ஒப்பாரிகள் குறும்பாடல்கள் நாட்டுப்பாடல்கள் (ப்ளூஸ்)
வாழ்த்துப்பாக்கள் என்று எங்கும் தமது அடிமை கீதங்களை
மீண்டும்மீண்டும் பாடிக்கொண்டும், அறிந்திராக் கடவுளிடம் இரவுதோறும்
தம் துதிகளால் துதித்துக்கொண்டும், காண்பரிய சக்திக்குத்
தம் கால்மடித்துப் பணிந்துகொண்டும் இருக்கும்
என் மக்களுக்காக
வருடங்களுக்கு – கடந்த வருடங்களுக்கும், நிகழ் வருடங்களுக்கும்,
வரக்கூடும் வருடங்களுக்கும் தம் வலுவை வழங்கிக்கொண்டும்
துவைத்தும் தேய்த்தும் சமைத்தும் துடைத்தும் தைத்தும் திருத்தியும்
களைந்தும் உழுதும் தோண்டியும் நட்டும் செதுக்கியும் சீரமைத்தும்
இழுபட்டுக்கொண்டு என்றும் ஈட்டாமல் என்றும் அறுவடைசெய்யாமல் என்றும்
அறியாமல் என்றும் புரியாமல் இருக்கும்
என் மக்களுக்காக
அலபாமாவின் கொல்லைகளில் மண்ணிலும் புழுதியிலும் மணலிலும்
விளையாடியும் புனிதப்பெயர்சூட்டியும் போதித்தும் மருத்துவர்
சிறை ராணுவம் பள்ளி அம்மா சமையல்
விளையாட்டுக்கூடம் கடை கச்சேரி சிகை
‘மிஸ் சூம்பி அண்ட் கம்பெனி’ என்றிருக்கும்
என் விளையாட்டுத் தோழர்களுக்காக
ஏன் என்பதற்குக் காரணங்கள் வினாக்களுக்கு விடைகள்
நபர்கள் யார் இடங்கள் எவை நடந்தது எப்போது என்று
கற்கவும் அறியவும் பள்ளி சென்ற ஆண்டுகள், நாம்
கறுப்பர் வறியவர் சிறயவர் வேறானவர் யாரும்
பொருட்படுத்தவில்லை யாரும் மெச்சிக்கொள்ளவில்லை யாரும் புரிந்துகொள்ளவில்லை
என்பதை நாம் கண்டுகொண்ட கசப்பான பொழுதுகளின் நினைவாய்
அந்த இறுக்கமான குழப்பமான ஆண்டுகளுக்காக
இவை இப்படி இருந்தபோதும், ஆணாகவும் பெண்ணாகவும்
வளர்ந்து, நகைத்து ஆடிப்பாடி விளையாடி மது மதம் வெற்றி
அருந்தி, நண்பர்களை மணந்து குழந்தைகள் ஈன்று
காசநோய் ரத்தசோகை கும்பல்தாக்கிக் கொலை என்று இறந்தும் போன
சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்
சிகாகோவின் 47வது வீதியிலும் நியூ யார்க்கின் லெனாக்ஸ்
குறுக்குத்தெருவிலும் நியூ ஆர்லியன்ஸின் ராம்பார்ட் வீதியிலும்
அலைமோதி, இழந்து சொத்து மறுக்கப்பட்டு பறிக்கப்பட்டு களிமிகு
மக்கள் காபரேக்களையும் மதுக்கூடங்களையும் மற்றவர்கள்
சட்டைப்பைகளையும் நிறைத்து, ரொட்டி பாதுகை பால் நிலம்
பணம் ஏதேனும் – நமதே நமது என்று ஏதேனும் தேவைப்படும்
என் மக்களுக்காக
கண்மூடித் திரிந்து இன்பமெலாம் இறைந்து, சோம்பிக் கிடந்து
நேரத்தை இழந்து, பசிக்கையில் உறங்கி, பாரம் கூடுகையில்
கூச்சலிட்டு, நம்பிக்கையிழக்கையில் குடித்து, நமக்குமேல்
உயர்ந்து நின்று சகலமும் அறிந்து சிரிக்கும் கண்காணாப் பிறவிகளால்
கட்டப்பட்டு, நமக்குள்ளேயே பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கும்
என் மக்களுக்காக
இருள்கவிந்த தேவாலயங்கள், பள்ளிகள் கேளிக்கைக்கூடங்கள்
குழாம்கள் மன்றங்கள் சங்கங்கள் வாரியங்கள் மாநாடுகளில்
தவறிழைத்துத் தடவித் தட்டுத்தடுமாறி, பணப்பசியும் புகழாசையும் கொண்ட
அட்டைகளால் அல்லல்பட்டு உளைச்சலுற்று ஏமாற்றப்பட்டு விழுங்கப்பட்டு,
அரசு பொதுமோகம் புதுமை போன்ற எளிய விசைகளுக்கும்,
போலி இறைத்தூதர்களுக்கும் புனித விசுவாசிகளுக்கும் இரையாகும்
என் மக்களுக்காக
நின்றும் உற்று நோக்கியும்
குழப்பத்திலிருந்தும், பாசாங்கிலிருந்தும், தவறான புரிதலிலிருந்தும் மீள
புதிய சிறப்பான பாதையை வடிவமைக்க முயன்று
எல்லா மக்களையும், எல்லா முகங்களையும், எல்லா ஆதாம்களையும் ஏவாள்களையும்
அவர்களது கணக்கற்ற சந்ததியரையும் தாங்கும் ஓர் உலகம் அமைக்கவும் முயன்றுவரும்
என் மக்களுக்காக
ஒரு புதிய பூமி உதயமாகட்டும். புதியதோர் உலகம் பிறக்கட்டும். வானில்
ஒரு பாழும் அமைதி எழுதப்படட்டும். துணிவு ததும்பும்
இரண்டாம் தலைமுறை பிறந்துவரட்டும்; சுதந்திரத்தை
நேசிக்கும் ஒரு மக்கள்திரள் வளர்ந்துவரட்டும். நோய்நீக்கும்
திறம்நிறை எழிலும் இறுதியில் விரல்முறுக்கும் வலுவும்
நம் உணர்விலும் உதிரத்திலும் துடிப்பாய் இருக்கட்டும்.
பரணிகள் பாடப்படட்டும், ஒப்பாரிகள் ஓயட்டும்.
ஒரு மனித இனம் இனி எழட்டும், பொறுப்பேற்கட்டும்.
[மார்கரெட் வாக்கர் – Margaret Walker (1915-1998) தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘For my people’ (1942) மூலம் Yale Series for Younger Poets விருதினை வென்றார். இவர் இவ்விருதினை வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் கவிஞர். Jubilee என்ற முக்கியமான நாவலையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வரலாற்றுப் பின்னணியில் எழுதியுள்ளார்.This is my century (1989) அவரது கவிதைகளின் முழுத்தொகுப்பு.]
மூலக் கவிதை:
https://www.poetryfoundation.org/poetrymagazine/poems/21850/for-my-people