நல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் – விளாதிமிர் நபக்கோவ்

1 comment

நேசத்தோடும், விவரங்களை நீட்டித்தும் பல ஐரோப்பிய பெரும்படைப்புகளை நேசத்தோடு அணுகும் என்னுடைய திட்டத்திற்கு, பல்வேறு ஆசிரியர்களைக் குறித்த இந்த பல்வேறுபட்ட கலந்துரையாடல்களுக்கு, “நல்ல வாசகராக இருப்பது எப்படி” அல்லது “ஆசிரியர்களிடத்திலான கனிவு” – இதுபோல ஏதோவொன்று ஒரு துணைத்தலைப்பை வழங்கும் பணியாற்றும்.  நூறாண்டுகளுக்கு முன்பு ஃபிளபர்ட் அவருடைய மனைவிக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் குறிப்பைச் சொல்கிறார்: Comme I’on serait savant si I’on connaissait bien seulement cinq a six livres: “அரைடஜன் புத்தகங்களை மட்டுமாவது ஒருவர் நன்கு அறிந்திருந்தால் அவர் எப்பேர்ப்பட்டதொரு அறிஞராக இருப்பார்.”

வாசிக்கும்போது ஒருவர் விவரங்களை கவனித்து, சீராட்டவும் வேண்டும்.  புத்தகம் நேசத்துடன் சேகரித்து வைத்திருக்கும் வெய்யிலாகக்காயும் அற்பமானவைகளுக்குப் பிறகு பொதுமைப்படுத்தல்களின் நிலவொளி வருவதில் தவறேதுமில்லை. ஆயத்த பொதுமைப்படுத்தலோடு ஒருவர் (வாசிக்கத்) துவங்கினால், ஒரு புத்தகத்தைத் புரிந்து கொள்ளத் துவங்குவதற்கு முன்பாகவே, தவறான முனையில் ஆரம்பித்து அதனிடமிருந்து விலகிப் பயணிப்பவராகிறார்.  உதாரணத்திற்கு மேடம் போவரியை, அது பூர்ஷ்வாக்களைக் கண்டனம் செய்கிற ஒன்று என்ற முன்கூட்டிய கருத்தோடு வாசிக்கத் துவங்குவதை விடவும் அதிகமாகச் சலிப்பூட்டிக்கூடிய அல்லது ஓர் ஆசிரியருக்கு இழைக்கப்படும் அநீதி வேறெதுவுமில்லை. நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் உலகங்களோடு வெளிப்படையான தொடர்பில்லாத, மாறாத ஒரு புத்துலகத்தின் உருவாக்கமே கலைப்படைப்பென்பதால், புத்தம் புதியதான ஏதோவொன்றை அணுகுவதைப் போல ஆக நெருக்கத்தில் அப்புதிய உலகத்தை ஆய்வுசெய்வதே முதல் காரியமென்பதை எந்நாளும் நினைவில் கொள்ள வேண்டும். இப்புதிய உலகை நெருக்கமான ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே, அதன் பிறகு மட்டுமே, வேறு அறிவுத் துறைகளோடும், வேறு உலகங்களுடனுமான அதன் இணைப்புகளை நாம் ஆராயப் புகுவோம்.

மற்றொரு கேள்வி: ஒரு நாவலிலிருந்து இடங்களை, காலகட்டங்களைக் குறித்த தகவல்களை நம்மால் சேகரிக்க முடியுமா? வரலாற்று நாவல்கள் என்ற தலைப்பின் கீழ் புத்தகக் ‘கிளப்’புகளால் கூவி விற்கப்படும் தடிமனான பெஸ்ட்-செல்லர்களில் இருந்து கடந்தகாலத்தைக் குறித்து எதையாவது கற்றுக்கொள்ள முடியுமென்று அவனோ அல்லது அவளோ நினைக்குமளவிற்கு அவ்வளவு அப்பாவியாக ஒருவர் இருக்க முடியுமா? ஆனால் பெரும்படைப்புகள் என்பவை என்ன? மதகுருவின் பார்லரை மட்டுமே அறிந்திருந்த ஜேன் ஆஸ்டினின் சித்திரமான இளங்கோமான்களாகவும், தோட்டமாக்கப்பட்டிருக்கும் நிலங்களாகவுமேயுள்ள நிலவுடைமை இங்கிலாந்தை நாம் நம்ப முடியுமா? மற்றுமந்த பிளீக் ஹவுஸ், அதியற்புத இலண்டனுக்குள் (நிகழும்) அந்த அதியற்புத ரொமான்ஸை, நூறு வருடங்களுக்கு முன்பிருந்த இலண்டனைக் குறித்த ஆய்வென்று நம்மால் அழைக்க முடியுமா? நிச்சயமாகக் கிடையாது. இந்தத் தொடரிலிருக்கும் இவற்றைப் போன்ற மற்ற நாவல்களுக்கும் இது பொருந்தும். உண்மை என்னவென்றால் பெரும் நாவல்கள் பெரும் தேவதைக் கதைகளாக இருக்கின்றன – அதுவும் இந்தத் தொடரிலிருக்கும் நாவல்கள் உச்சபட்சமான தேவதைக் கதைகள்.

காலமும் வெளியும், பருவகாலங்களின் நிறங்கள், தசைகளின், மனங்களின் அசைவுகள், இவையனைத்தும் மேதமைமிக்க எழுத்தாளர்களுக்கு (நம்மால் ஊகிக்க முடிகிற அளவிற்கு, நாம் சரியாகத்தான் ஊகிக்கிறோம் என்று நம்புகிறேன்), பொதுப்படையான உண்மைகளின் புழக்கத்திலிருக்கும் நூலகத்திலிருந்து கடனாக வாங்கப்பட்டிருக்கக் கூடிய வழமையான கருத்துக்களல்ல. மாறாக பெரும் கலைஞர்கள் தனித்துவமான அவர்களுடைய வழியில் வெளிப்படுத்தக் கற்றுக் கொண்ட தனித்துவமான ஆச்சரியங்களின் தொகுப்பு. பொது இடங்களை அலங்கரிப்பதோ அற்ப எழுத்தாளர்களுக்கு விடப்பட்டிருக்க, உலகை மறுகண்டுபிடிப்புச் செய்வதைக் குறித்து கவலைப்படாத இவைகள் வழமையான புனைவின் அமைப்பிலிருந்தும் அளிக்கப்பட்டிருக்கும் விசயங்களின் ஒழுங்கிலிருந்து சிறப்பானதை, அவர்களால் முடிந்த அளவிற்கு பிழிந்தெடுப்பதை மட்டுமே செய்கின்றனர். அற்ப வாசகர்கள் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களை, மகிழ்ச்சியளிப்பதான (இந்த) தோற்றமாற்றத்தில் கண்டுகொள்வதால், அற்ப எழுத்தாளர்கள் நிர்மாணிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளாக உற்பத்தி செய்ய முடிகிற பல்வேறு இணைப்புகள், ஒரு மெல்லிய தாற்காலிகமான வழியில் உல்லாசமளிப்பவையாக இருக்கலாம்.  ஆனால் கோள்களைச் சுழல அனுப்புகிற உண்மையான எழுத்தாளருக்கு, தூங்கும் மனிதனை உருப்படிவமாக்கி, தூங்குகின்றவனின் விலாவைக் கொண்டு ஆர்வத்தோடு மட்டப்படுத்துகிற அந்த ஆசிரியருக்கு, அளிக்கப்பதற்கென்று வழங்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகளென ஏதுமில்லை என்பதால் மதிப்பீடுகளை அவரேதான் படைத்தாக வேண்டும். இவ்வுலகு புனைவுக்கான சாத்தியக்கூறுகள் கொண்டதெனப் பார்ப்பதை, வேறனைத்திற்கும் முதலாவதாக வெளிப்படுத்தவில்லை என்றால் எழுத்துக் கலை ரொம்பவே வீணானது.  இவ்வுலகின் பொருட்கள் போதுமான அளவிற்கு யதார்த்தமானதாக இருக்கலாமானாலும் (யதார்த்தம் செல்லக்கூடிய தொலைவிற்கு) ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையென ஓர் இருப்பைக் கொண்டதில்லை: இது (ஒரு) பெருங்குழப்பம், இந்தப் பெருங்குழப்பத்திற்கே ஆசிரியர் “போ” எனச் சொல்லி இவ்வுலகை மினுங்கவும் கலக்கவும் அனுமதிக்கிறார்.  பார்க்கப்படக்கூடிய, மேலோட்டமான உறுப்புகளில் அல்லாமல் உலகம் இப்போது அதன் அணுக்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. உலகைத் துடைத்து, அது  உள்ளடக்கியிருக்கும் இயற்கைப் பொருட்களை வனையும் முதல் மனிதன் எழுத்தாளன். அங்கேயிருக்கும் அந்நெல்லிகள் உண்ணத் தக்கவை. எனது பாதையில் குறுக்கிடும் புள்ளிகளுடைய அவ்வுயிரினம் அடக்கப்பட்டேயாக வேண்டும். மரங்களுக்கு இடையே உள்ள அந்த ஏரி, ஓபல் ஏரி அல்லது கூடுதல் கலாப்பூர்வமாக, டிஷ்வாட்டர் ஏரியென்று அழைக்கப்படும்.  அப்பனி ஒரு மலை- அந்த மலை வெற்றிகொள்ளப்பட வேண்டும். தடமில்லாத சரிவில் ஏறுகிற பெருங்கலைஞன், உச்சியில், காற்றடிக்கும் முகட்டில் யாரைச் சந்திப்பானென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியான வாசகரைச் (சந்தித்து) அங்கே தன்னிச்சையாக தழுவிக்கொள்ளும் அவர்கள், புத்தகம் என்றென்றைக்கும் நீடித்திருக்கும் பட்சத்தில் என்றென்றைக்கும் இணைந்திருப்பார்கள்.

ஒரு மாலை நேரத்தில், தொலைதூர மாகாணக் கல்லூரியொன்றின் வாயிலாக, நான் சீரோட்டத்திலிருக்க நேர்ந்த வழக்கத்திற்கு அதிமாக நீண்ட உரைச் சுற்றுலாவில், வாசகருக்கான பத்து வரையறைகளை ஒரு சிறிய வினாடிவினாவாகப் பரிந்துரைத்தேன் – அந்தப் பத்து வரையறைகளிலிருந்து மாணவர்கள் ஒரு நல்ல வாசகரை உருவாக்கும் நான்கு வரையறைகளை இணைக்க வேண்டும். நான் தற்காலிகமாகத் தொலைத்துவிட்ட அப்பட்டியலின் வரையறைகள், நான் நினைவுகூர முடிகிற வரை இவற்றைப் போலிருக்கும். ஒரு வாசகரை நல்ல வாசகராக்கும் நான்கு வரையறைகளைத் தேர்தெடுக்கவும்:

  1. அந்த வாசகர் ஒரு புத்தகக் கிளப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  2. அந்த வாசகர் நாயகன் அல்லது நாயகியுடன் அவனையோ அல்லது அவளையோ அடையாளப்படுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும்.
  3. அந்த வாசகர் சமூக-பொருளாதாரக் கோணத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  4. அந்த வாசகர் ஒன்றுமில்லாததைவிட உரையாடலும், அதிரடியும் உள்ள கதையை விரும்பித் தேர்ந்தெடுப்பவராக இருக்க வேண்டும்.
  5. அந்த வாசகர் ஒரு திரைப்படத்தில் புத்தகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.
  6. அந்த வாசகர் முகிழ்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
  7. அந்த வாசகர் கற்பனை உடையவராக இருக்க வேண்டும்.
  8. அந்த வாசகர் நினைவுத்திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.
  9. அந்த வாசகர் ஓர் அகராதியை வைத்திருக்க வேண்டும்.
  10. அந்த வாசகர் ஓரளவிற்காவது கலையுணர்வு உடையவராக இருக்க வேண்டும்.

 

உணர்ச்சிப்பூர்வமாக அடையாளங்காணுதல், அதிரடி, சமூக-பொருளாதார அல்லது வரலாற்றுக் கோணத்தின் மீதே அந்த மாணவர்கள் வெகுவாகச் சாய்ந்தனர். நிச்சயமாக,  நீங்கள் ஊகித்திருப்பதைப் போலவே நல்ல வாசகரென்பவர் கற்பனை, நினைவுத்திறன், ஓர் அகராதி, என்னுள்ளும், மற்றவரிடமும் வளரெட்டுமென்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் முன்வைக்கும் உணர்வான- ஓரளவிற்காவது கலையுணர்வும் உடையவராக இருக்க வேண்டும்.

தற்செயலாகத்தான் வாசகர் என்ற சொல்லை தளர்வாகவே நான் பயன்படுத்துகிறேன். போதுமான ஆர்வத்துடன், ஒருவர் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியாது, மறுவாசிப்புத்தான் செய்ய முடியும். ஒரு நல்ல வாசகர், ஒரு மேஜர் வாசகர், ஒரு துறுதுறுப்பான, படைப்பூக்கமுள்ள வாசகர் மறுவாசிப்பு செய்பவராகவே இருக்கிறார். ஏனென்று நான் சொல்கிறேன். கண்களை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்திற்கு நகர்த்தி புத்தகத்தை முதன்முறையாக வாசிக்கும் கடினமான செயல்முறையில், வரி வரியாக, பக்கம் பக்கமாக, புத்தகத்தின் மீது நிகழும் சிக்கலான உடல்ரீதியான பணியில், காலம் வெளியின் அடிப்படையில் ஒரு புத்தகம் எதைப்பற்றியதென்று அறியும் செயல்முறையில், நமக்கும், கலாப்பூர்வமாகக் கூடும் மதிப்பிற்கும் இடையே நிற்கிறது வாசிப்பு. ஓர் ஓவியத்தைப் பார்க்கையில், புத்தகத்தில் உள்ளதைப் போலவே அப்படம் ஆழத்தின், வளர்ச்சியின் கூறுகளைக் கொண்டிருந்தாலும் நமது கண்களை ஒரு தனிச்சிறப்பான வழியில் நகர்த்த வேண்டியதில்லை. உண்மையாகவே காலக்கூறு, ஓர் ஓவியத்துடனான முதல் தொடர்பிலே நுழையாது. ஒரு புத்தகத்தை வாசிக்கையில், அதனை அறிமுகப்படுத்திக் கொள்ள நாம் அவகாசமெடுத்துக்கொள்ள வேண்டும். முழுச் சித்திரத்தை உள்வாங்கிய பிறகு அதன் விவரங்களை அனுபவிக்க முடிகிற (ஓவியத்தைப் பொறுத்தமட்டில் நமக்கு இருக்கும் கண்ணைப் போல) ஓர் உடலுறுப்பு நமக்கு இல்லை. ஆனால், இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது வாசிப்பில் ஒரு புத்தகத்திடம், ஓர் ஓவியத்தைப் பார்க்கையில் செய்வதைப் போலவே நடந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். எப்படியிருந்தாலும், பரிமாணத்தின் பூதாகரப் பெரும்படைப்பான ஸ்தூலக் கண்ணை, அதை விடவும் பூதாகரச் சாதனையான மனதோடு இணைத்து நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு புத்தகம், அது எதுவாக இருந்தாலும் – புனைவுப் படைப்பாக, அறிவியல் படைப்பாக (இரண்டிற்கும் இடையிலான எல்லைக்கோடு பொதுவாக நம்பப்படுவதைப் போல இணக்கமானதில்லை)- ஒரு புனைவுப் புத்தகம் மனதிற்கே முதலாவதாகப் படுகிறது. மனம், கூச்சவுணர்வுள்ள முதுகெலும்பின் உச்சியிலிருக்கும் மூளையே, புத்தகத்தின் மீது பிரயோகிக்கும் ஒரே கருவியாக இருக்கிறது அல்லது இருக்க வேண்டும். இது இவ்வாறிருக்க, இப்போது நாம் கடுகடுப்பான வாசகர், சுள்ளென்றெரிக்கும் புத்தகத்தால் எதிர்கொள்ளப்படுகையில் மனது எப்படி வேலை செய்யுமென்ற கேள்வியை ஆழச் சிந்திப்போம். முதலில், கடுகடுப்பான மனநிலை உருகி விலக நல்லதிற்கோ கெட்டதிற்கோ வாசகர் விளையாட்டின் ஸ்பிரிட்டிற்குள் நுழைகிறார். ஒரு புத்தகத்தை ஆரம்பிக்கும் முயற்சி, குறிப்பாக இளம் வாசகர் யாரையெல்லாம் பழையபாணிக்காரர்கள் அல்லது அதி தீவிரமானவர்களென்று இரகசியமாகக் கருதுகிறாரோ அவர்களால் புகழப்பட்டதாக அப்புத்தகம் இருந்தால் இம்முயற்சியைத் தொடர்வது அடிக்கடி கடினமடைந்தாலும், ஒருமுறை துவங்கிவிட்டால், (அதன்) பலன்கள் வகைவகையானதாகவும், ஏராளமானதாகவும் இருக்கின்றன. பெருங்கலைஞன் அவனுடைய புத்தகத்தைப் படைக்க கற்பனையை பயன்படுத்தியிருப்பதால், புத்தகத்தை நுகர்பவர் அவருடைய கற்பனையையும் பயன்படுத்த வேண்டுமென்பது இயல்பானதும், நியாயமானதுமாகும்.

எப்படியிருந்தாலும், வாசகரைப் பொறுத்தவரையில் இரண்டு வகையான கற்பனைகள் உண்டு.  புத்தகத்தை வாசிக்கையில் இரண்டில் எதைப் பயன்படுத்துவது சரியாக இருக்குமென்று பார்ப்போம். முதலாவது, உறுதியான தனிப்பட்ட இயல்புடைய, சாதாரண உணர்ச்சிகளையும் ஆதரிக்க விழையும் ஒப்பீட்டளவில் கீழானது (உணர்ச்சிகர வாசிப்பின் முதல் பகுதியில் மேலும் பல துணைவகைமைகள் இருக்கின்றன). நமக்கோ அல்லது நாம் அறிந்த யாரோ ஒருவருக்கு அல்லது அறிந்திருந்த ஒருவருக்கு நிகழ்ந்த ஏதோவொன்றை நினைவூட்டுவதால் புத்தகத்திலிருக்கும் ஒரு சூழ்நிலை நம்மால் ஆழமாக உணரப்படுகிறது அல்லது, மறுபடியும், ஒரு நாட்டை, நிலக்காட்சியை அவனால் நாஸ்டால்ஜிக்கலாக நினைவு கூரப்படும் அவனுடைய சொந்தக் கடந்தகாலத்தின் அங்கமாக இருந்த ஒரு வாழ் நிலையை நினைவூட்டுவதால் ஒரு புத்தகத்தை ஒரு வாசகன் மதித்துக் காக்கிறான். அல்லது இதுதான், புத்தகத்திலிருக்கும் ஒரு கதாபாத்திரத்தோடு அவனை அடையாளம் காண்பதே ஒரு வாசகன் செய்ய முடிவதிலே மோசமானது. வாசகர்கள் பயன்படுத்த வேண்டுமென்று நான் விரும்புகிற கற்பனை வகை, இந்த அடிமட்டமான வகையல்ல.

என்றால், எதுதான் ஒரு வாசகரால் பயன்படுத்தத்தக்க நம்பகமான கருவி?  கலாப்பூர்வமான உவகை, தனிப்பட்ட முறையில் அல்லாத கற்பனையே அக்கருவி. ஆசிரியரின் மனதிற்கும், வாசகரின் மனதிற்கும் இடையில் கலாப்பூர்வமான ஒத்திசைவுள்ள சமநிலையே இங்கே நிறுவப்பட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். வழங்கப்பட்டிருக்கும் ஒரு பெரும்படைப்பின் உட்புற நெசவை கவனமாக அனுபவிக்கும்- பேரார்வத்துடன் அனுபவிக்கும், கண்ணீருடனும் நடுக்கத்துடனும் அனுபவிக்கும்- அதே வேளையில் நாம் கொஞ்சம் ஒட்டாமலிருப்பதோடு அவ்வாறு ஒட்டாமல் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.  இம்மாதிரியான விவகாரங்களில் அதிகப்படியாக புறவயநிலையிலிருப்பது நிச்சயமாக முடியாது.  மதிப்புக்குரியவை அனைத்துமே ஓரளவிற்காவது அகவயப்பட்டவை. உதாரணத்திற்கு, ஒருவேளை நான் உங்களுடைய துர்க்கனவாக இருக்க, அங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் ஒருவேளை வெறுமனே என்னுடைய கனவிலிருக்கலாம். ஆனால் நான் இங்கே சொல்ல வருவது வாசகன் அவனுடைய கற்பனைக்கு எங்கே எப்பொழுது கடிவாளமிட வேண்டுமென்று அறிந்திருப்பதும், ஆசிரியர் அவன் (துய்த்து)ஒதுக்குவதற்கு முன்வைக்கும் திட்டவட்டமான உலகை துலக்கமாக அறிய முனைவதினால் அவ்வாறு செய்கிறான் என்பதே. ஓர் ஆசிரியருடைய மக்களின் நடத்தை முறைகளை, ஆடைகளை, அறைகளை அகக்காட்சியாகக் காண்பதோடு பொருட்களைப் பார்க்கவும், கேட்கவும் வேண்டும். மென்ஸ்ஃபீல்ட் பார்க்கில் வரும் ஃபென்னி பிரைஸுனுடைய கண்களின் நிறமும், அவளுடைய குளிர்ச்சியான சிறிய அறையின் தட்டுமுட்டுச் சாமான்களும் முக்கியமானவை.

நாம் அனைவரும் வேறுவேறு மனோநிலைகளை உடையவர்களாக இருக்க, ஒரு வாசகர் கொண்டிருக்க வேண்டிய அல்லது வளர்த்தெடுக்க வேண்டிய ஆகச்சிறந்த மனோநிலை கலாப்பூர்வமானதின், அறிவியல்பூர்வமானதின் கூட்டுக்கலவையான ஒன்றாகவே இருக்கிறதென்று நான் இப்போது சொல்ல முடியும். பேரார்வமிக்க கலைஞன் மட்டுமே ஒரு புத்தகத்தை அகவயப்பட்டதாக அணுகும் மனப்பான்மைக்குப் பொருத்தமானவனாக இருப்பதனால், அறிவியல்பூர்வமாக மதிப்பிடுதலின் குளிர்ச்சி உள்ளுணர்வின் வெப்பத்தைப் பதமாக்கிவிடும். எது எப்படியிருந்தாலும், பெருவிருப்பமும், பொறுமையும் – ஒரு கலைஞனின் பெருவிருப்பமும், அறிவியலாளரின் பொறுமையும் – அறவேயில்லாதவனாக எதிர்கால வாசகன் ஒருவன் இருந்தால் பேரிலக்கியங்களை அரிதாகவே அனுபவிப்பவனாக அவன் இருப்பான்.

ஒரு பெரிய பழுப்பு ஓநாய் துரத்த, நியாண்டர்தால் பள்ளத்தாக்கிலிருந்து ஒரு சிறுவன் ஓநாய் ஓநாயென்று கூக்குரலிட்டு வெளியே வந்த நாளில் பிறந்ததில்லை இலக்கியம்: ஓநாய், ஓநாயென்று கூக்குரலிட்டு வரும் சிறுவனின் பின்னே ஓநாயே இருந்திராத நாளில் பிறந்ததே இலக்கியம். இறுதியில், அந்தப் பாவப்பட்ட சிறுவன் அடிக்கடி பொய் சொன்னதால் தற்செயலாக ஓர் உண்மையான விலங்கால் உண்ணப்பட்டு விடுவான். ஆனால் இங்கே முக்கியமானதாக இருப்பது இதுவே. நெடிய புல்வெளியில் இருக்கும் ஓநாயிற்கும், நெடிய கதையில் வரும் ஓநாயிற்கும் இடையே மினுமினுக்கும் ஓர் இடைவழி இருக்கிறது. அந்த இடைவழியே, அப்பட்டகமே, இலக்கியக் கலை.

இலக்கியம் (ஒரு)கண்டுபிடிப்பு. புனைவென்பது புனைவே. ஒரு கதையை உண்மைக் கதை என்று அழைப்பது உண்மைக்கும், கலைக்கும் அவமானம்.  ஒவ்வொரு பெரும் எழுத்தாளரும் ஒரு பெரும் ஏமாற்றுக்காரர், ஆனால் தலையாய ஏமாற்றுக்கார இயற்கையும் அவ்வாறேயிருக்கிறது.  இயற்கை எப்போதுமே ஏமாற்றும். ஒரு பதியத்தின் சாதாரணமான மோசடியிலிருந்து, பறவைகள் அல்லது பட்டாம்பூச்சிகளின் தற்காப்பு வண்ணங்களின் அதிசயக்கத்தக்க டாம்பீக மாயத்தோற்றம் வரை, வசியத்தின், சூதின் அற்புதமான அமைப்பொன்று இயற்கையில் இருக்கிறது.  புனைவெழுதும் எழுத்தாளன் இயற்கையின் தடத்தேயே பின்பற்றுகிறான்.

ஓநாயென்று கூக்குரலிடும் கானுறைகிற, கம்பளியணிந்த நம்முடைய குட்டிப் பையனுக்கு ஒருகணம் திரும்பி, நாம் இப்படி முன்வைப்போம்: கலையின் மாயம், அவன் வேண்டுமென்றே புனைந்த ஓநாயின் நிழலில், ஓநாயைக் கண்ட அவனுடைய கனவில் இருக்க, அவனுடைய தந்திரங்களின் கதை பின்பு ஒரு நல்ல கதையை உருவாக்கிவிடுகிறது. இறுதியில் அவன் அழிந்துபோக, அவனைப்பற்றிச் சொல்லப்பட்ட கதையோ கூடார நெருப்பைச் சுற்றியிருக்கும் இருளில் ஒரு நல்ல பாடத்தை ஈட்டிவிடுகிறது. ஆனால் அவனோ ஒரு சிறிய மாயக்காரனாக இருந்தான். அவனே புனைவாளன்.

ஓர் எழுத்தாளரைப் பொருட்படுத்த முடிவதற்கு மூன்று விதமான பார்வைகள் இருக்கின்றன: அவரை ஒரு கதைசொல்லியாக, ஓர் ஆசிரியராக, ஒரு வசியக்காரனாகப் பொருட்படுத்தலாம். ஒரு பெரும் எழுத்தாளர் இம்மூன்றையும் இணைத்தாலுமே –கதைசொல்லி, ஆசிரியர், வசியக்காரன்- அவருள்ளேயிருக்கும் வசியக்காரனே ஆதிக்கம் செலுத்துபவனாகவும் அவரை ஒரு பெரும் எழுத்தாளராகவும் ஆக்குகிறான்.

கேளிக்கைக்காகவும், ஆகச் சாதாரணவகை மன எழுச்சிக்கும், உணர்ச்சிகரமான பங்கேற்பிற்கும், காலத்தில் அல்லது வெளியில் எங்கேயோ தொலைதூர பிரதேசங்களில் பயணிக்கும் மகிழ்ச்சிக்காகவும் ஒரு கதைசொல்லிக்குத் திரும்புகிறோம். சற்றே மாறுபட்டதாக இருப்பினும் மேம்பட்டதாக இருக்கத் தேவையில்லாத மனம், எழுத்தாளரிடத்தில் ஆசிரியரைத் தேடுகிறது.  பரப்புரையாளர், ஒழுக்கவாதி, தீர்க்கதரிசி- இதுவே மேலெழும் தொடர்ச்சி.  அறக்கல்விக்காக மட்டுமேயல்ல, ஆனால் நேரடியான அறிவிற்காகவும், சாதாரண நிஜங்களுக்காகவும் கூட ஆசிரியரிடம் செல்லலாம். அந்தோ! பிரெஞ்சு, இரஷ்ய நாவலாசிரியர்களை வாசிப்பதில், சோகமான இரஷ்யாவிலும், அலட்டிக்கொள்ளாத பாரிஸிலும் நிலவும் வாழ்க்கையைக் குறித்து கொஞ்சமாவது கற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டவர்களை எனக்குத் தெரியும். இறுதியாக, அனைத்திற்கும் மேலாக, ஒரு பெரும் எழுத்தாளன் என்றுமே ஒரு பெரும் வசியக்காரனாக இருக்க, அவனுடைய கவிதையின் அல்லது நாவலின் அமைப்பை, கற்பனையை, பாணியை ஆராயவும், அவனுடைய மேதமையின் தனிச்சிறப்பான மாயத்தை நாம் உள்வாங்கவும் முயற்சிக்கையில், அங்கேதான் நாம் உண்மையாகவே மனவெழுச்சி அடையச் செய்யும் பகுதிக்கு வருகிறோம்.

கலையின் மாயம், கதையின் மூல எலும்பிலும், சிந்தனையின் மூல மஜ்ஜையிலும் இருக்கக் கூடுமென்பதால், பெரும் எழுத்தாளனின் இந்த மூன்று முகப்புகளும் – மாயம், கதை, பாடம்- ஒன்றுகலந்ததும் தன்னிகரில்லாத பிரகாசமும் உடையதான ஒற்றை அச்சில் கலக்கும் சாத்தியமுள்ளவை.

டிக்கென்சிய புலனெழுச்சிகரமான கற்பனையாற்றலின் வளமான பெருக்கெடுப்பு அல்லது மென்ஸ்ஃபீல்ட் பார்க் போன்ற நாவல் செய்வதைப் போல வலிமையானதொரு கலாப்பூர்வமான நடுக்கத்தைத் தூண்டுகிற ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனையும், தெளிவும், வறட்சியுமுள்ள பெரும்படைப்புகளும் இருக்கின்றன. அறிவியலின் உள்ளுணர்வையும் கவிதையின் துல்லியத்தையும் கலப்பதே நீண்ட காலத்திற்கு, ஒரு நாவலின் தரத்தைப் பரிசோதிக்கும் நல்ல சூத்திரமென்று எனக்குப் படுகிறது. அறிவார்ந்த வாசகனொருவன் அந்த மாயத்தில் குளிர்காய்வதற்காக மேதைமை மிக்க புத்தகத்தை அவனுடைய இதயத்தால் அல்ல, அதிகப்படியாக அவனுடைய மூளையாலும் அல்ல, மாறாக அவனுடைய முதுகெலும்பால் வசிக்கிறான். என்னதான் வாசிக்கும் போது கொஞ்சமாக விலகியும், கொஞ்சமாக ஒட்டாமலும் நம்மை வைத்தேயிருப்பினும், அங்கேதான், கூச்செறிதலின் குட்டுடைப்பு நிகழ்கிறது.  பின்பு, புலன்சார்ந்த, அறிவார்ந்த மகிழ்ச்சியோடு கலைஞன் அவனுடைய சீட்டுக்களாலான கோட்டையைக் கட்டுவதை, அந்தச் சீட்டுக் கோட்டை, அழகான கண்ணாடியாலும், எஃக்காலுமான கோட்டையாக மாறுவதையும் கவனிக்கிறோம்.

குறிப்பு: அடைப்புக்குறிகளுக்குள் சாய்வாக இருக்கும் சொற்கள் வாசிப்பிற்கு தடையில்லாமலிருக்க மொழிபெயர்ப்பாளர் சேர்த்தவை.  மற்ற சொற்கள் நபக்கோவிற்கு சொந்தம்.

1 comment

Selvam kumar January 13, 2021 - 5:59 am

அருமையான கட்டுரை மிகவும் ஆழமான சொல்லாடல்கள் வாசக எழுத்தாளர்கள் அறியவேண்டிய செய்திகள் இதில் அதிகமுண்டு மிகவும் மகிழ்ச்சி , நல்வாழ்த்துகள்

Comments are closed.