கார்த்திக் நேத்தா கவிதைகள்

0 comment

1. நெடுஞ்சாலை மரத்தடியில்
தியானத்திலிருந்தான் புத்தன்
அரச இலை அவன் மேல் உதிர்ந்தது
விழிக்கவில்லை
காற்று புழுதி வாரி வீசியது
விழிக்கவில்லை
மழைத்துளிகள் வீழ்ந்தன
அப்படியே இருந்தான்
குறுக்காகக் காகமொன்று கடந்தது
ஓடுடைய கூழாங்கல்லாய்
உறைந்துபோயிருந்தன அவன் கண்கள்
யசோதரா இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்
மனம் நோக்கி வேர்விட்டிருந்தது அவனது பிரக்ஞை
தலைமை சீடன்
பெண்ணொருத்தியோடு ஓடிவிட்டதாக
யாரோ சொன்னார்கள்
அசைவற்று இருந்தான்
மண்ணைக் கிளறியபடி
மூச்சுவிட்டுப் போய்க்கொண்டிருந்தன
கோடிகோடி எறும்புகள்
சவமாய் ஜீவித்திருந்தான்
நீ ஞானம் அடைந்துவிட்டாய் என
யாரோ சொன்னார்கள்
மெல்ல கண் திறந்தான்
எதிரில் சிறு குழந்தை
சிரித்துக்கொண்டிருந்தது
வெகுநாட்களுக்குப் பிறகு
ஆழ்ந்து அழுதான்
தன் துறவை
மண்பொம்மையாக மாற்றிக்
குழந்தைக்குத் தந்தான்
சிறிது நேரம் விளையாடிவிட்டு
தூக்கிப்போட்டுவிட்டது குழந்தை

————————————————

2. பாட்டி கதை
பெருமழை
மழைக்குத் தப்பி
உதிர்ந்துகொண்டிருக்கிறது
இலை
அப்படியும் பொத்தென
இலை மேல் வந்து விழுந்தது
சற்றுப் பெரிய மழை
மழை
இலையைக் கொன்றுவிட்டதென
சொல்கிறாள் ஆலாபனா
இல்லை
இலைதான் மழையைக் கொன்றுவிட்டதென
அழுகிறாள் ஆராதனா
கன்னி மழைக்கு
வயதான இலைமீது சொல்லொணா
மோகம் என்கிறான் அனந்தன்
யாரும் பிறப்பதும் இல்லை
இறப்பதும் இல்லை என்கிறான் அதிதி
பார்த்துக்கொண்டிருந்த திகம்பரன்
மழைக்குக் கடவுளின் விந்தென்றும்
இலைக்கு ஜீவவாசல் என்றும்
பெயர் வைத்தான்
பிரம்மா, படைக்கும் வேலையில்
ஈடுபடலானான்

——————————————

3. கான்யாற்றுக்
கரையமர்ந்து
காற்றதிரா வண்ணம்
யாழ் மீட்டிசைத்திருந்தேன்
அப்போது அங்கு பூத்த
முல்லையைக் கண்ணுற்றது
ஓர் ஆ
குறிப்புணர்ந்த கானாங்கோழி
கொன்றை மரமேறி
குருத்து மரம் தாவி
புதல் மர நிழலில்
மானுக்கும் முயலுக்கும்
அஃதை உரைத்தது
வரகும் முதிரையும் உண்டிருந்த
ஆயன்
ஏறுகோட் பறை நிறுத்தி
ஆயத்தியைக் கண்ணுற்றான்
அஃதை உணர்ந்த என் யாழ்
காற்று அதிர அதிர
நரம்பு சிலிர்க்கச் சிலிர்க்கப்
பண் வளர்த்தது
கான்யாறு
நீரைச் சிரித்தது
அது ஒரு காலம்
முல்லைக் காலம்

————————————–

4. உள்ளாடை சமாச்சாரம்
நான்
உள்ளாடை அணியாமலிருப்பதற்குப
பறவைதான் காரணம்
எந்தப் பறவையென்று
எச்சம் பார்த்துச் சொல்லும் ஞானமில்லை
எத்தனையோ துணிகள் காய
என் உள்ளாடையில் மட்டும் ஏன் எச்சமிடுகிறது
எந்தப் பறவையென்று தெரியாத அந்தப் பறவை?
உள்ளாடை அணிவதை விட்டு ஆண்டு பலவாகிறது
இப்போதெல்லாம்
என் மேல் எச்சமிடுகிறது
நான் யாரின் உள்ளாடை?
என்னைத் துறந்து என்னைக் காக்கும்
வகை எதுவோ திகிரிகோனே?

———————————————————-

5. புத்த மரம்
வீழும் இலை
குளத்திற்கு மாட்டிவிடுகிறது
வளையல்
நீரின் சலனம் கேட்டுத்
துணுக்குறுவதில்லை பறவைகள்
தியானானுபவம் அடைகின்றன
கறுப்பாகிக்கொண்டிருக்கும்
குளத்தின் மேல் பைய ஊர்கிறது
நிலா வெளிச்சமெனும் மின்மினி உருண்டை
தியானத்தில் இருந்ததாகப் பிதற்றிய புத்தன்
உண்மையில் தியானத்தில்தான் இருந்தானா?
அரச மரம் மட்டுமே போதி மரம்
புத்தனாக இருந்தால்.
எல்லா மரங்களும் போதி மரங்களே
பறவையாக இருந்தால்.

———————————————————-

6. சாக்காயி*

கனவிலிருந்து
கனிந்து விழும் ஒளி உருண்டை
சாக்காயியின்
விரிந்த யோனி வீழ்த் துளியாகிச்
சதைகொண்டு செழித்து
சவ்வு கிழித்துதறிப்
பிண்டவண்டமாகிப்
பேயாய் அலியாய் மாம்ச வெளியாய்
அலைந்து பின்
சுடலைப் பாயில் துயிலுய்யும்
ஈமத் திரியில் ஆடும்
ஒளியின் ஓசைக்கு பயந்து
மௌனமாய் இருத்தல் மாஞானம் என்பான்
ரமண ரிஷி
ஒளியாய் இருத்தல் அவனாலும் ஆகாதென்பேன்
நான்

* சாக்காயி: பிள்ளை வரம் தரும் ஒரு கிராம தேவதை.

——————————————————————————-

7. சும்மா இரு
அதுபற்றிக்
கவலை வேண்டாம்
அதில் உன் பங்கு
எதுவுமில்லை
கேள்
சும்மா இருந்தால்
ஞானம் தலைக்கேறும்
பிதற்றவோ பெருமை அடிக்கவோ
அருகதை இல்லை உனக்கு
நீ வாங்கவுமில்லை துவைக்கவுமில்லை
காயப் போடவுமில்லை
கொடிக்கயிற்றில் காயும் வெயிலை
எடுத்துப் போக இரவால் மட்டுமே முடியும்
சும்மா இருந்து ஞானமடைவதில்
உனக்கென்ன சிரமம்?

————————————————————-

8. வலியின் கண்
அணைந்த மெழுகின்
புகைபோல
வலி மிதந்துகொண்டிருக்கிறது
கண்ணைப் போலத்
திறந்து திறந்து பார்க்கிறது
துரோகம்
ஏற்றி வந்த வலியோடு
விடைபெறுகிறது
பழைய நாள்
வியர்வையாய்
வழிந்து சொட்டும் கூரிய வலி
தாலாட்டுப் பாடலாய்
மாறிக்கொண்டிருப்பது
விந்தையா? வாழ்க்கையா?
கண்ணீரைப் போல ஈரம் காயாமல்
இயல்பாய்ச் சுரக்கிறது வலி
பெரும் வலியால் துடிக்கும்போதே
அழகாய் இருக்கிறேன்
அழகு என்பது வலியன்றி
வேறென்ன

——————————————————-

9. ராவணா
மண்டோதரியிடம்
மணந்த ஒன்றை
நர்த்தன திலோத்தி
மறுக்காத ஒன்றை
கவரி வீசிய கன்னியர்
காட்டத் துடித்த ஒன்றை
சீதையிடம் கேட்டுச்
சீரழிந்ததே நின் பெருங் காமம்

—————————————————–

10. குளத்தில் வந்தமரத் தொடங்கின
விண்மீன்கள்
அங்குக் கூடி இருந்தவர்கள்
அதைக் கவனிக்கவில்லை
பலரும் பார்த்தார்கள்
ஒருவரும் கவனிக்கவில்லை
அவர்களின் கண்களில்
ஏதோ எண்ணம் அலைந்தது
அவர்களின் கண்களில் இருந்து
எண்ணங்கள்தாம்
வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தன
ஒரு சிறுவன் மட்டும்
விண்மீன் அசைவதைப்
பார்த்துக்கொண்டிருந்தான்
நீர் அசைவதைப் பார்த்துக்கொண்டிருந்தான்
காற்று அசைவதைக் கவனித்துக்கொண்டிருந்தான்
காற்றின் பேரன்பை எண்ணி
மகிழ்ந்துகொண்டான்
தான் லேசாகிக்கொண்டிருப்பதில்
கரைந்துகொண்டிருந்தான்

———————————————————

11. காற்று
இரவாக மாறிய கணம்
நாயொன்று நாவால்
ஒரு சுழற்று சுழற்றிவிட்டு
மீண்டும் படுத்துக்கொண்டது
அவன் சொல்கிறான்
அது காற்றை நக்கியது
இவன் சொல்கிறான்
இரவை நக்கியது
உவன் சொல்கிறான்
வெளியை நக்கியது
நான் சொல்கிறேன்
அது கணத்தை நக்கியது

————————————————-

12. உள்ளங்கை
அளவான
சிலந்தியின் வலையில்
காற்று விளையாடிக்கொண்டிருந்தது
இழைகளின் துடிப்பு
என்வரை
கேட்டுக்கொண்டிருக்கிறது
எனக்குத் தெரியும்
வலைகள்
வெளியின் கண்கள்
அதன் பார்வையை நான்
ஆழமாக நேசித்தேன்
உறங்கும்போது
உள் அசையும்
கண்மணிகளின் பார்வை
அது
உள்ளங்கை அளவான
ஒளியை
உள்ளங்கை அளவான
சிலந்தியின் வலை
நெய்துகொண்டே இருக்கிறது
உள்ளங்கை அளவேயான
அதன் வெளியில்

——————————————–

13. திருவோடு செய்து தரும்
கோதுமை நிறச்
சிறுமிக்கு என்ன
தந்துவிட முடியும்
நான் துறவி எனும் பொய்யையும்
நீ சிறுமி இல்லை எனும்
உண்மையையும் தவிர
எதிலும் நிறை பூரணமே

———————————————

14. நீருக்கு வலிக்காமல்
வளர்ந்து கிடக்கும்
கரையோரக் காட்டுமர
பிம்பமே
எனக்கு வலிக்காமல்
யான் செழிக்கும் ஞானம்
கற்றுத் தா
காட்டுக் குழந்தையே

———————————————-

15. எருமையின்
முதுகில் ஊர்ந்துகொண்டிருந்தது
எறும்பு
நாக்கு சுழற்றுவதை நிறுத்தி
ஊர்தலை தியானிக்கிறது
எருமை
பாறையின் மேல் ஊர்வதாக
எறும்பு போய்க்கொண்டிருக்கலாம்
காற்று ஊர்வதாக
எருமை நினைக்கலாம்
வால் வரை வந்து
வெளியின் ஆழத்தை
வியக்கிறது எறும்பு
எறும்பின் தியானத்தில்
எருமையின் தியானம்
கலைகிறது.
வாலின் அசைவில்
வெளி கடந்து
நிலம் வீழ்ந்து
ஊர்ந்துகொண்டிருக்கிறது
எறும்பு
இப்போது
தியானிக்கத் தொடங்குகிறது
நிலம்

———————————————

16. ஆரத்தி
மணம் கமழும் நின்
அங்கத் தினவில்
சொட்டும் திவலையின்
கருணையில்
நறவு கொண்டதென்
துறவு பாங்கி

———————————————–

17. நான் என்னைக் கண்டது
ஒரு நானற்ற வெளியில்
அங்கே என் நான் அற்ற நான்
இருக்கத்தான் இருந்தேன்
நான் என்பதை அறியும் ஆவலில்
வெளி வந்தேன்
நான் என்பது
பாரதி மீசை
பரத்தை ரோமம்
ஞானியின் போலி
திருநங்கையின் அன்பு
பிணத்தில் இருக்கும்
துடிப்பு
பிறந்து விட்டவையின்
கடந்த காலம்
இறக்க முடியாமல் இருக்குமே
அது ஒன்றே
நான் என்பதும்

————————————————

18. அன்றிலிருந்து இன்றுக்கு வந்தேன்
அன்றிலிருந்துதான் வந்தேன்
அன்றிலிருந்தது போல
இன்றில் இல்லை என்றானபோதும்
இன்றில் இருக்கிறது
அன்றின் துடிப்பு துல்லியமாக
அன்றின் நாளைக்குப் போகும் வழியில்
நாளையின் நேற்றில் இளைப்பாறாது இருப்பது ஒன்றே
எனது பெருந்தவம்

————————————————–

19. ஈஸ்வர பிரணிதானம்
நூறு வயலின் ஓசை போல
காட்சி அளிக்கிறது எரியும் வீட்டின்
தீக் கோளம்
தேனை ஊற்றித்
தீயை அணைக்கிறான்
திகம்பரன்
உடல் வெந்து
நாக்கு வெந்துகொண்டிருந்த
பூனையின் நாவில்
கரைகிறது சிறு தேன்
எனக்கு வாய்க்கக் கிடைத்த
அத்வைதம்

———————————————–

20. உமையே, அம்மா
தனது
முலைக் காம்புகளை
கடு வனம் ஒன்றில் தொலைத்துவிட்டு
அலைந்துகொண்டிருக்கிறாள் உமை
உமை போன பின்
ஆண்மை இழந்ததை முழுதுமாய் உணர்ந்து
கேவிக்கொண்டிருக்கிறான் அர்த்தநாரி
சாகாவரம் பெற்ற காம்புகளிலிருந்து
கசிகிறது மொத்த வனத்துக்குமான
கருணைப் பெரும் நீரோடை
மின்மினிகள்
நீரோடையிலிருந்து
தாய்ப்பால் பருகிப் பறக்கின்றன ஒளிக்கு
உறைந்த நீரோடையை
இலை கொண்டு மெல்லச் சீவி
எல்லா உயிர்களுக்கும்
பால் ரொட்டி எடுத்துச் செல்கிறாள்
வனப்பேச்சி
உயிர் முட்ட உண்டு விட்ட
உயிர்களின் அன்பிலிருந்து இரு துளிகள்
உமையின் முலைக் காம்புகளாயின
குதலைச் சிறு சிவனுக்கு
அமைதியாக பால் தரத் தொடங்குகிறாள்
உமை
பால் கவிச்சியோடு படைக்கப்பட்டுவிட்டது
பரம் அப்போது
எப்போதைக்கும்

————————————————-

21. ஆங்கோர் காட்டிடை
நேப்கின் போல்
கிடந்ததாம் நிலவு
உடுத்திப் போக வந்ததாம் ஒளி
ஒளியின் ஒலி கேட்டு
சிரித்ததாம்
வெளி
வெளியின் உள் உணர்ந்து வேண்டாம் என்றதாம்
மனம்
மனதின் போலி கண்டு
அழுததாம் அதன் எண்ணம்
எண்ணத்தின் உண்மை வியந்து
செத்ததாம் நேற்று
நேற்றை இளித்து நின்றதாம்
இக்கணம்…
எல்லாம் சவம்…