பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த நியோ லிபரல் பொருளாதார பரிசோதனை தற்போது போக்கிடம் இன்றி தரை தட்டி நிற்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி ஆறு மடங்கு வளர்ந்திருக்கிறது. முழு வறுமை (absolute poverty) மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்திருக்கிறது. நுகர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளியலாளர் அமித் பசோலேவின் வரிகளில் சொன்னால் மால், மொபைல்,மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் பிரமாதாமாக வளர்ந்திருக்கின்றன.
ஆனால் இதே காலகட்டத்தில், அரசு அத்தியாவசிய சேவைகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட காரணத்தால் விவசாயம், கல்வி, சுகாதாரம், நகர உட்கட்டமைப்புகள், உற்பத்தித் துறை (Manufacturing), ஏற்றுமதி என அனைத்தும் கடும் நெருக்கடிக்குள் இருக்கின்றன. சமீப காலத்தில் காணாமல் போயிருந்த பட்டினிச் சாவுகள் திரும்பவும் தலை தூக்குகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 56 பேர் பட்டினியால் இறந்திருக்கிறார்காள். இவை எல்லாவற்றையும் போல வேலை வாய்ப்பின்மையும் 45 ஆண்டுகளில் காணாத அளவுக்கு (6%) வளர்ந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனையாக வேலைவாய்ப்பின்மை முன்வைக்கப்படுக்கிறது.
வேலைவாய்ப்பின்மையை போக்க ‘மேலும் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தளர்த்துவது, வரிச்சலுகை என பல வழிகளில் கார்ப்பரேட் நலன்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட போதிலும், இதையெல்லாம் நம்பப் போதுமான காரணங்கள், ஆதாரங்கள் எதுவும் இல்லை. முன்பு போல தனியார் நிறுவனங்கள் வழியாக மட்டுமே வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வது என்பது சாத்தியமற்றது.
வருடம்தோறும் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்போம் என்று வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி அரசு, வேலை வாய்ப்பின்மையை போக்க போதிய வழிமுறைகளைக் கையாளாமல், வெறுமனே தகவல்களை மறைப்பது, திசை திருப்புவது என்று பல்வேறு எதிர்மறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பது சார்ந்த தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்கப் பார்த்தது. இறுதியில், அரசின் எந்தவிதமான தடுப்பு முயற்சியும் எடுபடவில்லை. மாறாக, பூதாகரமான தேர்தல் பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து முன்னெடுப்பதென்பது அடுத்து பதவியேற்கவிருக்கும் அரசின் முக்கியக் கடமையாகிறது. இது பற்றி அசிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன்பாக அமித் பசோலெவை முதன்மை ஆய்வாளராக கொண்ட ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. State of Working India 2019 என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்த அறிக்கையில் வேலை வாய்ப்பின் இன்றைய நிலை குறித்த தகவல்களை முன்வைக்கும் அதே சமயத்தில், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான சில திட்டங்களையும் முன்மொழிந்திருக்கிறது. நாட்டின் முதன்மையான பிரச்சனையாக வேலை வாய்ப்பின்மை இருப்பதால், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகள் பற்றி எடுத்துரைப்பதும், விவாதத்திற்குட்படுத்துவதும் தற்போது அவசியமாகிறது.
தற்போதைய நிலை
சராசரி இந்தியனின் வயது 28. உலகிலேயே இளைய நாடு. பொருளாதார சீர்த்திருத்தங்களை தொடர்ந்து வேலை கிடைக்கும், வளர்ச்சியில் பங்கு கிடைக்கும் என நம்பி உயர்கல்வி, தொழிற்கல்வி என கல்விக்காக சேமிப்பைக் கரைத்து, கடன்கள் வாங்கி கல்வியில் முதலீடு செய்திருக்கும் குடும்பங்கள் நிறைந்த நாடு. இந்நாட்டில் வேலை வாய்ப்பற்ற கூட்டத்தில் கணிசமானோர் பட்டதாரிகள். 2004ல் வேலைக்குச் செல்லும் வயதினரில் வெறும் ஆறு சதவீதமே உயர்கல்வி பெற்றவர்கள் இருந்தனர். தற்போது 15 சதவீதமாக வளர்ந்திருக்கிறார்கள். சரியாகச் சொன்னால் 7 கோடி பேர். தேசிய அளவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த வேலை வாய்ப்பின்மை மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருந்த போது, பட்டதாரிகள் மத்தியில் வேலை வாய்ப்பின்மையோ 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.
தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாக அதிகரித்திருக்கும் சமயத்தில் பட்டதாரிகள் மத்தியில் 12.7 சதவீதமாக இருக்கிறது. வேலைவாய்ப்பற்ற கூட்டத்தில் பட்டதாரிகளே அதிகம் (20 சதவீதம்). வயது வரம்பைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பற்றோரில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர் 20-24 வயதிற்குற்ப்பட்டவர்கள். கிராமப்புறங்களையும் நகர்ப்புறங்களைங்களையும் ஒப்பிட்டால், கிராமங்களை விட நகரங்களில் வேலைவாய்ப்பின்மை சற்றே அதிகம். பாலின ரீதியாகப் பார்த்தால், ஆண்களை விட பெண்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை அதிகம். சுருக்கமாகச் சொன்னால், நகர்ப்புற படித்த 20-24 வயது இளைஞர்களில், குறிப்பாக பெண்கள் மத்தியில், வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக இருக்கிறது.
இது தவிர மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியைத் தொடர்ந்து 2016 – 2018 காலக்கட்டத்தில் 50 லட்சத்திற்கும் மேலான ஆண்கள் வேலையிழந்துள்ளனர். பெண்கள் மத்தியில் இதனால் ஏற்பட்ட வேலையிழப்பு இன்னும் அதிகம் இருப்பினும் அது சார்ந்த தகவல்கள் தெளிவின்றி இருப்பதால் அறிக்கையில் இதைப் பற்றி உறுதியாக எதையும் கூறவில்லை. மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள். இவர்களில் பெரும்பாலானார் முறைசாராத் தொழில்களில் வேலை பார்த்த காரணத்தால், அந்தத் தொழில்கள் பாதிப்புக்குள்ளான போது இவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நாளுக்கு நாள் வேலை தேடி வரும் இளைஞர் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. இதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்தபடியே இருக்கிறது. இதில் இருந்து மீள அரசுக்கு என்னென்ன வழிகள் உள்ளன? இந்த அறிக்கை சில வழிமுறைகளை முன்வைக்கிறது. 1) நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை தொடங்குவதன் மூலம் சிறு நகரங்களை மேம்படுத்துவதும், வேலை வாய்ப்பளிப்பதும், 2) அனைவருக்குமான அத்தியாவசிய சேவைகளான கல்வி, மருத்துவம் மற்றும் வீடு ஆகியவற்றை நிறைவேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பளிப்பது, 3) நீண்டகால நோக்கில் உற்பத்தித் துறையை சீரமைப்பது என்று மூன்று வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டு முன்வைக்கப்படுகின்றன.
நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்
நகரங்களில் கிராமங்களை விட வேலைவாய்ப்பின்மை அதிகம் (7.8 சதவீதம்). நகரங்களில் வேலைக்குச் செல்வோரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தினக்கூலிகள் மற்றும் சுய-தொழில் சார்ந்தோர். அதே சமயம் நகரங்களின் அடிப்படை சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சீர்கெட்டு கிடக்கின்றன. நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படும் நகரங்கள் அநேகமாக இல்லை என்று சொல்லலாம். காற்றின் மாசு அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட ஒன்று. முந்தைய ஆட்சிக் காலங்களில் நகர மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டத் திட்டங்கள் அனைத்தும் பெரு நகரங்களை குறி வைத்து கொண்டு வரப்பட்டன. ஆனால் நகர மக்கள் தொகையில் 50% சதவீதம் (16 கோடி) சிறுநகரங்களில் இருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகளை நிர்வகிக்க போதுமான ஆட்களும் இல்லை, தேவையான நிதியும் இல்லை. தற்போதைய அவசியம் சிறுநகரங்களின் உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்போடு இணைப்பதாகும்.
முந்தைய மன்மோகன் அரசு நடைமுறைப்படுத்திய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக கிராமப்புற கட்டமைப்பு ஓரளவு மேம்பட்டிருக்கிறது, வேலைவாய்ப்பு, ஊதியம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன. சாதி பாகுபாடின்றி, ஆணுக்கும் பெணுக்கும் சமமான ஊதியம் சாத்தியமாகி இருக்கிறது. இதே போன்றதொரு திட்டத்தை, 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் வசிக்கும் சிறு நகரங்களில் செயல்படுத்துவதன் மூலம் நகரங்களில் வேலை வாய்ப்பை பெருக்க முடியும். நகர நிர்வாகம், சுற்றுச்சூழல், வாழ்க்கைத்தரம் மேம்படும். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு வேலைவாய்புகள் உருவாக்கப்படும் பட்சத்தில் பசுமை வேலை வாய்ப்புகள் உருவாகும். முறைசாராத் தொழில்கள் சார்ந்த வேலை செய்வோரின் ஊதியமும் அதிகரிக்கும். தேவையற்ற இடப்பெயர்வும் குறைக்கப்படும். ஏற்கனவே இத்தகைய திட்டங்கள் கேரளாவிலும் (அய்யன்காளி நகர்ப்புற வேலை வாய்ப்புறுதித் திட்டம்), மத்திய பிரதேசத்திலும் நடைமுறையில் உள்ளன.
இதன் மூலம் என்னென்ன வகையான வேலை வாய்ப்புகளை வழங்கமுடியும்? பொதுப்பணிகள், பசுமை வேலைகள், கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு, நிர்வாக உதவி வேலைகள், நலம் பேணுதல் சார்ந்த வேலைகள் என்று வெவ்வேறு வகையான வேலைகளை கல்வி மற்றும் திறன் சார்ந்து வழங்க முடியும். உதாரணத்திற்கு, பொதுப்பணி சார்ந்த வேலைகளாகிய கட்டிடங்களைப் பராமரித்தல், நடைபாதைகளை சரி செய்தல், சாலைப் பணிகள் போன்ற வேலைகளுக்கு பெரிய அளவிற்கு கல்வியோ திறனோ தேவையில்லை. அதே போல, பசுமை வேலைகளாகிய நீர்நிலைகளைப் பராமரித்தல், நகர்ப்புற விவசாயம் (urban agriculture), பொட்டல்களை மேம்படுத்துதல், மலைப்பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல் ஆகிய வேலைகளில் பட்டதாரிகளும், குறைவான கல்வி மற்றும் திறன் உடையோருக்குமாக வெவ்வேறு வேலைகளை பிரித்தளிக்க முடியும்.
கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு வேலைகளில் நீர்நிலைகள், காற்று மாசுபடுதலை கண்காணித்து கணினி வழியாகத் தகவல்களை தொகுத்தல் போன்ற வேலைகளை கணினி சார்ந்த கல்வி கற்றோர் சிறப்பாகச் செய்ய முடியும். நிர்வாக உதவி சார்ந்த வேலைகளில் போதிய ஆட்களின்றி திண்டாடும் நிர்வாக ஊழியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தல், பள்ளிக்கூடங்களில் ஆசியர்களே நிர்வாக வேலைகளை செய்து வரும் சூழலில், ஆசிரியர்களுக்குத் துணையாக நிர்வாக மற்றும் கணக்கு வழக்கு வேலைகளுக்கு உதவி செய்தல் போன்ற வேலைகளை பட்டதாரிகள் செய்ய இயலும். நலம் பேணுதல் சார்ந்த வேலைகளில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவி, இருபாலரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், கவனிப்பாரின்றி இருக்கும் முதியோர் நலன் பேணுதல், நகர்ப்புற ஏழைகளுக்கு உணவளித்தல் என்று விதவிதமான வேலைகளை உருவாக்க முடியும்.
திறன்குறைந்த வேலைகளில் ஆளுக்கு நாளைக்கு ஐநூறு ரூபாய்கள், கல்வித்தகுதி மற்றும் திறன் மிகுந்த வேலைகளுக்கு மாதம் பதிமூன்றாயிரம் உதவித்தொகை என்று இந்தத் திட்டத்திற்கான ஊதியத்தை பரிந்துரைக்கிறது இந்த அறிக்கை. கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் இருப்பதைப் போலவே வெளிப்படைத்தன்மையும், வார்டு கமிட்டிகள் வழியாக பரவலாக்கப்பட்ட திட்டமிடலும், சமூகத் தணிக்கையுமாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். இதற்கான நிதியில் வேலை வாய்ப்புகளுக்கு 80 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் மாநில அரசும் அளிக்க வேன்டும். இதற்கான செலவு இந்தியாவின் ஜிடிபியில் 1.7% முதல் 2.7% சதவீதம் வரை ஆகும். இதன் வழியாக நகர்ப்புற வறுமையில் இருந்தும், வேலை வாய்ப்பின்மையில் இருந்தும் மூன்று முதல் ஐந்து கோடி பேரை மீட்க முடியும் என்கிறது இந்த அறிக்கை.
அனைவருக்குமான அத்தியாவசிய சேவைகள்:
மருத்துவம்
உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் முன்னணியில் இருப்பது இந்தியா. இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் அனைவருக்குமான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை (கல்வி, மருத்துவம், வீட்டுவசதி) இந்தியா உறுதி செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகளின் நீடித்த பொருளாதார வளர்ச்சி, இந்த அடிப்படை வசதிகள் வழியாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அடிப்படை சேவைகளைப் பொறுத்தவரை உலகிலேயே குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஒட்டுமொத்த ஜிடிபியில் வெறும் ஒரு சதவீதத்தையே மருத்துவத்திற்காக இந்தியா செலவு செய்கிறது. அரசு சார்பில் மருத்துவத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் பத்து உலக நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.
மருத்துவத்தில் தனியார் சேவையை ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டுள்ள இன்சூரன்ஸ் முறை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. இது பரவலாக மருத்துவக் கொள்ளையை ஊக்கப்படுத்துகிறது என்பது கண்கூடான விசயம். இது தவிர இன்சூரன்ஸ் தொகை உயர் சிகிச்சைக்கு மட்டுமே என்பதால், மருந்துகளுக்கு ஆகும் செலவுக்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ மக்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து தான் செலவு செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகள் பரவலாக இருந்த போதும், மக்களின் உடல்நலன் சார்ந்த குறியீடுகள் அனைத்தும் அரசு மருத்துவ வசதிகளின் தரத்தை ஒட்டியே அமைந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், எந்தெந்த மாநிலங்களில் அரசு மருத்துவ கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் உடல்நலன் சார்ந்த குறியீடுகள் மேம்பட்டிருக்கின்றன. எங்கெல்லாம் அரசு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறதோ அங்கெல்லாம் தனிநபர் தன் கையில் இருந்து மருத்துவத்திற்காக செலவு செய்யும் தொகையும் குறைகிறது.
மருத்துவக் கட்டமைப்பில் வேலை வாய்ப்பை உருவாக்குவது எளிதான விசயம். ஏற்கனவே அரசால் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பினாலே நான்கு லட்சத்தில் இருந்து ஆறு லட்சம் வரை வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். இது அங்கன்வாடி ஊழியர்கள் (10 லட்சம்), ஆஷா (ASHA) ஊழியர்கள் (12 லட்சம்), கிராமப்புற உதவியாளர்கள் (10 லட்சம்) ஆகியோருக்கு ஏற்கனவே அளிக்கப்படும் உதவித்தொகையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இவர்களே மருத்துவக் கட்டமைப்பின் முதல்கட்ட செயல்பாட்டாளர்கள் என்பதால் இவர்கள் நலன் மேம்படும் போது, ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் மேம்படும்.
அனைவருக்கும் மருத்துவ வசதியை அரசு வழங்குவதன் வழியாக சுகாதாரம் மேம்படும், வேலை வாய்ப்பும் பெருகும். வேலை வாய்ப்புக்கு அடுத்தபடியாக மக்களை பயமுறுத்தும் மருத்துவ செலவும் குறையும்.
கல்வி
கல்வி கற்பதன் வழியே சுகாதாரம் மேம்படும். சுகாதாரம் மேம்பட்டால் வாய்ப்புகள் அதிகரிக்கும். வாய்ப்புகள் அதிகரித்தால் தொழிலாளர் திறன் அதிகரிக்கும். திறன் அதிகரித்தால் வருவாய் அதிகரிக்கும். கற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கையில் பொதுமக்களின் ஜனநாயக பங்களிப்பும் அதிகரிக்கும். ஒட்டுமொத்த ஜிடிபியில் இந்தியா 4 சதவீதத்தை கல்விக்கு செலவு செய்கிறது. உலகில், கல்விக்கு அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் மருத்துவத்தைப் போலவே நம்மை போன்ற தனிநபர் வருவாய் ஈட்டும் வியட்நாம் தனது ஜிடிபியில் ஆறு சதவீதத்தை செலவு செய்கிறது. 1966 அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷனும் 6 சதவீத ஜிடிபியை கல்விக்கு செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கல்வியைப் பொறுத்தவரை இந்தியா எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல் கல்வித் தரம் சார்ந்தது. உலக வளர்ச்சி அறிக்கையின் (2018) படி இந்தியாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 90 சதவீதத்திற்கு மேலானவர்களில் ஒரு வார்த்தையைக் கூட எழுத்துக் கூட்டி படிக்க முடியாதவர்கள். இவர்களில் 80 சதவீதத்தினர், கணிதத்தில் இரண்டு இலக்கக் கழித்தலில் தேர்ச்சி பெறாதவர்கள். நம்மை விட ஏழை நாடாகிய நேபாளம் அடிப்படை கல்வியில் நம்மை விட பல படிகள் முன்னிற்கிறது. ஆப்ரிக்காவின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நாடுகள் இந்த விசயத்தில் நம்மை விட மேம்பட்டு நிற்கின்றன.
மருத்துவத்தில் உள்ளதைப் போல அரசு முதலீடு கல்வித்தரத்தை தானகவே உயர்த்திவிடும் என்று கருத இடமில்லை. மாறாக நாடு முழுதும் தனியார் கல்வி, அரசு வழங்கும் கல்வியை விட தரத்தில் மேம்பட்டிருப்பதாக ASER 2016 அறிக்கை குறிப்பிடுகிறது (விதிவிலக்காக தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா). ஆனால், தனியார் பள்ளிகளில் கல்விக்கு ஆகும் செலவு, அரசுப் பள்ளிகளை விட ஐந்து முதல் இருபது மடங்கு அதிகமாகும். தவிர, இந்தியாவின் 40 சதவீத கிராமங்களில் மட்டுமே தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன. மீதமிருக்கும் கிராமங்கள் அனைத்தும் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றன. தரம் குன்றி இருக்கும் அரசுப் பள்ளிகளில் அரசின் முதலீட்டை அதிகரிப்பதன் மூலமும், கற்றல் அடைவுகள் (Learning outcomes) மேம்பட்டிருப்பதற்கான சான்றாக டெல்லி அரசின் சமீபத்திய முயற்சிகளை குறிப்பிடலாம், வகுப்பறைகளை மாற்றியமைப்பதன் வழியாகவும், ஆசிரியர் திறனை மேம்படுத்துவதன் வழியாகவும் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்பட வைத்து டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு.
நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்பக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினாலே பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இது தவிர அங்கன்வாடி ஊழியர் பணி நியமனங்கள் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர் பணி நியமனங்கள் வழியாக மேலும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவை தவிர நாடெங்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரு ஆசிரியரால் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பணி நியமனங்கள் நடக்கும் பட்சத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகும். வகுப்பறைகளை மேம்படுத்தல், நூலக வசதி, கழிப்பறை வசதி என பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் இன்னும் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒப்பந்தப் பணி முறையை ஒழித்து, நிரந்த பணியாளர்கள் நியமிக்கப்படும் போது பணியாளர்கள் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு, கல்வியில் அவர்களது பங்களிப்பும் மேம்படும்.
வீட்டுவசதி
நல்ல வீடு என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, அதன் வழியாக பாதுகாப்பான, ஆரோக்கிய மிக்க வாழ்வும் பெறப்படுகிறது. இதர சேவைகளாகிய மின்சாரம், குடிநீர், சத்தான உணவு, பொதுப் போக்குவரத்து என அனைத்தும் வீட்டை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன.
உற்பத்தியில் பங்குகொள்ள முடியாத சமூகத்தின் அங்கத்தினர்களாகிய முதியவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் என பலருக்கும் குறைந்த பட்ச வாழ்க்கைத் தரத்தை வீட்டு வசதி அளிப்பதன் மூலமே பெற முடியும். 2012 கணக்கெடுப்பின் படி இந்தியா முழுமைக்கும் அனைவரும் போதுமான வீட்டு வசதி பெற வேண்டுமானால் 1.8 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் பரிந்துரைக்கிறது. இந்தியா முழுவதும் வீடு என்பது முக்கிய சொத்து. வறுமையில் இருப்பவர்களின் வருமானம் பெரும்பாலும் கல்விக்கும், மருத்துவம், உணவு ஆகியவற்றிற்கு செலவிடப்படுவதால், வீட்டைக் கட்டுவதற்கான சேமிப்புத் தொகை அவர்களிடம் சேர்வதில்லை.
வீட்டு வசதியை அரசுத்திட்டங்கள் வழியாக மட்டும் உருவாக்காமல், தனியார் பங்கெடுப்போடு நிறைவேற்றப்படுவதன் மூலம் மட்டும் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் நிதி அமைச்சக அறிக்கை (2018).
உற்பத்தித் துறைக்கு உயிரூட்டுதல்
இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைத்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 47 கோடி. இவர்களில் 6.1 கோடி பேர் உற்பத்தித் துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 80 சதவீதத்திற்கு அதிகமானோர் சிறுதொழில்கள் மற்றும் முறைசாராத் தொழில்கள் வழியாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள். கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 15 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கவேயில்லை. உற்பத்தித் துறை மேலும் வளராமல் தேக்கம் அடைந்திருப்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இறக்குமதிக்கான வரித்தளர்வுகள், அந்நிய முதலீட்டில் விதிமுறை தளர்வுகள், சிறுதொழில்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தொழில்கள் நீக்கப்பட்டது, வளர்ச்சி நிதி வங்கிகளாக இருந்த ICICI போன்ற வங்கிகள் வணிக வங்கிகளாக மாற்றப்பட்டு நீண்ட கால முதலீட்டுக்கென கடன் கொடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகள், அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து உருவாகும் ஏற்ற இறக்கங்கள், மின்சாரம், சாலை வசதி மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளில் இருக்கும் சிக்கல்கள் என எண்ணற்ற காரணங்களால் உற்பத்தித் துறை தொடர்ந்து தேக்க நிலையில் இருந்து வருகிறது. இவையனைத்தையும் விட 1991க்குப் பிறகு அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த தாராளமயக் கொள்கைகள் காரணமாக, தொழிற்துறை வளர்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்ளாமல் இந்திய அரசு விலகிக் கொண்ட காரணத்தால், தொழிற்துறையைத் தங்கள் தேவைக்கு ஏற்ப மாநிலங்கள் மாற்றியமைத்துக் கொள்ள போதுமான நிதியாதரங்களைப் பெற முடியவில்லை.
தற்போது நடைமுறையில் இருக்கும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்கொள்கைக்கு பதிலாக, உள்நாட்டு நுகர்வின் அடிப்படையில் தொழிற்கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) ஒதுக்கப்படும் நிதி தற்போது இருக்கும் அளவை விட உயர்த்தபட வேண்டும். சாலை வசதிகள், மின்சாரம், நீர்பாசனம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வளர்ச்சி நிதி வங்கிகளை உயிர்ப்பித்து நீண்ட கால கடன்களை தொழிற்துறைக்கு அளித்தல் என்று வெவ்வேறு வழிமுறைகள் மூலம் உற்பத்தித் துறையை மேம்படுத்த முடியும். அதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்ய முடியும் என்கிறது இந்த அறிக்கை.