத்திலும் மார்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் யோகிகள்.  தலைப் பகுதி தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடி  இருக்காது. இவர்கள் உலகை வெறுத்துத் தனியாக வாழ்பவர்கள் இல்லை.  தனியாகவும் சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள். இசையை யோகமாகப் பயில்பவர்களை நாத பிரும்மத்தை வழிபடுபவர்கள் என்று பக்திமார்க்க நாத யோகிகளும் இருந்திருக்கிறார்கள்.

யோகிகள் மயானத்தில் எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ண மாட்டார்கள். உணவுத் தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பதுதான் இதன் பொருள். சில மூலிகைகளை வைத்துக் கொண்டு பசியற்ற நிலையில் இருப்பார்கள். உடலில் எந்த ஒரு மதத்தின் சின்னங்களோ அடையாளமோ இருக்காது. உருத்திராட்சம், சங்கு,  ஆயுதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் கைகளில் வைத்திருப்பார்கள்.  மோதிரம் முதலிய அணிகலன்களை அணியமாட்டார்கள். கோவணம் (கௌபீனம்) தரித்தோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் பிற இடங்களில் பூசமாட்டார்கள்.

தங்களை விளம்பரபடுத்திக்கொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள். உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண் கொண்டு பூசியிருப்பார்கள். மதச்சின்னங்கள் எதையும் கைகளில் வைத்திருக்கமாட்டார்கள். யோகிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு எனக் கண்டறிவது கடினம்.   ஆண், பெண் யோகிகளும்  இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண் யோகிகளைக் கண்டறிவது கடினம். இவர்களின் தலைமுடி வயதானாலும் வெண்மையடையாது. உடற் பயிற்சியாளனைப் போல இல்லாமல், உடல் சீரான நிலையில் இருக்கும். 

சித்தர்களும் சூஃபிகளும்

இந்திய வாமமார்க்கத் தாந்திரிக மரபு சார்ந்த சாக்தர்கள், கபாலிகர்கள், மாவிரதிகள், காளமுகர்கள், நாத யோகிகள், அகோரிகள் போன்றோர் சித்த மரபின் தொடர்பினைக் காட்டுவோராகக் கருதுவர். சைவர்கள் பலர் சித்தர்களாகக் கருதப்படுகிறார்கள். இஸ்லாமிய மதத்தின் சூஃபி மரபினரைச் தமிழ்ச் சித்தர்களுடன் இணைத்து பார்க்கும் வழக்கும் உண்டு.   பீரப்பா எனும் பீர்முகமது, மஸ்தான் சாகிபு போன்ற பல இஸ்லாமியப் பின்புலம் கொண்டவர்களும் சித்தர்களாகக் கொள்ளப்படுகின்றனர். இவர்களுள் சீரடி சாயிபாபாவை சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

சித்தர்களின் மருத்துவமும் ரசவாதமும்

சித்தர்களின் மருத்துவ முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானவை. பண்டைத்தமிழரின் அறிவியல் அறிவின் உச்சமே ‘சித்த வைத்தியம்’ ஆகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய பண்பாட்டிற்கேற்ப, மனித வாழ்க்கை முறைக்குத் தேவையான அனைத்து உடல்நல முறைகளையும் மிக எளிய மருத்துவமாக அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டுச் சித்தர்கள் தந்திருக்கின்றனர். இருப்பிடத்தின் அருகில் கிடைக்கும்  மூலிகைகளைக் கொண்டு, அம்மருத்துவ முறைகள் வழியே மனித குலத்தைக் காத்து வந்துள்ளனர். அனைவரும் ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி,  கூடா ஒழுக்கம் போன்றவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியினால் வாழ்வில் வெற்றி பெற்று உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பாடிவைத்துள்ளனர். உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறையே சித்தமருத்துவம். சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (இரசவாதம்) வேலைகளில் மறைவாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது. இன்றைய வேதியியல் அறிவின்படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப் பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

மருந்துகளில் இரசம் முதன்மையானது. இதன் மூலம் இரச பஸ்பம், இரச செந்தூரம், இரசக்கட்டு முதலிய மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இரசவாதம் என்றால் இரசத்தின் மாறுதல்களை அறிதல் என்பதும் பொருள்.

போகர் என்ற சித்தரின் பாடல்கள், வேதியியல் தொடர்பாக சித்தர்களின் கருத்தைக் கூறுவதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவை தமிழில் அமைந்தாலும், அவர் ஒரு  சீனர் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.

தமிழ் வளர்த்த சித்தர்கள்

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களைப் படைத்துள்ளனர். தமிழ்நாட்டிலே சித்தர்கள் இயற்றியனவாக இரசவாதம்,. வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகா லட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைசார் நூல்கள் உள்ளன. 

சித்தர்களால் இயற்றப்பெற்ற பாடல்கள் சித்தர் பாடல்கள் ஆகும். அவை சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைத் தாங்கிய ஆன்மிகப் பாடல்கள். 

சித்தர்களின் கொள்கை

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார். பரமாத்மா எங்கும் தனியாக இல்லை; நமது உடம்புதான் பரமாத்மாவின் இடம்; ஆதலால் ‘கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்; உடம்பைப் பேணுவதே கடவுட்பாணி; உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு’ என்பது சித்தர் கொள்கை. இதனையே ’உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்; உருவம் இல்லா உண்மை அவன்’  என்று சொல்வர்.

சித்தர்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர்:  

1. சன்மார்க்கச் சித்தர்கள் – திருமூலர், போகர்.

2. ஞானச் சித்தர்கள் – பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச்சித்தர், அகப்பேய்ச்சித்தர், குதம்பைச்சித்தர், அழுகுணிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர்.

3. காயச் சித்தர்கள் – கோரக்கர், கருவூர்ச்சித்தர், மச்சமுனி, சட்டைமுனி, சுந்தரானந்தர், உரோமரிஷி.

தமிழ் இலக்கியங்களில் சித்தர்கள்

சித்தர் என்ற சொல்லிற்குச் சித்தத்தைத் தம் வசப்படுத்தியவர் என்ற பொருளுண்டு. புறக்கருவிகளாகிய ஞானேந்தரியங்கள் கண்மேந்திரியங்களையும் தம் போக்கில் போகவிடாமல் உள்ளிழுத்து அகக்கருவியாகிய சித்தத்தினைச் சமாதியில் இருத்தி வெற்றி பெற்றமையால் சித்தர்களை யோகியர் என்று குறிப்பர். யோகசாதனையால் பெறுதற்கரிய ஆற்றல்களையும் பெற்றவர்கள் சித்தர்கள். இவர்கள் மூன்றுவித அடக்கத்தைக் கடைப்பிடிப்பர். 1. மூச்சை அடக்குதல் 2. விந்துவை அடக்குவதன் மூலம் காமத்தை அடக்குதல் 3. மனதை அடக்கி ஆசையற்ற நிலையை அடைதல். சித்தத்தைச் சிவன்பால் உப்போதும் செலுத்தி வாழ்வில் அட்டாங்க கோகம் கைவரப் பெற்ற அதிசய மனிதர்களே சித்தர்கள். ‘சிந்தை தெளிந்திருப்பான் அவனே சித்தன்’ என்பது வான்மீகர் ஞானம். யோகத்தினால் சித்திகளும் காயகல்பத்தால் நோயற்ற நீண்ட அயுளும் இரசவாதத்தி£ல் மனதைப் பொன்னாக்கும் வித்தையும் கொண்டவர் சித்தர்கள். அவர்கள் சிற்சிலவேளைகளில் தம் ஆற்றலை வெளிப்படுத்தியதைச் ‘சித்து விளையாட்டு’ என்று குறிப்பிட்டனர். 

சித்தர்கள் யோகியராகவும் ஞானிகளாகவும் விளங்கியவர்கள். வானநுல் சாத்திரத்திலும் மருத்துவக் கலையிலும் வல்லவர்கள். இரசவாத வித்தை புரிந்தவர்கள். சித்தாந்திகளாகவும் வேதாந்திகளாகவும் திகழ்ந்தவர்கள். வேதாந்த சித்தாந்த சமரசம் கண்டவர்கள். தாந்தீரிகம் அல்லது தந்தரியானம் எனப்படும் சாக்த நெறி நின்றவர்கள். உருவ வழிபாட்டினை உடன்படாதவர்கள். சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கண்டித்தவர்கள். சமசித்தம் வாய்ந்தமையால் சாதி பேதங்களைச் சாடியவர்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர்கள். வைதிக நெறியைப் புறக்கணித்து மனித நேயத்தை வளர்த்தவர்கள். சீர்திருத்த சிந்தனையாளர்கள். நிலைநிறுத்தப்பட்ட நிறுவனங்களை எதிர்த்த புரட்சியாளர்கள். அனைத்தும் ஒன்றெனக் கண்ட காட்சியாளர்கள். சுதந்திரச் சிந்தனையாளர்கள். 

சித்தர்மரபு இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்த சித்த தியானம் எனும் சித்தர் நெறி இமயம் முதல் ஈழம் வரை பரவியிருந்தது. சைவம் வைணவம் என்ற மதச் சார்பு கடந்து, சமணம் பௌத்தம் ஆகிய புறச்சமய சார்பிலும் சித்தர் கணம் வளர்ச்சி பெற்றுள்ள செய்தியை வரலாறு உணர்த்துகிறது. பகவத்கீதையில், ‘சித்தர்களில் நான் கபில முனிவனாக உள்ளேன்’ என்று கண்ணன் கூறியுள்ளான்.  ஆனால் இவர் நிரிச்சுவர சாங்கியத்தின் கபிலராவார். பிற்காலத்தில் தமிழில் தோன்றிய ‘கபிலர் அகவல்’ பாடிய சித்தர் புரட்சி மிக்க கருதுகளைக் கொணடவர்கள் என உணர்த்துகிறது.

தமிழகத்தில் அகத்தியரை முதல்வராகக் கொண்ட சித்தர்கணம் ஒரு பிரிவு ஆகும். திருமூலரை முதல்வராகக் கொண்ட சித்தர் கணம் ஒரு பிரிவாகவும் எண்ணப் பெறுகிறது. அகத்தியர் என்ற பெயரில் பலர் பல காலங்களில் வாழ¢ந்துள்ளனர். இவருள் சித்தர் அகத்தியர் திருமூலருக்கு நண்பர். பொதிய மலையில் நெடுங்காலம் யோகத்தில் திளைத்திருந்த அவரைக் காணும் பொருட்டு திருமூலர் கைலையிலிருந்து வந்ததாகச் சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். (12 : 30 – 1-2)

சித்தரகத்தியர் பாடியனவாக நுற்றுக்கணக்கில் மருத்துவ நுல்களும் சோதிட நுல்களும் ஞான நுல்களும் கிடைக்கின்றன. திருமூலர் பெயரில் திருமந்திரமேயன்றி எண்ணற்ற மருத்துவ நுல்களும் வழங்கி வருகின்றன. போகரின் சீடராகிய கொங்கணவர் தமது ‘வாத காவியம்’ முதல் பாகத்தில் தம்மைத் திருமூலரின் பேரன் என்று கூறியுள்ளார் (308). மேலும் இடபதேவரை பின்பற்றிய லோகசித்தர் குழுவிற்கும் திருமூலரைப் பின்பற்றிய யோகசித்தர் குழுவிற்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டினையும் குறித்துள்ளார் (வாத காவியம்: 307-411). திருமூலர் உணர்வு மயமான சித்தத்தினை யோகம் புரியும் போது மூலதாரத்தில் நிறுத்தவேண்டுமென்ற கோட்பாட்டினை வலியுறுத்தியவர். இதனால் தான் மூலர் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டதுபோலும். ‘இடபதேவர்’ (ரிஷப தேவர்) என்பவர் புருவ மத்தியில் சித்தத்தினை நிலைநிறுத்தி யோகப்பயிற்சியை கொள்ளுதல் வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியவர். இந்த இடப தேவர் நந்தி தேவர் மரபு என்பதை தோற்றுவித்தவர் ஆகலாம். அப்படி இடப தேவரை நந்தி தேவராக கொள்ளப்பெரின் திருமூலர் அவர் சீடராகத் திகழ்ந்தவர் என்பது புலப்படும். ‘நந்தி அருளாளே நாதானாம் பேர் பெற்றோம்’ (68) என்பார் திருமூலர். நந்தி மரபில் இடம்பெற்றவர்களாக பதஞ்சலி வியாக்கிரமர் திருமூலர் முதலிய எண்மரைத் திருமந்திரம் சுட்டுகிறது (67).  பாலவர்க்கத்தைச் சேர்ந்த சித்தர் கணமும் ஒரு பிரிவாகப் பேசப்படுகிறது.சித்தன் என்பது பாலன் ஆகிய முருகனின் ஒரு பெயர் என்று நச்சினார்க்கினியர் திருமுருகாற்றுப்படை (176) உரையில் குறித்துள்ளார்.

இங்ஙனம் சித்தர்கள் கூட்டம் பெருகி வளம் பெற்றுப் பல பனுவல்களைப் படைத்திருந்தும்கூட, பழம் தமிழ் உரையாசிரியர்கள் இவற்றை பிரமாணம் ஆக எடுத்துக்காட்டாமைக்கு காரணம் புலப்படவில்லை. எனினும் சீவகசிந்தாமணி உரையில் (1287) நச்சினார்க்கினியார் (கி.பி.1450) சித்தர் ஆருடம் என்னும் மருத்துவ நுலினைச் சுட்டியுள்ளார். இது இக்காலத்து அருகி வழங்கும் சித்தர் ஆருடச்சிந்து என்ற மருத்துவ நுலினை குறிக்கக் கூடும்.

சித்து என்பது அறிவு என பொருள் தரும். ஆதலின் முக்காலமும் அறியும் ஞானம் பெற்ற சித்தர்களை அறிவர் எனக் கூறுதல் தமிழ் மரபு. தொல்காப்பியர் அறிவர்களைப் பற்றி இரு இடங்களில் குறிப்பிடுகிறார். ’மருவில் செய்தி மூவகைக்காலமும் நெறியில் ஆற்றிய அறிவன் தேயமும்’ (74) என்ற தொல்காப்பிய நுற்பாவிற்கு நச்சினார்க்கினியர் உரை, ‘காமம் வெகுளி மயக்கம் என்ற முக்குற்றங்களை நீக்கியவர் அறிவர், இறப்பு நிகழ்வு. எதிர்வு என்னும் மூவகைக் காலத்தையும் நெறியினால் அறியும் முழுதுணர்வு உடையவர் அறிவர்’ எனக் கூறுகிறது. புத்தர் ஓர் ‘அறிவர்’ என்று  நச்சனார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். அறிவராகிய புத்த சித்தர்கள் தாந்தீரிக பௌத்தத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியரையும் ஓர் அறிவராகக் குறிப்பிடுகிறார். மேலும், மாமூலர் முதலியோர் அறிவன் தேயத்து அனைநிலை வகையோர் ஆவர் எனவும், நச்சினார்க்கினியர் விளக்குகிறார். எனவே தமிழ்ச்சித்தர்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே அறிவர்களாக விளங்கி வத்துள்ளமை  தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் அறிவர் பற்றிய குறிப்புகள் உள்ளன. புறநானுற்றில் (43) அவிர் சடை முனிவர் பற்றி கூறப்படுகிறது. பழைய உரையாசிரியர் இந்த முனிவரை ‘அருந்தவத்தோர்’ எனக் கூறுகிறது. எனவே அக்காலத்தில் யோகநெறி இருந்தமை புலப்படும்.

சிலப்பதிகாரத்தில் அறிவன், சித்தன் என்ற சொற்களை இளங்கோவடிகள் அமைத்துள்ளார். (10 : 176-177)  சித்தர், சாரணர் பற்றியும் சிலம்பின் பழைய உரையாசிரியர் குறிப்பிடுகிறார். மகாவீரருக்கு பல ஆண்டுகளுக்கு முந்திய முதல் தீர்த்தங்கராகிய இடப தேவரும் அறிவனே ஆவர். எல்லாப் பொருளையும் அறியும் அறிவையுடையோனி என்று அறிவன் என்ற சொல்லிற்கு அடியார்க்கு நல்லார் விளக்கம் எழுதியுள்ளார். சித்தன் என்ற சொல்லிற்கு ‘எண்வகைச் சித்திகளையும் உண்டாக்கியவர், கிருத கிருத்திய – செய்யவேண்டுவனவற்றை செய்துமுடிப்பவன் கன்மங்களை கழுவினவன்’ எனப் பொருள் கூறினார். எனவே சமண நெறியில் யோக சித்தி பெற்றவருக்கு சித்தன் என்பது ஒரு பெயர் என்பது புலனாகிறது. கி.பி. முதல் நுற்றாண்டில் வாழ்ந்த திகம்பர சமணராகிய குந்தகுந்தர்  இயற்றிய பிரவசன சாரத்தில் சித்தர் முதலிய பஞ்ச பரமேஷ்டிகளுக்கும் வணக்கம் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு பூம்புகாரில் திருக்கோய¤ல்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. சீவக சிந்தாமணியில் சித்தர் முதலிய நால்வர் வணக்கம் கூறப்பட்டுள்ளது. சமணநெறியில் சித்தர்கள் பதினைந்து வகையினர் ஆவர். இவருள் ஏகசித்தரும் அனேக சித்தரும் அடங்குவர். மகாயான பௌத்தத்தில் தந்திர யானம் என்றும¢ வஞ்சர யானம் என்று சொல்லப்படும் ஒரு பிரிவு யோக சார தத்துவத்திலிருந்தும் தோன்றியது என்பர். இதில் அரிய சித்திகளைப் பெற்றவர்கள் சித்த புருஷர் எனப்பட்டனர். இவர்களுடைய நெறிக்கு சித்தயானம் என்பது காரணப் பெயராகும். இவர்கள் எண்ணிக்கை 84 ஆகும். இவர்களுள் மச்சேந்திரர், கோரக்கர், கங்கணர், அம்பலர் உள்ளிட்ட தமிழ்ச் சித்தர்களும் குறிப்பிடப்படுகின்றனர். குமரி, மேகலா, கோகிலா முதலிய பெண் சித்தர்களையும் பௌத்தம் சுட்டுகிறது. மேகலா என்பவர் மணிமேகலா எனப்படுபவர் ஆகலாம். கி.பி.1100இல் புத்தமித்திரன் எழுதிய வீரசோழியத்தில் 89 சித்திகளை போதிசத்துவர் விளக்கி அருளியதாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் தாந்தீரிய பௌத்தம் பரவியிருந்தமை உணரப்படும். மணிமேகலையில் சித்திகள் பல பெற்ற மணிமேகலா தெய்வம், சம்பாபதி, தீவதிலகை, கந்திர்ப்பாவை முதலிய தெய்வங்கள் படைக்கப்பட்டுள்ளனர். சாதுசக்கரன் என்ற போதி சத்துவரையும் காணலாம்.

தேவார ஆசிரியர் முவருக்கும் காலத்தால் முற்பட்டவர் திருமூலர். வரலாற்று நோக்கில் இவர் கி,பி. ஐந்தாம் நுற்றாண்டினராக கருதப்படுகிறார். சைவ சித்தாந்தம் வேதாந்தம் யோகம் சாக்தம் எனப்படும் தந்தரயாணம், வீரசைவம் ஆகிய அனைத்திற்கும் மூலமாக திருமந்திரம் திகழ்கிறது. சித்தர் நெறியின் மூலவராக திருமூலர் போற்றப்படுகிறார். முதல் தந்திரத்தில் சித்தர்களின் சிறப்பியல்புகளைத் திருமூலர் தெளிவுறுத்தியுள்ளார். (125) தம் யோக சாதனையின் பயனாக இவ்வுலகில் உள்ளபோது சிவலோகமாகிய கயிலைக்காட்சியை கண்டவர்கள். சாக்தம் எனப்படும் நாதத்தையும் சத்த முடிவு எனப்படும் நாதந்தத்தினையும் தங்களுக்குள் தரிசித்தவர்கள் என்றும் அழிவில்லாதவர்கள், நித்தர், நிமலர், நிராமயர், பரமத்தர் பரம்பொருளைத் தெரிந்தவர். இரண்டாம் தந்திரத்தில் சைவ சித்தாந்தத்தில் மட்டுமே கூறப்படும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்ற ஐவகை மலங்கையும் அழித்து சிவமாம் தன்மை பெற்று முத்தானந்தம் என்ற பேறுபெற்றவர் சித்தர் என திருமூலர் கூறியுள்ளார். (497) ஐந்தாம் தந்திரத்தில் சகமார்க்கமாகிய யோகமார்க்கம் சித்தருக்குரிய சிறந்த நெறியாக பேசப்பட்டுள்ளது. அம்மார்க்கத்தின் குறிக்கோளாக யோக சமாதிக்கு உகந்தவர் சித்தர் என்று திருமூலர் எண்ணியுள்ளார். (1490) 8ஆம் தந்திரத்தில் சித்தரின் அனுபவங்கள் கூறப்படுகின்றது. மூன்றாம் தந்திரம் சித்தர்களுக்குரிய அட்டாங்க யோகத்தினையும் காயசித்தி உபயாத்தையும் உரைக்கிறது. நான்காம் தந்திரம் சக்கரங்களையும் சக்தி மந்திரங்களையும் விளக்குகிறது. இவையாவும் சாக்த நெறிக்குரிய தாந்திரிக பகுதிகள் எனலாம். யோகசூத்திரம் செய்த பதஞ்சலியை தன் ஒரு சாலைத் தோழராக்கூறும் திருமூலர் குண்டிலினி யோகம் பற்றி பல புதிய கருத்துக்களைக் கூறியுள்ளார். திருமூலர் பெயரில் பிற்காலத்தில் தோன்றிய நுல்களி¢ல் யாப்பு மொழிகள் வேறுபட்டு உள்ளன.

திருஞானசம்பந்தர் காலத்தில் (கி.பி.650) சித்தர்கள் பலர் விளங்கியுள்ளனர். இறுநான்கின் மாதி சித்தர் என்று எண்வகைச் சித்திகளையும் பெற்ற சித்தர்கள் பிரிக்கப் படுகின்றனர். (166.10) சித்தி தருவது நீரு என சம்மந்தர் குறித்துள்ளார். (2.66.3) அப்பர் பலபதிகங்களில் சித்தர்களைக் குறித்துள்ளார். சுந்தரர் பதிகங்களிலும் சித்தர்கணமும் சித்தர்களும் சொல்லப்படுகின்றனர். மாணிக்கவாசகரும் சித்தர்களை போற்றுகிறார். திருவிசைப்பாவில் இடம்பெறும் முதல் முன்று அருளாளர்கள் ஆகிய திருமாலிகைத் தேவர், சேந்தனார், கருவுர்த்தேவர் என்போர் சித்தர்கள் என்று எண்ணப்படுகின்றனர். இம்முவரும் சித்தர்களிலிருந்து வேறானவர் என்ற கருத்தும் உண்டு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கி.பி. ஆறாம் நுற்றாண்டில் வாழ்ந்த முதல் முன்று ஆழ்வார்களின் சமகாலத்தவராக கருதப்பெறும் திருமழிசை யாழ்வார் தொடக்கத்தில் சாக்கியம், சமணம் முதலிய சமயங்களில் நின்றவர் பின்னர் சிவவாக்கியர் என்ற பெயரில்  சைவ நெறியில் நின்றவர். எனவே சித்தர் சிவவாக்கியரும் திருமழிசையாழ்வாரும் ஒருவரே என்ற கருத்து நிலவுகிறது. எனவே திருமூலர் காலத்தைச் சார்ந்த கி.பி. ஆறாம் நுற்றாண்டில் வாழ்ந்தவர் சிவவாக்கியர் எனத் தோன்றுகிறது. 

கலம்பகங்களில் சித்து அல்லது சம்பிரதம் என்பது ஒரு உறுப்பு. இது இரசவாதத்தில் வல்ல ஒருவன் தம் ஆற்றலை பாட்டுடைத் தலைவனுக்கு எடுத்துக்கூறும் வகையில் பாடப்படும் இந்திர சாலம் அல்லது சித்து எனப்படும் உறுப்பாகும். அருணகிரி நாதர் பாடிய சித்து வகுப்பு தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் சாதனையாகக் கூறுவர். இதில் முருகள் அருள் பெற்ற சித்தர்களின் பிரதாபங்கள் சந்த நயத்துடன் கூறப்படுகின்றன. பரஞ்சோதியார் பாடிய திருவிளையாடல் புராணத்தில் எல்லாம் வல்ல சித்தரானபடலம் ஈசனின் ஒரு திருவிளையாடலைக் கூறுகின்றது. அட்டமாசித்தி உபதேசித்த படலத்தில் அட்டமாசித்தி அடையும் உபயாங்களை விளக்குகிறார். ரசவாதம் செய்த படலத்தில் சித்தராக வந்த சிவனின் பொன்னாக மாற்றிய திருவிளையாடல் பாடப்படுகிறது. பிரபு லிங்க லீலையில் சிவப்பிரகாசர்  வீரசைவக் குரவர்களின் வரலாற்றை எழுதியுள்ளார். இரேவன சித்தரும் மருள சித்தரும் வீரசைவர்கள் எனப்படுகின்றனர். இதில் குறிக்கப்படும் மற்றொரு சித்தர் கோரக்கர். தாயுமானவர் சித்தர்கணம் பற்றி ஒரு பதிகம் பாடியுள்ளார். வேதாந்தம் சித்தாந்தம் என்ற ஒருபொருள் உண்மை, பல பொருள் உண்மை நெறிகளை ஒன்றுபடுத்திச் சமரசம் கண்ட மெய்ஞானிகளைச் சித்தர்கள் என்பது தாயுமானரின் கருத்து. இவர் சித்தர்களின் தோற்றம் பற்றி தவராஜ சிங்கத்தின் பொதுப்பண்புகளை எடுத்துக்காட்டியுள்ளார். கடைசியாகத் தோன்றிய சித்தராக இராமலிங்கவள்ளளாரைக் கூறுவர். இவர் மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி பாடியவர்; சித்துக்களைச் செய்தவர். ஏமசித்தி, சாகக்கல்வி, கடவுள் நிலையறிந்து அம்மயமாதல், தத்துவ நிக்கிரகம் என்ற நான்கு உறுதிப்பொருள்களை வள்ளளார் கூறியது அறியத்தக்கது.

பாரதியார் தமது சயசரிதையான பாரதி 66 என்பதின் தொடக்கத்தில் சித்தர்களைப் பற்றிக் கூறுகிறார். எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தார் அப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் என்று பாடுகிறார்.

தமிழ்நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர். அவர்கள் வருமாறு: 

1. திருமூலர்  2. இராமதேவர் 3. கும்பமுனி 4. இடைக்காடர்  5. தன்வந்திரி  6. வால்மீகி 7. கமலமுனி 8. போகநாதர் 9. மச்ச முனி 10. கொங்கணர் 11. பதஞ்சலி 12. நந்தி தேவர் 13. போதகுரு 14. பாம்பாட்டி 15. சட்டைமுனி 16. சுந்தரானந்த தேவர் 17. குதம்பைச் சித்தர் 18. கோரக்கர். 

இப்படி ஒரு பட்டியலும் உண்டு.

1. திருமூலர்  2. போகர்   3. கருவூர்ச்சித்தர்  4. புலிப்பாணி  5. கொங்கணர்   6. அகப்பேய்   7. சட்டைமுனி 8. சுந்தரானந்தர்  9. அகத்தியர்  10.  தேரையர்  11. கோரக்கர்  12. பாம்பாட்டி சித்தர்  13. சிவவாக்கியர்  14. உரோமமுனி 15. காகபுசுண்டர்  16. இடைக்காடர்  17. குதம்பைச் சித்தர்  18. பதஞ்சலி.

எனினும், பிற்காலத்தில் பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்.

எண்வகைச் சித்திகள் (அஷ்டமா சித்திகள்)

1. அணிமா – அணுவைவைப்போல் சிறிதான தேகத்தை அடைவது. ஒரு பொருளைத் தோற்றத்தில் சிறிதாக்கிக் காட்டுவது அல்லது மாற்றுவது. இலங்கைநோக்கிச் சென்ற அநுமன் தன்னைப் பிடிக்கவந்த இலங்கினி அரக்கியின் வாயில் நுழைந்து காதுவழியாக வெளிவந்தபோது அணிமா சித்தியால் தன் உருவைச் சிறிதாக மாற்றிக்கொண்டான் என்பது இராமாயணக் கதை.

2. மகிமா – எல்லையில்லாமல் விரிந்து படரும் ஆற்றலால் சிறிய பொருளைப் பெரிதாக ஆக்குவது. வாமன அவதாரம் திருவிக்கிரம அவதாரமாக உருவெடுத்ததே மகிமா சித்து.

3. லகிமா – உடலை எடையில்லாமல் செய்து காற்றில் பறப்பது. நாவுக்கரசர் கல்லில் கட்டிக் கடலில் போட்டபோது லகிமா சித்தியால் தெப்பமாக மிதந்தார்.

4. கரிமா – எதனாலும் அசைக்க முடியாத எடையோடு இருத்தல். பீமன் முன் அநுமன் குரங்கு வடிவில், தன் வாலை பீமனால் அசைக்கமுடியாதபடி தோன்றியது கரிமா சித்து.

5. பிரகாமியம் – கூடுவிட்டுக் கூடு பாய்வது. அவ்வை முதுமை வடிவம் பெற்றதும் காரைக்காலம்மை பேய்வடிவம் பெற்றதும் இடைக்காடர் இடையன வடிவெடுத்ததும் இச்சித்தின் மூலமே என்பர்.

6. பிராத்தி – மனதால் நினைப்பதைத் தடைகளைக் கடந்து பெறுதல். எந்த இடத்திலும் தடையில்லாமல் சஞ்சரிப்பது. திருவிளையாடல் புராண எல்லாம்வல்ல சித்தரான படலத்தில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்தது பிராத்தி சித்தி.

7. ஈசத்துவம் – படைக்கவும் அடக்கவும் செய்யும் திறன். ஐவகைத் தொழில்களைச் செய்யம் ஆற்றல். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தது.

8. வசித்துவம் – உலகில் உள்ள உயிர்களை வசியம் செய்தல். எழுவகைத் தோற்றமாகிய தேவர், மனிதர், நரகர், மிருகம், பறப்பன, ஊர்வன, மரம் ஆகியவற்றைத் தன் வசப்படுத்துதல். நாவுக்கரசர் சமணர் அனுப்பிய யானையை அடக்கியது, இராமன் பறவைகளின் இரைச்சலை அடக்கியது.

பதினெண்சித்தர் வரலாறும் படைப்புகளும்

பதினெண் சித்தர்கள் எவர் என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக அருள்பாலித்தும் தொண்டு புரிந்துமுள்ளனர். பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான குதம்பைச் சித்தர் ஒரு பெண் என்று கூறும் வழக்கும் உண்டு.

பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள் பெரும்பாலும்  தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சித்தர் பாடல்கள் என்றழைக்கப்படுபவை அனைத்தும் தமிழ் பாடல்களே. ஆனால் இந்தச் சித்தர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறமுடியாது. இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள். மொழி, இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல. இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை. மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, போகர் சிறிதுகாலம் சீனத்திற்குச் சென்று அங்குள்ள மக்களின் மனதை இறைவன்பால் ஈடுபடுத்தப் பணியாற்றியதாக வரலாறு உண்டு. ராமதேவர், யாக்கோபு (Jacob) என்ற பெயரில் மெக்காவில் சில வருடங்கள் இறைத்தொண்டு புரிந்ததாகவும் கூறப்படுகிறது. திருமூலர் வடநாட்டிலிருந்து வந்தவர் என்றும் குறிப்புகள் உண்டு. கோரக்கரின் முழுப்பெயர் கோரக்நாத். இராமாயணத்தை வடமொழியில் எழுதி உலகிற்கு முதன்முதலில் அளித்த, ஆதிகவியாகிய வால்மீகியும் சிலர் கூற்றுப்படி பதினென் சித்தர்களில் ஒருவர் எனக் கருதப்படுகிறார்.

பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போன்றவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துகளை முதன்முதலில் சித்தர் பாடல்களில்தான் காணமுடிகிறது. இதனாலேயே வைதிகமான இந்துக்கள் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாகக் குறிப்பிடுவர்.

சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல் பற்றிய விவரங்களைப் மறைபொருளாக (பரிபாஷையாக) வைத்துள்ளனர். சாதாரண மனிதனுக்கும் இறையுணர்வு நிறைந்தவர்களுக்கும் ஒரே சமயத்தில் எட்டும்படியாக இந்தப் பாடல்கள் உள்ளன. 

தற்போது கிடைக்கும் சித்தர் பாடல் திரட்டுகளில் முதன்மையான ‘பெரிய ஞானக்கோவை’, ராமலிங்க முதலியாரால் 1899 ஆண்டில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு பதினெண் சித்தர்களைக் குறித்துச் செவிவழிச் செய்திகளாகவும் சித்தர்கள் எழுதிய நூல்கள் வழியாகவும் பல செய்திகள் கிடைக்கின்றன. இச்சித்தர்களின் பெரும்பணியாக அவர்கள் இயற்றிய மருத்துவ நூல்களைக் கூறலாம். தமிழகத்திற்கே உரிய சிறந்த மருத்துவமுறையாக சித்தமருத்துவம் விளங்குகிறது எனில் மிகையல்ல.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவம் என்பது குண்டலினி யோகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ முறை. ஓரளவாயினும் யோகத்தையும் குண்டலினி யோக முறையையும் சக்கரங்களையும் பற்றிய அறிவு ஒவ்வொரு சித்த வைத்தியனுக்கும் இன்றியமையாதவை. அகத்தியர், போகர், தேரையர், கோரக்கர், யூகிமுனி, தன்வந்திரி ஆகிய சித்தர்கள் கண்டறிந்த முறையே சித்த மருத்துவம் எனப்படுகிறது.

சித்த மருத்துவம் இரசவாதத்துடன் இன்றியமையாத தொடர்பு கொண்டது. இரசவாதம் என்பது ஒரு வேதியியல் முறை. இரசவாதம் தமிழ்ச் சித்தர் மரபில் வகார மார்க்கம் என்றழைக்கப்படுகிறது. வகாரம் (வங்காரம் என்பதன் திரிபு) என்றால் பொன் அல்லது தங்கம் என்று பொருள்.

சித்தர்களை இரசவாதிகள் என்று கருதும் போக்கு தமிழ்நாட்டில் பரவலாகக் உள்ளது. பாதரசத்தைக்கூட சித்தரசம் என்றே அழைக்கிறனர். ‘ராசேஸ்வர தரிசனம்’ என்ற நூல் பாதரசம் சாகாவரம் தரும் வல்லமையுள்ளது என்று கூறுகிறது. ‘சாதனமாலா’ என்ற தந்திர நூல் இரசவாதத்தை ஒரு சித்தி என்று குறிப்பிடுகிறது. ‘ஊர்வசி ரசவாத சிட்கா’ என்ற நூல் இரசவாதம் பற்றிய விவரக் குறிப்புகள் தருகிறது.

இரசவாதம் என்ற மரபான அறிவியல், உலோகங்களின் மீது செயல்படுவது மட்டுமல்ல; ஆன்மாவின் மீதும் செயல்படுவது. சித்தர்கள் யோக சாதனையை உள்ளார்ந்த ஆன்மிக இரசவாதம் என்று கருதினார்கள்.

இரசவாதிக்கும் சித்தனுக்கும் இடையே ஒப்புமை உண்டு.  இரசவாதி எவ்வாறு தாழ்ந்த உலோகத்தைத் தங்கமாக மாற்றுகிறானோ அவ்வாறே சித்தன் தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் சார்ந்து நிற்கும் உயிரை எந்தச் சார்புமற்ற ஆன்ம நிலைக்கு மாற்றுகிறான். தங்கம் என்பது மரணமின்மைக்கான குறியீடு. “அம்ருதம் ஆயுர் ஹிரண்யம்” என்கிறது ஒரு வடமொழிச் சுலோகம். இந்த நோக்கில் பார்த்தால் ஒவ்வொரு சித்தனும் ஓர் ஆன்மிக இரசவாதியாகிறான். அவனது சாதனை காய சாதனை – அதாவது உடம்பைப் புடமிடுதல்.

சித்தர்களின் இரசவாதம் என்பது முழுமை பெறாத வேதியியல் என்றோ முதிர்ச்சியுறாத அறிவியல் என்று கருதுபவர்களும் உண்டு. அது மரணமின்மைக்கும் ஆன்ம சுயாட்சிக்கும் வழி நடத்துகிற ஓர் அற்புத ஆன்மத் தொழில் நுட்பம் என்று விளக்கபவர்களும் உண்டு.

இந்த ஆன்மத் தொழில் நுட்பத்தை விளக்கும் முயற்சியில் சித்தர்கள் எடுத்ததற்கெல்லாம் இரசவாதக் குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு உலோகத் துகள்களின் கலவை சூடேற்றப்படும் போது அவற்றில் ஏற்படும் இரசாயன மாற்றத்தை யோக சாதனைக்காக எழுப்பும் உட்சூட்டினால் ஏற்படும் மாறுதல்களோடு ஒப்பிடுகிறார்கள். இடைக்காலங்களில் மேலை நாடுகளிலும்கூட இரசவாதம் இத்தகைய உள் மாற்றங்களோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டது.

இரசவாத முறை, வேதியியல் தத்துவங்களின் அடிப்படையில் செயலாற்றுவது. அதன்படி உடலிலுள்ள மாற்ற முடியாத கூறுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்குப் பாதரசம், கந்தகம், காக்கைப் பொன் என்று சொல்லப்படுகின்ற மைக்கா முதலிய வேதிப் பொருள்களின் கலவை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையை வேதகாலத்து முனிவர்கள் கையாண்டிருப்பதாகச் சான்றுகள் சொல்கின்றன. அவர்கள் சோம வேள்வி செய்து சோமரசம் பருகினர் என்று சொல்லப்படுவது இதைக் குறித்ததுதான். தாந்திரிக பௌத்தர்கள் வாருணீ என்ற ஒரு வகைப் பானத்தைப் பருகியிருக்கிறார்கள். அதைப் பருகுவதால் சாவா நிலை பெறலாம் என்று அவர்கள் கருதினார்கள். ‘ரசவாத இருதய தந்திரம்’ என்ற நூல் இரசத்தை (வேதியியற் பொருளை – குறிப்பாகப் பாதரசத்தை) பயன்படுத்தி உடம்பை அழிவில்லாமல் செய்துகொள்ள முடியும் என்று சொல்கிறது.

இரசவாத முறைகள் எல்லாமே முப்பொருள் கொள்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டுள்ளன. உப்பு, கந்தகம், பாதரசம் ஆகியனவே அம்மூன்று பொருள்கள். ஆனால் இந்த மூன்றும் சாதாரண உப்பு, கந்தகம், பாதரசம் இல்லை என்று இரசவாதிகள் கருதுகிறார்கள். பாராசெல்சஸ் (Paracelsus 1493-1541) என்ற இரசவாதியின் கருத்துப்படி பாதரசம் என்பது உணர்வு, கந்தகம் என்பது ஆன்மா, உப்பு என்பது உடம்பு. 

தமிழர்களின் இரசவாத முறைகளில் முப்பூ (முப்பு) என்ற சொல் பெருவழக்காக உள்ளது. அது மேற்சொன்ன மூன்று பொருள்களின் கலவையேயாகும். அதை உண்டால் உடல் பொன் மயமாகும் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்களின் இரசவாதக் கருத்துகள் மறை பொருட் கூற்றுகளாக, குழூஉக் குறிகளாக எழுதப்பட்டுள்ளன. அவை யோகம், தந்திரம், மருத்துவம் என்ற மூன்று நிலைகளையும் அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத் தக்கவையாக அமைந்திருக்கின்றன. 

‘ஊர்வசி ரசவாத சிட்கா’ என்ற நூலில் இரசவாதம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மூலிகை (இயற்கையான செடி, கொடி, தழைகள்), காரசாரம் (செயற்கையான வேதிப் பொருள்கள்) என்பன. காரசாரத்தைக் கைக் கொண்டவர்கள் வேதியியலாளர்களாகவும் மூலிகையைக் கைக் கொண்டவர்கள் சித்த மருத்துவர்களாகவும் ஆயினர். என்றாலும் இவை இரண்டும் ஒன்றோடொன்று கைகோத்துச் செயல்படுவன என்பது நினைவில் கொள்ளத் தக்கது. இரசவாதத்தால் மாறுபட்ட உடலுக்கு ‘ரசமயீதனு’ என்று பெயர். ‘ரச இருதய தந்திரம்’ நூலில் பதினெட்டு இரச கன்மங்கள் என்ற ‘ரச சம்ஸ்காரங்கள்’ உள்ளன. அந்த முறைகளைப் பின்பற்றும் போது உடம்பு பூரண வலிமை பெறுகிறது. மகாயான பௌத்தத்தின் முதன்மையாளர்களில் ஒருவரான நாகார்ச்சுனர் இரசவாதத்தில் மிகுந்த வல்லமை பெற்றிருந்தார். அதன் காரணமாக வியத்தகு ஆற்றல்கள் பலவற்றையும் அவர் பெற்றிருந்தார்.

முப்பூ என்ற ஒன்றைப் பற்றிச் சித்தர் பாடல்கள், குறிப்பாக, மருத்துவப் பாடல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. முப்பூ என்பது வாலையை அதாவது குண்டலினி ஆற்றலைக் குறிக்கின்றது. மேலும் அது சகஸ்ராரத்தையும் குறிக்கிறது. முப்பூ என்பது மூவகை என்று ஒரு விளக்கம் தரப்படுகிறது. அம்மூன்றாவன: வைத்திய முப்பூ, வாத முப்பூ, யோக முப்பூ ஆகியனவாம். முதல் இரண்டு முப்புகளும் மருத்துவக் கலைச் சொற்களாகும். மூன்றாவது முப்புவாகிய யோக முப்பூ என்பது குண்டலினி யோகத்தைக் குறிக்கிறது. யோக முப்பூ ஒரு குருவின் மூலமாகப் பயிலப்பட வேண்டியதாகும். அது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றினால் ஆனது.

முப்பூ என்பது சாதாரண உலோகங்களைத் தங்கமாக மாற்றம் செய்யும் ஒரு பொருள் என்றும் சித்தர் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முப்பூ என்பது ஒரு வகையான உப்பு என்றும் இது மூன்று வகைப்பட்டது என்றும் சித்தர்கள் கூறுகின்றனர். அவையாவன: அதி உப்பு – இது வெட்ட வெளியிலிருந்து கிடைக்கப்படுவது. நதி உப்பு – இயற்கைப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.  சமாதி உப்பு – பூமியிலிருந்து கிடைக்கப்படுவது. யோக முறையைப் பயின்று தவத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த முப்பூ என்கிற பொருளைப் பெறமுடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முப்பூ என்கிற பொருளைப் பெற்றவர்களே சித்தர்கள் என்று கூறும் ஒரு மரபு தமிழகத்தில் உள்ளது. முப்பூவுக்கு “வெண்புலி”, “கருநாகம்”, “செம்பருத்திப்பூ” என்றும் பொருள் கூறுவர். சீனத்து இரசவாத நூல்களும் “வெண்புலி”, “நீல நாகம்”, “பறக்கும் முத்து” என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.

சித்தர்கள் தங்களுடைய மருத்துவமுறையைப் பொதுவாகக் கருக்கிடை வைத்தியம் என்று கூறுவர். இதற்கு, மிகுந்த ஈடுபாட்டுடன் மருத்துவத் துறையில் செய்யப்பட்ட, கண்டறியப் பட்ட வேலை அல்லது முறை என்று பொருள். கருக்கிடை என்றால் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யப்பட்ட வைத்தியச் செயல் என்று பொருள். சித்தர்கள் தங்கள் மருத்துவமுறைக்கு திறவுகோல் என்ற ஒரு பெயரையும் கூறுகிறார்கள். திறவுகோல் என்றால் சாவி, நுழைவாயில் என்று பொருள். இந்தப் பெயரை (வைத்தியத் திறவு), சித்தர்கள் பலரும் தங்கள் வைத்தியமுறைக்கு வைத்திருக்கின்றனர். 

‘அகத்தியர் கர்ம காண்டம்-300’ எனும் நூல், மனிதன் செய்யும் செயல்களுக்கும் அவனது நோய்களுக்கும் அடிப்படைத் தொடர்பு உண்டு என்று உறுதியாகக் கூறுகின்றது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் காசநோயால் அவதியுறுவர் என்றும், மரங்களையும் செடிகொடிகளையும் கண்மண் தெரியாமல் வெட்டுபவர்கள் மூட்டுநோயால் அவதியுறுவர் என்றும், நல்ல குடியைக் கெடுத்தவர்கள் தொழுநோயால் அவதியுறுவர் என்றும், பழுக்காத காய்களைப் பறித்தல், விதைகளையும் இளம் செடிகளையும் அழித்தல், கன்றுக்குத் துளியும் பாலில்லாமல் மாடுகளைக் கறத்தல் ஆகியவற்றால் கருத்தரித்தல் தொடர்பான  நோய்களால் அவதியுறுவர் என்றும், பொய் பேசுபவர்களும் புறம் கூறுபவர்களும் பல்வலி, நாக்கு, வாய்ப்புண், மார்பகங்களில் கட்டி, முகத்தில் புற்றுநோய் ஆகிய நோய்களால் அவதியுறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்களைக் காம இச்சையுடன் பார்ப்பது, பார்க்கக்கூடாதவற்றைப் பார்ப்பது ஆகியவை 96 வகையான கண் நோய்களை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

‘ஊர்வசி ரசவாத சிட்கா’ என்னும் நூல், கர்மவினைக் கோட்பாட்டின்படி அறிந்தே செய்கிற வினைகளுக்கும் அதன்பின் வருகிற நோய்களுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுகிறது. பின்வரும் செயல்களில் ஒன்றையோ அதற்கு மேற்பட்டவற்றையோ செய்தால் செய்தவன் நோய்வாய்ப் படுவான்: எந்தத் தேவையுமின்றி இளந் தளிர்களைப் பறித்தல், செடிகளை வெட்டுதல், நீர் வாழ்வனவற்றை நீரிலிருந்து அகற்றி வெயிலில் காய விடுதல், ஊர்வனவற்றையும் நடப்பவனவற்றையும் பாதை மறித்து இடையூறு செய்தல், பறப்பனவற்றைக் கவண் வீசித் தாக்குதல், தன்னைவிட மூத்த பெண்ணைப் புணர்தல், மாதவிடாய்க் காலத்தில் புணர்தல், மிதமிஞ்சிய கட்குடி, காலை மாலை ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்பது, எல்லாவற்றிலும் அதீதமான ஈடுபாடு, யோகிகளையும் பெரியவர்களையும் அவமதிப்பது, இரவில் தனியாக நடத்தல், தன் ஆற்றலைத் தானே ஐயுறுதல், இன்னபிற. இவையெல்லாம் காய்ச்சல், மலேரியா, தலைசுற்றல், மூலம், முடக்குநோய், தொழுநோய், சர்க்கரை நோய், இரைப்பு நோய், வயிற்று அழற்சி, சோகை, காமாலை. நச்சுக் காய்ச்சல், சிறுநீரகக் கோளாறு முதலிய நோய்களில் கொண்டு போய்விடும். கொடிய வினைகள் செய்யச் செய்ய மேற்கூறிய நோய்களின் பட்டியல் நீளும்.

சுர நூல் என்கிற தமிழ் நூல் காய்ச்சல் (ஜுரம்) பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்த நூலில் கோள்கள், நட்சத்திரங்களின் தசாபுக்தியால் எவ்வாறு உடல் பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இருபத்தி ஏழு நட்சத்திரங்களைப் பற்றிய பண்புநலன்களையும் அவை எவ்வாறு மனித உடலில் தோன்றும் சுரம் போன்ற வியாதிகளுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. சித்தர்களின் தத்துவமான, ‘அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது (அண்டத்துள் பிண்டம், பிண்டத்துள் அண்டம் – As Above So Bellow’ என்ற அடிப்படையில், நோய்க்குக் காரணம் கிரகங்களின் அமைப்பு என்றும் கூறுகிறது.

கிரகங்கள் குறித்து சித்தர்கள் கூறும் கருத்துடன் இது ஒத்துள்ளது. சித்தர்கள் கிரகங்கள் பற்றியும் மருத்துவம் பற்றியும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தனர். ஒருவருடைய சாதகத்தில் உள்ள கிரகங்கள் அமைப்புக்கும் அவருடைய நோய்க்கும் நேரடித் தொடர்பு உண்டு என்று சித்தர்கள் கருதினார்கள். சித்தர்கள் மருத்துவத்தில் எப்படி வல்லவர்களோ அதேபோல் சோதிட சாத்திரத்திலும் வல்லவர்கள். ஒரு குழந்தை பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு அதன் சாதகப்படி அந்தக் குழந்தை அதன் ஆயுட்காலத்தில் சந்திக்க இருக்கிற நோய்கள், இடையூறுகள், அவற்றின் தன்மை, பண்புநலன்கள், வாய்ப்புகள், அவற்றிற்கான பரிகாரங்கள் ஆகியவற்றைப் பற்றித் துல்லியமாகக் கூற முடியும் என்பதை ‘அகத்தியர் கரும சூத்திரம்-44’ என்னும் சித்தர் நூல் கூறுகிறது. ஒரு மனிதனைப் பற்றிய கணிப்பு, அவனுடைய பிறந்த நட்சத்திரம், அன்று இருந்த கிரகங்களின் நிலை, மேட இராசியிலிருந்து மீன இராசி வரை இராசி  இலக்னநிலைகள் ஆகியவற்றைத் துல்லியமாகச் சித்தர்களால் கணக்கிட்டுக் கூறமுடியும் என்று இந்த நூல் கூறுகிறது. அதே போல் இந்த இராசியில் பிறந்தவர் இந்த நோய்களால் பீடிக்கப்படுவர் என்றும் முன்கூட்டியே சித்தர்களால் கூற முடியும் என்றும் இந்த நூல் கூறுகிறது.

நோய்கள் பற்றியும் அதனைக் குணப்படுத்துதல் பற்றியும், ஒரு மனிதனின் நலநிலை பற்றியும் அறிய சித்தர்கள் பின்வரும் நான்கு முறைகளைக் கடைப்பிடித்தனர்: 1. சாத்திரச் சான்றுகள் 2. நேரடி அனுபவம் 3. அனுமானம் 4. சோதனை முறைகளினால் அறியப்பட்ட சான்றுகள்

இந்த நான்கு முறைகளையும் உபயோகித்து அவர்கள் கீழ்வரும் ஆராய்ச்சி அறிவினைப் பெற்றனர்: 1. 500 வகைக்கு மேற்பட்ட வியாதிகளின் தன்மைகள். 2. 2000 வகைக்கு மேற்பட்ட மருந்துகளின் தாவர, மருத்துவக் கூறுகள் பற்றிய அறிவு. 3. 15000 வகைக்கு மேற்பட்ட மருந்து தயாரிப்புகள், அவற்றின் பல வகைக் கூறுகள். 4. பலவகைப்பட்ட மருந்துகளின் தாவர, உலோகக்கூறுகள், அவற்றைச் சுத்தப் படுத்தி, அவற்றின் உயிரகத்தன்மை அறிதல்.  5. இடங்களைப் பொருத்து பருவநிலைக்கேற்ப நோய்கள் பற்றிய கட்டுப்பாட்டு முறையும், உடல் நல முறைகளையும் பற்றிய அறிவு.

மேற்கண்ட முறைகளைக் கொண்டு சித்த மருத்துவத்தில் நோய்களும் அவற்றை நீக்கும் மருத்துவச் செயல்பாடுகளும் பின்வருமாறு அறியப்பட்டன:                

1. நோய்க்கான காரணங்கள் 2. பஞ்ச பூதங்களின் தன்மைகள் 3. ஆறு பருவ காலங்கள், அவற்றின் தன்மைகள் 4. கிரகங்களினால் ஏற்படும் மன நோய்கள் 5. நோய்களின் வகைகள் (1. பால்வினை நோய்கள். 2. ஆகாரக் கோளாறினால் வரும் நோய்கள். 3. உள்புற, வெளிப்புறக் காயங்களினால் தோன்றும் நோய்கள்.  4. விஷக் காய்ச்சல் நோய்கள் – சான்றாக பன்றிக் காய்ச்சல், புளூ போன்றவை. 5. மாதவிடாய் நோய்கள்). 6. பரம்பரை நோய்கள். 7. தொற்று நோய்கள்.

இத்தகைய மருத்துவ அறிவைக் கொண்டு சித்தர்கள் தங்கள் மருந்துகளை உருவாக்கினர். 1. செந்தூரம் (உலோக வேதிப் பொருள்). 2. இரசச் செந்தூரம் (பாதரச வேதிப் பொருள்). 3. பற்பங்கள் – சான்றாக சாதிலிங்கப் பற்பம், காரீயப் பற்பம். 4. சுரக் குளிகைகள். 5. எண்ணைய். 6. மருந்து உப்புகள் – சான்றாக வெடியுப்புகள். 7. மெழுகுகள் – சான்றாக வீர மெழுகு, இரச மெழுகு முதலியன). 8. இலேகியங்கள். 9. வடகங்கள் (மூலிகை மற்றும் நறுமணச் சரக்குகள் (spices) – சான்றாக சாதிபத்திரி வடகங்கள்.     10. செய நீர் (எலுமிச்சை நவச்சாரம் சேர்ந்த கலவை). இவை தவிர கற்பம் என்பது சித்த மருத்துவத்தில் உள்ள ஒரு தனிப் பெயர். கற்பம் என்பது உடலை நலமாகவும் நீண்டநாள்கள் வீரியத்துடனும் வைக்கும் ஒரு மருந்து. மூலிகைக் கற்பம், காய கற்பம், நவநீத கற்பம், செந்தூரக் கற்பம், வெண் சாரைக் கற்பம் என்று கற்பத்தில் பல வகை உண்டு. காய கற்பம் என்பது உடலை என்றும் அழியாமல் வைக்கும் ஓர் அமிர்தம்; இது உடல் உறுப்புகளின் சீரழிவைத் தடுத்து, உடலைப் பொன் போல் வைத்துக் கொள்ள உதவும் கற்பமாகும். உடலின் அழகைக் கெடாமல் காப்பது நவநீத கற்பமாகும். செந்தூரக் கற்பம் என்பது உடலுக்கு உறுதி கொடுக்கும் ஓர் வகைப் பொருள் (Oxide). வெண் சாரைக் கற்பம் என்பது முப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. வீர சுண்ணம் என்கிற மருந்தைக் கொண்டு யூகி முனிவர் ஒரு கருங்காக்கை வெள்ளைக் காக்கையாக மாற்றியதாக ஒரு கதை கூறப்படுகிறது. 

சித்தர்கள் ‘நாடி பார்த்தல்’ என்ற சாத்திரத்தில் சிறந்தவர்கள். அகத்தியர் நாடி சாத்திரம் எனும் நூல் இது பற்றி விரிவாக எடுத்துக் கூறுகிறது. வாயுக்களின் வகைகளையும் (10 வகைகள்) அவற்றின் தன்மைகளையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல் ‘அகத்தியர் குறுநாடி-300’ எனும் நூல். அகத்தியர் கர்ப்ப சூத்திரம்-16 எனும் நூலில் கருத்தரித்தல் முறை பற்றியும் கருத்தரிக்காதிருப்பதற்கான காரணங்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறது. கருவில் குழந்தை வளரும் ஒவ்வொரு நிலை பற்றியும் இந்த நூல் மிகவும் விரிவாகக் கூறுகிறது. மகளிர் கருத்தரித்தல் பற்றிய தற்கால மருத்துவ முறை (Gynacology) தோன்றும் முன்பே சித்தர்கள் இது பற்றித் துல்லியமாகக் கூறியுள்ளனர். நயன சாத்திரம் என்னும் நூலில் கண் பற்றியும் அவற்றில் தோன்றும் வியாதிகள் பற்றியும் நுணுக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

அகத்தியரின் ‘குறுநாடித் திறவுகோல்-36’ எனும் நூல் வர்மக் கலை பற்றிப் பேசுகிறது. மனித உடலில் வர்மம் எனும் நுண் குறியிடங்கள் உள்ளன. இந்த வர்ம இடங்கள் மறைபொருள் புள்ளிகள். இத்தகைய வர்ம இடங்கள் 108 உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. இந்த வர்ம இடங்கள் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேளையிலும், காலை, பகல், மாலை, சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் என்று வேளைக்கு வேளை மாறுபடும் நுண்ணிய இடங்கள். நோயைக் கண்டறியவும் அந்த நோயைத் தீர்ப்பதற்கு உரிய வைத்திய முறையையும் இந்த வர்ம இடங்களைத் தொட்டு அறிய முடியும் என்கிற வர்மக் கலையை அக்கலையை அறிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

சித்தர்கள் மருத்துவத்தை எட்டுத் துறைகளாகப் பிரித்து அறிந்தார்கள்: அறுவைச் சிகிச்சை, கழுத்துக்கும் அதற்கு மேல் புறத்திலும் தோன்றும் நோய்கள், சரியான மருந்துகள், மனம் சம்பந்தப் பட்ட நோய்கள், குழந்தை மருத்துவம், நஞ்சூட்டாய்வு மருத்துவம், நீடூழி வாழ்வு மருத்துவம், சத்து மருந்து என்பன அவை. சுற்றுச்சூழல், பஞ்சபூதங்கள் ஆகியவற்றின் தாக்கம் இவை உடல் நலத்திற்கும் மருத்துவ முறைக்கும் மிகவும் இன்றியமையாத கூறுகள் என்று சித்தர்கள் அறிந்திருந்தனர். 

சித்த மருத்துவக் கொள்கையின்படி மனித உடலில் ஏழு வகையான தாதுக்களும் மூன்று வகையான தோஷங்களும் அமைந்துள்ளன. ஏழு வகைத் தாதுக்களாவன: நிணநீர், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்கிலம். மூன்று வகை தோஷங்களாவன: வாதம், பித்தம், கபம். இந்தத் தாதுக்களையும் தோஷங்களையும், யோகமுறையினால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கண்டறிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களைப் பொறுத்த மட்டில் உடம்பில் பல்வேறு மண்டலங்கள் ஒன்றோடொன்று இயைந்து செயல்பட்டால் உடல் நலமாயிருக்கிறது என்று பொருள். அம்மண்டலங்களாவன: நரம்பு மண்டலம், சுரப்பி மண்டலம், மூச்சு மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலம், சீரண மண்டலம் ஆகியன. மருந்துச் சரக்குகளை ஆண் சரக்கு, பெண் சரக்கு என்று வகைப்படுத்தும் தன்மை சித்த மருத்துவத்தில் காணப்படுகிறது. மருந்து காலாவதியாகும் நேரங்களும் சித்தர்களால் வரையறுக்கப்பட்டிருந்தன. சில சித்த மருந்துகள் ஐந்து நூற்றாண்டுகள் வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மை உடையவை. நோய் கண்டறியும் முறைகளில் (Diagnostic Methods), மருத்துவரின் நோய் கண்டறியும் மதி நுட்பம், நோயாளியைப் பரிசோதித்தல், அவரைக் கூர்மையாக கவனித்தல், நாடித் துடிப்பு கண்டறிதல், அவருடைய நோய் பற்றிய வரலாறு (Clinical History) ஆகியவை பற்றியும் சித்த நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நோயாளிகளின் வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கங்களையும் சித்த மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் உணவு முறைக்கு முக்கிய இடம் உண்டு. இதுவே பத்தியம் எனப்படும்.

சித்த மருத்துவத்தில் நோயற்ற வளமான வாழ்வு என்பது நோயின்றி வாழ்வது மட்டுமன்றி, சமூகம், சுற்றுச் சூழல், மனநிலை ஆகியவற்றையும் சார்ந்தது. நோயைத் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் நோயே வராமல் தடுப்பதற்கும் சித்த மருத்துவம் வழி சொல்லித் தருகிறது.  

உண்பதிரு போதொழிய மூன்றுபொழு துண்ணோம்

உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்

பெண்ணுறவு திங்களொரு காலமன்றி மருவோம்

பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்

மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்

வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்

நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்

நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே! (10)

என்று தேரையர் ‘பிணியணுகா விதி’ கூறுவதை கருத்தில் கொள்ளலாம்.

முன்னோடிச் சித்தர்களாக கடவுளரையும் முனிவர்களையும் கூறுவது மரபு. உலக அளவிலும் இந்திய அளவிலும் சில சித்தர்கள் குறிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் திருமூலர் முதலிய பதினெண்சித்தர்கள் இருந்ததாகக் கூறுவர். சிவவாக்கியர், பட்டினத்தார் போன்றோரும் இச்சித்தர் மரபினரே. இவர் வழியிலேயே வள்ளலார் போன்றோர் பிற்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டில் ஒரு சித்தராகப் போற்றப்பட்டவர் காரைச்சித்தர். தமது குருநாதரையும் சேர்த்து 136 சித்தர்களைக் காரைச்சித்தர் கணிக்கிறார். ‘சதகோடிச் சித்தர்களில் நானும் ஒருவன்’ என்கிறார். சித்தர் பாடல்கள் நூல் தொகுப்புகளில் பிற்காலத்தில் காரைச்சித்தரின் கனக வைப்புப் பாடல்களும் இடம்பெறலாயின. அகத்தியர், போகர் போன்றோர் பெயரால் தோன்றிய நூல்கள் பல சித்த மருத்துவம், சோதிடம், நாடி, மந்திரம், அட்டமாசித்திகள், ஜாலவித்தைகள், யோகம், இரசவாதம் முதலிய துறைகளைச் சார்ந்து ஏராளமாக வெளிப்பட்டுள்ளன. இவ்வரிசையில் காரைச்சித்தரின் ‘கனக வைப்பு’ என்ற நூலுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ‘இத்தரையில்  இதைப்போல்  நூலில்லை; இதைக்  கண்டவர்  யாவும் கண்டார்,’ என்றும் புகழ்ச்சியாகக் கூறுவர்.