நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்

0 comment

ஈழத்து போர்க்காலப் படைப்புகள் கருணையுடன் கை தூக்கிவிடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகி விட்ட பின்னர், சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற்செறிவோ, படைப்புமொழி குறித்த ஓர்மையோ, சொல்முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை.

ஆழமும் உள்விரிவுமற்ற குறைப்படைப்புகள் ஈழத்தின் நவீன முகங்களாக உரையாடப்படும் போதும், போரின்/ போராட்டத்தின் பன்முக வெளியைக் கருணையோடு அணுக வேண்டித் தங்கள் எளிமையான அரசியற் கருத்துகளின் மேல் அறிதற் குறைபாடுகளைச் சுற்றிப் போர்க்காலப் படைப்புகள் எனத் தரும்போதும், அவற்றின் படைப்பூக்கமில்லாத அரசியற் பிரச்சாரங்களை அலுப்புடன் வாசிப்பது குறித்த புகார்களே இவை.

தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலும் ஈழப்போர் என்ற மீள வேண்டியதும், மீளவே முடியாததுமான இரத்தச் சகதிக்குள் தன் கால்களை ஊன்றி மேல் எழுந்துவர முயன்றிருக்கிறது. முயற்சி என்ற அளவில் பாராட்டக்கூடியது தான். ஆனால் அவரிடம் இருக்கும் போராட்டம் குறித்த ‘சிறுவன் மனநிலை’ மேலெழ முடியாமல் அதே ஈழப்போர்ச் சகதிக்குள் வீழ்ந்து போரின் இரத்தச் சாட்சியமாக இருப்பதாகப் பாவனை செய்கிறது.

இது ஈழப்போராட்டத்தை எழுதுவதாகச் சொல்லும் பலரிடமும் இருக்கும் பாவனைக் குறைபாடு தான். அவர்களால் உணர்ச்சிகரமாக மட்டுமே போராட்டத்தை எதிர்கொள்ள முடிகிறது. போராட்டம் என்றால் வேறு தெரிவுகளே இல்லாமல் அதன் எதிர்கால ‘நல்விழைவை’ மட்டுமே கற்பனை செய்ய முடிகிறது. எதிர்கால நல்விழைவுக்காகப் போரைப் புனிதப்படுத்தி அதற்கு எவ்வளவு உடல்களைப் பலியிடவும் தயங்குவதில்லை.

போராட்டத்தின் இருட்டும் குழப்பமுமான தெளிவில்லாத பாதை குறித்த அச்சமும், அவற்றின் நிகழ்பேரழிவுகள் குறித்த சிறு சந்தேகமேனும் இருப்பதற்கான தடயங்களும் எழுத்துகளில் இருப்பதில்லை. போரின் நிகழ்கால விழைவுகளின் கோரத்தைக் காட்ட அன்றாடச் சீவியத்திற்கே சிரமப்படும் ஏதிலியான மக்களின் கண்ணீரை உள்ளங்கைகளில் ஏந்தியபடி வருவார்கள். தீபச்செல்வன் நாவலில் தியாக / புனிதப்படுத்தப்பட்ட வித்துடலின் மேல் நடப்பட்டிருக்கும் நடுகல்லை நமக்குக் காட்டுகிறார்கள்.

நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட சலவைக்கற்களின் அழகில் அல்லது அதன் காவியச் சோகத்தினுள் மூழ்கினால் நடுகல்லின் கீழே புதைந்திருக்கும் உடல்களின் குவியலினுள் இருக்கும் வெறுமையையும், அழிவையும், கசப்பையும், அறிந்துகொள்ள விரும்பாதவர்களாகி போரின் குரூர யதார்த்தத்தின் முன், பின்முதுகு காட்டி நிற்பவர்களாகி விடுவோம்.

கதைசொல்லி விநோதன் போரில் சாவடைந்த அவரது அண்ணனின் நடுகல்லின் நினைவுகளைச் சொல்லிச் செல்கிறார். அந்நடுகல்லைத் தன்மகனின் இருப்பாக நினைவில் பொதிந்திருக்கும் விநோதனின் தாய் நமக்குப் புதியவர் அல்ல. அவர் போராட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்தே கண்ணீர் உகுக்கும் கண்களுடன் செய்வதறியாது போர்க்களத்தின் விளிம்பில் நடந்து வருபவர்.

நடுகற்களின் கீழ்புதைக்கபட்ட வித்துடல்கள், உயிரற்ற வெறும் சடலங்கள் மட்டுமல்ல, அவை மறுமையின் மீட்சிக்காக விதைக்கபட்டிருக்கும் வீரியமிக்க வித்துகள். ஒருதுளி கருணைமிகுந்த நீராவது அந்த உறங்கும் வித்துகளின் மீது விழுந்தால் அவை உயிர்த்தெழுந்து விடும் என்பது போராட்டகாலக் கதையாடல்கள். ஆனால் எலியாகனெட்டி நடுகற்களை அதிகாரத்தின் மூலக்கூறுகளாகவே அறிமுகம் செய்கிறார்.

//கல்லறை என்பது விசேஷமான ஒருமனநிலையைத் தூண்டுகின்றது. இந்த மனநிலையைப் பற்றி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒருகெட்ட பழக்கம் நம்மிடம் உள்ளது. இதுபற்றி நாம் எண்ணுகிற வெளிப்படுத்துகிற பெருமிதம் ஒருவிதமான இரகசிய சந்தோஷத்தை, நிறைவை நமக்குத் தருகிறது// போராட்ட காலத்தில் அதிகார இருப்பை நினைவுறுத்தும், மறுமையில் மீந்திருப்பதான கற்பனைச் செய்யும் குறியீடுகளாகவுமிருந்த நடுகற்கள், இறுதிப்போர்ப் பேரழிவின் பின்னர் நினைவுகூறலின் சிறுதடயங்களாக எஞ்சியிருக்கின்றன.

போரில் உறவுகளை இழந்தவர்களுக்கு அவை சிறுதடயங்களின் நினைவுகூறல் மாத்திரமல்ல. விநோதனின் அம்மா பொதிந்து வைத்திருப்பது போன்ற இறந்தவர்களின் இருப்பும். ஆனால், விநோதனிற்குப் போராட்டத்தின் மேலான சிறுவன் மனநிலையால் நடுகற்களின் மீதான வாஞ்சை போர்-பின்சூழலிலும் குறைவதில்லை. நடுகற்களை உயிர்ப்பிற்கும் கருணைமிகுந்த நீரின் ஊகுத்தலுக்காகக் காத்திருக்கிறார். அவரின் காத்திருத்தல், இழந்த அண்ணனை மீட்டுக் கொள்வதற்கு பதில் இறந்த காலத்தை மீள் வருவிக்க விரும்புகிறது.

இன விடுதலைக்காகப் போராடச் சென்ற போராளி மற்றும் மகனின் மரணத்தைப் போர்க்களத்தில் ஒத்திவைக்கப் பிரார்த்தனைகளுடன் இருக்கும் தாய் என இரு முரண்பட்ட உணர்வுகளுக்கும், உயிரியல் இருப்புகளுக்குமான போராட்டமுமே நாவலின் களம். மகனின் இலட்சியவாதத்திற்கும், தாயின் நடைமுறை வாழ்விற்கான எத்தனிப்பு இன்னும் விரிவான பின்னணியில் வைத்து உரையாடப்பட வேண்டியவை. அவற்றைத் தீபச்செல்வன் தாய், மகன், தம்பி, தங்கைகளுக்கான உணர்ச்சிகரமான உறவின் பிணைப்பாக உரையாட முயல்கிறார்.

அதன் பின்னர், எழுதிச் செல்வதெல்லாம் தன் பதின்மங்களின் நம்பிக்கைகளை மட்டுமே. அவையும் போராட்டத்தின் அசுரப் பிரச்சாரங்களை ஒட்டி உருவாகிக் கொண்ட மேம்போக்கான போராட்டம் குறித்த நம்பிக்கைகள். அவை போரை இருமைகளாக மட்டும் நோக்கக் கூடிய நோய்த்தொற்றுடன் கூடிய புரிதலில் இருந்து புடைத்து வரும் நம்பிக்கைகள். போராட்டத்தையொட்டி உருவாக்கப்பட்ட கதையாடல்களையும் நம்பிக்கைகளையும் தான் கண்டடைந்த உண்மைகளாகத் தீபச்செல்வன் எழுதியிருப்பதை படிக்க நமக்கு அலுப்பே வருகிறது. அது போரின் கதைகள் குறித்தான அலுப்பு அல்ல, போராட்டத்தை இன்னும் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது குறித்தான சலிப்பு!

இறந்துபோன தனது அண்ணனுடைய புகைப்படம்/நடுகல்லைத் தேடிச்செல்லும் விநோதன் முடிவில் கண்டடையும் தரிசனம் நமக்கு அயர்ச்சி தருவது. அது முப்பது வருடப் போராட்டத்தின் பொது மனநிலையையொட்டி உருவாக்கிய மேம்போக்கான புரிதல் சார்ந்தது. விநோதன் தன் பதின்மங்களின் சிறுவனாகப் போராட்டத்தைப் புனிதமானதாக- தூயதாக- விடுதலைக்கான ஒற்றையடிப் பாதையாக புரிந்துகொள்வதிலும் தவறுகள் இல்லை. ஆனால் அவன் போர் முடிந்த பின்னரும், பல்கலைக்கழகம் சென்று முதிர்ந்த அனுபவங்கள் கிடைத்த பின்னரும் அதே ‘சிறுவன் மனநிலையுடன்’ போராட்டத்தை அணுகுவதும், போராட்டத்தின் தற்சிதைவுக்கான காரணத்தை இன்னும் எதிர்த்தரப்பிடம் தேடிக்கொண்டிருப்பதும் மேம்போக்கானது.

அந்நோய்த்தொற்றுடன் கூடிய பார்வையாலேயே தீபச்செல்வனால் இறுதிப்போரின் பின் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் போராளி நண்பனைத் துரோகியாக இனம்காட்ட முடிகிறது. உயிரிழந்து போன போராளிகளைப் புனிதமாக அணுகும் அவரால், இறுதிப் போரில் போராளி நண்பனின் உயிரின் பிழைத்திருப்பு நண்பனைத் துரோகியாக்கி விட்டு தன் தோல்வியின் குற்றவுணர்வைத் துடைத்துக் கொள்ள முடிகிறது. குறைந்தபட்சம் நண்பனை பின்-போர்க்காலச் சிதைவுகளின் எச்சமாக உரையாடக் கூடத் தீபச்செல்வன் செல்ல வேண்டிய தூரம் மிகத் தொலைவானது.

பிரேம் (பின்னுரையில்) தீபச்செல்வனின் தன்வரலாறாக நாவலை வாசிக்கிறார். ஆனால் நாவலை, தன்வரலாறாக வாசித்தால் அபத்தமானதும், உருமறைப்புச் செய்யப்பட்ட பின்பாதிகளுடனும் கூடிய பழுதான பிரதியாக இருக்கும். தீபச்செல்வனால் கருந்திரையிட்டு மறைக்கப்பட்ட அவருடைய தன்வரலாற்றின் பின்பகுதி தான் நுண்ணுணர்வுள்ள நல்லபடைப்பாளியாக அவர் உரையாடி இருக்க வேண்டிய நல்ல இலக்கியத்திற்கான சத்தான பகுதி. ஆனால் அவரின் பிரச்சாரப் புடைப்புகளின் நோய்க்கூறு அவற்றை மறைத்துவிட்டு உரையாடவே முற்படும். அவரை உண்மைகளைத் தேடும் படைப்பாளியாகவோ, தான் கண்ட உண்மைகளைத் திரித்துக்கூறும் படைப்பாளியாகவோ ஆக்குவதும் இந்தக் கருந்திரையிட்ட உருமறைப்புத் தான். கருந்திரையிட்டு மறைக்கப்பட்ட இடத்தில் தன்வரலாறு தனது ஆன்ம ஒளியை (அப்படி ஒன்று இருந்தால்) இழந்து கூழாங்கற்கள் ஆகி விடுகின்றன. இனவாதம் எனும் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

தீபச்செல்வனின் அண்ணன் போராட்டம் மீதிருந்த வேட்கையால் போராடச் சென்று, விடுதலைக்காகத் தன்னைப் பலியிட்டுக் கொண்டவர். ஆனால் அவரின் தங்கை தோல்வி தவிர்க்கவே முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்த புலிகளின் நெருக்கடியான இறுதிக்கட்டத்தின் போது வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, அடிப்படைப் பயிற்சிகள் கூட இல்லாமல் போரின் முன்களத்திற்கு அனுப்பப்பட்டவர். இந்த இலட்சியவாத அண்ணன் – வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட தங்கை என்ற இரு எதிரீடுகளையும் கொண்ட போர்க்களத்தை அவர் உரையாடியிருந்தால் தன்வரலாறு / நாவல் தொட்டிருக்கக் கூடிய தளம் வேறு. வீரச் சாவடைந்து நடுகல் நடப்பட்டு, புனிதமாகப்பட்ட அண்ணனின் உயிர்ப்பலியும், கருந்திரையிடப்பட்டு மறைக்கப்பட்ட தங்கையின் பின்பாதியும் கொள்ளும் முரணே ஈழ யுத்தத்தின் கள யதார்த்தம்.

அண்ணனின் போராட்டக்களம் இலட்சியவாதத்தால் உந்தப்பட்ட வீர-தீரங்களும் தியாகங்களும் பலியிடலுமான கதையாடல்கள் நிறைந்திருந்த இலட்சியவாதக் களம். தங்கையின் போராட்டக்களமோ வீழ்ச்சியையும் மட்டற்ற கசப்பையும் நிர்க்கதியையும் வலிந்து திணித்த சாவின் களம். இரு முரண்களங்களின் போதும் இருந்த முன்களத்தின் பெருந்திளைப்பும், பின்-களத்தின் தத்தளிப்புகளும், கையறு நிலையையும் உரையாடாத புனிதமாகப்பட்ட ஒரு பக்க வரலாறை, பிரேம் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்குமான காவிய சோகமாகவும், துன்பியலாகவும் வாசிக்க முயல்கிறார்.

பிரேம் முன்வைக்கும் ஈழம் குறித்த கருத்துகளின் போதாமை இது. அவர் புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்தத் தமிழ்மக்களுக்குமான போராட்டமாக உரையாட விழைகிறார், அழிவை முழு ஈழத்தமிழர்களுக்குமான மரணத்தின் துன்பியலாகச் சட்டகங்கள் இடுகிறார். இலங்கைத் தமிழர்களினுள் இழையோடியிருந்த பன்மையான போராட்டச் சாத்தியங்களைக் கவனமாக விலக்கிவிட்டு புலிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் துன்பியலாக உரையாட விழைவதே அடிப்படையில் கோளாறானது. போராட்டம் ஓர் இனத்தின் விடுதலைக்கானதாக ஆரம்பித்திருந்தாலும் அது வெகுவிரைவிலேயே தன் எல்லைகளைக் குறுக்கிக் கொண்டு விட்டது. முடிவில் எவ்வளவு உயிர்களைப் பலியிட்டும் பிரபாகரனை மட்டும் காப்பாற்றினால் போதும் என்று தன் கழுத்தில் சுருக்கிட்டு, ஒரு அமைப்பின் அதிகாரத்திற்கான போராட்டமாகச் சிறுத்துப் போனதை பிரேம் அறியாதவர் இல்லை.

பிரேம் மறைக்கப்பட்ட பின்பாதியுடன் கூடிய தன்வரலாற்றை மொத்தத் தமிழர்களின் விடுதலைக்கான சர்வரோக நிவாரணியாக உரையாட விழைந்தால் அவரிற்கு ஹினெர்சலீம்-ன் ‘அப்பாவின் துப்பாக்கி’ (தமிழில்: சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்) என்ற தன்வரலாற்றைப் பரிந்துரைக்க முடியும். தோற்றுப்போன, ஒரே இரவில் தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த குர்திஸ்தான் அகதி ஹினெர்சலீமின் கதை. ஹினெர்சலீமிற்கு தளபதி பர்ஸானின் அந்தரங்கத் தொடர்பாளராக இருந்த அவனுடைய அப்பாவின், விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பழைய புருனே துப்பாக்கி பெருமையின் குறியீடோ, துன்பியலின் சட்டகமோ அல்ல. அவன் தன்னை மீட்டுக் கொள்வதற்கும், தொகுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடு மட்டுமே. அகதியாக வெளியேறும் நாளில், தான் நேசித்த குர்திஸ்தான் பக்கமாகத் திரும்பி நின்று உரக்கச் சொல்கிறான். ‘ஆசத் ஆகிய நான் இன்னமும் சின்னப் பையன் இல்லை’. ஆனால் ப்ரேமும் தீபச்செல்வனும் ஈழப் போர்க்களத்தில் சின்னப் பையன்களாகத் தான் இருக்க விழைகிறார்கள்.

நடுகல் நாவல், அதன் அரசியல் உள்ளடக்கம் தவிர்த்து ஓர் இலக்கியப் பிரதியாக பயணப்பட வேண்டிய ஆழம் இன்னும் அதிகம். அதற்கு நாவல் குறித்த ஓர்மையும், நாவல் நெடுங்கதை இல்லை என்ற தெளிவும் வேண்டும். நாவலின் சாரத்தைத் தோரயமாகத் தொகுத்தாலும் அது படைப்பாளியின் விமர்சனப் பார்வையூடாகக் திரளும் முரண்களினூடே நகர்ந்து செல்கிறது. போர்க்களத்தில் முயங்கிக் கிடந்த ஊடும்பாவுமான கதைவெளியும், பல குரல்களிற்கான களமும், விவாதித்துச் செல்ல முடியுமான மொழியும் இல்லாத நெடுங்கதை போன்ற ஈழப்போர்க்கால நாவல்களின் யதார்த்தவாதச் சொல்முறை, ஒரு கட்டத்தின் பின்னர் நம்பகமான புனைவின் சாத்தியத்தை இழந்து போராட்டத்தின் குறைசாட்சியங்களாக இருந்தால் மட்டும் போதும் என்று அடம்பிடிக்க முனைகின்றன. நமக்குத் தேவை குறைசாட்சியங்கள் அல்ல, சாட்சியங்களில் இருந்து உருவாகும் நல்ல புனைவுகள். புனைவுகளில் செய்ய வேண்டியது நல்ல படைப்பூக்கமான தேய்வழக்குகளை விலக்கிய மொழிதல்களை, வாசிப்பவரின் நிகர் வாழ்வாக மடைமாற்றி விடக்கூடிய படைப்புகளை.

***

பின்னிணைப்பு – தீபச்செல்வன் கவிதை

அபிராஜூன் தங்கை லூர்த்தம்மாவின் கண்கள்

01

லூர்த்தம்மாவின் கண்கள் பின்னிரவுகளில்
அலைந்து கொண்டிருந்தன.
அந்தத் துவக்கு மிகப்பாரமாக இருந்தது
என்கிறாள்
அபிராஜின் தங்கை லூர்த்தம்மா.
அவள் இழுத்துச் செல்லப்பட்ட போது
அபிராஜ் புதர் ஒன்றுக்குள் ஒளிந்திருந்தான்.
மீளவும் அவள் ஓடி வந்து
சருகுகளிற்குள் ஒளிந்து கொண்டாள்.
அப்பொழுது அவள் பார்த்துக் கொண்டிருக்க
அபிராஜ் இழுத்துச் செல்லப்பட்டான்.
கனவு ஒழுகி சருகுகள் ஈரமாக
லூர்தம்மா அழுது கொண்டேயிருந்தாள்.
அபிராஜ் துவக்கின் சூட்டில்
வாடி விட
லூர்த்தம்மாவை தேடிக் கொண்டிருந்தான்.
களங்கள் எங்கும் குருதி வடிந்து கொண்டிருந்தது.

இனந்தெரியாத கால்களில் மோதுகிற போது
அபிராஜை லூர்த்தம்மா கண்டாள்.
குழந்தைகள் சரணடைந்து துவக்குகளை கையளித்தனர்.

02

அவள் ஒதுங்கும் இடங்களில்
துவக்குகள் விழித்துக் கொண்டிருக்கின்றன.
லூர்த்தம்மாவுடன்
விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுமிகளின் கைகளில் பாரமான இலக்கங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன.

மீள மீள அவள்
சரணடைந்து கொண்டிருக்கிறாள்.
அபிராஜிடம் துப்பாக்கி கொடுக்கப்பட்டு
பரிசோதிக்கப்படுகிறது.
வந்திறங்கும் சிறுவர்களுக்காக
தயாரிக்கப்படும் இலக்கங்களை
அபிராஜ் எண்ணுகிறான்.
அபிராஜின் கால்கள் மடங்கிப் போகின்றன.

இப்போது லூர்த்தம்மாவின் கண்களை
இந்தத் துவக்குகள் காவலிட்டுக் கொண்டிருக்கின்றன.
பொம்மைக் கடைகளில்
துவக்குகள் தொங்கிக் கொண்டிருக்கிறதாய் வருகிற
கனவுகள் இருவரையும் இரவுகளில் அலைத்தன.

அபிராஜ் மீள மீள பரிசோதிக்கப்பட்டான்.
லூர்த்தம்மாவின் கண்களில்
சமரிரவுகளின் துப்பாக்கிகள் குத்திக் கொண்டிருந்தன.
துவக்குகள் லூர்த்தம்மாவையும்
அபிராஜையும் துரத்திக் கொண்டேயிருக்கின்றன.

லூர்த்தம்மாவின் குருதி கசிந்து வாடுகின்ற கண்கள்
அபிராஜின் முன் அலைந்து கொண்டிருக்கின்றன.

********

நடுகல் (நாவல்) – தீபச்செல்வன்

டிஸ்கவரி புக் பேலஸ்

விலை: ரூ.180