பிரமிள்: தனியொருவன் (பகுதி 3)

0 comment

மார்ச் 26, 2019ல் தமிழ் இந்துவில் வெளியான எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பேட்டி இங்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரு பதிலில் அவர் ”‘மணிக்கொடி’ ஆட்கள் கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது’” என்று சொன்ன பதில்தான். இதில் பிராமணிய ஆதிக்கம் தொடர்வதாகக் கூட அவர் சொல்லவில்லை. பிராமணியம் என்பது ஒரு குணாதிசயமாகச் சுட்டப்பட்டு அக்குணம் எல்லா சாதிகளிலும் தொடர்வதாகத் தான் சொல்லியிருக்கிறார். இதற்கே அவர் மீது வருத்தப்பட்டவர்களைக் கண்டால் ஆச்சரியமாக உள்ளது. பிறகு எதற்கு இங்கே இத்தனை குழுக்கள் இயங்குகின்றனவாம்? நான் பார்த்த வரை இலக்கியம் என்பதைத் தாண்டி ஒருவர் தனது சாதி என்பதற்காகவே அவரைத் தூக்கிப் பிடிக்கும் போக்கு எங்கும் காணப்படுகிறது. இதில் எழுத்தாளர் வாசகர் என்ற வித்தியாசம் கூடத் தெரிவதில்லை. ஒரு வாசகர் தன் சாதியைச் சேர்ந்த எழுத்தாளரின் எழுத்தை தேடித் தேடி வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக பிராமணர்கள். ஒருவேளை பிற சாதியினருக்கு இன்னும் அந்தளவு ’விழிப்புணர்வு’ வரவில்லை போலும்.

பிரமிள் இலக்கியத்துக்காக அனைத்தையும் எதிர்த்தவர். சாதீய ரீதியான குழு மனப்பான்மையோடு இயங்குபவர்கள், அரசியல் நிலைப்பாடுகளோடு படைப்புகளை அணுகுபவர்கள், கோட்பாடுகளைக் கொண்டு வெறும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்கள் என்று இலக்கியத்துக்கு எதிரான செயல்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். எந்தளவு வைதீகத்துக்கு எதிரான நிலையைக் கொண்டிருந்தாரோ அதே தீவிரத்துடன் இடதுசாரிகளின் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்தார். எப்படி இப்படி ஒரு எழுத்தாளன் தனியாக வாழ்ந்து மறைந்தான் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பிரமிள் வேலை எதுவும் செய்யவில்லை. தன்னை கவிஞன், விமர்சகன் என்றே எங்கும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். 1970-75 காலகட்டம் அவருக்குக் கொடுமையானது. அவரே நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டபடி அது நினைவுகூற விரும்பாத காலகட்டம். நாள் முழுக்க பட்டினியாக பல நாட்கள். யாரிடமும் சென்று காசு கேட்டதுமில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. திராவிட எழுத்துக்கு முன்னுதாரணமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியது பிரமிளைத் தான்.

“சமூகம் என்பதே abstraction. சமூகத்தை அபிப்பிராயங்களால் அர்ச்சிப்பதோ சவுக்கடி கொடுப்பதோ, தற்காலிகமான சலசலப்புக்கு மேல் ஆழமாக உழுது செல்லும் இரசனையின் பலனைத் தராது. உண்மையைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் இரசனை இராது. பரபரப்பான அபிப்பிராயங்களே ஆட்சி புரியும். இரசனை, பக்குவமுள்ள இதயத்துக்குத் தான். அது உலகைத் திருத்தி விடாது. ஒரு சமூகம் கலைஞன் ஒருவனை ஆதரிக்கிறதென்றால், பரவி விட்ட அபிப்பிராயத்திலேயே. பாரதியை அச்சிட்டுப் பிழைக்க முடிவது அதனால்தான் – பாரதி இரசனையால் அல்ல”

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டவுடன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் மட்டும் கூடுதலாக விற்பனையாகும். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலுக்கு விருது கிடைத்தவுடன் திருநெல்வேலியில் அதுவரை ஒன்றோ இரண்டோ விற்றிருந்த ஒரு கடையில் 100 புத்தகங்களுக்கு மேல் விற்றன. கேரளாவில் எங்கு பார்த்தாலும் பஷீரைக் கொண்டாடுகிறார்கள். நிறைய இடங்களில் அவர் புகைப்படங்களை பெருமையாக மக்கள் மாட்டி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஒரு மலையாள இலக்கியவாதியிடம் கேட்டபோது அவர் சொன்னது, ‘அப்படியில்லை. குறிப்பிட்ட ஒருவரைக் குறித்த ஓர் அங்கீகாரத்தையும், மதிப்பீட்டையும் உருவாக்கினால் போதும். மக்கள் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.’ பாரதிக்கு அதுதானே நடந்தது? எந்தக் கூட்டத்திலும் பாருங்கள். பொத்தாம்பொதுவான அவரது சில பாடல் வரிகளைச் சொல்லி ஒப்பேற்றி விடுவார்கள். சொல்பவருக்கும் தெரியாது. வாசிப்பவருக்கும் தெரியாது. ஏற்கெனவே மகாகவி என்று உறுதிபடுத்தப்பட்டிருக்கிறார் என்பதால் சும்மா நான்கு வார்த்தைகள் பாராட்டிச் சொல்வதில் நிச்சயம் தவறே இருக்க முடியாது இல்லையா?

இங்கு ஒரு படைப்பைப் பற்றி பிரபலமான ஒருவர் சொன்னால் மட்டும்தான் அதற்கு மவுசு. இதனால் தான் கதை, கவிதைகளுக்கு முன்னுரை வாங்க மூத்த எழுத்தாளர்களைச் சார்ந்து முதுகு சொறிந்து கொண்டு பல கூட்டங்கள் திரிகின்றன. படைப்புக்கான மதிப்பு படைப்பிலேயே உள்ளது. அது வாசிப்பவரால் கண்டுணரப்பட்டு அம்மதிப்பு உருவாக வேண்டும். எல்லோரும் எல்லாவற்றுக்கும் இன்னொருவரையே சார்ந்திருக்கிறார்கள். ஒரு புத்தகத்தை முழுக்க வாசிப்பதற்கு பதில் அதை வாசித்த ஒருவர் சொல்லும் கருத்தைப் படித்தால் போதாதா, தனக்கு பதில்தான் அவர் யோசிக்கிறாரே, தொகுத்துத் தருகிறாரே அப்புறம் எதுக்குச் சிரமப்பட வேண்டும்? இதில் உள்ள அபாயம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. “என்னை convince செய். நீ சொல்வதை நம்புகிறேன்” என்ற அளவுக்குத் தான் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 1964ல் எழுத்து இதழில் வந்த கட்டுரையில் தான் பிரமிள் முதன்முதலாக தனிநபர்வாதத்தை முன்வைக்கிறார். இன,மத, மொழிக்குரியவராக ஒருவர் தன்னை அடையாளம் கண்டு ஓர் இனத்துக்கான ஒட்டுமொத்த இரசனை மேம்பாடு என்று செல்லும்போது தனிநபர் வளர்ச்சி தடைப்பட்டு, சமூகத்தை சதா குறை சொல்லும் முற்போக்குவாதம் வருகிறது. இரசனை தனிநபரின் சொத்து. ஒரு சமூகத்துக்கான படைப்பை மட்டுமே ஏற்கும் இரசிக்கும் தன்மை போலித்தனமானது. வறட்டுத்தனமானது.

”சாமானிய வாழ்க்கையில் ஒருவன் பூரணமாக வாழ்கிறபோது அங்கேயே கவிதை நடைபெறுகிறது. பூரண மனித வாழ்வே கவிதை வாழ்வு. அவ்வாழ்வில் கவிதை எழுதப்படாவிட்டாலும் கவித்துவம் உண்டு. தேசிய, இன, மத வாழ்வுகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைமையுடன் மனம் விழிப்புப்பெறும் கணமே அது. கவிஞன் அறிந்தோ அறியாமலோ அவ்வப்போது இந்நிலையை அடைந்து விடுகிறான். சொற்களில் பழகிய, சொல்மயமான நினைவுத் தொடரில் அனுபவ மின்சாரம் பாயும் வேளையே கவிதை பிறக்கும் வேளை. கவிதை சொல்லில் இல்லை. கவிதையின் ஊற்று போனதும் வருவதும் அற்ற நிகழ்களத்தில் கிடக்கிறது.”

எழுத்து இதழ் 66ல் (செப்டம்பர் 1964) கவித்துவம் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை அவரது முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. வெற்றுச் சொற்களை ஒட்டி வெட்டி அமைப்பதின் மூலம் அதன் அர்த்தகதியை மாற்றி ஒரு விளையாட்டை நிகழ்த்துவதே கவிதை என்று நம்பி ஒரு கோஷ்டி இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருவர் இதற்கு மேலே போய் ”கவிதையை இயற்கையான ஒன்றாக கருதிக் கொண்டு காலம் கழிக்கும் சனக்கூட்டமொன்று இன்னும் இலக்கிய வெளியில் இருக்கிறது” என்று எழுதி வைக்கிறார்.

எந்தப் படைப்பாக இருந்தாலும் அதனளவில் நேர்மையாக, உண்மையாக, அனுபவப் பூர்வமாக, உணர்வோட்டத்துடன் கலந்து வெளிப்படாவிடில் அந்தப் படைப்பானது அது இயங்கும் கலைத்துறைக்குத் தேவையற்ற ஒன்றே. எழுதப் படிக்கத் தெரியுமென்பதால், ஒரு கோணப்பார்வையைக் காட்டி அதன் இயல்புமீறிய தன்மையை கவிதை என்று நம்பிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் பெருகி விட்டனர். பொட்டுப்பொட்டாய்ச் சாரல், இலை நுனியில் திரண்டு குமிழ்ந்து உச்சகட்டத்தில் விடுபட்டு வீழும் நீர்த்துளி கணம். கவித்துவம் என்பது காலாதீதத்தில் கிடக்கிறது. அந்த கணம் கூட கைவரப்பெறாது மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அனைத்தையும் தெறிக்கச் செய்து மூச்சுவிட்டுக்கொள்ளும் அந்த ஒரு கணத்துக்கும் குறைவான இடைவெளி மனிதர்களுக்கு சித்திக்கத்தான் செய்கிறது. ஒரு மனித வாழ்வில் இப்படி மொத்தம் எத்தனை கணங்கள் வாழ்ந்திருப்போம். இத்தகு கணங்களை வாழ்வில் கூட்டிக் கொள்வதும், அந்தந்த கணங்களில் வாழ்வதை நோக்கமாக வைத்துக் கொள்வதுமல்லவா உண்மையான வாழ்வாக இருக்க முடியும்? அரசு, சமூகம், கலை, உறவுகள் அனைத்தும் இதன் மதிப்பை உணர்ந்ததாக அதன் பொருட்டு இயங்குவதாக அமைவதே நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

பிரச்சாரத்திற்காக, அரசியல் நிலைப்பாட்டிற்காக இலக்கியத்தைக் கைக்கொள்ளும்போது அதில் உயிர் இருப்பதில்லை. படைப்பு அந்தரங்கமானது. அது ஒரு தன்னிலை மலர்ச்சி, செடியில் பூக்கும் பூப்போல. இரண்டாம் நபரை உத்தேசித்து அது மலர்வதில்லை. இரண்டாம் நபருக்கு அங்கே இடமேயில்லை. இருந்தும், அது அனைவருக்குமான மலராக உள்ளது. அதுதான் படைப்பு. இன்னொருவரை, இனத்தை, சமூகத்தை உத்தேசித்து எழுதப்படும் போதே இந்த அந்தரங்க உறவு நிகழாமல் போய் விடுகிறது. வெறும் மொழியை வைத்துக் கொண்டு போலியாய்ச் செய்யப்படும் எழுத்து மட்டுமே எஞ்சுகிறது. கொஞ்சம் புத்திசாலித்தனமாக பூசி மெழுகி என்னதான் ஏமாற்றப் பார்த்தாலும், படைப்பு பல்லிளித்து விடும்.

காலாதீதத்தில் ஏது சொல்? மனிதன் உள்ளே முழுதும் சொற்களால் நிறைந்திருக்கிறான். சொல்லற்ற கணம், உறைந்த சொற்களின் மீது படரும் போது வாசனை போலொரு நினைவு, ஒரு காட்சி, ஒரு சொல் ஒட்டிக்கொள்கிறது. ஒருவித தன்மயக்க நிலை அதைத் தொடர்கிறது. (கணத்துக்கும் குறைவான நேரம்) அது ஒரு கரு. ஓர் உயிர். அக்கண முகிழ்ப்பில் அதன் சாரத்தின் மீது நிகழ்வது கவிதை. மனிதனிடம் எப்போதும் இருப்பது சொல். ஆனால் கவிதை சொல்லில் இல்லை.

மேலே விவரித்த கட்டுரைக்கு வலுசேர்க்கும் அடுத்த இரண்டு கட்டுரைகளைப் பார்க்கலாம்.

அ. படைப்பாளி மனநிலை (எழுத்து இதழ், டிசம்பர் 1965)

ஒரு படைப்பை கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுவது சரியாக இருக்குமா? கோட்பாடுகள் போன்ற கருவிகள் குறிப்பிட்ட கோணத்தை மட்டும் மையமாகக் கொண்டவை. தனித்தனியாகப் பார்த்து ஒவ்வொன்றையும் அளவிடுவது (குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதை) அதன் முழுமையை உணரச் செய்யாது. பொதுவான சமநிறுவை (objective value) சாத்தியமா என்ற கேள்வியை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறார் பிரமிள்.

ஓர் எழுத்தாளர் பிடித்துப் போவதற்கும் இன்னொருவர் பிடிக்காமல் போவதற்குமான காரணம் என்ன? இரண்டு இலக்கிய வாசகர்கள் ஒரே மாதிரி இரசனை கொண்டிருப்பதும் இல்லை. அப்படியே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகள், தாக்கங்கள் இருக்கும். இது வாசகரின் அனுபவ, இரசனை சார்ந்ததாக உள்ளது. இந்நிலையில் விமர்சகன் ஒரு படைப்பை மதிப்பிட சிருஷ்டிக்கும் மனநிலையை அடிப்படையாகக் கொள்வதை முன்வைக்கிறார். சிருஷ்டி எவ்வாறு நிகழ்கிறது? எழுத்தாளன்/கவிஞன் எதை சிருஷ்டிக்க வேண்டும் என்ற முடிவுடன் சிருஷ்டிக்கிறானா? எழுதும் ஒவ்வொரு சொல்லிலும் அவனது பிரக்ஞை உள்ளதா? கட்டுப்பாடும் நோக்கமும் உடையவன் தானா?

“மௌனி போன்றவர் கதைக்கு பிரக்ஞைபூர்வமான ஒரு தளம் இல்லை”

இந்தக் கட்டுரையில் படைப்பாளியின் படைப்பு மனநிலைக்கு வாசகன் அணுகி வரவேண்டும். அந்நிலையில் படைப்பை மதிப்பிடுவதே சரியானது என்கிறார். இதை அவர் இன்னும் சற்று விவரித்துச் சொல்லியிருக்கலாம். இந்த படைப்பு மனநிலை விவரிக்க முடியாத ஒன்று என்று சொல்கிறார். ஒரு கவிதையை உள்வாங்கிக் கொண்டதும் என்ன நடக்கிறது? சட்டென்று மழைபெய்து நனைந்தது போல, ஒரு விளக்கு உள்ளுக்குள் பளிச்சென்று எரிவதுபோல, ஒரு நண்பனைத் தோளோடு அணைத்துக் கொள்வது போல, பற்றவைத்தவுடன் குப்பென்று பற்றி சரசரவென்று பொசுக்கித் தள்ளும் தழல்போல இப்படி எத்தனையோ உணர்வு நிலைகளை அதனோடொரு உள்ளார்ந்த மௌனத்தையும் தருகிறது.

படைப்பு மனநிலையை உணர்வதும், படைப்பைப் புரிந்துகொள்வதும் ஒன்றா? புரிந்து கொள்வதில் ஒருவித விலகல் இருக்கிறது. கணித சூத்திரத்தை அணுகும் மனப்பாங்கு. படைப்பை உணர்ந்து அனுபவிப்பதில்? இது சற்று கடினமானது. கவிஞன் (உதாரணத்திற்கு), ஓர் மனோகதியை, உந்துதலை அடைந்து எழுதத் தொடங்குகிறான். எழுதி முடித்தவுடன் படைப்பு தனி உயிராகிவிடுகிறது. அச்சமயம் படைப்பாளியின் தான், தனது என்ற உணர்வை நீக்கிவிட்டால் அவரும் ஒரு வாசகரே. முதல்நிலை வாசகராகச் சொல்லலாம். ஆனால் வாசகருக்கு அப்படி இல்லை. அவர் இந்தத் தொடர்ச்சியை பின்னிருந்து தொடங்குகிறார். அதாவது, முதலில் சொல், வரி, அடுத்தடுத்த வரிகளுக்கிடையிலான தொடர்பு, அனுபவத்தோடு சரிபார்த்து கவிதை பேசும் பொருள், உணர்வு கதிக்கு நெருங்கி வந்து அதை முழுதுமாக உள்வாங்கிக் கொள்கிறார். இது சற்று சிரமப்பட வேண்டிய வேலைதான். இத்தகு சிரமத்திற்கு வாசகர் மனதில் வேறு சிந்தனையோட்டமின்றி, மனமொப்பி, முன்முடிவுகளின்றி வாசிக்க வேண்டியிருக்கிறது. படைப்புக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனாலும் படைப்பை உணர்ந்து அனுபவித்தல் என்பதும், படைப்பு மனநிலையும் ஒன்றா. இரண்டு நெடுநாள் நண்பர்கள் சந்திக்கையில் எதுவுமே பேசாமல் கூட மணிக்கணக்காய் ஒன்றாய் அமைதியாய் அமர்ந்திருப்பார்களே, அதுபோன்றதொரு இடம்தான் எழுத்தாளரோடு வாசகர் சந்திக்கும் இடம். அது படைப்பு மனநிலையைச் சந்தித்தல். மனதை வெறுமையாய் வைத்திருந்து, படைப்பு இழுக்கும் திக்கெல்லாம் போய்வரும் திராணியும், அமைதியும், வேறு சிந்தனைக் குறுக்கீடும் இன்றி இருப்பவர் நிச்சயம் படைப்பாளிக்கு அருகில் வந்துவிடுவார்.

ஆ. சிருஷ்டி இயக்கம் (எழுத்து இதழ், ஜூன் 1966)

”The Milky Way is like a silver river” – Vladimir Mayakovsky

“யாருடைய நடமாடும் நிழல்கள் நாம்?” – மௌனி

பிரமிள் தனது முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை  எழுதியிருக்கிறார். ஒரு வரியில் அதன் அர்த்தம் தரும் வெடிப்பில் அல்லது ஒரு பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது சட்டென்று முடிந்து அப்படியே கீழே தலைகுப்புற விழுவது போல. இந்தப் படைப்பு வரிகளின் மர்மம், படைப்பாளியின் சிருஷ்டி மனநிலையில் தொக்கி நிற்கிறது. எனவே அந்த வரிகளை அதன் அனுபவத்துக்குள் நாம் செல்லும்போது அந்த மனகதியைப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார். மேற்கண்ட கவிதை வரியை எழுதிய மாயகோவ்ஸ்கி அதை எழுதி முடித்ததும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார். ‘She loves me…she loves me not’ எனத் தொடங்கும் அந்தக் கவிதை 28 வரிகளைக் கொண்டது. ஒட்டுமொத்தக் கவிதையிலும் இந்த ஒருவரி மட்டும் ஒரு மின்னல்வெட்டாக திகைக்கச் செய்து கவிதையை வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்தி விடுகிறது. இந்த வரியை அடுத்துத் தொடரும் “I’m in no hurry” என்ற வார்த்தை, எப்படியொரு சமாதானத்தை அவரது மரணத்திற்குத் தந்திருக்கும். தற்கொலைக்குக் காரணம் பார்த்தால் தினசரிச் செய்தி போல ஒன்றுதான். காதல் தோல்வி. அந்த இறுதிக் கவிதையைக் கூட இருள்நகையாக எழுதியிருக்கிறார். ஒரு தற்கொலைக்குத் துணிந்தவனைப் புரிந்துகொள்வது எப்படி? அந்த பிஸ்டலை நம் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தாவிடில் அதன் அழுத்தத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? தான் இங்கே வாழ்வின் முடிவில் நின்றுகொண்டிருக்கும் இதே கணத்தில், அந்த இரவில் இதெதுவும் அறியாது உறங்கிக் கொண்டிருக்கும் காதலி, இருவருக்குமிடையேயான கடக்கமுடியாத அந்தப் பள்ளத்தாக்கு. இப்படி மேலும் மேலும் உள்ளே செல்லும் வாசகருக்கு கவிதை இன்னுமின்னும் திறந்துபடும்.

இந்தக் கட்டுரையை பிரமிள் இப்படி முடிக்கிறார். “கலைஞனால் பிரமிப்படைய முடிகிறது; அதிசயிக்க முடிகிறது; கேள்விபோட முடிகிறது. அதிசயிப்பு, கேள்விபோடல் – இவைதான் கலையின் உந்நதமான காரியம் என நினைக்கிறேன். இந்த பிரமிப்பு, அதிசயம், கேள்விகள் என்பவற்றின் இயக்கம்தான், படைப்பு மனநிலை.”

மேலே எழுதப்பட்டதின் உணர்வுகதிக்கு ஆளாதல் படைப்பு மனநிலையை உணர்வதாகுமா என்பது குறித்து பார்த்தோம். படைப்பில் தன்னையிழந்து அதன் உணர்வுத் தளத்தை சொற்களில் படைப்பாளி பிரதிபலித்திருக்கும் போது, அதை வாசகர் உள்வாங்கிக் கொள்ளும்போது அது படைப்பு மனநிலையை உணர்தல் என்று சொல்லலாம். அதே நேரம், எழுத்து வித்தகர்கள், குறிப்பிட்ட மனநிலைக்கு வாசகரை உட்படுத்தவேண்டி எழுதுகையில் அதை உணர்வதற்கான திராணியும் வாசகரிடத்தில் வேண்டியிருக்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு உரையாடலின் தொடக்கத்திலும், நாம் இதற்கான விடையை சேர்ந்து கண்டுபிடிக்கலாம் என்று சொல்வார். தான் சொன்னதனால் கேட்பவர் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது, மாறாக அவராக உணர்ந்து அதற்கான விடையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பார். எந்தவிதத்திலும் இன்னொருவர் தன்னைச் சார்ந்திருக்க அவர் விடவில்லை. தான் குருவல்ல. ஒருவரைப் பின்பற்றுவது தன்னைத் தானே அவமதித்துக் கொள்ளுதல் என்கிறார். இங்கே எழுத்தாளர்களின் நோக்கமே சார்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்வதுதான். இதன்மூலம் ஓர் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள்.

தமிழ் இந்துவில் 7/4/19 அன்று வெளியான சி.மோகன் அவர்களின் கட்டுரையில் சி.சு.செல்லப்பா குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு காலத்தின் குரலாகவும் தன் காலத்தின் இலக்கியப் போக்குகளைக் கட்டமைக்கும் சக்தியின் உருவகமாகவும் வாழ்ந்த சி.சு.செல்லப்பா, தன் பிந்தைய காலத்தில் தன் செழுமையான அர்ப்பணிப்பு மிக்க கலை நினைவுகளில் உறைந்து விட்டிருந்தார். ‘எழுத்து’ எழுத்தாளர்கள் பலரும் செல்லப்பாவை விட்டு, அவரது சமகாலத் தன்மையற்ற பிடிவாதங்களால், ஒதுங்கிய நிலையில் சச்சிதானந்தம் மிகுந்த மதிப்புடன் உறவைத் தொடர்ந்து கொண்டிருந்தார். புதிய போக்குகளைப் பொருட்படுத்தாதவராகவும், புறக்கணிப்பவராகவும் கால மாற்றங்களில் சலிப்புற்ற அதேசமயம் வைராக்கியமிக்க முதியவராகவும் இருந்து கொண்டிருந்தார்.”

இங்கே இதைக் குறிப்பிடக் காரணம் பிரமிள் ‘புனித ஜெனே’ என்ற தலைப்பில் கசடதபற இதழில் (பிப். 1971) ஒரு கட்டுரை எழுதுகிறார். இதுவரை எழுத்து இதழில் தானே எழுதி வந்தார், என்னாயிற்று என்ற கேள்விக்கு விடை சி. மோகனின் கட்டுரையில் இருக்கிறது. டி.எச். லாரன்ஸின் லேடி சாட்டர்லீஸ் லவர்க்கு விமர்சகர் ரைடர் ஹொக்கார்ட் எழுதிய முன்னுரையை எழுத்து இதழுக்கு அனுப்பிய போது, சி.சு.செ. அதை பிரசுரிக்க மறுத்ததோடு நேர்ச்சந்திப்பில், “How dare you send it to me?” எனக் கேட்டிருக்கிறார். இது சி.சு.செ. குறித்த தெளிவான சித்திரத்தை நமக்குத் தருகிறது. கலையுணர்வை விட சமூகவுணர்வை அதன் மதிப்பீடுகளை போஷிப்பதே கலையின் நோக்கம் என்று கருதுவோர் இன்றும் இருக்கிறார்கள். இது கலைஞனை ஒரு சமூகப் பிராணியாக இருக்க நிர்ப்பந்திப்பது.

ஜெனே திருடனாகவும் ஒருபாலின உறவாளராகவும் இருந்தவர். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு, இவர் திருத்த முடியாத திருடன் என்று ஆயுட்சிறை விதிக்கப்பட்டவர். இவரை சார்த்தர் புனித ஜெனே என்று அழைத்தார்.

“டி.எஸ். எலியட், எழுத்தாளனது எழுத்தை மட்டும்தான் நாம் அளக்க வேண்டும், அவனை அல்ல என்ற கொள்கையை, விமர்சனத் துறையில் நிலைநாட்டி விட்டார். இருந்தும் திருடன், சொந்தப் பாலுறவுத் தாசி – எழுத்தாளன் என்ற விஷயத்தில், அதுவும் தன் வாழ்வையே அப்பட்டமாக சுயசரிதையாக எழுதியவனிடத்தில், நாம் திடுக்கிடவே செய்கிறோம். இதன் காரணம், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை தான் நன்மையானவை என்ற நமது பிரமையாக இருக்கலாம். இந்த வகையான சமூக அங்கீகாரம் பெற்ற தன்மைகளை, சமூக வரம்புகளுள் – குடும்பம், பள்ளி என்ற வரம்புகளுள் – வளர்ந்த காரணத்துக்காக மட்டும் தான் நாம் மதிக்கிறோம் எனலாம். இந்த நன்மைகளை மீறி, எவ்விதமான புனிதத் தன்மையுமில்லை என்றும் நினைக்கிறோம். இதனால் தான், ஜெனே புனிதமானவன் என்பது நாராசமாக ஒலிக்கிறது. ஜெனே பணத்துக்காக எழுதக்கூடிய ஆற்றல் இருந்தும் திருடினான்.”

ஜெனே தனது ஆயுட்சிறை வாசத்தில்தான் எழுதியிருக்கிறார். சிறையில், காகித உறை செய்வதற்காகப் பணிக்கப்பட்டு, சமயம் கிடைக்கும்போது அந்த உறைகளின் மீது பென்சிலால் எழுதியிருக்கிறார். காவலர்கள் கண்களில் படாமல்தான் எழுத வேண்டும். எழுதியவை அனைத்தும் தன் வாழ்வில் நடந்த இழிவானதும் ஆபாசமானதும், தனது ‘காதலர்கள்’ குறித்துமானவை தான். இருந்தும் ஒருமுறை இவரது எழுத்துக்களை சிறையதிகாரி கண்டு வாசித்து விட்டு எறிந்து விட்டார். ஜெனே மீண்டும் எழுதினார். ஏன்? எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும். ஒருவேளை சிறையை விட்டுப் போனாலும் பிரசுரத்துக்கு ஏற்கப்படாத உள்ளடக்கமும் எழுத்தும். பிரசுரமானாலும் தணிக்கையில் சிக்கிக் கொள்ளும். ஆனாலும் ஜெனே எழுதினார். ஏன்? இதற்கு ஜெனேவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. ஆபாசமெல்லாம் குழந்தையின் நிர்வாணமாய் பரிசுத்தமாய் இருந்தது.

எது நல்லது எது தீயது? மனித மனத்தின் ஆழ்ந்த ரகசியங்களை உதாசீனம் செய்துவிட்டு, கூட்டுவாழ்வுக்கு ஏற்ற சௌகரியங்களை, நல்லது – புண்ணியம் என்றுகூறி, அதோடு தேச பக்திக்காக நடக்கும் போரையும் புண்ணியம் என்கிறோம். ஜெனே இதே தர்க்கத்தில் தான், தனது கூட்டமான குற்ற உலகில் கொலையும் கொள்ளையும் தான் புண்ணியம் என்கிறான். இது, உலகு முழுவதுமே உள்ள கலாசாரங்கள் யாவற்றுக்கும் விடப்பட்ட சவால்!”

முன்னர் சொன்ன சி.சு.செ. சித்திரத்துடன் மேற்கண்ட கட்டுரையின் சாரத்தைப் பொருத்திப் பார்த்தால் அவர் ஏன் எழுத்து இதழில் பிரசுரிக்க மறுத்தார் என்பது புரியும். சி.சு.செ. மணிக்கொடி எழுத்தாளர்களையும், தனது எழுத்துக்களையும் அதன் போக்கிலான நகர்வுகளையும் மட்டுமே கவனம் கொண்டார். இத்துடன் எழுத்து இதழுடனான பிரமிளின் அத்தியாயம் முடிவடைகிறது.

(தொடரும்)

பின்குறிப்பு : இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்து ஓவியங்களும் பிரமிளால் வரையப்பட்டவை.