உயிர்ப்பிழைப்பின் வேட்கை

0 comment

‘வலியது வெல்லும்’ என்பது வாழ்வை வன்முறைக் களமாக்கி மனிதர்களைக் கொதிநிலையிலேயே தத்தளிக்க வைக்கும் குரூர உத்தி. கீழே அதல பாதாளம் இருக்க உச்சிமுனையில் நிற்க வைத்து, ஈட்டியை நெஞ்சுக்கு நேராக நீட்டி ‘ஆடு ஆடு’ என்கிறர்கள். தவறி விழுந்தால் அது நம்முடைய இயலாமை அன்றி சமூக அமைப்பின் கோளாறு அல்ல என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அந்த வாசகம் விவிலிய மேற்கோள் போல பாவிக்கப்பட்டு குருதி வழிய அதற்கு விசுவாசமாக இருப்போமே ஒழிய ‘கிஸ் மை ஆஸ்’ சொல்ல எவருக்கும் துணிவில்லை. வாதப் பிரதி வாதங்கள், மறுப்புகள், ஆராய்ச்சிகள் என எதுவும் பிழைத்தெஞ்சி உய்வடையத் துடிக்கும் உயிரின் ஏக்கம் முன்பு செல்லுபடியாகாது. அதன் தீவிர ஒற்றைப்படைத் தன்மையுடன் மோதி அத்தனை வியாக்கியானங்களும் தோற்றுப் போவதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. அதற்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்து மடிவதைத் தவிர சாதாரணர்களால் ஆகக்கூடிய காரியம் வேறேதுமில்லை எனும் பட்சத்தில் இந்த நிதர்சனத்தைச் சலாமிட்டு ஏற்காமல் சீறிச் சிலிர்த்துக் கொள்பவர்கள் இரக்கமேயின்றி வெளித்தள்ளப்படுவார்கள் அல்லது அப்புறப்படுத்தப்படுவார்கள்.

நவீன உலகின் இயக்க விதிகள் பிடிபடாதவர்களின் அல்லாட்டம் நாம் காணாததல்ல. ஆனால் அதை ஜான் ட்ரோயெல் (Jan Troell) எடுத்து வைக்கிற போது கிடைக்கிற அனுபவங்கள் பனிப்புயலில் சிக்குண்டதைப் போல இருக்கின்றன. இறுகி கெட்டித்துப் போன மனங்களுக்கு மத்தியில் நீர்மையில் வனைந்த நெஞ்சங்கள் தளும்பிச் சஞ்சலமுறுவதை நெருக்கமாக அனுமானித்து அள்ளி அள்ளிப் படையலாக்கியவர். சர்வமும் அனர்த்தமாகிவிட்ட உலகில்கூட எங்கோ ஏதோ ஓர் ஆன்மாவில் மறைந்து கிடக்கும் உணர்வின் ஆவேசத்திற்கு அதன் தகிப்பணையாது தத்ரூபமாக உயிர்ப்பூட்டுபவர். பாரம் சுமக்கும் தனிநபர்களின் வியக்தியைச் சொடுக்கிடும் அவகாசத்திற்குள் பரிவாகப் புரட்டிப்போடும் மாயக் கணங்கள் இவரது படங்களில் அனாயசமாக வந்து விழுந்தவாறு இருக்கின்றன. ‘வாழ்க்கை இவ்வளவு கடினமானதல்ல’ என யோசனை சொல்கிறவர்களைக் காண நேரும் போதெல்லாம் நான் லே மிஸரபில்ஸை நினைத்துக்கொள்வேன். வாழ்க்கையில் துன்பமன்றி வேறென்ன மிச்சம் இருக்கப் போகிறது? நம் தத்துவங்களெல்லாம் மானுட துக்கத்தின் கருப்பையில் பிறந்தவை அல்லவா? எழுதியவரைவிட வாசிப்பவருக்கு மேலதிகமாகத் துன்பங்களைப் பரிசளிப்பது என்பது தத்துவங்களின் விசித்திரங்களுள் தலையாயது!

ஜான் ட்ரோயெலின் காவியத் திரைப்படமான த எமிக்ரன்ட்ஸ் (The Emigrants 1971), ஸ்வீடன் தேசத்திலிருந்து அமெரிக்கக் கனவுகளோடு கப்பல்வழிப் பயணம் மேற்கொள்ளும் முதல் தலைமுறைகளுள் ஒன்றின் வாழ்க்கையை நிதானமாக விவரிக்கிறது. ‘சம்சாரி’யாகாமல் விவசாயியின் வாழ்வு துலங்குவதில்லை. கார்லுக்கும் கிறிஸ்டினாவுக்கும் ஏகப்பட்ட பிள்ளைகள். மழை பொய்த்துக்கொண்டே இருக்கிறது. உச்சக்கட்ட வெறுப்பில் அவன் கடவுளைச் சபிக்கிறான். உழைப்பின் கால் பங்குகூட பலனாகவில்லை. பிள்ளைகளோடு வறுமையும் குடும்பத்தின் நிரந்தர ஊனமாகிறது. தப்பிப்பெய்த இடியுடன் கூடிய மழையால் விளைந்த சொற்ப தானியங்களும் பாதுகாக்கப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு எரிந்து கரியாகிறது. பட்ட காலிலேயே படும் கோரம். இனி, கிறிஸ்துமஸ் வரை பட்டினிதான். ‘நீ தெய்வத்தைப் பழித்ததற்கான தண்டனை இது’ என்கிறாள் அவன் மனைவி. நிலத்தை நல்லாளாக வழிபட காரணமேதுமில்லை என்று உணர்ந்தபின், அமெரிக்கச் சொர்க்க வாசல் தனக்காகத்  திறந்திருக்கிறது என நம்புகிறான். அவன் வாழும் பிரதேசத்தில் ‘ஸ்வீடனில் உழைப்பதைவிட குறைவான சிரமங்கள், அதிக சம்பாத்தியம்’ போன்ற மாய மான்கள் வேறு ஏற்கனவே உலவிக்கொண்டிருக்கின்றன. ‘அந்தக் கூனிக்கிழவியோட மகன் இருபது வருசத்துக்கு முந்தி அமெரிக்கா போனான். இப்ப நூறு ஏக்கர் வச்சிருக்கானாம்’ என்பது போன்ற நம்ப விரும்பும் பொய்கள். இக்கரைக்கு அக்கரை.

அகன்று விரிந்த நிலக்காட்சிகள் கண்களின் போதாமையை உணரச் செய்கின்றன. அதில் அசைவின்றி உறைந்து கிடக்கும் மரங்களைக் காட்டும் உறைந்த காமெரா. பரபரப்பற்ற வாழ்க்கையைச் சொல்லும் சோம்பலான மனிதர்கள். பெரும்பாலான இடங்கள் மௌனத்தால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. அந்த மௌனத்தை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. நம்மைச் சுற்றி அத்தனை திசைகளிலும் முரசறையப்படுகையில், நமது அகம் விதிர்த்தெழுந்து, அந்தப் பேரோசையுடன் கூத்தாட விழையும் போது, சட்டென்று தனிமை கவியும் பேரமைதி பெரும் இரைச்சலுடன் காதுகளுக்குள் மட்டும் ஒலிப்பது போல. அண்மைக் காட்சிகளில் நிறைந்து படரும் கதாபாத்திரங்களின் கண்களில் நிரந்தரமாகிவிட்ட சோகம், திரையைக் கடந்து நம் முகங்களையும் வாஞ்சையுடன் தழுவிக்கொள்கிறது. மனிதர் ஏகப்பட்ட அண்மைக் காட்சிகளைப் படத்தில் வைத்திருக்கிறார். காற்றினால் ஏந்தப்பட்டு ஊஞ்சலில் அலைவுறுவதையே விரும்பும் பெண்ணின் அகம், நிலத்தைக் கைவிட்டுப் புறப்படும் போது உக்கிரம் கொள்கிறது. ஊஞ்சலில் வேகமாக முன்னும் பின்னும் ஆடி வானத்தையே தொட்டுவிட முயல்கிறாள். அதை மகிழ்ச்சியாக மாற்றுகிறாள். அவளது பாதங்களையும் வானத்தையும் இணைத்து விட்டதில் திளைத்து, உறைந்திருந்த காமெரா நகரத் தொடங்குகிறது.

மரணம் அலைவுறும் கடல்

தாயையும் காலுடைந்த தந்தையையும் பூர்வீக நிலத்திலேயே அநாதரவாக விட்டுவிட்டுச் செல்வதில் எந்தவிதமான குற்ற உணர்வும் அவர்களுக்கு இல்லை. பெரும் தவிப்புடன் அவர்தம் கண்கள் நிலத்தின் ஒவ்வொரு அடியையும் சுழன்றுச் சுழன்று முன்னும் பின்னும் நோக்கியபடியே கடக்கின்றன. வழியில் அவ்வூரின் பாதிரியார் குடும்பமும் நடுத்தர வயது வேசியும் அவளது இளம் மகளும் இவர்களுடன் இணைந்துகொள்கின்றனர். பாதிரியாரும் வேசியும் அன்றி கிறித்தவம் முழுமை கொள்ளாது அல்லவா? அட்லாண்டிக் கடற்பயணம் அத்தனை இலகுவானதல்ல. இந்த நீண்ட பயணம் முழுக்க ஒடுங்கிக்கொண்டுதான் உறங்க வேண்டும். காலராவும் கடற்காய்ச்சலும் பீடித்த நோயாளிகள் எதிரிலோ அருகிலோ படுத்திருப்பார்கள். கைக்குழந்தைகளுக்குப் பால் கிடைக்காது. ‘கப்பலில் மாடுகள் வளர்க்கும் வழக்கமில்லை’ என மாலுமி ஒருவன் நக்கலடிக்கிறான். கப்பல் உணவு பெரும்பாலும் கெட்டுப்போய் இருக்கிறது. உணவு மூலமாகவே நோய் பரவி இருக்கலாம் எனத் தத்தம் பிள்ளைகளுக்கு அந்த உணவைத் தரவே அஞ்சுகிறார்கள். அறியாமையின் ஒளியில் தங்கிவிட்ட குழந்தைகளுக்காவது கரையோர மண் அமைதி அளிக்கிறது. வல்லமை அற்ற பாவிகளுக்கு ஜல சமாதிதான்.

‘நம் துன்பங்களுக்கும் நோய்களுக்கும் இவள் இங்கிருப்பதுதான் காரணம்’ என வேசி குற்றம் சாட்டப்படுகிறாள். பாவிகள் கல் எறிகையில் பாய்ந்து தடுப்பது இயேசு காட்டிய வழி. பாதிரியார் அவர்களைச் சமாதானப்படுத்துகிறார். ‘எனக்கு எந்த நோயுமில்லை. ஆகவே நீங்கள்தான் பாவிகள்’ எனக் கொதித்தெழுபவள் தகாத வார்த்தைகளைக் கொட்டியதற்காகத் தன்னிடம் மன்னிப்பு கோரும்படி அவள் அவர்களிடம் சண்டையிடுகிறாள். மனதின் இருண்ட சிதைவுகளைச் சகித்துக்கொள்ள மறுக்கிறாள். மீள முடியாத அடையாளத்தைச் சுமந்தலைபவளின் ஆற்றாமையின் வெளிப்பாடு அது. ஆனாலும் அவள் எல்லோராலும் The Glad One என்றே அழைக்கப்படுகிறாள். மகிழ்ச்சியன்றி வேறு எதையும் அறியாதவள். பாவங்களின் பொதி எப்போதும் பாதிரியாரிடம்தான். அவர் எப்போதும் இயேசுவிடம் மன்னிப்பையே பிரார்த்தனை ஆக்குகிறார். புயல் பெரும் சீற்றத்துடன் மரணத்தின் கொடிய நாவுகளை நீட்டுகிறது. சுவரெங்கும் நோயாளிகளின் சீலமும் வாந்தியும் தண்ணீராக இறங்குகிறது. உயிருள்ள பூனையைச் சாக்கு மூட்டையில் கட்டி எப்போதோ ஆற்றில் விட்டதெல்லாம் நினைவிலெழுந்து அச்சுறுத்துகிறது. பேதலித்துவிட்ட மனதின் கதறல் பூனையினுடைய மியாவ்வாக எதிரொலிக்கிறது. சாவின் விளிம்பில் பெறப்படும் மன்னிப்பானது கேட்பவருக்கும் தருபவருக்கும் அளிக்கும் ஆசுவாசம் அளப்பரியதாகிறது.

அதுவரை அறிந்திருந்த செய்திகள் அத்தனையும் அமெரிக்கக் கரையில் பகற்கனவுகளாகின்றன. ஆங்கிலம் அறியாத அந்நியர்கள், கூச்சல் மிகுந்த தெருக்களின் ஊடே புகுந்து, ஒலிகளின் விசித்திரங்களை உள்வாங்கி உணர்ந்து களிப்படையும் காட்சி உலகத் திரைப்படங்களின் சாதனைகளுள் ஒன்று. அங்கிருந்து மின்னெசோட்டாவிற்கு செல்வதற்குத் தொடர்வண்டியில் சில தினங்கள் பயணித்து மற்றொரு கப்பல் உலாவிற்கு இவர்கள் தயாராக வேண்டும். தங்களுக்கான புதிய நிலத்தைக் கண்டடைய இன்னும் 1500 மைல்கள்!

இளைப்பாறுதல்

நியூயார்க் நகரத்திலிருந்து மினெசோட்டா அடைவதற்கான கப்பல் பயணத்திலும் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. முதல் தளத்தில் பயணிக்கும் அமெரிக்கச் செல்வந்தர்களுக்கான விசேட உணவு மட்டும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் கொண்டு வரப்படுகிறது. தரைத்தளத்தில் நெரிசலில் நின்றுகொண்டே பயணிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் உணவுக்கான பணத்தைத் தரத் தயாராக இருக்கையிலும் மறுதலிக்கப்படுகிறார்கள். அமெரிக்க உயர்குடிகளுக்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்கு. பாதிரியாரின் பிள்ளை செத்துப் போகிறது. இதற்கிடையே பெண் குழந்தையொன்று தொலைந்துவிட, அதை அந்த வேசி காப்பாற்றி பெற்றோரிடம் சேர்ப்பித்து அவர்களிடையேயான உறவு சுமூகமாகும் காட்சி மட்டும் உறுத்தியது எனலாம். தன்னிச்சையான வெளிப்பாட்டில் சம்பவங்களின் கோர்வையாக நகரும் படத்தில் அக்காட்சி வலிந்து திணிக்கப்பட்டதாகத் துருத்திக்கொண்டிருந்தது.

படம் முழுக்கப் பார்வையாளர்கள் தாள முடியாத மன அழுத்தத்தில் விழுந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய துன்பங்கள் நம்முடையதாகின்றன. அமெரிக்கக் குடியேறிகளின் பயணத்தை இத்தனை நெருக்கமாக உணரச் செய்த படம் பிறிதில்லை. சார்லி சாப்ளினின் The Immigrants வந்தேறிகளின் கசப்பை நகைச்சுவையாகத் தலைகீழாக்குவதோடு நின்றுவிடுகிறது. ஜேம்ஸ் கிரே இயக்கிய The Immigrant (2013) திரைப்படமும் விபச்சாரத்தில் தள்ளப்படும் ஒற்றை மனுஷியின் அவலங்களை மட்டுமே காட்டிச் செல்கிறது. அவற்றின் எல்லைகள் மிகவும் குறுகியது.

ஜான் ட்ரோயெலின் உலகத்தில் கடலின் உப்புச்சுவை கண்ணீராலானதாக இருக்கிறது. முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரின் பாதத் தடங்களை நாம் பின்தொடர்ந்தபடியே இருக்கிறோம். அணுக்கமாக. குடியானவனான கார்ல் நில்சன் புதிய தேசத்தில் தனக்கான நிலத்தைத் தேடிச் செல்கிறான். ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிக்காட்டி அங்கே பயிர் செய்யலாம் என அவனது நண்பர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவனுக்குத் திருப்தி இல்லை. ‘இன்னும் கொஞ்சம் தூரம் போய்ப் பார்க்கலாமே’ என்கிறான். அதற்கு அப்பால் மனிதக் கால் தடமே படாத அடர்ந்த காடு. நண்பர்கள் எச்சரிக்கிறார்கள். மன உறுதியுடனும் மனிதனின் ஆதி இச்சையான தீராத வேட்கையுடனும் திடத்துடன் நில்சன் சொல்கிறான். ‘நான் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில தூரம் போவதற்கு என் கால்கள் தயாராகவே இருக்கின்றன’. மற்றவர்கள் பின்தங்கிவிட, இதுவரை மனிதர் எவரும் புகாத காட்டினுள் அலைந்து அளைந்து தனக்கான மண்ணைக் கண்டுகொள்கிறான். அடையாளத்திற்காக ஒரு மரத்தில் தன்னுடைய குடும்பப் பெயரைக் கீறி அதனடியில் இளைப்பாறுகையில், அவனது உதட்டில் மலரும் புன்னகை நமது முகத்திலும் விரிகிறது. ஒரு பெருமூச்சுடன். கண்ணீர்த் துளியுடன்.

அவசியம் காண வேண்டிய படங்களுள் ஒன்றாக இதனைப் பரிந்துரைக்கிறேன். இதன் இரண்டாம் பாகமான The New Land திரைப்படம் 1972ம் ஆண்டு வெளியானது. அது குறித்து அடுத்த இதழில் எழுத முயல்கிறேன்.