முதியோர் சாசனம் – ஜாக் லண்டன்

by ராஜேந்திரன்
0 comment

ஒரு மனிதரின் மரண தண்டனை குறித்த வழக்கு விசாரணை, படை வீரர்களின் குடியிருப்பில் நடைபெற்று வந்தது. அந்த மனிதர் வயோதிகர். அவர் வெள்ளை மீன் நதி பாய்ந்தோடி விழும் லே பார்ஜ் ஏரியின் கீழுள்ள யூக்கான் பிரதேசத்தின் பழங்குடியினரில் ஒருவர். அந்த வழக்கு குறித்து டாவ்சன் நகர் முழுவதும் பதற்றத்தில் ஆழ்ந்தது. அதே போல் யூக்கான் பிரதேசத்தின் மேலும் கீழும், சுமார் ஆயிரம் மைல்கள் வரையிலும் அதே பதற்றம் நீடித்தது. அந்நியர் நிலம் திருடி, கடல் திருடி ஆக்கிரமிக்கும் ஆங்லோ-சாக்ஸன் இனத்தவர், தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் தமது சட்டங்களையே நடைமுறைப்படுத்துவது வழக்கம். பல சமயங்களில் அவை கொடூரமானதாகவே இருக்கும். ஆனால் இம்பர் குறித்த இந்த வழக்கில் முதன் முறையாக சட்டத்தின் வீர்யம் போதுமானதாக அல்லாமல் பலவீனமாகவும் இருந்தது. தண்டனை என்னவென்பது ஏற்கெனவே நிச்சயமாகி விட்டது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இம்பருக்கு மரண தண்டனையே அளித்தாலும் கூட அவருக்குள்ளது ஒரே உயிர்தானே. ஆனால் இந்த வழக்கில் அவருக்கு எதிராக அமைந்ததோ, அவர் கொன்ற எண்ணற்ற உயிர்கள். மிகச் சரியாக எத்தனை உயிர்களைக் கொன்றார் என்பதைக் கணக்கிடவே முடியாதபடி அவரின் கைகளில் ரத்தக் கறை படிந்துள்ளது உண்மையே.

பாதையோரமாக பைப்பில் புகை பிடித்தபடியோ, அல்லது தீ மூட்டப்பட்ட கணப்பைச் சுற்றிலும் அமர்ந்தபடியோ, இம்பரது கையால் எத்தனை பேர் மாண்டிருப்பர் என்பதை மக்கள் தோராயமாகக் கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். கொலையுண்ட அனைவருமே பரிதாபத்திற்குரிய வெள்ளையர்கள். அவர்கள் தனியாகவோ, ஜோடியாகவோ, குழுவினராகவோ கொல்லப்பட்டிருந்தனர். எவ்விதக் காரணமுமின்றி வெள்ளையர்கள் அவ்வாறாகக் கொல்லப்படுவது வெகுகாலமாகக் காவலர்களுக்குப் புரியாதப் புதிராகவே இருந்தது. அது ஒரு கேப்டன் தலைமையில் காவலர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த காலக்கட்டம். பின் அந்நிலப்பரப்பு வளமானது என்கிற காரணத்தால், அங்கு வாழ்பவர்கள் வரி செலுத்தும்படியானது. எனவே வெள்ளையர் பேரரசு தாம் ஆக்கிரமித்த அப்பகுதியை நிர்வகிக்க ஓர் ஆளுநரை அங்கு அனுப்பி வைத்தது.

இருப்பினும் இம்பர்; ஏன் தானாகவே டாவ்சன் நகருக்கு வந்து சரணடைய வேண்டும் என்பது பெரும் புதிராகவே இருந்தது. அது ஒரு வசந்த காலத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது. யூக்கான் பிரதேசம் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு, குளிரின் வேதனையால் முக்கலும் முனகலுமாக நெளிந்து கொண்டிருந்தது. அந்த நாளொன்றில் தான் முதிய அந்தப் பழங்குடி செவ்விந்தியர் நதியின் கரையேறி, பிரதான வீதியில் விழித்தவாறு நின்றிருந்தார். அந்நிகழ்ச்சியை கண்கூடாகக் கண்டவர்கள், அவர் மிகவும் பலவீனமாகத் தள்ளாடியவாறே அங்கு குவிக்கப்பட்டிருந்த மரப் பலகைகளின் அருகே சென்று அதில் அமர்வதை நோட்டமிட்டனர்.

நாள் முழுக்க அந்த வயோதிகர் அங்கிருந்தபடியே எதிரே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். வற்றாத வெள்ளம் போல முடிவேயின்றி வெள்ளையர்கள் வருவதும் போவதுமாக இருந்ததைக் கணடார். அவர்களில் பலர் தலையைத் திருப்பி வியப்புடன் அவரது பார்வையை எதிர்கொண்டனர். ஒரு சிலர் அந்தப் பழங்குடி செவ்விந்தியரின் முகத்தில் விசித்திரமான பார்வை பொதிந்துள்ளதைப் பற்றித் தங்களுக்குள் பேசியவாறே சென்றனர். அதன் பிறகு அவரது அசாதாரணத் தோற்றம் தங்களை வசீகரித்ததாகக் கூறியவர்களுக்கு முடிவேயில்லை. பார்த்தவுடன் புரிந்து கொண்டதைக் குறித்துப் பெருமையாகப் பேசிக் கொண்டவர்களுக்கும் குறைவேயில்லை.

ஆனால் டிக்கென்சன், சின்ன டிக்கென்சன்தான் அசாதாரணமான அந்நிகழ்ச்சியின் கதாநாயகனாகி விட்டார். சின்ன டிக்கென்சன் கை நிறைய பணமும், மனம் நிறைந்த கனவுகளோடும் அந்நகருக்கு வந்திருந்தார். ஆனால் பணம் மாயமாக மறைந்ததும் கனவுகளும் கூடவே மறைந்து போயின. ஸ்டேட்ஸிற்கு திரும்பிச் செல்லவும் கையில் பணமில்லை. எனவே ஹால்ப்ரூக் அண்ட் மேசன் தரகு நிறுவனத்தில் எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ள வீதியின் எதிரே இருந்த பலகைக் குவியலின் மீதுதான் இம்பர் அமர்ந்திருந்தார். மதிய உணவிற்கு வெளியே செல்லும் முன்னர் டிக்கென்சன் ஜன்னல் வழியாக இம்பரைப் பார்த்தார். உணவருந்தி திரும்பிய பின்னர் பார்த்த போதும் அந்த முதிய செவ்விந்தியர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.

தொடர்ந்து அவ்வப்போது ஜன்னல் வழியே டிக்கென்சன் பார்த்துக் கொண்டேயிருந்தார். அந்த முதியவரைப் பார்த்தவுடன் அவர் அபூர்வமானவர் என்பதை தான் புரிந்துக் கொண்டதைப் பற்றி அவர் பின்னாளில் எப்போதும் பெருமையாகப் பேசியவாறிருந்தார். டிக்கென்சன் இளைஞர். கற்பனை வளம் கொண்டவர். ஆக்கிரமித்துள்ள பெரும் திரளான ஆங்லோ-சாக்ஸன்களை ஆழந்து பார்வையிட்டபடியே அமைதியாக அமர்ந்திருக்கும் அக்காட்டுவாசியை, பழங்குடியினரில் தோன்றிய ஒரு மேதையாகவே டிக்கென்சன் உருவகப்படுத்திக் கொண்டார். மணிக்கணக்கான நேரம் பறந்து கொண்டிருந்தது. ஆனாலும் இம்பர் தான் அமர்ந்திருந்த நிலையிலிருந்து சற்றேனும் மாறவில்லை. மயிரளவு கூட அவரது தசைநார்கள் அசையவில்லை. அந்தப் பிரதான வீதியில், ஒரு நாள் பனிச்சறுக்கு வண்டியில் செங்குத்தாக அமர்ந்திருந்த ஒரு மனிதன் குறித்த ஞாபகம் டிக்கென்சனுக்கு வந்தது. சுற்றிலும் மனிதர்கள் நடமாடியபடியே இருந்திருந்தனர். அந்த மனிதர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவே அனைவரும் எண்ணினர். ஆனால் அவரைத் தொட்டுப் பார்த்த பிறகே, அந்தப் பிரதான வீதியின் நடுவே அவர் குளிரில் விறைத்து இறந்திருப்பது தெரிய வந்தது. ஒரு சவப்பெட்டியினுள் கிடத்த அவரது உடலை நெருப்பிலிட்டு அடித்து நீட்ட வேண்டியிருந்தது. அந்த ஞாபகம் வந்ததும் டிக்கென்சன் சற்றே நடுக்கமுற்றார்.

சிறிது நேரம் கழிந்த பின்னர், புத்துணர்வு பெற வெளியே சென்று தெருவோர நடைபாதையில் சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்தார். அப்போது எமிலி டிராவிஸ் அங்கு வந்தார். அவர் அபூர்வமான, ஒயிலான, மென்மையான பெண்மணி. அவர் லண்டனில் இருந்தாலும், க்ளான்டைக்கில் இருந்தாலும் ஒரு கோடீஸ்வர சுரங்கப் பொறியாளரின் மகளைப் போலவே நேர்த்தியான கவுன் அணிந்திருப்பார். சின்ன டிக்கென்சன் அவரைப் பார்த்ததும் சுருட்டைத் திரும்ப எடுத்துக் கொள்வதற்குத் தோதாக அருகிலிருந்த ஒரு ஜன்னலின் ஓரமாக வைத்து விட்டுத் தனது தொப்பியை உயர்த்தினார்.

சுமார் பத்து நிமிடங்கள் வரை அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். பின் டிக்கென்சன் தோளிற்கு மேலாகப் பார்வையை செலுத்திய எமிலி டிராவிஸ் அதிர்ந்து போய் ‘ஹா’வென மெல்லியதோர் ஓலமிட்டார். டிக்கென்சன் திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டார். அப்போது இம்பர் சாலையைக் கடந்து வந்து அவர்களின் அருகே நின்றிருந்தார். மெலிந்த நிழலைப் போன்ற பயங்கரத் தோற்றத்துடனும், ஆவல் மிகுந்திருந்த வெறித்த பார்வையுடனும் கூடிய அவரது கண்கள் முழுக் கவனத்துடன் எமிலியின் மீதே நிலைத்திருந்தது.

“என்ன வேண்டும் உனக்கு?” சின்ன டிக்கென்சன் நடுங்கும் குரலில் துணிச்சலாகக் கேட்டார். இம்பர் உறுமியவாறு கம்பீரமாக நடந்து எமிலியை நெருங்கி அவரை முழுமையாகப் பார்வையிட்டார். வெகு கவனமாகக் கூர்ந்து ஒவ்வொரு அங்குலமாக ஊடுருவிப் பார்த்தார். பட்டுப் போன்றிருந்த பளபளப்பான கூந்தலின் காவி நிறமும், பட்டாம்பூச்சியின் மெல்லிறகுகள் மலர்வதைப் போன்று மென்மையாகத் தெளிக்கபட்டிருந்த கன்னங்களும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. குதிரையின் அங்க அளவுகளையோ அல்லது ஒரு படகு எந்தளவு நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையோ மதிப்பீடு செய்வது போல, எமிலியைச் சுற்றிலும் நடந்து கண்ணோட்டமிட்டார். அவ்வாறாகச் சுற்றி வரும் போது, அவரது பார்வை இளஞ்சிவப்பு நிறக் காதின் மீது பதிந்த அதே வேளையில் மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளி குறுக்கிட்டது. அச்சமயம் நின்று நிதானமாக ஒளி ஊடுருவும் இளஞ்சிவப்பு நிறக் காதில் கவனம் செலுத்தினார். பின் மீண்டும் முகத்தைப் பார்வையிட்டு, நீலக் கண்களை வெகு நேரம் ஆழ்ந்து ஊடுருவிப் பார்த்தார். பின் மீண்டும் உறுமி எமிலியின் தோளுக்கும் முட்டிக்கும் நடுவேயுள்ள பகுதியைத் தனது ஒரு கையினால் பிடித்தார். மற்றொரு கையினால் அவரது கையின் கீழ்ப்பகுதியைத் தூக்கி மடித்தார். ஆச்சரியமும் அருவெறுப்பும் அவரது முகத்தில் கலந்து தென்பட்டன. பின் ஏளனம் தொனிக்கும் உறுமலுடன் எமிலியின் கரத்தைக் கீழே விட்டார். பின் அவரிடமிருந்து திரும்பி டிக்கென்சனிடம் சில வார்த்தைகளை கரகரவென்று உதிர்த்தார். டிக்கென்சனுக்கு அவரது பேச்சு புரியவில்லை. எமிலி வாய் விட்டுச் சிரித்தார். இம்பர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். இருவருமே ஏதும் புரியவில்லை என்னும் விதமாகத் தலையசைத்தனர். பின் அங்கிருந்து இம்பர் நகர முற்படுகையில் எமிலி சத்தமாகக் குரல் எழுப்பினார்.

“ஓ ஜிம்மி! இங்கே வா!”

எதிர்புறத்தில் சென்று கொண்டிருந்த ஜிம்மி சாலையைக் கடந்து அவர்களின் அருகே வந்தார். அவர் மிகவும் பருமனான, பெரிய உடல்வாகுக் கொண்ட பழங்குடி இந்தியர். வெள்ளையர்கள் அங்கீகரிக்கக் கூடிய உடையணிந்தும், எல்டொராடோவின் அரசனைப் போல அகல விளிம்புள்ள தொப்பியைத் தலையில் அணிந்தவாறும் காணப்பட்டார். அவர் இம்பரிடம் சரளமாக உரையாடவில்லை. நிதானமாக விட்டு விட்டுப் பேசினார். ஜிம்மி சிட்கன் இனத்தைச் சார்ந்தவர். உட்பிரதேசங்களில் வழக்கத்திலுள்ள மொழிகளை போகிற போக்கில் சிறிதளவே அறிந்தவர். “இவர் வெள்ளை மீன் வாசி” என்றார் எமிலியிடம். “என்னால் அவரது பேச்சை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் வெள்ளையரின் தலைமை அதிகாரியை சந்திக்க வேண்டுமாம்” என்றார் ஜிம்மி.

“ஆளுநரையா?” என்று கேட்டார் டிக்கென்சன்.

ஜிம்மி மேலும் சிறிது நேரம் வெள்ளை மீன் வாசியிடம் பேசினார். பின் அவரது முகம் குழம்பித் தீவிரமானது.

“நான் நினைக்கிறேன் அவர் கேப்டன் அலெக்ஸான்டரை சந்திக்க விரும்புகிறார்” என்று விளக்கினார். “அவர் சொல்வது பல வெள்ளையர்களைக் கொன்றிருக்கிறாராம். வெள்ளைப் பெண்கள், வெள்ளை சிறுவர்கள் உட்பட பலரை. இப்போது அவருக்கு சாக விருப்பமாம்” என்றார் ஜிம்மி.

“கிறுக்கன் என நினைக்கிறேன்” என்றார் டிக்கென்சன்.

“அதென்ன?” என்று புரியாமல் கேட்டார் ஜிம்மி.

டிக்கென்சன் தனது விரலைத் தலையில் வைத்து சுழற்றிக் காட்டினார்.

“அப்படியும் இருக்கலாம், இருக்கலாம்” என்றார் ஜிம்மி. பின் இம்பரின் பக்கம் திரும்பிய போது, வெள்ளையரின் தலைமை அதிகாரியைப் பார்த்தேயாக வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார் அவர்.

அச்சமயம் க்ளான்டைக் காவலர் ஒருவர் அங்கு வந்தார். அவரும் ஜிம்மி சொன்ன இம்பரின் கோரிக்கையைக் கேட்டார். அக்காவலர் வலிமையான இளைஞர். உறுதியான கால்களை ஊன்றி நின்றபடி உயரமாகக் காணப்பட்டார். இம்பரும் உயரமானவர் தான். ஆனாலும் காவலரோ இம்பரைக் காட்டிலும் அரை தலையளவு உயரம் கூடியவராக இருந்தார். அவர் அமைதியான சாம்பல் நிறக் கண்களுடன் கூர்ந்து நோக்கிய வண்ணமிருந்தார். தன்னம்பிக்கையுடன் கூடிய ஒருவித அதிகாரத் தோரணை அவரிடம் தொற்றிக் கொண்டிருந்தது. பெரும் பாரம்பரியமிக்க குடும்பத்தினரின் ரத்த வம்சத்தில் பிறந்தவர் என்கிற தோற்றப் பொலிவுடன் காணப்பட்டார். அவரது இளைய வயது அற்புதமான அவரது ஆண்மையை மேலும் கூட்டிக் காட்டியது. வழவழப்பான அவரது கன்னம், கன்னியின் கன்னம் போன்று விரைந்து சிவக்கக் கூடிய தன்மையைப் பெற்றிருந்தது.

இம்பர் அவரைப் பார்த்தவுடனேயே ஈர்க்கப்பட்டார். மேலும் அவரது தாடையில் கொடுவாளால் கீறப்பட்டிருந்த தழும்பைக் கண்டதும், இம்பரின் கண்கள் தீப் போலப் பிரகாசித்தன. இம்பர் தனது நடுங்கும் கரங்களால் அகன்ற அவரது மார்புகளைத் தனது விரல் முட்டிகளால் தட்டிப் பார்த்தார். வலிமையான அவரது தோள்களில், கவசம் போன்றிருந்த தசைநார்களைக் கைகளால் குத்தி அழுத்தினார். அந்த இளைஞரது கால்களைத் தொட்டு தடவிப் பார்த்து அதன் பருமனான தசைகளையும் வருடினார்.

பிரதான வீதியில் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருந்த போது, அச்சமயம் அங்கிருந்த பலரும் ஆவலுடன் அங்கு கூடினர். உடலுரமிக்க சுரங்கப் பணியாளர்கள், மலை ஏறுபவர்கள், நகரின் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள், நீண்ட கால்களும் அகன்ற தோள்களும் கொண்ட தலைமுறையினரின் வாரிசுகள், ஆகிய அனைவரும் அங்கு குழுமினர். இம்பர் ஒவ்வொருவராகப் பார்வையிட்டார். பின் தனது மொழியில் பேசத் துவங்கினார்.

“அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார் டிக்கென்சன்.

“கூடியுள்ள அனைவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் ஒரே விதமாக, அதாவது காவலரைப் போலவே இருப்பதாகச் சொல்கிறார்” என்று ஜிம்மி மொழி பெயர்த்தார். சின்ன டிக்கென்சன் தான் அவ்வாறாக இல்லாதையும்,மேலும் எமிலி டிராவிஸ் எவ்வாறு அதில் பொருந்த முடியும் என்று தோன்றியதும் தான் எழுப்பிய கேள்வியைக் குறித்து வருந்தினார். டிக்கென்சனின் முக வாட்டத்தைக் கண்ட காவலரும் வருத்தமுற்றுக் கூட்டத்தை விலக்கியபடி முன் வந்தார்.

“இவர் சொல்வதில் ஏதோ விடயம் உள்ளதாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் இவரை விசாரணைக்காகக் காப்டனிடம் அழைத்துச் செல்கிறேன். அவரை என்னோடு வரச் சொல் ஜிம்மி” என்றார். தொண்டையிலிருந்து கரகரவென்று வெளிப்பட்ட மொழியில் ஜிம்மி ஆழ்ந்தார். இம்பர் உறுமி திருப்தி அடைந்தது போல் காணப்பட்டார். “ஆனால் எனது கையைப் பிடித்துப் பார்த்ததும் என்ன நினைத்தார் என்று கேள் ஜிம்மி” என்றார் எமிலி. அக்கேள்வியை இம்பரிடம் எழுப்பிய ஜிம்மி பதிலையும் பெற்றார். “அவர் உங்களுக்குக் கொஞ்சம் கூட பயம் இல்லை” என்கிறார். எமிலி குதூகலமானது போல் காணப்பட்டார். “மேலும் அவர் சொன்னது நீங்கள் பலசாலி அல்ல. மிருதுவாக மென்மையாக சிறு குழந்தையைப் போல இருப்பதாக. தனது கைகளாலேயே உங்களை இரண்டாக மடக்கி ஒடித்து விட முடியுமாம். சிறு சிறு துண்டுகளாகக் கூட. அவருக்குள்ள ஆச்சரியம், புரியாதப் புதிர் எப்படி அந்தக் காவலரைப் போன்ற பெரும் பலம் வாய்ந்த ஆண்களுக்கு நீங்கள் தாயாக இருக்க முடியும் என்பது. எமிலி டிராவிஸ் நிமிர்ந்த பார்வையுடன் கலங்காமல் கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது கன்னங்கள் சிவப்பு சாயம் தெளிக்கப்பட்டது போல மாறின. டிக்கென்சன் வெட்கி சங்கடத்திற்குள்ளானார். காவலரின் முகம் ரத்தம் போல சிவந்து கொதிப்படைந்தது.

“ஏய்! வா என்னோடு” என்றார் காவலர் முரட்டுத்தனமாக. பின் கூட்டத்தினரைத் தனது தோள்களால் தள்ளி விலக்கியபடியே முன் சென்றார்.

இவ்வாறாகவே இம்பர் படைவீரர்களின் குடியிருப்பை சென்றடைந்தார். அங்கு அவர் தாமே முன்வந்து வாக்குமூலத்தை அளித்தார். அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து அவர் மீளவேயில்லை.

இம்பர் களைத்துக் காணப்பட்டார். முதுமையும், நம்பிக்கையின்மையின் தளர்வும் அவரது முகத்தில் தென்பட்டன. தோள்கள் சோர்ந்து, தொங்கிப் போய் நலிவுற்றிருந்தன. கண்கள் ஒளி இழந்து மங்கியிருந்தன. அவரது அழகான தலைமுடி தற்போது தூய வெள்ளையாகி இருக்க வேண்டும். ஆனால் சூரியனும், சுற்றுச்சூழலின் தட்ப வெப்பமும் அவரது தலைமுடியை வெகுவாகத் தாக்கியிருந்தன. எனவே முடி துவண்டு, தொங்கி, உயிரிழந்து, நிறமிழந்து காணப்பட்டது. சுற்றிலும் நடப்பவைக் குறித்து அவர் எவ்வித ஆர்வமும் இல்லாதிருந்தார்.

கடற்புறத்திலிருந்தும், சுற்று வட்டாரங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கூடி நீதிமன்றத்தை நிறைத்தனர். அவர்களின் செருமலும், முனகலும் கலந்த மெல்லிய முணுமுணுவென்ற குரல்கள், அசம்பாவிதம் நிகழக் கூடிய அபாய அறிகுறியை எடுத்துக் காட்டின. அக்குரல்கள் ஆழ்கடலிலிருந்து வெளிப்படும் பேரிரைச்சலைப் போல் இம்பரின் காதுகளை வந்தடைந்தன.

அவர் ஒரு ஜன்னலின் அருகே அமர்ந்திருந்தார். அவரது அக்கறையற்ற கண்கள் புறத்தே நிகழும் துயரமான காட்சிகளை அவ்வப்போது கண்டன. வானம் மேகமூட்டத்துடன் சாம்பல் நிறமாகத் தூறிக் கொண்டிருந்தது. அப்போது யூக்கானில் வெள்ளம் சூழ்ந்திருந்த காலம். உறைபனிக்கட்டிகள் உருகி நகரின் நீர்நிலைகள் உயர்ந்திருந்தன. பிரதான வீதியில் முன்னும் பின்னுமாகத் தோணியிலும், ஒற்றைக் கழியால் உந்தித் தள்ளப்படும் சிறு படகிலும் மக்கள் வந்து கொண்டிருந்தனர். பெரும்பாலும் அந்தப் படகுகள் பிரதான வீதியிலிருந்து திரும்பி வெள்ளம் சூழ்ந்திருந்த சதுரமான திடலுக்குள் நுழைவதை இம்பர் அடிக்கடிக் கண்டார். அத்திடல் படைவீரர்களின் குடியிருப்புக்குள்ளே இருந்த அணிவகுப்புக் களம். சில சமயங்களில் அப்படகுகள் அவரது கண்களுக்குக் கீழே மறைந்தன. அவை கட்டிடத்தின் பலகைச் சுவரில் மோதுவதையும், அதில் உள்ளவர்கள் தாறுமாறாக உள்ளே நுழைவதையும், அதன் பின்னர் கீழ்த்தளத்திலிருந்து படியேறி வரும் அவர்களின் கால்களில் தண்ணீர் தளும்பும் ஓசையையும் அவர் கேட்டார். பின் அவர்கள் கதவருகே வந்தனர். கழற்றிய தொப்பியோடும், நீர் சொட்டும் காலணிகளோடும் ஏற்கெனவே காத்திருந்த மக்களோடு கூடிக் கலந்தனர்.

அவர்களது பார்வை இம்பரின் மீது மையம் கொண்டிருந்த அதே வேளையில், அவருக்குக் கிடைக்கப் போகும் தண்டனை குறித்த ஓர் இரக்கமற்ற எதிர்பார்ப்பும் அவர்களிடமிருந்தது. இம்பர் அவர்களைப் பார்த்ததும் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர்களது வழிமுறைகள், எந்நாளும் தலை வணங்காத அவர்களது சட்டங்கள், நல்ல காலங்களிலும் கஷ்ட காலங்களிலும் கூட இடைவிடாது இயங்குகிற அதன் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு முடிவே கிடையாது என்பதாக அவருக்குத் தோன்றியது.

ஒருவர் மேஜையை ஓங்கித் தட்டியதும் இரைச்சல்கள் ஓய்ந்து அமைதியானது. இம்பர் அந்த மனிதரை நோக்கினார். அவர் அதிகாரமுள்ளவராகக் காணப்பட்டார். இருப்பினும் அவருக்கு மேலாகப் பின்புறமிருந்த மேஜையில் அமர்ந்திருந்த சதுர நெற்றிப்புருவம் கொண்டவரே அனைவருக்கும் மேலான முக்கியஸ்தராகவும், மேஜையைத் தட்டியவருக்கும் மேலதிகாரியாக இருக்க வேண்டுமென ஊகித்தார். பின் அதே மேஜையிலிருந்து மற்றொருவர் எழுந்து நேர்த்தியான காகிதங்களிலிருந்து உரக்கப் படிக்கத் துவங்கினார். ஒவ்வொரு பக்கத்தின் ஆரம்பத்திலும் தொண்டையைக் கனைத்தபடியே காகிதத்தின் கீழ்ப்பகுதியை ஈரப்படுத்தினார். இம்பருக்கு அவரது பேச்சு புரியவில்லை. ஆனால் அங்கு கூடியிருந்த ஏனையோருக்குப் புரிந்தது. அது அவர்களுக்கு ஆத்திரமூட்டியதையும் இம்பரால் புரிந்து கொள்ள முடிந்தது. சில சமயங்களில் அக்கோபம் தீவிரமானதையும் உணர்ந்தார். அவ்வாறான தீவிர ஆத்திரமடைந்த ஒருவர் பதற்றத்துடன் எழுந்து, உக்கிரமாய் ஒற்றை வார்த்தையில் திட்டி சாபமிடுவதையும் உணர்ந்தார். ஒருவர் மேஜையை மீண்டும் ஓங்கித் தட்டியதன் பிறகே அவர் அமைதியானார்.

அதன்பின் பக்கங்களை வாசிக்கத் துவங்கிய அம்மனிதர் முடிவே இல்லாது வாசித்துக் கொண்டே இருந்தார். சலிப்பூட்டுகிற அவரது வாய்ப்பாட்டு இம்பரைக் கனவுலகிற்குக் கவர்ந்திழுத்துச் சென்றது. அவர் வாசித்து முடித்த பின்னரும் தனது கனவுலகிலேயே ஆழ்ந்திருந்தார். அச்சமயம் ஒரு குரல் அவரது வெள்ளை மீன் பிரதேச மொழியில் ஒலித்தது. எவ்வித ஆச்சரியமுமின்றி அவர் கனவுலகிலிருந்து மீண்டு வந்தார். அக்குரல் அவரது சகோதரியின் மகன் குரல். அவர் இளமையிலேயே சொந்த ஊரிலிருந்து வெளியேறி வெள்ளையர்களுடன் குடியேறியவர். “தங்களுக்கு என்னை நினைவிருக்காது” என்கிற வார்த்தைகளை வணக்கத்திற்குரிய வாழ்த்துக்கள் போல் உதிர்த்தார்.

“நினைவிருக்கிறது” என இம்பர் பதிலுரைத்தார். மேலும் “பிறந்த ஊரிலிருந்து வெளியேறிய ஹவ்க்கன் நீ. உன் தாய் மரித்துப் போகட்டும்” என்றார்.

“அவர் வயது முதிர்ந்தவர்” என்றார் ஹவ்க்கன்.

ஆனால் இம்பர் அவர் சொன்னதைக் கேட்காமல் தனது கனவுலகில் ஆழ்ந்தார். ஹவ்க்கன் மீண்டும் இம்பரது தோளில் கை வைத்து அசைத்து உணர்வூட்டினார்.

“பக்கங்களை வாசித்த அந்த மனிதர் என்ன சொன்னார் என்பதை உங்களிடம் திரும்பச் சொல்கிறேன். அவை எல்லாமே நீங்கள் வெள்ளையர்களுக்கு எதிராக நிகழ்த்திய பயங்கர வேதனைகளின் கதைகள். ஓ முட்டாளே! கேப்டன் அலெக்ஸாண்டரிடம் நீங்களாகவே முன்வந்து கூறியவைதான் அவை. இப்போது நான் சொல்வதைப் புரிந்துக் கொண்டு அது உள்ளபடியே நீங்கள் சொன்னதுதானா என்றும் அவை உண்மையா அல்லது பொய்யா என்றும் கூற வேண்டும். இவ்வாறாக உத்தரவிடப்படுகிறது.”

ஹவ்க்கன் தனது சொந்த ஊரிலிருந்து வெளியேறிய போது மதப் பிரசங்கிகளிடம் சில காலம் இருந்தார். அவர்கள் அவருக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்திருந்தனர். தற்போது உரக்கப் படித்தவரின் கைகளிலிருந்த நேர்த்தியான காகிதங்கள் இப்போது ஹவ்க்கனின் கைகளிலிருந்தன. இம்பர் முதன் முறையாக வாக்குமூலம் அளித்த போது வாயால் கூற, கேப்டன் அலெக்ஸாண்டரிடம் ஜிம்மி மொழிபெயர்த்துச் சொல்ல, அங்கிருந்த ஒரு குமாஸ்தா எழுத்து மூலமாகப் பதிவு செய்து கொண்டவை அவை. ஹவ்க்கன் அவற்றை வாசிக்க ஆரம்பித்தார். அதைக் கேட்டபடியே ஓர் இடைவெளிக்காக இம்பர் காத்திருந்தார். அவருக்குள் ஓர் ஆச்சரியம் தோன்றியதும், அவசர அவசரமாகக் குறுக்கிட்டார்.

“அது நான் சொன்னது தான் ஹவ்க்கன். நீ அதைக் கேட்காமலேயே உனது உதடுகளிலிருந்து எப்படி அது வெளிவருகிறது?” என்று கேட்டார்.

நடு வகிடெடுத்து தலை வாரியிருந்த ஹவ்க்கன், தன்னைத் தானே உயர்வாக எண்ணிப் புன்னகைத்தார். “இல்லை. நீங்கள் சொன்னதை ஒருபோதும் நான் கேட்கவில்லை. ஆனால் ஓ இம்பர்! அது இந்தக் காகிதங்களிலிருந்து எனது கண்களின் மூலமாகத் தலைக்குள் சென்று, வாய் மூலமாக வெளியாகிறது. இப்படியாகத் தான் நீங்கள் அதைக் கேட்க முடிகிறது” என்றார்.

“அப்படியா! நான் சொன்னது அந்தக் காகிதத்தில் இருக்கிறதா?” இம்பர் ஆச்சரியத்தில் ஆழந்து போனார். அவரது குரல் தாழ்ந்தது. அந்தக் காகிதங்களை கட்டை விரலுக்கும் மற்றொரு விரலுக்கும் இடையே அவர் பிடித்த போது படபடவென்று ஒலித்தது. அதில் கிறுக்கப்பட்டிருந்த எழுத்துகளை உற்றுப் பார்த்தார். “இது ஒரு மாபெரும் நிவாரணி. ஹவ்க்கன் நீ அற்புதங்களைச் செய்கிறாய்” என்றார்.

“இது ஒன்றுமேயில்லை, ஒன்றுமேயில்லை” என்று அந்த இளைஞர் அலட்சியமாகவும் பெருமையுடனும் பதிலுரைத்தார். அதன்பின் வழக்கின் முக்கிய ஆதாரமாகிய அந்தக் காகிதங்களில் எழுதப்பட்டிருந்த பயங்கரங்களை தொடர்ந்து மேலும் படிக்க ஆரம்பித்தார்.

“அந்த வருடத்தில், உறைபனிக்கட்டிகள் உடைந்து உருகுவதற்கு முன்பாக ஒரு வயதானவர் வந்தார். அவருடன் வந்த ஒரு சிறுவன் ஒரு கால் ஒடிந்து முடமாய் இருந்தான். அவர்களையும் நான் கொன்றேன். அப்போது அந்த முதியவர் பெரும் சப்தமெழுப்பினார்.”

“அது உண்மைதான்.” இம்பர் மூச்சு விடவும் மறந்து குறுக்கிட்டார். “அவர் நீண்ட நேரம் சாகாமல் கத்திக் கொண்டேயிருந்தார். ஆனால் அது உனக்கு எப்படித் தெரியும் ஹவ்க்கன்? ஒருவேளை வெள்ளையர் கேப்டன் உன்னிடம் சொல்லியிருக்கலாம். வேறு யாரும் அப்போது அங்கே இல்லையே. நான் அவரிடம் மட்டும் தானே கூறினேன்” என்று குழம்பிப் போய் தெரிவித்தார்.

ஹவ்க்கன் பொறுமையிழந்து தலையசைத்தார். “ஓ முட்டாள்! இந்தக் காகிதத்தில் உள்ளது என்று நான் இப்போதுதானே உங்களிடம் சொன்னேன்” என்றார் ஹவ்க்கன்.

மையினால் கிறுக்கப்பட்டிருந்ததை இம்பர் ஆழந்து உற்றுப் பார்த்துப் பின் வருமாறு பேசினார். “ஒரு வேட்டைக்காரன் உறைபனியைப் பார்த்து நேற்று இங்கேதான் ஒரு முயல் போனது. இந்தப் புதரின் அருகேதான் நின்று உற்றுக் கேட்டது. ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் பயந்து விட்டது. இந்தப் பாதையோரம் திரும்பியது. இங்கிருந்து வேகமாக ஓடியது. இங்கு அகலமாகத் தாவிச் சென்றது. அதை விட வேகமாகவும், அகலமாகவும் தாவியபடி சிவிங்கி வந்தது. இங்கு அதனுடைய கூர் நகங்கள் உறைபனியில் பதிந்தது. இங்கிருந்து எம்பி மிக அகலமாகத் தாவி முயலைத் தாக்கியது. முயல் விழுந்து வயிறு மேலாகப் புரண்டது. அதன்பின் சிவிங்கி தனியாகச் சென்றது. முயல் இனி இல்லை. வேட்டைக்காரன் உறைபனியைப் பார்த்து இவ்வாறாகச் சொல்வது போல நீயும் காகிதத்தைப் பார்த்து முதிய இம்பர் இங்கிங்கு இவ்வாறாகச் செய்தார் என்கிறாயா?”

“அதற்கு ஈடாகவேதான்” என்றார் ஹவ்க்கன். “இனி வெறுமனே கேட்டுக் கொண்டிருங்கள். உங்களைப் பேசுமாறு சொல்லும் வரையிலும் பெண்களுக்கே உரிய உங்கள் நாக்கை பல்லுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள்.”

அதன் பின்னர் ஹவ்க்கன் வெகு நேரம் அந்த வாக்குமூலத்தை வாசித்தார். இம்பர் சிந்தனையில் ஆழ்ந்து அமைதியானார். இறுதியில் அவர் சொன்னது, “அவையெல்லாம் நான் சொன்னதே. உண்மையாகவே நடந்ததைத்தான் சொன்னேன். எனக்கு வயதாகி விட்டது. நான் அப்போது சொல்ல மறந்து போன மற்ற பல விஷயங்கள் திரும்பத் தற்போது ஞாபகத்திற்கு வருகின்றன. இதைத் தலைமை அதிகாரி தெரிந்து கொள்வது நல்லது. முதலில் ஒரு மனிதன் பனிமலை மீது ஏறி வந்தான். தந்திரமாக விலங்குகளைப் பிடிப்பதற்கான, இரும்பினால் செய்யப்பட்ட பொறி அவனிடமிருந்தது. வெள்ளை மீன் பகுதியிலுள்ள நீர்நாய்களை நாடி வந்தான். அவனைக் கொன்றேன். வெகுகாலம் முன்பு மூன்று பேர் தங்கத்தைத் தேடி அப்பகுதிக்கு வந்தனர். அவர்களையும் கொன்று, விலங்குகளுக்குத் தீனியாக விட்டு வைத்தேன். மேலும் ஐந்து விரல்கள் பகுதியில் ஒரு மனிதன் கட்டுமரத்தில் அதிகமான மாமிசத்தைக் கொண்டு வந்தான்.”

விவரங்களை நினைவுபடுத்திக் கொள்ள இம்பர் தாமதிக்கும் போது ஹவ்க்கன் மொழிபெயர்த்தார். அதை அங்கிருந்த ஒரு குமாஸ்தா, அவரது மற்ற வேலைகளை விட்டு விட்டு எழுதத் துவங்கினார். துயரமான ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நீதிமன்றம் உணர்ச்சி வசப்படாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

பின் இம்பர், “சிவந்த தலைமுடியும், மாறு கண் பார்வையும் கொண்ட ஒருவனை வியக்கத்தக்க வகையில் வெகு தூரத்திலிருந்தே குறி தவறாமல் துல்லியமாக அம்பெய்தி வீழ்த்தினேன்” என்றார்.

“பாவி” என்று அலறினார் முன்னே அமர்ந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர். அவரது குரல் உளப்பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும், பெரும் துயரை வெளிப்படுத்தியது. அவரது தலைமுடியும் சிவப்பாகவே இருந்தது. “அவர் என் சகோதரர்” என்று கூறியவாறே,“பாவி” என்று மீண்டும் அலறினார். அவர் சீரான இடைவெளியில் அதே வார்த்தையைத் திரும்பத் திரும்ப மிகுந்த சோகத்துடன் கூவியதை நீதிமன்றம் கேட்டது. உடனிருந்த அவரது தோழர்களும் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. மேஜையில் அமர்ந்திருந்தவரும் அமைதி காக்கும்படி உத்தரவிடவில்லை.

மீண்டும் ஒருமுறை இம்பரது தலை சோர்ந்துத் தாழ்ந்தது. ஒரு திரை விழுந்து உலகையே மறைத்தது போல் அவரது கண்களும் மங்கின. முதுமை மட்டுமே கனவு காணக் கூடிய, மிகப் பெருமளவு வீணான தனது இளமையைக் குறித்த கற்பனையில் சஞ்சரித்தார்.

பின்னர் ஹவ்க்கன் அவரை மீண்டும் தட்டி உலுக்கினார். “ஓ இம்பர்! இவ்வாறாகப் பலத் தொல்லைகளை அளித்து, மக்களைக் கொன்று, வெகுதூரம் பயணித்து,நீதியின் முன் வந்து ஒப்புதல் அளித்ததன் காரணத்தை உரைக்கும்படி உத்தரவிடப்படுகிறது.”

இம்பர் முன்னும் பின்னுமாக பலவீனமாகத் தள்ளாடினார். மங்கிய குரலில் ஆழ்ந்த மனத்தாங்கலுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார். ஆனால் ஹவ்க்கன் அவரை இடைமறித்தார்.

“வயதான இந்த மனிதருக்கு பைத்தியம் பிடித்துள்ளது” என்று சதுர நெற்றிப்புருவம் கொண்டவரிடம் ஆங்கிலத்தில் கூறினார். “இவரது பேச்சு குழந்தைத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் உள்ளது” என்றார்.

“குழந்தையைப் போல, முட்டாள்தனமாக அவர் பேசுவதை நாம் கேட்போம்” என்றார் சதுர நெற்றிப்புருவம் கொண்ட மனிதர். “மேலும் வார்த்தைக்கு வார்த்தை அவர் சொல்வதை உள்ளபடியே நாம் கேட்போம். உனக்குப் புரிந்ததா?” என்றார் அதிகார தோரணையில். ஹவ்க்கனுக்குப் புரிந்தது.

தனது சகோதரியின் மகனுக்கும் தலைமை அதிகாரிக்குமிடையே நிகழ்ந்ததைக் கண்கூடாகக் கண்ட இம்பரது கண்கள் ஒளி பெற்றன. அதன் பிறகுதான் பெருங்கதையே ஆரம்பமானது. இது ஒரு வெண்கலப் பதக்கத்திற்குரிய தேசாபிமானியின் இதிகாசம். இனி வரும் தலைமுறையினரும் இதன் சாரத்தை அறிந்து கொள்ளும்படியாக வெண்கலத் தகட்டில் பதிக்கப்பட்டு பட்டயமாக்கப்பட வேண்டும். திரண்டிருந்த கூட்டத்தினர் இம்பரது பேச்சைக் கேட்டு விசித்திரமானதோர் அமைதியில் ஆழ்ந்தனர். சதுர நெற்றிப் புருவம் கொண்ட நீதிபதியும் கன்னத்தில் கை வைத்து, தலை சாய்த்து தனது ஆன்மாவையும், தமது இனத்தவரின் ஆன்மாவையும் குறித்த சிந்தனையில் மூழ்கினார்.

இம்பரது குரலோசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. கூடவே லயம் சேர்த்தது போல, மொழிபெயர்ப்பாளரின் குரலோசையும் உச்சஸ்தாயியில் மாறி மாறி ஒலித்த வண்ணமிருந்தது. இடையிடையே தேவாலய மணியோசை ஒலிப்பது போல சிவந்த தலைமுடி கொண்டவரின் உள்ளார்ந்த உணர்ச்சிக் குரலும் அவ்வப்போது ‘பாவி, பாவி’ என முழங்கியது.

“இம்பராகிய நான் வெள்ளை மீன் நதிப்புறத்து மக்களில் ஒருவன்.” இவ்வாறாக ஹவ்க்கனின் மொழிபெயர்ப்புத் தொடர்ந்தது. அச்சமயம் மரபில் ஊறிய இயற்கையான கொடூரம் ஹவ்க்கனைத் தொற்றிக் கொண்டது. மதப் பிரசங்கிகள் பயிற்றுவித்த கலாச்சாரத்தையும், மேற்பூச்சு நாகரிகத்தையும் மறந்தார். இம்பரின் வார்த்தைகளில் பெருக்கெடுத்தோடும் மூர்க்கத்தனமான சுழலில் சிக்கி லயித்து அதன் வசமானார்.

“என் தந்தை ஓட்ஸ்போக் பலசாலி. நான் சிறுவனாக இருந்த போது எங்களது வாழ்க்கை பிரகாசமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. எங்களது நிலப்பரப்பும் வளமாக இருந்தது. புதுமையான பொருள்களுக்காக மக்கள் ஏங்கவில்லை. புதிய குரல்களையும் மொழிகளையும் அவர்கள் கேட்கவில்லை. முன்னோர்களின் வழிகாட்டுதலையே அவர்கள் பின்பற்றினார்கள். எங்கள் குலப்பெண்கள் இளைஞர்களது கண்களில் அன்பாதரவைக் கண்டனர். இளைஞர்களும் அப்பெண்களைத் திருப்தியுடன் கண்ணுற்றனர். குழந்தைகள் தாய்மார்களின் மார்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இனம் வளர்ச்சியுற்றதற்கு ஏற்ப அவர்களின் இடுப்பும் கனமானது. அக்காலத்தில் ஆண்கள் ஆண்மையோடு இருந்தனர். போரிலும் சமாதானத்திலும், வளத்திலும் பஞ்சத்திலும் அவர்கள் ஆண்களாகவே மனநிறைவோடு செயல்பட்டனர்.

“இப்போதைக் காட்டிலும் அப்போது நதியில் மீன்கள் நிறைந்திருந்தன. காட்டிலும் அதிகமான மாமிசம் கிடைத்தது. எங்களது நாய்கள் ஓநாய்களைப் போன்றிருந்தன. கனத்த தோலுடன், வெதுவெதுப்பாக, புயலையும், உறைபனியையும் தாங்கும் வலிமையோடு அவை இருந்தன. எங்களது நாய்கள் போலவே நாங்களும் கடுங்குளிரையும், புயலையும் தாங்குமளவு கடினமாயிருந்தோம். பெல்லிஸ் இனத்தவர் எங்களது நிலத்திற்குள் நுழைந்த போது நாங்கள் அவர்களைக் கொன்றோம். அவர்கள் எங்களைக் கொன்றனர். ஏனெனில் நாங்கள் வெள்ளை மீன் வாசிகள், ஆண்கள். எங்களது தந்தைகளும், தந்தைகளது தந்தைகளும் பெல்லிஸ் இனத்தவரை எதிர்த்துப் போராடி எங்களது நிலத்தின் எல்லைகளை வரையறுத்திருந்தனர்.

“நான் சொல்வது எங்கள் நாய்களைப் போலவேதான் நாங்களும். பின்னொரு நாளில் முதல் வெள்ளையன் எங்கள் பகுதிக்குள் வந்தான். அவன் தன் உடலைக் கையினாலும், கால் முட்டியினாலும், உறைபனியில் இழுத்துக் கொண்டு வந்தான். அவனது தோல் ஒட்டிப் போய் இறுக்கமாக இருந்தது. அதன் கீழே எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. இவ்வாறான மனிதன் இருந்ததே இல்லையே என்று நாங்கள் நினைத்தோம். அவன் எந்த இனத்தவன், எந்த நிலத்தவன் என அறிய ஆவல் கொண்டோம். அவன் சின்னஞ்சிறு குழந்தையைப் போல பலவீனமாய், மிகப் பலவீனமாய் இருந்தான். எனவே நாங்கள் எங்களது கணப்பினருகே அவனுக்கு இடமளித்தோம். படுக்க, கதகதப்பான ரோமத்துடன் கூடிய தோல் கொடுத்தோம். எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பது போல அவனுக்கும் உணவளித்தோம்.

“அவனுடன் ஒரு நாயும் வந்தது. நான் வளர்த்து வந்த மூன்று நாய்களைப் போல அதுவும் பெரிதாக இருந்தது. ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது. அந்த நாயின் ரோமம் நீண்டதாக இல்லாமல் குட்டையாகவும், கதகதப்பில்லாமலும் இருந்தது. அதன் வால் பனியில் உறைந்து இறுதிப் பகுதி துண்டாகி விழுந்து விட்டிருந்தது. விநோதமான அந்த நாய்க்கும் உணவு கொடுத்தோம். கணப்பினருகே படுக்கவும் வைத்தோம். எங்கள் நாய்களை அதனுடன் சண்டையிடாதவாறு அதட்டி மறித்தோம். இல்லையெனில் அவை அந்நாயை அப்போதே கொன்றிருக்கும். கடமான் கறியும், உலர்ந்த வஞ்சிர மீனும் உண்ணக் கொடுத்தோம். அந்த மனிதனும், நாயும் தங்களை பலமிக்கவர்களாக ஆக்கிக் கொண்டனர். எத்தகையதோர் பலம் சேர்ந்தது. வலிமையாகவும் பயமற்றவனுமாய் அவன் ஆனான். அந்த குட்டை மயிர் நாயும் அவ்வாறே ஆனது. அந்த மனிதன் உரத்த குரலில் பேசி,எங்கள் இனத்தைச் சார்ந்த வயதானவர்களையும், வாலிபர்களையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். தைரியமாக எங்கள் குலத்தின் கன்னிப் பெண்களையும் ஏறெடுத்துப் பார்த்தான். அந்த நாயும் எனது நாய்களோடு சண்டையிட்டது. குட்டை மயிருடன் பலவீனமாக வந்து சேர்ந்த அது, ஒரே நாளில் எனது மூன்று நாய்களையும் கொன்றது.

“அந்த மனிதனிடம் அவனது இன மக்களைக் குறித்துக் கேட்ட போது, தனக்கு பல சகோதரர்கள் உண்டு என்று சொல்லி அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பும் நல்ல விதமாக இல்லை. முழு பலத்தையும் பெற்றதும் அவன் போய் விட்டான். அவன் கூடவே நோடா, எங்கள் இனத் தலைவரின் மகளும் போனாள். அதன் பின்பு எங்களது பெட்டை நாய் ஒன்று குட்டி போட்டது. ஒரு போதும் அவ்வாறான நாயினம் எங்கள் பகுதியில் இருந்ததே இல்லை. பெரிய தலை, கனமான தாடை, குட்டை மயிர். அந்த வகை நாயால் ஒரு பயனுமில்லை. எனக்கு என் தந்தையின் ஞாபகம் வருகிறது. என் தந்தை ஓட்ஸ்போக் பலசாலி. ஒரு பயனுமற்ற அந்த நாயைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்தார். ஆக, அதன் பின்னர் பயனற்றது இல்லாமல் போனது. இரு கோடை காலம் கடந்த பின்னர், ஒரு ஆண் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு நோடா திரும்ப வந்தாள்.

“இப்படியாகத்தான் ஆரம்பித்தது. பின் இரண்டாவது வெள்ளையன் வந்தான். கூடவே குட்டை மயிர் நாய்களையும் கொண்டு வந்தான். அவற்றை விட்டு விட்டு அவன் திரும்பிப் போனான். அவனோடு எங்களிடமிருந்ததிலியே மிக வலிமையான ஆறு நாய்களைக் கூட்டிப் போனான். ஆதற்கு ஈடாக, கொடுக்கல் வாங்கல் வியாபாரமாக கூ-சோ-டீ, என் அம்மாவின் தம்பி, அவரிடம் அற்புதமான ஒரு கைத்துப்பாக்கியைக் கொடுத்திருந்தான். அது துரிதமாக ஆறு முறைகள் சுடக் கூடியது. மேலும் கூ-சோ-டீ மிகப் பெரியவன். கையில் துப்பாக்கி வேறு. எங்களது வில்லையும், அம்புகளையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். ‘பெண்கள் சரக்கு’ என்று கூறி, அந்தக் கைத்துப்பாக்கியுடன் வழுக்கை முகக் கரடியை வேட்டையாடச் சென்றான். இப்போது எங்களுக்குத் தெரியும் கைத்துப்பாக்கியால் வழுக்கை முகத்தை வேட்டையாடக் கூடாது என்று. அப்போது அது எப்படி எங்களுக்குத் தெரியும்? கூ-சோ-டீக்கு எப்படித் தெரியும்? ஆக அவன் வழுக்கை முகத்திற்கு நேர் எதிரே தைரியமாகச் சென்றான். ஆறு முறையும் வேக வேகமாகச் சுட்டான். அந்த வழுக்கை முகக் கரடி உறுமியவாறே அவன் மார்பின் மீது பாய்ந்தது. அவன் முட்டை உடைந்தது போல் ஆனான். தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுவது போல, கூ-சோ-டீயின் மூளை சொட்டு சொட்டாக தரையில் விழுந்தது. வேட்டையாடுவதில் அவன் திறமைசாலி. அவன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இனி மாமிசம் கொண்டு தர யாருமில்லை. நாங்கள் வெறுத்துப் போனோம். ‘எது வெள்ளையனுக்கு நல்லதோ, அது நமக்கு நல்லதல்ல’ என்று பேசிக் கொண்டோம். இதுமுற்றிலும் உண்மை. வெள்ளையர்கள் பலர் இருக்கலாம். பலம் வாய்ந்தவர்களாக, குண்டாகவும் கூட. ஆனால் அவர்களது வழிமுறை எங்களை பலவீனமாகவும், ஒல்லியாகவும், எண்ணிக்கையில் குறைவாகவும் ஆக்கி விட்டது.

“வந்தான் மூன்றாவது வெள்ளையன். பல உணவு வகைகளையும், விநோதமான பொருட்களையும், பெரும் செல்வங்களையும் கொண்டு வந்தான். வியாபார ரீதியில் எங்களது ஆகச் சிறந்த இருபது வலிமையான நாய்களைக் கொண்டுச் சென்றான். மேலும் என்னென்னவோ பரிசுகளும், வாக்குறுதிகளும் தந்தான். எங்களின் பத்து வாலிப வேட்டைக்காரர்களையும் அவனோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பதை நாங்கள் யாரும் பின்னர் அறியவேயில்லை. அவர்கள் மனிதர்களே கால் வைத்திராத பனி மலையில் செத்துப் போனதாகவும், அல்லது பூமியின் எல்லைக்கும் அப்பாலுள்ள மௌன மலையில் ஏறி செத்துப் போனதாகவும் கூறப்பட்டது. என்ன நடந்திருந்தாலும் சரி, பிறகு எங்கள் நாய்களையோ, வேட்டைக்கார வாலிபர்களையோ வெள்ளை மீன் வாசிகளாகிய நாங்கள் திரும்பப் பார்க்கவேயில்லை.

“வருடங்கள் போயின. மேலும் வெள்ளையர்கள் வந்தார்கள். பரிசுகளும், பணமும் தந்தார்கள். இளைஞர்களை அழைத்துச் சென்றார்கள். சுமயங்களில் சில வாலிபர்கள் திரும்பி வந்து விநோதமான பயங்கரங்களை, கதை கதையாகச் சொன்னார்கள். பெல்லிஸ் நிலத்திற்கும் அப்பால் உள்ள பிரதேசத்தில் கஷ்டமான வேலைகள் செய்ததாகவும் சொன்னார்கள். பல சமயங்களில் அவர்கள் திரும்பி வரவேயில்லை. ‘அவர்களுக்கு அதாவது இந்த வெள்ளையர்களுக்கு உயிர் பற்றி பயமில்லை. ஏனெனில் அவர்கள் இனத்தில் பல உயிர்கள் உள்ளன. வெள்ளை மீன் வாசிகளாகிய நாம் குறைவாகவே உள்ளோம். எனவே இனி நமது இளைஞர்கள் வெள்ளையர்களோடு போகவே கூடாது’ என்று நாங்கள் பேசிக் கொண்டோம். ஆனால் அதன் பின்னரும் இளைஞர்கள் சென்றனர். பெண்களும் சென்றனர். எங்களுக்குக் கடும் சீற்றம் வந்தது.

“உண்மைதான். நாங்கள் வெள்ளையர்களிடமிருந்து பெற்ற மாவுப் பண்டங்களை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தோம். உப்பிட்ட பன்றியையும் கூட. மகிழ்ச்சியாக டீ அருந்தினோம். டீ கிடைக்காத போது, நிலைமை மோசமாகி சட்சட்டென கோபம் வந்தது. ஆக, வெள்ளையனின் வியாபாரப் பொருட்களுக்காக ஏங்கினோம். வியாபாரம்! வியாபாரம்! எப்பவும் வியாபாரம் தான்! ஒரு குளிர் காலத்தில் எங்களது மாமிசங்களை கடிகாரங்களுக்கு பதிலாகக் கொடுத்தோம். அவை பின்னர் ஓடவேயில்லை. உட்பகுதியில் பழுதான கைக்கடிகாரங்கள், தேய்ந்து வழவழப்பான அறங்கள், தோட்டாக்கள் இல்லாத கைத்துப்பாக்கிகள் போன்ற எல்லாமே பயனற்ற வீணான பொருட்கள். பிறகு பஞ்சம் வந்து, மாமிசம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. வசந்த காலம் வருவதற்குள் திரளான மக்கள் அங்கே செத்துப் போனார்கள்.”

“நாம் இப்போது பலவீனமாக இருக்கிறோம். பெல்லிஸ்வாசிகள் நம் மேல் பாய்வார்கள். நமது எல்லைகள் முறியடிக்கப்படும் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். ஆனால் எங்களுக்கு என்ன ஆயிற்றோ, அதே நிலைதான் அங்கேயும். எங்களை எதிர்க்க முடியாத அளவிற்கு அவர்களும் பலவீனமாகி விட்டிருந்தனர்.

என் தந்தை ஓட்ஸ்போக் பலசாலி. அப்போது வயது முதிர்ந்து, தெளிந்த அறிவோடு இருந்தார். அவர் எங்கள் இனத் தலைவரிடம் சென்று பேசியது: ‘கவனியுங்கள், நமது நாய்கள் வீணாய்ப் போயின. இனி அவற்றுக்கு கனத்த ரோமமும், பெரும் பலமும் இருக்காது. சேணம் பூட்டி பனிச்சறுக்கு வண்டி இழுக்கவும் லாயக்கில்லாமல், பனியில் விறைத்து செத்துப் போகும். நாம் கிராமத்திற்குச் சென்று அவற்றைக் கொல்வோம். ஓநாய் கலப்பினத்தை மட்டும் விட்டு வைத்து, காட்டு ஓநாய்களுடன் இணைந்து புணரும் வகையில், இரவில் வெளியே கட்டி வைப்போம். பின் மீண்டும் பலம் வாய்ந்த, வெதுவெதுப்பான நாய்கள் நமக்குக் கிடைக்கும்.’

அவர் சொன்னதைக் கேட்டு அவ்வாறே செய்யப்பட்டது. அதன்பின், நாங்கள், வெள்ளை மீன் வாசிகள், எங்களின் நாய்களுக்காகவே பிரபலமானோம். சுற்று வட்டாரங்களில் எங்களது நாய்களே ஆகச் சிறந்ததாய் விளங்கின. ஆனாலும் வெள்ளை மீன் வாசிகளாகிய எங்களது பெருமையை யாரும் உணரவில்லை. எங்களது மிகச் சிறந்த இளைஞர்களும், பெண்மணிகளும் வெள்ளையர்களுடன் சென்று விட்டனர். வழித்தடங்களையும், ஆறுகளையும் கடந்து வெகுதூரப் பிரதேசங்களுக்குச் சென்றனர். பருவ வயதில் சென்ற பெண்கள் வயதாகி,நோடாவைப் போலவே உருக்குலைந்து திரும்பினர் அல்லது சென்றவர்கள் திரும்பவே இல்லை. திரும்பி வந்த இளஞர்களில் சிலர் எங்களுடன் கணப்பினருகே அமர்ந்தனர். முரட்டுத்தனமான குணத்தை வெளிப்படுத்தி, கெட்டப் பேச்சு பேசினர். இரவும் பகலும் சூதாடுவதே அவர்கள் வழக்கமானது. அது தவிர கெடுதலான குடிப்பழக்கமும் சேர்ந்து கொண்டது. வெள்ளையர்களின் அழைப்பு வரும் வரை அவர்கள் மன நிம்மதியற்று இருந்தனர். அழைப்பு வந்ததும் மீண்டும் முன்பின் அறியாத பிரதேசங்களுக்குச் சென்றனர். அவர்களுக்கு மான, மரியாதை எதுவும் இருக்கவில்லை. பழைய சம்பிரதாயங்களை கேலி செய்தனர். இனத் தலைவரையும், குல மந்திரவாதியின் முகத்தையும் நிகராகப் பார்த்து எள்ளி நகையாடினர்.

“ஆக நான் சொல்வது வெள்ளை மீன் வாசிகளாகிய நாங்கள் மிகப் பலவீனமான இனமாகி விட்டோம். நாங்கள் சேகரித்த கதகதப்பான ரோமத்துடன் கூடிய தோல்களை, புகையிலைக்காகவும், விஸ்கிக்காகவும், மெல்லிய பருத்தி ஆடைகளுக்காகவும் விற்றோம். ஆந்த ஆடைகள் எங்களைக் குளிரில் நடுங்கச் செய்தன. பின் எங்களுக்கு அந்த இருமல் நோய் வந்தது. ஆண்களும், பெண்களும் வியர்வையும், இருமலுமாக நீண்ட இரவுகளைக் கழித்தனர். வழித்தடங்களில் சென்ற வேட்டைக்காரர்களும் உறைபனியில் ரத்தத்தை உமிழ்ந்தனர். அவ்வப்போது ஒரு சிலர் வாய் வழியே ரத்தம் ஒழுகி உடனே செத்தனர். பெண்களும் குறைந்த அளவிலேயே குழந்தைகள் பெற்றனர். அவர்கள் பெற்ற குழந்தைகளும் பலவீனமாகவும், நோய்வாய்ப்படுவதுமாகவே இருந்தன. வெள்ளையர்களிடமிருந்து மற்ற பல நோய்களும் எங்களுக்கு வந்தன. அவ்வாறான நோய்களை ஒருபோதும் நாங்கள் அறிந்திருக்கவேயில்லை. அவை எங்களுக்குப் புரியவுமில்லை. தட்டம்மை, அதே போன்ற பெரியம்மை போன்ற பெயர்களை நான் எப்போதேனும் கேட்டிருப்பேனா? அவ்வகை நோய்களால் நாங்கள் மரித்துப் போனோம். முட்டையிட்ட பிறகு உயிருடன் இருக்க வேண்டிய தேவையே இல்லாத வஞ்சிர மீன்கள், நீர் சுழலில் விழுந்து மடிவது போல எங்கள் இனமும் அழிந்து கொண்டே வந்தது.

“ஆயினும் இதுதான் புரியாதப் புதிர். இறப்பின் இறுதி மூச்சு போல வெள்ளையர்கள் வருகின்றனர். அவர்களது அனைத்து வழிமுறைகளும் மரணத்தின் பாதைக்கே இழுத்துச் செல்கின்றன. அவர்களின் மூக்குத் துவாரங்கள் வரை மரணமே நிரம்பியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் மடிவதில்லை. பல நோய்கள், தட்டம்மையும், பெரியம்மையும், அந்த இருமல் நோயும், ரத்த வாந்தியும் எங்களுக்கு வந்ததன் காரணமே வெள்ளையர்கள்தான். அவர்களது விஸ்கி, புகையிலை, குட்டை மயிர் நாய்கள், ஆறு முறைகள் விரைந்து சுடும் அவர்களது கைத்துப்பாக்கிகள் ஆகிய அனைத்துமே எங்களுக்கு வீணானவை.

“அவர்களது மென்மையான வெள்ளைத் தோல் புயலையும், உறைபனியையும் எதிர்கொள்ள இயலாதவை. ஆயினும் அத்தனை பாதகங்களையும் மீறி, குண்டாகக் கொழுத்து செழித்து அவர்கள் வளர்கின்றனர். அவர்களது இரும்புக் கரம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. அவர்கள் வலிமையோடு உலக மக்களைக் காலால் மிதித்து நசுக்குகின்றனர். மேலும் அவர்களது பெண்களும் சிறு குழந்தைகள் போல, மிருதுவாக, மென்மையாக உள்ளனர். எளிதாக நொறுங்கக் கூடியவர்கள் போல இருக்கின்றனர். ஆனால் ஒருபோதும் அவர்கள் நொறுங்குவதே இல்லை. அதே சமயம் பலமிக்க ஆண் மக்களுக்குத் தாய்மார்களாக இருக்கின்றனர். இவ்வாறான மென்மையிலிருந்தும், நோய்களிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும் ஆட்சியும், அதிகாரமும், பெரும் பலமும் தோன்றுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, அவர்கள் கடவுள்களா, சாத்தான்களா? எனக்குத் தெரியவில்லை. வயதான வெள்ளை மீன் வாசியாகிய நான் இம்பர், எனக்கென்ன விளங்கும்? எனக்குத் தெரிந்ததெல்லாம், நாங்கள் புரிந்து கொள்ளும் நிலைக்கும் அப்பால் உள்ளவர்கள் இந்த வெள்ளையர்கள். அவர்கள் வெகுதூரம் பயணிக்கும் நாடோடிகள். அவர்கள் எந்த பூமியில் உள்ளார்களோ, அதிலேயே அவர்கள் சண்டையிடுவார்கள்.

“ஆக நான் சொல்வது, காட்டில் மாமிசம் குறைந்து கொண்டே வந்தது. வெள்ளையர்களின் வேட்டைத் துப்பாக்கிகள் அற்புதமானவை என்பது உண்மைதான். நீண்ட தூரத்திலிருந்தே கொல்லக் கூடிய வல்லமை உள்ளவை. ஆனால் மாமிசமே கிடைக்காத போது, அவற்றால் என்ன பயன்? வெள்ளை மீன் பகுதியில் நான் சிறுவனாக இருந்த போது, ஒவ்வொரு மலையிலும் கடமான்கள் இருந்தன. ஒவ்வொரு வருடமும் கலைமான்கள் பெருகிக் கணக்கற்றவை ஆயின. ஆனால் இப்போது ஒரு வேட்டைக்காரன் பத்து நாட்கள் தடங்களில் அலைந்து திரிந்தாலும், ஒரு கடமான் கூட கண் மலரும்படியாகத் தென்படுவதில்லை. கொல்வதற்கு எதுவுமே இல்லாத போது, நான் கேட்கிறேன், வெகுதூரத்திலிருந்து கொல்லக்கூடிய வேட்டைத் துப்பாக்கியால் என்ன பயன்?

“நான் இம்பர், இதையெல்லாம் யோசித்தேன். காட்டில் விலங்குகள் அழிந்தது போலவே வெள்ளை மீன் வாசிகள், பெல்லிஸ் இனம், இன்னும் எங்கள் பிரதேசத்திலுள்ள பல்வேறு இனங்களும் அழிந்து வருவதைக் கவனித்தேன். நீண்ட காலம் சிந்தித்தேன். எங்கள் குல மந்திரவாதிகளிடமும், வயதான சான்றோர்களிடமும் பேசினேன். கிராமத்தின் ஓசைகள் எனக்குத் தொல்லைத் தராத வகையில், தூரமாக விலகிச் சென்றேன். மாமிசம் தின்பதை நிறுத்தினேன். ஏனெனில் அது வயிறை பாரமாக்கி, கண்ணையும் காதையும் சுறுசுறுப்பாக இயங்க விடாது. காட்டில் தனியாகத் தூக்கமின்றி நீண்ட நேரம் அமர்ந்தேன். ஒரு சைகை, அறிகுறிக்காக கண்களை அகல விழித்துக் காத்திருந்தேன். வரப் போகும் செய்தியைக் காது கொடுத்துக் கேட்க, பொறுமையாகத் தவமிருந்தேன். அங்கே இரவின் கும்மிருட்டில், நதிக்கரையில் தனிமையில் அலைந்தேன். காற்றின் ஓலமும், நீரின் சலசலப்பும் கேட்டேன். அங்கு மரங்களிலுள்ள, முன்னர் இறந்து, மறைந்து போன குறி சொல்லும் மந்திரவாதிகளின் ஆவிகள் மூலமாக ஞானத்தையும், தெளிவையும் நாடினேன்.

“இறுதியாக அற்புத வழிகாட்டுதல் போல, ஒரு காட்சி புலனாகியது. அதில் வெறுக்கத்தக்க குட்டை மயிர் நாய்கள் தோன்றின. துல்லியமாக வழி தென்பட்டது போல உணர்ந்தேன். என் தந்தை ஓட்ஸ்போக் பலசாலி. அவரது புத்திக் கூர்மையால் கூறிய அறிவுரைப்படி, ஓநாய்-நாய் கலப்பின் காரணமாக எங்களது நாய்களின் ரத்தம் சுத்தமாயின. அதன் பிறகே அவற்றின் தோல் கதகதப்பானது. சேணம் பூட்டி பனிச்சறுக்கு வண்டிகளை இழுக்கவும் அவற்றுக்கு பலம் கிடைத்தது.

“எனவே நான் கிராமத்திற்குத் திரும்பி ஆண்களைக் கூட்டி உரையாற்றினேன். ‘இந்த வெள்ளையர்கள், இவர்களும் ஓர் இனமே’ என்றேன் நான். ‘பெரிய இனம். அவர்கள் நிலத்தில் இனி மாமிசம் கிடைக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. புதிய நிலத்தை நாடி, அவற்றை சொந்தமாக்கிக் கொள்ள, இங்கு நம் நிலத்திற்கு வந்திருக்கின்றனர். ஆனால் நம்மை அவர்கள் பலவீனப்படுத்தி விட்டனர். நாம் சாகிறோம். அவர்களுக்கோ பெரும் பசி. ஏற்கெனவே நமது விலங்குகளை, மாமிசங்களை நாம் இழந்து விட்டோம். ஆக, நாம் உயிருடன் இருக்க வேண்டுமானால், நலமாயிருக்க வேண்டுமானால், அவர்களது நாய்களை எவ்வாறு நாம் கையாண்டோமோ, அதே விதமாக அந்த வெள்ளையர்களையும் கையாள வேண்டும்.’

“மேலும் நான் உரையாற்றினேன். தாக்குதல் குறித்து அறிவுரை கூறினேன். வெள்ளை மீன் வாசிகள் கவனமாகக் கேட்டனர். சிலர் ஒன்றை சொன்னார்கள். வேறு சிலர் மற்றொன்றை சொன்னார்கள். இன்னும் வேறு சிலர் பல தேவையற்ற விஷயங்களைப் பேசினார்கள். யாருமே தைரியமாக முன்வந்து போர் பற்றிப் பேசவில்லை. வாலிபர்கள் நீரைப் போல பலவீனமாகவும், பயத்துடனும் இருந்தனர். ஆனால் நான் முதியோர்களைப் பார்த்த போது, அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தாலும், அவர்களது கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்ததைக் கவனித்தேன். பின்னர் கிராமம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, யாரும் அறியாமல் முதியோர்களை காட்டிற்குள் அழைத்துச் சென்று, அவர்களிடம் மேலும் பேசினேன். அதன்பின் நாங்கள் உடன்பட்டு இணங்கினோம். எங்களது இளமைக் காலங்களை நினைவுபடுத்திப் பார்த்தோம். எல்லா வளமும் அதிகளவு இருந்த அக்காலங்கள், ஒளிமயமான அக்காலங்களில் மனநிறைவோடு வாழ்ந்தது, சுதந்திரமாய் எங்கள் நிலங்களில் அலைந்து திரிந்தது ஆகியன எல்லாம் எங்கள் ஞாபகத்திற்கு வந்தன. சகோதரர்கள் என நாங்கள் எங்களுக்குப் பெயரிட்டுக் கொண்டோம். எங்களது ரகசியத்தைக் கட்டிக் காப்பது என்று சபதம் செய்தோம். எங்கள் நிலத்தை வந்தடைந்தத் தீய இனத்தை ஒழித்துத் தூய்மையாக்குவோம் என்று சூளுரைத்தோம். நாங்கள் முட்டாள்கள் என்பதை இப்போது தெளிவாக உணர்கிறோம். ஆனால் வயதான வெள்ளை மீன் வாசிகளாகிய எங்களுக்கு அப்போது அது எப்படி தெரிந்திருக்கக் கூடும்?

“பிறரை உற்சாகப்படுத்துவதற்காக முதல் காரியத்தை நானே தொடங்கினேன். யூக்கானில் காவல் காத்தேன். முதல் படகு அவ்வழியே வரும் வரை காத்திருந்தேன். அதில் இருவர் இருந்தனர். நான் கரையில் இருந்தவாறு எழுந்து நின்று சைகை காட்டியதும், பாதையை மாற்றி என்னை நோக்கி வந்தனர். படகின் முகப்பில் இருந்த மனிதன், தான் எங்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும் விதமாகத் தலையை உயர்த்தினான். அடுத்த கணம் எனது அம்பு காற்றில் ரீங்காரமிட்டபடியே பாய்ந்து நேராக அவனது தொண்டைக்குள் சென்றதை உணர்ந்தான். இரண்டாமவன், கையில் துடுப்புடன் படகின் பின் பகுதியில் இருந்தான். அவன் கைத்துப்பாக்கியை எடுத்துத் தோளருகில் பாதி தூரம் கொண்டு வருவதற்குள், நான் எறிந்த மூன்று ஈட்டிகளில் முதல் ஈட்டி அவனைத் தாக்கியது.

“முதியோர்கள் என்னைச் சூழ்ந்த போது,‘இதுவே முதலாவது’ என்றேன். ‘நாம் எல்லா இனத்து முதியோர்களையும் பிறகு நம்மோடு இணைத்துக் கொள்வோம். அதன் பின் பலசாலிகளாய் இருக்கும் தைரியமான இளைஞர்களையும் சேர்த்துக் கொள்வோம். எனவே நமது காரியம் சுலபமாகி விடும்.’

“பின் இறந்த இருவரையும் தூக்கி நதியில் வீசினோம். மிகச் சிறந்த அந்தப் படகையும், அதிலிருந்த எல்லாவற்றையும் தீயிலிட்டோம். ஆனால் முதலில் அவற்றைப் பார்வையிட்டோம். தோலால் செய்யப்பட்டிருந்த பைகளை எங்கள் கத்தியினால் கிழித்தோம். அதில் பல காகிதங்கள் இருந்தன. ஓ ஹவ்க்கன்! உன் கையில் இப்போது வைத்துப் படித்தாயே, அதே போன்ற காகிதங்கள். அதில் காணப்பட்ட குறிகளைக் கண்டு வியந்தோம். ஆனால் அப்போது அவை என்னவென்று புரியவில்லை. இப்போது எனக்கு கொஞ்சம் புத்தி வந்துள்ளது. நீ சொன்னது போல அது மனிதர்களின் பேச்சு என்று புரிகிறது.

“படகு விவகாரம் குறித்து ஹவ்க்கன் மொழிபெயர்த்து முடித்ததும், தேனீக்களின் ரீங்காரம் போல முணுமுணுவென்ற பேச்சு நீதிமன்றத்தை சுற்றிலும் எழுந்தது. பின் ஒரு மனிதன் பேசினான். “அவை ’91-ம் ஆண்டு தொலைந்த கடிதங்கள். பீட்டர் ஜேம்ஸூம், டிலானியும் கொண்டு வரும் போது, இங்கிருந்து சென்ற மாத்யூஸ், லே பார்ஜில் கடைசியாக அவர்களிடம் பேசினார்.” குமாஸ்தா இடைவிடாது தொடர்ந்து கிறுக்கலாக எழுதிக் கொண்டிருந்தார். வடக்கின் வரலாற்றில் நிகழ்ந்த இந்த விவகாரத்தையும் எழுதிக் கொண்டதால், மேலும் ஒரு பத்தி கூடியது.

“இன்னும் மீதி கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.” இம்பர் மெதுவாகத் தொடர்ந்தார். “நாங்கள் செய்தது எல்லாம் அந்தக் காகிதத்தில் இருக்கட்டும். நாங்கள் முதியவர்கள். எங்களுக்குப் புரியவில்லை. இம்பராகிய எனக்கு இப்போதும் கூட விளங்கவில்லை. ஆக, ரகசியமாக நாங்கள் வெள்ளையர்களைக் கொன்றோம். கொலைகளைத் தொடர்ந்து செய்து வந்தோம். பல வருடங்களைக் கடந்து வந்த அனுபவத்தால், எங்களுக்கு அதில் திறமை கூடி இருந்தது. நிதானமாக, பதட்டப்படாமல், விரைந்து செயலாற்றும் திறனைக் கற்றிருந்தோம். வெள்ளையர்கள் எங்கள் கிராமத்திற்குள் வந்து இருண்ட முகத்துடன்,கோபமாகக் கடுமையான வார்த்தைகள் பேசி ஆறு வாலிபர்களை, அவர்கள் ஏதும் செய்ய இயலாதபடி இரும்பால் கட்டி இழுத்துச் சென்றனர். ஆக, இன்னும் பரந்த அளவில் தொலைதூரம் சென்று வெள்ளையர்களைக் கொல்ல வேண்டும் என்பது எங்களுக்குப் புரிய வந்தது. முதியோராகிய நாங்கள் ஒவ்வொருவராக நதியைக் கடந்து, முன்பின் அறியாத புது நிலங்களுக்குச் சென்றோம். அது துணிவான செயல். நாங்கள் வயதானவர்களே. ஆயினும் எங்களுக்குப் பயமில்லை. ஆனால் பொதுவாக, தொலை தூரப் பிரதேசங்கள் முதியோர்களுக்கு பெரும் அச்சத்தை தோற்றுவிக்கக் கூடியதாகும்.

“ஆக நாங்கள் கொன்றோம். அதை நிதானமாகத் திறமையாகச் செய்தோம். சில்கூட் ஆற்றங்கரையிலும் அதன் கழிமுகத்திலும், கடற்கரைப் பாதையிலும் பலரைக் கொன்றோம். வழித்தடங்களைப் பின்பற்றிச் செல்லும் வெள்ளையர்கள் எங்கெல்லாம் முகாமிட்டார்களோ, அங்கெல்லாம் சென்று அவர்களைக் கொன்றோம். அவர்கள் மரித்தார்கள். அது உண்மைதான். ஆயினும் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை. எப்போது வெள்ளையர்கள் எங்கள் பனிமலைக்கு வந்தார்களோ, அப்போதுத் தொடங்கி அவர்கள் பல்கிப் பல்கிப் பெருகிக் கொண்டே வந்தனர். நாங்களோ வயதாகியதால் குறைந்துக் குறைந்து அரிதாகிக் கொண்டே வந்தோம். எனக்கு ஞாபகம் வருகிறது. கலைமான்கள் கடந்து செல்லும் பாதையில், ஒரு வெள்ளையன் தனியாக முகாமிட்டிருந்தான். அவன் மிகச் சிறிய மனிதன். அவன் தூங்கும் போது, மூன்று முதியோர் அவனை எதிர்கொண்டனர். அடுத்த நாள் நால்வரையும் நான் கண்டேன். வெள்ளையன் மட்டுமே அதுவரை சுவாசித்தபடி இருந்தான். எனக்கு நல்லதொரு சாபமிட்ட பிறகே அவன் செத்தான்.

“இவ்வாறாக அந்த விவகாரம் கடந்தது. பின் அவ்வப்போது ஒவ்வொரு முதியோராகப் போய் சேர்ந்தனர். சில வேளைகளில் அவர்கள் எப்படி மரித்தார்கள் என்கிற சேதி வெகுகாலம் கழித்தே எங்களை வந்தடைந்தது.சமயங்களில் எங்களுக்கு சேதி ஏதும் வரவேயில்லை. பிற இனத்து முதியோர்கள் பலவீனமாகவும், பயந்தும் இருந்தனர். அவர்கள் எங்களுடன் சேர மறுத்தனர். நான் சொல்வது போல, முதியோர் அனைவரும் ஒவ்வொருவராகப் போய் விட்டனர். இறுதியில் நான் மட்டுமே எஞ்சியிருந்தேன். நான் இம்பர், வெள்ளை மீன் வாசி. என் தந்தை ஓட்ஸ்போக் பலசாலி. இப்போது வெள்ளை மீன் வாசிகள் யாருமே அங்கு கிடையாது. முதியோரில் நானே கடைசி. வாலிபர்களும், இளம் பெண்களும் பிறந்த மண்ணை விட்டுப் போய் விட்டனர். சிலர் பெல்லிஸ் இனத்தாரோடு, சிலர் வஞ்சிர மீன் இனத்தாரோடு, மேலும் சிலர் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டனர். நான் வயது முதிர்ந்தவன். மிகவும் சோர்ந்து விட்டேன். விதிமுறைகளை எதிர்ப்பது வீணானது என்கிறபடியால், ஹவ்க்கன், நீ கூறியது போலவே, நான் நீதியை நாடி வந்துள்ளேன்.

“ஓ இம்பர்! நீங்கள் உண்மையாகவே முட்டாள்தான்” என்றார் ஹவ்க்கன்.

ஆனால் இம்பர் கனவில் ஆழ்ந்து விட்டார். அதே போல, சதுர நெற்றிப்புருவம் கொண்ட நீதிபதியும் கனவில் ஆழ்ந்தார். அவரது மொத்த இனமும் அவர் கண்முன் மாய உருப்பெற்றது. அவரது இனத்தவரின் எஃகு போன்ற மேற்பூச்சு நாகரிகம்,எத்தகைய உண்மையையும் மூடி மறைத்து விடும் கவச அணிகலன்கள், தங்களது வசதிக்கேற்ப சட்டங்களை இயற்றி அவற்றை வலிந்து நடைமுறைப்படுத்துதல், ஆண் மக்களின் குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்தி பூவுலகையே மாற்றியமைத்தல் ஆகிய அனைத்துமே அவரது கண்முன் தோன்றின. இருள் சூழ்ந்த காடுகளும், சோகம் பொங்கும் கடல்களும் அவரது பார்வையை நிறைத்தன. அனைத்தும் பற்றி எரிவதையும், ரத்தச் சிவப்பாக மாறுவதையும், வெற்றி முழக்கமிடுகிற நண்பகலின் ஒளிக்கு நேர் எதிராகத் தோன்றுவதையும் அவர் உணர்ந்தார். மேலும் நிழல் கமழும் கடற்கரை சரிவுகளில் ரத்தம் தோய்ந்து சிவந்த மண் துகள்கள், இரவின் இருளை நெருங்குவதையும் கண்டார். ஆக, எல்லாவற்றையும் கண்டுணர்ந்த பின்னர், சட்டங்களின் வழிமுறைகளிலும் கவனம் செலுத்தினார். சக்தி வாய்ந்த, எந்நாளும் வளையாத, எப்போதும் ஆணையிடுகிற விதமாகவே, இரக்கமற்ற சட்டங்கள் அமைந்திருந்தன. சட்டங்களுக்கு அடிபணியாத அல்லது அவற்றால் நசுக்கப்பட்ட மக்கள், சிறு தவறுகள் செய்தாலும், அதைப் பொறுத்துக் கொள்ளாத வகையில் சட்டங்களே உயர்ந்திருந்தன. நீதிபதியின் இதயம் கருணையை உரைத்தாலும், சட்டத்தின் கரமே மேலோங்கியது.