ஹெர்டர் (பகுதி 1)

0 comment

ஹெர்டர்

(1744 – 1803)

1

ஹெர்டர் கிழக்கு பிரஸ்ஸியா நாட்டில் ஒரு சிறு நகரில் ஒரு பள்ளியாசிரியரின் மகனாக 1744ம் ஆண்டு பிறந்தார். இலத்தீன், மருத்துவம் ஆகியவற்றை விரும்பிக் கற்றாலும், இறையியலே இவரது வாழ்நாள் பணிக்கு மூலதனம் ஆனது. ஒரு கிறித்துவ பாதிரியாகவே கடைசிவரை வாழ்ந்து 1803ல் இறந்தார். இவரது பரந்த படிப்பும், ஆழ்ந்த சிந்தனையும் மொழியியல், வரலாறு, தத்துவம், இலக்கியம் எனப் பல்துறைகளில் ஏராளமான நூல்களை எழுத உதவின. இவரது படைப்புகள் 33 தொகுதிகளாக வெளிவந்தன. இவரது மாபெரும் சாதனை ஒரு குருவாக இருந்து ஜெர்மானிய மகாகவி கதேயை உருவாக்கியதுதான். தத்துவமேதை இமானுவேல் கான்ட்டின் செல்லமான மாணவனாகத் தொடங்கி இறுதியில் குருவை மிஞ்ச விரும்பி, அவரது கருத்துகளை எதிர்த்து 5 பெரிய நூல்களை எழுதினார்.

ஹெர்டர்

அரசியல் கலப்பு இல்லாத மனிதச் செயல் எதுவும் இல்லை என்றார் கார்ல் மார்க்ஸ். ஒரு மகாவாக்கியம் போன்ற பன்முகத் தன்மை கொண்டது மார்க்ஸின் ஆழமான இச்சிந்தனை. ஒன்றிரண்டு உதாரணங்கள் சொன்னால் எளிதாகப் புரியும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் உலக இலக்கியங்களையும் தத்துவங்களையும் செவ்வியல் நூல்களையும் வாசித்து வருகிறேன். வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஓர் அனுபவமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் ஓர் அங்கம்தான் வாசிப்பு. ஆனால் வாசிப்பே வாழ்க்கை என்ற போக்கு என் இயல்பாக மாறிவிட்டது. வாசிப்பு அதன் எல்லாப் பரிமாணங்களையும் எனக்குக் காட்டியிருக்கிறது. சொன்னால் நம்பமாட்டீர்கள், வாசிப்பு தியானம் கடந்த அனுபூதி நிலையையும் எனக்குக் கொடுத்திருக்கிறது. எவ்வித முன்பயிற்சியும் இல்லாமல் ஒரு புத்தகத்தின் மூலம் ஆன்மீக உலகில் நுழைந்தவன் நான். அதற்கு முன் நாத்திகனாக இருந்தவன். அந்தப் புத்தகம் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ‘முதலும் முடிவுமான சுதந்திரம்.’ நூலை வாசிக்க வாசிக்க மனத்தின் உள்ளே புதிய வெளிச்சங்கள் தோன்றின. ‘உள் நோக்கி உன் எண்ணங்களைப் பார்’ என்பார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உள்ளே நோக்குவேன். எண்ணங்களின் வரிசையை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்தன. அந்நூலில் அவர் செய்யச் சொன்னவற்றை எல்லாம் உடனடியாகச் செய்தேன். மனத்தின் அடையாளங்களான குலம், கோத்திரம், சாதி, சமயம், அரசியல், சினிமா ஈடுபாடுகள் என்று மனத்தினுடைய எல்லா அடையாளங்களும் ஒவ்வொன்றாகக் கழன்று விழுந்தன. மனதின் ஓயாத தொடர் ஓட்டம் ஓய்ந்தது. மௌனம் மேவி நிலைத்து நிரந்தரமானது. இவ்வாறு சுமார் மூன்று ஆண்டுகள் கழிந்தன. எவ்வாறு ஜே.கிருஷ்ணமூர்த்தி என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தார் என்பதைப் பல சொற்பொழிவுகளிலும் என்னுடைய ‘பாறையின் மீது ஒரு வீடு’ என்ற நெடுங்கவிதையிலும் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் குறிப்பிட்டுச் சொல்ல வருவது என்னவென்றால், சில நூல்கள் என்னை மாற்றி அமைத்துள்ளன. அப்படிப்பட்ட ஆழமான சிந்தனையுள்ள நூல்களைத் தேடிச் செல்வதே என் வாழ்க்கையின் ஒரு சவாலாக மாறிப்போனது.

உலகின் உன்னத நூல்கள் என்னும் வகை சார்ந்த நூல்களை பல ஆங்கிலப் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கிக் குவித்தேன். இரவு பகல் பாராமல் வீடு, பேருந்து என்று பாராமல் ஒரு நிமிடம் ஓய்வு கிடைத்தால் வாசிப்பில் மூழ்கி விடுவேன். இவ்வாறு சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தன. அப்பொழுது தான் ஒருநாள் திடீரென மின்னல் தாக்கியது போல் அதிர்ச்சியடைந்தேன். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். உலகச் செவ்வியல் நூல்கள் என்று ஆங்கிலப் பதிப்பகத்தார் வெளியிட்ட நூல்களில் பத்து விழுக்காடு கூட உலக நூல்கள் அல்ல; பெரும்பாலும் ஆங்கில மொழியில் வெளிவந்த நூல்களே. நடுநிலை நாளிதழ் என்று கொட்டை எழுத்துகளில் அறிவித்துக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு பத்திரிகை நடத்துவது போல் ஆங்கிலப் பதிப்பகத்தார் உலக நூல்களை வெளியிடுவதாகக் கூறி தம்முடைய மொழி நூல்களையே பெரும்பான்மையாக வெளியிட்டு உலக மக்களை, குறிப்பாக இந்தியர்களை ஏமாற்றிய தந்திரம் அன்று தான் எனக்கு வெளிச்சமானது. கிரேக்கம், இலத்தீன், இத்தாலியன், ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், சீனம் என்று உலகில் உள்ள பல மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அவர்கள் வெளியிட்ட நூல்கள் உண்மையில் பத்து விழுக்காடுகள் கூட இல்லை. சென்னைக்கு ஒருமுறை நூல்களை வாங்குவதற்காகச் சென்றிருந்த சமயம், ஒரு நண்பர் என்னை ஜெர்மன் நூலகம் இருந்த மாக்ஸ்முல்லர் பவனுக்கும், பிரெஞ்சு நூலகம் இருந்த ‘அலையன்ஸ் பிரான்சேஸ்’ என்ற கலாச்சார மையத்திற்கும் அழைத்துச் சென்றார். அங்கே முன்வரிசையில் வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர்களில் பத்தில் ஒன்பது பேரை எனக்குத் தெரியவில்லை. ஒரு பெண் தன் கற்பு பறிபோனதற்காக வருத்தப்படுவதைப் போலவும், செய்யாத குற்றத்திற்காக ஒருவன் தூக்கிலிடப்படும் பொழுது அஞ்சுவது போவும் உணர்ந்தேன். பிரெஞ்சு மொழி தெரியாமல் இலக்கியம், ஓவியம் என்ற கலைகளை ஒருவன் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. அதே போல் ஜெர்மன் மொழி அறியாமல் ஒருவன் தத்துவம், அரசியல் சித்தாந்தம், விஞ்ஞானம் போன்ற பல துறைகளை அறிய முடியாது என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.

ஆங்கில மொழி உலகுக்கு ஒரு சாளரம் என்று சொல்வார்கள். இது முழு உண்மையல்ல. மற்ற உண்மைகளைப் போலவே பாதி உண்மை. பாதி உண்மைகளால் பாழான மனித வாழ்க்கை! சரி, இழந்த காலத்தை எவ்வாறு மீட்டெடுப்பது? இந்த வயதில் ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்கம், இலத்தீன், ஸ்பானியம் போன்ற மொழிகளை அரிச்சுவடியிலிருந்து கற்றுக்கொண்டு அம்மொழிகளில் உள்ள உன்னத நூல்களை வாசிக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. வாழ்க்கைப் போராட்டத்திற்கு இடையே இது மிகவும் கடினமான, கால விரயம், ஆற்றல் விரயம் ஆகும் ஒரு செய்கை என்று உணர்ந்தேன். இதற்கு மாற்றுதான் என்ன? ஆங்கில மொழிபெயர்ப்புகளே என்று தீர்மானித்தேன். அவற்றைப் பலகாலம் ஒவ்வொன்றாகத் தேடிச் சேகரித்து உயிரைக் கொடுத்து வாசித்தேன். என்னுடைய கலை உலகம், இலக்கிய உலகம், கருத்துலகம், அற உலகம் யாவும் பன்மடங்கு விரிந்தன. இன்று நான் ஓர் உலக மனிதன் என்ற நிறைவுடன் வாழ்கிறேன்.

ஆனாலும் என் மொழியை அது தந்த கலை, இலக்கியப் பண்பாட்டை நான் ஒதுக்குவதில்லை. இப்பொழுது என்னுடைய வாசிப்பு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறேன்? பாதி நேரத்தை தமிழ் மொழியின் உன்னதங்களை அறிந்து கொள்ள, ஆழ்ந்து உணர்ந்து கொள்ளச் செலவிடுகிறேன். அதையும் இரண்டாகப் பகுத்துக் கொள்கிறேன். ஒரு பகுதியில் சங்க இலக்கியம் தொடங்கி வள்ளலாருக்கு முன்பு வரை வந்த மரபிலக்கியங்களை, வரலாற்றை அறிவதில் செலவிடுகிறேன். அடுத்த பகுதியை வள்ளலார் தொடங்கி இன்றைய எழுத்தாளன் வரை நவீன இலக்கியம், தத்துவ, கருத்துலக நூல்களை வாசிப்பதிலும் செலவிடுகிறேன். வெறும் நவீன இலக்கியங்களை, அதன் சிற்றிதழ்கள் மூலம் மட்டுமே வாசித்த நண்பர்கள் பலரை நான் அறிவேன். அவர்கள் தம் சுய அடையாளத்தை இழந்து, மன நிம்மதியை இழந்து குழம்புவதை அறிவேன். அதற்கு மாற்றாகத் தான் உடனே மரபிலக்கியங்களை வாசித்து ஒட்டுமொத்த மனத்தின் ஆளுமையைச் சீர்படுத்துகிறேன். இதே கதைதான் உலக இலக்கியங்கள் அறிவியல், தத்துவ நூல்களை வாசிப்பதிலும், மரபும் நவீனமும் மனித மூளையின் இரண்டு கூறுகளைப் போல. முழுமனமும் சீர்பட இரண்டு கூறுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான மேதைமை வெளிப்படும். இல்லையெனில் ஒன்று பழம்பஞ்சாங்கமாக நடமாடுவோம் அல்லது புதுமை என உளறிக்கொண்டிருப்போம். உடலுக்கு வாத, பித்த, கப சமச்சீர் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு மன ஆரோக்கியத்திற்கு செவ்வியல், நவீன, பின்நவீன இலக்கியங்கள், கருத்துலக நூல்கள் அவசியம்.

2

ஒரு மனிதன் எவ்வாறு மேதையாகிறான்? ஒரு சமூகம் எவ்வாறு உலகத்தரமான கலாச்சாரமாக மாறுகிறது? கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அறிவுத்துறை நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்திலும் எவ்வாறு தோன்றுகின்றன? வரலாறு புகட்டும் பாடங்களில் முக்கியமானது இது. இந்த ஒரு காரணத்திற்காகவே ஹெர்டரைப் பற்றிய கட்டுரையை இவ்வளவு நீண்ட பல்லவியுடன் ஆரம்பிக்கிறேன்.

ஒரு சமுதாயத்தில் முதலில் செல்வ வளம் வேண்டும். அப்பொழுது ஒரு சிலருக்காவது பொருளாதார விடுதலையும் தேவையான ஓய்வும் கிடைக்கும். அவற்றுடன் சத்சங்கம் என்ற பெரியோர் தொடர்பும் பல்துறைசார்ந்த வல்லுநர்களின் அன்றாடத் தொடர்பும், உரையாடல்களும் அவசியம். கருத்து மோதல்கள் சிக்கிமுக்கிக் கற்களின் உரசலில் தோன்றும் நெருப்புப் பொறி போல. புதிய சிந்தனை பிறக்கும். ஒரே நேரத்தில் ஒரு சமுதாயத்தில் மேதைகளின் கூட்டம் உருவாகும். அந்த மேதைகள் உருவாக்கித் தரும் உன்னதங்களைக் கடைப்பிடித்து சாதாரண மக்களும் தங்களுடைய அறிவையும் பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வார்கள். அப்பொழுது அங்கே கலாச்சாரத்தின் பொற்காலம் ஒன்று உருவாகும்.

இவ்வாறு உருவானவை தான் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஏதன்ஸ் நகரில் மேற்குலகின் விஞ்ஞான தத்துவ, கலை இலக்கியங்களின் பொற்காலம். பிதகோரஸ் தொடங்கி தேல்ஸ், ஆர்கிமிடிஸ், டெமாக்ரிடஸ் போன்ற விஞ்ஞானிகளும் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், எபிகுரஸ் போன்ற தத்துவஞானிகளும் ஹோமர், ஹெசியாத், சாப்போ, மார்சியல் போன்ற மகாகவிகளும் பெரிகிலிஸ், டெமாஸ்தனிஸ் போன்ற மகா நாவலர்களும் ஹீரோடோடஸ், தூசிடைடீஸ் போன்ற சரித்திர ஆசிரியர்களும் தோன்றினர்.

அதேபோல் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் ரோம் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கிய ரோம் நகரில் விர்ஜில், ஓவிட், ஹாரஸ் போன்ற மகாகவிகளும், சிசரோ போன்ற உலக மகாநாவலர்களும், டெரன்ஸ் பிளாடஸ் போன்ற நாடக ஆசிரியரும், ஜுலியஸ் சீசர், லிவி போன்ற வரலாற்று ஆசிரியர்களும் என்று ஓர் அறிஞர் படையே தோன்றியது.

அதேபோல் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வடஇந்தியா வில் உஜ்ஜயினி நகரில் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் ‘நவமணிகள்’ என்று போற்றப்பட்ட ஒன்பது பேரறிஞர்கள் தோன்றி கலாச்சார பொற்காலத்தை ஏற்படுத்தினர். மகாகவிகள் காளிதாசன், தண்டி போன்றவர்களும், வராகமிகிரர், ஆரியபட்டர் போன்ற விஞ்ஞானிகளும் கணிதமேதைகளும் இவர்களில் அடங்குவர். காளிதாசனின் சாகுந்தலத்தை படித்த ஜெர்மானிய மகாகவி கதே அவரை இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று வர்ணித்தார்.

தாந்தேவும் வர்ஜிலும்

அதேபோல் இத்தாலிய தேசத்தில் பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஃபிளாரன்ஸ் நகரத்தில் ‘மறுமலர்ச்சி இயக்கம்’ ஒன்று தோன்றியது. தாந்தே, பெட்ரார்க் போன்ற மகாகவிகளும், பொக்காக்சியோ போன்ற கதையாசிரியரும், லியனார்டோ டாவின்ஸி போன்ற ஓவியக் கலைஞர்களும், மைக்கேல் ஏஞ்சலோ போன்ற தெய்வீக சிற்பியும் தோன்றி நவீன மனிதன் பண்டைய செவ்வியல் கால மனிதனை விட கலை, இலக்கியங்களால் உயர்ந்து விளங்க முடியும் என்று நிரூபித்து மனிதகுலத்திற்கு புதிய தன்னம்பிக்கையை அளித்தனர்.

அதேபோல் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரில் ராணி எலிசபெத் ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட தோர் பண்பாட்டு எழுச்சி தோன்றியது. மகாகவிகளான மார்லோ, ஷேக்ஸ்பியர், ஸ்பென்ஸர், மில்டன், ஜான்டன் போன்றவர்கள் ஆங்கில இலக்கியத்தை உலக இலக்கிய மேடையில் முன்நிறுத்தினர். பரிசோதனைப்படி முதன்முதலாக, உண்மையைக் கண்டறிய விஞ்ஞானமே சரியான முறை என்று நிரூபித்தார் அறிவியலின் தந்தை என்று போற்றப்படும் சர் பிரான்ஸிஸ் பேக்கன். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் மேற்குலகில் கோலோச்சிய அரிஸ்டாட்டிலின் தர்க்கவாதம் வெறும் சொற்சிலம்பம், அதனால் இயற்கையின் உண்மையைக் கண்டறிந்து சொல்ல முடியாது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தார். அவருடைய துணையாளராக இருந்த ஹாப்ஸூம், போலிங்புரோக் பிரபுவும் அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கிய தத்துவ மேதைகள்.

இவற்றையெல்லாம் வரலாற்றின் மூலம் அறிந்த கதே இப்படிப்பட்ட ஒரு பொற்காலத்தைத் தன்னுடைய தாய்மொழியான ஜெர்மன் மொழிக்கும், அதன் பண்பாட்டிற்கும் உருவாக்கி உலகிற்குக் காட்ட வேண்டும் என்று விரும்பினார். அப்பொழுது அவர் ‘வைமர்’ என்ற ஒரு குட்டி சமஸ்தான அரசராக இருந்த கார்ல் ஆகஸ்ட் என்பவரைப் புரவலராகப் பெற்றிருந்தார். அவர் கவிஞர் கதேயை மந்திரிகளுள் ஒருவராக்கினார். சிறிது காலத்திற்குப் பிறகு பிரதம மந்திரியாகவும், இறுதியாக கஜானா சாவி கொடுத்து அரசின் பொருளாளராகவும் ஆக்கினார். மொழிக்கும், இலக்கியத்திற்கும் கலைகளுக்கும், தத்துவத்திற்கும், அவற்றால் வாழும் உன்னதக் கலைஞர்களுக்கும் எல்லாவகையிலும் உதவி செய்ய கஜானாவை திறந்து விடுவதற்கு கவிஞருக்கு அனுமதி அளித்தார். அதன் விளைவு ஜெர்மானிய இலக்கியமும், இசையும், குறிப்பாக தத்துவமும், அரசியல் சித்தாந்தமும், உலகம் காணாத உச்சத்தை எட்டியது. வீலண்டு, ஹோல்டர்லின், ஷில்லர், கதே, ஹய்னா போன்ற மகாகவிகளும் நாடக ஆசிரியர்களும் ஜெர்மானிய இலக்கிய வானில் நிரந்தரச் சுடர்களானார்கள். கான்ட், பிஸ்டே, ஹெகல், ஷெல்லிங் போன்ற உலகத்தரமான தத்துவ மேதைகள் தோன்றினர். இவை யாவும் ஆங்கிலேயர்களால், ஆங்கிலம் மூலம் உலக மக்களைச் சென்றடைந்த பிரபலமான பெயர்கள். ஆனால் விடுபட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், விளிம்புநிலை அறிஞர்கள் அனேகர். ஹமான், ஷீலியர்மாசர், ஹெர்டர் ஆகிய மூவரும் அவர்களில் தவிர்க்க இயலாத பெயர்கள்.

மனிதகுல வரலாறாயினும், தத்துவ வரலாறாயினும் இவ்வாறு சிலர் ஓரங்கட்டப்படுவதன் காரணம் என்ன? நீட்சே சொல்வதைப் போல் வரலாறு என்பது தத்தம் வசதிக்கேற்ப அந்தந்தக் காலக்கட்டத்திற்கேற்ப அரசியல் நடத்துவதற்கு உறுதுணையாக இருக்குமாறு வரலாற்று ஆசிரியர்களால் கட்டமைக்கப்படுவது. தம்முடைய கருத்துக்கு அல்லது நிலைப்பாட்டிற்கு மாறுபடும் சிந்தனையாளர்களைக் கிணற்றில் போட்ட கல்லாக மறைத்து எழுதுவது வரலாற்று அறிஞனின் அதிகார மமதை. ஒரு சமீபத்திய உதாரணத்தைச் சொன்னால் இந்த உண்மை தெளிவாக விளங்கும்.

இன்றைய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா என்பவர் நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் (Makers of Modern India) என்ற ஒரு நூலை வெளியிட்டார். அந்நூலில் நவீன இந்தியாவின் அரசியல், தத்துவ, கருத்துலகச் சிற்பிகள் அனைவரைப் பற்றியும், வாழ்க்கை வரலாறுகள் எழுதினார். அவர்களுடைய சிந்தனைகளால் தாக்குண்டு இந்திய மனம் எவ்வாறு செதுக்கப்பட்டது என்பதைத் தெளிவாக எழுதினார். அந்தப் பட்டியலில் விடுபட்டுப் போன அல்லது தெரிந்தே விடப்பட்ட இரண்டு மகாசிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் வங்காளத்தைச் சேர்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தரும், வடலூர் இராமலிங்க அடிகளும் ஆவர்.

என்னுடைய பார்வையில் இந்தியத் தத்துவ ஞானத்தின் முழு சாரத்தையும் அழகான ஆங்கிலத்தில் வெளிப்படுத்தி நவீன காலத்திற்கு அதன் போதாமையை உணர்ந்து அத்துடன் நவீன அறிவியல் கோட்பாடான பரிணாமத்தை இணைத்து தமக்கே உரிய பாணியில் ஒரு புதிய தத்துவ சித்தாந்தத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரீஅரவிந்தர். வேதகாலம் தொடங்கி இன்றுவரை வடமொழி மரபை யோகத்தால் உணர்ந்து அறிவால் விளக்கியவர்களுள் முதன்மையான சிந்தனையாளர் அரவிந்தரே. 37 பெரும் தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கும் அவருடைய நூல்களே இதற்குச் சான்று. காந்திக்கு முன்பே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்று ஓராண்டுகாலம் தனிமைச் சிறையில் அவதிப்பட்டவர். மனத்தில் பலமிருந்தால் தனிமைச் சிறை ஒருவனை யோகியாக்கும். பலவீனம் இருந்தால் பைத்தியம் பிடிக்கும். அரவிந்தர் யோகியாக வெளிவந்தார். தன் யோக அனுபவங்களை உரைநடை நூல்களாகவும், சாவித்திரி என்ற காப்பியமாகவும், ஏராளமான கவிதை, நாடகங்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதிக் குவித்தார். அரவிந்தருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அது அந்த சுவீடன் நிறுவனத்தின் அரசியலும், குறைபாடும்.

அதேபோல் இராமலிங்கர் உலகச் சித்தனையாளருள் ஒருவராக, அரவிந்தர் சொன்ன தத்துவங்களை விஞ்ஞானமாக அவருக்கு முன்பே தந்தவர். தேசியப் பாடல்களைத் தவிர, மற்ற எல்லாப் பாடல்களின் கருப்பொருட்களையும் பாரதி எடுத்துக் கொண்டது இராமலிங்க அடிகளின் பாடல்களில் இருந்தே. சுமார் 1010 கீர்த்தனைப் பாடல்கள், 5818 கவிதைகள், சுமார் 500 பக்க உரைநடை, உலக சீர்திருத்தவாதிகளில் யாருக்கும் இளைக்காத தீரம், மனிதகுலத்தை இன்று காப்பாற்றத் தேவையான ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ என்ற நூல், பரிணாமத்தில் மனிதன் அடுத்த கட்டத்தை அடையத் தேவையான அருள்நெறி என ஒரு கலைக் களஞ்சிய அறிவாகத் திகழ்ந்தவர். புத்தர் போன்ற உலக அருளாளர்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர். இவ்விருவரைப் பற்றியும் குகா கண்டுகொள்ளவில்லை.

ஹெர்டர் – இந்தப் பெயரை இன்றைய நவீன உலகில் பொதுமக்கள் மட்டுமல்ல, அறிவாளிகளிலே கூடப் பலர் அறிய மாட்டார்கள். ஜெர்மானிய தத்துவ மரபு எனில் இம்மானுவேல் கான்ட், ஹெகல், கார்ல் மார்க்ஸ் என்ற மூன்று பெயர்களே நினைவுக்கு வரும். ஏனெனில் அவ்வாறே மக்கள் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்தம் மனச்சாய்வுகள், விருப்புவெறுப்புகள், சுயநலம் சார்ந்த நிலைப்பாடுகள் இத்தேர்வை நிர்ணயம் செய்கின்றன. இந்த முறையில் நன்மை ஓரளவுக்கு இல்லாமலில்லை. ஒரு துறை சார்ந்த அனைத்துத் தத்துவ அறிஞர்களையும் அறிந்து, படிக்க வாழ்நாள் போதாது. ஆனால் மிகப் பெரும் சிந்தனை மரபுகளையும் உலகத்தரமான சிந்தனையாளர்களையும் உலகின் பார்வைக்கு மறைத்து வைக்கும் சதியும் இம்முறையால் தான் சாத்தியம் ஆகிறது. உலக வரலாற்றில் இதற்குப் பல சான்றுகளைக் கூற முடியும்.

இந்திய ஞான மரபு எனில் உலகம் அறிந்தது வடமொழி வேதங்கள், உபநிடதங்கள், கீதை, ஆறு தத்துவ தரிசனங்கள் போன்றவையே. இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள தமிழகத்தின் திருவள்ளுவர், திருமூலர், வள்ளலார், சித்தர்கள் ஆகியோர் வேதாந்தத்தைக் கடந்து எவ்வளவோ ஞான, விஞ்ஞான உண்மைகளை, சித்திகளைப் பற்றிக் கூறியுள்ளனர். ஆயுர் வேதத்தை உலகம் அறியும்; அதற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த சித்தவைத்தியத்தை அறியாது. ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனம் ‘மாற்று மருத்துவ முறைகள்’ (Family Guide to Alternative Medicine) என்ற பெருநூலை வெளியிட்டது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட உலக மருத்துவ முறைகளைப் பற்றி எழுதப்பட் டுள்ளது. நேற்று தோன்றிய சிறு சிறு முறைகளெல்லாம் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் உலகின் ஆதி மருத்துவமான சித்த மருத்துவம் என்ற சொல்லே இடம்பெறவில்லை. கி.பி. 15ஆம் நூற்றாண்டில் தான் ஜெர்மானிய மருத்துவர் பாராஸெல்சஸ் பாதரசத்திலிருந்து மருந்து தயாரித்து பால்வினை நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறிந்து அறிவித்தார். ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சித்தர்கள் எல்லாக் கனிமங்கள், உலோகங்களையும் சுத்திகரிப்பது எப்படி, அவற்றிலிருந்து சத்து பிரிப்பது எப்படி என்று அறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த உண்மையை உணர்ந்த ஜெர்மானியப் பாதிரிமார்கள் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த இராபர்ட் கிளைவ்வால் இந்தியாவை விட்டு விரட்டப்பட்ட போது ஒரு சிறு கப்பலில் நிறைய சித்தர்களின் மருத்துவ ஓலைச்சுவடிகளை எடுத்துச் சென்றனர். இன்றும் ஜெர்மனியில் ஒரு பெரிய நூலகமே அதற்காக நிறுவப்பட்டிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆனந்த விகடன்’ இதழில் புகைப்படத்துடன் இதைப் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது. இன்றுவரை தமிழக அரசோ பல்கலைக்கழகங்களோ அப்பனை ஓலைகளில் உள்ள நூல்களின் பிரதிகளைக் கொண்டுவரக் கூட எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அவற்றில் உலக மருத்துவம் அறியாத ‘நவ பாஷாண மருத்துவம்’ (பழநியாண்டவர் சிலையை போகர் நவபாஷாணங்களைச் சுத்திகரித்து மருந்தாக்கிச் செய்தார் என்பதும், அச்சிலை மீது பஞ்சாமிர்தத்தைப் பூசி அபிஷேகம் செய்து வழிந்த பஞ்சாமிர்தம் எல்லா நோய்களையும் நீக்கியது என்ற வரலாறும் யாவரும் அறிந்ததுதான்) பற்றிய அறிவை ஜெர்மானிய மருத்துவ மேதை அறிந்து அதன் ஒரு பிரிவை ‘ஹோமியோபதி மருத்துவம்’ ஆக்கினார்.

மனிதகுல வரலாற்றை 13 பெரிய தொகுதிகளில் தன் வாழ்நாள் முழுதும் எழுதிய வில் டியூரான்ட் ‘நம் கிழக்கத்தியக் கொடை’ (Our Oriental Heritage) என்ற முதல் நூலில் பாரதத்தின் வரலாறு, கலை, தத்துவம் பற்றி எழுதுகிறார். வடமொழி இலக்கியங்களைப் பற்றி விஸ்தாரமாக எழுதியவர் திருக்குறளைப் பற்றியும் எழுதினார். எப்படி? ‘திருக்குறள் ஒரு பறையனால் எழுதப்பட்ட நீதிமொழிகளின் தொகுப்பு.’ எந்த அதி மேதாவி அவருக்கு இச்செய்தியைக் கொடுத்தாரோ? இக்குணம் திறனாய்வாளர் சாதிக்கே உரியது.

சிகாகோ நகரில் உலக சமயங்களின் மாநாட்டில் இந்து மதத்தின் சிறப்பை, குறிப்பாக வேதாந்தத்தின் சிறப்பை விளக்கியுரைத்து உலகப் புகழுடன் இந்தியாவுக்குத் திரும்பினார் சுவாமி விவேகானந்தர். சென்னைக்கு வந்தார். அவரைச் சந்திக்க ஒரு தூதுக் குழு சென்றது. அதன் தலைவர் நல்லுசாமிப் பிள்ளை. உயர்நீதிமன்ற வழக்குரைஞர். ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் வல்லுநர். 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள், 12 சைவத் திருமுறைகள் யாவற்றையும் கரைத்துக் குடித்தவர். அவர் விவேகானந்தரைப் பார்த்துச் சொன்னார்: “சுவாமிஜி! இந்திய ஞானத்தின் சிறப்பை உலக அரங்கில் பிரபலமாக்கி விட்டு வந்திருக்கிறீர்கள். இது இமாலய சாதனை. அதற்காக உங்களுக்கு எங்களது பாராட்டுகள். அதே சமயத்தில் எங்களுக்கு ஒரு குறை உண்டு. பரந்த பாரத தேசத்தில் பல தத்துவப் பள்ளிகள் உண்டு. குறிப்பாக எங்கள் தமிழில் உள்ள சைவ சித்தாந்தம் வேதாந்தத்தை விடப் பல படிகள் உயர்ந்தது. 96 தத்துவங்கள் பிரம்மாண்டமான கட்டுமானம் கொண்டது. இவ்வுலகை, இவ்வாழ்க்கையை மாயை என்று பேசி இறைவனின் செயலான, அழகான படைப்பை இழிவு செய்வதில்லை. தீமை ஏன் உலகில் உள்ளது? என்ற கேள்விக்கு விஞ்ஞானபூர்வமான பதிலைச் சொல்கிறது. இப்படி ஏராளமான சித்தாந்தச் சிறப்புகளை நான் சொல்ல முடியும். உண்மை இவ்வாறு இருக்க, நீங்கள் இந்தியாவின் ஞானத் தத்துவம் வேதாந்தமே என்று பேசிவிட்டு வந்தது எந்த வகையில் நியாயம்?”

விவேகானந்தர் புன்முறுவலுடன் நிதானமாகப் பதில் அளித்தார்: உங்களையும், உங்கள் சைவ சித்தாந்தத்தையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இனிமேல் உலக அரங்கில் சொல்வேன். எங்கள் கடையில் ஒன்றல்ல, இரண்டு இனிப்புப் பண்டங்கள் உண்டென. எனக்குத் தெரிந்தது சம்ஸ்கிருதம், அதிலுள்ள வேதாந்தம். அதனால் அதன் உயர்வைப் பற்றிப் பேசினேன். தமிழில் இவ்வளவு பெரிய தத்துவம் இருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும்? உலகுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் தெரியப்படுத்தாதது தமிழர்களாகிய உங்களது குற்றம். இனிமேலாவது மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுங்கள். அந்த மொழிபெயர்ப்புகளின் மூலம் உங்கள் மொழியில் உள்ள ஞானச் செல்வங்களின் பெருமையை உலக மக்கள் அறிந்து கொள்வர். ஆர்வம் அதிகமானவர்கள் இன்றைக்கு மேலை நாட்டிலிருந்து வந்து சம்ஸ்கிருதத்தைப் படிப்பதுபோல, மூலமொழியில் இக்கருத்துகளைக் கற்க வேண்டும் என்று விரும்பி இங்கு வருவர். இந்த ஆலோசனையைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்” என்றார் அந்தச் சமநீதி ஞானி.

ஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை

தன் குறையை உணர்ந்த நல்லுசாமிப் பிள்ளை உடனே செயலில் இறங்கினார். ஆங்கில மொழியில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அதில் மெய்கண்ட சாத்திரங்களை, குறிப்பாகத் திருமந்திரத்தின் 3000 பாடல்களையும் மொழிபெயர்த்தார். ஆனால் அப்பணி அவரோடு நின்றுபோனது. விவேகானந்தருக்குப் பின் உபநிடதங்களை, இராமாயண, பாரத இதிகாசங்களை, கீதையை பாரதமெங்கும், உலகெங்கும் ஆங்கிலத்தில் பிரசாரம் செய்ய பல்லாயிரம் பேர் கொண்ட படையே தோன்றியது. தமிழில் ஒரு நல்லுசாமிப் பிள்ளையுடன் இந்த ஆர்வம் நின்றுபோனது. தமிழர்களுக்குத் தம் ஆன்மீக, தத்துவ, கலை, பண்பாட்டுச் சொத்து எது என்ற தேடலோ அறிவோ, அதைப் பரப்பி உலக அரங்கில் தங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளும் விவேகமோ இல்லை. கவைக்குதவாத அரசியல் வம்புகளை அற்பத்தனங்களையே பேசி, தமிழ் ஊடகங்களும் மக்களும் தலைவர்களும் வீண்பொழுது போக்குகின்றனர். மற்றவர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளும் போலி அறிவு கூட இல்லை. ஆங்கில மொழி, பிரெஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, வடமொழி அம்மொழி சார்ந்த மக்களால் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு உலக அரங்கில் எவ்வாறு ஏற்றம் பெற்றனர் என்ற சரித்திர அறிவாவது வேண்டும். சரக்கு இல்லையா உன்னிடம்? ஏராளமாக உண்டு, பிறகு ஏன் விலை போகவில்லை. கடை விரிக்கவே இல்லையே, கொள்வார் எப்படி வருவர்? மலர் தன்னிடமுள்ள தேனை விளம்பரம் செய்வதில்லை. அதன் நறுமணம் தேனீக்களை ஈர்த்து வருகிறது. ஞானச் செல்வங்கள் என்ற தேன் தமிழ் மலரில் இல்லையா? ஏராளம் உண்டு. திருக்குறள், சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள் (திருமந்திர யோகக் களஞ்சியம்) நாலாயிர திவ்யப் பிரபந்தம், 14 மெய்கண்ட சாத்திரங்கள், திருப்புகழ், தாயுமானவர் பாடல்கள், 18 சித்தர்களின் பல்லாயிரக்கணக்கான வைத்திய, வாத, யோக, ஞானப் பாடல்கள், உலக மகா விஞ்ஞானியான வள்ளலாரின் திருவருட்பா என்ற மெய்ஞ்ஞான, ஞானக் களஞ்சியம்… எல்லாம் உண்டு. ஆனால் இந்த நறுமணம் உலகைச் சென்று அடையாமல் கூடையை மூடி வைத்தால், தேனீக்கள் எப்படி வரும்?

நல்லுசாமிப் பிள்ளைக்குப் பின்னால் ஒரு படை தோன்றவில்லை. வள்ளலாரின் பிரதம சீடர் தொழுவூர் வேலாயுதனார் வள்ளலாரின் முத்தேக சித்திக்குப் பின் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் அமர்ந்து ‘சங்கர விஜயம்’ நூலை எழுதினார்! சீடர் படைகள் உருவாகவில்லை. 12 சீடர்கள் ஜெருசலேம் என்ற ஒரு கிராமத்துக் குருவின் செய்தியை உலகெங்கும் கொண்டு சென்றனர். இன்று அது சுமார் 120 கோடி மனிதர்களைச் சென்று அடைந்திருக்கிறது. ஒரு கருத்து ஓர் இயக்கமாக மாற வேண்டும். அதற்கு ஒரு நிறுவனம் வேண்டும். தியாக உணர்வு கொண்ட இளைஞர் பட்டாளம் வேண்டும். அவர்கள் விவேகத்துடன், ஒழுக்கத்துடன் செயல்படவேண்டும். உலக மக்களின் மதிப்பை, மரியாதையைப் பெற வேண்டும். ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்பது காலத்தால் அழியாத மறை வாசகம். தமிழில்தான் உள்ளது; உணரத்தான் ஆளில்லை.

ஹெர்டர் அதிர்ஷ்டசாலி. காலமும், கதே போன்ற சீடர்களும் அவருடைய கருத்துகளை, கலை, இலக்கியம், இசை, தத்துவம் வழியாக ஜெர்மன் தேசமெங்கும் எடுத்துச் சென்றனர். ஹெர்டர் ஊன்றிய கலாசார விதை நன்கு வளர்ந்து இன்று பரந்த ஆலமரமாக, பல்லாயிரக்கணக்கான விழுதுகளுடன் பெருமையுடன் நிற்கிறது.

-தொடரும்.