சக்திதேவன் – சமஸ்கிருத மூலம் : சோமதேவர் / தமிழாக்கம் : டாக்டர் வே. ராகவன்

0 comment

(‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி‘ என்று சி.என். குப்புசாமி முதலியார் 1911-ல் எழுதிப் பிரசித்தமான நாவலுக்கும் அதை அடிப்படையாகக் கொண்டு பின்பு 1947-ல் வந்த திரைப்படத்துக்கும் மூலமாய் அமைந்த கதை)

மாநிலத்திற்கே அணியான வர்த்தமானம் என்ற நகரத்தில் பகைவரை வாட்டுபவனான பரோபகாரி என்ற அரசன் இருந்தான். உயர்ந்த தன்மையனான அவ்வரசனுக்கு, மேகத்தின் மின்னலைப் போன்றவளும் ஆனால் மின்னலின் நிலையின்மை என்ற குறையில்லாதவளுமான, கனகப்பிரபை என்ற பட்டமகிஷி இருந்தாள். அவ்வரசனுக்கு அந்த கனகப்பிரபையிடம், மகாலக்ஷ்மிக்குத் தன் அழகிலுள்ள கர்வத்தை அடக்குவதற்கென்றே பிரமனால் உண்டாக்கப்பட்டவளோ என்று தோன்றுமாறு, பெண் ஒருத்தி நாளடைவில் பிறந்தாள். உலகின் கண்ணுக்கு நிலவு போலிருந்த அக்கன்னிகை, அவளுடைய தாயின் பெயரையே தழுவி, கனகரேகை என்று பெயரிடப்பட்டு, முறையே வளர்ந்துவந்தாள். அவள் யௌவனப்பருவம் அடைந்திருந்த போது ஒருநாள், தனிமையில் அரசன் தன் மகிஷி கனகப்பிரபையிடம் சொன்னான்:

‘தேவி! இக்கனகரேகைக்கு மணமாகவேண்டுமே என்ற என் கவலை வளர்வதுபோல, தானும் வளர்ந்துவரும் கனகரேகை என் மனத்திற்குத் துன்பத்தை விளைவிக்கிறாள். தனக்குரிய ஸ்தாபனத்தை அடையாத குலஸ்திரீ, ஸ்வர ஸ்தானத்திலிருந்து பிசகிய இசை போல் கேட்ட மாத்திரத்திலேயே பிறருக்குக் காது வலியைக் கொடுக்கிறாள். தெரியாத்தனத்தால் தகுதியற்ற இடத்தில் வழங்கப் பெற்ற கல்விபோல் கன்னியும், புகழைக்கெடுத்து அறத்தையழித்து, தீராத் துயரையே கொடுப்பாள். ஆகையால் தேவி, எந்த அரசனுக்கு இவளைக் கொடுக்கலாம்? இவளுக்கு நிகரானவன் யார்? – என்ற கவலை எனக்கு அதிகரித்துவிட்டது.’

அதைக் கேட்டு ராணி கனகப்பிரபை சிரித்துக்கொண்டு சொன்னாள்: ‘நீரோ இப்படிச் சொல்கிறீர்? குழந்தையோ கல்யாணமே வேண்டாமென்று சொல்லுகிறாள். விளையாட்டுப் பொம்மைகள் செய்துகொண்டிருக்கும் அவளிடம், நானும் சற்று முன்தான், “குழந்தாய்! உன் கல்யாணத்தை நான் எப்போது பார்க்கப்போகிறேனோ?” என்று சொன்னேன். அதைக் கேட்டதும் அவள், “வேண்டாம், வேண்டாம் அம்மா! அப்படியொன்றும் செய்துவிடாதே! ஒருவனிடமும் என்னைக் கொடுக்காதே! என்னுடைய பிரிவு உங்களுக்கு விதிக்கப்படவில்லை. அழகாய்க் கன்னிகையாகவே இருந்துவிடுகிறேன். இல்லையெனில், என்னை இறந்தவளாகவே கருதுங்கள். அதற்குக் காரணம் ஒன்று இருக்கிறது,” என்று பதிலளித்தாள். இப்படி அவள் சொன்னதால் மனம் நொந்தவளாய் நான் உம்மிடம் வந்தேன். ஆகையால் மணம் வேண்டாம் என்று தடுக்கும் பெண்ணுக்கு வரனைப் பற்றி சிந்தை செய்வானேன்?’ என்று.

இப்படி ராணியிடமிருந்து விஷயத்தைக் கேட்ட அரசன் மனக் கலக்கமடைந்து, கன்னிகா அந்தப்புரம் சென்று தன் பெண்ணிடம் சொன்னான்: ‘குழந்தாய், கணவன் கிட்ட வேண்டும் என்று தேவ கன்னிகைகளும் அசுர கன்னிகைகளும் தவங்கிடந்து வேண்டிக்கொள்ள, நீ ஏன் அதை வேண்டாமென்று தடுக்கிறாய்?’ என்று.

தந்தையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ராஜகுமாரி கனக ரேகை, தரையில் புதைந்த கண்களோடு பேசினாள்: ‘அப்பா, எனக்கு இப்பொழுது மணத்தில் மனமில்லை. உமக்குத்தான் அதனால் ஆகவேண்டியதென்ன? உமக்கேன் அதிக பிடிவாதம்?’ என்று.

பெண் இப்படிச் சொன்னதும் சிறந்த புத்திமானான பரோபகாரி மறுபடியும் சொன்னான்: ‘பாவம் ஒழிவதற்கு கன்னிகா தானத்தைப் போன்றது வேறெது? மேலும், தன் உற்றாரின் ஆதீனத்திலேயே இருந்துவிடும் கன்னிக்கு சுதந்திரம் ஏது? கன்னிகை என்பவள் பிறந்ததுமே மற்றொருவனுக்காகவே பாதுகாக்கப்படுபவள், குழந்தைப்பருவம் தாண்டினால், பெண்ணிற்குக் கணவனின் அகமில்லாமல் தகப்பன் அகம் எவ்வாறு ஏற்கும்? பருவம் வந்ததும் கணவனை அடைவதற்கான உபகாரத்தை உறவினர் ஒரு பெண்ணிக்கு செய்யாவிடில், அவ்வுறவினர் கீழ்க் கதியை அடைவர். கணவனை வேண்டாத வயதுவந்த பெண் பாவியாகிறாள்.’ இப்படி தகப்பன் பேச, தன் மனத்தினுள் புதைந்திருந்த வார்த்தையை அக்கணம் கனகரேகை வெளியிட்டாள்.

‘அப்பா, அப்படியானால் எந்த செயலாளி – க்ஷத்திரிய குமாரனோ பிராமணகுமாரனோ – கனகபுரியென்ற நகரைக் கண்டிருக்கிறானோ, அவனுக்கு நீர் என்னைக் கொடுக்கவேண்டும். அவனே என் கணவன் ஆவான்! வேறு வகையில் செய்து வீணாய் என்னைக் கெடுக்க வேண்டாம்!’ என்று. இப்படிப் பெண் தெரிவிக்க, அரசன் யோசித்தான்: ‘நல்ல வேளையாய் மணத்திற்கு இடம் கொடுத்தாளே! திண்ணமாய் இவள், ஏதோ காரணம் பற்றி என் அகத்தில் தோன்றியிருக்கும் தேவ ஸ்திரீ! அப்படியில்லாவிடில் சிறு பெண்ணாயிருக்கும் இவளுக்கு இவ்வளவு அறிவு எப்படி இருக்கும்?’

பிறகு, ‘அப்படியே ஆகட்டும்,’ என்று பெண்ணிடம் சொல்லி விட்டு, அவ்விடம் விட்டு எழுந்து, அன்றாடம் தான் செய்ய வேண்டிய காரியங்களை அரசன் செய்து முடித்தான்.

மறுநாள் தன் ஆஸ்தானத்திற்கு வந்து அமர்ந்து, தன் பக்கத்தில் உள்ளவரிடம், ‘உங்களில் யாராவது கனகபுரி என்ற நகரத்தைப் பார்த்துண்டா? எவன் அந்நகரத்தைப் பார்த்திருக்கிறானோ – அவன் க்ஷத்திரியனோ பிராமணனோ – அவனுக்கு என் பெண் கனகரேகையையும் என் ராஜ்யத்தின் இளவரசுப் பட்டத்தையும் அளிப்பேன்,’ என்று சொன்னான். ‘அரசே, அதைக் கேட்டதே இல்லையே?நாங்கள் எப்படிப் பார்த்திருக்க முடியும்?’ என்று ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கியவண்ணம் அங்கிருந்த போர் வீரர்கள் பதிலளித்தார்கள். அதன்மேல் வாயிற்காப்போனைக் கூவிய அரசன், ‘இவ்வூர் முழுதும் தமுக்கடிக்கச் செய்! எவனாலேயாவது கனகபுரி என்ற நகரம் பார்க்கப்பட்டிருக்கிறதா? என்று தெரிந்து வா!’ எனக் கட்டளையிட்டான். வாயிற்காப்போன் ‘அப்படியே செய்கிறேன்!’ என்று சொல்லி வெளியே போனான். வெளிவந்து தொண்டர்களை ஏவி, மக்களின் காதுகளுக்குக் குதூகலத்தைக் கொடுக்கும் பறையை அடித்துவரச் செய்தான். ‘பிராமணனோ க்ஷத்திரியகுமாரனோ, எவன் கனகபுரி என்ற நகரத்தைக் கண்டிருக்கிறனோ, அவன் அதைத் தெரிவித்தானானால், அவனுக்கு அரசன் தன் மகளையும் யௌவராஜ்யத்தையும் அளிக்கிறான்,’ என்று.

இங்குமங்கும் நகரத்தில் தமுக்கடிக்கப்பட்டு, எல்லோருக்கும் வியப்பளிக்கும் விளம்பரம் அறிவிக்கப்பட்டது. ‘இந்த நகரத்தில் கனகபுரி என்ற பெயர் பறையடிக்கப்படுகிறதே! இது நம்மில் வயது முதிர்ந்தோராலும் ஒருபோதும் பார்க்கப் படாததும் கேட்கப்படாததுமாய் இருக்கிறதே? இது எந்த ஊர்?’ என்று பறையறிக்கையைக்கேட்டு நகரத்தினர் பேசிக் கொண்டனரே ஒழிய, ஒருவராவது அதை நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லவில்லை. அவர்களுக்குள், அந்நகரில் வாழ்ந்துவந்த பலதேவன் என்றவனுடைய மகனான சக்திதேவன் என்ற பிராமணன், அப்பறையறிக்கையைக் கேட்டான். சக்திதேவன் யுவன். இன்பத்தில் ஈடுபட்டவன். அப்பொழுதுதான் சூதாடிப் பணமெல்லாவற்றையும் தொலைத்தவன்.  அரசகுமாரியைக் கொடுக்கிறார்களாம் என்று கேட்டதும், ஆவல்கொண்டமனத்துடன் யோசித்தான் சக்தி தேவன். ‘சூதினால் பணமெல்லாம் தொலைத்த எனக்கு, இப்பொழுது தகப்பனின் அகமும் நுழைவதற்கில்லை; தாசியின் அகமும் நுழைவதற்கில்லை. ஆகையால் கதியற்றிருக்கும் நான் பறை அடிப்பவர்களிடம், கனகபுரி நகரத்தை நான்  கண்டிருக்கிறேன் என்று பொய்யைத்தான் சொல்லிவிடுகிறேனே? எனக்குக் கனகபுரி தெரியாது என்று யார் கண்டுபிடித்துவிடுவார்கள்? அந்த நகரத்தை யார்தான் எப்பொழுதுதான் கண்டிருக்கிறார்கள்? இப்படிச் செய்வதால் ஒருவேளை ராஜ புத்திரியின் சேர்க்கை எனக்குக் கிடைக்கலாம்’ என்று எண்ணி, ராஜபடர்களை அடைந்து, ‘அந்த நகரத்தை நான் பார்த்திருக்கிறேன்,’ என்று சக்திதேவன் பொய்யாய்த் தெரிவித்தான். ‘நல்லவேளை! அப்படியானால் – நம் தலைவர் –  அரண்மனை துவாரபாலகனிடம் வா!’ என்று அந்தப் பறை அடிப்பவர்கள் சொல்ல, அக்கணமே அவருடன் சக்திதேவன் அரண்மனை துவாரபாலகனை அடைந்தான்.

அவனிடமும் அப்படியே கனகபுரியைத் தான் பார்த்திருப்பதாகப் பொய் சொன்னான். துவாரபாலகன் சக்திதேவனை கௌரவித்து, அரசனிடம் அழைத்துப் போனான். அரசன் முன்னிலையிலுங்கூட அவன் எந்தவிதப் புத்தித்தடுமாற்றமும் இன்றி அப்படியே சொன்னான். சூதிலடிபட்ட போக்கிரிக்கு எதுதான் சொல்ல முடியாது? அரசனும் இவன் கண்டிருக்கிறானோ என்று நிச்சயமாய்த் தெரிந்துகொள்வதற்காக, தன் பெண் கனகரேகையிடம் அனுப்பினான். துவாரபாலகனிடம் இருந்து விஷயத்தைத் தெரிந்துகொண்ட கனகரேகை, தன்னிடம் வந்திருக்கும் சக்திதேவனை, ‘கனகபுரியை நீ பார்த்ததுண்டா?’ என்று கேட்டாள். ‘ஆம், நாம் கல்வி கற்குமாறு பூமியைச் சுற்றி வரும்போது அந்நகரைக் கண்டதுண்டு,’ என்று சக்திதேவன் பதிலளித்தான்.‘எவ்வழியாய் நீ அங்கு சென்றாய்?கனகபுரி எப்படியிருக்கும்?’ என்று ராஜகுமாரி மேலும் வினவ, பிராமணன் சொன்னான். ‘இங்கிருந்து ஹரபுரம் சென்றேன். அங்கிருந்து முறையே காசியை அடைந்தேன். சில நாட்களில் காசியிலிருந்து பௌட்ரவர்த்தனம் என்ற நகரை அடைந்தேன். அங்கிருந்து கனகபுரியை அடைந்தேன். சிமிட்டாத இமை கொண்ட தேவர்கள் போன்றவர்களால் கண்டுகளிக்கப்படும் இந்திரநகரம்போல், புண்ணியாத்மாக்களின் இன்பவுலகாய் இருந்தது கனகபுரி. அங்கே படிப்பு முடிந்ததும், நாளடைவில் இங்கு நான் திரும்பி வந்தேன். அங்கு சென்ற வழியும் கனகபுரி இருக்கும் தன்மையும் இதுதான்,’ என்று. இப்படிப் போக்கிரியான பிராமணன் சக்திதேவன் சொற்களை ஜோடித்ததும் சிரித்துக்கொண்டு ராஜகுமாரி உரைத்தாள். ‘மஹாப் பிராமணரே! ஆகா! உண்மையில் நீர் கனகபுரியைக் கண்டவரே! நீர் சென்ற வழியை மேலும் ஒருமுறை சொல்லும்!’ என்று அரசகுமாரி கேட்க, சக்திதேவன் மறுபடியும் தைரியமாகப் பேச்சை ஆரம்பித்ததும், தன் சேடிகளைக் கொண்டு ராஜகுமாரி சக்திதேவனை வெளியே அனுப்பிவிட்டாள்.

அவனை அப்புறப்படுத்திவிட்டு, உடனே தகப்பனிடம் போனாள். தகப்பன், ‘இந்தப் பிராமணன் சொன்னது உண்மையா?’ என்று கேட்டான். ‘நீ அரசனாயிருந்து, விசாரணை செய்யாமல் காரியம் செய்கிறாயே?போக்கிரிகள் வெகுளியை ஏமாற்றிவிடுகிறார்கள் என்று தெரியாதா? பொய்சொல்லி என்னை அந்தப் பிராமணன்  ஏமாற்ற எண்ணுகிறான். அப்பொய்யோன் கனகபுரியை கண்டதில்லை. இவ்வுலகில் வஞ்சகர் பலவித ஏமாற்றங்களைச் செய்வார். இப்படிப் பலவிதமாகக் கயிறுகள் திரித்து வலைகள் பின்னிச் செம்படவர்கள் வலையை வீசிப் பிழைப்பதுபோல, தம் பேச்சு வலைகளைப் பரப்பிப் போக்கிரிகள் இப்புவியில் ஏமாற்றுத் தொழிலைக் கைக்கொண்டு பிழைத்து வருகிறார்கள். ஆகையால் அப்பா, கனகபுரியைப் பார்த்திருப்பது போல பொய்யாகப் பேசி, உங்களை ஏமாற்றி, என்னை இவன் அடைய விரும்புகிறான். அதனால் என் மணத்தைக் குறித்து இப்போழுது அவசரம் வேண்டாம். கன்னிகையாகத் தான் இருந்து கொண்டிருக்கிறேனே! அதனால் என்ன நடந்து விடுகிறது பார்ப்போமே!’ என்று தன் பெண் கனகரேகை தெரிவிக்க, தந்தை பரோபகாரி பதிலளித்தான்: ‘பெண்ணே! பருவம் வந்தபின் வெகுகாலம் கன்னிகையாயிருப்பது பொருந்தாது. நற்குணத்தைப் பொறுக்காத கெட்ட மக்கள் பொய்யான பழியைச் சுமத்துவர். அதுவும் மேன்மையாயிருப்பவன் விஷயத்தில் மக்கள் குறைநயம் கற்பித்தே தீருவார்கள். நன்னடத்தையைக் கண்டு பொங்கும் பகையால் வம்பு வளர்க்க ஆரம்பிக்கும் தீயோர், அனேகமாய் பொய்யான பழியைச் சுமத்துவார்கள். மேலும், கொஞ்சம் உண்மையான குற்றத்தைக் காண இடங்கிடைத்தால், அது எரியும் தீயில் நெய்யை தாரையாய் வார்த்தாற்போலாகும். ஆகையால் குழந்தாய், என் மனத்திலிருந்து முள்ளை எடுக்கவேண்டுமென்று நீ விரும்புவாயாகில், இதோ, இந்தப் புதுப்பருவம் உன்னிடம் கண்திறக்கும்போது, நீ வெகு காலம் தீயோருடைய கெட்ட அபவாதத்திற்கு எளிதில் பாத்திரமாகும் இந்தக் கன்னி நிலையிலேயே உன்னிஷ்டப்படி இருந்து வருவது தகாது,’ என்று.

இப்படி தகப்பன் அரசன் சொல்ல, குமாரி கனகரேகை தன் தீர்மானத்திலேயே உறுதியோடு நின்றவளாய் மறுபடியும், ‘பிராமணனோ க்ஷத்திரியனோ, எவன் அந்தக் கனகபுரியைக் கண்டிருக்கிறானோ அவனைச் சீக்கிரம் தேடிப்பிடியுங்கள். அவனுக்கு என்னைக் கொடுங்கள், நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன்,’ என்று சொன்னாள்.

அதைக் கேட்ட அரசன், மகள் தன் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதிலிருந்து, அவள் முற்பிறவியின் நினைவுடன் கூடியவள் என்று நிச்சயம் செய்துகொண்டு, அவள் வேண்டும் கணவனைத் தேடி வைக்கும் விஷயத்தில் வேறு வழியைக் காணாதவனாய், தன் தேசத்திலேயே அன்று முதல் ஒவ்வொரு நாளும் புதிதாய் வந்து போகும் ஜனங்களை விசாரிக்குமாறு, மேலும் இடைவிடாமல் பறையறையும்படி கட்டளையிட்டான். ‘பிராமணனோ க்ஷத்திரியனோ, எவன் கனகபுரியைக் கண்டிருக்கிறானோ, அவன் தெரிவிக்கவும். அவனுக்கு அரசன் தன் மகளையும் யௌவ ராஜ்யத்தையும் அளிக்கிறான்.’ – இப்படி அடிக்கடி பறையறைந்து கூவப்பட்டது. ஆனால் கனகவுரியைக் கண்டவன் ஒருவன் கூட அகப்படவில்லை.

இதற்குள், தான் விரும்பிய அரசகுமாரியால் அவமதிக்கப்பட்டு, மனம் முறிந்திருக்கும் பிராமண இளைஞன் சக்திதேவன், யோசனை செய்தான். ‘பொய்யாய்க் கனகபுரியைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்ன எனக்கு அவமானம் கிடைத்ததேயொழிய, ராஜகுமாரி கிடைக்கவில்லை. ஆகையால் இந்த ராஜகுமாரி கிடைப்பதற்காக, என் உயிர் போனாலும் போகட்டும், அந்தக் கனகபுரியை நான் காணும் வரையில், இந்த உலகம் முழுதும் சுற்ற வேண்டும். அந்த ஊரைக் கண்டுவிட்டு, அப்பந்தயத்தால் சம்பாதிக்கப்பட்ட இந்த ராஜகுமாரியையும் நான் அடையாவிட்டால், இவ்வாழ்வினால் என்ன பயன்?’ இப்படி உறுதிசெய்துகொண்டு அந்தப் பிராமணன், அவ்வர்த்தமான புரத்திலிருந்து தென்திசையை நோக்கிச் சென்றான். போய்க்கொண்டிருந்தவன் முறையே விந்திய மலையின் பெருங்காட்டையடைந்தான். தன் ஆசையைப் போல் பெரிதாயும் அடைய முடியாததாயுமிருக்கும் அக்காட்டிற்குள் நுழைந்தான்.

அந்தக் காடு – சூரிய கிரணங்களால் தாபம் அடைந்த சக்திதேவன் மேல், மிருதுவான மரத்தளிர்களைக் கொண்டு காற்றை வீசிற்று; சிங்கம் முதலிய கொடிய விலங்குகளால் கொல்லப்படும் இதர மிருகங்களின் ஓலத்தின் மூலம், இரவும் பகலும் கணக்கற்ற திருடர்கள் ஆக்கரமிப்பின் மூலம் ஏற்படும் துயரத்தால் கதறிக் கொண்டிருப்பது போலிருந்தது; பெரும் கானங்களின் வெப்பத்தினால் சூரியனுடைய உக்கிரமான வெயிலைக்கூட வென்றது; நீர் என்ற பேச்சற்றது; பல தீங்குகள் எளிதில் நேரக்கூடியது; இடைவிடாது நடந்துகொண்டு போனாலும், தூரமாகப் போய்க்கொண்டே இருப்பது  – இப்படியிருக்கும் அக்காட்டில் நாளடைவில் கொஞ்ச தூரம் கடந்து, ஏகாந்தமாயிருகும் ஓரிடத்தில், குளிர்ந்து தெளிந்திருக்கும் நீரோடு கூடிய பெரிய ஏரி ஒன்றைக் கண்டான். அது, உயர்ந்த தாமரை குடையாகப் பிடிக்கப்பட, ஹம்ஸங்களாகிற சாமரங்கள் விளங்க, எல்லா ஏரிகளுக்கும் சக்கரவர்த்தியாயிருக்கும் தன்மையைத் தாங்குவது போலிருந்தது. அந்த ஏரியில் சக்திதேவன் நீராடி, அதன் வடக்குக்கரையில் பழங்கள் நிரம்பித் தழைத்த மரங்களுள்ளதோர் ஆசிரமத்தைக் கண்ணுற்றான். அவ்வாசிரமத்தில் ஓர் அரசமரத்தின் அடியில், தவசிகளால் சூழப்பட்டு உட்கார்ந்திருக்கும் சூரியதபஸ் என்ற வயது முதிர்ந்த முனிவரைக் கண்டான்.

தம் வயதின் நூறு ஆண்டுகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு முடி போட்ட கணக்கோ இது என்று தோன்றும்படி, கிழத்தனத்தால் வெளுத்த மயிரோடு கூடிய தம் காதடியை அடைத்திருக்கும் ஜபமாலையோடு விளங்கினார் அம்முனிவர். வணங்கிக் கொண்டு சக்திதேவன் அம்முனிவரையடைந்தான். முனிவரும் விருந்துபசாரஞ் செய்து அவனைக் கொண்டாடினார். கனி முதலியவற்றை அவனுடன் பங்கிட்டுக்கொண்டு, ‘குழந்தாய், எங்கிருந்து வருகிறாய்? எங்கு செல்கிறாய்? சொல்!’ என்று முனிவர் கேட்க, சக்திதேவன் வணக்கத்துடன் சொன்னான்: ‘பகவன்! நான் வருவது வர்த்தமான புரத்திலிருந்து; ஒரு பிரதிக்ஞைப்படி நான் போக வேண்டியது கனகபுரி. ஆனால் அக்கனகபுரி எங்குள்ளது என்று நானறியேன். தேவரீருக்குத் தெரிந்திருந்தால் சொல்ல வேண்டும்,’ என்றான். ‘குழந்தாய்! எண்ணுறு வருஷங்கள் இவ்வாசிரமத்தில் இருந்து கழித்திருக்கிறேன். ஆனாலும் கனகபுரியை நான் கேள்விப்பட்டது இல்லை,’ என்று முனிவர் பதில் சொல்லிவிட, வருந்திய சக்திதேவன், ‘அப்படியானால் பூமியைச் சுற்றிச் சுற்றி, உயிரை விடுகிறேன்!’ என்று சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடைய வரலாற்றை அறிந்து கொண்ட முனிவர், ‘நீ அப்படி உறுதி கொண்டவனாயிருந்தால், நான் சொல்வதைச் செய். இங்கிருந்து முந்நூறு யோசனை தூரத்தில் காம்பில்யம் என்ற நாடு இருக்கிறது. அங்கு உத்தரம் என்ற மலை இருக்கிறது. அதில் ஒரு ஆசிரமம் இருக்கிறது. அங்கு பெரியவர், என் தமையனார் தீர்க்கதபஸ் என்றவர் இருக்கிறார். அவரிடம் செல். அவ்வயோதிகர் ஒரு வேளை அக்கனகபுரியை அறிந்திருக்கலாம்,’ என்று சொன்னார். இதைக் கேட்டு தீர்க்கதபஸைப் பார்க்க வேண்டுமென்ற அவாக் கொண்ட சக்திதேவன், ‘அப்படியே செய்கிறேன்,’ என்று சொல்லி, அன்றிரவை அங்கு கழித்துவிட்டு, காலையில் வெகுவேகமாய் அங்கிருந்து புறப்பட்டான்.

கஷ்டப்பட்டுப் பல காடுகளைக் கடந்து, கடைசியில் காம்பில்ய நாட்டை அடைந்து, உத்தரகிரியின் மேல் ஏறி, ஆசிரமத்தில் வீற்றிருக்கும் தீர்க்கதபஸ் என்ற முனிவரைக் கண்டு வணங்கினான். அவர் அவனுக்கு விருந்தளித்தார். இன்புற்று அவரிடம் நெருங்கி, அரசகுமாரி சொன்ன கனகபுரியை பற்றித் தெரிவித்தான்: ‘பகவன்! கிளம்பிவிட்டேன்! அந்த ஊர் எங்கிருக்கிறது என்று தெரியாது. ஆனாலும் அவசியம் நான் அங்கே போக வேண்டும். அதை அடைவதற்காக சூரியதபஸ் என்ற முனிவர் என்னைத் தங்களிடம் அனுப்பினார்,’ என்று. இப்படிச் சொன்ன சக்திதேவனிடம் அம்முனிவர் சொன்னார்: ‘குழந்தாய்! இவ்வளவு வயது ஆகியும் இன்றே நான் இவ்வூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். தேசாந்தரங்களிலிருந்து வரும் எவருடன்தான் எனக்குப் பழக்கம் இல்லை? ஆனாலும், நான் இந்த ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. பார்த்திருப்பது எப்படி? நிச்சயம் அது வெகுதூரத்தில் எங்கேயோ வேறு த்வீபம் ஒன்றில் இருத்தல் வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அதை அடையும் உபாயத்தை உனக்குச் சொல்லுகிறேன். கடல் நடுவே உத்ஸ்தஸம் என்ற தீவு இருக்கிறது. அதில் பணக்காரனான செம்படவத் தலைவன் சத்தியவிரதன் என்பவன் இருக்கிறான். அவனுக்கு எல்லாத் தீவுகளுக்கும் போக்குவரவு உண்டு. ஒரு வேளை அவன் கனகபுரியைக் கண்டிருக்கலாம். இல்லாவிடில் கேட்டாவது இருப்பான். ஆகையால் நீ கடற்கரையிலிருக்கும் விடங்கபுரம் என்ற பட்டணத்திற்கு முதலில் போ. அங்கிருந்து ஏதாவதொரு வர்த்தகனோடு கூடி, கப்பலில் அச்செம்படவத் தலைவனின் தீவிற்கு உன் மனோரதம் பூர்த்தியாகும் பொருட்டுச் செல்.’

இப்படி முனிவர் சொல்ல, சக்திதேவன் அக்கணமே, ‘அப்படியே செய்கிறேன்,’ என்று விடைபெற்றுக்கொண்டு அவ்வாசிரமத்திலிருந்து கிளம்பினான். பல காதங்கள் கடந்து, தேசங்கள் பல தாண்டி, நாளடைவில் கடற்கரைக்குத் திசையாய் இருக்கும் விடங்கபுரத்தை அடைந்து, அங்கு உத்ஸ்தஸத் தீவிற்குப் போவதாய்க் கேள்விப்பட்ட சமுத்திரதத்தன் என்ற வர்த்தகனைத் தேடி, அவனுடன் நட்புக் கொண்டான் சக்திதேவன். அவனோடு கப்பலேறி, அவனுடைய அன்பையே நிரம்பிய வழியுணவாய்க் கொண்டு, கடல் வழியாய்ப் புறப் பட்டான். போவதற்குத் தூரம் இன்னும் சிறிதே இருக்கும்போது, எதிர்பாராதபடி இருண்டு, மின்னல்கொடியான நாவோடு கூடி கர்ஜனை செய்யும் மேகம் எனும் அரக்கன் எழுந்தான். இலகுவான பொருள்களை உயர்த்திக்கொண்டும் கனமானதைக் கீழே தள்ளிக்கொண்டும், விதியின் செயலே போல் புயற்காற்று வீசிற்று. காற்றால் அறையப்பட்டுக் கடலிலிருந்து பெரும் அலைகள் எழும்பின. தாம் அடைக்கலம் புகுந்த கடல் தாக்கப்பட்டதென்ற கோபத்தால் இறகு படைத்த மலைகளே எழுந்தனவோ என்று எண்ணுமாறு, அந்த அலைகள் தோன்றின. செல்வர்களுக்கு மாறி மாறி ஏற்படும் உயர்வையும் தாழ்வையும் காண்பிப்பதுபோல் அவர்களுடைய கப்பல் ஒரு கணம் மேலே சென்றது; மற்றொரு கணம் கீழே சென்றது. அடுத்த கணம் வர்த்தகர்களின் கூக்குரல்கள் நிரம்பி, அந்தப் பளுவைத் தாங்காதது போல், அக்கப்பல் ஒருமுறை எழுந்து உடைந்தது. கப்பலுடைந்ததும், கடலில் கிடந்த அதன் எஜமானன், ஒரு கட்டையில் ஏறி, கடைசியில் மற்றொரு கப்பலை அடைந்து கரையேறினான்.

நீரில் விழும் சக்திதேவனையோ, குகைபோன்ற தன் வாயைப் பிளந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய மீன், அவன் அங்கம் ஒன்றும் புண்படாதபடி விழுங்கிற்று. தன் விருப்பப்படி கடல் நடுவே உலவிக்கொண்டிருந்த அந்த மீன், விதியின் ஏற்பாட்டினால் உத்ஸ்தஸத் தீவின் அருகாமையிலேயே வந்தது, அங்கும் தெய்வ வரத்தால், அந்தச் செம்படவத் தலைவனான சத்தியவிரதனின் மீன் பிடிக்கும்  வேலையாட்களாலேயே அம்மீன் பிடிக்கப்பட்டது. நீரிலிருந்து, மிகப் பெரிய உடலோடு கூடிய அம்மீனை, ஆவலுடன் அச்செம்படவர்கள் தம் தலைவரிடம் கொண்டு போனார்கள். அவ்வளவு பெரிதாயிருக்கும் அம்மீனைக் கண்டு சத்தியவிரதன்  தானும் குதூகலமடைந்து, தன் ஆட்களைக் கொண்டு அதைப் பிளக்கச் செய்தான். பிளக்கப்பட்ட  மீனின் வயிற்றிலிருந்து, முன் தன் தாயினிடமிருந்ததைவிட வேறான மற்றொரு விந்தையான கர்ப்பவாழ்வை அனுபவித்து விட்டு, உயிருடனேயே சக்திதேவன் வெளிவந்தான். வெளிவந்து, தன்னைக் குறித்து நலம் என்று ஆகியதும், இளைஞன் ஒருவனைக் கண்டு வியந்தவனாய் செம்படவன் சத்தியவிரதன் கேட்டான்: ‘நீர் யார், பிராமணனா? நீர் எப்படி இம்மீனின் வயிற்றில் கிடக்கும்படி நேரிட்டது? மிகவும் வியக்கத்தக்கதான உம் வரலாறு யாது?’ என்று. அதைக் கேட்டு சக்திதேவன் என்ற பிராமணன், பதிலளித்தான்: ‘நான் சக்திதேவன் என்ற பிராமணன். வர்த்தமான புரத்திலிருந்து வருகிறேன். கனகபுரி என்ற நகரத்திற்கு நான் கட்டாயம் செல்ல வேண்டும். அவ்வூரையறியாமல் வெகுகாலம் பூமியை வெகு தூரம் சுற்றினேன். பிறகு தீர்க்கதபஸ் என்பவரின் வார்த்தையின் மேல் கனகபுரியென்பது ஒரு தீவாயிருத்தல் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அதையறிந்து செல்வதற்காக உத்ஸ்தஸத் தீவிலிருக்கும் செம்படவத் தலைவனான சத்தியவிரதனிடம் வந்து கொண்டிருந்தேன். வழியில் கப்பல் உடைந்து கடலிற்குள் போக, நான் மீனால் விழுங்கப்பட்டு இவ்விடம் கொண்டுவரப்பட்டேன்.’

இப்படி மொழிந்த சக்திதேவனைப் பார்த்து சத்தியவிரதன் சொன்னான்: ‘நான்தான் சத்தியவிரதன். இதுவே உத்ஸ்தஸத் தீவு. ஆனால் பல தீவுகளையும் கண்டிருக்கும் நான்கூட நீர் விரும்பும் கனகபுரியைக் கண்டதில்லை. ஆனாலும் ஏதோவொரு தீவில் அது இருப்பதாய்க் கேள்வி மட்டும் உண்டு.’ இதைக் கேட்டதும் சக்திதேவன் வருத்தமடைந்தான். அதைப் பார்த்த உடனே சத்தியவிரதன் தன்னை நாடி வந்திருப்பவனிடம் உள்ள அன்பினால் மறுபடியும், ‘பிராமணா, வருந்தவேண்டாம். இன்றிரவு இங்கேயே நீர் தங்கும். உம் விருப்பம் கைகூடுமாறு காலையில் ஒரு வழியை ஏற்பாடு செய்கிறேன்,’ என்று சொன்னான். சத்தியவிரதனாலேயே அனுப்பப்பட்ட பிராமண சக்திதேவன், விருந்துபசாரம் மிகுந்ததான பிராமணர் தங்கும் மடமொன்றை அடைந்தான்.

அம்மடத்தில் அங்கே தங்கியிருக்கும் விஷ்ணுதத்தன் விசாரிக்க, சக்திதேவன் சுருக்கமாய்த் தன் தேசம், குலம், வரலாறு இவற்றை முழுதும் சொன்னான். இதையறிந்ததும் அக்கணமே விஷ்ணுதத்தன் சக்திதேவனை அணைத்து, களிக்கண்ணீரால் தழுதழுக்கும் சொற்களுடன், ‘ஆஹா! இது அதிருஷ்டம்! நீ என் மாமன் மகன்! என்னூரில் பிறந்தவன்! நான் இளமையிலேயே அவ்வூரைவிட்டு இங்கு வந்துவிட்டேன். நீ  இங்கேயே இரு! பல தீவுகளிலிருந்து  இங்கு வரும்  வர்த்தகர்களின் கேள்வியிலிருந்து கூடிய சீக்கிரம் உன் விருப்பம் கைகூடும்,’ என்று சொல்லி, தன் பிறப்புக் கிரமத்தைத் தெரிவித்து, தக்கபடி சக்திதேவனை உபசரித்தான். சக்திதேவனும் நெடுந்தூரம் வந்த களைப்பை மறந்து இன்பத்தை அடைந்தான்.

அயல்நாட்டில் உறவினரை அடைவது, பாலைவனத்தில் அமுத அருவி தோன்றுவது போலாகும். சக்திதேவன் தன் விருப்பம் கைகூடும் நிலை கிட்டிவிட்டதென்று நினைத்தான். ஏனெனில், நடுவே ஏற்படும் நன்மை முக்கிய காரியத்தின் நிறைவையல்லவா குறிக்கிறது! அதற்குமேல் இரவில் தூக்கமின்றிப் படுக்கையில் படுத்துத் தன் விருப்பம் கைகூடுவதிலேயே மனத்தை வைத்திருக்கும் சக்திதேவனுக்கு, அவன் அருகாமையிலிருந்த விஷ்ணுதத்தன் பொழுது போக்காகவும் தன் காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை சக்திதேவனுக்கு ஏற்படும்படியாகவும் கதை ஒன்றைச் சொன்னான்:

‘தேவரம்சமுள்ளவர்கள் ஏதோ காரணத்தால் தெய்வப் பிறவியில் இருந்து இறங்கி மானிடவுருவில் பிறக்கிறார்கள். தம் தேவத் தன்மைக்குரியதான தைரியத்தையும் ஊக்கத்தையும் கொண்டு, மானிடரால் அடையவியலாத சித்திகளையும்  அடைகிறார்கள். ஆகையால் தைரியக்கடலே!  நீயும் உன் விருப்பத்தை நிறை வேற்றிக் கொள்ளும் தேவாம்சம் பொருந்திய புருஷனொருவன் என்றே நான் நினைக்கிறேன். பெரிய மனிதராலும் செய்யமுடியாத காரியங்களில் ஒருவன் ஊக்கத்துடனிருப்பது, அவன் தன்மையின் சிறப்பையே தெரிவிக்கிறது. நீ அடைய விரும்பும் அந்தக் கனகரேகை என்ற ராஜகுமாரியும் தேவ ஸ்திரீயாகவே இருத்தல் வேண்டும். இல்லையெனில் அச்சிறுமி கனகபுரியைப் பார்த்தவனையே கணவனாய் வேண்டுவது எப்படி?’ என்று கேட்டான்.

சுவையுள்ள கதையைத் தனிமையில் விஷ்ணுதத்தனிடம் கேட்டு தைரியமடைந்த சக்திதேவன், மனதில் கனகபுரியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிரம்பியவனாய் அவ்விரவைக் கழித்தான். மறுநாள் காலையில் உத்ஸ்தஸத் தீவின் மடத்தில்  தங்கியிருந்த சக்திதேவனிடம் செம்படவத் தலைவன் சத்திய விரதன் வந்து, அவனுக்கு உதவி புரிவதாய் ஒப்புக் கொண்ட வண்ணம் அவனைப் பார்த்து, ‘பிராமணரே, உமது விருப்பம் நிறைவேறுவதற்கு ஒன்றை யோசித்திருக்கிறேன். கடல் நடுவே ரத்னகூடம் என்ற சிறந்த தீவு ஒன்று உள்ளது. சமுத்திர ராஜனால் பிரதிஷ்டை செய்யப் பட்ட விஷ்ணு அவ்விடம் கோவில் கொண்டிருக்கிறார். ஆடி மாதம் சுக்கிலபட்சத்து துவாதசி நாளில் அங்கே நடைபெறும் விழாவில் பூஜை செய்வதற்காக, எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் பெரு முயற்சி எடுத்துக் கொண்டு எப்போதும் அந்தத் தீவுக்கு வருகிறார்கள். அவ்விடம் வருவோர்க்கு கனகபுரி ஒருவேளை தெரிந்திருக்கலாம். வாரும், நாம் அங்கே செல்வோம். அந்த துவாதசிநாளும் நெருங்குகிறது,’ என்று சொன்னான்.

சக்திதேவனும் சரியென்று அதற்கு ஒப்புக்கொண்டு, மடத்தில் விஷ்ணுதத்தன் தயாரித்துக் கொடுத்த வழி உணவைக் களிப்புடன் எடுத்துக் கொண்டு, சத்தியவிரதன் கொண்டுவந்த கப்பலிலேறி, அவனுடன் கடல் வழியாக விரைந்து பயணமானான். விந்தைகளுக்கு இருப்பிடமாயும் தீவுகளைப்போல் பெரிய முதலைகள் வசிப்பதாயும் உள்ள கடலில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்த சத்தியவிரதனைப் பார்த்து, ‘இதோ, தூரத்தில் சிறகுகளோடு கூடிய மலையே கடலின் அடியிலிருந்து திடீரென மேலெழுந்து வருகிறதோ என்று தோன்றமாறு, மிகப் பெரியதாய் அங்கே காணப்படுவது என்ன?’ என்று சக்திதேவன் கேட்டான். அதற்கு சத்தியவிரதன், ‘அது தெய்வத்தன்மை வாய்ந்த ஆலமரம். அதனடியில் மிகப்பெரியதான சுழலும் அதன்கீழ் கடலினுள் இருக்கும் நெருப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இம்மரத்தை நெருங்காமல் விலகியே நாம் இந்த இடத்தைக் கடக்க வேண்டும். இந்தச் சுழலில் சிக்கியவர் மீள்வதென்பது கிடையாது?’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நீரின் இழுப்பினால் அந்தச் சுழலின் பக்கமாகவே கப்பலும் போக ஆரம்பித்தது.

சத்தியவிரதன் அதைக் கண்டு சக்திதேவனை நோக்கி, ‘பிராமணரே! நாம் அழிந்துபோகும் காலம் நெருங்கிவிட்டது. இங்கே பாரும்! கப்பலும் திடீரென்று சுழலுக்கே செல்லுகிறது. நான் என்னதான் முயன்றபோதிலும் என்னால் கப்பலை நிறுத்த முடியவில்லை. வல்வினையால் தள்ளிவிடப்பட்டவர்போல், இந்த இழுப்பின் வேகத்தினால் யமன்வாய் போன்ற இந்த ஆழமான சுழலில் நாம் தள்ளப்பட்டோம். இதற்கு நான் துயரப்படவில்லை. எவர் உடல்தான் நிலையுள்ளது? சிரமப்பட்டும் உமது எண்ணம் கைகூடவில்லையே என்பது ஒன்றே எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஆகவே நான் நொடிப்பொழுது கப்பலை நிறுத்த முயல்கிறேன். அதற்குள் நீர் தாமதமின்றி இந்த ஆலமரத்தின் கிளையொன்றைத் தாவிப்பிடித்துக் கொள்ளும். ஒருவேளை பல நன்மைகளுக்கு உரியதான தோற்றத்தைக் கொண்ட உமக்கு, உயிர்தப்பும் வழி ஏதேனும் அமையலாம். கடலின் அலைகளையும் விதியின் விளையாட்டுக்களையும் இப்படிப்பட்டதென்று எவர் தான் நிச்சயிக்க முடியும்?’ என்று சொன்னான்.

இப்படி தைரியசாலியான சத்தியவிரதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கப்பல் ஆலமரத்தடிக்கு வந்தது. அக்கணமே சக்திதேவன் அச்சத்தை விட்டுத் தாவி, அந்த ஆலமரத்தின் பெருங்கிளைகளில் ஒன்றைப்  பற்றிக்கொண்டான். பிறருக்குப் பயன்படுவதற்கு என்றே நடத்தப்படும் தன் சரீரத்தோடும் கப்பலோடும்  சத்திய விரதன் ஆலமரத்தின் அடியிலுள்ள நீரில் புகுந்தான்.

தன் கிளைகளால் நான்கு திசைகளையும் நிரப்பியுள்ள அந்த ஆலமரத்தின் கிளையை அடைந்ததும், திக்கற்றவனான சக்தி தேவன், ‘கனகபுரியையோ நான் காணவில்லை. பாவம், அம்பலத்தில் அழிந்துபோகும் என்னால், இந்தச் செம்படவத் தலைவனும் அழிக்கப்பட்டான். யோசித்து என்ன பயன்? எப்போதும் தலையில் காலை வைத்து எல்லோரையும் ஆளும் விதியை விலக்க யாரால் முடியும்?’ என்று தனக்கு நேர்ந்திருக்கும் நிலைக்கேற்ற வண்ணம் நினைத்துக்கொண்டான். அம்மரக் கிளையிலேயே அன்று பகலைக் கழித்தான்.

அந்திப்பொழுது வந்ததும், நாற்புறங்களினின்றும், தம் சத்தங்களினால் திக்குகளை நிரப்பிக்கொண்டு அவ்வாலமரத்தைப் பெரிய பெரிய பறவைகள் வந்தடைந்ததை சக்திதேவன் பார்த்தான். அவற்றில், அகன்ற சிறகுகளின் காற்றினால் தாக்குண்டு மோதுகின்ற கடலலைகள், நாள்தோறும் அவற்றுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக உண்டான அன்பினால், அக்கழுகுகளை வாவென்று அழைக்க மேலே எழுந்தனவோ என்று தோன்றின. கிளைகளில் அமர்ந்த அக்கழுகுகள் ஒன்றுக்கொன்று மனித மொழியில் பேசிக் கொண்டதை, இலைகளுக்கிடையில் மறைவிலிருந்த சக்திதேவன் செவியுற்றான். அக்கழுகுகள் ஒவ்வொன்றும் அன்றைய தினம் தாம் சஞ்சரித்த தீவைக் குறித்தோ மலையைக் குறித்தோ அல்லது திசையைக் குறித்தோ விரித்துரைத்தன.

அவைகளுக்குள் கிழக்கழுகு ஒன்று, ‘இன்று உலாவுதற்குக் கனகபுரி சென்றிருந்தேன். நான் நாளைக் காலையிலும் சுகமாய் உலாவிவர அங்கேயே போகப்போகிறேன். வெகுதூரம் செல்வதில் என்ன பயன்? எனக்கு சிரமமே ஏற்படுகின்றது,’ என்றது. எதிர்பாரா வண்ணம் அமிருதமழை பெய்தது போலிருந்த அக்கிழக்கழுகின் வார்த்தைகளால் தனக்கிருந்த தாபம் நீங்க, சக்திதேவன் யோசித்தான். ‘தெய்வ வசத்தால், கனகபுரி என்று ஒரு நகரம் உண்மையில் இருக்கிறது. அதையடைவதற்கு மிகப் பெரிய உடல் படைத்த இந்தக் கழுகையே எனக்கு வாகனமாகக்கொள்ளுதல் ஏற்ற உபாயமாகும்,’ என்று மெதுவாக அதனை நெருங்கித் தூங்கிக் கொண்டிருக்கும் அதன் பின்புறத்து இறக்கைகளுக்கிடையில் புகுந்து ஒளிந்துகொண்டான்.

மறுநாள் காலை மற்ற பறவைகள் பல இடங்களுக்குப் பறந்து சென்றுவிட்டன. விதிபோல் சக்திதேவனிடம் பட்சபாதங்காட்டி, ஆச்சரியமாய் இறக்கைகளை அடித்துக்கொண்டு உயரக்கிளம்பி, தனக்குத் தெரியாமல் தன் முதுகின்மேல் இருக்கும் சக்திதேவனையும் தூக்கிக் கொண்டு, ஒரு நொடிப்பொழுதில் கடந்து அக்கிழக்கழுகு, மறுபடியும் உலவுவதற்காகக் கனகபுரிக்கு வந்துசேர்ந்தது. அங்கு ஒரு தோட்டத்தில் இறங்கிக் கழுகு உட்கார்ந்ததும், சக்திதேவனும் இரகசியமாக அதன் மீதிருந்து கீழே இறங்கினான்.

அதனை விட்டுவிலகி, அவன் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்த போது, மங்கையர் இருவரைக் கண்டான். தன்னைக் கண்டு வியப்படைந்த அப்பெண்மணிகளை சக்திதேவன் மெள்ள நெருங்கி, ‘இது எந்த ஊர்? அழகிகளாகிய நீங்கள் யார்?’ என்று வினவினான். ‘வித்தியாதரருக்கு இருப்பிடமான கனகபுரி என்ற நகரம் இது. நண்பரே, சந்திரப்பிரபை என்ற வித்தியாதர ஸ்திரீ இந்நகரத்தில் இருக்கிறாள். அவளுடைய தோட்டம் இது. அதனைக் காவல் புரிபவர்கள் நாங்கள் இருவரும். இப்போது இந்தப்  பூக்களை அவளுக்காகவே பறித்துக்கொண்டிருக்கிறோம்,’ என்று அவ்விரு பெண்களும் பதிலளித்தனர். ‘உங்கள் தலைவியை நான் பார்க்கும்படி நீங்கள் உதவி செய்வீர்களா?’ என்று அவ்வந்தணன் கேட்க, அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, சக்திதேவனை அந்த நகரத்திற்குள் இருக்கும் அரண்மனைக்கு அழைத்துச்சென்றனர்.

எல்லாச் செல்வங்களும் தமக்குள் பேசிக்கொண்டு ஒன்றுகூடிய இடமோ இது என்று வியக்கும்படி விளங்குவதும் மாணிக்கத்தாலான தூண்களோடு ஜொலிப்பதும் தங்கச் சுவர்களைக் கொண்டதுமான அந்த அரண்மனையை, சக்திதேவன் கண்டான். அங்குள் வேலையாட்கள் சக்திதேவனைக் கண்ட அளவில், மானிடன் அங்குவந்த விந்தையைச் சந்திரப்பிரபையிடம் தெரிவித்தார்கள். சந்திரபிரபையும் வாயில் காப்போரிடம் வந்திருக்கும் அந்தணனைத் தாமதமின்றி அழைத்து வர உத்திரவிட்டாள்.

உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட சக்திதேவன், கண்களுக்கு விழா அளிக்கும் சந்திரப்பிரபையைப் பார்த்தான். பிரம்ம தேவனுடைய அற்புத சிருஷ்டியின் நிறைவே வடிவெடுத்ததுபோல விளங்கினாள் சந்திரப்பிரபை. சக்திதேவன் பார்வையினாலேயே அவனிடம் ஈடுபட்டவளாக, சந்திரப்பிரபை தன் இரத்தின ஆசனத்திலிருந்து எழுந்து, தானே அவனுக்கு நல்வரவு கூறி வரவேற்றாள். சக்திதேவன் அமர்ந்ததும் அவனைப் பார்த்து, ‘நலம் படைத்தோய்! இவ்விதம் இவ்விடத்தில் காணப்படும் நீ யார்? மனிதரால் அடைய முடியாத இந்த இடத்தை நீ எவ்விதம் அடைந்தாய்?’ என்று குதூகலத்துடன் சந்திரப்பிரபை கேட்டாள். சக்திதேவன் அதைக் கேட்டு, தன்னுடைய ஊர், குலம், பெயர் ஆகியவற்றைத் தெரிவித்து, அந்தக் கனகபுரியைப் பார்த்தபின் அப்பந்தயத்தைக் கொண்டு அரசகுமாரி கனகரேகையை அடைவதற்காக அந்நகருக்குத் தான் வந்த வகையை விரித்துரைத்தான்.

சந்திரப்பிரபை அவன் சொன்னவற்றைப் புரிந்துகொண்டவளாய் ஏதோ சிறிதுநேரம் தியானம் செய்துகொண்டு பெருமூச்செறிந்தாள். பின்னர் தனிமையில் அவனிடம் சொன்னாள். ‘அழகனே! நான் சொல்லப் போவதைக் கேள். இந்தப்பிரதேசத்தில் சசிகண்டன் என்ற வித்தியாதரத் தலைவர் இருக்கிறார். அவருக்குப் புதல்விகளாக நாங்கள் நால்வர் பிறந்தோம். அவர்களுள் நானே மூத்தவள். என் பெயர் சந்திரப்பிரபை. எனக்கு அடுத்தவள் சந்திரரேகை. சசிரேகை என்பவள் மூன்றாவது குமாரி. சசிப்பிரபை என்பவள் நான்காவது பெண். நாங்கள் நால்வரும் முறையே இங்கு எங்கள் தகப்பனார் வீட்டில் வளர்ந்து வந்தோம். ஒரு சமயம் நான் கன்னிவிரதத்தில் இருந்தபோது, நீராடும் பொருட்டு என் கூடப் பிறந்தவர் மூவரும் கங்கைக்கரைக்குச் சென்றனர். அவர்கள் மூவரும் கங்கையில் நீரில் விளையாட ஆரம்பித்து, இளமைப் பருவத்தின் இறுமாப்பினால் அவ்விடம் கங்கை நீரில் நின்று கொண்டிருந்த அகர்யதபஸ் என்ற முனிவர் மீது தண்ணீரை வாரி இறைத்து நனைத்தார்கள். விளையாட்டில் விடாத ஊக்கங் கொண்டு இவ்விதஞ்செய்த என் தங்கையரிடம் அம் முனிவர் கோபங்காண்டவராய், “பூவுலகில் நீங்கள் எல்லோரும் விகாரம் உள்ள கன்னிகைகளாகப் பிறக்கக் கடவீர்!”  என்று சபித்தார். அச்செய்தியை அறிந்த எம் தந்தை, அம் மாமுனியை அடைந்து அருள்புரியுமாறு வேண்ட, அவரும் என் தங்கைகள் ஒவ்வொருத்திக்கும் தனித்தனியாக சாபத்தின் முடிவைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு தெய்விகமான அறிவும் முன்பிறவியின் நினைவும் மானிடப் பிறவியோடுகூட அமையுமாறு கருணை கூர்ந்தார். என் தங்கைகள் தம் உடலை விட்டு, மானிட உலகிற்குச் சென்றனர். அதன்மேல் என் தந்தை மனம் நொந்து இந்த நகரத்தை என்னிடம் கொடுத்து விட்டுக் காட்டிற்குச் சென்றுவிட்டடார். பிறகு, இந்த நகரில் வாழ்ந்துவரும் எனக்குக் கனவில் அம்பிகை தோன்றி, “பெண்ணே, உனக்கு மானிடன் ஒருவன் கணவனாக வருவான்,” என்று கருணை செய்தாள். அதனால் என் தந்தை மணப்பிள்ளையாகக் குறிப்பிட்ட வித்தியாதரர் அனைவரையும் நான் மறுத்துவிட்டு, இதுவரையிலும் கன்னியாகவே இருந்து வருகிறேன். இப்போது வியக்கத்தக்கதான உமது வரவினாலும் அழகினாலும் வசப்பட்டவளாய் என்னை உமக்கென்றே அளித்துவிட்டேன். ஆதலின் வரும் சதுர்த்தசி திதியில் உம்பொருட்டு என் தந்தையினிடம் என் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்ள நான் ரிஷபகிரிக்குப் போகிறேன். பெரிய மலை மீது சதுர்த்தசி திதியன்று ஆண்டுதோறும் சிவனைப் பூசை செய்ய வித்தியாதரர் யாவரும் திக்குகளிலிருந்து வந்து கூடுவர். அப்போது என் தகப்பனாரும் அவ்விடத்துக்கு வருவார். அவருடைய சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு விரைவில் நான் இங்கே திரும்பி வருகிறேன். அதன் பிறகு நீங்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எழுந்திருங்கள்,’ என்று சொல்லி வித்தியாதரருக்குரிய பற்பல இன்பங்களை அளித்து சந்திரபிரபை சக்திதேவனை உபசரித்தாள். அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டு அவ்விடத்திலேயே இன்பமாக இருந்துவந்தான் சக்திதேவன்.

அவனுக்கு, காட்டுத்தீயில் வதங்கிக் கிடப்பவன் அமிர்த குளத்தில் நீராடுவதுபோல் இருந்தது. சதுர்த்தசி நாள் வந்ததும் சந்திரப்பிரபை அவனைப் பார்த்து, ‘இன்று உங்களுக்காக நான் என் தந்தையிடம் தெரிவித்துக்கொள்ளப் போகிறேன். என் வேலையாட்கள் யாவரும் என்னுடன் வருவார்கள். இரண்டே நாட்கள் வரை தாங்கள் துயரத்தைப் பார்க்காமல் இங்கேயே தனித்திருக்க வேண்டும். ஆனால் தாங்கள் இங்கே தனிமையாக இருக்கும் காலத்தில் நடு மாடிக்கு மட்டும் ஏறிப்போகக் கூடாது,’  என்று சொல்லிவிட்டு, தன் மனத்தை அவன் பக்கத்தில் வைத்து விட்டு, அவனுடைய மனத்தால் தொடரப்பட்டவளாய்ச் சென்றாள்.

சந்திரப்பிரபையின் அரண்மனையில் தனித்திருந்த சக்திதேவன், பொழுதுபோக்குக்காகச் செல்வம் நிறைந்த அந்த அரண்மனையில் உள்ள இடங்களை ஒவ்வொன்றாக சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தான். நடு மாடியை நெருங்கியதும், ‘இந்த நடு மாடியில் ஏறக்கூடாதென்று ஏன் அந்த வித்தியாதர மங்கை என்னைத் தடுத்தாள்?’ என்று சொல்லிக்கொண்டே சக்திதேவன் அந்த நடு மாடி மீது ஏறினான். பொதுவாக மனிதனுடைய மனமானது தடுக்கப்பட்ட விஷயத்திலேயே மோகங்கொள்ளும். ஆகவே, நடுமாடிக்கு ஏறிச் சென்ற அவன் அங்கே மறைவாயிருந்த மூன்று ரத்தின மண்டபங்களைக் கண்டான்.

அவற்றுள் ஒன்று சிறந்த கதவுடனிருக்க, அவன் அதற்குள் நுழைந்தான். நல்ல ரத்தினங்கள் இழைக்கப்பெற்ற கட்டிலில் மெத்தையின் மீது துணியால் போர்த்தப்பட்டு யாரோ படுத்திருப்பதைப் பார்த்தான். போர்வையை நீக்கி உற்றுநோக்கியபோது, அது பரோபகாரி அரசன் புதல்வியினது பிரேதம் என்பதை அறிந்தான். அதனைக் கண்ட அளவில் சக்திதேவன் தனக்குள், ‘இது என்ன விந்தையாக இருக்கிறது! விழிப்பில்லாத தூக்கத்தில் இப்பெண் இருக்கிறாளா? அல்லது இது தெளிவில்லாத மயக்கமா? எவருக்காக நான் இத்தேசாந்திரத்திற்கு வந்திருக்கிறேனோ அவளே இங்கு இருக்கிறாளே! இங்கே உயிர் போனவளாயும் அங்கே உயிர் உள்ளவளாயும் இருக்கிறாளே! ஆனால் இவளது மேனி ஒளி குன்றாமலிருக்கிறது. ஆகவே ஏதோ காரணம் பற்றி பிரம்மதேவன் எனக்கு விதித்திருக்கும் இந்திரஜால மாயையே இது!’ என்று சொல்லிக்கொண்டு, யோசனையில் ஆழ்ந்தவனாய் வெளியே வந்து, ஒன்றன்பின் ஒன்றாக மற்ற இரண்டு மண்டபங்களிலும் நுழைந்தான். அங்கும் இதேபோல வேறு இரண்டு கன்னிகைகளைக் கண்டான். வியப்புற்றவனாய் அவ்விரு மாளிகைகளினின்றும் வெளியே வந்து உட்கார்ந்தான்.

நடு மாடியின் கீழே சிறந்த வாவியொன்று தென்பட்டது. அக்குளக்கரையில் ரத்தினமிழைத்து சேணத்தோடு கூடிய குதிரை ஒன்று நிற்பது அவனுக்குத் தெரிய வந்தது. குதூகலத்தால் சக்திதேவன், மாடிப்படிகளின் வழியாகக் கீழிறங்கி அந்தக் குதிரையின் பக்கம் சென்றான். ஆள் எவருமின்றித் தனித்துக் குதிரை நிற்பதைக் கண்டு, அவன் அதன் மீதேற முயன்றான். குதிரை காலை உதைத்துக்கொண்டு அவனை வாவிக்குள் தள்ளிவிட்டது. அந்த வாவியினுள் மூழ்கிய அவன் ஒரு நொடிப் பொழுதில் தன் ஊரான வர்த்தமானபுரத்தின் உத்தியான வனத்தில் உள்ள வாவியின் நடுவிலிருந்து பரபரப்புடன் மேலே எழுந்து வந்தான். தன்னுடைய சொந்த ஊரில் வாவி நீரினிடையே ஆம்பல்களுக் கிடையில், சந்திரப் பிரபையினின்றும் பிரிந்த சக்திதேவன், தானும் வாடியதோர் ஆம்பல்போல நிற்பதை உணர்ந்தான்.

‘இந்த வர்த்தமானபுரம் எங்கே?அந்த வித்தியாதர நகரம் எங்கே? இது என்ன ஆச்சரியம்! இது என்ன மாயைச் செயல்! ஐயோ! அதிர்ஷ்டமில்லாத நான் ஏதோ யாராலோ ஏமாற்றப்பட்டு விட்டேனே? ஆனால் ஒருவன் தலையெழுத்து எவ்விதம் இருக்கிறதென்று எவருக்குத் தெரியும்?’ என்றெல்லாம் எண்ணியவனாய்க் குளத்தினின்று வெளியேறினான். வியப்புடனேயே தன் தகப்பன் வீட்டிற்குள் வந்துசேர்ந்தான். அரசனால் பறையறைதல் மூலம் அறிவிக்கப்பட்டதை நாடி அதுவரை தான் சுற்றிக் கொண்டிருந்ததாகச் சொல்லி, மற்றவற்றை மறைத்து, தந்தையாலும் சுற்றத்தாராலும் பாராட்டப்பட்டு தந்தையின் இல்லத்தில் இருந்துவந்தான்.

மறுநாள் வீட்டிலிருந்து வெளியே வந்தவன், மறுபடியும் ஊரில் அடிக்கப்படும் பறையைச் செவியுற்றான். ‘பிராமணர், க்ஷத்ரியர் இவர்களுக்குள் எவன் உண்மையில் கனகபுரியைக் கண்டிருக்கிறானோ அவன் தெரிவித்தால், அரசன் தன் மகளையும் யுவராஜ பதவியையும் அவனுக்கு அளிப்பான்,’ என்று அடிக்கப்பட்ட பறையைக் கேட்ட மாத்திரத்தில், காரியத்தைச் சாதித்துவிட்ட சக்திதேவன், பறை அடிப்பவர்களிடம் சென்று, ‘நான் கனகபுரியைக் கண்டிருக்கிறேன்!’ என்று மறுபடியும் சொன்னான்.

பறையடிப்பவர்கள் சக்திதேவனை விரைவாய் அரசன் முன் கொண்டுபோனார்கள். முன்போலவே இவன் பொய் சொல்லுவான் என்றே அரசன் எண்ணினான். ‘நான் கனகபுரியைக் கண்டு விட்டேன் என்று சொல்லுவது பொய்யானால், என்னைக் கொல்லலாம்!’ என்று பந்தயம் செய்துகொண்டு, ‘ராஜபுத்திரி என்னை கனகபுரியைப் பற்றிக் கேட்கட்டும்!’ என்றான் சக்திதேவன். ஆட்களை விட்டு அரசன் கனகரேகை அங்கே அழைத்து வர, அவள்  முன் பார்த்திருந்த அச்சக்திதேவனைக் கண்டதும், ‘அப்பா, மறுபடியும் இவன் ஏதாவது பொய்யைத்தான் சொல்லுவான்!’ என்று உரைத்தாள் ராஜகுமாரி. ‘நான் சொல்லுவது உண்மையோ பொய்யோ, அது இருக்கட்டும்! நீ எனக்கு இதைச் சொல்ல வேண்டும்! கனகபுரியில் படுக்கையில் உயிரற்று நீ படுத்திருப்பதைக் கண்டேன்; இங்கு நீ உயிருடனிருப்பதைக் காண்கிறேன். இதெப்படி? இவ்விஷயத்தை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்,’ என்று சக்திதேவன் குறிப்பாய் கேட்டான்.

உடனே கனகரேகை தந்தையிடம் சொன்னாள்: ‘அப்பா, உண்மையில் இப்பெரியார் கனகபுரியைப் பார்த்துவிட்டார்.  நான் உடனே அக்கனகபுரிக்கே செல்லவேண்டும். சீக்கிரத்தில் அவர் அவ்வூரிலேயே எனக்குக் கணவனாக ஆவார். மேலும் அவ்வூரிலேயே எனக்கிருக்கும் மூன்று சகோதரிகளையும் மணந்துகொள்வார். வித்தயாதரர்களுக்கு அரசனாகவும் அவ்வூலிருந்து ஆள்வார். இப்பொழுது நான் என்னுடைய சொந்த உடலையும் சொந்த நகரையும் அடைய வேண்டும். ஒரு முனிவரின் சாபத்தால் நான் உம்முடைய அகத்தில் பிறந்தேன். “எப்பொழுது ஒரு மானிடன் கனகபுரியில் உனது உடலைக் கண்டுவிட்டு, மானிட உடலோடு இருக்கும் உன்னிடம் அவ்வுண்மையை வெளிப்படுத்துகிறானோ, அப்பொழுது உன் சாபம் நீங்கும். அம்மானிடனே உனக்குக் கணவன் ஆவான்!” என்று அம்முனிவரே எனக்கு சாப விடுதலையும் விதித்திருந்தார். அவர் விதித்தபடி மனிதப்பிறவியிலும் கூட, நான் முற்பிறவியின் நினைவுடனும் தெய்வ அறிவுடனும் தானிருந்தேன். என் காரியங்கள் மேலே நடந்தேறுவதற்கு நான் என்னுடையதான வித்தியாதர நிலையை அடைகிறேன்.’ இப்படிச் சொல்லி, தன் உடலை உதறிவிட்டு, ராஜகுமாரி கனகரேகை மறைந்தாள். அரண்மனை முழுதும் பெரிய கூக்குரல் எழுந்தது.

சக்திதேவனோ இரண்டிலிருந்தும் நழுவியவனாய் ஆனான். தாண்டமுடியாத பல துன்பங்களெல்லாம் பட்டு அவ்விரு வித்தியாதர மங்கையரை அடைந்ததும் அடையமுடியாமற் போக, அவர்களையே தியானஞ் செய்தவனாய் மனம் குன்றிப்போய், தன்னைத்தானே நொந்துகொண்டு ஆசை கைகூடாதவனாய் அரண்மனையைவிட்டு வெளியே வந்து, சற்று ஆலோசித்தான்: ‘என் எண்ணம் நிறைவேறும் என்று கனகரேகை சொல்லியிருக்கிறாளே? நான் ஏன் வருந்த வேண்டும்? தைரியத்தினாலன்றோ வெற்றிகள் கிட்டுகின்றன? முன்போன வழியாகவே கனகபுரிக்கு மறுபடியும் செல்லுகிறேன். மறுபடியும் தெய்வம் எனக்கு இவ்விஷயத்தில் உபாயத்தைத் தந்துதவும்!’ இவ்வாறு யோசனை செய்துகொண்டு சக்திதேவன் அந்த நகரத்திலிருந்து புறப்பட்டான். முயற்சி எடுத்துக் கொண்ட தீரர்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளாமல் திரும்பமாட்டாகள்!

புறப்பட்ட சக்திதேவன் வெகுநாட்களுக்குப் பிறகு சமுத்திரத்தின் நடுவில் மணல் தீவிலுள்ள அதே விடங்கபுரத்தை மறுபடியும் அடைந்தான். அங்கு முன்பு எந்த வணிகனோடு கப்பலேறிப் போகும்போது கப்பல் உடைந்ததோ, அதே வணிகள் எதிரில் வருவதைக் கண்டான். ‘இவன் சமுத்திரதத்தனாயிற்றே! கடலில் விழுந்தவன் எப்படித்தான் கரை யேறினானோ? ஆனால் இது ஒரு ஆச்சரியமில்லை! நான் தப்பவில்லையா?’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டு அவ்வணிகளை நெருங்கினான். சமுத்திர தத்தனும் சக்திதேவனைத் தெரிந்துகொண்டு மகிழ்ச்சியால் அவனை அணைத்துக்கொண்டான். தன் வீட்டிற்கு அழைத்துப் போய் விருந்தளித்து, ‘கப்பல் உடைந்துபோன பிறகு நீ எப்படி கடலிலிருந்து கரையேறினாய்?’ என்று சக்திதேவனை வினவினான். கப்பல் உடைந்ததும் தான் மீனால் விழுங்கப்பட்டு உத்ஸ்தஸத் தீவிற்குக் கொண்டு போகப்பட்ட வரலாற்றை நடந்தபடி சக்திதேவன் உரைத்தான்.

பிறகு வணிகனை, அவன் தப்பிய வரலாற்றைச் சொல்லும்படி சக்திதேவன் கேட்டான். வணிகள் வர்ணித்தான். ‘அப்பொழுது கடலில் விழுந்தவன் ஒரு பலகையைப் பிடித்துக்கொண்டு  மூன்று நாள்கள் நீரிலேயே அலைந்தேன். பிறகு தற்செயலாய் அவ்வழியே கப்பலொன்று வந்தது. அக்கப்பல்காரர்கள் என் கூக்குரலிலிருந்து என்னைக் கண்டெடுத்து, தம் கப்பலில் ஏற்றிக்கொண்டனர். கப்பலில் ஏறியதும், வெகு காலத்திற்கு முன் தீவாந்தரம் சென்று அப்பொழுதுதான் திரும்பிவந்துகொண்டிருக்கும் என் தகப்பனாரை அக்கப்பலிலே கண்டேன். என்னைப் பார்த்து, அறிந்து கொண்டு, என்னை அணைத்துக்கொண்டார். கண்ணீருடன் என் வரலாற்றை அவர் கேட்க நான் சொன்னேன்: “போய் வெகுநாளாகியும் நீங்கள் திரும்பி வராததால், இது நம் சுயதர்மமாயிற்றே என்று நானும் சுயம் வர்த்தகம் ஆரம்பித்தேன். தீவாந்தரத்திற்கு போய்க் கொண்டிருக்கையில் கப்பலுடைந்து கடலில் விழுந்தவன் இன்று உங்களால் எடுத்துக் காப்பாற்றப்பட்டேன்.” இவ்வாறு நான் தெரிவித்ததும், என்னை  வைதுகொண்டு தந்தை சொன்னார்: ‘இப்படி உயிருக்கு ஆபத்தான விஷயங்களில் ஏன் இறங்குகிறாய்? நான் சேர்த்த பணமில்லையா? நான் இன்னும் சேர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பார்! இக்கப்பல் முழுதும் உனக்கென்றே தங்கமாய் நிரப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்!” என்று என்னை இப்படித் தேற்றி, அக்கப்பலிலேயே என்னை இவ்விடங்கபுரத்தில் எங்கள் வீட்டிற்கு தகப்பனார் அழைத்துவந்தார்.’

இதைக் கேட்டுவிட்டு அன்றிரவு அங்கேயே தங்கி, மறுநாள் சக்திதேவன் சமுத்திரதத்தனிடம் தெரிவித்துக்கொண்டான். ‘நான் மறுபடியும் உத்ஸ்தஸத் தீவிற்குச் செல்லவேண்டும். நான் இப்போது அங்கு எப்படிப் போவதென்று சொல்லு!’ என்று. ‘எங்களுடைய காரியக்காரர்கள் அவ்விடமே இன்று போவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய  கப்பலில்  அவர்களுடன் நீ போகலாம்,’ என்று சமுத்திரதத்தன் சொல்ல, அக்காரியக்காரர்களுடன் கூட சக்திதேவன் உத்ஸ்தஸத்தீவிற்கு வந்தான். முன்போலவே, அத்தீவில் வசித்துவரும் தன் உறவினரான பெரியவர் விஷ்ணுதத்தர் இருக்கும் மடத்தில் அவரருகாமையிலேயே தங்க வேண்டுமென்று ஆவல்கொண்டு, உத்ஸ்தஸத்தீவை அடைந்த சக்திதேவன், அங்கு கடைத்தெருவின் வழியே போய்க்கொண்டிருந்தான்.

போய்கொண்டிருக்கும்போது தெய்வவசத்தால், அக்கடை வீதியில் முன்பு சக்திதேவனைக் கடலில் அழைத்துக்கொண்டு போன செம்படவத் தலைவன் சத்தியவிரதனின் பிள்ளைகள், அருகில் சென்றுகொண்டிருக்கும் சக்திதேவனைக் கண்டு, அவன் யார் என்று தெரிந்துகொண்டுவிட்டார்கள். ‘பிராமணரே, எம் தகப்பனுடன் கூடி கனகபுரியைத் தேடி இங்குமங்கும் போனீரே! நீர் மட்டும் எம் தகப்பனில்லாமல் இப்பொழுது எப்படித் திரும்பிவந்தீர்?’ என்று சக்திதேவனைக் கேட்டனர். ‘கடலில் சுழல் வேகத்தால் கப்பல் இழுக்கப்பட்டுப் போக, உம் தகப்பன் கடலிலுள்ள தீயின் வாயில் விழுந்துவிட்டான்,’ என்று சக்திதேவன் தெரிவித்தான். இதைக் கேட்டுக் கோபங்கொண்ட செம்படவன் குமாரர்கள், தம் ஆட்களைக் கூவி, ‘இப்பழிகாரனைக் கட்டுங்கள்! இவன் நம் தகப்பனாரைக் கொன்றவன்! இல்லையெனில் இருவரும் கப்பலில் இருக்க, ஒருவர் மட்டும் கடலிலுள்ள தீக்குள் எப்படி விழுவார்? மற்றொருவர் மட்டும் எப்படிக் கரை ஏறுவார்? ஆகையால் நம் தகப்பனைக் கொன்ற இவனை நம் சண்டிகாதேவிக்குப் பலியாக்கி, நாளைக் காலையில் நாம் கொன்றுவிட வேண்டும்,’ என்று சொல்லி, சக்திதேவனைக் கட்டி, பயங்கரமான சண்டிகையின் கோயிலுக்குக் கொண்டுபோனார்கள்.

இடைவிடாது பல ஜீவன்களை விழுங்குவதும் விசாலமான வயிறு போன்ற உட்புறத்தோடு கூடியதும் பளிச்சென்று கட்டி யிருக்கும் மணி வரிசைகளைப் பற்களைப்போல் காண்பித்துக் கொண்டிருப்பதுமான அச்சண்டிகாலயம், மிருத்யுவின் வாய் போல் இருந்தது. அக்கோயிலில் இரவில் சிறையிடப்பட்டதும், தன் உயிர் இருப்பதில் ஐயங்கொண்ட சக்திதேவன், சண்டிகாதேவியிடம் தெரிவித்துக்கொண்டான்:

‘ஈச்வரி! நீ கொன்ற குரு என்ற அரக்கனின் கழுத்திலிருந்து நீ நிரம்பப் பருகிய இரத்தமே மேலே வழிந்தாற்போல் தோன்றுவதும் இளம் சூரியனின் சிவப்போடு கூடியதுமான உனது மேனி, இவ்வுலகனைத்தையும் காப்பாற்றிற்று. காரணமின்றி பகைவர் கையில் விழுந்து, உன் காலிலும் விழுந்திருக்கிறேன். நான் விரும்பியவளை அடைய வேண்டுமென்ற ஆசையால் வெகு தூரம் திரிந்துவந்தவன். வரங்களை வழங்கும் அன்னையே! என்னைக் காப்பாற்று!’

இப்படி தேவியை வேண்டிக்கொண்டு, தூக்கத்தை யடைந்தான் சக்திதேவன். தூங்கியவன் கனவில் அக்கோயிலின் கர்ப்பக் கிரகத்தினின்றும் வெளிவந்த பெண்மணி ஒருத்தியைக் கண்டான். திவ்விய உருவங்கொண்ட அந்தப் பெண்மணி அவனை அணுகி, அவனிடம் கருணை கொண்டவள் போல், ‘சக்திதேவ! பயப்படாதே! உனக்குத் தீங்கொன்றும் நேராது. இச்செம்படவச் சிறுவர்களுக்குப் பிந்துமதி என்ற சகோதரி ஒருத்தி இருக்கிறாள். அவள் காலையில் உன்னைக் கண்டு உன்னைக் கணவனாய் வரிப்பாள். அவளை நீ ஏற்றுக்கொள்! அவளே உன்னை விடுவிப்பாள். அவள் செம்படவப் பெண்ணல்ல, சாபத்தால் இங்கு வந்த தேவ ஸ்திரீ!’ என்றுரைத்தாள்.

இதைக் கேட்ட சக்திதேவன் காலையில் எழுந்ததும், கண்ணிற்கு அமுதப்பெருக்கு போல் தோன்றும் ஒரு செம்படவகுமாரி தேவியின் சந்திக்க வந்தாள். சக்திதேவனை அணுகி, தன்னைத் தானாகவே தெரிவித்துக்கொண்டு, ஆவல் கொண்டவளாய், ‘உம்மை நான் இவ்விடமிருந்து விடுவிக்கிறேன்! என் இஷ்டத்தைப்பூர்த்தி செய்யும்! என் கூடப்பிறந்தவர் எனக்கு ஏற்றவரென்று எண்ணி அழைத்துவந்த வரன்கள் அனைவரையும் நான் மறுத்து விட்டேன். உம்மைக் கண்டதும் எனக்கு அன்பு உண்டாகி விட்டது. ஆகையால் நீர் என்னை மணந்து கொள்ளும்!’ என்று கேட்டாள்.

செம்படவ குமாரி பிந்துமதி அவ்வாறு சொன்னதும், சென்ற இரவு தனக்கு ஏற்பட்ட கனவை நினைத்துக்கொண்டு இன்புற்றவனாய், அவள் சொன்னதைச் செய்வதாய் ஒப்புக்கொண்டான். அவளாலேயே விடுவிக்கப்பட்டு, அவளையே மணமும் செய்துகொண்டான். கனவில் பிந்துமதியின் உடன்பிறந்தவருக்கும் அம்பிகை தோன்றி உத்தரவிட, அவர்களும் அவள் விருப்பத்தை நடத்திவைத்தனர்.

திவ்விய ஸ்திரீயான பிந்துமதியை, இன்பத்தின் சித்திதானோ பெண்ணுருக்கொண்டு தம் புண்ணியத்தால் கிட்டியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, அவளுடன் அங்கேயே சக்திதேவன் வாழ்ந்தான். ஒருசமயம் மாடத்தின்மேல் இருவரும் இருக்கும் போது, தெரு வழியே பசுவின் மாமிசத்தைச் சுமந்துசெல்லும் சண்டாளன் ஒருவனை நோக்கி, சக்திதேவன் பிந்துமதியிடம், ‘சிற்றிடையழகி பிந்துமதி! எவை மூவுலகிலும் வணங்கத் தக்கவையோ, அப்பசுவின் மாமிசத்தை இப்பாவி தின்கிறான் பார்!’ என்று சொன்னான். அதைக் கேட்டு பிந்துமதி சொன்னாள்: ‘சொல்வானேன்! இதன் பாவம் நினைக்கமுடியாதது, பசுக்களின் மகிமையின் காரணமாகவே ஒரு சிறிய அபராதத்தினால் நான் இச்செம்படவர் குலத்தில் உதித்திருக்கிறேன். இவனுக்கு என்ன கதியோ?’ என்று.

இப்படி பிந்துமதி சொன்னதும், ‘ப்ரியே! ஆச்சரியமாயிருக்கிறதே, நீ யார்? செம்படவப் பிறப்பு உனக்கு எப்படி நேர்ந்தது, சொல்!’ என்று சக்திதேவன் கேட்டான். மேன்மேலும் கட்டாயப்படுத்தி சக்திதேவன் கேட்கவே பிந்துமதி, ‘இது ரகசியமாயிருக்க வேண்டியதானாலும், நான் சொல்லுவதின்படி நீர் செய்வதானால் சொல்லுகிறேன்,’ என்று உரைத்தாள். ‘சரி, செய்கிறேன்,’ என்று சக்திதேவன் ஆணைசெய்து பேசவும், முதலில் அவன் செய்து முடிக்கவேண்டும் என்று தான் விரும்பிய காரியத்தைச் சொன்னாள்: ‘இத்தீவில் உமக்கு இரண்டாவது மனைவியொருத்தியும் இப்பொழுது வரப் போகிறாள். அவள் சீக்கிரமாகவே கர்ப்பம் தரித்துவிடுவாள். கர்ப்பத்தின் எட்டாவது மாதம் நீர் அவளுடைலைக் கிழித்து, கர்ப்பத்தை வெளியே எடுத்துவிடவேண்டும். இதில் இரக்கத்தையோ அருவருப்பையோ நீர் காண்பிக்கக்கூடாது.’ இப்படி பிந்துமதி சொல்லவே, இதென்ன என்று வியப்புற்று, இரக்கமும் அருவருப்பும் மேலிட்டுப்போக, சக்திதேவனிடம் செம்படவ அரசகுமாரி மறுபடியும் சொன்னாள்: ‘நான் சொன்ன இக்காரியம் நீர் ஒரு காரணத்திற்காக செய்துதீரவேண்டும். இனி நான் யார், செம்படவப் பிறவி எனக்கு எப்படி உண்டாயிற்று என்ற வரலாற்றைக் கேளும். நான் முற்பிறவியில் ஒரு வித்தியாதரியாய் இருந்தேன். சாபத்தால் இப்பொழுது மானிட உலகில்  விழுந்திருக்கிறேன். நான் வித்தியாதரியாய் இருக்கும்போது, பற்களால் கடித்து வீணையின் தந்திகளைக் கட்டியதால் செம்படவ வீட்டில் பிறந்தேன். காய்ந்த பசு நரம்பு ஒன்றை இப்படி வாயால் தொட்டதற்கே இக்கீழ்ப்பிறவி ஏற்பட்டதென்றால், பசு மாமிசத்தை உண்பவன் கதியைப் பற்றி என்ன சொல்வது?’

இப்படி பிந்துமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பரபரப்புடன் அவளுடைய சகோதரர்களில் ஒருவன் வந்து சக்திதேவனிடம் சொன்னான்: ‘எழுந்திரு! மிகப்பெரும் பன்றியொன்று எங்கிருந்தோ கிளம்பி, பலரைக் கொன்று மதங்கொண்டதாய் இதோ எதிரில் வந்துகொண்டிருக்கிறது!’ என்று. அதைக் கேட்டு தன் மாளிகையில் இருந்த சக்திதேவன் இறங்கி, கையில் சக்தியாயுதம் பிடித்து, குதிரையின் மீதேறி, பன்றியைக் குறித்து விரைந்து போனான். தன் ஈட்டியால் பன்றியைக் கண்டதும் குத்தினான். அவ்வீரன் எதிர்த்து வந்ததும், காயம்பட்ட அப்பன்றி ஓடிப்போய் ஒரு குகைக்குள் நுழைந்து கொண்டது.

பன்றியைத் தேடிக் கொண்டு குகைக்குள் நுழைந்த சக்திதேவன், குகைக்குள்ளே வீடு ஒன்றையும் அதோடு கூடிய அடர்ந்த தோட்டம் ஒன்றையும் பார்த்தான். அங்கு சற்று தங்கியவன், ஆச்சரியமான அழகு வாய்ந்த கன்னியொருத்தியைக் கண்டான். அவ்வுத்தியானவனத்தில் தேவதையே அன்புகொண்டு பரபரப்புடன் எதிர்வந்தாற் போலிருந்தது. ‘கல்யாணி! நீ யார்? ஏன் இப் பதைபதைப்பு?’ என்று சக்திதேவன் கேட்க, அவள் பதிலுரைத்தாள். ‘அழகரே! தெற்குத் திக்கிற்கு அரசன் சண்ட விக்கிரமன் என்றிருக்கிறான். அவனுடைய மகள் நான். பிந்துரேகை என்று எனக்குப் பெயர். தீயெரியும் கண்ணோடு கூடிய அரக்கனொருவன் மாயையால் என்னைத் தகப்பன் அரண்மனையிலிருந்து திடீரென்று இங்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டான். அவ்வரக்கன் பசியால் மாமிசம் வேண்டி, பன்றி உரு எடுத்துக்கொண்டு வெளியே போனவன் யாரோ ஒரு வீரனால் தன் சத்தியாயுதத்தால் இப்பொழுதே குத்தப்பட்டான். குத்துப்பட்டவன் இங்கு நுழைந்து உடனே உயிர் துறந்தான். அவனால் கெடுக்கப்படாத கன்னி சீலத்தோடு கூடிய நான் ஓடிவந்தேன்,’ என்பதைக் கேட்டு, ‘அப்படியானால் இப்பதைபதைப்பு எதற்கு? ராஜகுமாரி, நான்தான் சத்தியாயுதத்தால் அப்பன்றியைக் குத்திக் கொன்றவன்,’ என்றான் சக்திதேவன்.

அதன் பிறகு ராஜகுமாரி, ‘நீ யார்?’ என்று கேட்க, ‘சக்திதேவன் என்ற பிராமணன் நான்,’ என்று தெரிவித்தான். ‘அப்படியானால் நீரே என் கணவன்!’ என்று ராஜகுமாரி சொல்ல, ‘சரி!’ என்று சொல்லி அவளை ஏற்றுக்கொண்டு, குகையிலிருந்து சக்திதேவன் வெளிவந்தான். மாளிகைக்கு வந்து, மனைவி பிந்துமதியிடம் அதைத் தெரிவித்தான். அவளுடைய சம்மதத்தின் மேல் சக்திதேவன் பிந்துரேகையென்ற குமாரியையும் மணந்துகொண்டான்.

இரு மனைவிகளுடன் அங்கு வாழ்ந்து வந்த சக்திதேவனுடைய மனைவிகளுள் பிந்துரேகை கர்ப்பம் தரித்தாள். அவளுடைய எட்டாவது மாதத்தில், முதல் மனைவி பிந்துமதி சக்திதேவனிடம் தானாய் வந்து, ‘வீரா! முன்பு என்னிடம் ஆணை செய்து கொடுத்ததை நினைத்துக்கொள். இது உன் இரண்டாம் மனைவிக்கு எட்டாவது  மாதம். ஆகையால் நீர் போய் அவளுடலைப் பிளந்து கர்ப்பத்தைக் கொண்டு வாரும். உம் உறுதிமொழியை நீரே நடத்தாமலிருக்கலாகாது,’ என்றாள். சக்திதேவன் நட்பினாலும் கருணையாலும் கலங்கினவனாய், தன் ஆணையின்படி நடக்க வேண்டியவனாய், ஒருகணம் பதிலொன்றும் சொல்லாமல் நின்றான். துன்புற்றவனாய் பிந்துரேகையிடம் வந்தான். சிரமப்பட்டுக் கொண்டு தன்னிடம் வரும் சக்திதேவனை நோக்கி பிந்துரேகை சொன்னாள்: ‘ஏன் வருந்துகிறீர்? எனக்குத் தெரியும்! என் கர்ப்பத்தைப் பிடுங்கியெடுக்க பிந்துமதி உம்மை என்னிடம் அனுப்பியிருக்கிறாள். அது நீர் அவசியம் செய்ய வேண்டிய காரியம். அதில் கொடுமை ஒன்றும் இல்லை. ஆகையால் அருவருப்பொன்றும் வேண்டாம்.’

பிந்துரேகை காரியத்தைச் சீக்கிரமாய் நடத்தவேண்டி, மறுபடியும் மெல்லிய குரலில் சக்திதேவனிடம் சொன்னாள்: ‘இப்படிப்பட்ட காரியங்களும் உள்ளன. ஆகையால் பிந்துமதி சொல்லியபடி என் கர்ப்பத்தைத் துயரத்தை விட்டுப் பிளந்தெடும்,’ என்று. பிந்துரேகை இப்படிப் பேசியும் பாவத்திற்குப் பயந்து சக்திதேவன் தயங்கிக் கொண்டிருக்கும்போது, வானிலிருந்து வாணியொன்று கிளம்பி, ‘ஏ, சக்திதேவா! தயக்கமின்றி இவளுடைய கர்ப்பத்தை வெளியே இழு! அக்கர்ப்பத்தைக் கழுத்தில் நீ பிடித்தால், அது உனக்குக் கத்தியாய் மாறும்!’ என்று தெரிவித்தது. இந்த தேவவாக்கைக் கேட்டு, விரைவில் பிந்துரேகையின் உடலைப் பிளந்து கர்ப்பத்தை இழுத்து, அதன் மென்னியைப் பிடித்தான். சக்திதேவனின் கையில் கர்ப்பம் கத்தியாய் மாறிற்று. தன் தைரியத்தால் பிடித்திழுத்த சித்திதேவியின் நீண்ட கேசபாகமோ என்று அந்தக் கத்தி விளங்கிற்று. உடனே அந்தப் பிராமணன் வித்தியாதரன் ஆனான்.

அந்தச் சமயம் பிந்துரேகையும் மறைந்தாள். அதைக் கண்ட சக்திதேவன் தன் முதல் மனைவியான செம்படவப் புத்திரி பிந்துமதியிடம் சென்று அதைத் தெரிவித்தான். பிந்துமதி சொன்னாள்:  ‘நாதா! நாங்கள் வித்தியாதரத் தலைவனின் பெண்கள். எங்களுள் மூவர் கனகபுரியிலிருந்து சாபத்தால் நழுவிப் பூமியில் விழுந்தவர்கள். ஒருத்தி கனகரேகை, அவளுடைய சாபத்தின் முடிவைத்தான் நீர் வர்த்தமானபுரத்தில் பார்த்தீர். அவளும் தன் இருப்பிடமான கனகபுரிக்குப் போய்விட்டாள். விதியின் ஏற்பாட்டால் விசித்திரமான சாப முடிவு இவளுக்கு (பிந்துரேகைக்கு) ஏற்பட்டது. நானே மூன்றாவது மகள். என் சாப முடிவும் இப்பொழுதே ஏற்படப்போகிறது. நானும் இப்பொழுதே கனகபுரிக்குப் போகவேண்டும். காதலரே! எம் வித்தியாதர உடல்களும் அங்கு கனகபுரியிலேயே இருக்கின்றன. எங்களுடைய மூத்த சகோதரி சந்திரப்பிரபை அங்கேயே இருக்கிறாள். உமக்குக் கிடைத்த இந்தக் கத்தியின் மகிமையால் நீரும் உடனே வாருங்கள்! கனகபுரியில் எங்கள் நால்வரையும், காட்டில் வாழ்ந்து வரும் எம் தந்தையளிக்க நீர் மனைவிகளாகப் பெற்று, மேலும் பல பெண்களையும் அடைந்து ராஜ்யத்தை ஆண்டு வரலாம்!’ என்று.

இப்படித் தம் உண்மையைத் தெரிவித்த பிந்துமதியுடன், வான் வழியாய் சக்திதேவன் மறுபடியும் கனகபுரிக்குப் போனான். அங்கு கனகபுரியில் மூன்று மண்டபங்களிலுள்ள கட்டில் படுக்கைகளில் எந்த உயிரற்ற திவ்ய ஸ்திரீ உடல்களை முன் பார்த்தானோ, அம்மூன்று கட்டில்களிலும் தம் ஆத்மாவோடு கனகரேகை முதலிய மூவரும் புகுந்து, அவ்விடம் வந்த சக்திதேவனை வணங்கினர். சக்திதேவனும் தம் மனைவியான மூத்தகுமாரி சந்திரப்பிரபையும் அங்கு மங்கள அலங்காரங்கள் செய்துகொண்டு, வெகுகாலங் கழித்ததால் ஏங்கி நின்ற பார்வைகளால் தன்னைப் பருகிக் கொண்டிருப்பதை, சக்திதேவன் கண்டான். தம் தம் வேலைகளில் மும்முரமாய் விரைந்துகொண்டிருக்கும் பணிப்பெண்கள் அவனுடைய திரும்பி வருகையைப் போற்ற, மனைக்குள் சென்றான் சக்திதேவன்.

அவனைப் பார்த்து சந்திரப்பிரபை சொன்னாள். ‘அழகா! வர்த்தமானபுரத்தில் நீ கண்ட கனகரேகையே என்னுடைய சகோதரியான இந்த சந்திரரேகை. நீ உத்ஸ்தஸத் தீவிலே முதலில் மணந்துகொண்ட செம்படவத் தலைவன் மகள் பிந்துமதியே இந்த சகோதரி சசிரேகை. அதற்குப் பிறகு அரக்கனால் தூக்கிப் போடப்பட்டு பிறகு உனக்கு மனைவியான பிந்துரேகை என்ற ராஜகுமாரியே இந்த சசிப்பிரபை என்ற என் தங்கை. காரியங்களைக் கைகூடும்படி செய்ய வல்லவனே! எங்களுடன் எம் தந்தையிடம் வா! அவரால் கொடுக்கப்படும் எம்மை சிக்கிரம் மணந்துகொள்!’

இப்படி மன்மதக் கட்டளைபோல் கம்பீரமாயும் விரைவாயும் சந்திரப்பிரபை மொழிய, அந்த நான்கு வித்தியாதரிகளுடன் சக்திதேவன் காட்டிலிருந்த அவர்களுடைய தந்தையிடம் சென்றான். அவரடியை வணங்கி மகளிரனைவரும் நடந்தவற்றையும் வந்திருக்கும் காரியத்தையும் தெரிவித்தனர். ஒரு ஆகாசவாணியும் அப்பொழுது அவர்கள் தந்தையைத் தூண்டிற்று. மனம் களித்த வித்தியாதரத் தலைவன், தன் நான்கு புதல்விகளையும் சேர்த்து சக்திதேவனுக்குக் கொடுத்தான். தனக்குள்ள வித்தியாதர வித்தைகளையும் கனகபுரி ராஜ்யத்தையும் சக்திதேவனுக்கு அளித்தான். தன் வித்தியாதரருக்கு இடையில், இவ்வல்லவனுக்கு சக்திவேகன் என்று பொருத்தமாய்ப் புதுப்பெயரிட்டான். ‘உனக்கிருக்கும் பெரும் சக்தியால், உன்னை வத்சேச்வரனான நரவாகனதத்தனைத் தவிர ஒருவராலும் வெல்லமுடியாது. உமக்கிடையில் சக்கரவர்த்தியாக வத்சேச்வரனான நரவாகனதத்தன் கிளம்பப்போகிறான். அவனே உங்களுக்கு வரப்போகும் தலைவன். அவனிடம் வணக்கமாயிரு’ என்று சொல்லி, பெரும் பெருமைவாய்ந்த சசிகண்டன் என்ற அந்த வித்தியாதரத் தலைவன், மனைவிகளோடு கூடிய மணப்பிள்ளை சக்திதேவனை கௌரவித்து, தபோவனத்திலிருந்து ராஜதானியான கனகபுரிக்கு அனுப்பினான். அரசனான சக்திதேவன் (சக்திவேகன்) வித்தியாதர உலகிற்கே வெற்றிக்கொடி போலிருக்கும் கனகபுரியினுள் தம் மனைவிகளுடன் நுழைந்தான்.

——————–

(கதா சரித் சாகரம் (கதைக் கடல்), சோமதேவர், தமிழாக்கம் : டாக்டர் வே. ராகவன், வெளியீடு: தமிழினி, 2019, விலை ரூ. 170.)

ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி (திரைப்பட வசனம்), பாரதிதாசன், பாரி நிலையம், 2010, விலை ரூ. 50.

ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, சி.என். குப்புசாமி முதலியார், முல்லை நிலையம், 2012, விலை ரூ. 100.