வால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில் ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை ஓர் இலக்கியவாதி ஆக்கியது. 23ஆவது வயதில் ஓர் அங்கதக் கவிதை எழுதியதற்காகப் பாஸ்டில் சிறையில் தள்ளப்பட்டார். 29 வயதில் Comédie-Française என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். 32 வயதில் ஒரு பிரபுவுடன் ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றி தகராறு ஆக மீண்டும் பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். இங்கிலாந்தில் தங்கிய மூன்று ஆண்டுகள் அவருடைய வாழ்வை, சிந்தனையை அடியோடு மாற்றியது. 84 ஆண்டுகள் மாபெரும் கருத்துப் போராளியாக, இலக்கியவாதியாக வாழ்ந்தார். வால்டேர் ஓயாமல் எழுதினார். இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் எழுதினார். பிரெஞ்சுப் புரட்சிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் மன்னரை விடப் பன்மடங்கு மரியாதையுடன் மக்களால் கொண்டாடப்பட்டு முதுமையால் மாண்டார். இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட 136 தொகுதிகளாக வெளிவந்தன. பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவை இவரது கருத்துகளே. ஜெர்மானிய மகாகவி கதே ‘எல்லாக் காலங்களிலும் மிகச் சிறந்த எழுத்தாளர் வால்டேரே’ என்று வானளாவப் புகழ்ந்தார். இவர் வாழ்நாள் முழுதும் இரண்டு காதலிகளுடன் உறவில் இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்தியாவுக்குக் கப்பலில் வந்த மெகாலே பிரபு வால்டேரை வாசித்தே தன் நேரத்தைக் கழித்தார். ஆனால் இன்று ‘உன்னத இலக்கியங்கள்’ என்ற தொகுப்புகள் எதிலும் அவருடைய ஒரு நூலும் இடம் பெறவில்லை. அவருடைய சம காலத்தவரான ரூஸோ குறைவாக எழுதினாலும் தவறாது அவருடைய ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலுக்காக இடம் பெறுகிறார். இன்னொரு வேடிக்கையான உண்மை. ஏராளமாக எழுதிக் குவித்தார் டாக்டர் சாமுவேல் ஜான்சன். இன்று அவரை உலகம் மறந்துவிட்டது. உலகப் பெரும் நூல் வரிசை எதிலும் அவருடைய நூல் ஒன்று கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படம் போல் படம் பிடித்து எழுதிய ‘முட்டாள்’ பாஸ்வெல் பிரிட்டானிகா குழுமம் வெளியிட்ட ‘மேற்கு உலகப் பெரும் நூல்கள்’ வரிசையில் இடம்பிடித்து விட்டார் நிரந்தரமாக. காரணம், வாழ்க்கை வரலாற்று நூல்களில் அதற்கு இணையாக வேறு நூல் இல்லையாம்.
ஆக, எழுத்தாளர்கள் உலகப் புகழ் அடைய விரும்பினால் ஓர் உண்மையை உணர வேண்டும். ஏதாவது ஒரு துறையில் உலகத்தரத்தில் ‘உலக மேதை’களுக்கு இணையான ஒரு நூலை எழுதிவிட வேண்டும். வால்டேர் ‘காப்பியம்’ கூட எழுதினார் தன் இருபதுகளிலேயே. ‘ஹென்றியாட்’ என்ற அப்பெயர் கூட இன்று யாருக்கும் நினைவில்லை. துன்பியல் நாடகங்கள், தத்துவ நூல்கள், அறிவியல் நூல்கள், வரலாறுகள், கட்டுரைகள், கதைகள், 20000க்கும் மேற்பட்ட கடிதங்கள், அரசியல் விவாதங்கள் என்று எழுத்தின் பன்முகப் பரிமாணங்களிலும் எழுதிக் குவித்தார். ஆனால் ஒன்றுகூட உலக மகாக்களின் தரத்தில் இல்லை. இந்தத் தவறை, இவருடைய சீடராகத் தன்னைக் கருதித் தன் எழுத்து வாழ்வை அமைத்துக் கொண்ட ஜெர்மானிய மகாகவி கதே செய்யவில்லை. சுமார் 60 ஆண்டு காலம் தன் ஃபாஸ்ட் காப்பியத்தை எழுதி எழுதிச் செம்மைப்படுத்தி, தான் இறப்பதற்கு முதல் நாள்தான் முடித்து ‘சீல்’ வைத்தார். இன்று அக்காப்பியம் அவரை உலக மகா கவிகளின் வரிசையில், ஹோமர், விர்ஜில், தாந்தே, மில்டன் ஆகியோருக்கு இணையாக அமர வைத்துவைட்டது. அந்த ஒரு நூல் கொடுத்த புகழால் அவருடைய மற்ற நூல்களையெல்லாம் மக்கள் வாங்கிப் படிக்கின்றனர்.
அது என்ன உலக மகா தரம்? அதற்கு என்ன வரையறை? ‘வாழ்க்கை உனக்கு என்ன போதித்தது? வாழ்விலிருந்து நீ நேரடியாக என்ன கற்றுக் கொண்டாய்? வாழ்வைப் பற்றி உன் தனித்த கோணம் என்ன? அதைச் சுருக்கமாக, வலிமையாக, முழுமையாக, ஆணித்தரமாக ஒரு நூலில் கொடு. அது டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் போல 1500 பக்கங்களில் இருக்கலாம், அல்லது திருக்குறள் போல 133 பக்கங்களில் இருக்கலாம். நீ சொல்வதை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல; ஆனால் உன் பார்வை, நீ காட்டும் கோணம் புதியதாக இருக்க வேண்டும். இதுவரை உலகம் காணாததாக இருக்க வேண்டும். காம்யுவின் அந்நியன் வாழ்வின் பொருளின்மையைச் சொல்கிறான். மனித வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் தாயின் மரணம், கொலை, சிறைவாசம், கடவுள் என எதுவும் பொருள் கொண்டதல்ல என்கிறான். இதை நான் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஹிட்லரின் வதை முகாமில் பல வருடங்கள் சித்ரவதைகளை அனுபவித்த டாக்டர் விக்டர் கே.ப்ரான்கல் தன் நூலில் வாழ்வின் பொருளை ஒவ்வொருவனும் கண்டடைய வேண்டியதன் அவசியத்தை நிறுவுகிறார். ஆனால் காம்யுவின் வாதத்தில் பொருளில்லாமல் இல்லை. அதை உறுதிப்படுத்த அவர் பயன்படுத்திய நாவல் உத்திகள் வலிமையானவை. அவை உலகத்தரமானவை.
அதேபோல் காஃப்கா. அவர் பெரிய நூல்கள் எதுவும் எழுதவில்லை. அவருக்கு உலகப் புகழ் வாங்கித்தந்த ‘விசாரணை’, ‘கோட்டை’ போன்றவற்றை நாவல் என்று கூடச் சொல்ல முடியாது. அவை நீண்ட கதைகள். அவ்வளவுதான். ஆனால் நீண்ட உருவகங்களாகத் தன் கருத்தை, வாழ்வைப் பற்றிய தரிசனத்தை முன்வைக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் ஐரோப்பாவில் போர்களால் ஏற்பட்ட வெறுமையை, விழுமியங்களின் அர்த்தமின்மையை வாசகரின் மனத்தில் பதியும் வண்ணம் படம் பிடித்துக் காட்டுகிறார்.
நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அவருடைய ‘உருமாற்றம்’ என்ற சிறு நூலை என் நண்பர் ஒருவர் கேட்க இரவலாகக் கொடுத்தேன். அவர் ஒரு வழக்கறிஞர். தத்துவம், மனோதத்துவம் போன்ற துறை நூல்களைத் தேடித் தேடிப் படிப்பவர். இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஒரு நூலைக் கேட்டார். மறுநாள் காலை தொலைபேசியில் அழைத்தார். ஏகமாக வசைமாரி பொழிந்தார். ‘என்னய்யா புஸ்தகம் கொடுத்தீர்? விடிய விடிய தூக்கமில்லே. நானே கரப்பான் பூச்சியான மாதிரி தோணுது. இதுவா இலக்கியம்?’ என்றார். காஃப்கா ஜெயித்து விட்டான். அவன் உலக எழுத்தாளன் தான். தான் எழுதும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கரப்பான்பூச்சியாகத் தன்னை உணர்ந்தான். அதை அவ்வாறே உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்த வேற்று மொழி வாசகனைத் துல்லியமாக உணர வைத்து விட்டான். இதுவே புனைகதையின் வெற்றி. இக்கருத்தை எவ்வளவு விரிவான தத்துவ நூலாக எழுதியிருந்தாலும் வாசகனுக்கு இவ்வளவு தெளிவாக உணர்த்தியிருக்க முடியாது.
இவற்றையெல்லாம் விளக்கிய பின் நண்பர் தீவிரமாக இப்போது இலக்கியம் வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.
வால்டேரும் உலகப் புகழ் பெற்றது இப்படிப்பட்ட ஒரு ‘நீண்ட கதை’யின் மூலம்தான். அதன் பெயர் ‘கான்டிட்’.
பின்னாளில் இதே உத்தியைத் தான் காம்யுவும் காஃப்காவும் பயன்படுத்தி உலகப் புகழ் எய்தினர். ஆனால் வால்டேரின் காலம் வேறு, இருபதாம் நூற்றாண்டு வேறு. இது கதைகளின் காலம். அன்று ‘காப்பிய காலம்’. காப்பியத்துக்கு இருந்த மரியாதை கதைகளுக்கு இல்லை. மேலும் பின்னிருவரின் கருத்தில் இருந்த வலிமை வால்டேரின் கருத்தில் இல்லை. கேலியும் நக்கலும் இருந்த அளவு கருத்தில் ஆழம் இல்லை.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. கிரேக்க மொழி தத்துவம், இலக்கியத்துக்கானது. இலத்தின் அரசியலுக்கானது. ஜெர்மன் மொழி தத்துவம், இறையியலுக்குப் பெயர் போனது. ஆங்கிலம் கவிதைக்கு; ஷேக்ஸ்பியர் அதன் சிகரம். வடமொழி ஞானத்துக்கு. தமிழ் சித்தர் நெறிக்கு. அது போல் பிரெஞ்சு மொழி உரைநடை வளம் கொண்டது. செடூப்ரியன், மாண்டெக், மாண்டெயின், ராபிலாய், பாஸ்கால் போன்ற பெரும் உரைநடை மேதைகளுக்குப் பின் அம்மொழியில் தோன்றிய வால்டேர் மேலே கண்ட உரைநடை விற்பன்னர்கள் யாருக்கும் குறைந்தவரல்ல. அவரது மொழிநடை நேரடியானது, தெளிவானது, வலிமையானது. ஒரே நேரத்தில் அறிஞனுக்கும் பாமரனுக்கும் புரியக்கூடியது. அவருடைய கேலியும் கிண்டலும் அம்புகளென எதிரிகளின் உள்ளத்தில் சென்று தைக்கும். ரூஸோவுக்கு அவர் எழுதிய கடிதமே சான்று.
இயற்கையான மனிதன் – விலங்குகளைப் போல் – பிறப்பிலேயே நல்லவன். சமுதாயமே, குறிப்பாகக் கலைகளும் விஞ்ஞானமும் அவனைக் கெடுக்கின்றன. இது ரூஸோவின் ‘இயற்கைவாதம்’. இந்த வாதம் கொண்ட தன் நூலை ரூஸோ வால்டேருக்கு அனுப்பினார். தன் பகுத்தறிவுக் கொள்கையை இது நேரடியாகத் தாக்குகிறது என்பதை வால்டேர் உணர்ந்தார். திருப்பித் தாக்கினார், அவருடைய பாணியில். “நான் நாலு கால்களில் தவழ்ந்து வெகு காலமாயிற்று. அப்படிப்பட்ட ஆசை ஏதும் இப்போது இல்லை.” இதற்குப் பிறகு இருவரும் பரம வைரிகள் ஆனார்கள்.
ரூஸோ வெறும் எழுத்தாளன். அவனால் ஊறு எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒரு சக்கரவர்த்தியிடம் இந்த வார்த்தை விளையாட்டு செல்லுமா? மகா பிரெடரிக் சக்கரவர்த்தி வால்டேரின் விசிறி. நீண்ட காலமாக இருவருக்கும் கடிதத் தொடர்பு இருந்தது. தன் அரண்மனை விருந்தாளியாக வால்டேரை அழைத்தார். இவரும் சென்று சுமார் 3 ஆண்டுகள் தங்கினார். அரசருக்கு பிரெஞ்சு மொழியின் மீது மோகம். அம்மொழியில் கவிதை எழுதும் பழக்கம் உண்டு. அதைத் திருத்திக் கொடுக்கும் வேலை வால்டேருக்கு. ஒரு நாள் கவிதையைக் கொணர்ந்த வேலைக்காரன் முன்னிலையிலேயே வால்டேர் தன் நாக்கின் கொடுக்கை வீசினார். இன்னும் எத்தனை காலம் உங்கள் மன்னரின் நாற்றம் பிடித்த உள்ளாடைகளை நான் துவைத்துக் கொடுப்பது?
செய்தி மன்னரின் காதுக்கு எட்டியது. வெகுண்ட மன்னன் மேதையைச் சிறை வைத்தான். மன்னரின் சகோதரி தலையிட்டு வால்டேரை விடுதலை செய்தார். தவளை மட்டுமல்ல வால்டேரும், ஏன் கிரேக்க மாமேதை பிளேட்டோவும் கெட்டது வாயால். ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற வள்ளுவனின் வேத வரிகளை அறியாததால் வந்தது வினை.
பிளேட்டோ தன் இலட்சிய உலகை ‘குடியரசு’ என்ற தன் நூலில் விவரமாக வரைந்தான். அதைப் படித்த ஒரு மன்னன் பிளேட்டோவை விருந்தாளியாக்கி, தன் அரண்மனையில் தங்க வைத்தான். வெகுசில நாட்களிலேயே அரசனுக்கும் அறிஞனுக்கும் மோதல் ஏற்பட்டது. பிளேட்டோ சிறை வைக்கப்பட்டார். தந்திரமாக அச்சிறையிலிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடினார் தத்துவத்தின் தந்தை. ‘அகலாது அணுகாது தீக் காய்வார்போல்’ அரச நட்பு இருக்க வேண்டும் என்ற வள்ளுவனின் வாழ்வியல் நுட்பம் வாய்க்கவில்லை கிரேக்க தத்துவ ஞானிக்கும், பிரெஞ்சு மேதைக்கும். வள்ளுவரின் இக்குறட்பாவுக்கு இலக்கியமாக வாழ்ந்தவர் ஜெர்மானிய மகாகவி கதே தான். தன்னுடைய 25ஆம் வயதில் கார்ல் ஆகஸ்ட் என்ற சிற்றரசனின் நண்பனாகி, அவனுடைய அழைப்புக்கிணங்க வைமர் என்ற அவனது ஊரில் சென்று தங்கினார். அவனது அவையில் அமைச்சராகி, முதல் அமைச்சராகி தன் இறுதிக் காலம் வரை, சுமார் 60 ஆண்டுகள் அங்கேயே தங்கினார். அரசனுடனான தன் நட்பில் எந்த விரிசலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அதனால்தான் அவரை உலகம் ‘ஜெர்மனியின் சான்றோன்’ என்று அழைத்தது. வால்டேரின் நற்குணங்களையும், திறமைகளையும் சுவீகரித்துக் கொண்ட கதே, அதே நேரத்தில் அவருடைய குறைகளில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டார்.
வால்டேரின் தவளை நாக்கு அவரை நாடு கடத்தும் வரை கொண்டு போனது. இளைஞனாக இருந்த போது பிரபு ஒருவரைக் கேலி செய்து கவிதை ஒன்று எழுதினார். அரசியல் செல்வாக்கு பெற்ற அந்தப் பிரபு வால்டேரை பாஸ்டில் சிறையில் அடைக்கச் செய்தார். சிறையில் பொழுதைக் கழிக்கத்தான் காப்பியத்தை எழுதத் தொடங்கினார். நாடு கடத்தப்பட ஒப்புக்கொண்டால் விடுதலை செய்வோம் என்று அரசு தரப்பில் கூற, அதை ஏற்றுக்கொண்டு இங்கிலாந்து சென்றார். அப்பயணமே அவரது வாழ்வில் திருப்புமுனை ஆயிற்று. தனக்கு நேர்ந்த தீமைகளை எல்லாம் நன்மைகளாக மாற்றிக் கொள்ளும் புத்திசாலி வால்டேர்.
இங்கிலாந்தில் அவர் தங்கிய மூன்று ஆண்டுகள் அவரது வாழ்விலும் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
_____________
வால்டேரின் சாதனைகள் என்ன? வால்டேரின் வாழ்க்கை மனிதர்களுக்குப் புகட்டும் பாடங்கள் என்ன?
பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து தொடங்குகிறது நவீன காலம் என்று பல வரலாற்றாசிரியர்கள் எழுதுகின்றனர். மனித குல வரலாற்றை கி.மு., கி.பி. என்று கிறித்துவ வரலாற்றாசிரியர்கள் பிரித்ததைப் போல பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் என்று பிரிக்கின்றனர் நவீன சரித்திர ஆசிரியர்கள். மனித குல ஆழ்மனத்தில் இப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பிரெஞ்சுப் புரட்சிக்கு விதை ஊன்றியவர்கள் இருவர் – வால்டேர், ரூஸோ. புரட்சிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மக்கள் தலைவர்கள் பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயியைச் சிறையில் அடைத்தனர். (பின்னர் ‘கில்லடின்’ என்ற கொலைக்கருவியால் பொதுமன்றத்தில் வைத்து அவருடைய தலையைத் துண்டாக்கினர்). அச்சிறையில் இருந்த நூலகத்தில் வால்டேர், ரூஸோவின் நூல்கள் இருந்தனவாம். அவற்றைச் சுட்டிக் காட்டித் தன் உதவியாளரிடம் மன்னர் சொன்னாராம் – “எனது மணிமுடி இறங்கியதற்குக் காரணம் இந்த இருவரின் பேனாக்கள்.”
‘மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் தளைகளுடனேயே காணப்படுகிறான். இதற்குக் காரணம் ‘முதற் பாவமல்ல’. மரபின் பெயரால் திருச்சபையும் மணிமுடியும், (அதாவது மத குருமார்களும் மன்னர்களும்) இட்ட கை விலங்குகளே. இவற்றின் ஆதிக்கத்தை ஒழிப்பதே முதல் வேலை. மனித குலம் சுதந்திரம் பெறச் செய்ய வேண்டிய முதல் கடமை இதுவே’ என்று அறிவித்தான் ரூஸோ. அவனுக்கும் முன் உதாரணம் வால்டேர்.
‘எழுத்தாளன் ஒரு தனி மனிதனல்ல. அவன் ஒரு மக்கள் இயக்கம். சமூகத்தின் மனசாட்சி. சமுதாயத் தோட்டத்தில் களை பிடுங்குவதே அவனது வேலை. ‘கலை கலைக்காகவே’ என்ற வாதம் எழுத்தாளனின் பயங்காளித்தனம். அப்படிப்பட்டவன் ஆதிக்க சக்திகளுக்குத் துணை போகும் எடுபிடி ஆவான். எழுத்தாளன் உண்மை தேடி அலைபவன் மட்டுமல்ல; அவன் சமுதாய நலனுக்காகப் போராடும் களப்போராளி’ என்று எழுதினார். தன் வாழ்நாளின் கடைசி நாள் வரை அதைச் செயல்படுத்தி, தன் குறிக்கோளில் வெற்றி கண்டவர் வால்டேர். ‘எழுத்தாணி கத்தியை விட வலிமையானது’ என்ற உண்மையின் இலக்கணம் வால்டேர். சுமார் 14 நூற்றாண்டுகளாக ஐரோப்பாவின் முதல் ஆதிக்க சக்தியாக இருந்த போப் ஆண்டவரின் திருச்சபையை ஆட்டம் காண வைத்த புயல் வால்டேர். வால்டேர் தொடங்கி வைத்த புது மரபே – எழுத்தாளன் போராளியும் கூட – சார்த்தர் வரை பிரெஞ்சு இலக்கியவாதிகளின் பரம்பரைச் சொத்தானது. மாபெரும் தத்துவவாதியாக உலகம் போற்றும் இலக்கியவாதியாகத் திகழ்ந்த சார்த்தர் மார்க்ஸீயவாதியானார். மேலும் டிகால் அரசுக்கு எதிராக வியட்நாம் போரைக் கண்டித்து தெருவில் இறங்கிப் போராடினார். எனில் அது வால்டேர் காட்டிய உண்மையின் பாதை.
இலக்கியத் துறையில் வால்டேரின் சாதனைகள் என்ன? உருவகக் கதைகள், குறுநாவல் வடிவத்தில் தத்துவக் கதைகளை எழுதி வெற்றி கண்டவர். வாழ்வைப் பற்றிய ஓர் உண்மையை ஒரு தத்துவக் கருத்தை நேரடியாக ஒரு கருத்தாகவே சொன்னால் அறிஞர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் பொதுமக்களுக்குப் போய்ச் சேராது. அக்கருத்து ஒரு மக்கள் இயக்கத்தைத் தோற்றுவிக்காது. அதனால் அக்கருத்தைக் கருவாக வைத்து, கை, கால், முகம் சேர்த்து முடிந்தால் இறக்கைகள், வால், கோரப்பற்கள் போன்ற விசித்திர உறுப்புகளையும் சேர்த்தால் அவ்விபரீதக் கற்பனையை ஒருமுறை வாசித்த மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். அக் கருத்தின் அதீத, விபரீத நிலைச் சித்திரம் மூலம் மக்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்க முடியும். புனைகதை, நாவல் நாடகம், திரைப்படம், இதிகாசம் என எல்லாக் கற்பனை வடிவங்களின் மூல தத்துவமே இதுதான். ‘தீமையின் மொத்த உருவம் சாத்தான்’ என்று மட்டும் கூறாமல் பைபிள் அவனுக்கு அசிங்கமான உருவத்தைத் தந்தது – இரண்டு கொம்புகள், வால், கோரமான முகம் இப்படி. ஒரு ஞானச் சித்தன் என்பவன் கடவுளுக்கு இணையான அறிவும் ஆற்றல்களும் கொண்டவன் என்று தமிழ்ச் சித்தர் இலக்கியமும், வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமும் கூறுகின்றன. வள்ளலாரின் வாழ்க்கையும் சான்று பகர்கின்றது. இந்த இலக்கணங்களை வைத்துக்கொண்டு அவற்றை இலக்கியக் கற்பனைக் கதைகளாக்கி, அவதார புருஷர்களின் காப்பியங்களாக எழுதி, மதங்களை உருவாக்கி, வரலாற்றையே தம் விருப்பப்படி எழுதிக்கொண்டனர் சமயவாதிகள். கதை வெறும் கதையன்று, மக்களின் ஆழ்மனதில் வேலை செய்யும் கிரியா ஊக்கி. கதைகளே உலகை ஆளுகின்றன. கதைசொல்லி உலகையே மாற்றியமைக்கும் பேராற்றல் கொண்டவன். அவன் நல்லவனாக இருந்தால் மனித குலத்தின் அதிர்ஷ்டம். வெறும் வல்லவனாக இருந்தால் மாபெரும் தீமை. அதனால் தான் ஆதித் தமிழ் ஞான மரபு (தொல்காப்பியர், திருவள்ளுவர், சித்தர், வள்ளலார்) புராணங்களை எழுதவில்லை. பின்னாளில் எழுதப்பட்டவை வடமொழித் தாக்கங்கள். ஆதித் தமிழ்ச் சித்தர் மரபைப் புதுக்கி, முழுமைப்படுத்தி, மீண்டும் விஞ்ஞான ஞான மரபை உலகிடையே பரப்ப வந்த வள்ளலார் தன் கொள்கையை நிறுவ இதிகாசங்கள், புராணங்கள் ஏதும் இயற்றவில்லை. மாறாக, ‘கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக’ என்றும், ஆண்டவனை ‘கற்பனை முழுவதும் கடந்தோர் உள்ளத்தில் ஒளிரும் ஜோதி’ என்றும் தெளிவாக அறிவித்தார்.
நவீன இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியங்களிலும் இந்தத் தத்துவ உருவகக் கதை மரபு தொடர்ந்து வருகிறது. தன் ‘இருத்தல் இயல்’ தத்துவத்தை மிக விரிவாக சார்த்தர் சுமார் ஆயிரம் பக்கங்களில் ‘இருமையும் இன்மையும்’ (Being and Nothingness) என்ற நூலில் எழுதினார். அது அறிஞர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. பாமரர்களுக்குப் புரியவில்லை. அதை உணர்ந்த சார்த்தர் அக் கருத்தையே ‘குமட்டல்’ போன்ற நாவல்களிலும், சிறுகதைகளிலும், நாடகங்களிலும் விரிவாக விளக்கம் செய்தார். புரிந்து கொண்ட உலகம் அவருக்கு நோபல் பரிசு தர முன் வந்தது.
அதே உத்தியைப் பயன்படுத்தி உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகள் ஆல்பர்ட் காம்யூ (‘அந்நியன்’), ஃப்ரன்ஸ் காஃப்கா (கோட்டை, விசாரணை), ஜோஸ் சரமேகா, (குருடர்களின் தேசம்), வில்லியம் கோல்டிங் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
வால்டேருக்கு உலகப் புகழ் வாங்கித் தந்த கதை ‘இளிச்சவாயன்’. இதை ஒரு குறுநாவல் என்றும் சொல்லலாம். இக்கதை நையாண்டி செய்யும் கருத்து இதுதான். உள்ளது யாவும், நடப்பது யாவும் நன்மைக்கே; தீமை ஏதுமில்லை. இக்கருத்தை ஜெர்மானிய தத்துவவாதியும், பல்துறை அறிஞருமான லீப்னிட்ஜ் முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு அதை விளக்கி ஒரு தத்துவ நூலை எழுதினார். இந்த உலகமே இறைவனின் படைப்பில் உன்னதமானது என்று அறிவித்தார்.
இயற்கை சில நேரங்களில் வரலாற்றாசிரியர்களைப் பகடி செய்யும். கடவுளுக்கும் ஹாஸ்யம் பிடிக்கும் போலிருக்கிறது. லீப்னிட்ஜ் தன் தத்துவத்தை வெளியிட்ட நேரத்தில் போர்ச்சுகல் தேசத்தின் தலைநகரமான லிஸ்பனில் கொடியதோர் பூகம்பம் ஏற்பட்டது. படுநாசம். இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் ஏராளமான மக்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் திருச்சபையில் வேத வசனங்களை ஓதித் துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்டது பூகம்பம். இம் முரண்நகைச் செய்தியே வால்டேரின் கூரிய எழுத்தாணிக்கு குட்டக் கிடைத்த கபாலம். அன்பின் முழு வடிவமான கடவுள் தன் பிள்ளைகளை அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தன் வீட்டில், திருச்சபையில் தன்னைத் துதிக்கும் போது கொல்வாரா? அவ்வளவு கொடியவரா கடவுள்? சாதாரண மனிதத் தந்தைகூட இச் செயலைச் செய்யத் துணியமாட்டாரே? இதுவா உயர்ந்த உலகம்? என்று பலவிதமான கேள்விகளுடன் லீப்னிட்ஜின் சமயத் தத்துவத்தைத் தன் முழுத் திறமைகளைப் பயன்படுத்திக் கேலிச் சித்திரம் ஆக்கினார் வால்டேர். அத்துடன் போகிற போக்கில் அக்காலத்திய ஐரோப்பிய சமுதாயத்தின் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் யாவற்றையும் தம்முடைய பாணியில் கிண்டல் செய்து எழுதினார். காலமறிந்து செய்த இச்செயல், ஒரு கதை, சமயங்களின் குறிப்பாக திருச்சபையின் நெற்றிப்பொட்டில் அறைந்த ஆணி. இது உலகத்தின் கவனத்தை வால்டேரின் பக்கம் திருப்பியது. அக்கவனம் வேறு திசையில் திரும்பாமல் இன்றைய நட்சத்திரங்களைப் போல் தொடர்ந்து தன் மீதே இருக்கும்படி தன் வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொண்டார் வால்டேர். உலக இலக்கியத்தின் முதல் ‘நட்சத்திர எழுத்தாளர்’ வால்டேர் தான். இவரைப் பின்பற்றியவரே ஜெர்மானிய மகாகவி கதே, ஆங்கிலக் கவி பைரன்.
வால்டேர் இங்கிலாந்தில் இருந்தபோது ஆங்கில மொழியை வேகமாகக் கற்றார். அதே வேகத்தில் ஷேக்ஸ்பியர், பேகன், மில்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களை வாசித்தார். அலெக்சாண்டர் போப், ஜோனாதன் ஸ்விப்ட் (இவருடைய அங்கதமே வால்டேரின் கையில் ஆயுதம் ஆயிற்று) போன்ற கவிஞர்களுடன், அரசியல் சித்தாந்தத்தில் மனித உரிமைகளைக் கோரிய போலிங்புரோக் பிரபு, தத்துவத் துறையில் பெர்க்லி போன்ற மேதைகளுடன் நேரில் தொடர்பு கொண்டு அவர்தம் சீரிய சிந்தனைகளை, இலக்கிய உத்திகளைக் கற்றறிந்தார். உலக வரலாற்றை மாற்றியமைத்த ஐசக் நியூட்டனின் நூலை பிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். டேவிட் ஹ்யூம், கிப்பன் போலத் தானும் மிகப் பெரிய வரலாற்று நூல்களை எழுதினார். அவருடைய வரலாற்று நூல்கள் ‘14ம் லூயியின் காலம்’ மற்றும் ‘உலக வரலாறு’ வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஒரு மாபெரும் புதுமையைச் செய்தன. மன்னர்களின் போர்க்களங்களைப் பற்றி மட்டும் எழுதாமல் மக்களின் வாழ்க்கை, கலை, பண்பாடு ஆகியவற்றைப் பற்றியும் எழுதினார்.
வெறும் வணிகர்களின் கூட்டம் என்று இங்கிலாந்தைக் கேலி பேசியது அக்காலத்திய பிரெஞ்ச் சமூகம். அது தவறு என்று சுட்டிக்காட்டி, பிரான்ஸை விட இங்கிலாந்தே பல துறைகளில் முன்னேறி இருக்கிறது; அதற்குக் காரணம் அம்மக்களிடையே சுதந்திர உணர்வு அதிகமாக இருப்பதே என்று அறிவுறுத்தினார். புரட்சிகளுக்கெல்லாம் மூலப் புரட்சியான ‘ஆங்கிலப் புரட்சி’ மன்னருக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையே யார் பெரியவர்? என்ற கேள்வியில் எழுந்தது. மன்னர் சிறை செய்யப்பட்டார். பின்னர் தூக்கில் இடப்பட்டார். ‘அரசன் இறைவனின் பிரதிநிதி’ என்ற மரபுவாதம் முதன்முறையாகப் பொய் என நிரூபிக்கப்பட்டது. மக்கள் சக்தியே முதன்மையானது என்று உலகம் உணர்ந்தது.
மன்னரை விட, பிரபுக்களை விட, நியூட்டன் என்ற விஞ்ஞானிக்கு அதிக மரியாதை செலுத்தினர் ஆங்கிலேய மக்கள். ஆனால் பிரான்ஸ் தேசத்திலோ கத்தோலிக்கத் திருச்சபையும், மன்னரும், பிரபுக்களும் மக்களை ஆடுமாடுகளை விடக் கேவலமான அடிமைகளாக நடத்தினர். இவ்வாறெல்லாம் தான் இங்கிலாந்தில் கண்டதை இங்கிலாந்தைப் பற்றிய கடிதங்கள் என்று ஒரு நூலாக எழுதி வெளியிட்டார். பிரான்ஸ் மன்னரும், பிரபுக்களும் கோபம் கொண்டு அந்நூலைத் தடை செய்தனர். முச்சந்தியில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது அந்நூல். வால்டேர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டார். ஆனால் அத்தீ பிரெஞ்சு மன்னர் குடும்பத்தையும், பிரபுக்களின் வம்சத்தையும், திருச்சபையின் ஆதிக்கத்தையும் மிக விரைவில் பொசுக்கியது. மைக்குப் பதிலாக அக்கினியில் பேனாவைத் தோய்த்துத் தன் நூல்களை எழுதினார் வால்டேர். அவருடைய ஒரு நூல் பல இலட்சம் மக்களின் சிந்தனையைத் தூண்டியது; அவர்தம் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்தது. கி.பி. 1789ல் பிரெஞ்சுப் புரட்சியின் போது மன்னர் குடும்பத்தாரையும், பிரபுக்களையும், திருச்சபை குருமார்களையும் தேடித் தேடிக் கொணர்ந்து ‘கில்லடின்’ என்ற கொலைக் கருவிமூலம் குரூரமாகக் கொன்றனர் மக்கள். அவர்களுடைய கோபாவேசம் வெறும் கனலாக உள்ளே இருந்ததை விசிறிவிட்டு, ஊதி, வீதிக்குக் கொண்டுவந்து செயல்படச் செய்தது வால்டேரின் பேனா கக்கிய அக்கினி.
தத்துவத் துறையில் அவருடைய புகழ்பெற்ற நூல் ‘தத்துவக் கடிதங்கள்’. கடவுள் முதல் கடைசிக் குடிமகன் வரை அகர வரிசையில் மனித வாழ்வின் அனைத்துக் கருத்துகளையும் பற்றித் தான் என்ன நினைத்தார் என்பதைத் தெளிவாக அதே நேரத்தில் ஆழமாக, வலிமையாக, வாசகரின் மனத்தில் தைக்கும் வண்ணம் எழுதினார்.
அவர் இலக்கியத்தில் தொடாத வகை, துறை இல்லை. கடிதங்கள், கதைகள், கவிதைகள், கவிதை நாடகங்கள், கட்டுரைகள், அரசியல் பிரசுரங்கள், வரலாறுகள் என ஓயாது எழுதிக் குவித்தார். மொத்தப் படைப்புகளையும் இப்போது புதிய தகவல்களுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 200 தொகுதிகளாக வெளியிட உத்தேசித்துச் செயல்படுகிறது.
‘உலக இலக்கியத்தில் உரைநடையின் உன்னதம் வால்டேரின் நடை’ என்று 20ஆம் நூற்றாண்டில் ஆங்கில நாவலாசிரியர் சாமர்செட் மாம் எழுதினார். ‘ஆங்கில இலக்கியவாதிகள் யாருக்கும் உரைநடை எழுதத் தெரியவில்லை. ஷேக்ஸ்பியரின் புகழைக் கண்டு பொறாமைப்பட்டு அதே நேரத்தில் அவரைப் போல் யாப்பை வெற்றிகரமாக ஆளத் தெரியாமல், அவருடைய உயர்வு நவிற்சி நடையை உரைநடையில் எழுதிப் பெயர் வாங்க முயன்றவர்களே பேகன், சர்.தாமஸ் ஜான்சன், வால்டர் பேடர், எமர்சன் போன்றவர்கள். கவிதையின் நோக்கம் வேறு, அமைப்பு வேறு. உரைநடையின் நோக்கம், அமைப்பு வேறு. கற்பனையும் உணர்ச்சியும் கவிதையின் கண்கள் என்றால் தெளிவு, எளிமை, வலிமை தொடர்ந்த சிந்தனை ஓட்டம் ஆகியவையே உரைநடையின் குணங்கள். ‘நல்ல உரைநடையை எழுத வேண்டுவோர் இரவும் பகலும் வால்டேரைப் படிக்க வேண்டும்’ என்றார் மாம்.
ஆனால் இம் மாபெரும் எழுத்தாளரை அவருடைய தேசத்திலேயே இப்போது மக்கள் கண்டுகொள்வதில்லை. கால மாற்றமே காரணம். சுமார் 100 புதுக்கவிதைகளையும், ஒரு சிறிய திறனாய்வு நூலையும் மட்டுமே எழுதிய சார்லஸ் பௌதலேரை உலகெங்கும் வாசிக்கிறார்கள்; வால்டேரை மறந்துவிட்டார்கள். இது வருந்தத்தக்கதே. வால்டேர் ஆதிக்க சக்திகளை மக்களுக்கு அடையாளம் காட்டி, அழித்து, ஒழித்ததால்தான், அவர் வாங்கித் தந்த சுதந்திரத்தால்தான் இன்று ‘கலை கலைக்காகவே’ என்று பேச முடிகிறது. கலையின் நுட்பங்களை ஆய்வதே இலக்கியத்தின் அழகியல் என்று வாதிட முடிகிறது. கல்வியாளர்கள் உணர வேண்டிய உண்மை, மண்ணில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் மனிதகுல வரலாற்றை அறிய வேண்டியது அவசியம். அதில் வால்டேர் போன்ற, தாமஸ் பெயின் போன்ற, கார்ல் மார்க்ஸ் போன்ற, ரூஸோ போன்ற போராளி – அறிஞர்களின் பங்கை உணர்த்தும் பாடங்களை மாணவர்கள் பயிலச் செய்ய வேண்டும்.
ரூஸோவை மறவாத உலகம் வால்டேரை ஏன் மறந்தது? சிந்திக்க வேண்டிய கேள்வி.
இது குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.