திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஓடியதே தெரியவில்லை. அக்காவும் புறப்பட்டுப் போனபிறகு விஜயவாடாவை சுற்றிக்காட்டி னான். சினிமாவுக்குப் போனார்கள். கோயிலுக்குப் போனார்கள். உண்டவல்லி குகைக்கோயிலுக்குக் கூட்டிப் போனான். வெயிலுக்கு இதமாக மூன்றாவது மாடத்தில் அமர்ந்து கிருஷ்ணா நதிக்கரைப் பசும் வயல்வெளிகளையும் தென்னைகளையும் பார்த்தவாறு நாள் முழுக்கப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அன்றைக்குக் காலையில் அலுவலகம் புறப்பட்டபோதே சாந்தி அழத் தொடங்கிவிட்டாள்.

“என்ன தியாகு நீ? மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துட்டுப் போக்கூடாதா?”

“இல்லம்மா. லஞ்ச் டைம் அரைமணி நேரந்தான். வந்துட்டுப் போ முடியாது. சொன்னாப் புரிஞ்சுக்கோ.”

“சரி. நீ  லீவும் போடவேண்டாம். லஞ்சுக்கும் வரவேண்டாம். ஆனா சாயங்காலம் சீக்கிரமா வந்துரு தியாகு. நான் எத்தன நேரந்தான் தனியா வீட்டுக்குள்ளயே உக்காந்திருக்கறது? பக்கத்துல எல்லாம் தெலுங்குக்காரங்க. ஒண்ணுமே புரியலை. எனக்கு ஒருமாதிரியா இருக்கு தியாகு. ப்ளீஸ் வந்துருப்பா” என்று கெஞ்சினாள்.

“சரிம்மா. சீக்கிரமா வந்தர்றேன். பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட அப்பிடியே பேசிப்பழகு. தெலுங்கு கத்துக்க. காரசாரமா சமைக்கவும் கத்துக்க. ஓகே” என்று விடைபெற்றபோது வெறுமனே அவள் தலையாட்டினாள்.

சாயங்காலம் நாலரை மணிக்கே அழைத்து நினைவுபடுத்தினாள். ஆனால் தியாகு வழக்கம்போல வேலையிலேயே கவனமாக இருந்தான். எளிதாக முடிக்கவேண்டிய ஒரு வேலை இழுத்துக் கொண்டே போனது. மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் முட்டிக் கொண்டு நின்றது. திரும்பத் திரும்ப சாந்தி அழைத்தபோதும் அவனால் புறப்பட முடியாமல் போனது.

ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தபோது சாந்தி கதவைத் திறக்கவில்லை.

அழைப்பு மணியைப் பலமுறை அழுத்தியபோதும் உள்ளே யிருந்து பதில் இல்லை. வெளியில் எங்கும் போய்விட்டாளா? வாட்ச்மேன் அவள் கீழே வரவேயில்லை என்று உறுதிப்படுத்தினார். செல்போனில் அழைத்தான். அதற்கும் பதில் இல்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தான். பார்க்கவில்லை என்றார்கள்.

தவித்துப்போனான். மீண்டும் கதவைத் தட்டினான். செல்போனில் அழைத்தான். எதற்கும் பதில் கிடைக்கவில்லை.

ஒருமணி நேரத்தில் பைத்தியமே பிடித்துவிட்டது அவனுக்கு. தலைமுடி கலைந்து சட்டையெல்லாம் வேர்வையில் நனைந்து ஆடிப்போய்விட்டான். ‘வேறு வழியில்லை. கதவை உடைத்து விடலாம்’ என்று தீர்மானித்தான்.

கதவு திறந்தது. தியாகுவால் நம்பவே முடியவில்லை. சட்டென்று உள்ளே நுழைந்தான். இறுகிய முகத்துடன் அவள் சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

“உள்ளதான் இருந்தியா?”

அவள் பதில் சொல்லவில்லை.

“இத்தனை நேரம் கதவைத் தட்டினேனே கேக்கலையா? செல் போன்ல கூப்பிட்டேனே? தூங்கிட்டியா? என்னாச்சு? ஒடம்புக்கும் ஒண்ணுமில்லையே?”

அவன் தவித்துப்போய் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவளிட மிருந்து பதில் வரவில்லை. அப்படியேதான் உட்கார்ந்திருந்தாள்.

வெறித்த பார்வையும் இறுகிய முகமும் அப்போதுதான் அவனுக் குள் பயத்தைத் தந்தது. சொன்னபடி வரவில்லை என்பதால்தான் இந்தக் கோலம் என்று அவனுக்குத் தாமதமாகத்தான் உறைத்தது.

“சாரிம்மா. முக்கியமான வேலை. கௌம்ப முடியலை” என்றவன் தொடர்ந்து “அதுக்காக இப்பிடி ஒருமணி நேரமா என்னை தவிக்கவெச்சுட்டியே! என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்” என்று அவள் கையைப் பிடித்தான்.

கையை உதறினாள். எழுந்தாள். அவன் தோளை அழுத்தமாகப் பற்றினாள். “இங்க பாரு. சொன்னா சொன்னபடி செய்யணும். இனியொரு தடவை இப்பிடிச் செஞ்சியா அப்பறம் வெளியிலதான் நிக்கணும்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.

அலுவலகத்தில் அரையாண்டுக் கணக்குகளை முடிக்கவேண்டிய அவசரம். மாலை நான்கு மணிக்கே போனில் அழைத்து வரத் தாமத மாகும் என்று சொல்லியிருந்தான். மறுமுனையில் பதில் ஏதும் இல்லை. வேலை அவசரம். நெருக்கடி. இரவு பத்து மணியாகி விட்டது.

கதவைத் திறக்கும்போதே தூக்கக் கலக்கத்தில் இருந்தாள் சாந்தி. “சாப்ட்டியா?” என்றபடியே சட்டையைக் கழற்றினான்.

“நீ வருவேன்னுதான் வெயிட் பண்றேன். நீ சாப்ட்டியா?”

தியாகுவுக்கு பகீரென்றது. வேலை மும்முரத்தில் சாப்பாடு வேண்டாம் என்பதைச் சொல்ல மறந்திருந்தான்.

“என்னம்மா இது? இவ்ளோ நேரமாவா சாப்டாம இருப்பே? ஆபிஸ்ல லேட்டாயிருச்சுன்னு டிபன் வாங்கிட்டு வந்தாங்க. அங்கயே சாப்ட்டுட்டேன்.”

சாந்தி அவனை முறைத்தாள். “தினமும் ராத்திரி ரெண்டு பேருந்தானே சாப்டுவோம். இன்னிக்கு என்ன புதுசா கேக்கற? அங்க சாப்டும்போது நெனப்பே வர்லியா?” என்றபடியே சாப்பிடத் தொடங்கிவிட்டாள்.

“வேலை அவசரம். டென்ஷன். மறந்திருச்சு. சாரிம்மா” என்று குளியலறைக்குள் போனான்.

உடம்பு கொதித்துப்போயிருந்தது. நாள் முழுக்க வேலையில் ஆழ்ந்திருந்த களைப்பு தீரக் குளித்தான். தலையைத் துவட்டியபடியே பாத்ரூம் கதவைத் திறந்தான். விலகவில்லை. இழுத்தான். திறக்க வில்லை. எங்காவது சிக்கிக்கொண்டதோ என்று நெம்பிப் பார்த்தான். இறுக்கமாக நின்றது. ஒருகணம் நிதானித்தான். கதவைத் தட்டினான். “சாந்தி, இத பாரு. கதவு தெறக்க மாட்டேங்குது. என்னன்னு பாரு” என்று குரல் கொடுத்தான்.

பதிலே இல்லை. மீண்டும் கதவைத் தட்டினான். சத்தம் போட்டான். அவள் வரவேயில்லை.

கதவு வெளியிலிருந்து தாழ்ப்பாள் இடப்பட்டிருந்தது.

வெகுநேரம் அவன் கதவைத் தட்டியபடியே இருந்தான். “சாந்தி, கதவத் தெற. வெளையாடதே. எதுன்னாலும் வெளில வந்து பேசிக்க லாம். இங்க நிக்க முடியல. ரொம்ப வேகுது. ப்ளீஸ் கதவத் தெறம்மா…” தொடர்ந்து அவன் சத்தம் போட்டுக்கொண்டே யிருந்தான். மீண்டும் மீண்டும் கதவைத் தட்டினான்.

நிற்க முடியாது அப்படியே கம்மோடின்மீது உட்கார்ந்தான். வேர்த்துக்கொட்டியது. படபடத்தது. திறக்கமாட்டாளா என்று காத்திருந்தான். அடைபட்ட கழிவறையின் வெம்பலான காற்று  மூச்சுத் திணறச் செய்தது. தலைவலி. படபடப்பு. நம்பிக்கையுடன் கதவைத் தட்டும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. தண்ணீரை இறைத்து முகம் கழுவினான். தூக்கமும் உடல்வலியும் அங்கும் இங்கும் நகர முடியாத அசதியுமாய் களைத்துப் போனான். கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்த கணத்தில் கதவை உதைத்தான். பலனேதுமில்லை. சுவரையொட்டி தரையில் சரிந்து உட்கார்ந்தவன் சோர்வுடன் கண்களை மூடினான்.

மறுநாள் அதிகாலையில் தாழ்ப்பாளை நீக்கும் சத்தம் கேட்டு எழுந்தான். கதவை இழுத்தான். திறந்துகொண்டது.

வெளியே வந்து நின்றான். ஏசி காற்று உடம்பைத் தழுவியது. இடுப்பில் கைவைத்து முதுகை வளைத்தான்.

சாந்தியை நிமிர்ந்து பார்த்தான். ஆத்திரம் பொங்கிற்று. இரவு முழுக்க அடக்கி வைத்திருந்த கோபம் மொத்தத்தையும் அவள் மீது இறக்கிவிடவேண்டும் என்ற ஆவேசம். முறைத்தான்.

அவள் அசரவில்லை. “இனிமே வெளில சாப்ட்டுட்டு வந்தா இதான். புரிஞ்சுக்க’‘ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

ஆயாசத்துடன் படுக்கையில் விழுந்தவன் அன்று முழுவதும் எழுந்திருக்கவே இல்லை.

தொட்டிலில் கிடந்த மீரா சிணுங்கினாள். தியாகு புரண்டு படுத்தான். குழந்தையின் சிணுங்கல் மெல்ல வலுத்தது. தலைதூக்கிப் பார்த்தான். கால்களை உதைத்தபடி அழுதாள். சாந்தியைத் தட்டி எழுப்பினான்.

“பாப்பா அழறா…”

கண்களைக் கசக்கியபடியே திரும்பிப் படுத்தாள்.

குழந்தை வீறிட்டாள். தியாகு எழுந்து தொட்டிலருகே வந்தான். மூத்திரம் போயிருந்தாள்.

“யூரின் போயிட்டா. துணிய மாத்திர்லாமா?”

சாந்தியிடமிருந்து பதிலே இல்லை. குழந்தையைத் தொட்டிலி லிருந்து எடுத்தான். மடிமீது இருத்தி துணியைக் கழற்றிவிட்டு டவலால் துடைத்தான். அருகிலிருந்த கூடையிலிருந்து மாற்றுத் துணியை எடுத்து அணிவித்தான். முகம் பார்த்த மீரா உதடுகளைப் பிதுக்கியது. மெல்ல விசும்பியது. தொடையை அசைத்தபடியே ‘ஜோ ஜோ’ என்று சமாதானப்படுத்த முற்பட்டான்.

அழுகை வலுத்தது.

“பசிக்குது போலிருக்கு சாந்தி. கொஞ்சம் எழுந்திரேன். எவ்ளோ நேரமா அழுதிட்டு இருக்கா” தியாகு அவள் இடையைத் தொட்டு அசைத்தான்.

சரேலெனத் திரும்பினாள். “அதான் நாள் முழுக்கப் பாத்துக்கறே னில்ல. இப்ப நீ பாத்துக்க. பசிச்சா பால் கலந்து குடு. என்னையே போட்டுத் தொல்ல பண்றே?” என்று கத்தினாள். மீராவின் அழுகை சட்டென்று நின்றது.

தோளில் போட்டபடியே சமையலறைக்குள் சென்றான். பிளாஸ்க்கிலிருந்து வெந்நீரை ஊற்றி பால்பவுடரையும் சர்க்கரையும் சேர்த்துப் பால் கலந்தான்.

பாட்டில் நிப்பிளைச் சப்பியபடியே மீரா கண் மூடினாள். தொட்டி லில் போட்டுவிட்டு மணி பார்த்தான் தியாகு. மூன்றரை ஆகியிருந்தது.

மீராவுக்கு அப்போது ஒன்றரை வயது. அதே மே ஃபிளவர் அடுக்கக வீட்டில்தான் இருந்தனர். கையில் கிடைக்கும் அத்தனையும் வாயில் போடுவதற்குத்தான் என்கிற குழந்தைகளின் பொதுவான போக்கை மீராவும் தவறாது கடைப்பிடித்தாள். வாயில் ஜொள் ஒழுக எதையாவது அதக்கிக் கொண்டேதான் இருப்பாள். அவள் அமைதி யாக இருக்கிறாள் என்றால் வாய்க்குள் என்னவோ இருக்கிறது என்று சந்தேகப்பட வேண்டும். அடிக்கடி பேதியானது. வயிறு வலித்தது. சாந்திக்குப் பொறுமையில்லை. அலுத்துக்கொண்டாள்.

அலுவலகத்திலிருந்து திரும்பியபோது வீடு திறந்துகிடக்க மீரா அழுது கொண்டிருந்தாள். சாந்தியைக் காணவில்லை. அழுதுகொண் டிருந்தவளைத் தூக்கிக் கொஞ்சி சமாதானப்படுத்தியபடியே அவளைத் தேடினான். செல்போன் மேசையிலேயே கிடந்தது. வெந் நீர் போட்டு பால்பவுடரை கலந்து புட்டியில் ஊற்றி குழந்தைக்குப் புகட்டிக் கொண்டிருந்தபோது ‘அடடா… குட்டிக்கு அதுக்குள்ள பசிச்சிருச்சா?” என்றபடியே உள்ளே வந்தாள்.

“எங்கம்மா போயிருந்தே?” சாதாரணமாகத்தான் அவன் கேட்டான்.

“எங்க போனேனா? இதென்ன கேள்வி? இங்கதான் பக்கத்துல வண்டி கத்துக்கலாம்னு டிரைவிங் ஸ்கூல்ல சொல்லிருந்தேன். அந்தம்மா கீழே வந்திருந்தாங்க. போய்ப் பாத்துட்டு வந்தர்லாம்னு போனேன். அதுக்குள்ள இது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடுச்சு.”

“அழற சத்தத்தைக் கேட்டுட்டுத்தான் நீ பேசிட்டு இருந்தே இல்ல?” அவனுக்கு கோபம் வந்திருந்தது.

“எப்ப அழலை இது? அழறான்னு பாத்தா நான் ஒண்ணுமே பண்ண முடியாது.”

பால் புட்டியை சப்பியபடியே மீரா தூங்கிப் போயிருந்தாள். மெல்ல புட்டியை விலக்கி எடுத்துக்கொண்டு எழுந்தவன் “இப்ப நீ வண்டி ஓட்டலேன்னு யார் கேட்டா?” என்றான்.

“ஏன்? நான் வண்டி ஓட்டக்கூடாதா?” அவள் அவனெதிரில் நின்றபடியே கேட்டாள்.

“ஓட்டு. ஆனா இப்ப வேண்டாம்.” பால்புட்டியை கழுவிக் கவிழ்த்தான்.

“ஏன் வேண்டாம்? நீயும் ஆபிஸ்லேர்ந்து வந்து எங்கயும் கூட்டிட்டுப் போ மாட்டே. நான் இந்த நாலு செவுத்துக்குள்ளயே அடஞ்சு கெடக்கணுமா? முடியாது. நாளைலேர்ந்து நான் போகத்தான் போறேன். நீ சீக்கிரமா வந்து குழந்தையப் பாத்துக்க” என்றாள் கறாராக.

அவனுக்கு கோபம் தலைக்கேறியிருந்தது. குழந்தையின் அழுகை யும் அவளது அசிரத்தையும் அவனுக்குக் கொதிப்பேற்றியிருந்தது.

“என்ன நீ… நான் சொல்லிட்டே இருக்கேன். காதுலயே வாங்காம பதில் பேசிட்டே போறே?” என்று கையை ஓங்கினான்.

சட்டென அவன் கையைப் பற்றினாள். ஒருகணம் திடுக்கிட்டான். மணிக்கட்டைப் பற்றியிருந்த அவளது பிடி மெல்ல இறுகியது. ஆவேசத்துடன் முறைத்தாள்.

“அடிச்சிருவியா நீ? அடிச்சுப் பாரு.” அவன் கையை உதறினாள். மணிக்கட்டு வலித்தது.

“என்னடி பண்ணுவே? சொல்பேச்சு கேக்கலேன்னா அடிதான்“ எச்சரிப்பதுபோல விரலை நீட்டிக் கத்தினான்.

சட்டென்று அவன் கையைப்பற்றி முறுக்கினாள். அவன் எதிர்பார்க்கவில்லை. முதுகுப்புறமாய் கையை மடக்கி நிறுத்தியவள் அவன் முதுகில் சாத்தினாள். பளாரென்ற வலியுடன் அடி இறங்கியது.

“பொம்பளதானே. கையை ஓங்கலாம்னு நெனப்பு. ஒழுங்கா இரு. என்ன?” என்றபடியே கையை விடுவித்தாள். முதுகில் அடி விழுந்த இடம் எரிந்தது. கையில் வலி தெறித்தது.

அந்த முதல்அடியை யோசித்தபோது இப்போதும் முதுகில் எரிந்தது. தியாகு அவளைப் பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக் கொண்டான்.

அவனது ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொருவிதமான தண்டனை. தியாகுவுக்கே சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும். உட்கார்ந்து யோசிப்பாளா? சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பெரிய தண்டனைகள் – சமையலில் உப்பு சேர்க்கமாட்டாள். அலுவலகத்தில் மதியம் சாப்பாட்டு டப்பாவைத் திறக்கும்போதுதான் தெரியும், முந்தைய நாள் சாப்பாட்டை அப்படியே போட்டு அனுப்பி யிருப்பாள். உடைகளைத் துவைக்கமாட்டாள். செல்போனை எடுத்து ஒளித்து வைத்துவிடுவாள். சமயங்களில் செல்போனின் சிம்கார்டையோ பேட்டரியையோ கழற்றி கண்ணுக்குத் தெரியாத இடத்தில் எறிந்துவிடுவாள். எத்தனை விதமான அவஸ்தைகள்? எத்தனை வலிகள்?

ஆனாலும் பொறுமையாகத்தான் இருந்தான். புரியவைக்க முயன்றான். அவள் அனுசரிக்காதபோது அடங்கித்தான் போனான்.

இரண்டு அழகழகான குழந்தைகள். பெண் குழந்தைகள். என்ன செய்யமுடியும்? அவன் விட்டுக்கொடுத்தபடியே இருந்தான். இருக்கிறான்.

__________

கொஞ்சநாள் அப்பாவிடம் போய் இருந்தால் தேவலையாக இருக்கும். அம்மா இல்லாத அந்த வீட்டை யோசித்துப் பார்க்க முடியாதுதான். ஆனாலும் சென்னிமலையில் இருப்பதே நிச்சயம் ஆசுவாசம் தரும். தெம்பளிக்கும். கொஞ்சம் தேறமுடியும். ஆனால் இவள் அனுமதிக்க வேண்டுமே?

தொடக்கத்திலேயே அவளை சரிக்கட்டியிருக்க வேண்டும். இத்தனை தூரம் விட்டிருக்கக்கூடாது. விஜயவாடாவில் தொடங்கிய போதே எதிர்த்து நின்றிருக்கவேண்டும். மொழி தெரியாத ஊர். என்னை நம்பி வந்திருக்கிறாள். பெற்றோரை எதிர்த்து எனக்காகப் புறப்பட்டு வந்தவள் என்று இரக்கப்பட்டது தவறாகப் போய் விட்டது. குழந்தைகள் பிறந்த பிறகு மிரட்டுவதற்கு இன்னும் ஒரு ஆயுதம் அவளுக்கு கைவசமாகிவிட்டது.

ஆத்திரம் வந்துவிட்டது என்றால் எதையும் யோசிக்காமல் என்ன வேண்டுமானால் செய்வாள் என்பதை ராஜமுந்திரியில்தான் அவன் அறிந்துகொண்டான்.

மீராவை யு.கே.ஜியில் சேர்த்தாயிற்று. மீனாவுக்கு இன்னும் ஒருவருடம் முடிந்திருக்கவில்லை. சியாமளாம்பாள் கோவிலுக்குப் பின்னால் பழைய அசோகா தியேட்டரை இடித்துக் கட்டியிருந்த அடுக்ககத்தில்தான் வீடு. இரண்டாவது தளம். விசாலமான பால்கனி. அங்கிருந்து பார்க்கும்போது கோதாவரியின் மீது கட்டியிருக்கும் வளைமுகடுகளைக் கொண்ட புதிய பாலம் பிரமாதமாகத் தெரியும். சினிமா கொட்டகைகளுக்குப் பேர்போன ராஜமுந்திரிதான் தமிழின் பிரபல நடிகைகள் பலருக்கும் பூர்விகம் என்பது சாந்திக்கு ஆச்சரிய மாய் இருந்தது.

ராஜமுந்திரியில் ஆவக்காய் ஊறுகாயைப்போலவே கோதாவரி யில் செல்லும் படகுப் பயணங்களும் பிரபலம். சனிக்கிழமையன்று குழந்தைகளுடன் அவளையும் அழைத்துச் சென்றான். காலையில் புறப்பட்டுச் சென்று பத்ராச்சலத்தில் இரவு தங்கி மறுநாள் ஊர் திரும்பு வதுபோல பயணத்திட்டம். அக்டோபர் மாதத்தின் இறுதிவாரம். கோதாவரி பெருக்கெடுத்தோடியது. கூரையுடனான மேல்தளத்துடன் பெரிய படகு. சாந்தி நாற்காலியில் உட்காரவேயில்லை. உற்சாகத்தில் துள்ளிக்கொண்டிருந்தாள். பிரமாண்டமான நதியும் கரையும் கரை யோரத்து கிராமங்களும் நெடிதுயர்ந்த மலைகளும் அவளைப் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தன. தியாகுவின் மடியில் கிடந்தாள் மீனா. வெயிலேறிய பிறகு மீரா களைத்துப் போய்விட்டாள்.

வழியில் பட்டிசீமாவில் காலை உணவுக்காகப் படகு நிறுத்தப் பட்டது. சிலர் ஆற்று நீரில் இறங்கிக் குளித்தார்கள்.

“தியாகு நானும் குளிக்கப்போறேன். கொழந்தையப் புடிச்சுக்கோ” என்றாள் சாந்தி. தலைமுடியை அள்ளி முடிந்தாள். துப்பட்டாவை இழுத்துச் செருகினாள்.

“எதுக்கும்மா. வேணாம். சாயங்காலம்னாலும் பரவால்லே. இப்பப் போயி தண்ணில எறங்கிட்டு… கொழந்தைய வெச்சுட்டு எதுக்கு?”

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. நீ இப்பிடியே நெழல்லே நில்லு” என்று அவள் மணலில் நடந்தாள்.

“சொல்றதக் கேளு சாந்தி. வேண்டாங்கறேன்ல” என்று தியாகு உரத்த குரலில் சொன்னதும் சரேலெனத் திரும்பினாள். அவனருகில் வேகமாக வந்தாள்.

“எதுக்கிப்ப கத்தறே?”

“நீ இப்ப தண்ணில எறங்க வேண்டான்னு சொன்னேன்.”

“அப்பிடித்தான் எறங்குவேன். என்ன பண்ணுவே?”

அவளது பார்வையைக் கண்டு தியாகுவுக்கு எரிச்சல் தலை தூக்கியது. குழந்தையைத் தோளில் சாய்த்தபடியே அவள் கைகளைப் பற்றினான். “ஒண்ணும் பண்ணவேண்டாம். நீ போவேண்டாம் வா” என்றபடியே இழுத்தான்.

சட்டென்று கையை உதறியவள் அவன் கன்னத்தில் சாத்தினாள். சுரீரென்றது.

மீரா பயந்து விலகினாள். மிரண்டு அழுதாள். தியாகு அதிர்ந்து போய் நகர்ந்து மீனாவை இறுகப் பற்றினான். சாந்தியின் ஆக்ரோஷம் அவனைத் திடுக்கிடச் செய்தது.

“உனக்கு வேண்டான்னா பேசாம இரு. என்னைய எதுக்கு வேணாங்கற? நா போவேன். குளிச்சுட்டுத்தான் வருவேன். சரியா? மெரட்டற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே” என்றவள் துப்பட்டாவை இழுத்துக் கட்டிக்கொண்டு ஆற்றை நோக்கி நடந்தாள்.

காலை உணவை முடித்துக்கொண்டு படகு புறப்பட்ட பின்னும் தியாகுவால் சுதாரித்துக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் அவனையே வேடிக்கை பார்ப்பதுபோல இருந்தது. மீரா கண்ணீ ருடன் ஆற்றுநீரை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். தலையை உலர்த்தியபடியே படகின் ஓரத்தில் நின்றிருந்த சாந்தி அடிக்கடி அவனிடம் திரும்பி ”அதப் பாரேன் தியாகு. மலைமேல இருந்து தண்ணி வழியறது தெரியுது. சூப்பரில்ல” என்று குதூகலித்துக் கொண்டிருந்தாள்.

படகின் அடித்தளத்தில் ஸ்பீக்கர்களின் அலறல். தெலுங்குப் பாடல்களின் பெருத்த சத்தம். கல்லூரிக் கூட்டம் தலைவிரி கோலத்துடன் ஆட்டம் போட்டது.

பப்பிகொண்டலுவில் இரு மலைகளை ஊடறுத்துப் பாய்ந்தது கோதாவரி. அகன்ற நீர்ச்சாலையில் மிதந்து சென்றது படகு. யாரும் பேசவில்லை. சத்தம் போடவில்லை. பேரியற்கையின் முன் மனிதன் எத்தனை சிறியவன் என்பதை மௌனமாக ஒப்புக்கொண்டவர்கள் போல் அமைதியாய் நின்றார்கள். மரங்கள் செறிந்த காடுகள். காடு களைத் தாங்கி நிற்கும் மலைகள். மேவியும் தணிந்தும் மலைத் தொடர்கள்.  கலைந்து அலையும் தூயவெண்மேகங்கள். மந்தமான வெயில். கண்ணுக்கு இதமான நீலவானம். இஞ்சின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. கரையோரங்களில் மண்ணை இழந்து வேர்களை வெளிக்காட்டி நின்றன மரங்கள். சிதைந்த படகுகளுடன் உடைபட்ட மேடைகளுடன் படகுத்துறைகள் தென்பட்டன. கோதாவரியின் சீற்றம் விளைத்த சேதங்கள் அச்சம் தந்தன. கட்டுக்குள் இருக்கும் வரையில் கங்கையும் கோதையும் அழகுதான், பெண் களைப்போல.

பயணம் முழுக்க தியாகுவின் மனத்தில் சாந்தியின் உள்ளங்கை ஏற்படுத்திய வலி தொடர்ந்திருந்தது.

அன்று திங்கட்கிழமை. மீராவைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வந்தபோது, சாந்தி புறப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“எங்க கௌம்பிட்டே?”

“ம். உங்கிட்ட சொல்லலையா? இங்க ஒரு எடத்துல லெதர் பேக்கெல்லாம் சீப்பா போட்டிருக்காங்களாம். இப்பத்தான் பேப்பர்ல பாத்தேன். நேர்ல போய் பாத்துட்டு வந்தர்றேன்.“

“லெதர் பேக்கா? அதுக்கு இப்ப காலங்காத்தாலே கௌம் பணுமா? கொழந்தைய யார் பாத்துக்கறது?”

சட்டெனத் திரும்பிச் சிரித்தாள்.

“ஏன் நீ பாத்துக்கயேன். ஆபிசுக்கு ஒரு நாள் லீவு போட்டா ஒண்ணும் குடி முழுகிடாது. சரியா. நானே சொல்லணும்னு நெனச்சேன். நல்லவேளை. நீயே ஞாபகப்படுத்திட்டே.”

அவள் விளையாட்டாகச் சொல்லவில்லை என்று தெரிந்ததும் சினம் மூண்டது. எத்தனை அலட்சியம்! எத்தனை கேலி! என்னைப் பார்த்தால் இளிச்சவாயன் போலத் தெரிகிறதா? சரசரவென்று உடல் கொதித்தது. ஆத்திரம் எகிறியது. அருகில் சென்று அவள் தோளைப் பற்றித் திருப்பினான். அவளுக்கு வலித்திருக்கவேண்டும். சீற்றத் துடன் திரும்பியவள் நொடிப்பொழுதில் தன் கையிலிருந்த அயர்ன் பாக்ஸை அப்படியே திருப்பினாள். தோளைப் பற்றியிருந்த அவனது கையில் அழுத்தினாள். சூடான அடிப்பாகம் அவன் சருமத்தில் ஒட்டிக் கொண்டது. மயிர் கருகும் வாடையுடன் தோல் பொசுங்கியது. ஒரு நொடிக்குப் பிறகே சூடு உறைத்தது. கையை உதறினான். சமைய லறைக்கு ஓடினான். குழாயைத் திறந்து தண்ணீரில் கையைக் காட்டி நின்றான்.

அவள் நிதானமாக உள்ளே வந்து எட்டிப் பார்த்தாள். எரிச்சலுடன் தண்ணீரில் கைகாட்டி நிற்கும் அவனை முறைத்தாள்.

“உனக்கென்ன இத்தன கோவம் வருது? நா பாட்டுக்கு சொல்லிட்டுத்தானே இருந்தேன். நீ அடிக்க வரே. மறந்துருச்சா?” என்றவளைப் பார்க்கவே அஞ்சினான் தியாகு.

அயர்ன் பாக்ஸ் கையில் ஏற்படுத்திய தழும்பு இப்போதும் அவனது வலதுகையில் அப்படியே இருக்கிறது. கையைத் திருப்பிப் தழும்பைப் பார்த்தவன் செந்திலை வரச் சொல்லிப் பேசிப் பார்க்கலாம் என்று தீர்மானித்தான். கோபம் தலைக்கேறிய நொடியில் கையில் இருப்பதைக்கொண்டு தாக்கிவிடுகிறாள்.

வெண்டைக்காய் நறுக்கித்தர அழைத்தபோது அவன் காதில் போட்டுக்கொள்ளாமல் படித்துக்கொண்டிருந்த தவறுக்காக இதோ காலை ஒடித்துக் கட்டிலில் கிடத்தியிருக்கிறாள். காலையில் குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுப்பில் அப்படியே கட்டிலில் கால்நீட்டிப் படுத்தபடி செய்தித்தாளைப் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் சமையல் அறையிலிருந்து வேகமாக வந்தாள். “அங்கிருந்து கத்திட்டே இருக்கேன்… கால்மேல கால் போட்டுட்டு பேப்பர் படிக்கிறியா நீ?” என்று கோபத்துடன் கேட்டபடியே கையை ஓங்கியபோதுதான் விபரீதம் புரிந்தது. ஓங்கிய கையில் இருந்த நீண்ட இரும்புக்குழாயைக் கவனித்து இழுத்துக்கொள்வதற்குள் இடது காலில் அடிவிழுந்துவிட்டது.

சிகிச்சைக்காக ஒரே மருத்துவரிடம் செல்வதிலும் அசௌகரியம். எத்தனை நாட்கள் என்னென்ன பொய்களைச் சொல்லமுடியும்? வழுக்கிவிழுந்ததாய் ஒருவரிடம், வண்டியிலிருந்து விழுந்ததாய் இன்னொருவரிடம். எலும்புகள் இருக்கும்வரை இப்படி ஒடிந்து கொண்டே இருக்குமென்றால் வேறென்ன செய்ய என்று யோசித்த போது தியாகு முழித்தான்.

2 comments

Comments are closed.