செருப்பைக் கழற்றிவிட்டு தார்சாலில் ஏறியதும் வழக்கத்துக்கு மாறான பரபரப்போடு அக்கா எழுந்து வந்தாள். இல்லாவிட்டால் அவள் வந்ததை அறியாதவள் போல அந்தி கருத்தும் தலையைக் கூட முடியாமல் டிவியையே வெறித்துக் கொண்டிருப்பாள். உண்மையில் அதிலும் என்ன ஓடுகிறது என்று நிறுத்திக் கேட்டால் தெரியுமா என்பது சந்தேகமே. கோமதி அவளை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். ‘’எப்பவும் தீட்டுக்காரி மாதிரி தலையைக் கட்டிக்காம உக்காந்திரு. பிறகு இந்த வீடு விளங்கறதுக்கா’’
வழக்கமாய் உள்ளறையிலிருந்து கேட்கும் மெல்ல தனக்குத்தானே ஆச்சி பாடும் தேவாரப்பதிகங்கள் எதுவும் கேட்கவில்லை. அங்கிருந்து வரும் விளக்கு வெளிச்சமும் விபூதி நறுமணமும் கூட. கோமதியின் வாழ்க்கையில் ஒரு நாளின் இனிய நம்பிக்கை ஊட்டும் தருணங்களில் ஒன்றாக அது இருந்தது. விளக்கின் முன்பு அமர்ந்து கொண்டு ‘மாதர் மடப்பிடியும் மடவன்னமுமன்னதோர் நடையுடை’ படிக்கும் ஆச்சியின் பின்னால் போய் அவள் புறங்கழுத்தைக் கட்டிக்கொள்வது. ’’ச்சீமூதி. முதல்லே கை காலை கழுவிட்டு வாட்டி . எங்கெங்கே போய் எதையெல்லாம் தொட்டுட்டு வந்தியோ‘’ என்று அவளது அரைக் கோபத்தைக் கிளறுவது. அக்கா ‘’ஆச்சிக்கு உடம்பு ரொம்ப சரியில்லை‘’என்றாள். கோமதி அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டாள். ’’லைட் கூட போட மாட்டியா நீ’’ அக்கா பேசாதிருந்தாள். அவளது காம்ப் கட்டிலில் ஆச்சி விநோதமாகப் படுத்திருந்தாள். கண்களின் ஓரங்களிலிருந்தும் வாயோரத்திலிருந்தும் நீர் வழிந்து கொண்டிருந்தது. அவள் கண்கள் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன.
பக்கத்துவீட்டு அக்கா வந்து பார்த்துவிட்டு ‘’கோமதி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிடு‘’ என்று சொல்லிவிட்டு உடனே போய்விட்டாள். அவள் நகர்ந்த வேகம் கண்டு அக்கா புன்னகைத்தாள். ’’அவளுக்கு நாம காசு கேட்டுடுவோம்னு பயம்’’
கோமதி ‘’டாக்டர் கிட்டேபோறதுக்கு ஒரு நூறு ரூபாயாவது வேணாமா . எனக்கு அஞ்சாம் தேதி தான் சம்பளம்.’’ அக்கா அது உன் பிரச்சினை என்பது போல நின்றாள். கோபமாக வந்தது. இப்போது ஆச்சி பலமாக மூச்சு விட ஆரம்பித்து விட்டாள். அடிவயிற்றிலிருந்து ‘’ஏவ்வ்வ்ஏவ்வ்வ்‘’ என்று நீண்ட ஏப்பங்களாக வர ஆரம்பித்திருந்தது. ’’முனைஞ்சிப்பட்டி மெர்சி அக்காவைக் கூப்பிட்டா வருவா. ஆனா அவ இப்போ எங்கே இருக்காதெரியலியே‘’ கோமதிஆச்சியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘’ஆச்சி ஆச்சி என்ன செய்யுது ஆச்சி என்னைப் பாரேன்’என்றாள். ஆச்சி ஒரு கணம் கண்ணை விண்ணிலிருந்து உருட்டி அவளைப் பார்த்தாள். ’’அன்னா உங்க அப்பனும் அம்மையும் வராளே’’என்றாள்.. கோமதி ‘’ஆச்சி அப்படிப் பேசாதே ஆச்சி‘’ என்று அழுதாள். ஆச்சியின் கை நீண்டு அவள் தலையைத் தடவியது.. ’அழாதமக்கா‘’என்று சொல்லும்போதே குரல் உடைந்து கண்ணீர் சிதறியது. கோமதி ஆச்சியின் எப்போதும் திருநீறு துலங்கும் நெற்றி பாழாய் இருப்பது கண்டு சாமி படத்துக்கு முன்பிருந்து எடுத்துப் பூசிவிட்டாள். அக்கா‘’ப்ச்’’என்றாள். ’’நீ மெர்சி அக்காவையாவது கூப்பிட்டுட்டு வா’’
கோமதி சட்டென்று செருப்பை போட்டுக்கொண்டு மெர்சி அக்காவைத் தேடிப் போனாள்.
அவளது மனநிலைக்குப் பொருத்தமில்லாது வீதி ஜேஜே என்று இருந்தது. சனிக்கிழமை விடுமுறைக் கூட்டம். கோவிலிலிருந்து ஒரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருந்தது. ஒரு கூட்டம் அர்த்தஜாம பூஜை காண உள்ளே போய்க்கொண்டிருந்தது. சிரிப்பும் கும்மாளமும். பட்டுப்புடவைகளும் மல்லிகைப்பந்துகளும். சேட்டுக்கடையில் அல்வா வியாபாரம் சூடாக நடந்து கொண்டிருந்தது. மக்கள் வாழையிலையில் வாங்கி வாங்கித் தின்றுவிட்டு எறிந்த இலைகள் தொட்டியில் நிரம்பி வழிந்தன. பெரியஜவுளிக்கடைக்குள் ஒரு பெரிய கூட்டம் அலை போல் போயும் வந்தும் கொண்டிருந்தது. அதன் வண்ண விளக்குகள் வீதியை போதை கொள்ள செய்திருந்தன.அதைக் கடக்கும் போது ஏற்படும் வழக்கமான ஏக்க உணர்வும் இழப்புணர்வும் அந்த அவசரத்திலும் அவளுக்குள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அங்கே வேலை கிடைத்திருந்தால் இன்று இந்த அளவு பரிதவிக்க வேண்டி வந்திருக்காது. சேது மாமா எவ்வளவோ முயன்று பார்த்தார். முதலாளி புன்னகையுடன் திரும்பத் திரும்ப ‘’இப்போ இடம் காலி இல்லையே ‘’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். ’’ஆளு வேற ரொம்ப சோகையா இருக்கா. நம்ம கடைக்கு கொஞ்சம் தெளிச்சலான மூஞ்சி வேணும்.’’ சேது மாமா ‘அது போஷாக்குக் குறைவுனால . நீங்க வேலை கொடுங்க ஒரே மாசத்துலே தேறிடுவா. நல்லா வாழ்ந்த குடும்பம் தானே‘’என்றார். அவர் ‘’அது சரி. ஆனா இப்போ ஆளு தேவையில்லை. வரும் போது கட்டாயம் சொல்றேன்‘’ என்றார். இறங்கும் போது சேது மாமா ‘’இவன் சொல்ல மாட்டான். நல்லா இருந்த காலத்திலே ஒருமுறை உங்கப்பன் சீட்டு கிளப்ல இவனை அடிச்சிட்டான். ம்ம்ம்ம்..எல்லோரும் ஒரே தரத்தில இருந்தோம் அப்போ. இப்போ நிசமாவே அவன் கோபுரத்திலே. நாம குப்பையிலே‘’
நகரின் இன்னொரு பெரிய கடையில் குறிப்பிட்ட சாதிக்கரர்களைத் தான் தான் எடுப்போம் என்று நேராகவே சொல்லி விட்டார்கள். கோமதி இப்போது இருப்பது இந்த இரண்டு கடைகளுடன் போட்டி போட முடியாமல் திணறிக்கொண்டு விளிம்பில் தொக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற சிறிய கடைகளில் ஒன்றில்.
சேது மாமாவும் இறந்து போனார். அவர் மகன் வீட்டை விற்றுவிட்டு சென்னை போய்விட்டான். கோமதி காந்திமதி மெடிக்கலில் நின்று ‘அண்ணே இந்த நர்ஸ் மெர்சி அக்கா எங்கே மாறி வந்திருக்காக தெரியுமா? எங்க ஆச்சி முடியாமக்கிடக்கு‘’என்றாள். மெர்சி அக்கா பார்த்தவுடன் சொல்லிவிட்டாள். ’’நாடியே இல்லை கோமதி. ஒருவேளை ஹைகிரவுண்டு கொண்டு போனா பிழைக்கும் ‘’
ஹைக்கிரவுண்டு கொண்டு போக வண்டிக் கூலிக்கு இருநூறாவது வேண்டாமா? பிறகு அங்கு ஏற்படும் செலவுகள். அக்கா கேட்டுவிட்டு மவுனமாக தார்சாலுக்குப் போய் தலைக்குச் சிக்கு எடுக்க ஆரம்பித்தாள். அவள் முகத்தில் ஒரு புன்னகை வருவது போல இருந்தது. அவளது கல்யாணம் அப்படி ஆனதிலிருந்து அவளுக்கு ஆச்சியின் மீது ஒட்டுதல் வெகுவாக குறைந்து போய் விட்டிருந்தது. ஆச்சி எவ்வளவோ தடவை சொல்லிப் பார்த்தாள் ’’மக்கா ஆச்சி மனமறிஞ்சு அப்படிப் பண்ணுவேனா? ரொம்ப நல்லபடியாத்தான் அந்த புரோக்கர் சொன்னான் ‘’அக்கா விஜயநாராயணத்துக்குக் கல்யாணம் பண்ணிப் போன ஒரே வாரத்தில் திரும்பி வந்துவிட்டாள். திரும்பிப் போகவே இல்லை. ஒரு தடவை கோமதியிடம் சொன்னாள் ’’அந்தாளுக்கு உடம்பெல்லாம் வெட்டை. பொம்பளை சீக்கு. பொத்து பொத்து வடியுது. இதுக்கு என்னை ஒரு பிணத்துக்குக் கட்டிக் கொடுத்திருக்கலாம். எனக்கு அது மேலே இனி ஆசையே வராம அவன் பண்ணிட்டான்’’
ஆனால் அக்கா ஆண்களைத் தான் வெறுத்தாள். ஒருமுறை தலைவலி என்று சீக்கிரம் வந்தபோது, ஆச்சி பிரதோஷம் என்று கோவிலுக்குப் போயிருந்த சமயம் மார்க்கட்லோட் டிரைவர் மதனியுடன் ரொம்ப நெருக்கமாக இருந்தாள். கோமதி நுழைந்ததும் அவர்கள் ஒன்றும் நடவாதது போல எழுந்து ஆடையைத் திருத்திக் கொண்டார்கள். அக்கா மிக சாவதானமாக எழுந்து அடுக்களைக்குப் போய் அந்த மதனியிடம் “செண்பகம் காபி குடிக்கியாட்டி” என்றாள்.
இரண்டு நாட்கள் கழித்து ஆச்சியிடம் சொன்ன போது அவள் முகம் கருத்தது. ’’முருகா’’ என்றாள். பிறகு, ‘’நீ இதுபத்தி வேற யார் கிட்டேயும் சொல்லாதே . அவகிட்டேயும் கேக்காதே . பாவம் அவளும் என்ன பண்ணுவா. அவளைத் தட்டிக் கேக்குற தகுதி எனக்கு இருக்கா சொல்லு. சரியா விசாரிக்காம கொள்ளாம அவ வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்’’
கோமதிக்கு அக்கா அவள் மாப்பிள்ளையைப் பற்றிச் சொன்னதில் சந்தேகம் இருந்தது. ’’எனக்கென்னமோ இவதான் சரியில்லைன்னு தோணுது ஆச்சி ‘’என்று சொல்ல விரும்பினாள்.
ஆச்சியின் ஓங்கரிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. கோமதி மறுபடியும் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினாள். அக்கா டிவியைப் போட்டுக் கொண்டு கனவில் ஆழ்ந்திருந்தாள். அவள் கனவில்ஆடுவது யார் ? லோடு டிரைவர் மதனியா?
அவளுக்கு ஆச்சி ரொம்ப விசாரித்த பிறகு ஒரு வரனைக் கொண்டு வந்தாள். ஒரு வெள்ளிக்கிழமை பூவும் மஞ்சளும் வாங்கிக்கொண்டு ஆறுபேர் அவளைப் பார்க்க்க வந்தார்கள். அவனைத் தவிர எல்லோரும் பெண்கள். அம்மாகாரிக்கு நிறைய சகோதரிகளாம். அவர்கள் திரும்பத் திரும்ப ‘’ரொம்ப சோகையா இருக்கியே‘’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள்., அம்மாக்காரியும் அவனும் ஒன்றும் சொல்லவில்லை. காப்பியைக் குடித்துக் கொண்டு ‘’போய்ச் சொல்றோம்‘’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் . அவர்கள் போனதும் அக்கா ‘’அவங்களுக்கு உன்னைப் பிடிக்கலை‘’ என்றாள். ’’இந்தக் கிழவி சொல்ற பழைய பஞ்சாங்கத்தைக் கேட்காம மார்க்கட்டுல அப்பப்ப மாட்டுவால் சூப்பு கிடைச்சா குடி. மாரே இல்லை. ஒரு பையனை யாரு கட்டிப்பாக‘’ கோமதி ‘’அதான் எனக்கும் சேர்த்து உனக்கு இருக்கே. அதை வச்சுகிட்டு நீ யாரோட பிணைஞ்சுக்கிட்டுக் கிடக்கே‘’ என்று கேட்க நினைத்தாள். ஆனால் அவள் அவ்விதமெல்லாம் கேட்டுப் பழகியவள் அல்ல.
தாங்கள் இருவரும் எப்போது பிளந்து இரட்டையானோம் வேறு வேறு நபர்களானோம் என்று அவள் அவ்வப்போது அவர்களிடையே பிணக்கு வரும்போதெல்லாம் யோசிப்பதுண்டு. ஏழாம் வகுப்பு வரை அப்பாவும் அம்மாவும் அந்த விபத்தில் மரித்துப் போகும் வரை அவர்கள் ஏறக்குறைய ஒரே நபரின் இரு நகல்கள் போலத் தான் இருந்தார்கள். அதுவரை அவர்களிடையே சண்டையே வந்ததில்லை. அம்மா கூட “ஏய் பிள்ளைகளா வீடுன்னா சத்தம் வேணாமா” என்று கேட்டிருக்கிறாள்.
அந்த புயல் கடந்ததும் அக்கா வேறு பெண்ணாகி விட்டாள். அதே மாதத்தில் தான் அவள் வயதுக்கும் வந்தாள். அது அவளை இன்னும் வேறு ஒருத்தியாக ஆக்கியது. அதன்பிறகு ஒருபோதும் அவள் கோவிலுக்குள் வந்ததில்லை. பிரார்த்தனை செய்ததில்லை. அவளோடு சிநேகமாயப் பேசியதில்லை.
சந்தனமாரியின் வீட்டின் முன்பு கயிற்றுக் கட்டிலில் அவளது அப்பா படுத்திருந்தார். கோமதி அங்கிருந்து கொண்டே ‘’மாரி மாரி‘’ என்றழைத்தாள். அவளது அப்பா துண்டை எடுத்து வெற்று மார்பின் மீது போட்டுக்கொண்டு ‘’என்னா சவ்வாதுக் கடைக்காரர் மகளே இந்நேரத்திலே‘’ என்றார். லேசாக பழ வாசனை வீசியது. கோமதி ‘’மாரி….ஆச்சிக்கு ரொம்ப உடம்பு முடியலை ‘’அவர் அவளைக் கூர்ந்து பார்த்து ‘ஐயோ…ஆனா மாரி வந்து என்ன பண்ணப்போறா’’
“அது வந்து ஹைகிரவுண்டுக்கு கூட்டிட்டுப் போகச் சொல்றாங்க‘’ அவர் மறுபடியும் படுத்துக் கொண்டு ‘’சீக்கிரம் போய் அதைப் பண்ணும்மா. மாரியை இன்னிக்கு மாப்பிள்ளை பார்க்க வந்தாங்க. அதெல்லாம் முடிஞ்சு அசந்து போய்த் தூங்குதா‘’
கோமதி அங்கேயே கொஞ்ச நேரம் தடுமாறி நின்று கொண்டிருந்தாள். திரும்பி நடக்கையில் கைகால்கள் நடுங்கின. இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த நகரம் முழுக்க கல்லாய் உறைந்துவிட்டது போல அவளுக்குத்தோன்றியது. களைப்பாக இருந்தது. மாலை கடையில் ஒரு காப்பி குடித்தது. வழக்கமாய் போண்டாவோ உள்ளிவடையோ உடன் வரும். காலையிலிருந்து ஒரு வியாபாரம் கூட நடக்கவில்லை. முதலாளி அந்தக் கடுப்பில் இருந்தார். தனது கடையைக் கடந்து பெரிய கடைக்குப் போகிறவர்களை எல்லாம் ஆங்காரத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தார். கோமதியை வெளியில் நின்று அழைக்கச் சொன்னார். கோமதி ‘’அண்ணா வாங்க அக்கா வாங்க லேடிஸ் ஐட்டம் குழந்தைங்க ஐட்டம் மிடிசுடி லெக்கின்ஸ் எல்லாம் இருக்கு வாங்க வாங்க வாங்கண்ணா அக்கா வாங்க…‘’ என்று தொண்டை வரள அழைத்தும் ஒருவரும் வரவில்லை. ஒருகட்டத்தில் அவர் ‘’போதும் உள்ளே வா. உன் மூஞ்சியைப் பார்த்ததும் வர்றவனும் திருப்பிக்கிட்டுப் போயிடறான்‘’ என்றார். கோமதி உள்ளே நுழைந்து துணிகளை அடுக்க ஆரம்பித்தாள். அவர் ‘’இங்கே கிழிச்சது போதும். மேலே ஏறி இந்த சுமங்கலி நைட்டி எத்தனை இருக்குன்னு பாரு‘’ என்றார். அவள் சிறிய அலுமினிய ஏணி மேலே ஏறி போனாள். அவர் எப்போது வந்தார் என்று கவனிக்கவில்லை. அவர் சட்டென்று அவளது இடுப்பைப் பிடித்து இழுத்தார்.
கோமதி அப்படியே மடிந்து உட்கார்ந்து அழுதாள். அவள் குரல் உயர்ந்ததும் அவர் விட்டுவிட்டு ‘’ச்சீ தரித்திரியம் இவளுக்கு இது வேற பவிசு‘’என்று கீழிறங்கிப் போனார். ’’மரப்பொம்மை மாதிரி இருந்துகிட்டு இதோட திமிர்’’
ஆச்சி அவர்கள் நிச்சயம் நல்லதாக பதில் சொல்வார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தாள். ’’பையனோட அம்மா நல்ல மனசு. அவளுக்கு நம்ம குடும்பத்தைத் தெரியும். நாம இருந்த இருப்பு தெரியும்.’’
அவளுக்கும் உள்ளில் ஒரு நம்பிக்கை இருந்தது. பையனுக்கு நினைவில் இருந்தது போல காட்டிக் கொள்ளவில்லை எனினும் அவன் அவளோடு ஐந்தும் ஆறும் மனகாவலம் பிள்ளை பள்ளியில் படித்த மணி தானே? அப்போது அவள்தான் அவன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறவளாக இருந்தாள். ஏழாம் வகுப்பில் அவன் மாறிப் போய்விட்டான். இருந்தாலும்..மணி அப்போது ரொம்ப பொடியாக இருப்பான். வயதுக்கேற்ற வளர்ச்சியில்லை. படிப்பிலும் பெரிசாக சூட்டிகை இல்லை. தங்கித் தங்கிதான் படித்தான். அவனுக்கு நாய்கள் என்றால் ரொம்ப பயம். மாடுகள் என்றாலும் கூடத்தான். மார்க்கட் வழியில் நாய்களும் மாடுகளும் தாராளம். அவளோடு ஒட்டிப் பிடித்துக் கொண்டு வருவான். அவனுக்கு எப்போதும் வலது இடது கால் செருப்புகள் குழம்பும். தனது வீட்டுக்குத் திரும்பும் சந்தும் அவள் வீட்டுக்குத் திரும்பும் சந்தும் கூட குழப்பம்தான்.
ஒருவாரம் கழித்து கோமதி ஆச்சியின் சிட்டை நோட்டிலிருந்து அவளுக்கு தெரியாமல் எடுத்து அவன் வீட்டுக்குப் போன் செய்தாள். ஒருவேளை அவன் மறந்திருக்கலாம். அவன் முன்பே குழப்பக்காரன் தானே? நல்லவேளையாக அவனே எடுத்தான்.
‘ஹலோ யார் பேசறது‘’
‘’…………’’
‘’ஹலோ யாருங்க?’’
‘’நான்….நான் கோமதி‘’
‘’யாரு…?’’
‘’கோமதி…அன்னிக்கி ..என்னை…மணி என்னை ஞாபகம் இல்லியா‘’
மணி மவுனமாக இருந்தான் ‘’இருக்கு ‘’ என்றான். ’’அதுகென்ன இப்போ?‘’
அவளைத் தெரியாத ஒரு நபர் அவளை நிராகரித்திருந்தால் அவளுக்கு வேதனை குறைவாக இருந்திருக்குமா? அவனை அவளால் மாப்பிள்ளையாகவே நினைக்க முடியவில்லை. இருந்தாலும்… அவள் அன்று முழுவதும் திரும்பத் திரும்ப ‘’ஆமா அதுக்கென்ன இப்போ?‘’ என்று அவனது கேள்வியையே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தாள்.
கோமதி சட்டென்று நின்றாள்.
நான் எங்கே வந்திருக்கிறேன்? அவள் தன்னையறியாது அந்த வீட்டுக்கு வந்திருப்பதை உணர்ந்தாள். வெளியே ஒரு கார் பச்சை கான்வாஸ் துணியால் மூடப்பட்டு உறங்கிக் கொண்டிருந்தது. அன்று அவர்கள் அவளைப் பார்க்க வந்த அதே கார். அவளிடமிருந்து ஒரு சிறிய தேம்பல் வெளிப்பட்டது. பிறகு தனக்குத்தானே மீண்டுமொரு முறை சொல்லிக் கொண்டாள்
‘’அதுக்கு இப்போ ஒன்னுமில்லை’’
திடீரென்று அடிவயிறு குழைவது போல இருந்தது. களைப்பாக இருந்தது.
அவள் அதன் பிறகு தீர்மானித்து விட்டவள் போல வலது பக்கம் திரும்பி அங்கிருந்த ஒரு சந்துக்குள் நுழைந்து அழிக்குள் பச்சை விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்த ஒரு இருண்ட வீட்டின் முன்பு நின்றாள். அழைப்பு மணியை அழுத்தினாள். திரும்பத் திரும்ப அழுத்தினாள். ஆச்சி சிவதீட்சை பெற்றவள் என்று தொடர்பில்லாமல் நினைவுக்கு வந்தது. விடிவிளக்கின் கீழே சிவன் தனது குடும்பத்தோடு கொழுத்த காளை மீது அமர்ந்திருந்தார். பின்னால் வெள்ளிமலை. அவர் கழுத்திலிருந்த பாம்பு அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளிருந்து நிழலாய் சாரத்தை அவிழ்த்துக் கட்டியபடி விளக்கைப் போடாமலே அவர் வந்தார். அவளைக் கண்டு ஒரு கணம் திகைத்தார்,. அடுக்கு அடுக்காய் நீண்டு கொண்டே செல்லும் வீடு. உள்ளே மின்விசிறிகள் ஓடும் ஓசை மட்டும் கேட்டது.
கோமதி ‘’ஆச்சிக்கு ரொம்ப முடியலை பணம் வேணும் ‘’ என்றாள். அவர் ‘’பணமா‘’ என்றார். ’’சம்பளத்துலே கழிச்சுக்கோங்க‘’ அவர் அவளையே பார்த்தார். பிறகு கதவைத் திறந்து உள்ளே வா என்றார். கோமதி உள்ளே நுழைந்து அந்த பாம்பின் கண்கள் உண்மையிலேயே மினுங்குகிறதா என்று பார்த்தாள். அவர் உள்ளே போய் பணம் எடுத்து வந்தார். “ஐயாயிரம் இருக்கு. எண்ணிக்க‘’ என்றார்.
அவள் எண்ணிக்கொண்டிருக்கையில் ஒருமுறை உள்ளே திரும்பிப் பார்த்தார் பிறகு சட்டென்று இருள் மூலையோடுஅவளைச் சுவரில்அழுத்தினார். அவளை உதட்டில் முத்தினார். ஜாக்கட்டுக்குள் கைவிட்டு மார்புகளைக் கசக்கினார். கோமதி மரம் போல நின்றிருந்தாள். அவளதுசேலைக்குள் கைவிட்டு துழாவியபோது உணர்ச்சியற்ற குரலில் ‘’தீட்டாயிருச்சுண்ணே‘’என்றாள்.
அவர் சரேலென்று கையை எடுத்துக்கொண்டு உதறி ‘’தரித்திரியம். உடம்பெல்லாம் தரித்திரியம்‘’ என்றார். ’’போய்த் தொலை’’
கோமதி வீட்டுக்கு வந்தபோது ஆச்சி இறந்து போயிருந்தாள்.அவ்வளவு நேரம் உறங்கிக் கொண்டிருந்த வளவு இப்போது விளக்குகளை எரித்துக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. கோமதி அவர்களைத் தாண்டிப் போய் அக்காவிடம் பணத்தைக் கொடுத்தாள். “ஆச்சிக்கு சிவதீட்சை இறக்கிதான் மத்தது எல்லாம் பண்ணனும். இவங்க கிட்டே சொல்லிடு. நான் வீட்டுக்குள்ளே புழங்க முடியாது. எல்லாம் நீதான் பண்ணனும். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு . நான் கொஞ்சம் தூங்கறேன்” என்றாள். ‘
1 comment
தீட்டு என்பது பல்வேறு படிமங்களில் எப்படி கோமதியை அவளது வாழ்வில் விலக்கி வைக்கிறது என்பதினை மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் சிறுகதை.
கோமதி ஏழ்மையினால் விலக்கி வைக்கப்படுகிறாள்
வாளிப்பான உடலில்லாததால் விலக்கி வைக்கப்படுகிறாள்
சாதியினாலும் வேலை வாய்ப்பினின்று விலக்கி வைக்கப்படுகிறாள்
நன்கறிந்த நண்பனே மணாளனாகும் வாய்ப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறாள்
ஆனால் அதே தீட்டு அவளை பாலியல் துன்புறுத்தலின்போது காக்கிறது, மிகவும் பாசமுடன் இருக்கும் ஆச்சியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று மேலும் மனஅழுத்தமுறாதவாரும் காக்கிறது என்று கதை முடிவுறும் போது, எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்ற எண்ணம் மேலோங்குகிறது.
ஒரு நல்ல வாசிப்பனுவத்தைக் கொடுக்கும் கதை. வாழ்த்துகள் போகன் சங்கர்.
Comments are closed.