கைவிடப்படுகிற கூட்டத்தின் தொடர் கதைகள் (Christ Stopped at Eboli, 1979)

by எம்.கே.மணி
0 comment

ஒரு குழந்தை கையில் கிடைத்த புதிய விளையாட்டு சாதனத்தை வைத்துக் கொண்டு கிளர்ச்சியடைந்து உண்ணாமல் உறங்காமல் அதனுடன் கட்டிப் புரளுவது போல பெரியவர்களுக்கும் பல காரியங்கள் உண்டு. வளர்ந்தவர்கள் அப்படித்தான் தங்களுடைய கையில் கிட்டிய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் யுத்தங்களைத் தொடங்கினார்கள். விளைவுகள் பயங்கரமாக இருந்தன. அதை பொதுமைப்படுத்தி ஒதுக்கி தங்களுடைய அசட்டுப் பிடிவாதத்தை நியாயம் பண்ணிக் கொள்ள அரசியல் தேவைப்பட்டது. அதை சுவாரசியமான சூதாட்டமாக மாற்றியவுடன் மக்கள் துண்டுபட்டு மங்காத்தா ஆட உட்கார்ந்து விட்டார்கள். அது இப்போது நகர்த்த முடியாத கனத்துடன் வேர் பிடித்து நிலைத்துக் கொண்டு விட்டது. இந்த சூதாட்டம் தொடர்ந்தவாறிருக்க அதில் ஈடுபடுகிறவர்களாகவே இருந்தாலும் சாதாரண மக்களின் கழுத்து நெரிபடுவதாகிறது. படத்தில் முசோலினியின் காலம். விவசாயிகளின் ஆட்டுக்கும் மாட்டுக்கும் பன்றிக்கும் எல்லாம் வரி விதிக்கிறார்கள். கட்ட முடியாதவர்களின் விலங்குகளை பறிமுதல் செய்கிறார்கள்.

கார்லோ லெவி நாவல் எழுதியிருக்கிறார்.

அவர் தான் படத்தின் நாயகனும் கூட.

அவர் பிராக்டீசில் இருக்கிற பகுதி மருத்துவர். மற்றபடி அவர் ஓவியராக, எழுத்தாளராக இருப்பது இயல்பாகவே மக்களின் வாழ்வினை அவதானிக்கிற பொறுப்பில் இருக்க வைத்திருக்கும். மக்களின் மீது திணிக்கப்படுகிற போரை அவரைப் போன்றவர்களால் ஏற்றுக் கொண்டிருந்திருக்க முடியாது. அதன் எதிரொலிகள் எல்லா முனைகளிலும் நாட்டை சூறையாடுபவை. கார்லோ ஃபாஸிஸ்ட் அரசினால் நாடு கடத்தப்பட்டு லுசானியா என்கிற குன்றுகளின் ஊருக்கு வந்து சேரும் போது படம் துவங்குகிறது.

பொதுவாக இம்மாதிரிப் படங்களின் மீதுள்ள கிளர்ச்சியான எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யாது என்பதை முதலில் சொல்லி விட வேண்டும். இயக்குநர் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிற தொனியே வேறு. ஆழமும் அகலமுமான திரைக்கதை. பக்குவமான நிதானம். நமக்குள் சலனங்களை உண்டாக்கி முடிக்கிற அளவில் அந்த கிராமத்தின் அழகை சேகரித்துக் காட்டி அங்கு வாழ்கிற ஜனங்கள் அறிமுகமாகிறார்கள். பசியோடு இருக்கிற ஒரு நாய் பேருந்தில் பயணம் செய்கிற ஒரு பெண்மணியின் கையிலிருக்கிற கோழிகளைக் கவர்ந்து அதைத் தின்னப் பார்க்கிறது. அது ஒரு சிறிய சமிக்ஞை தான். அபத்தமான வெளிப்பாடுகளைத் தவிர்த்து படம் எழுந்து பரவியிருக்கிறது. நாயின் கண்களில் இருந்த பசி மக்களின் முகங்களில் விழுந்து விட்டதை நம்மால் கவனிக்க முடியும். அவர்களுடைய உடல் மொழிகளில் கலந்து விட்டதைக் கூட அறிய முடியும்.

அடிப்படை தேவைகளில் நிறைவடையாமல் தத்தளிக்கும் மனிதர்கள் தங்களுடைய முகங்களை இழக்கிறார்கள். அது ஒரு கும்பல் மனப்பான்மையை தோற்றுவிக்கிறது. நாகரிகமும் நாசூக்கும் மெல்ல ஆவியாகின்றன. அவர்கள் கோழிகளை பிடுங்கித் தின்கிற நாயின் சுபாவத்தை அடைந்திருக்க வேண்டியதாக இருக்கும். நேரத்திற்கு சோறு கிடைக்கவில்லை என்னும் போது எந்தக் கண்ணியமும் விடைபெற்றுக் கொண்டு விடும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் இணக்கம் வைத்துபுன்னகைக்க முடியாது. அந்தப் பாழ்வெளியில் எப்போதாவது வெடித்து விடக் கூடிய வெடிகுண்டின் திரியில் நெருப்பு இருந்தவாறு இருக்கும்.

அங்கே அவர்களை ஆள்கிற அதிகார வர்க்கம் காட்டுகிற சகஜமே கூட சகஜமானது அல்ல.

சர்வாதிகாரம் என்பது தான் காட்டுகிற கடுமைக்கு அடியில் கொஞ்சமேனும் தொடை நடுக்கத்தைக் கொண்டிருக்குமாதலால் பதற்றம் ஒரு தொற்று போல பரவியிருப்பதை நினைத்த மாத்திரத்தில் நிறுத்தி விட முடியாது. வரி விதிப்பவர் ஒருவர் இந்தப் படத்தில் மக்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று முறுகுகிறார். மக்கள் அவரைக் காறித் துப்பியிருக்கிராகள். தங்களுடைய ஆடு மாடுகளை பறிமுதல் செய்யாமலிருக்க அவர்கள் அதைக் கொன்று தின்னுகிறார்கள். அவரைக் கொலை செய்யவும் அவர்கள் தயாராக இருப்பது எதிர்பார்க்கக் கூடியது தான். அவர் அரசு இயந்திரத்தின் கடைநிலை ஆள். மேலே இருப்பவர்களுக்குள் இன்னுமே பயத்தின் சூறாவளி அதிகம். ஆனால் அவர்கள் அதை மறக்க நினைப்பார்கள். அதிகாரத்தில் மையம் கொள்வார்கள். பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வார்கள். கொண்டாட்டங்களில் தங்களை மயக்கிக் கொண்டு யதார்த்த உலகை நேரிடாது நாட்களைத் தள்ளுவார்கள்.

மக்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொள்வதாக சந்தேகத்துடன் நடமாடுவார்கள்.

அங்கிருக்கிற பிற மருத்துவர்களுக்கு மக்களுக்கு பணி புரிய விருப்பமில்லை. அவர்கள் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கூட்டத்தின் வன்மம் தெரியும். அதே சமயம் கார்லோவே கூட தனது மருத்துவப் பணியை முழுமையாக செய்ய முடியவில்லை. அடித்துக் கொள்கிறார்கள். ஆவேசம் கொள்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை, குழந்தைகளும் முதியவர்களும் நோயில் விழுந்திருக்கிறார்கள். ஒரு இரட்சகனின் கரத்தைப் பற்றிக் கொண்டு நரகக் குழியில் இருந்து எழுந்து விடலாம் என்கிற குருட்டுத்தனம் அவரை தன்னைத் தானே நொந்து கொள்ள வைக்கிறது. அவர்களுடைய நம்பிக்கைகளை மறுதலிக்கவே வேண்டும். அவர் மதவாதியல்ல. அடக்குமுறை காலங்களில் மதமே தன்னை இளக்கிக் கொண்டு மக்களை ஆட்டுமந்தையாக அரசின் பாதைகளுக்கு இழுத்துச் செல்வது வரலாறு. அது முழுமையாக ஆரோக்கியம் கெட்டு மக்களை பகுத்தறிய முடியாமல் மழுங்கடிக்கச் செய்வதில் குறியாக இருக்கும்.

இந்தப் படத்தில் கிறிஸ்துமஸ் அன்று குடி போதையில் இருக்கிற கிழ பாதிரி ஒருவர் தன்னைப் பற்றின அற்புதம் ஒன்றை நிறுவிக் காட்ட முயல்கிறார். மக்கள் அதை நம்புகிறார்களா, வெறுத்துப் போகிறார்களா என்பதைப் பற்றி அவருக்கு கவலையில்லை. தனது புரோகிதப் பணியின் சடங்குகளைத் தன் பாட்டிற்குத் தொடர்கிறார். மக்கள் மட்டுமென்ன, அவர்களுக்கு தங்களை எப்போதும் முட்டாளாக்குகிற சாமியாரின் நாடகங்கள் எல்லாம் தெரியும். அவர்கள் தங்களுடைய சம்பிரதாயங்களை கை விட்டால் ஆகாயம் இடிந்து விழும் போல அவர் பின்னால் தேமேயென்று ஊர்வலம் போகிறார்கள். சொல்லப் போனால் இப்படி மந்தையாக இருப்பதன் மூலம் அடக்குமுறைக்கு அவர்கள் தங்களை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் கார்லோ வளைக்கப்படுவதும் மக்கள் அவர்களுக்காக போராடுவதுமெல்லாம் கூட நடந்து படம் முடிகிறது.

படம் துவங்குவது ஒரு புள்ளியில் என்றால் அது சென்று சேர்வதும் நல்ல செவ்வியல் தரம் தான். இடையில் இருக்கிற கதையின் திருப்பங்களில் எத்தனையோ முகங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக இரண்டு பெண்கள். இரண்டு பேருமே அப்படிச் சின்னதாக வந்து விட்டு செல்கிறவர்கள் தான். ஆயின் அவர்கள் நமக்குள் சித்திரமாக விழுகிறார்கள். ஒரு குழந்தை, அவனது ஓவியத்தின் மீது தான் படம் முடிகிறது. நாயகன் நினைத்துக் கொண்டிருப்பது போல நாமும் அவனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க முடியும். அக்குழந்தையின் அம்மாவாக வந்து ஒரு அறையை கன்னத்தில் வாங்கிக் கொள்கிற அந்தப் பெண் தனது வினோத சிரிப்பினால் அந்தக் காலத்தை, அங்கே நிலவுகிற பெண்ணின் வாழ்வை ஒரு சிட்டிகை நேரத்தில் நிறுத்திக் காட்டிவிட்டு செல்கிறாள். ஊழலில் திளைத்துக் கொண்டு அமெரிக்கக் கனவில் உலா வருகிற மக்களில் இருந்து விலகிய அதிகாரிகளின் முகங்கள் தொடர்ந்து வந்தவாறு சீரழிந்த அமைப்பின் பலவீனங்களை சொல்லிச் செல்கின்றன.

கார்லோவாக வருகிறவர் தன்னை ஒருபோதும் சிதறடித்துக் கொள்ளாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்பவர். அவர் அநீதியை அறிவதும், அதைக் குறிப்பிடுவதும், அதில் சிக்கிக் கொண்டு விடாமல் நழுவுவதுமான ஒரு அறிவுஜீவி. நோக்கம் இல்லாத அவசரக் கலகம் வெறும் உயிரிழப்பில் முடிந்து விடும் என்பதை அவர் நன்றாகவே அறிவார். அதே நேரம் அவர் கோழையல்ல. அவருக்குள் ஒரு உறுதி இருக்கிறது அல்லது உண்மை இருக்கிறது. அநேகமாக அது அவருடைய மனதின் குரல். அதன் வழியே அவர் நிதானம் காக்கிறார். மெல்ல வேடிக்கைப் பார்த்தவாறு நடந்து கூட்டத்தின் நன்றிக்குரியவராக மாறுகிற அவரது இந்த நீண்ட கதையில் அசாத்தியமான முகத்துடன் பொருத்தமான நடிகர் இருந்தார்.

சரியாய் சொல்வதெனில், இது நிலபரப்பை அடிப்படையாய் கொண்டு எழுகிற படம். அதைக் கொண்டு வந்திருக்கிற ஒளிப்பதிவு. கதையின் மையப்பகுதிகளில் அது ஒரு ஆயுதம் போல வீறு கொண்டிருந்தது. அதற்கு மாறாக பல இடங்களிலும் பதுங்கிக் கொண்டுமிருந்தது. இசையும் கூட அப்படித்தான். சில தருணங்களில் ஓலம் போல உயர்ந்து வருகிற பாடல்களும் கூட படத்தின் நிறைவில் தமக்குரிய பங்கை எடுத்துக் கொள்கின்றன.

ஒரு நாவலில் இருந்து இறங்கி வந்த திரைப்படம். ஆனால் இயக்குநரின் சினிமா தான் இது.

அவரது எண்ணம் மிகக் குறைந்த வண்ணங்களில் ஒரு சாதுர்யமான ஓவியத்தைப் பூர்த்தி செய்கிறது என்று சொல்ல வேண்டும்.

அரசியலைச் சொல்ல வந்தால் புருவம் சுருக்கி கண்களைப் பிதுக்கும் ஒரு சேட்டையும் கிடையாது. சங்கிலியால் பிணைக்கப்பட்டு கொண்டு வந்து நிறுத்தப்பட்டதில் முழங்கக் கூடிய உறுமலோ இருமலோ கிடையாது. தப்பித் தவறி எங்கேயும் தர்பார் வசனங்கள் இல்லை. அதே நேரம் ஆழத்தில் நூறு சஞ்சாரங்கள் நிகழ்கின்றன. நம்மை அசைக்கின்றன. நம்மை உலுக்கி ஆழத்தில் எங்கோ இருக்கிற ஒரு நியாய வெளியில் நம்முடன் உரையாடுகிற அளவிற்கு ஆத்ம பலம் கொண்டிருப்பதற்கு இயக்குநர் தான் காரணம்.

ஏதோ ஒரு குக்கிராமத்தில், எங்கோ இருக்கிற ஒரு தேசத்தில், யாருக்கோ நிகழ்வதாக இருந்தாலும் நமக்கு வெகு அருகிலேயே இருக்கிற மனித செயற்பாடுகளுக்கு உகந்த சம்பவங்கள் தான் எல்லாம். யாருக்கும் எதுவும் நடக்கலாம். எந்த நேரத்திலும் மக்கள் வெற்றியடைகிற அற்புதங்கள் நடந்து விடலாம். நிறுத்தப்பட்ட கடவுளின் வருகை நிகழலாம்.

படத்தின் திரைக்கதையை மூன்று பேர் எழுதியிருக்கிறார்கள். இயக்குநர் Francesco Rosi . இத்தாலியத் திரைப்படம். 1979 இல் வெளிவந்திருக்கிறது. கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. மேலும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.

உலகின் மகத்தான திரைப்படங்கள் நாஸிஸத்தை, ஃபாஸிஸத்தை, போர்களின் கொடுமைகளை குருதி வழியச் சொல்லியிருக்கின்றன. குண்டுகள் முழங்கி, பிணங்கள் வரிசையாகக் கிடந்திருக்கின்றன. இந்தப் படத்தில் அந்த மாதிரி எதுவும் இல்லை. அதே நேரம் இதில் இல்லாததும் இல்லை.