பாய்மரக்கலங்கள் ஓடியாடிய சகாப்தத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அராபியர், சீனர், கிழக்கு ஆப்ரிக்கர், ஃபிலிப்பினோக்கள், மலேயர், தென்னாசியாக்காரர் ஆகிய சுதேசிக் கடலோடிகள், “லஸ்கர்” என்ற ஒரு இனக்குழுவை உருவாக்கினார்கள். பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், உண்மையிலேயே பல்வேறு இனத்தவர் கலந்து நிறைந்த இந்தக் குழு, ‘லஸ்கரி‘ மொழியை உலகுக்கு அளித்தது. பைபிளில் வரும் பேபல் கோபுரத்தில் நடந்தது போல் ஆங்கிலம், மலாய், ஹிந்துஸ்தானி, சீனம், மலையாளம் என்று கப்பல் தளத்தில் பேசப்பட்ட எல்லா மொழிகளையும் கலந்து, மரக்கலங்களைச் செலுத்த உருவாக்கப் பட்டது இம்மொழி.
லஸ்கர்களின் வாழ்வியல் பற்றித் தெரிந்து கொள்வது என்பது, முன்பை விட இக்காலத்திலேயே மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாயிருக்கும். கோள வடிவமாக்கப்பட்ட தம் பணிவெளியில், சுதந்திரமாகப் பங்காற்றி, வெகுவான எண்ணிக்கையில் நடமாடிய முதல் ஆசியர்களும் ஆப்ரிக்கர்களும் அவர்கள் தாம்; வெகு அகல நீளத் தூரங்களில் பயணித்தவர்களுள் முதலாவதானவர்களும் அவர்கள் தாம்; தொழில் முறை ரீதியிலான பணியில், முதலாமவர்களாகப் பங்கேற்றவர்கள் அவர்கள் தாம்; ஐரோப்பாவில் குடியேற்றத்தைப் படைத்த முதலாமவர்கள் அவர்கள் தாம்; வேலை நேரத்தின் கடிகைக்குக் கட்டுப்பட்ட லயத்தின் அனுசரிப்பை ஏற்ற முதலாமவர்கள் அவர்கள் தாம்; புதிய தொழில்நுட்பங்களின் தோற்றத்துக்குப் பழக்கப்பட்ட முதலாமவர்கள் அவர்கள்தாம்.
***
ஆர்மீனியர்களையும் குஜராத்திகளையும் போலவே பங்களாதேஷ்காரர்களும் தங்கள் தேசத்தவர்களை உலகின் எதிர்பாராத இடங்களிளெல்லாம் கண்டதான கதைகளை அடிக்கடி கூறுவார்கள். எப்போதும் இப்படிச் சொல்லி கேட்டிராத ஒரு திசையிடத்தை, ஆஸ்திரேலியர்களின் ‘குடும்ப வரலாற்றுக் குழுவினர்’ பயன்பாட்டுக்காகப் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு இணையதளத்தில் கண்டேன். இதில்தான், 1854 நவம்பர் 8-ல் இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 44 பேர் கொண்ட குழுவுடன் பயணித்து, சிட்னியை அடைந்த 596 டன் எடை கொண்ட வில்லியம் ஸ்டீவர்டு என்ற கப்பலின் ஆவணங்களை அறிந்து கொள்ள வாய்த்தது. திரு. சார்லஸ் ஜே ரிச்சஸ் என்ற ஒரு கேப்டன் தலைமையில் வந்த அந்தக் கப்பலில், லண்டனைச் சேர்ந்த திரு. வெப் என்ற ஒரேயொரு தனித் துணைவர் தான் இருந்திருக்கிறார். ஆவணப் பட்டியலில் இருந்த மற்றவர்கள், கையளவு (ஏழு அல்லது எட்டுப் பேர் இருக்கலாம்) வெள்ளை இன மாலுமிகள் மட்டுமே; பிறர், லஸ்கர்கள் எனப்பட்ட பல்வேறு படித்தர ஊழியங்களில் இருந்தவர்கள்.
யார் இந்த லஸ்கர்கள்? பட்டியலின் சுருக்கமான குறியீடுகள் மூலம், தேவைக்கு அதிகமாகவே அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளிப்பட்டன. பெரும்பாலும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சில கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களும் கூட அவர்களுக்குள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர், இப்போது பங்ளாதேஷில் உள்ளஷில்கெட்டைச் சேர்ந்த 48 வயதான ஒரு நபர்; இளையவர், மெட்ராஸ் / சென்னையைச் சேர்ந்த 16 வயதுக்காரர். ஆனால் அவர்களுள் பெரும்பாலோர், இருபதுகளிலும் முப்பதுகளிலும் ஆன வயதில் விளங்கினார்கள். இங்கிலாந்து-அமெரிக்க மாலுமிகள் தமது ஊழியத்தைத் தங்களது பதின்பருவத்திலேயே தொடங்கிவிடுவார்கள் என்பதால், வயதுத் தகுதி பற்றிய வரையில் இந்த லஸ்கர்களை இளையவர்கள் என்று சொல்லி விட முடியாது. மிக முதுநிலை லஸ்கராக விளங்கியவர், பம்பாயிலிருந்து வந்த 32 வருட வயது கொண்ட செரிங் முகமது என்ற ஒரு மாலுமி. அடுத்த தகுதி நிலையில் இரு தண்டல்கள் – சிட்டகாங்கிலிருந்து ஒருவர், ‘பம்நெல்’லிலிருந்து ஒருவர். கூகிள் தேடுபொறியில் கூடத் தெரியவராத அந்தஸ்தைக் கொண்ட இடம் இந்த பம்நெல். மீதியுள்ள 12 லஸ்கர்கள் பிரிவினை செய்யப்படாத அன்றைய வங்காளத்தின் ஷில்கெட், பார்ஸால், நவகாளி, கல்கத்தா ஹெளரா போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். மேலும்6 பேர், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்து மெட்ராஸையும் உட்படுத்திய பல்வேறு துறைமுகங்களிலிருந்து வந்தவர்கள். கடல் சார் தொழில்நுட்ப நிபுணர்களில் ஒருவரான ரோடரிக் என்ற பெயரையுடையவர் கொழும்புவிலிருந்து வந்த ஒரு பர்கர் (இலங்கைக் குடிகளோடு கலந்துவிட்ட ஒரு ஐரோப்பிய இனத்தைச் சார்ந்தவர்). மேலும் கோவாவிலிருந்து இருவர். மலேயாவிலிருந்து இருவர், அராபிய ஆப்பிரிக்கர்கள் என்று தோற்றம் தரும் இருவர், அந்தக்கால வழக்கில் ‘மணிலாக்கார்கள்‘ எனப்பட்ட ஃபிலிப்பினோக்களில் இருவர்.
வில்லியம் ஸ்டூவர்டு கப்பல் குழுவினர், முரண்பிறப்பு வகைமையால் தனிச்சிறப்புக் கொண்டவர்கள் என்பதல்ல இதன் பொருள். 1858-ல் ஹாங்காங்கிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 1228 டன் எடையுடன் பயணித்து வந்தது ஒரு நீராவிக் கப்பல். 7 பேர் கொண்ட குழுவைக் கொண்டது அது. அதில் 36 பேர் வெள்ளை மாலுமிகள். நான்கு ஜெர்மானியரைத் தவிர மீதி எல்லோரும் ஆங்கிலேயர்கள். மற்றவர்கள் பல்வேறு ஊழியப் படிநிலைகள் கொண்ட லஸ்கர்கள். அதில் வங்காளத்திலிருந்து ஏழுபேர்; மீதியுள்ளவர்கள் மிக வேறுபட்ட பல்வித இனங்களிலிருந்தும் வந்தவர்கள். டாமன், கொச்சி, கோரக்பூர், முங்கார், பெங்கூலன் (சுமித்ராவின் புறத்திலுள்ளது), மாஸ்ஸவா (கிழக்கு ஆப்பிரிக்கா) போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள்.
இம்மாதிரிப் பட்டியல்களில் லஸ்கர் என்ற சொல், பொருந்தி வராததாக உள்ளது. இந்தச் சொல் எங்கிருந்து வந்தது, இதற்கு என்ன அர்த்தம் என்று நாம் ஆச்சரியப்படும் படியாக உள்ளது. பாரசீக உருதுச் சொல்லான லஸ்கர் / லஸ்கரி என்பது, ‘மாலுமி’அல்லது ‘ராணுவம்’ என்று பொருள்படும்படி ஆங்கிலோ இந்திய மொழியில் தழுவப்பட்டுத் தோன்றியது. மொழிகளுக்கிடையில் ஊடாடிச் செல்லும்போது இந்த லஸ்கர், அயல்நாட்டிலிருந்து வந்து வேலை செய்யும் ‘கூலிப்படையாள்’, ‘கூலிப்பணியாள்’ என்று உய்த்துணரக்கூடிய பண்புப் பெயராக ஆகியிருக்கலாம்; இந்த அர்த்தத்தில், ஒருவகை ‘மாலுமி’க்குக் கூறப்படுவதாக இது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த மாற்றம் முதலில் போத்துக்கீஸியத்தில் ஏற்பட்டதாகத் தோன்றுகிறது. அதில் லஸ்கர்/லஸ்குவாரிம் என்ற சொற்கள் 1600 ஆண்டு வாக்கிலிருந்து வழக்கில் இருந்திருக்கிறது. மற்ற பல கடல்துறைக் கலைச்சொற்களைப் போல் லூஸிதானிய மொழி வழியாக அது ஆங்கிலத்துக்குள் நுழைந்திருக்கலாம். இந்த வாசகத்தின் கடல்துறை வழக்கில், எப்படியோ ஒரு ஐரோப்பியத் தன்மை உள்ளது. உதாரணமாக, இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தச் சொல் இன்றும் பொதுவாகப் ‘படை’ அல்லது ‘ராணுவம்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. (லஸ்கர் என்ற பெர்சிய மொழிச் சொல் அடிக்கடி அராபிய அஸ்கரி – சிப்பாய் – என்ற பெயருடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தத் தொடர்பு சந்தேகத்துக்குரியது.) மாலுமி என்ற விரிந்த பொருளில் இது ஐரோப்பியர்களால் இந்தியத் துணைக்கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுத் தோன்றியிருக்கலாம். இன்று இவர்கள் இதைப் பயன்படுத்தும்போது, தொன்மையும் அந்நியத்தன்மையும் தொனிப்பதாக அது இருக்கிறது. தொகுத்துச் சொன்னால், விலிலியம் ஸ்டூவர்டின் பயன்பாட்டுச் சட்டவிதிகளில் குறிப்பிடப்படும் ‘லஸ்கர்‘ என்ற வார்த்தை, கடல்துறைச் சொல்லாகவும் காலனியச் சொல்லாகவும் இரு வகைக் குறியீடுகளிலும் வழங்கியிருக்கிறது; அந்தந்த விஷயத்திற்கேற்ப தனித்தன்மையானதாக இருந்திருக்கிறது.
அப்படியானால், என்ன தான் இதன் பொருள்? வில்லியம் ஸ்டீவர்டு கப்பல் போன்ற ஒன்றின் பணியாளர் பட்டியலை, ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் செறிவான விளக்கத்தின் (‘கிழக்கிந்திய மாலுமி’) அருகில் வைத்துப் பார்த்தால், ஆல்பர்ட் பார்ரெர், சார்லஸ் லெலாண்டு என்ற 19ஆம் நூற்றாண்டு அகராதியாளர்களின் (‘மலாய் மாலுமி’) விளக்கத்தைக் காட்டிலும் தவறான வழிகாட்டுதலையே தருவதாக இருக்கிறது. நடப்பில் இந்தப் பதம், இந்துமகா சமுத்திரப் பிரதேங்களின் அனைத்து உள்நாட்டு மாலுமிகளையும் குறித்து வந்துள்ளது – ‘சுதேசி’ என்று இன்று வழங்கி வருவதன் அக்கால வழக்காயிருக்கலாம் இது. அராபியர், தென்னாசியர், மலேயர், கிழக்கு ஆப்ரிக்கர், ஃபிலிப்பினோக்கள், சீனர் போன்றோரைப் பேதா பேதமற்று இது குறித்திருக்கும். அந்த தனியொரு வார்த்தை, இந்த அளவுக்கு தன் வலையை வீசி தனக்கானஅர்த்தத்தைப் பிடித்தது, இந்தக் காலத்தையும் நிலத்தின் மேல் வாழ்வையும் கொண்டோருக்குத்தான் விசித்திரமாயிருக்கும். முந்தைய ஒரு சகாப்த ஐரோப்பிய மாலுமிகளுக்கு ‘லஸ்கர்’ என்ற சொல், பசிபிக் பிராந்தியச் சுதேசிக் கடலோடிகளைக் குறிக்கும் ükanakaý என்ற சொல்லுக்கு இணையாகவும் எதிர்ப்பதமாகவும் தான் இருந்திருக்கும். சமுத்திரம் சார்ந்து குறிப்பிடும்போது, இந்த இரு பதங்களும் தமது வலையை அகல விரித்து அர்த்தத்தைப் பிடிக்க முனைவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதே போல், இந்த இரண்டுமே தம்மேல் வந்து கவிந்த இனவாத மலினத்துக்கு ஆட்பட்ட விதியையும் நினைத்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தான்.
லஸ்கர்கள் என்போர் வளமான அகில உலகக் குழுவினர் என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், அவர்கள் தென்னாசியா, கிழக்கு ஆப்ரிக்கா, அராபியக் கடற்கரைப்பகுதி, அல்லது மலேய தீபகற்பம் என்று எங்கிருந்து வந்திருந்தாலும், அம்மாலுமிகள் கப்பல் தளத்தில் ஒரு தடவை கால் வைத்தவுடன் ஒன்றாக்கப்பட்டு விடுகிறார்கள். வார்த்தைகள் அடிக்கடி தங்கள் சொந்த யதார்த்தத்தைப் படைத்துதக் கொள்கின்றன: ஓடும் கப்பல்களின் உதரங்களில் நெரிபடும் அவர்களது வாழ்க்கையைப் பற்றி, அதிபயங்கரங்களையும் கஷ்டங்களையும் கொண்ட நிலைமைகளுக்குள் அவர்கள் பொருந்திக்கொள்வதைப் பற்றி, விஷேசமான ஒருவகை உவர்நீரின் உப்பில் பதப்படுத்தப்பட்டவர்களாய் – உலகெங்கும் உள்ள கடலோடிகளின் வாழ்க்கை இபபடித்தான் இருக்கும் என்றாலும் – இந்தியப் பெருங்கடலின் ஒவ்வொரு மூலையிலுமிருந்து வந்து இந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இம்மனிதர்களைக் கற்பனை செய்து பார்ப்பது சுலபமானதே.
கப்பல் குழுவினரின் பல்லுயிரிய வேறுபாட்டுத் தன்மை
இன்றைய நாட்களில், பல்லுயிரியம் பற்றி எதோ ஒரு புதிய சாகசக் கண்டுபிடிப்பாகப் பேசப்படுவதைக் கேட்பது பொதுமையாகி விட்டிருக்கிறது. ஆனால், பாய்மரக்கப்பல் சகாப்தத்தின் வணிகக் கப்பலின் பணிக் குழுக்களைப் போன்று மிகவும் பல்வேறு வகைப்பட்ட ஆட்களின் தொகுப்பு – அவர்கள் ஆண்களாக மட்டுமே இருந்தாலும் – எங்கும் எப்போதும் காணக் கிடைப்பது அருமை. இதை மிகக் கூர்மையாக அவதானித்திருந்தவர்களில், அல்லது நல்ல விதமாக பிரதிநிதித்துவப்படுத்த முயன்றவர்களில், ஹெர்மன் மெல்வில்லை விட வேறொருவரும் இருக்க முடியாது. குறிப்பாக, அவரது ‘மோபி டிக்’ நாவலின் துணுக்குறும்படியான 40வது அத்தியாயத்தில், ஹாலந்து, பிரான்ஸ், மால்டா, லாங் ஐலண்டு, அசோரஸ், டாகிட்டி, சிசிலி, ஐல் ஆப் மேன், சைனா போன்றவற்றிலிருந்து வந்த மாலுமிகள் அடங்கிய பிகோட் கப்பல் குழுவினர் – தம் பாரிய அடர்மழைக் குரல்களால் பாடத் தொடங்கும் வேளையில், அந்த சிறிய நான்டிகட் திமிங்கல வேட்டைக் கப்பல், மிதக்கும் ஒரு பேபல் கோபுரமாகத் தோன்றத் தொடங்கி விடுகிறது. அங்கே அவர்களுள், லஸ்கர் அடையாளத்துடன் ஒருவன் அந்த கேளிக்கையில் பங்கெடுத்துக் கொண்டு சொல்கிறான்: “பிரம்மாவின் அருளால், பாயை விரைவில் இறக்கிவிட வேண்டும் பசங்களா. ஆகாய வாகினியான அலை மோதும் கங்கை காற்றாக மாறுகிறாள். சிவனின் நெறித்த கரும் புருவத்தைப் பார்.” பிகோட்டில் அவன் மட்டுமே ஒரேயொரு ஆசியன் அல்ல: மோபிடிக் கதையில் வரும் கேப்டன் அஹாப்பின் மர்மமான தனிவகை மண்டாக்காரர் (திமிக்கலத்தைப் பிடிக்க எறியும், ஹார்பூன் என்னும் ஈட்டி போன்ற எறிபடை தாங்கியவர்கள்) களின் குழுவில் பார்ஸிகளும் இருந்ததாக மெல்வில் சொல்லுகிறார். இந்த வழக்கத்துக்கு மாறான வர்ணிப்புகள் மெல்வில்லின் தீர்க்கத்தன்மையையும் அவதானத்தின் ஆற்றலையும் சந்தேகமறப் புலப்படுத்தி விடுகிறது. உண்மையில், அவர்தான் 19ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் மிகச்சிலருள், லஸ்கர்களின் உலகம் பற்றி சில அவதானங்களைச் செய்ய அவகாசம் எடுத்துக் கொண்டவர். அவரது சுயசரிதாபூர்வமான Redburn என்ற நாவலை, ஒரு மாலுமியாக இருந்த தனது ஆரம்பகால கட்ட அனுபவங்களின் அடிப்படையில் அவர் எழுதியுள்ளார். இந்த நாவலில் ஐராவதி என்று அழைக்கப்படும் கப்பல் ஒன்று வருகிறது. லிவர்பூலை தாம் வந்தடைந்த போது, துறைமுகத்தில் இந்தக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தாக எழுதுகிறார். இந்த ஐராவதி, மேற்கத்திய பாணியில் ஆசியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கு பொதுவாக வழங்கும் ஒரு பதம். அது ‘ஒரு நாட்டுப் படகு’. லிவர்பூலில் ஐராவதியும் அதன் லஸ்கர் குழுவும் ஒருவகை விசித்திரத்துடன் பார்க்கப்பட்டது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நன்றாக ஆடை அலங்காரம் செய்து கொண்ட ஆட்களின் கூட்டம் கப்பல் துறைக்கு வந்து இந்தத் தனிவகைக் கப்பலைக் கண்டு சென்றது. அது அவர்களுக்கு வியப்பைத் தந்தது. மேடைப்புறத்தில் குடை வைத்தபடி நின்றிருந்த கிழவிகள், அவர்களைப் பார்த்து வியப்பது அவர்களுக்கு சங்கடத்தைத் தந்தது. லஸ்கர்கள் தனித்து விடப்படவே விரும்பினார்கள். இந்த வியப்பார்வம் உள்ள கிழவிகள், இந்த மாலுமிகளை, விலங்கியல் பூங்காவிலுள்ள சிறுத்தைகளைக் கண்டு களிப்பது போல, ஒரு வகைக் காட்டு விலங்கினமாகவே காண்பது புலப்பட்டது.
மெல்வில்லும் கூட லஸ்கர்களைப் பற்றிஅறிய ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு ஞாயிறு, ஐராவதி இருந்த கடல் மேடைக்குச் சென்று அதில் ஏறிப் பார்த்தார். அங்கே லஸ்கர்களின் ஒரு குழு முன்புறப் பகுதி ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்.
“அவர்களில் மலேயாக்காரர், மகாராஷ்டிரக்காரர், பர்மியர், சயாமியர், சிங்களவர் என்று இருந்தனர். அவர்கள் அரிசி உணவுக்கு முன்பு அமர்ந்து அவர்களது வழக்கப்படி வலக்கரத்தால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் – இன்னொரு கரம் வேறு காரியத்துக்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது என்பதால் அதைப் பயன்படுத்துவதில்லை. மேக்பீ புறாக்களைப் போல் ஹிந்துஸ்தானியில் அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் பலர் மிக நல்ல ஆங்கிலத்திலும் பேச முடியும் என்பதை நான் கண்டேன். அவர்கள் சிறுத்த கால்களை உடைய ஒல்லியான பழுப்பு நிறத்தவர். சிறந்த மாலுமிகள் அவர்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது.”
ஐராவதி மரக்கலத்தைச் செலுத்தும் கட்டளை வாக்கியங்கள், இங்கிலாந்தைக் கடப்பதற்காகப் படைக்கப்பட்ட மற்ற நாட்டுப் படகுகளின் கட்டளைகளிலிருந்தும் வேறுபட்டவை அல்ல. ஐராவதி மரக்கலங்கள் இந்தியாவில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்திய வணிகர்களுக்கு சொந்தமானவையாய் இருக்க வேண்டும். அவை முற்றிலும் லஸ்கர்களால் நிறைக்கப்பட்டிருந்தன. ஆனால்அவர்களுடைய மேலதிகாரிகள் பெரும்பாலும் – எப்போதும் – வெள்ளை இனத்து‘சுதந்திரக் கடலோடிகள் தாம். ஐராவதியின் கேப்டனும் அது போலவே ஒரு ஆங்கிலேயன். அது போலவே மூன்று துணைவர்கள் – முதல்வனும், பணிமுதல்வரும். “இந்த அலுவலர்கள் கப்பல் தளத்தின் தனித் பகுதியில் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆங்கிலத் திருச்சபையின் பிரார்த்தனைகளைப் படித்தார்கள். கப்பலின் மற்றொரு முனையில் புறச் சமயத்தவர்கள், அவர்களது போலிக் கடவுள்களோடும் விக்ரகங்களோடும் விடப்பட்டார்கள். இவ்வாறாக, கிறிஸ்துவம் முன்தளத்திலும், பாகனிஸம் பின்தளத்திலும் விளங்க, ஐராவதி கடலுள் போய் வந்தது”.
ஒரு நாள் இரவு, ‘டாலப்டூல்மான்ஸ்’ என்று தன்னுடைய பெயரைச் சொல்லிக் கொண்ட ஒரு லஸ்கருடன் சம்பாஷணையில் ஈடுபட்டார் மெல்வில். அவன் நல்ல ஆங்கிலத்தில் பேசுவதையும் பெரும்பாலான (புகைப்பவர்களுக்கு இசைவளிக்கும் இசைநிகழ்ச்சி) பார்வையாளர்களைப் போலவே சரளமாக பேசக் கூடியவனாக இருப்பதையும் மெல்வில் கண்டுபிடித்தார். மெல்வில் எழுதுகிறார்:
“இதுபோல் ஒருவனைக் கண்டுபிடித்தது கடவுள் அருளால் தான். நீங்கள் கனவில் கூட காண முடியாத விஷயங்களை அவன் அறிவான். அவனுடைய அனுபவங்கள் சந்திர மண்டலத்தில் இருந்து வந்த ஒரு மனிதனைப் போல் முற்றிலும் விநோதமானவை. ஒரு புதிய வெளிப்பாடு. சாகஸக் கதைகளை நீங்கள் அறிய விரும்பினால், பெரும் வணிகத் துறைமுகத்தின் கடல் துறை மேடைகளில் ஒரு உலாச் சென்று வாருங்கள். உலகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வந்து குழுமியிருக்கும் கடலோடிகளின் கூட்டத்தில், நீங்கள் காணும் பத்தில் ஒருவரில் ஒரு ராபின்ஸன் குரூஸோவை நீங்கள் சந்திக்க முடியும்.”
மெல்வில் ‘ரெட்பர்ன்’ஐ தனது ஞாபகத்திலிருந்து எழுதும்போது, அவரது அந்த முதல் கடல் பயணம் மிகப் பழையதாகி விட்டிருந்தது. எனினும், ஐராவதிக்குள் சென்றது சக்தி வாய்ந்த பாதிப்பை அவரிடம் செலுத்தியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பின்பும் கூட, üsgooný, üteaký போன்ற ஹிந்துஸ்தானி, வங்காளி வார்த்தைகளை அவரால் நினைவு கூற முடிகிறது. அவர் அந்த லஸ்கரின் பெயரைத் தவறாகக் கேட்டிருக்கலாம் என்றாலும், அந்த நிகழ்ச்சியைத் திரும்பவும் நினைவுபடுத்துவதில் அவர் எடுத்துக் கொண்ட அக்கறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடல் துறைப் படைப்புகளின் ஆவணங்களில் லஸ்கர் என்பவன் அங்கங்கே தோன்றினாலும், பெயரற்றவனாகவே பெரிதும் விளங்குவான். இந்த விதத்தில் மெல்விலின் விவரிப்பு மிகவும் உன்னதமானது. டாலப்டூல்மான்ஸ் என்ற பெயரை குழப்பிக் கொண்டதில் அவரது நினைவைக் குறைகூற வேண்டியதில்லை. இன்றைய ஐரோப்பியன், ஒரு ஆசிய அல்லது ஆப்ரிக்கப் பயணியின் பெயரை விசாரித்து அறியும்போது இவ்வாறான குழப்பமான பதிலையே பெறுகிறான். ஒரு ஆர்வமுள்ள இளம் எழுத்தாளன் இப்படிப்பட்ட பெயரை எதிர்கொண்டதைப் பற்றி கற்பனை செய்வது எளிதானதே. டாலப்டூல்மான்ஸ் போன்ற லஸ்கர்கள் தம்மை மறைத்துக் கொள்வதில் நிபுணர்கள். இதுவே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் கப்பல்களின் விவரக் குறிப்புகளின் பதியப்பட்டுள்ள இந்தப் பெயர்கள் உண்மையானவைகளாகப் புலப்படாமல் இருப்பதற்குக் காரணம். உண்மையில், வரலாற்று ஆவணங்களில் தனது சகாக்களோடு கூடிய பட்டியலில் ஒரு லஸ்கர் தனித்துத் தெரிந்தால், எப்போதும் அவன் சிலவகைச் சட்டப் பிரச்சனைகளுக்கும் ஒறுப்பு நடவடிக்கைகளுக்கும் ஆளாவான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, 1649ல் அப்துல் ரைம் என்பவனுடைய வழக்கில் இதைப் பார்க்கலாம். இந்த லஸ்கர் கடற்பயணத்தின் போது, தன் குழுவைச் சேர்ந்த சகாவான ஜான் டூரட் என்ற பெயருள்ள 16 வயது லண்டன்கார சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக தண்டிக்கப்பட்டான். விசாரிக்கப்பட்ட பல சாட்சிகள் இவ்வகை உறவு வழக்கமானது தான் என்று சான்றளித்தார்கள். ஆனால் கப்பல் கேப்டனின் பார்வையில் ஒரு ஹிந்துஸ்தானி பியூனுடன் ஒரு ஆங்கிலச் சிறுவன் சுய விருப்பத்துடன் உறவு வைத்திருந்தது மிக மோசமான குற்றமாகத் தெரிந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 40 கசையடிகளோடு அவர்களது காயங்களில் உப்பைத் தடவ வேண்டும் என்பதும் தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. அல்லது 1814ல் நடந்த வேறு ஒரு வழக்கைச் சொல்லலாம். கிழக்கு லண்டனில் ஒரு லஸ்கர் அவனது உயிரின் கடைசி அங்குலம் வரை சாட்டையால் அடிக்கப்பட்டான். இந்த நிகழ்ச்சி ஒரு நீதிபதியின் கவனத்துக்கு வந்து, ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கியது. அந்தக் குறிப்பிட்ட லஸ்கர் அவனது சொந்த செராங்கினாலே கசையால் அடிக்கப்பட்டான். அதை விசாரிக்கும் போது, அவனது முதலாளிகளான கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒப்புதலோடு, அவனது தொழில்துறை வழக்கப்படியே இந்தத் தண்டனை அளிக்கப்பட்டதாக அவன் வாக்குமூலம் தந்தான்.
இன்றைய புலம்பெயர்ந்தோரின் முன்னோடிகள்
இன்றைய மேற்கு நாடுகளில் உள்ள பதிவு ஆவணங்களற்ற பல புலம்பெயர்ந்தோர்களைப் போல், லஸ்கர்களும் பொதுப்பார்வையில் பெரிதும் சந்தேகத்துக்குரியவர்களாகவே இருந்தனர். எனவே, நாம் அவர்களது வாழ்வைப் பற்றி ஆராய, பலவித மௌனத் திரைகளைக் கிழித்துக் கொண்டு தேட வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், முன்பை விட இன்றைய நாளில் தான் அவர்களது வாழ்க்கை மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாயுள்ளது. இதற்கான ஒரு நல்ல காரணம், இவர்கள் தான் உண்மையில் உலகளாவிய தொழில் வெளியில் மிகப் பெரும் எண்ணிக்கையில் சுதந்திரமாகப் பங்கெடுத்துக் கொண்ட முதலாவதான ஆசியர்களும் ஆப்பிரிக்கர்களும் ஆவர். அவர்களில் இவர்கள் தான் முதலில் விரிவாகப் பயணித்தவர்கள். பணி என்பதன் தொழில் துறை நடவடிக்கைகளில் பங்களித்துக் கொண்ட முதலாமவர்கள். ஐரோப்பாவில் காலனிகளைப் படைத்த முதல்வர்கள். கடிகை நேரத்தின் லயத்தில் கட்டுண்டு பனிக்காலத்துக்கு ஏற்பத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொண்ட முதல்வர்கள். (கப்பல் தளத்தில் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை பணி மாற்றம் என்பது, மிகவும் துல்லியமாக நடைமுறைப்படுத்தப்பட்ட, முதலாம் கண்டுபிடிப்பு) இவர்கள்தான் புதிய தொழில்நுட்பத்தின் வருகையை ஏற்றுக்கொண்ட முதல்வர்கள். (யந்திர யுகத்தின் முன்னோடி தொழில் நுட்பங்களில் ஒன்று கடல் துறை யந்திரத் தொழில் நுட்பமாகும்.) ஆசியர்களில் லஸ்கர்கள் தான் முதலில் ஐரோப்பிய மொழிகளின் கொச்சைப் பேச்சு வழக்குகளுக்கு (இலக்கிய வழக்குக்கு எதிராக) பழக்கப்படுத்தப்பட்டவர்கள். எனவே, ஒரு சரியான பார்வையில் இன்றைய புலம் பெயர்ந்த கணிணி தொழில் நுட்பவியலாளர்கள், நர்ஸ்கள், ஹைடெக் பணியாளர்கள் போன்றோரின் முன்னோடிகள் இவர்கள் தான். தற்கால ஆசிய, ஆப்ரிக்கா பணியாட்கள் எதிர்கொள்ளும் பலவித அதே விதப் பிரச்சனைகளை இவர்களும் எதிர் கொண்டனர். மிகவும் லாபம் தரும் தொழில்துறைச் சந்தையில் இவர்கள் பெறக்கூடியதைக் குறைவுபடுத்த இவர்களது மேற்கத்திய எதிராளிகள் செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் எதிர்கொண்டவர்கள். உதாரணமாக, 1814, 1823 பிரிட்டீஷ் கடல் துறைச் சட்டங்கள் லஸ்கர்களைப் பணியமர்த்துவதில் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தியது. பிரிட்டீஷ் கப்பல் தொழில்துறை விஷயத்தில் போட்டியிடும் நிலைளை இந்தியக் கப்பல் தொழில்துறையைத் தவிர்க்க வைத்து பெயரளவில் முடக்கத்தை ஏற்படுத்தியது.
இன்று, ஐசக் லேண்ட், ரோஸினா விசரம், மைக்கேல் பிஸ்ஸர் போன்ற முன்னோடி ஆய்வாளர்களின் ஆய்வுப் பணியினால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லஸ்கர்களைப் பற்றி தெரிந்ததை விட இன்று மிக அதிகமாக அறிய முடிகிறது. உதாரணமாக, பதினோழாம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்பே லண்டனில் லஸ்கர்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இருந்தார்கள் என்று தெரிகிறது. சட்டப்படி வெள்ளை மாலுமிகளின் சம்பளத்தின் மிகச் சிறுபகுதியே அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களைக் கூலிக்கு அமர்த்துவது லாப சதவீதத்தை விரிவாக்க எளிதான வழியாகவும் இருந்தது என்பதை அறிகிறோம். பல ஆசிய துறைமுக நகரங்களில் கடத்தல் மூலமும் கடன் ஒப்பந்தம் மூலமும் அடிமைப்படுத்தப்பட்டு நன்கு முறைப்படுத்தப்பட்ட கும்பல்களாக இம்மாலுமிகள் பணிக்குச் சேர்க்கப்பட்டனர் என்பதை அறிகிறோம். கங்காணிகள், சில வேளைகளில் தமது இனத்தவரின் குழந்தைகளை மோசமான பணிகளுக்கு விற்றதையும், தாம் செல்லும் துறைமுகங்களை அடைந்ததும், இரக்கமற்ற இந்த கப்பல் பணிமுதல்வர்கள் இந்த இளைஞர்களையும் சிறுவர்களையும் லண்டன், கிளாஸ்கோ வீதிகளில் திரியும்படி விட்டுவிட்டு வந்ததையும் அறிகிறோம்.
என்றாலும், லஸ்கர்களைப் பற்றிக் கடற்கரையில் நாம் அறிந்ததே அதிகம் என்பதும், அவர்களது கடலுள் வாழ்க்கையைப் பற்றி மிகக் கொஞ்சமே அறிவோம் என்பதும் உண்மையாகவே இருக்கிறது. உதாரணமாக, லஸ்கர்கள் பணியாற்றிய பாய்மரக் கப்பலில், இந்த பேபல் கோபுரப் பன்மொழிக் குழப்பத்தில் எவ்வாறு அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டனர்? அல்லது வேறு வகையில் சொல்லப்போனால், வேறு எப்படி அவர்கள் அத்தொடர்பைச் சாதித்தனர்?
2
கடலில் செல்லும் கலம், உலகில் இதுவரை அறிய வந்தவற்றிலேயே மிகவும் அழகு மிக்கது; சுற்றச்சூழலுக்கு ஏதம் விளைவிக்காத சாதகமான யந்திரம். ஆனால், மற்ற யந்திரங்களிலிருந்து கடலோடும் கலத்தை வித்தியாசப்படுத்துவது உண்மையில் என்னவென்றால், அதன் செயல்பாடு பெரிதும் மொழியினைச் சார்ந்திருப்பதே. அதனை ஊடுருவிப் பார்த்தால், சிக்கலான அதன் பின்னலின் கீழ் இதுவரை கண்டறியாத வார்த்தைகளை வலை வீசிப் பிடித்தால்தான், முழுமையான வெளிப்பாடு சாத்தியப்படாதது தெரியும். ஓடும் கப்பலைத் திறமையாக ஓட்ட, ஒற்றைக் கட்டளைக்கு டஜன் கணக்கான ஆட்கள் ஒரேசமயத்தில் ஒத்துழைத்து எதிர்வினை புரிந்தால்தான் முடியும். அப்படிச் செய்யத் தவறினால், பாயை இழுத்துச் சுருட்டும் கருவிகளை நேர்த்தியாகக் கையாண்டு கலத்தைச் செலுத்துவதையல்ல, அதன் முன் முனையை நீருள் மூழ்கடித்து கலத்தைக் கவிழ்க்கும் காரியத்தையே பரிசாகப் பெற வேண்டியிருக்கும். ஆனால் பலவிதக் கட்டளைகளைத் தெரிந்திருப்பதும் கூட அங்கே போதுமானதல்ல. ஓடும் கலத்தில் அர்த்தத்தைப் படைக்க, மொழியைப் போலவே வினைச் சொற்கள் பெயர்ச்சொற்களை நோக்கியிருக்கின்றன. அதன் பல தன்மைகளுள் ஒரு தன்மையைச் சொன்னால், துல்லியமாக, ஓடும் கப்பல் என்பது ஆயிரக்கணக்கில் பெயரிடப்பட்ட பகுதிகளையுடைய, அகன்று விரிந்து மிதக்கின்ற ஓர் லெக்ஸிகன் எனலாம். ஒவ்வொரு வடமும், சுருட்டப்பட்ட பாயைக் குறுக்குச் சட்டத்துடன் பிணைக்கும் ஒவ்வொரு சிறு கயிறும், பாயின் நிமிர்ந்த பக்கப் பகுதியும், பிணைப்பு முளைகளும் தமக்கேயுரிய சொந்தப் பெயரைக் கொண்டவை. இதனால் தான், கப்பலோட்டும் தொழில்நுட்பம்,கப்பல் ஒன்றில் பாரமேற்றும் அளவு அகராதியாளர்களை உற்பத்தி செய்திருக்கிறது. 16ஆம் நூற்றாண்டிலிருந்து, பெரும்பாலான ஐரோப்பியக் கடலோடித் தேசங்களுக்கு கப்பல் கலை அகராதிகள் தேவைப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை, ஏராளமான சொல் தொகுப்புகளையும் பலநூறு பக்கங்களையும் கொண்டவை. அப்படிப்பட்டவற்றுள் ஒன்று, லகர்கள் பணியாற்றிய காலங்களில் பாய், கயிறுகளுக்குக் கீழ் தேடிப்பிடித்த வார்த்தைகளை நமக்கு அளிக்கிறது. அதுதான், ரோபக் (Lieutenant Thomas Roebuck) 1811ல் கல்கத்தாவில் முதல் பதிப்பாகப் பிரசுரித்த, An English And Hindustani Naval Dictionary. 1781ல் பிறந்த ரோபக், திறமையான மொழியியலாளர்; புகழ் பெற்ற ஜான் போர்த்விக் கில்கிறிஸ்ட் என்ற, முதன்முதலில் பெரியதாய் வெளி வந்த ஹிந்தி-ஆங்கில அகராதியின் ஆசிரியரின் கீழ், துணைவராயிருந்து கடினமாக உழைத்தவர். 1806லிருந்து 1809வரை, கில்கிறிஸ்ட் தமது பேரகராதியைத் தொகுக்க ரோபக் துணைசெய்தார். அதன்பின், மாட்சிமை பொருந்திய கம்பனியின் லார்கின்ஸ் கப்பலில் கல்கத்தாவுக்குப் பயணம் செய்த வேளையில், தமது நேரத்தைப் போக்க, கப்பலின் செராங்கான கட்ச்சிலிருந்து வந்த உலீ என்பவர் உதவியுடன், கப்பல் அகராதியைத் தொகுத்தார். செராங் உலீ, ‘மிகவும் அறிவாற்றல் நிறைந்த மனிதர்; மிகுந்த செயல்திறனும் ஒத்துழைப்பும் கொண்டவர்’ என்பதை ரோபக் கண்டறிந்தார். இருந்தும், கல்கத்தாவையடைந்ததும் தமது அகராதிக் குறிப்புகளை பிற மூன்று செராங்குகளுடன் ஒப்பீடு செய்து பார்க்கும் எச்சரிக்கையையும் மேற்கொண்டார். சுட்கன்வ் (தற்கால பங்களாதேஷின் சிட்டகாங்) என்ற இடத்தைச் சேர்ந்த ஷேக் தௌலத், கூலபு (பம்பாய்க்கு அடுத்துள்ள தீவான கொலபாவாக இது இருக்கலாம்) என்ற இடத்தைச் சார்ந்த ஷேக் முகமது, ஜிஹோக்ஹா (குஜராத்திலுள்ள புவன் நகர் மாவட்டக்கிலுள்ள ஹோஜ் ஜா என்ற கடற்கரைப் படடினமாக இருக்கலாம்) என்பதைச் சார்ந்த யூசுப் சுர்ஹஸ் என்பவர்கள் இம்மூவர்.
தமது அகராதியின் பிரசுரத்தைக் காண ரோபக் உயிரோடு இல்லை – 38 வயதில் கல்கத்தாவில் காய்ச்சலால் மறைந்தார். ஆனால் தமது உழைப்பின் பயனை நேரிடையாக அறியும் வாய்ப்புகளை உயிரோடிருந்த போதே அவரால் பெற முடிந்திருக்கிறது. அகராதி, 1813ல் பிரசுரமாகி இரு ஆண்டுகளுக்குப் பின், லண்டனிலுள்ள கிழக்கிந்தியக் கம்பனியின் புத்தக விற்பனையாளர்கள் அவரது அகராதியை மறுபதிப்பாக வெளியிட்டனர். 1882ல் ஜார்ஜ் ஸ்மால் என்ற கிறிஸ்தவ பாதிரியார் அதைப் புதுப்பித்து A Laskari Dictionary Or Anglo-Indian Vocabulary Of Nautical Terms And Phrases in English And Hindustani என்ற பெயரில் பிரசுரம் செய்தார். இதே பெயரில் அது 20ஆம் நூற்றாண்டிலும் தனது பயணத்தை நன்றாகவே மேற்கொண்டது.
அகராதிக்குச் சொல் பட்டியல்
புழக்கத்தில் வந்து, பெயரும் இடப்பட்ட ஒரு மொழிக்கு அதன் கலைச் சொற்களின் பட்டியல் கொண்ட அகராதி உருவாக 70 ஆண்டுகள் ஆனது. லஸ்கரி மொழி, 19ஆம் நூற்றாண்டின் வேகமான கடல்சார் விரிவாக்கத்தின் பரிணமிப்பால் உருவானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரோபெக் தமது அகராதியைத் தொகுத்த காலத்தில், இந்த இனக்குழு மொழி அதற்குள் ஒரு நூற்றாண்டுப் பழமையை அடைந்திருந்தது என்பதற்கு அந்த அகராதியின் பொருளடக்கத்திலேயே தெளிவான சான்று இருக்கிறது. அம்மொழியின் பெரும்பாலான சொற்கள் போர்த்துக்கீஸிய மொழியிலிருந்து வந்தவை என்பதுவே அது. இந்தியாவில் போர்த்துக்கீஸிய மொழியைத் தழுவி எழுந்த வார்த்தைகளின் பரவலான பயன்பாட்டின் அறிமுகத்தில் எழுந்ததே லஸ்கரியின் பொது விநியோக வழிமுறையின் நீட்சி. உதாரணத்துக்கு balti என்ற சொல்லைப் பாருங்கள் – அது போர்த்துக்கீஸிய balde என்றசொல்லில் இருந்து வந்தது. இது மூலத்தில் கப்பலின் வாளிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்தியக் குடியிருப்புகளில் தகரம் அல்லது பிளாஸ்டிக் baldisகளைப் பயன்படுத்தாதவர்கள் இல்லை – balti chiken தருவது இல்லாமல் எந்த ஆங்கிலேய நகரங்களும் இல்லாதது போல். kamra – போர்த்துக்கீஸிய camaraவிலிருந்து வந்தது. பல இந்திய மொழிகளில் ‘அறை’ (room) என்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது லஸ்கரியில் புழங்கிவந்த cabin என்பதிலிருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை. கப்பலின் அடிப்படைக் கட்டமைப்பின் பெயர்களை வைப்பது, போர்த்துக்கீஸியப் பாதிப்பின் தொன்மைக்குச் சான்றாக உள்ளது: அலைகளைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்முகப்பு (cutwater), போர்த்துக்கீஸியத்தில் talhamar, லஸ்கரியில் taaliyaamaar. üForeý, fore-mast என்ற பொருளையுடைய போர்த்துக்கீஸிய traquete-விலிருந்து வந்தது, லஸ்கரியின் trickat.
மீதியுள்ள கப்பல் கட்டமைப்புப் பெயர்கள் ஹிந்துஸ்தானி போன்ற பிற இந்திய மொழிகளிலிருந்து வந்தவை: தளம் – tootuk, முகப்பு – dol, கப்பல் பாய் – serh அல்லது pal. சில பதங்கள் ஒன்றுக்கு மேற்பட்டும் பரவலாகப் பொருள் குறிப்பவை: உதாரணமாக laddu என்பது, தள்ளு வண்டியையும் கப்பல் முன்முகப்பின் பெயர் பொறிப்பு அடையாளத்தையும் குறிக்கும். மற்ற மொழிகளின் பாதிப்போடு சில பதங்கள், மிகவும் துல்லியமாக, சிக்கலான இணைவுகள் கொண்ட கப்பலின் பல பாகங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி, முன்புறப்பாயின் மேல்பகுதியைக் குறிக்க வடிவமைக்கப்பட்ட trikat, gaavi, serh என்பவை சேர்ந்து trikat-faavi-serh (அல்லது, எளிமையாக trikat-gavi) என வடிவம் கொள்கிறது. இதே போல, முன்புடைப்புப் பாய் – trickat sabar, முகப்பு ராஜரீகக் கொடி – trickat tabar, நிலையான முன்முகப்புச் சிறு பாய் – trikat-gavi-sawai, அதிர்வைக் கட்டுப்படுத்தும் முன்புடைப்புப் பாய் – trikat-sabar-dastur, இப்படியாக.
என்றாலும், லஸ்கரிக்கு ஆங்கிலம் தான் கப்பலை விவரிக்க வழங்கும் சொற்களுக்கான முதன்மையான ஊற்றாக விளங்கியது. நங்கூரக் கம்பிவடம் howser – லஸ்கரியில் hansil ஆகிறது; சைகை காட்டும் தடை கொடி jack-block – jugboolak; பாரந்தூக்கியின் நீளக் கையைக் கட்டி வைக்கும் கயிறு martingal – maatanghai; கம்பிவடம் messenger (cable) – masindar. இப்படிப் பெயரிடும் முறையில், மொழிகள் அடிக்கடி சந்தித்தும் சேர்ந்தும் விசித்திரமான சாகசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. கடலோடும் கலங்கள் பலவற்றில் பாய்களுக்கும் பாய்மரக் குறுக்குக் கைச் சட்டங்களுக்கும் இடைப்பகுதிகளில் தமது கண்காணிப்பாளர்களுக்குக் கண் மறைவாயிருக்கவும் அவர்கள் அதிக்கிரமங்களிலிருந்தும் திட்டல்களிலிருந்தும் தப்பிக்கவும் தற்காலிகக் காப்பளிக்கும் சிறு மறைவிடங்கள் இருக்கும். அங்கே வழக்கமாக அவர்கள் தமது ஓய்வு நேரங்களைப் புகைபிடித்தபடி வம்புகள் பேசவும் கதைகள் சொல்லவும் செய்வார்கள். இந்த இடையிடங்களை ஆங்கியத்தில் cross-trees என்பார்கள். லஸ்கரி இதன் சில அசைகளை எடுத்து வைத்து kursi என்று அதை மாற்றிக் கொண்டுள்ளது. ‘நாற்காலி’ (chair) என்று பொதுவாக வழங்கும் அரபியிலிருந்து வந்த ஹிந்துஸ்தானிச் சொல்லுக்குச் சமமானது இது. இச்சொல், பாய்மரக் கழிக்கும் மரக்கலக் கூம்புக்கும் இடையிலுள்ள அந்தச் சந்தோஷம் தரும் இடத்தினைச் சரியாகக் குறிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கப்பலின் முகப்பு வளைவுகளிலிருந்து துருத்திக்கொண்டு முன்நிற்கும் கூம்புக் கிளைகளின் சிக்குப்பிடித்த இணைவுகள் போன்றவற்றுக்கான jib, jib-boom சொற்கள், சுவாரஸ்யமான மொழிப் பிணைப்புகளை உருவாக்கியுள்ளன. சில இந்திய மொழிகளில் ‘நாக்கு’ என்ற பொருளையுடையது jib – கப்பலின் தலைப்பகுதியில் துருத்திக் கொண்டு நிற்கும் முக்கோணப்பாயின் கழி; அரபி, ஆங்கிலம், ஹிந்துஸ்தானி என்று கடந்து flying-jibபுக்கான சொல் fulaana-jiib என்பது, யாரவது ஒருவருடைய நாக்கு என்று மொழிபெயர்க்கப்படக் கூடியது. பல லஸ்கர்களைப் பலிகொண்டுள்ள jib-boom (கப்பலின் முன்கோடியில் நீண்டுள்ள மரச் சட்டம்) என்பதன் நுனி முனை, shaitaan-jiib – சாத்தானின் நாக்கு.
வளமான பல்வேறு பிரிவுகளையுடைய இந்த மக்களின் மொழிக்கு பொருந்தி வரக்கூடியது என்பதால், லஸ்கரி மொழியினது பாதிப்பு, தடம் காண முடியாத ஆழமான அதீதத் தன்மையையுடையதாக இருக்கிறது. இந்த பணிநிலைகளின் பெயர்களையே எடுத்துக் கொள்ளுங்கள் – Serang – முதுநிலைப் பணியாளர் – மலேயாவிலிருந்து வந்ததாக நினைக்கப்படுகிறது. அடுத்துள்ள Tindal – தண்டல்காரன் – மலையாளத்திலிருந்து வந்தது. சுக்கானைப் பிடிப்பவன் sukkaani (ஆங்கிலத்தில் seacunny என்றாகியுள்ளது) – சுக்கான் என்ற அரபிச் சொல்லில் இருந்து வந்தது. மேலாள்/கங்காணி என்ற வார்த்தைக்கான ishtor, ஆங்கிலத்தின் Stewardஇன் வெளிப்படையான தழுவல். கீழ்நிலைப் பணியாளுக்கான kussab, பெர்சிய மொழியிலிருந்து வந்திருக்கலாம். Sweeper என்பதற்கான topas/topaz என்ற சொல் எதிலிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்தச் சொற்களிலேயே மிகவும் சுவாரஸ்யமான ஒன்று, ரோபக்கின் அகராதியில் தனக்கான இடத்தைப் பெறவில்லை. அது தான் pilot என்ற பொருளையுடைய arkati என்ற சொல். ஒரு காலத்தில் வங்காள விரிகுடாவின் மாலுமிகளையெல்லாம் தம் பணியில் வைத்திருந்த ஆற்காட்டு நவாப்பின் மாநிலத்திலிருந்து இந்தச் சொல் வந்ததாகக் கருதப்படுகிறது. ஆபீஸர் என்பதற்குப் பொதுவாகக் கூறப்படும் mate என்பது malum – அராபிய mu’allim அல்லது அறிவுள்ளவர் என்பதிலிருந்து வந்தது. ஆனால் முதலாவது, இரண்டாவது மேலதிகாரிகள் எவ்வாறு வித்தியாசப்படுத்தப்பட்டார்கள்? அவர்கள் Burra, Chhota அல்லது Pehla, Doosra என்றா? ரோபக் எந்தவிதக் குறிப்பையும் தருவதில்லை.
திசையிலக்கைக் காட்டும் சொற்கள் தாம் ஒரு கப்பலில் மிகவும் அதிகமாகப் புழங்கிவரக் கூடிய சொற்களாக இருந்திருப்பது சாத்தியம். இவற்றில் மிக அடிப்படையானவை: for’ard, aft. ரோபக் சொல்வதன்படி இவற்றுக்குச் சமமான லஸ்கரி வார்த்தைகள்: aagi, piichhil. ஹிந்தி/உருதுவில் பரிச்சயம் கொண்ட யாருக்கும், இவை aagey, piichhey என்பனவற்றை பிழையாகக் கேட்டுப் பயின்றவை என்றே தோன்றும். ஆனால் அப்படியல்ல; லஸ்கர்கள் இவ்வாறு தான் உச்சரித்தார்கள் என்று ரோபக் உறுதிப்படுத்திகிறார்; அப்படித் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கொண்டவர்தாம் அவர். திசையிலக்கைக் காட்டும் வேறு இரு பதங்கள், கப்பலின் வலப்பக்கம் இடப்பக்கம் பற்றியவை – லஸ்கரியில் jamnaa burdu, daawaa burdu அல்லது வெறும் jamna, dawa.
ஆசிய மாலுமிகளோடும் கப்பலாட்களோடும் தம் நேரத்தைப் போக்கிய எவரொருவரும் தமது கலங்களை உயிரற்ற பொருள்களாக அவர்கள் கருதவில்லை என்பதை அறிந்திருப்பார்கள். ரோபக்கின் அகராதியிலிருந்து லஸ்கர்கள் தமது கலங்களை உயிருள்ள பொருட்களாக கருதியதை அறிய முடிகிறது. இதற்கான மிக முக்கியமான உதாரணம், கப்பலின் முன்முகப்புக் கொத்தளத்தைக் குறிக்கும் காம்ரா என்ற லஸ்கரி வார்த்தை. அதன் அசைகள் குறிப்பது போல், இந்த ஆங்கில வார்த்தை fore-castle என்பதிலிருந்து வந்தது. ஒவ்வொரு கப்பலின் தலைப்பிலும் ஒரு கோட்டை கொத்தளம் போன்ற அமைப்பிருந்த பழங்காலத்திலிருந்து வருவது இச்சொல். ஆனால் எல்லாக் கலத்திலும் மிக முந்தியுள்ள முன்முகப்பில் வளைவுகளுக்கிடையில் இருந்த இடத்தை காம்ரா என்று வார்த்தை பிறகு குறிக்க ஆரம்பித்தது. மிக உயரத்தில் மிக ஈரமாக உள்ள இப்பகுதி, கப்பலின் மிக மோசமான பகுதி என்பதால் இயல்பாகவே மிகக் கீழ்நிலையிலுள்ள மாலுமிகள் தங்குமிடமாக அது ஆயிற்று. ஆங்கிலத்தில் கொத்தள மனிதன் என்பது, ‘வெளிமுகப்புக்கும் முன்’ என்று சொல்வதன் பொருளுக்குரியது – தேய்த்துக் கழுவுபவன், ஜாக்-தார், (Jack-Tar/கடலோடி), லஸ்கர் என்றானது. ஆனால் லஸ்கரி மொழியில் முரண் நகையாக, இக் கும்பல் குழுமும் நெருக்கமான முடைநாற்றம் வீசும் காமரா, ஒரு கவிதையின் தன்மையை பெற்றுள்ளது. இதன் லஸ்கரி வார்த்தையான fana – தலை – என்பது நாகப்பாம்பின் படத்தை குறிப்பது. ஒரு கப்பல் என்பது கடலில் உள்ள விலங்கு போல் உள்ளதாக நினைக்கப்படுவதால், உடல் கூறிலுள்ள ஒரு பகுதியாக இந்த முகப்பு தொடர்புபடுத்தப்படுகிறது.
இது போலவே, பாய் தொங்கும் குறுக்குக் கைச்சட்டமாகிய பாய்மரக் கழிக்கான சொல் purwan. ரோபக் இதுபற்றி இப்படிச் சொல்கிறார்: üüpurwan என்பது, pur – சிறகு அல்லது இறகு, wan – கப்பல் – என்ற இரு பதங்களின் கூட்டு என்று நினைக்கிறேன். இறுதிப் பதம், டூரத் (சூரத் ஆக இருக்கலாம்) என்பதிலிருந்து வந்ததும் லஸ்கர்கள் அதிகம் பயன்படுத்துவதும் ஆகும். எனவே இந்தப் purwan, கப்பலின் பாய்மரக் கழிகளை, கப்பலைப் பறக்க வைக்கும் சிறகுகள் என்று மொழிபெயர்க்கும்படி செய்கிறது.”
லஸ்கர்களுக்கு கப்பல் ஒரு உயிருள்ள பொருளாகத் தோன்றினால், ஐரோப்பிய மாலுமிகளிடம் இருப்பதுபோல் அது ஒரு பெண்ணாகத் தான் எப்போதும் பார்க்கப்பட்டதா? இதைப்பற்றி அறிவது சாத்தியமில்லை என்றாலும், அப்படி இருந்ததில்லை என்றே நான் நினைக்கிறேன். உதாரணமாக, பாய்களைச் சுருட்டுதலுக்கான சொல்லான lundbund, லிங்கத்தைக் கட்டுதல் அல்லது உறுப்பு நீக்கம் என்ற இயல்புப் பொருளை உடையது. பேச்சு வழக்காற்றில், பாய்மரத்தை லிங்கம் என்பதான பேச்சு மரபையே இதில் காணமுடிகிறது: இது பற்றிய ரோபக்கின் பூசிமெழுகல், விசித்திரமாக இருக்கிறது: lundbund என்பது nunga-moonunga (முழு நிர்வாணம் என்ற பொருள்) என்பதிலிருந்து வந்தது என்கிறார். இது, முன்னை விக்டோரியப் புனிதத்திற்கான எதிர்ப்பில் எழுந்த அரிப்பால் வந்தது அல்லது அவருக்கு lund என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை என்றே தோன்ற வைக்கிறது. (இது நடக்கமுடியாததல்ல, lund என்பது துணிப்பை, படுக்கை விரிப்பு, குறு ஓவியம் அல்லது வேறு ஏதாவது என்று சொல்லி, அங்காடியில் ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை வாங்க வைப்பது, இந்தியர்கள் கையாளும் பொதுவான தந்திரம்.)
லஸ்கரியில் கட்டளை என்பதற்கான சொல் – ஆங்கிலத்திலும் கூட வெகுவாகப் பழக்கத்தில் வந்துவிட்ட ஒரு சொல் – hookum. லஸ்கர்களுக்கும் அவர்களது மாலுமிகளுக்கும் இடையில் உள்ள உறவின் இயல்பு பற்றிய சுவாரஸ்யமான தரிசனத்தை இவ்வாறான சொற்கள் காட்டுகின்றன. உதாரணமாக, hookum என்பதை heave and rally! (ஏலேலோ, ஐலசா!), அதாவது hubes mera bap! (‘என் ஐயனைத் தூக்கு’ என்பதாக) என்று மொழிபெயர்க்கிறார் ரோபக். “சில சமயங்களில் கொஞ்சம் வசவும் வேண்டியிருக்கிறது. உதாரணமாக hubes saalaa! buhan chod hubes! (சரியாகச் சொன்னால், buhan chod hubes!) அல்லது hubes huramzadu! போன்றவை” என்றும் சேர்த்துச் சொல்லிக்கொண்டு போகிறார்.
இலக்கணம்
லஸ்கரி மொழியின் இலக்கணம் பற்றிய வரை, அதன் சொற்களஞ்சியம் எவ்வளவு கந்தரகோளமாக இருந்தாலும், அந்த மொழியானது அடிப்படையில் மிகப் ‘புனிதமாக’ இருந்ததாக (ஒவ்வொரு இந்தியனும் தம் மொழி பற்றிக் கூறிக் கொள்ள விரும்புவது போலவே) ரோபக் வற்புறுத்திக் கூறுகிறார்: “உயர்குடியினர் அல்லது சபையினரின் ஹிந்துஸ்தானி விதிகளுக்கும் லஸ்கர்கள் பேசிய வட்டார மொழிக்கும் இடையே கொஞ்ச வித்தியாசமே இருந்தது.” அதாவது ரோபக், லஸ்கரிமொழிச் சொல் தொடரியல் சுத்தமான உருதுச/ஹிந்துஸ்தானியுடையது என்றே வலியுறுத்துகிறார். அந்த வலியுறுத்தல் ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. அது உண்மையானதாயிருந்தால், லஸ்கர்கள் போன்ற ஒரு மக்கள் குழுவினருக்கு ஊழியம் செய்ய லஸ்கரிமொழி ஏன் ஆட்படுகிறது? கல்வியறிவற்ற மலேயர்கள், அராபியர்கள், ஆப்ரிக்கர்கள் உருதுவில் சரளம் பெற்றிருந்தனர் என்று நம்ப முடிகிறதா? ஆசிய லஸ்கர்களுக்குள் கூட, பெரும்பாலோர் வங்காளிகள், தமிழர்கள், கோவாக்காரர்கள், கட்ச்காரர்கள் போன்றோர் தாம்; அவர்களுள் பெரும்பாலானோர் படிப்பறிவற்றவர்கள். இது, ‘சபையினர் ஹிந்துஸ்தானி’யை அவர்கள் பேசியதாகச் சொல்வதை நம்பகத்தன்மையற்றதாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், கலங்களை ஓட்டவே ரோபக்கின் லஸ்கரி பயன்படுத்தப்பட்டது. மற்றவற்றை தங்களுக்குள்ளாக லஸ்கர்கள் பயன்படுத்தி வந்திருக்கலாம். பல்வேறு தொடர்பு மொழிகளும் பிட்ஜின் எனப்படும் கலப்பு மொழிகளும் சுவாஹ்லி, மலாய், ஹிந்துஸ்தானி ஆகியவற்றின் கூறுகளோடு படைக்கப்பட்டுள்ளன. மேலதிகாரிகளுடனும் வெள்ளையினப் பயணிகளுடனும் – தங்களுக்குள்ளாகவும் – பேச்சுத் தொடர்பு கொள்ள, சீன-போர்த்துக்கீஸிய-ஆங்கிலக் கலப்புப் பிட்ஜின் மொழிகளை தென் சீன கடற்பகுதியின் தொடர்பினால், ஒரு மாற்றாக அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கலாம். இந்த அற்புதமான வெளிப்பாட்டு மொழி, ஒருகாலத்தில் இந்தியப் பெருங்கடலின் பல மூலை முடுக்குகளில் வளம் பெற்று விளங்கி வந்திருக்கிறது. ஆனால் லஸ்கரியைப் போலவே, திரைகடலோடிய பாய்மரக்கலக் காலங்களுக்கு மேல் அதனால் நிலைத்து நிற்க முடியவிலலை.
3
லஸ்கர்கள் பெருமளவில் பணிபுரிந்த ஒரு கப்பலில் அவர்களது அன்றாட வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? கடல் உலகம் பற்றிய மேற்கத்திய நூல்களின் எண்ணிக்கை மிகவும் ஏராளம். ஆனால் லஸ்கர்கள் விஷயத்தில் அவை கொஞ்சமே சொல்லியுள்ளன. கதை சொல்வதில் நிபுணர்களான லஸ்கர்கள், காகிதப் பதிவுகளில் தம்மைப் பற்றி தம் அனுபவங்களைப் பற்றி மௌனத்தையே தந்திருக்கிறார்கள். அவர்களோடு பயணம் செய்த பிரயாணிகளும் – அசதி மிகுந்த நீண்ட கடல் பயணங்கள் இவர்களுக்கு நேரத்தையும் ஓய்வையும் மட்டும் அளிக்கவில்லை, தாம் பார்த்து அனுபவித்த எல்லாவற்றையும் பற்றிச் சொல்ல உந்துதலையும் தந்திருந்தாலும் – அவர்கள் பற்றிய பேச்சைத் தவிர்க்கவே செய்திருக்கிறார்கள். கடல் பயணிகளின் நாட்குறிப்புகளும் ஜர்னல்களும் பல தப்பிப் பிழைத்திருந்தாலும், அவற்றில் சிலவே பிரசுரிக்கப்பட்டுள்ளன. காரணம், அவர்களது பயண அலுப்பைப் போலவே அவர்களது விவரிப்பும் அலுக்க வைப்பவை. ஆனால் வேறு மாதிரியான சிலவும் உள்ளன. இங்கிலாந்தின் கிரீன்வீச்சில் உள்ள மாரிடைம் மியூஸியத்தின் தொகுப்புகளில் கிடைக்கும் ஒரு கையெழுத்துப் பிரதியான Journel of Cadet Robert Ramsay என்பது அவ்வகைப்பட்டது.
ராம்ஸே 1825ல் லேடி கேம்பெல் என்ற கப்பலில் கல்கத்தாவுக்குப் பயணம் செய்தபோது, மிக இளம் வயதுடையவராயிருந்தார். அவரது ஜர்னல் எளிதாகப் படித்து முடிக்கக் கூடியதல்ல. அவரது கையெழுத்து ஆரம்பப் பக்கங்களிலிருந்தே மிக மோசமானது – மோசமான பருவ காலங்களுக்கு ஏற்ப அங்கங்கே இன்னும் மிக மோசமாயிருக்கும். ஆனால் அவர், வழக்கம்போல் இல்லாமல் நல்ல நாள்குறிப்பாளர்.
ராம்ஸேயின் நாள்குறிப்பு கூறுகிறது: லேடி கேம்பெலில் 74 லஸ்கர்கள் களத்திலிருந்தனர். ஆப்ரிக்கர், தென்னாசியர், மலேயாக்காரர், சீனர் என்று இன்று பாகுபடுத்தக்கூடிய விதத்தில் அந்தக் குழுவினர் பற்றி ராம்ஸே ஏதும் சொல்லவில்லை என்றாலும், லேடி கேம்பெலின் குழுவின் ஒரு பகுதியாக அவர்கள் பயணிக்கவில்லை; கட்டணம் செலுத்திய பயணிகளாகவே இருந்தனர். லஸ்கர்களை வேலைக்கு அமர்த்துவதில் பல சட்டத்தடைகள் இருந்ததால் இம்மாதிரியான நடைமுறை தேவைப்பட்டது. எனினும், ராம்ஸேயின் ஜர்னலில் இதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது – கட்டணம் செலுத்திய பயணிகளோ இல்லையோ, லஸ்கர்கள் அப்போதும் வேலை செய்ய எதிர்பார்க்கப்பட்டார்கள். இது அவர்கள் பங்கில், கசப்புக்கும் வெறுப்புக்கும் காரணமாயிருந்தது. எனவே அவர்கள் ஆரம்பத்திலிருந்தே தொந்தரவு தந்து வந்தனர். 1825 ஜனவரி 3ல் கிரேவ்சென்டில் கரை இறங்கியிருந்தபோது, நிகழ்ந்தவற்றை இவ்வாறு தெரிவிக்கிறார் ராம்ஸே:
இருவேறு கலங்களில் லஸ்கர்கள் வந்தார்கள். எனவே இரு செராங்குகள் இருந்தார்கள். ஒரு குழு 60 பேர் கொண்டது. மற்றொரு குழு 12 பேர் கொண்டது. 60 பேர் கொண்ட குழுவின் செராங் (அல்லது b’osun) தனது ஆள்களில் ஒருவனை வேலை செய்ய ஆணையிட்டான். அவன் மறுத்ததால் அடித்து விட்டான். அந்த மனிதன் அதை விரும்பவில்லை. எனவே ஒரு போட்டி உருவானது. பணியாளர் தலைவன் செராங்கிடம் ஒரு கயிறைக் கொடுத்து அதனால் அந்த மனிதளை அடிக்க வைத்தான். செராங் அவனை தலையிலும் முகத்திலும் அடித்தான். அந்த மனிதன் செராங்கின் குடுமியாக முடித்திருந்த தலைமுடியை எட்டி பிடித்து இழுத்தான். மற்ற லஸ்கர்கள் இதைக் கவனித்தபடி தமது பாஷைகளில் வேகமாகப் பேசிக் கொண்டார்கள். பணியாளர் தலைவனான திரு.மர்பீ, செராங்கையும் அவனது துணைவனான தண்டலையும் மேலும் சில லஸ்கர்களையும் பின்புறக் கீழ்த்தளத்திற்கு அழைத்தான். செராங் தனது பணியைச் செய்யும்போது ஏன் ஒத்துழைக்கவில்லை என்று தண்டலிடம் கேட்டான். அதற்கு தண்டல், அது தன்னுடைய வேலையில்லை என்றும், செராங்கு செய்ததுதான் தவறு என்றும், தான் செராங்கின் தேசத்தவன் இல்லை என்றும் சொன்னான் (அந்த தண்டலன், கடுத்த வலிமையான உறுதியான தன்மையுள்ள ஒரு மலாய்க்காரன்). மர்பீ, மறுபடியும் எப்போதாவது செராங் அவமதிக்கப்பட்டாலோ, அவன் (அதாவது தண்டல்) செராங்கிற்கு உதவி புரியாமலிருந்தாலோ, கசையால் அடிக்கப்படுவான் என்று எச்சரித்தான். பிறகு, செராங்கிடம் திரும்பி, இவன் அவ்வாறு செய்யாவிட்டால் தன்னிடம் கூறும்படி சொன்னான் மட்பீ. அதற்கு செராங்க், அந்த மனிதனைப் போலவே இந்தத் தண்டலும் மிக மோசமானவன் என்றான். அவர்கள் எல்லோர் முன்பாகவும் வரவழைக்கப்பட்டபோது, சிறிது நேரத்தில் தண்டலும் செராங்கும் காரசாரமாகப் பேசலானார்கள். மர்பீ முன்னால் வந்து, தண்டலைப் பின்கோடித் தளத்தில் கட்ட ஆணையிட்டான். அதற்குத் தண்டல் முரண்டு பிடித்தான். எந்த விதப் பலனுமில்லாமல் அது முயற்சிக்கப்பட்டது. கடைசியாக அவனை இட்டுச் செல்லும்படி இரண்டு மாலுமிகளுக்கு ஆணையிடப்பட்டது. கருப்பு இனத்தவரும் தங்கள் ஆதரவை அளித்ததால் ஒரு கலவர நிலை உருவாயிற்று. ஆனால் மாலுமிகளின் முஷ்டிகள் வழியை உருவாக்க, செராங்கினால் கந்தைத்துணி மூட்டையாகத் தண்டலன் பின்கோடித் தளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டான். ஆயுதம் தாங்கியோர் அழைக்கப்பட்டார்கள். பின்கோடித் தளத்தில் மதிய உணவு நேரம் வரை தண்டல் கட்டப்பட்டுக் கிடந்தான். அப்போது லஸ்கர்கள் எல்லோரும் கீழே அழைக்கப்பட்டு பயமுறுத்தப்பட்டார்கள். இந்தக் களேபரத்தின் போது, ஸ்குன்டிங்கின் நான்சி என்ற கருப்பு இனப் பெண் பயணி -நர்ஸாக இங்கிலாந்திற்கு வந்தவள் -நீளமான ஒரு இரும்புக் கம்பியை ஆண்களின் பக்கத்தில் எறிந்தாள். அது அதிகத் தூரம் செல்லாமல் விழுந்ததால், யாரையும் காயப்படுத்தவில்லை. எம்மாதிரியான அமேஸான் பெண் அவள்! பிற்பகலில் மர்பீ அவளை அழைத்தான். இதுமாதிரி அவள் மீண்டும் செய்தால் அவளும் தண்டலைப் போலவே கட்டப்படுவாள் என்று கூறினான். தான் இரும்புக் கம்பியை எறிந்ததை மறுத்தாள் அவள். உரத்துப் பேசலானாள். மற்றொரு கறுப்பு இனப்பெண்ணும் அப்போது அதில் கலந்து கொண்டாள். குளிரில் ஆங்கில மாலுமிகள் தம்மை வெப்பமூட்டிக் கொள்ள வேலை செய்வார்கள். ஆனால் லஸ்கர்கள் குளிரில் வேலை செய்ய மாட்டார்கள். வெப்பமான கால நிலையையே வேலை செய்வதற்கு ஒதுக்கிக் கொள்வார்கள். இங்கிலாந்தில் எட்டு நாட்களே இருந்த ஒரு லஸ்கர், குளிரினால் தனது கால்களின் பயன்பாட்டை இழந்தான்.
அடுத்த நாள் மேலும் அதிக பிரச்சனை வளர்ந்தது. செராங்கை அடித்த ஒரு லஸ்கர் பின்கோடித் தளத்தில் கட்டப்பட்டான். குற்றவாளியை பார்த்துக் கொள்ள கரங்களில் துப்பாக்கியுடன் ஒரு லஸ்கர் அமர்த்தப்பட்டான். ஜனவரி 5ல் இன்னொரு லஸ்கர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டான். தனது பக்கத்திருந்தவனின் புகையிலையை திருடிக் கொண்டதற்காக காலை உணவுக்கு முன்பாகவே பின்கோடித் தளத்தில் கட்டப்பட்டான்.
கடலுக்குள் புகுந்ததும் லஸ்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான உறவு மேலும்மேலும் மோசமடைகிறது. விநோதமான சில நையாண்டி நாடகங்களைப் போல் விஷயங்கள் நடந்து விடுகின்றன. ஜனவரி 20 நடுப்பகலில் நடந்தது இது:
லஸ்கர்கள் தங்களுடைய படுக்கைகளை மேல் தளத்திற்குக் கொண்டு வர ஆணையிடப்பட்டார்கள். அவர்கள் மறுத்ததன் காரணமாக, மூன்று வலைப்படுக்கைகளைக் கத்தரித்து விட ஆணையிட்டான் மர்பீ. இது லஸ்கர்களுக்குள் பலத்த எரிச்சலைக் கிளப்பியது. ஆப்பிரிக்கக்காரன் (யாருக்கு நான் புதன்கிழமையன்று எனது பழைய கறுப்பு மேல்கோட்டை தந்தேனோ அவன்) கூட மர்பீயைப் பயமுறுத்தினான். ஆப்பிரிக்கனைப் பின்கோடி மேடைத்தளத்தில் கட்டிவைக்க ஆணையிடப்பட்டது. அவன் மறுத்ததால், அவனைத் தூக்கிச் செல்ல முயற்சி நடந்தது. அவனுக்குத் துணை புரிய லஸ்கர்கள் வந்தனர். போதுமான அளவு களேபரத்திற்கு பின் அந்த ஆப்பிரிக்கனும் ஒரு முதிய அரேபியனும் தலைமை தாங்கிய இருவரும் மேலதிகாரிகளால் பிடித்து அடைக்கப்பட்டார்கள். ஆப்பிரிக்கனும் மற்றவர்களும் இரண்டாவது கேப்டனுக்கு எதிராக, பழிவாங்குவதாகக் கோபத்துடன் சபதங்களைச் செய்தார்கள். கறுப்பர்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எதிர்த்துக் கிளம்பியதை நான் இதற்கு முன் கண்டதில்லை. பின்கோடித் தளத்திலிருந்து முன் முகப்பு வரை அடர்த்தியான ஒரு கூட்டம் கூடி விட்டது. சமையல்காரலஸ்கர் ஒருவன் இவர்கள் எல்லோரிலும் மிகத் தனித்துத் தெரிந்தான். பிசாசு ஒன்றைச் சித்தரிப்பது போல கருப்பாக, முழு நிர்வாணமாக – இடையில் ஒரு கந்தல் ஆடை மட்டும் அணிந்து – இரு கரங்களிலும் நிலக்கரி தள்ளும் குச்சிகளோடு நெடிது நின்றான். மற்றும் பலர் மரத்துண்டுகளோடு நின்றார்கள். துப்பாக்கிகள் தான் அவர்களை முன்னேற விடாமல் தடுத்தன. ஒரேயொரு சிப்பாய் தான் இருந்தான். கீழே இருந்த வீரர்கள் சிலரை, ஆயுதங்கள் கொண்டு வரச் சொல்லி அழைக்கப்பட்ட போது, மேலே வேகமாக ஓடி வந்தார்கள். தனது ராணுவ வாளுடனும் கவசங்களுடனும் திரு.மூர் மேலே வந்தார். திரு.கோர் ஃபீல்ட் ஒரு வெட்டுக்கத்தி வைத்திருந்தார். மற்றவர்கள் துப்பாக்கிகளோடு இருந்தார்கள். திரு.பர்ரோ மேலே அழைக்கப்பட்டார். தனது கைத்தடியை ஆட்டிக்கொண்டு, ‘இதுவே இந்த ஆட்களுக்கு போதுமான’தென்று சொல்லியபடி அவர் வந்தார். இது நடந்த நேரமெல்லாம், பின்கோடித்தளத்தின் அருகில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். இப்படியான எல்லா நேரமும் கசாப்புக்காரர், அசைவுறா அமைதியுடன் நோயுற்ற நாய்களைத் தடவியபடி ஏதாவதொரு லஸ்கர் அருகில் வந்தால், ‘தள்ளிப்போ ராஸ்கல்’ என்று மட்டும் சொன்னார். பொழுது மறையும் நேரத்தில் சிறைபிடிக்கப்பட்ட எல்லோரும் கீழே இட்டுச் செல்லப்பட்டு பிணைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மேல்காவல் இடப்பட்டது. பெண்களில் திருமதி.ஆர் மிகவும் பயந்து போயிருந்தார். பூண்டு உண்பதால் எழும் மோசமான நாற்றம் அவனிடமிருந்து வீசுவதாக திருமதி கிளேஹில் சொன்னதில் அவமானப்பட்ட பட்லர், சமாதானப்படுத்தலுக்குப் பின் அமைதியானான்.
அடுத்த நாள், ஜனவரி 21:
காலை உணவுக்குப் பின் ஐரோப்பியர்கள் ஒரு புறமும் லஸ்கர்கள் மறுபுறமுமாக எல்லோரும் பின் தளத்தில் குவிந்தார்கள். சிறைப்பட்டவர்கள் கொண்டு வரப்பட்டார்கள். எல்லாம் சரிப்படுத்தப்பட்ட பின் காப்டன் தனது தீர்மானமான அபிப்ராயத்தை விளக்கலானார். ஐரோப்பிய மாலுமிகளுக்கு இடையில் ஏற்பட்ட திருப்தின்மையே முதன்மையாக லஸ்கர்களுக்கிடையே ஏற்பட்ட தொந்தரவுகளுக்குக் காரணம் என்றார். அதற்கு, முதலில் செராங்குகளும் பிற அதிகாரிகளும் மறுப்புத் தெரிவித்தார்கள். என்ன காரணம் என்று தமக்குத் தெரியும் என்று கூறினார்கள். நேற்று கப்பல் அதிகாரிகளை தங்கள் கைகளில் கம்புகளுடன் லஸ்கர்கள் எதிர்த்தபோது, அதிகாரிகளின் துணைக்கு மூன்று மாலுமிகளுக்கு மேல் யாரும் வரவில்லை. முன் தளத்திலிருந்து நின்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றார்கள். ‘லஸ்கர்களை விட எளிதாக நிர்வகிக்கத் தகுந்த ஆட்கள் வேறு யாருமில்லை. எதிர்காலத்தில் லஸ்கர்கள் கப்பலை ஓட்டத் துணை புரிந்தாலும் புரியாவிட்டாலும், தான் அவர்களைத் தொந்தரவு செய்யப் போவதில்லை.’ இப்படி கேப்டன் சொல்லிக் கொண்டு வரும்போது, நெல்ஸ் என்ற மூக்குடைந்த ஒரு மாலுமி தொடர்ந்து குறுக்கிட்டுக் கொண்டிருந்தான். தான்தான் முதலில் அடிக்க மறுத்தவன் என்றான். பின் செராங்கைப் பார்த்து, தனது படுக்கையை கொண்டு வர அவன் மறுத்ததாகவும் சொன்னான். முதல்நிலைப் பணிக்குழுத் தலைவனை பயமுறுத்திய மனிதனைக் கைப்பற்றிச் சென்ற மேலதிகாரிகளை எதிர்க்கத் தமது ஆட்களை அனுமதித்ததாகவும் சொன்னான். இந்த நான்கு மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக தாம் விளங்குவதாகவும் இனி எப்போதாவது ஒரு லஸ்கர் எதிர்த்தாலோ, அல்லது எதிர்க்க முனைந்தாலோ, அதிகாரியை அடித்தாலோ அவன் சுடப்பட வேண்டும் – அதனால் எந்தப் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை – தனது நடத்தை நீதி விசாரணைக்கு உட்பட்டு விசாரித்து முடியும் வரை, செராங்கு ஆகிய தான் கப்பலை விட்டு நீங்குவதில்லை என்றான். பிறகு கேப்டன் திரு.எம்’மை நோக்கி, ஆப்பிரிக்கக்காரன் செய்ததைப் பற்றிக் கூறினான். பிறகு லஸ்கர்களை நோக்கித் திரும்பி, அவர்கள் உபயோகித்த கம்பிகளைக் காட்டினான். எதிர்காலத்தில் இப்படி கொஞ்சமாகச் செய்தாலும் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்று பயமுறுத்தினான். ஆப்பிரிக்கன் கட்டப்பட்டான். அவனது எதிர்ப்பை மீறி, அவனது தோள் துணி விலக்கப்பட்டது. ஒரு துப்பாக்கிக்காரன் தமது கைகளில் சவுக்கை ஏந்தி தயாராக நின்றான். இந்தச் சமயத்தில் இரு செராங்குகளும் தவறிழைத்தவர்களை விட்டுவிடும்படி மன்றாடினார்கள். கடைசியாக, கேப்டன் ஒத்துக்கொண்டார்; அல்லது அவர்களது சமாதானத்திற்கு அவர் வழிவிட்டதாக தெரிந்தது. மீண்டும் லஸ்கர்கள் இம்மாதிரி செய்தால், அந்தக் குற்றவாளிகளோடு சேர்ந்து செராங்குகளும் தண்டல்களும் கசையால் அடிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனையில் பேரில் ஒத்துக்கொண்டார். கசையால் அடிக்கப்படுவான் என்பது போல் தோன்றிய அந்த ஆப்பிரிக்கன் அடிபடுவதை பார்க்கப் பிடிக்காமல், லஸ்கர்களில் பாதிப்பேர் முன் முகப்பை விட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த நிர்வாணமான சமையல்காரர் மீண்டும் அந்தக் குழுவில் பிரதானமானவனாகத் தெரிந்தான். அவனுடையப் பார்வை எப்போதும் போல் எரிச்சலோடு இருந்தது. இறக்கைகளற்ற சாத்தானின் நேர் பிரதிநிதிபோல் அவன் தோன்றினான். எல்லோரும் கீழே கூடியபோது, பிற லஸ்கர்கள் மிகுந்த பணிவுள்ளவர்கள் போலத் தோன்றினார்கள். கேப்டன் பேச ஆரம்பித்தபோது திரு. எம்’மின் கேபினிலிருந்து ஒரு துப்பாக்கிச் சப்தம் கேட்டது. ஒரு பணியாள் அதை கெட்டித்துக் கொண்டிருந்தபோது, அது தற்செயலாக திரு.ஸ்டிராத் ஃபீல்ட்டின் அருகில் வெடித்துவிட்டதாகத் தெரிந்தது. அந்த குண்டு மேல்கூரையைத் தாக்கி திரும்ப வந்து திருமதி.எஸ்’ஸின் மீது விழுந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது, லஸ்கர்கள் முகங்களில் பீதி நிலவியதை உணர முடிந்தது. தேவை ஏற்பட்டால் பயன்படுத்த, நிறைய ஆயுதங்கள் ஆயுதப் பெட்டிகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன. ஆனால், அவை எதுவும் மேல் தளத்திற்கு கொண்டு வரப்படவில்லை. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட போது, லஸ்கர்கள் தமது பணிக்கு வெகு துரிதமாகத் திரும்பினார்கள். நேற்று பிற்பகல், முன்முகப்பு நிலைப்புப்பாயை விரிக்க ஆட்கள் அழைக்கப்பட்ட போது, லஸ்கர்கள் வர மறுத்தார்கள். திரு.மர்பி கீழே சென்று, அவர்கள் வேலை செய்ய மறுத்தால், கல்கத்தாவை அடைய முடியாது என்று கூறினார். அதற்கு அவர்கள், “ஆ! நாம் கல்கத்தாவை அடைந்ததும், உம்மை போலீசிடம் கொண்டு செல்வோம்,”என்றார்கள்.
இதுமாதிரி இரு பிரிவுகளுக்கிடையில் விருப்பு வெறுப்பு இருந்தாலும், லேடி கேம்பலில் அந்தக் காலத்து ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுபோல், ஒரு banyan-fightடாகவே அது இருந்தது (வெறும் பேச்சுச் சண்டமாருதம், குத்துவெட்டுகளோ அல்லது ரத்தமோ இல்லாதது). பருவக்காற்று மோசமாக மாறிய போது கூட, கப்பல் சீராக முன்னேறியது. ஏப்ரல் 17ல் நிகழ்ந்தது போல் இல்லாமல், பயணிகள் சாவகாசமாக உணவை உண்ண முடிந்தது.
கடந்த இரவு பிஸ்கே வளைகுடாவை விட்டு வந்ததிலிருந்து, நாங்கள் இதுவரை சந்திக்காதவையெல்லாம் நிகழ்ந்தன. எங்களது கேபின்களில் எல்லாமும் தனித்தனியாகக் கழன்றன. வழிநடைப் பாதைகளில் நீர் ஏராளமாக வழிந்தது. எங்களது கட்டில்கள் டிரங்குப் பெட்டிகள் மீதோ, அல்லது கேபினின் பக்கவாட்டுகளிலோ மோதுவதால் எங்களது தூக்கம் பெரிதும் தடைபட்டது. திரு.சி’யின் எலுமிச்சைப் பழரச பாட்டில்களும் பன்னீர் பாட்டில்களும் அவற்றின் மூடிகளிலில்லாமல் தளத்தின்மேல் கிடந்ததைக் கண்டார். மூடிக்கிடந்ததால் உண்டான துர்நாற்றம் கீழ்த்தளத்தில் மிகுந்தது. இரவில் ஒற்றைப் பாய்மரப் படகு, தனது பாரந்தூக்கும் பொறியின் பிடியிலிருந்து, அதனைப் பிடித்திருந்த பெருங்கட்டை ஒன்று விலகியதால் தொலைந்து போக இருந்தது. எல்லா பிற்பகல்களிலும் பாய்லரிலிருந்து பீறிடும் நீராவியைப் போல் துளைகளின் வழியாக மோசமான காற்று எழுந்தது. இரவைப் போலவே மோசமாக இருந்தது பகல். உட்கார்ந்த நிலையில் நேராக இருக்க முயற்சி தேவைப்பட்டது. கீழே விழுந்து விட்ட பால்காரர், தம்மேல் தமது கேனிலிருந்தவற்றைக் கொட்டிக் கொண்டார். திருமதி.ஹெச் மதிய உணவிற்குச் செல்லும் போது திடீரென்ற ஒரு உலுக்கல், அவளை லீ ஸ்கட்டில் அருகில் கொண்டு சென்றது. கடைசியாக, எனது கேபினை நான் சரிப்படுத்திக் கொண்டிருந்தபோது எனது டிரங்குப் பெட்டிகளில் ஒன்று கவிழ்ந்து, எனது கண்களுக்குக் கீழ் ஒரு சிறிய வெட்டுடன் தப்பித்தேன். எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும் மேஜையில் நடந்ததை விவரிக்க எனக்குச் சக்தி போதாது. “உன்னால் முடிந்தபோது உண், குடி” என்பதுதான் ஒரே வழியாக இருந்தது. சுதந்திரமாக ஒரு கையாவது இருக்கும் நிமிடம் இல்லாமல் ஆகியது. மாமிச போர்க் துண்டுகள், ஹாம்கள், உருளைக்கிழங்குகள் போன்றவை தமது இடங்களில் இருக்கும் என்பதற்கு உறுதியில்லை. மேஜை விரிப்புத் துணிவெண்ணை, கடுகெண்ணெய், ஒயின், பீயர் போன்றவற்றால் நனைக்கப்பட்டிருந்தது. பிற துணிகளும் இதே நிலைக்கு ஆளாயிருந்தன. நாற்காலிகள் சறுக்கு விளையாட்டில் ஆசையுடன் ஈடுபட்டு, அவற்றின் உரிமையாளர்கள் தளத்தில் நீள அகல அளவுகளை கணிப்பதற்கு உதவின. திரு.சி தம்முடைய தலையை டாக்டர் ஹெச்’சின் கதவில் மோதிக் கொண்டார். இது போன்ற புயலடர்ந்த பருவத்தில் சமையல்காரர் எப்படித் தன் உணவைச் சமைத்தார் என்பது அதிசயம்தான். மற்றைய சமயங்களைப் போலவே, பலவிதமாக பண்டங்களும் சாப்பிடுவதற்கு நிறைந்திருந்தன. கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதே வித்தியாசம். தற்போதைய சமையல்காரன், லஸ்கர்களோடு கப்பலுக்கு வந்த ஒரு சீனாக்காரன். அவன் சீக்கிரமே கப்பலில் துணையாளாக மாறினான். மிகத் திறமையான கைகாரனாக ஏற்கப்பட்டு, அவனது மேலாள்களின் பொறாமையைத் துண்டி ஆச்சரியம் கொள்ளவைத்தான்…
சில சமயங்களில் பயணிகள், விளையாட்டிலும் பிற பொழுதுபோக்குகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அது போன்ற ஒன்றைப் பற்றி ராம்ஸே இப்படிக் கூறுகிறார்: “உணவுக்குப் பிறகு தவளைத் தாவல் விளையாட்டு நடந்தது. லஸ்கர்கள் இதைக் கண்டு மிகவும் குதூகலித்தார்கள்…” பின்பு, ஒதுக்குப்புறமான கீழ் தளத்தில் ஒரு கூடாரத்தின் கீழ் நடந்த ஒரு மாலை நேர நாடக நிகழ்ச்சியை – அல்லது பயணிகள் அவ்வாறாக நம்பிச் செய்ததை – வருணிக்கிறார் ராம்ஸே. அங்கே நடத்தப்பட்ட பல்வேறு சித்தரிப்புகளில் ‘குடிகாரக் கருப்பன்’ என்ற ஒன்றும் நடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது ராம்ஸே மேலே நிமர்ந்து பார்த்திருக்கிறார். பல லஸ்கர்கள் இந்த சித்திரிப்பை மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் அவர்களது முகங்கள் கூடாரச் சட்டகத்தில் சிறுத்துக் காணப்பட்டதையும் கவனித்திருக்கிறார்.
எனவே, லஸ்கர்களும் விசையான சரக்குக் கப்பல்களும், தமது மரக்கல உலகின் சிறு சந்துகள் வழியே, ஒவ்வொருவரும் மற்றவரது சட்டதிட்டங்களைக் அனுசரித்தபடி, அவரவர் தத்தம் வழியில் சென்றார்கள்.
*******
‘Of Fanas and Forecastles: The Indian Ocean and Some Lost Languages of the Age of Sail’ – Amitav Ghosh. Economic & Political Weekly – June 21, 2008.
*******
அமிதவ் கோஷ் (1956 – ) இன்று ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராகக் கருதத்தக்கவர். குறிப்பிடத்தக்க நாவல்களும் கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. நாவல்கள் : The Circle of Reason (1986), The Shadow Lines (1988), The Calcutta Chromosome (1995), The Glass Palace (2000), The Hungry Tide (2004), Sea of Poppies (2008), River of Smoke (2011), Flood of Fire (2015). அவரது Shadow Lines (நிழல் கோடுகள்) நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.