‘தத்துவம் என்பது என்ன?’ ஒரு வரியில் கூறும் ஓர் உள்ளொளியை சுமார் ஆயிரம் பக்க நூலில் தர்க்க வாதங்களுடன் நிரூபிப்பது. இது வீண்வேலை; கால விரயம். “அந்த நேரத்தில், அந்த ஆற்றலுடன் இன்னும் மேற்கொண்டு இயற்கையின் விதிகளைப் பற்றிய, வாழ்வின் விதிகளைப் பற்றிய உள்ளொளிகளைக் கண்டறியலாமே?” இது கதேயின் வாதம். இவரை மீண்டும் மீண்டும் வாசித்த எமர்சன் மற்றும் கியர்கேகார்டு போன்ற சிந்தனையாளர்கள் ‘பெரும் தத்துவக் கட்டிடங்களை எழுப்புவதை எதிர்த்தனர். விளைவாக, ‘இருத்தலியம்’ என்ற ‘தீவிரமாக வாழ்தல் சிந்தனையை விட மேலானது’ என்ற கருத்து ஒரு புயல்போல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக இலக்கியம், கலைகள், தத்துவம் போன்ற வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உலகெங்கும் சுழன்றடித்தது.
மனோதத்துவரீதியாக சிந்தனை என்பது மனதின் ஒரு கூறுதான். ‘முழுமையான மனிதன் ஆகாமல் தடுப்பது தனித்த சிந்தனை’ என்பார் எமர்சன் தன் ‘அமெரிக்க ஆராய்வாளன்’ என்ற சொற்பொழிவில்.
மாறாக, கவிதை முழுமையான உள்ளத்தில் தோன்றுவது. மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என உள்ளத்தை நான்கு பகுதிகளாகப் பிரிப்பது இந்தியத் தத்துவம். உணர்வு, உணர்ச்சி, சிந்தனை (கற்பனை இதில் அடக்கம்), உள்ளொளி எனப் பிரிப்பார் சி.ஜி.யூங் என்ற மனோதத்துவவாதி. சிந்தனை, தர்க்கவாதம் இடதுபக்க மூளையின் வேலை. கவிதை வலதுபக்க மூளையின் வேலை என்னும் நரம்பியல் அறிவியல். ‘முழுமூளைப் பயன்பாடு’ தான் ஒரு மனிதனை மேதையாக்கும் என்னும் நவீன மனோதத்துவம்.
இவற்றையெல்லாம் உள்ளடக்கி தமிழ்ச் சிந்தனையாளர்கள் ‘உள்ளம்’ என்று பெயரிட்டனர் அந்த முழுமையின் செயல்பாட்டுக்கு. ‘செய்+உள் = செய்யுள். செய்யுளின் நோக்கம் என்ன? ‘உள்’ என்ற உள்ளத்தைச் (உயிர் உட்பட) செய்வது. வள்ளலார் மனம், சித்தம், புத்தி, அகங்காரத்துடன் ஐந்தாவதாக உள்ளம் என்ற சொல்லையும் சேர்த்து எழுதுவதன் காரணம் இதுதான்.
ஆக வெறும் சிந்தனைக்கே உயிராற்றலைச் செலவழித்தால் கவிதை என்ற முழு உள்ளச் செயல்பாடு தோற்றுப் போகும். இதைத் தன் உள்ளுணர்வால், மெய்யுணர்வால், இயற்கை அறிவால் உணர்ந்ததால், கதே உலக மகாகவிகளுள் ஒருவரானார்.
கதேயின் பொற்காலக் கனவு
கதே ஒரு பொற்காலக் கனவைக் கண்டார். எது ஒரு நாட்டின் பொற்காலம்? செல்வச் செழிப்பா? பண்பாட்டு வளர்ச்சியா? அது கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றின் கலாசார வளர்ச்சியே. கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் ஏதன்ஸ் நகரில் அப்படிப்பட்ட ஒரு பொற்காலம் தோன்றியது. சாக்ரடீஸ், பிளேட்டோ போன்ற தத்துவவாதிகளும், அரிஸ்டாடில் போன்ற அறிவியலாளர்களும், யூரிபிடீஸ், சாஃபோகிளிஸ் போன்ற நாடகாசிரியர்களும் பிதியாஸ் போன்ற சிற்பிகளும் மற்ற துறைகளில் உன்னதக் கலைஞர்களும் தோன்றினர். கிரேக்க மொழியை உலக நாகரீக அரியணையில் ஏற்றினர். அப்படிப்பட்ட பொற்காலம் இலத்தீன் மொழியில் விர்ஜில், சிசரோ காலத்திலும், இத்தாலிய மொழியில் தாந்தே, பெட்ரார்க் காலத்திலும், ஆங்கில மொழியில் ஷேக்ஸ்பியர், மில்டன் காலத்திலும் ஏற்பட்டது. தன்னுடைய ஜெர்மன் மொழியில் இத்தகைய ஒரு பொற்காலம் தன்னுடைய காலத்தில் வைமர் நகரில் தோன்ற வேண்டும்; அதைத்தான் முன்னின்று நடத்த வேண்டும் என்ற வேணவா பீடிக்க, திட்டமிட்டு அதை நடத்திக் காட்டினார் கதே. தனக்காக அல்ல; தன் தாய்மொழியின் ஏற்றத்துக்காக. இந்த உயர்ந்த இலட்சியத்துக்கு உதவ காலமும், உபகாரச் சக்திகளும் மார்தட்டிக் கொண்டு ஓடிவந்தன. கிரேக்க ஹோமரின் காப்பியம், ஆங்கில ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்கள், நியூட்டனின் அறிவியல் போல சகல துறைகளிலும் தன் தாய்மொழி உலகுக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசையில் உருவானதே அவரது ‘ஃபௌஸ்ட்’ நாடகக் காப்பியம், பல துன்பியல் நாடகங்கள், வில்லியம் மெய்ஸ்டர் என்ற புனைகதை, பல்வேறு அறிவியல் துறைச் சாதனைகள். டெய்ன் என்ற பிரெஞ்சு திறனாய்வாளர் எழுதுகிறார்: கி.பி. 1780 – 1830 வரை ஜெர்மானிய மறுமலர்ச்சிக் காலம். இலக்கியத்தில் கதே, தத்துவத்தல் கான்ட், ஹெகல், இறையியல், மொழியியல், வரலாறு போன்ற மற்ற துறைகளில் பல்வேறு வல்லுநர்கள் எனப் பொங்கிப் பிரவகித்தது ஜெர்மானிய அறிவு. இனி வரும் 300 ஆண்டுகளுக்கு இக்கருத்துகளைப் பரிசீலிக்கவும், பயன்படுத்தவுமே உலகத்துக்கு நேரம் போதாது. இந்தப் பிரவாகத்தின் மூலஊற்று கதே. தனிமனிதச் சாதனைகளைச் செய்தவர்கள் உலக வரலாற்றில் அநேகர். ஆனால் ஒரு மொத்த சமுதாயத்தையும் சிந்தனையாளர்களாக மாற்றியவர் கதேவைத் தவிர வேறு எவருமிலர். ‘வாழ்ந்தால் கதேவைப் போல் வாழவேண்டும்’ என்றே ஜெர்மானிய சமூகத்தில் ஒவ்வோர் இளைஞனும் ஆவல் கொண்டான். தத்துவத் துறையில் பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்ற மேதைகளுக்கு இணையான புகழை எய்திய ஹெகல் கதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார்: என் இளமைக் காலத்தில் தங்களுடைய கருத்துகளே என் அறிவுக்கு உணவாயின. உங்களுடைய மகன்களில் ஒருவன் நான்.
சேலம் விஜயராகவாசாரியார் நூலகத்தில் கதேயின் நூல்களைப் படித்தபொழுது நான்கூட இப்படித்தான் நினைத்தேன். அப்போது பிறந்த என் முதல் மகனுக்கு ‘கதே’ என்றே பெயரிட்டேன். அவனைக் காணும்போதெல்லாம் எனக்கு என் இலட்சியம் நினைவுக்கு வரவேண்டும்; ஒருநாளும், ஒரு கணமும் என் இலட்சியத்தை மறக்கக் கூடாது என்று கதேவை நன்றியுணர்வுடன் காதலித்தேன்.
தமிழ் மொழியில் இப்படிப்பட்ட இலட்சியக் கனவுடன் வாழ்ந்தவர் வள்ளலார். கதே மனித நிலையில் சிகரம். வள்ளலார் இறைநிலை. அறிவிலோ சாதனையிலோ வள்ளலார் அடைந்ததே உன்னதம். தற்போது நான் நிற்குமிடம் வள்ளலாரின் திருவடிகள் காட்டிய பாதையே.
கதேயின் அறிவியல் சாதனைகள்
எது அறிவியல்? வரையறை என்ன? கண்டு, கேட்டு, புலனறிவாலும், கருவிகளாலும் ஆராய்ந்து ஒன்றுக்கு நூறுமுறை பரிசோதித்து, மாறாத உண்மைகளைக் காட்டுவதே அறிவியல். இது பிரான்ஸிஸ் பேக்கன் காலத்திலிருந்து தொடர்வது.
இந்த வரையறை போதாது. இது மிகவும் குறுகியது. இந்தத் தொடுவானத்தை மேலும் விரிக்க வேண்டும் என்றார் கதே. சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டினார். விளைவே சோதனைகள், அவர் அடைந்த பல்துறை அறிவியல் வெற்றிகள். அவருடைய மாற்று அறிவியல் முறை உண்மையாக இருக்கலாமோ என்று அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது.
மெய்காண் முறைகள் பல. அவற்றுள் ஒன்றுதான் விஞ்ஞான முறை. பகுத்தறிவு வாதம், வரலாற்று வாதம், தர்க்க வாதம், உள்ளுணர்வு வாதம், இயற்கைவாதம், வெளிப்படுத்தப்பட்ட சுவிசேஷ வாதம் என வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மெய்காண் முறைகள் தோன்றின. ஒன்றின் போதாமை மற்றொன்றை உருவாக்கியது.
பகுத்தறிவால், தொடர்ந்த சிந்தனையால் எந்த முடிவு அடையப்படுகிறதோ, அதுவே உண்மை. இது பகுத்தறிவுவாதம். ஸ்பினோசா, தெகார்த்தே, கான்ட் போன்றோர் கண்ட முறை.
தர்க்கவாதம் அரிஸ்டாடில் கண்டுபிடித்தது. முரண்விதியை அடிப்படையாகக் கொண்டது தர்க்கவாதம். ஒன்று ஒளி இருக்க வேண்டும்; அல்லது இருள் இருக்க வேண்டும். உண்மையா, பொய்யா? நன்மையா, தீமையா? கடவுள் இருக்கிறாரா, இல்லையா? ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இந்த மறுப்புவாதத்தைத் தொடர்ந்து சாதித்தால் முடிவில் கிடைப்பதே உண்மை. எதையும் பரிசீலிக்காமல், இருந்த இடத்தில் இருந்தே, காகிதத்தின் மீதே, அல்லது மனதிலேயே இத் தர்க்கவாதம் மூலம் உண்மையை அடைந்து விடமுடியும். அரிஸ்டாடில் கண்டுபிடித்த இந்த முறையால்தான் கிரேக்கத்தில் பரிசோதனை முறை தோன்றவில்லை. விளைவாக அறிவியலும், தொழில்நுட்பமும் தோன்றவில்லை என வாதிடுவர் இன்றைய அறிவியலாளர்.
இத் தர்க்கமுறைக்கு மாற்றாக வரலாற்று முறையை ஹெகல் போன்ற சில அறிஞர்கள் தோற்றுவித்தனர். ‘வரலாற்றின் தத்துவம் என்ற பெரிய நூலை எழுதி, அறிவுத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார் ஹெகல். வரலாற்றுவாதத்தின் வேர் யூதர்களின் பைபிளிலேயே உண்டு. இறைவனின் விருப்பமே வரலாறாக உருவெடுக்கிறது என்று அவர்கள் நம்பினர். ஆம், ஏசுவின் வருகை வரலாற்று நியதியே என அந்த நம்பிக்கையை வளர்த்தனர் கிறித்துவ மறைஞானிகள். இம் முறையை சமயம் சாராத வரலாற்று நெறியாக மாற்றியமைத்தனர். ஹெர்டர், ஹெகல், மார்க்ஸ் போன்றோர். இறைவனுக்குப் பதிலாக ‘உலக ஆத்மா’ என்றார் ஹெகல். உலக ஆத்மாவின் நடைப்பயணமே உலக வரலாறு. ஆகவே வரலாறே உண்மையான வேதம் என்றார் ஹெகல்.
அதோடு, தர்க்கம் உண்மைதான்; ஆனால் முழுமையான உண்மை அல்ல; தர்க்கத்தைத் தாண்டி, மேல்நிலைத் தர்க்கம் ஒன்று உண்டு; அதன் பெயர் இயங்கியல் என்றார். இந்த இயங்கியலைப் பற்றி மிக விரிவாக ஒரு பெரிய நூலையே எழுதினார் ஹெகல்.
அவர் கூறும் காரணம் இதுதான். முரண்விதி நூல்களில் தான் உண்டு. இயற்கையில் இல்லை. இயற்கையில் இருமைகள் இயல்பு. ஆகவே தர்க்கம் குறையுடையது.
இந்த இருமைகள் எவ்வாறு தோன்றுகின்றன? இதுவும் இயல்பு. ஒரு கருத்து தோன்றும். அதன் முற்றிய நிலையில் அதற்கு எதிர்க் கருத்து தோன்றும். அதன் முற்றிய நி¬லியல் இரண்டு கருத்துகளின் பொதுமைக் கூறுகள் ஒன்றிணைந்து ஒரு புதிய கருந்து தோன்றும். இப்புதிய கருத்து ஒரு தொடக்கம். இது முற்றிய நிலையில் இதன் எதிர்க்கருத்து தோன்றும். இவை இணைந்து பொதுமைக் கருத்து தோன்றும். இந்தச் சுழற்சியே இயற்கை. இதுவே வரலாறு. ஆக, தர்க்கம் என்ற சொற்சிலம்பம் தாண்டி, இயற்கை காட்டும் உண்மை நெறி இது.
ஹெகல் காட்டிய இந்த இயங்கியல் நெறியை சுவீகரித்துக் கொண்டு, தலைகீழாக மாற்றியமைத்தார் கார்ல் மார்க்ஸ். உலக ஆத்மாவை அழித்துவிட்டு ‘சடப்பொருள்’ என்று எழுதினார். ஹேகல், மார்க்ஸ் சொன்ன இயங்கியல் அறிவியல் அல்ல, ஏமாற்று என்று தன் நூலில் சாடுகிறார் கார்ல் பாப்பர். ஆனால் விஞ்ஞானம் அல்லாத இந்த விஞ்ஞான முறையைப் பின்பற்றி கார்ல் மார்க்ஸ் ஒரு மாற்றுப் பொருளாதார முறையையே உற்பத்தி செய்தாரே! சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றாக ஒரு பொதுவுடைமைப் பொருளாதாரக் கொள்கையை முழுவடிவில் தன் ‘மூலதனம்’ என்ற நூலில் எழுதிக் காட்டி நிறுவினார். அந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையும் சோவியத் ரஷ்யாவில் சுமார் 70 ஆண்டுகள் நடைமுறையில் இருந்ததே! அது உண்மை ஆனதே! அதை அறிவியல் அல்ல என்று எப்படி ஒதுக்க முடியும்?
விஞ்ஞான வரையறை மாற்றி எழுதப்பட வேண்டும் என்பதே உண்மை. பேக்கன் சொன்னது ஓரளவுதான் உண்மை. சரி, ஐன்ஸ்டீன் எவ்வாறு சார்பு நிலைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்? பரிசோதனை முறையிலா? அண்டவெளியில் இது எப்படிச் சாத்தியம்? சிந்தனைப் பரிசோதனை முறையால் என்று அவர் சொல்கிறார். இது வெறும் சப்பைக்கட்டு. கற்பனை மற்றும் உள்ளுணர்வு முறை இது. அவர் சொன்ன பிறகு ஒரு சூரிய கிரகணத்தன்று ஓர் ஆப்பிரிக்க மலையின் மீது சென்று சர்.எட்டிங்டன் பரிசீலித்து அக்கொள்கை உண்மை என்று நிரூபித்தார்.
அதேபோல் மனோதத்துவத் துறையில் சிக்மண்டு பிராய்டு தன் கனவுகளைப் பரிசோதனை என்கிறார். ‘நனவிலி மனதை’ வேறு எப்படி பரிசீலிக்க முடியும்? தன் நோயாளிகளின் கனவுகளைக் காட்டி மனிதகுல நனவிலி மனதை நிறுவுகிறார் சி.ஜி.யூங். விஞ்ஞான வரையறைப்படி இவையெல்லாம் விஞ்ஞானமல்ல. ஆனால் வேலை செய்கிறதே! உண்மையாக இருக்கிறதே! வேலை செய்தால் விஞ்ஞானம் தானே? இந்தப் புதிய விஞ்ஞான முறைகளையெல்லாம் இந்த ஜெர்மானியர்கள் கற்றது கதேயிடமிருந்தே. அவருடைய விஞ்ஞான நூல்களிலிருந்தே.
கதே கண்ட அந்த அறிவியல் நெறி என்ன? இயற்கை நெறி, இயற்கை நடைமுறையில் காட்டும் நெறி என்று விளக்குகிறார் அவர். இயற்கையை உற்றுப் பார். ஒரு விளைவை இயற்கை எவ்வாறு உற்பத்தி செய்கிறது என்று கவனி. தன்னை மறந்து இயற்கை அன்னையுடன் ஒன்றிவிடு. அன்னையே போதிப்பாள். தன் இரகசியங்களையெல்லாம் உனக்குத் திறந்து காட்டுவாள். அந்த அனுபவத்தின் போது உன் உள்உணர்வுகளைக் கவனி. அவற்றைக் குறித்து வை. ஒருநாள் அவற்றின் தொகுப்பே இயற்கை விதிகளை உனக்கு உணர்த்தும். இதுவே கதே கண்ட இயற்கை நெறி.
‘இயற்கை அன்னை தன்னுடைய இந்த மகனுக்குக் காட்டிய அளவு தன் இரகசியங்களை வேறு யாருக்கும் காட்டவில்லை’ என்று கதேவைப் பற்றி அமெரிக்க ஞானி எமர்சன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.
இந்த வழியைப் பின்பற்றியே கதே டார்வினுக்கு முன்பே பரிணாம உண்மையை உலகுக்கு உணர்த்தினார் தன் ‘தாவரங்களின் உருமாற்றம் என்ற நூலில்.
அவரது காலத்தில் விஞ்ஞான உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவர் கதே. அதற்குக் காரணம் சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடித்து, நிரூபித்து, உலகுக்கு உரைத்த ஒளி பற்றிய கொள்கை தவறு என்றார் கதே. ஏழு வண்ணங்களின் கூட்டுக் கலவையே ஒளி. ஒரு கண்ணாடிப் படிகத்தின் வழியாக ஓர் ஒளிக் கற்றையைச் செலுத்தினால் மறுபக்கம் உள்ள திரையின் மீது ஏழு வண்ணங்கள் விழுகின்றன. ஆகவே வண்ணங்களின் கலவையே ஒளி என்றார் நியூட்டன். இக்கொள்கையை மறுத்து, ஏராளமான சான்றுகளுடன் இரண்டு பெரிய தொகுப்புகளை கதே வெளியிட்டார்.
ஒளியின் குறைபாடு நிழல். ஒளி, நிழல் ஆகியவற்றின் விகிதாசாரத்தைப் பொறுத்து வெவ்வேறு வண்ணங்கள் தோன்றுகின்றன என்று வாதிட்டார். இன்றுவரை இத்தர்க்கம் தொடர்கிறது. பெரும்பாலான விஞ்ஞானிகள் நியூட்டனையும், ஒருசிலர் கதேவையும் ஆதரிக்கின்றனர். இத்தர்க்கத்தின் பின்னால் உள்ள மற்றொரு தர்க்கத்தை, இன்றுவரை தொடர்கின்ற விஞ்ஞானம் பற்றிய தத்துவத்தை அறிவது இப்புதிரை விளக்க உதவும்.
இயற்கையின் விதிகளை அறிவது அறிவியல். இவ்விதிகளைக் கண்டுபிடிக்க இரண்டு வழிகளை விஞ்ஞானிகள் கடைப்பிடிக்கின்றனர். முதலாவது கலிலியோ, நியூட்டன் சென்ற வழி. அதாவது கணிதத்தின் வழி. பலமுறை பார்த்துப் பரிசோதனை செய்து, அம் முடிவுகளிலிருந்து பொதுவானதோர் விதியை உருவகிப்பது. அதை ஒரு கணிதச் சமன்பாடு ஆக்குவது. பிறகு அச்சமன்பாட்டிலிருந்து தர்க்கரீதியாக வேறு கிளை விதிகளுக்கும் கற்பனைச் செய்திகளுக்கும் தாவுவது. அவற்றை மீண்டும் ஒருமுறை இக் கணித விதியுடன் ஒப்பிட்டு, உடன்பட்டால் ஏற்றுக்கொள்வது, மாறுபட்டால் உண்மையல்லவென்று விட்டுவிடுவது. இவ்வாறுதான் ஓர் ஆப்பிள் கனி கீழே விழுந்த நிகழ்விலிருந்து தொடங்கி ஏன் எல்லாப் பொருட்களும் பூமியின் மையத்தை நோக்கி விழுகின்றன? அவை தானே விழுகின்றனவா அல்லது பூமி என்ற பிரம்மாண்டமான காந்தம் அவற்றை இழுக்கின்றதா? அப்படி ஓர் புவிஈர்ப்பு விசை உண்டா? அது பூமிக்கு மட்டுமா அல்லது எல்லாக் கோளங்களும் அப்படிப்பட்ட விசையைக் கொண்டவைதானா? என்றெல்லாம் சிந்தித்தார். அப்படி ஒரு விசை இருந்தால் அதன் அளவு என்ன? என்று துல்லியமாகக் கண்டறிந்தார். பிரபஞ்சம் துல்லியமான கணக்கில் ஓடும் ஒரு கடிகாரம், ஓர் எந்திரம் என்ற உருவகத்தை நிறுவினார்.
இந்த அடிப்படையையே தகர்க்க விரும்பினார் கதே. கவிஞரான அவர், இயற்கையை ஒரு தாயாகக் கண்டார். கணிதத்தால் கடவுளின் மனதை அளக்க முடியாது என்றார். நியூட்டனின் எந்திர உருவகம் ஆபத்தானது; இயற்கை தனி, மனிதன் தனி என்ற பாகுபாடு அபாயமானது; மனிதன் இயற்கையிலிருந்தும், பிறகு தன்னிடமிருந்தும் அந்நியமாவான் என்றார். அவருக்குப் பிறகு வந்த கார்ல் மார்க்ஸ் மற்றும் இருத்தலியல் தத்துவவாதிகள் இந்த அந்நியமாதலை ஏற்றுக்கொண்டு மிக விரிவாகப் பேசினர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிவியலின் ஒரு துறை புகழோங்கி நிற்கும். அத்துறையின் உருவகமாக மொத்த அறிவியலையும் பார்க்கும் பொதுப்பார்வை ஒன்று உருவாகும் கலீலியோவிலிருந்து நியூட்டன் வரை இயற்பியலும் வானியலும் கொடிகட்டிப் பறந்தன. அதனால் இயற்கையை ஒரு மாபெரும் எந்திரமாகக் கண்டனர்.
ஆனால் கதேவின் பார்வை உயிரியல் சார்ந்தது. இந்தப் பார்வை வலுப்பெற்றது. இவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் கழிந்து சார்லஸ் டார்வின் ‘பரிணாம தத்துவ’த்தை ஓர் விதியாக்கி நிரூபித்த பிறகுதான். முழுவீச்சுடன் மொத்தப் பிரபஞ்சத்தையும் ஒரு மாபெரும் உயிர்த் தொகுதியாகப் பார்க்கும் பார்வை 1960களுக்குப் பிறகே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வகையில் கதே ஒரு தீர்க்கதரிசி. இயற்கையை ‘மீண்டும் உயிர்ப்பித்தல்’ போன்ற நூல்கள் எழுதப்பட்டன.
இயற்கையின் மெய்ப்பொருளைக் காண கணித முறைக்கு மாறாக கதே முன்வைத்த பார்வையை ‘நேர்காண் முறை’ என்பர். கூரிய பார்வையுடன், ஏராளமான குறிப்புகளையும், தகவல்களையும் சேகரித்தல். கணிதம், தர்க்கம் ஆகியவற்றுக்கு முதலிடம் தராமல் புலனறிவுக்கே, அனுபவத்துக்கே முதலிடம் தருவது. மாற்றுமுறையும் புலன் அறிதலின் மூலம் அனுபவத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. ஆனால் உடனே தர்க்கம், கணிதம் என்று தன் முக்கியத்துவத்தை மாற்றிக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் தர்க்கத்தால் உண்மையை அறியமுடியாது; அது வெறும் சொற்சிலம்பம் என்று கூறி, புலன் அனுபவமே அதைவிடச் சிறந்தது என்று பரிசோதனை முறையை முன்வைத்து விஞ்ஞானத்தை வளர்த்தவர் பிரான்ஸிஸ் பேகன். அவருக்குப் பிறகு கணிதத்தைச் சேர்த்துக்கொண்டது அறிவியல். இங்கே வேறு திசையில் பயணப்பட்டார் கதே.
அனுபவமே அடிப்படை என்றால் அந்த அனுபவத்தை அதன் ஆழ அகலங்களில், குறை நிறைகளில் ஆராய்ந்தார். இம் முறைக்கு நிகழ்வுத் தத்துவம் என்று பெயர். இம்முறையை மாபெரும் தனித் தத்துவமாகவே வளர்த்தெடுத்தனர். பிரன்டானோ மற்றும் எட்மண்ட் ஹூஸர் போன்ற ஜெர்மன் தத்துவவாதிகள். இந்த வேரிலிருந்து தோன்றிய மரம்தான் ஹைடெக்கர், சார்த்தர், கார்ல் ஜாஸ்பெர்ஸ் ஆகிய பிற்காலத் தத்துவவாதிகள் தோற்றுவித்த ‘இருத்தலியம்’. துரதிர்ஷ்டவசமாக இம் மெய்காண் முறை, தத்துவம், மனோதத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலேயே முடங்கிவிட்டது. கதே ஆரம்பித்து வைத்த வழியில் விஞ்ஞானத் துறையில் செயல்படுத்த யாரும் முன்வரவில்லை. ‘கதேயின் விஞ்ஞானம்’ என்ற பெயரில் வெறும் அடையாளச் சொல்லாக எஞ்சியது.
இந்த முறையைப் பயன்படுத்தி கதே அறிவியலில் வெற்றி கண்டாரா? ஆம் என்றே சொல்ல வேண்டும். ‘தாவரங்கள், விலங்குகளின் ஒத்த உறுப்புகளின் உருமாற்றம் என்று இயற்கையின் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டறிந்து விளக்கமாக எழுதினார். இது வேறு எதுவுமில்லை; சார்லஸ் டார்வின் கண்டுபிடித்த ‘பரிணாம விதி’ தான். அதற்குப் பெயரிட்டு ஒரு விதியாக்கினார் டார்வின். மேலும் அதிக சான்றாதாரங்களைத் தொகுத்துத் தந்தார். மற்றபடி உள்ளடக்கத்தை ஏற்கெனவே கதே கண்டறிந்து தெளிவாகக் கூறிவிட்டார்: வெவ்வேறு உயிரினங்களின் உறுப்புகள் ஒன்றுபோலத் தோன்றுகின்றன. சான்றாக, தாவரங்களில் இரட்டைப் பூ சாதாரண வகைப் பூவைக் காட்டிலும் அதிக மடல்களைக் கொண்டு விளங்குகிறது; ஆனால் அதில் தண்டுகள் குறைவான எண்ணிக்கையில் உள்ளன. தண்டுகளே மடல்களாக மாறியிருக்கலாம் என்கிறார். அதேபோல விலங்கினங்களில் முதுகெலும்பே கைகளாகவும், முன்கால்களாகவும், பறவைகளில் சிறகுகளாகவும் மீன்களில் செதில்களாகவும் இருந்தன. ஒரே உறுப்பின் உருமாற்றங்கள் இவை என்று எழுதுகிறார்.
ஒரு சில விஞ்ஞானிகள் கதே காட்டிய வழியில் சென்று வெற்றி அடையாமலும் இல்லை. புர்கிஞ்ஜே என்ற உடலியக்கவியல் விஞ்ஞானி செக்கோஸ்லேவியா தேசத்தவர். இவர் கண் பார்வையைப் பற்றித் தீவிரமாகப் பல்லாண்டுகள் ஆராய்ந்து தன் பெரிய நூலை இரண்டு தொகுதிகளாக 1824-25 ஆண்டுகளில் வெளியிட்டார். இரவிலே பார்க்கின்ற பொழுது வண்ணங்களின் பளிச்சிடும் தன்மை வேறுவிதமாக இருப்பதைக் கண்டறிந்து வெளியிட்டார். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதக் கண்களின் பார்வை அமைப்பிலேயே ‘தடி போன்ற சிறு அமைப்புகளும் கூம்புகளும் உள்ளன. தடிகள் குறைவான வெளிச்சத்திலேயே நன்றாக வேலை செய்கின்றன என்று கண்டறிந்து அவரைப் பாராட்டினர் பின்னால் வந்த விஞ்ஞானிகள். அந்த புர்கிஞ்ஜே நன்றி மறவாதவர். தன் நூலைத் தான் வித்தையைக் கற்றுக்கொண்ட குருவான கதேவுக்கே சமர்ப்பணம் செய்தார்.
கதேவின் பரிணாமம் பற்றிய கட்டுரையை டார்வின் தன் உலகப் புகழ் பெற்ற நூலான ‘உயிரினங்களின் தோற்றத்தில்’ குறிப்பிடுகிறார். ‘நிறங்களைப் பற்றிய கொள்கை’ என்ற பெரிய நூலை எழுதி ஒளியியலில் நியூட்டனுடன் மாறுபட்டார். புவிக்கோள இயலில் கருங்கல்லே இப் புவியின் ஆதிப் பொருள் என்று கண்டறிந்து உரைத்தார்.
கதே, நியூட்டனைப் போல் ஓர் இரசவாதி. (நியூட்டன் தன் இறுதிவரை இரசவாதத்தை ஆய்ந்து சுமார் 60,000 பக்கங்கள் எழுதி வைத்துள்ளார்). இரசவாதம் வெறும் பொன் செய்யும் வித்தை மட்டுமல்ல, ஓர் உலக தத்துவம். ஓர் அறிவியல். ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்ற அடிப்படையின் மேல் கட்டப்பட்டது. பரிணாமம், அணுவிஞ்ஞானம் யாவும் இதிலிருந்து கிளைத்தவைதான். அண்டத்தில் உள்ளன. யாவும் பிண்டத்தில் உண்டு என்ற சித்தர் கொள்கை இது. கதேவின் விஞ்ஞானம் என்று ஒரு நூலே எழுதப்பட்டுள்ளது. இத்துறை மேலும் ஆய்வுக்குரியது. விரிக்கின் பெருகும் என இத்துடன் நிறுத்துகிறேன். எதிர்காலத்தில் கதே பற்றிய முழுமையான ஆய்வுகள் கொண்டதோர் பெரிய நூலை எழுதத் திட்டமிட்டுள்ளேன். இதன் விரிவை ஆண்டுச் சொல்கிறேன்.
எது கவிதை?
வாழ்க்கை ஒரு முழுமை. அதில் அறிவியல் என்றோ, தத்துவம் என்றோ, கவிதை என்றோ தனித்தனித் துறைகள் இல்லை. புறத்திலும் அகத்திலும் நாம் காணும் ஒவ்வொரு பொருளின், கருத்தின், உயிரியின் மெய்ப்பொருளைக் காண்பதே உயர்ந்த வாழ்க்கை. அச் செயல்பாடே வாழ்வு. அவ்வாறு கண்டறிந்த உண்மைகளை உணர்ச்சியுடன, கற்பனையுடன், சிந்தனையுடன், அழகாக வெளிப்படுத்துவதே கவிதை. பாடுபொருள் எதுவாகவும் இருக்கலாம். ஆங்கில இலக்கியத்தில் ஜான் டன், ஹெர்பர்ட், கிராஷா போன்ற தத்துவ விஞ்ஞானக் கவிகள் உண்டு. காதலை ஒரு திசைகாட்டும் கருவிக்கு ஒப்பிடும் ஜான் டன்னின் கவிதை புகழ்பெற்றது. இவர்களுக்கு முன்னோடி இலத்தீன் மகாகவி லுக்ரீடியஸின் ‘பிரபஞ்சத்தின் இயற்கை’. இவ்வகைக் கவிதையையும் விட்டுவைக்கவில்லை கதே. இயற்கையுடன் நேரடித் தொடர்புகொண்டு அந்த ஈடுபாடு தந்த அறிவை உத்வேகத்துடன் கற்பனையுடன் அழகான கவிதைகளாக்கினார். அவரது விஞ்ஞானம், தத்துவம், திறனாய்வு, வரலாறு பற்றிய எல்லா அனுபவங்களும் அவரது உள்ளிலிருந்து தெறித்து விழுந்தன கவிதைகளாக.
வாழ்க்கையை எந்த அளவுக்கு உள்வாங்குகிறாய் என்பதே வாழ்ந்த வாழ்வின் அளவீடு. கவி மற்ற மனிதர்களை விட அதிகமாக வாழ்பவன். ஏனெனில் மிக அதிகமாக உள்வாங்குபவன். ஒரு சாதாரண மனிதனுக்கும், ஒரு ஞானிக்கும் ஒரு கலைஞனுக்கும் வேறுபாடு இந்த உள்வாங்குதலின் அளவீட்டில்தான்.
பரிணாமத்தில் விலங்கு நிலையில் உயிர்த்திருத்தலே முதலும் முடிவுமான பிரச்னை. எனவே ஒவ்வொரு விநாடியும் மூளை உள்வாங்கிய கோடிக்கணக்கான உணர்வுகளைத் தடுத்து நிறுத்தி, வாழ்தலுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பு போன்ற அடிப்படைகளுக்குச் சாதகமானவற்றை மட்டும் உள்ளே விட்டு மற்றவற்றை வெளியே தள்ளியது. அதனால் வாழ்வின் மிக மிகச் சிறிய பகுதியே அனுபவமானது. விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு நகரஙகளில் வாழப் பழக்கப்பட்ட பின்னரும் மனிதர்கள் இப் பழைய கருமித்தனமான மூளையின் செயலை ஆராயாமல் மிருக வாழ்க்கையையே வாழ்ந்தனர். இந்த உண்மையை உணர்ந்த ஒருசிலர் கலைஞர்களாயினர், கவிஞர்களாயினர், விஞ்ஞானிகளாயினர், ஞானிகளாயினர்; முடிவாக அருளாளர்கள் ஆயினர். மனம் விசாலமான அளவே வாழ்ந்த வாழ்வின் அளவு. கண்களில் ‘புரை’ விழுவதைப் போல், மனதிலும் புரைகள் விழுந்திருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை 12 என்று பட்டியலிடுகிறார் ஜெர்மானிய தத்துவமேதை இம்மானுவேல் கான்ட். இந்தப் பன்னிரண்டு வடிகட்டிகளில் எத்தனையை ஒருவன் உணர்வுபூர்வமாக, அறிவுபூர்வமாக நீக்கிக் கொள்கிறான் என்பதைப் பொறுத்ததே அவன் அறிஞனாவதும், கலைஞனாவதும். அவன் எவ்வளவு உயரம் தாண்டுகிறான் என்பதைக் காட்டும் கைக்கோல் அவன் உள்வாங்கும் அளவே.
இது ஒருவிதத்தில் ஆபத்தான விளையாட்டு. காட்டாற்றின் வேகம் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது சிறு அணைகள் உடைபடும். அவ்வாறு உடைந்து, பைத்தியமானவர்கள் கவிஞர் ஹோல்டர்லின், தத்துவவாதி நீட்சே. கதேயின் உள்வாங்கும் ஆற்றலும் அதிகம்; அதைத் தாங்கும் ஆற்றலும் அதிகம். அதற்காகத் தன் உடல்வலிமை, மனவலிமை, உயிர்வலிமை, ஆன்மவலிமை யாவற்றையும் முறையாகத் திட்டமிட்டு, வளர்த்துக் கொண்டார். அதனாலேயே ஞானி என்று அழைக்கப்பட்டார். இவற்றிற்கு மேல் ஒரு வலிமை உண்டு என்பார் வள்ளலார். அது ‘அருள்வலிமை’. அதைத் தன் இறுதி நாட்களில் உணர்ந்தார் கதே. ஆனால் அடையவில்லை. ஜெர்மானிய மனம் அந்த எல்லையைத் தொட மறுத்தது. புததர் தொட்டார். அதன் இறுதி எல்லையை அடைந்து காட்டினார் வள்ளலார். ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ என்ற நூலிலும், அருட்பெருஞ்ஜோதி அகவலில் அருளியல் பகுதியிலும் இதை விவரிக்கிறார். கதே இந்நிலையைத் தன் கதாபாத்திரமான ஃபௌஸ்ட் அடைந்ததாகத் தன் காப்பியத்தின் இறுதியில் காட்டுகிறார். அவன் செய்த எல்லாக் குற்றங்களையும் மன்னித்து, இந்த அருள்நிலைக்காகவே தேவதைகளை அனுப்பி அவனது ஆத்மாவை, சைத்தானின் கைகளுக்குக் கிட்டாமல், சொர்க்கத்துக்குக் கொண்டுபோனதாக முடிக்கிறார். மனிதநேயமே மனித வாழ்வின் தலையாய விழுமியம், பக்தியல்ல, வீரமல்ல, புகழல்ல, செல்வமல்ல, காதல் அல்ல, பதவியல்ல, அழகல்ல, வேறு எந்த சுகபோகமும் அல்ல என்ற தன் ஞானத்தைப் பல்வேறு நிகழ்ச்சிகளைக் காட்டி காப்பியத்தை நடத்திச் செல்கிறார் இந்த ஜெர்மானிய மகாகவி.
ஜெர்மானிய மனதின் தத்துவம் வெளிப்பட்டது ஹெகலிடம், நீட்சேயிடம்; இசை வெளிப்பட்டது பாக், பீத்தோவன், மோஸார்ட்டிடம்; ஆதிக்க வெறி வெளிப்பட்டது ஹிட்லரிடம், மகா பிரடரிக்கிடம், கெய்சரிடம்; அதன் கலாசார சிகரம் வெளிப்பட்டது கவிஞர் கதேயிடமிருந்து. ஜெர்மன் தேசத்தின் உன்னதங்களின் பிரதிநிதி கதே.
கதேயின் வாரிசாக மனித நேயத்தை வளர்த்து தத்துவம், அரசியல், பொருளாதார ரீதியாக அதை உலகின் எல்லா மக்களுக்கும் கொண்டுசேர்த்து, அவர்கள் பயன் பெற வழிகாட்டியவர் கார்ல் மார்க்ஸ்.
பிரபஞ்சத்தை வெளியிலிருந்து தள்ளித்
தன் விரலால் சுழற்றும் அக் கடவுள்
என்ன விதமான கடவுள்?
இயற்கையை உள்ளிருந்து இயக்கி
இயற்கையே தானாக
தானே இயற்கையாக இருப்பதுவே
அவருடைய தகுதிக்குப் பொருந்தும்
என்ற கதேவின் புகழ்பெற்ற கவிதை ஒரே நேரத்தில் இயற்கை பற்றிய கவிதையாகவும், விஞ்ஞானக் கவிதையாகவும் தத்துவக் கவிதையாகவும், அவரது கடவுள் நெறியைக் காட்டும் கவிதையாகவும், கற்பனையுடனும் உணர்ச்சியுடனும் வெளிப்பட்டிருக்கிறது.
‘நாடோடிப் பாடலே இயல்பான கவிதை; கவிதையின் மூலஊற்று அதுவே’ என்று தன் இளமையில் தன் முதல் ஆசான் ஹெர்டரிமிருந்து கற்றார். விடுமுறை நாட்களில் கிராமங்களுக்குச் சென்று நாடோடிப் பாடல்களைச் சேகரித்தார். அவற்றின் பாணியில் தானே பல நாடோடிப் பாடல்களை எழுதினார்.
இசையுடன் பாடுவதற்கென்றே ஏராளமான பாடல்களை கதே எழுதினார். தன் நாவலான ‘மெய்டரில்’ மிக்னன் என்ற கதாபாத்திரம் பாடுவதாக அவர் எழுதிய இசைப்பாடல் மிகவும் பிரபலமானது. ‘கதேயின் இசைப்பாடல்கள் அற்புதமானவை’ என்று பின்னால் வந்த கவிஞர் ஹெய்ன் எழுதினார். பல புகழ்பெற்ற இசைவாணர்கள் அவற்றுக்கு இசையமைத்தனர்.
தனிக் கவிதைகள், கதைக் கவிதைகள், இசைப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், கவிதை நாடகங்கள், காப்பியங்கள் என்று கவிதையின் எல்லா வகைப்பாடுகளிலும் எழுதி, அவற்றில் தன் தனித்த முத்திரையைப் பதித்தார். எல்லா வகையான யாப்புகளிலும் எழுதினார். அவற்றை ஆண்டார். வெற்றி கண்டார்.
கவிதை ஒரு மெய்காண் முறை. ஒரு பொருளின் சாரத்தை அறிவது. அறிந்ததை அழகாக, முழுமையாக வெளிப்படுத்துவது. இதுவே கதேயின் கல்வியானது. இம்முறையைப் பயன்படுத்தி, அறிவியல், கலைகள், தத்துவம், வரலாறு, இலக்கியம், சமூகவியல், பொருளாதாரம் என சகல துறைகளிலும் புதிய உண்மைகளைக் கண்டறியக் கற்றுக்கொண்டார். கதேயின் பல்துறை ஆளுமையின் இரகசியம் இதுவே. இம்முறையைப் பயன்படுத்தி மாபெரும் வெற்றி கண்டவர் தமிழில் வள்ளலார். அதை அவர் கற்றுக்கொண்டது திருவள்ளுவரிடமிருந்தும், தமிழ்ச் சித்தர்களிடமிருந்தும். இப் பேருண்மையை, மெய்காண் முறையை இரண்டே குறட்பாக்களில் விளக்குகிறார் உலகப் பேராசான்:
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
இதன் விளக்கத்தை வள்ளலார் கூறுகிறார்: சங்க இலக்கியம் கூறும் அகம், புறம் என்ற இரண்டு கூறுகளை நான்காக்கி, அகத்தில் இரண்டு பிரிவுகள், அகம், அகப்புறம் என்று; புறத்தில் புறம், புறப்புறம் என்று வகுக்கிறார். புறப்புறம் என்பது புலன்கள், மற்றும் புலன்களால் உணரப்படும் ஒரு பொருளின் வடிவம், வண்ணம் போன்ற மேற்புறத் தோற்றம். புறம் என்பது மனம் மற்றும் மனதால் அறியப்படும் குணங்கள் ; அகப்புறம் என்பது அதன் பயன்பாடு; அகம் என்பது அதன் சாரம், மெய்ப்பொருள். ஒவ்வொரு பொருளிலும் கருத்திலும் இந்நான்கு நிலைகளும் உண்டு. இந் நான்கு நிலைகளும் அறிபவன் அறிஞன், கலைஞன். சாரத்தை அறிந்து, முழுமையாக, கசடு நீக்கி வெளிப்படுத்துபவன் கவிஞன்.
இம் மெய்காண் முறையைக் கவிதையியலில் மட்டுமின்றி அறிவியல், கட்டிடக் கலை, இசை, கல்வெட்டியல், நடனம், மொழியியல், அணுவியல், அண்டவியல், உயிரியல், உடலியல், உடல் இயங்கியல், பரிணாம இயல், இறையியல் எனப் பல்வேறு துறைகளில் பயன்படுத்தி புதிய உண்மைகளைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்திய பேரறிஞர்கள் கதேவும், வள்ளலாரும். தமிழில் எழுதிய ஒரே காரணத்திற்காக உலகம் இதுவரை வள்ளலாரை அறியவில்லை. அதனால் நட்டம் உலகத்துக்குத்தான்.
ஃபௌஸ்ட்
பௌஸ்ட் ஒரு மந்திரவாதி. அவன் சாத்தானுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டான். இந்த உலகத்திலுள்ள இன்பங்கள், சுகங்களை எல்லாம் சாத்தான் தன் மந்திர சக்தியால் ஃபௌஸ்ட் அனுபவிக்க ஏற்பாடு செய்து தரவேண்டும். அதற்குப் பதிலாக, ஃபௌஸ்ட் இறந்த பிறகு தன் ஆத்மாவை சாத்தானுக்கு அடிமையாக்க வேண்டும்.
இந்தக் கதை மத்திய காலத்தில் ஏற்கெனவே ஒரு நாட்டுப்புறக் கதையாக விளங்கிவந்தது. இதன் தோற்றம் பற்றிப் பல கற்பனைக் கதைகள் உலவி வந்தன. உண்மையிலேயே ஃபௌஸ்ட் என்ற ஒரு மந்திரவாதி இருந்தான். அவனுடைய வாழ்க்கை வரலாற்றைச் சுற்றிப் புனையப்பட்ட புராணக் கதை என்பர் ஒருசில வரலாற்றாசிரியர்.
அதுவல்ல உண்மை. ஏசுநாதரின் ஒரு பொன்மொழியை விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை இது என்பர் வேறு சிலர். “இவ்வுலகிலுள்ள எல்லா இன்பங்களையும் அனுபவித்தாலும், ஒருவன் தன் ஆன்மாவை இழந்துவிட்டால், அவனுக்கு என்ன இலாபம்?” என்பதே அப் பொன்மொழி.
இக் கதை பொம்மை விளையாட்டாக ஜெர்மனியில் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஆங்கிலக் கவிஞர் கிறிஸ்டபர் மார்லோ இக் கருப்பொருளை மையமாக்கி ‘டாக்டர் பாஸ்டஸ்’ என்ற பெயரில் ஒரு நாடகத்தை இயற்றினார். பின்னர் கதே இக்கதையை ஒருசில மாற்றங்களுடன் தன் 24ஆம் வயதில் ஒரு சிறிய நாடகமாகக் கவிதையில் எழுதத் தொடங்கினார். ஆனால் தன் ஆசானான ஹெர்டரின் ஆலோசனையைக் கேட்டு அதைத் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திக்கொண்டார். “ஜெர்மன் தேசத்துக்கென்று, ஜெர்மன் மொழியில் ஒரு மாபெரும் காப்பியம் வேண்டும். அதை எழுதும் தகுதி உனக்கு உண்டு. ஆனால் காப்பியத்துக்கான கருப்பொருள் இதுவல்ல” என்பதே ஹெர்டரின் புத்திமதி.
இந்த உபதேசத்தை ஏற்றுக்கொண்ட கதே மாற்றுக் கருப்பொருட்கள் பலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் காப்பியங்களாக்கினார்: அக்கிலஸ், ஹெர்மானும் டோரதியும், புரோமதீயஸ் டாஸ்ஸோ போன்றவற்றை எழுதினார். ஆனால் எதுவும் பெரிய காப்பியமாக உருவாகவில்லை.
பின்னாளில் கவிஞர் ஷில்லரின் நட்பு கிடைத்தது. அவருடைய கருத்து வேறாக இருந்தது. ‘ஃபௌஸ்ட்’ தான் நவீன கால மனிதனின் காப்பியம். அதை எழுதுங்கள். அதுதான் உங்களுக்கு உலகப் புகழைத் தரும் என்றார் ஷில்லர். அத்துடன் அதைத் தொடர்ந்து எழுதும்படி அடிக்கடி தூண்டினார். அந்தத் தூண்டுதலினால் கதே உற்சாகமடைந்து ஃபௌஸ்டை மீண்டும் எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 60 ஆண்டுகள் எழுதினார். தான் இறப்பதற்கு முன்தினம் வரை அதைத் திருத்தித் திருத்திச் செப்பனிட்டார். “இது எனக்குத் திருப்தியளிக்கவில்லை; இதை வெளியிட வேண்டாம்” என்று எழுதி வைத்துவிட்டு, மறைந்தார். ஃபௌஸ்ட் கதாபாத்திரத்தைத் தன்னிலிருந்து கதே உருவாக்கினார் என்பதற்கு இதுவே சான்று. சாத்தானுடன் ஃபௌஸ்ட் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துப்படி, ‘எந்த விநாடியைப் பார்த்து, “ஆஹா! எவ்வளவு அழகான நொடி! எவ்வளவு திருப்தியாக இருக்கிறது! இந்த விநாடி அப்படியே நீடிக்கட்டும்” என்று பௌஸ்ட் மனதில் நினைக்கிறானோ, அந்த விநாடி அவனுடைய ஆத்மாவை சாத்தான் எடுத்துக்கொண்டு போகலாம்.
இதன் உட்கருத்து என்னவெனில், மனித வாழ்வில் அறிவுத் தேடலுக்கு எல்லையே இல்லை. ஒருவன் தன்னை ஓயாது வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். எந்த நிலையிலும் திருப்தி அடையக்கூடாது. இது போதும் என்ற எண்ணம் வரக்கூடாது. ஏனெனில் மனித அறிவுக்கும், மனித ஆற்றலுக்கும் எல்லை இல்லை. எல்லை உன்டு என்பது பொய், சூது, சதி, கற்பனை.
இதுவே ஜெர்மன் தேசத்தில் புரோட்டஸ்டண்ட் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்பு உருவான தேசியக் கருத்து. தன்னைப் பண்படுத்திக்கொண்டே இருத்தல் என்று இக் கருத்தை வரையறுக்கிறார் அமெரிக்க ஞானி எமர்சன்; கதே பற்றி அவர் எழுதிய கட்டுரையில், ‘மனித அறிவுக்கு எல்லையில்லை; மனித ஆற்றலுக்கு எல்லையில்லை. எல்லை கட்டுவதே ஒரே பாவம் என்பது எமர்சனின் புகழ்பெற்ற வாக்கு. ‘நீ உலகில் என்ன சாதனைகளைச் செய்தாய் என்பது முக்கியமல்ல; உன்னை எந்த அளவுக்குச் செம்மை ஆக்கிக்கொண்டாய்? உன் அறிவை, குணங்களை, திறமைகளை எந்த அளவுக்கு வளர்த்துக்கொண்டாய்?’ என்பதே முக்கியம். இதுதான் கதேயின் வாழ்க்கை நெறி என்று எழுதுகிறார் எமர்சன்.
இக்கருத்தைக் கருப்பொருள் ஆக்கியே ‘வில்லியம் மெய்ஸ்டர்’ என்ற சுமார் 1000 பக்க நாவலை எழுதினார் கதே. “எது மிகச் சிறந்த வாழ்க்கை? அதை எப்படி ஆக்கிக் கொள்வது? என்பதே அவரையும் அவரது நாட்டு மக்களையும் இயக்கிய தாரக மந்திரம். அதுவே ஜெர்மானிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டு வளர்த்தது. கிரேக்க ஏதன்ஸ் நகரில் ஏற்பட்ட தத்துவப் புரட்சியை விட பெரிய எழுச்சியை உலகம் கண்டது. கவிதை, இசை, சிற்பக்கலை, அறிவியல், கணிதம், வரலாறு எனப் பல துறைகளிலும் மாபெரும் அறிவெழுச்சி ஏற்பட்டது.
இக் கருத்தையே மையக் கருவாக்கி அதன் படிநிலைகளைச் சம்பவங்களாக்கி, ஃபௌஸ்ட் நாடகக் காப்பியத்தை கதே அமைக்கிறார். கடைசி வரை எந்த அனுபவத்திலும் அவனுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறான். கடலைத் தூர்த்து நிலமாக்கி குடியிருப்புக்களை அமைக்கிறான். முதுமை வந்து இறக்கிறான். தேவதைகள் வந்து அவனது ஆத்மாவைச் சொர்க்கத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.
சாத்தான் தோற்றுப் போகிறான். அவன் ஏற்படுத்திய எவ்விதச் சுகங்களும், எவ்வித அனுபவங்களும் ஃபௌஸ்டுக்கு திருப்தியைத் தரவில்லை. மேலும் மேலும், இன்னும் இன்னும் என்ற வாழ்க்கைத் தாகம், அறிவுத் தாகம் அவனது உள்ளில் அணுவளவும் குறையவில்லை. கதேவுக்கும் அத்தாகம் குறையவில்லை. அதனால்தான் ‘இக்காப்பியம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இதனை இந்நிலையில் வெளியிட வேண்டாம்’ என்று எழுதிவைத்துவிட்டு இறந்தார்.
இந்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று தெரிவிக்கிறான். ‘கானமுயல் எய்த அம்பினும் யானை பிழைத்த வேல் நன்று’ என்று காட்டுகிறான். இச்சுய வளர்ச்சியின் எல்லை என்ன? மனிதன் எந்த எல்லையைத் தொடவேண்டும் என்று தெளிவாக உணர்த்திய மற்றுமோர் உலகப் பேராசான் வடலூர் வள்ளல்.
‘கடவுள் தன்மை அறிந்து அம்மயமாதல்’ மனிதன் கடவுளின் விஞ்ஞானத்தை அறிந்து, அதை அடையும்வரை ஓயக்கூடாது; இடையில் மனிதனின் ஆன்மீகப் பயணம் நின்றுவிடக்கூடாது என்பார். கதேவைக் கடந்த நிலையைத் தமிழ் அறிவர்கள் காட்டுகின்றனர். ஜெர்மானிய மறுமலர்ச்சி ஏற்பட்டதைப்போல, தமிழ் மறுமலர்ச்சி ஓர் இயக்கமாக ஏற்படுகின்ற காலத்தில் கதேவைப் போல் வள்ளுவனும், வள்ளலாரும் அவர்தம் அறிவுக்கேற்ற பெருமையைப் பெறுவர்.
அதேபோல், ஃபௌஸ்ட் வழியாக கதே இறுதியாக வந்து சேர்ந்த உறுதிப்பொருளும் வள்ளுவன் ஆதியில் காட்டியதே.
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
என்ற ஒப்புரவே அது. பிற உயிர்களுக்காக, அவற்றின் நலனுக்காக வாழும் வாழ்வே உயர்ந்தது. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் மிருகங்கள் கூட வாழ்கின்றன. ஜீவ காருண்யம் என்ற உயிர் இரக்கமே மனிதனை மனிதன் ஆக்குவது. அதுவே ஞானம். அதுவே துரியநிலையைத் தரும். அது கனிந்து அருள்நிலை பெற்றால் சுகபூரணம் என்ற கடவுள்வாழ்வு தானே வந்து எய்தும் என்றார் வடலூர் வள்ளல். ஆன்மீகத்தைக் கலையின் வழியாகத் தொட்டுக் காட்டினார் கதே. ஆன்மீகத்தையும், தெய்வீகத்தையும் முழுமுற்றாகக் காட்டினர் வள்ளுவரும் வள்ளலாரும்.
உலக மகா கவி கதே
காலந்தோறும் ஒவ்வொரு கவிஞனும் தன் வாழ்நாள் இலக்காக ‘உலக மகாகவி’ என்ற பட்டத்தைப் பெற முயற்சி செய்கிறான். இத் தேர்வில் வெற்றி பெறுவோர் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகவே உள்ளனர். முதல் தகுதி ஒரு காப்பியத்தை உலகத்தரமான கவித்துவத்துடன், வாழ்வின் முக்கியமான பிரச்னைகளை அலசித் தீர்க்கும், மறக்க முடியாத கதாபாத்திரங்களுடன் உருவாக்குவது. ஷேக்ஸ்பியர் கூட இத்தேர்வில் தகுதி பெறவில்லை. காப்பியத்தை இயற்றவில்லை. ஆனாலும் ஆங்கிலேயர்கள் உலகை ஆண்டதால், தம் அரசியல் செல்வாக்கால் அவரையே முதல் மகாகவியாக நிலைநிறுத்தினர். பிரெஞ்சு மொழியில் வால்டேர் இப்புகழை பெறப் பெரும் பாடுபட்டார். தன் இளம்வயதிலேயே ‘ஹென்றியாட்’ என்ற காப்பியத்தை எழுதினார். அத்துடன் ஏராளமான கவிதைகள், நிறைய கவிதை நாடகங்கள் என்று எழுதிக் குவித்தார். ஆனாலும் அந்தப் புகழை அடைய முடியவில்லை. அதேபோல் லோப் டி வேகா, கௌல்டிரோன், கம்பன் எனப் பேராற்றல் பெற்றோரும் அந்தப் பதவியில் அமரவில்லை. காரணம் அவர்கள் எழுதிய மொழி உலக அரங்கில் செல்வாக்குப் பெறவில்லை. ஆனால் கதேவுக்கு இந்த அங்கீகாரத்தை மறுக்க ஆங்கிலேயர்களாலும் இயலவில்லை. ஏனெனில் ஆங்கிலக் கவிகளும், திறனாய்வாளர்களுமான மேத்யூ ஆர்னால்டு, எமர்சன், கார்லைல் ஆகியோர் ‘நம் நவீன காலத்தின் மகாகவி கதேதான்’ என்று எழுதிவிட்டனர். இரண்டாவது காரணி காலம். கதே வாழ்ந்த காலம் ஜெர்மன் மொழி உலக அரங்கில் கொடிகட்டிப் பறந்த காலம். இம்மானுவேல் கான்ட், ஹெகல், ஷெல்லிங் போன்ற தத்துவமேதைகள், ஷில்லர், ஹோல்டர்லின், வீலண்டு போன்ற சிறப்பான கவிஞர்கள், லெஸ்ஸிங், ஷ்லெகல் சகோதரர்கள் போன்ற திறனாய்வு மேதைகள், வில்ஹெல்ட் வூண்ட், டிட்கெனர் போன்ற மனோதத்துவ மேதைகள் பிரடெரிக் சக்கரவர்த்தி என எல்லாத் துறைகளிலும் ஒரு மாபெரும் இயக்கமாக, மற்றுமோர் மறுமலர்ச்சிக் காலம் தோன்றி உலகின் கவனத்தை முழுவதும் ஜெர்மன் தேசத்தை நோக்கி ஈர்த்திருந்த காலம்.
இவை மட்டும் போதாது, அந்தப் பட்டத்தைப் பெற உண்மையான தகுதியும் வேண்டும். கிரேக்க ஹோமர் ‘அகிலஸ்’ என்ற கதாபாத்திரம் மூலம் எவ்வாறு ஒருசில மனிதர்கள் தெய்வீக ஆற்றல்களுடன் மண்ணில் அமரர்களாக வாழ்கின்றனர் என்று ஆராய்ந்தார், தன் ‘இலியட்’ காவியத்தில். மனிதனின் உண்மை நிலை என்ன? மற்ற விலங்குகளிடமிருந்து எவ்வாறு அவன் வேறுபடுகிறான்? ‘அகிலஸ்’ போன்ற மாவீரர்களின் துணிவும் வீரமும் போதுமா? கத்தியா புத்தியா? இல்லறத்தின் மேன்மை என்ன? வீரம் என்பது போர்க்களத்தில் செய்கின்ற கொலைகளின் எண்ணிக்கையால் அளக்கப்படுகிறதா? அல்லது தன் ஆழ்மனம் என்ற கடலில் இறங்கி, இறந்தவர்களின் ஆவியுலகம் சென்று பத்திரமாக மீண்டு திரும்புவதா? போன்ற ஆழமான கேள்விகளை முன்வைத்து தனது இரண்டாவது காவியமான ‘ஆடிஸி’ யில் ‘யூலீஸஸ்’ என்ற கதாபாத்திரத்தைப் படைத்தார். இன்றைய ‘ஜேம்ஸ் பாண்ட்’ வரை உலக எழுத்தாளர்களின் இலட்சிய கதாபாத்திரமாக அவர்களின் முன்மாதிரியாக யுலீஸஸே திகழ்கிறான். பெரிய வேறுபாடுகளைக் காட்ட எழுத்தாளர்களால் இயலவில்லை.
அதைச் செய்து காட்டியவர் கதே. யுலீஸஸூக்கு அடுத்த, மேல்நிலை என்ன? மனித அறிவின் எல்லை என்ன? மனித வாழ்வின் இறுதி இலட்சியம் என்ன? அழகா, வீரமா, தத்துவமா, விஞ்ஞானமா, கலைகளா, பணமா, நிறுவனங்களா, நன்மை தீமைகளைக் கடக்க முடியுமா? முக்தி எதனால் கூடும்? தியாகமும் உயிர் இரக்கமும் தான் அறுதிச் சாத்தியப்பாடுகளா? மனித அறிவும் ஆற்றலும் தன்னை வளர்த்துக்கொள்வதோடு சமுதாயத்தை வளர்க்கவும் பயன்பட வேண்டுமா? பெண் வெறும் போகப் பொருளா? தாய்மை பெண்ணைத் தெய்வமாக்குகிறதா? எது அறிவியல்? அதன் குறைநிறைகள் என்ன? ஏன் ஒரு நாடு திவாலாகிறது? காகிதக் கரன்ஸியை அச்சடித்து வழங்கி அந்நிலையிலிருந்து மீள முடியுமா? போன்ற நவீன காலத்து அறிவியல், சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகள் அனைத்தையும் ஓர் ஈடுபாடு கொண்ட பிரதிநிதியாக இருந்து தானே அனுபவித்து, அலசிக்காட்டி, தீர்வைச் சொல்லும் மாபெரும் கதாபாத்திரமாக கதே தன் உள்ளிருந்து ‘ஃபௌஸ்ட்’ பாத்திரத்தைப் படைத்தார். வாழ்வின் ஆழ அகலங்கள் அனைத்தையும் காட்டிய மற்றோர் கதாபாத்திரம் உலக இலக்கிய அளவில் இன்றுவரை வேறில்லை. இவ்வளவு பாடுபொருட்களையும், வெறும் கருத்துகளாக வெளியிடாமல், நாடக வழக்கில் காட்சிப்படுத்தி, தன்னுணர்ச்சிக் கவித்துவத்துடன் சுமார் அறுபது வருட காலம் ஆய்ந்து ஆய்ந்து செதுக்கினார் கதே. உலக மகாகவி என்ற பட்டத்துக்கு அவர் தகுதியானவரே.
சமீப காலத்தில் அப்பட்டத்தைப் பெற விழைந்து, அதற்காக உழைத்துப் பெற்றவர் சிலி கவிஞர் பாப்லோ நெரூடா. ‘ஃபௌஸ்ட்’ போன்ற மாபெரும் கதாபாத்திரத்தைப் படைக்கவில்லை எனினும் நவீன கவிதையில் மாபெரும் காப்பியமாகத் தனது ‘பொதுக் காண்டம்’ என்ற சுமார் 400 பக்கக் காப்பியத்தைக் கவிதைச் சுவை குறையாமல் வழங்கினார் இந்த ஸ்பானிய கவிஞர்.
ஒரு தேசம் ஓர் இனத்துக்குச் சொந்தமாவது எப்போது? அதற்கான சாசனம், கிரயப் பத்திரம் எது? அம் மொழியில் எழுதப்படும் காப்பியமே. கிரேக்கத்துக்கு ஹோமரின் இலியட், ஆடிஸி; உரோம் சாம்ராஜ்யத்திற்கு விர்ஜில் இலத்தீன் மொழியில் எழுதிய ஈனீட்; இத்தாலிய மொழியில் தாந்தே எழுதிய ‘தெய்வீக இன்பியல்’, ஆங்கிலத்தில் ஜான் மில்டன் எழுதிய ‘இழந்த சொர்க்கம்’. இந்த வரிசையில் பாரதத்தில் வடமொழியில் வால்மீகி, வியாசர். தமிழில் கம்பன், இளங்கோ, வள்ளுவன், தொல்காப்பியன். உருசிய மொழியில் காப்பியத்தையும், உரைநடை நாவலையும் இணைத்தார் டால்ஸ்டாய் தன் ‘போரும் சமாதானமும்’ என்ற பிரம்மாண்டமான புனைகதையில். அவருக்கு முன்மாதிரி கதே காப்பியத்தையும், கவிதை நாடகத்தையும் இணைத்துச் செய்த ஃபௌஸ்ட். அதனால்தான் அவரை மண்ணில் கடைசியாக அவதரித்த அமரன் என்று அழைத்தனர் உலக இலக்கியவாதிகள். ஜெர்மானிய தத்துவ மேதை கார்ல் ஜாஸ்பெர்ஸ் கதேவைப் பற்றிக் கூறும்போது இதே கருத்தை வேறு வார்த்தைகளில் கூறுகிறார்: கதேவைப் படிக்கலாம்; படித்து வியக்கலாம். ஆனால் அவரைப் போல் ஆக முடியாது.
ஒரு மகாமனிதன் இமயமலையைப் போல. வியப்புக்குரிய, வீர வழிபாட்டுக்குரிய பிரம்மாண்டமான ஆகிருதி. அதே நேரத்தில் தடை, கடக்க முடியாத தடை. அதனால்தான் கார்லைலின் வீர வழிபாட்டை மறுத்து எழுதினார் அமெரிக்க ஞானி எமர்சன்: மகா மனிதர்கள் அஞ்சி ஒதுங்கும் வீர வரிபாட்டுக்குரியவர்கள் அல்ல; மனிதனால் என்ன சாதிக்க முடியும் என்று காட்டிய அடையாள உச்சங்கள். பிரதிநிதித்துவ மனிதர்கள். இக் கருத்து ஒன்றும் புதியதல்ல. ஈராயிரம் ஆண்டுப் பழமை கொண்டது. ஆதிச் சங்கப் புலவன் அன்றே பாடினான்:
பெரியோரைக் கண்டு வியத்தலும் இலமே
சிறியோரைக் காணில் இகழ்தலும் இலமே.
இலக்கியத் திறனாய்வாளர் கதே
எல்லாக் காலத்திலும் உலக மகாகவி தாந்தேதான் என்று சாதிப்பவர்கள் உண்டு. அவர் இத்தாலிய மொழியில் எழுதிய ‘தெய்வீக இன்பியல்’ என்ற காப்பியத்தில் காணப்படும் கவித்துவத்துக்கு மேல் வேறு எந்த நூலிலும் இல்லை என்பர். ஷேக்ஸ்பியரை மறுத்த டி.எஸ்.எலியட் அவர்களுள் ஒருவர். அவர் ஒரு கிறித்துவக் கவிஞர். தாந்தேயின் காப்பியம் பாடுபொருளாக கிறித்துவச் சமய போதனைகளைக் கொண்டதாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். தாந்தே தன் காப்பியத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்: நரகம், கழுவாய்க் குன்றம், சொர்க்கம். இம் மூன்று இடங்களையும் ஆத்ம வடிவில் சென்று தான் பார்த்துவிட்டு வந்ததைக் கவிதை நடையில் புராணமாக வர்ணிக்கிறார் இத்தாலியக் கவி.
அவருடைய நரக வர்ணனைகளைப் படித்த கதே அருவருப்படைந்தார். ‘இந்த நூலை யாராவது படிப்பார்களா? மனமே கெட்டுவிடுமே’ என்றார். அவருக்குக் கவிதை முக்கியம்தான். ஆனால் அதைவிட வாழ்க்கை முக்கியம். வாழ்வைக் கொண்டாடி, வையத்துள் வாழ்வாங்கு வாழ ஆசைப்பட்டவர். அச்சத்தை, அவலத்தை வெறுத்த மனிதர். பல துன்பியல் நாடகங்களை எழுதியவர். ஆனாலும் ஒருமுறை சொன்னார்: என்னால் ஈடுபாட்டோடு ஒரு முழு முற்றான துன்பியல் நாடகத்தை எழுத முடியாது. நானே முதலில் தூள்தூளாகிப் போவேன்.
அப்படிப்பட்ட நேர்மறைச் சிந்தனையாளருக்கு, தாந்தேயின் பயங்கரமான நரக வர்ணனைகள் எப்படிப் பிடிக்கும்? தாந்தே நரக வாயிலின் முகப்பில் இந்த வாசகத்தை எழுதி வைத்தார். இதற்குள் நுழைபவர்கள் எக்காலத்திலும் வெளியேறவே முடியாது. ‘மீளவே முடியாத நரகம்’ என்ற கிறித்துவ சமய போதனையையே அவர் எழுதினார். எல்லையற்ற இருள், துர்நாற்றம், எரியும் தீநாக்குகள், எண்ணெய்க் கொப்பரைகளில் காலமெல்லாம் மனிதர்கள் வறுக்கப்படுதல், அங்கங்கள் வெட்டப்படுதல், அழுகி நாறும் உடல்கள் என்று தன் கற்பனையின் முழுவீச்சையும் கவித்துவ நடையில் காட்டியிருப்பார் தாந்தே. அதைப் படித்த, கேட்ட பல்லாயிரக்கணக்கானோர் மனநலம் பாதிக்கப்பட்ட சான்றுகள் உண்டு; பைத்தியமானவர்கள் உண்டு. இப் பயங்கர வர்ணனைகளை விரிவாகச் சொல்லி, இவற்றிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் கிறித்துவனாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லியே தன்னை வளர்த்துக்கொண்டது கிறித்துவ சமயம்.
ஏசுவின் கருணை பற்றிய போதனைகளை ஏற்றுக்கொண்ட கதே இக் கற்பனைக் குறுக்குவழிகளை வெறுத்தார்.
கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக
என்று இப்படிப்பட்ட பொய்யான கற்பனைக் கதைகளைச் சாடினார் வடலூர் மகாகவி. அதைப் பிரதிபலித்து, விளக்கி எழுதினான் பின்னர் வந்த பாரதி தன் ‘உயிர் பெற்ற தமிழன்’ பாட்டில். மூட நம்பிக்கைகளைச் சாடுவதில் ஜெர்மன் தேசத்து வள்ளலார் கதே.
ஆங்கில இலக்கிய விமரிசகர்களில் பிரபலமானவர் மேத்யூ ஆர்னால்டு. அவர்தன் குருவாகக் கொண்டவர் பிரெஞ்சுத் திறனாய்வாளர் செயின்ட் பீவ். ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒரு திறனாய்வுக் கட்டுரை வெளியிட்டார். இப்படி சுமார் 20 வருடங்கள் எழுதினார். இவை 60 தொகுதிகளாக வெளிவந்தன. இவ்விரு திறனாய்வு மேதைகளும் திறனாய்வின் இளவரசன் என்று கொண்டாடியது ஒருவரையே: கதே.
இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்ல (ஷேக்ஸ்பியரைப் பற்றிய அவருடைய கட்டுரை மிகப் பிரசித்தம்). சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை, சமுதாயம், அரசியல், தத்துவம், விஞ்ஞானம் என்று அனைத்துத் துறைகளைப் பற்றியும் தன் முடிவான கருத்துகளைத் திறனாய்வுகளாக முன்வைத்தார்.
ஏசுவும் கதேயும்
‘இலட்சியம் இல்லாத வாழ்வு, காதற்ற ஊசியைப் போல் பயனற்றது’ என்ற ஞானம் எல்லாக் காலங்களிலும் மனிதர்களை ஏதோ ஒரு திசை நோக்கிச் செலுத்தி வந்திருக்கிறது. ஏதன்ஸ் நகரத்தில் சாக்ரடீஸின் வாழ்வும் வாக்கும் இம்முதுமொழியின் வெளிப்பாடாகத் திகழ்ந்தது. கேள்வி பதில் என்ற தத்துவ சத் விசாரம் அவர் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கிய கொடை. அவரைப் போல் வாழவேண்டும் என்ற இலட்சியம் அவருக்குப் பின்னால் வந்த அறிஞர்களையெல்லாம் இயக்கியது. ஒரு கவிஞராகத் திகழ்ந்த அவரது மாணாக்கர் பிளேட்டோ அக்காலத்தில் ஆகச் சிறந்த இலக்கிய வடிவமாக இருந்த ‘துன்பியல் நாடக’ பாணியில் கலைக்களஞ்சியம் போன்று பரந்து விரிந்த தத்துவ அறிவை உரையாடல் வடிவத்தில் கவிதை நடையில் எழுதினார். இவரது நூல்களின் தொகுப்பே பிற்கால மேற்குலகின் சமயம் சாராத வேதம் என்ற தகுதியைப் பெற்றது. எழுத்தாளர் ஒவ்வொருவரும் சாக்ரடீஸ் போன்றதோர் ஆளுமையை பிளேட்டோவைப் போன்ற புகழை இலக்காக வைத்தே எழுதினர். அரிஸ்டாடில், புளூடார்க், சிசரோ, செனகா முதல் இன்றுவரை மேற்குலகில் இதுதான் இலக்கியத்தில் இமய இலக்கு.
சாக்ரடீஸ், பிளேட்டோவுக்குப் பிறகு, சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு ஏசுநாதர் தோன்றினார். அவரது ‘கருணை சார்ந்த போதனைகள்’ அறிவு, தத்துவம் ஆகிய துறைகளுக்கு மாறாக இறையியலை, பக்தி இயலை முதன்மையான இலக்காகக் காட்டின. மனிதன் மனித நிலையைத் தாண்டி, எல்லா உயிர்களுக்கும் தந்தையான இறைவனைப்போல் வாழவேண்டும் என்ற புரட்சிகரமான பாதையைக் காட்டினார். ‘உங்கள் தந்தை வானுலகில் இருக்கிறார். அவரைப் போல் நீங்களும் பூரணர்களாக குணக்குன்றாக வாழ முயற்சி செய்யுங்கள்’ என்ற புதிய போதனையை வெளியிட்டார். ‘நானும் என் தந்தையும் ஒருவரே’ என்று தான் இறைநிலை அடைந்துவிட்டதாக அறிவித்தார். அதற்காக சிலுவையில் அறைபட்டு இறந்தார். அவரது இந்த வாழ்வுக் கதையைப் புதிய புராணமாக்கிப் ‘புதிய ஏற்பாடு’ என்ற புதிய வேதத்தை எழுதினர் அவரது சீடர்கள். குறிப்பாக ‘புனித பௌல்’. பேரறிவும் பரந்த படிப்பறிவும் கொண்ட பௌல் ஏராளமாக எழுதி அதை ஒருவேத நூலாக்கினார். 11 சீடர்கள் என்ற தூண்களின் மேல் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் ஒரு பிரமாண்டமான ஆன்மீகக் கட்டிடத்தை எழுப்பினான். அது கிறித்துவ மதமாக ஆல்போல் விரிந்து இன்றுவரை உலகெங்கும் ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகிறது.
ஏசுநாதரின் பிரமாண்டமான புகழ் பிற்காலத்தில் வந்த ஞானிகள், தத்துவவாதிகள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் சவாலாக அமைந்தது. பைபிளுக்கு மாற்றாக ஒரு ஞானநூல் எழுத வேண்டும். ஏசுநாதரை அவரது பீடத்திலிருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் அவரது இடத்தில்தான் அமர வேண்டும் என்ற வேணவா ஒவ்வொரு எழுத்தாளனின் இரத்த நாளங்களின் துடிப்பானது. ஷேக்ஸ்பியர், மாண்டெயின், முதல் டால்ஸ்டாய், தாஸ்தாயெவ்ஸ்கி, ரஸ்ஸல், நீட்சே வரை இதுவே ஆழ்மன இயக்கம். அந்த விதிக்கு கதேவும் விலக்கல்ல. தன்னுடைய நூல்களின் முழுத் தொகுப்பைத் தன் வாழ்நாளில் தானே சரிபார்த்து வெளியிட்டார். அது ‘புதிய பைபிளாக’ இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்த்தார். ஏசுநாதருடன் தன்னை ஞானநிலையில் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த நோக்கத்துடன் எழுதினார். ‘ஞானி’ என்று உலகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் ஏசுவின் உயரத்தை மக்கள் மனதில் பிடிக்க முடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்: 1) நிறுவனமயமான கிறித்துவ மத பிரசாரம். போப்பாண்டர் ஒரு சக்கரவர்த்தியைப் போல சுமார் 1400 ஆண்டுகள் ஏசுவின் பெயரால் ஓர் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி நடத்தினார். பைபிளைத் தவிர வேறு நூல் எதுவும் புகழ் அடையக்கூடாது. ஏசுநாதரைத் தவிர வேறு எந்த அறிஞனோ ஞானியோ புகழ் பெறக்கூடாது. இக்கொள்கையைக் கடைப்பிடித்து எல்லாப் போட்டியாளர்களையும், போட்டி நூல்களையும் அழித்தனர். 2) புனித பௌல்.
“ஏசு ஒருவரே கடவுளின் ஒரே பேறான பிள்ளை. கடவுளே மண்ணில் மனிதராக அவதரித்தார். மக்களின் பாவங்களைத் தன் இரத்தத்தால் கழுவினார். அதற்காக உயிர் துறந்தார். ஆண்டவரின் வலது பாரிசத்தில் அமர்ந்து நீதி பரிபாலனம் செய்கிறார்” போன்ற புதிய இதிகாசத்தைப் படைத்தார். புனித ஜான் “ஆதியிலே வார்த்தை இருந்தது. அது தேவனுடன் இருந்தது. வார்த்தை தேவனாக இருந்தது” என்று தன் ஏற்பாட்டை ஆரம்பித்து, அந்த வார்த்தை இரத்தம், மாமிசம் கொண்ட மனிதனாக மண்ணில் அவதரித்தது. ஆதாம் செய்த ‘முதல் பாவத்தை’ அனுபவித்து வந்த மனிதகுலத்தை மீட்டு எடுக்க இரட்சகராக, மீட்பராக வந்தது. தன் வேலை முடிந்ததும் மீண்டும் வார்த்தை ஆகி வானுலகம் சென்றது.
இந்தப் புதிய புராணத்தை விட பெரிய புராணத்தை இயற்ற எந்தத் தனி மனிதனாலும் அதற்குப் பிறகு இயலவில்லை. அதற்கான ஆட்சி அதிகாரமோ, ஆள் பலமோ, பிரசார பலமோ யாருக்கும் வாய்க்கவில்லை. புகழில் ஏசு ஆல்ப்ஸ் மலை என்றால், மற்ற ஞானிகள், எழுத்தாளர்கள் சிறு சிறு குன்றுகளாக நின்றுவிட்டனர். எடுத்துச் சொல்ல ஆளில்லாமல் பலர் மறைந்தனர். இந்த ஆல்ப்ஸ் மலையைத் தகர்த்தால் ஒழிய அந்த உயரத்தை வேறு யாரும் அடைய முடியாது என்று உணர்ந்த வால்டேர், எமர்சன், மாண்டெயின், ஷேக்ஸ்பியர், பிராட்லா, இங்கர்சால், பிளாவட்ஸ்கி அம்மையார் போன்ற பலர் உளிகளுடன் கிளம்பி ஒருசில பகுதிகளை வெட்டி எறிந்தனர். ஆனால் இன்றுவரை அதை அசைக்க முடியவில்லை. இவர்களில் ஒருவர் கதே. ஆன்மீகத்தின் இடத்தைக் கவிதையையும் விஞ்ஞானத்தையும் இட்டு நிரப்ப முயன்றார். பொன் இருந்த இடத்தில் பூ வைத்தார். அவ்வளவுதான் செய்ய முடிந்தது.
‘ஏசு மரணத்துக்கு ஆட்பட்டார். ஆனால் மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்’ என்ற செய்திக்கு மாற்று இவர்களிடம் இல்லை. எந்த உயிரும் சாக விரும்புவதில்லை. சாவையும் வெல்ல முடியும். அப்படி வென்ற மாமனிதர் ஏசு. இந்தச் செய்தி உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்கக்கூட பொதுமக்கள் தயாராக இல்லை. கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு குச்சி கிடைத்தால் கூட நழுவவிடமாட்டான், இறுகப் பற்றிக் கொள்வான். நாத்திகர்களும் பகுத்தறிவுவாதிகளும் விஞ்ஞானிகளும் இந்த உளவியல் உண்மையை உணரவில்லை. புனித பௌலும், புனித ஜானும், அப்போஸ்தலர்களும் இதை அன்றே உணர்ந்திருந்தனர். மரணம் உள்ளவரை மதம் இருக்கும். மாற்று கிடைக்கும்வரை மனிதர்கள் மதங்களை விட்டு விலக மாட்டார்கள். விஞ்ஞானம் மரணத்திற்கு மாற்றைக் கண்டுபிடித்து அளிக்கும்வரை மனித குல வரலாறு மதங்களின் வரலாறாகவே இருக்கும்.
உலகெங்கிலும் சித்தர் மரபு மரணத்தை வெல்ல முடியும் என்று சொன்னது. இரசவாதம் அந்த மேல்நிலை விஞ்ஞானமே. ஆனால் இதை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் உயிர்க்கொல்லி. எப்படி ஏசுநாதர் மீண்டும் உயிர்த்தெழுந்தார்? இந்தக் கேள்வியை கிறித்துவ மதம் சாமர்த்தியமாகச் சமாளித்தது. ஏனெனில் அவர் ஆண்டவர். ஆண்டவரின் ஒரே பேறான பிள்ளை. கதேவும் ஓர் சித்தர், இரசவாதி. தன் காப்பியமான ஃபௌஸ்டில் பரிசோதனைக் குழாயில் ஒரு மனிதக் குழந்தையை உற்பத்தி செய்வதைப் பற்றிப் பேசுகிறார். தான் 83 வயதுவரை வாழ்ந்தது தன் கையில் உள்ளதைப்போல் ஓர் உரையாடலில் பேசுகிறார். பிரேத பரிசோதனையில் அவரது அங்கங்கள் ஓர் இளைஞனுடையதைப் போல் இருந்தனவாம். விதியை வென்ற மதியாளராகத் திகழ்ந்தார். இவ்வளவு பேரறிவை இவர் எப்படி அடைந்தார்? என்ன அந்த மூலம்? அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எந்த எழுத்தாளரும் சாரமான இந்தக் கேள்வியைக் கூடக் கேட்டுக்கொள்ளவில்லை. வெறும் தகவல்களை அடுக்கி, ஆயிரம் பக்க நூல்களை எழுதிக் குவிக்கின்றனர். ‘ஓதாமல் உணர்தற்கு ஒளி ஒன்று உண்டு. அதை ஜீவகாருண்யத்தால், அருள்நெறியின் முழுமையால் மட்டுமே பெற முடியும்’ என்று வள்ளலார் என்ற சித்தர் ஒரு விளக்கம் தருகிறார். அவர் பெற்றதற்கான சான்றுகளை அவரது பிரமாண்டமான பல்துறை அறிவு காட்டுகிறது. எனினும் அறிவியல் அறிவைப் பற்றிய இந்த அறிவியலில் முழுக் கவனத்தைச் செலுத்தும்போது மனிதகுலம் ஒரு கதேவை அல்ல, ஒரு வள்ளுவனை அல்ல, ஒரு வள்ளலாரை அல்ல, அனைவரையும் மேதைகளாக்கும் ஓர் உயர்கல்வியை உலகுக்கே அளிக்க முடியும். திறமைக்கும், மேதைமைக்கும் உள்ள வேறுபாட்டை முழுமையாக அறிந்தால் ஒழிய இது சாத்தியமில்லை. ‘மேதைமையின் அறிவியல்’ என்று ஒரு புதிய அறிவியல் துறை தோற்றுவிக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே மேற்குலகில் இத்துறையில் சில முயற்சிகள் செய்யப்பட்டன. ஆப்ரஹாம் மேல்லோ, கென் வில்பர் போன்ற மனோதத்துவ அறிஞர்கள் இத்துறையில் இறங்கினர். ஆனால் சாதனை என்று சொல்லும் அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை. ‘மரணத்தை வெல்லலாம். அதுவும் ஒரு நோயே. 2045ஆம் ஆண்டிற்குப் பிறகு மனிதர்கள் இறக்கத் தேவையில்லை. அதற்குள் அறிவியல் மாற்று மருந்துகளை, கருவிகளை, உத்திகளைக் கண்டுபிடித்துவிடும்’ என்றெல்லாம் பேசி விஞ்ஞானிகள் அறிக்கை விடுகின்றனர். புதிய துறைகள் கடந்த 20 ஆண்டுகளில் தோன்றி வேகமாக வளர்ந்து வருகின்றன. பின்நவீனத்துவ விஞ்ஞானம் சித்தர்களின் விஞ்ஞானத்தை நோக்கித் திரும்பியுள்ளது. இதன் விளைவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புகழும் பாதிப்புகளும்
இந்த அதிசய மேதையின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த யாரும் இவரால் பாதிப்படையாமல் இருந்ததில்லை.
‘ஒரு மனிதன் தனக்குள்ளே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை எல்லாம் எப்படி வெளிக்கொணர்வது? கொண்டுவந்து இவ்வுலக வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி? இக்கேள்விதான் கதேயின் வாழ்வின் வெற்றியை நிர்ணயித்தது.
கதே என்ற தனிமனிதன் உன்னத மனிதனாக மாறினால் போதுமா? அவனது வெற்றியின் இரகசியம் என்ன? சூழ்நிலைகளைத் தகவமைத்துக் கொண்டதுதான் என்றால் அப்படிப்பட்ட பொருளாதார, சமூகச் சூழல்களை எல்லா மக்களுக்கும் அமைத்துக் கொடுக்க முடியுமா? முடிந்தால் மண்ணில் மாந்தர் அனைவரும் மாமனிதர்களாக வாழலாமே; மண்ணிலேயே அமரவாழ்வு அமையுமல்லவா? இப்படிச் சிந்தித்தார் ஏழைப் பங்காளன் கார்ல் மார்க்ஸ். அதன் விளைவே அவர் வகுத்த பொதுவுடைமைச் சமுதாயம். கருத்தளவில் இது பாராட்டுக்குரியதுதான். ஆனால் நடைமுறையில் இதைச் சாத்தியப்படுத்துவது எப்படி என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
மார்க்ஸ் மட்டுமல்ல, மனோதத்துவவாதி சி.ஜி.யுங், இரவீந்திரநாத் தாகூர், ஸ்ரீ அரவிந்தர், கேரளத்தின் குரு நித்ய சைதன்ய யதி என அவரைத் தொட்ட யாவரின் வாழ்முறைகளையும் மாற்றினார் கதே. இவர்கள் இசை, பாடல், ஓவியம், இலக்கியம், தத்துவம், நிர்வாகம், கல்வித்துறை, அரசியல் என பல்துறைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டனர் கதேவைப் போலவே. ‘தனித்துறை வல்லுநர்களின் காலம்’ இது. இந்நாளில் பல்துறை வல்லுநர் ஆகும் வாய்ப்புகளும் அதிகம். அதே நேரத்தில் நேரம் கிடைப்பது அரிது. செய்திகள் கடல் அளவு. என்றாலும் வாழ்வு இனிமையானது. பன்முகங்கள் கொண்டது. ஒவ்வொரு முகமும் பேரழகு. எதை விடுவது? எதை அறிவது? கதேவைப் போல் திட்டமிட்டுச் செயல்பட்டால்,
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
கதேயின் சிந்தனைகள் எவ்வாறு பிற்கால அறிஞர்களை, அவர்களின் மூலம் சமுதாயத்தைப் பாதித்தன என்று காண்போம்.
தத்துவத் துறையில் இமயம் ஹெகல். இவர் தன் முக்கியக் கருத்துகளின் மூலம் கதேவின் எழுத்துகளே என்று அவருக்கே ஒரு கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தினார். ஹெகலை அவருடைய மாணவரான கார்ல் மார்க்ஸ் ‘அம் மாபெரும் சிந்தனையாளனின் மாணவன் நான்’ என்று தன் ‘மூலதனம்’ நூலின் முதல் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டார். கார்ல் ஜாஸ்பர்ஸ் தன் தத்துவத்தைத் தன் வாழ்விலிருந்தே கண்டடைந்ததாகக் கூறுகிறார். இம்முறையும் கதேவின் கொடையே.
இலக்கியத்தில் ‘ரொமான்டிக் இயக்கம்’ (மிகு புனைவு இயக்கம்), உணர்ச்சிக்கே முதலிடம் அளித்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கதே, தன் ‘இளைய வெர்தரின் துயரங்கள்’ என்ற புனைகதை மூலமாக. இது ஐரோப்பிய கண்டத்தையே சூறாவளியாகப் பாதித்தது.
அறிவியலில் பரிணாமத் துறையில் டார்வின் கண்டறிந்த கொள்கையை கதே ஏற்கெனவே தன் அறிவியல் நூல்களிலும் கவிதைகளிலும் உரைத்திருந்தார்.
கதேவைத் தன் ஆசான் என்று அறிவித்துப் பல நூல்களை அக் கருத்துகளை ஒட்டி எழுதினார் ஆங்கில இலக்கியவாதி தாமஸ் கார்லைல். அவரைப் பின்பற்றி அவருடைய அமெரிக்கச் சீடரான எமர்சன் கவிதை நடையில் பல கட்டுரை நூல்களை எழுதிக் குவித்தார்.
தாவர இயலில் ‘இலையே ஒரு தாவரத்தின் அடிப்படை அலகு’ என்று கூறி அதை நிரூபித்தார் கதே.
மனித உடலியலில் முதுகுத் தண்டுக்கும் மூளைக்கும் இடையில் பாலமாக ஓர் எலும்பு தான் இருக்கிறது என்று கண்டுபிடித்தார் கதே. விலங்கினத்துக்கும் மனிதனுக்கும் இடையே பரிணாமம் இருந்ததைக் காட்டியது இது. தனியாக இனி ஜெர்மன் இலக்கியம் ஆங்கில இலக்கியம் என்று பிரித்துப் பேச முடியாது. ‘உலக இலக்கியம் பற்றித்தான் பேச முடியும்’ என்றார். உலக இலக்கியம் என்ற சொற்றொடர் அவருடைய கண்டுபிடிப்பு.
விஞ்ஞானக் கருத்துகளையும் சிறந்த கவிதைகளாக்க முடியும் என்று எழுதிக் காட்டினார் அந்த நவீன கவி.
ஒரு நாட்டின் எழுச்சி என்பது அதன் கலாசார எழுச்சியே. பொற்காலம் என்பது கலாசார உயரமே. பல்துறைகளிலும் உலக சாதனைகளைச் செய்யும் அறிஞர் குழுக்களை உற்பத்தி செய்வதே கலாசார சாதனை என்று கூறி, தன் தேசத்தை உலகின் முன் நிறுத்தினார். வீலண்ட், ஹெர்டர், ஷில்லர், பிச்டெ, ஹெகல், ஷெல்லிங் என்று ஒரு பெரிய அறிஞர் படையையே தன் சிற்றரசில் வேலைக்கு அமர்த்தினார் அந்த ‘வைமரின்’ முதலமைச்சர். அதற்கு முன் ஜெர்மானியர்கள் தாழ்வுமனப்பான்மையில் தலைகுனிந்து நின்றனர். ஜெர்மன் மொழியை ஜெர்மானிய மக்களே மதிக்கவில்லை. பிரெஞ்சு மொழியையே போற்றினர். பிரெஞ்சு மொழியே அரசுமொழியாக இருந்தது. மகா பிரெடரிக் தன் அரசவையில் பிரெஞ்சு மொழியையே பயன்படுத்தினார். ஆனால் இன்று ஜெர்மன் மொழியை அறியாமல் ஒருவன் தத்துவம், அறிவியல் போன்ற எந்த முக்கியமான இயலிலும் வல்லுநன் ஆக முடியாது. பத்தொன்பதாம் இருபதாம் நுற்றாண்டுகளையே மாற்றியமைத்த மூன்று மாமேதைகள் கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்டு, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மூவரும் ஜெர்மானியர்களே. தம் தாய்மொழியில் படித்து, தன் தாய் மொழியில் சிந்தித்ததால் உலகப் பேரறிஞர்கள் ஆயினர். அந்த அளவுக்கு ஜெர்மன் மொழியில் சொல்வளம், கருத்துவளம் சேர்க்கப்பட்டது. இம் மாபெரும் கலாசாரப் புரட்சிக்கு வித்திட்டவர் கதே. கதே இல்லையேல் ஜெர்மனி இல்லை. இன்று உலகம் முழுதும் வியந்து ஜெர்மனியை அண்ணாந்து பார்க்கின்றது என்றால் அந்தப் பிரம்மாண்ட கட்டிடத்துக்கு அடிப்படையை அமைத்தவர் கதே.
தமிழில் பழஞ்சொற்கள் சுமார் ஆறு இலட்சம் என்கின்றனர். புதிய கலைச் சொற்களை ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துச் சேர்க்கவில்லை. இங்கே புதிதாக மறுமலர்ச்சி தோன்றுவதற்கான சூழலும் இல்லை. பிள்ளையார் சுழிபோட்ட திராவிட இயக்கமும் திசை தவறி வேறு பாதையில் போய்விட்டது. வீணே ‘செம்மொழி எங்கள் மொழி’ என்று பழம்பெருமை பேசி காலத்தை வீணாக்குகிறோம்.
முடிவுரை
கதேவைப் போன்றதோர் பெரிய ஆளுமை இந்த 21ஆம் நூற்றாண்டில் சாத்தியமா? பல்துறை அறிவு பெற்ற பண்டிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் கதே வெறும் பண்டிதர் அல்ல. அதைக் கடந்து பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தவர். ஒரு துறையில் ஓர் ஆயுட்காலம் முழுதும் ஆழங்கால் பட்டு, வல்லுநர் ஆனால்தான் ஒரு கண்டுபிடிப்பைச் சாதிக்க இயலும். டார்வின், ஐன்ஸ்டீன் சான்றுகள். கவிதைத் துறையில் கதேவைப் போல் காப்பியம் எழுதி, ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்த பாப்லோ நெரூடாவைக் குறிப்பிடலாம். ஆனால் அவர் மற்ற துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. ஓரளவுக்கு கதேவைப் போல் பெருஞ்சாதனை செய்தவர் என்று பிரெஞ்சு மேதை ஜீன் பால் சார்த்தரைச் சொல்லலாம். அவரும் தத்துவம் இலக்கியம் ஆகிய இரண்டு துறைகளில்தான் இயங்கினார். இலக்கியத்திலும் அவர் கவிதைத் துறையில் நுழையவில்லை. மற்றொரு பேரறிஞர் பெர்ட்ராண்டு ரஸ்ஸல். கணிதம், தத்துவம், சமூகவியல், வரலாறு ஆகிய கலைத்துறைகளில் சாதனை படைத்தாரே ஒழிய அறிவியல் துறைகளுக்குள் புகவில்லை. 98 ஆண்டுகள் வாழ்ந்தார். 75 ஆண்டுகளுக்கு மேல் அவரது படைப்புக் காலம். ஆனால் கதேவின் மிகப் பரந்த படைப்பாற்றலை அவரால் அடைய முடியவில்லை.
இந்நிலைக்கு, இவ்வறுமைக்கு என்ன காரணம்? கதேவுக்குப் பிறகு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. காலம் வெறும் இரண்டு நூற்றாண்டுகள்தான். ஆனால் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் மனித குலம் சம்பாதித்து, சேகரித்து வைத்திருந்த அறிவுத் தொகுப்பைப் போல் பற்பல மடங்கு அறிவின் பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கம் போல் அறிவுப் பெருக்கமும் அசுரத்தனமான வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. கதேவின் நூலகத்தில் சுமார் 5000 நூல்கள் மட்டுமே இருந்தன. அவருக்கு முன் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மேதை மாண்டெயின் தன் ‘கோபுர வடிவான நூலகத்தில்’ சுமார் 1000 நூல்களையே வைத்திருந்தார். ஆனால் இன்று என்னுடைய நூலகத்திலேயே சுமார் 30,000 நூல்கள் உள்ளன. அதிசயமானதோர் உண்மை என்னவெனில், ஆகப் பெரிய நூலகம், கோடிக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம் இன்று ஒவ்வொருவருடைய வீட்டிலும் உள்ளது. ஏன், சட்டைப் பையிலேயே உள்ளது. ஒரு கைபேசியில் இணைய தள நூலகம், ஒரு தொடுதலில் தயாராகக் கிடைக்கிறது.
தரவுகளுக்குக் குறைவேயில்லை. ஏராளம். இந்தப் பேரளவுதான் இப்போது குறை. எதைப் படிப்பது? எதை விடுவது? எல்லாவற்றையும் படிக்க நேரம் எங்கே இருக்கிறது? ஓர் உருசிய மேதை ஆய்வு செய்து சொன்னார். ஆழ்ந்து படித்தால் ஓர் ஆயுட்காலத்தில் ஒருவன் சுமார் 2000 நூல்களுக்கு மேல் படிக்க இயலாது. இன்று அணுஅறிவியல் போன்ற ஒரு துறை நூல்களே இந்தத் தொகைக்கு மேல் இருக்கும். பல்துறைகளில் மூலநூல்கள் மட்டுமே இருபது, முப்பதாயிரம் நூல்களுக்கு மேலிருக்கும். இவற்றையெல்லாம் கற்று, குறைகளைக் கண்டறிந்து, புதிய கண்டுபிடிப்புகளால் நிறைவு செய்வது என்பது அரிது.
ஒரே ஒரு சாத்தியக்கூறு மட்டும் உள்ளது. மூல நூல்கள், அவற்றுடன் அதிநவீன ஆராய்ச்சி முடிவுகளின் சாரம் மற்றும் அவற்றின் தலைப்பு சார்ந்த தொகுப்பு ஆகியவற்றை மட்டும் தேர்ந்ததோர் அறிஞர் குழு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாகிலும் வகுத்துத் தொகுத்தளித்தால் அதை மட்டும் முதலில் படிக்கின்ற மாணவர்களிடமிருந்து இக்காலத்திலும் ஒன்றல்ல, பல கதேக்கள் தோன்றலாம்.
அடுத்ததாக, மேதைமை அறிவியல் என்ற ஒரு புதிய அறிவியல் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே ஆப்ரஹாம் மேஸ்லோ, ஹவர்டு கார்டினர் போன்றோர் இத்துறையில் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஒரு முழுமையான அறிவியலாக மலரவில்லை. இதுவரை தோன்றிய மேதைகளின் வரலாற்றை ஆராய்தல், மருத்துவத் துறை மூலம் அவர்களுடைய உடல், மனம் சார்ந்த கூறுகள் மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து எவ்வகையில் மேம்பட்டிருந்தன, எவ்வகை சமுதாய அமைப்புக் கூறுகள் மற்றும் நிகழ்வுகள் அவர்களை ஊக்குவிக்கும் உந்துசக்திகளாக மேதைகளை உருவாக்கி இயக்கின போன்ற ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள பல்துறை அறிஞர்கள் கொண்ட குழுக்களை அமைத்து இவ்வறிவியல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான தனிப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். படைப்பும் கண்டுபிடிப்பும் ஒரு வாழ்நெறி ஆக வேண்டும். பழைய குப்பைகளைக் கிளறுவதை நிறுத்தி, அவற்றைக் கொண்டாடுவதை விடுத்து, புதிய அறிவை விநாடிதோறும் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற வேட்கையை இளைய தலைமுறையிடம் விதைக்க வேண்டும்; தொடர்ந்து பரிசுகள், பட்டங்கள், பதவிகள், வசதிகள், பொருளுதவிகளால் ஊக்குவிக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் ஒன்றல்ல, பல நோபல் பரிசுகளை ஒருவரே பெறும் பேரறிவுக்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன என்று ஆராய்ந்து, அப்படிப்பட்ட சூழலை உருவாக்க வேண்டும். அத்தகைய சூழலில் மீண்டும் ஒரு கதே தோன்றுவது இயலாததல்ல. அப்போது முழுமையான அறிவுகொண்ட முழுமையானதோர் மனிதன் கதேவைப் போல, வள்ளலாரைப் போல தோன்றலாம்.
2
இத்தகைய ஆய்வுகள் மேட்டுக்குடி மனப்பான்மையை வளர்த்து, வெகு ஜனத்தை ஒதுக்கி வைக்காதா? சாரவியலை, அதன் கருத்து முதல்வாதத் தீமையை மறுத்து இருத்தலியம் எழுந்த பின்னும் இத்தகைய வீர வழிபாடுகள் தேவையா? என்ற பின்நவீனத்துவக் கேள்வி எழுவதைக் கேட்க முடிகிறது.
இந்த ஆய்வு இருத்தலைப் பற்றியதுதான். நீட்சே, கார்ல் ஜாஸ்பர்ஸ் போன்ற இருத்தலியலாளர்கள் போற்றியவர்தான் கதே. வாழ்வை அதன் முழுமையில், ஆழ அகலத்தில், எல்லாப் பக்கங்களிலிருந்தும் வாழ்ந்து விட வேண்டும் என்ற வேணவா உடலின் ஒவ்வொரு ஸெல்லிலிருந்தும் கொழுந்துவிட்டு எரிந்த கதேவை, அவருடைய வாழ்வைப் படம் பிடித்து, முன்மாதிரியாகக் காட்டுவதன் நோக்கமே எல்லா மக்களும் அவ்வாறு முழுமையாக வாழவேண்டும் என்ற இலட்சியமே.
ஓர் எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடித்தால்தான் கோடிக்கணக்கான மக்களின் இல்லங்களில் இருள் விலகி வெளிச்சம் வரும்.
பொதுநலமே, அனைவரின் நலமே முக்கியம் என்ற அடிப்படைக் கொள்கையை எப்படி அரசியல், பொருளாதார சித்தாந்தம் ஆக்குவது என்று, தன் வாழ்நாள் முழுதும் மூன்று கால்கள் மட்டுமே கொண்ட நாற்காலியில் அமர முடியாமல், வறுமையில் வாடி, இரத்தக் கண்ணீரை வடித்தும், அதை இலட்சியம் செய்யாமல் ‘மூலதனத்தை’ எழுதி, வெளியிட்ட கார்ல் மார்க்ஸ் இல்லையென்றால் சமதர்மப் பொருளாதாரம் என்ற புதிய விஞ்ஞானத்தை உலகம் அறிந்திராது.
ஓர் அறிஞனின் இரத்தத்தால் மக்களின் துயரங்கள் கழுவப்படுகின்றன. அவ்வுலக இன்பங்கள் இருக்கட்டும், முதலில் இவ்வுலகைப் பார். இவ் வாழ்வின் துன்பங்களைத் தீர்க்க உன் அறிவையும் முயற்சியையும் பயன்படுத்து. ‘செல்லும் வரை செலுத்துமின் நும் சிந்தையை’, என்று சொன்ன தமிழ்த் திருமூலனின் வாக்கை மெய்ப்பித்தவர்கள் கார்ல் மார்க்ஸூம், கதேவும்.
நீ கடவுளை நம்புகிறாயா? நீ கடவுள் நிலை அடைந்தாயா? என்பதல்ல; உன்னால் எத்தனை உயிர்கள் பயன் பெற்றன என்பதுவே உண்மையான ஆன்மீகத்தின் அளவுகோல். அந்த அளவுகோலின்படி, மார்க்ஸூம் தீர்க்கதரிசியே. அவர் போற்றிய கதேவும் இந்நிலத்தில் ஆன்றோனே.
3
மக்களை வள்ளுவன் அவர்களது அறிவின் தரத்தைக் கொண்டு பிரிக்கிறான். ஐயறிவு கொண்ட விலங்குகளாக வாயுணவால் வாழும் மனிதர்களை ‘மாக்கள்’ (விலங்குகள்) என்கிறான். அறிவை அறிந்த, கல்வி கற்றவர்களை ஆறறிவு கொண்ட ‘மக்கள்’ என்று ஏற்றுக்கொள்கிறான். மக்கள் மத்தியில் வாழ்ந்தாலும், உதாரண புருஷர்களாக அறிவு, ஒழுக்கம், செயல் ஆகியவற்றில் சிறந்தவர்களைச் ‘சான்றோன்’ என்று அழைக்கிறான். இவர்கள் ‘ஏழாவது அறிவு’ கொண்டவர்கள். தன்னை உணர்ந்த ஞானிகளை, மெய்யுணர்ந்து எப்போதும் அம்மெய்ந்நிலையை விட்டு வழுவாதவர்களை ‘ஆன்றோன்’ என்கிறான். இயற்கையை, அதன் விதிகளை அறிந்து, அட்டமா சித்திகளைப் புரிந்து ஆட்டிப் படைக்கும் சித்தர்களை, நுண்மாணில் நுழைந்து, ‘சித்’ ஆற்றலைப் புரிந்து ஆள்பவர்களை ‘வித்தகன்’ என்கிறான். இது ஒன்பதாவது அறிவு நிலை. தன்னை முற்றாக அழித்துக்கொண்டு, ஜீவகாருண்யம் என்ற உயிரிரக்கம் கனிந்து, அருள்மயமாக மாறி, அருளறிவு பெற்று கடவுள்தன்மை என்ற முற்றறிவு பெற்றவர்களை ‘வாலறிவன்’ என்கிறான்.
இம் ‘மேலேறும் வீதி’யே மனித குலம் பயணப்படவேண்டிய பரிணாமப் பாதை. இப்போது மனிதர்களாக ஆறாவது படியில் இருக்கிறோம். ஏழாவது படிக்கு ஏறுவதே வாழ்வின் பொருள். எப்படி ஏறுவது? ஏற்கெனவே ஏறியவர்களைப் பார். அவரது வாழ்க்கையைப் படி. அவரது நூல்களே முதனூல்கள். அவற்றை முதலில் படி.
‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூல்’
என்ற தொல்காப்பியச் சூத்திரமே சரியான வாசகனுக்குச் சரியான வழிகாட்டி.
எத்தனை ஆயிரம் மைல்கள் நடந்தாலும், காரில் எவ்வளவு வேகமாகப் பயணம் செய்தாலும் மண்ணில்தான் இருக்கிறாய். ஆறாவது அறிவு நிலையில்தான் இருக்கிறாய்.
இயற்கையை ஆட்சி செய்யும் சித்தனாக விரும்புகிறாயா? கபாடபுரம் என்ற சிதம்பரத்தை, சிற்சபையை ஜீவகாருண்யம் என்ற திறவுகோலால் திறந்து உள்ளே செல்.
அங்கே பேரருள் ஒளியைக் காண். நீயும் ‘அது’ ஆவாய். ‘வாலறிவு’ அடைவாய் – வள்ளுவனைப்போல், வள்ளலாரைப் போல்.
இந்த ஏணிப்படிகளில் கதே ஏழாவது படியில் நிலைத்து நின்றவர். அவ்வப்போது எட்டாவது படியை அண்ணாந்து தொட்டவர். இது என் மதிப்பீடு.
1 comment
[…] https://tamizhini.in/2018/07/09/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-2/ https://tamizhini.in/2018/08/13/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0… […]
Comments are closed.