சு.வேணுகோபாலின் வலசை: உபரி வலிகளின் கதை

by கடலூர் சீனு
0 comment

1

மானுடப் பண்பாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவை இரண்டு. முதலாவது விவசாயம். அடுத்தது நிலத்தடி எண்ணெய்கள் வழியே உருவான இயந்திரத் தொழிற்சாலை யுக எழுச்சி. தவிர்க்கவே இயலாத இந்த இரண்டும், திரும்ப மீள இயலாத சிக்கல்களில் மானுடத்தை நிரந்தமாகக் கொண்டு நிறுத்திய இரண்டு என்று சமூக மானுடவியல் சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள்.

விவசாயம் இன்றிலிருந்து 6000 ஆண்டுகள் முன்பே புழக்கத்தில் வந்துவிட்டது. அது புழக்கத்தில் வந்த நாள் தொட்டே உபரி மதிப்பீட்டு விதிகளின்படி, ‘எழுதப்பட்ட’ மானுட வரலாறும் தொடங்கிவிடுகிறது. ‘மனித உடலின் கதை’ நூலை எழுதிய டேனியல் ஈ லிபர்மென், மருந்தே இல்லாத ஆஸ்துமா தொட்டு நிலைத்துவிட்ட பல மரபணு நோய்கள் வரை மானுடம் அதைப் பெற்றுக்கொண்டது, மனித உடலுக்கு ஒவ்வா கிருமிகள் கொண்ட கால்நடைகளுடன் அவன் கூடி வாழ்ந்த, வேறு ஒரு உணவு முறைக்குள் அவன் உடல் சென்று விழுந்த விவசாயக் கலாச்சாரத்தின் தொடக்கத்தின் போதுதான் என்று குறிப்பிடுகிறார்.

பிற உயிர்களைப் போலன்றி பிறந்ததன் பிறகு மனிதக் குழந்தை அதன் சமூக வாழ்க்கைக்குத் தகவமைவதற்குக் குறைந்தது பதினைந்து ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டுகள் முழுக்க மனிதக் குழந்தை பிற மனிதர்களால் பேணப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. இந்த நிலைக்கு வேட்டை வாழ்வைவிட, விவசாய வாழ்வு அனுகூலம் அதிகம் கொண்டது என்பதன் அடிப்படையிலேயே விவசாயம் தொடர் செயல்பாடாக மாறுகிறது. மனிதனின் வேட்டை உணவு வழியே வளரும் உடல்கொண்ட, மிக மெதுவான பரிணாம வளர்ச்சியின் காலகதியைச் சடுதியில் மிகை ஊட்டம் அளிக்கும் விவசாயப் பண்பாடு இடைமறிக்க, அதற்குத் தகவமையும் பொருட்டு நிகழ்ந்தவற்றில் மானுட உடல் பெற்றுக்கொண்டதே இன்றுவரை நீடிக்கும் பல நிரந்தர நோய்கள் என்கிறார் லிபர்மென்.

மறுமலர்ச்சிக்கால எழுச்சி என்பது, கண்மூடித்தனமான அறிவியல் தொழில்நுட்பப் பிரயோகங்களின் எழுச்சிக் காலமும்தான். இயற்கையைப் பகுப்பது, வெல்வது, பயன்படுத்துவது என்பது மனித அறிவின் உரிமை, கடமையும்கூட என்று அதற்கு வலிமையான தத்துவ அடித்தளத்தை அமைத்துத் தந்தவர் பிரான்சிஸ் பேக்கன். இன்றைய ஆர்க்டிக் துருவ முனைகளின் அழிவுவரை தொடரும் அதன் உபரி விளைவு உச்சம் பெற்றது, இரு உலகப் போர்கள் இடையேதான். இரண்டு உலகப்போர்களின் அடித்தளமும் விவசாயத்தின் மீது எழுந்ததே என்றொரு முக்கியப் பார்வையும் இங்கு உண்டு. போரில் இறங்கிய அனைத்து உலக நாடுகளும் இறுதித் துளி வரை அந்தந்த நாட்டு விவசாயிகளை உறிஞ்சிய வரலாறு இன்றும்கூட விரிவாக ஆவணம் கொள்ளாத ஒன்றே. துருவங்களின் அழிவு, சூழலியல் உஷ்ண அதிகரிப்பின் வழியே உருவாகும் பருவச் சுழற்சி இடர்கள், குறைந்துகொண்டே போகும் நிலத்தடி நீர், ஆறாவது பேரூழியின் தொடக்கம் என்று அறிஞர்கள் மதிப்பிடும் இந்தக் காலத்தில், இதோ உலக மானுட ஜனத்தொகை 800 கோடியை எட்டிவிட்டது. விவசாயம் உள்ளிட்ட உணவு உற்பத்திக் களங்களில் நிரந்தரமாக 200 கோடி பேர் தளைக்கப்பட்டாலொழிய 800 கோடி பேருக்குத் தேவையான தினசரி உணவு சாத்தியமே இல்லை என்று சொல்கிறது மற்றொரு மானுடவியல் கணக்கு.

2

விவசாயம், இயந்திர ஆற்றல், நிலத்தடி தனிமங்களின் பயன்பாடு இவையெல்லாமே புறச்சூழலைப் பாதிக்காமல் இயங்காது என்பதே இன்றைய உலக யதார்த்தம். உலகையே உறிஞ்சிக் கொழுத்த பிரிட்டனில் இந்த அழிவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் ஒரு கவிஞனுடையது. வில்லியம் வேட்ஸ்வொர்த் தனது பூர்வீக நிலத்தில் உள்ளே நுழையும் ரயில்பாதை எனும் அத்துமீறலுக்கு எதிராகப் போராடி இருக்கிறார். அமெரிக்காவின் எமர்சன் தொடர்ந்து நீளும் இந்தக் குரல் உலகு முழுதும் எதிரொலித்தது ரேச்சல் கார்சனின் மெளன வசந்தம் நூலுக்குப் பிறகே. இந்தியாவில் சூழலியல் அழிவுக்கு எதிராக எழுந்த வலிமையான குரல்களில் ஒன்று காந்தியுடையது. இலக்கியத்தில் வங்கத்தில் அன்றைய விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய வனவாசி நாவல் தொடங்கி, இன்று தமிழ் நிலத்தில் ஜெயமோகன் எழுதிய காடு நாவல் வரை காடழிவு, சூழலழிவு குறித்த வலிமையான தொடர்ச்சி உண்டு.

சூழலழிவு அந்தந்த நிலத்தின் முதன்மைப் பேருயிர் எதுவோ அதற்கே முதல் அச்சுறுத்தலாக அமைகிறது. துருவத்தில் பனிக் கரடிகளுக்கு அந்த அச்சுறுத்தல் என்றால், இந்தியாவில் அந்த இடரை எதிர்கொள்ளும் முதன்மை உயிர்கள் யானைகள். நாளொன்றுக்கு சராசரியாக 25 கிலோமீட்டர் நடந்து 100 கிலோ வரை உணவு உண்டால் மட்டுமே ஜீவித்திருக்க முடிந்த உயிர்கள். அதன் ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் தனித்துவம் கொண்டவை, அது உண்பவை எதுவும் அரைவாசி மட்டுமே செரிமானம் ஆகும், எனவே தொடர் பசிகொண்டு தொடர்ந்து உண்ணும் நிலையில் இருக்க வேண்டியவை அவை. அவற்றுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. எனவே அதற்கு நீரின் தேவையும் அதிகம். இந்த நிலைகொண்ட யானைகள் செழித்து வாழும் காடுகளும் பருவ காலமும் கொண்டதாகவே இந்தியா இருந்திருக்கிறது.

சிந்து சமவெளி முத்திரைகள் தொடங்கி, அசாமியக் காடுகளை அழித்துத் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கியது வரை யானைகள் வழியே இந்திய வரலாறு வளர்ந்த கதையை, சுதந்திரத்துக்குப் பிறகு அவை கைவிடப்பட்டு அவற்றின் வாழிடம் சுருங்கி வேட்டையாடப்பட்டும், ரயிலில் அடிபட்டும், மனிதர் மிருக மோதலில் வதைபட்டும் இறந்தவை போக இன்று எஞ்சி உள்ள அவற்றின் நிலையை, தியோடர் பாஸ்கரன் மொழியாக்கத்தில் வந்த தாமஸ் ட்ரவுட்மன் எழுதிய யானைகளும் அரசர்களும் நூலும், தமிழினி வெளியீடாக வந்த ஆய்வாளர் ராமன் சுகுமாரன் எழுதிய என்றென்றும் யானைகள் நூலும் விரிவாகக் கூறுகின்றன. இந்த நெடிய வரிசையில் இன்றைய கோவைப்பகுதியைச் சேர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி வனத்தை ஒட்டிய கிராமம் ஒன்றில், காட்டு உயிர்களுக்கும் கழனி உயிர்களுக்கும் இடையே நான்கு நாள் நிகழும் பரிதவிப்பு மிகுந்த மோதலை, சுகுமாரன் எனும் விவசாயின் பார்வைக் கோணம் வழியே நடப்பில் நிகழ்காலமும், நினைவுகளில் கடந்தகாலமும் ஊடாட விவரிக்கும் நாவலே சு. வேணுகோபால் அவர்கள் எழுதிய வலசை எனும் நாவல்.

3

வெகுமக்கள் பத்திரிகையில் எழுதுவது சார்ந்த கேள்வி ஒன்றுக்கு, “நான் எந்தப் பத்திரிகையில் எழுதுகிறேன், அல்லது பனை மட்டையில் எழுதுகிறேனா என்பது முக்கியம் இல்லை. அதை எழுதுபவன் ‘நான்’. அதுவே இங்கு முக்கியம்” என்ற ஜெயகாந்தனின் பதில் ஒன்று உண்டு. அதே இயல்பு கொண்டவராகவே சு.வேணுகோபால் தீவிர இலக்கிய உலகில் நுழைந்தார். அவர் எழுதிய முதல் நாவலான நுண்வெளிக் கிரகணங்களை என் கடலூர் மாவட்டத்தில் முன்பு தீவிரமாக இயங்கிய இலக்கியக் குழு ஒன்றே பதிப்பித்தது. அந்த நாவல் குமுதம் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றமை கொண்டே தீவிர இலக்கிய உலகம் அன்று இந்த நாவலை வாசிக்கவும் பதிப்பிக்கவும் தயங்கியது. அன்று தொடங்கி கூந்தப்பனை, நிலம் எனும் நல்லாள், பால்கனிகள், ஆட்டம் எனத் தீவிர இலக்கியக் களத்தில் தன் படைப்புகள் வழியே தவிர்க்க இயலாத படைப்பாளியாக இயங்கிவரும் சு.வேணுகோபாலின் இந்த வலசை நாவலும் இலக்கியப் போட்டி ஒன்றினில் முதல் பரிசை வென்ற நாவலே.

உழுகுடி வாழ்விலிருந்து, பழங்குடி வாழ்வுக்கும், பழங்குடி வாழ்விலிருந்து கானுயிர்கள் வாழ்வுக்கும் என்று ஊடாடும் இந்த நாவலின் முதன்மை அழகு, தான் சித்தரிக்கும் உலகுக்கு, ‘ஒளி உறங்கும் இரவு’ போன்ற கவித்துவத் தெறிப்புகள்கொண்ட மொழி வழியே அது உருவாக்கி எடுக்கும் முப்பரிமாணத் தன்மை. இரவில் தண்ணீர் பாய்ச்ச சுகுமாரன் தனது சோளக்கொல்லைக்குள்  இறங்கும் முதல் சித்திரம் முதலே அது தொடங்கிவிடுகிறது. கதிர்கள் நிற்கும் தன்மை, அது கொண்ட பளபளப்பு, நீரின்றி அதன் தோகைகைகள் கொண்ட சோகை, அந்த வயல்வெளி கிளர்த்தும் வெக்கை என அங்கே தொடங்கி இறுதிப்பக்கம் வரை ஒவ்வொரு கணுவிலும் விரியும் உலகு வாசகன் தனது புலன்கள் வழியே அதை நேரடியாக உணர்வது போன்ற நிகர் அனுபவத்தை நாவல் அளிக்கிறது.

செல்லப்பாண்டியன், கதிரேசன், காளியண்ணன், பவுனு சித்தப்பா எனக் கதைசொல்லியைச் சூழ்ந்த எல்லா நிலத்தைச் சேர்ந்தவர்களும் அவனது வெவ்வேறு உறவுகளே. ஒரு பிரம்மாண்ட கூட்டுக்குடும்பம் அது. அந்த உறவுகளையும் உழுகுடி வாழ்வையும் வளர்த்து எடுத்தவர் மாசைய்யா தாத்தா. அவர்கள் நிலத்துக்குள் எது நிகழ்ந்தாலும் அது பொதுவில் அனைவரது மகிழ்ச்சியும் துயரமும் என்றே அமைகிறது. 

மின்சாரத் தட்டுப்பாடு உள்ளிட்ட இன்னபிற சிக்கல்களைவிட அவர்களது கழனி வாழ்வின் பெரும் சிக்கலாக அமைவது காட்டுப்பன்றிகள் படையெடுப்பு. அடுத்ததாக, வன நிலத்தின் வாழிடம் சுருங்கி உணவுத் தேவையின்பொருட்டு இவர்களின் வயலில் வந்து இறங்கும் யானைகள். இந்த அடிப்படைகள் மீது கதைசொல்லியின் நினைவுகளாக விரியும் கடந்தகால விவரிப்பில், கீதாவின் கள்ள உறவு வழியே எழும் மானுட ஆழுள்ளத் தீமை, அம்மச்சியின் கதையில் வரும் தெய்வத்துக்குக் கட்டுப்பட்ட திருடர்கள் தொடங்கி, எதற்குமே கட்டுப்படாத பெருந்திருடர்களான ஆட்சி அதிகார கார்ப்பரேட் திருடன் கையில் நிலமும் சமூகமும் சென்று விழுவது வரையிலான சித்திரம், உழுகுடிகள் இடையே உள்ள சாதி அடுக்கு சார்ந்த எதிர்நிலை அம்சங்கள் என இந்த நாவலின் களத்துக்குத் தேவையான அளவு தனி மனித ஆழ, சமூக வீழ்ச்சி சார்ந்த சித்திரங்கள் செறிவாக முன்வைக்கப்படுகின்றன. உழுகுடியின் மாசய்யா தாத்தா காடு அழிந்து கழனி ஆகும் பரிணாம கதி ஏணியின் உச்சிப்படியில் நிற்பவர் என்றால், சாமன முதுவர் காடு இழந்து எதிலிகள் என்று சொந்த நாட்டின் அகதிகள் என்றாகும் பழங்குடி வாழ்வின் சரிவில் இறுதிப்படியில் நிற்பவர்.

சாமன முதுவரின் தாத்தா காலம் தொடங்கி மெல்ல மெல்லத் தங்கள் வாழ்விடத்தை, வேட்டைச் சேகரிப்பு வாழ்வை இழந்து விவசாயக் கூலி வேலைக்குச் சென்று, அங்கிருந்தும் வெளியேறி அவர்கள் அருகி மறையும் சித்திரம், அவர்களின் படிப்பறிவின்மை, தேங்காய் உள்ளிட்ட, கான் வாழ்வில் முதுவர் கூட்டம் இதுவரை அறியா விவசாய உணவுகள், அதன் ருசி வழியே அவர்கள் மெல்லக் காடு நீங்கிக் கழனி வாழ்வுக்குள் புகுவது, ஜமீன்தாரி காலம் தொடங்கி ஜக்கி காலம் வரை மெல்ல மெல்ல அவர்கள் தங்கள் காட்டையும் சமூக வாழ்வையும் இழப்பது என ஊடும் பாவுமாகப் பின்னிய இரண்டின் மையமாக எழுகிறது கானுயிர்களின் வீழ்ச்சியின் சித்திரம்.

இவை போக, இந்த நாவல் பேசும் முக்கிய ஆர்க்-குகளில் ஒன்று, நோயாளியாகக் காட்டுக்குள் சென்று, கிடைத்தற்கரிய அனுபவங்களோடு பால்யம் முடித்துக் காடு தந்த ஆரோக்கியத்துடன் கழனி வாழ்வுக்குத் திரும்பும் சுகுமாரன் குறித்த சித்திரங்கள். முதுவக் குடியின் வீடு, அவர்கள் குடியில் பெரியவளாகும் பெண் சார்ந்த சடங்குகள், அவர்களின் ஆட்டம் பாட்டம் இசை, அவர்கள் கைக்கொள்ளும் வைத்திய முறைகள், குடியின் முது தாதை கொண்டாடும் முள்ளு வள்ளிக் கிழங்கு விருந்து, பழங்குடிச் சிறுவர்கள் சேர்ந்து சென்று சேகரித்துக் கொண்டாடும் மலைத்தேன் விருந்து, அவர்களின் தெய்வங்கள் கானுயிர்க் குலங்கள் என உயிர்த்துடிப்பு மிக்கச் சித்திரங்கள்.

சுகுமாரன் குந்தாலியுடன் அவர்களின் தெய்வத்தைக் காணக் குன்றேறி, அங்கே நின்று அவர்கள் காணும் கொம்பன் யானையின் சித்திரம், இந்த நாவல் அளிக்கும் வலிமையான பல யானை குறித்த சித்திரங்களில் தீவிரமான ஒன்று. குட்டி இறந்தது தெரியாமல் பரிதவிக்கும் யானை, அம்மா இறந்தது தெரியாமல் தவிக்கும் குட்டி யானை, தனது ஆல்பா மேல் தன்மையை நிரூபிக்க ரத்தக் களரியாகச் சண்டைபோடும் கொம்பன் யானை, அப்படி எந்தப் பிடிக்காகச் சண்டை போட்டதோ, அந்தப் பிடியை இளம் கொம்பனுக்காக விட்டுத்தரும் அதே யானை, குட்டிகளைக் காவல் காக்கும், குடியைப் பேணும் யானைகள், கோடைகாலப் பாலைக்காட்டில் தாகத்தில் வறண்டு, பெருமழைக்காலக் காட்டில் நனைந்து திளைக்கும் யானைகள், வழியில் குறுக்கிடும் குழந்தையைப் பூ போல ஏந்தி அப்பால் இட்டு நகரும் யானை, தனது சொத்தைத் தந்தத்தைத் தானே பாறை இடுக்கில் இட்டு முறித்து எறியும் யானை,போகிற போக்கில் நிறைமாத மாட்டைக் கடுவன் வாயிலில் இருந்து மீட்கும் யானை, மொத்த யானைக் கூட்டத்தையும் ஒற்றையாய்ச் சென்று அடித்து விரட்டும் கும்கி யானை எனப் பலப்பல தனித்துவம் கொண்ட யானைச் சித்தரிப்புகள் வழியே யானை எனும் பேருயிரை, அதன் குணங்களை, அதன் சமூக வாழ்வை நாம் அதுவாக மாறி அதை உணர வைக்கும் மாயத்தை நிகழ்த்தும் நாவல்.

4

பன்றிக்கு அது சிக்கும் வகையில் கிழங்கில் வெடி வைப்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தானாகவே வெடிக்கும் வெடிகள், பன்றியின் பற்கள் மாட்டிக்கொள்ளும் வகையில் ஓட்டை போட்ட ட்ரம் வழியே அரண் அமைப்பது, உறங்கும்போது யானை வாசம் பிடிக்காமல் இருக்க, கொடிகளால் செய்து போர்த்தப்படும் போர்வை, யானைப் பிண்டம் கொண்டு செய்யப்படும் வைத்திய முறைகள், யானைகள் களத்துக்குள் இறங்காமல் இருக்க அகழி வெட்டும் முறை எனப் பல்வேறு நுண்தகவல்கள் வழியே நகரும் இந்த நாவலின் நுண்தகவல்கள் உச்சம் பெறுவது யானைகள் உண்ணும் முறை குறித்த சித்தரிப்பின்போது. காட்டுக்குள் ஒவ்வொரு மரத்தையும் செடியையும் காயையும் குருத்தையும் யானைகள் எவ்விதம் அகழ்ந்து, பிழுது எடுத்து உண்ணும் எனும் நிலை மீதான விவரணை. அவை வயலில் இறங்குகையில் நாம் வளர்த்த குழந்தை ஒன்று யானைக் காலடியில் சிக்கிவிட்டதைப் போல, விளைந்த வெள்ளாமை குறித்து மனம் பதைக்கிறது.

யானைக்கூட்டமும் மனிதக் கூட்டமும் மோதிக்கொள்ளும் நிலையைக் களனாகக்கொண்ட இந்தக் கதை உச்சம்கொள்வது, வயலுக்குள் இறங்கிய யானைக் கூட்டத்தை விரட்ட வரும் சலீம் எனும் கும்கி யானையின் செய்கையில். தமிழ் இலக்கியம் இதுவரை காணாத நம்பகமும் உணர்வு எழுச்சியும் கூடிய தனித்துவம் கொண்ட சித்திரம் அது. சுகுமாரன் பால்யத்தில் கனவு போலும் முதுவர் குடியோடு சேர்ந்து அடைந்த காட்டு வாழ்வு, வாலிபத்தில் அன்றாடப் பாடுகள் நிறைந்த யதார்த்தத்தில் அவன் வாழும் கழனி வாழ்வு, இதன் வழியே நகரும் இந்த நாவல், அதிகாலை ஒன்றில், உறக்கமா விழிப்பா என்று தெரியாத உளமயக்கு நிலையில் சாமன முதுவர் அழைப்பு வழியே, இந்த யதார்த்தத்தில் இருந்து வேறொரு யதார்த்தத்தில், காட்டுக்குள் யானைகள் சமூக வாழ்வில் அவன் சென்று விழும்போது நாவல் முற்றிலும் வேறு வண்ணம் கொண்டுவிடுகிறது. அங்கே நிகழும் யானைகள் சமூகச் சித்தரிப்பு முழுமையும் தன்னியல்பாக மனிதச் சமூக இயல்புகள் மீதான விமர்சனத்தை எழுப்பிவிடுகிறது. நாவலின் உணர்வுத்தளம் இந்த வலுவான மையத்தின் மீதே நிகழ்கிறது.

செறிவான இந்த நாவல் கொண்ட பலங்கள் இரண்டு. முதலாவது புறவயமானது. க்ரிஸ்டினாவாக மாறிய குந்தாலியின் சித்தரிப்பு வழியே எந்த ஆத்மீகத்தை இழந்து எந்த ஆத்மீகத்தைப் பெறுகிறோம் நாம் என்ற வினா. இரண்டாவது அகவயமானது. சுகுமாரன் பாலை நிலத்திலும் பெருமழை நிலத்திலும் பொன்னியின் தலைமை கொண்ட குடும்பத்தின் யானைகள் உடன் வாழ்ந்து அடையும் மன விரிவு. அவன் சண்டை போட்டுத் துரத்திவிட்ட, என்றோ அவனது மறதிக்குள் புதைந்துபோன, அவன் தங்கை உள்ளிட்ட எல்லோரையும் அணைத்துக்கொள்ள அவன் கொள்ளும் மன விரிவு. காட்டிலிருந்து யானைகள் எனும் பேருயிர்கள் வசமிருந்து அவன் ஊருக்குள் தனது சமூக வாழ்வுக்குள் எடுத்து வரும் மெய்மை அது.

இந்த நாவல் கொண்ட பலவீனம் என்பது ஒரு பக்கம் மனிதர்களும் ஒரு பக்கம் யானைகளும் நிற்கும் இந்தத் துலாவில் அதன் முள் யானைகள் பக்கமே அதிகம் சாய்ந்து நிற்பது. கழனி உயிர்களால் இந்த வாழ்வை அன்றி வேறு விதமாக வாழவே இயலாது. கானுயிர்களாலும் இவ்விதமன்றி வேறு விதமாக வாழ இயலாது. எனில் தவிர்க்கவே இயலாத இரண்டு ‘சரி’க்கள் ஒன்றுக்கு ஒன்று எதிராக நிற்க நேர்வது எத்தகையதொரு களம். படைப்பாளி எவருக்கும் அலைக்கழிப்பு தரும் அந்தச் சவாலை, யானைகள் பக்கம் வெகுவாகச் சாய்வதன் வழியே இந்த நாவல் அதனைத் தவிர்த்து முன்னகர்கிறது. இதன் காரணமாக வாசக இடைவெளியே இன்றி ‘எல்லாவற்றையும் சொல்லிவிடும்’ நிலைக்கு நாவல் நகர்ந்துவிடுகிறது.

5

சங்க இலக்கியப்பரப்பு கொண்ட அழகிய கவிதைகளில் ஒன்று இது.

முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி

நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,

முன் நாள் இனியது ஆகி, பின் நாள்

அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,

பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.

சிறுவயதில் பிடி தன் குழந்தைகள் குறமகள் குழந்தைகளுடன் ஓடி விளையாடக் காண்கிறது. காலம் செல்ல, வளர்ந்த பிறகு, அந்த யானைகள் வளர்ந்து பருவம் அடைந்த அதே குழந்தைகளைக் காணும்போது அதேபோல விளையாடச் செல்கிறது. இப்போதோ நிலவரம் வேறு. அவர்கள் இருவருக்கும் இடையே இப்போது காடு திருத்திய கழனி நிலம் இருக்கிறது. கழனி பாழாகும் என்று அவர்கள் யானைகளை விரட்டி அடிக்கிறார்கள். நில உடைமை வழியே ‘நாம்’ என்ற நிலை வழுவி, ‘நாங்கள்’, ‘நீங்கள்’ எனும் எனும் பிரிவினை உருவாகிவிட்ட தன்மையை யானைகள் எவ்விதம் அறியும்?

மேற்சொன்ன பலம், பலவீனம் இரண்டையும் கடந்து இந்த நாவல் கொண்ட தனித்தன்மை என்பது,  உயிர்வலை சார்ந்த, சூழலியல் சார்ந்த அடிப்படைச் சிக்கல் ஒன்றை, சங்ககாலம் தொட்டு இன்றுவரை தொடரும் அந்தச் சிக்கலை, சமகாலம் கொண்ட பின்னலோடு, என்றுமுள்ள பரிவு எனும் சுடரின் ஒளிகொண்ட பின்னணியுடன் கலைத்தீவிரம் கொண்டு முன்வைத்ததே. அந்த வகையில் இந்த நாவலும் சு.வேணுகோபால் படைப்புலகின் மிக முக்கிய ஆக்கங்களில் ஒன்றாகவே அமைகிறது.