சங்கேதங்களும் குறியீடுகளும் – விளடீமர் நபக்கவ் – தமிழாக்கம் : கால சுப்ரமணியம்

0 comment

1

இப்படியான இந்த வருடங்களில், நான்காவது தடவையாக, குணப்படுத்தவே முடியாதபடிக்குச் சீர்குலைந்துவிட்ட சித்தத்தையுடைய இளைஞனுக்கு, பிறந்த நாள் பரிசாக எதைத் தருவது என்ற பிரச்சனையை அவர்கள் மீண்டும் எதிர்கொண்டார்கள். அவனுக்கு என்று தனி விருப்பம் எதுவும் கிடையாது. மனிதனால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும், எந்தப் பிரயோஜனமும் அற்ற இந்தக் குணரூப உலகின் அனைத்து வசதிகளும், அவனுக்குத் தீமையின் தேனடைகளாகவே தோன்றின. அவற்றில் குரோதத்துடன் அலை பாய்ந்து ரீங்கரிப்பவை, அவனால் மட்டுமே அறியக்கூடிய விதத்தில் இருந்தன. அவனைப் புண்படுத்தக்கூடிய பலவிதப் பொருள்களையும் தவிர்த்துவிட்டு (கூர்முனைகள் உள்ள எப்பொருளும் அவனுக்கு ஒருவித மனத்தடையை ஏற்படுத்தியது), மதுரமானதும் மலிவானதும் மனத்தொந்தரவு தராததுமான ஒன்றையே அவனது பெற்றோர்கள் தேர்ந்தெடுத்தார்கள்; பத்துச் சிறிய செப்புகளில் பத்துவித பழப்பாகு அடங்கிய ஒரு தூக்குக்கூடை.

அவர்களுக்குத் திருமணம் நடந்து நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகே அவன் பிறந்தான். காலகதியில் ஓர் இருபது ஆண்டுகள் நழுவிவிடவே இப்போது அவர்களுக்கு நல்ல வயோதிகம். எல்லாம் எப்படியெப்படியோ ஆகிவிட்டதில், அவளது மங்கி நரைத்த கூந்தல் சலித்துப் போய் கலைந்து கிடந்தது. அவள் மலிவான கருப்பு உடைகளையே அணிந்தாள். அவளுடைய வயதிலுள்ள மற்ற பெண்களைப் போல் (தன் முகம் முழுக்க வெளிர் சிவப்பும் வெளுத்த இந்திர நீலமும் கொண்ட வண்ணப்பூச்சைப் பூசிக் கொண்டு, தனது தொப்பியில் ஓடைக்கரைப் பூங்கொத்துக்களைச் சூடி இருக்கிற, அவர்களது அண்டை விட்டுக்காரி திருமதி ஸோல் போல) இல்லாமல், வசந்த கால தினங்களின் குறை காணும் வெளிச்சத்துக்கு, அவள் தனது பூச்சற்ற வெளுத்த முகத்தைக் காட்டிக்கொண்டு நின்றாள். பழைய கிராமத்தில் மிக வெற்றிகரமான, நல்ல வியாபாரியாக விளங்கிய அவளது கணவர், இப்போது சுமார் நாற்பது வயது நிறைந்த, சரியான ஒரு அமெரிக்கனாக மாறி நிலைகொண்டுவிட்ட அவனது சகோதரன் ஜசக்கை முற்றிலும் நம்பியிருக்க வேண்டிய கட்டாயம். அவனை அவர்கள் அரிதாகவே போய்ப் பார்ப்பார்கள். அவனுக்கு ‘ராஜகுமாரன்’ என்ற பட்டத்தையும் சூட்டியிருந்தார்கள்.

அந்த வெள்ளிக்கிழமை, எல்லாமே தவறாகவே நடந்தது. இரு ஸ்டேஷன்களுக்கு இடையில், பாதாள ரயில் தனது உயிரான மின்சாரத்தை இழந்து போய் நின்றுவிட்டது. ஒரு கால் மணி நேரத்துக்கு, கடமை தவறாத நமது இதயத்துடிப்பையும் செய்தித்தாள்களின் சரசரப்பையும் தவிர, கேட்பதற்கு வேறு ஒன்றுமில்லாமல் போயிற்று. அடுத்து, அவர்கள் ஏறிப் பயணித்த பஸ், காலகாலத்துக்கும் தாமதம் செய்வதாய் ஊர்ந்தது. அது போய்ச் சேர்ந்தபோது, வாய்த்துடுக்கு நிறைந்த உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளால் நிறைந்து போயிருந்தது. சானடோரியத்துக்கு இட்டுச் செல்லும் பழுப்பு நிறப் பாதையில் அவர்கள் நடந்தபோது, மழை பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. வழக்கமாகக் கால்களை முடக்கிப் படுத்துக் கொண்டிருக்கும் அறையில் அவன் இல்லை. (அவனது பரிதாபகர முகம் பருக்கள் நிறைந்து ஒழுங்காகச் சவரம் செய்யாமல் சலிப்பும் குழப்பமும் நிறைந்ததாயிருக்கும்.) அங்கே அறையில் அவர்கள் மறுபடியும் காத்திருந்தார்கள். கடைசியாக, அவர்களுக்குத் தெரிந்த, அவர்களைப் பொருட்படுத்தாத, ஒரு நர்ஸ்  தோன்றினாள். இப்போது அவன் நல்ல நிலையில் இருக்கிறான். ஆனால் அவர்கள் அவனை வந்து பார்ப்பது அவனுக்கு இடையூறாகவே இருக்கும் என்றாள். சொற்பமான ஆட்களுடன் படுகேவலமான நிலையில் அந்த இடம் இருந்தது. அங்கே எந்தவொரு பொருளும் கைதவறிப் போய்விடும், எந்த விஷயமும் சுலபமாகக் குழப்பமடைந்துவிடும் என்ற தோற்றம். எனவே, அதன் அலுவலக அறையில் தங்களது பரிசுப்பொருளை வைத்துவிட்டுச் செல்லக்கூடாது என்றும் அடுத்த தடவை வரும்போது அதையே அவனுக்குத் திரும்பக் கொண்டு வருவது என்றும் முடிவெடுத்தார்கள்.

தனது கணவர் தமது குடையை விரிக்கும் வரை காத்திருந்து, பின் அதன் அடியில் சென்று அவரது கரத்தைப் பற்றிக் கொண்டாள் அவள். மனங்குலையும் போதெல்லாம் அவர் ஒருவிதமாகச் செருமிக் கொள்வது வழக்கம் என்பதால், தொடர்ந்து இப்போதும் செருமிக் கொண்டிருந்தார். வீதியின் அடுத்த புறத்திலுள்ள பஸ் நிறுத்த நிழல்குடையை அவர்கள் அடைந்ததும், அவர் தமது குடையை மடக்கினார். சில அடிகளுக்கு அப்பால், ஆடி அசைந்து நீர் சொட்டிக்கொண்டிருந்த மரத்தின் கீழ், இறகு முளைக்காத சிறுபறவை ஒன்று, பாதி உயிர் போன நிலையில், சகதியில் பரிதாபகரமாகத் துடித்துப் புரண்டு கொண்டிருந்தது.

பாதாள ரயில் நிலையத்துக்குச் சென்ற நீண்ட பயணத்தின் போது, அவளும் அவள் கணவரும் ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. அவரது வயோதிகக் கரங்கள் (வீங்கிய நரம்புடன், பழுப்புப் புள்ளிகள் நிறைந்த தோலைக் கொண்டது) அவள் பார்வையில் படும்போதெல்லாம், குடையின் கைப்பிடியை அவை இறுக்கி முறுக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். கண்ணீர் ததும்பும் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. வேறு விஷயங்களில் தம் மனதை ஈடுபடுத்த அவள் சுற்றுமுற்றும் பார்க்க முயன்றபோது, ஒருவிதமான மெல்லிய அதிர்ச்சியை அடைந்தாள். காத்திருந்த பயணிகளில் ஒரு பெண், உணர்ச்சி வேகமும் விநோதமும் கலந்தவளாய், கருத்த கூந்தலோடும் கிண்டிக் கிளறும் சிவந்த கால் நகங்களோடும், ஒரு வயதான பெண்ணின் தோளில் சாய்ந்து விசும்பிக் கொண்டிப்பதைப் பார்த்தாள். யாரை ஞாபகமூட்டுகிறாள் அப்பெண்? அவள் ரெபக்கா போரிஸோவ்னாவை ஒத்திருந்தாள். அவளது அந்த மகள், பல ஆண்டுகளுக்கு முன், மின்ஸ்க்கில் சோலோவீசிக் என்பவனை மணம் செய்திருந்தாள்.

சென்ற முறை அவர்களது மகன், தனது வாழ்வை முடித்துக் கொள்ள முயன்றபோது, டாக்டரின் வார்த்தையில் சொன்னால், அவன் மேற்கொண்ட தற்கொலை உத்திமுறை,  ஒரு கண்டுபிடிப்பின் மாஸ்டர்பீஸாக விளங்கியது. பறப்பதற்கு அவன் கற்றுக்கொள்கிறானோ என்று பக்கத்து நோயாளி பொறாமையுடன் நினைக்காமலும் தடுக்காமலும் இருந்திருந்தால், அவன் வெற்றி பெற்றிருக்கக் கூடும். அவன் உண்மையில் விரும்பியது, தனது உலகிலிருந்து தப்பிக்க, ஒரு துளையை உருவாக்கி, அதைக் கிழித்துக் கொண்டு வெளியேற நினைத்ததுதான்.

ஒரு விஞ்ஞான மாத இதழில், அவனது மனக் கற்பித முறைகள் மிக விரிவான ஒரு கட்டுரைக்குரிய விஷயமாகி இருந்தது. ஆனால் இதற்கும் முன்பே, இது பற்றியெல்லாம் தங்களுக்குள் புதிர் பேசி வியப்பதை அவளும் அவள் கணவரும் விட்டுவிட்டார்கள். ஹெர்மன் பிரிங், அதை ரெஃபரென்ஸியல் மேனியா என்று அழைத்தார். வெகு அபூர்வமான இந்த மாதிரி கேஸ்களில், தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் தனது ஆளுமைக்கும் வாழ்க்கை இருப்புக்குமான விளக்கக் குறிப்புகளாகக் கற்பித்துக் கொள்கிறான் நோயாளி. நிஜ மனிதர்களைத் தனது சதித்திட்டத்திலிருந்து அவன் விலக்கியே வைத்திருக்கிறான். ஏனெனில், மற்றவர்களை விட அதிபுத்திசாலியாகத் தன்னை அவன் கருதிக் கொள்வதுதான். அவன் எங்கு சென்றாலும், அதீதமான இயற்கை நிகழ்வுகள் அவனை நிழலிடுகின்றன. நட்சத்திர வானிலுள்ள மேகங்கள், தமக்குள் மெதுவாகச் சங்கேதங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனைப் பொருத்த வரை, அவை மிக விசித்திரமான விரிவான தகவல்களைக் கொண்டவை. இரவு கவியும்போது, அவனது உள்ளார்ந்த நினைவுகள், திட்டமிட்ட அகர வரிசைப்படி, இருட்டினுள் சைகை செய்து கொள்ளும் மரங்களினால் சர்ச்சிக்கப்படுகின்றன. குமிழிகள், புள்ளிக்கறைகள், சூரியக்கரும்புள்ளிகள் போன்றவை அவை. அவனால் மட்டுமே இடைமறித்துப் பெறக் கூடிய சில பயங்கரச் செய்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவ மாதிரிகளாக அவை இருக்கின்றன. எல்லாமே சங்கேத பாஷை. எல்லாவற்றிலும் அவன்தான் மையம். கண்ணாடிப் பரப்புகள், நிச்சலன நீர்நிலைகள் போன்றவை, ஒற்றர்களாகவும் பற்றற்ற பார்வையாளர்களாகவும் இருக்கின்றன. கடைச் சாளரங்களில் தொங்கும் கோட்டுகள், பாரபட்சமற்ற சாட்சிகள் போன்று இருக்கின்றன; இதயமற்றும் விசாரணையற்றும் தண்டிப்பவர்கள். மற்றவை (ஓடும் நீர், புயல்) மீண்டும் பைத்திய நிலைக்குத் தள்ளப்பட்ட ஹிஸ்டீரியாக்கள்; அவனைப் பற்றிய மோசமான எண்ணம் கொண்டவைகள்; அவனது நடத்தைகளுக்குப் பூதாகரமான, தவறான காரணங்களைக் கற்பிப்பவைகள். அவன் எப்போதுமே கவனமாய் இருந்தாக வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் ஜாக்கிரதையுடன், ஏறியிறங்கும் லேசான அலைகளுக்கு ஏற்ப, விஷயங்களை விடுவித்துப் பார்த்துக்கொண்டும் அதற்குத் தக்கவாறு தன் வாழ்வைச் சரிப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். அவன் உட்சுவாசிக்கும் இந்தக் காற்றும் கூட, அட்டவணைப்படுத்தி முடிக்கப்பெறுகிறது. அவனது அருகிலுள்ள சுற்றுப்புறங்களின் தன்மையைப் பொறுத்து, அவனது விருப்பங்கள் தட்டி எழுப்பப்படுகின்றன. என்றாலும், இவை மட்டுமேயல்ல; தொலைவிலிருந்து பிரவகிக்கும் மடத்தனமான அவதூறுகள், கனபரிமாணத்திலும் வாசாலகத்திலும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அவனது ரத்தத்தின் மிகச் சிறு ஜீவ அணுக்களின் நிழலுருவச் சாயைகள், பல லட்சம் மடங்கு பெருக்கிக் காட்டப்பட்டு, விரிந்த நிலவெளி எங்கும் இடம் மாறியபடியே வேகமாகப் பறக்கின்றன. மேலும், தொலைதூரத்தில் பெரும் மலைத்தொடர்கள் சகிக்க முடியாதபடி இறுகி, உயர்ந்து, கருங்கற்களாகத் தொகுப்படைகின்றன. அவனது இருப்பின் அநாதியான உண்மையைப் புலம்பிக் கொண்டிருக்கின்றன ஃபிர் மரங்கள்.

2

பாதாள ரயில் நிலையத்தின் (அங்கு கூச்சலும் மாசடைந்த காற்றும் நிறைந்திருந்தது) உள்ளிருந்து அவர்கள் வெளிப்பட்ட போது, பின்னுக்கு இழுபடும் பகலின் வெளிச்சம், வீதி விளக்குகளுடன் கலந்துவிட்டது. இரவு உணவுக்காகக் கொஞ்சம் மீன் வாங்க விரும்பிய அவள், பழப்பாகு ஜாடிக்கூடையை அவரிடம் கைமாற்றி விட்டு, அவரை  வீட்டுக்குப் போகும்படி கேட்டுக்கொண்டாள். மூன்றாம் தளம் வரைக்கும் மேலே வந்த பின்புதான் அவருக்கு அன்று அதிகாலையில் அவளிடம் வீட்டுச் சாவிகளைக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

மௌனமாகப் படிகளில் அமர்ந்தார். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பின் அவள் வந்து சேர்ந்தபோது, அமைதியாக எழுதிக் கொண்டிருந்தார். அசட்டுப் புன்முறுவலுடன், தனது மடத்தனத்தை உதறுபவள் போல் தலையை ஆட்டிக்கொண்டு அவள் தொடர, மிகுந்த பிரயாசையுடன் மேல் மாடிக்குச் சென்றார்கள். இரு அறைகள் கொண்ட அவர்களது பிளாட்டுக்குள் நுழைந்ததும், அவர் உடனே கண்ணாடிக்கு முன் சென்றார். கட்டை விரல்களினால் வாயின் உதட்டோரங்களைச் சிரமப்பட்டு அகல விரித்து, அருவருப்பும் பொக்கைத்தனமும் கலந்த இளிப்புடன், தமது உபயோகமற்ற அசௌகரியமான பொய்ப் பல்தகட்டை நீக்கினார்.

அதோடு சேர்ந்து, கோரப் பல்லில் தாரையாக எச்சில் சுவர்ந்து வந்ததைத் துடைத்தார். அவள் சாப்பாட்டுக்கு மேஜையைத் தயார் செய்துகொண்டிருந்த போது, தனது ருஷ்யமொழிச் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். படித்தபடியே பின்பு, பல் தேவையில்லாத, நொய்மையான ஆகாரப்பண்டங்களைத் தின்றார். அவரது மனோநிலை பற்றி அவளுக்குத் தெரியும் என்பதால், அவள் ஏதும் பேசவில்லை. அவர் படுக்கைக்குச் போன பின்பும், அவள் தனது அழுக்குச் சீட்டுக்கட்டோடும் பழைய ஆல்பங்களோடும் புழங்கும் அறையிலேயே தனித்திருந்தாள். நேரான நடைவழிக்கு அப்பால், இருட்டில், சில நசுங்கிய சாம்பல் நிற கேன்களில் பட்டு எதிரொலிக்க மழை பெய்யும் இடத்தில், மங்கிய வெளிச்சம் கொண்டு தெரிந்தன ஜன்னல்கள். அதிலொன்றில், கருப்புக் கால்சட்டையணிந்த மனிதரொருவர், கலைந்த படுக்கையில் வெற்றுப் புஜங்களை உயர்த்திக்கொண்டு, மல்லாந்து படுத்திருப்பது தெரிந்தது. ஜன்னல் மறைப்பை கீழே இழுத்து மூடினாள். புகைப்படங்களைப் பரிசோதித்தாள். லிப்ஸிக்கில் அவர்களிடம் பணி செய்த ஜெர்மன் தாதியும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கொழுத்த முகமுடையவனும் ஆல்பத்தின் ஒரு மடிப்பிலிருந்து வெளிவிழுந்தார்கள். மின்ஸ்க், புரட்சி, லிப்ஸிக், பெர்லின், லிப்ஸிக். படத்தில் சரியாகப் பதியாத முகப்பை உடைய சரிவான வீடு. நாலு வயசாகியும், இறுக்கமும் கூச்சமும் கொண்டவனாய், வேற்றாள் யாரையும் ஏறிட்டுப் பார்க்காதவனாய் முன்நெற்றிச் சுருளுடனும்   நெருங்கிவரும் அணில் பார்வையுடனும் பிரியத்துடனும் பார்க்கில் அவன்; மெலிந்தவளாய் அகல விரிந்த கண்களோடு வயதான பெண்ணாக தடபுடல் நிறைந்த ரோஸா சித்தி. மனிதக் கரங்களும் கால்களும் கொண்ட அற்புதப் பறவைகளை அவன் வரைந்ததும் முதிர்ந்த மனிதனைப் போல் தூக்கமின்மை நோயில் பாதிக்கப்பட்டு அவன் உழன்றதுமான காலம். அவனது சித்திமகன். தற்போது புகழ்பெற்ற செஸ் விளையாட்டுக்காரன். மீண்டும் அவன் எட்டு வயதில்; அப்போதே, புரிந்துகொள்ள முடியாதவனாய், நடை வழியில் உள்ள சுவரொட்டிக்கும் பயப்படுபவனாய், மலைப்பின்னணியில் பாறைகளோடு கூடிய குடியானவ நிலப் பகுதியும் இலையற்ற மரத்தின் கிளையிலிருந்து தொங்கும் பழைய வண்டிச் சக்கரமுமாகத் தோன்றும் புத்தகத்தின் படத்துக்குக் கூடப் பயப்படுபவனாய் விளங்கியவன். பத்து வயதில் அவன். அது அவர்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறிய வருடம். அவமானம், பரிதாபம், வெட்ககரமான துன்பங்கள். அழுக்கும் விஷமமும் பின்தங்கிய மனப்பாங்குமுள்ள குழந்தைகளோடு அவன் இருந்த அந்த விசேஷமான பள்ளிக்கூடம். அதன் பிறகு அவன் வாழ்வில் ஒரு வசந்த காலம். நிமோனியாவுக்குப் பிறகு, ஒரு நீண்ட வியாதியிலிருந்து மீண்ட காலத்தோடு இணைந்த தருணம்; அவனது அந்தச் சின்னச் சின்ன பயங்களுடன், சராசரி மனங்களுக்கு முற்றிலும் எட்ட முடியாதபடி அவனை ஆளாக்கிவிட்டது அது. அசாதாரணத் திறமைகளைப் பெற்ற குழந்தையை, தர்க்கரீதியில் பின்னிப் பிணைந்த மாயையின் அடர்த்தியான சிக்கல்கள் சேர்ந்து கடினப்படுத்திவிட்ட விசித்திர நிலை என்று இதை அவனது பெற்றோர் பிடிவாதமாக எண்ணி வந்தார்கள்.

இதையும் இதற்கும் மேலான பலதையும் அவள் ஏற்றுக் கொண்டாள். ஒவ்வொரு சந்தோஷமாக இழந்து வருவதே வாழ்க்கை என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது தானே? அவனுடைய விஷயத்தில், சந்தோஷங்கள் கூட அல்ல, வெற்றான முன்னேற்றச் சாத்தியப்பாடுளை, காரணத்தோடோ காரணமற்றோ அவளும் அவள் கணவனும் பொறுத்துக் கொண்ட அந்த வலியின் முடிவற்ற அலையோட்டங்களை நினைத்துக்கொண்டாள். கற்பனைக்கெட்டாத விதங்களில் அவளது பையனைத் துன்புறுத்தும் கண்ணுக்குப் புலனாகாத பூதங்கள்; அளப்பறியாத விதத்தில் இந்த உலகம் பெற்றுள்ள மெலிவு; அந்த மெலிமையின் தலைவிதி. ஒன்று, அது நசுங்கிப்போயோ வீணாக்கப்பட்டோ இருக்கும் அல்லது பைத்தியத்துள் உருமாற்றப்பட்டு விளங்கும். விவசாயியிடமிருந்து ஒளித்துவிட முடியாத அபூர்வமான விதைகள், துடைக்கப்படாத மூலை முடுக்குகளில், தங்களுக்குள் பாடி முனகும் ஆதரவற்ற குழந்தைகள்.  பூதாகரமான இருட்டைப்போல், அவனது குரங்கு போன்ற தோற்றம் கூனி வளைந்து தோன்றி, தனது சுவட்டில் கசங்கிய மலர்களை விட்டுச் சென்றதை, கையறு நிலையில் கவனித்திருக்கவே முடிந்தது.

3

நடுநிசிக்கும் மேலானபோது, அவளது கணவர் முனகுவது இந்தப் புழங்கும் அறைக்கும் கேட்டது. பின்பு அவர் தடுமாறிக்கொண்டே உள்ளே வந்தார். தனது இரவு உடைக்கு மேல் பழைய ஓவர்கோட் அணிந்திருந்தார். மென்நீலக் குளியலறை ஆடையை விட, அஸ்ட்ரகன் ஆட்டு ரோமத்தாலான காலரோடு கூடிய இதைத்தான்  அவர் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுத்து அணிவார்.

“எனக்குத் தூங்க முடியவில்லை,” என்று கூவினார்.

“ஏன்? எதனால் தூங்க முடியவில்லை? மிகவும் களைத்துப் போயிருந்தீர்களே?” என்று கேட்டாள்.

“நான் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப் போய்க்கொண்டிருப்பதால், என்னால் தூங்க முடியவில்லை,” என்று சொன்னவாறு, மஞ்சம் போன்ற இருக்கையில் சாய்ந்து படுத்தார்.

“வயிற்றுக்கோளாறா? டாக்டர் சோலோவை அழைக்கட்டுமா?”

“டாக்டர் வேண்டாம், டாக்டர் வேண்டாம்,” என்று முனகிய அவர், “நாசமாய்ப் போகட்டும் அந்த டாக்டர்கள்! அங்கிருந்து அவனை நாம் உடனே வெளியே கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நாம்தான் பொறுப்பாளிகளாவோம். நாம்தான் பொறுப்பாளிகள்!” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இரு பாதங்களும் தரையில் பட தன்னைச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்த நிலையில் தனது முஷ்டியால் முன்நெற்றியை அடித்துக்கொண்டார்.

“நல்லது, நாளை காலையில் அவனை வீட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம்.”

“கொஞ்சம் டீ இருந்தால் நன்றாயிருக்கும்,” என்று சொன்ன அவள் கணவர், பாத்ரூமுக்குத் திரும்பவும் சென்றார்.

அவள் கஷ்டப்பட்டுக் குனிந்து தேடிப்பிடித்து எடுத்தவற்றில், சில சீட்டு அட்டைகளும் ஓரிரு போட்டோக்களும், இருக்கையிலிருந்து தரைக்கு நழுவின; ஹாட்டின் நேவ், ஸ்பேடின் ஒன்பது.

ஸ்பேடின் எஸ், எல்ஸாவும் அவளது அருவருப்பான சொகுசுக்காரக் கணவனும்.

அவர் உற்சாகத்தோடு திரும்பி, உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்: “நான் எல்லாவற்றையும் திட்டமிட்டு விட்டேன். நாம் அவனுக்குப் படுக்கையறையைக் கொடுத்துவிடுவோம். நம் இருவரில் ஒருவர் மாறி மாறி, பாதிப் பாதி இரவை அவனருகிலேயே கழிப்போம். மற்றொருவர் இந்த மஞ்சத்தில் படுப்போம். வாரத்தில் இரண்டு தடவையாவது டாக்டரை வந்து அவனைப் பார்க்கச் செய்வோம். ராஜகுமாரன் என்ன சொல்வான் என்பது பிரச்சனையே இல்லை; எப்படியும் அவன் அதிகம் ஒன்றும் சொல்லமாட்டான். ஏனென்றால் இது இன்னும் படுசிக்கனமாகி விடுகிறதல்லவா?”

டெலிபோன் ஒலித்தது. அவர்களது டெலிபோன் ஒலிப்பதற்கு இது வேளையற்ற வேளை. அவரது இடது செருப்பு கழன்றுபோய் விழுந்துவிடவே, தன் குதியிலும் விரல் நுனிகளிலும் அறையின் மத்தியில் நின்றுகொண்டு, குழந்தைத்தனமாக பல்லற்ற வாயை அகலத் திறந்தபடி, செருப்புக்காகத் துழாவினார் அவர். அவரைவிட அவளுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியும் என்பதால் வழக்கம்போல் அவள்தான் போனை எடுத்துக் கேட்டாள்.

“சார்லியிடம் நான் பேசமுடியுமா?” ஒரு பெண்ணின் கம்மலான சின்னக்குரல் கேட்டது.

“எந்த நம்பர் உங்களுக்கு வேணும்? இல்லை, இது சரியான நம்பர் இல்லை.”

ரிசீவரை மெதுவாகத் தொங்கவிட்ட அவளது கரம், வயதாகித் தளர்ந்துவிட்ட தன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தது. “இது என்னைப் பயமுறுத்திவிட்டது!” என்றாள்.

அவர் சட்டெனப் புன்னகைத்துவிட்டு, உடனே தனது கிளர்ச்சி பெற்ற தனிமொழியைத் தொடர்ந்தார். விடிந்ததும் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வருவார்கள். பூட்டிய இழுப்பறைக்குள் கத்திகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவன் தனது மோசமான நிலையில் கூட, மற்றவர்களுக்கு எந்தப் பயத்தையும் விளைவித்தது இல்லை.

டெலிபோன் இரண்டாவது தடவையாக ஒலித்தது. அதே அவசரமான, தொனியற்ற இளங்குரல் சார்லியைக் கேட்டது.

“நீங்கள் தவறான எண்ணை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுகிறேனே –  ஜீரோவுக்குப் பதிலாக O என்ற எழுத்தைச் சுழற்றுகிறீர்கள்!”

எதிர்பாராத நடுநிசி டீ பார்ட்டியில் அவர்கள் அமர்ந்தனர். பிறந்தநாள் பரிசு மேஜை மேல் வீற்றிருந்தது. அவர் சத்தமாக உறிஞ்சிக் குடித்தார். முகம் சிவந்துவிட்டது. அவ்வப்போது சர்க்கரையை நன்றாகக் கரையச் செய்ய, தம்ளரை உயர்த்தி வட்டமாய்ச் சுழற்றினார். அவரது வழுக்கைத் தலையின் பக்கவாட்டில் பெரிய மச்சம் இருக்கும் அந்த இடம், நரம்பு புடைத்து எடுப்பாகத் தெரிந்தது. அன்று காலையில் அவர் ஷேவ் செய்திருந் தாலும், அவரது மோவாயில் வெள்ளி முளைகள் தெரிந்தன. அவள் இன்னொரு தம்ளர் டீயை ஊற்றியபோது அவர் தமது கண்ணாடியை அணிந்துகொண்டு மஞ்சள், பச்சை, சிவப்பில் பிரகாசிக்கும் அந்த பழப்பாகு சிறு ஜாடிகளை, சந்தோஷத்தோடு மீண்டும் சோதிக்கலானார். அவரது தடுமாறும் ஈர உதடுகள், அவற்றின் லேபில்களை உச்சரித்துப் பார்த்தன. அப்ரிக்காட், திராட்சை, பீச் பிளம் (Beech Plum), குன்ஸ்… அவர் கானக ஆப்பிளை உச்சரிக்க முயன்று கொண்டிருந்தபோது, மறுபடியும் டெலிபோன் மணி அடித்தது.

 (‘Signs and Symbols’, Nabokov’s Dozen: A Collection of Thirteen Stories.1958.)

‘சங்கேதங்களும் குறியீடுகளும்’

சிறுகதை பற்றிய சில தகவல்கள் குறிப்புகள்

பெயரற்ற வயதான பெற்றோர், சானடோரியம் ஒன்றில் மனநல மற்றுச் சேர்க்கப்பட்டிருக்கும் தமது மகனின் பிறந்தநாளன்று அவனைப் பார்க்க வருகிறார்கள். அவன் தனது உயிரைப் போக்கிக் கொள்ளக்கூட முயற்சித்தவன். அப்படிப்பட்ட தம் மகனை அன்று பார்க்க முடியாது என்று மருத்துவமனையில் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அத்தம்பதியினர் வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள். கணவர், சித்தப்பிரமை கொண்ட தம் மகனை மருத்துவமனையகத்தை விட்டு வெளியே கொண்டுவந்து விட வேண்டும் என்ற தனது முடிவை அறிவிக்கிறார். கதைமுடிவில், எங்கிருந்து என்று தெரியாமல் டெலிபோனில் இளம் பெண்குரல் ஒன்று சார்லியைக் கேட்கிறது. கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால் அம்மா போனை எடுத்துப் பேசுகிறார். விபரமற்ற அந்தத் தொலைபேசி அழைப்புகள் முதல் இரண்டுமுறையும் தவறான அழைப்புகளாகத் தெரிகிறது என்று அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். மூன்றாவது முறையும் தொலைபேசி அழைக்கிறது. அத்துடன் கதை முடிகிறது.

தன்னைச் சுற்றிலும் நடப்பவை எல்லாம் தனது ஆளுமையையும் இருப்பையும் பற்றிய மறைமுகச் சங்கேதங்களும் குறியீடுகளும் கொண்டவை, எல்லாவற்றுக்கும் தான்தான் குறிமையம் என்று கற்பனைசெய்து கொள்ளும் மனநிலை கொண்ட Referential Mania என்ற மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவனாக மகன் சித்தரிக்கப்படுகிறான்.

பரிச்சயமான சூழ்நிலையிலிருந்து விலக்கி வைக்கப்படும்போது நிலைமை இன்னும் மோசமாகிறது. பரோனீயா மனநிலையில் உண்மைகள் தவிர்க்கப்படுகின்றன. அவனுடைய நிஜங்கள் வேறு. நிபந்தனைகள் வேறு. இடமற்ற மனோவேளை.

அந்தப் பெற்றோர், பெயர் இல்லாத ருஷ்ய யூதர் என்றும், புரட்சிக்குப் பின் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் என்றும், உடல் நலமற்ற தந்தை தனது சகோதரனின் உதவியால் இங்கு வாழ்ந்திருப்பதாகவும் ஜெர்மனியில் இருந்தபோது ஒரு ஜெர்மனியத் தாதி கூட இருந்ததாகவும், ரோஸா அத்தை போன்ற பல உறவினர்கள் ஹோலோகாஸ்ட் என்ற இனச் சுத்திகரிப்பில் வதைமுகாம்களில் இறந்ததாகவும் கதையின் போக்கில் சில தகவல்கள் தெரிகின்றன.

மகன் தற்கொலை செய்துகொண்டான், அல்லது அந்த மருத்துவ மனையிலிருந்து தப்பிச் சென்றான், எப்படியோ வாழ்நாள் வேதனையிலிருந்து விடுதலை பெற்றான் என்று மேலதிக மிதமிஞ்சிய வாசிப்பும் வாசகன் செய்யலாம்.

இக்கதை நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்தபோது, பல மாற்றங்களைச் செய்ய அதன் பெண் எடிட்டர் ஒருவர் விரும்பினார். நபக்கவ் தமது பிரசித்தி பெற்ற நண்பர் எட்மண்ட் வில்சன் ஆதரவுடன் அவற்றை வலுவாக எதிர்த்தார், எனவே ஒருசில மாற்றங்களுடன், அவர் எழுதியதைப் போலவே கதை அச்சிடப்பட்டது.

நியூயார்க்கர் பிரசுரத்தில் கதை மூன்று பிரிவுகளாக நீள் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. “Signs and Symbols’ தலைப்பு தலைகீழாக “Symbols and Signs’ என்று மாறியது. ஓரிடத்தில் இரண்டு பத்திகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. “beech Plum’  என்ற சொல் “beach Plum’ மாற்றப்பட்டது.

மூன்று பிரிவுகளாகத் தரப்பட்டுள்ள கதையின் 7,4,19 பத்திகள் 1947 என்ற ஆண்டைக் குறிப்பது. நியூயார்க்கர் பிரசுரத்தில் கடைசி பிரிவில் 18 பத்திகளாக மாற்றப்பட்டிருந்தது. (Pnin [1957] என்ற நபக்கவ் நாவலில், பெண் நூலகர் ஒருவர், 19ஆவது பாகத்தை 18 இருக்கவேண்டிய இடத்துக்கு மாற்றிவிட்டது பற்றிய கிண்டல் வருகிறது.)

Buchenwald என்ற சித்திரவதை முகாம் தகன நிலம் “beechwood’ எனப்பட்டது. எனவே “beach Plum’ என்பதைத் தவறாக beech Plum’ என்று தந்தை படிக்கிறார் என்றுதான் கதை முடிவில் வருகிறது.

Nabokov’s Dozen: A Collection of Thirteen Stories (1958) என்ற தனது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தில் இந்தக் கதையைத் தான் எழுதியபடியே மாற்றிச் சேர்த்தார் நபக்கவ்.

ஒரு கடிதத்தில், “The Vane Sisters’ (1951) சிறுகதை போன்றே ‘சங்கேதங்களும் குறியீடுகளும்’ கதையிலும் முன்னுக்கு வைக்கப்பட்டுள்ள மேலோட்டமான மங்கலான ஒளிப்பரப்பின் பின்னால் ஒரு இரண்டாவது (முக்கிய) கதை பிணைக்கப்பட்டுள்ளதாக நபக்கவ் கூறியுள்ளார். அந்த முக்கியமான கதை என்னவென்று அவர் விளக்கிச் சொல்லவில்லை.

இந்த Referential Mania வாசகனுக்கும் ஏற்படும். கதையிலுள்ள ஒவ்வொரு குறிப்பும் இரண்டாவது முக்கிய கதையைச் சங்கேதமாகவும் குறியீடுகளாகவும் காட்டுகிறதோ என்ற இடமற்ற மனோவேளையில் வாசகனை இந்த ஸ்டைலிசக் கதை நிகழ்த்தி விடுகிறது என்பதுதான் இதன் சாதனை. மொழிபெயர்ப்பில் இவற்றை அறிய முடியாது. மூலத்திற்குச் செல்ல வேண்டும்.

உருவமும் உள்ளடக்கமும் ஒன்றில் ஒன்று கலந்து விடுவதுதான் ஸ்டைலிஸ்ட்டுகளின் படைப்புகளில் நிகழ்கிறது. அந்த உருவத்தில் இருந்து அந்த உள்ளடக்கத்தைப் பிரிக்க முடியாது. ஜாய்ஸின் யுலிஸஸ் நாவலில் அதன் உருவம்தான் உள்ளடக்கம். ஸ்டைலிஸ்டுகளின் படைப்புகளை மொழிபெயர்க்க முடியாது. எனவே ஜாய்ஸ் போலவே நபக்கோவையும் மொழிபெயர்ப்பில் இழந்துபோகும் வாய்ப்பே இருத்தலாக இருக்கிறது.

எதார்த்தமான அனுபவத்தின் அச்சுறுத்தும் வடிவத்திற்கு எதிராக, ஆக்கபூர்வமான கற்பனையின் சுழற்சியை பிடிக்க, ஒரு விரிவான குறியமைப்பு அமைக்கிறது கதை. தற்செயலான விவரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு செயலூக்கத்தை உருவாக்குகிறார் மெதுவாக விரியும் விவரம், பின்பு விரிவாக விவரிக்கிறது, வாழ்க்கையின் தந்திரங்கள் அழிந்துபோகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. சிக்கலான சுற்றுப்புற கட்டமைப்பிலிருந்து, இயற்கையான உறுதியான உலகத்துக்கும் நிழல் வடிவமான, கண்டடைந்த உலகத்திற்கும் இடையே உள்ள பிரதிபலிப்பு, கற்பனைக் கலவைகளை உருவாக்குகிறது.

இக்கதை நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான தோற்றம், தொனி, உணர்வுகள் ஆகியவை குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமானவை. இலகுவான பரப்பு மேலும் இலகுவாகிறது. அவநம்பிக்கையான உலகக் கண்ணோட்டம் கலந்த ஓர் அற்புதமான கசந்த கதை, ‘சங்கேதங்களும் குறியீடுகளும்’