மெக்ஸிகன் – ஜாக் லண்டன்

by ராஜேந்திரன்
1 comment

அவரது சரித்திரம் யாருக்கும் தெரியாது. அதிலும் ஜன்டாவிற்குத் தெரிய வாய்ப்பேயில்லை. அவர் அவர்களது ‘இளம் புதிர்.’ ‘பெரும் அபிமானி.’ நிகழவிருக்கும் மெக்ஸிகோ புரட்சிக்கு ஜன்டாவினர் எந்தளவு பாடுபட்டார்களோ, அதே போல அவரும் அவரது வழியில் பாடுபட்டார். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். அவர்களில் ஒருவருக்குக்கூட அவரைப் பிடிக்கவேயில்லை.

பல அலுவல்களில் பரபரப்பாயிருந்த, கூட்டம் நிறைந்த அறைக்குள் அவர் நுழைந்த அன்றே அவரை ஒற்றர் என்றும், டயஸின் உளவுப் படையினரால் அனுப்பப்பட்ட கைக்கூலி என்றும் ஜன்டாவினர் எண்ணினர். ஏனெனில் ஜன்டாவின் தோழர்களில் பலர் அமெரிக்காவில் பரவலாக உள்ள பொதுச் சிறையிலும், ராணுவச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். தவிரவும் வேறு பல தோழர்களை இரும்புச் சங்கிலியில் பிணைத்து, நகரின் எல்லைக்குக் கொண்டுசென்று, சுவரருகே வரிசையில் நிறுத்திச் சுடுவதும் நிகழ்ந்துகொண்டிருந்தது.

ஜன்டாவினரின் முதல் பார்வையில், அந்த வாலிபர் நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கவில்லை. அவர் பதினெட்டு வயது கூட நிறைவடையாத இளைஞர். வயதிற்கு மீறிய பெரும் ஆகிருதி உடையவரும் அல்ல. பெயர் ஃபெலிப் ரிவேரா எனவும், புரட்சிக்கு ஆதரவாகப் பணியாற்ற விரும்புவதாகவும் அறிவித்தார். அவ்வளவே. அதற்குமேல் ஒரு வார்த்தையையும் வீணாக்கவில்லை. கூடுதலாக எந்த விளக்கமும் தரவில்லை. அவர் நின்றபடியே காத்திருந்தார். உதடுகளில் புன்னகையில்லை. கண்களில் நட்பில்லை.

பெரிய உருவமும் துணிவும் நிறைந்த பாலினோ வேரா, அவரைக் கண்டதும் உள்ளூர ஒரு நடுக்கம் தோன்றியதை உணர்ந்தார். என்வென்று விளங்காத அச்சுறுத்தும் உணர்வும், நெருங்காதே என்பதைப் போன்ற பயங்கரமும் அந்த வாலிபரிடம் வெளிப்பட்டன. அவரின் கருமையான கண்கள் பாம்பினுடைய சாயலிலும், ஏதோ விஷம் பொதிந்துள்ளதைப் போன்றும் இருந்தன. குளிர் தணல் போல் எரிந்து, தீவிர வெறுப்புணர்வைப் பரவலாக அவை வெளிப்படுத்தின.

அத்தகைய ஒளி உமிழும் கண்களை, ரகசியத் திட்டமிடும் புரட்சியாளர்களிடமிருந்து விலக்கி, அங்கிருந்த தட்டச்சுக் கருவியின் பக்கம் திருப்பினார். அக்கருவியை திருமதி. சேத்பி சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டிருந்தார். ஒரேயொரு கணம் அப்பெண்மணியின் கண்களில் அவரது எரியும் பார்வை நிலைத்தது. அப்பெண்மணி தற்செயலாகத் தலையை உயர்த்தி அவரைப் பார்த்தார். அவருக்குள்ளேயும் இன்னதென்று குறிப்பிட முடியாத ஏதோ ஒன்று ஊடுருவிக் கைகள் தயங்கி நின்றன. பின் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடரத் தட்டச்சு செய்து கொண்டிருந்த கடிதத்தைத் திரும்பவும் வாசிக்க வேண்டியிருந்தது. பிறகு மீண்டும் வேகமாக அக்கருவியை இயக்குவதில் மூழ்கினார்.

என்ன செய்யலாம்? என்கிற கேள்வி தொக்கி நிற்கும் பார்வையை பாலினோ வேரா, ஆர்லெனோவிடமும் ராமோஸிடமும் வீசினார். அவர்களும் அதே பார்வையைத் திரும்பவும் வீசி, தங்களுக்குள்ளாகவும் பகிர்ந்துகொண்டனர். முடிவெடுக்க இயலாத ஐயம், அவர்களது கண்களில் தெரிந்தது. மெலிந்த வாலிபரோ அறிமுகமற்ற புதிய நபர். அதிலும் புதிய நபர்கள் தரக்கூடிய அத்தனை அச்சுறுத்தல்களின் மொத்த வடிவமாகவே நின்றிருந்தார். புரிந்துகொள்ளவே இயலாத வகையில் அவர் இருந்தார். சாதாரண, நேர்மையான புரட்சியாளர்களைக் கண்டவுடன் அறிந்து கொள்ளலாம். டயஸிற்கு எதிரான தீவிரப் பகையுணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படும். ஏனெனில் அத்தகைய சாதாரண, நேர்மையான தேசாபிமானிகளுக்கு எதிராகத்தான் டயஸின் அடக்குமுறை ஏவப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாலிபரின் இருப்பு, அவர்களுக்குப் புரியாத வகையில் வேறாக இருந்தது.

இருப்பினும் திடுமெனத் தோன்றும் உணர்விற்கேற்ப விரைந்து செயலாற்றக்கூடிய வேரா, அக்குழப்பத்தை சீர் செய்ய முனைந்தார். “சரிதான்!” என்றார் எவ்வித உணர்ச்சியுமற்ற குரலில். “நீ புரட்சிக்காக வேலை செய்ய வேண்டும். அவ்வளவுதானே! உனது கோட்டைக் கழற்றி அங்கே மாட்டு. நான் காட்டுகிறேன், வா. வாளியும், துடைப்பங்களும் எங்கிருக்கிறதென்று. இங்கே தரை அழுக்காக இருக்கிறது. இதைப் பெருக்கித் தேய்த்துக் கழுவுவதிலிருந்து உன் வேலையை ஆரம்பி. பின் மற்ற அறைகளின் தரையையும் தேய்த்துக் கழுவு. அதன் பின் எச்சில் கலங்களைச் சுத்தம் செய். இதெல்லாம் முடிந்ததும் ஜன்னல்களைத் துடைத்து விடு.”

“இதெல்லாம் புரட்சிக்காகவா?” என்று கேட்டார் அந்த வாலிபர்.

“ஆமாம்! புரட்சிக்காகத்தான்!” பதிலுரைத்தார் வேரா.

ரிவேரா அங்கிருந்த எல்லோர் மீதும் ஒரு சந்தேகப் பார்வையை வீசினார். பின் தனது கோட்டைக் களைய முனைந்தார்.

“சரி! நல்லது!” என்றார்.

வேறேதும் பேசவில்லை. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு வேலை செய்ய வந்தார். காலையில் விரைந்து வந்து தரையைப் பெருக்கித் தேய்த்து சுத்தப்படுத்தினார். அடுப்புகளிலிருந்த சாம்பலை அகற்றி, நிலக்கரியும் விறகுக் கட்டைகளையும் கொண்டுவந்தார். மேஜையில் அமர்ந்து மிகுந்த சுறுசுறுப்புடன் பணியாற்றும் முதல் நபர் வருவதற்கு முன்னதாகவே அடுப்புகளில் தீ மூட்டி வைத்தார்.

“இங்கே நான் தூங்கலாமா?” என்று ஒருமுறை கேட்டார்.

ஆஹா! அதுதானே சங்கதி! டயஸின் கையாள் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஜன்டா அலுவலக அறைகளில் தூங்குவது என்பது அவர்களது ரகசியங்களை அணுகுவதற்கான எளிய வழி. மெக்ஸிகோ நிலப்பரப்பிலுள்ள அனைத்துத் தோழர்களின் பெயர்களையும், அவர்களது முகவரிகளையும் அங்குள்ள பட்டியலைப் படித்து அறிந்து கொள்ளலாம். ஆக, அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது. ரிவேரா அது குறித்து ஒருபோதும் திரும்பப் பேசவேயில்லை.

அவர் எங்கு தங்குகிறார், எங்கு சாப்பிடுகிறார், அதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஒருமுறை ஆர்லெனோ ஒருசில டாலர்களைத் தந்தார். ரிவேரா தலையசைத்துப் பணம் வாங்க மறுத்தார். ஆர்லெனோவுடன் இணைந்து வேராவும் பணத்தை வாங்கிக் கொள்ளும்படியாக வற்புறுத்தினார். அதற்கு அவர் சொன்ன பதில், “நான் புரட்சிக்காக வேலை செய்கிறேன்.”

இப்போதெல்லாம் புரட்சியை நடைமுறைப்படுத்தவும் பணம் அவசியமாகிறது. ஜன்டாவிற்கோ எப்போதும் பணத் தட்டுப்பாடு இருந்து வந்தது. உறுப்பினர்கள் பசியும் பாராது கடுமையாக உழைத்தனர். புரட்சி விரைவில் வரும் என்றே அவர்கள் எண்ணினர். எனினும் சில வேளைகளில் புரட்சி நிகழ்வதும் நிகழாததும் ஒரு சில டாலர்களைப் பொறுத்த விஷயமே என்றும் தோன்றியது.

ஒரு சமயம் முதல்முறையாக இரண்டு மாதங்களாக வாடகைத் தொகை கொடுக்க முடியாமல் போனது. வீட்டுச் சொந்தக்காரர் அவர்களை வெளியேற்றி விடுவதாக அச்சுறுத்தினார். அப்போது மலிவான, கந்தலான, நைந்த ஆடைகளை அணிந்து தரையைக் கழுவும் ஏழையான ஃபெலிப் ரிவேராதான் அறுபது டாலர் தங்கக் காசுகளை மே சேத்பியின் மேஜையில் வைத்தார்.

வேறு பல சமயங்களிலும் ஜன்டாவிற்குப் பண நெருக்கடி ஏற்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட முந்நூறு கடிதங்கள் தபால் செலவுக்கு வழியில்லாமல் தேங்கியிருந்தன. (ஆதரவாளர்களிடம் உதவி வேண்டிக் கேட்கப்பட்டவை, தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கேட்டு எழுதப்பட்டவை, நேர்மையாகச் செய்திகளை வெளியிடும்படி பத்திரிகை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டவை, அமெரிக்க நீதிமன்றங்கள் ஆணவ அதிகாரத்துடன் புரட்சியாளர்களை அடக்க முயல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதப்பட்டவை.)

வேராவின் கைக்கடிகாரம் மறைந்து போனது. அது அவரது தந்தை அவருக்குத் தந்திருந்த தங்கமுள் பதிக்கப்பட்ட பழங்காலக் கைக்கடிகாரம். அதே போல் மே சேத்பி தனது மூன்றாவது விரலில் அணிந்திருந்த கற்கள் ஏதும் பதிக்கப்பட்டிராத சாதாரணத் தங்க மோதிரமும் மறைந்து போனது. ஜன்டாவினர் நம்பிக்கை இழந்தனர். ராமோஸூம், ஆர்லெனோவும் கசந்து போய், தங்களது நீண்ட மீசையைத் தடவிக்கொண்டிருந்தனர். பின் ரிவேராதான் தொப்பியை அணிந்து வெளியே சென்றார். அவர் திரும்பியதும் இரண்டு சென்ட்கள் பெறுமானமுள்ள ஆயிரம் தபால் தலைகளை மே சேத்பியின் மேஜையில் வைத்தார்.

“பாழாய்ப் போன அந்த டயஸின் பணமாக இருக்குமோ?” என்று சக தோழர்களிடம் சந்தேகத்துடன் அபிப்பிராயம் தெரிவித்தார் வேரா.

அவர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் வெறுமே புருவத்தை உயர்த்தினர். புரட்சிக்காகத் தரையைத் தேய்த்துக் கழுவும் ஃபெலிப் ரிவேரா, அவ்வப்போது தோன்றுகிற தட்டுப்பாடுகளுக்குக்கேற்ப ஜன்டாவின் பயன்பாட்டிற்குத் தொடர்ந்து தங்கக்காசுகளும், வெள்ளிக்காசுகளும் வழங்கிக் கொண்டிருந்தார். என்றாலும் இன்னமும் அவர்களுக்கு அவர் மீது பிரியம் ஏற்படவில்லை. அவர்களுக்குப் அவரைப் பற்றித் தெரியவில்லை. ஜன்டாவினரின் வழிமுறைகளைப் போன்றதாக இல்லை அவருடைய நடைமுறை. அவர் வாலிபர்தான். ஆனாலும் அவரைக் கேள்வி கேட்கக்கூடிய துணிவு ஜன்டாவினருக்கு இல்லை.

“ஒருவேளை தனிமையில் வாழும் மேன்மையான ஆன்மாவாய் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை” என்றார் ஆர்லெனோ.

“அவர் மனிதரே அல்ல!” என்றார் ராமோஸ்.

“அவரது ஆன்மா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார் மே சேத்பி. “உள்ளுர ஒளியும் மகிழ்ச்சியும் இல்லாதபடி எரிக்கப்பட்டுவிட்டது அவரது ஆன்மா. அவர் பிணம்போல வாழ்கிறார். என்றாலும் அச்சுறுத்தும் உயிரோட்டத்துடன் இருக்கிறார்.”

“அவர் நரகத்தையே கடந்துவிட்டவர் போல இருக்கிறார்” என்றார் வேரா. “நரகத்தைப் பார்க்காத எந்த மனிதருக்கும் அப்படி ஒரு பார்வை வாய்க்காது. ஆனாலும் வயதில் வாலிபராக இருக்கிறார்.”

அவரைக் குறித்து இவ்வாறான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டாலும், அவர்களால் அவரை நேசிக்க முடியவில்லை. ஏனெனில் அவர் ஒருபோதும் பேசவில்லை. கேள்வி எழுப்பவில்லை. ஆலோசனை வழங்கவில்லை. முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் நின்றவாறு விவாதங்களைக் கேட்பார். புரட்சியைக் குறித்துக் கனல் தெறிக்கப் பேச்சு எழும் போதும்கூட, பிணம் போலவே நின்றிருப்பார். இருப்பினும் கண்கள் மட்டும் குளிர் தணல் போல் எரிந்துகொண்டிருக்கும். ஒரு முகத்திலிருந்து மற்றொரு முகத்திற்கும், ஒரு பேச்சாளரிலிருந்து மற்றொரு பேச்சாளருக்கும் அவரது பார்வையைத் திருப்புவார். பார்வையோ உறைபனியிலிருந்து வெளிப்படும் வெண்சுடர் போல ஒளி வீசி, அவர்களது பேச்சையே சீர்குலைக்கும் விதமாக இருக்கும்.

“அவர் உளவாளியல்ல” என்று வேரா ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துவதைப் போல மே சேத்பியிடம் கூறினார். “நான் சொல்வதைக் குறித்துக் கொள். அவர் தேசாபிமானி. நம் எல்லோரையும் விட மேன்மையான தேசாபிமானி. நான் அதை உணர்கிறேன். அறிவுபூர்வமாக, உளப்பூர்வமாக உணர்கிறேன். அந்த அளவில் மட்டுமே எனக்குத் தெரிகிறது. ஆனால் அதற்கு மேல் என்னால் அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.” என்றார்.

“அவர் மனதில் ஏதோவொரு கடுங்கோபம் உள்ளது” என்றார் மே சேத்பி.

“எனக்குத் தெரியும்” என்றார் வேரா ஒருவித நடுக்கத்துடன். “அவரது அலாதியான கண்களால் என்னைப் பார்த்திருக்கிறார். அவற்றில் அன்பில்லை. அவை அச்சுறுத்துகின்றன. காட்டுப் புலியின் கண்களைப் போல அவை கொடூரமாய் உள்ளன. எனக்குத் தெரியும். நான் புரட்சிக்கு எதிராக ஏதேனும் துரோகம் இழைத்தால் அவர் என்னைக் கொன்றுவிடுவார். இரக்கமே அற்றவர். அவருக்கு இதயமே இல்லை. எஃகுப் போல கடினமானவர், உணர்ச்சிகளற்றவர். இருப்பினும் புரட்சியைக் குறித்துப் பெரும் ஆர்வமுள்ளவர். அதே சமயம் உறைபனியைப் போன்றும் குளிர்ந்தவர். தனித்த மலையுச்சியில் ஒருவன் குளிரில் விறைத்து இறக்கும்போதும், ஜன்னல் வழியே வீசும் நிலவொளியைப்போல, அவனைக் குறித்த எவ்வித அக்கறையும் கொள்ளாதவர் அவர். டயஸிடமோ அல்லது அவர் ஏவிவிடக் கூடிய கொலையாளிகளிடமோ எனக்கு எந்தப் பயமுமில்லை. ஆனால் இந்த வாலிபர் எனக்குப் பயத்தைத் தோற்றுவிக்கிறார். நான் அவரிடம் அச்சம் கொள்கிறேன். அவர் இறப்பின் மூச்சுப் போலவே எனக்குத் தோன்றுகிறார்” என்றார்.

இருப்பினும் ரிவேராவை முழுமையாக நம்பலாம் என்று வேராதான் மற்றவர்களையும் வற்புறுத்தி இணங்கச் செய்தார். ஒருசமயம் லாஸ் ஏஞ்சலெஸ் நகருக்கும், கீழ் கலிஃபோர்னியாவிற்கும் இடையிலான அவர்களது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்களது மூன்று தோழர்கள் சவக்குழியைத் தோண்டுமாறு நிர்பந்திக்கப்பட்டு, பின் அதிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும் இருவர் லாஸ் ஏஞ்சலெஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கூட்டாட்சியின் படைத்தலைவனான யுவான் அல்வராடோ ஒரு கொடிய அரக்கன். ஜன்டாவின் அனைத்துத் திட்டங்களையும் அவன் முறியடித்தான். அப்போது கீழ் கலிஃபோர்னியாவில் செயலாற்றும் புரட்சியாளர்களையும், முழுமையாகத் தேர்ச்சியடையாத தோழர்களையும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வாலிபர் ரிவேராவிற்கு அவர் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சில குறிப்புகளைக் கூறி, ஜன்டாவினர் அவரைத் தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் திரும்பி வந்தபோது, துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. யுவான் அல்வராடோ இறந்து போயிருந்தான். அவனது நெ…சில் கத்தியின் கைப்பிடி வரை ஆழமாகச் செருகப்பட்டுப் படுக்கையில் பிணமாகக் கிடந்தான்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியை விடவும் ரிவேரா அதிகப்படியாகச் செய்துவிட்டார். ஜன்டாவினருக்கு அவர் எதையும் செய்யக் கூடியவர் என்பது தெரியும். ஆனாலும் அவரை ஏதும் கேட்கவில்லை. அவரும் அது குறித்து ஒன்றும் சொல்லவில்லை. ஜன்டாவினர் ஒருவரையொருவர் விழித்துப் பார்த்து ஏதோ ஒருவிதமாக அனுமானித்துக் கொண்டனர்.

“நான் ஏற்கெனவே சொன்னேன்” என்றார் வேரா. “வேறு யாரையும் விட இந்த வாலிபரைக் குறித்து டயஸ் அச்சம் கொள்ள வேண்டும். இவர் புரட்சியைக் குறித்துத் தணியாத தாபமுள்ளவர். இவர் அதற்கெனவே படைக்கப்பட்ட கடவுளின் பிரதிநிதி.”

அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, மனதில் பெரும் கோபம் கொண்டவர் என்று மே சேத்பி கூறியிருந்தார். மற்றவர்களும் அதை உணர்ந்திருந்தனர். சில சமயங்களில் அவரது உடல்நிலையே அதற்குச் சான்றாக விளங்கியது. உதடுகள் கிழிந்தும், கன்னங்கள் கருத்தும், காதுகள் வீங்கியும் காணப்பட்டார். அவர் அவ்வப்போது சண்டை சச்சரவில் ஈடுபடுபவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏதோ ஒரு வெளியுலகில், எங்கோ அவர் சாப்பிட்டுத் தூங்கி, பணம் சம்பாதித்து, அவர்களுக்குத் தெரியாத வழிவகையில் இயங்குகிறார்.

சில காலம் கழிந்ததும் ஜன்டாவினர் புரட்சிகரமான செய்திகள் நிறைந்த சிற்றிதழ் ஒன்றை வாரந்தோறும் வெளியிட்டனர். அதற்கு அச்சுக் கோர்க்கும் பணியை ரிவேரா மேற்கொண்டார். சில சமயங்களில் அவரால் அந்த வேலையைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவரது முட்டிகள் தேய்ந்தும், உருக்குலைந்தும் போயிருந்தன. அவரது பெரு விரல்களில் காயம் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அவ்வப்போது ஏதோ ஒரு கை தளர்ந்து தொங்கி, அவரது முகம் தீவிரமடைந்து சொல்லொணா வலியைத் தாங்குவது போலிருந்தது.

“வீணாய்ப் போனவன்” என்றார் ஆர்லெனோ.

“கீழ்த்தரமான இடங்களுக்கு அடிக்கடி செல்வார் போலிருக்கிறது” என்றார் ராமோஸ்.

“ஆனால் எங்கிருந்து அவருக்குப் பணம் கிடைக்கிறது?” கேட்டார் வேரா. “இன்று, இப்போது எனக்குத் தெரிய வந்தது. அச்சிடக் காகிதம் வாங்கிய பில்லிற்கு அவர் பணம் செலுத்தியிருக்கிறார். அதுவும் நூற்றி ஐம்பது டாலர்கள்.”

“அவர் சில நாட்கள் இங்கு வருவதில்லை” என்றார் மே சேத்பி. “அதற்கு அவர் எந்த விளக்கமும் சொல்வதில்லை.”

“அவரை வேவு பார்க்க ஒரு ஆளை நியமிக்க வேண்டும்.” ராமோஸ் முன்மொழிந்தார்.

“அந்த வேலையை நான் செய்யவே மாட்டேன்” என்றார் வேரா. “பின் நீங்கள் என்னைப் பார்க்கவே முடியாது போகலாம், என்னை புதைக்கும் வேலை கூட மிச்சமாகும். அவருக்குத் தீவிர வெறியுள்ளது. அந்த வெறித்தனமான நடவடிக்கையில் குறுக்கிட கடவுளைக் கூட அவர் அனுமதிக்க மாட்டார்.”

“அவருக்கு முன்னால் நான் குழந்தையைப்போல் உணர்கிறேன்” ராமோஸ் ஒப்புக்கொண்டார்.

“என்னைப் பொறுத்தவரை அவர் சக்திவாய்ந்த காட்டுமிராண்டி, காட்டு ஓநாய், கடிக்கும் கட்டுவிரியன், கொட்டும் பூரான்” என்றார் ஆர்லெனோ.

“அவர் புரட்சியின் அவதாரம்” என்றார் வேரா. “அவர் அதன் உயிரும் நெருப்பும். தீராத வேட்கை. பழிதீர்க்கும் உணர்வின் அறைகூவல். சத்தமின்றிப் படுகொலையும் புரியும் ஆற்றல். அமைதியான இரவில் தோன்றி அழித்தொழிக்கும் தேவதூதன்.”

“நான் அவருக்காக அழவும் கூடும்” என்றார் மே சேத்பி. “அவருக்கு யாரையும் தெரியாது. எல்லோரையும் வெறுக்கிறார். நம்மை அவர் பொறுத்துக்கொள்கிறார். நாம் அவரது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான பாதை. அவர் தனித்தவர். தனிமையால் வாடுபவர்.” அவரது குரல் உடைந்து கிட்டத்தட்ட அழுதுவிடுவார் போலிருந்தது. கண்களும் ஒளியிழந்து மங்கின.

ரிவேராவின் வழிமுறைகளும், வரும் போகும் காலங்களும் உண்மையிலேயே மர்மாயிருந்தன. தொடர்ந்து ஒரு வாரம் அவர்களது கண்களில் தென்படாமலேயே இருந்த சமயங்களும் உண்டு. ஒருமுறை மாதம் முழுக்கவும் அவர் வரவேயில்லை. அவ்வாறாக நிகழும் போதெல்லாம், அதை நிறைவு செய்யும் விதமாக, வருகை தரும் நாளில் எவ்விதப் பேச்சுமின்றி, எவரும் அறியாத வகையில் தங்கக் காசுகளை மே சேத்பியின் மேஜையில் வைப்பார். அதன் பின் நாட்கள், வாரங்களாக அவரது முழு நேரத்தையும் ஜன்டாவிலேயே கழிப்பார். இருப்பினும் மீண்டும் கால வரையற்று நாளின் முக்கிய நேரங்களில், அதுவும் காலைப் பொழுதிலிருந்து பிற்பகல் வரை கண் காணாமல் மறைந்து விடுவார். இவ்வாறான சமயங்களில் அதிகாலையில் வந்து, பின்னிரவு வரை இருப்பார். அவ்வாறான ஒரு சமயத்தில் ஆர்லெனோ அவரை ஒருமுறை நள்ளிரவில் பார்த்தபோது, வீங்கிய முட்டிகளுடன் உதடுகளில் வழியும் ரத்தத்துடன் அச்சுக் கோர்த்துக்கொண்டிருந்தார்.

2

நெருக்கடியான ஒரு காலகட்டம் தோன்றியது. புரட்சி நிகழுமா, நிகழாதா என்பது ஜன்டாவைச் சார்ந்திருந்தது. ஜன்டாவிற்கோ பணத் தட்டுப்பாடு மிகுந்திருந்தது. முன் எப்போதையும் விடத் தற்போது பணம் மிக அவசியமாயிருந்தது. ஆனால் அது கிடைப்பது கடினமாயிருந்தது. தேசாபிமானிகள் கடைசி செனட்டையும் வழங்கி விட்டனர். அவர்களால் அதற்கு மேல் தர இயலாது. ரயில் தண்டவாளம் பதிக்கும் தொழிலாளிகள், சட்டத்திலிருந்து தப்பி ஒளிந்து வாழும் மெக்ஸிகோ கொத்தடிமை ஏவலாட்கள் ஆகியோர் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் பாதியை ஜன்டாவிற்கு வழங்கினர். ஆனால் அதற்கு மேலும் அதிகமாகப் பணம் தேவையாயிருந்தது.

மனமுடைந்திருந்த காலங்கள், சதித் திட்டங்கள் தீட்டிய காலங்கள், நாச வேலைகளில் ஈடுபட்ட காலங்கள் அனைத்திலும் கடுமையாகப் பாடுபட்டதன் விளைவாகத் தற்போது அவற்றின் பயன்கள் கிடைக்கக்கூடிய நிலை அணுகி வந்தது. காலம் கனிந்திருந்தது. புரட்சி தராசுமுள் போல ஊசலாடிக் கொண்டிருந்தது. ஓர் இறுதி சாகச முயற்சி, ஒரேயொரு முன் நகர்த்துதல், தராசு முள்ளைச் சாய்த்து புரட்சியைத் தொடங்கி விடும். அவர்களுக்கு மெக்ஸிக்கோவைத் தெரியும். புரட்சி தொடங்கி விட்டால் பின் விரைந்து அதுவாகவே பரவி விடும். அதன் பின் டயஸின் அரசு இயந்திரங்கள் சீட்டுக்கட்டு சாய்வதைப்போல விழுந்துவிடும்.

எல்லையோரங்கள் போராடத் தயார் நிலையிலிருந்தன. ஓர் அமெரிக்கர், சர்வதேச உழைப்பாளர் சங்கத்தைச் சார்ந்த நூறு ஆட்களோடு காத்திருந்தார். எல்லையைக் கடந்து முன்னேறும்படியாக ஒரு வார்த்தை கூறினால் போதும், உடனே அவர் தனது ஆட்களுடன் கீழ் கலிஃபோர்னியாவில் தாக்குதலைத் தொடங்கி வென்றுவிடுவார். ஆனால் அவருக்கு ஆயுதங்கள் தேவை. அட்லாண்டிக் சமுத்திரம் வரை உள்ள அனைவரிடமும் ஜன்டாவினர் தொடர்பு கொண்டிருந்தனர். அனைவருக்கும் தேவை ஆயுதங்கள்தான்.

வீரச் செயல்களில் நாட்டமுடைய துணிவுமிக்கவர்கள், வாய்ப்பைப் பயன்படுத்தி அனுகூலம் தேடிக்கொள்ள முயலும் ராணுவப் படைவீரர்கள், வேதனையுற்ற அமெரிக்கத் தொழிற்சங்க ஊழியர்கள், சோஷலிஸ்ட்கள், அராஜகவாதிகள், கொள்ளையர்கள், போக்கிரிகள், மெக்ஸிகோவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், கொத்தடிமைப் பணியிலிருந்து தப்பிய ஏவலாட்கள், கோர் டி’லேனிலும், கொலராடோவிலும் கசையடி பெறும் சுரங்கப் பணியாளர்கள் போன்ற அனைவரும் பழி வாங்கும் ஆவலுடன் போரிடக் காத்திருந்தனர். தவிரவும் கிறுக்குப் பிடித்த, குழப்பம் நிறைந்த நவீன உலகால் வஞ்சிக்கப்பட்டுப் புறந்தள்ளப்பட்ட வெறியர்கள் ஆகிய எல்லோருக்கும் தேவைப்பட்டவை துப்பாக்கிகளும் தோட்டாக்களும். துப்பாக்கிகள், தோட்டாக்கள் தேவை எனும் பெருங்குரல் முடிவேயற்று, நிரந்தரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

மேற்கூறப்பட்ட பழிவாங்கும் குணமுடைய பல்வேறு வகையான மக்களை, ஏழ்மையில் வாடுபவர்களை எல்லைக்கு ஆயுதங்களோடு அனுப்பிவைத்தால் போதும், புரட்சி நிகழ்ந்து விடும். நாட்டின் வட எல்லையிலுள்ள துறைமுகமும், சுங்கச் சாவடியும் கைப்பற்றப்படும். டயஸால் எதிர்க்க முடியாது. டயஸ் தனது படையினரை வட பகுதிக்கு அனுப்பத் துணிய மாட்டார். ஏனெனில் தென்பகுதியை அவர் காக்க வேண்டும். இருப்பினும் தெற்கிலும் புரட்சித் தீ பரவும். மக்கள் எழுச்சியுறுவார்கள். பாதுகாவல் படைகள் தாக்கப்பட்டு புறநகரங்கள் ஒவ்வொன்றாக கைப்பற்றப்படும். அதன் பின் மாநகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பிடிபடும். இறுதியாக ஒவ்வொரு திசையிலிருந்தும், புரட்சியின் வெற்றிப்படைகள் டயஸின் கடைசி அரணான மெக்ஸிகோ நகரையே முற்றுகையிடும்.

ஆனால் பணமில்லை. ஆள் பலமிருந்தது. காத்திருக்கும் பொறுமையின்றி ஆத்திர அவசரப்படும் ஆட்களிருந்தனர். அவர்களுக்குத் தேவை ஆயுதங்கள். ஆயுதங்களைக் குறிப்பிட்ட இடத்தில் விநியோகிக்கக்கூடிய விற்பனையாளர்களையும் ஜன்டாவினருக்குத் தெரியும். ஆனால் புரட்சியை இந்தளவு வளர்த்தெடுத்ததில் ஜன்டாவின் வருவாய் அனைத்தும் தீர்ந்து விட்டது. கடைசி டாலர் வரை செலவழிக்கப்பட்டுவிட்டது. பசியோடு அல்லல்படும் தேசாபிமானிகளிடமிருந்து முழுவதையும் கறந்தாயிற்று. துணிவுடன் மேற்செல்ல இயலாத நிலையில் புரட்சியின் தராசுமுள் ஊசலாடிக் கொண்டிருந்தது. தேவை ஆயுதங்கள்! தோட்டாக்கள்! கரமுரடான புரட்சிப் படையினருக்கு ஆயுதங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் எவ்வாறு?

அரசால் கைப்பற்றப்பட்ட தனது நிலங்களைக் குறித்து வருந்தினார் ராமோஸ். இளமையில் ஊதாரித்தனமாக செலவழித்துவிட்ட பணத்தைக் குறித்து ஓலமிட்டார் ஆர்லெனோ. கடந்த காலங்களில் ஜன்டா மேலும் சிக்கனமாக செலவழித்திருக்கலாமோ என்று எண்ணினார் மே சேத்பி.

“மெக்ஸிக்கோ விடுதலை அடைவதும், அடையாததும் அற்பமான சில ஆயிரம் டாலர்களைப் பொறுத்துள்ளது என்பதை எண்ணுவதற்கே சங்கடமாயுள்ளது என்றார்” பாலினோ வேரா.

நம்பிக்கையற்ற நிலை அனைவரது முகபாவங்களிலும் வெளிப்பட்டது. இறுதியாக அவர்கள் ஜோஸ் அமரில்லோவை நம்பியிருந்தனர். அவர் அண்மையில்தான் புரட்சியின் ஆதரவாளராக மாறியிருந்தார். பணம் தருவதாக வாக்குறுதியும் அளித்திருந்தார். ஆனால் ச்சுவாவாவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு, அவரது வீட்டுச் சுவரிலேயே நிற்க வைத்து சுடப்பட்டார் என்னும் தகவலும் அண்மையில்தான் தெரியவந்தது.

ரிவேரா முட்டியிட்டபடி தரையைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தேய்ப்பதை நிறுத்தித் தலையை நிமிர்த்திப் பார்த்தார். அவரது கைகளில் சோப்பு நுரை கலந்த அழுக்கு நீர் படிந்திருந்தது.

“ஐயாயிரம் போதுமானதா?” என்றார் அவர்.

அவர்கள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தனர். வேரா தலையாட்டியபடியே வார்த்தைகளை விழுங்கினார். அவருக்குக் குரலே எழவில்லை. அதே கணத்தில் அவருக்குப் பெரும் நம்பிக்கையும் தோன்றியது.

“ஆயுதங்களை அனுப்புமாறு சொல்லி விடுங்கள்” என்றார் ரிவேரா. “மூன்று வாரங்களில் நான் ஐயாயிரம் கொண்டு வருகிறேன். நல்லது! குறைந்த காலமே உள்ளது. சண்டையிடுபவர்களுக்கு உகந்த வெயில் காலமிது. மேலும் என்னால் முடிந்தது அவ்வளவுதான்.” அதுவரையிலும் அத்தனை வார்த்தைகளைத் தொடர்ச்சியாக அவர் பேசியது அதுவே முதல் முறை. அதற்கான பழியும் ஜன்டாவினரையே சாரும்.

வேரா தனது மனதில் எழும்பிய நம்பிக்கையைக் குறித்துக் குழம்பினார். அவரால் நம்பவே முடியவில்லை. புரட்சிப் பணியில் இறங்கியதிலிருந்து அவரது மனதிற்குகந்த பல நம்பிக்கைகள் சிதறி உடைந்திருந்தன. அவர் கந்தல் ஆடையுடன் தரையைத் தேய்த்துக் கழுவும் ரிவேராவை நம்பினார். ஆனால் முழுமையாக நம்பவும் துணியவில்லை.

“உனக்குப் பித்துப் பிடித்துள்ளது” என்றார்.

“மூன்று வாரங்கள்” என்றார் ரிவேரா. “ஆயுதங்களை வரவழையுங்கள்.”

அவர் எழுந்து மடித்திருந்த சட்டையின் கைப்பகுதியை நீட்டிக் கோட்டை அணிந்துகொண்டார். “ஆயுதங்களுக்குச் சொல்லி விடுங்கள்” என்றார். “நான் போகிறேன்.”

ஜாக் லண்டன்

3

அவசர அவசரமாகப் பரபரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கெட்ட வார்த்தைகளில் பேசித் திட்டியதும், கெல்லியின் அலுவலகத்தில் ஒருநாள் இரவில் கூடினர். கெல்லிக்குப் பல வேலைகள். மேலும் அப்போது அதிர்ஷ்டம் அவர் பக்கமில்லை. நியூயார்க்கிலிருந்து டேனி வார்டை வரவழைத்திருந்தார். அவரை பில்லி கார்த்தேயுடன் குத்துச்சண்டையிட ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சிக்கு அன்றிலிருந்து மூன்று வாரங்களும் இரண்டு நாட்களுமே மீதியிருந்தன. ஆனால் கார்த்தே கடுமையான காயத்துடன் படுத்திருந்தார். விளையாட்டுச் செய்திகள் எழுதும் நிருபர்களுக்குக் கூட அந்த விஷயம் தெரியாதபடி மறைத்திருந்தார் கெல்லி. அவரது இடத்தை நிரப்ப வேறு யாருமே கிடைக்கவில்லை. கிழக்கேயுள்ள குறைந்த எடைப் பிரிவில் உள்ள அனைவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அவர்களோ வேறு ஒப்பந்தத்தில் இருந்தபடியால் தேதி ஒத்து வரவில்லை. ஆனால் தற்போது லேசான ஒரு நம்பிக்கை உதித்திருந்தது. ரிவேரா அவருடன் கலந்து பேச வந்திருந்தார்.

“உனக்கு தைரியம் அதிகம்தான்” என்றார் கெல்லி ஒரு முறை ரிவேராவை ஆழமாகப் பார்த்து.

ரிவேராவின் கண்களில் வெறுப்பு தொற்றியிருந்தது. ஆனால் முகத்தில் எவ்வித உணர்ச்சியுமில்லை. “நான் வார்டைத் தோற்கடிப்பேன்” என்பதை மட்டும் சொன்னார்.

“எப்படித் தெரியும்? அவர் சண்டையிடுவதை நீ பார்த்திருக்கிறாயா?”

ரிவேரா இல்லை என்னும் விதமாகத் தலையசைத்தார்.

“அவர் கண்களை மூடிக் கொண்டு ஒரே கையால் உன்னை அடித்து வீழ்த்துவார்.”

ரிவேரா வெறுமே தோள்களைத் தூக்கிக் குலுக்கினார்.

“இதுவரை யாரிடம் சண்டையிட்டிருக்கிறாய்?” மைக்கேல் கெல்லி கேட்டார்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவரின் சகோதரர் மைக்கேல். அவர் யெல்லோ ஸ்டோன் அறையில் குத்துச் சண்டை ஆட்டத்தின் பந்தயங்களை நடத்தி வருபவர். அவ்வாறாக நிறைய பணமும் சம்பாதித்திருந்தார்.

ரிவேரா பதிலேதும் சொல்லாமல் ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு பார்வையை அவருக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவரின் செயலாளர் குறிப்பிடத்தக்க அளவில் குத்துச்சண்டை விளையாட்டில் ஈடுபாடுடைய இளைஞர். அவர் எல்லோருக்கும் கேட்கும் வகையில் ஏளனமாகச் சிரித்தார்.

“சரி ராபர்ட்ஸ், உங்களுக்குத் தெரிந்த விஷயம்தானே,” கெல்லி பகைச் சூழலில் நிலவிய அமைதியைக் குலைக்கும் விதமாகத் தொடங்கினார். “அவர் இங்கு வருவார். நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அமைதியாக இருங்கள். இவரைப் பார்த்தால் ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லாதவர் போல்தான் தோன்றுகிறது. பார்வையாளர்களுக்குக் கீழ்த்தரமான ஒரு குத்துச்சண்டையை நாம் வழங்க முடியாது. வளையத்திற்கருகே அமர்ந்து சண்டையை ரசிப்பதற்கு நுழைவுச் சீட்டின் விலை பதினைந்து டாலர்கள். அது உங்களுக்கே தெரியும்!”

ராபர்ட்ஸ் வரும்போதே சிறிது குடித்திருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவர் தளர்ந்த மூட்டுகள் கொண்ட மெலிந்த, உயரமான மனிதர். உற்சாகமற்ற அவரது பேச்சைப் போலவே நடையும் சோர்ந்து மந்தமாயிருக்கும்.

கெல்லி நேரே விஷயத்திற்குள் போனார். “இங்கே பாருங்கள் ராபர்ட்ஸ். இந்தச் சின்ன மெக்ஸிகனை நீங்கள்தான் கண்டுபிடித்ததாகப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். கார்த்தே கை உடைந்திருப்பதும் உங்களுக்குத் தெரியும். இந்தச் சின்ன ஆள் இன்று இங்கே வந்து, கார்த்தேவிற்குப் பதிலாக நான் சண்டையிடுகிறேன் என்று துணிந்து சொல்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“அதனால் என்ன? பரவாயில்லை கெல்லி” என்றார் ராபர்ட்ஸ் நிதானமாக. “இவரால் தாக்குப்பிடித்து எதிர்த்துச் சண்டையிட முடியும்.”

“சரிதான்! அடுத்து வார்டைத் தோற்கடிப்பார் என்றும் சொல்வீர்கள் போலிருக்கிறது.” கெல்லி வெடித்தார்.

“இல்லை. நான் அப்படித் தீர்மானமாகச் சொல்ல மாட்டேன். வார்ட் உயர்தரமானவர். களத்தில் பெரும் திறமைசாலி. ஆனால் அவரால் ரிவேராவை சுலபமாக வீழ்த்தி விட முடியாது. எனக்கு ரிவேராவைத் தெரியும். யாராலும் அவரை எளிதாகத் துன்புறுத்திவிட முடியாது. அவ்வாறாக ஒருபோதும் நான் கண்டதேயில்லை. அவர் இரண்டு கைகளாலும் சண்டையிடக் கூடியவர். எந்த நிலையிலிருந்தும் அவரால் வலிமையாகத் தாக்க முடியும்.”

“அதையெல்லாம் விடுங்கள். பார்வையாளர்களைக் கவரக் கூடிய விதத்தில் அவரால் நீடித்துச் சண்டையிட முடியுமா? உங்கள் வாழ்நாள் முழுக்கப் பல வீரர்களைத் தயார் செய்திருக்கிறீர்கள். உங்களது தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன். இவரது சண்டை பார்வையாளர்கள் செலுத்தும் பணத்திற்கு ஈடாகுமா?”

“நிச்சயமாக! அது மட்டுமல்ல. இவர் வார்டுக்கு பெரும் தொல்லையைத் தருவார். உங்களுக்கு இந்த வாலிபரைத் தெரியாது. நான்தானே அவரைக் கண்டுபிடித்தேன். களத்தில் அசரவே மாட்டார். பேய்த்தனமாகச் சண்டையிடுவார். யாரேனும் கேட்டால் மிகுந்த திறமைசாலி என்று தைரியமாகக் கூறுங்கள். உள்ளூர் திறமையைக் காட்டி அவர் வார்டை நிமிர்ந்து உட்காரச் செய்வார். நீங்கள் எல்லோருமே அதைத்தான் செய்ய வேண்டியிருக்கும். இவர் வார்டை தோற்கடிப்பார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இவர் சண்டையிடுவதைப் பார்த்ததும் அவரது திறமையை நீங்களே உணர்வீர்கள்.”

“அப்படியானால் சரி!” கெல்லி தனது செயலாளரின் பக்கமாகத் திரும்பினார். “வார்டிடம் தொலைபேசியில் பேசி வரச் சொல்லுங்கள். நமது பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்குமானால் தகவல் தெரிவிப்பதாக ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அவர் யெல்லோ ஸ்டோனில் தான் இருக்கிறார். தற்பெருமை பேசி ரசிகர்களைக் கவர முயன்று கொண்டிருப்பார்.” பின் கெல்லி ராபர்ட்ஸிடம், “மது தரட்டுமா?” என்றார்.

ராபர்ட்ஸ் விஸ்கி அருந்தித் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். “எவ்வாறு இந்தச் சின்ன வாலிபரைக் கண்டுபிடித்தேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவில்லையே. ஒருசில வருடங்களுக்கு முன்னர் எங்கள் பயிற்சிக்கூடத்திற்கு வந்திருந்தார். அப்போது டிலானியோடு சண்டையிட நான் ப்ரேயினைத் தயார் செய்து கொண்டிருந்தேன். ப்ரேயின் நயவஞ்சகமானவர். அவரது குணநலனில் கருணை என்பதற்குத் துளியும் இடமில்லை. அவர் கூட்டாளிக்குக் கொடூரமான முறையில் ஏதோ தவறிழைத்து விட்டார். எனவே அவருடன் மோத எவரும் தயாராயில்லை. அப்போது பசியினால் மெலிந்திருந்த இந்த மெக்ஸிக்கன் கண்ணில் பட்டார். எனக்கும் வேறு வழியில்லை. எனவே இவரைப் பிடித்து கையுறைகளைத் திணித்து உள்ளே நுழைத்தேன். மூர்க்கமிருந்தது. ஆனால் பக்குவமும் பலமுமில்லை. குத்துச்சண்டையின் அடிப்படைகள் கூட தெரியாதிருந்தார். ப்ரேயின் அவரை அடித்துத் துவைத்துத் துண்டாடினார். இருப்பினும் இரண்டு கடுமையான சுற்றுகளைத் தாங்கிய பின்னர் மயக்கமடைந்தார். பசிதான் காரணம். வேறொன்றுமில்லை. அப்போது அடையாளமே தெரியாத வகையில் உருக்குலைந்திருந்தார். நான் அவருக்கு அரை டாலர் பணம் கொடுத்து வயிறார உண்ணச் செய்தேன். அப்போது அவர் உணவுண்ட வேகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இரண்டு நாட்களாக எதையுமே சாப்பிட்டிருக்கவில்லை. அத்தோடு அவரை மீண்டும் காணவே முடியாது என்றே நான் நினைத்தேன். அடுத்த நாள் மீண்டும் வந்தார். கடும் வலியினால் விறைத்திருந்தார். ஆனால் மற்றொரு அரை டாலருக்கும், வயிறார உண்பதற்கும் தயாராயிருந்தார். மேலும் காலம் கடந்ததும் அவருக்குத் திறமைக் கூடியது. பிறவிக் குத்துச்சண்டை வீரர். பின்னர் நம்பவே இயலாத வகையில் மூர்க்கமும் வலிமையும் மிக்கவரானார். இதயமே இல்லாதவர். பனிக்கட்டி போலக் குளிர்ந்தவர், உணர்ச்சிகளற்றவர். எனக்குத் தெரிந்த நாள்முதல் பத்து வார்த்தைகளுக்கு மேல் தொடர்ச்சியாக அவர் பேசியதேயில்லை. அப்போது மரம் அறுப்பதுதான் அவரது அன்றாட வேலை.”

“நான் அவரைப் பார்த்திருக்கிறேன்” செயலாளர் கூறினார். “உங்களுக்காக நிறைய வேலைகள் செய்திருக்கிறார்.”

“அனைத்துப் பெரிய, சின்ன ஆட்களும் அவரோடு மோதியிருக்கின்றனர்” ராபர்ட்ஸ் மேலும் பேசினார். “அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டார். அவர்களில் சிலரை அவரால் எளிதாகத் தோற்கடிக்க இயலும். ஆனால் அவருக்கு அதில் நாட்டமில்லை. அவருக்கு இந்த ஆட்டமே பிடிக்கவில்லையோ என்று கூட நான் நினைத்தேன். அவ்வாறாகத்தான் அவர் நடந்துகொண்டார்.”

“கடந்த சில மாதங்களாகச் சிறிய க்ளப்புகளில் நிறைய சண்டையிட்டிருக்கிறார்” கெல்லி சொன்னார்.

“நிச்சயமாக! ஆனால் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. திடீரென அவருக்கு இதில் நாட்டம் தோன்றி விட்டது. மின்னல் கீற்றுப் போல அங்குச் சென்று உள்ளுர் வீரர்களைத் துடைத்தெறிந்து விட்டார். பணம் தேவைப்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். சம்பாதிக்கவும் செய்தார். ஆனால் இப்போது அவர் அணிந்திருக்கும் ஆடையைப் பார்த்தால் நிறைய சம்பாதித்ததுபோல் தெரியவில்லை. அவர் தனித்தன்மை உடையவர். அவர் என்ன செய்கிறார்? எப்படி நேரத்தைக் கழிக்கிறார்? என்பது யாருக்கும் தெரியாது. சண்டையில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு நாளும் வருவார். சண்டை முடிந்ததும் காணாமல் போய் விடுவார். சில சமயங்களில் வாரக்கணக்கில் கண் காணாதிருப்பார். ஆனால் யாருடைய அறிவுரையையும் கேட்க மாட்டார். இவருக்கு மேலாளராக இருக்கக்கூடியவர் பெரும் சொத்தே சம்பாதிக்க முடியும். ஆனால் யாரையும் அருகில் நெருங்கவிட மாட்டார். சண்டை குறித்துப் பேச்சுவார்த்தைகள் முடிந்ததும் கிடைக்கக்கூடிய வெற்றிக்காக எவ்வாறு உழைப்பார் என்பதை நீங்களே இனி பார்ப்பீர்கள்.”

இந்தக் கட்டத்தில் டேனி வார்ட் வந்து சேர்ந்தார். அவரது குழுவே அலாதியாயிருந்தது. அவரது மேலாளரும் பயிற்சியாளரும் உடனிருந்தனர். மகிழ்ச்சியலை கொந்தளித்து வீசும் தென்றலாய் உள்ளே நுழைந்தார். தனது நட்பான பண்பை வெளிப்படுத்தி அனைவரையும் வென்றெடுத்தார். வாழ்த்துகள் பறந்தன. இங்கே ஒரு வேடிக்கைப் பேச்சு, அங்கே ஒரு பதில், ஒருவருக்குப் புன்னகை அல்லது வெடிச்சிரிப்பு என அனைவரோடும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார். இது அவரது நடைமுறை. ஆனால் முற்றிலும் மனமார்ந்து அல்ல. அவர் நல்ல நடிகர். வாழ்வெனும் ஆட்டத்தில் வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்க, நட்பாகப் பேசிப் பழகுவது பெரும் மதிப்பு வாய்ந்த சொத்து என்பதை அவர் கண்டறிந்திருந்தார். ஆனால் உள்ளூர முனைந்து செயலாற்றும் காரியவாதி. கொடூரமான சண்டைக்காரர். மற்றதெல்லாம் முகமூடி, வெளிவேஷம். அவரை அறிந்தவர்கள், அவரோடு பழகியவர்கள் சொல்வது அடிப்படை விஷயங்களில் மிகவும் குறியாக இருப்பார். ஆதாயம் கிடைக்குமிடத்தில் டேனி விரைந்து ஆஜர். தொழில் குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் தவறாமல் டேனி பங்கேற்பார். சிலர் அழுத்தந் திருத்தமாகச் சொல்வது அவரது மேலாளர் வெறும் பெயரளவில்தான். அவர் டேனியின் குரலாகச் செயல்படுபவர் மட்டுமே. மேலாளரின் அதிகாரம் அந்த மட்டிலேயே இருந்தது.

ரிவேராவின் போக்கு மாறுபட்டது. செவ்விந்திய ரத்தம். அதில் ஸ்பானியமும் கலந்திருந்த நாளங்கள். அவர் ஒரு மூலையில் ஆடாமல், அசையாமல் அமர்ந்திருந்தார். அவரது கருத்த விழிகள் மட்டும் ஒவ்வொரு முகமாகப் பார்த்தவண்ணம் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தன.

“ஆக இவர்தானா அது?” என்றவாறே டேனி தனக்கு எதிராகச் சண்டையிட முன்மொழியப்பட்டுள்ளவரின் தரத்தை மதிப்பீடு செய்யும் கண்களால் பார்வையிட்டார். “நலமா நண்பா?” என்றார்.

ரிவேராவின் கண்கள் விஷத்தை உமிழ்ந்து எரிந்தன. அவரது நட்பை அங்கீகரித்தற்கான எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை. அவர் எல்லா அமெரிக்கர்களையும் வெறுத்தார். அதிலும் எப்போதும் இல்லாத வகையில் இவரைக் கண்டதுமே கடும் வெறுப்பு அவருக்குள் தோன்றியது.

“கடவுளே!” என்ற டேனி வேடிக்கையாக கெல்லியிடம் முறையிட்டார். “இந்த செவிட்டு ஊமையிடமா நான் சண்டையிடுவேன் என்று எதிர்பார்த்தீர்கள்?” சிரிப்பலை ஓய்ந்ததும் அடுத்து ஒரு வேடிக்கையை உதிர்த்தார். “இவர்தான் தலைசிறந்த வீரராக உங்களுக்குக் கிடைத்தார் என்றால் லாஸ் ஏஞ்சலெஸிற்குக் கஷ்ட காலம்தான். எந்த சிறுவர் பள்ளியில் இவரைப் பிடித்தீர்கள்?”

“அவர் வல்லமைமிக்க வாலிபர் டேனி, நான் உறுதியளிக்கிறேன்,” என்று ராபர்ட்ஸ் ரிவேராவிற்காக வாதாடினார். “தோற்றத்தை வைத்துக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.”

“ஏற்கெனவே பாதி அரங்கு நிறையும் அளவிற்கு டிக்கெட்டுகள் விற்று விட்டன” கெல்லி மன்றாடினார். “நீங்கள் இவரை ஏற்க வேண்டும் டேனி. தற்போது எங்களுக்குக் கிடைத்தவர்களில் இவரே சிறந்தவர்.”

டேனி மீண்டும் ஒருமுறை அலட்சியமாகக் குறை காணும் கண்களால் ரிவேராவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டார்.

“இவருக்கு நெருக்கடி தராமல் மிதமாக சண்டையிட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அதிலேயே இவர் வீழ்ந்து விடாதிருக்க வேண்டும்.”

ராபர்ட்ஸ் செருமினார்.

“நீங்கள் கவனமாயிருக்க வேண்டும்.” டேனியின் செயலாளர் குறுக்கிட்டு எச்சரித்தார். “அலட்சியமாக சண்டையிட வேண்டாம். எதிர்பாராத வகையில் விரைந்து செயலாற்றி ஏதேனும் ஊறு விளைவித்து விடக்கூடும்.”

“ஓ! சரி சரி. நான் கவனமாயிருப்பேன்.” டேனி முறுவலித்தார். “முதலில் கடுமையாக அடித்துவிட்டு, பின் பார்வையாளர்கள் சந்தோஷப்படும் வகையில் நிதானமாக அவரை நடத்திச் செல்கிறேன். பதினைந்து சுற்றுகள் தள்ளலாம். அதற்குப் பின் படுக்கைதான். சரிதானே கெல்லி?”

“அது போதும்” என்று கெல்லி பதிலளித்தார். “அது உண்மையான சண்டையாகப் பார்வையாளர்களுக்குத் தெரிந்தால் சரி.”

“அடுத்துத் தொழிலைக் கவனிப்போம்.” டேனி மனக் கணக்கிட்டு சற்றுத் தாமதித்தார். “சரி! கார்த்தேவிடம் பேசியது அறுபத்தி ஐந்து சதவிகிதம். இப்போது வேறுவிதமாகப் பகிர்ந்துக் கொள்ளலாம். எனக்கு எண்பது சதவிகிதம் போதும்.” மேலாளரிடம், “சரிதானே?” என்றார். மேலாளர் ஆமோதித்தார்.

“இங்கே கவனி. உனக்குப் புரிந்ததா?” கெல்லி ரிவேராவிடம் கேட்டார்.

ரிவேரா இல்லையென்னும் விதமாகத் தலையசைத்தார்.

“சரி. இப்படியாக வைத்துக் கொள்வோம்,” கெல்லி விளக்கினார். “நுழைவுச் சீட்டு வசூலில் அறுபத்தி ஐந்து சதவிகிதம் மொத்தப் பணம். நீ புது ஆள். யாருக்கும் அறிமுகமில்லை. நீயும் டேனியும் அதில் பங்குப் பிரித்துக் கொள்ளலாம். உனக்கு இருபது. டேனிக்கு எண்பது. இது முறையான பங்கீடு தானே ராபர்ட்ஸ்?”

“முறையான பங்கீடுதான் ரிவேரா,” ராபர்ட்ஸ் ஏற்றுக் கொண்டார். “நீ இன்னும் பிரபலமாகவில்லை.”

“வசூலில் அறுபத்தி ஐந்து சதவிகிதம் என்றால் எவ்வளவு பணம்?” ரிவேரா கேட்டார்.

“ஓ! ஒருவேளை ஐயாயிரம் அல்லது எட்டாயிரமாகக் கூட உயரலாம்,” டேனி நடுவில் நுழைந்து விளக்கினார். “கிட்டத்தட்ட அந்தளவு. அதில் உன் பங்கு ஆயிரம் அல்லது ஆயிரத்து அறுநூறாக இருக்கலாம். என் போன்ற பிரபலமானவர்களோடு மோதி வீழ்வதற்கு அதுவே அதிகம்தான். என்ன சொல்கிறாய்?”

பின் ரிவேரா சொன்னதைக் கேட்டு எல்லோரும் பேச்சு மூச்சற்றுப் போயினர்.

“பங்கு பிரிக்க வேண்டாம். சண்டையில் ஜெயிப்பவருக்கே முழுத் தொகையும்!” என்றார் ரிவேரா முடிவான குரலில்.

மயான அமைதி நிலவியது.

“குழந்தை தனது கையிலிருந்து மிட்டாய் தருவது போல” டேனியின் மேலாளர் அறிவித்தார்.

டேனி மறுக்கும் விதமாகத் தலையசைத்தார். “வெகு காலமாய் நான் இந்த ஆட்டத்திலிருக்கிறேன்” என்று அவர் விளக்கினார். “நடுவரைக் குறித்தோ அல்லது இங்கிருக்கும் குழுவினரைக் குறித்தோ நான் சந்தேகப்படவில்லை. சில வேளைகளில் யார் வென்றாக வேண்டும் என்பதைப் பந்தயக்காரர்களும், கணக்கெழுதுபவர்களும் முன்கூட்டியே தீர்மானித்து ஆட்டத்தை ஏற்பாடு செய்வார்கள். ஆனால் அவ்வகையான போட்டிகள் என்னைப் போன்ற சண்டைக்காரர்களுக்கு ஒத்துவராது. நான் மிக எச்சரிக்கையாகப் போட்டியிடுபவன். எனக்கு யாரும் கட்டளையிட முடியாது. சண்டையிடுவதற்கு முன்பாக என் கை திடீரென ஒடிந்து போகலாம். அல்லது யாரேனும் ஒருவர் கொத்தாக மயக்க மருந்தை உணவிலோ பானத்திலோ கலந்து எனக்குத் தந்து விடலாம்.” அவர் உளமார மறுக்கும் விதமாகத் தலையசைத்தார். “தோற்றாலும் ஜெயித்தாலும் எனது பங்கு எண்பது சதவிகிதம். என்ன சொல்கிறாய் மெக்ஸிகன்?”

ரிவேரா மறுக்கும் விதமாகத் தலையசைத்தார்.

டேனி கோபத்துடன் வெடித்தெழுந்தார். இப்போது அவருக்குப் பரிச்சயமான அடிப்படை விஷயங்களில் இறங்கினார். “அழுக்குப் பிடித்த அற்ப மெக்ஸிகனே, இப்போதே உன்னை அடித்து நொறுக்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு.”

ராபர்ட்ஸ் நிதானமாக உடலை அசைத்தபடி நகர்ந்து இரு பகைவர்களுக்கும் இடையே நிலைப்படுத்திக் கொண்டார்.

“முழுப் பங்கும் ஜெயிப்பவருக்கே!” ரிவேரா மகிழ்ச்சியற்ற குரலில் மீண்டும் சொன்னார்.

“ஏன் அதில் நீ பிடிவாதமாக இருக்கிறாய்?” டேனி கேட்டார்.

“என்னால் உன்னை வீழ்த்த முடியும்” நேரடியாக ரிவேரா பதில் சொன்னார்.

டேனி அங்கேயே தனது கோட்டைக் கழற்ற முனைந்தார். ஆனால் அவரது மேலாளருக்குத் தெரியும் அது வெறும் நாடகம். கூடியிருந்தோர் அவரை சமாதானப்படுத்துவதை ஏற்றார் டேனி. கோட்டைக் கழற்றவில்லை. அங்கிருந்த எல்லோரும் அவர் சார்பாகவே இருந்தனர்.

ரிவேரா தனித்து நின்றார்.

“முட்டாள் பயலே! இங்கே பார்” கெல்லி வாதத்தைத் தொடங்கினார். “உன்னை யாருக்கும் தெரியாது. பேரும் புகழும் அற்றவன் நீ. கடந்த சில மாதங்களாக உள்ளூர் வீரர்களை வீழ்த்தியிருக்கிறாய். அது எங்களுக்கும் தெரியும். ஆனால் டேனி சாதனையாளர். அவரது அடுத்த சண்டை மாநிலத்திலேயே முதன்மை வீரருக்கான தகுதியைப் பெறுகிற போட்டி. நீ எவருமே அறியாத புதுமுகம். லாஸ் ஏஞ்சலெஸிற்கு வெளியே உன்னை யாரும் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள்.”

“இந்த சண்டைக்குப் பிறகு கேள்விப்படுவார்கள்” ரிவேரா தோளைக் குலுக்கியபடியே பதிலுரைத்தார்.

“என்னை வீழ்த்த முடியும் என்று உண்மையாகவே எண்ணுகிறாயா?” என்று டேனி திடீரென ஆவேசமாகக் கேட்டார்.

ரிவேரா ஆமோதிக்கும் விதமாகத் தலையசைத்தார்.

“ஓ! போதும் போதும். நீ நியாயமாகச் சிந்தித்துப் பார்” கெல்லி மன்றாடினார். “உனக்கு எவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்பதையும் யோசித்துப் பார்.”

“எனக்கு மொத்தப் பங்கும் வேண்டும்” என்றார் ரிவேரா.

“அதற்கு ஆயிரம் வருஷமானாலும் என்னை ஜெயித்து உன்னால் வாங்க முடியாது.” டேனி உறுதியாகச் சொன்னார்.

“பின் ஏனிந்தத் தயக்கம்?” ரிவேரா மடக்கினார். “அவ்வளவு சுலபமாக என்னை வெல்ல முடியுமானால் சண்டையிட்டு முழுப் பங்கையும் பெறலாமே.”

“நிச்சயமாக! அப்படியே ஆகட்டும்.” திடுமெனத் தோன்றிய உணர்ச்சிவேகத்தில் மனவுறுதியுடன் டேனி கத்தினார். “உன்னை வளையத்திலேயே அடித்துக் கொல்கிறேன் பார். என்னிடமே குரங்குத்தனமாகப் பேசுகிறாயா? கெல்லி! இது பழி தீர்த்துக்கொள்ளும் போட்டி என்று சொல்லி விடுங்கள். முழுப்பங்கும் ஜெயிப்பவருக்கே என்றும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளியாகட்டும். இந்தப் புதியவனுக்கு நான் யாரென்பதைக் காட்டுகிறேன்.”

கெல்லியின் செயலாளர் எழுதத் தொடங்கினார்.

“கொஞ்சம் பொறுங்கள்,” டேனி ரிவேராவின் பக்கம் திரும்பினார். “சண்டை எப்போது?”

“மாலையில்தான்” என்றார் ரிவேரா.

“புதியவனே! அது நடக்கவே நடக்காது. ஜெயிப்பவருக்கே எல்லாத் தொகையும் என்றால், காலை பத்து மணிக்கே சண்டையைத் துவக்குவோம்.”

“அப்படியானால் ஜெயிப்பவருக்கே எல்லாத் தொகையும்… சரிதானே?” ரிவேரா கேட்டார்.

டேனி ஆமோதித்தார். பேச்சுவார்த்தைகள் அத்துடன் முடிவடைந்தன. முழு பலத்துடன் களத்தில் இறங்க டேனி தீர்மானித்தார்.

“சண்டை காலை பத்து மணிக்கு” என்று ரிவேரா மீண்டும் முடிவாகச் சொன்னார்.

செயலாளரின் பேனா கிறுக்கிக்கொண்டே போனது.

“ஆக, அந்நேரம் அவருக்கு ஐந்து பவுண்ட்கள் கூடுதலான எடையும் வலிமையும்,” ராபர்ட்ஸ் ரிவேராவிடம் முறையிட்டார். “நீ அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டாய். வலிந்து மெய்யான சண்டையை நீயே உருவாக்கிவிட்டாய். டேனி எருதைப் போல பலம் வாய்ந்தவர். நீ முட்டாள். உன்னை அவர் நிச்சயம் தோற்க்கடிப்பார். நரகத்தில் பனித்துளிக்கு வாய்ப்பில்லாததைப் போல நீ ஜெயிப்பதற்கும் வாய்ப்பே கிடையாது.”

4

ரிவேரா குத்துச்சண்டை வளையத்திற்குள் நுழைந்தபோது, பெரும்பாலோர் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒரு சிலரே அரை மனதுடன் கைதட்டி வாழ்த்தினர். அது அங்கிங்குமாக சிற்றலை போல ஒலித்தது. அரங்கம் அவரை நம்பவில்லை. பெரும் புகழ் பெற்ற வீரரான டேனியிடம் பலியாடு போல அவர் விடப்பட்டிருக்கிறார் என்றே பார்வையாளர்கள் எண்ணினர். தவிரவும் அவர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகியிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது டேனி வார்டிற்கும், பில்லி கார்த்தேவுக்கும் இடையிலான ஆக்ரோஷமான சண்டையை. ஆனால் இப்போது யாரோ அறிமுகமற்ற புதுமுக வாலிபரிடம் அவரை மோத விட்டிருக்கின்றனர். இந்த மாற்றத்தைக் கூட்டத்தினர் ஏற்காதது பந்தயத் தொகையிலும் வெளிப்பட்டது. டேனியின் சார்பாக ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மடங்காகவும் பந்தயம் வைத்தனர். பந்தயப் பணம் யார் சார்பாக அதிகமாக உள்ளதோ, பார்வையாளர்களின் உள்ளமும் அவருக்கு சாதகமாகவே இருக்கும்.

மெக்ஸிகன் தனது மூலையில் அமர்ந்து காத்திருந்தார். நிமிடங்கள் மெதுவாகக் கழிந்தன. டேனி அவரைக் காத்திருக்கும்படி வைத்தார். அது ஒரு பழைய தந்திரம். ஆனால் அந்தத் தந்திரம் புதிய இளம் குத்துச்சண்டை வீரர்களிடமே பலிக்கும். காத்திருக்கும் வேளையில் பயம் அவர்களை மெல்ல மெல்லப் பீடிக்கும். தங்களது அச்சத்தைக் குறித்து எண்ணியவாறே அமர்ந்திருப்பர். எதிரே இரக்கமற்ற பார்வையாளர்கள் புகைபிடித்துக் கொண்டிருப்பதையும் பார்வையிடுவர். ஆனால் தற்போது ரிவேராவிடம் அத் தந்திரம் பலிக்கவில்லை.

ராபர்ட்ஸ் சரியாகத்தான் சொன்னார். ரிவேரா எதற்குமே அசராதவர். அதிகத் துணிச்சல் மிக்கவர். உணர்ச்சிகளைத் திறமையுடன் ஒருங்கிணைத்துக் கையாளக் கூடியவர். அந்த வகையில் வேறு எவரையும் விட மேலானவர். அவர் அமர்ந்திருந்த மூலை தோல்விக்குரிய ஒன்றாகப் பார்வையாளர்களால் முன்கூட்டியே தீர்மானித்திருந்த சூழல் அவரருகேயும் நிலவியது. ஆனால் அது எந்தவிதத்திலும் அவரைப் பாதிக்கவில்லை. அவருக்கு உதவியாக நின்றவர்கள் அமெரிக்கர்களும் அறிமுகமற்றவர்களும். அவர்கள் மரியாதையும் செயல்திறனும் அற்றவர்கள். தங்களது மூலையில் அமர்ந்திருக்கும் ரிவேரா தோற்கப்போவது உறுதி என்பது அவர்களுக்கும் புரிந்திருந்தது. எனவே அதிக ஆர்வமின்றி நின்றிருந்தனர்.

“நீ கவனமாயிருக்க வேண்டும்” ஸ்பைடர் ஹாகெர்ட்டி எச்சரித்தார். ஸ்பைடர் அவரது உதவியாளர்களில் முதன்மையானவர். “முடிந்தவரை சண்டையை நீட்டிக்க நீ முயற்சி செய்ய வேண்டும். அப்படித்தான் கெல்லி அறிவுறுத்தியிருக்கிறார். இல்லையெனில் செய்தித்தாள்களில் தரக்குறைவான சண்டை என்று எழுதிவிடுவார்கள். லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்துக்கே இந்த ஆட்டத்தினால் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுவார்கள்.”

இவை எதுவுமே ஊக்கத்தைக் தரக்கூடிய வார்த்தைகள் அல்ல. ரிவேரா அவரது சொற்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் அசட்டையாக இருந்தார். அவர் பணத்துக்காக ஆடப்படும் இந்த ஆட்டத்தையே வெறுத்தார். குத்துச்சண்டை என்பதே அமெரிக்கர்களின் வெறுக்கத்தக்க விளையாட்டு என்கிற அபிப்பிராயத்தைக் அவர் கொண்டிருந்தார். இந்த ஆட்டத்தில் பங்கேற்றுப் பயிற்சிக்கூடத்தில் சண்டையிட்டதற்குக் காரணம் அப்போது உணவின்றிப் பசித்திருந்ததுதான். பின்னர் இந்த ஆட்டத்திற்கெனவே பிறந்தது போல் அவருக்குத் திறன் கூடியதும் உண்மைதான். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவருக்கு இந்த ஆட்டமே வெறுப்பைத் தந்தது. ஜன்டாவில் இணையும்வரை அவர் பணத்திற்காக மட்டும் சண்டையிட்டதே இல்லை. ஜன்டாவின் தேவைக்கு சுலபமாக ஈட்டக் கூடிய பணமாக அவருக்குத் தோன்றியதால்தான் அவர் இதில் ஈடுபட்டார். பிடிக்காத தொழிலில் வெற்றி அடைபவர்கள் பலருண்டு. அவ்வாறானவர்களில் தான் முதல் ஆள் அல்ல என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

எவ்விதமாகச் சண்டையிடுவது என்பதைக் குறித்து அவர் யோசிக்கவேயில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தற்போது நிகழவிருக்கும் சண்டையில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற ஒரு விஷயம்தான். வேறு எவ்வித மாற்றான விளைவிற்கும் வழியே இல்லை. அவருக்குப் பக்கபலமாக, பின்புலமாக இருந்து அந்த நம்பிக்கையைத் தருவது எவருமே அறிந்துகொள்ள முடியாத ஆழ்ந்த சக்திகள். அத்தகைய சக்திகளை எந்த அரங்கையும் நிறைத்திருக்கும் எந்தப் பார்வையாளர்கள் கூட்டமும் அவர்களது கனவில் கூட கண்டுணர முடியாது.

டேனி வார்ட் பணத்திற்காகவும், அது தரக்கூடிய சுலப சுக வாழ்க்கைக்காகவுமே சண்டையிட்டார். ஆனால் ரிவேரா சண்டையிடுவது வேறு காரணங்களுக்காக. அவரது மூளையில் ஒரு வெறி எரிந்துகொண்டிருந்தது. அவரது விழிகள் திறந்திருக்கும் வேளையிலும், பற்றி எரியும் பயங்கரக் காட்சிகள் அவருக்குப் புலனாயின. வளையத்தில் தனித்து அமர்ந்து தந்திரமான எதிரிக்குக் காத்திருக்கும் வேளையிலும் கூட, அவரது வாழ்வைப் பின்னோக்கிக் கண்கூடாகப் பார்த்தார்.

ரியோ ப்ளாங்க்கோவின் நீர்விசை ஆலையும், அதன் வெள்ளைச் சுவரையும் பார்த்தார். பசித்த, நோய்வாய்ப்பட்டு வெளிறிய ஆறாயிரம் தொழிலாளிகளைப் பார்த்தார். ஏழு எட்டு வயதேயான சிறுவர்கள் ஒரு நாளைக்கு கிடைக்கக்கூடிய பத்து சென்ட்டுக்காக நீண்ட நேரப் பணியில் கடுமையாக உழைப்பதைப் பார்த்தார். சாயம் தோய்க்கும் அறைகளில் பணியாற்றும் மனிதர்களின் கோரமான முகங்களில் சாவின் அறிகுறியைப் பார்த்தார். அவர்கள் நடைப்பிணங்களாகச் சுற்றித் திரிந்ததையும் பார்த்தார். சாய அறைகளை ‘தற்கொலைக் குழிகள்’ என்று அவரது தந்தை குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்தார். அந்த அறைகளில் தொடர்ந்து ஓர் ஆண்டு பணியாற்றினாலே நிச்சயம் அகால மரணம்தான்.

மேலும் சிறிய முற்றத்தையும் அதில் அவரது தாய் சமைப்பதையும் கண்டார். ஓயாது கடுமையாக உழைத்து வீட்டை ஓரளவு பராமரிப்பதையும், அதற்கிடையே சற்று நேரம் ஒதுக்கி தன்னையும் கொஞ்சி அன்பு செலுத்தியதையும் கண்டார். அனைவரையும் விட அவரது தந்தையை அதிக இரக்கமுள்ளவராகக் கண்டார். எல்லா மனிதர்களையும் நேசித்தவர் அவர். அவரது விசாலமான இதயத்தில் பெருகிய அன்பை எல்லோருக்கும் பொழிந்த பிறகும், மீதி மிச்சமிருந்ததைத் தாய்க்கும், முற்றத்தில் ஓரமாக விளையாடிக் கொண்டிருக்கும் சிறிய மகனுக்கும் வழங்கினார். அப்போது அவரது பெயர் ஃபெலிப் ரிவேராவாக இல்லை. தாயும் தந்தையும் இட்ட பெயர் ஃபெர்னான்டஸ். செல்லமாக அழைத்த பெயர் யுவான். பிற்காலத்தில் தனது பெயரை அவரே மாற்றிக் கொண்டார். அதற்குக் காரணம் சுற்றுப்புறத்தாரும், போலீஸ் அதிகாரிகளும், உயர்பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளும் ஃபெர்னான்டஸ் என்கிற பெயரை வெறுத்ததுதான்.

பெரிய உருவமும், பரந்த இதயமும் கொண்ட ஜோக்வின் ஃபெர்னான்டஸ்! ரிவேராவின் மனக்கண்ணில் அவருக்குப் பெரியதோர் இடமிருந்தது. அப்போது அவருக்கு அது புரியவில்லை. ஆனால் பிற்பாடு பின்னே திரும்பிப் பார்க்கும்போது புரிந்தது. சிறிய அச்சகத்தில் அவர் அச்சுக் கோர்ப்பது, குப்பைகள் நிறைந்த மேஜையில் முடிவேயற்று பதற்றத்துடன் அவசர அவசரமாக எதையோ கிறுக்கிக்கொண்டிருந்தது போன்ற காட்சிகள் எல்லாம் அவரது மனக்கண்ணில் விரிந்தன. சில அசாதாரண மாலைப்பொழுதுகளில், ஏதோ தவறான காரியங்கள் செய்வதுபோல, பாட்டாளிகள் ரகசியமாக இருளில் வந்து அவரது தந்தையைச் சந்திப்பார்கள். பின் மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொண்டேயிருப்பார்கள். அங்கொரு மூலையில் இச்சிறுவன் படுத்திருந்தாலும் எப்போதும் உறங்கியிருப்பான் என்று எண்ணலாகாது.

எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்பதுபோல ஸ்பைடர் ஹாகெர்ட்டி சொன்னது காதில் விழுந்தது. “சண்டை தொடங்கியவுடன் அடி வாங்கி விழுந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் கிடைக்கப் போகிற பணத்திற்கு ஏற்றவாறு செம்மையாக அடிகளை வாங்கிக் கொள்.”

பத்து நிமிடங்கள் கழிந்தன. இன்னும் அவர் தன் மூலையிலேயே அமர்ந்திருந்தார். டேனி வந்து சேர்வதற்கான அறிகுறியே தென்படவில்லை. தனது தந்திரத்தை அதன் எல்லை வரையில் நீட்டிக்க விரும்புகிறார் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவானது.

ரிவேராவின் நினைவுகளில் மேலும் பல காட்சிகள் விரிந்தன. வேலை நிறுத்தம் அல்லது மிகச் சரியாகச் சொல்லப் போனால் கதவடைப்பு நிகழ்ந்தது. ஏனெனில் ரியோ ப்ளாங்க்கோ உழைப்பாளிகள், வேலைநிறுத்தம் செய்த ப்யூப்ளா உழைப்பாளிகளுக்கு ஆதரவாக உதவினர். அப்போது பசிக் கொடுமையால் வாடியது, மலைகளில் ஏறிப் பழவகைகளை நாடியது, வேர்களையும் மூலிகைப் பூண்டுகளையும் உண்டது. அதன் காரணமாக அனைவருக்கும் வயிற்றைப் பிசையும் வலி ஏற்பட்டது போன்ற அனைத்துக் காட்சிகளும் மனக்கண்ணில் தோன்றின.

அதன் பின் நிகழ்ந்தது தீயகனவு போலிருந்தது. நிறுவனத்தின் கிடங்கிற்கு எதிரேயிருந்த உபயோகமற்ற காலி மைதானம்; பசித்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்; தளபதி ரொஸாரியோ மார்டினெஸ், பொர்ஃபிரியோ டயஸின் ராணுவப் படை வீரர்கள்; மரணத்தை உமிழும் துப்பாக்கிகள் முடிவேயின்றி மரணத்தை உமிழ்ந்தன; அதே சமயம் தொழிலாளிகளின் தவறுகள் மீண்டும் மீண்டும் அவர்களது ரத்தத்தாலேயே கழுவப்பட்டது – அனைத்தும் ரிவேராவின் மனக்கண்ணில் மின்னின.

மேலும் அந்த ஓரிரவு! அவர் நீண்ட சமதளமுள்ள ஊர்திகளைக் கண்டார். அதில் ஒன்றன் மேல் ஒன்றாக கொல்லப்பட்டவர்களின் உடல்கள் உயரமாக அடுக்கப்பட்டிருந்தன. அனைத்தும் வேரா க்ரூஸிற்கு அனுப்பப்பட்டு, அங்குக் கடலிலுள்ள சுறாமீன்களுக்கு உணவாகப் போகின்றன. அவர் அந்தப் பயங்கரப் பிணக்குவியலில் தேடிக்கொண்டே இருந்தார். அதில் அவரது தாயும் தந்தையும் ஆடைகள் கிழிந்து, சிதைந்து கிடந்ததைக் கண்டார். குறிப்பாக அவரது தாயை நினைவுகூர்ந்தார். தாயின் முகம் மட்டுமே தெரிந்தது. அவரது உடலின் மீது பலப்பல உடல்கள் சுமையாக அழுத்திக் கொண்டிருந்தன. மீண்டும் பொர்ஃபிரியோ டயஸ் படையினரின் துப்பாக்கிகள் வெடித்தன. மலைகளில் வேட்டையாடப்படும் ஓநாய் பதுங்குவதுபோல அவர் தரையில் குதித்து சந்தடியின்றிப் பின்வாங்கினார்.

கடலலைகள் போல் பெரும் இரைச்சல் அவரது காதுகளை வந்தடைந்தது. இருக்கை வரிசைகளின் நடுவேயுள்ள பாதை வழியாக டேனி வார்ட் தனது பயிற்சியாளர், உதவியாளர்கள் அடங்கிய பரிவாரங்களை வழி நடத்தி வந்தார். எல்லோரும் அவரையே வெற்றிவீரராகக் கருதினர். அனைவரும் அவரது சார்பாகவே இருந்தனர். டேனி கயிற்றின் நடுவே நுழைந்து வளையத்திற்குள் மகிழ்ச்சிகரமாகப் பிரவேசித்ததும் ரிவேராவின் உதவியாளர்கள் கூட முகமலர்ந்தனர். முடிவேயின்றித் தொடர்ந்த புன்னகைகளில் அவரது முகம் விரிந்து பரந்தது. டேனி புன்னகைக்கும்போது அவரது முகத்தின் அனைத்து உறுப்புகளும் இயங்கின. கண்களின் ஓரத்தில் கூட சுருக்கங்கள் தோன்றி கண்களின் ஆழம் வரை மகிழ்ச்சி ஊடுருவியிருந்தது. இந்தளவு நட்புணர்வுடன் எந்த வீரரும் இருந்திருக்கமாட்டார். நல்ல உணர்வுகள், நல்ல தோழமை போன்ற குணநலன்களின் நடமாடும் விளம்பரமாகத் திகழ்ந்தார். அவருக்கு அனைவரையும் தெரிந்திருந்தது. வளையத்தில் இருந்தபடியே தனது நண்பர்களை வாழ்த்தினார். வேடிக்கையாகப் பேசினார். சிரித்தார். தூரத்திலிருந்தவர்கள் அடக்க முடியாது பீரிட்டெழும் உணர்ச்சிகரமான பாராட்டுதலை, “ஓ டேனி!” என்று கத்தி வெளிப்படுத்தினர். அன்பார்ந்த மகிழ்ச்சிகரமான ஆரவாரம் முழுதாக ஐந்து நிமிடங்களுக்கு நீடித்தது.

ரிவேராவை அனைவரும் புறக்கணித்தனர். பார்வையாளர்கள் அவரைக் கவனிக்கவேயில்லை. அவர் அங்கிருப்பதாகவே அவர்களுக்குத் தோன்றவில்லை. ஸ்பைடர் ஹாகெர்ட்டியின் உப்பிய முகம் அவர் முகத்தருகே குனிந்தது. “பயம் வேண்டாம்” ஸ்பைடர் எச்சரித்தார். “அறிவுரைகளை மறந்துவிடாதே. நீடித்து சண்டையிட வேண்டும். உடனே வீழ்ந்துவிடக் கூடாது. அவ்வாறாக நிகழ்ந்தால் மாற்றுடை அறையில் உன்னை அடித்துத் துவைக்க எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சரியா? நீ நீண்ட நேரம் சண்டையிட்டே ஆக வேண்டும்.”

கூட்டத்தினர் கை தட்டினர். டேனி நடந்து அவரருகே வந்தார். டேனி குனிந்து ரிவேராவின் வலது கரத்தை தனது இரு கைகளாலும் பற்றி உத்வேகத்துடன் மனமார குலுக்கினார். எதிராளியிடம் அவர் வெளிப்படுத்தும் தாராள மனப்பான்மையை பார்வையாளர்கள் கரகோஷமிட்டு ரசித்தனர். எதிராளியைக் கூட சகோதர நேசத்துடன் வாழ்த்துகிறார். டேனியின் உதடுகள் அசைந்தன. பார்வையாளர்களின் செவிகளுக்கு எட்டாத அந்த வார்த்தைகளை நல்ல விளையாட்டு வீரரின் தயாள குணமாகக் கருதி மீண்டும் ஆரவாரம் செய்தனர். ரிவேரா மட்டுமே அந்த வார்த்தைகளைக் கேட்டார்.

“அற்ப மெக்ஸிகன் எலியே!” டேனியின் புன்னகைக்கும் உதடுகளுக்கிடையே வார்த்தைகள் கிசுகிசுப்பாய் சீற்றத்துடன் வெளிப்பட்டன, “உன்னைத் தீர்த்துக் கட்டுகிறேன் பார்.”

ரிவேரா அசையவில்லை, எழவுமில்லை. தனது கண்களின் ஊடாகப் பகைமையை வெளிப்படுத்தினார்.

“எழுந்திரு நாயே!” யாரோ ஒருவர் பின்புறத்திலிருந்து கத்தினார். ரிவேராவின் பண்பற்ற நடத்தையினால் கூட்டத்தினர் கோபமடைந்து, வெறுப்பும் ஏளனமும் கலந்த ஒலியை எழுப்பினர். ஆனால் அவர் அப்போதும் அசையாது அமர்ந்திருந்தார். டேனி திரும்பி நடந்தபோது மீண்டும் பெரும் ஆரவாரத்துடன் கைதட்டினர்.

டேனி தனது மேலாடையைக் களைந்ததும் கூட்டத்தினர், “ஆஹா! ஓஹோ!” என மகிழ்ச்சி பொங்கக் குரலெழுப்பினர். அவரது உடல் கச்சிதமாயிருந்தது. ஆரோக்கியமும் வலிமையும் எளிதில் வளைகிற தன்மையும் கொண்டு உயிர்த்துடிப்புடன் இருந்தது. தோல் பெண்களின் தோலைப் போன்று வெண்மையாகவும் வழவழப்பாகவும் இருந்தது. கவர்ச்சியும் நெகிழ்வும் ஆற்றலும் ஒருங்கே சேர்ந்து அவரிடத்தில் அமைந்திருந்தன. உடலழகு குறித்த பல பத்திரிகைகளிலும் அவரது படங்கள் வெளியாகி இருந்தன. பல குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர் தனது உடலின் பலத்தையும் நிரூபித்திருக்கிறார்.

ஸ்பைடர் ஹாகெர்ட்டி ரிவேராவின் ஸ்வெட்டரை உருவியபோது, கூட்டத்தினரிடமிருந்து முனகல் மட்டுமே வெளிப்பட்டது. தோல் மாநிறமாய் இருந்ததால் உடல் சற்று மெலிந்து தோன்றியது. அவரது தசைகள் வலிமையாயிருந்தன. ஆனால் எதிராளியைப் போன்று அவை பகட்டாக வெளிப்படவில்லை. பார்வையாளர்கள் அவரது அகன்ற மார்புப் பகுதியைக் கவனிக்கத் தவறினர். அவரது உறுதியான சதைகளின் கட்டமைப்பை, கணப்போதில் உயிர்த்துடிப்புடன் வெடிக்கும் அணுக்களால் ஆகிய அவரது தசைநார்களின் ஆற்றலை அவர்கள் ஊகிக்கத் தவறினர். நேர்த்தியான நரம்புகள் அவரது ஒவ்வொரு அங்கத்தையும் பின்னிப் பிணைத்து ஓர் அற்புதமான சண்டையிடும் இயந்திரத்தை வலுவாக உருவாக்கியிருந்தன. ஆனால் பார்வையாளர்கள் கண்டதெல்லாம் முதிராத சிறுவனின் உடல் போன்று தோற்றம் கொண்டிருந்த மாநிறமான பதினெட்டு வயது வாலிபனை.

டேனியின் உடலமைப்பு வித்தியாசமானது. டேனிக்கு இருபத்தி நான்கு வயது. அவரது உடலமைப்பு வளர்ந்த ஆணுடையதைப் போன்றது. நடுவரின் கடைசி அறிவுரைகளைக் கேட்க வளையத்தின் நடுவே அவர்கள் ஒன்றாய் நின்றபோது இருவருக்குமிடையே இருந்த வேறுபாடுகள் சுலபமாய் புலப்பட்டன.

பத்திரிகை நிருபர்களை அடுத்து அவர்களின் நேர் பின்னே அமர்ந்திருந்த ராபர்ட்ஸை ரிவேரா கவனித்தார். வழக்கத்தை விடவும் சற்று அதிகமாகக் குடித்திருந்தார். அவரது பேச்சும் அதற்கேற்றவாறு வழக்கமான வேகத்தை விட நிதானமாய் வெளிப்பட்டது.

“பதற்றப்படாதே ரிவேரா,” ராபர்ட்ஸ் மெதுவாக இழுத்து நீட்டியபடி பேசினார். “அவர் உன்னைக் கொன்றுவிட முடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள். சண்டை தொடங்கியதும் வேக வேகமாகப் பாய்வார். குத்துகள் உன் மீது விழாமல் தடுத்துக் கொள். நெருங்கிப் பிடித்துக் கொள். அவர் உன்னை அதிகமாகத் துன்புறுத்திவிட முடியாது. பயிற்சிக் கூடத்தில் நீ அடிகள் வாங்கியது போலவே இப்போதும் நிகழ்கிறது என்று எண்ணிக் கொள்.”

ரிவேரா காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“மௌனப் பிசாசு” பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் ராபர்ட்ஸ் முணுமுணுத்தார். “எப்போதுமே இப்படித்தான்.”

ரிவேரா தனது கண்களில் தென்படும் வெறுப்பை மறந்த நிலையில் இருந்தார். எண்ணிலடங்காத் துப்பாக்கிகள் அவரது புறக்கண்களை குருடாக்கி மனக்கண்ணில் புலனாயின. அவரது கண்களுக்கு எட்டிய வரை, விலை உயர்ந்த இருக்கையிலிருந்து தொலைதூரம் வரை அமர்ந்திருந்த பார்வையாளர்களின் ஒவ்வொரு முகமும் துப்பாக்கியாகவே தெரிந்தன. சூரியன் தகிக்கும் வறண்ட மெக்ஸிகோ எல்லையோரமும், அதனருகே காத்திருக்கும் கரடுமுரடான புரட்சிக் குழுவினரும்… துப்பாக்கிகளைப் பெறுவதற்காகக் காலம் கடந்துபோவது மட்டுமே அவருக்குப் புலனாயின.

திரும்பத் தனது மூலைக்குச் சென்று நின்றவாறே காத்திருந்தார். அவரது உதவியாளர்கள் முக்காலியுடன் கயிற்றின் வழியாக வெளியேறினர். வளையத்தில் நேரெதிரே நின்ற டேனி அவரைப் பார்த்தவாறிருந்தார். மணியோசை ஒலித்துக் குத்துச்சண்டை தொடங்கியது. பார்வையாளர்கள் குதூகலமாகக் குரலெழுப்பினர்.

இதை விடவும் நம்பத்தகுந்த வகையிலான சண்டைத் தொடக்கத்தை அவர்கள் இதுவரை கண்டிருக்கவில்லை. பத்திரிகைகள் மிகச் சரியாகவே செய்திகள் வெளியிட்டிருந்தன. இது ஒருவருக்கொருவர் பழி தீர்த்துக்கொள்ளும் போட்டி. வளையத்தின் முக்கால் பகுதியை மிக விரைந்து கடந்த டேனி எதிராளியை நெருங்கினார். அவர் மெக்ஸிகன் வாலிபரை விழுங்கிவிட எண்ணுவது வெளிப்படையாகத் தெரிந்தது. அவரது தாக்குதல் ஒன்றோ இரண்டோ அல்லது ஒரு டஜன் அடிகளோ அல்ல. சூறாவளியின் அழிவைப் போல சுழல் வேக அடிகளால் நொறுக்கினார். ரிவேரா தென்படவேயில்லை. அவர் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டார். சண்டைக் கலையில் தேர்ந்த வல்லுநரான டேனி, அனைத்துக் கோணங்களிலிருந்தும், எல்லா வகையான நிலைகளிலிருந்தும், பனிப்பாறைகள் வெடித்துக் கொட்டுவதைப் போன்று பொழிந்த அடிகளில் ரிவேரா மூழ்கிவிட்டார். அவர் கடுமையாக ஒடுக்கப்பட்டார். கயிற்றின் மேல் தள்ளி நெருக்கப்பட்டு, நடுவரால் பிரித்து விடப்பட்டு, மீண்டும் கயிற்றின் மேல் விழும்படியாக அடித்து நொறுக்கப்பட்டார்.

அது சண்டையே அல்ல. பேரழிவு. கொடூரமான பெரும் சிதைவு. பரிசுப் பணத்திற்காகப் போடப்படும் குத்துச்சண்டையை மட்டுமே தவிர்த்து, வேறு எதற்காகவும் நிகழ்த்தப்படும் சண்டையைக் காணும் பார்வையாளர்கள் யாவரும் அந்த முதல் நிமிடத்தில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளில் திக்குமுக்காடிப் போயிருப்பர். அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்கூடாக டேனி வெளிப்படுத்தினார். அது ஓர் அற்புதமான கிளர்ச்சியூட்டும் கண்காட்சியாகத் திகழ்ந்தது.

பார்வையாளர்கள் ரிவேராவை மறந்துவிட்டனர். அவர்கள் அரிதாகவே அவரைக் கண்டனர். அந்தளவு டேனியின் ஆளையே விழுங்கிவிடும் தாக்குதல்களில் ரிவேரா மூழ்கடிக்கப்பட்டிருந்தார். கூட்டத்தினரின் கிளர்ச்சியும், யார் வெற்றி அடைவார் என்கிற உறுதிப்பாடும், டேனிக்கு ஆதரவான ஒருதலைச் சார்பும் அதிகளவில் நிலவியதால், அனைவரும் ஒரு விஷயத்தை கவனிக்க மறந்தனர். மெக்ஸிகன் இன்னமும் கீழே விழாது தனது கால்களில் உறுதியாக நின்றுகொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் கழிந்தது. பின் இரு நிமிடங்கள் கழிந்தன. நடுவர் இருவரையும் பிரித்து விடுகையில் அவர் முழுமையாகப் பார்வையாளர்களின் கண்களில் தென்பட்டார். அவரது உதடு கிழிந்திருந்தது. மூக்கில் ரத்தம் வழிந்து ஒழுகிக்கொண்டிருந்தது. அவ்வாறாக ஒழுகிய ரத்தம் கயிற்றில் பரவியிருந்தது. அவரது உடல் கயிற்றில் உரசியதால் முதுகில் வரி வரியாக ரத்தக் கறைகள் படிந்திருந்தன. அவர் தள்ளாடியவாறு முன் நகர்ந்து எதிராளியை நெருங்கி இறுக்கிப் பிடிக்க முயலும் வேளையில், முதுகின் குறுக்கே திட்டுத் திட்டாகப் படிந்திருந்த ரத்தக் கறைகள் அனைவரது கண்களுக்கும் தென்பட்டன. ஆனால் அவரது மார்புகள் விம்மவில்லை என்பதையும், அவரது கண்கள் எப்போதும் போலத் தணலாக எரிந்துகொண்டிருப்பதையும் கூட்டத்தினர் காணத் தவறினர்.

முதன்மை நிலையை அடைய விரும்பிய எண்ணற்ற குத்துச்சண்டை வீரர்கள், ஆளையே விழுங்கிவிடும் வகையிலான தாக்குதல்களைப் பயிற்சி முகாம்களில் பலமுறை அவருக்கு எதிராக நிகழ்த்தியிருக்கின்றனர். அவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடிக் கடந்து நிலைத்து நின்றிருக்கிறார். அரை டாலரில் தொடங்கி, வாரம் பதினைந்து டாலர்களைப் பெறுமளவிற்கு உயர்ந்துமிருக்கிறார். கொடூரமான, கடினமான பாடங்களைக் கற்பிக்கும் பயிற்சிப்பள்ளிகள், எத்தகைய தாக்குதல்களையும் தாங்குமளவிற்கு அவரைக் கடுமையாக்கி இருந்தன. அத்தகைய பயிற்சிப் பள்ளிகளில் பயின்று தயாரானவர் அவர்.

பின் திகைப்பூட்டும் காரியம் ஒன்று நிகழ்ந்தது. திடீரென சுழல் வேகமும், சீர்குலைவும் நின்றுபோயின. ரிவேரா தனித்து நின்றிருந்தார். டேனி, சந்தேகத்திற்கிடமின்றி வெற்றி நாயகரான டேனி மல்லாந்திருந்தார். அவருக்கு நினைவு திரும்புகையில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவர் தள்ளாடி விழவில்லை. மெதுவாக மயங்கிச் சாயவில்லை. இடதுகரத்தை வளைத்து ரிவேரா வீசிய ஒரு வன்மையான குத்து மரண அடி போல விழுந்ததும், அப்படியே காற்றில் தூக்கி எறியப்பட்டார். நடுவர் ரிவேராவை ஒரு கையால் பின் தள்ளி, விழுந்து கிடந்த வீரரின் அருகே நின்று விநாடிகளை எண்ண ஆரம்பித்தார்.

இவ்வாறாக ஒருவர் அடித்து வீழ்த்தப்படும்போது, பார்வையாளர்கள் எப்போதும் உற்சாகக் குரலெழுப்புவதே வழக்கம். ஆனால் தற்போது அவ்வாறாக நிகழவில்லை. இது எதிர்பாராமல் திடுமென நிகழ்ந்துவிட்ட சம்பவம். அவர்கள் சீராக விநாடிகள் எண்ணப்படுவதைப் பதற்றத்துடன் கூடிய அமைதியில் ஆழ்ந்து கவனித்தனர். அந்த அமைதியினிடையே ராபர்ட்ஸின் குரல் பெருமிதத்துடன் ஒலித்தது.

“அவர் எந்த நிலையிலும் இரண்டு கைகளாலும் அடிக்கக் கூடியவர் என்பதை நான் அப்போதே சொன்னேன்.”

ஐந்தாவது விநாடியில் டேனி புரண்டார். ஏழாவது விநாடி எண்ணப்படுகையில் ஒரு காலில் முட்டியிட்டிருந்தார். ஒன்பதாவது விநாடி எண்ணப்பட்டவுடனே அல்லது பத்தாவது விநாடிக்கு முன்னதாக எழுவதற்குத் தயாராயிருந்தார். அவரது முட்டி பத்தாவது எண்ணிக்கையின்போது தரையைத் தொட்டவாறிருந்தால் அவர் வீழ்ந்ததாகவும், தோற்றதாகவும் கருதப்படுவார். அதே கணத்தில் ரிவேராவின் வலது கரம் மீண்டும் அவரை வீழ்த்துவதற்குத் தயாராகக் காத்திருந்தது. ரிவேரா எந்த ஒரு வாய்ப்பையும் நழுவவிடத் தயாராயில்லை. அந்த முட்டி தரையை விட்டு அகன்றதுமே அவரை மீண்டும் அடிக்கத் தயாராயிருந்தார். அதற்கேற்ப அவர் நடுவரைச் சுற்றி நகர்ந்தார். ஆனால் நடுவரும் நகர்ந்து இருவருக்கும் குறுக்கே நின்றார். விநாடிகள் நிதானமாக எண்ணப்படுவதை ரிவேரா உணர்ந்தார். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட அனைத்து அமெரிக்கர்களும் அவருக்கு எதிராக இருந்தனர். நடுவர் உட்பட.

ஒன்பது எண்ணப்படுகையில் நடுவர் ரிவேராவை மீண்டும் வேகமாகப் பின்தள்ளினார். அது நியாயமல்ல. ஆனால் அதன் காரணமாக டேனியால் எழ முடிந்தது. மீண்டும் அவரது உதடுகள் புன்னகைத்தன. நன்றாக உடலை வளைத்துக் கைகளால் முகத்தையும் வயிற்றையும் மூடியவாறே தடுமாறினாலும், புத்திசாலித்தனமாக ரிவேராவை நெருங்கி இறுக்கிப் பிடித்துக் கொண்டார். குத்துச்சண்டை ஆட்டத்தின் எல்லா விதிகளின்படியும் நடுவர் அவர்களைப் பிரித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அலைகள் நுரைத்துத் தளும்பும் கடற்புரத்திலுள்ள படகுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிப்பியைப் போன்று விடாது இறுக்கிக் கொண்டிருந்தார். கணத்திற்குக் கணம் அவரது உடல் புத்துணர்வைப் பெற்றது. சுற்றின் கடைசி நிமிடம் விரைவாகக் கழிந்தது. அதன் இறுதிவரை அவர் தாக்குப் பிடித்தால் அவரது மூலையில் அமர்ந்தபடியே முழுமையான ஒரு நிமிட ஓய்வில் புத்துயிர் பெறலாம். அவர் தாக்குப் பிடித்தார். அத்தகைய தீவிர சூழலையும் நம்பிக்கையற்ற நிலையையும் அவர் புன்னகைத்தபடியே கடந்தார்.

“அந்தப் புன்னகை எப்போதும் அவரை விட்டு அகலாது!” யாரோ ஒரு பார்வையாளர் பெருங்குரலில் கத்தினார். உடனே அரங்கில் பதற்றம் தணிந்து பெரும் சிரிப்பொலி எழுந்தது.

“அந்த அழுக்குப் பிடித்தவனின் அடியில் கடவுளே தாங்க முடியாத ஏதோவொரு சக்தியுள்ளது” என்று மூச்சிரைத்தபடியே அவரது பயிற்சியாளரிடம் கூறினார். அதே சமயம் உதவியாளர்கள் அவரது உடலை வேக வேகமாக நீவிவிட்டுக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது, மூன்றாவது சுற்றுகளில் டேனியின் மூர்க்கத்தனம் குறைந்திருந்தது. தந்திரமான சூழ்ச்சிகளைத் திட்டமிட்டு நிறைவேற்றக்கூடிய தளபதியைப் போன்றவர் டேனி. குத்துகளைத் தடுத்து நிறுத்துவதிலேயே நேரத்தைக் கடத்தினார் அவர். முதல் சுற்றில் வாங்கிய அடியிலிருந்து மீள்வதே அவரது குறியாயிருந்தது.

நான்காவது சுற்றில் டேனி தனது பழைய நிலைக்குத் திரும்பினார். அதிர்ந்து ஆடிப் போனாலும் இழந்த சக்தியை மீண்டும் பெறக்கூடிய ஆற்றலை, நன்கு பராமரிக்கப்பட்ட அவரது உடல்நிலை வழங்கியது. மெக்ஸிகன் வலியவர் என்பதை நிரூபித்துவிட்டார். அனைவரும் எண்ணியதற்கு மாறாக, அவரது சண்டையிடும் ஆற்றலைத் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலைக்கு டேனியை ஆளாக்கிவிட்டார். எனவே டேனி ரிவேராவை நொறுக்கிவிடும் முயற்சிகளைக் கைவிட்டார். இரு கைகளின் முஷ்டிகளாலும் வியக்கத்தக்க வகையில் மிக நெருக்கத்திலிருந்து மரணஅடியைத் தரும் மெக்ஸிகன் மீது அவருக்கு எரிச்சல் தோன்றியது.

சண்டையிடும் திறனிலும் அனுபவத்திலும் தந்திரங்களிலும் டேனி வல்லுநராயிருந்தார். அவரால் எதிராளியை பலமாக அடித்து வீழ்த்த முடியவில்லை என்றாலும் கூட, விஞ்ஞானப் பூர்வமாகச் சண்டையிட்டு, ரிவேராவைத் துன்புறுத்தித் தளர்வுறச் செய்தார். அவரது குத்துகள் தண்டிக்கும் குத்துகளே தவிர மரண அடிகளல்ல. ஆனாலும் அத்தகைய குத்துகள் மொத்தமாகச் சேரும் நிலையில் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

ரிவேரா தனது தற்காப்புக்காக எதிராளியை அலங்கோலப்படுத்தக்கூடிய இடதுகைக் குத்தை பிரயோகித்தார். மீண்டும் மீண்டும், தாக்குதலுக்குப் பின் தாக்குதலாக, இடது கரத்தால் டேனியில் முகத்தில் நேராகக் குத்தினார். அவை ஒவ்வொன்றாகச் சேர்ந்து டேனியின் வாயையும் மூக்கையும் அலங்கோலமாக்கின. ஆனால் சண்டையிடும் முறைகளை விரைந்து மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் டேனி. எனவேதான் அவர் முதன்மை நிலையை அடையக் கூடியவராயிருந்தார். அவர் நினைத்த கணத்தில் சண்டையிடும் பாணியை மாற்றிக்கொண்டேயிருந்தார்.

தற்போது அவர் நெருக்கமாக நின்று சண்டையில் ஈடுபட்டார். இவ்வகைச் சண்டையில் அவர் ஆபத்தானவராயிருந்தார். எதிராளியின் இடது கரக் குத்தையும் இவ்வகைச் சண்டையால் தவிர்க்க முடிந்தது. இப்போது கூட்டத்தினர் மகிழ்ச்சியுற்று அடிக்கடி ஆரவாரம் செய்தனர். நெருங்கிக் கட்டிப் பிடித்து, விடுவித்து, கீழிருந்து மேலாகக் கையைத் தூக்கி வீசி முகவாய்க்கட்டையில் அற்புதமான ஒரு குத்து விட்டார். மெக்ஸிகன் காற்றில் தூக்கப்பட்டு தரை விரிப்பில் விழுந்தார். ரிவேரா ஒரு காலில் முட்டி போட்டபடி அதிகளவு எண்ணிக்கையை ஏற்கும்படியாக நின்றார். நடுவர் விரைந்து விநாடிகளை எண்ணுவதாக அவரது உள்ளுணர்வு உணர்த்தியது.

மீண்டும் ஏழாவது சுற்றில் அதே விதமாக முகவாய்க்கட்டையில் குத்தினார். அதன் காரணமாக ரிவேராவைத் தள்ளாடும்படி மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால் தற்காப்புக்கு வழியின்றி கயிற்றருகே இருந்த அந்தக் கணத்தில் மீண்டும் ஒரு குத்து விட்டார். ரிவேராவின் உடல் கயிற்றின் ஊடாக வளையத்தைத் தாண்டி பத்திரிகையாளர்களின் தலையில் விழுந்தது. அவர்கள் அவரைத் தூக்கி வளையத்தின் ஓரமாகக் கயிற்றுக்கு வெளியே நிறுத்தினர். அங்கு அவர் ஒரு காலில் முட்டி போட்டபடி ஓய்வெடுத்தார். நடுவர் விரைவாக விநாடிகளை எண்ணிக்கொண்டிருந்தார். அவர் வளையத்திற்குள் செல்ல வேண்டுமானால் குனிந்து கயிற்றின் ஊடாகத்தான் நுழைய இயலும். டேனி அக்கணத்திற்காகக் காத்திருந்தார். நடுவர் குறுக்கிட்டு டேனியைப் பின் தள்ளவில்லை.

கூட்டத்தினர் பெரும் குதூகலத்துடன் குரலெழுப்பினர். “கொன்று விடு டேனி! கொன்று விடு!” எனக் கூவினர். பல குரல்கள் அதே விதமாகச் சேர்ந்து எழும்பியபோது, ஓநாய்கள் கூடி வேட்டையாடும் போர் முழக்கமாயிருந்தது. டேனி பலமான அடி கொடுக்கத் தயாராயிருந்தார். இருப்பினும் ரிவேரா ஒன்பதாவது எண்ணிக்கைக்குப் பதிலாக எட்டாவது எண்ணிக்கையிலேயே எதிர்பாராதவிதமாக கயிற்றில் நுழைந்து பாதுகாப்பாக டேனியை இறுக்கிப் பிடித்துக்கொண்டார். நடுவர் உடனே விரைந்து செயலாற்றினார். ரிவேரா மேலும் குத்துப்படும் விதமாக டேனியிடமிருந்து அவரைப் பிரித்து விட்டார். நடுநிலை தவறி ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதன் மூலம் ஒவ்வொரு வகையிலும் டேனிக்கு அனுகூலத்தைத் தேடித் தந்தார் நடுவர். ஆனால் ரிவேரா உறுதியாக நின்றார். மயங்கிச் சாயவில்லை. அவரது மூளையை மங்கச் செய்த குழப்பநிலை மறைந்து தெளிவானார். எதிரேயிருந்த அனைத்து அமெரிக்கர்களும் அவரது கடும் வெறுப்புக்குள்ளானார்கள். அவர்கள் அநியாயமாக டேனிக்கு சாதகமாயிருந்தனர்.

அந்நிலையிலும் அவருக்குக் காட்சிகள் புலனாகி மூளையில் பளிச்சிட்டன. பாலைவனத்தில் நீண்ட தண்டவாளங்கள் கொதித்துக்கொண்டிருப்பது, அவற்றை அங்கு பதித்த தொழிலாளர்கள், அமெரிக்கக் காவல் படையினர், திரண்டிருந்த சுற்றுப்புற கிராமத்தினர், சிறைச்சாலைகள், அவற்றின் கூடங்கள், நீர்த் தொட்டிகளின் அருகேயிருந்த நாடோடிகள், ரியோ ப்ளாங்க்கோவில் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு நிலவிய ஏழ்மை, பின் நிகழ்ந்த கொடூரக் காப்பியத்தின் பரந்த காட்சிகள் யாவும் அவரது மனக்கண்ணில் விரிந்தன. பின் போற்றுதலுக்குரிய பிரகாசமான சுடரொளி வீசும் சிகப்புப் புரட்சி நாடு முழுக்கவும் பெருகிப் பரவியதைக் கண்டார். கண்ணெதிரே துப்பாக்கிகள் தெரிந்தன. அவரைப் பகைமையுடன் பார்க்கும் அத்தனை முகங்களும் துப்பாக்கிகளாகவே அவருக்குப் புலப்பட்டன. அந்தத் துப்பாக்கிகளுக்காக மட்டுமே அவர் சண்டையிட்டார். அவரே அந்தத் துப்பாக்கி. அவரே அந்தப் புரட்சி. மொத்த மெக்ஸிகோவின் நலனுக்காகவே அவர் சண்டையில் ஈடுபட்டார்.

பார்வையாளர்கள் ரிவேராவின் மீது கோபம் கொண்டனர். தோல்வியடையவே நியமிக்கப்பட்டவர் ஏன் இன்னமும் தோற்கவில்லை? எப்படியும் அவர் தோற்கப் போவது உறுதி. ஆனால் அவர் ஏன் இன்னும் விடாப்பிடியாக எதிர்க்க வேண்டும்? பார்வையாளர்களில் வெகுசிலரே அவரில் ஆர்வமாயிருந்தனர். அவர்கள் திரண்டிருக்கும் கூட்டத்தினரில் தொலைநோக்குப் பார்வையோடு பந்தயத்தில் ஈடுபடும் குறிப்பிடத்தகுந்த சதவிகிதத்தினர். அவர்களும் டேனியைத்தான் வெற்றி வீரராக முடிவு செய்திருந்தனர். ஆனாலும் அவர்கள் மெக்ஸிகன் சார்பாகவும் நான்கிற்கு பத்தாகவும், ஒன்றுக்கு மூன்றாகவும் பந்தயப் பணத்தை செலுத்தியிருந்தனர்.

சிறிய தொகை என்று கருதப்படுவதற்கு சற்று அதிகமான தொகையை ரிவேரா எத்தனை சுற்றுகள் நீடிப்பார் என்று ஊகித்து சிலர் பந்தயம் ஆடினர். அவர் ஆறு அல்லது ஏழு சுற்றுகளுக்கு மேல் நீடிக்கமாட்டார் என்று முடிவு கட்டியிருந்த பந்தயப் பணம் வளையத்தின் அருகே பெருமளவு கை மாறியது. தற்போது அதில் வென்றவர்கள், துணிந்து கட்டிய பணம் பெருகித் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தனர். பின் அவர்களும் வெற்றி வீரருக்கு ஆதரவாகக் குரலெழுப்பும் கூட்டத்தினரோடு சந்தோஷமாகக் கலந்தனர்.

ரிவேரா விடாப்பிடியாகத் தோல்வியுற மறுத்தார். எட்டாவது சுற்றில் கீழிருந்து மேலாக முகவாய்க்கட்டையில் குத்துவதற்கு டேனி செய்த முயற்சிகள் யாவும் வீணாயின. ஒன்பதாவது சுற்றில் ரிவேரா மீண்டும் அரங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இறுக்கிக் கட்டிப் பிடித்திருந்த நிலையில், விரைந்து இயங்கி ஒரு சிறிய அசைவில் தன்னை விடுவித்துக்கொண்டார். அச்சமயம் இருவருக்குமிடையே இருந்த குறுகிய அருகாமையில் அவரது வலது கரம் இடுப்புப் பகுதியிலிருந்து வேகமாக உயர்ந்ததும், டேனி தரையில் விழுந்தார். டேனி பாதுகாப்பாக நடுவரின் எண்ணிக்கையை ஏற்றார். கூட்டத்தினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவரது ஆட்டத்தையே அவருக்கு எதிராக ஆடி, அவரை விடவும் சிறந்த வல்லமையை ரிவேரா வெளிப்படுத்திவிட்டார். டேனியின் பிரபல முகவாய்க்கட்டைக் குத்து அவருக்கே திரும்ப விழுந்தது. ஒன்பதாவது எண்ணிக்கையில் அவர் எழுந்தபோது அதே கணத்தில் திரும்பவும் தாக்க ரிவேரா முயற்சிக்கவில்லை. நடுவர் வெளிப்படையாக மறித்து நின்றதுதான் காரணம். மாறுபட்ட சூழலில் ரிவேரா எழுந்திருக்க முயற்சி செய்யும் வேளையில் நடுவர் தாராளமாக வழி ஏற்படுத்தித் தரும் வகையில் நின்றிருந்தார். அப்போது அவர் டேனியை மறிக்கும் வகையில் நிற்கவில்லை.

பத்தாவது சுற்றில் இரண்டு முறை இடுப்பளவிலிருந்து கையை உயர்த்தி டேனியின் முகவாய்க்கட்டையில் தாக்கினார். டேனி அதிர்ந்து திணறினார். ஆயினும் அவரது புன்னகை அகலவில்லை. ஆனால் திரும்பவும் ஆளை விழுங்கிவிடும் சண்டை முறைக்குத் தாவினார். முன்போலவே சூறாவளியாகத் தாக்கினாலும், ரிவேராவிற்குப் பெரிதாக ஏதும் சேதம் ஏற்படவில்லை. அந்தச் சூறாவளியிலும் திக்குமுக்காடலிலும் ரிவேரா தொடர்ந்து மூன்று முறை டேனியை தரை விரிப்பில் வீழ்த்தினார். டேனி முன்போல விரைந்து மீளவில்லை.

பதினோராவது சுற்றில் அவரது நிலை கவலைக்கிடமானது. ஆனால் அதிலிருந்து பதினான்காவது சுற்று வரையிலும் தனது தொழிலின் மிகச் சிறந்த திறனைப் பெரும் கண்காட்சியாக வெளிப்படுத்தினார். குத்துகளைத் தடுத்தார், மறித்தார். ஆற்றலைச் சிக்கனமாகச் செலவழித்து, பலத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சித்தார். மேலும் எத்தனை விதிமீறல்களைக் கையாண்டு சண்டையிட முடியுமோ அத்தனையும் செய்தார். அத்தகைய விதிமீறல்களை பிறர் அறியாவண்ணம் எவ்வாறு பிரயோகிப்பது என்பது எல்லா வெற்றிவீரர்களுக்கும் தெரிந்த விஷயம்தான்.

எல்லா வகை நுணுக்கங்களையும் தந்திரங்களையும் தாக்குதல்களில் பயன்படுத்தத் தொடங்கினார் டேனி. இறுக்கிப் பிடித்திருக்கும் வேளையில் எதிர்பாராமல் தற்செயலாக நிகழ்வது போல தலையால் முட்டுவது, கைகளுக்கும் உடலுக்கும் நடுவில் ரிவேராவின் கையுறைகளை அழுத்திப் பிடித்துக் கொள்வது, தனது கையுறைகளை அவரது வாயின் பக்கமாக சாய்த்து மூச்சு முட்டச் செய்வது ஆகிய பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தினார். இறுக்கிப் பிடித்திருக்கும்போது, புன்னகைக்கும் முகத்துடன் அவரது கிழிபட்ட உதடுகள் சொல்லவே கூசும் கீழ்த்தரமான வார்த்தைகளை கடும் சீற்றத்துடன் ரிவேராவின் காதுகளில் அடிக்கடி உரைத்தன. நடுவரிலிருந்து பார்வையாளர்கள் வரை அனைவருமே டேனியின் சார்பாகவும், அவருக்கு உதவியாகவும் இருந்தனர். டேனியின் மனதில் உள்ளது என்னவென்பதும் அவர்களுக்குத் தெரியும்.

அறிமுகமற்ற இந்தப் புதியவர் மேலான சண்டைத் திறனை ஆச்சரியப்படுத்தும் வகையில் வெளிப்படுத்திவிட்டார். எனவே அவரை வீழ்த்தும்படியான ஒரு வலிமையான குத்தை வழங்கக் கூடிய சந்தர்ப்பத்திற்காக டேனி காத்திருந்தார். அவரது மொத்த நம்பிக்கையும் அந்தக் கணத்திலேயே ஆழ்ந்திருந்தது. எனவே அதிக சேதமில்லாத வகையில் எதிராளி தண்டிக்கும்படியான சந்தர்ப்பங்களை அவராகவே முன்வந்து அளித்தார். பின் நழுவினார். பாசாங்கு செய்தார். கவனக்குறைவாக ஒரு இடைவெளியைத் தந்தால், முழு சக்தியையும் திரட்டி மூர்க்கமான ஓர் அடியில் சண்டையின் போக்கையே மாற்றி விடலாம். நேர்த்தியான திறனுடைய வேறொரு வீரரும் முன்பொரு முறை அவ்வாறாக செயலாற்றியதை ஏற்கெனவே கண்டிருந்தார். அவ்விதமாக அவரும் செலாற்றக்கூடும் என்று எண்ணினார். வலதில் ஒன்று, இடதில் ஒன்று எனத் திட்டமிட்டார். வயிற்றின் மேற்பகுதியில் ஒரு குத்து, தாடையில் ஒரு குத்து. இதை அவரால் நிகழ்த்திக் காட்ட முடியும். அவர் உறுதியாகக் கால்களை ஊன்றி நின்றிருந்தால் போதும். அவரது கரங்களில் மீதியுள்ள பலத்தைக் கொண்டு வன்மையாக அடிக்க முடியும் என்பதை சிறந்த வகையில் பலமுறை நிரூபித்திருக்கிறார். அது பிரபலமான அவரது தனிச் சிறப்பும் கூட.

சுற்றுகளின் இடைவேளையில் ரிவேராவின் உதவியாளர்கள் அவரது நலன் குறித்து பாதியளவு அக்கறையைக் கூட காட்டவில்லை. அவர்களது கையிலிருந்த துவாலைகள் வெறும் காட்சிப் பொருளாகவே செயல்பட்டன. மூச்சிரைக்கும் அவரது சுவாசப் பைகளுக்குத் தேவையான காற்றைக் குறைந்த அளவிலேயே கிடைக்கும்படியாக மெல்லவே துவாலைகளை வீசினர். ஸ்பைடர் ஹாகெர்ட்டி சில அறிவுரைகளைக் கூறினார். ஆனால் அவை தவறான அறிவுரைகள் என்பது ரிவேராவிற்குப் புரிந்தது. அனைவரும் அவருக்கு எதிராகவே செயல்பட்டனர். துரோகங்களால் அவர் சூழப்பட்டிருந்தார்.

பதினான்காவது சுற்றில் ரிவேரா மீண்டும் டேனியை தரை விரிப்பில் வீழ்த்தினார். நடுவர் விநாடிகளை எண்ணும்போது, கைகளைப் பக்கவாட்டில் தொங்கித் தளர விட்டு ஓய்வெடுத்தபடி நின்றிருந்தார். அச்சமயம் எதிர்மூலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கிசுகிசுப்புகள் நிகழ்வதைக் கவனித்தார். மைக்கேல் கெல்லி எழுந்து நகர்ந்து, வழியை ஏற்படுத்திக்கொண்டு ராபர்ட்ஸின் அருகே சென்று, குனிந்து மெல்லப் பேசுவதையும் பார்த்தார். ரிவேராவின் காதுகள் பூனையின் காதுகளைப் போன்றவை. அவை பாலைவனத்தில் பயிற்சி பெற்றவை. பேச்சு வார்த்தையின் ஒருசில துணுக்குகளை அவர் காதில் வாங்கிக் கொண்டார். அவர்களது பேச்சை மேலும் கேட்க விரும்பினார். அதற்கேற்ப எதிராளி எழுந்தவுடன் அவரைக் கயிற்றோரமாகத் தள்ளிச் செல்லும் வகையில் சண்டையிட்டார்.

“வேறு வழியில்லை” மைக்கேல் சொல்வது கேட்டது. ராபர்ட்ஸ் ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார். “டேனி வென்றேயாக வேண்டும் – எனது செல்வமே தொலைந்து போகும் – டன் கணக்கில் பணத்தை இறக்கியிருக்கிறேன் – அனைத்தும் எனது சொந்தப் பணம் – பதினைந்து சுற்றுகளை அவர் தாக்குப் பிடித்தால் நான் திவாலாகித் தொலைந்து விடுவேன் – நீங்கள் சொல்வதை அவர் கேட்பார். ஏதேனும் அவரிடம் சொல்லி காரியத்தை முடியுங்கள்.”

அதன் பின் ரிவேராவிற்கு காட்சிகள் ஏதும் புலனாகவில்லை. அவரை விலைக்கு வாங்க முயற்சிப்பதைப் புரிந்து கொண்டார். மீண்டும் டேனியைத் தரையில் கிடத்திக் கைகளை பக்கவாட்டில் தொங்கவிட்டு ஓய்வெடுத்தார். ராபர்ட்ஸ் எழுந்தார்.

“டேனி ஓய்ந்து விட்டார்” என்றார் அவர். “நீ உன் மூலைக்குப் போ.”

அவர் அதிகாரத்துடன் கட்டளையிடும் தோரணையில் பேசினார். பயிற்சிக் கூடத்தில் அடிக்கடி அவ்வாறாகவே அவர் கட்டளையிட்டிருந்தார். ஆனால் ரிவேரா தனது கண்களால் சுட்டெரிக்கும் வெறுப்பை வெளிப்படுத்தி டேனி எழுவதற்காகக் காத்திருந்தார். சுற்றின் இடைவேளையில் ரிவேரா தனது மூலைக்குத் திரும்பியபோது, சண்டையை ஏற்பாடு செய்திருந்த கெல்லி அவரருகே வந்து பேசினார்.

“விட்டுத் தொலை, சனியனே” கண்டிப்பான வகையில் அருவருப்பூட்டும் மென்குரலில் ஏவினார். “நீ தோற்க வேண்டும் ரிவேரா. நான் சொல்வதைச் செய். உனது எதிர்காலத்தை நானே வளமாக்குகிறேன். அடுத்த முறை நீ டேனியை தோற்கடிக்க நானே ஏற்பாடு செய்கிறேன். ஆனால் இப்போது நீ பணிந்து விடு.”

ரிவேரா கேட்டுக்கொண்டதை தனது கண்களின் வழியாகத் தெரிவித்தார். ஆனால் ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ எவ்வித அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை.

“ஏன் பேசாமல் இருக்கிறாய்?” கடும் சீற்றத்துடன் கெல்லி வினவினார்.

“எந்த வகையிலும் நீ தோற்பது உறுதி” ஸ்பைடர் ஹாகெர்ட்டி இணைந்து ஒத்து ஊதினார். “உனது வெற்றியை எப்படியும் நடுவர் தடுத்து விடுவார். கெல்லி சொல்வதைக் கேள். பணிந்து விடு.”

“தற்சமயம் தோற்று விடு வாலிபனே” கெல்லி மன்றாடினார். “பின் நீ முதன்மை நிலையை அடைய நானே உதவுவேன்.”

ரிவேரா பதிலேதும் பேசவில்லை.

“நான் சொல்வதை உறுதியாகச் செய்வேன். இப்போது நீ எனக்கு உதவி செய் வாலிபனே.”

இந்தச் சதிகளையெல்லாம் அரங்கம் உணரவில்லை. மணி ஒலித்ததும் ஏதோவொரு காரியம் நிகழப் போவதை ரிவேரா உணர்ந்தார். அவருக்கு அது என்னவென்று புரியவில்லை. அது வளையத்திற்கு மிக நெருங்கியிருந்தது. டேனியின் முகமலர்ச்சி முன்பிருந்த உறுதியான வெற்றி வாய்ப்பு திரும்பக் கிட்டியதை உணர்த்துவது போலிருந்தது. அவர் தன்னம்பிக்கையோடு முன்னேறியது ரிவேராவை அச்சுறுத்தியது. ஏதோவொரு சூழ்ச்சி டேனிக்கு வெற்றியை வழங்கப் போகிறது.

டேனி பாய்ந்து வந்தார். ஆனால் ரிவேரா அவரை நேருக்கு நேராக எதிர்கொள்ள மறுத்தார். அவர் தற்காப்புக்காக அப்பாய்ச்சலை விலக்கி ஒதுக்க எண்ணினார். எதிராளி தன்னை நெருங்கி இறுக்கிப் பிடிக்கும் வாய்ப்பை விரும்புகிறார். அவரது தந்திரத்தைச் செயல்படுத்த அது ஏதோ ஒருவகையில் உதவக் கூடும். ரிவேரா பின்வாங்கி சுழன்று நழுவினார். இருப்பினும் அதே தந்திரம் உடனடியாகவோ அல்லது சிறிது நேரம் கழித்தோ திரும்பவும் முயலப்படும். அதை முறியடிக்க வேண்டுமென அவர் உறுதியாக முடிவெடுத்தார்.

டேனியின் அடுத்த முயற்சியின் போது அதற்கு உதவுவது போல் நின்றார். ஆனால் இரு உடல்களும் நெருங்கக்கூடிய இறுதிக் கணத்தில் விரைந்து திடீரெனத் திறமையாகப் பின் வாங்கினார். அதே சமயம் டேனியின் மூலையிலிருந்து “விதிமீறல்! விதிமீறல்!” எனக் குரலெழுப்பினர். ஆனால் ரிவேரா அவர்களை ஏமாற்றிவிட்டார். நடுவர் முடிவெடுக்க இயலாமல் தயங்கினார். முடிவைச் சொல்லும் வார்த்தை அவரது உதடுகளிலிருந்து வெளிவருவதற்குள் அரங்கிலிருந்த ஒரு சிறுவன் கீச்சென்று உச்சஸ்தாயியில், “மோசடி! மோசடி!” என்று கத்தினான். உதடுகளில் நடுங்கிக்கொண்டிருந்த வார்த்தைகள் வெளிவராமல் நடுவர் அமைதியானார்.

டேனி வெளிப்படையாக ரிவேராவை சபித்தவாறே நெருங்கினார். ரிவேரா ஒயிலாக ஆடியவாறே விலகினார். மேலும் டேனியின் உடம்பில் தாக்கக்கூடாது என்றும் மனதிற்குள்ளாக ரிவேரா முடிவெடுத்தார். அத்தகைய முடிவினால் வெல்வதற்கான வாய்ப்புகள் பாதியாகக் குறைந்தன. இருப்பினும் வெல்வதற்கு ஒரே வழி நெருங்காமல் விலகியிருந்தே சண்டையிட்டு வீழ்த்துவதுதான் என்பதைப் புரிந்துகொண்டார். சிறிதளவேனும் சந்தர்ப்பம் கொடுத்தாலும் விதிமீறல் எனப் பொய் சொல்லிவிடுவார்கள்.

டேனி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காற்றில் பறக்கவிட்டார். மேலும் இரண்டு சுற்றுகளிலும் அருகே நெருங்கி வராமல் விலகியே சண்டையிட்டுக் கொண்டிருந்த வாலிபரை சரமாரியாக அடித்தார். ரிவேராவை மீண்டும் மீண்டும் குத்தினார். அருகே நெருங்குவதைத் தவிர்ப்பதற்காக ரிவேரா அடி மேல் அடிகளைப் பெற்றார். டேனியின் இத்தகைய உச்சமான இறுதிப் புதுமுயற்சி, பார்வையாளர்களை எழுந்து நிற்கச் செய்து கரகோஷமிட வைத்தது. அவர்கள் பித்துப் பிடித்தது போலாயினர். அவர்களுக்குப் பிடித்தமானவர் வெல்லப் போகிறார் என்கிற ரீதியிலேயே பார்த்தனர். அவர்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.

“ஏன் பதிலுக்குத் தாக்காமல் இருக்கிறாய்?” என்று கூட்டத்தினர் கோபத்துடன் கூச்சல் எழுப்பினர். “கோழை! கோழை! அற்பநாயே! எதிர்த்து சண்டையிடு! அவனைக் கொன்று விடு டேனி!” என்றெல்லாம் கூவினர்.

அரங்கம் முழுவதும் கூடியிருந்த பார்வையாளர்களில் ஒருவர் பாக்கியில்லாமல் எழுச்சிகொண்டிருந்தனர். ரிவேரா மட்டுமே தனித்து உணர்ச்சி வசப்படாதிருந்தார். ஆயினும் அங்குள்ளவர்களில் அவரே அதிகக் கோபமும், சூடான ரத்தமும், பெரும் மன எழுச்சியுமிக்க சுபாவம் கொண்டவர். ஆனாலும் தற்போதுள்ள சூழலை விடவும், பரந்த அளவிலான கொடூர அசம்பாவிதங்களைக் கண்கூடாகக் கண்டு அவற்றையெல்லாம் கடந்து வந்தவர். எனவே பத்தாயிரம் மக்கள் கூடி, மேலும் மேலும் குரல்கள் அலை அலையாக வெறியுடன் உயர்வதெல்லாம், அவரது மூளைக்கு வேனிற்கால அந்திப் பொழுதின் தென்றல் காற்றாகவே வீசியதே தவிர வேறு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பதினேழாவது சுற்றிலும் டேனி முனைப்புடன் வேகமாய் இயங்கினார். ரிவேரா வலிமையான ஒரு குத்துப்பட்டுத் தொங்கித் தளர்ந்தார். வேறு வழியின்றி அவரது கைகள் கீழிறங்கித் தள்ளாடிப் பின் நகர்ந்தார். இதுவே அரிய வாய்ப்பு எனவும், வாலிபர் தனது ஆதிக்கத்தில் உள்ளார் எனவும் டேனி எண்ணினார். இவ்வாறாகப் பாசாங்கு செய்த ரிவேரா, தன்னம்பிக்கையோடு தற்காப்பின்றி டேனி நெருங்கி வருவதைக் கண்டார். விரைந்து சாட்டையடி போல் கையை அவரது வாய்க்கு வீசினார். டேனி மல்லாந்தார். அவர் திரும்ப எழுந்த போது ரிவேரா மீண்டும் தனது வலது கரத்தால் கழுத்திலும் தாடையிலும் படும்படியாகக் குத்தினார். அவ்வாறாகவே மூன்று முறை திரும்பத் திரும்பத் தாக்கினார். இந்தக் குத்துகளை எந்த நடுவராலும் விதிமீறல் என்று சொல்லிவிட முடியாது.

“ஓ! பில்! பில்!” கெல்லி நடுவரிடம் மன்றாடினார்.

“என்னால் இயலவில்லை” நடுவர் வருத்தத்துடன் பதிலுரைத்தார். “எந்த வாய்ப்பையும் எனக்கு அவர் தரவில்லை.”

டேனி சீர்குலைந்த நாயகராகத் திரும்ப எழுந்தார். கெல்லியும் வளையத்தின் அருகேயிருந்தவர்களும் காவலரை அழைத்து சண்டையை நிறுத்துமாறு கூறினர். இருப்பினும் டேனியின் மூலையிலிருந்து துவாலை வீசப்படவில்லை. பருத்த தலைமைக் காவலர் கயிற்றின் வழியாகத் தடுமாறி மேலேறி வர முயல்வதை ரிவேரா பார்த்தார். காரணம் என்னவென்று அவருக்கு விளங்கவில்லை. அமெரிக்கர்களின் இந்த விளையாட்டில் மோசடி செய்வதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. ரிவேராவின் முன்னால் டேனி எழுந்து குடிவெறியில் தள்ளாடுபவர் போல ஏதும் செய்ய இயலாது நின்றார். நடுவரும் தலைமைக் காவலரும் ரிவேராவின் பக்கமாக நெருங்கி வர முயலும் வேளையில் தனது இறுதிக் குத்தால் மீண்டும் தாக்கினார். பின் சண்டையை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காரணம் டேனி எழவில்லை.

“விநாடிகளை எண்ணுங்கள்!” ரிவேரா நடுவரிடம் கரகரத்த குரலில் கத்தினார். எண்ணிக்கை முடிந்ததும் டேனியின் உதவியாளர்கள் வந்து அவர்களது மூலைக்கு அவரைத் தூக்கிச் சென்றனர்.

“யார் வென்றது?” ரிவேரா வினவினார்.

தயக்கத்துடன் நடுவர் ரிவேராவின் கையுறை அணிந்த கையை மேலே உயர்த்தினார்.

ரிவேராவுக்கு யாரும் பாராட்டுத் தெரிவித்து வாழ்த்தவில்லை. தனது மூலைக்கு அவர் தனித்தே நடந்து சென்றார். அங்கு அவரது உதவியாளர்கள் அதுவரை முக்காலியைக் கூடப் போடவில்லை. அவர் பின்புறமாகக் கயிற்றில் சாய்ந்தவாறு, தனது வெறுப்பை உமிழும் கண்களால் உதவியாளர்களை நோக்கினார். அப்படியே கண்களைத் திருப்பி, வளையத்தின் அருகே சுற்றிலுமிருந்த முகங்களை வெறுப்புடன் பார்த்தார். பின் அதே பார்வையை சுழற்றி, அரங்கில் கூடியிருந்த பத்தாயிரம் அமெரிக்க முகங்களையும் நோக்கினார். அவருக்குக் கீழே அவரது கால்முட்டிகள் நடுங்கிக்கொண்டிருந்தன. முற்றிலும் சோர்வடைந்த நிலையில் அவரது மார்புகள் விம்மின. குமட்டலும் தலைசுற்றலும் ஏற்பட்டபோது கண்முன்னே அவர் வெறுக்கும் அமெரிக்க வெள்ளை முகங்கள் தொய்ந்து முன்னும் பின்னுமாக ஆடின. அவையெல்லாம் துப்பாக்கிகள் என அவருக்குத் தோன்றியது. அந்தத் துப்பாக்கிகள் இப்போது அவரது உடைமை. எனவே புரட்சித் தொடரக்கூடும்.

1 comment

Senthilvelsubramaniab Sankaranarayanan July 25, 2021 - 8:35 pm

எழுத்து என்பது சினிமாவைவிட பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானது என்பதை எழுதிச்செல்லும் ஒநாயின் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்,மொழிபெயர்ப்பு என்பது தெரியாத வாறு ஆக்கிய படைப்பாளனுக்கும் வந்தனங்கள்.

Comments are closed.