பல தரப்புகள் சினிமாவிற்கு. அதற்கு எல்லைகள் கிடையாது. எந்த சினிமாக் கலைஞனும் தனது மன மொழியின் வழியே, தான் சொல்லக் கூடிய உண்மைகளை அடைவது தான் எப்போதும் நடக்கிறது. மற்ற வகையினர் இதில் சேர்த்தியில்லை. நான்கு புறத்தில் இருந்து நாற்பது பேர் வைத்து நசுக்கின பழங்களில் இருந்து பஞ்சாமிர்தம் செய்வது ஒரு மரபான தொழிலேயன்றி அதை சினிமா என்று குறிப்பிடக்கூடாது. அப்புறம் நாம் குறிப்பிடுகிற இந்த மன மொழிகளில் பேதமுண்டு. அவற்றில் படிப்பும் அனுபவமும் சேர்க்கிற ருசிக்கு அப்பால், யாரோ கொஞ்சம் பேர் தனித்துவம் கொண்டு வாழ்வின் கோணங்களைத் தேர்ந்தெடுத்து அதற்குள் நின்று புதிய கதைகள் சொல்கிறார்கள்.
முற்றிலும் அது நமக்குத் தெரிந்ததாக இருக்கிற உருவகங்களில் நகரும் போது நாம் அதை எதிரொலிக்கிறோம். அதை ஆமோதிக்கிறோம். அதை அங்கீகரிக்கிறோம். அதை அனுபவிக்கத் தலைப்படுகிறோம். க்ரீஸின் இயக்குனரான Yorgos Lanthimos-இன் திரைப்படங்கள் சிறிய வினோத புனைவுகளின் உள்ளிருந்து கொண்டு வாழ்வின் புதிர்களுக்கு அருகே போகக் கூடியவை. வெளிச்சம் பாய்ச்சி நமது மனடைகளுக்குள் நெளியும் புழுக்களின் பிரம்மாண்டத்தைக் காட்டக் கூடியவை.
நான் முதலில் பார்த்தது Dogtooth (2009) என்று நினைவு. The Favourite (2018) என்கிற அவரது தற்போதைய படத்தைப் பார்த்த வரையிலும் கூட இயக்குநரின் பெயரை மனம் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. லன்திமோஸ் குறித்து கட்டுரை எழுத முடியுமா என்று கோகுல் கேட்ட போது, ‘நீங்கள் சொன்னவர் யார்?’ என்று கேட்டேன். பல டேட்டாக்களை நிர்வகிப்பதில் உள்ள அவஸ்தை. ஆனால் ஒரு விஷயம், அவரது பெயரை மறந்திருக்கலாம். அவரது படங்களை மறந்து விட முடியாது. சொன்ன மாத்திரத்தில் அல்லது எப்போது நினைக்கும் போதும் வயிற்றில் திகில் போல ஒன்று கனலும். ஒரு முறை ஒரு கத்தரிக்கோலை கவனமாக சரியான நேர்க்கோட்டில் பிடித்து அதை கண்ணுக்குள் பாய்ச்சிக் கொள்ளுவது வரும் அல்லது ஒரே அச்சில் வார்த்து பொருட்கள் அடுக்குவதைப் போல மிகுந்த சம்பிரதாயத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுவது வரும்.
அதெல்லாம் எதற்கு, அவருடைய ஏதோ ஒரு கதாபாத்திரம் ஓர் ஆழமான புன்னகையை நமக்குள் கத்தி இறக்குவதான தோரணையில் புன்முறுவலிக்கும் ஒரு குட்டித் தருணம் தோன்றி அதிரடித்து மறையும். அவர் காட்சிகளின் அரசர். அசையாமல் உறைந்திருக்கிற திரையில் இக்கணம் நிகழப் போகிற சாத்தியக் கூறுகளில் நமது மனம் சஞ்சரித்து அடித்துக் கொள்வதை நம்பவே முடியாது. அதே நேரம் அவை மலினமான உத்திகள் அல்ல. அவர் சொல்லிக் கொண்டே வந்த வாழ்வின் புதிர்கள், அவை அவிழ்ந்து தன்னைக் காட்சிக்கு வைக்கும்போது அலட்சியம் கொண்டு அங்கிருந்து நகர ஆகாது.
அவரது முக்கியமான எல்லா படங்களிலுமே மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட பகுதிகள் உண்டு. அது மிகுந்த வதையுடன் திமிறுகின்ற திரைக்கதையின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் நம்மால் சிரித்து விட முடியாது ஒருகணம் அது நம்மைப் போட்டு சாத்துவதாகக் கூட இருக்கும். Alps (2011) படத்தில் ஒரு முதிர்ந்த பெண், எப்போதும் வரவேற்றிருந்து பாசம் பொழிந்திருந்த அப்பாவின் காதலியுடன் நைட் கிளப்பில் நடனமாடத் துவங்குகிற காட்சி ஒன்றிருக்கிறது. மனம் சூடேறிக் கரிந்து உலர்ந்த ஒரு மனம் தனது கண்ணியத்தை அவிழ்த்துக் கொண்டு விட, பித்துநிலை வட்டமடிக்கிற அக்காட்சி, நாம் நமது கட்டுப்பாடுகளை ஐயம் கொள்ள வேண்டி வரும். மனிதனுக்கு எந்த சந்தோஷத்தின் எந்தத் துயரின் அடிப்பாகத்தில் கழன்று கொள்ள இருக்கிறதோ அது?
எல்லாப் படங்களிலும் அதிகாரம் இருக்கிறது. அது உச்சம் கொள்ளுவது, வீழ்ச்சியடைவது பல முறையும் வருகிறது.
ஓரளவிற்கு அவரது புதிர்களில் இருந்து வெளிப்பட்டு நேரடியான கதை சொன்ன படம் The Favourite. ஆயின் அது உள்ளே உள்ளே என்று ஆழங்களில் சென்று புலி வால் பிடித்த அதி மனிதர்களின் துயரார்ந்த தனிமையைச் சொல்லுகிறது. இன்று நீ, நாளை நான் என்று அதிகாரம் அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருப்பதை அறியாமல் சூதும் சதியும் செய்து முன்னேறி அதன் வாயில் தலைகளைக் கொடுப்போரை நிதானமாகப் பரிசீலிக்கிறது. என்றால், The Lobster-ம் Dogtooth-ம் அதிலிருந்து வெளியேறத் திமிறுவோரைக் குறிப்பிடுகிறது.
ஒரு சமூகம் அல்லது அமைப்பு எத்தனையோ விதங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை அன்பும் நீதியுமே கூட அதன் ஆதாரமாயிருந்தால் கூட அதன் உண்மைகளும் பொய்களும் நிலைக்காது. அதன் நோக்கங்களும் வழிமுறைகளும் ஒரு பொருட்டே அல்ல. அது என்றோ ஒருநாள் சிதறடிக்கப்படும். அதன் ஓட்டைகளை மேலும் இடித்துத் தள்ளிக் கொண்டு மிக எளியவர்களுமே கூட தீர்வற்ற அத்துவான வெளியில் சுதந்திரம் சுவாசிப்பார்கள். நமக்குத் தெரியும், எத்தனையோ சர்வாதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பேரரசுகள் சரிந்திருக்கின்றன. பலரும் போற்றிக் கொண்டாடி பீடத்தின் மீது ஏற்றி வைத்திருந்த தத்துவங்கள் மண்ணுக்குள் மண்ணாய் போயிருக்கிறது. இதில் இருக்கிற உளவியல் மிக சாதாரணமானது, தானே? மனிதனின் உண்மையான மன விரிவுகளுக்கு முன்னால் நிற்கக் கூடிய அளவிற்கு எந்த நிறுவனங்களுக்கும் ஆத்மா கிடையாது.
நிலைக்கண்ணாடியில் பார்த்து நின்று கொண்டு ஒருத்தி சுத்தியலால் அடித்து தனது நாய்ப்பல்லை பெயர்த்தெடுத்து போட்டு விட்டு ரத்தக் களரியுடன் காரில் ஒளிந்து வெளியுலகை எட்டிவிடுவது ஒரு கதையின் பொருத்தமான காட்சி மட்டுமல்ல. அது மனிதனின் அடிப்படையை எடுத்து வைக்கிற இடம். எவ்வளவு கட்டுப்பாடு, கட்டுக்கதைகள், புனிதம், தண்டனைகள்? மீறலுக்கான சமர்களில் அனைத்தும் பொருளிழந்து விடுகின்றன. நான் இப்படி சொல்லிப் போவதில் இதெல்லாம் இயக்குனரின் கொள்கை முடிவாகக் கொண்டு விடக் கூடாது. இந்த விடுதலைக்கான யத்தனம் வெகு அபத்தமாக முடிவதையும் அவர் இன்னொரு பக்கத்தில் கூறுகிறார். நன்மையென்றோ, தீமையென்றோ சார்புகள் கிடையாது. கிடைப்பதெல்லாம் தோராயமான ஒரு சில உண்மைகள் மட்டுமே.
Yorgos Lanthimos படங்களில் அசாத்தியமான இடைவெளிகள் இருக்கின்றன. தொழில் நுட்பத்தைக் கையாண்டு அவர் தனது படங்களில் பல்வேறு வர்ணங்கள் உடைய உணர்வுகளை வெற்றி கொள்ள வைக்கிறார். இசை ஒரு நேரத்தில் கதையைத் தொகுப்பதாகவும், ஒரு நேரத்தில் சிதறடிப்பதாகவும் உள்ள சமநிலையை வியந்து பார்த்தேன். அவரது நடிகர் நடிகைகள் ஆங்காங்கே வந்து இருந்து பொருந்தி மிளிர்வதை சொல்ல இந்தக் கட்டுரை போதாது. எழுதினதும், அதை எடுத்து நடித்தவர்களுமாக கதையின் இடுக்கு வழிகளில் உள்ள நுட்பங்கள் மிகப் பெரிய சாலைகளை வந்தடைகிறது. அதாவது திரைக்கதையால் கதைப்போக்கு திரளுகின்றன என்றும் சொல்லலாம். படத்தின் மெளனமாக, சத்தங்களாக, திணறல்களாக, திருப்பங்களாக நாம் காணும் எதுவுமே எழுதப்பட்ட திரைக்கதையின் உளவியல் அணுகல்கள் தான். படங்களில் அவரே எழுதியிருப்பினும், வேறு சிலரோடு சேர்ந்து எழுதியிருப்பினும், முற்றிலும் வேறு ஒருவரால் எழுதப்பட்டிருப்பினும் இயக்குநரின் ஆளுமையோடு தொடர்பு கொண்டிருப்பதை கவனிக்க முடிகிறது.
எந்தப் படத்திலும் மனிதர்கள் தம்மில் சச்சரவு வரக்கூடும். அவர்கள் ஆயுதங்களால் அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும் முடியும். நான் உன்னை சுடப் போகிறேன் என்பது மரபு வசனம். நன்றாக நின்று கொண்டாயா என்று கேட்டு நன்றி சொல்லி சுட்டுக் கொல்வது என்ற ஒன்று இருக்கிறது. அப்படியாக சுழலுகிற ஒரு திரைக்கதையின் குணநலனை நாம் வியக்கும் இடம் அதுதான். எனக்கு இதில் சந்தேகமே இல்லை, இயக்குநரின் மனம் போகிற போக்கு தான் அவருடைய படங்கள். நான் ஒரு பெரிய கதையின் பல அத்தியாயங்கள் போல அவருடைய படங்கள் மொத்தத்தையும் பார்க்கிறேன். அதிலும் படம் நெடுக வரக்கூடிய கட்டுபடுத்தப்பட்ட முரட்டுத்தனம் மற்றும் ஈவிரக்கமற்ற எள்ளல் இருக்கிறதே, அதை நாம் தனியாக உணர்ந்து கொண்டே வரமுடியும். புல் தரையில் இரண்டு குட்டி மஞ்சள் பூக்களைக் கண்டு வீரிட்டு சோம்பிகள் பூத்திருக்கின்றன என்று அம்மாவை அழைக்கிறான் இளைஞன் ஒருவன். நமக்கு சிரிப்பு வந்திருக்க வேண்டும், ஆனால் பீதி எழுகிறது. உடலுறவு அனுபவங்களை எல்லாம் பெற்று விட்ட ஒரு பெண் புஸ்ஸி என்றால் என்னவென்று கேட்டதற்கு அவளது அம்மா சொல்லும் பதிலும் படத்தில் இருக்கிறது. சிரிக்க மாட்டீர்கள்.
The Killing of a Sacred Deer (2017) தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். சற்றுமே எதிர்பாராத ஒரு அமானுஷ்ய நடையில் ஒரு விலக்க முடியாத விபரீதம் சுற்றி சூழ்ந்து முற்றுகையிடுவது வரும். ஒரு இழப்பைப் பற்றின கதை. உறுதியாக ஒரு பழிக்குப் பழி கதையும் தான். ஆனால் தனது பிரியமான எதிரிக்கு வலியைப் பரிசளிப்பது என்கிற திட்டம் இருக்கிறது இல்லையா, அந்த மாதிரி மாற்று யோசனைகள் எல்லா படத்திலும் இருக்கின்றன. பல முட்டுசந்துகளில் நாமே மாட்டிக் கொண்டது போல மூச்சுத்திணறல்களும் உண்டாகிறது.
இவரது பல படங்களும் பல உலகத் திரைப்பட விழாக்களில் போட்டி போட்டிருக்கின்றன. பரிசுகள் வென்றிருக்கிறார்கள். The Favourite அகாடமி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல பரிசுகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்று சில வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். விருதுகள் பற்றி எல்லாம் பெரிதும் அலட்டிக் கொள்ளாமலே இப்படத்தின் இயக்குநர் எல்லா பெருமைகளையும் அடைய வேண்டியவர் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பின்நவீனத்துவ காலத்தில் நம்மை சந்திக்கிற அவருடைய மனிதர்கள் அடிக்கோடிட்டு கவனிக்கப்பட வேண்டியவர்கள். வயதான, ஒரு சுயநலம் மிகுந்த தகப்பனின் கவனிப்பு தவறும்போது மனம் உடைகிற பெண் தனது தனிமையை எதிர்கொள்ள செய்யும் முஸ்தீபுகளில் இருந்து நம்மால் இந்நூற்றாண்டின் தனிமையைக் கூட கற்பனை செய்து விட முடியும். அதைப் போலவே சிறிதும் அலட்டலின்றி அவரது அலட்சியமான சிறிய தீற்றல்களில் பெரிய கனவுகள் வெறும் நீர்க்குமிழிகளாக பறப்பதையும் பார்த்து விட முடியும்.
காலம் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பார்கள். அப்படித்தானா என்பது தெரியவில்லை. சினிமாவை மாற்றிச் சொல்கிறவர்கள் வருகிறார்கள். நாம் எங்கே இருந்து அவர்கள் சொல்வதைக் கவனிக்கிறோம் என்பது முக்கியம்.
ஒரு அடி எடுத்து முன்னால் வைப்பதற்கு அது உதவும்.