பின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 1)

by மானசீகன்
0 comment

சாதி என்ற சொல்லின் பொருளை எப்போது உணர்ந்தேன் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மேடைகளில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா. குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாரதியாரை பொருள் புரியாமல் மேடைகளில் ஒப்பிக்க ஆரம்பித்தத் தருணத்தில் கண்டிப்பாய் அதை உணர்ந்திருக்கவில்லை. சாதிக்கு எதிராய் பேசினால் கை தட்டு கிடைக்கும். கீழே நாம் உட்கார்ந்திருந்தால் அதற்கு கண்டிப்பாக கை தட்ட வேண்டும். இவ்வளவுதான் என் புரிதல்.

நான்காம் வகுப்பு வரை குச்சனூரில் படித்தேன். அப்போது ஒரு நண்பனின் வீட்டுக்குப் போனால் எப்போதும் திண்ணையிலே தான் உட்கார வைப்பான். தண்ணீர் குடுத்தாலும் ‘அண்ணாக்க’தான் குடிக்க வேண்டும். எங்களுக்குத் தரப்படுகிற அந்தச் செம்பே விசித்திரமாக இருக்கும். எங்கள் வீட்டு கக்கூசில் அதே மாதிரி ஒரு செம்பைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது குறித்து எந்தப் புகாரும் எங்களிடம் இருந்ததில்லை. அதனை இயல்பான விஷயமாகவே ஏற்றுக் கொண்டிருந்தோம். ஒரு தடவை அவன் எங்களிடம் சொன்னது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. ‘நான் மத்தவங்க மாதிரி கிடையாது. உங்கள எல்லாம் தொட்டுப் பேசறேன் பார்த்தீங்கள்ல?’. ஏதோ ஒரு சண்டையில் தான் இதைச் சொன்னான். அப்போது இதன் முழுப்பொருளும் எங்களுக்குத் தெரியவில்லை.

மூக்கையா வாத்தியார் ஒருநாள் வகுப்பிலிருந்து அவசர ஜோலியாய் எங்கேயோ போய் விட்டார். அவருக்கு அவசர ஜோலிகள் திடீர் திடீரென்று வரும். விடுமுறை நாட்களில் அவருடைய தோப்பில் யாருடனாவது நின்றிருப்பார். அந்தப் பெண்களிடம் நம்மைப் பெயர் சொல்லி அறிமுகப்படுத்துவார். அவ்வளவு நல்ல மனசு. ரொம்ப நேரமாக அவர் வரவில்லை. வேறெந்த வாத்தியாரும் வகுப்புக்கு வராததால் வருகைப் பதிவேட்டை எடுத்தோம். முதலில் பெயர்களைத் தான் வாசித்தோம். அப்போதுதான் சங்கீதா வெறும் சங்கீதா அல்ல; சங்கீதா என்ற பேச்சியம்மாள் என்றறிந்தோம். ஆசிரியர்கள் தங்கள் கருணையினால் பேச்சியம்மாளை எங்களிடமிருந்து மறைத்திருக்கின்றனர். கொஞ்ச நேரம் சங்கீதாவை அழுக வைத்துக் கொண்டிருக்கும் போதே அஜ்மீர் தான் கண்டுபிடித்தான். ‘இதென்னடா பக்கத்துல SC , BC, MBC, PKன்னு இருக்கு?’ நரசிம்மனுக்கு மட்டும் தான் FC என்று போட்டிருந்தது. அஜ்மீருக்கு கோபம் வந்து விட்டது. ‘என் ஜாதி முஸ்லிம். என்னையும் இந்துவோட சேர்த்து BCன்னு போட்டு வச்சிருக்கானுங்க.’ அன்று முழுவதும் அதையே பேசிக் கொண்டிருந்தான். ‘த்தோவ் நம்மள பொட்டு வச்சு சாமி கும்பிட வச்சு இந்துவா மாத்திருவாங்க. மாமு அடிக்கடி சொல்வார். எங்கத்தாதான் போடா லூசுத்தாயோளின்னு திட்டுவார். இப்ப பாத்தியா? மாமு சொன்னதுதான் சரி’ என்று புலம்பிக் கொண்டேயிருந்தான். வீட்டுக்குப் போனதும் தாத்தாவிடம் இது குறித்துக் கேட்டேன்.  அப்போது அவர் சொன்ன விஷயங்களில் பாதி புரியவில்லை. ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. இது சாதியில்லை. வேறொரு பிரிவு. இதை வைத்துத் தான் புத்தகம், சத்துணவு, ஸ்காலர்ஷிப் எல்லாம் தருகிறார்கள்.

மறுநாள் நான் இது குறித்து பேசுவதற்குள் நரசிம்மன் வகுப்பில் நண்பர்களோடு பேசி விட்டான். ‘சாதிய ஒழிக்கனும்னா அட்டெண்டென்ஸில இருந்து இதை எடுக்கனும்’ அதை எல்லோரும் ஆமோதித்தனர். ஆனால் வாத்தியாரிடம் இதுபற்றிப் பேசுவதற்கு மட்டும் பயந்தனர். நான் ஏதோ சொல்ல வருகையில் மேடையில மட்டும் ‘சாதிகள் இல்லையடி பாப்பான்னு பேசற?’ என்று கேட்டு நரசிம்மன்  மடக்கி விட்டான் . மூக்கையா வாத்தியார் வெளியே போய் விட்டு வந்து நல்ல மூடில் இருக்கும் போது அதுபற்றிக் கேட்டோம். ‘க்கெக்கெஹ்’ என்று சத்தம் போட்டுச் சிரித்தவர் இன்னும் இரண்டு வாத்யார்களை வகுப்பிற்கே அழைத்து வந்துவிட்டார்.  எல்லோரும் எங்களிடம் எதை எதையோ கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். அன்று மதியமே ஹெச்.எம் ‘ரிஜிஸ்டரை எடுத்தவன் யாரு? என்று அதட்டிக் கேட்டார். இப்படியாக ஜாதி பற்றிய விவாதம் அப்பா, அம்மா வை பள்ளிக்கு அழைத்து வந்து மன்னிப்புக் கேட்டதில் நிறைவடைந்தது. அதற்கடுத்த வாரமும் கூட அஜ்மீர் அதை மறக்கவில்லை.’ரிஜிஸ்டர்ல அந்த இங்கிலீஷ் எழுத்த எடுத்திட்டா உங்க வீட்ல எச்சிவைச்சு தண்ணீ குடிக்கலாமா? உள்ள விடுவீங்களாடா? ‘என்று கேட்டான். அதற்கு நரசிம்மன் ‘அது ஜாதி இல்லை. பழக்க வழக்கம். வழமைம்பா. உங்க மசூதில எங்களை விடுவீங்களா? அதே மாதிரிதான் இதுவும்.’ ‘ஓதிப்பாக்க எல்லாரும் மசூதிக்கு வருவாங்களே?’ என்று ராமர் கேட்க நரசிம்மன் தலையாட்டிக் கொண்டே மறுத்தான்.  ‘அங்கயும் உள்ள விட மாட்டீங்கள்ல’. எனக்கு இந்தக் கேள்விக்கான பதில் இது இல்லையென்று தெரிந்தது. ஆனாலும் எதுவும் சொல்லவில்லை.

அரைப்பரீட்சை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த பிறகு ஒரு வாரம் நரசிம்மன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டிற்குப் போனோம். கதவு அடைத்தே கிடைந்தது. பக்கத்து வீடுகளில் விசாரித்தோம். அடித்து விரட்டி விட்டார்கள். அஜ்மீர் தான் வழக்கம் போல் துப்பறிந்து சொன்னான். ‘நரசிம்மனோட அக்கா ஒரு கீழ்சாதிக்காரனோட ஓடிப்போயிருச்சாம். அதான் அவங்க குடும்பத்தோட மார்க்கயங்கோட்டை போயிட்டாங்களாம்’. ‘ஓடிப்போறதுன்னா? ரொம்ப தூரம் ஓடுவாங்களா? என்று எவனோ கேட்டான். ‘வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் முடிக்கிறது’ ”வீட்டுக்குத் தெரியாமல் ஏன் கல்யாணம் முடிக்கனும்? அப்ப மாலையெல்லாம் யார் வாங்கித் தருவா?’ ‘ஓடிப்போனா போலிஸ் புடிக்காதா? -இது விஜயகுமார். ‘புடிச்சுரும்டி. நாளைக்கு புடிச்சுரும்பாரு. போலிஸ்னா எல்லாரும் பயப்படனும்.’ ‘ஹெச். எம்.முமா ?’. ‘ஆமா.  ஊர்த் தலைவரே பயப்படனும். சுட்ருவாங்கடி’ அய்யாபுள்ள விஜயகாந்தின் தீவிர ரசிகன். அவனுக்கு கடவுளே போலிசுக்கு அடுத்து தான் . எனக்கு ஓடிப்போவது என்றால் என்னவென்று புரிந்திருந்தது. அவர்கள் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் எனக்கு அப்போதே தெரியும். ஆனால் கீழ்சாதி என்றால் யார்? நான் மேல்சாதியா? கீழ்சாதியா? என்பதுதான் எனக்குப் புரியவில்லை. தாத்தாவிடம் கேட்கக்கூடாது என்றும் தோன்றியது. அப்போது தான் கனகராஜ் அண்ணனை சந்தித்தேன்.

-தொடரும்.