ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகள்

0 comment

அழகியல்வாதத்துக்கும் (aestheticism) மிகையுணர்வுவாதத்துக்கும் (romanticism) என்ன வேறுபாடு? மனிதன் தன்னை விலங்கிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க ஆரம்பித்ததிலிருந்தே இருக்கும் பார்வையாக அழகியலைச் சொல்லலாம். புறம் மொழிக்குள் வந்தவுடன் அழகியல் கொண்ட ஒன்றாக மாறிவிடுகிறது. சுட்டப்படும் சொற்களே படிமமாய் இருப்பதால் அழகியல் எழுத்தின் தவிர்க்கமுடியாத ஒன்று. எழுத்தில் மட்டுமில்லாமல் அழகியல் வேறு தளங்களிலும் அடிப்படையில் இயங்கும் தன்மையுடையது. உதாரணத்திற்கு நமது பார்வைக்கோணம் 180 டிகிரிவரை பார்க்கும்படி இருந்தாலும், ஒரு க்ஷணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம் பார்வை குவிகிறது. பிற விஷயங்கள் பொருட்களைத் தவிர்த்து ஒன்றில் மட்டும் ‘தனிக்’ கவனம் செலுத்தும்போது அதற்கு ஓர் ‘Embossed’ கவனம் கிடைத்துவிடுகிறது. பேச்சுவழக்கிலும் இது செயல்படுவதைக் காணமுடியும். இந்தத் தனிக்கவனம் அழகியல்தன்மை கொண்டது. தொடர்புறுத்தலில் அழகியல் ஓர் அடிப்படையம்சம். அழகியல் சற்று மிகைப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பு என்று சொல்லமுடியும்.

அப்படியிருக்கையில் மிகையுணர்ச்சியை எப்படிப் பிரித்துப் பார்ப்பது? வானில் பறக்கும் கொக்குகளைக் கண்டு ஞானநிலைக்குச் சென்ற இராமகிருஷ்ணபரம ஹம்சரின் அந்த மனநிலை மிகையுணர்ச்சியா? ஆண்டாளின் காதல் பித்து மிகையுணர்ச்சியா? நம்மால் செல்லமுடியாத தூரம் என்பதால் மிகை என்கிறோமா? அகம் சார்ந்த ஒன்றை நிர்ணயம் செய்வது சற்றுக் கடினமானது. கவிதை எந்தவகையான உணர்வுநிலையைப் பேசினாலும், அதன் உச்சத்தைத் தொடவே ஒவ்வொரு கவிஞரும் விரும்புவார். அத்தகு கவிதைகளே அவர் ஆயுளுக்கும் நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும் ஒன்றாக எப்போதும் இருக்கும். அதேவேளையில், மொழியில் மிகையுணர்வைப் பிரதிபலிக்கும் உவமைகள், படிமங்கள், மொழியழகுக்காகச் செய்யப்படும் எதுகை மோனை போன்றவை வெளித்தெரியும் எளிமையான மிகையுணர்வு அடையாளங்கள். அகத்தின் உணர்வுத் தீவிரத்துடன் அவை சரிவர பொருந்திப் போகிறதா என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது.

ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு மிகையுணர்வுக் கவிஞர். தர்க்கங்களைக் கடாசிவிட்டு மனம்போன போக்கில், காதலின் பித்துநிலையை, நெருப்பில் காய்ந்த சுள்ளிகளை அள்ளி அள்ளிப் போடுவதுபோல் வரிகளைக் கொளுத்தி ஆனந்திக்கும் கவிஞர்.

கவிஞர் விக்கிரமாதித்யன் ஒருமுறை சொன்னார். இன்று தமிழில் ரொமாண்டிக் கவிதை எழுத ஆளே இல்லை. இது ஒரு சாபக்கேடு என்று குறிப்பிட்டார். ஏன் கவிஞர்கள் காதலைக் கொண்டாடுவதை விட்டுவிட்டார்கள்? ஜனரஞ்சக இதழ்கள் பெருகிய காலத்தில் தெருவுக்கு நாலுபேர் கவிதையெழுத ஆரம்பித்தனர். அலங்காரமான வரிகளில் நாலைந்து வரிகள் எழுதினால் போதுமானது; ரொம்பச் சிரமப்பட வேண்டியதில்லை என்பது ஒரு காரணம். காதல் என்ற ஒன்றின் உணர்வுரீதியான எந்தத் தொடர்பும் இல்லாமலேயே அதைப்பற்றி  ஆயிரக்கணக்கில் எழுத முடியும் என்ற நம்பிக்கையை அந்தச் சூழல் கொடுத்தது. இன்றும் வெகுஜன இதழ்களில் இவ்வகைப் பதார்த்தங்கள் வந்தபடிதான் இருக்கின்றன. எனவே காதலே கொச்சையான பாடுபொருளாக மாறிவிட்டது. ரொமாண்டிக் கவிதைகள் எழுத ஒருவித மயக்கம், பித்துநிலை தேவையாய் இருக்கிறது. சமகாலக் கவிதைகளுக்குள் முட்டாளாய் இருக்க மறுக்கும் நபர் ஒருவர் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்குக் காதலை ஏற்பது சிரமமாய் இருக்கிறது. அப்படியே காதலைப் பாடினாலும் நெஞ்சைப் பிளப்பது போல, உணர்ச்சிகரமான வரிகளில் வெளிப்படுத்தாது கவிதைக்குள் ஒருவகை அமைதியோடு வெளிப்படுத்துகிறார்கள்.

இன்னொருபுறம் இருத்தலியம், மார்க்சியம், சர்ரியலிசம் என பல இசங்களாய்ப் பேசி தன்னை வேறொரு இடத்துக்கு நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள் கவிஞர்கள். இதில் இருத்தலியம் பெரும் தாக்கத்தைச் செலுத்தியது. உருவகம், உவமை, படிமங்களுக்கு எதிராக ஒருபுறம் நேரடிக் கவிதைகளையும், எதிர்க் கவிதைகளையும் பிரஸ்தாபிக்கிறார்கள். இவ்வாறாக மிகையுணர்ச்சிக் கவிதைகள் வறண்டுபோயின. நிற்க.

ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் இதுவரை வெளியான ஐந்து தொகுப்புகளும் சேர்த்து (‘மெசியாவின் காயங்கள்’, ’வலியோடு முறியும் மின்னல்’, ‘நிழலின்றி ஏதுமற்றவன்’, ’மல்லிகைக் கிழமைகள்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’)  மொத்தமாக ஒரே புத்தகமாக ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள் என்ற பெயரில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டிருக்கிறது (2016). மொத்தம் 382 பக்கங்கள். நல்ல தரமான தாள்கள். இன்னும் ஒருமுறை மெய்ப்பு பார்த்திருந்திருக்கலாம்.

மொத்தம் 450 கவிதைகள் இருக்கக் கூடும். 270 பக்கங்கள் வரை பெரும்பாலானவை உணர்ச்சிப் பீறிடலுடன் வெளிப்படும் காதல் கவிதைகள். காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார். மகத்தான வரிகளை சரளமாய் வீசிவிட்டு அடுத்தடுத்து தாண்டிச் செல்கிறார். பிரக்ஞை மீது வர்ணப் பூச்சுடன் வரிகள் மிளிர்கின்றன. உதாரணத்திற்கு ஒரு கவிதையில் இப்படி ஒரு பத்தி வருகிறது.

‘பரிமாறப்படும் காபி கோப்பையிலிருந்து

எழுந்து நடனமிடும் ஆவி

விண்ணை நோக்கி நேராய்

ஒரு கோடு கிழிக்க படும் சிரமத்தை

ருசித்ததில்லை எந்த உதடுகளும்’

இன்னொரு கவிதையில், ‘இறந்துபோனவர்களின் சும்மா கிடக்கும் இரவுகள்’ என்றொரு வரி. இதுமாதிரி ஐம்பதுக்குக் குறையாமல் உதாரணங்களைக் காட்ட முடியும்.

கிருபாவின் முன்னோடியாக யாரைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து காதலின் பித்துநிலையை, பெண் ஆராதனையை எவ்விதக் கூச்சமுமின்றி, பாசாங்கின்றி வரிகளில் கொண்டு வந்திருப்பது கிருபா தான். பலரது சாயல்களை இவரது கவிதைகளிலிருந்து அடையாளம் காணமுடியும். யூமா வாசுகி, கலாப்ரியா, வண்ணதாசன், தேவதேவன் மற்றும் மனுஷ்யபுத்திரன். ‘கன்னி’ நாவலில் சந்தனபாண்டி சொல்வதாக சில வரிகள் இருக்கிறது. ‘இங்கே கையால் தோண்டினாலே ஊற்று பெருகி வரும்போது, எதற்கு கட்டாந்தரையில் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்?’ உண்மைதான். கிருபாவிடம் மொழி ஊற்றாய்ப் பெருகி வழிகிறது. பொதுவாய் கவிதையில் மொழிச் சிக்கனம் அவசியம். ஆனால், காதல் கவிதைகள் விதி விலக்கு. சொல்லச் சொல்லத்தான் இன்பம். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் காதலின் பூப்போல மலரும் பருவத்தையொட்டியவை இந்தக் கவிதைகள். அந்தக் காலகட்டத்தைத் தாண்டியதும் அந்த ஊற்றும் அணைய வாய்ப்பிருக்கிறது. இந்தத் தொகுப்பில் 270வது பக்கத்திற்குப் பிறகு உள்ள கவிதைகள் வாசிப்பதற்கு சிரமத்தைக் கொடுக்கின்றன. காதல் தோல்வி, விரக்தி, சுயபச்சாதாபம் போன்ற உணர்வுகள் மையமாக இருக்கின்றன. மிகையுணர்ச்சியோடு இவை வெளிப்படுகையில் பகட்டான அர்த்தமற்ற வெற்று வரிகளாக நின்று விடுகின்றன. மிகையுணர்ச்சிக் கவிதைகளின் இயல்பான குறையாக இதைச் சொல்லலாம்.

‘கன்னி’ நாவலைப் போலவே இந்தத் தொகுப்பெங்கும் கடல் அலையடித்தபடி இருக்கிறது. சிறகு வைத்த பறக்காத தேவதைகள், மின்னல், மின்மினிகள், நதி, புல் இவை அதிகம் வருகின்றன. கிருபாவின் கவிதைகளில் காட்சிப்புலம் (visual) சார்ந்த கவித்துவப் பார்வை அதிகம் வெளிப்படுவதைக் காண முடிகிறது.

“என்றெல்லாம்

பயம் பயமாய் இருக்கிறது.

இம்மெழுகுவர்த்தியின்

உச்சியிலேறி வெளிச்சத்தை

திரியில் கட்டும் சுடர்

பதறி இடறும்போதெல்லாம்

தடுமாறித்

தரையில் விழுமோ

என்றெல்லாம்

பயம் பயமாய் இருக்கிறது…”

காற்றுக்குச் சுடர் அசையும் வேகத்திற்கு மெழுகுவர்த்தி கீழே விழுந்துவிடுமோ (அல்லது சுடர்?) என்ற பயம் பற்றிச் சொல்லும் இந்தக் கவிதை வரிகளில் ஒரு குழந்தையின் கண்கள் வெளிப்படுகின்றன.

அகத்தோடு பொருந்தாமல் மொழி வீச்சை மட்டும் கொண்ட கவிதைகளும் நிறையவே இருக்கின்றன. மிகையுணர்ச்சி வடிவத்தில் உள்ள ஆபத்தும் இதுதான். உதாரணத்திற்கு,

“வெளி நதியில்

சிறகின் துடுப்பிசைத்து

எதிர்வரும் வண்டை

நான்

கண்டுகொண்டிருப்பது

எந்தப் பூவின் கனவோ”

கீழேயுள்ள கவிதையை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“பகலில் எரியும்

மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து

சுருள் சுருளாய் விரிகிறது

இருள்.”

இதில் ஒரு படிமம் இருக்கிறது. பகலில் எங்கே மெழுகுவர்த்தி எரியும்? கோவில் அல்லது பிரார்த்தனைக் கூடம். கருத்த திரி ஒளியை அல்ல, மேலே சுருள் சுருளாய் இருளைப் புகைந்து பரப்புகிறது என்பதில் காட்சியுடன் ஒன்றிய மனநிலை, கவித்துவம் அழகாக வெளிப்படுகிறது. முதலில் உள்ளதில் இப்படியான ஒன்றுதல் இல்லாமல் மொழி மிகைபுனைவுடன் (fantasy) உள்ளது. இங்கே இன்னொரு கவிதையை ஒப்பிட்டு நோக்குவது தகும்.

“தெளிந்த குவளையும்

சிதைந்த உடலுமாய்

நிழலில் அமர்ந்து

யாசிக்கும் கிழவனை

பணயம் வைத்து

கைச் சீட்டுகளாய்

பழுத்த இலைகளை இறக்கி

பகலைச் சூதாடிக் கழிக்கின்றன

பூவரச மரங்கள்”

மனதை நிறுத்தச் செய்யும் ஒரு படிமத்திலிருந்து இந்தக் கவிதை சொல்லப்படுகிறது. ஒருவித புகைப்படக் கவிதை என்று சொல்லலாம். இந்த மூன்று கவிதைகளுக்கும் முக்கியமான ஒற்றுமை காட்சிப்புலன். அதிலிருந்து படிமத்திற்குத் தாவுகிறது. புறக்காட்சி அகத்தில் பதியும் விதம், அது ஏற்படுத்தும் மயக்கம், புறக்காட்சிகளை உள்வாங்கும்போதே தன்னனுபவம் அதனோடு இணைகையில் உருவெடுக்கும் மொழி இங்கு கவிதையாகிறது. முதலாவது fantasy வகை. அதில் ரொமாண்டிசிசமும், அலங்கார வார்த்தைகள் மட்டுமே இருக்கிறது. (பூ காணும் கனவு). இரண்டாவதில் பகல்நேர வெளிச்சத்தில் எரியும் மெழுகுவர்த்தி இருளை அவிழ்ப்பதைச் சொல்கிறது. இது ஒரு படிமம். எரியும் மெழுகுவர்த்தியிலிருந்து பகலைவிட வெளிச்சம் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அதன் உச்சியில் சுடருக்கு மேல் கருத்து நெளியும் புகை இந்தக் காட்சி மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கே காட்சிப்புலம், படிமம், பிரக்ஞை இயைந்திருக்கிறது. மூன்றாவதில், கிழவனைப் பணையம் வைத்து சூதாடிக் கழிக்கும் பூவரசமரம் என்ற படிமம் வருகிறது. மரத்தடியில் பிச்சைக்காரக் கிழவன் அமர்ந்திருக்கிறான். பூவரசமரம் இலைகளையுதிர்க்கிறது. இந்தக் காட்சியிலிருந்து கவிஞர் உருவகப்படுத்தியிருப்பது இந்தப் படிமம். இதில் முதல் கவிதையின் மிகைபுனைவு (பூவரசமரம் சீட்டாடுவது), படிமம் மற்றும் பிரக்ஞை கச்சிதமாக அமைந்திருக்கிறது.

“நேர்மையற்ற வீடுகள்…” எனத் தொடங்கும் கவிதை நேர்மையின்மை பற்றிப் பேசுகிறது. அதைவிட நேர்மையாய் இருக்க முடியாமல் ஏற்படும் ஊடாட்டத்தையும், உளைச்சலையும் வந்திருக்கும் விருந்தினருடன் மனம்விட்டுப் பேச இயலாத தன்மையையும் சொல்கிறது. மற்ற கவிதைகளிலிருந்து இது தனித்துத் தெரிகிறது. மிகையுணர்ச்சியின் அதிபுனைவு ஏதுமின்றி அழகியல் கூறுகளுடன் கட்டமைக்கப்பட்ட இவரது சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

“தேவமாதா திருநாள்” எனத் துவங்கும் கவிதை தூரத்து ஊர் மதினிமார்களின் சீண்டல்களை விவரிக்கிறது. சரடாகத் தொடரும் காமம், விழாக்கால இரைச்சலில் பொருந்தாது வெடிக்கும் பலூனோடு ஒப்பிடப்பட்டு முடிகிறது. அதேவேளையில் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் பதிவுசெய்யும் குறிப்பிடத்தகுந்த கவிதை. காமத்தைப் பேசும் இன்னொரு கவிதை ‘மிகப் பொதுவான திசையிலிருந்து’ எனத் தொடங்கும் ஒன்று. இந்தக் கவிதையில் “மற்றொரு துளி சற்றுமுன்னே முளைத்தது/ குனிந்து எடுத்திருந்தால் பறவையாகும் வரமிருந்தது” என்றவரி கவிதையை வேறொரு தளத்துக்கு நகர்த்துகிறது. இந்தக் கவிதையை பேருந்தில் ஒரு பெண்ணைச் சீண்டுவதாக எடுத்தும் வாசிக்க முடியும்.

சொற்பிரயோகங்கள் ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் மிகப்பெரிய பலம். ‘இறுதியாக’ என்று சொல்வதற்குப் பதில் ‘அடுத்த கட்டமில்லாத ஒரு கட்டத்தில்’ என்கிறார். மேலும் சில,

“முலைக் காம்புகளால் நீர்மட்டம் அளந்த நதி”

“சற்றே நீளமான கையெழுத்தைத்தான் கால்களால்

இட்டபடி திரிகிறான்”

“மிதக்கப் பயிலும் விழிகள்”

“மரித்தவனின் விழிச்சாயலோடு

திறந்திருக்கும் இம் மரக்கதவுகளை”

“அடுத்த வரிக்காகத் தலைகீழாய்த் தொங்கும் மௌனம்”

நம்முடைய வெறுமையைத்தான் அடுத்தவரை இட்டு நிரப்பிக் கொள்கிறோம். அது ஒருவகைத் தனிமை. காமம் துய்க்கையில் மனமழிந்து வெறுமையைக் கடந்து போகும் நிலை வெகுவிரைவிலேயெ கரைபிரியும் அலையாக நீங்கிவிடுகிறது. கடல் மட்டுமல்ல, கரையும் தனிமையை அடைகிறது. நடுக்கடலில் தோணியிலிருந்து துணையைத் தள்ளிவிட்டு தனித்திருக்கும் தனிமை.

“சதுர முடிச்சுக்குள் சிக்கியிருந்த

மௌன வயலின்

முற்றிய கதிர்கள் வரவேற்று

ஸ்பரிச மொழியில் உரக்க

பேசத் துவங்கியதுன் தனிமையை

வாய்க்காலில் சலசலப்பு ஓங்கியிருந்த

குருதியின் ஓட்டம்

முறையீட்டின் வசீகரத்தில்

கெட்டிதட்டி ஸ்தம்பித்தது

ரகசியத்தின் ராட்சசப் புலன்கள்

ஊதிப்பெருக்கிய ஊழிக்காற்று

பெருமூச்சாய் சீறியடிக்க

சதுர முடிச்சிட்டிருந்த வரப்புகள்

அசுரகதியில் சுவர்களாய் எழும்பி

மீண்டது படுக்கையறை

நீ நிறுத்த மறந்துபோன

மின்விசிறியோடு

ஊர்வலத்தில் புகுந்து

கலவரம் கழற்றி எறிந்த காலணிகளாய்

எங்கும் சிதறிக் கிடந்தன

மோகத் தானிய மணிகள்

எலும்புச் சுள்ளிகள் நொறுங்க

நெஞ்சுக்கூட்டிலிருந்து எம்பிய பறவை

தின்று கிறங்கியது தாவித் தாவி

கசங்கிய படுக்கை விரிப்பின் மடிப்புக்குள்

பதுங்கியிருந்தவைகளையும் தேடிப்பிடித்து

உண்ட கணத்திலேயே செரித்தது

எஞ்சியிருந்த இன்னும் சில மணிகளுக்காக

தாவி வந்து நிலைக்கண்ணாடியை

நெருங்கி அலகு விரிக்க

திடீரென்று

உளவு பார்க்கத் துவங்கிற்று

அறையின் மற்றொரு தனிமை.”

உலகில் இரண்டே இரண்டு நாணயங்கள் மட்டுமிருந்தால் எப்படி இருக்கும்? ஒன்றில் விறைத்த ஆண்குறி. இன்னொன்றில் பிளந்த பெண்குறி. நிறைய ஆண்குறி நாணயங்களை பண்டமாற்றில் சேர்க்கும் பெண் விரும்பத்தக்கவள். அவ்வாறே ஆணுக்கும். ‘பல்கிப் பெருகுக’ என்ற கடவுளுக்கும் இது உவப்பானதாகத்தான் இருக்கக்கூடும். இடையில் எதற்கு தேவையற்ற மற்ற நாணயங்கள்? மனமெங்கும் பற்றியெரியும் காமநெருப்பை, அந்நெருப்பை வளர்க்க சுள்ளிகளைத் தேடுவதுபோல பார்வையில் பரவும் பெண்ணின் அங்கங்களைத் தேடி எரியவிட்டு, வெறுங்கையுடன் திரும்பும் அவலத்தை இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறது.

“பூவா தலையா

போட்டு விளையாடவும் விடாமல்

சுண்டும்போதெல்லாம்

விதியின் நாணத்தில்

குப்புற விழுகிறது

வேண்டிய சின்னம்

மதர்த்த பெண்களோ

திட்டமிட்டே தெருவில் நடக்கிறார்கள்

பின்புறம் குலுக்கி

துரத்தித் துரத்தி தானமிட்டு

தாறுமாறாய்க் கழியும் அந்திகள்

காண்பதற்கும் காணப்படுவதற்குமான

இடைவெளி

துரத்துவதற்கும் துரத்தப்படுவதற்குமிடையே

மிகக் குறைகையில்

வந்தே விடுகிறது அவர்கள் வீடு

கடைசியாய் எஞ்சிய

இரண்டே இரண்டு முலைகளையும்

தானமிட்டு

அறைந்து சாற்றுகிறார்கள் கதவுகளை

மேலும் திசைகள் தீர்மானிக்கப்பட்டு

வழிச்செலவுக்கு

கையில் திணிக்கப்படுகின்றன நாணயங்கள்

மிக நேர்த்தியாக

ஒவ்வொன்றிலும் பொறிக்கப்பட்டுள்ளன

விறைத்த ஆண்குறியும்

மறுபக்கம்

பிளந்த பெண்குறியும்.”

கிருபாவின் கவிதைகள் அனைத்திலும் காட்சி விவரணை அற்புதமாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு பத்தியும் ஒரு shot. கீழேயுள்ள கவிதை புணர்ச்சியை விவரிக்கிறது. அதே நேரத்தில் முதல் வரியிலிருந்தே ஓங்கி ஒலிக்கும் ஒப்பாரியையும் கேட்க முடிகிறது. புணர்ச்சி முடிந்து ஓயும் நேரம், அழுகை வெறித்துத் தெளிவது போல் சிறப்பாக வெளிப்படுகிறது. இந்தக் கவிதையை வெட்டவெளியில் இயற்கையைக் காட்சி தரும் மன மயக்கமாகவும் வாசிக்க முடியும்.

“தாயின் மண்டை ஓடு

காலடியில் நொறுங்க நடந்து

புதைத்திருந்த தந்தையின் கொம்பில் இடறி

குப்புற விழுந்து எழுகிறது

காயடி தப்பிய காளை

திரேகமெங்கும் அருகம்புல்லை

பச்சை குத்தி அழகேற்றிய

பாலைவனத் தேவதையின் கடைவாயில்

ஏளனத்துடன் சுழன்றெழுகிறது

மணற்புன்னகை

எழுந்த புழுதித் திரை

விண்ணைமுட்டி இரண்டாய்க்

கிழிந்து சரிய

துவங்குகிறது அடுத்த காட்சி

அடிவயிற்றுப் பேரழகைத் துண்டாடாமல்

நடுவாகச் செல்லும்

ஒற்றையடி ரோமப் பாதை நெடுக

மெல் அரும்புகளின் அடத்தியான

வரவேற்பு

மசியத் திமிறும் தசைகளின் நடுவே

அசையத் தயங்கும் விழிகளின் நிலைப்பு

புலன்கள் கூடும் காந்தத் திடலில்

பொன்னிழைகளால் உயிரிசைக் குறிப்புகளை

அலைந்தெழுதி வாத்தியமுமாகும் மேகங்கள்

மீட்டலின் லயிப்பில்

நெளிந்தாடும் தந்திகள்

அறுந்து விழுகிறது தளர்ந்த காற்றில்

பிரபஞ்சத்தின் ஓரவஞ்ச தர்க்கத்தை

பாத்திரமேற்று நிகழ்த்திய மழை

ஓய்ந்து தெளிகிறது வானம்

ஈரநிலக் காட்சியின்

அடுத்த கட்டத்தை எதிர்நோக்கி

உயரே ஒரு

உலர்ந்த முழு நிலா”

நால்வகை யோகங்களில் பக்தி யோகமும் ஒன்று. ஒவ்வொரு யோகமும் வெவ்வேறு வாழ்க்கை நெறிகளைப் போதித்தாலும் பக்தி யோகம் எளியோருக்கும் பின்பற்ற எளிதானது. இராதை கண்ணன் மீது கொண்ட இலயிப்பைப் போல காதலினால் இறைவனையடைந்த கதைகள் நம்மிடம் உண்டு. இராமகிருஷ்ண பரமஹம்சர் ஏழுவித ஞான நிலைகளை முயற்சித்து வெற்றி கண்டவராகச் சொல்லப்படுகிறார். இராதையாகப் பாவனை செய்து கண்ணனை வழிபட்டு வருகையில் அவர் உடலமைப்பு மாறி முலைகள் முளைத்து பெண்ணாகவே மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சங்கப்பாடல்களில் பெரும்பாலானவை அகத்திணையைப் பாடுபவையே. எத்தனையோ பெருங்கவிஞர்கள் எழுதிக் கொண்டாடியது காதல். பிற கவிஞர்கள் வார்த்தைகளுக்காகத் தட்டழிகையில், காதலைப் பாடும் கவிஞருக்கு அருவியாகக் கொட்டித் தீர்க்கிறது. அற்புதமான வரிகளை மிகச்சிறந்த வரிகளைக்கூட சாதாரணமாய் தாண்டிச் செல்கிறார்கள் அவர்கள். கொட்டும் அருவியில் எந்தத் துளியை தனித்துப் பார்ப்பது?

“எண்ணும் எழுத்தும் குறிப்புகளாகப்

பொறிக்கப்படாத வானொலிப் பெட்டியின்

கண்ணாடித் திரைக்குள்

உன்னைத் தேடியலைந்த நரம்பின்

பெண்டுல யாத்திரை முடிந்துவிட்டது

எனக்கென்று செய்தியோ பாடலோ

மெல்லிசைக் கசிவோ

பொருத்திருக்கச் சொல்லும் நீண்ட ஊளையோ

இல்லையென்பது உறுதியாகிவிட்டது

எனினும்

நிமிட வட்டத்துக்குள் சுழலும்

ராட்சச சக்கரத்தின் எல்லாப் பற்களிலும்

புன்னகையைத் தீட்ட முனைந்து

இரண்டாக முறிந்துகிடக்கும் தூரிகையை

ஏனோ அப்புறப்படுத்தத் தோன்றவில்லை

மெல்ல அணி வகுத்து

ஊர்ந்துவரும் சொற்கள் எறும்புகளாக

தூரிகையின் உதடுகளைச் சூழ்ந்து மொய்ப்பதாய்

விரிந்து நிற்கும் இக்காட்சியின்

மனசாட்சியாய் இருந்துகொண்டிருக்கிறேன்

ஏதேனும் மிச்சமிருக்கலாம்

வண்ணங்களும் வார்த்தைகளுமாக

திறந்திருக்கும் இச்சன்னல் சதுரத்திற்கு

வெளியே தார்ச்சாலையில் நீர்ப்புள்ளிகள்

இரைச்சலிட்டுத் தளர்த்து பெருகலாம்

எக்கணத்திலும் உன் குரலாக

ஏனெனில்

நமக்கிடையில் படர்ந்து நிற்பது

பால்வீதியின் கிரக இடைவெளியே

என்ற நம்பிக்கையோடுதான்

உன்னைத் தொட்டுணரத் துடித்த

விரலைத் துணித்துச் செலுத்தியிருக்கிறேன்

விண்கலமாக”

இந்தக் கவிதையில் கடைசி வரியைத் தவிர மீதியனைத்து அற்புதம். விண்ணில் பறக்கும் வரிகள் கவிதை முடிவடைகையில் தரைக்குத் திரும்புகின்றன. இப்படி நிறையக் கவிதைகளை 270ம் பக்கம்வரை சொல்லிக் கொண்டே செல்லலாம். அதற்குப் பிறகு தனிமை, காதல் தோல்வி, விரக்தி, சுயபச்சாதாபம். இவையே மாறிமாறி வரும்போது அலுப்பூட்டுகிறது. எனினும் காதலை இத்தனை தீவிரமாகக் கவிதைகளில் வெளிப்படுத்தியவர் ஜெ. பிரான்சிஸ் கிருபா அளவுக்கு யாருமில்லை.

மிகையுணர்ச்சிக் கவிஞர்கள் ஒருவகையில் இலக்கியத்துக்காக ‘நேர்ந்து’விட்டவர்கள். பொருளிணையாது சொல்லில்லை. பொருள் சிந்தனையாக, உணர்வுகளாக, மனோ நிலைகளாகவும், பொருளற்ற தன்மையை, பொருளை மீறிய தன்மையை சொற்படுத்தவும் கவிஞர்கள் விடாது தன்னுள்ளும் வெளி’யுள்ளும்’ உழல்கிறார்கள். பொதுவாகக் கவிஞர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள். இது அலைகளைப்போல அடித்துச் சென்று உச்சத்துக்கும் மடுவுக்கும் தத்தளிக்கச் செய்கிறது. மிகையுணர்ச்சிக் கவிஞர்கள் இதில் கண்ணைமூடிக் கொண்டு தன்னை ஒப்புக்கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் மொழியின் தேவதைகள்.