பியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற இளம் விலைபெண்ணிடம் காதலில் வீழ்ந்தவன், தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்திட்டங்களை ரத்துசெய்தான். அவர்கள் இரண்டு தினங்களை, பெரும்பாலும் பியர்டின் விடுதி அறையிலேயே ஒன்றாகக் கழித்தனர். பகலிலும் இரவிலும் சாப்பிடுவதற்காக மட்டும் அவளை உணவகங்களுக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம்நாள் இங்கர் தனக்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக பியர்டிடம் கூறினாள். பியர்டு வருவதற்கு முன்பு அவளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. இப்போது பியர்டு மட்டுமே இருக்கிறான். இந்நகரம் அதன் தேவாலயத்திற்காகவும் மிருககாட்சி சாலைக்காகவும் பெயர் பெற்றது என்பதை அவனுக்கு நினைவூட்டியவள் “நீ சென்று பார்! அங்கெல்லாம் காண்பதற்கு இங்கரைவிடவும் நிறைய உள்ளது” என்றாள். தவிரவும் அவளுக்கு செய்து முடிக்கப்பட வேண்டிய வீட்டுக்காரியங்கள் காத்திருந்தன. பல் வைத்தியரின் சந்திப்பு ஒன்றையும் கூடவே உள்ளூர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் காகித மறுவடிவமைப்பு வகுப்புகளையும் அவள் தவறவிட்டிருந்தாள்.
அவள் வகுப்புகளைப் பற்றி குறிப்பிட்டபோது, அதுபற்றி அக்கறை காட்டவும் காகித மறுவடிவமைப்பு பற்றி கேட்கவும் பியர்டு எண்ணினான். ஆயினும் ஆர்வமில்லாததால் அதைச் செய்யவில்லை. ‘நீ மேலும் சில வகுப்புகளை தவற விட வேண்டியிருக்கும்’ என்றான். அவன் குரல் சிடுசிடுப்பாயிருந்தது. அதற்காக வருந்தினான். ஆனால், அவள் தனது உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதால் இது ஒன்றும் தவறில்லை எனச் சமாதானப்படுத்திக்கொண்டான். இங்கருக்காக அவன் நிறைய பணம் செலவழித்திருக்கின்றான். மேலதிக கவனிப்பிற்கு அவன் உரிமையுள்ளவன். அவன் அவளுக்கு உரியவனல்ல என்றாலும், அவளுக்காகத் தனது பயணத் திட்டங்களை ரத்து செய்திருக்கின்றான். தவிரவும் அவன் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறவனும் அல்ல. அவள் தேவாலயம், மிருககாட்சிசாலை குறித்து அவனிடம் பேசியிருக்கக்கூடாது. சான்பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் அவனுடைய முகவர் தந்திருக்கும் பயணக் குறிப்பேட்டிலேயே இதுபோன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் பயணவழிகாட்டி நூல் ஒன்றும் அவனிடமிருந்தது.
உண்மையில் பியர்டு, பல இடங்களைச் சென்று பார்க்கவேண்டும் என்றே திட்டமிட்டிருந்தான். ஆனால், அவன் விடுதியறைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. யாராவது ஏவலாளோ, அறை கூட்டும் பணிப்பெண்ணாகவோ இருக்கவேண்டும் என்று எண்ணியவன் ஒரு இளம்பெண் நிற்பதைக் கண்டான். மன்னிப்புக் கோரும் பாவனையோடு வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவள் காட்சியளித்தாள். தான் தவறான அறைக்கு வந்துவிட்டதாகக் கூறினாள். பியர்டு ஏமாற்றமடையவில்லை அவளால் கவரப்பட்டவனாக உள்ளே வருமாறு அழைத்தான்.
இப்போது மூன்றாவது நாள் மாலையில் பியர்டு சொன்னான் “உன்னுடைய வீட்டுக்காரியங்கள், வகுப்புகள் குறித்தெல்லாம் நான் எதுவும் கேட்க விரும்பவில்லை”. அவன் அவளுக்கு இரு மடங்கு பணம் தருவான்.
பியர்டு அப்படியொன்றும் செல்வந்தனில்லை. அவனுக்கு முன்னோர் வழியில் கிடைத்த கொஞ்சம் பணம் இருந்தது. அவனுடைய விவாகரத்து ஒப்பந்தத்தில் நீதிமன்றம் அந்தப் பணத்திற்கு விலக்கு அளித்திருந்தது. அந்தப் பணம் அவனுக்கு ஆடம்பரமாக அள்ளி இறைக்கப் போதாது என்றாலும் தாராளமாக செலவழிக்கப் போதுமானதாகயிருந்தது. அவன் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, பயணமுகவரிடம் சென்றான். அந்தப் பயணம் அதிக செலவு பிடித்தது என்றாலும் இங்கரை சந்திக்கவும், அவள் மீது காதல்வயப்படவும் முடிந்தது என்பதால், தான் செலவளித்த பணத்திற்குரிய பெறுமதியை அடைந்ததாகவே கருதியிருந்தான். “நான் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை தயவுசெய்து நீ சொல்லாதே. மேலும் இது பணம் சம்மந்தப்பட்ட விவகாரம் அல்ல” என்று அவள் சொல்லும் வரையிலும் அதை நம்பவும் செய்தான்.
இங்கர் இன்னும் இளமையாக இருந்தபோதும், முழுவதும் தன் தொழில் சார்ந்தவளாக மாறியிராதபோதும் கூட, அவள் சொன்ன அந்தக் கூற்று அவளுடைய தொழிலுக்குப் பொருந்தாத ஒன்றேயாகும். அதுவும் “செய்ய வேண்டும்” என்ற பதத்தை பியர்டு உச்சரிப்பது போலவே அவளும் சொன்னவிதம் உறுத்தியது. அவளுடைய அந்த நகல் பாவனையில் ஒருவகை எதிர்ப்பை அவன் உணர்ந்தான். அவளிடம் சரி செய்ய முடியாத அளவிற்கான ஒவ்வாமை உணர்வை கிளர்த்தி விட்டோமோ என்று அஞ்சியவன் அவளைக் குறைவாக எடை போட்டுவிட்டோமோ எனவும் ஐயுற்றான்.
அவன் தன்னியல்பாகத் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினான். உளப்பூர்வமாக நடந்து கொண்டான் என்றாலும் அவளை ஏதோ வகையில் புண்படுத்தி விட்டிருக்கிறான். அதற்கு அவளுடைய எதிர்வினையோ நியாயமில்லாதது. தான் தவறாக என்ன சொன்னோம் என்பது கூட அவனுக்குத் தெரியாது. அதை விடவும் மோசம், விவகரத்தான மனைவியிடம் இருந்தது போன்ற அதே மாதிரியான உறவை இங்கரிடமும் உருவாக்கிக் கொண்டு விட்டோமோ என்றும் அஞ்சினான். இருபத்தைந்து வருடத் திருமண வாழ்க்கையில் அவனுடைய வெகுசாதாரணமான உப்புசப்பற்ற கூற்றுகளுக்காக அவனது மனைவி பலமுறை எதிர்பாராத வகையில் மனக்கொந்தளிப்படைந்து சண்டையிட்டிருக்கிறாள். அவளை ஆத்திரமடையச் செய்யுமளவிற்கு அப்படி என்ன சொல்லிவிட்டோம் என்பதை பியர்டால் ஒருபோதும் ஊகிக்க முடிந்ததில்லை. இப்போது வேறுநாட்டில், வேறொரு பெண்ணோடு அதுவும் ஒரு விலைபெண்ணுடன் காதல் வயப்பட்ட நிலையில், தான் விவாகரத்து பெறக் காரணமான அதே துன்பங்களினால் பீடிக்கப்படிருந்தான்.
பல விஷயங்களும் மாறுதலடைகின்றன என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவை மாறவேயில்லை.
பியர்டின் திருமணம் குறித்து இங்கருக்கு எதுவும் தெரியாது. ஆனால் சிலபோது மிகவும் ஈடுபாடு கொண்டுவிடும் ஒரு வாடிக்கையாளரை, ஒருத்தி பிரிந்து வருவது மிகவும் கடினமான காரியம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். பியர்டு அவளுக்கு ஐந்தாவது வாடிக்கையாளன் தான். அவளே எதிர்பாராத அளவிற்கு பியர்டு அவளால் பாதிக்கப்பட்டிருந்தான். அதுதான் அவளை தொந்தரவு செய்தது. அவன் மதியிழந்தவன் போல நடந்துகொண்டான். கூட்டமாக இருந்த உணவகத்தில் “இரு மடங்கு பணம் தருவேன்” என சத்தமிட்டவன் மேசையில் ஓங்கித் தட்டினான். எவ்வளவு தர்மசங்கடம்? உணவகப் பணியாள் என்ன நினைப்பான்? அவள் சற்றே பயந்து போனாள். “நீ மிகவும் இனிமையானவன். தாரளமானவனும் கூட. இந்த ஜெர்மனியில் பல பெண்கள் சும்மாவே உன் வசமாவார்கள்” என்றாள்.
“நான் உனக்காக செலவழிக்கவே விரும்புகிறேன். உனக்கு அது புரியவில்லையா?”
அவள் புரிந்துகொண்டாள். ஆனால் திகைப்புற்றவளாக கண்டிப்பானத் தோரணையில் வேண்டாம் எனத் தலையசைத்தாள். “நீ ஆடம்பரமாக செலவழிப்பவன் எனப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே நடந்து கொண்டால் சீக்கிரமாகவே சீரழிந்து போய்விடுவேன். என் வாழ்க்கை ஒழுங்கற்றதாகி விடும். எனக்கு மகிழ்ச்சியை அளித்து வரும் என்னுடைய குரங்கிற்கு உணவுக்குப் பதிலாக மிச்சம் மீதியை கொடுக்க வேண்டியிருக்கும். பிறகு நான் உணவுமேசையில் அமரும் ஒவ்வொரு முறையும் அது என்னிடம் கெஞ்சத் தொடங்கும். அது அதற்கும், எனக்கும் நல்லதல்ல”
“நான் உன்னுடைய குரங்கு அல்ல”
“நீ அதைவிடவும் சிக்கலானவன் என்று நினைத்துக் கொள்கிறாய்”
சிரிக்கத் தொடங்கியவன் உடனே அவள் நகைச்சுவையாக அதை சொல்லவில்லை என்று உணர்ந்தான். அவளுடைய கூற்று உணர்ச்சியற்றதாகவும் நேரடியானதாகவும் இருந்தது. அவள் எதை உத்தேசித்து அப்படி சொன்னாள் என்பது பியர்டுக்கு விளங்கவில்லை. ஒருவேளை அதை ஒரு கேள்வியாக அவள் கேட்டிருக்கக்கூடும். அவள் தன்னுடைய குரங்கிடம் எதைக் கண்டாளோ அதையே பியர்ட்டிமும் காண்பவளாக தன்னுணர்வுடைய உயிரிகள் அனைத்தும் சமம் எனக்கருதியவளாகத் தோன்றினாள். அவள் அசிசியின் புனித பிரான்சிஸிஸ் மனநிலையிலிருந்து அவனை நோக்கினாள்.
இங்கருடன் பரிச்சயமான சமயத்தில் பலமுறை நிகழ்ந்தது போலவே, அவன் மிகை உணர்ச்சி சார்ந்த வழிபாட்டுணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான். அவனது கண்கள் மினுங்கியது. அவன் எந்தவொரு பெண்ணைக் குறித்தும் இவ்விதமாக உணர்ந்ததில்லை. ஆத்மார்த்தமான காதலையும். அதேநேரம் அவளை பலவந்தமாக தன்வயப்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற வலுவான இச்சையையும் தன்னுள் உணர்ந்தான். உண்மையில் அவன் அதைதான் விடுதி அறையில் படுக்கையின்மீது, தரையின் மேல் திரும்பத்திரும்ப செய்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அவனுடைய அந்த இச்சை திருப்தி அடைந்த போதிலும் கூட, இன்னும் மங்கிப்போகாமலும் நிறைவுறாமலும் காணப்பட்டது.
“நல்லது. பிறகு நீ யார்?” அவள் மெல்ல வினவினாள்.
பியர்டு அவள் ஆச்சரியமடையும் விதமாக, “நானொரு யூதன்” என்றான். பொங்கிவந்த வலிமையான, முக்கியமான உணர்வு, நிஜமாகவே அவனொரு யூதன் என்பது அவனைத் தாக்கியது.
“எனக்குள்ளாகவும் யூத ரத்தம் கலந்திருக்கக் கூடும், இது மாதிரியான விஷயங்களைப் பற்றி யாருக்குத்தெரியும்?” இங்கர் தன்தோளைக் குலுக்கினாள்.
பியர்டு இன்னும் அதிக அர்த்தமுள்ள, உணர்வுபூர்வமான எதிர்வினையை எதிர்பார்த்திருந்தான். ஆனால் அதற்குப் பதிலாக அவன் திரும்பவும் கண்டது, காரியார்த்தமானதொரு இங்கரையே. அவள் தனக்கேயுரியத் தன்மையில் ஒரு குரங்கினைப் போல பேதமையுடையவளாகத் தோன்றினாள். அவளிடம் கற்பிக்கப்பட்ட தனிவகையிலான கூறுணர்வு ஏதுமில்லை. வரலாறு குறித்து எவ்வித எண்ணமும் இல்லை. ஏதோ நேற்றுதான் இவ்வுலகில் இறக்கிவிடப்பட்டவளைப் போல, முழுவதும் வெளிப்படையான தன்மையுடன் கூடிய தேவதை போல, அவள் அவளாகவே இருந்தாள். அவளுடைய தொலைபேசி எண் நினைவுக்கு வந்ததது. அவளுடைய எண்ணை வைத்திருப்பதால், அவளிடமிருந்து பிரிந்து விடமாட்டான். அவனுடைய உணர்ச்சிகள் தீவிரம் குறைந்தவையோ, வியப்புக் குறைவானவையோ அல்ல. அதைக் குறிப்பிட ‘திருப்தியின்மை’ என்பதைக்காட்டிலும் வேறு பொருத்தமான வார்த்தையில்லை. அவள் ஒருவகையிலான இசையைப் போல அவனை ஆட்கொண்டுவிட்டாள். தொடர்வாரின்றி தனித்து ஒலிக்கும் செல்லோ அணிவரிசையை எண்ணிக் கொண்டான்.
“இங்கர் என்னில் இரக்கம் காட்டு. நானுன்னை நேசிக்கிறேன்” அவன் கிசுகிசுத்தான்.
“முட்டாள்தனம். நானொன்றும் அவ்வளவு அழகில்லை”
“நீ அழகுதான்”
“நீயாக அப்படி நினைத்துக் கொள்கிறாய்…”
“அப்படித்தான் இருக்கிறது”
“இப்போது இவ்விதம் எண்ணுகிறாய் பிறகு எப்படியென்று யாருக்குத் தெரியும்?”
“என்னைப் பற்றி கொஞ்சமும் நீ எண்ணவில்லையா?”
“நான் ஒன்றும் விருப்பு வெறுப்பு அற்றவள் அல்ல”
“அவ்வளவு தானா?”
“நீ என்னை காதலிக்கலாம்”
“நன்றி”
“நல்லது. ஆனால் நான் எண்ணுகிறேன்…”
“நான் சுயநலம் மிக்கவன். ஊதாரி”
“நான் நல்லவிதமாக நடந்து கொள்ள முயல்வேன்”
“உனது இந்தமுடிவை நான் பாராட்டுகிறேன்”
“மறுபடியும் நான் உன்னை எப்போது காணமுடியும்?”
“நீ உறுதியளித்ததைப் போல எனக்கு பணம் தருவாய்தானே?”
“கண்டிப்பாக”
புதியதொரு உடன்படிக்கையை உற்றறிவது போல அவன் முகத்தை ஆராய்ந்தவள் பிறகு எவ்வித தயக்கமுமின்றி கூறினாள். “இன்று இரவு நான் வீட்டிற்கு செல்ல வேண்டும், நீ நாளை இரவு அங்கு வரலாம். மேலே மாடிக்கு வந்தால் என் அறைத் தோழியை சந்திக்கலாம்”
“வீட்டிற்கு போகத்தான் வேண்டுமா?”
“எனது உள்ளாடையைக் குளியலறைத் தொட்டியில் அலச நான் விரும்பவில்லை”
“நான் துவைத்துத் தருகிறேன்”
“எனக்கு வீட்டில் செய்யவேண்டிய சில்லறை வேலைகள் இருக்கிறது. நீ என்னை மிகவும் பயப்படுத்துகிறாய்”
“நான் ஒரு வாடகைக்காரை அழைக்கிறேன்”
“வேண்டாம். என்னுடைய சைக்கிள் இன்னும் விடுதியில்தான் நிற்கிறது”
மறுநாள் காலை பியர்டு ஒரு முடித்திருத்தகத்திற்குச் சென்றான். பிறகு கடைத்தெருவுக்கு சென்று மேலங்கி ஒன்றினை வாங்கினான். இங்கரை சந்திப்பதற்க்கு இன்னும் ஏராளமான நேரம் மீதமிருந்தது. மதியத்திற்குமேல் அவன் தேவாலயத்தை போய்ப் பார்க்க தீர்மானித்தான். அது கருமையான கற்களால், இடைக்காலச் சிற்பபாணியில் எழுப்பப்பட்டிருந்தது. வளைந்து நெளிந்து செல்லும் குறுகலான மத்தியகாலத் தெருவொன்றில் சுற்றிலுமுள்ள வீடுகளைக் காட்டிலும் மிக உயரமாக, திடீரென எழுந்து நின்றது அது. கற்களில் செதுக்கப்பட்டிருந்த புனித உருவங்களைப் பார்த்தவாறு தேவாலயத்தை சுற்றி வந்தான் பியர்டு. அவற்றின் நடுவே ஒரு குரங்கைக் கண்டு ஆச்சரியமடைந்தான். அச்சிறிய கல்முகம் மறைவாக, கோணலான இளிப்புடன் இருந்தது. அது அவ்விடத்தில் என்ன செய்கிறது என்று அவனால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அந்த முழு தேவாலயமும் விசித்திரமானதாக, அத்தெருவிலுள்ள சாதாரண வீடுகளுக்கு நடுவே மதிப்புமிக்க ஒன்றாக, அந்நியப்பட்டு நின்றிருந்தது.
அலுவலக உடுப்புகளில் காணப்பட்ட ஆண்களும் சீருடை அணிந்த மாணவர்களும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை சுமந்து செல்லும் குடும்பத் தலைவிகளும் அந்த தேவாலயத்தையொட்டிய தெருவில் நடந்து சென்றபோதும் அதை நிமிர்ந்து பார்க்காமலேயே கடந்து சென்றனர். எவருக்கும் அதனுடன் எந்த உறவும் இல்லாதது போலவே தோன்றியது. ஆனால் அவர்கள் வேறு விதமாகவும் எண்ணியிருக்கலாம். அவர்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். உறுதியான, ஆடம்பரமற்ற அதே சமயத்தில் நுட்பமான செதுக்கு வேலைபாடுகள் கொண்ட இந்த தேவாலயம் அவர்களுடை பிரதேசத்தின் நிலையான ஒரு அடையாளம்.
பியர்டு உள்ளே சென்றான். கூடத்தை அடைந்ததும் அதன் விசாலத்தைக் கண்டு பிரம்மித்துப் போய் தன்னைச் சிறியவனாக உணர்ந்தான். அதனினும் கூடுதலாகத் தனிமையை உணர்ந்தான். நிறைவாகத் தோன்றிய அந்த வேளையில் கிறித்துவ மதத்தின் ஆற்றலையும் அர்த்தத்தையும் தான் ஒருபோதும் முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணமும் அவனுக்குள் எழுந்தது. அழுக்காறும் சினமும் கொண்ட கடவுளை உடைய யூதர்களுக்கு, வழிபட அத்தனை விசாமலான இடம் தேவையில்லை. ஒரு எளிய அறை போதும். ஒரு தேவாலயத்தைக் காட்டிலும் அது விரும்பத்தக்கது, தவிர தங்களுடைய தெய்வத்துடன் அவர்கள் கொண்டிருக்கும் நெருங்கிய உள்ளார்ந்த தொடர்பிற்கு அது மிகவும் பொருத்தமானது. தங்கள் வேதனைகளிலும் புனிதமான மயக்கநிலைகளிலும் தங்களுடைய உள்ளார்ந்த ஆழங்களுக்குள்ளாக மூழ்கிப் போகும் வரையிலுமாவது, ஜோனாவைப் போல அறை கூவல் விடுக்கும், எதிர்த்து சண்டையிடும் ஒரு தெய்வம் வேண்டியதே.
விடுதிக்குத் திரும்பும் வழியில் அவனுக்கு, இங்கர் தனது குரங்கைப் பற்றி குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. முன்பு உணவகத்தில் அவனை கிளர்வுறச் செய்தது போலவே இந்நினைவும் அவனுடை பாலியல் இச்சையைத் தூண்டியது. இவ்வுணர்வைக் காட்டிலும் வேறெதுவும் இத்தனை எளிமையாக இவ்வளவு உண்மையாக இருக்க முடியாது. அது அவனுடைய கால்சட்டையை முன்புறமாக புடைக்கச் செய்தது. ஒரு சிற்றுண்டி விடுதிக்குள் நுழைந்து சிறிது நேரம் அமர்ந்தவன் செய்தித்தாள் வாசிப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தான்.
அன்று மாலை முடித்திருத்தம் செய்யப்பட்ட தலையுடனும் புதிய மேல்கோட்டுடனும் விடுதியின் குளியலறைக் கண்ணாடியில் பியர்டு தன்னைப் பார்த்துக் கொண்டான். அவன் மறுபடியும் நேர்த்தியான தோற்றம் கொண்டவனாகியிருந்தான். அவனுடைய உறுதிவாய்ந்த சிங்கமுகத்தில், நேர்த்தியான தோற்றத்திற்குரிய பண்புகள் இன்னமும் மீதமிருந்தன. ஆயினும் அவனுடைய விழிகளின் கீழிருந்த கருவளையங்கள் ஆண்டுக்கணக்கான வலியையும் வருத்தங்களையும் தாங்கியிருப்பவையாக காட்சியளித்தன. அவை அவனுடைய முகபாவனையை தெளிவற்றுக் கலங்கும்ஒன்றாக காட்டியது. ‘உன்னுடைய முகம் ஒருவேட்டை நாயினுடையது போல் மாறிக்கொண்டிருக்கிறது’ அவன் தன் பிம்பத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான். தைரியத்துடன் வேறுபக்கம் பார்வையைத் திருப்பாமலேயே நின்றவன் தனது இழப்புகளை ஈடுகட்ட வேண்டும் என்று தீர்மானித்தான். தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக புதிய, அழகிய பரிசுப் பொருள் ஒன்றினை இங்கருக்கு வாங்கிச்செல்வான்.
விடுதியின் முகப்புக் கூடத்தில் இருந்த காட்சிப் பெட்டியில், சிறிய இரத்தத் துளிகளைப் போன்ற இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி தங்கத் தோடுகளைக் கண்டான். அவை விலைமதிப்பு கூடியவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவனுடைய பயணத்திட்ட ஒதுக்கீட்டிற்கு அது மிகவும் செலவுபிடிக்கும் தொகையாக இருக்கும். நேராகக் கடைக்குள் நுழைந்தவன், அவ்விதமாகக் கேட்பது தவறு எனத்தெரிந்தும், அவை என்ன விலை என்று விசாரித்தான். அவன் எண்ணியது சரிதான். அவற்றின் விலை, அவன் யூகித்தைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது. அத்தோடுகளின் விலையையும் அவனுடைய பயணச்செலவையும் சேர்த்தால் பிறகு எஞ்சக் கூடியது, சான்பிரான்சிஸ்கோவிலுள்ள அவனுடைய வசப்பிடத்திற்கு வாடகை செலுத்துவதற்கு கூடப்போதாது. தவிரவும் திரும்பிப்போகும் அவனுக்காக வேலை எதுவும் காத்திருக்கவுமில்லை.
கடையை விட்டு வெளியே வந்தவன் தெருவிலுள்ள மற்றக்கடைகளின் ஐன்னல்களைப் பார்த்தவாறு நடந்தான். அவனுடைய கவனத்தைக் கவர்ந்த ஒவ்வொரு பொருளுமே, தங்கச் சுழிப்பினூடாக முகிழ்ந்தெழுந்த சிவப்பு கோளங்களைக் கொண்ட அத்தோடுகளைப் பற்றிய நினைவால், விரைவிலேயே ஈர்ப்பு குறைந்தவையாகிவிடும்.
அத்தோடுகள் கூடுதல் விலைகொண்டவை. வயிற்றெரிச்சல் உண்டாக்கக்கூடிய தொகை அது. ஏதோ ஒரு விற்பனைத் துறைசார்ந்த பழிகாரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும் என பியர்டு எண்ணினான். ஏனெனில் அத்தோடுகள் இப்போது அவனை அலைகழித்தன. நிமிடங்கள் செல்லச்செல்ல அவனது தவிப்பு கூடிக்கொண்டே சென்றது. அவன் கடைஜன்னல்களை எவ்வித நோக்கமுமின்றி வெறித்தபடி, அந்தத் தோடுகளை மறக்கவியலாதவனாக தெருக்களில் நடந்து கொண்டிருந்தான்.
திரும்பவும் அந்த நகைக்கடைக்கு செல்லுவதில்லை என்றுதான் தீர்மானித்திருந்தான். அவன் திரும்பவும் நகைகடைக்குச் சென்றாலும், அது அந்தத்தோடுகளைப் பார்ப்பதற்காக மட்டும்தான் – வாங்குவதற்காக அல்ல – தவிரவும் அவை விற்றுப் போயிருக்ககூடும். எனவே அந்தத் தோடுகளை வாங்குவதற்கான காலம் கடந்துவிட்டது என்று எண்ணியவன், அக்கடையினை நோக்கி விரைந்தான். அவன் ஆறுதலடையும் விதமாக அவை இன்னும் அங்கேயே, அவன் எண்ணியதைவிடவும் அதிக அழகுடன் வீற்றிருந்தன.
விற்பனையாளர் ஐம்பதுகளையொட்டிய வயதுடைய கனத்த உருவமுடைய பெண்மணி, மடிப்புகளுடைய கருநிறப் பட்டாடையும் தங்கச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தாள். அவள் மெதுவாக நடந்து வந்து பியர்டுக்கு எதிரே கண்ணாடி மேசையருகில் நின்றாள். சற்றுநேரத்திற்கு முன்பாகத் தோடுகளின் விலை விசாரித்தவன் இப்போது அவற்றைக் கவனிக்காததுபோல கழுத்து ஆரத்தை உற்று நோக்கியபடி இருந்தான். அவளை ஏமாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன வேண்டுமென்று அவளுக்குத் தெரியும். எதுவும் கேட்காமலேயே அந்தக் காதணிகளை அதன் பெட்டியிலிருந்து எடுத்து மேசைமீது வைத்தாள். அது அதிகபிரசங்கித்தனமான செயல் என்று பியர்டு எண்ணியபோதும் ஆட்சேபிக்கவில்லை. “நான் இதுவரையிலும் இம்மாதிரியான காதணிகளை கண்டதில்லை இனிமேலும் காணப்போவதில்லை. இது உறுதி” சாதாரணமாகச் சொல்வதைப் போலக் கூறினாள்.
“அவை மிகவும் விலையுயர்ந்தவை”
“அவ்விதமாகவா எண்ணுகிறீர்கள்? அவனுடைய அபிப்பிராயத்தின் மீது நேரடியாக ஆர்வம் காட்டாதவளைப்போல தெருவை நோக்கினாள். அது பின் மதியப்பொழுது கடை மூடும்நேரம். பியர்டின் அபிப்பிராயத்திற்குப் பதிலாக அவள் காட்டிய அக்கறையின்மை அவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“அதிகவிலை” என்றான். உண்மையில் அந்தக் காதணிகளை அவன் விரும்பாததுபோல பேரம் பேச அவளைத் தூண்டினான்.
“நான் இவற்றைத் திரும்ப வைத்துவிடவா?” என்றாள். பியர்டு பதிலளிக்கவில்லை.
“இவை விலை உயர்ந்தவை என்றுதான் நானும் எண்ணுகிறேன்! ஆனால் விலைகள் ஏறி இறங்கக் கூடியவை. நீங்கள் விரும்பினால் உங்கள் முகவரி அட்டையை தந்து விட்டுச் செல்லுங்கள். சில வாரங்கள் வரையிலும் இந்தக் காதணிகள் விலை போகாதிருக்கும் பட்சத்தில் நான் உங்களைத் தொலைபேசி வாயிலாக அழைக்கிறேன்” என்றாள்.
பியர்டு அவளுடைய குரலில் தொனித்த ஏளனத்தை உணர்ந்தான். நகை என்றால் விலையுயர்ந்தவையாக, மிகவும் செலவுபிடிக்கக் கூடியதாகத்தானிருக்கும் என்று அவள் சொல்ல விரும்பியதைப்போல அது தொனித்தது. தனது சட்டைப்பையினின்றும் பர்சை மெதுவாக எடுத்தவன், தற்கொலை செய்ய விரும்புகிறவனின் உள்ளக்கிளர்ச்சியுடன், தனது முகவரிஅட்டைக்கு பதிலாக கடனட்டையைக் கண்ணாடி மேசைமீது காதணிகளுக்குப் பக்கத்தில் ஒசையெழுமாறு வைத்தான். அதைப் பிடுங்கியவள் விலகிச் சென்று ஒரு இயந்திரத்தில் செருகினாள். அவன் தன் கைநடுக்கத்தை மறைத்துக் கொள்ளும்விதமாக அந்த ரசீதில் விரைவாக கையெழுத்திட்டான்.
இங்கரின் அடுக்குமாடி வீட்டிற்கு வரும் போது, அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. விடுதலையடைந்ததைப் போல அதிக மகிழ்ச்சியாகவும் சற்றே உடல்நலக் குறைவுற்றவனாகவும் தன்னை உணர்ந்தான். முன்பு செய்ததைப் போலவே இங்கரை ஒரு அருமையான உணவகத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டுமென எண்ணினான். அப்போதெல்லாம் அவள் சிறிதும் வயப்பட்டதாகத் தோன்றவில்லை. ஆனால் இன்றிரவு, உணவுக்கு பிறகு அவன் காதணிகளை அவளிடம் தருவான். உணவகத்திலுள்ள ஒளியின் தன்மை, உணவின் சுவை, ஒயின், கனிவான உபசரிப்பு ஆகியவை சிறப்பாக இருக்கும். காதணிகள் அத்தருணத்தை மேலும் தீவிரமானதாக ஆக்கும். தன்னை முதன்மையாக ஒரு விலைப்பெண்ணாக எண்ணிக் கொண்டாலும் அவள், இதனால் ஈர்க்கப்படுவாள். தவிரவும் இது பியர்டுக்கு அவசியம்.
குட்டைப் பாவாடை அணிந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். இங்கரைக் காட்டிலும் வயதானவளாக, உணர்ச்சியை வெளிக்காட்டாத ஊதாநிறக் கண்ணுடன் இருந்தாள். அவளுடைய கருத்தமுடி காதுவரை வெட்டப்பட்டிருந்தது. குறுக்குவாட்டிலும் நேராகவும் பிரித்து விடப்பட்டிருந்த அம்முடிக்கற்றைகள் அவளுடைய மெலிந்த உதடுகளின்றும் வெளிப்பட்ட கடுமையான பாவனையை அழுத்தமாக எடுத்துக்காட்டியது. அவள் தனது அந்த அழகினால் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டு உணர்விழந்தவளைப் போல தோன்றினாள். பியர்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். கிரேத்தா மாட்டி இங்கரின் அறைத்தோழி என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டவள் பிறகு சொன்னாள்.
“இங்கர் சென்றுவிட்டாள்”
“இருக்காது”
“அது சாத்தியம்தான்” என்றாள் கிரேத்தா. சுருங்கிய அவளுடைய உதடுகள் இனிமையற்ற விதத்தில் சுழித்துக் கொண்டன. அவளோடு முரண்படுவதை கிரேத்தா விரும்பவில்லை என்பதை பியர்டு உணர்த்த போதிலும் அவளை நம்பத் தயாராகயில்லை. அவள் கெடுமதி படைத்தவளாக இருக்கக் கூடும்.
“அவள் தன் குரங்கையும் கொண்டுபோய் விட்டாள். நீயே உள்ளே சென்று பார். அவளுடைய அலமாரியில் உடைகள் இல்லை. அவளது கைப்பெட்டி, சைக்கிள் எதுவுமில்லை”
கிரேத்தா திரும்பி வீட்டினுள்ளே போனாள். அவளைப் பின்தொடர்ந்த பியர்டு அவள் காட்டிய அறையினுள் அவளைத் தொடர்ந்து சென்றான். அலமாரிகளும் இழுப்பறைகளும் காலியாகக் கிடந்தன. அங்கு எதுவுமே இல்லை. மனித இருப்பிற்கான எந்தத் தடையமும் இல்லை. அவ்வெறுமையினால் நிலைகுலைந்து போன பியர்டு தானும் வெறுமையுற்று விட்டதைப் போல உணர்ந்தான்.
“ஒருவரை நீ முழுவதுமாக புரிந்து கொண்டு விட முடியாது. அவள் கூச்ச சுபாவமும் தன்முனைப்பும் உடையவளாகத் தோன்றினாள். ஆனால் அவள் ஏதோ தவறு செய்து வேண்டும். ஒரு பெண்ணை குரங்குடன் உள்ளே அனுமதித்தது என்னுடைய முட்டாள்தனம் தான். பாதிநேரம் அப்பிராணிக்கு உணவூட்டியது நான்தான். தொலைபேசி எப்போதும் அடித்துக் கொண்டேயிருக்கும்”
பியர்டு கிரேத்தாவின் பின்னால் சமையலறைக்குப் போனான், சிறியமேசையில் தேநீர்ப் பாத்திரம், குவளையோடும் தட்டுடனும் வைக்கப்பட்டிருந்தது.
“அவள் எங்கே போயிருப்பாள்?” என்று கேட்டான். பயன்படக்கூடிய, நல்லவிதமான பதிலெதுவும் கிடைக்குமென்று அவன் நம்பவில்லை. இதுபோல மறைந்துபோகும் ஒருத்தி எப்படி முகவரியை விட்டுச் செல்வாள்? ஆனால் அவனால் வேறு என்ன தான் கேட்கமுடியும்?
“இப்படி கேட்பவர்களில் நீ முதலாவது ஆளல்ல. அவள் எங்கிருந்து வந்தாள் என்பதோ, எங்கு போனாள் என்பதோ எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நீ ஒரு குவளை தேநீர் அருந்தலாம்”
மேசை மீது, சற்றேத் திரும்பி பியர்டை நோக்கியவாறு உட்கார்ந்திருந்த கிரேத்தா தன் கால்களை ஒன்றின்மீது ஒன்று போட்டுக்கொண்டாள். மறுபடியும் எழுந்து ஒரு குவளையையும் தட்டையும் எடுக்கும் எண்ணமெதுவும் அவளுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பியர்டு அங்கே தங்கிச் செல்வான் என நம்பியதை போலிருந்தாள். அவளுடைய நீளமான கால்கள் ஆடையின்றி, கவர்ந்திழுக்கும் வகையினதாக, குதியுயர்ந்த காலணிகளோடு காணப்பட்டது. அவனால் அதைத் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய தொடையினூடாக தெரிந்த வெள்ளைச் சதையை நோக்கியவன் நிலை தடுமாறியவனாக அசௌகரியமாக உணர்ந்தான்.
அவனுடைய பதிலுக்காகக் காத்திராமல் தனக்கான தேநீரை ஊற்றிக் கொண்டவள், ஒரு வாய் பருகினாள். அவனுக்கு வேண்டியதை அவளுடைய கால்களே தந்துவிட்டன என எண்ணுகிறாளா? அவன் கேள்விகள் கேட்க விரும்பினான். இங்கரை குறித்து ஏதேனும் அறிந்து கொள்ள இயலும்.
“மன்னிக்கவும். அவளுடைய தலைமறைவு எனக்கு மிகவும் வசதிக் குறைவை உண்டாக்கிவிட்டது. உங்களுக்கு அது இன்னும் மோசமாக இருக்கக்கூடும்” அவள் சிறிது மென்மையான குரலில் சொன்னாள். தலையசைத்த பியர்டு வினவினான் “இங்கர் உங்களுக்கு பணம் ஏதாவது தரவேண்டுமா?”
“உள்ளபடி சொல்வதென்றால் நான்தான் அவளுக்குத் தர வேண்டும். ஒரு மாதத்திற்கான தொகையை முன்பணமாகத் தந்திருக்கிறாள். நான் வேண்டுமானால் இன்னொரு குவளை தேநீர் தயாரிக்கட்டுமா?”
சரியென்று சொல்வதற்கே பியர்டு விரும்பினான். அவனுக்குத் துணை தேவையாக இருந்தது. ஆனால் கிரேத்தாவினுடைய கால்களின் வெண்மையை அவனால் தாளமுடியவில்லை. வெறுப்பிற்குரிய வேட்கையாக அது இருந்தது. அவனால் அதைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.
“நன்றி நான் போக வேண்டியிருக்கிறது” என்றான். மதுவிடுதி ஒன்றில் இருந்த தொலைபேசி முகவரி புத்தகத்திலிருந்து, அருங்காட்சியகத்தின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டவன், ஒரு வாடகைக் காரைப் பிடித்தான். இங்கரின் காகித மறுஉருவாக்கக் கலை வகுப்புகள் பற்றி நினைவுபடுத்திக் கொண்டான், அவ்வகுப்புகள் மாலையில் நடத்தப்பட்டன. அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு நிர்வாகி, இங்கர் அந்த வகுப்புகளைவிட்டு நின்று விட்டதாக அவனிடம் கூறினார். அடுத்ததாக அவர்களிருவரும் சேர்ந்து சென்ற உணவங்களுக்குப் போய் பார்த்தான். அவன் எண்ணியதுபோலவே அங்கு எங்கும் அவள் தென்படவில்லை. அவன் எதிர்பார்த்தைப் போன்றே அது வலி தரக்கூடிய ஏமாற்றமாக இருந்தது. அவன் தன் விடுதிக்கு திரும்பி வந்தான். இரண்டு நாட்களாக சுவரின் மீது சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த இங்கரின் சைக்கிள் விடுதியின் முற்றத்தில் காணப்படவில்லை. அதன் இன்மை அவனை, பளிங்குத் தரையின் மங்கிய வண்ணத்தை, மேசையருகாக வைக்கப்பட்டிருந்த தொட்டிச் செடிகளின் மலட்டுத்தனத்தை, விடுதித் தாழ்வாரத்தின் தனிமையை அதிகமாக உணரச் செய்தது.
தனது அறையில், அந்த காதணிகளை உறையிலிருந்து வெளியே எடுத்த பியர்டு அவற்றை மேசைவிளக்கின் அடியில் வைத்தான். அவற்றின் விளங்கிக்கொள்ள முடியாத பெறுமதியை, விலக்கமுடியாத கவர்ச்சியை ஊடுறுவிப் பார்ப்பவனைப் போல பிடிவாதமான கவனத்துடன் ஆராய்ந்து கொண்டிருந்தான். பிரபஞ்சத்தை உருவாக்கிய பிறகு, கடவுள் அது நன்றாக இருக்கிறது என்பதை கண்டிருக்கிறார். அப்படித்தான் இது அவன் வசம் வந்து சேர்ந்திருக்கிறது. “ஆக, இதில் எது நல்லது?” பியர்டு, ஒன்றன்பின் ஒன்றாக சிகரெட்டுகளைப் புகைத்துத் தள்ளினான். களைத்துப்போய், பரிதாபத்திற்குரியவனாகத் தன்னை உணர்ந்தான். அந்நிலை நினைவோடு நீண்ட காலத் தொடர்புடையதாக இருந்தது.
இரவு மேசைமீது பளபளத்துக் கொண்டிருந்த காதணிகள் அவனிடம் எதையும் சொல்லவில்லை. அவை மதிப்பிழந்தவையாகத் தோன்றின. ஆனால் அவற்றிற்கு மதிப்பு இருந்தது – புறத்தே உள்ள எதிலிருந்தும் அல்ல – வாழ்விற்கு அதனளவில் இருப்பது போல – என்பதாக பியர்டு எண்ணினான். வாழ்வைப் பொருத்தவரையிலும் அதன் மதிப்பு கேள்விக்கிடமற்றது எனக் கருதினான். ஏனெனில் எப்போதுமே அவன் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணியதில்லை. மிகவும் மோசமாக உணரும் இத்தருணத்திலுமே கூட. உறங்கச் செல்வவதற்கு முன்பாக, புகைவண்டிகளின் கால அட்டவணையை படித்த பியர்டு தன்னுடைய பயணக் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டுப் படுத்தான்.
மதியம் விடுதியறையைக் காலிசெய்துவிட்டு வந்தவன், தனது புதிய மேலங்கியை அணிந்துகொண்டு, உணவகம் ஒன்றிற்கு சென்று விசேஷமான மதிய உணவிற்கு ஆர்டர் செய்தான். அவன் தன்னை துயரத்தில் ஆழ்த்திக்கொள்ள மறுத்தான். மகிழ்ச்சியுடன் இல்லாவிட்டாலும் தனது உணவை விரைவாக அருந்தினான். பிறகு வாடகைக் காரில் இரயில் நிலையத்திற்குச் சென்றான். அவன் வாங்கியது முதல் வகுப்பிற்கான பயணச் சீட்டு. மற்றொரு ஆடம்பரச்செலவு. ஆனால் அவன் ஆத்திரத்துடன்தான் இருந்தான் எனினும் தனக்குச் சலுகை அளித்துக் கொள்ள விரும்பினான். அது இங்கர் சொல்வது போல ஊதாரித்தனமானது.
புகைவண்டி நிலையத்திலிருந்து நகர்ந்ததும், தனது பெட்டியின் கதவை இழுத்து மூடியவன், நிலையத்தில் வாங்கிய விலையுயர்ந்த, வண்ணப் பத்திரிக்கைகளோடு ஐன்னலோரமாக சாய்ந்து அமர்ந்தான். அந்தப் பத்திரிகை முழுவதும் விலையுயர்ந்த பொருட்களைப் பற்றிய விளம்பரங்கள் நிறைந்திருந்தன. ஏறக்குறைய ஒவ்வொருபக்கமும் பளீரிடும் வண்ணங்களால் மிளிர்ந்த அவை புலணுர்வை கிளர்த்தும் விதமாக படபடத்தது. வாசனையாகவும் இருந்தது. ஏறக்குறைய நிர்வாணமாக இருந்த விளம்பரப் பெண்களை வெறித்து பார்த்தவனாக தன்னுள் இச்சையை உணர முயன்றான். எதற்காக என்று அவனால் குறிப்பாக சொல்லவியலாது. ஆனால் அது அவர்களுடைய உடல் சார்ந்து அல்ல. ஒருவேளை எதிர்காலத்திற்காக, கூடுதலான அனுபவத்திற்காக, அதிகப்படியான வாழ்க்கைக்காக இருக்கலாம். பிறகு சிகரெட்டுகளுக்காக தனது மேலங்கியின் பைக்குள் துழாவினான். அக்காதணிகளை மறுபடியும் பார்க்கவும், ஆழ்ந்த யோசனையோடு தனது மன உறுதியை மீட்டுக்கொள்ளவும் விரும்பினான். அவனுடைய சிகரெட்டுகள் தட்டுப்பட்டது ஆனால் காதணிகள் அப்பையில் இல்லை. வேறு எந்தப் பைகளிலும் இல்லை. திரும்பத்திரும்ப காதணிகளை தனது பைகளில் தேடவேண்டிய அவசியமில்லை என்பதை பியர்டு திடீரென உணர்ந்தான். ஏனென்றால் இரவுமேசை மீது காதணிகளை வைத்தவனுக்கு அதை திரும்ப எடுத்த வைத்த ஞாபகமே இல்லை. அவனுக்கு உறுதியாக, நிச்சயமாகத் தெரிந்தது. அவன் அவற்றை திரும்ப எடுத்திருக்கவில்லை.
நகரைவிட்டு வெளியேறியதும் புகைவண்டி வேகமெடுக்கத் தொடங்கியது. அவன் தனது பைகளில் தேடுவதை நிறுத்திக்கொண்டான். கடவுளே! அவன் எதற்காக அந்தக் காதணிகளை வாங்கினான்? எப்படி அவன் இம்மாதிரியான முட்டாள்தனத்திற்கு ஆளானான்? ஒருகண உணர்ச்சி வேகத்தில் நகைக்கடை மேசை மீது தனது கடனட்டையை வீசியெறிந்து தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அந்தக் காதணிகள் சபிக்கப்பட்டவை. ஏதோ ஒருவகையில் அவைதான் இங்கரின் தலைமறைவிற்கும் காரணமானவை. அவன் தன்னை மீட்டுக்கொள்ள யதார்த்தமாகவும் நடைமுறைக்குகந்த வகையிலும் யோசிக்கவேண்டும். அவற்றை திரும்பப் பெற என்னசெய்யவேண்டும் என்று ஆராய்ந்துகண்டுபிடிக்க வேண்டும்.
தாமதிக்காமல் விடுதியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும். புகைவண்டியிலிருந்தோ அடுத்த நிலையத்திலிருந்தோ ஒரு தந்தி அனுப்பலாம். ஒரு பரிசோதகரை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதைக்குறித்து மேலும் யோசித்த போது, அவ்வளவு அவசரமாக விடுதியைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமில்லை என்றுபட்டது. அது ஒரு உயர்தர விடுதி. தவிரவும் இது ஜெர்மனி. அமெரிக்கா அல்ல. அவனுடைய காதணிகளை ஒருவரும் திருடிக் கொள்ளமாட்டார்கள். போய்ச் சேருமிடத்திலுள்ள மற்றொரு நல்ல விடுதியைத்தேடி அவனிடம் அது வந்துசேரும். நிரந்தரமாக அவை தொலைந்து போய்விடவில்லை. எனவே அதைப்பற்றி கவலைப்பட எதுவுமில்லை. தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவனுக்கு ஏறக்குறைய கண்கலங்கிவிட்டது. எப்பாடுபட்டாவது அக்காதணிகளை திரும்பப் பெற்றுவிட வேண்டுமென்று அவன் விரும்பினான். எழுந்து கதவை நோக்கிச் சென்றான். கதவைத் தள்ளித்திறந்து பரிசோதகர் எவரேனும் தென்படுகிறார்களா எனப்பார்க்கலாம் என்று எண்ணிய போது, கதவுத் தட்டப்படுவதைக் கேட்டான். வெளியே பரிசோதகர் முகத்தில் சிரிப்போடு, அகலவிரித்த கையில் காதணிகளோடு நிற்கக் கூடும் என்று மூளைகுழம்பிய எதிர்பார்ப்போடு கதவை நகர்த்தியவன் இங்கரின் முகத்தைக் கண்டான்.
கடுமை தொனிக்காத மென்மையான குரலில் “ஹலோ” என்றான்.
“மன்னிக்கவும், நான் தவறுதலாக வந்துவிட்டேன்” அவன் கண்களைப் பார்த்தவாறு சொன்னவளின் முக பாவனையில், குழப்பத்தின் விளிம்பில் பரிச்சயத்தின் அடையாளமும் தென்பட்டது. தன் கைப்பெட்டியை அவள் நழுவவிட, தரையில் தடாரென விழுந்த அது எழும்பி அவனுடைய பக்கவாட்டில் மோதியது.
“இங்கர்” மெதுவாக அழைத்த பியர்டு, அவள் அந்தளவிற்கு அழகானவள் அல்ல என்பதை விசித்திரமான திருப்தியுடன் உணர்ந்தவனாக வேறு எதையும் யோசிக்காமல் நின்றான். அந்த அமைதியான வரம்பற்ற கணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கியபடி இருக்க, அவனுடைய உணர்வுகள் தெளிவடைந்தன. இங்கர் எப்படியிருக்கிறாளோ அப்படியே அவளைப் பார்க்கும்படியானதொரு வாய்ப்பை அந்த கணம் பியர்டுக்கு ஏற்படுத்தித்தந்தது. சிந்தனையிலாழ்ந்த சாம்பல் நிறக்கண்களைக் கொண்ட மெலிந்து, வெளுத்தபெண், வழக்கத்தை விடவும் நிமிர்ந்த தோற்றமுடையவள், நேர்த்தியான, தூய, இளமையானதொரு மனப்பதிவை அவள் தந்தாள். அவன் கோபமோ, அந்த காதணிகளுக்கான அக்கறையோபடவில்லை. இப்போது அவன் பார்க்கும் வெளிறிய இங்கரின் முன் அவையெல்லாம் அபத்தம் என்பதாகத் தோன்றியது. அவன் உணர்ந்தது அவனுடைய இதயம் நொறுங்குவது ஒன்றினைத்தான், ஆயினும் அதைத்தடுக்க அவனால் எதுவும் செய்யமுடியவில்லை.
மெதுவான நிச்சயமற்றப் புன்னகையுடன் இங்கர் வினவினாள் “எப்படியிருக்கிறீர்கள்?” அவளுடையப் பெட்டியை குனிந்து எடுத்த பியர்டு கேட்டான் “நீ எப்போதும் முதல்வகுப்பில் தான் பயணிப்பாயா?”
“எப்போதுமல்ல”
“அது கதவைத்தட்டும் போது பதிலளிக்கும் கணவானைப் பொருத்தது”
“நான் மிகவும் அழகானவள்” என்றாள். அவளுடைய குரல் இனிமையானதாகவும், தற்செயல் போலவும் தன்னையே கேலி செய்து கொள்ளும் விதத்திலும் மங்கி ஒலித்தது.
“அதிர்ஷ்டமானவளும் கூட”
“அப்படியொன்றுமில்லை”
“நிச்சயமாக நீ அதிர்ஷ்டசாலிதான்”
பத்திரிகைகள் பரவிக் கிடந்த இருக்கையின்மேல் அவளது கைப்பெட்டியை வைத்தவன் பிறகு அவளுடையக் கையைப்பற்றி தன்புறமாக இழுத்தவன் பின்னாலிருந்த கதவைத்தள்ளி மூடினான். “தயவுசெய்து எனக்கு சற்று அவகாசம் தாருங்கள்” என்றவளை தரையில் சாய்த்து, முழங்கால்களை மடித்து அவனுடைய தொடைகளுக்கு நடுவே இருக்குமாறு செய்த போது அவள் மறுக்கவில்லை. அவளுடைய சாம்பல்நிற விழிகள் குறிப்பாக எதையும் நோக்காததாக, இந்த உலகளவிற்கே விரிந்ததாகத் தோன்றியது. பியர்டு முழங்காலிட்டுத் தன் கால்சட்டையைக் கழற்றினான். பிறகு இங்கருடைய காலணிகளையும் அவளுடைய பாதங்களையும் முத்தமிட்டவன் அவளுடைய கால்களை ஒற்றியபடி முன்னேறி, அரைப் பாவாடையை இடுப்பிற்கு உயர்த்தினான். பிறகு கால்கள் பிரியுமிடத்தில் அவளுடைய உள்ளாடையை தனது சுட்டுவிரலால் இழுத்து புறந்தள்ளிவிட்டு அங்கும் நாவினால் ஒற்றியெடுத்தான். அவனுடைய தலைமுடியை தன் கைகளால் பிடித்து அவள் மேலே இழுக்கும்வரையிலும் அது நிகழ்ந்தது. அவன் விரும்பியது போலவே அவளும் தன்னுள்ளாக அவனை செலுத்திக் கொள்ள விழைந்தாள். அவனுடைய உதடுகள் அவளுடைய கழுத்திற்கு நேராக இருக்க “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று முணுமுணுத்தான். இன்பமறதியில் ஆழ்ந்தவன் தன் கண்களை மூடிக் கொண்டான், களையப்படாத ஆடையினூடாக அவளுள் நுழைந்தான். புகைவண்டி நிசப்தமான, இருளடைந்து கொண்டிருந்த வயல்வெளிகளினூடாகச் சீராக சென்று கொண்டிருந்தது.
லியோனார்டு மைக்கேல்ஸ் (1933 – 2003)
(LEONARD MICHAELS)
புகழ்பெற்ற அமெரிக்கச் சிறுகதையாளர். பெர்க்யில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். 1969 இல் வந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி, அத்தலைமுறையின் புத்திசாலியான எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1981 இல் முதல் நாவலான Men’s club வெளிவந்தது. பிறகு அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
Going Places, I would have saved them If I could, Shuffle, Sylvia ஆகியவை அவரது முக்கிய ஆக்கங்கள்.