பின் தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 3)

by மானசீகன்
0 comment

சாதிக் கலவரங்களை எம்ஜிஆர் × நம்பியார் கத்திச் சண்டையைப் போல் புரிந்து வைத்திருந்த எனக்கு அதன் கொடூரத்தை பத்து வயதிற்குள்ளாகவே உணர்கிற வாய்ப்பு வந்தது. 1989 ஆம் வருடம் நாங்கள் சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் இருந்தோம். மறவர்கள் அதிகமாகவும், இஸ்லாமியர்கள் குறைவாகவும் வாழும் பகுதி அது. கொஞ்சம் கூட வேறுபாடில்லாத நெருக்கமான உறவு மறவர்களோடு எங்களைப் போலவே அங்கிருந்த பல இஸ்லாமியக் குடும்பங்களுக்கும் வாய்த்திருந்தது.

சின்னமனூர் – தேனி நெடுஞ்சாலையில் முதல் நிறுத்தம் காந்தி சிலைதான். அங்குதான் ஐந்து பேருந்துகளை தீ வைத்து எரித்தார்கள். எரிப்பதற்கான முன் தயாரிப்புகளுடன் ஓடிய ஆட்களில் சிலர் எனக்குத் தெரிந்தவர்கள் தான். நான் யாரோ ஒரு உறவினருக்காக கையில் தூக்குச் சட்டியோடு டீ வாங்கப் போயிருந்தேன். ‘மாப்ள சீக்கிரம் வீட்டுக்குப் போடா’ என்று சில குரல்கள் எச்சரித்தன. மடமடவென்று கடைகள் அடைக்கப்பட்டன. நான் வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன். தாத்தாவோடு மாலை அந்த இடத்திற்குப் போய் பார்த்த போது வரலாற்றின் பக்கங்களிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்த ஐந்து எலும்புக் கூடுகள் அங்கே வரிசை கட்டி நிற்பதைப் போல் இருந்தது. என்னைப் போலவே காந்தியும் அதை பயத்தோடு பார்த்திருப்பார்.

அதற்கு முன்பாகவே வீட்டில் அதைப் பற்றி மாமா பேசிக் கொண்டிருப்பார். மாமாவுக்கும், மறவர் நண்பர்களே அதிகம். போடி மீனாட்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பிள்ளைமார்களுக்கும் , பள்ளர்களுக்கும் இடையே நிகழ்ந்த பிரச்சினை பின்னர் தேனி மாவட்டத்தில் பள்ளர் × பள்ளர் அல்லாத இடைச்சாதிகளின் மோதலாக உருமாறியது. கள்ளர்களும் மறவர்களும் சேர்ந்து கொண்டார்கள். அப்போது தான் முதன்முதலாக ‘ஜான் பாண்டியன்’ என்கிற பெயரைக் கேள்விப்பட்டேன். தேவர் சிலைக்கு செருப்பு மாலை போடுதல், ஆதிக்க சாதியினரை கடுமையான வார்த்தைகளால் சீண்டுதல், பெண்கள் குறித்த வசைகள் ஆகியவற்றை மாமா பாதிக்கப்பட்டவனின் கோபத்தோடு வீட்டில் சொல்லிக் கொண்டிருப்பார்.

கலவரம் தேனி மாவட்டமெங்கும் பரவியது. தேவாரம், கோட்டூர் ஆகிய இரு ஊர்களில் மட்டுமே பள்ளர்கள் அதிகம். ஆனால் மற்ற ஊர்களில் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். கலவரம் உச்சத்திலிருந்த தருணத்தில் அந்த வழியாக வந்த ஐஜி தேவாரத்தின் காரை கள்ளர்கள் மறிக்க துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இங்கே நிகழ்ந்த பஸ் எரிப்பு. அரசியல் அதிகாரத்திற்காக பல்வேறு பண்பாட்டு முரண்களைத் தாண்டி உருவாக்கப்பட்டிருந்த ‘முக்குலத்தோர் அடையாளம்’ இந்தக் கலவர தருணத்தில் மிகச்சரியாக வேலை செய்தது. வீட்டிலிருந்த பெண்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘உச்’ கொட்டினார்கள். தாத்தா வழக்கம் போல் மௌனமாகவே கேட்டுக் கொண்டார்.

அதன் தாக்கம் பள்ளியிலும் எதிரொலித்தது. நான் படித்த கருங்கட்டான் குளம் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் பெரும்பாலும் மறவர் மற்றும் முஸ்லிம் மாணவர்கள்தான். கலவரம் பல ஊர்களுக்கு பரவிக் கொண்டிருந்த தருணங்களில் என் வகுப்புத் தோழன் சுந்தரத்தமிழ் பாண்டி, ஜெயராஜ் என்பவனை காரணமே இல்லாமல் அடித்தான். ‘ஏன்டா ஒங்க ஜான்பாண்டியன் எங்க அம்மா, அக்காவ கைய புடிச்சு இழுக்கச் சொல்றானாம்ல’ என்று கேட்டுக் கொண்டேதான் அவன் மூக்கில் குத்தினான். உண்மையில் ஜெயராஜ்க்கு ‘ஜான்பாண்டியன்’ யாரென்றே தெரியவில்லை. நான் தடுக்கப் போனேன். ‘மாப்ள நம்மல்லாம் ஒரே ரத்தம்டா’ சுந்தரத் தமிழ்பாண்டி என்னை விலக்கி விட்டு அவனை மீண்டும் அடிக்க ஓடினான். சின்னத்தாவும், அக்கீமும் அதை ஆமோதித்தார்கள். விஷயம் தெரிந்து ஓடி வந்த சௌகத் அலி சார் சுந்தரத் தமிழ் பாண்டியை அடி நொறுக்கி விட்டார். ‘வலிக்குது சார்’, ‘விடுங்க சார்’ என்று நழுவியும், விலகியும் கூட பிரம்புகளால் விளாசப்பட்ட சுந்தரத் தமிழ்பாண்டி அவ்வளவு அடி வாங்கியும் அழவேயில்லை. ஜெயராஜ்தான் அழுது கொண்டேயிருந்தான். இடைவேளையில் நான் தோளைத் தொட்ட போது கையை தட்டிவிட்டுப் போய் விட்டான். மறுநாள் அவன் அம்மா அழுது கொண்டே வந்து ஹெச். எம். சுப்ரமணி சாரிடம் ஏதேதோ சொல்லி முறையிட்டார்கள். ஹெச்.எம். சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். சுந்தரத் தமிழ் பாண்டியை அவங்க அம்மா வந்து அடிக்கப் போவதாக நாங்கள் பயமுறுத்தினோம். அவன் உள்ளுக்குள் பயந்திருந்தாலும் வெரப்பாகவே இருந்தான். அதற்குப் பிறகு ஜெயராஜ் பள்ளிக்கு வரவில்லை.

பல ஊர்களில் பள்ளர்கள் தாங்களே தேடிப் போய் கள்ளர்கள், மறவர்கள், கவுண்டர்கள், நாயக்கர்கள் காலில் விழுந்து அடைக்கலம் கேட்ட கதைகளை மாமா பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்தக் கலவரத்தின் சிறு எதிரொலிகள் ராமநாதபுரத்திலும் திருநெல்வேலியிலும் கூட நிகழ்ந்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்தார். ஒருவர் பொன்.முத்துராமலிங்கம். இன்னொருவர் பெயர் நினைவில் இல்லை. ஆட்களை அனுப்பி வைத்ததில் கூட வெளிப்பட்ட கருணாநிதியின் சாமர்த்தியத்தை மாமா பாராட்டிப் பேசினார். வழக்கமாக ‘கலைஞர்’ என்கிற பெயரைக் கேட்டாலே உற்சாகமாகி விடுகிற தாத்தா அன்று அமைதியாகவே இருந்தார்.

அதற்குப் பிறகு தான் பள்ளர்களுக்கும் தேவர்களுக்கும் ஆகாது என்று புரிந்து கொண்டேன். நாங்கள் உத்தமபாளையம் வந்த பிறகு தான் சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து வந்த பிரமலைக் கள்ளர்களோடு அதிகம் பழக ஆரம்பித்தேன். எல்லாவற்றிலும் வெளிப்படையாய் இருக்கும் அந்த சமூகத்து மாணவர்களை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. குறிப்பாக இஸ்லாமியர்களின் மீதான அவர்களின் பிரியம் எனக்கு ஆச்சர்யமளித்தது. ஏனென்றால் 90-களில் ‘பாபரி மஸ்ஜித்’ விவகாரத்தின் சிறுபொறிகள் மாணவர்களிடமும் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. அணைப்பட்டியைச் சேர்ந்த செந்தில் ஒக்கலிக கவுண்டர். அவன் தன்னுடைய ஜாமின்ட்ரி பாக்ஸிலேயே ‘அயோத்தி செல்வோம்; ஆலயம் அமைப்போம்’ என்கிற ஸ்டிக்கரை ஒட்டியிருந்தான். இது தொடர்பான சிறு உரசல்கள் வந்த போதெல்லாம் பிரமலைக் கள்ளர் மாணவர்கள் என்னோடுதான் இருந்தார்கள். இடைவேளையில் பக்கத்தில் நின்று சிறுநீர் கழிக்கும் போது ‘மார்க்கல்யாணம் பண்ணியாச்சா’ என்று கேட்டு குஞ்சைப் பார்த்துக் கொள்வார்கள். ‘இவங்களும், நாங்களும் ஒன்னுடி’ என்று அதைப் பிறரிடம் சொல்லி பெருமையடித்துக் கொள்வார்கள் . இவ்வளவு இருந்தும் பள்ளர்கள் மீதான அவர்களின் வெறுப்பை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அங்கு படித்த பறையர் மாணவர்களிடம் அவர்கள் இப்படி நடந்து கொண்டதில்லை. நான் உட்பட யாருமே நெருங்கிப் பழகாத மணிகண்டன் என்கிற அருந்ததிய மாணவனிடம் (அதற்கு சாதி காரணம் இல்லை. மணிகண்டனின் மூக்கில் இருந்து எப்போதும் வெளியேறும் தீராத சளியின் துர்நாற்றமே காரணம்) சின்னச்சாமி என்கிற கள்ளர் சமூக மாணவன்தான் பரிவோடு நெருங்கிப் பழகுவான். ஆனால் அதே சின்னச்சாமியால் தேவாரத்தில் இருந்து வரும் கமலை சகித்துக் கொள்ள முடியாது. இத்தனைக்கும் கமல் பார்க்க அழகாக ஹீரோ மாதிரி இருப்பான். ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு கமலோடு வம்பிழுப்பான். கமலும் அப்படித்தான். அவன் சின்னச்சாமியை மட்டுமல்ல. சகல பிரமலைக்கள்ளர்களையும் வெறுத்தான். நேரடியாக அவர்களோடு மோதாவிட்டாலும் வார்த்தைகளில் வன்மம் தெறிக்கும்.

தொண்ணூறுகளுக்குப் பிறகு அவ்வப்போது சிலைகள் உடைக்கப்படுவது வாடிக்கையாயிருந்தது. அதே மாதிரி பல்வேறு தேவர் சிலைகள் புதிது புதிதாக பல இடங்களில் முளைக்க ஆரம்பித்திருந்தன. சிலைகள் உடைக்கப்படுகிற போதெல்லாம் அது இங்கும் பிரதிபலிக்கும். ‘அவுட்டா இல்லையா ?’, ‘அது ஃபோரா? சிக்ஸா?’, ‘யார் முதலில் எல்லைக் கோட்டைத் தொட்டது?’ போன்ற விளையாட்டின் பிரச்சினைகள் மைதானங்களில் வேறொன்றாகவும் உருமாறும். பெரும்பாலும் பள்ளர் மாணவர்கள் அடிவாங்குவார்கள். ஒருதடவை சின்னச்சாமி சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்த அம்பேத்கரின் படத்தை தனியாகக் கிழித்து செருப்பின் கீழே போட்டு தேய்த்தான். ‘இவனாலதான் சாதிச் சண்ட உருவாச்சு’ என்று சலித்துக் கொண்டான். அப்போது எனக்கு பெரியாரைத் தெரிந்த அளவு அம்பேத்கரைத் தெரியாது. ‘அரசியல் சட்டத்தை எழுதியவர்; அந்தக் காலத்துலயே ரொம்ப படிச்சவர்’ என்று மட்டுமே தெரியும். ஆனாலும் அவன் செய்தது சரியில்லை என்றே தோன்றியது. கமல் ஒருநாள் பைபாஸில் நிற்கிற தேவர் சிலையைக் காட்டி ‘சாதிச் சண்டைக்குக் காரணம் இந்தாளுதான்’ என்று கூறினான். ஆனால் அவன் அம்பேத்கரைப் புகழவில்லை. சின்னச்சாமி தேவரை பயங்கரமாய் புகழ்வான். ‘காமராஜர்லாம் கல்வியும் கொடுக்கல. மயிரும் கொடுக்கல. அவர் அவுஹாளுக்கு பாடுபட்டவர். அவ்வளவுதான். சரியான சாதி வெறியன். தேவரும் நேதாஜியும் தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவுங்க. காந்தியெல்லாம் சும்மா. வெள்ளைக்காரனுக்கு தேவரையும் நேதாஜியையும் புடிக்காததுனால ஹிஸ்ட்ரிய தப்பா எழுதிட்டானுவோ’ என்று சொல்லி விட்டு’ இதையெல்லாம் மேடைல பேசு மாப்ள’ என்று குறிப்பு வேறு தருவான். ஆனால் கமல் அம்பேத்கரை புகழ்ந்ததில்லை.

அவன் சொல்லித்தான் எனக்கு இமானுவேல் சேகரனைத் தெரியும். ‘சுதந்திரப் போராட்ட வீரர். மிலிட்டரிக்காரர். அவரைக் கொன்னுட்டாங்க. இந்தா…தேவர்தான் ஆள் வச்சு கொன்னுட்டார்’ என்று சிலையை நோக்கி கை நீட்டுவான். இமானுவேலை வெளிப்படையாக ஆதரிக்கும் அவன் ஜான் பாண்டியனை ரகசியமாய் ஆதரித்தான். தேவாரத்திற்கு ‘ஜான் பாண்டியன்’ வரும் போதெல்லாம் கூட்டத்திற்கு போய் விடுவானாம். ‘நீங்களும் எங்காளுகளா இருந்து மதம் மாறினவிங்கடா’ என்று ஒரு தடவை சொன்னான். பலதடவை சுந்தரத் தமிழ்பாண்டியும் , சின்னச்சாமியும் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் உடம்பு பூரிக்கும். ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு என்னைச் சூழ்ந்து கொள்ளும். அந்த நண்பர்களை மனம் இன்னும் நெருக்கமாய் உணரும். ஆனால் கமல் இப்படிச் சொன்ன போது அந்த உணர்வு தோன்றவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அப்படி இருந்திருக்கக் கூடாது என்றே நம்ப விரும்பினேன். இத்தனைக்கும் கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும். கமலின் டிபன் பாக்ஸில் கையை விட்டுச் சாப்பிடுவதிலோ, அவன் வீட்டுக்குப் போவதிலோ எப்போதும் எனக்கு பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருகைப் பதிவேட்டில் பெயருக்குப் பின்னால் எழுதப்பட்டிருக்கும் ‘SC’ என்ற சொல்லை வைத்து மாணவர்களுக்குள் உருவான பல்வேறு சொல்லாடல்கள் தான் என்னை அப்படிக் கருத வைத்திருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறேன்.

அதற்குப் பிறகு தேவர் மற்றும் அம்பேத்கர் சிலைகளை கடந்து போகிற போது சற்று வெறுப்புடனேயே அந்தச் சிலைகளைப் பார்க்கத் தொடங்கினேன். அந்த இருவர் குறித்தும் எதிர்த்தரப்பு உருவாக்கி வைத்திருந்த சித்திரமே எனக்குள் இருந்தது. ஆனால் அம்பேத்கரின் தோற்றம் அனைத்தையும் மீறி என்னைக் கவர்ந்திருந்தது. நான் படித்து முடித்த பிறகு என்ன ஆவேன் என்று யோசித்தால் அவர் முகமே நினைவிற்கு வரும். தேனியில் இருக்கிற சித்தி வீட்டிற்குப் போகும் போது வழியில் உள்ள கோட்டூரில் இமானுவேல் சேகரன் சிலையையும் பார்த்து விட்டேன். யார் சாதிக்கலவரங்களுக்குக் காரணம் என்கிற கேள்வியைக் கேட்டு மூன்று முகங்களையும் நினைவில் கொண்டு வருவேன். ஆனால் இப்படி நினைக்காத நிமிடங்களிலும் அம்பேத்கர் கையில் புத்தகத்தோடு என் கனவுகளில் வர ஆரம்பித்தார்.

– தொடரும்.