மேற்குத் தொடர்ச்சி மலை

0 comment

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்ச்சி கூட ஏற்படவில்லை. ஏனெனில், குறிப்பிட்ட வார்ப்புடைய தமிழ்ப் படங்களை இவர்கள் இங்ஙனம் அடையாளப்படுத்துவது புதிதோ முதன்முறையோ அல்லவே! ‘வீடு’ காலம் தொட்டே பொருத்தமற்ற முறையில் சராசரிக்கும் கீழான படங்களை மிகையாக விதந்தோதி வருவதன் தொடர்ச்சியாகவே இதனைக் காண நேர்ந்து சலித்து விட்டது. ஜோக்கருக்கும் காக்கா முட்டைக்கும் விசாரணைக்கும் ஜிகர்தண்டாவுக்கும் கூட இவர்கள் இதே அடைமொழியுடனே அவற்றை வழிமொழிந்தார்கள் என்பதை மறக்கலாகுமா? என்னுடன் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தைப் பார்த்த உலக சினிமா இரசிகர் ஒருவர், ‘நான் சாகறதுக்குள்ளயாவது இப்படி ஒரு படத்தை தமிழ்ல எடுத்திட மாட்டாங்களான்னு தவிச்சுக் கெடந்தேன். இனிமே என் கட்டை நிம்மதியா வேகும்’ என உணர்ச்சி மேலிட புளங்காகிதமடைந்து நிம்மதி பெருமூச்செறிந்தார். இத்தகைய ஆட்கள் வெற்று பழக்கத்தின்பாற் சிறைப்பட்டு அசல் உலகத் திரைப்படங்களைப் பார்த்து சராசரி இரசனையை உதறி மேலெழுந்து விட்ட பாவனையில் உலா வருகிறார்களே அன்றி அவற்றின் நுட்பமான வேறுபாடுகளை அறிந்து அதன் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்ட மேலான பார்வையாளர்கள் அல்ல என்பது திண்ணம்.

தமிழில் எடுக்கப்படும் மாற்று முயற்சிகளுக்கென்று சில பிரத்யேக அடிப்படை விதிகளை நமது விமர்சகர்கள் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் பூர்த்தி செய்தால் அது ‘கலைப்படம்’, இல்லையேல் வணிகக் குப்பை. அவை அனைத்தையும் கறுப்பு வெள்ளையாக அணுகுவதில் உள்ள போதிய பயிற்சியின்மையின் முதிரா வெளிப்பாடுகள் மட்டுமே. ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வியலைச் சொல்லும் கதைக்களம், மேலோட்டமான சமூக அக்கறை, நவீன வாழ்வு மற்றும் வசதிகள் மீதான ஒவ்வாமை, கொஞ்சம் சிகப்புச் சாயம், அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மெல்லிய சாடல் போன்றவற்றை உள்ளடக்கியத் திரைப்படங்களுக்கு உடனடி செவ்வியல் அந்தஸ்து கிடைக்கும். காட்சிகளின் நகர்வில் ஓர் ஆமைத்தனம் கட்டாயமாக இருக்க வேண்டும். தர்க்க மீறலுக்கு வழிவகுக்கும் வகையில் நமது திரைப்படங்களில் திணிக்கப்படும் பாடற்காட்சிகள் இடம்பெறாவிட்டால் ஐயமின்றி அது உலகப்படமே தான். பாடல்கள் இருந்தாலும் அவை காட்சிகளின் பின்னணியில் ஒலித்தால் நமது விமர்சகர்கள் புறுபுறுக்க மாட்டார்கள். மதிப்பெண்கள் வழங்குவதில் கருணையும் காட்டப்படும். அதாவது, தமிழ்ப்படங்களின் வழக்கமான மிகை ஆர்ப்பாட்டங்களை வடிகட்டி விட்டு தரையில் காலூன்றி நிற்கும் ‘யதார்த்தச்’ சித்திரங்களே இவர்களைப் பொறுத்தமட்டில் வருங்கால விருட்சத்திற்கான நம்பிக்கை விதைகள். இத்தகைய பாமரத்தனமான முயற்சிகளே தமிழ்ப்படங்களில் கலை ரீதியிலான வெற்றி பின்னாளில் சாத்தியப்படுவதற்குண்டான அடிக்கல்கள். இது போன்ற பரீட்சார்த்த படைப்புகளின் வணிக வெற்றியே புதிய பாய்ச்சல்களுக்கான ஊக்க சக்தியாக அமையும் என்றார்கள். எனவே, எவரும் இவை குறித்து எதிர்மறையாக சொல்வதோ எழுதுவதோ மாபெரும் குற்றம். இதனை மீறுபவர்கள் அனைவரும் முன்னோடி முயற்சிகளை முளையிலேயே நசுக்க நினைக்கும் நச்சுப் பாம்புகள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதையே சொல்லி வருகிறார்கள். இன்னமும் முன்னேற்றம் கண்டபாடில்லை.

மிகையின்றி இருப்பதாலேயே ஒரு படைப்பு மகா காவியமாகி விடாது. நிதானமாக நகர்வதென்பது அடிப்படை விதியுமல்ல. கலையின் கூறுகளே வேறு. எளிமையான கதைகள் பலவும் வலுவான உணர்ச்சிகளைக் கையாண்டு நீடித்தத் தாக்கத்தை பார்வையாளரிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. அன்றாட அலைச்சல்களின் சலிப்பூட்டக்கூடிய சம்பிரதாய நிகழ்வுகளின் ஊடாக காவியக் கண்டடைதல்களைக் கொண்டு வந்த திரைப்படங்கள் ஏராளம். கதை கோரும் திரைமொழியை அவை தேர்ந்தெடுத்துக் கொண்டு தன்னளவில் முழுமையடைந்திருந்ததே அதற்குக் காரணம். மற்றபடி, மேற்கூறிய உள்ளடக்கங்களை போலி செய்து பம்மாத்து காட்டுபவனவற்றுள் பெரும்பாலான படங்கள் சவலையானவை. மூலப்பொருட்களை எவரும் சேகரம் செய்யலாம். சமையற் பக்குவம் கை கூடியதா என்பதே முக்கியம். அசட்டுத்தனமான வணிகப் படங்களுக்கே பேராதரவை நல்கி வரும் தமிழ்ச்சூழலில், அரிதாக வெளியாகும் ‘குறிஞ்சிப்பூ’ முயற்சிகளுக்கு பக்கபலமாக இல்லாவிடினும் அதன் குறைகளை பெரிதுபடுத்தி மூர்க்கமாக எதிர்க்காமல் இருக்கலாமே என சில திரைப்பட ஆர்வலர்கள் விசனப்பட்டிருந்தார்கள். புறச்சூழலின் எதிர்வினைகளைப் பொறுத்தோ பொதுத்திரளின் கலையறிவு சார்ந்த புரிதல் நிலைகளை கணக்கில் கொண்டோ கலையின் அளவுகோல்கள் மாறுபடாது. அதில் சமரசங்களுக்கும் இடமில்லை. அந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வியக்கத்தக்க சாதனைகளோ மாற்றமைக்கான அடிப்படை கூறுகளோ இல்லை என்பதை உரக்கச் சொல்வது அவசியமாகிறது. பிறர் பயணிக்கத் தயங்கும் காட்டுப் பாதையை இயக்குநர் லெனின் பாரதி தேர்வு செய்திருக்கிறார் என்பதில் இரு வேறு அபிப்ராயங்கள் இருக்க முடியாது. எனினும், பலவீனங்கள் மலிந்த காட்சிப் பிரதியை அதன் தகுதிக்கு மீறி விதந்தோதுவது என்பது மேலும் பல ஆபத்தான போக்குகளுக்கே வழி வகுக்கும். மாற்று முயற்சி என்ற பெயரில் எதை எடுத்து வைத்தாலும் முட்டுக்கொடுக்க ஆட்கள் இருப்பார்கள் எனும் தைரியம் துளிர் விடுவது அபாயகரமானது இல்லையா? நமது பழைய சமரசங்களுக்கான தண்டனையைத் தான் நாம் ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, அதனதன் இடத்தில் அதனதனை வரையறுத்து வைப்போமாக! தற்சமயம் பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இத்திரைப்படம் வெளியேறிவிட்ட நிலையில், இதனை விமர்சனரீதியில் அணுகி பகுப்பாய்ந்து மறுதலிக்கும் செயல் இது ஈட்டக்கூடிய வணிக இலாபத்திற்கு ஊறு விளைவிக்கப் போவதில்லை. ‘இது நல்ல படமல்ல’ எனும் எதிர்மறைப் பார்வை திரையரங்குகளை நோக்கி மக்களை இழுப்பதை தடுக்கப்போவதுமில்லை.

படம் முழுக்கவே உணர்வுத் தளத்தில் விலக்கம் கூடிப்போய் இருந்தது. ‘இது ஆவணத்தன்மை கொண்ட புனைவாக்கம். தமிழுக்கே இந்த வகைமை புதிது’ என்று சிலர் அபிப்ராயப்பட்டனர். அதன் அடிப்படையில் பாராட்டியும் இருந்தனர். ஓர் ஆவணப்படத்தில் சிந்தனைக்கும் எதிரெதிர் கருத்தியல்கள் ஊடாக திரண்டெழும் தரிசனத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அவற்றுடன் நம்மைப் பிணைக்கும் சரடாக வரலாற்று சாட்சியங்களும் அந்த உண்மை மனிதர்களின் அனுபவங்களும் துணை நிற்கும். மனச்சாய்வுகளை இயன்றவரை தவிர்த்து விட்டு கறாரான புறவய நோக்குடன் அணுகி ஆராயும். புனைவிலோ சிந்தனையின் இடத்தை நாடகீயத் தருணங்களும் உணர்ச்சிகரங்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்த இரண்டு வகைமைக்குள்ளும் அடங்காத மோசமான திரைப்படம் தான் மேற்குத் தொடர்ச்சி மலை. இவ்விரண்டின் விநோதக் கலவை இது எனும் முடிவை எட்டுவதற்குண்டான சாத்தியக்கூறுகளும் அதனுள் கிஞ்சித்தும் இல்லை. ஒரு பரிசோதனை முயற்சியின் இறுதியில் அடையக்கூடிய புதிய விளைவை உத்தேசமாக ஊகித்தோ இன்னதென்று வரையறுத்து விட இயலாத எதிர்பாராத விளைவுகளை அனுமானித்தோ தெளிவின்மையின் குறுகுறுப்புடனோ தான் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எப்பேர்ப்பட்ட முயற்சியாக இருப்பினும் அதன் பெருமதிப்பு என்பது எப்போதும் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். பார்வையாளர்களை பரிசோதனை எலிகளாக பாவித்து செய்யப்பட்ட முயற்சி இது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போய் விடுகிறது! இதை ஏதோ உலக சாதனை எனக் கொண்டாடும் முதுகு சொறிதல்கள் மிகுந்த ஆயாசத்தைத் தருகின்றன. ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ சக்கரை.

இதன் திரைமொழியில் பிரக்ஞைபூர்வமாக திட்டமிடப்பட்ட கட்டுடைப்புகள் நிகழ்ந்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை. லெனின் பாரதிக்கு இந்தக் கதைக் களத்தில் இவ்வளவு தான் சாத்தியப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு வழிப்போக்கர்களும் தொழிலாளர்களும் மலையேறும் தொன்மக் கதை மட்டும் படத்தில் கவனிக்கத்தக்கதாக இருந்தது. ‘எல்லாரும் மலையேற கல்லை எடுத்துட்டு வருவாங்க. என்னை மலை இறங்க கல்லைத் தூக்க வச்சிட்டீல்ல?’ என வயதான மூட்டைத் தூக்கும் தொழிலாளி அடிபட்ட அகங்காரத்துடன் தெய்வத்திடம் முறையிடும் இடம் ஒரு சிறிய நம்பிக்கையைக் கூட ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு வருவதெல்லாம் முன்கூட்டியே எளிதாக ஊகித்து விட முடிபவை. அலுப்பூட்டும் அவல நாடகம். மெல்லுணர்ச்சிக் குவியல். ‘இந்த எடத்தில மழை பெய்ஞ்சு விளைஞ்சது எல்லாம் நாசமாகப் போகும் பாரேன்’ என நாம் நினைப்பதெல்லாம் நடக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல், நாம் நம்மை நாஸ்டர்டாமஸாக உணரத் தொடங்குகிறோம். எல்லாத் திரைப்படங்களும் திடீர்த் திருப்பங்களையும் ஆச்சரிய சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்கிற அர்த்தத்திலோ எதிர்ப்பார்ப்பிலோ இதனைக் குறிப்பிடவில்லை. இத்திரைப்படம், வருந்தத்தக்க செய்திகளை வாசிக்கையில் உண்டாகும் குறைந்தபட்ச பாதிப்பைக் கூட உருவாக்கத் தவறிய பலவீனமான கூறல் முறையைக் கொண்டிருந்தது. அதனால், சம்பவங்களின் நகர்வில் எவ்வித தாக்கமுமின்றி தேமே என வேடிக்கைப் பார்க்க வேண்டியுள்ளது. தீவிரமாக மெனக்கெட்டு படத்துடன் ஒன்ற நினைத்தாலும் பார்வையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது.

இரண்டு மணி நேரப் படத்தில் ஒரு நாடகீய மோதல் கூட உருவாகி வரவில்லை. சிடுக்குகளற்ற தட்டையான கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு வேறென்ன தான் செய்ய முடியும்? புறச்சூழ்நிலையின் பாதிப்பினால் நேரக்கூடிய கதை மாந்தர்களின் தடுமாற்றங்களும் கூர்மையாகப் பதிவு செய்யப்படவில்லை. ஏழை எளிய மக்களுக்கென புழக்கத்தில் இருக்கும் அச்சு வார்ப்புகளை அப்படியே பிரதி எடுத்திருக்கிறார்கள். இவை போதாதென்று ஏராளமான கட்டுப்பெட்டித்தனமான முன்முடிவுகளுடன் வேறு அணுகி இருக்கிறார்கள். அழுத்தமற்ற சம்பவங்களின் பின்னணியில் நெய்யப்பட்ட படத்தில் கதைக்கோர்வையும் பிசிறடிக்கிறது. நாம் அதிகம் அறிந்திராத நிலப்பரப்பின் கதைக்கு நம்பகத்தன்மை அளிக்கும் நுட்பமான தகவல்களும் மேலதிக விவரிப்புகளும் எத்தனை அவசியமானது? ஒன்றுமே தட்டுப்படவில்லை. சகாவு என்னமோ ‘சாயா குடிக்க வாடே’ என்று கூப்பிட்டது போல அவர் அழைத்தவுடனே நான்கு நபர்கள் கொலை செய்யக் கிளம்பி விடுகிறார்கள். இந்த நான்கு நபர்களுள் மனைவி பிள்ளை சகிதம் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பஸ்த கதாநாயகனும் அடக்கம். பின்னே, கதாநாயகன் அப்போது தான் சிறைக்குப் போக முடியும். கைவிடப்பட்ட குடும்பம் கடன் வாங்கும். அதிகாரம் நிலத்தை கையகப்படுத்தும். குய்யோ முய்யோ கூப்பாடு போட வசதியாக இருக்கும். கஷ்டம், கஷ்டம், கஷ்டம்! கதையின் இடையே ‘விக்ரமன் படப் பாடல்’ பகுதி வேறு இடம்பெற்றிருக்கிறது. இதுவே வணிகப் படங்களில் வரும் போது நம் ஆட்கள் நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். இப்போது வந்திருப்பது ‘மாற்று முயற்சி’யில் அல்லவா? குறியீடு கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் இளையராஜா! அவரிடமிருந்து அந்தப் புல்லாங்குழலை யாராவது பிடுங்கி இருக்கலாம். மனிதர் சோகத்தைப் பிழிந்தெடுத்து விடுகிறார்.

இந்தத் திரைப்படம் குறித்த கருத்தரங்கில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி தனக்குப் படம் பிடிக்கவில்லை என்றும் மற்றவர்கள் விதந்தோதுவதைக் கேட்கையில் தன்னுடைய இரசனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் போல என்றும் கூறியிருந்தார். உங்களது இரசனையில் எந்தக் கோளாறும் இல்லை விஜய் சேதுபதி. இந்தப் படத்தைப் பாராட்டியவர்களே தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள்.