1
நம் வாழ்வைக் கேள்விகள் என்னும் கருவி கொண்டு திருகியும், பிடுங்கியும், உடைத்தும் கிடைக்கும் சிதறிய பிம்பங்களை மீண்டும் பல்வேறு முறைமைப்படி அடுக்குவதன் மூலம் புரிந்து கொள்வதும், வாழ்வின் சிடுக்குகளிலிருந்து விலகி சரித்து விடாத கனவுமலை மீது காலாற நடந்து மகிழவும், அவ்வப்போது பறக்கவும், நம் ஆழுள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் இருளின் அதி தீவிர பிம்பங்களின் தோற்றத்தை எடுத்துக் கொண்டு நாம் ஒளி பெறுவதும் என்பதுமான இச்சாத்தியங்கள் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்க மிகுபுனைவுதான் ஆகச்சிறந்த பாதையாக இருக்க முடியும். அதிலும் திரைப்புனைவுகள் முற்றிலும் வேறொரு உலகைக் காட்டி நம் கதைகளைச் சொல்லும் போது ஏற்படும் நிகர்வாழ்வின் உவகைக்கு உவமையேது.
இந்த தசாப்தத்தில் திரைப்புனைவு உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் வியத்தகு நிகழ்வான கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகத் திரைத்தொடர் வரலாற்றினை திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது. திரை ரசிகர்களாக இருந்து இதைப் பார்க்காமல் தவிர்த்திருப்பது என்பது தஞ்சையில் இருந்து கொண்டு பெரிய கோயிலைப் பார்க்காமல் தவிர்ப்பது போன்றது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் இந்திய பார்வையாளர்கள் மனம் கவர்ந்த பின்னரே திரைத்தொடர்களுக்கான சந்தை கடந்த ஐந்தாண்டுகளில் பன்மடங்கு பெருகியிருக்கிறது. திரைத்தொடர்தானே என எவ்வித சமரசங்களும் இதில் செய்து கொள்ளப்படவில்லை. முதல் பருவத்தில் முதல் எபிசோடில் வரும் முதல் காட்சியிலிருந்து தனக்கென தைரியமான எல்லையை அமைத்துக் கொள்வதும் அதைத் தானே முயன்று தகர்ப்பதும் என ஏழு பருவங்கள் வரை முன்னகர்ந்துள்ளது.
இதை நிச்சயித்துக் கொள்ள முதல் பருவத்தின் முதல் எபிசோடினை மட்டும் பார்த்தாலே போதும். வெறும் ஒரு மணி நேரத்தில், முப்பதிலிருந்து முப்பத்தைந்து காட்சிகள் கொண்ட எபிசோடில் எத்தனை முக்கிய கதாபாத்திரங்கள், எத்தனை முக்கியமான கதையின் மைய இழைகள், எத்தனை அழகான நிலக்காட்சிகள், எத்தனை மனித உளக் குழப்பங்கள், குடும்பங்களின் உள்ளே நிகழும் இனிய பரிபாலனைகள், சிக்கல்கள், பிழைகள் இன்னும் இன்னும் என ஒரு நிமிடமும் வீணடிக்கப்படாமல் படமாக்கப்பட்டுள்ளது என்பதைச் சொல்லும் போதே எனக்கு சிலிர்ப்பும் மலைப்பும் ஒரு சேர உருவாகிறது. அங்கேயே அத்தொடரின் தரத்தின் அளவுகோல் புரிந்து விடுகிறது. அந்த முதல் எபிசோடிலேயே வெவ்வேறு அரசாங்கங்களை -அதன் கோட்டைகளை, நிலத்தை, மக்களை – காண்பித்து அதையும் தாண்டி தோத்ராக்கி போன்ற வெவ்வேறு இனங்களின் திருமண நிகழ்வையும் காண்பித்து ட்ராகனின் முட்டை அறிமுகக் காட்சி வரை போய்க் கொண்டே இருக்கிறது. எங்கும் கதையோட்டம் நின்று கவனச் சிதறலுடனோ, சோம்பலுடனோ ஒரு பெருமூச்சு விடவில்லை.
இத்தொடரில் வரும் White-walkers என்னும் கூட்டம் தன்னிடம் மாட்டிக் கொள்ளும், மனிதன் உட்பட, எந்த உயிரியையும் கொன்று தன் இனத்தினராக கன நேரத்தில் மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவர்கள். அதுபோலவே, இத்தொடரின் முதல் எபிசோடை மட்டும் பார்த்துவிட்டால் போதும் முழுக்கவே கேம் ஆஃப் த்ரோன்ஸின் ரசிகர்களாக ஒருவர் மாறிவிடுவதென்பது இயல்பான நடைமுறையாகி விடுகிறது.
யுத்தக் காட்சிகள், ட்ராகன், பொருள் பொதிந்த ஆழமான சொல்லடுக்குகள், வெவ்வேறு மதங்கள், கடவுள்கள், காட்சிகளின் இடையேயும் கதாபாத்திரங்களின் இடையேயும் திகழும் வலைபின்னல்கள் என திரை ரசிகர்களுக்கான அரிய விருந்தாகவே இருக்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ். ஏற்கனவே உலகளவிலும், இந்தியாவிலும், தமிழகத்திலும் இதற்கு இருக்கும் வரவேற்பையும் ரசிகர் பட்டாளத்தையும் கணக்கில் கொண்டு பார்க்கையில் இத்தொடரை வெறும் அறிமுகப் படுத்தும் நோக்கில் எழுதுவதென்பது அர்த்தமற்ற செயலாகி விடும். அதனால் எட்டாவது மற்றும் கடைசி பருவம் ஒளிபரப்பாகும் இச்சமயத்தில் இத்தொடரின் சில முக்கியமான இடங்களை மட்டும் முன்வைத்து ஒரு சிறு மீள்பார்வையையும் தூண்டலையும் தருவதே இங்கு என் நோக்கம்.
இன்னொரு கோணத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸில் புதிதாக எதுவுமே இல்லை எனலாம். ஏற்கனவே மானுடம் கேட்டுக் கேட்டு தொடர்ந்து வரும் புராண இதிகாச நாட்டுபுற கதைகளின் வித்தியாசமான கோர்வை என்று கூட சொல்லலாம். ஆனால் கதைகளே அப்படித்தானே. புதிய கதைகள் என்று ஏதேனும் தனித்து, அவை போன்றன ஒன்றாய் தொகுக்கப்பட்டு காவியமாகி விட முடியுமா என்ன? ஆனால் இதன் சிறப்பு சமரசமின்மை என்பதே. இத்தனை நீளமான ஒரு கதையை சுவாரஸ்யம் குன்றாமலும், தரம் குன்றாமலும் தொடர்ந்திருப்பதே ஒரு இமயவரைச் சாதனையே. இங்கு பாராட்டி பேசுவது இவ்வடிப்படையிலேயெ அன்றி விளம்பரப்படுத்துவதற்காக அல்ல.
இந்தியப் புராணம் மகாபாரதத்தின் மைய இழையைப் போன்றே இரு குடும்பங்களின் மனக்கசப்பிலிருந்து துவங்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாத்திரப் படைப்பிலிருந்தும், காட்சிகளின் ஒப்பீடுகளிலும், அற, அதர்ம கேள்விகளிலும், யுத்தத்தை நோக்கிய நிறுவனங்களின் நகர்வுகளிலும் கூட மகாபாரதத்தை ஒத்திருக்கிறது. ஒத்திருக்கும் அதே நேரத்தில் முழுக்கவும் வேறொன்றாகவும் இருக்கிறது. முதலிரண்டு எபிசோட்களில் ஜான் ஸ்நோவின் கதாபாத்திரத்தை கவனிப்பவர்கள் எவராலும் கர்ணனின் கதை நினைவின் முன் வந்து செல்வதை தவிர்த்திருக்க முடியாது. கர்ணனைப் போன்றே வல்வீரனாய் இருந்தும் தன் பிறப்பின் ரகசியம் அறியப் பெறாதவனாய் இருக்கிறான். அரியணையிலிருந்து துரத்தப்பட்ட தார்கேரியன் வாரிசுகள் வாரிஸும், டானேரிசும் வனவாசத்தில் இருக்கிறார்கள். சான்ஸா கொடூரன் ஜெஃப்ரியால் அரசவை நடுவே துகிலுரியப்படுகிறாள். அவளைக் காக்க ஒரு கண்ணனும் அங்கே இருக்கிறான்.
ஒவ்வொரு நாளும் யுத்தத்தை நோக்கியே நகரும் வாழ்வில் அரசனுக்கும் பிரபுக்களுக்கும் மந்திரிகளுக்கும் இடையிடையே நிகழும் பூசல்கள் நட்பின் முதிர்வுகள் கோபம் அத்தனையும் உலக இதிகாசங்களின் அளவிலான வளத்தையும் இடத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொஞ்சம் கூடுதலாக சகுனிகளுக்குள் தர்மனின் விழிகள் திறப்பதையும், கிருஷ்ணனின் கணக்குகள் பிழைபடுவதையும் சேர்த்தே முன்வைத்திருக்கிறார்கள். இக்காலத்தின் இதிகாசம்.
சிற்பங்களாயிரம் தாங்கி நிற்கும் கோபுரத்தை எங்கிருந்து தொடங்குவது. முதல், கடை,கீழ், மேல் என்பதெல்லாம் ஒரு சார்பியல் கணிப்புதானே. கதைக்கு அதுவுமில்லையே. அதனால் எதைச் சொல்வது எதை விடுவது என்ற தவிப்புடனேயே இதை எழுதுகிறேன். கேம் ஆஃப் த்ரோன்ஸைத் தொடரும் ரசிகர்களின் பார்வைக்கு எழுதுவது என ஒரு நிலையிலும் புதிய பார்வையாளர்களை இது தூண்ட வேண்டும் என்ற இன்னொரு நிலையிலும் என்னை நிறுவிக் கொண்டு அங்கிருந்தே எழுதுகிறேன். முழுதாய் எழுதிட இன்னும் நூறு கோணங்களேனும் இருக்கின்றன. கம்பராமாயணம் பற்றி சிறுகுறிப்பு வரைவதைப் போல கேம் ஆஃப் த்ரோன்ஸின் சில இடங்களை மட்டுமே தொட்டுச் செல்கிறேன், கோபுரத்தை அண்ணாந்து பார்த்து திகைப்புடன் குரைக்கும் நாய்க்குட்டி போல.
2
அன்னைகள் அமரும் அரியணை :
யுத்தம் ஆண்களின் தொழில்; பெண்களுக்கு அதில் தொடர்பில்லை என்பது மேலோட்டமான பார்வைக்கு உண்மையாக இருக்கலாமேயொழிய, பெண்கள் யுத்தத்தின் தீப்பிழம்பிற்கு நெய் வளர்க்கும் அடியாற்றல். அங்கிருந்தே ஆண்கள் யுத்தத்தின் மீது பேரார்வம் கொள்கிறார்கள், ஒரு பகுதியினர் பெண்களுடன் யுத்தம் செய்ய முடியாமல் தவிப்புற்று வருவதும், மறு பகுதியினர் பெண்கள் மீது கொள்ளும் அளப்பரிய அன்பு வடிவங்களால் உந்தப்பட்டு வருவதும் வரலாறு நெடுக போர்க்களத்தின் ஆழுள்ளத்தில் கல்வெட்டென பதிக்கப்பட்டச் சான்று. நெட் ஸ்டார்க் ஒரு காட்சியில் ‘யுத்தம் மகள்களை விட எளிமையானது’ என்று சொல்கிறார். பெண்களின் எப்பருவத்தினும் அன்னைகள் என்னும் நிலை இன்னமும் சிக்கலானது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் முழுவதுமே அன்னைகளின் பதற்றங்களே தொடர்ந்து ஒவ்வொரு யுத்த நிகழ்வுகளுக்கும் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.
கேடலின் லானிஸ்டர் சகோதரர்களைத் தன் குழந்தைகளின் நலனுக்காகக் கைப்பற்றியது கிங்ஸ் லாண்டிங்கில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடுகிறது. மெலிசாண்ட்ரே ஸ்டானிஸுடன் கூடிப் பெற்ற நிழலுருவம் ரென்லியைக் கொன்று ‘ஐந்து அரசர்களின் யுத்தத்தை’ காத்திரமாகத் தொடரச் செய்கிறது. செர்சியின் நிலைப்பாடு வெளிப்படையானது. லிசா ஆரின் தன் மகன் மீது கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனமான அன்பினால்தான் இந்த லானிஸ்டர் ஸ்டார்க் மோதலே கருவுறுகிறது. சில காட்சிகளிலேயே அதை மேலும் தெளிவுபடுத்த பத்து வயது மகனுக்குத் தன் முலைப்பாலூட்டும் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வலுவற்ற மனநிலையைத் தன்வசமாக்கிக் கொண்டு பெய்லிஷ் பிரபு செய்யும் சில குளறுபடிகள்தான் அத்தனை பேரின் இயல்பு வாழ்க்கையையும் தீப்பற்ற வைக்கும் பொறியாக இருக்கிறது. கிங்க்ஸ் லாண்டிங்கில் அரியணையில் அமர்ந்திருக்கும் ஒரு அன்னைக்கும், அரியணை நோக்கி நல்லாட்சி தர பெரும்படையுடன் வந்து கொண்டிருக்கும் அன்னைக்குமானதாய் இந்த முழு கதையையும் சுருக்கிப் பார்க்கவும் முடிகிறது தானே! அது காவியங்களின் வனப்பு. பேராழியைக் கைக்குள் தங்கும் நீரிலும் விழியில் கசியும் துளியிலும் விரித்துக் காட்சி கொள்ள முடிவதும் அதில் சாத்தியமே!
செர்சியின் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இழக்கும் போதும் அவள் கதறும் காட்சிகளின் வலிமைதான் எத்தகையது. ஜெஃப்ரி கொடூரமாக தன் கண்கள் முன் சிதைந்து விழுகையில் அடிவயிற்றிலிருந்து அழும் செர்சியின் அழுகை எத்தகைய அழிவையும் புவியின் மீது படைக்கவல்லது. ஜேமியின் புகழ்பெற்ற வசனமொன்று உண்டு : கேடலினும், செர்சியும் தன் குழந்தைகளுக்காக இந்த உலகையே சாம்பலாக எரித்துத் தீர்ப்பார்கள். மிர்செல்லா இறந்து இறுதிச்சடங்கில் தன்னிருப்பினை மறுத்த டாமனிடம் பேசுவதாகட்டும், ஜேமியிடம் மிர்செல்லாவின் ‘தூய்மையைச்’ சொல்லி அது தன்னிடமிருந்து எப்படி வந்திருக்கும் என்பதை வியந்து உருகுவதாகட்டும் செர்சியின் கற்தன்மையில் அவளுக்கே ஒரு சந்தேகம் எழுந்து விடுவதைக் காணமுடிகிறதுதானே. தாய்மை அங்கே எடுக்கும் விசித்திர – ஆனால் இயற்சாத்தியமான – வளைவில் முன்னிற்கும் எவருக்கும் மனம் திரவமாகுமே.
ப்ரான் கோட்டையின் உச்சியிலிருந்து விழுந்த பின் அவனைக் கண்காணித்தவாறு அமர்ந்திருக்கும் தாய் கேடலினுடன் தனிமையில் சந்திக்கும் செர்சியின் உரையாடல் அருமையானது. அவள் தான் இழந்த முதல் மகனைப் பற்றிச் சொல்கிறாள். அதிலிருக்கும் தாய்மை தூய்மையாகத்தான் இருக்கிறது. அந்தக் குழந்தை மட்டுமே ராபர்ட்டிற்கும் செர்சிக்கும் பிறந்த குழந்தை. ப்ரான் கீழே விழ காரணமாகவே இருந்த பின்னரும், அவள் அங்கு வந்து பேசுவது ஒருவித சதிகாரத்தனம் கொண்டதாகவே இருப்பினும், அவள் சொல்வதிலும், ப்ரானுக்காக தான் வேண்டுவதாகச் சொல்வதிலும் ஒரு தாய் இன்னொரு தாயை ஆற்றுபடுத்துவதன் தூய்மை மட்டுமே தெளிகிறது. இன்னொரு கோணத்தில் பார்த்தால் இரு தாய்களுமே தன் குழந்தைகளுக்கான தாய்களே என்பது புரியும். ஜான் ஸ்நோவின் மீதான கேட்டலின் டல்லியின் வெறுப்பு வெளிப்படையே. ஆனால், செர்சியோ தன் இழப்பை முன்வைத்து கேட்டலினை ஆற்றுப்படுத்துகிறார். டைவின் லானிஸ்டரின் மகளாக இருந்து அரசியாகியிருந்தால் கேட்டலினும் செர்சி போலத்தான் நடந்து கொண்டிருப்பாளோ என்னவோ? அல்லது ராபர்ட் செர்சியின் காதலுக்கு உண்மையானவனாய் நடந்து கொண்டிருந்தால் செர்சியும் கேடலினைப் போல குழந்தைகளை அறத்தின் மடியில் வளர்த்திருப்பாளோ என்னவோ?
ப்ளாக்வாடர் விரிகுடா யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஸ்திரமற்ற தருணத்தில் சான்சாவிடம் செர்சி சொல்லும் அனுபவ உண்மைகள் அத்தனையும் அற்புதமானவை. சற்றே கோபமும் நையாண்டித்தனமும் இணைத்து சொல்லப்பட்டு வந்தாலும், அவள் பேசும் உண்மைகள் சான்சாவின் வாழ்நாள் முழுவதற்குமான பாடம். கேடலினிடம் கற்றுக் கொள்ளாத எவற்றையும் செர்சி சான்சாவிற்கு சொல்லித் தந்திருக்கிறாள், வலி தாங்குதல் உட்பட.
“The more people you love, the weaker you are. You’ll do things for them that you know you shouldn’t do. You’ll act the fool to make them happy, to keep them safe. Love no one but your children; on that front a mother has no choice” – Cersei Lannister
ட்ராகன்களின் தாய் பற்றிய பயணம்தான் எத்தனை பிரம்மாண்டமானது. தீச்சுடாத மனித ட்ராகனவள். அவள் குழந்தைகள் மூன்று. தன் வாழ்வின் முக்கிய ஆண்களின் பெயர்களை அவர்களுக்குச் சூட்டுகிறாள் : ட்ரோகான், ரீக்ஹால், விசிரியான். விசிரியான் ‘இரவரசனால்’ அம்பெய்து கொல்லப்பட்டதும் அவள் விழிக்கசிவு தாய்மையின் முக்கியக் காட்சி. அவள் மீது வன்மத்தையும், எரிச்சலையும் தொடர்ந்து தந்து கொண்டிருந்த அவளது அண்ணன் விசெரிஸ் மீண்டு வந்து அவளை எதிர்ப்பது போல விசிரியான் இரவரசனுடன் மீண்டு வருவது ஒரு அழகிய திரைக்கதை விளையாட்டு.
ட்ராகன்களின் பிறப்பு; ட்ராகன்கள் கடத்தப்பட்டதும் தாயின் தவிப்பு. தாயை காணாத ட்ராகன்கள் உண்ணாமல் இருக்கும் பண்பு. தாயை செருக்குடன் அமரவைத்துப் போர்புரியும் ட்ரொகான் என அத்தனையும் தாய்க்காகவே நிகழ்கின்றன.
3
போர்க்காட்சிகள்:
கேம் ஆஃப் த்ரோன்ஸ் முழுவதுமே ஒருவிதமான போர்க்களம்தான். உணர்வுகளின், சதிகளின், சொற்களின், உடல்களின் போர்க்களங்கள்தான். இவை அன்றியும் குருதி மழையாகும் உயிர்கள் அர்த்தமற்று போகும் மானுடத்தின் போர்க்காட்சிகள் எப்போதும் படமாக்கச் சவாலானவை மட்டுமின்றி பார்வைக்குச் சுவாரஸ்யமானதும் கூட. அத்தகைய போர்க்காட்சிகள் எத்தனையோ உண்டு. வெறும் சண்டைக்களமாக போர்கள் உருவாக்கப்படாமல், உணர்வுகளையும், போரின் இழப்புகளையும், கதைத் தொடர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் காட்சிகளையும் கொண்டு போர்க்காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனாலேயே இந்தப் போர்கள் எந்த ஒரு சினிமாவிலும் வரும் போர்களைவிடவும் பல மடங்கு செறிந்தவையாகவே உள்ளன. முதன்மையான போர்க்காட்சிகள் சிலவற்றை மட்டும் இங்கு பகிர்கிறேன்.
Battle of the Black water (Season 2, Episode 9)
சமுத்திர மார்க்கமாக வரும் எதிரிகளின் குழப்பத்திற்கென ஆளின்றி வரும் தனிக்கப்பல். அவர்களிருக்கும் கடல்நீரின் நிறம் பச்சையென மெல்ல மாறுவது. சர் ப்ரானின் வில்லிலிருந்து புறப்பட்ட தீயுமிழும் அம்பு. பதற்றமூட்டும் நிசப்தம். முதல் முறை ‘வைல்ட் ஃபையர்’ நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. மாத்தோஸ் சீவொர்த் முதல் இறக்கும் பல வீரர்கள். அதையும் கடந்து தன் அரியணை உரிமைக்காக போராடி வந்து கோட்டைச் சுவரை உடைக்கும் ஸ்டானிஸின் வீரர்கள். டிரியான் லானிஸ்டர் முன்னின்று நிகழ்த்தும் போர். ஜெஃப்ரியின் பயம், ஹவுண்ட் தீப்பற்றிய தன் நண்பர்களைக் கண்டு போரிலிருந்து விலகுதல், இடையிடையே பெண்களிடம் செர்சியின் உரையாடல் என எத்தனையோ சித்திரங்களுடன் நிகழும் இப்போர்காட்சி இரண்டாவது பருவத்தின் மகுடம். போரின் முடிவென்ன என்பதைச் சொல்லாமலேயே விடுகிறேன். பார்த்தவர்கள் சிலிர்ப்பார்கள். பார்க்காதவர்கள் பார்க்கையில் சிலிர்ப்பார்கள்.
Loot Train Battle (Season 7, Episode 4)
இதற்கு முந்தைய போர்க்காட்சிகளில் இல்லாத சிறப்பு இதற்குண்டு. மற்ற போர்கள் எப்போது நடக்கும் என்பது முன்பே எதிர்ப்பார்ப்பிற்குள்ளாகும், ஆனால் இந்தப் போர் யாராலும் எதிர்ப்பார்க்கப்படவில்லை என்பதே அச்சிறப்பு. அதிலும் இப்போரில் தோத்ராக்கி படை நகர்வைக் கவனிக்கையில் போர் லானிஸ்டர் படைக்கும் அதற்கும் நிகழும் என்று நினைக்கையில், ட்ராகன் அரசி வந்து லானிஸ்டர் பட்டாளத்தைத் துவம்சம் செய்யும் காட்சிகள் மயிர்க்கூச்செறியச் செய்வது. நுண்ணணுகிப் பார்க்கையில் ப்ரான் ட்ராக்னை காயமுறச் செய்யும் காட்சியும், ஜேமி அசாத்திய துணிச்சலுடன் தன் ஈட்டியை டானாரிஸை நோக்கிப் பிடித்து புரவியில் விரைந்து வருவதும் சிலிர்ப்பு. வெகு சிறப்பான போர்க்காட்சி.
Battle of the Bastards (Season 6, Episode 9)
ரிக்கானை கொலை செய்யாமல் விட்டு கைகளைகளை அறுத்து எதிரில் நிற்கும் ஜானை நோக்கி ஓடச் சொல்லி தன் அம்புகளால் பின் தொடரும் ராம்சேயின் குரூரத்தினை ரசிக்காமல் இருக்க முடியாது. யுத்தத்தின் முடிவு மிகச்சிறப்பாகவே இருக்கும் எனினும் யுத்தத்தை மிக நெருக்கமாக அணுகி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காட்சிக்கோர்வை அதீத தாக்கத்தை ஏற்படுத்தத் தக்கது. மிகச் சிறந்த போர்காட்சி. ’வைல்ட்ஃபயர், ட்ராகன், இருள்மந்திரங்கள் போன்ற அமானுட சக்திகளின் பயன்கள் ஏதுமின்றி மனிதர்களாகவே இரு அணிகளும் நிகழ்த்தும் யுத்தம். (ஜெயண்ட்டையும் மனிதனாக கணக்கில் கொண்டால்)
மனித உடல்கள் இறந்து குவியலாகிக் கொண்டே இருப்பதும், உயிருடனிருப்பவர்கள் குறுகி சுற்றிவளைக்கப்பட்டு நசுக்கப்படுவதும் அதிலிருந்து உயிர்வளிக்கு தவிப்பதும் என போரின் மைக்ரோ கணங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கும் விதம் அதீத அருகமைவு உணர்வைத் தரும்.
4
கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஏன் தனித்து நிற்கிறது?
- கதாபாத்திர படைப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களின் இடையே இருக்கும் ஒத்த தன்மைகளும் வேறுபாடுகளும், இருளும் ஒளியும் பிணைந்திருக்கும் விதமும், கதாபாத்திரங்களின் உளவியலும் சூழலுக்கேற்ப செயல்படும் தகவமைப்பும் என அத்தனையும் துல்லியமாய் எழுதப்பட்டிருக்கிறது.
- போர்க்காட்சிகள் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் வராத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், நுட்பமாகவும், இதிகாச புராண அளவீடுகளில் உருவாக்கப் பட்டதோடு, உணர்வு ரீதியாகவும் ஸ்தம்பிக்க வைக்கும் திறனுடன் படைக்கப்பட்டிருக்கின்றன.
- மரணங்கள். எதிர்பாராத மரணங்கள் வந்து எவரையும் தழுவும் தோறும் வாழ்வின் நிலையாமை பற்றிய சுவாரஸ்யத்தையும் கூட்டி விடுகிறது.
- பொருளுக்குள் பொருள் பொதிந்த சொல்லடுக்குகளும் மெளனங்களும் நடிப்பும் நம் நினைவடுக்குகளில் கதாபாத்திரங்களை எளிதாக அச்சேற்றிவிடுகின்றன.
- மிகுபுனைவு கூறுகள். இயலுலகிலிருந்து வெளியேறிப் பறக்க இதயத்திற்கு சிறகுகளாய் மிகுபுனைவுகள் தேவைப்படுகின்றன. அதன் பண்புகளை உணர்ந்து ஒரு அரசப்புனைவில் சரிவிகிதம் பயன்படுத்தி இருப்பது. ட்ராகன், வொயிட் வாக்கர்ஸ் , வைல்ட்ஃபயர், அரக்கர்கள், நடைபிணங்கள் இன்னும் கொஞ்சம் கற்பனை.
- பட்ஜெட். எபிசோட் ஒன்றுக்கு சுமார் 4 முதல் 10 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் ஏறத்தாழ எழுபது கோடி வரை. மொத்தம் 73 எபிசோடுகள். எட்டாவது பருவத்தில் எபிசோடிற்கு 15 மில்லியன் டாலர் வரை போகிறது மதிப்பீடு.
- George R.R. Martin.
கேம் ஆஃப் த்ரோன்ஸின் எழுத்தாளர் ஜார்ஜ் மார்டின், நியூ ஜெர்சியில் தனது இருப்பிடத்தில் செல்லப் பிராணிகளான நாய், பூனை ஆகியன வளர்ப்பதற்கு தடை இருந்து வந்தது. எனவே, கடலாமைகளைச் செல்லப் பிராணிகளாக ஜார்ஜ் மார்டின் வளர்த்து வந்திருக்கிறார். அவைகள் வளருமிடத்தில் ஒரு பொம்மை கோட்டை இருந்திருக்கிறது. அவை நல்ல உணவு வழங்கப்பட்டும் விரைவிலேயே இறந்த வண்ணம் இருந்திருக்கின்றன. அதைத் தவிர்க்கவே முடியவில்லை. மெல்ல அதை ஒரு கற்பனை உலகிற்குள் பொருத்திப் பார்க்கிறார் ஜார்ஜ். கடலாமைகள் அந்தக் கோட்டையை அடைய போட்டியிடுவதாக கற்பனை செய்து தான் எழுதிய கதைக்கு ‘Turtle Castle’ என்று பெயரிட்டிருக்கிறார். பின்னாளில் விரித்தெடுத்து உருவான கேம் ஆஃப் த்ரோன்ஸிற்கு இதுவே அடிப்படை.
5
அடுத்த பருவத்தில் கவனிக்கப்பட வேண்டிய சிறு கதாபாத்திரங்கள்:
முக்கிய கதாபாத்திரங்களுக்கு அறிமுகமோ நினைவூட்டலோ தேவைப்படாது என்ற அளவில், ஆறாம் ஏழாம் பருவங்களிலிருந்து முக்கியத்துவம் பெற்று முன்னேறி வரும் சில சிறிய கதாபாத்திரங்களைப் பற்றி பேசலாம்.
கைபர்ன்:
செர்சிக்கு நம்பிக்கையும் பலத்தையும் ஊட்டும் முக்கியத் தூணாக க்ரிகோர் க்ளிகேன் இருப்பதைப் போலவே, தற்போது வந்து சேர்ந்திருக்கும் கைபர்னும் இருக்கிறார். கைபர்னை க்ரிகோருடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான் பொருந்தும். ஆனாலும் தன் மெலிந்த உடலையும், மெல்லிய குரலையும் முன்வைத்துக் கொண்டே உளத்தின் திடத்தால் முன்னகரும் மலையாக கைபர்ன் இருக்கிறார். சொல்லப் போனால் ‘Trial of Combat’ காட்சியில் ஒபெரின் மார்டெலால் தாக்கப்பட்டு அதிக காயமுற்ற கிரிகோரை இன்னுமொரு மிருகத்தனமான மலையாக மீளுருவாக்கம் செய்தது அந்தத் துணிச்சல்காரன் தான்.
ஜேமியின் அறுபட்ட வலது கரத்தை மருத்துவம் செய்து ஜேமியின் உயிரைப் பாதுகாத்ததிலிருந்து ட்ராகனை எதிர்த்துப் போரிட அமைத்த இயந்திரத்தின் வடிவமைப்பு வரை தொடர்ந்து செயற்கரிய அழிவேற்படுத்தும் செயல்களை மெளனமாகச் செய்து வருகிறான். புகழ்பெற்ற குற்ற விசாரணைக் காட்சியில் ‘நான் எதையும் ஒருபோதும் மறப்பதில்லை’ என்று வாரிஸ் சொல்வான். தன் மகனை, தன் தந்தையைக் கொன்ற சகோதரன் டிரியனுக்கு ஒத்துழைக்கத் துவங்கிய வாரிஸின் இடத்தை கைபர்னைக் கொண்டு பூர்த்தி செய்த செர்சி, தொடர்ந்து வாரிஸின் ‘சிட்டுப் பறவைகளையும்’ அழிப்பதற்கான உபகரணங்களைச் செய்ய கைபர்ன்னை ஆதரிக்கிறாள். ஆனால் செர்சியும் எதையும் மறப்பதில்லையே.
கைபர்னுடைய ஆத்ம மகிழ்வு அவனது அறிவியல் சோதனைகளிலேயே இருக்கிறது. அதைத் தொடர்வதற்கான சுதந்திரம் தரும் எவரும் அவனது ஆதர்ஷத்திற்கும் மரியாதைக்கும் உரியவராகி விடுவார். அவ்விதத்தில் செர்சியும் கைபர்னும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நன்மையுறுபவர்கள். கைபர்னுடைய அதீத அழிவேற்படுத்தும் சாத்தியமுள்ள கண்டுபிடிப்புகளை உணர்ந்த அறிஞர்கள் அவரை ‘மேஸ்டர்’ பதவியிலிருந்து நீக்கி துரத்தி விட்டதாக சில இடங்களில் குறிப்புகள் வருகின்றன.
ராப் ஸ்டார்க்காலும் அவன் மனைவியாலும் ஹாரன்ஹாலில் கண்டெடுக்கப்படும் கைபர்ன் போல்டன் மனையில் ஆங்காங்கே இருக்கும் காட்சிகளும் வருகிறது. தன்னுடைய அமைதியான, கடினமான மனத்திட்பத்தால் தன்னிடத்தை நிர்ணயித்துக் கொள்ளும் கைபர்ன் யாருமற்ற நிலையிலிருந்து மெல்ல ‘உளவமைச்சர்’ என்ற பொறுப்பைப் பெற்று, தற்போது ‘அரசியின் கை’ என்ற உயரிய நிலையில் இருக்கும் கைபர்ன் எந்த நிலையிலும் தன்னுடைய நாணயத்தினை செர்சியின் பக்கமே காட்டும் வாய்ப்பிருப்பதால், வரும் இறுதி பருவத்தில் செர்சியின் எதிர்பாராதத் தாக்குதல்களுக்கு கைபர்னின் கைகள் முக்கிய கருவியாகச் செயல்படும்.
யூரான் க்ரேஜாய் :
கேம் ஆஃப் த்ரோன்ஸ் முழுக்கவே பார்வையாளர்களை எரிச்சலுக்கு உட்படுத்தும் கதாபாத்திரங்களில் முதன்மையானவை மூன்று. ஜெஃப்ரி, ராம்சே மற்றும் யூரான். ஜெஃப்ரி பலரையும் துன்புறுத்தும் வக்கிரப் புத்தியுடையவன் எனினும் எந்தவித அறிவோ, எந்தவித துணிச்சலோ, பராக்கிரமம் செய்யும் பண்போ அறவே இல்லாதவன். அரசன் என்ற நிலையில் இருப்பதால் அதீதமாய் ஆட்டம் போடும் கொலைகாரக் குழந்தை. ராம்சே ஜெஃப்ரியை விடவும் நுணுக்கமான வக்கிர செயல்களில் ஈடுபட்டு தன் கைகளில் கிடைக்கும் எவரையும் வேதனையின் நரகத்தை உணர வைக்கும் தன்மை படைத்தவன். தியானை அவன் படுத்தும் சித்தரவதைகள் எத்தனை இருண்மையானவ. இருவருமே இறந்த பின் அவர்களது பாத்திரப் படைப்பினை விட இன்னும் கோரமான பாத்திரம் என எஞ்சுவது யூரான் க்ரேஜாய் மட்டுமே.
யூரான் இன்னும் சாந்தமாக வன்மம் செய்யும் திறனுடையவனான அதே நேரத்தில் இன்னும் தன் எதிர்காலத்தைக் கணக்கிட்டு புன்னகை செய்வதிலும் எதிரிலிருப்பவருக்கு உதவியை முன்வைப்பதிலும் தேர்ந்த சைக்கோவாக முன்வருகிறான். களவீரத்திலும் ராம்சேவை விட கூடுதல் ஆற்றல் கொண்ட கொலைகாரனாக இருக்கிறான். குறுங்கடலில் எலிரியாவும், யாராவும், தியானும் அவர்கள் படைவீரர்களும் இருக்கும் கப்பலில் எதிர்பாராத விதமாக நுழைந்து துவம்சம் செய்யும் காட்சியைச் சொல்லலாம். யூரான் சில பெண் வீரர்களை அவர்களது ஆயுதத்தாலேயே தாக்கி அழிக்கும் காட்சிகள் அவனது கொலை வெறியைத் தெளிவாகவே காட்டுகின்றன.
செர்சியின் அரசவையில் ஜேமியின் முன்னிலையிலேயே அவர்களை நாசுக்காக கிண்டலடிக்கும் காட்சிகள் யூரானின் வக்கிரத்தை இன்னும் ஆழமாகக் காட்டுகின்றன. செர்சி அவனது சகோதரனையே கொன்ற நிகழ்வைச் சுட்டி அவனது நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் போது ‘நீயும் அதை முயற்சித்துப் பார்க்க வேண்டும். அற்புதமான அனுபவமது’ என்று சொல்வதும், செர்சிக்குத் தன் காதலை முன்மொழியும் போது தனக்கு இரண்டு கைகள் இருப்பதைச் சொல்லி ஜேமியைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு செய்வதும் அத்தகைய காட்சிகளே.
டானேரியஸின் துணைக்கு வந்தவர்களுள் முதன்மையான யாராவை யூரான் க்ரேஜாய் தன் வசம் வைத்திருப்பதிலும் (ஏற்கனவே ஒலினா டைரல் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்), மிர்செல்லாவின் கொலைக்கு பழிவாங்க எலிரியாவையும் அவள் மகளையும் பரிசாக அளித்ததிலும் செர்சிக்கு இன்னுமொரு முக்கிய பலமாக யூரான் உருவெடுத்துள்ளான். ஏழாம் பருவத்தின் இறுதி எபிசோடில் செர்சியிடமிருந்து விலகிச் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கும் யூரானிடம் அதிர்ச்சிகள் காத்துள்ளன.
கெண்ட்ரி :
ராபர்ட்டின் இறப்பிற்குப் பிறகு அவரது சகோதரர்கள் ஸ்டானிஸும், ரென்லியும் தங்களுக்குள்ளான எதிர்மறை கருத்துக்களாலும் தத்தம் வினையாலும் கொல்லப்பட்டனர். ஸ்டானிஸின் வாழ்வில் செய்த பிழைகளிலேயே ஏற்றுக் கொள்ளவே முடியாத பிழையான ஷெரின் பலிதானம் நடந்துவிட்டது. செர்சியும் ஜெஃப்ரியும் அரியாசனத்தைக் கைப்பற்றியதும் ராபர்ட்டின் அத்தனை முறைபிறழ் குழந்தைகளும் தேடிக் கொல்லப்பட்டன. கெண்ட்ரி மட்டும் இதுவரை உயிரோடு இருப்பது பராத்தியான் மனையகத்தின் தொடர்ச்சி இருப்பதைச் சுட்டுகிறது. இதிலும் முக்கியமாக, கெண்ட்ரியின் பண்புகள் ஒரு திறமையான நிலையான அரசியலைத் தரும் வாய்ப்புள்ள அரசனின் பண்புகளையே ஒத்துள்ளன. ஜெஃப்ரியிடமிருந்த அத்தனை குணங்களுக்கும் எதிரான நற்குணங்களையே கொண்டவனாக இருக்கிறான் கெண்ட்ரி.
ஜெஃப்ரி வலுத்தோரை சுற்றி வைத்துக் கொண்டு இயலாதோரைத் துன்புறுத்துவான். கெண்ட்ரி வலுத்தோரிடமிருந்து எளியவரைக் காப்பான். நெட் ஸ்டார்க்கின் தலை துண்டிக்கப்பட்டதும் வெளியேறும் ஆர்யாவை காப்பாற்றுவது கெண்ட்ரி தான். தொடர்ந்து பல இடங்களில் அலைவுற்றும், துரத்தப்பட்டும், ஏமாற்றப்பட்டும் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த கெண்ட்ரி மீண்டும் ஏழாவது பருவத்தில் East-watch எபிசோடில் வந்து இணைகிறான்.
சவ மனிதன் ஒருவனைப் பிடித்து வர போகும் ஒரு வீரர்களின் அணியில் இணைகிறான். தன் இளமை முழுதும் உடலுழைக்கும் கருமானாக இருந்த கெண்ட்ரி தன் கையால் செய்த சுத்தியலின் உதவியுடன் சண்டையிடுகிறான். அவனது பின்புலம் வரும் பருவத்தில் ட்ராகன்க்ளாஸ் என்ற உலோகத்திலிருந்து பல ஆயுதங்கள் செய்ய உதவும் என்றே நினைக்கிறேன். இவ்விதத்தில் அவனொரு முக்கிய கருவி. சமீபத்திய டீசரில் பல ட்ராகன்க்ளாஸ் அம்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
மெலிசாண்ட்ரேயின் சூனியவித்தையின் மூலம் கெண்ட்ரியின் குருதியை உறிஞ்சிய மூன்று அட்டைகள் ஸ்டானிஸால் தீயிலிடப்படுகிறது. அந்த மூன்று குருதிக்கும் ஸ்டானிஸ் கேட்கும் மூன்று பலியும் நிகழ்ந்தேறி விடுகிறது – ரென்லி, ராப் மற்றும் பாலோன். இதன் முக்கியத்துவத்தை கவனிக்கையில் அரியணைக்குத் தகுதியான இரத்தம் கெண்ட்ரியிடம் இருப்பதாகவெ ஒரு சுவாரஸ்ய முடிவுக்கு வரமுடியும்.
இன்னொரு சுவாரஸ்யமான வாதம் இருக்கிறது. துவக்க பருவத்தில் ப்ரான் அடிபட்டதும் ஆறுதல் கூற வரும் செர்சி தான் இழந்த முதல் மகனின் துயரத்தைச் சொல்லி விடைபெறுவாள். இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராபர்ட்டும் செர்சியும் அமர்ந்து பேசும் ஒரு காட்சியிலும் அதே குழந்தையின் விவரணைகள் வரும். அந்தக் குழந்தை இறந்ததாகவும், தன்னிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் செர்சி கூறும் அக்குழந்தை மட்டுமே ராபர்ட்டின் உண்மையான குழந்தை. தலைமயிர், நீலவிழிகள், செர்சியின் குறிப்புகள் அத்தனையையும் உற்று நோக்கினால் கெண்ட்ரியை நோக்கி ஒரு திரை விலகும். அந்தக் குழந்தை கெண்ட்ரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
அரியணைக்கான வாரிசுரிமைத் தகுதிகளிருந்தும், அரசனுக்கான குணங்கலிருந்தும் ஆயுதங்கள் தயாரிக்கும் கொல்லனாக இருக்கும் கெண்ட்ரியின் பாத்திரப் படைப்பிற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
மெலிசாண்ட்ரே :
பெண்களில் மாயமந்திரத் தன்மைகள் அத்தனையும் அறிந்திருக்கும் சூனியக்காரி மெலிசாண்ட்ரே. ரென்லியைக் கொல்ல ஸ்டானிஸுடன் கலவி செய்து நிழலுருவைத் தோற்றுவித்தது, தனக்கு தரப்பட்ட விடம் கலந்த திரவமருந்தி புன்னகைத்தது, கெண்ட்ரியின் உயிர்த்துளிகளை அட்டைப்பூச்சிகளில் உறிஞ்சி பலிகொடுத்தது, ஒளியின் தேவன் என்னும் கடவுளுடன் உரையாடி சுவிஷேசங்கள் பெறுவது என இந்த செஞ்சூனியகாரி செய்த எதிர்மறை செயல்கள் ஏகப்பட்டது. குறிப்பாக ஸ்டானிஸைத் தன் மகளைப் பலி கொடுக்க சமாதானப்படுத்தியது ஆகப்பெரிய அல்செயல். ஆனால் ஜான் ஸ்நோவை உயிர்ப்பித்த ஒரே காரணத்தில் தன்னுடைய முந்தைய நிலையிலிருந்து சற்றே மாற்றம் பெற்றுள்ள கதாபாத்திரம் இது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் முழுக்கவே எந்த ஒரு நிறுவனத்தையும் கேள்விகளுக்குட்படுத்துவதை தவிர்க்கவில்லை எழுத்தாளர். ஒளியின் தேவன் என்று அறியப்படும் கடவுளின் பெயரால் நடக்கும் ஆபத்தான வித்தைகள் விளக்கப்படுகின்றன. அதில் சில வித்தைகள் மெய்யாக நிகழ்கின்றன. சில சூனியங்கள் பொய்யாகிப் போகின்றன. கடவுளின் இரட்டைத் தன்மை நிலைத்தோங்குகிறது. கடவுளின் இயலாமை குறித்தோ அல்லது கடவுளின் கோரமுகம் குறித்தோ, கடவுளின் இல்லாமை குறித்தோ நேரடியாகப் பேசாமல் சம்பவங்களின் தொகுப்பில் இருக்கும் விழியறியா தொடர்ச்சியைப் பேசிச் செல்கிறது.
”எரியையும் பனியையும் ஒன்றுகொள்ள செய்து விட்டேன்” என்று வாரிஸிடம் சொல்லிவிட்டு செல்லும் மெலிசாண்ட்ரே வாரிஸைப் போலவே தான் மீண்டும் வெஸ்டிரோஸ் வந்து தன் முடிவை எய்துவாள் என்பதால் இந்தக் கதாபாத்திரம் வரும் தொடர்களில் முக்கியப் பங்கு வகிக்கும்.
6
கேம் ஆஃப் த்ரோன்ஸ் அளவிலும் தரத்திலும் முப்பது திரைப்படங்களுக்குச் சமமானது. நினைவிலிருந்தே மிகச் சிறந்த எபிசோட்கள் என தோன்றியவற்றைப் பட்டியலிட்டாலே பல தேறும். இன்னும் அணுகி யுத்தக்காட்சிகளின் தாக்கம், நிர்வாணக் காட்சிகள், உரையாடல் காட்சிகள், நிலக்காட்சிகள் ஆகியவற்றைப் பற்றி பேச ஒரு அரங்கமோ ஒரு டஜன் கட்டுரைகளோ தேவைப்படலாம்.
கேம் ஆஃப் த்ரோன்ஸில் இதுவரை வெளிவந்த, மிகவும் பாதிப்பேற்படுத்தியவற்றின் காட்சிகள் அல்லது காட்சித்தொடர்களின் பட்டியல்:
- நெட் ஸ்டார்க் தலை துண்டிக்கப்படுதல்.
- செந்திருமணம்.
- ட்ராகன்கள் பிறக்கும் தருணம்.
- ப்ளாக்வாட்டர் விரிகுடா போர்.
- ’மிசா’ தருணம்.
- ஜெஃப்ரி இறக்கும் தருணம்.
- டிரியன் லானிஸ்டர் விசாரணை.
- ஒபரென் க்ளிகேன் சண்டை.
- காஸல் ப்ளாக் யுத்தம்.
- ஹார்பியின் மகன்கள் செய்யும் கலவரம்.
- ஷிரீன் பலிகொடுக்கப்படுதல்.
- ஜான் ஸ்நோ இறந்து உயிர்த்தெழுதல்
- ஹோடோர் இறப்பு.
- ஜான் ஸ்நோ, ராம்சே ஸ்நோ யுத்தம்.
- செர்சி செப்ட் ஆஃப் பேலரைத் தரைமட்டமாக்குவது.
- வால்டர் ஃப்ரே கொலை
- ஜானும் டானேரியஸும் சந்தித்தல்.
- லானிஸ்டர் படையை அழிக்கும் டானெரியஸ்.
- வெஸ்டிரோஸ் வீரர்களின் எழுவர் அணி.
- பிரபு பெய்லிஷ் தண்டிக்கப்படுதல்.
நண்பனுடன் (அதாவது கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்காத நண்பன்) உரையாடிக் கொண்டிருக்கையில், தொடர்ந்து நானும் அத்தொடரில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் பேசியவற்றையே மேற்கோளாகக் காட்டி பேசிக் கொண்டிருந்தேன். “உனக்கு வேற வேலையே இல்லையாடா, அதைப் பார்த்து என்ன ஆகப் போகிறது?” என்று வினவிய நண்பனிடம் சற்று விளக்கினேன்.
“இத்தனை ஆண்டுகளாய் நீயும் நானும் ஒன்றாய் இருந்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டதை விட, டிரியான் லானிஸ்டரின் நகைச்சுவையையும், செர் ப்ரானின் தைரியத்தையும், தியான் க்ரேஜாயின் கோழைத்தனத்தையும், ஜான் ஸ்நோவின் அறத்தையும், செர்சியின் கபடத்தையும் எனக்கு நன்றாகத் தெரியும். நிஜத்தில் இருப்பவர்களை விட கதைகளின் மாந்தர்கள் அத்தனை நிஜமாய் எனக்கு இருக்கிறார்கள்” என்று சொல்லி எரிச்சலை சற்று கூட்டி வைத்தேன் அவனுக்கு. அவன் அங்கிருந்து நகர்ந்ததும் யோசித்தேன்.
சற்று பொறுங்கள்,
நான் சொன்ன வரிகள் ஏமான் தார்கேரியன் (மேய்ஸ்டர் ஏமான்) சாம்வெலிடம் சொன்னதை பெரிதும் ஒத்திருந்தது!
வல்லடி வம்பன் தொடங்கி வல்லாள கண்டன் வரை எதிரிகளையும் நண்பர்களுருவில் இருக்கும் துரோகிகளையும் கடந்து வாழ்ந்து மரணத்தைத் தழுவ வேண்டியிருக்கும் இந்த வாழ்வில், யதார்த்தத்தை உருக்குலைத்து வேறோரு உலகில் புனையப்படும் எதுவும் அவன் மனதில் விழும் தெளிபிம்பத்தால் உணரப்படும். போர்முக வாழ்வில் அம்பு எத்திசையிலிருந்தும் வரலாம், நெஞ்சிலும் துளையிடலாம், அல்லையிலும் சொருகலாம். அதைப் புரிந்து கொள்ள ஒரு முழு வாழ்வோ ஒரு சில மிகுபுனைவுலகங்களோ தேவையாகின்றன.
7
ஒரு படைப்பு உருவாக்கப்பட்ட பின் அதன் கர்த்தாவிடம் மட்டுமே அது சிறைப்பட்டு கிடக்கப் போவதில்லை. அது வானில் பறக்கிறது. அதைக் காணும் விழிகளின் வழியே ஒரு கூண்டு உருவாகிறது. அந்தக் காட்சி மெல்ல காண்போரின் மனதில் கற்பனையில் ஊற்றெடுக்கிறது. அப்படி பல பார்வையாளர்கள் அந்தப் படைப்பின் மீதான கருத்து விவாதங்கள், கற்பனைகள், தொடரவிருக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றைக் கணிப்பதென்பது ஒருவகையில் அப்படைப்புக்கான வெற்றியை அளவுகோலிட உதவுவது. இதில் வெறும் ரசிகக் கூச்சல்களும் விசில்களும் பொருட்படுத்தப்பட மாட்டாது. அது வெறும் வணிக வெற்றியாக எஞ்சும். படைப்பின் வெற்றி அதில் ஈடுபட்ட மனங்களின் எழுச்சியின் தொகை.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஏழாம் பருவத்தில் சில கதைப்போக்குகளை ரசிகர்கள் முன்னரே கணித்தும் கற்பனை செய்தும் வைத்திருந்தவாறே நிகழ்ந்தது. விசிரியான் என்னும் ட்ராகன் அடையும் நிலை, யூரான் க்ரேஜாயின் கோர ஆட்டம், டானெரியஸ் லானிஸ்டர் படையினைத் தன் பலத்தால் துவம்சம் செய்தல் போன்ற முக்கிய நிகழ்வுகள் ரசிகர்களால் முன்னறியப்படவில்லை. எனினும், இதற்கு முன் ஜான் ஸ்நோவின் பிறப்பைப் பற்றிய கணிப்பும், ஜான் ஸ்நோ இறந்து மறுபிறப்பு கொள்ளும் காட்சி பற்றிய முன்னறிவிப்பும், ஐஸ் ட்ராகன்களைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஜான் மற்றும் டானேரியஸின் காதல் காட்சிகள் பற்றிய ஆரவாரமும், பெஞ்சன் ஸ்டார்க்கின் எதிர்பாராத தோன்றுதலும் எனத் தொடர்ந்து ரசிகர்களின் கருதுகைகள் நிஜமாக தொடரில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
உதாரணமாக, ஜான் ஸ்நோவின் உயிர்த்தெழுதல் பற்றி கவனிப்போம். ஜான் ஸ்நோவின் டயர்வுல்ஃப்- இன் பெயர் ‘கோஸ்ட்’. அப்பெயரிலிருந்து ஜான் ஸ்நோ இறப்பான் என்றும், பின் மீண்டும் உயிர்த்தெழுவான் என்றும் ஒரு கோட்பாடு உருவாகி வந்தது. இதற்கு முன்னரே ஒவ்வொரு ஸ்டார்க்களின் டயர்வுல்ஃப்கள் அடைந்த நிலையை வைத்தும் பெயர்களை வைத்துமே இந்த கோட்பாடு உருவாகி வந்திருக்கிறது. சான்சாவின் ‘லேடி’ இறந்த பின் சான்சாவின் ‘அரசி’ கனவு தகர்ந்து தன்னைச் சுற்றி இருக்கும் உலகின் கோரப்பிடிகளில் சிக்குவதே எதார்த்தம் என அறிகிறாள். ஆர்யாவின் ‘நெமிரியா’ தொலைவதைப் போலவே அவளும் தன் வழித்தடம் எங்கோ போவதை முன்வைக்கிறாள். இப்படி உருவான ரசிகர்களின் கோட்பாடுகள் அவர்களது பங்களிப்பினை வெகுவாய் அதிகப்படுத்துகிறது.
அவ்விதமாக வரும் எட்டாவது பருவத்தில் மிகச்சிறந்த சில கோட்பாடுகள் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
- ப்ரானின் மூவிழிகள் முக்காலத்தையும், முப்பரிமாணத்தையும் அறிந்தது. அதன் மூலம் அவன் செல்லவிருக்கும் சாத்தியங்களைக் கொண்டு ’ப்ரானே இரவரசன்’ (Night King) போன்ற பல கோட்பாடுகள் உருவாகியிருக்கின்றன.
- செர்சியின் மரணம் அவளது இளையவனால் நடைபெறும் என்ற குறிசொல்லப்பட்டதை அடுத்து அவள் யாரால் கொல்லப்படுவாள் என்ற வாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தந்தையைக் கொன்ற டிரியானாலா? பித்தரசனைக் கொன்ற ஜேமியாலா? பட்டியலைக் குறைத்துக் கொண்டிருக்கும் ஆர்யாவாலா?
- பிரபு பெய்லிஷின் குணநலனையும் அவனுக்கு மரணம் சம்பவித்ததில் உள்ள தன்மையையும் ஒப்பிடுகையில் ஏதோவொரு இனம்புரியா முழுமையின்மை தோன்றுவதாகவும், மீண்டும் பெய்லிஷ் இத்தொடரில் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகிறார்கள். சிலர் எரிக்கப்படாத பெய்லிஷின் உடல் இரவரசனின் படையில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வாதம் நீள்கிறது.
இறந்த பிணங்கள் White walkers ஆவதும், முகமற்ற மானுடர்களின் விசித்திரமும், மூவிழி கொண்டு உலகைப் பார்க்கும் ப்ரானும் என எதிர்பாராத திசையில் செல்லும் வாய்ப்புகளுடன் முன்னகரும் கதையோட்டத்தின் வளம் கொண்ட கேம் ஆஃப் த்ரோன்ஸின் சிறப்புகளுள் ஒன்று அது தன் ரசிகர்களின் கற்பனையுடன் ஆடும் விளையாட்டு. இப்பகுதியை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போது எட்டாம் பருவத்தின் முதல் எபிசோட் வெளியாகியிருக்கும். வலுவான ஊகங்களை முன்வைப்பதற்கான அடிப்படைப் பின்புலம் தெளிந்து திரண்டிருக்கும். பரபரப்புடனும் ஆவலுடனும் காத்திருக்கிறேன். எட்டாண்டு கால நெடுந்தவம் முடிவுக்கு வருவது போலிருக்கிறது.