வால்டேர் (பகுதி 2)

0 comment

இது தனித்துறை வல்லுநர்களின் காலம். ஏதாவது ஒரு துறையில் மற்ற யாரும் செய்யாத சாதனையை நீ செய்தாயா? இதுவே காலம் ஒவ்வொரு எழுத்தாளனையும், அறிஞனையும் பார்த்துக் கேட்கும் கேள்வி. ரூஸோ அரசியல் சித்தாந்தத் துறையில் இமாலய சாதனை செய்தவன். பௌதலேர் புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிறான். குறைவாக எழுதினாலும் அவர்தம் துறையில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்கள். அதனால்தான் இன்றும் நினைக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஒரு துறையில் உலகின் உன்னத நிலையை வால்டேர் பெறவில்லை – அவருடைய உரைநடை, கதைகளைத் தவிர.

அவருடைய கடவுள் கொள்கை பாமரத்தனமானது. ‘ஒரு கடவுள் உண்டு. ஆனால் அவரைப் பற்றி மனித அறிவால் அறிய முடியாது – ஓர் எறும்பு ஷேக்ஸ்பியரைப் படித்து அறிந்துகொள்ள முடியாததைப் போல’ என்று எழுதினார். கடவுளைப் பற்றிய பதி அறிவைத் தெளிவாக உரைத்தனர் தமிழ் ஞானிகளான திருவள்ளுவர், திருமூலர், மெய்கண்டார், வள்ளலார் போன்றவர்கள்; மேலை தேசங்களில் பிளேட்டோ, ஏசுநாதர், ஜேகப் பௌமி, மெய்ஸ்டர் எக்கார்ட், எமர்சன் போன்ற பல ஞானிகள்.

‘தத்துவத் துறையில் ஆழமான உண்மைகளைத் தேடிச் செல்லும் மீபொருண்மையியல் வெறும் சொல் விளையாட்டு, எனக்கு அதில் நம்பிக்கையில்லை’ என்று வால்டேர் வாதிட்டார். அவருடைய செயல்பாடு இலக்கியத்தின் மூலம் அரசியல், சமூக சீர்திருத்தம் என்ற அளவில் நின்றுவிட்டது. ஆனால் அத்துறைகளில் அவருடையது இமாலய சாதனை. அதனால் தான் மனிதகுல வரலாற்றை எழுதிய வில் டியூராண்ட் என்ற வரலாற்றாசிரியர் 18ம் நூற்றாண்டை ‘வால்டேரின் யுகம்’ என்று அழைத்தார். அப்பெயரே நிலைத்துவிட்டது. இந்திய சீர்திருத்தவாதிகள் பலருக்கும் வழிகாட்டி வால்டேரே.

மத வெறியர்களுக்கு எதிராக மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுதும் போராடினார் வால்டேர். அதில் ஜீன் கலாஸ் வழக்கு குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தேசத்தில் கத்தோலிக்கர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. ஜீன் கலாஸ் ஒரு புராடஸ்டன்ட். அவர் தன்னுடைய சொந்த மகனையே கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, முடிவில் எரித்துக் கொல்லப்பட்டார். அவர் மகன் கத்தோலிக்கப் பிரிவிற்கு மதம் மாற விரும்பினான்; அதைத் தடுக்க புராடஸ்டன்ட் தந்தை அவனைக் கொன்றுவிட்டார். இப்படிக் கதை கட்டப்பட்டு, தந்தை மீது பழி சுமத்தி, சிறையில் அடைத்து, வீட்டை இடித்துத் தரை மட்டமாக்கி, அவனது தாயையும் விலங்கிட்டு, சகோதரனைச் சித்ரவதை செய்தது அரசு.

வால்டேர் நேரில் சென்று ஜீன் கலாஸின் விதவையைக் கண்டு உண்மையை அறிந்தார். கொதித்தெழுந்தது அவரது பேனா. ‘பாருங்கள், மத வெறியின் கோர தாண்டவத்தை!’ என்று பிரெஞ்சு தேசத்தையே தட்டி எழுப்பினார் தன் எழுத்துகளால். ஏராளமான கடிதங்கள் எழுதினார் பத்திரிகைகளுக்கும் அதிகாரிகளுக்கும். துண்டுப்பிரசுரங்கள், அறிக்கைகள் என்று தொடர்ந்து 3 ஆண்டுகள் மக்களின் கவனத்தை இந்தப் பிரச்னை மீது குவியச் செய்தார். வேறு வழியில்லாமல் அரசு வழக்கைத் திரும்ப விசாரணைக்கு எடுத்தது. ஜீன் கலாஸ் நிரபராதி என்று தீர்ப்பளித்தது. அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடு அளித்தது.

வால்டேர் மனசாட்சி கொண்ட எழுத்தாளர். அதர்மத்தை எதிர்க்கும் துணிவு கொண்ட ஒவ்வொருவரும் அவதாரமே. அவதாரங்களின் வரவுக்காகக் காத்திருப்பது பேதைமை. எழுதுகின்ற எல்லோரும் எழுத்தாளரா?

வால்டேரின் தத்துவ நிலைப்பாடான -‘மீபொருண்மையியல் வெறும் சிலம்பம்; விஞ்ஞானமே உண்மையைக் காட்டும் பாதை’ என்ற கருதுகோள் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு 1920, 30களில் ‘வியன்னா வட்டம்’ என்ற தத்துவப் பள்ளியைச் சேர்ந்த ருடால்ஃப் கார்னாப், மோரிட்ஸ் ஸ்லிக், குர்த் கோடல் போன்றவர்களாலும், எர்னஸ்ட் மாக் விட்கன்ஸ்டீன் மற்றும் ஏ.ஜே.ஐயர் போன்றவர்களாலும் மீண்டும் ஒரு தத்துவக் கொள்கையாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒருவரும் வால்டேரை நினைவுகூரவோ நன்றி பாராட்டவோ இல்லை. கருத்துத் திருட்டும் நன்றி மறத்தலுமே சுயம்புகள் என்று கூறிக் கொள்வோரின் தனித்திறமை. இது அறிவுத் துறைகள் யாவற்றிலும் எல்லாக் காலங்களிலும் நடப்பதுதானே! தமிழ்ச் சித்தர்களின் வாசியோகத்தைப் பெயர் மாற்றிக் ‘கிரியா யோகம்’ என்று விளம்பரப்படுத்தி உலகெங்கும் வியாபாரம் நடப்பது கண்கூடு.

ஒரு பிரெஞ்சு நாடகாசிரியன் எழுதினான்: ‘வியாபாரம் என்றால் என்ன? அடுத்தவர்களின் பணத்தால் லாபம் சம்பாதிப்பது. அத்துடன் மேலும் இரண்டு சொற்றொடர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்தவர்களை வேலை வாங்குவது. மற்றவர்களின் கருத்துகளைத் திருடுவது. முடிந்தால் வேறு காலத்தில் வாழ்ந்த அல்லது வேற்றுநாட்டு அறிஞர்களின் கருத்துகளைத் திருடி தம்முடைய மொழியில் தாம் புதிதாகக் கண்டுபிடித்ததாகப் பறைசாற்றுவது, அதற்காகப் பொருளும் பரிசும் பெறுவது, சுயமாகச் சிந்தித்தவனை ஏமாளி ஆக்குவது. இவ்வுலகில் அறிஞனல்ல, திருடனே வாழத் தெரிந்தவன்.

வால்டேரின் கிறித்துவ எதிர்ப்பே அவருக்கு ஒரே சமயத்தில் வாழ்வில் எல்லாச் சோதனைகளையும், அதே நேரத்தில் உலகப் புகழையும் தந்தது. திருச்சபையையும், போப் ஆண்டவரையும் நேரிடையாக எதிர்க்கத் துணியாத மன்னர்கள், பிரபுக்கள், சக்கரவர்த்திகள் (மகா பிரெடரிக்), சக்கரவர்த்தினிகள் (உருசிய காதரின்) ஆகியோர் வால்டேரின் நண்பர்களாயினர். கிறித்துவ சமய எதிர்ப்பே வால்டேரின் வாழ்நாள் பணியாகவும், போர்க்குரலாகவும் மாறியது. ‘பன்னிருவரால் கிறித்துவம் உலகெங்கும் பரவியதாம். நான் ஒருவனே போதும் அதை அழிக்க’ என்று முழங்கினார். விளைவு? ஓரளவு சாதிக்கவும் செய்தார். காலமும் உதவி செய்தது. விஞ்ஞானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பகுத்தறிவு இயக்கமும் துணை நின்றன. சுமார் 13 நூற்றாண்டுகளாக ஐரோப்பா முழுவதும் தன் கிளைகளைப் பரப்பி பிரமாண்டமானதோர் ஆலமரமாக நின்ற திருச்சபையின் ஆதிக்கத்தை, தனி ஒரு மனிதனாக நின்று எதிர்த்து, அதை வேரறுக்க முயன்றார். ஆனால் ஆணிவேரை எடுக்க முடியவில்லை. காரணம் அது உண்மையில் ஊன்றி இருந்தது. திருச்சபை என்ற நிறுவனம் அன்பைப் போதித்த ஏசுவின் பெயரால் ‘ஸ்பானிய இங்குசிசன்’ போன்ற நடவடிக்கைகளால் இலட்சக்கணக்கான மனித உயிர்களை, அறிஞர்களின், விஞ்ஞானிகளின் கருத்துகளை நசுக்க முடிந்தது; விஞ்ஞான வளர்ச்சி சுமார் 1500 ஆண்டு காலம் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது உண்மைதான். அதற்காக மக்கள் வால்டேரின் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் மூலத்தை அழிக்க முடியவில்லை. காரணங்கள் இரண்டு: 1) வால்டேரே கடவுள் ஒருவர் உண்டு என்று எழுதியது; 2) ஏசுவின் போதனைகள் மீது, அவர் காட்டிய விழுமியங்களின் மீது வால்டேர் கை வைக்கவில்லை. ஏனெனில் அவரே அந்த விழுமியங்களைக் கடைப்பிடித்தவர். அவற்றுக்காக வாழ்நாள் முழுதும் போராடியவர். அந்த விழுமியங்கள் என்னென்ன? அன்பு, பணிவு, உயிரிரக்கம், விசுவாசம். கடவுளை விசுவாசித்தாலே, ஏசுவை விசுவாசித்தாலே போதும்; ஒருவன் மோட்ச கதி அடையலாம் என்ற மதிப்பீட்டை மட்டும் வால்டேர் ஏற்கவில்லை. மற்ற மூன்று விழுமியங்களை ஏற்றார். அதனால்தான் ஏற்ற பணியை முழுதுமாக அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

அவர் விட்டுச் சென்ற பணியைப் பூர்த்தி செய்ய பின்னாட்களில் ஒரு படையே எழுந்தது. பிரான்சில் டிடரோ, கண்டார்செட் ஸ்டிராஸ், ரினான் போன்றவர்கள், ஜெர்மனியில் கதே, ஃபாயர்பாக், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் வீறுகொண்டு எழுந்தனர். அவர்களாலும் ஓரளவுக்கே வெற்றி காண முடிந்தது. கடைசியாக வந்த நீட்சேதான் சம்மட்டி கொண்டு ஓங்கி அடித்தார். வால்டேரின் குறைபாடுகளைத் தன் நுண்ணிய அறிவால் உணர்ந்த நீட்சே வேரிலேயே வெந்நீரை ஊற்றினார். முதலில் தன்னை நாத்திகன் என்று அறிவித்தார். கடவுள் இல்லை, அவர் இறந்துவிட்டார் என்று பிரகடனம் செய்தார். இரண்டாவதாக கிறிஸ்துவின் போதனைகளே, அவர் சுட்டிக்காட்டிய விழுமியங்களே தவறு; அவையே மனித சமூகம் முன்னேறாமல் போனதற்கான காரணங்கள். அன்பு, பணிவு, உயிரிரக்கம், விசுவாசம் என்பவை குணங்கள் அல்ல, குறைகள். அவை மனிதனின் தன்னம்பிக்கையைத் தகர்த்து, அடிமையாக்கின. சுயசிந்தனை, பகுத்தறிவு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், முன்னேற்றப் பார்வை போன்ற யாவற்றையும் இழந்த மனிதன் வெறும் நடை பிணமானான். இந்த விழுமியங்களை எல்லாம் மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி தன்னை கிறிஸ்துவின் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்தார்.

மேற்கண்ட தலைப்புகளில் நூல்களே எழுதினார். பணிவால் அல்ல, அதிகாரத்தாலேயே மனிதன் அதிமனிதன் ஆக முடியும். ஏனெனில் ‘வல்லமைக்கான சங்கற்பமே’ முன்னேறுவதற்கான கை ஆயுதம். ‘வலுவான உயிர்களே பிழைக்கும். வலுவில்லாத இனங்கள் அழியும்’ என்று பரிணாமவாதம் கூறி ஏற்கெனவே 1870களில் சார்லஸ் டார்வின் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருந்த கொள்கையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். வால்டேர் விதைத்த விதை மரமாகத் தழைத்துக் கிளைத்து மலர்ந்து நீட்சே என்ற கனியானது. விளைவு, வால்டேர் எதிர்பார்த்ததைப் போல் கிறித்துவ சமயம் அழிந்துபடவில்லை என்றாலும், நீட்சே சொன்னதைப் போல் மக்களாட்சித் தத்துவம் பொய்க்கவில்லை என்றாலும் இன்று பொதுவாக எல்லாச் சமயங்களும், அவற்றின் நிறுவனங்களும் பெயரளவில்தான் இருக்கின்றன. உலக மக்களின் மனத்தில் அறிவியலும் பகுத்தறிவுமே முற்றாக ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றன. தீவிரவாதம் என்ற பக்கவாதத்தால் சமயங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றன. சமயம் கடந்த ஆன்மீகம் இப்போதுதான் கால்கொள்ளத் தொடங்கியுள்ளது. திருவள்ளுவர், வள்ளலார் காட்டிய சமயம் கடந்த ஆன்மீக நெறி, சித்தர் நெறி என்ற சித்தி அறிவியல் நெறி உலகெங்கும் பரவுகின்ற காலத்தில் ஒவ்வொருவரும் ஆறறிவு நிலையில் இருந்து மேலேறி குறிப்பறிவு (7ஆம் அறிவு), மெய்யறிவு (8ஆம் அறிவு), நுண்மாண் நுழைபுலம் (9ஆம் அறிவு), வாலறிவு (10ஆம் அறிவு) ஆகிய படிநிலைகளை அடைந்து அவதாரங்களின் வாழ்வை, தீர்க்கதரிசிகளின் வாழ்வை, அதிமனித வாழ்வை வாழ்வர். அந்த இனிமையான காலம், இகம் பரமாகும் ஆன்ம இகம் விரைவில் தோன்ற மனிதர் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைச் செய்வதே வால்டேர் போன்ற தியாகப் போராளிகளுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாகும்.

ஒரு தத்துவத்தைக் கண்டறிவதை விட, ஒரு விஞ்ஞான உண்மையை, ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதை விட, சமுதாயத்தின் இரத்தத்தை அட்டையைப்போல் உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஓர் ஆதிக்க சக்தியை அழிக்கப் போராடுவதே மேலான பணி. அந்த வகையில் பார்த்தால் சாக்ரடீஸுக்கு மேலான நிலையில் வால்டேரை வைக்க வேண்டும், போற்ற வேண்டும்.

(நீட்சேயின் இந்த அதிகார வாதத்தால் மனிதன் அதிமனிதன் ஆக முடியாது என்ற தர்க்கத்தின் விளக்கத்தை எமது ‘நீட்சே’ என்ற நூலில் காணலாம்.)

நீட்சே

உலகமே தெய்வ மாகவி என்று ஏத்திப் புகழ்ந்து பாராட்டுகின்ற இத்தாலிய தாந்தேயின் ‘தெய்வீக இன்பியலை’ மறுத்துக் கண்டனம் செய்தார் வால்டேர். நரகத்தின் பயங்கரங்களை மிக நுட்பமாக வரைந்து காட்டி மனிதர்களுக்கு அச்சமும் திகிலும் ஊட்டி, கிறித்துவ சமயத்தை தாந்தே வளர்த்திருக்கலாம். ஆனால் மனிதரின் பகுத்தறிவுக்கும் முன்னேற்றத்துக்கும் அக்காப்பியம் ஒரு தீராத களங்கம் என்று எழுதினார். கற்பனையையும் கவித்துவத்தையும் எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இப் புராணம் ஒரு சான்று என்று சவுக்கடி கொடுத்தார். கலையாலும் கற்பனையாலும் மனிதன் மேம்பட வேண்டுமே ஒழிய அச்சத்தின் தளையில் மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாக்குவது இலக்கியத்தின் வேலையல்ல என்று சுட்டிக் காட்டினார். அறத்தைப் போதிப்பதாகக் கூறிக்கொண்டு தாந்தே ஒரு கடைக்குட்டிக் கிறித்துவ பிரசார பீரங்கியைப் போல நரகத்தின் நெருப்புக் குழிகளைக் காட்டி மனித மனங்களைப் பீதியுறச் செய்கின்றார் என்று எழுதினார். இக் கருத்தின் தொடர்ச்சியையே ஜெர்மானிய நீட்சே தன் தர்க்க வாதத் திறமைகளுடன் கிறித்துவத்தை எதிர்த்துத் தன் நூல்களில் முன்வைத்தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ரோம் நகரில் வாழ்ந்த இலத்தீன் மகாகவி விர்ஜில். அவர் எழுதிய காப்பியம் ஏனிட், கிரேக்கர்களால் டிராய் நகரம் எரியூட்டப்பட்ட பிறகு அந்நகரிலிருந்து தப்பிய ஓர் அரசகுமாரன் ஈனியாஸ். அவன் கப்பலில் கிளம்பி வீர காதல் சாகசங்களுக்குப் பின் ரோம் நகரை உண்டாக்கி எவ்வாறு அதை ஒரு சாம்ராஜ்யமாக மாற்றினான் என்பதே காப்பியத்தின் கதை. அதைத் தமிழ்க் கம்பனைப்போல் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு சொல்லிலும் அணி அலங்காரத்தைப் புகுத்தி பிரம்மாண்டமான அரச மாளிகையைப் போல் காட்டியிருப்பார் விர்ஜில். பிற்காலத்தில் வந்த காப்பியக் கவிகள் பலருக்கும் அதுவே சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. தாந்தே தனக்கும் விர்ஜில்தான் குரு என்று தன் காப்பியத்தில் காட்டுகிறார். அப்படிப்பட்ட விர்ஜிலைக் கதாபாத்திரமாக்கி அவருக்கு நரகம், கழுவாய்க் குன்றம் வரைதான் செல்வதற்கு அருகதை என்று காட்டி கவிஞர் குலத்தையே தாந்தே அவமதித்து விட்டதாக வால்டேர் குற்றம் சாட்டினார்.

தாந்தேவும் அற்புதமான கவிஞர்தான். அதை வால்டேர் மறுக்கவில்லை. ஆனால் அக்கவித்துவத்தை எதற்குப் பயன்படுத்துகிறார் என்பதே அவருடைய கேள்வி. ‘இவ் வாயிலுக்குள் நுழைபவர் திரும்பவே முடியாது’ என்ற வாசகத்தை நரகத்தின் வாயில் மீது எழுதி வைத்தார் தாந்தே. தவறு செய்யாத மனிதர் உண்டா? அதற்காகக் கருணையே வடிவானவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டே இப்படிப் படுபயங்கரமான நரகத்தைக் கடவுள் படைத்ததாகக் கூறுவது முரணல்லவா? மனிதரின் முதல் எதிரி மதம். அதன் பிடியிலிருந்து மனிதன் தப்பிப்பதே முதல் சுதந்திரம். அதற்கு மாறாக அப்பிடியை ஆயிரம் மடங்கு இறுக்குகிறார் தாந்தே. இது மனித குலத்துக்குத் தாந்தே இழைத்த துரோகம் என்று பொரிந்து தள்ளுகிறார் பகுத்தறிவுப் பகலவன் வால்டேர். பதினெட்டுப் புராணங்களை இயற்றி, அக்கதைகளே உண்மை வரலாறு என்று மக்களை நம்ப வைத்தனர் பாரதப் பௌராணிகர்கள். அப்புராணங்களில் அவதாரம் என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்தம் வாயாலேயே, ‘நானே நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன்’ என்று சொல்ல வைத்து மக்களை நம்ப வைத்து ஈராயிரம் ஆண்டுகளாக ஏய்த்து வந்த தெய்வமாகவிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியவர் வள்ளலார்.

‘கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’ என்று சாடினார். அதில் இருந்த உண்மையை உணர்ந்த பாரதி எழுதினான். ‘உயிர் பெற்ற தமிழன் பாட்டு’.

கடலினைத் தாவும் குரங்கும் – வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலே – தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியினுள் ளேமுழு கிப்போய் – அந்த

நாகர் உலகில்ஓர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த – திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம்

கவிதை மிகநல்ல தேனும் – அக்

கதைகள்பொய் யென்று தெளிவுறக் கண்டோம்.

உண்மையை வலியுறுத்தவே கற்பனையும் கலையும். மாறாக உண்மையை மறைத்தும் பொய்மைக்கு முலாம் பூசி உண்மையெனத் திரித்துக் காட்டுவது மகாகவிகள் ஆயினும் வஞ்சகரே என்பது வால்டேரின், வள்ளலாரின் வாதம்.

ஒரு சமுதாயத்தின் பொருளாதார, கலாச்சார, சுதந்திர வாழ்வின் விழுமியங்கள் யாவற்றையும் ஒருசேர அழிக்கும் போரை விடத் தீமையானது எதுவும் இல்லை. பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் இயற்கையால் விளையும் பாதகங்கள் எனில், போர்கள் அவற்றைவிடக் கொடுமையானவை. ஏனெனில், இவை பகுத்தறிவு கொண்ட மனிதனால் சக மனிதர்களுக்கு எதிராகச் செய்யப்படும் சதிகள். எந்த ஒரு தாவர இனமோ விலங்கினமோ தன் இனக் கிளைகளைத் தானே அழிப்பதில்லை – மனிதனைத் தவிர. பெரும் கொலையாளிகளை, மாபெரும் கொள்ளைக்காரர்களை ‘மகா’ என்ற பட்டத்தை அளித்து, ‘மகா அலெக்சாண்டர், மகா சீஸர், மகா செங்கிஸ்கான்’ என்று பெருமையுடன் அழைப்பது வரலாற்றாசிரியர்கள் மனித குலத்திற்குச் செய்த அநீதி. மன்னர்கள், படைத்லைவர்கள், பிரபுக்கள் மட்டுமா மனிதர்கள்? அவர்களைப் பற்றி எழுதுவதா வரலாறு? அல்ல. மக்களின் பண்பாடு, அறிவுத்துறை வளர்ச்சி, வீழ்ச்சிகள், அவற்றின் காரணங்களை விரிவாக அலசி ஆராய்ந்து எடுத்துரைப்பதே உண்மையான சரித்திரம் என்று கூறியது மட்டுமின்றி, அப்படிப்பட்ட முறையில் இரண்டு வரலாற்று நூல்களையும் எழுதிக் காட்டினார் உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி வால்டேர். மூட நம்பிக்கைகளில் முதலாவது மதம் எனில், அதற்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படவேண்டியது போர். உலக வரலாற்றில் ‘போர் வேண்டவே வேண்டாம்’ என்று எழுந்த முதல் எதிர்ப்புக் குரல் மாவீரன் வால்டேருடையது. பதினான்காம் லூயி, மகா பிரெடரிக் போன்ற போர்ப் பேராசை கொண்ட சக்கரவர்த்திகள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களை, அவர்தம் செயல்களைக் கண்டித்து எழுதும் துணிவு கொண்ட எழுத்தாளர் வால்டேர். போரின் கொடுமைகளை, அவை மனித சமுதாயத்தில் ஏற்படுத்தும் சர்வ நாசங்களைப் பற்றித் தான் எழுதிய பல கதைகளில், குறிப்பாக இளிச்சவாயன் கதையில் நெஞ்சை உருக்கும் காட்சிகளாகப் படம்பிடித்துக் காட்டுவார்.

மனித குலத்தின்பால் அக்கறை கொண்ட அருளாளர்கள் யாவரும் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பர் என்ற உண்மைக்கேற்ப அண்மையில் வாழ்ந்த வள்ளலாரும் உயிர்க்கொலையின் ஒட்டுமொத்த வடிவான போரைத் தவிர்ப்பதே இறைவன் தனக்கிட்ட கட்டளை, குறிப்பாக சமயப் போர்களைத் தவிர்ப்பதே தன் நோக்கம் என்று காத்திரமான பல பாடல்களில் எழுதிச் செல்கிறார்:

பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெலாம்

பேய்பிடிப் புற்ற பிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கு மிங்கும்

போருற் றிறந்து வீண் போயினா ரின்னும்வீண்

போகாத படிவி ரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை யுணர்த்தி யெல்லாம்

ஏருற்ற சுகநிலை யடைந்திடப் புரிதிநீ

யென்பிள்ளை யாத லாலே

இவ்வேலை புரிகவென் றிட்டனன் மனத்தில்வே

றெண்ணற்க வென்ற குருவே.

– திருவருட்பா

இந்த ஒட்டுமொத்தக் கொலைத் தொழிலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மதகுருமார்களும், பிரசங்கிகளும். இரத்தம் சிந்துதலின் மேன்மையை, தியாகத்தின் மகிமையை வாளேந்திப் போரிட்ட பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் வீரதீரச் செயல்களோடு ஒப்பிட்டு வானளாவப் புகழ்வர். தம் திறமையனைத்தையும் காட்டி சொல்லணிகள், பொருளணிகள், நயங்களைக் கூட்டி, மனதை உருக்கும் வகையில் இரங்கல் கூட்டங்களில் உரையாற்றுவர். கையில் வாளேந்திப் போரிட்ட ஞானிகளைப் பற்றி விவிலியத்தின் பழைய ஏற்பாடு அரசர் – தீர்க்கதரிசிகளின் புகழைத் துதிபாடும் வரை அன்பையும் சமாதானத்தையும் பேச முடியாது, போர்களைத் தவிர்க்க முடியாது என்று மதத்துக்கும் போருக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டினார் வால்டேர்.

தான் எழுதிய ‘பதினான்காம் லூயியின் வரலாறு’ மற்றும் ‘உலக வரலாறு’ ஆகிய நூல்களில் போரைக் கடுமையாகத் தாக்கி எழுதினார்.

‘மாசிலான்’ என்ற புகழ்பெற்ற மதகுரு சுமார் 6000 பிரசங்கங்களைச் செய்தார். அவற்றில் ஒரே ஒரு பிரசங்கத்திலாவது போரின் கொடுமையைப் பற்றிப் பேசினாரா? பிறகு எப்படி இவர் ஏசுவின் கருணைக் கொள்கையை உலகுக்கு உபதேசிக்கும் தகுதியைப் பெறுவார்? ‘போர்தலோ’ என்ற பிரசித்தி பெற்ற பிரசங்கியார் ‘மனத்துக்கண் மாசிலாது தூய்மையுடன் வாழ வேண்டும்’ என்று ஆயிரம் பிரசங்கங்களில் வலியுறுத்துவார். ஆனால் அவற்றில் ஒன்றிலாவது போர்களின் போது ஏற்படும் ஆயிரக்கணக்கான கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளையடித்தல், ஊரையே எரியூட்டுதல், வெஞ்சினத்தின் பேயாட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி வாய் திறந்ததுண்டா? பரிதாபத்துக்குரிய ஆத்மாவின் மருத்துவர்களே! ஒரு குண்டூசி குத்துவதால் ஏற்படும் துன்பத்தைப் பற்றி ஒரு மணிநேரத்தில் ஐந்து கால்மணி நேரங்கள் வாய்கிழியச் சொற்பெருக்கு ஆற்றுகின்றீர்களே! மனித உடலை ஆயிரம் துண்டுகளாகச் சிதைக்கும் போர் அவலங்களைப் பற்றிப் பேச ஏன் மறுக்கிறீர்கள்? ஏனெனில் நீங்கள் மக்களுக்கு வழிகாட்டிகளாகக் காட்டும் தீர்க்கதரிசிகளே போர் வெறியர்களாக இருந்ததினால் தான். தவறான முன்னுதாரணங்களைக் காட்டும் கயவர்களே, உலகில் அன்பையும் சமாதானத்தையும் உங்களால் எப்படிக் கொண்டு வர முடியும்? தத்துவஞானிகளே! அறத்தைப் போதிக்கும் நீதிமான்களே! உங்கள் புத்தகங்களைக் கொண்டு போய் நெருப்பில் போடுங்கள்! ஒரு சில பேராசைக்காரர்களின் விபரீத ஆசைகளுக்காக இலட்சக்கணக்கான சகோதர சகோதரிகளைக் கொலை செய்யவும் தயங்காத ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் என்ற உணர்ச்சியற்ற எந்திரங்களை உற்பத்தி செய்யும் அரசியல் செயல்பாடுகள் இருக்கும் வரை அவற்றால் என்ன பயன்? பணிவு, பக்தி, ஞானம், அறிவு, நாணம், நல்லொழுக்கம் – இவற்றில் எனக்கு என்ன அக்கறை, அரை அவுன்ஸ் கனமுள்ள ஈயக்குண்டு என் உடலைச் சிதைத்து என் உயிரைக் குடிக்கும்போது? என்னைச் சுற்றி ஐயாயிரம், ஆறாயிரம் சகோதரர்களின் இறந்த, இறந்து கொண்டிருக்கும் உடல்கள்! நான் பிறந்து வளர்ந்த என் ஊர் தீக்கிரையாக்கப்பட்டு மயான பூமியாகக் காட்சியளிக்கும்போது? இருபது வயதில் இந்த அழகான உலகை விட்டு நான் போக வேண்டியிருக்கும்போது? இவை எவற்றுக்கும் நான் காரணம் இல்லாதபோது சொல்லுங்கள்! உங்கள் தத்துவங்களால், தர்ம போதனைகளால் இச் சர்வநாசங்களைத் தடுக்க முடியாதபோது அவற்றைப் பற்றி எனக்கென்ன கவலை? கடைசியாக நான் கண் விழித்த தருணம் காணும் காட்சி என்ன? கேட்கும் ஓசைகள் என்ன? எங்கும் அபலைப் பெண்களின், பரிதாபமான குழந்தைகளின் ஓலமும் அழுகையும் கண்ணீரும். இவையெல்லாம் யாருக்காக? யாரோ, முன்பின் தெரியாத ஒரு மனிதனின் அற்பக் கனவுகளுக்காக! இதற்காகவா கடவுள் இந்த அழகான உலகைப் படைத்தார்? அறிவுள்ள மனிதர்களைப் படைத்தார்? இதுவா வாழும் விதம்? அறிவுள்ள மனிதன் யாரும் இதை ஏற்றுக்கொள்ள முடியுமா? போர் என்ற அசுரனை இப் பூமிப் பரப்பிலிருந்தே அகற்றிவிட வேண்டும் என்ற வேட்கையுடன் இப்படிப்பட்ட சொற் சித்திரத்தை ஆவேசமாக எழுதினார் வால்டேர் தன் ‘தத்துவத்தின் அகராதி’ என்ற நூலில்.

-தொடரும் .