பேருவகை

by மாற்கு
1 comment

இப்போது எனக்கு வயது 70. என்னை முதன்முறை சந்திப்பவர் என் வயதை 75க்குமேல் கணிக்கின்றனர். எனது மூத்த அண்ணனுக்கு வயது 82. எங்களைப் பார்க்கும் சிலர் என்னிடம் நீங்கள் தான் அண்ணனா என்பர். அண்ணன்களுக்கெல்லாம் நான் அண்ணன் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்ததால் முதுமையான தோற்றம். எனது பணிக்கு முதுமைத் தோற்றம் பெரிதும் பயன்பட்டது.

எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. பணியாளர் குழந்தைசாமி பீக் என்ற அமைப்பின் இயக்குநராக இருந்தார். கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழ்ந்த ஆதிவாசி மக்களுக்குப் பணிபுரிந்தார். பழங்குடியினர் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்மலையில் ஏழ்மையிலும் வறுமையிலும் வாழ்ந்தனர். அவர்கள் ஒன்றுகூடுவதற்குக் சமூகக் கூடங்கள் தேவை. 14 சமுதாயக் கூடங்கள் கட்ட நிதியுதவிக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். கட்டாயம் உதவுவதாகக் கூறினேன். இரண்டு தவணைகளாக நிதியுதவிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த உதவியைக்கொண்டு அனைத்துச் சமூகக்கூடங்களையும் பல இன்னல்களுக்கிடையில் சிறப்பாகக் கட்டி முடித்தார். நீங்கள் அவற்றைப் பார்வையிட வேண்டும் என்று அழைத்தார். அனைத்திற்கும் வர முடியாது. கட்டாயம் ஒருசிலவற்றைப் பார்க்க வருகிறேன் என்றேன். ஒருமுறை செண்பகனூர் சென்றேன்.

அப்போது எனக்கு வயது 60கூட ஆகவில்லை. பணியாளர் குழந்தை என்னை அழைத்துக்கொண்டு ஆதிவாசிகளின் கிராமங்களுக்குச் சென்றார். பல கிராமங்களுக்குப் பேருந்து வசதியில்லை. சில கிராமங்களுக்கு நடந்துதான் செல்லவேண்டும். குளிர் அதிகம்.ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றோம். மிகவும் களைப்பாக இருந்தது. ஒரு தேநீர் கடை இருந்தது. தேநீர் குடித்துவிட்டுச் செல்லலாம் என்று உள்ளே சென்று பெஞ்சில் அமர்ந்தோம். அன்றைய செய்தித்தாள் இருந்தது. அதை எடுத்து வாசித்தபடி தேநீருக்காகக் காத்திருந்தோம். அன்று நான் மூக்குக் கண்ணாடி அணியவில்லை. இருப்பினும் செய்தித்தாளை வாசித்தேன்.

அப்போது தேநீர் குடிக்க இரண்டு பெரியவர்கள் வந்தனர். செய்தித்தாளை நான் வாசிப்பதை வியப்புடன் பார்த்தனர். பிறகு அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். “அந்தக் கிழவனைப் பார். அவருக்கு வயசு 80 – 85க்கு மேல இருக்கும். தலை முடியெல்லாம் வெள்ளையடிச்சது மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்கு. ஆனா கண்ணாடி இல்லாம இந்த வயசுலகூட வாசிக்கிறார். அப்ப அவரு உடல எவ்வளவு கட்டுக்கோப்பா வச்சிருப்பாரு. அந்தக் காலத்துலயிருந்து கூழ் குடிச்சி உடம்ப வளர்த்திருப்பார். அதனாலதான் இப்படி இருக்கார். நம்மளப் பார். இட்லி, தோசை, சோறுன்னு தின்னு ஐம்பது வயசுல கம்பை ஊனிக்கிட்டு நடக்கோம்” என்று பேசிக்கொண்டனர்.

நானும் குழந்தைசாமியும் எங்களுக்குள் சிரித்தபடி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்பின் குழந்தைசாமி என்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இரண்டு பெரியவர்கள் பேசியதைச் சொல்லி என்னைக் கேலி செய்வார். 60 வயதிலேயே 80 வயதுக்குமேல் இருந்தது எனது தோற்றம்.

இயேசு சபையில் பணி ஓய்வுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. உடலில் வலு இருக்கும்வரை உழைக்கலாம். நூறு வயது வரை உழைத்தவர்களும் இயேசு சபையில் உண்டு. சகோதரர் பீட்டர் செண்பகனூர் தபால் நிலையத்தில் நூறு வயது வரை பணிபுரிந்தார். நானே அதற்கு சாட்சி. ஆனால் எனக்கு அதைப்போன்ற வலு இல்லை என்றாலும் மனம் உழைக்கத் தூண்டுகிறது. மனதில் இளமையை உணர்கிறேன்.

2018 ஜுன் முதல் சென்னை லொயோலா கல்லூரியில் இருக்கிறேன். எழுதுவது தான் எனது முழுநேரப் பணி என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. என்னை இப்பொறுப்புக்கு அனுப்புங்கள் என்று கேட்கவில்லை. இதுவரை கொடுக்கப்பட்ட பணிகளைப்போல இப்போதும் இப்பணியானது எனக்கு மாநிலத் தலைவரால் கொடுக்கப்பட்டது. நான் இதுவரை பல நூல்கள் எழுதினாலும் அனைத்தையும் எனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளுக்கிடையே ஓய்வு நேரத்தில்தான் எழுதினேன். நான் ஓர் எழுத்தாளன் என்ற அகந்தை கொண்டதில்லை. சமூகப் பணியாளன் என்ற அடையாளத்துடன்தான் வாழ்ந்தேன். எழுதினேன். இப்போது முதன் முறையாக என்னை எழுத்தாளனாக அங்கீகரித்து எழுத்துப்பணியை மட்டுமே வழங்கியுள்ளனர். அதனால் மகிழ்ச்சியா என்றால் ஆம் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. மாற்றம் கிடைத்தபோதெல்லாம் எந்த ஆர்வத்தில் புதிய பணித்தளங்களுக்குச் சென்றேனோ அதே மனநிலையில்தான் நான் இங்கு வந்துள்ளேன்.

சமகாலப் பிரச்சினைகளை மையமாக வைத்தே நான் எழுதுகிறேன். கற்பனையாக எழுதுவதில்லை. நான் ஓரளவாவது பங்கேற்ற போராட்டங்களைப் பற்றித்தான் நான் எழுதுகிறேன். உண்மை நிகழ்வுகளையும் கற்பனையையும் கலந்து எழுதுகிறேன். தற்போது சமூகத்தில் நடக்கும் ஒருசில போராட்டங்களில் கலந்துள்ளேன். அவற்றைப்பற்றிய தகவல்கள் என்னிடம் உள்ளன. எழுதுவேன்.

இந்தச் சமயத்தில் நான் எனது வாழ்வைப் பின்நோக்கிப் பார்க்கிறேன். எனது குறை நிறைகளைத் திறந்த மனதுடன் ஆராய்கின்றேன்.

இறையியல் இரண்டாம் ஆண்டின் முடிவில் என்மேல் இரண்டு குறைகள் கூறப்பட்டன. ஒன்று நான் அதிகமாகக் கேள்விகள் கேட்கிறேன்; எனவே என்னிடம் விசுவாசம் இல்லை என்பது. இன்று திறந்த மனதுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறேன். என்னிடம் விசுவாசம் இருக்கிறதா? நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. ஆம் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்கும்போது என்னிடம் விசுவாசம் இல்லை என்று தோன்றுகிறது. மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது இருக்கிறது என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட ஊசலாட்டத்தை ஓர் ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்காகவே பார்க்கிறேன்.

திரு அவையில் ஆணாதிக்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் உள்ள இடத்தில் இறைவன் இருப்பாரா என்ற கேள்வி எழுகிறது. இதைப்போல எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. அதேபோல என் பெற்றோர் இறந்த பிறகு எனது தம்பியர் எங்களை அநாதையாக விட்டுவிட்டுப் போகாதீர்கள் என்று கதறி அழுதபோது என்னைவிட இறைவன் உங்களைக் காக்க வல்லவர் என்று கூறி அந்த நம்பிக்கையுடன் சென்றேன். அதே விசுவாசம் இன்னும் என்னிடம் இருப்பதை உணர்கிறேன். எதையும் விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதோ அல்லது எதற்கும் காரணங்களை முழுவதுமாகத் தேடுவதோ சரியல்ல என்ற கருத்தில் நான் இருக்கிறேன். இத்தகைய நிலைப்பாடு நான் வளர்வதற்கு பெரிதும் துணையாக இருக்கிறது. இப்படி நீடிக்கவே நான் விரும்புகிறேன். என் மீது மற்றொரு குற்றமும் சுமத்தப்பட்டது. குழும வாழ்வில் மற்றவர்களோடு ஒத்துப் போவதில்லை. பிடிவாதக்காரனாக இருக்கிறேன் என்பது.

இதிலும் உண்மை இருக்கிறது. குழும வாழ்வு என்று பெரும்பாலோர் கூறுவதற்கும் எனது புரிதலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதோடு குழும வாழ்வில் முடிவுகள் பெரும்பான்மையின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. இப்படி எடுக்கப்படும் முடிவுகளை ஏற்பதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. பெரும்பான்மையினரின் கருத்துகளே சரியாக இருக்கும் என்பது ஏற்புடையதல்ல. தனியொருவனின் கருத்துகூட சரியானதாக இருக்கலாம்.

இஞ்ஞாசியார் தனது ஆன்மீகப் பயிற்சிகள்மூலம் நாம் தேர்ந்து தெளிந்த முடிவுகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஓரு கருத்தின் நிறைகுறைகளைப் பற்றி அனைவரும் மனம் திறந்து பேசி அதன் அடிப்படையில் ஒத்த சிந்தனையின்மூலம் முடிவெடுப்பதே ஏற்புடையதாக இருக்கும். பெரும்பாலான குழுமக் கூட்டங்களை விரைவில் முடிக்கவே அனைவரும் விரும்புகின்றனர். ஒரு கருத்தின் நிறை குறைகளை அனைவரும் பேச அதிக நேரமாகும். எனவே பெரும்பான்மை என்ற ஓட்டெடுப்பு முறையிலேயே முடிவெடுக்கிறோம். இந்த முறை எனக்கு ஏற்புடையதல்ல.

ஆனால் இப்போது நானும் மாறிவிட்டேன். எனது கருத்தை வலுவாகச் சொல்லிவிட்டு அமைதி காப்பது. எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு ஒத்துப்போவது என்ற பக்குவத்தை அடைந்துவிட்டேன். விடியும்போது விடியட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

இதோடு தொடர்புடைய மற்றொரு குற்றச்சாட்டும் என்மேல் கூறுவதுண்டு. நான் அறநெறிகளை மீறுவதான குற்றச்சாட்டுதான் அது. இந்தக் குற்றச்சாட்டு முழுவதும் உண்மை. அதை நான் மறுக்கவில்லை.இதைப் பட்டியலிட்டால் மிகவும் நீளும்.

நாம் இப்போது சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கும் அறநெறிகளை ஏழைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனது சிறு வயது அனுபவங்கள் வழியாகக் கிடைத்தது. கள் விற்ற சூசைமுத்து தாத்தா அதற்கான தண்டனையைப் பெற்றாலும் தான் செய்வது தவறு அல்ல என்று நினைத்து அதைத் திரும்பத்திரும்பச் செய்தார். அரசுதான் தவறுதலான சட்டம் இயற்றியிருக்கிறது என்ற தெளிவு அவரிடம் இருந்தது. அதுபோல மலைக்குச் சென்று மரம் வெட்டி விற்ற யேசுக்கனி தனது செயலை நியாயப்படுத்தினார். அரசு ஏழைகளின் வாழ்வுக்கு உதவாத நிலையில் தான் செய்வது எப்படித் தப்பாகும் என்ற கேள்வியை எழுப்பினார். எனது நண்பர் உழுபவனுக்கே நிலம் என்று நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு அதற்காக மகிழ்வுடன் சிறை சென்றார். திரும்பி வந்தபின்பும் மீண்டும் அதையே செய்தார். இச் செயல்களெல்லாம் நாம் சரியென்று ஏற்றக்கொண்டிருக்கிற அறநெறிகளைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. ஏழைகளின் பார்வையில் இவை அறநெறிகளாகத் தெரியவில்லை. அநீதியாகத் தங்கள்மேல் சுமத்தப்பட்ட சுமையாகத்தான் பார்த்தனர்.

இக்கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது நான் ஆலங்குளத்தில் தங்கி அருந்ததியர்களுக்காக உழைத்தபோது கிடைத்த அனுபவம். அவர்களது குலதெய்வங்களின் சரித்திரத்தைச் சேகரித்தேன். அவர்களின் குல தெய்வங்கள் பெரும்பாலும் அறநெறிகளை மீறியவர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் கண்ணோட்டத்தில் அறநெறிகளை மீறியவர்களே குலதெய்வங்களாக இருக்கின்றனர். நான் எழுதிய ‘அருந்ததியர்: வாழும் வரலாறு’ என்ற புத்தகத்தில் இக்கருத்தை எழுதியுள்ளேன். இவற்றைப் பார்க்கும்போது நாம் சரியென்று ஏற்றிருக்கும் அறநெறிகளை ஏழைகளின் பார்வையில் மறு பரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும்; ஏழைகளின் பார்வையில் புதிய அறநெறிகளை உருவாக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். தற்போதைய அறநெறிகளை வலியுறுத்தும் கதைகள், இலக்கியங்கள், பழமொழிகள், சொலவடைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அறநெறிகளை மீறுபவர்களிடமும் ஏதோ ஒரு கருத்து இருக்கிறது. இங்கு நான் குறிப்பிடுவது ஏழைகளின் நலனுக்காக, ஏழைகளின் பார்வையில் பார்ப்பதைத்தான் குறிப்பிடுகிறேனே தவிர பொத்தாம் பொதுவாக அனைத்து அறநெறிகளையும் குறிப்பிடல்லை.

ஐம்பேரியற்கையைப் பற்றிப் பேசும்போது இவை இறைவனால் அனைவருக்கும் கொடுக்கப்பட்டவை; ஆனால் இவற்றைத் தனியுடமையாக மாற்றி அதுதான் அறநெறி என்று தீர்மானிப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. இப்போது நாம் ஏற்றிருக்கும் அறநெறிகள்மீது ஏழைகளின் பார்வை என்ற புதிய ஒளியைக்கொண்டு பார்த்து புதிய அறநெறிகளை உருவாக்க வேண்டும். அதுவரை இப்போது ஏழைகளைப் பாதிக்கும் அறநெறிகளைத் துணிவுடன் மீறும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கொள்கை.

நண்பர்கள் என்னிடம் சில குறைகளைக் காண்கின்றனர்: நான் மனிதர்களின், சமூகத்தின் பிரமாண்டமான, பன்முகப்பட்ட, சிக்கலான போக்குகளை என் சிற்றறிவுக்கு உட்பட்ட விதத்தில் எளிமையான கருத்துகளாகச் சுருக்கிக் கொள்கிறேன். அதில் நேசசக்தி ஒ எதிர்சக்தி, கருப்பு ஒ வெள்ளை மட்டுமே என் கண்ணில் படுகிறது. எளிய சூத்திரங்களையே தீர்வுகள் என்று தீர்ப்பிடுகிறேன். அதில் முரட்டுத்தனமாக, பிடிவாதமாக பாதையற்ற வழியை உருவாக்கிப் பயணிக்கிறேன். ‘தலித் மேம்பாடு’ என்ற ஒற்றைப் பாதையில் நான் இயங்குகிறேன். உலகின் வேறு நீதி அநீதிகள் எதுவுமே என் கண்ணில் படுவதில்லை. என் சிந்தனைகள் வாய்ப்பாடுகளாகவும், எழுத்துகளெல்லாம் கணித விடைத்தாள்கள் போலவுமே இருக்கின்றன. மனிதன் என்பவன் ஆயிரமாயிரம் விருப்புவெறுப்புகளும் நிறைகுறைகளும் உள்ள ஜீவன். இம் மக்கள்திரளின் ‘சமூக உளவியலை’ப் புரிந்துகொள்ள முயல்வதேயில்லை. மாற்றுக் கருத்துகளை அறியவும் முயல்வதில்லை.

இதற்கும் நான் ஆம் இல்லை என்ற பதில்தான் சொல்வேன். ஆம் என்பதற்கு இதுவரை படித்த வரலாறே சான்று. இக்கேள்விக்கு இயேசுவின் பார்வையில் பதில் சொல்ல விரும்புகிறேன். இயேசுவின் போதனைகள் ஆழமானவை. இன்றும் அதன் ஆழத்தை முழுமையாக யாரும் கண்டதில்லை. ஆனால் அவரது போதனையின் சுருக்கம் இறையன்பு, பிறரன்பு; அதிலும் பிறரன்புதான் முக்கியம் என்று மிக எளிமையாகக் கூறுகிறார். பிறரை சமமாக மதிக்காமல் அன்பு செய்ய முடியாது. சமமாக மதிப்பதற்கு சாதி பார்க்கக்கூடாது. அதுதான் எனது எளிய விடை. அதை நோக்கியதாகத்தான் எனது பயணம் இருக்கிறது. அது போல இல்லை என்பதற்கும் இந்த எனது வரலாறே சான்று. லகான் போட்ட குதிரையின் ஓட்டத்தில் அவ்வப்போது லகான் இல்லாத ஓட்டத்தையும் பார்த்திருப்பீர்கள்.

குருப்பட்டம் பெறும்முன் எந்தச் சூழ்நிலையிலும் சாதியோடு சமரசம் செய்யக்கூடாது என்ற உறுதியை எடுத்தேன். நெருங்கிய உறவினர் சொந்த சாதியில் திருமணம் செய்தால் அதில்கூட கலந்துகொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தேன்.

அதில் நான் உறுதியுடன் இருந்தேனா என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். சாதியோடு சமரசம் என்ற நிலையில்தான் வாழ்ந்துள்ளேன். ஒன்றிரண்டு திருமணங்களைத்தான் புறக்கணித்தேன். மற்றவற்றில் கலந்துகொண்டேன். சுயசாதித் திருமணம் என்பது ஒரு பாவம். வரதட்சணை என்பது மற்றொரு பாவம். இந்த இரண்டு பாவங்களில் ஒன்றிலிருந்தாவது விடுபட்டால்தான் திருமணத்தில் கலந்துகொள்வேன் என்ற சமரச நிலைப்பாட்டை பிற்காலத்தில் எடுத்தேன். வரதட்சணை பற்றிப் பேசாத திருமணங்களில் மட்டுமே பெரும்பாலும் கலந்துள்ளேன். அதிலும் மணமகனுக்கு மட்டும்தான். வரதட்சணை கொடுத்து நடைபெறும் மணமகளுக்கான திருமணங்களிலும் கலந்துள்ளேன். இந்த சமரசத்தை நான் தவிர்த்திருக்கலாம். ஆனால் தவிர்க்கவில்லை. இதை ஒரு மிகப்பெரிய குறையாகப் பார்க்கிறேன்.

அதேசமயம் என்னிடம் சுயசாதி விமர்சனம் செய்கின்ற போக்கு இருக்கிறது. சுயசாதி விமர்சனம் கட்டாயம் தேவை. சுயசாதி விமர்சனம் செய்யாதவன் சாவான பாவத்தில் வாழ்கிறான் என்ற ஆன்மீகத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஒருமுறை உறவினர்களின் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு இருந்தது. திருமுழுக்கை நான்தான் கொடுக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினர். நான் அதிகம் விரும்பிய இடமும், துறவறத்தில் சேர்வது என்று முடிவு எடுத்த இடமுமாகிய சிறுமலையில் திருமுழுக்குக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் நான் ஒத்துக்கொண்டேன். விருதுநகர் மாவட்டத்தில் –வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் ஒன்றை அரசு தொடங்கியதால் தலித்துகளின் ஒரு பிரிவினருக்கும், ஆதிக்கச் சாதியைச் சார்ந்த ஒரு பிரிவினருக்கும் சாதிய மோதல் நடந்து முடிந்த சமயம் அது. கலவரத்தில் ஆதிக்கச் சாதியினருடன் எனது சாதியைச் சார்ந்தவர்களும் சில இடங்களில் சேர்ந்துகொண்டனர் என்பது வேதனையான உண்மை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திருமுழுக்குக் கொடுக்க நான் சென்றேன். உறவினர்கள் அனைவரும் திருத்தலத்திற்கு வந்திருந்தனர். மறையுரையில் திருமுழுக்கு, ஜென்மப்பாவம் பற்றிப் பேசினேன்:இன்றைய சமூகச் கூழ்நிலையில் ஜென்மப்பாவமானது சாதியக் கறையாக வெளிப்படுகிறது. அந்தக் கறை திருமுழுக்கினால் அகற்றப்படுகிறது. திருமுழுக்குபற்றி சரியாகப் புரிந்துகொள்ளாத நாம் அதன்பின்பும் அந்தக்கறை தொடரும் விதத்திலேயே வாழ்கிறோம். சாதியின் அடிப்படையிலேயே செயல்படுகிறோம். சமீபத்தில் நமது மாவட்டத்தில் சாதிக்கலவரம் நடைபெற்றது. அதில் நமது சாதியினர் ஆதிக்கச் சாதியினருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துச் சில இடங்களில் செயல்பட்டிருக்கின்றனர். ஒரு கிராமத்தில் நமது சாதியைக் சார்ந்தோர் தெருவில் ஊர்வலமாகச் சென்று அங்குள்ள தேநீர் கடைகளில் சிரட்டைகளைக் கொடுத்து இனிமேல் தலித்துகளுக்குச் சிரட்டையில்தான் தேநீர் வழங்கவேண்டும் என்று கூறியிருக்கின்றனர். நமது சாதியினர் ஒருகாலத்தில் எப்படித் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்டனர், என்னென்ன கொடுமைகளை அனுபவித்தனர் என்ற சரித்திரம் நமக்குத் தெரியவில்லை. தீண்டத்தகாதவர்களாக மட்டுமல்லாது பார்க்கக்கூடாதவர்களாகவும் நடத்தப்பட்டோம். பெண்கள் மார்புத்துணியை அணியக்கூடாது என்றுகட்டாயப்படுத்தப்பட்டோம். அதிலிருந்து விடுபட நமது முன்னோர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

அவர்களது போராட்டத்தின் பயனாக இப்போது தீண்டாமையிலிருந்து ஓரளவு விடுபட்ட நிலையில் நாம் வாழ்கிறோம். அதற்காக மகிழ்கிறோம். நமது முன்னோர்கள் அனுபவித்த இந்தக் கொடுமைகளை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது என்பதுதான் நமது இயல்பான நிலைப்பாடாக இருந்திருக்கவேண்டும். தீண்டாமையிலிருந்து விடுபட்ட நாம், நமது முன்னோர் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தலித்துகளுக்குக் கூறி, அவர்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்து அவர்கள் தீண்டாமைக்கு எதிராக நடத்தும் போராட்டங்களில் அவர்களோடு கலந்துகொண்டு அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காகப் போராடியிருக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆதிக்கச் சாதியினரின் மனப்பான்மையை உள்வாங்கி அவர்களுடன் சேர்ந்துகொண்டு, தீண்டாமை தொடர நாம் வலியுறுத்துவது கேவலமானது. நமது சாதியின் கடந்தகால வரலாறு தெரிந்தால் இவ்வாறு செய்வோமா? என்று மறையுரையில் கூறினேன்.

இவ்வாறு நான் மறையுரை கொடுத்தபோது உறவினர்களில் ஒருவர் நிறுத்து பிரசங்கத்தை என்று கத்தினார். நான் அவரது குறுக்கீட்டை தைரியமாக எதிர்கொண்டேன். திருப்பலி முடிந்தவுடன் உறவினர்கள் ஒன்றுகூடி என்னிடம் சண்டையிட்டனர். மகிழ்வான சூழ்நிலையைக் கெடுத்துவிட்டதாக என்மேல் குற்றம் சாட்டினர். சிலர் என்னை அவ்விடத்திலிருந்து செல்லும்படி கூறினர். நானும் அந்த இடத்திலிருந்து வந்துவிட்டேன்.

எனது பணிவாழ்வில் மறக்கமுடியாத முக்கியமான சம்பவம் எது என்றால் சுயசாதி விமர்சனம் செய்து அதனால் உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியைத்தான் சொல்வேன். சொந்த சாதியினரால் புறக்கணிக்கப்படுவது ஆன்மீகத்தின் முக்கியமான அம்சம் என்பதை உணர்ந்தேன்.

சில சமயங்களில் என்னைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு என்னை அனைவரும் கைவிட்டு விட்டனர் என்ற உணர்வு என்னிடம் ஏற்பட்டிருக்கிறது. தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படுவதும் சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்திருக்கிறது. அதேபோல நானும் சிலரைத் தவறுதலாகப் புரிந்திருக்கிறேன். அப்புரிதலின் அடிப்படையில் விமர்சனம் செய்திருக்கிறேன். அதற்காக நான் வருந்தியிருக்கிறேன். மன்னிப்பும் கேட்டிருக்கிறேன்.

இச்சமயத்தில் மன்னிப்பைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நான் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டேன். ஆனால் நான் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் என்மேல் வீணாகக் குற்றம் சாட்டியவர்களை மன்னிக்கும் மனப்பான்மை என்னிடம் இல்லை. தவறு செய்தவர் மன்னிப்புக் கேட்டால் அவரை மனதார மன்னித்து முன்புபோல் அன்புடன் பழக என்னால் முடியும். ஆனால் செய்தது தப்பு என்று தெரிந்தும் மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்ற உறுதியுடன் இருப்பவர்களை மன்னிக்கும் குணம் என்னிடம் அறவே இல்லை. இது தவறான குணம் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. இருப்பினும் என்னால் மன்னிக்க முடியவில்லை. மன்னிப்பு என்பது எவ்வளவு பெரிய மதிப்பீடு! அந்த மதிப்பீடு என்னிடம் இல்லையே என்று நான் வெட்கப்படுகிறேன். இந்த வயதில்கூட அது நீடிப்பது மிகவும் கேவலமானது என்பதை உணர்கிறேன். அதிலிருந்து மீள வேண்டும். எப்போது மீள்வேன்? தெரியவில்லை. எனது தவறை உணர்கிறேன். எனவே அதிலிருந்து மீள்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என்னிடம் சில நிறைகளும் இருக்கின்றன. சிலவற்றைமட்டும் குறிப்பிடுகிறேன்.
எனது வாழ்வில் ஏழைகள், தலித்துகள், தலித் கிறிஸ்தவர்கள், அருந்ததியர்கள், பெண்கள், பழங்குடியினர் சார்பாக நிலைப்பாடு எடுத்துச் செயல்பட்டிருக்கிறேன். இவர்களை அன்பு செய்திருக்கிறேன். இதில் ஒருபோதும் நான் சமரசம் செய்யவில்லை. துணிவுடன் செயல்பட்டிருக்கிறேன். பலரின் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறேன். அதற்காக ஒருநாள்கூட நான் வருந்தியதில்லை. அவர்களில் ஒருவனாகஎன்னைக் கருதி அவர்கள் அன்பு செய்ததை மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.

உறவினர்கள் என்னிடம் வருவதை, என்னிடம் தங்குவதை நான் தவிர்த்திருக்கிறேன். அவர்களும் வருவதில்லை. என்னைப்பற்றி, எனது பணிகளைப்பற்றி அவர்களிடம் சொல்வதைத் தவிர்த்திருக்கிறேன். திருச்செந்தூரில் இந்து அருந்ததியர்களுக்கு மாவீரர் நகரை உருவாக்கினேன். அதன் திறப்பு விழாவிற்கு உங்களது உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லையா என்று சிலர் கேட்டனர். உறவினர்களுக்கு எதற்காக அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டேன். நான் என்ன பணிசெய்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியாது என்றேன். உறவினர்களிடமிருந்து விலகியிருப்பது ஆன்மீகத்தின் ஒரு முக்கியமான அங்கம் என்று நான் எண்ணுகிறேன். இயேசுவும் அப்படித்தானே இருந்தார்.

நான் இயேசு சபையில் நவதுறவில் சேர்வதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து இன்று வரை ஒருநாள் கூட எனது வீட்டில் தங்கவில்லை. ஒருவேளை எனது பெற்றோர் இருந்திருந்தால் தங்கியிருப்பேனோ என்னவோ தெரியவில்லை. ஆனால் நான் பிறந்து வளர்ந்து இருபத்தோரு ஆண்டுகள் வாழ்ந்த வீட்டில் இன்று வரை நான் தங்கவில்லை. அதற்காக எனது கிராமத்திற்கே செல்லவில்லை என்று கூறமாட்டேன். நண்பர்களைச் சந்திக்கப் பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களோடு இரவு முழுவதும் பேசியிருக்கிறேன். அவர்களோடு தங்கியிருக்கிறேன். எனது வீட்டிற்குச் செல்லாமலேயே திரும்பியிருக்கிறேன். ஒருமுறை எங்களது கிராமத்தில் தலித்துகளுக்கிடையே சாதிக்கலவரம் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது நான் எனது கிராமத்திற்குச் சென்றேன். தலித் கிறிஸ்தவர்களில் ஆண்கள் யாரும் இல்லை. காவலர்களுக்குப் பயந்து ஓடிவிட்டனர். பெண்கள், குழந்தைகள் மட்டுமே இருந்தனர். ஒருமாதம் அவர்கள் தெருவில் தங்கினேன். உணவுக்கு ஏற்பாடு செய்தேன். அவர்களுக்குப் பாதுகாப்பாக, ஆறுதலாக, ஆலோசகராக இருந்தேன். அப்போது கூட வீட்டிற்குச் செல்லவில்லை.

மற்றொரு கொடையாக நான் கருதுவது எனது நண்பர்கள். இயேசு சபையில் சேர்வதற்கு முன்பும், சேர்ந்த பின்பும் எனக்கு நண்பர்கள் பலர் இருந்திருக்கின்றனர். இவர்களது பெயர்களை நான் அவ்வப்போது இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர்களிடம் நான் மிக இயல்பாக இருந்திருக்கிறேன். இவர்களிடம் மனம்விட்டு;ப் பகிர்ந்திருக்கிறேன். முகமூடி அணியாமல் நான் இப்படித்தான் என்று திறந்த புத்தகமாக இவர்கள் முன்பு இருந்திருக்கிறேன். இவர்கள் என்னை உற்சாகப்படுத்திய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் நினைத்துப்பார்த்து இவர்களுக்கு நன்றி கூறுகிறேன். மாறுபட்ட கருத்தியலைக் கொண்டிருந்தஇவர்களோடு காரசாரமாக விவாதித்திருக்கிறேன். இருப்பினும் நட்பு தொடர்ந்ததை மிகப்பெரிய கொடையாகப் பார்க்கிறேன். கருத்து முரண்பாடே நம்மை வளர்க்கும் என்பதை அனுபவத்தின்மூலம் அறிந்திருக்கிறேன். கருத்து முரண்பாட்டின் காரணமாகச் சண்டையிட்டிருக்கிறேன். சண்டையிடுவதும் ஆன்மீகத்தின் ஓர் அங்கம்தான். சண்டையைப் பெரிதாக எண்ணாமல் உறவுடன் நட்பு தொடர்வதுபற்றி நான் மகிழ்கிறேன். ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும். எழுதுவேன்.

நான் தனிப்பட்டவர்களுக்கு உதவுவது இல்லை. ஆனால் சூழ்நிலையின் காரணமாகச் சில தனிப்பட்டவர்களுக்கும் உதவியிருக்கிறேன். எனது சக்தியைமீறி உதவியிருக்கிறேன். இவர்கள் யார் என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இவர்கள் பிற்காலத்தில் மிகச் சிறந்தவர்களாக வருவர் என்று தெரியாமலேயே உதவியிருக்கிறேன். ஏதோ ஓர் உள்ளுணர்வு இவர்களுக்கு உதவும்படி என்னைத் தூண்டியுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குகின்றனர். எழுத்தாளராக, அரசியல் தலைவராக, ஆன்மீகவாதியாக, மனித உரிமைப் போராளியாக, சமூகத் தலைவராக உருவாகியிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன். வாழ்நாளில் புதிய பணித்தளங்களுக்கே சென்றுள்ளேன். ஒவ்வொன்றும் வித்தியாசமான இடம். வித்தியாசமான மக்கள். சமூகம், பண்பாடு, பொருளாதாரம், மதம், அரசியல், கல்வி என்று அனைத்துத் தளங்களிலும் வித்தியாசம் உண்டு. இருப்பினும் சென்ற இடங்களின் தன்மைக்கு ஏற்றவாறு படைப்பாற்றலுடன் செயல்பட்டுள்ளேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தேன். ஒரே பணித்தளத்தில்கூட ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொருவிதமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தேன். அந்த வித்தியாசமான அணுகுமுறை, படைப்பாற்றல் இன்னும் அழியாமல் என்னிடம் இருக்கிறது. ஒரே மாதிரி செயல்பட்டேன் என்று சொல்லமுடியாது.

ஆனால் ஒருசில அடிப்படையான கொள்கைகளை நான் கடைப்பிடித்திருக்கிறேன்.
எந்தச் சமயத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பணப்பொறுப்பை ஏற்காததை நான் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். கோடிகோடியாக நன்கொடைகளைப் பெற்றபோதும் பணத்தை நிர்வகிக்க ஒரு குழுவை ஏற்படுத்தி அந்தக் குழுவிடம்தான் பணப் பொறுப்பை ஒப்படைத்தேனே தவிர நான் பணப்பொறுப்பை ஏற்கவில்லை. அதனால் மனம்போனபடி செலவிடமுடியவில்லை. சிலர் என்னைக் கஞ்சன் என்றே அழைத்திருக்கின்றனர். அதற்காக நான் வருந்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிலைப்பாடு எடுத்துச் செயல்பட்டாலும் என்றுமே இவர்களின் தலைவன் நான் என்று கூறியதில்லை. தலைமைப் பொறுப்புக்கு ஒருபோதும் ஆசைப்படவில்லை. மாறாக இவர்களை அமைப்பாக ஏற்படுத்தி இவர்களில் தலைவர்களை உருவாக்கி இவர்களது தலைமையின்கீழ்தான் நான் செயல்பட்டிருக்கிறேன். மக்களிடம் தலைமைப்பண்பு இருக்கவேண்டும், இவர்கள் அதிகாரத்தை உணரவேண்டும், இவர்களே முடிவெடுக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன்.

எளிய வாழ்க்கை முறையையே பின்பற்றியுள்ளேன். பிடிவாதத்தால் அல்ல; இயல்பிலேயே உடை, உணவு, உறைவிடம் போன்றவற்றில் ஆடம்பரத்தைத் தவிர்த்துள்ளேன். வாங்கும் சொத்துகள் மக்களுக்கானது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறேன். நான்கு சக்கர வாகனங்கள் எனது எளிமைக்குப் பரிசாகக் கிடைத்தன. அவற்றை நான் பயப்படுத்தியதில்லை. பிறருக்கு, பிற அமைப்புகளுக்கு அளித்துவிட்டேன். விரும்பினால் விலகிப்போகும், விலகிப்போனால் விரும்பிவரும் என்பதற்கு எனது வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. இரவு உணவை மக்களோடு உண்ணவேண்டும் என்ற அணுகுமுறையையும் கையாண்டேன். உறவை வளர்க்க அது அடித்தளமாக அமைந்தது. உடல்நலக் குறைபாடு ஏற்படும்வரை இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தேன்.

தற்போது இயற்கை பற்றிய விழிப்புணர்வு என்னிடம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் தீவிரமாக எழுகிறது. சிறுவயதில் எனக்குக் கிடைத்த அனுபவம்தான் இதற்குக் காரணம் என்று நான் உணர்கிறேன். சிறுவயதில் நான் இயற்கை சூழ்ந்த மலையடிவாரத்தில் வாழ்ந்தேன். இயற்கையாக இயல்பாக வாழ்ந்தேன். இயற்கையை நேசித்தேன். அதன் அழகை அனுபவித்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை அதன் இயல்போடு முற்றிலுமான அனுபவித்தேன். நீர்நிலைகளில் என்னையே இழந்துள்ளேன். தந்தையுடன் பழத் தோப்புகளுக்குச் சென்று குரங்கைப்போல அதில் ஏறியுள்ளேன். மரக்குரங்கு விளையாட்டையும் நண்பர்களுடன் விளையாடியுள்ளேன். இந்த அனுபவங்கள்தான் நான் இயற்கை சார்பாக நிலைப்பாடு எடுப்பதற்கு மூல காரணங்களாக அமைந்தன போலும்.

இப்போது அந்த அனுபத்திற்குத் திரும்புகிறேன் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மரம் வளர்த்தலிலோ, நெகிழியை ஒழிப்பதிலோ, நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலோ, இயக்கை விவசாயம் செய்வதிலோ மட்டும் இல்லை என்று உணர்கிறேன். சுற்றுச்சூழல் என்பது இவற்றைக் கடந்தது என்ற மனநிலை என்னிடம் இருக்கிறது. அது ஒரு வாழ்க்கை முறை. அந்த முறையில் வாழ்வதுதான் எனது இலக்கு என்று புரிகிறது. இயற்கையைக் கடவுளாகப் பார்க்கும் மனப்பக்குவம் என்னில் வளர்ந்துள்ளது.

எனது நிறைகுறைகளைச் சீர்தூக்கிப்பார்த்து எனது பணியை மதிப்பீடு செய்யும் இத்தருணத்தில் இவற்றை நான் எனது சுயபலத்தால் செய்தேனா என்ற கேள்வி என்னில் எழுகிறது. எனது பலத்தால், எனது கல்வியால், எனது அனுபவத்தால், எனது ஞானத்தால் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஏதோ ஒரு சக்தி, அருள் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை வழங்கியது யார்? கடவுளா? அல்லது இயற்கையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னில் ஒரு சக்தி செயல்படுகிறது என்று மட்டும் என்னால் சொல்ல முடிகிறது.

எனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு நிகழ்ச்சி பசுமையாக இருக்கிறது. திருநிலைப்படுத்தப்பட்டதும் கோட்டார் மறைமாவட்டத்தில் கோடிமுனையில் பங்குப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். அங்கு இறப்போரை அடக்கம் செய்வதற்கு கல்லறையில் இடம் இல்லை. என்ன செய்யலாம் என்று மக்களோடு ஆலோசித்தேன். எழுப்பப்பட்ட கல்லறைகளை இடித்துவிட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தலாம் என்றும், யாரும் இனிமேல் நினைவுச்சின்னங்கள் எழுப்பக்கூடாது என்றும், புதைத்த இடத்தில் மரத்;தாலான ஒரு சிறிய சிலுவையை நடலாம் என்றும், அதையும் மறு ஆண்டில் அகற்ற வேண்டும் என்றும் மக்களோடு இணைந்து தேர்ந்து தெளிந்த முடிவை எடுத்தேன். மக்களோடு அதை நிறைவேற்றினேன். 1983ல் நடந்த நிகழ்வு. அதன்பின் இந்த நிகழ்வு கோட்டார் மறைமாவட்டக் கடலோர மக்களிடம் ஊர் ஊராகப் பரவியது. தற்போது கோட்டார் மறைமாவட்டத்தில் பெரும்பாலான கடற்கரை கிராமங்களில் (அனைத்துக் கிராமங்களிலும் என்றுகூடச் சொல்லலாம்) கோடிமுனைபோல் கல்லறைகள் மறு சுழற்சிக்குப் பயன்படுகின்றன. புதைப்பதற்கு இடம் இல்லை என்ற பிரச்சினைக்கு அங்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளது.

இப்போது என்னை நினைத்துப் பார்க்கிறேன். இறப்பிற்குப்பின் எனது நிலை என்ன? இயேசு சபையினர் பணிசெய்யும் இடங்களில் இறந்த இயேசு சபையினரைப் புதைப்பதற்காகக் கல்லறைகள் உள்ளன. புதைக்கப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்படுகின்றன. அதை நினைத்து மகிழ்கிறேன். இறந்தோரின் சரித்திர சாட்சியாக அவை இருக்கின்றன. அங்கு செல்;கிறேன். எனக்குத் தெரிந்து இறந்து புதைக்கப்பட்டோரின் சரித்திரத்தை நிiவுகூர்கிறேன். என்னையே இழக்கிறேன்.

ஆனால் அதேசமயம் இப்படிப்பட்ட அடக்கமும் நினைவுச்சின்னமும் எனக்கு வேண்டாம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். கோடிமுனையில் இறந்து அடக்கம் செய்யப்படுவோர் தங்கள் அடையாளங்களை இழப்பதைப்போல எனது அடையாளமும் இழக்கப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

என்ன செய்யலாம்? யோசித்தேன். இறந்தபின் உடலின் எந்தெந்த பாகங்கள் பயன்படுமோ அவற்றையும், உடலையும் ஏதாவது அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கத் தீர்மானித்தேன். உருவமற்ற மண்ணிலிருந்து உருவம் பெற்ற நான் மண்ணுக்குத் திரும்பும்போது உருவமற்ற நிலையில் மண்ணுக்குத் திரும்பலாமே! மண்ணோடு மண்ணாக எந்த அடையாளமும் இல்லாமல் கரைந்துவிடலாமே!அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

மாநிலத் தலைவரிடம் கூறினேன். எந்தத் தடையும் சொல்லவில்லை. நீங்கள் இறந்த பின்பு உடன்பிறந்தோர், உறவினர் வந்து பிரச்சினை செய்யலாம். அவர்களிடம் இப்போதே உடல் தானத்தைப் பற்றிச் சொல்லுங்கள். உடலைத் தானம் செய்யும்போது இருவர் சாட்சி;க் கையெழுத்திட வேண்டும். நமது சபையின் சார்பாகத் தலைவராகிய நான் கையெழுத்திடுகிறேன். மற்றொரு கையெழுத்தை உடன்பிறந்தவர்களில் ஒருவர் இடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். உடன்பிறந்தவர்களிடம் சொன்னேன். யாரும் எந்தத் தடையும் சொல்லவில்லை. உங்கள் விருப்பம் என்பதே அவர்களது பதில். எனது குடும்பத்தில் கடைசியில் பிறந்த எனது தம்பியிடம் தான் கையெழுத்திடும்படி கேட்டுள்ளேன். இப்போது தானம் செய்வதற்கான வேலையை ஆரம்பித்துள்ளேன். மருத்துவர் முரளிதரன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிடும். அதற்கான அடையாள அட்டையை விரைவில் பெற்றுவிடுவேன்.

எனது பணிவாழ்வு முழுவதும் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகள், தலித்துகள், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்கள், பெண்கள், அருந்ததியர்கள், பழங்குடியினர் சார்பாக நிலைப்பாடு எடுத்து அவர்களை அன்பு செய்து வாழ்ந்திருக்கிறேன். அவர்களுக்காக உழைத்திருக்கிறேன். அவர்களுடன் பயணித்திருக்கிறேன். பணம், பதவி, அதிகாரத்தைத் தேடியிருந்தால் நிச்சயம் இம்மக்களை அன்புசெய்திருக்க மாட்டேன். உழைத்திருக்க மாட்டேன். எந்தச் சூழ்நிலையிலும் இதில் சமரசமின்றிப் பணியாற்றியிருக்கிறேன். எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கவில்லை. துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொண்டிருக்கிறேன். இவர்களை அன்பு செய்து இவர்களுக்காக இவர்களுடன் பயணித்தது தான் எனக்கு உவகை அளித்தது. இப்போது அடுத்த நிலையை அடைந்திருக்கிறேன். சுற்றுச்சூழல் பற்றி அதிகம் படிக்கிறேன். திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய ‘இறைவனைப் போற்றுவோம்’ என்ற சுற்றுமடல் என்னிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழல் பற்றிப் பேசும் அமைப்பினருடன் கலந்துரையாடுகிறேன். அவர்களுடன் வாழ்ந்திருக்கிறேன். சுற்றுச்சூழல் என்பது ஒரு வாழ்க்கை முறை என்ற புரிதல் என்னிடம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாழ்க்கை முறைப்படி வாழ முயல்கிறேன். அதைப் பற்றிப் பேசுகிறேன். எழுதுகிறேன். கலந்துரையாடுகிறேன். ஒத்த சிந்தனையுள்ளவர்களோடு இணைந்து செயல்படுகிறேன். இயற்கையில் இறைவனைக் காண்கிறேன். இது எனக்குப் பேருவகை அளிக்கிறது.

(ஜனவரியில் வெளியாகும் மாற்குவின் தன்வரலாற்று நூலாகிய ‘பேருவகை’யின் கடைசி அத்தியாயம்.)

1 comment

சு. ராம்தாஸ் காந்தி September 28, 2021 - 8:44 am

சீரான கால இடைவெளியில் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தரமான ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சுணக்கமின்றி சரியான நேரத்திற்கு இதழ் வெளியிடப்படுவது மிகவும் பிடித்திருக்கிறது. தமிழினி – யை ஒவ்வொரு தடவையும் மிகு ஆவலுடனேயே திறக்கிறேன். வாழ்த்துகளும் மகிழ்ச்சியையும்.

Comments are closed.