அறம் சொல்ல விரும்பு: அரசு ஊழியர்கள் போராட்டம்

by மானசீகன்
0 comment

“அரசு ஊழியர் போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?” என்று ஒரு நண்பர் கேட்டார். என்னால் உடனடியாகப் பதில் கூற இயலவில்லை. ‘போராடுவதற்கான உரிமைகளை மதிக்கிறேன். அவர்களது தரப்பின் நியாயங்களை உணர்கிறேன் . ஆனால் அது அவர்களுக்கும், அரசுக்கும் இடையிலான முரண். எந்தப் போராட்டத்திற்கும் பேச்சு வார்த்தையே தீர்வு என்பதே என் நிலைப்பாடு. அது நிகழாமல் போனதற்காக வருந்துகிறேன். ஆனால் இந்தப் போராட்டத்திலிருந்து அரசு ஊழியர்கள் பெற வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன்’ என்று பதில் கூறினேன். அவர் என்னை ‘மய்யத்தின் ஆளோ?’ என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனார்.

இந்தப் போராட்டத்தை விமர்சிப்பவர்களை நான்கு தரப்பாகப் பிரிக்கலாம்.

1. போராட்டம், தொழிலாளர்கள், கோரிக்கைகள், பேச்சு வார்த்தை ஆகிய சொற்களை அலட்சியத்துடனும் தமக்கேயுரிய மேட்டிமைத்தனத்துடனும் அணுகுகிற வலதுசாரித்தன்மை கொண்ட உயர் வர்க்கம் .

2. இன்று நீக்கமற நிறைந்து விட்ட இலஞ்சம், ஊழல், சிபாரிசு, சாதி மற்றும் மத அரசியல், போட்டித் தேர்வுகளின் நெருக்கடி இவற்றைத் தாண்டி அரசு வேலையைப் பெற முடியாதவர்கள். அதாவது அரசு ஊழியர்களாக ஆசைப்பட்டு அது கிடைக்காத வேதனையில் புலம்பும் தனியார் ஊழியர்கள்.

3. அரசு ஊழியர்களின் அலட்சியத்தினாலும், குழு மனோபாவத்தாலும், அதிகாரத் திமிரினாலும் விலகலுடன் கூடிய உடல்மொழிகளாலும் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் .

4. எந்தப் பிரச்சினை நடந்தாலும் டிரெண்ட் எதுவோ அவற்றோடு தம்மைப் பொருத்திக் கொள்கிற வாட்ஸ்அப்-வாசிகள்.

இவற்றில் முதல் தரப்பினருக்கு கடுமையான பதிலடி தர வேண்டும். நான்காவது தரப்பினரை கண்டு கொள்ளாமல் ஒதுக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து இணையத்தில் மோதியவர்கள் இரண்டு மற்றும் மூன்றாம் தரப்பினருடனேயே அதிகமாக மோதினார்கள். அவர்கள் இரண்டாம் தரப்பினரை கருணையுடனும், மூன்றாம் தரப்பினரை பொறுப்புடனும் அணுகியிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. குறிப்பாக நிரந்தரப் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு கூறிய பதில் எரிச்சலூட்டியது. ‘நாங்கள் உங்கள் வேலையைத் தட்டிப் பறிக்கவில்லை. உங்கள யாரு எக்ஸாம் பாஸ் பண்ண வேணாம்னா? நாங்கள் அறிவு இருந்ததால் படித்து பாஸ் பண்ணியிருக்கிறோம்’ என்கிற ரேஞ்சுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ( இவர்களிடம் தான் நம் குழந்தைகளை ஒப்படைத்திருக்கிறோம்)

இவற்றை வெறுமனே இணைய பதிவுகள் என்று கடந்து போக முடியாது. ஏனென்றால் பலரின் உண்மை முகங்களை இணைய வெளியில்தான் மிகச்சரியாக தரிசிக்க முடியும். இன்றைய சூழலில் அரசு வேலை என்பது ஒரு சூதாட்டம் மட்டுமே. திறமை, தகுதி என்கிற அளவுகோல்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. சூதாட்டத்தில் வென்றவர்கள் தோற்றவர்களின் அறிவைக் குறை கூற முடியாது. அது தாயம் விழுவதைப் பொறுத்தது. கட் ஆஃப்-ல் அரை மதிப்பெண் குறைந்திருந்தால் கூட நாமும் அந்தப் பக்கம் நின்றபடி சகட்டுமேனிக்கு சம்பளத்தைத் திட்டிக் கொண்டிருப்போம் என்பதை பலர் உணரவேயில்லை.

இந்தப் போராட்டத்தை அரசு கையாண்ட விதம் மிக மோசமானது. குறிப்பாக வேலையற்ற இளைஞர்களின் ஆசையைத் தூண்டி விட்டு அவர்களின் உணர்வுகளை படு மலினமாக பொதுவெளியில் அடையாளப்படுத்தியது. அரசு ஊழியர்களை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இரக்கமே இல்லாமல் எதுவுமற்ற இளைஞர்களின் உணர்வுகளோடு குரூரமாக ஆடிய ஆட்டம் அறமற்ற ஆட்சியின் நிஜமான சான்று.

‘பல நியாயமான கோரிக்கைகள் இருந்தும் இது சம்பளம் கூடுதலாகக் கேட்கும் போராட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது ஏன்?’ என்கிற கேள்வி மிக முக்கியமான ஒன்று. அதனை அரசின் சதியாகவோ, ஊடகங்களின் திசை திருப்புதலாகவோ மட்டும் குறுக்கிப் பார்ப்பது நியாயமான பார்வை அல்ல. அதற்குப் பின்னால் அழுத்தமான பொருளாதார, சமூகக் காரணிகள் ஒளிந்திருக்கின்றன .

சுதந்திரத்திற்குப் பிறகு படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலகட்டத்தில் கூட பலரும் அரசு வேலைக்குச் செல்ல தயாராக இருக்கவில்லை. பிராமணர்கள், உருது முஸ்லிம்கள் போன்ற சில வகுப்பினரைத் தவிர பலரும் அதனை அடிமை உத்தியோகமாகவே கருதி வந்தனர். குறிப்பாக சொத்து வைத்திருந்தவர்கள் அரசு வேலையை மதிக்கவேயில்லை. பிராமணர்கள் அரசு வேலையை தங்கள் உயர்வுக்கான அடையாளமாகத் தக்க வைத்திருந்தனர். தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தின் எழுச்சி ஒவ்வொரு குடும்பத்திலும் அரசியல் உணர்வை அரைகுறையாகவேனும் பற்ற வைத்தது. அகில இந்திய அளவில் ஜெ.பி தொடங்கி வைத்த பொறியும், இடதுசாரிகளின் லட்சியக் கனவும், காந்தியம் தன் நடைமுறையால் சாதித்துப் பெற்ற உணர்வும், படித்த மாணவர்களிடம் ஏதோ ஒரு வகையில் தங்கி இருந்தது. இவர்கள் அரசு ஊழியர்களான போது நிர்வாகத்தின் அனைத்துக் குறைபாடுகளையும் தாண்டி ஏதோ ஒரு வகையில் ‘சேவை’ என்கிற உணர்வு உயிர்ப்போடு இருந்தது.

பல சமூகநீதித் திட்டங்கள், மறுமலர்ச்சியை நோக்கிய செயலாக்கங்கள், முற்போக்கான வரைவுகள் ஆகியவை இந்தத் தரப்பினரின் ஒத்துழைப்பினாலேயே சமூகத்தில் நடைமுறைக்கு வந்தன. பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி அடைந்த தமிழகத்தின் பொதுமக்கள் இவை அனைத்தையும் நேரடியாகப் பார்த்தவர்கள். அப்போதிருந்த அரசு ஊழியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஏதோ ஒரு விதத்தில் லட்சியவாதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இழப்புகளைச் சந்தித்து ஊழியர்களுக்கான பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள். இக்காலகட்டத்தில் 90% அரசு ஊழியர்கள் கீழ்நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் காலகட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் கிட்டத்தட்ட அந்தந்த கிராமங்களில் குலசாமியாக மாறி விட்டவர்கள். கல்வியின் மதிப்பைப் புரிந்து கொண்ட தமிழ்ச் சமூகத்தின் முன்னத்தி ஏராக இவர்கள் செயலாற்றினார்கள். என் தாத்தா ஆசிரியர் என்பதால் இதனை நேரடியாக உணர்ந்தவன் நான்.

தொண்ணூறுகளில் உலகமயமாக்கல் வந்த போது எல்லாம் மாறியது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமான விகிதத்தில் கூடியது. அதுவரை நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வர்க்கமாக இருந்த அரசு ஊழியர்கள் இப்போது உயர்நடுத்தர வர்க்கமாக மாறினர். அதேநேரத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற இன்ஜினியரிங் துறை சார்ந்த வேலைகளுக்கான தேவையும், உயர்கல்வி வளர்ச்சியால் தமிழகத்தில் அதிகமாகக் கிடைத்த தொழில்நுட்ப வல்லுநர்களும் தமிழகத்தின் தனிநபர் வருமானத்தையும் பெருமளவில் உயர்த்தியது. அதற்கேற்ப விலைவாசி, வீட்டு வாடகை, பொருட்களின் அதீத நுகர்வு ஆகியவையும் கணிசமாக உயர்ந்தன. அரசு ஊழியர் சம்பளம் அப்போது பிறருக்கு பெரிய அளவில் உறுத்தலாக இல்லை. ஆனால் இரண்டாயிரத்தின் பிற்பகுதியில் உலகளாவிய அளவில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்களும், தேவையை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் இங்கே கிடைத்த தொழில்நுட்ப வல்லுநர்களும் தனியார் துறையின் சம்பளத்தை பெரிய அளவில் கீழிறக்கியது .

பல MCA பட்டதாரிகள் பெஞ்சுகளில் உட்கார வைக்கப்பட்டார்கள். M.E. உடன் MBA படித்த பொறியாளர்கள் அதற்குப் பிறகு B.Ed படித்து விட்டு பத்தாயிரம் ரூபாய்க்காக மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். நேருவின் கலப்புப் பொருளாதாரக் கொள்கை கை விடப்பட்டதால் விவசாயம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தது. பல சம்சாரிகள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விட்டு சாதாரணர்களானார்கள். வியாபாரத்தில் துளி கூட ஆர்வம் காட்டி அடுத்த தலைமுறைக்கு வியாபாரத்தை, சுய தொழிலைப் பழக்காத தமிழ்ச்சமூகம் சில துறைகளைத் தவிர பிற அனைத்தையும் வடநாட்டு சேட்டுகள், மலையாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் இழந்து கையறு நிலையில் இருக்கிறது.

பொருளாதார மந்தத்திற்குப் பிறகு ரியல் எஸ்டேட்டும் வீழ்ந்து விட்டது. தொடர் மின்தடை, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் பகுதியான கொங்கு பகுதியும் வீழ்ச்சியைச் சந்திக்க விலைவாசி உள்ளிட்ட எதுவுமே மாறாத நிலையில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிகம் செலவழித்துக் கொண்டு, நுகர்வு வெறியிலிருந்தும் மீள முடியாமல் பொது தமிழ்ச் சமூகம் முன்னேறுவதற்கான ஒரே வழியாக அரசு வேலையைக் கண்டடைந்து வைத்திருக்கிறது. அதனால்தான் கிடைக்காதவர்கள் கிடைத்தவர்களின் மீது விழுந்து பிறாண்டுகின்றனர்.

இன்னொரு புறத்தில் மதிப்பீடுகளின் வீழ்ச்சி எல்லாத் துறைகளையும் போல அரசுத் துறைகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. உயர்நடுத்தர வர்க்கமாகி விட்ட பிறகு சராசரி பொதுமக்களோடு அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனோரீதியான விலகலும் இதற்கு மிக முக்கியமான காரணம். குறிப்பாக சேவைத் துறையான கல்வி, வியாபாரமாக மாற்றப்பட்டு விட்ட பிறகு, ஆசிரியர்கள் குறித்த சமூகத்தின் பார்வை மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்திருக்கிறது.

அரசுப்பள்ளிகள் என்பது இன்று மூழ்கிக் கொண்டிருக்கிற கப்பல். அதனைக் காப்பாற்றுவதற்காக பலரும் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. ஒரே பள்ளியில் கூட ஒரு ஆசிரியரின் தலைக்கு மேலே கத்தி வந்தாலும் பலரும் அது பற்றிக் கவலைப்படுவதில்லை. குற்றத்தை முழுமையாக அரசின் பக்கம் தள்ளி விட்டு அவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அதற்காக தனிசிரத்தையோடு செயல்படும் குழுக்களுக்குக் கூட பொதுமக்கள் அளிக்கிற ஆதரவை அரசு ஊழியர்கள் அளிப்பதில்லை. அதனால்தான் போராட்டத்தின் நடுவில் குடியரசு தினத்திற்குக் கொடியேற்றப் போன ஆசிரியர்களைக் கூட உள்ளூர்வாசிகள் அனுமதிக்கவில்லை. அவர்களின் இடத்தை அவர்களே தொலைத்து நிற்கிறார்கள் என்பதற்கான குறியீடாகவே இதனைப் பார்க்கிறேன்.

போராட்டம் நடைபெற்ற தருணங்களில் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது. இணைய வெளியில் ஆசிரியர் போராட்டம் குறித்த எதிர்மறையான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டும் அவர்களின் குடும்பத்தினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்கள் தன் தாயின், தகப்பனின், அத்தையின், மாமனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதவில்லை? இதனை நான் மிக முக்கியமான கேள்வியாகவே உணர்கிறேன். எட்டு லட்சம் ஊழியர்களின் வீடுகளில் உள்ள ஒருவர் எழுதியிருந்தாலும் எட்டு லட்சம் பார்வைகள் அரசு ஊழியர் போராட்டத்தின் நியாயத்தை பொது சமூகத்திடம் சொல்லியிருக்க முடியும். ஆனால் அது ஏன் நிகழவில்லை?

அரசு ஊழியர்களின் பிள்ளைகளைப் பலரும் தொழிலதிபர்களின் பிள்ளைகளைப் போலவே அரசியல் பார்வையற்று சொகுசாக வளர்த்து மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். இந்த இடத்தில்தான் ‘உங்கள் பிள்ளைகளை ஏன் அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை?’ என்று அரசு ஊழியர்களை நோக்கி பொது சமூகம் எழுப்பும் கேள்வி முக்கியமானதாகின்றது. அது வெறும் அசட்டுத்தனமான கேள்வி அல்ல. அரசு ஊழியர்களின் சமூகப் பொறுப்பின் மீது, வர்க்க உயர்வால் மாறி விட்ட மதிப்பீடுகளின் மீதான கேள்வி. இதற்கு ‘அரசியல்வாதிகளின் பிள்ளைகளை படிக்க வைக்கச் சொல்லுங்கள்’ என்று பதில் சொல்வது நியாயம் கிடையாது. மூழ்கிக் கொண்டிருப்பது நம் துறை. இப்படி ஓர் ஆபத்து தமக்கு வந்தால் அரசியல்வாதிகள் எதையும் செய்வார்கள். இவர்கள் ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

அறிக்கைகள், தீர்மானங்கள், கையெழுத்துகள், அடையாளப் போராட்டங்கள் ஆகியவற்றில் அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் காட்டும் அக்கறையை அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை. பலரும் தமக்கான பாதுகாப்புக்காகவும், ‘கூட்டத்தில் நாமும் ஓர் ஆள் ‘ என்கிற உணர்வு தரும் லாபத்துக்காகவுமே சங்கத்தில் இருக்கின்றனர். தம் அடிப்படை அறம் குறித்து அவர்களோடு உரையாடி அவர்களை வளர்த்தெடுக்கும் இடத்தில் சங்கப் பொறுப்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். சம்பள உயர்வு தவிர்த்த பிற விஷயங்களில் தலைமைக்கு இருக்கிற உணர்வு அவர்களிடம் பரவவில்லை. கடமைக்குக் கோஷம் போடுகின்றனர். அவ்வளவுதான். அழுத்திப் பிடித்தால் கூட்டம் கலைந்து விடும் என்பதால் இவர்களையும் இவர்களது தவறுகளையும் சகித்துச் சகித்து பொது சமூகத்தின் இழி சொல்லுக்கு ஆளாகியிருக்கின்றன தொழிற்சங்கங்கள். புரட்சி, வர்க்கம் குறித்த சமகாலப் பார்வை, உலகமயமாக்கலின் நன்மை, தீமைகள், அடிப்படை அறம் ஆகியவை குறித்து சித்தாந்தங்களைத் தாண்டி நடைமுறைகளை உள்வாங்கிய விரிவான விவாதங்கள் பெரிய அளவில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

இடதுசாரி கோஷங்களை போட்டு விட்டு ஆசிரியர்கள் திமுக, அதிமுக, பாமக, பிஜேபி என்று வேறு கட்சிகளுக்கு ஓட்டுப் போடுகின்றனர். என்றாவது இவர்களை வழிக்குக் கொண்டு வந்து விட முடியும் என்ற நம்பிக்கையில் திமிங்கலத்திற்காகக் காத்திருக்கும் எளிய கொக்கைக் போல அறிவுஜீவித் தோழர்கள் ‘சுய சமாதான விளக்கங்களுடன்’ காத்துக் கிடக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கான கட்சியின் ஆதரவால் பிற அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்களின் ஆதரவையும் கட்சி தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ‘தியாகம், வீரம், அடக்குமுறை, முழக்கம், பட்டினி, சிறை நிரப்புதல்’ என்று போன நூற்றாண்டு சொற்களை லட்சங்களில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் சொல்கிற போது அவை பலராலும் நகைப்பாகவே பார்க்கப்படுகின்றன . இதே மனோபாவத்துடன் நிகழும் போராட்டங்கள் பொது சமூகத்தின் ஆதரவைப் பெற முடியும் என்பது ஒரு போதும் நிறைவேறாத கனவு.

உலகமயமாக்கலுக்குப் பிறகு கார்ப்பரேட்டுகளின் அரசியல் தலையீடுகளால் எளிய மக்கள் மிக மோசமாகச் சுரண்டப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வரக்கூடிய சூழலில் அவர்களின் பார்வையில் அரசும், அரசு ஊழியர்களும் ஒன்றுதான் . எனவேதான் அரசு ஊழியர்கள் போராட்டத்தை அவர்களால் மரபான போராட்டமாகப் பார்க்க முடியவில்லை. ‘தம்பி எனக்கு இன்னும் டீ வல்ல ‘ என்ற வடிவேலுவின் கவலையாகவே பார்த்து விட்டுக் கடந்து விட்டனர்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் . எழுபதுகளிலோ, எண்பதுகளிலோ இத்தனை லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் போராட்டம் நடைபெற்றிருக்குமானால் அன்று ஒரு புரட்சியே நிகழ்ந்திருக்கும். ஆனால் ஒரு மாபெரும் போராட்டம் மிக மோசமாகத் தோற்றிருக்கிறது. ஏனென்றால் எல்லோரும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை ஒளித்து வைத்து விட்டு இன்னும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திரும்பியாக வேண்டும். ஏனென்றால் அவர்கள் பொன்னுலகம் எதிர்காலத்தில் இல்லை. நிகழ்காலத்திலேயே வீட்டிலும் ஊரிலும் இருக்கிறது. பொது சமூகத்தின் பொருளாதார, சமூகக் கூறுகளையும் உள்ளடக்கி தம் தேவைகளை, கோரிக்கைகளை, போராட்ட வடிவங்களை உருவாக்கினால் தான் இவை போராட்டங்கள் என்று அழைக்கப்படும். இல்லையென்றால் ‘அரசு அலுவலங்களில் கூட்டமாக உட்கார்ந்து கோஷம் போடுவது அரசு ஊழியர்களின் வருடாந்திர கடமைகளில் ஒன்று . இதற்கும் OD தருவார்கள் போல’ என்று எதிர்காலத்தில் பொது சமூகம் நினைத்து விடக் கூடும்.

போராட்டங்கள் தோற்கிற போது அரசாங்கம் தப்பிக்க மட்டுமே செய்கிறது. ஒருபோதும் வென்று விடுவதில்லை. நுகர்வு வெறியால் , சமூகம் குறித்துக் கவலைப்படாத சுயநலத்தால் , தம்மை தனித்த கூட்டமாகக் கருதிக் கொள்ளும் குழு மனோபாவத்தால் , எளியவர்களை விட்டு விலகி விட்ட மேட்டிமைத்தனத்தால் , சூதாட்டத்தின் வெற்றியை மாபெரும் அறிவாகக் கருதுகிற உயர்வு மனப்பான்மையால், சகலத்தையும் பணத்தால் தீர்த்து விடலாம் என்ற புதிய நம்பிக்கையால், காகிதத்தில் கிடைக்கும் நிரந்தரச் சான்றிதழை மானுட இருப்பின் நிரந்தரச் சான்றிதழாய்க் கருதி உள்ளம் மயங்குவதால், அதிகாரப் படிநிலை வரிசையை கேள்விகளே கேட்காமல் இயந்திரம் போல் பின்பற்றுவதால் நாம் தொலைத்து விட்ட ‘கடந்த கால அறத்தினை’ எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவரையில் நம் போராட்டத்தை நாமே தோற்கடித்துக் கொண்டு தான் கொண்டிருப்போம்.