திங்கட்கிழமை காலைப் பொழுதுகளின் வழமையான சலிப்போடு மழிக்கும் கத்தியின் கூர்தீட்டலுக்கு இலக்கான சிறு பிம்பிள் மொட்டுடைப்பின் எரிச்சலும் சேர்ந்து கொண்டது. எவ்வளவு கவனத்துடன் செயல்பட்டாலும் சில தற்செயல்களின் கிடுக்குப்பிடிக்குள் சிக்காமல் தப்பிப்பது அத்தனை சுலபமாக இருப்பதில்லை. திங்களன்று பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு வெளியேறிய வெள்ளிக்கிழமையின் குமிக்கப்பட்ட அலுவலக வேலைகள் வேறு ஒவ்வொன்றாகக் கண் முன்னே வந்துபோயின. அது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது.

கண்ணாடியிலிருந்து கண்ணை நகர்த்தி சாப்பாட்டு மேசையைப் பார்த்தேன். மதிய உணவு கட்டி வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலிருந்த காபி மேக்கரில் புதிதாய் வடித்து வைக்கப்பட்டிருந்த காபி சொட்டுச் சொட்டாய் இறங்கிக் கொண்டிருந்தது. கயல் அலுவலகம் கிளம்பி விட்டிருக்கிறாள். அவளோடு நின்று நிதானித்துப் பேசி ஒரு வாரமாவது ஆகியிருக்கும் என்ற உண்மை உறைத்த போது ரேஸரின் கூர்மைக்கு ஒரு சொட்டு இரத்தத்தைக் கொடையளிக்க வேண்டியிருந்தது. ஒற்றியெடுக்கப்பட்ட ஓல்டு-ஸ்பைஸ், கன்னத் தோலின் நுண்துளைகள் வழியே உள்ளேற்றிய குளிர்ச்சி அந்தக் கணத்துக்கான ஆசுவாசத்தைக் கொடுத்தது. ஆனால் அதன் கடிய நெடி கயலுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. நான்கு நாட்கள் மழிக்காமல் விட்ட தாடியே அவளது விருப்பம்.

அவள் சமீபமாக நிறைய குழம்பிப் போயிருக்கிறாள். தேவையில்லாமல் போட்டு தன்னையே அலைக்கழித்துக் கொள்கிறாள். எத்தனை கலகலப்பாக இருந்தவள்! இப்போது மவுனத்தைத் தரித்து வந்து நிற்கிறாள். நானும்கூட இன்னும்கொஞ்சம் கவனமெடுத்து அவளுடைய பிரச்சனைகளுக்குக் காது கொடுத்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால், அவளுடைய கவலையெல்லாம் எத்தனை அபத்தமானது என்பது ஏன் அவளுக்குப் புரியமாட்டேன் என்கிறது?

திருமணமாகி புதிதாகக் குடிவந்த முதல் வாரத்தில்தான் எல்லாம் ஆரம்பமாகியது. வேளச்சேரியின் நூறடிச் சாலைக்குப் பக்கத்தில் புத்தம் புதிய வீடொன்று வாடகைக்குக் கிடைத்தது. தினமும் அவளின் அலுவலகப் பேருந்து வீட்டு வாசலில் வந்து ஏற்றிக்கொண்டு போகிறது. எனக்கும் இருபது நிமிட பயணத்தில் அலுவலகம். தட்டுமுட்டுச் சாமான்களிலிருந்து தங்கத் தாம்பாளம் வரை எல்லாம் கிடைக்கும் பெருநகர வீதி, சிறு நடையில் அடையும் தூரத்திலிருக்கிறது.

வீட்டுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை இரு வீட்டிலும் வந்து, இருந்து வாங்கிக் கொடுத்துவிட்டு, அடுத்த ஒரு வாரத்துக்குத் தேவையான தோசை மாவைக்கூட அரைத்து ஃப்ரிட்ஜில் ஏற்றிவிட்டே கிளம்பியிருந்தார்கள். விட்டுப்போன ஒரு சில பொருட்களை மட்டும் நாங்களே வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டம். அப்படித்தான் அன்று பிரட் டோஸ்டர் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தோம். தேடியது என்னவோ கூகிளில் தான். ஆனால் அடுத்த ஒரு வாரத்துக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று இணையத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் விதவிதமான பிரெட் டோஸ்டர்கள் தங்களை வாங்கிக் கொள்ளச் சொல்லி வரிசை கட்டி நின்றன.

அவற்றைப் பார்த்துவிட்டு நான்தான் கயல்விழியை அழைத்து, அதன்பின் இருக்கும் தொழில்நுட்பச் சூத்திரங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் சங்கமிக்கும் தகவல் பெருங்கடலில் அடிக்கும் அலையின், தெறிக்கும் சிறு துளியே என் வேலை.

அடுத்த நாள் ஒரு பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடையிலிருந்து அவளது அலைபேசி எண்ணுக்கு ப்ரெட் டோஸ்டர் பத்து சதவீதக் கழிவில் இருப்பதாகக் குறுஞ்செய்தி வந்தது. தன் முட்டைக் கண்கள் விரிய என்னிடத்தில் அதை எடுத்து வந்தவளுக்கு, என் மொபைலில் தேடிய அதே கம்பெனி டோஸ்டர் குறித்து எப்படி அவள் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது என்பது தாங்கவியலாத ஆச்சர்யத்தை அளித்தது.

எங்காவது பொருட்கள் வாங்கியவிடத்தில், மாலில் அல்லது இணையத்தில் எங்கேனும் ஒரு தளத்தில் என் மின்னஞ்சலும் அவளுடைய அலைபேசி எண்ணும் இணைக்கப்பட்டிருக்கக் கூடும். எனவே அப்படிச் சேகரிக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து எடுக்கப்படும் தகவல் என் மின்னஞ்சலோடு அவள் எண்ணையும் சேர்த்துத் தந்திருக்கும். இல்லாது போனால், கொட்டிக்கிடக்கும் தகவல்களில் என்னுடைய மனைவி யார் என்பதைத் தேடித் துழாவி அவளுக்கென்றே பிரத்யேகமாக அந்தக் குறுஞ்செய்தியை அனுப்புவதுதொன்றும் அசாத்திய காரியமில்லை என்பதை அவளிடம் விளக்கிக் கூறினேன்.

அதன்பின் அவளுக்கு இணையத்தில் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் படிப்படியாகக் குறைந்து மெள்ள மெள்ள முற்றிலுமாக அதை வெறுக்கும் ஒரு நிலையை அடைந்திருந்தாள். எனக்கு அதிலொன்றும் பெரிய பாதகமிருக்கவில்லை. நாலெட்டில் கடைத்தெரு இருக்கும்போது இணையத்தில் வாங்கியே ஆக வேண்டிய அவசியமென்ன இருக்கிறது? அதனால் அதன்பின் வீட்டுக்குத் தேவையாயிருந்த டீப்பாய், பீன்-பேக், சுவரில் மாட்டி வைத்துக் கொள்ளும்படி மரத்தில் செய்யப்பட்ட பூஜை அலமாரி, சுவர் வண்ணத்துக்குப் பொருத்தமான திரைச்சீலைகள், இன்னும் சில அலங்காரப் பொருட்கள் என அத்தனையையும் அருகிலிருந்த நூறடிச் சாலையிலேயே வாங்கினோம். ஒரேடியாக வாங்காமல் இப்படியாகத் தேவையை அனுசரித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தோம்.

விருந்துக்கு அழைத்திருந்த நண்பர்கள் வீட்டில் பார்த்த காபி மேக்கர் எங்களிருவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. ஒரு நவீன மாடல் அழகியைப் போலிருந்த அதன் வடிவமைப்பைச் செய்தவன் நிச்சயமொரு கலைஞனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அங்கு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதை அவர்கள் ஒரு பிரபல இணையதளத்திலேயே வாங்கியிருந்தார்கள். பொதுவாக அந்த குறிப்பிட்ட பிரான்ட் காபி மேக்கர்கள்  வெளிக் கடைகளில் கிடைப்பதில்லை. எனவே, இணையத்தில் வாங்கிவிடுவதே நல்லது என்றனர். அதன்பின் வீடு வந்து சேரும் வரையிலும் அந்தக் காபி மேக்கரை வாங்குவது குறித்து கயல்விழி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

இரவுணவை முடித்துவிட்டு ஆறமரப் பேசிக்கொண்டிருந்த மறுநாள் நான்தான் அதைப் பற்றி ஆரம்பித்தேன்.

“கயல், நாம ஏன் அந்தக் காபி மேக்கரை அவங்க சொன்ன இடத்திலேயே ஆர்டர் போடக்கூடாது?”

அதைப் பிடிக்காத மாதிரியான பாவனையை முகத்தில் இருத்திக் கொண்டு, “இல்ல.. வேண்டாம் பிரதீப்” என்றாள்.

“அதான் ஏன்னு கேக்கிறேன்?”

“இல்ல.. என்னதான் இருந்தாலும் நேர்ல கண்ணால பார்த்துப் பார்த்து வாங்கிறமாதிரி இருக்காதில்ல”

“பொய் சொல்ற நீ”

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?”

“உனக்கு பயம். நெட்ல எல்லா விசயத்தையும் நமக்குத் தெரியாம எடுத்துடுவாங்க. இல்ல யாராவது நம்மகிட்டயிருந்து திருடிடுவாங்க அப்படினெல்லாம் தேவையில்லாம பயப்படுற நீ” – உண்மையில் அதையும் மீறிய அதீத பயத்தால் அவள் பீடிக்கப்பட்டிருந்தாள்.

“அதான் தெரியுதில்ல. எனக்குப் பிடிக்கல. பயம்ன்னு. அப்புறமும் ஏன் அதே காபி மேக்கரையே வாங்கணும்ன்னு அடம்பிடிச்சுட்டு இருக்கிற?”

அதில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிய சண்டைக்கு டி.வி ரிமோட்டை இரை கொடுத்துவிட்டு ஆளுக்கு ஒருபக்கம் திரும்பிப் படுத்து தூங்கிப் போனோம்.

மறுநாள் காலையில் என்னை அதிரதிர எழுப்பியவளின் முகம் பயத்தில் வெளிறியிருந்தது. எங்கே எந்த நேரத்திலும் வெளியே வந்து விழுந்து விடுமோ என்றிருந்த அவள் கண்களைத் தாங்கிப் பிடிக்க அன்னிச்சையாக என் கைகள் அவள் முன்னால் நீண்டன. அவள் தன் கையிலிருந்த மொபைலை எடுத்து என் கண் முன்னே நீட்டினாள். அதன் வெளிச்சத்தில் கூசிய கண்களை ஒருமுறை அழுந்தத் துடைத்து விட்டுப் பார்த்தேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்த அதே காபி மேக்கர் பற்றிய விளம்பரம் அவள் காட்டிய மொபைல் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் எங்கு வாங்க வேண்டும் என்று சொன்னேனோ அதே தளத்தின் முத்திரையோடு.

குளிப்பதற்காகக் கொண்டை முடிந்து வந்து நின்றவளை கையைப் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்தினேன். இது வெறும் தற்செயல்தான் என்று சமாதானப்படுத்தினேன். அவள் அதை நம்பவில்லை. நான் அதன்பின் அந்தக் காபி மேக்கர் குறித்து இணையத்தில் அதற்கு முன்போ பின்போ எப்போதாவது தேடியிருந்தேனா என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தாள். இருபது முறைக்கும் மேல் கேட்டிருப்பாள். அத்தனை முறையும் பொறுமையாக இல்லை என்பதையே பதிலாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், அவள் சமாதானம் ஆனதாய்த் தெரியவில்லை.

அவளின் மொபலை வாங்கி, அந்த விளம்பரம் வந்த செயலியை அதிலிருந்து நீக்கினேன். திரும்ப பிளே-ஸ்டோரில் போய் அதைத் தரவிறக்கினேன். பின்பு, அதனை உயிர்ப்பிக்கும்போது காட்டிய நிபந்தனைகளை ஒவ்வொன்றாக அவளிடம் வாசித்துக் காட்டினேன். அது, அந்த மொபைலின் ‘மைக்ரோஃபோன்’ வசதியையும் பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியையும் கோரியது. அதன் வழியாக நாம் பேசும் எதையும் பதிவு செய்து கொள்ளும், பின் அதையே சில நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற் போல விளம்பரங்களை வெளியிட்டிருக்கும் என்பதைப் பொறுமையாக எடுத்துக் கூறினேன்.

அடுத்த நாள் அந்தக் காபி மேக்கரை மொபைலில் ஆர்டர் செய்தாள். ஆர்டர் போட்ட நாளிலிருந்து அந்த விளம்பரம் வந்த செயலியை நொடிக்கொரு தரம் எடுப்பதும் திறப்பதும் எதையோ தேடுவதுமாக இருந்தாள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தும் அதைப் பற்றி அவளிடம் ஒரு வார்த்தையும் கேட்டுக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அவளே என்னிடம் வந்து, “பிரதீப்.. நான் ஆர்டர் போட்ட அடுத்த நாள்ல இருந்து அந்த விளம்பரம் வர்றதேயில்லை. நல்லா செக் பண்ணிட்டேன்ப்பா” என்றாள்.

நான் பதிலேதும் கூறாமல் மையமாகப் புன்னகைத்தேன்.

“அப்போ நான் என்ன வாங்கணும் அதையும் எங்க வாங்கணும்ன்னு கூட எவனோ ஒருத்தன் தான் முடிவு பண்றான் இல்ல?“ என்று கேட்டவளின் குரலிலிருந்த நடுக்கத்தை பென்டுலமாக மாறி மாறி ஆடிய அவளின் கண்பாவைகளும் எதிரொளித்தன.

அவளால் ஒரு சின்ன மொபைல் வழியே இத்தனை பெரிய வலைப்பின்னல் சாத்தியம் என்பதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அன்றிலிருந்து அடுத்தடுத்த நாட்கள் அந்தச் செயலியை உயிர்பித்து விட்டு வேண்டுமென்றே ஏதேனுமொரு சந்தைப் பொருளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள்.

அதன் பின்பு, ஏதாவது முக்கியமான விசயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது, எங்கள் இருவரது மொபைலையும் எடுத்து பக்கத்து அறையில் கொண்டுபோய் வைத்து விட்டு வர ஆரம்பித்தாள். ஒருமுறை அதிகாலைப் புணர்வின் போது பாதியில் துள்ளியெழுந்தவள், படுக்கைக்கு அருகிலிருந்த மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மொபைல்களையும் அள்ளியெடுத்து அறைக்கு வெளியே வீசியெறிந்தாள்.

வாட்ஸ்-அப் போன்ற செயலிகள் இல்லாமல் அவளைத் தொடர்பு கொள்வது கடினமாக இருக்கிறது என்று எத்தனையோ முறை சொல்லியும் கேட்காமல் ஸ்மார்ட் போனிலிருந்து சாதாரண மொபைலுக்கு மாறினாள். அது தனக்கு அளப்பறிய சுதந்திரத்தைக் கையளித்திருக்கிறது என்று மகிழ்ச்சியாகத் திரிந்தாள். எல்லாம் ஒரு வாரத்துக்கு மட்டுமே.

அடுத்து வந்த நாட்களில் என்னுடைய மொபைல் அவளுக்கு மிக அதிக தொந்தரவை அளித்தது. என்னுடைய மொபைலை எடுத்து ஒவ்வொன்றாக நோண்ட ஆரம்பித்தாள். என்னுடைய அலுவல் சம்பந்தமாக பல செயலிகள் அதில் இருக்கிறதென்பது அவளுக்கும் தெரியுமென்பதால் அவளால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒருநாள் என் கனவில் தலைவிரி கோலத்தில் ஒரு பெண் சுவரை முட்டி முட்டி அழுது கொண்டிருந்தாள். அவளின் தலையிலிருந்து பீச்சிய இரத்தம் நெற்றியின் வழி வடிந்து, அந்தச் சுவர் முழுவதையும் நனைத்து, தரையிலும் பற்றிப் படர்ந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அடர்ந்த துயரத்தைத் தாங்கியிருந்த அந்தக் குரல் அவ்விரவின் அமைதியைக் குலைத்து என்னை என்னவோ செய்தது. அது என் பாட்டியின் குரல். என் அம்மாவின் குரல். கயல்விழியின் குரல். அதற்கு மேலும் அதைத் தாங்க முடியாமல் தூக்கத்திலிருந்து பயந்து எழுந்தேன். உண்மையிலேயே, தன் முட்டியைக் குவித்து வைத்து, அதில் முகம் புதைத்து கயல்விழி தான் கதறி அழுது கொண்டிருந்தாள்.

எத்தனை முயன்றும் அவளை ஆற்றுப்படுத்தவே முடியவில்லை. கண்ணீர் வற்றாமல் வந்து கொண்டேயிருந்தது. சிறுபிள்ளையைப் போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். என்னால் சகிக்கவே முடியாத அழுகைச் சத்தம். பல மணி நேரச் சமாதானப்படுத்தலுக்குப் பிறகு அவள் இயல்பு நிலைக்கு வந்து என் மடியிலேயே படுத்துத் தூங்கிப் போனாள்.

வழக்கம் போல தூக்கம் பிடிக்காமல் எனது மொபைலை எடுத்து நோண்டிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது என் மொபைல் திரையில் பளிச்சிட்ட விளம்பரமே அவளை இத்தனை அழுகைக்கு உட்படுத்தியிருந்திருக்கிறது. அடையாரில் இருக்கும் ஒரு பிரபல மனநல மருத்துவர் பற்றிய விளம்பரம் அது.

அதற்கு முந்தைய இரண்டு நாட்களாகத் தான் மனநல மருத்துவர் ஒருவரைப் போய் சந்திக்கலாமா என்று அவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறாள். இதைப் பற்றி யாரிடமும் அவள் பேசியிருக்கவில்லை. அது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விசயமும் இல்லை தானே? என்னிடம் கூட அதைப் பற்றி அவள் ஒரு வார்த்தையும் சொல்லியிருக்கவில்லை.

தான் மனதுக்குள் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த ஒரு விசயம் எப்படி என்னுடைய மொபைலில் வந்தது என்பதை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எது நிஜம் எது நிழல் என்பது குறித்து அவள் நிறைய குழம்பிப் போயிருந்தாள். ஒரு சமயம் எல்லாமே தனது கற்பனை என்றே நம்ப முயன்றிருக்கிறாள். அவளால் அந்த எல்லைக்கும் போக முடியவில்லை. இவை தந்த அழுத்தம் தாளாமல் தன்னையறியாமலேயே அப்படிக் கதறி அழுதிருக்கிறாள். இந்த விசயத்தில் நானே சற்றுக் குழம்பித் தான் போனேன். அதே நேரத்தில் தற்செயல்களின் ஆச்சரியங்களையும் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்பதையும் உணர்ந்தேயிருந்தேன்.

அவளை உண்மையிலேயே ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நான்கூட அந்த அளவுக்கு முதலில் யோசித்திருக்கவில்லை தான். ஆனால் அவளே அந்த முடிவுக்கு வந்திருக்கும் போது நல்லதொரு மருத்துவரைப் பார்த்துவிட்டு வருவதில் தவறென்ன இருக்கிறது?

இதையெல்லாம் ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டே குளித்து விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் அதைக் கவனித்தேன். மேசையில் முன்பு பார்த்த சாப்பாட்டுக் கேரியரைக் காணவில்லை. சேவிங் செய்து கொண்டிருக்கும் போது பார்த்த அதே கேரியரை இப்போது காணவில்லை. காபி மேக்கரும் சுத்தமாக துடைத்து வைதாற் போல இருந்தது. கயல்விழி கதவைப் பூட்டி வெளியே சென்று விட்டாள். என்னுடைய வீட்டுச் சாவி மட்டுமே சாவிகள் தொங்குமிடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவேளை நான் சேவிங் செய்யும் போது கேரியர் எதையும் பார்க்கவேயில்லையோ? அது பிரமையா? கயலுக்கு போன் அடித்து விசாரித்து விடலாம் என்று நினைத்து போனை எடுத்தேன்.

போனில் பாஸ்வேர்டைப் போட்டுத் திறந்த போது இரண்டு நோட்டிஃபிக்கேஷன்கள் வந்திருப்பது தெரிந்தது. நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லச் சொல்லி ஒன்று. மற்றொன்று திருமண பந்தங்களைத் தேடித் தரும் செயலியிலிருந்து வந்திருந்தது. என்னைப் பற்றிய விபரங்கள் பிடித்துப் போய் பெண்ணொருத்தி விருப்பம் தெரிவித்திருக்கிறாள். பெயர் கயல்விழி. நல்ல பெரிய முட்டைக்கண் அவளுக்கு.