சித்தாந்தவாதி எனும் உபாதை

by நவீன்குமார்
0 comment

நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்லாம் கருத்து மோதல்கள் அல்ல, கருத்தியல் மோதல்கள் என்பது தெளிவாக தெரிகிறது (கருத்தியல் என்பதை அவரவரது *ism என்று அர்த்தம் கொள்ளலாம்). பெரும்பாலான விவாதங்களில் நடப்பவை இரண்டு கருத்தியல்களுக்கான மோதல். இதற்கான முக்கியக் காரணம் இங்கே மக்கள் கருத்தியல்களால் குழுக்களாகப் பிரிந்திருக்கிறார்கள். கருத்தியல் மோதல்கள் ஆரோக்கியமானது என்றும் ஒருவருக்கு கருத்தியல் அல்லது சித்தாந்தம் இருப்பது முக்கியமானது என்றும் தொடர்ச்சியாக நம்பவும் செய்கிறார்கள். ஆனால் நாம் நினைப்பது போல கருத்தியல்கள் செயல்படுவதில்லை. சமூகத்தின் பெரும்பாலான பிரச்சனைகளை உன்னிப்பாக/நுணுக்கமாக  எதிர்கொள்ள கருத்தியல் எனும் ‘template’ உதவுவதில்லை. மாறாக அவை பிரச்சனைகளின் தீர்வுகளை எட்ட பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன.

அதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய விவாதக் களத்தில் பெரும்பாலும் இரு வெவ்வேறு சித்தாந்தம் கொண்டவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்தப் பிரச்சனையில் அவர்களின் சித்தாந்தம் எவ்விதத்திலும் உடைபட்டுவிடக் கூடாது என்று பாதுகாக்கிறார்கள். அவர்களின் சித்தாந்தங்களின் ஊதுகுழலாக (mouthpiece) செயல்படுகிறார்கள். மொத்தத்தில் இருவருமே குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய நகர்விற்கு செல்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறார்கள். இரண்டு அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்னையை விவாதிக்கிறோம் பேர்வழி என்ற போர்வையில் தங்கள் கட்சியைக் காப்பாற்றுவது போலாகிவிடுகிறது. இவ்வாறான சித்தாந்தத்தைச் சார்ந்த சிந்தனை நிலைப்பாட்டில் இருப்பதற்கு ஒருவரை எது ஊக்குவிக்கிறது என்றால், அவரை விட மோசமான அபத்தமானதான சித்தாந்தம் ஒன்று இருப்பதும் அதற்கான இவரின் எதிர்ப்பும் தான். அதனால் ஒருவர் அந்த மோசமான சித்தாந்தத்துடன் தன்னை ஒப்பிட்டு தன்னுடைய சித்தாந்த நிலை சரியானது என்றும் தன்னை முற்போக்கு சிந்தனைவாதி என்றும் நினைக்க முற்படுகிறார். சொல்லப்போனால், இப்படிச் செய்வோர் இந்தக் கருத்தியல் உடைமையால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நம்மை மேம்படுத்திக்கொள்ளும் இன்னும் பல நூறு சிறந்த நிலைப்பாடுகளை கண்மூடித்தனமாக புறக்கணிக்கிறார்கள்.

உலக அளவில் உள்ள மனநல நிபுணர்கள் இதனை ஒரு மனக்கூறாகவே பார்க்கிறார்கள். இதனை தீவிரமாக ஆராய்ந்தவர்கள், இதனை Pathology of Ideological Possession என்று அழைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் முக்கியமான விஷயம் ‘நீங்கள் கடைப்பிடிக்கும் சித்தாந்தத்தின் ஆபத்து அதன் உட்பொருளில் இல்லை, ஆனால் நீங்கள் அதனை கடைப்பிடிக்கும் கண்மூடித்தனத்தில் உள்ளது’ என்பதாகும். உலகின் சிறந்த உளவியல் நிபுணர்களுள் ஒருவரான Carl Jung இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே விவரித்திருக்கிறார். ‘ஒரு கருத்து என்பது பல ஆயுதங்களை விட வலிமையானது. அதன் உட்பொருள் எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும் அதனைத் தாண்டி மனித மனங்களில் பல ஆபத்துக்களைக் கொடுக்கக் கூடியது. பல கோடி மனிதர்களைக் கொள்ளக் கூடிய வலிமை கொண்டது’ என்று சொல்கிறார். எப்படி ஜாதி, மதம் போன்றவை மனிதர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த முடியுமோ அது போலத் தான் ஒரு ‘ஐடியா’வும் என்றார். இது குறித்து அவர் சொன்ன ஒரு முக்கிய வாக்கியம் – ‘People don’t have ideas. It is ideas that has people’. இதனை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹிட்லர் அத்தனை நபர்களைக் கொன்று குவித்தது அவரிடம் இருந்த ஐடியா. மற்றொரு திசையில் கார்ல் மார்க்ஸ் கொடுத்த ஒரு ஐடியா நியாயமானது. உழைப்பாளர்களுக்கானது. ‘எல்லோரும் சமம்’ எனும் சமத்துவம் கொண்டது. ஆனால் அதன் விளைவுகள்? 20 ஆம் நூற்றாண்டில் பல கோடி உயிர்களைக் கொன்று குவித்தது. ஆனால் இன்றும் மார்க்ஸின் ஐடியாவை பலரும் விட்டுக்கொடுப்பதில்லை. கம்யூனிஸத்தின் சமீபத்திய பலியாடான வெனிசுலாவைப் பார்த்த பிறகும் பெரும்பாலானோருக்கு அவர்கள் தூக்கிச் சுமந்த சித்தாந்தத்தை (Ideology) விட்டுக்கொடுக்க மனமில்லை. இது தான் கார்ல் யுங் எச்சரித்த ஐடியாக்களின் வலிமை. தங்களின் சித்தாந்தத்தை விட மோசமான ‘பாசிஸ’த்திற்கு தாங்கள் எதிரி எனும் ஒரு காரணமே அவர்களுக்கு தங்களின் சித்தாந்தத்தை நிரந்தரமாகப் பற்றிக்கொள்ள போதுமானதாக இருக்கிறது. அதனாலேயே மார்க்ஸிசத்தை நம் ஊரில் அவ்வளவு எளிதில் விமர்சித்துவிட முடிவதில்லை. அப்படி விமர்சித்தால் அடுத்த நொடி உங்களுக்கு பாசிஸ அடையாளம் கொடுக்கப்படும். எனவே, இருக்கும் இரண்டு தெரிவுகளில் இது பரவாயில்லை என்று பலர் அதனோடு நின்றுவிடுகிறார்கள். இது போலவே நம்மைச் சுற்றியுள்ள பல பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண முனைகையில் நாம் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ‘இரண்டில் ஒரு பக்கம் நில்’ எனும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

எனவே, ஒரு சித்தாந்தவாதியாக உங்களை நீங்கள் முன்வைத்துக்கொள்வது என்பது அடிப்படையில் உங்களின் சிந்தனை வெளிக்கு தடை போடுவதாகும். உங்கள் சித்தாந்தத்தின் நியாயம் (அல்லது நியாயம் என்று நீங்கள் நம்பிக்கொள்வது), நீங்கள் சித்தாந்தவாதியாக இருப்பதை நியாயப்படுத்திவிடாது. ‘நான் இந்த ism-ஐ கடைப்பிடிக்கிறேன். நான் இந்த -ist என்பதில் பெருமைப்படுகிறேன்’ என்பவர்கள் தங்களை, தங்களின் சிந்தனைத் திறனை தத்தம் இசம்’களுக்காக தாரை வார்த்துவிட்டார்கள் என்பது தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. மதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்களிடம் தென்படும் இறுமாப்புள்ள (dogmatic) மனநிலை இவர்களைக் கைப்பற்றிவிடுகிறது. அவர்களுக்கான மிகப்பெரிய கேடையம் அவர்களை விட மோசமானதொரு சித்தாந்தம் கொண்ட குழுவும், அக்குழுவின் மீதுள்ள இவர்களின் எதிர்ப்பும்.

20ஆம் நூற்றாண்டில் மனித இனம் நிகழ்த்திய பேரழிவுகளை நுணுக்கமாக ஆராய்ந்த உளவியல் ஆய்வாளர்கள் சொல்லும் இன்னொரு விஷயம் Collective Psychology. அதாவது ஒரே சித்தாந்தம் கொண்ட பலர் ஒன்று கூடி அதைப் போற்றுவது. சென்ற நூற்றாட்டின் மிக மோசமான சர்வாதிபத்தியத்திற்கான (Totalitarianism) முக்கியக் காரணமாக இதைச் சொல்லியிருக்கிறார்கள். ஹிட்லர், ஸ்டாலின் போன்றோர் சர்வாதிகாரத்தை எளிதாக கையில் எடுக்க முடிந்ததற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு தன் மக்களின் ஆதரவு இருந்ததனால் தான். மக்களின் பேராதரவிற்குக் காரணம் அவர்களின் சித்தாந்தம் சார்ந்த கும்பல் மனப்பான்மை (Mob Mentality). இந்த கும்பல் மனப்பான்மையின் ஆபத்து சாதாரண போராட்டத்தில் ஆரம்பித்து, கொத்துக் கொத்தாக மனிதர்களைக் கொன்று குவிக்கும் வல்லமையைப் பெற்றது. ஆச்சர்யமாக, கூட்டு உளவியல் மனநிலையில் நடக்கக் கூடிய பேரழிவுகள் குறித்து மனோதத்துவ மேதைகளான Sigmund Freud, Carl Jung போன்றோர் முன்னமே எச்சரித்திருக்கிறார்கள். “மன ரீதியாக உங்கள் கருத்தியலைக் கொண்டவர்களுடன் நீங்கள் ஒன்று சேர்ந்து குழுவாக மாறும் பொழுது உங்களின் சிந்தனை திறன் பல மடங்கு குறையும். மிக முக்கியமாக, ஒரு தனி மனிதனாக நீங்கள் உங்களை சரி செய்து கொள்ள இருக்கும் வாய்ப்புகள் அனைத்தும் குழு மனப்பான்மையில் அழிந்து போகும்” என்றனர்.

‘Masses are always breeding grounds of psychic epidemics’ – Carl Jung

Carl Jung

இது சாதாரணமாகத் தெரிந்தாலும், மிகவும் ஆபத்துகளைத் தரக்கூடியது என்பதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். காரணம், உளவியல் ரீதியாக மனித மனம் அப்படித் தான் செயல்படும். தனி மனிதனாக  ‘நம் தரப்புப் பிழையை நாம் கொஞ்சம் சரி செய்து கொள்ளலாம்’ என்றிருக்கும் மனநிலை தனக்கான குழுவுடன் ஒன்று சேர்ந்தவுடன் ‘என் பக்கம் தவறில்லை. நீ உன்னை திருத்திக்கொள்’ என்பதாக மாறிவிடும். இந்த collectivism-ல் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்வது தான் நம் சிந்தனையை நல்வழிப்படுத்தும் முறை. நாஸி ஜெர்மனியில் ஹிட்லர் தன்னை முன்னெடுத்துச் சென்றதற்குக் காரணம் ஜெர்மானியர்களின் குழு மனப்பான்மை தான். அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக கருத்து சொல்லும் எதிராளியின் கருத்தைக் கேட்டு ஆலோசிக்கும் அறிவை இழந்தவர்கள். அதனை விட முக்கியமானது, தன் சொந்தக் கூட்டத்திலேயே தங்களின் கருத்துக்கு எதிராக யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்களை அழிக்கக் கூடியவர்கள். இதைத் தான் கும்பல் மனப்பான்மையின் மிகப்பெரிய ஆபத்தாக பலர் சொல்லியிருக்கிறார்கள். இங்கே புரட்சி என்று கூட்டம் சேர்த்து கோஷம் போடுபவர்கள் உண்மையில் திராணி இருந்தால் அவர்களின் கூட்டத்தை விமர்சித்து கோஷத்தின் நடுவே ஒரு கருத்தைச் சொல்ல முடியுமா என்று சிந்திக்க வேண்டும். அப்படி பெரும்பாலும் யாரும் செய்வதில்லை. உண்மையில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இயங்கும் தன் குழுவிடம் அதற்கு எதிரான கருத்தை முன்வைத்தால் தனக்கு ஆபத்தாகிவிடும் எனும் பயத்தினால் சிந்திக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கூட்டத்தோடு ஒன்றி விடுகிறான். இந்த உளவியல் தான் குழு மனப்பான்மையின் முக்கிய ஆபத்து.

ஸ்டாலினின் பிடியில் ரஷ்யா இருந்த போது அவரின் படையில் தளபதியாகப் பணி புரிந்தவர் Aleksandr Solzhenitsyn. ஆனால் ஸ்டாலினும் அவரது அரசும் கம்யூனிஸம் எனும் பெயரில் நடத்தும் அநியாயங்களை கடுமையாக எதிர்த்தார். அதனால் இவர் ஸ்டாலின் அரசால் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், சிறையிலும் வதை முகாமிலும் நடக்கும் அநியாயங்களை The Gulag Archipelago எனும் புத்தகத்தில் எழுதினார். பல வருட போராட்டங்களுக்குப் பிறகே அந்தப் புத்தகம் வெளியானது. அவருக்கு இலக்கிய நொபேல் பரிசும் கிடைத்தது. ‘நான் பார்த்தவர்கள் அனைவரும் சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனி சிந்தனை இல்லை. பொத்தானை அழுத்தினால் தங்களின் சித்தாந்தத்தை வாய் வழியாகக் கக்கும் ஒரு மெஷினாக இருக்கிறார்கள். தங்களின் சித்தாந்தம் நியாயமானது என்பதால் அதன் வழி உலகை சீர்ப்படுத்தலாம் என்று கனவுலகில் வாழுகிறார்கள்’ என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார்.

“Thanks to ideology, the twentieth century was fated to experience evildoing on a scale calculated in the millions” – Aleksandr Solzhenitsyn.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், நாம் அனைவரும் Aleksandr Solzhenitsyn அல்ல. பெரும்பாலான மக்கள் குழு மனப்பான்மையில் தங்களின் பக்கம் நியாயம் இருப்பதாக நினைப்பவர்கள் அல்லது அது இல்லை எனத் தெரிந்தாலும் சொல்ல அஞ்சுபவர்கள். இந்தப் பெரிய குறையை பயன்படுத்தி நவீன உலகில் நடக்கும் மிக மோசமான விஷயம் அடையாள அரசியல் (Identity politics) இதனைப் பின்பற்றும்போது தனி மனிதனாக நீங்கள் யார், உங்களின் அடையாளம் என்ன என்பதை எல்லாம் புறக்கணித்து உங்களுக்கென்று ஒரு குழு அடையாளம் கொடுக்கப்படுகிறது. இங்கே உங்களின் தனி மனித சிந்தனை, உங்களின் தனித்துவம் என எதுவுமே முக்கியமல்ல. குழு அடையாளமே  நீங்கள் என்று உங்களை நினைக்க உந்துவது. எனவே நான் மேலே குறிப்பிட்ட குழு மனப்பான்மை உங்களுக்கு இப்பொழுது ஒரு குழு அடையாளத்துடன் கிடைத்துவிடும். இதைத் தான் ஹிட்லரும் ஸ்டாலினும் மாவோவும் செய்தார்கள். ஹிட்லரின் பேச்சைக் கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். ஜெர்மானியர்கள் எனும் பெயரில் குழுவாக அனைவரையும் திரட்டி, ‘நாம் பாதிக்கப்பட்டோம். அதனால் அதற்கு இன்று ஒன்று கூடி போராடுவோம்’ என்றார். அடையாள அரசியலின் மூலம் உங்களை பல விதமாகக் குழு அடையாளத்திற்குள் அடைக்கலாம். பாலினம், நிறம், ஜாதி, மதம், மொழி, இனம் என எத்தனை விதமாக வேண்டுமானாலும் ஒருவரை குழுவாக்கலாம். அப்படி ஒன்று திரட்டி குழுவாகச் செயல்படவும் சிந்திக்கவும் வைக்கலாம். இது தான் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. குழு அடையாளம் (Group Identity) என்பது உங்களின் தனித்துவ சிந்தனையை முடக்குவது.

இங்கே பலர் தங்களின் குழு அடையாளத்தை நியாயப்படுத்தும் முக்கியக் காரணம் ‘குழுவாக நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம்’ என்பது. ஜெர்மானியர்களுக்கும், ரஷ்யர்களுக்கும் குழுவின் பெயரால் பாதிக்கப்பட்ட உணர்வு இருந்திருக்கிறது. அதன் நீட்சியாகத் தான் யூதர்களையும் உக்ரேனியர்களையும் கொன்று குவிக்கும் நிலை வந்தது. குழுவாக பாதிக்கப்பட்டாலும் அதற்கான தீர்வு குழு அடையாளத்தால் கிடைக்காது. தனி மனிதன் அதனைச் சரியாகப் புரிந்துகொள்வதில் உள்ளது என்பதைத் தான் சிந்தனையாளர்கள் முன்வைத்துள்ளார்கள். குழு அடையாளம் என்பது ஒரு பிரச்னையை எதிர்கொள்ள நேரான வழியை நிராகரிப்பது. உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் ஒரு மனிதனாக உங்களை நீங்கள் எத்தனை குழுக்களுக்குள் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்? நீங்கள் 20 குழுக்களுக்குள் அடங்குவீர்கள் என்றால் அனைத்திற்கும் மற்ற குழுக்களுடன் போராடுவீர்களா? இதனைப் புரிந்துகொள்ளாமல் Identity politics-ஐ கையில் எடுப்பவர்கள் தான் போராளி என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். புரட்சி, போராட்டம் போன்றவை ரொமான்டிஸைஸ் செய்யப்பட்டிருக்கின்றன. உங்களைக் குழுவாகப் பிரித்து குழு அடையாளம் கொடுப்பவரிடம் கவனமாக இருங்கள். காரணம், உங்களின் குழுவைத் தாண்டி வெளியே இருப்பவர்களும் மனிதர்கள் தான். குறிப்பாக ‘குழுவாக நாம் பாதிக்கப்படுகிறோம்’ என்பவர்களை புறக்கணியுங்கள். காரணம், அதற்கான தீர்வு நியாயமான வழியில் தான் விரைவில் கிடைக்கும்.

உங்களை நீங்கள் ஒரு *ist ஆக பெருமையாக சொல்லிக்கொள்வதற்கு முன்னர் நீங்கள் சிந்திக்க வேண்டியது பல. ஒரு ism-ன்/இயத்தின் வரைவிலக்கணத்தைச் சொல்லி, அது நியாயமானது எனவே ‘நான் ஒரு குறிப்பிட்ட -இயவாதியாக இருப்பதில் பெருமைப் படுகிறேன்’ என்று சொல்வது நீங்கள் மனித மனதின் அடிப்படையையே புரிந்துகொள்ளவில்லை அல்லது 20 ஆம் நூற்றாண்டின் பேரழிவிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதையே உணர்த்தும்.

ஒரு ist-ஆக இருப்பது என்பது ‘ideological possession’ எனும் உபாதைக்குள் சிக்கிக்கொள்வது, உங்களின் சிந்தனையை சித்தாந்தத்திற்குள் சிறை வைப்பது, அதன் வழி உங்களுக்கான கூட்டத்தைச் சேர்ப்பது, குழு மனப்பான்மையில் உங்களின் சிந்தனையை இழப்பது, தனி மனிதனை அடையாளம் இல்லாமல் செய்து அவனுக்கு  குழு அடையாளத்தைத் தருவது, அடையாள அரசியல் எனும் மிக மோசமான விளையாட்டை கையில் எடுப்பது. எந்த ism-மும் தெளிவான சிந்தனைக்கு நல்லதல்ல. எந்த ist-ம் பெருமைக்குரியதுமல்ல. மனித நேயத்தின் மகத்தான உண்மை தனிநபர்களுக்குள் இருக்கும் நேர்மையில் உள்ளது.