முடிவு தெரிந்த இரண்டு நாளாய் செவுடிக்கு வாயைத் திறந்தாலே குச்சித்திரம் குச்சித்தரமாய் நர வார்த்தைகள் தான். குப்பப் படையாட்சியால் தாங்க முடியவில்லை. கேட்டுக் கேட்டு காது புளித்துப் போய்விட்டது. கடந்து வாசாங்காய் விட்டுத் தள்ளிய ஒரு கணத்தில் ஓங்கி அவளின் குறளியில் குத்தி விட வேண்டுமென அவருக்குக் கைகள் பரபரத்தன. ஆனாலும் ரொம்பவும் சிரமப்பட்டு கோபத்தை அடக்கியபடி பேசாமல் குந்திக் கொண்டிருந்தார்.

வேறு வழி. இதுவேறு படாத இடத்தில் பட்டு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் வவுத்துக் கஞ்சிக்கு வழியில்லாமல் போய்விடுமென்கிற பயம். ஆத்திரத்தை மென்று மென்று விழுங்கியபடி குந்தியிருந்தும் பொறுக்க முடியாத ஒரு தருணத்தில் பட்டென்று எழுந்தார். நேராக செவுடியிடம் போனவர், காலில் விழாத குறை தான். கெஞ்சினார். “ரெண்டு நாளா ஒனக்கு என்னாடி ஆச்சி… வெளிய தல காட்ட முடியாம நானே குன்னிப் போயி குந்தி கெடக்கறன். ஒண்ணுத்துக்கும் ஆவாத ஒரு கதைக்கி அந்தக் காலத்திலேயே ஊரு சிரிக்க வைச்ச… போன கதையப் புளி ஊத்திக் கரைக்கிற மாதிரி இம்மாம் நாளு கெடந்துட்டு இப்ப வந்து முட்டி ரெத்தம் மொழங்காலுக்கு எறங்கன நேரத்துல ஏண்டி என்ன போட்டு புடுங்கற… எதுக்குடி இந்த பாடு படுத்தற…”

கருவாட்டுவாலிக் குருவியாய் செவுடி தாவுகிறாள். “ஏய்… நீனாடா முட்டி ரெத்தம் மொழங்காலுக்கு எறங்கிப் போயி நிக்கிற! இப்பதாண்டா நீ மறுகூர் பாஞ்சி போயி மைனர் பட்டம் கொண்டாடிகிட்டு துள்ற. இல்லன்னா…” அடுத்து எதுவோ பேச ஆரம்பித்தாள்.

குப்பருக்கு பொசுக்கென்று எகிறியது. தலைய ஆட்டியபடி “இல்லன்னா…” முறைத்தபடி வார்த்தையை இழுத்தார்.

கிழவி சுதாரிப்பாய் மேற்கொண்டு வார்த்தையை அதில் வளர்த்தாமல் வேறுபாடமாய் பேச்சைத் திருப்பினாள். “பீய்யத் தின்ன வாய கழுவியிருப்பன்னு தான்டா இம்மாங்காலமும் நம்பிகிட்டு ஓங்கிட்ட காலத்த ஓட்னன். ஆனா இம்மாம் நாளும் சடையன் பொண்டாட்டி இதுல வாய வுட்டுக்கிட்டேதான் இருந்துருக்கன்னு இப்பதான்டா புரியுது. நெனைச்சா ஏ(ம்) அங்கம் பத்துதுடா… பத்துதுடா…” குறுக்கில் கிடந்த மாராப்பை உருவிப் போட்டுவிட்டு வயிற்றில் அடித்துக் கொள்கிறாள். வெறுமையாய்ச் சுருங்கித் தொங்கிப் போயிருந்த மார்கள் அடிக்கேற்ப அதிர்ந்து ஊசலாடுகின்றன. குடவுகொண்ட கண்களில் நிரம்பி ஓடுகிறது. உள்பாவாடை இல்லாமல் முட்டிக்கு மேல் சுருங்கிப் போயிருந்த புடவைச் சுற்றுக்கும் கீழே கால்கள் குச்சிகளாய் தடதடவென்று நடுங்குகின்றன.

குண்டோ சரடோ இல்லாமல் கழுத்து வேர்வையில் மெலிந்து ஒட்டிக் கிடக்கும் தாலிக்கயிறு. காசராக்கு நாறாய் வெளுத்து அலங்கோலமாய்க் கிடக்கும் தலைமுடி. குப்பருக்கு ஆத்திரம் ஒரு பக்கம் செலாவரிசைக்கு நின்றாலும் குமுறி நடுங்கும் செவுடியைப் பார்க்கப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது.

அழுதே விடுவார் போலிருந்தது. “ஏண்டி அவ வூட்டுக்கு ஓட்டுதான்டி கேக்கப் போனன். அதுவும் ஓம் மின்னாலதான கேட்டன். வேற ஒரு பாவத்தையும் நா பாக்குலடி…” குரல் உடைந்து பிசிறு தட்டியது. “ஊர்லயும் மெம்பருக்கு நில்லுன்னு சொல்லி என்னைப் பல்லப் புடுங்கிட்டானுவோ. நீனும் என்னைக் கொத்திப் புடுங்கற. கண்டும் காணாததுக்கு சடையம் பொண்டாட்டியையும்… பாவண்டி அவ. ஏதோ அவளும் ஒன்ன மாதிரி தான். பழமொறத்துக்கு சாணியும் கெழப் பொணத்துக்கு சோறுமா…” சளியை துடைத்து நுனிக் கொம்மையில் தொற்றியிருந்த அண்டராயரில் துடைத்துக் கொண்டார்.

சடையன் பொண்டாட்டிக்காக பரிந்து பேசியதும் கிழவிக்கு மறுபடியும் உச்சிக்கு எகிறிவிட்டது. “டேய்… அவளாடா பழமொறத்துக்கு சாணியும் கெழப் பொணத்துக்கும் சோறுமா கெடக்கறா… ஒன்ன மாதிரிதான்டா அவளும் புதுத்துளூர் வாங்கிப் போயி பசபசன்னு நிக்கிறா. ஒனக்குப் போடாத வேற யாருக்கு மாமா போடப் போறன்னு அன்னைக்கி கொழையறப்பையே நெனைச்சன். த்தூ… இந்த லட்சணத்துல ஊர்ல, நீயிலாம் பெரிய பஞ்சாயத்துக்கார மயிருன்னு…”

“அடி ஒங்…” பல்லைக் கடித்த குப்பர், சடுதியில் சூரவேஷத்துக்கு தாவினார். எட்டிக் கொத்தாய் முடியைப் பிடித்தார்.

கிழவி கோழிக் குஞ்சாய் கத்துகிறாள். “கம்னேட்டி கால்ல வுழுந்த, கம்னேட்டி. கொல்றா… கொல்றா… கொன்னுட்டு சடையன் பொண்டாட்டிய இழுத்தாந்து வைச்சி மகராசானா வாழுடா…”

செவுடி போட்ட கூச்சலில் பனைமட்டைத் தடுப்புக்கு அந்தாண்டப் பக்கமாய் நின்றிருந்த ஆடுகள் கதறின. வாசலிலிருந்து நடுத்தெருவுக்கு ஓடிய நாய் வானத்தைப் பார்த்து ‘ஊழ்…’ என்று ஊளையிட்டது. “ச்சீய்… நீயிலாம் ஒரு பொம்னேட்டின்னு… எட்ட ஓடு…” பிடியை வலுவாய் ஒரு ஆட்டு ஆட்டி நெட்டித் தள்ளினார். கிழவி தடுமாறிச் சுவரில் சாய்ந்தவள், சரிந்து குந்தினாள். ராந்தல் விளக்கின் சுடர் அவளின் கண்களில் சிறுத்து எரிந்தது.

“ஏம் புத்திய செருப்பால அடிச்சிக்கணும். நாமதான் ஊருக்கு பெரிய பஞ்சாயத்துக்காரப் புடுங்கின்னு மெம்பருக்கு நின்னம்பாரு…” வழுக்கைத் தலையில் கையை வைத்தபடி வாசலில் கிடந்த கட்டிலில் வந்து குந்தினார். இரைச்சல் ஓய்ந்த நிம்மதியில் நாயும் கட்டிலுக்குக் கீழே வந்து முடங்கியது. இருட்டை வெறித்துக் கிடந்தது அவரின் பார்வை.

குப்பர் ஒன்றும் ஊரில் பெரிய பஞ்சாயத்துக்காரர் இல்லை. அவரது பரம்பரையும் குற்றம் செய்தவரை வீட்டுக்கு முன்னால் நடப்பட்டிருக்கும் கல்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கிற மாதிரியான அதிகாரம் படைத்த கம்பத்துக்காரர்களும் இல்லை. அப்பன் சிட்டு படையாட்சி சம்பாரித்து வைத்தது இரண்டு காணி பொட்டைத் தரைதான். இவர் ஆளாகிப் பத்து முந்திரிக் கன்றுகளை போட்டு வைத்தார். காலாகாலத்தில் கல்யாணம். செவுடி பத்து ஆடுகளை சீதனமாகக் கொண்டு வந்துதான் கழுத்தை நீட்டினாள். காது நன்றாகக் கேட்கும் நிலையிலிருந்தும் பிறந்த ஊரான களர்குப்பத்திலிருந்து செவுடியாகத் தான் வந்து வாக்கப்பட்டாள். வாட்டசாட்டமாய் இருக்கும் குப்பருக்கு பக்கத்தில் நிற்கும்போது மட்டும் உப்புக்கரிச்சான் குருவியாய் சிறுத்துத் தெரிந்தாலும் சண்டை, வாக்குத் தத்தம் என்று வந்துவிட்டால் குரலில் மட்டும் கூரம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

சிட்டு முட்டையிட்டமாதிரி இரண்டு ஆம்பளப் புள்ளைகளைப் பெற்றதும் குடலெடுத்த எலியாட்டம் குன்னிய செவுடிக்கு உடம்பு கடைசி வரை தேறவே இல்லை. பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி கெச்சலாகவே நடமாடிக் கொண்டிருந்தாள். ஆடுகள் எல்லாமும் குட்டிமேல் குட்டியாய் போட்டதில் பட்டி பெருகி குப்பருக்கு ஆடு மேய்க்கிற வேலை. என்ன போதாத நேரமோ கூட மேய்த்துக் கொண்டிருந்த சடையன், பத்துநாள் கிடந்த காயலாவில் எழுந்திருக்காமலேயே போய்ச் சேர்ந்து விட்டான். காரியம் முடிந்து மெல்ல தேறியிருந்த பொழுதில் இரண்டு மூன்று நாள்தான் அவருடன் சடையன் பொண்டாட்டி ஆடு மேய்க்க வந்தாள். மேல சூரியன் கீழ பூமாதேவி. இவரும் வாட்டசாட்டமான ஆள். அவளும் கழுத்தில் கயிறு போனாலும் உருவிவிட்ட மாதிரிதான் இருந்தவள். அதற்குமேல் அய்யும் பொய்யும் ஆண்டவனுக்குத் தான் தெரியும். கொல்லையில் ஆடு மேய்ந்துவிட்ட ஆத்திரத்தில் கண்ணகி தான் தெருவில் வாட்டபலி விடுவதாய் வாரித் தூற்றிவிட்டாள். “அந்த பயலும் செறுக்கியும் உளுத்தங்கொல்லியில ஆடுவோ போயி வுழுறதுகூட தெரியாம முந்திரித் தொங்கல்ல, காத்திய மாசத்து நாயிவோ மாதிரி… த்தூ…”

சேதி கிடைத்ததும் செவுடி பத்ரகாளியானாள். ரெண்டு பேரையும் உரியாய் உரித்து ஊரைப் பீயாக்கினாள். வெளியில் தலைகாட்ட முடியாத அவமானத்தில் குப்பர் “இம்மாம் சிரிக்க வைச்சப்பறம் இந்த ஆடுவுள நீனே கட்டிக்கிட்டு மார அடி” என்று ஆடுகளை செவுடி தலையில் கட்டிவிட்டார். சடையன் பொண்டாட்டியும் “ஆடு மேய்க்கப் போறாளா ஆள் புடிக்கப் போறாளா” பேர் வாங்கியது போதுமென இருந்த பத்துப் பதினைந்து ஆடுகளையும் விற்றுத் தொலைத்துவிட்டு ஒரே ஒரு ஒட்டிநாக்காய் இருக்கும் ஆசை மகனுக்குக் காசு பணம் சேர்க்க முந்திரிக்கொட்டை உடைக்கப் போய்விட்டாள்.

எந்த வித்து விசனமும் இல்லாமல் குப்பருக்குத் தண்ணீர் தெளித்துவிட்ட மாதிரி போய்விட்டது. போனால் போகிறது என்கிற மாதிரி இரண்டு கட்டுக்கு நுணாத் தழைகளை வெட்டி வந்து குட்டிகளுக்குப் போட்டுவிட்டு கோயில் பட்டாசாலையில் நித்தமும் ஆடுபுலி ஆட்டம் தான். பசங்களைப் பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு செவுடி ஆடுகளை முந்திரித்தோப்புப் பக்கம் ஓட்டிக்கொண்டு போய்விடுவாள். இருந்தாலும் அவர்மீது அவளுக்கு அலட்டிதான்.

கண்கள் ஆடுகள் மேல் கிடந்தாலும் யோசனை குப்பர் பேரில்தான் ஓடிக் கொண்டிருக்கும். தின்னு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் சும்மா இருக்க மாட்டானுவோ! மேய்ச்சக்கால் பக்கம் வருகிறவர்களிடம் கேட்பாள். “ஒருகட்டு வெறுவு வெட்டிக்கிட்டு போவலாம்னு எங்க கெடாயர வரச் சொல்லிட்டு வந்தன். வராம இன்னமும் கோயிலு பக்கம்தான் குந்திக் கெடக்கறாரா?” விசாரித்து ஆளின் இருப்பை உறுதி செய்து கொள்வாள்.

காலம் ஓடியது. பசங்கள் தலையெடுத்தார்கள். ஆளுக்கொரு கட்டையைக் கட்டி வைத்து தலைக்கு ஒரு காணி முந்திரியை எழுதி வைத்தார். ஊரோர சின்னவன் பாகத்து முந்திரிக் கொல்லையில் ஒரு குடிசையைப் போட்டு கோட்டை அடைப்பாய் வேலியைக் கட்டி ஆடுகளோடு இருவரும் தனிக்குடித்தனமாய் சிக்கற எட்ட வந்து விட்டார்கள். குப்பருக்கு வழக்கம்போல ஆடு மேய்க்கிற வேலையில்லை என்றாலும் பட்டிக்கு ராக்காவல் அவருடையது. நரித் தொந்தரவு வேறு. கயிற்றுக் கட்டிலில் பக்கத்திலேயே படுத்துக்கொள்வார்.

பகலெங்கும் அக்கடாவென்று கோயில் பட்டாசாலையில் குந்திக் கழியும் அக்குத்தொக்கு இல்லாத பிழைப்பு. பொண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டவன், பங்காளியால் பல் பிடுங்கப்பட்டவன், கூத்தியா சம்பாதிக்கப் போய் காசுபணத்தை தொலைத்தவன்… என பிரச்சினைகளில் சிக்கிக் கிடக்கிறவர்களின் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்து மனதை ஆற்றிக்கொள்ள கிடைத்த பொருத்தமான நபராக மாறிப் போனார் குப்பர். பிறரின் சிக்கல்களை, கதைகளை ஊங்கொட்டி கேட்டுக் கேட்டு கடைசியில் கருத்து சொல்லவும் ‘இப்பிடிப் போடா அப்பிடிப்போடா’ என வழி காட்டவும் செய்யலானார். படுமுடிச் சாய் சிக்கலில் தவித்து தூக்கம் வராதவர்கள் ராத்திரியில் வழிப்படலைத் திறந்து வந்து குடிசையிலேயே குந்தி கதைகதையாய்ச் சொல்லி ஆற்றிவிட்டு மனத்தெம்பாய் எழுந்திரித்துப் போனவர்களும் உண்டு.

“ஓம் பஞ்சாயத்த வாயன் குப்பங்கிட்டயே சொல்லி பாப்பும்” என சூத்துக்கும் பின்னால அவன் பட்டம் போட்டு பேசினாலும் “குப்பருகிட்ட போனாதான் இதுக்கு ஒரு ஈவு கெடைக்கும்னு ஓங்கிட்ட வந்தம்” வாசலில் வந்து மரியாதை நிமித்தம் காட்டுகிற போது குப்பருக்குத் தலைகால் புரியாது. அதோடு “இப்படி வந்து குந்து பெரிப்பா” காரியங்கவையில் சபை நடுவில் குந்த வைத்து வெற்றிலைப் பழத் தட்டுகளை முன்னால் நகர்த்தி தாம்பூலம் போடச் சொல்லியும், சுடுகாட்டில் தொழிலாளிகளுக்கு வண்ணான் விரிப்பில் தலமானாய் குந்தி பணம் கொடுக்கவுமாய் வளர்ந்தவர், நாளாவட்டத்தில் மணக் கொல்லையின் தவிர்க்க முடியாத பஞ்சாயத்துக்காரராய் ஆகிப் போனார்.

“இதுலாம் நமக்கு தோதுப்படாது” என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார். ஆனாலும் இரண்டு தடவையாய் மெம்பருக்கு வந்தவர்கள் ஆடின ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற யோசனையும் அவருக்குள் கோடு கிழித்துக் கொண்டிருந்தது. கோயில் படிக்கட்டில் குந்தவைத்து ஊர் இளஞ்செட்டில் எடுப்பானவானாகத் தலைகாட்டிக் கொண்டிருந்த கீரி மகன் சின்னசெல்வராசு அடித்த அடியில் இவருக்கு அந்த யோசனை வலுத்தே விட்டது.

“நீ வேண்ணா பாரு பெரிப்பா… மின்ன இருந்த மாதிரி மண்ணுமுட்டாட்டம்லாம் சனங்க இப்ப இல்ல. ஊர்ல நடக்கற கங்காட்சியலாம் பாத்து பாத்து பட்டுத் தெளிஞ்சி போயிதான் இருக்குதுவோ. மெம்பருக்கு நிக்கற இந்தப் பயலுவோ ஆயிரம் காசிபணத்தக் குடுத்தாலும் வாங்கி வைச்சிகிட்டு நீதி நாயம் பாத்து நடக்கற நெல்லவனுக்குதான் இந்தத் தடவ ஓட்டு போடும் பாரு.”

“நெசமாலுமாடா சொல்ற செல்ராசு…” ஆவலமாய்க் கேட்டார் குப்பர்.

“நெசமாலுந்தான் பெரிப்பா. சந்தேகமாயிருந்தா நீனே மெம்பருக்கு நின்னு பாரன். அதுக்கு தகுதியில்லாத ஆளா நீனு. எம்மாஞ் சிக்கல தீத்து வைச்சிருப்ப. எத்தினி குடும்பத்துக்கு வௌகேத்தி வைச்சிருப்ப. நீயிலாம் நின்னா… அடிச்சிச் சொல்றன். நீதான் நம்ப வார்டுக்கு மெம்பரு” புள்ளடித்த மாதிரி சொன்னான்.

“என்னாடா சொல்ற? நா நெம்பருக்கு நின்னா மொதல்ல நீ நெகாய எனக்கு ஓட்டுப் போடுவியாடா?” பரிதாபமாகக் கேட்டார்.

“அட மொதல்ல நீ நில்லு பெரிப்பா. ஒன்னமாதிரி நாயத்தப் புடிச்சிப் பேசற ஆளு வந்தாதான் ஊரு உருப்படும்.” தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாய்ச் சொன்னான் கீரி மகன்.

“சரி ஆவறது ஆவட்டும். நின்னுடும் போடா.”

செவுடி குறுக்கே தலையாட்டினாள். “என்னா அறுவது தீவாளிய பாத்துட்டு அறுவத்தியோராவது தீவாளிய பாக்கப் போற வயிசில மெம்பரு மேல ஒனக்கு ஓசன ஓடுது. இந்த பிச்சக்காரப் பயலுவோ வந்து சொல்ற பிக்கேறிக் கதைவுள ஊங்கொட்டிக் கேக்கறதுல ஒனக்கு பெரிய நாட்டாமன்னு நெனப்பு. நண்டு கொழுத்தா வளையில தங்காது. பள்ளி கொழுத்தா பாயில படுக்க மாட்டாங்கற கதையா போயி பங்கப்பட்டுகிட்டு நிக்காத. பேசாம ஆடு மேய்ச்சாந்து போடறதத் தின்னுட்டு வூட்ல குந்து. ஆமா…” கறாராய்ச் சொல்லிவிட்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு போனாள்.

“போயன் செவுட்டுக்…” குரலில் கொள்ளிக் கட்டையை நீட்டியவர், செவுடி தலை மறைந்ததும் அடுக்குப் பானையில் இருந்த கெடாக் குட்டி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு போய் டிப்பாஸ் கட்டினார்.

ஆண் ஒருத்தர், பெண் ஒருத்தர் என இரண்டு மெம்பருக்கு இவரைச் சேர்த்து ஏழு பேர் தாக்கல் செய்தபோதே குப்பருக்கு கொஞ்சம் இடித்தது. பங்காளி, ஒறம்பரை என்று மூன்று தெருவையும் ஆறு பேராய் பிரித்துக் கொண்டார்கள். இவர் வகையறா என்று சொல்லும்படியானதில் சின்னமகனுக்குப் பெண் கொடுத்த இவரின் சம்பந்தி நின்றார். மனைவி, மகன்கள் எல்லோருமே சம்மந்தி நிழலில் ஒதுங்கவும் இவர் மட்டும் தனித்துப் போனார். ஆணியடித்த மாதிரி பேசிய கீரிமகன் சின்ன செல்வராசை மிகவும் நம்பிக்கையாய்ப் போய் பார்த்தார். “அன்னைக்கி சொன்னந்தான் பெரிப்பா. இப்ப என்னாடான்னா எங்க அண்ணன் மொவனும் நிக்கிணும்னு ஆசப்பட்டுட்டான். இதுக்குமேல ஓங்கூட வந்து நின்னா என்னிய தப்பா நெனைப்பானுவோ. அரவங்காட்டாம போ. அவங்கூட நின்னாலும் ஓட்ட ஒனக்குத் தான் போடுவன். அதோட, எத்தினி பேரு நின்னாலும் எவன் எம்மாங் குடுத்தாலும் சனங்க ஒன்னலாம் அம்மாஞ் சாமானியமா மறந்துடாது பெரிப்பா. ஒவ்வொருத்தருக்கும் அவ்வளவு நெல்லது செய்ஞ்சி வைச்சிருக்க. நீ வேண்ணா பாரு, நூத்துக்கு மேல வித்தியாசத்துல நீ செயிக்கிலன்னா ஓஞ் சோட்ட கைட்டிக்க…”

கீரி மகன் ஒத்தாசையாய் கூடமாட வரவில்லையென்றாலும் ஒரு லட்சம் பெறுகிறமாதிரி அவன் சொல்லிய சொல், கூடுதல் தெம்பைக் கொடுத்தது. ஊரே ஆறாய் பிரிந்து கிடக்கிற சூழலில் தனியாளாய் வீட்டுக்கு வந்தார். “சொன்னம் பாத்தியா ஒண்டியா ஒன்ன வுட்டுட்டானுவோ பாரு நாளைக்கி கட்ன பாவத்துக்கு நா வேணுமின்னா ஒனக்கு ஒரு ஓட்டப் போடலாம். வேற ஒரு பய செறுக்கியும் ஒனக்கு கைய அறுத்துக்க மாட்டாங்க… நா சொல்றது நடக்குதா இல்லியான்னு நாளைக்கி பாரு” சொல்லியபடி இடுப்பிலிருந்த செப்புக் குடத்தை செவுடி திட்டென்று திண்ணையில் வைத்தாள்.

“இன்னைக்கி நா ஒண்டியாதான்டி நிக்கிறன். நாளைக்கி ஊரே தெரண்டு இந்த ஒண்டிக்கிப் பின்னால நிக்கப் போறதப் பாக்கதான் போற” சொல்லிவிட்டு பூடகமாய்ச் சிரித்தார்.

வாளிச் சின்னம் ஒதுக்கியிருந்தார்கள். தலைவருக்கு நின்றவர்கள், அடித்துப் பூசியது போக மீதமிருந்த இடங்களை மெம்பருக்கு நின்றவர்கள் வெள்ளை அடித்து சின்னம் வரைந்தார்கள். வீட்டுக்கு வீடு நோட்டிசாய் கொடுத்தார்கள். கும்பல் கும்பலாய் லாரிக்குப் போடு, பல்புக்குப் போடு, முத்து சோளத்துப் போடு என்று ஊரை பிரி கட்டி அடித்தார்கள். தண்ணியும் கறியும் தாராளமாய்ப் புரண்டோடியது.

நாள் நெருங்க நெருங்க கூழில் விழந்த ஈயாய் குப்பர் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். தெருவில் ஒன்றிரண்டு பேர் பேசிக்கொண்டது காத்து வாக்கில் காதில் வந்து விழுந்தது.  “இப்ப இம்மாங் காசிய செலவு பண்ணி நிக்கிறானுவுள, மெய்யா பொய்யா நாளைக்கி செயிச்சி வந்தா ஊருக்கு நெல்லது செய்வானுவோன்னா நெனைக்கற. ஊகும்… போட்ட மொதல எப்பிடிடா வட்டியோட எடுக்கலாம்னுதான் பாப்பானுவோ!”

ஊர்க்காரர்கள் தெளிவாய் இருப்பதைக் கண்டு குப்பருக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது. நோட்டிசு கீட்டிசு எதுவுமில்லை. வித்தியாசமாய் சனங்களைத் திசைதிருப்ப வேண்டுமென்று முடிவெடுத்து இறங்கினார். கசங்கலாய் இருந்தாலும் பளீரென்று வெள்ளைவேட்டி சட்டை. தோளில் துண்டு. செவுடியே அசந்து போய்விட்டாள். “என்னா மாப்ள,. என்னைக்குமில்லாம வெள்ளையுஞ் சொள்ளையுமா?”

“என்னாடி வெவரம் புரியாம பேசற. ஓட்டுக் கேக்கதான் வடக்குத் தெருவுக்கு போறன். நீ சோறு ஆக்கற வேலைய பாரு. அங்க வந்தினா அதியும் இதியும் சொல்லி ஓட்டக் கலைச்சிடுவ.” செவுடியை வீட்டிலேயே அசமடக்கி விட்டுவிட்டு தோட்டத்தில் கிடந்த பழைய இரும்பு வாளியை எடுத்து வந்தார். பொத்தலை அடைக்க தார் உருக்கி ஊற்றப் பட்டிருந்த அது, தண்ணீரோடு தூக்குவதாய் கனத்தது.

“இப்ப எதுக்கு சாணி கரைச்சிப் போடறத எடுக்கற?” செவுடி சந்தேகமாய் கேட்டாள்.

“எதுக்கா? இதான்டி எனக்குக் குடுத்துருக்கற சின்னம். கைப்புண்ணுக்கு என்னா கண்ணாடி கெடக்கு! அவவன் காசித் திமிர்ல சீப்பு, பூட்டுசாவி, சோளக்கருதுன்னு வாங்கியாந்து குடுத்து சனங்க வவுத்து எரிச்சல வாங்கி கொட்டிக்கிறானுவோ! எனக்கு வேலயும் மிச்சம், செலவும் மிச்சம். குப்பப் படாச்சினா சனங்களுக்கு தனியா தெரியிணும். மறந்துடாம நீ மொதல்ல வாளி சின்னத்துக்கு ஓட்டப் போடு.”

கையில் கனத்த வாளியோடு குப்பர் போவதைப் பார்த்த எவருக்கும் சிரிப்பாய்த் தானிருந்தது. ஆனாலும் பளீரென்கிற வெள்ளை வேட்டி சட்டையில் பின் மண்டையில் அந்தி வெயில் மின்ன குப்பர் நடந்து போகிற மிடுக்கை பார்க்கப் பார்க்க செவுடிக்கு எப்போதுமில்லாதபடிக்கு எதுவோ இடித்து உறுத்தியது. “போறதப் பாத்தா ஓட்டு கேக்க போற மாதிரி தெரியிலிய… எங்கியோ பொண்ணு பாக்கப் போறமாதிரி…” குழப்பத்தோடு அவசரம் அவசரமாய் உலையை சாய்த்துப் போட்டு அடுப்பை ஊதினாள்.

சடையன் மருமகளுக்கு சீப்பு சின்னம் ஒதுக்கியிருந்தார்கள். சின்னவன் மாமனாருக்கு முத்துச்சோளம். எல்லோருமே தாராளமாய் காசு கொடுத்தாலும் மற்றதை விடவும் இந்த சீப்பும் சோளக் கருதும்தான் கொஞ்சம் வலுவாகத் தெரிந்தன. ஆனாலும் எல்லாவற்றையும் மிஞ்சி விடுகிறமாதிரி குப்பரின் கை, வாளியை வீசிவீசி ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

“என்னா சித்தப்பா, வாளியும் கையுமா பறக்கற…” தலையில் விறகுக் கத்தையோடு எதிரில் வந்த குண்டு மகன் எடுமுனையிலேயே கேட்டான்.

“ஓட்டு கேக்கதான்டா போறன். வாளிச் சின்னம். மறக்காம ஓட்டு போட்றா. சென ஆட்ட அடிச்சி விசுறுக் குட்டி போட்டுட்டுதுன்னு வந்த சிக்கல்ல, ஒன்ன காபந்து பண்ணி வுட்டத மறந்துடாத. வாளீ… வாளீ…” ஒட்டியிருந்த சேற்றுத் தண்ணீர் உதிரப்பொட்டையாய் வெள்ளைச் சட்டையில் ஒழுகுவதுகூட தெரியாமல் வாளியைத் தூக்கிக் காட்டினார்.

வடக்குத்தெரு முகத் தலைப்பிலிருந்து ஆரம்பித்தார். “தே புள்ள விசயா… வாளிச் சின்னம். மறந்துடாத. நா கொஞ்சம் தலைய சாய்ச்சியிருந்தன்னா கதிர்வேலு ஒன்னக் கை கழுவியிருப்பான். பாத்துப் போடு.”

“எலேய் முனுசாமி, முந்திரியில செகாரம் புடிச்சதுல பூன பீய்ய மறைக்கிற மாதிரி மறைச்சி, வந்த ஆளுவுள மடக்கி ஆயக் கட்டி அனுப்பனன். வாளிக்குப் போடு.”

“புள்ள காத்தாயி… வாசோத்த புடுங்கற மாதிரி வாழற வாழ்க்கைய கும்ப கூடிகிட்டு வந்து அறுத்து வுடச் சொன்னானுவோ. குப்பனுக்கு வௌக்க ஏத்தி வைச்சிதான் பழக்கம தவிர அமிச்சி பழக்கமில்லன்னு சொல்லி ஒங்க ரெண்டு பேரையும் கூப்புட்டு சண்ட போட்டு வுட்டன். தே இப்ப நெறவௌக்கா புள்ளகுட்டியோட வாழுறிங்க. பாத்து பழசலாம் யோசன பண்ணி வாளிக்குப் போடுங்க.”

எதிரில் வந்த காத்தான் மகனை நிறுத்திக் கேட்டார். “பசிக்குதான்டா ரெண்டு மாங்காய பறிச்சிட்டான் வுடுடான்னு புளுவங்கிட்ட சொல்லி ஒத வுழாம ஒன்னத் தப்பிக்க வுட்டன்டா. பாத்து வாளிக்கு போட்றா பையா.”

“எனக்கு ஓட்டு இல்ல தாத்தா” அண்ணாக்கயிற்றில் வளைத்து கால்சட்டையை செருகியபடி அவன் சொன்னதும் அவருக்கு சப்பிட்டுப் போனாலும் குரலை இறக்கிச் சொன்னார். “சரி ஒப்பன் ஓத்தாக்கிட்ட சொல்லி வாளிக்குப் போடச் சொல்லு.”

“எலேய் மைனாங்குட்டி, கருமாதித் தொரையில வெட்டியானுக்கு புக்காம நூறு ரூவாய குடுத்துட்டன்னு ஏம் பேர்ல ஓத்தாளும் ஓம் பொண்டாட்டியும் கவுறு கட்டிகிட்டு நிக்கிதுவோ. அடுத்தடுத்த காரியம்னா வழக்கமாக் குடுக்கற அம்பதோட நிறுத்திக்கிறன். வாளிக்கு போடச் சொல்லு.”

வாளியைத் தூக்கித் காட்டியபடி கும்பிட்டு ஓட்டுக் கேட்டபடி வந்தவர், அடுத்தது சடையன் பொண்டாட்டி வீடு என்றதும் கொஞ்சம் தேங்கினார். மனசுக்குள் அவரையும் அறியாமல் ஆடுகளும் சடையன் பொண்டாட்டியுமாய் முந்திரிக் காடுகளில் மேய்ச்சலில் திரிந்த வெயில் பொழுதுகள் ஒருகணம் மின்னலாய் வந்து போயின. கூடவே சடையன் மருமகளும் சீப்புக்கு நிற்பதால் எப்படிப் போய் ஓட்டு கேட்பது என்கிற தயக்கமும் கவிந்தது.

திடுமென ஒரு நபர் இரண்டு ஓட்டு போடலாம் என்கிற நினைப்பு வந்ததும் ஆர்வமாய் சடையன் வாசலுக்கு அடியெடுத்து வைத்தார். பின்னால் யாரோ வருவது மாதிரி தெரிந்தது. திரும்பிப் பார்த்தவருக்கு முகம் சிறுத்தது. செவுடிதான். காசராக்க நாறாய் நரைத்த முடிகள் காற்றில் பறக்க ஒரு கையால் புடவையை மழுப்பி சுருட்டியபடி அரக்கப்பறக்க ஓட்டமும் பெருநடையமாக ஓடி வந்துகொண்டிருந்தாள். “கேட்டையாட்டம் இது எதுக்கு இந்த ஓட்டம் ஒடியாறது!”

“என்னா கெழுவி, மாமன் மாப்ள சட்டைய போட்டுகிட்டு தெருவையே வளைக்கறாரு. எனுமோ இப்பதான் குண்டோட்டம் குதிரையோட்டமா ஒடியாற?” சடையன் வீட்டுக்கு நாலு வீடு தள்ளியிருக்கிற இந்திராணி கேட்கிறாள்.

செவுடி பறக்கிறாள். “அட அந்த திருட்டுப் பய கெடக்கறான் போயன். நா எதுக்கு என்னைக்குமில்லாம இப்பிடி வெள்ளையும் சொள்ளையுமா லகாங் கொட்டிகிட்டு போறான்னு பாத்தா இப்பதான் புரியிது. பீ தின்ன நாயிக்கி பீமேலதான் யோசன ஓடுங்கறது சரியாதான் இருக்கு.”

செவுடி மூச்சிரைக்கப் பேசியபடி போய் நிற்கவும் முகம் பூராவும் சிரிப்புமாய் சடையன் பொண்டாட்டி அருகாலை விட்டு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. இவள் வயதுதான் அவளுக்கும் என்றாலும் இன்னமும் கட்டுவிடாத உடம்பு. குளித்துச் சீவி புதுப்புடவை கட்டி ஓட்டுக் கேட்க கிளம்பியிருக்கும் அவளைப் பார்க்கப் பார்க்க செவுடிக்கு பற்றிக் கொண்டு வந்தது. “ஆளத் தின்னு அறுத்துக் கெடாசி, ஆறு கழுத வயிசி ஆனப்பறமும் எனுமா ஆள மடக்கற மாதிரி நிக்கிறா பாரு” குத்திக் குதறி உள்ளுக்குள் கிழிக்கிறாள்.

குப்பர் எதையும் பொருட்படுத்தாமல் சிரித்தபடியே சடையன் பொண்டாட்டியிடம் கும்பிட்டுக் கேட்டார். “வாளிய மறந்துடக் கூடாது சொல்லிட்டன்.”

“அட என்ன மாமா… இதலாம் சொல்லிகிட்டு. யாரு எவுரு? ஒனக்குப் போடாம வேற யாருக்குதான் போடப் போறன். ரெண்டு ஓட்டுல ஒரு ஓட்டு ஒங்குளுக்குப் போட்டுடறன் மாமா. நீங்களும் மறக்காம ஏம் மறுமொவளுக்கு சீப்புக்கு ஒன்னப் போடுங்க.” தாண்டிய வயதிலும் கிளி கொஞ்சுகிற மாதிரி சடையன் பொண்டாட்டி சொந்தம் கொண்டாடிச் சொன்னாள்.

செவுடிக்கு தலை சுக்குநூறாய் வெடித்துத் தெறிக்கிறது. “எலேய், நானும் காலங்கெட்ட காலத்துல எதுக்கு மெம்பருக்கு நிக்கிறான்னு தெரியாமதான் இன்னமும் ஓசன பண்ணிகிட்டு கெடக்கறன். இங்க வந்து பாத்தாதான தெரியது. இந்த ஓட்டுக்கு ஆசப்பட்டுதான் நீ மெம்பருக்கு நிக்கிறன்னு. வாடா வூட்டுக்கு வா… இந்த திருட்டுப் பீ திங்கற புத்திய அங்க வைச்சிக்கிறன்…” மூஞ்சியில் குத்தாத குறையாய் கையை நீட்டி நீட்டி குப்பரிடம் பேசியவள் திரும்பிப் பார்க்காமல் வீட்டுப் பக்கம் போய்க் கொண்டிருந்தாள்.

“அது கெடக்குட்டும் வுடுங்க. இன்னைக்கு நேத்தா பாக்கறன். எப்பியும் எதையாவுது புடிச்சிப்போட்டு கெறாவிகிட்டு கெடக்கும். நீங்க வாளிய மறந்துடாதீங்க.” குப்பர் மனந்தளராமல் அடுத்தடுத்த வீடுகளுக்கு நகர்ந்து கொண்டிருந்தார்.

வயிறு குளுப்பைக் கட்டியபடி குப்பருக்கு, ஒண்ணுக்குத் தாங்கவில்லை. கட்டிலை விட்டு இறங்கிப் படலோரம் இருட்டில் போய்க் குந்தினார். “அடக் கடவுள! எத்தினி பேருக்கு எம்மாஞ் செஞ்சிருப்பன். இந்த வழிப்படல தொறந்து தொறந்து பஞ்சாயத்தம், பஞ்சாயத்தம்னு எம்மாம் பேரு வந்துருப்பானுவோ! அட மாரியாத்தா… இம்மாம் பெரிய ஊர்ல ஒரு பயக் கூட நம்பள மதிச்சில வாணாம் வுடு” பெருமூச்சி விட்டபடி எழுந்தார். ஆனாலும் மனசு ஆறாமல் கொதித்துக் கொண்டேயிருந்தது.

நாள் நெருங்க நெருங்க தலைவருக்கு நின்றவர்களை விடவும் மெம்பர்களுக்கு நின்றவர்கள்தான் அதிரடியாய் இறங்கி வேலை பார்த்தார்கள். தண்ணி, கறிச்சோற்றோடு வீட்டுக்கு வீடு தட்டு, விளக்கு, செம்பு என கொடுத்துக் கொடுத்துக் கும்பிட்டார்கள். மகனும் தானுமாய் களத்தில் இறங்கிய சடையன் பொண்டாட்டி பெரிய பேன் சீப்போடு ஓட்டுக்கு இருநூறைக் கொடுத்தாள். முதல்நாள் இரவில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி சின்னவன் மாமனார், சனங்கள் வாயைப் பிளக்கிற மாதிரி முந்நூறு ரூவாயை மொடமொடவெனக் கொடுத்து மடக்கினான். தென்னமரத்துக்காரன் இந்தத் தடவை இல்லையென்றாலும் அடுத்த தடவையிலாவது பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் வேண்டாம் என உதறியவர்களுக்குக் கூட தலைக்கு அம்பது, நூறாய் கையில் வைத்து அழுத்தினான். “குடுங்கடா குடுங்க. கடைசியில வாயில வெரல வைச்சிகிட்டுத் தான் போவப் போறிங்க. சனங்களுக்கு நேந்து நெதானம் தெரியாம இல்ல…” குப்பர் தலையை ஆட்டிக்கொண்டு போனார்.

முக்காலே மூணு வீசம் ஓட்டும் முத்துச்சோளத்திற்கு தான். நூறு ஓட்டு வித்தியாசத்துக்கு மேல் சின்னவன் மாமனார் வந்திருந்தார். அடுத்து சடையன் பொண்டாட்டி, தானே செயித்ததாய் பூரித்துப் போனாள். ஆனாலும் முடிவு இவ்வளவு மோசமாய் இருக்கும் என்று குப்பர் நினைக்கவேயில்லை. வாளிக்கு ‘ரெண்டே ரெண்டு’ ஓட்டுகள் தான். நினைக்க நினைக்க பகீர் பகீரென்று எகிறியது, அவருக்கு.

“இந்த ஊர்ல இனி எவன் என்ன மதிக்கப் போறான். மதிச்சி எவந்தான் வந்து பஞ்சாயத்தம் சொல்லுவான்…” எழுந்தார். குடிசைக்குள் செவுடியின் முனகல் சத்தம் கேட்டது. “பாவம் இந்த கருமாந்தரம் வேற. நேரங்காலம் தெரியாம வந்து வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிது. இவளே இல்லன்னா கூட ஒரே ஒரு ஓட்டுதான்னு இன்னம் கேவலமா போயிருக்கும். அடிகிடி வலுக்க பட்டுகிட்டு போச்சா…”

குடிசைக்குள் எட்டிப் பார்த்தார். ராந்தல் வெளிச்சத்தில் செவுடி பெனாத்திக் கொண்டு கிடந்தாள். “தேவுடியா… இன்னம் ஒனக்கு ஆளு கேக்குதாடி… இன்னம் திருட்டுப் பீ திங்கறதுக்கு நிக்கிறியாடி நாடுமாறி” குப்பருக்குத் திரும்பவும் காந்தாளம் பொத்துக்கொண்டு கிளம்பிய நேரம், வாசலில் ‘வள்…வள்…’ நாய் குரைக்கிற சத்தம்.

“யாரது?” கட்டிலோரம் வந்து ராந்தலின் திரியைத் தூண்டிவிட்டார். மள்ளாட்டையன் பொண்டாட்டி லட்சுமி இறுக்கமாய் வந்து நின்றாள். “என்னா புள்ள, இருட்ல தனியா?” கட்டிலில் குந்தினார்.

“நித்தம் குடிச்சிட்டு குடிச்சிட்டு வந்து அடிக்கறதும் புடிக்கறதுமா அவம் பண்றதுலாம் நாயந்தானா மாமா?” வந்த சூடு மாறாத ஆத்திரத்தோடு நேரடியாக பஞ்சாயத்தம் வைத்தாள் லட்சுமி.

பட்டென்று குப்பருக்கு எல்லாமும் மறந்து ஊரின் பழைய பஞ்சாயத்துக்காரராக மாறிவிட்ட உற்சாகம். பெருமையாகக் குடிசைப் பக்கம் பார்வையைத் திருப்பினார், திக்கென்றது. நாய் போட்ட சத்தத்திலேயே எழுந்து வந்திருந்த செவுடி, லட்சுமி மீது விழுந்து பிடுங்காத குறைதான். “யாரிடி அவ, இப்பதான் மாமங்கிட்ட அதிசயமா நாயங் கேட்டு நொட்றதுக்கு வந்துருக்கறவ. ஊரு பஞ்சாயத்தம் கேட்டு கேட்டு ஏங் குடும்பத்துக்கு சொயிட்டு வைச்சதுலாம் போதும். போயி வேலைய பாரு.”

எதிர்பார்க்காத அதிர்வில் ஆடிப்போய் விட்டாள் லட்சுமி. இருந்தாலும் சுதாரித்து “இல்ல அத்த… நான்லாம்…” பேச ஆரம்பித்தவளை விடவில்லை. “என்னாடி மறுபடியும் அத்த பொத்தன்னு நீட்டிக்கிட்டு இருக்கற… சொல்றதுலாம் ஒண்ணும் காதுல ஏற்குல?” மூஞ்சியில் அடிக்கிற மாதிரி திரும்பவும் தாண்டினாள்.

லட்சுமி, ஏற்கெனவே குடிகார ஆம்படையானிடம் அல்லல்பட்டு வந்தவள். வந்த இடத்தில் செவுடி விடாமல் எடாவியதும் அவளும் கடந்துவிட்டாள். “இந்தா… இங்க வந்தது தப்பா இருந்தாலும் இருக்கட்டும். தாடையில போட்டுக்கறன். நீ ரொம்ப நீட்டாத, அப்பிடியே நிறுத்து. ஒரு கட்ன மகராசன் மெம்பருக்கு நிக்கிறாரன்னு மதிச்சி நீனே ஒரு ஓட்ட போடுல. தென்ன மரத்துக்காரங்கிட்டயும் சோளக்கருதுக்காரங்கிட்டயும் பணத்த வாங்கி பல்ல இளிச்சிட்டு வந்து பெரிய அரிச்சந்தரன் வூட்டுக்காரனுக்கு பக்கத்து வூட்டுக்கார மயிரு மாதிரி எனக்கு நாயம் பொளந்துகிட்டு நிக்கிற. இந்த மாமனுக்காகப் பாக்கறன். இல்லன்னா வயிசி ஆனவன்னு கூட பாக்காம…” பொரிந்தபடியே படலைத் திறந்த வேகத்தில் மூடாமல்கூட போய்க்கொண்டிருந்தாள்.

குப்பர் வெலவெலத்துப் போய் எரிந்து கொண்டிருந்த ராந்தலையே வெகுநேரமாய் பார்த்தபடி குந்தியிருந்தார். இருந்தாலும் மனங் கேட்கவில்லை. திரும்பி வாசலில் நின்றிருந்த செவுடியிடம் அழுகிற மாதிரி கேட்டார். “நீ கூட என்ன மதிச்சி ஒரு ஓட்ட போடுலடி. அப்பிடியாப்பட்ட குடுத்தனமா நா பண்ணிட்டன்…”

கொஞ்சம்கூடத் தயக்கமில்லாமல் அழுத்தம் திருத்தமாய் செவுடி “ஒரு உப்புக்கும் ஒதவி இல்லாத ஒனக்கு போட்டு என்னா புண்ணியம்னுதான் வுட்டுட்டன். இப்ப என்னா அதுக்கு?” என்றவள், இடைவெளி விட்டு திரும்பவும் ஆரம்பித்தாள். “ஒனக்குதான் சடையன் பொண்டாட்டி இருக்காள… ரொம்ப உரிமையா ஒனக்கு போடாம வேற யாருக்கு போடப் போறன் மாமான்னு எழைஞ்சிகிட்டு நின்னு போடறதுக்கு! அந்தத் தேவுடியா… நாடுமாறி… சம்மந்தம் கலந்து பேரன் பேத்தி எடுத்தும் இன்னம் ஆளு புடிக்க நிக்கிறாள… அவ இருக்கக்குள்ள ஏங்கிட்ட வந்து ஓட்டு போடுலன்னு எதுக்கு ஒடம்ப போட்டு முறிச்சிக்கிற…”