எல்லா மனிதர்களும் இயற்கையாக இறக்கிறார்களா என்பது சந்தேகமே! என்றோ மனதால் இறந்து விட்டு, உடலால் மட்டுமே நடமாடித் திரிபவர்கள் எத்தனையோ பேர். மூச்சு நிற்பதில் மட்டுமே இல்லையய்யா முழுமையான சாவு.
*
எழுத்தே ஒரு பாவனை. உண்மை. ஆனால் நான் இங்கே எழுதிக்கொண்டிருப்பதே என் பாவனையைக் களையும் முயற்சியாகத்தான். அது முற்றிலும் களையப்படுமானால், எனக்கு தியானப்பலன் கைகூடும்.
*
ஆழ்நிலைத் தியானத்தில் என்ன நடக்கிறது? நினைக்க பயப்பட்டது, நினைவில் செரிக்காமல் கிடப்பது எல்லாம் நினைக்கப்படுகிறது. எல்லா நினைவுகளையும் எண்ணங்களையும் மனம் ‘தைரியமாக’ எதிர்கொள்கிறது. மனதின் ரகசியங்கள் எல்லாம் போட்டு உடைக்கப்படுகின்றன. நேருக்கு நேராக ‘மனதை’ மனம் எதிர்கொள்கிறது. எனக்கு நான் முழுமையாக ‘எக்ஸ்போஸ்’ ஆகிறேன். எளிமையாகச் சொன்னால் மனதின் பிரச்சினைகளை அப்பட்டமாக, தைரியமாக எதிர்நோக்கி விடுகிறேன். இதுவரை நான், இன்று நான், இனிமேல் நான் – எல்லாம் உணர்ந்து விடுகிறேன். சாதாரண நிலையில், காலத்தில் வழுக்கிச் செல்லும் மன ஓட்டம், தியானத்தில் முழுப் பிரக்ஞை கொள்கிறது.
*
மரணத்தின் மூலம் கூட வாழ்க்கையிலிருந்து தப்ப முடியாது சாமி! மரணத்தை எதிர்கொள்ள தைரியம் உள்ள மனமே வாழவும் லாயக்கு. உடலிலிருந்து உயிரைப் பிரிக்கும் நிமிடத் தவிப்பில் மனம் படும்பாட்டுக்கு யாராலும் இசை அமைக்க முடியாதய்யா. என்ன செய்ய? மரணத்தை மடியில் போட்டு, ஒரு பூனையை வளர்ப்பது மாதிரி வளர்த்துக் கொண்டு, கூடவே வாழ்ந்து போவோமே!
*
நல்லவனாக காட்டிக் கொள்வதைக் காட்டிலும் மிகச் சுலபமானது, நல்லவனாக இருந்து விடுவது
*
உயிர் தானே விரும்பினால் ஒழிய உருவம் களைந்து வீசி எறிந்து விட்டுப் போகாது போல. எப்படியோ என் மரணத்துக்கும் கூட நான் பொறுப்பேற்க வேண்டியதில்லை. எனில் நானே சுதந்திரவான்! தென்றல் தான் பறக்கிறது வண்ணத்துப்பூச்சி வடிவத்தில்! இங்கே எங்கெங்கும் நானும் மிதக்கிறேன் காற்றின் ஒரு வடிவில்தான்! காற்றில் பிற பூதங்களும் கலந்திருப்பதை உணர்கிறேன். தனிப் பூதமில்லை. தனி பூதவுடலும் இல்லை. மனதின் சுற்றமும் நட்பும் துறந்து, காடு மலைகளில் பல காலம் சுற்றியலைந்து, இலை கனிகள் சுனையருந்தி, விலங்குகள் பறவைகளோடு ஆடிக்களித்து மேலே தாடியை ஒற்றைச் சிறகாக்கிப் பறந்து நகர்மேல் வந்ததில், யதேச்சையாக என் பழைய வீட்டைக் குனிந்து பார்த்தேன் – வீடு முழுமையானதொரு பிரம்மாண்ட மலராகி நின்றது.
*
மரபணுக்களில் உயிர் தொடர்வதால் யாரும் எதுவும் எங்கும் இதுவரை முற்றாக மறைந்தார் எனக் கருத இடமுண்டோ? யாரும் எதுவும் எங்கும் உருவம் இன்றி அல்லது மாற்று உருவங்களில் உயிராக இடையறாது தொடர்கிறார்கள்
*
எங்கும் எப்போதும் எவருக்கும் ‘உண்மை’ கேடயமாகத் தான் இருக்கும். வாள் ஆக இருக்காது.
*
அலைகள் அடங்குவதில்லை. கண்ணில் படாதபோது, காற்றில் சுருண்டு ஒளிந்திருக்கலாம். மேலும் மேலும் என்றுமே மனதில் யூக அலைகள்தான். யூக அலைகள் அடங்கின தருணமெல்லாம், பித்தப் பூவென வெற்று மனம் விரிய, எண்ணத்தின் பிடி அற்றுத் தத்தளித்துப் பேதலிக்கிறது மூச்சு.
*
ஏதோ ஒரு கணக்கில்தான் காமத்தின் இயங்கியலும். ஐம்புலன்களின் வாலும் அளந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது.
*
இந்த எழுத்தில் நீங்கள் லயித்துக் கொண்டிருக்கையில், நீங்களும்தான் இதை எழுதியவராகிறீர்கள்.
*
காலத்தைக் கடிகாரத்தில் பார்ப்பது, கல்லில் கடவுளைக் காண்பது போலத்தான்.
*
காலப்பிரமை சுமந்தலையும் இறவா எண்ணப் பேய் நான்.
*
நடுநடுங்கும் இச்சுடரை விட்டு விடு காற்றே!
*
இந்தக் குரங்காட்டி அவ்வப்போது குரங்கை மரத்திலேற விடலாம். அப்படியெல்லாம் அது ஓடிவிடாது,
*
என் அகந்தையோடு போராடவே எனக்கு நேரமில்லை. இதில் உன் அகந்தையை வேறு நீட்டுகிறாய்!
*
தன்வினை, திரள்வினை, தீவினை, செய்வினை, செயப்பாட்டுவினை அனைத்தையும் விட வலியது மனவினை
*
எந்த ஒரு விஷயத்தையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதில் என்ன இருக்கிறது? வலியும் உறுத்தலும் தான்
*
நிம்மதி வேறு அமைதி வேறு. நிம்மதிக்குள் ஒரு நோக்கம் கண் சிமிட்டிக்கொண்டிருக்கிறது.
*
உலகம் பிரமாண்டமானதோர் காத்திருப்போர் கூடம்.
*
ஆளுயர நிலைக்கண்ணாடியில் தோன்றிய என் பிம்பத்தை ஊடுருவிப் பூச்சு உதிரக் கடந்தேன். வெளியே எல்லையற்று மலர்ந்தது என் நறுமண மரணம்
*
அம்பலம் ஏறவேண்டாம் ஏழை சொல்; அடிபடாமல் பிழைத்துப் போனால் சரி.
*
பற்று நீங்கிப் போனால் உயிர் வேறு பிண்டமேறித் தொடராது. அண்டத்தில் கலந்துவிடும் என்பது கிழக்கின் அகநூல் நம்பிக்கை. மயிரிழையேனும் ஒட்டாமல் பற்று விடுமா?
*
விருப்பமின்றியே ஓரொரு முறையும் திரும்பிப் போகும் அலை நான்.
*
அமைதியிடம் கோபித்துக்கொண்டு மனம் தற்காலிகமாக வெளியேறுகிறது
*
பசியாறியவுடன் வாழ்வும் ஆறித்தான் போகிறது. பழக்கத்தின் குகைக்குள் பதுங்கி விடுகிறது.
*
எல்லோருக்குமான முத்தமன்றோ மழை!
*
காற்றில் கண்ணறியாமல் கலந்தாடுகிறது மண். ஏன், பஞ்ச பூதத்திலும் கண்ணறியா மண்தான், எனில் உடலும் மண். ஆக சுவாசத்திலும் மண். ஈமக் கிரியை முடிந்ததும் தரையில் மண்ணால் பிண்டம் செய்வித்து அழிப்போம். மண்ணுக்குள் மறைவதெனத் தனியே உண்டோ மானிடா?
*
இந்தத் தற்காலிகப் பிரிவுகள், நிரந்தரப் பிரிவைத் தாங்கிக் கொள்வதற்கான பயிற்சிகள் என ஓரொரு முறையும் எனைச் சமாதானப்படுத்துகிறது மனம். ‘நடமாடும் ஓர் இடம் நான்’ என மட்டுமே உணர்கிறேன் என்றேன். காற்று மெல்ல நகைத்தது.
*
என் இறுதி வாக்கியத்தில் முற்றுப்புள்ளியாக இந்த பூமி உருண்டையைத் தூக்கி வைக்கும்படிக்கு ஒரு வரி தா பேரியற்கையே!
1K
previous post