இஸ்லாம் தமிழ் மண்ணில் வேரூன்றிய காலத்திலிருந்து இஸ்லாமியர்களும் இங்கே இலக்கியங்களைப் படைத்துக் கொண்டு தான் இருந்தனர். சீறாப்புராணம், குத்பு நாயகம், ராஜநாயகம் போன்ற காப்பியங்களும் மஸ்தான் சாகிபு, பீரப்பா ஆகியோர் எழுதிய ஞானப் பாடல்களும் தமிழ் மரபின் சுவையோடு படைக்கப்பட்டன. அருணகிரிநாதர் எழுதிய அதே ஓசையோடு காசிம் புலவர் ‘திருப்புகழ்’ படைத்தார். சிற்றிலக்கியங்களில் ‘உலா’ தவிர்த்த அனைத்து வடிவங்களிலும் இஸ்லாமியப் புலவர்கள் படைப்புகளைப் படைத்தனர். முனஜாத்து, நாமா, கிஸ்ஸா, படைப்போர் போன்ற சிற்றிலக்கிய வடிவங்களை அவர்கள் புதிதாக உருவாக்கி தமிழுக்குக் கொடையாகத் தந்தனர். பிச்சை இப்ராஹிம் புலவர் போன்றோர் இலக்கணக் கோடரி என்று போற்றப்படுகிற அளவுக்கு தமிழ் இலக்கணத்தில் புலமை பெற்றிருந்தார். ‘மிஃறாஜ் மாலை’ எழுதிய ஆலிப்புலவர் சகலராலும் கொண்டாடப்பட்டார். வள்ளலாரின் பாடல்களை மருட்பா என்று வாதிட்ட இந்துவுக்கு ( ஆறுமுக நாவலர் ) எதிராக ஓர் இஸ்லாமியர் தான் (சதாவதாணி செய்குத்தம்பிப் பாவலர்) முஷ்டி முறுக்கி வாதிட்டார்.
ஆனால் நவீனத்துவம் புதுமைப்பித்தன் போன்றோரால் தமிழில் அறிமுகமான போது அந்த இலக்கிய ஜோதியில் இஸ்லாமியர்கள் தம்மை இணைத்துக் கொள்ளவில்லை. இதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும் .
1. கல்வி அறிவு மிகவும் குறைவாகப் பெற்றிருந்த இஸ்லாமியர்களிடையே செவி வழியாக மரபான தமிழ் இலக்கியங்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் போய்ச் சேர்ந்ததைப் போல நவீன இலக்கியங்கள் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை.
2. கொஞ்ச நஞ்ச அறிவுஜீவிகளும் ஆங்கிலத்தையும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளையும் இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றாகவே கருதியதால் அவற்றைப் புறம் தள்ளியிருக்கலாம் ( சுதந்திர போராட்ட காலத்தில் தேவ்பந்த் மதரசா ஆங்கிலத்தை ‘ஹராம்’ என்று அறிவித்தது. இதன் எதிர்வினையாகவே சர் சையது அகமது கான் தொடங்கிய அலிகர் பல்கலைக்கழகத்தைப் பார்க்க முடியும் )
3. அதுவரை இஸ்லாமியர்கள் படைத்த இலக்கியங்கள் யாவும் தம் சமயத்தை தமிழ் மண்ணின் மரபுகளோடு இணைத்துப் பாடப்பட்டவைகளாகவே இருந்தன. உருது, பாரசீக மொழியில் இருந்ததைப் போல சமயத்தைத் தாண்டிய கவிதை மரபு தமிழக இஸ்லாமியர்களிடையே உருவாகவில்லை.
4. இஸ்லாமியர்களின் அறிவுப் போக்கைத் தீர்மானிக்கும் அதிகார மையங்களாக மத குருக்களே கோலோச்சினர். அவர்கள் அப்போது உருவாகி வந்த நவீன இலக்கிய வாசிப்பை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மரபான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களே ஓரளவு விபரம் தெரிந்த இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இலக்கியங்களாக அறியப்பட்டிருந்தன. பிறர் மதகுருக்களின் உரைகளையே தங்களுக்கான ஒரே அறிவு வழிகாட்டுதலாக எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தனர்.
5. இஸ்லாமியர்கள் அரசியல் விழிப்புணர்வைப் பெற்று காங்கிரஸ், முஸ்லீம் லீக், திமுக போன்ற இயக்கங்களில் ஈடுபட்ட போதும் அவர்களின் வாசிப்பு அபுனைவுகளாகவே இருந்தன. அந்த இயக்கங்களும் பொதுவான இலக்கிய வாசிப்புகளை ஊக்குவிக்கவில்லை. திக, கம்யூனிஸ்ட் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்த முஸ்லீம்கள் பெரும்பாலும் அந்நிய சக்திகளாகவே சமூகத்திற்குள் செயலாற்றி வந்தனர்.
6. அரசியலிலும் கூட பெரும்பாலான இஸ்லாமியர்கள் செயல் வீரர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். வாசிப்புப் பழக்கம் கொண்ட அறிவுஜீவிகள் மிகவும் குறைவு.
7. கதை, கவிதை ஆகியவை ஹராம் என்கிற மனப்போக்கை பின்நாட்களில் வஹாபிகளே கற்பித்தாலும், சமயம் சாராத கதை கவிதைகளை பெருமளவில் நாடாத மனநிலையையே பொது இஸ்லாமிய சமூகத்திற்குள் மதகுருக்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.
எனவேதான் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் முளைவிட்டு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிளை பரப்பிய நவீனத்துவ எழுத்து அதன் அசலான வீச்சோடு இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளிப்பட எண்பதுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ( அப்போதும் அந்தப் படைப்புகள் இஸ்லாமிய சமூகத்தை பெரிய அளவில் தொடவேயில்லை )
தமிழ், மலையாளம், அரபு ஆகிய மூன்று கலாச்சாரங்களின் திரிவேணி சங்கமமாகத் திகழ்ந்த தேங்காய்ப்பட்டினம் தான் தோப்பிலின் சொந்த ஊர். செத்துப் போன இஸ்லாமியர்களைப் புதைக்கிற கபுர்ஸ்தானுக்குப் பக்கத்தில் வாழும் எளிய மனிதர்களை ‘தோப்புக்காரர்கள்’ என்று சற்று இழிவோடு கூறும் வழக்கம் அங்கு இருந்திருக்கிறது. அதையே தன் அடையாளமாக்கிக் கொண்டார் தோப்பில். கேரளாவில் வீட்டுப் பெயரைச் சொல்லி மனிதர்களை அழைக்கிற வழக்கம் உண்டு. புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய ‘மீசான் கற்கள்’ நாவலில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் படிக்கிற ஒரு பள்ளிக்கு ஒரு கல்வி அதிகாரி வருவார். அவர் ஒரு பையனிடம் பெயர் கேட்பார். அவன் ‘கம்பி வேலிக்குள் அசன்’ என்று பதில் சொல்வான். எல்லாம் முடிந்து போகிற போது ‘அடுத்த தடவை நான் வர்றதுக்குள் கம்பிவேலியை விட்டு வெளில வந்துரு’ என்று சொல்லி விட்டுப் போவார். புனத்திலின் தாக்கம் தோப்பிலிடம் அதிகம் உண்டு.
இஸ்லாமிய நாவல்கள் பெரும்பாலும் கடந்த காலப் பின்ணணியைக் கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன. தோப்பில் ஐம்பதுகளுக்கு முந்தைய சித்திரத்தையே பெரும்பாலும் முன்வைக்கிறார் ( கூனன் தோப்பை மட்டும் கொஞ்சம் பிந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாகப் படைத்திருக்கிறார் ). மீரான் மைதீன், ஜாகிர்ராஜா (பெரும்பாலான நாவல்கள்), சல்மா, அர்ஷியா ஆகியோரின் நாவல்கள் எண்பதுகளில் நிகழ்வதாக எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் இஸ்லாமிய நாவலாசிரியர்கள் சமகாலத்தை அதிகம் பேசவில்லை என்பது தனித்த விவாதங்களுக்கு உரியது.
தோப்பில் பெரும்பாலும் நவீனத்தின் குரலை ஒலிக்கிறார். அந்தக் குரல் மதப்பழமைவாதத்திற்கும் நிலவுடைமைக்கும் எதிராக ஒலிக்கிறது. கடற்கரையோர இஸ்லாமிய கிராமங்களில் நிலவுடைமை சார்ந்த மனநிலையோடு பொருளாதாரச் சுரண்டல், எதேச்சதிகாரம், ஆணாதிக்கம், சாதிய மனநிலை, ஆண்டான் – அடிமை மனோபாவம் ஆகியவற்றை முன்னிறுத்துகிற அகமது கண்ணு முதலாளி மதத்தைத் தனக்கேற்ப வளைத்துக் கொள்வதையும் பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத மதகுருமார்கள் அதற்குப் பணிந்து போவதையும் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலில் பேசுகிறார். அதற்கு மாற்றான தீர்வாக தோப்பில் கல்வியையையே முன்நிறுத்துகிறார். ஆனால் மதமும், அதிகாரமும் அந்தப் புதிய மாற்றங்களை தோற்கடித்து விடுவதான சித்திரங்களையே அவர் படைப்புகளில் காண்கிறோம்.
ஆங்கிலப் பள்ளிக்கூடம் மதப்பழமைவாதத்தால் தீ வைத்து எரிக்கப்படுவதும் (ஒரு கடலோர கிராமத்தின் கதை), எந்த வாழ்வாதாரமும் இல்லாத எளிய சிறுவனான பீருடைய வீடு முதலாளித்துவத்தால் சூறையாடப்படுவதும் ( துறைமுகம் ), எந்த மதம் என்று அடையாளம் காண முடியாத பெண்ணுடல் மதக்கலவரத்தால் கரை ஒதுங்கிக் கிடப்பதும் (கூனன் தோப்பு), பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டத் தருணத்தில், எப்போதும் நம்பிக்கையோடிருக்கும் வாப்பா, நபிகள் நாயகம் போல் விண்ணுலகப் பயணம் சென்று புராக் வாகனத்திலிருந்து கீழே விழுவதைப் போல் கனவு காண்பதும் (அஞ்சுவண்ணம் தெரு), திருவிதாங்கூர் சமஸ்தானமே கொண்டாடிய மாபெரும் வீரனின் கடைசி வாரிசு கடற்கரையில் அநாதையாக செத்துக் கிடப்பதும் (சாய்வு நாற்காலி) என்று வீழ்ச்சியே அவர் நாவல்களின் உச்சக்காட்சிகளாகப் படைப்பட்டிருக்கின்றன . கலை, கலாச்சாரம், மானுட விழுமியங்கள், மரபான அந்தஸ்து, நல்லிணக்கம் ஆகிய சிகரங்களிலிருந்து இந்தச் சமூகம் சீரழிவை நோக்கி இறங்கிப் போன சித்திரங்களையே தோப்பில் அதிகம் முன்வைத்திருக்கிறார்.
நபிகள் நாயகத்தின் ரத்த வாரிசுகளாக தம்மைச் சொல்லிக் கொள்ளும் இந்திய இஸ்லாமியர்களுக்கு ‘தங்கள்கள் ‘என்று பெயர். இவர்கள் நன்றாக அரபி மொழியை கற்றிருப்பதோடு ஜின்கள், செய்வினை, மாந்த்ரீகம் ஆகியவற்றையும் நன்கு அறிந்தவர்கள். தோப்பிலின் கதைவெளியெங்கும் ‘தங்கள்கள்’ தேவதை முகமூடிகளைப் போட்ட சாத்தான்களாக வந்து போகிறார்கள். ஒரு கடலோர கிராமத்தின் கதையில் வரும் ‘தங்கள்’ ஊரை ஆட்டிப் படைக்கும் முதலாளியின் தலையில் உட்கார்ந்து அவரையே ஆட்டிப் படைக்கிறார . குழந்தையில்லாத பெண்ணுக்கு ஓதிப் பார்ப்பதாகச் சொல்லி அவளைக் கற்பழிக்கும் ‘தங்கள்’ அவர் காணாமல் போன பிறகு புனிதராக்கப்படுகிற சித்திரம் அந்த நாவலில் இடம் பெற்றிருக்கிறது. ‘தங்களுக்கும்’ அகமது கண்ணு முதலாளிக்கும் இடையிலான உறவு மிக முக்கியமானது. ‘தங்கள்’ சொகுசாக வாழ இவர் உதவுகிறார். இவருடைய நிலப் பிரபுத்துவத்தை மதத்தின் பெயரால் செயல்படுத்த ‘தங்கள்’ வழியமைத்துத் தருகிறார். இந்து மதத்தின் பிராமண & சத்ரிய கூட்டணியின் தொடர்ச்சியை இங்கும் வேறு வடிவத்தில் பார்க்க முடிகிறது.
விபச்சாரம் செய்வதற்கு காசு வேண்டும் என்பதற்காக நிகழும் ஒரு சாதாரணக் கோழித் திருட்டு மிகப்பெரிய மதக்கலவரத்தில் முடிவடைவதை ‘கூனன் தோப்பில்’ சித்தரித்திருக்கிறார். இஸ்லாமிய மீனவர்களுக்கும் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான இந்தச் சண்டையில் வசதி படைத்த சாயபுகள் எடுக்கும் விலகிய நிலையையும் தோப்பில் சித்தரிப்பதன் வழி மதக் கலவரங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் வர்க்க அரசியலை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். அந்தக் கலவரத்தின் போது ஜமாத் தலைவர் குடும்பத்தோடு வெளியூரில் அறை எடுத்துத் தங்கியிருப்பார். படத்திற்குப் போகும் போது மனைவியை முட்டாக்கு போட வேண்டாம் என்று தடுப்பார். சாதாரணத் தருணங்களில் பெண் உடலை மூடச்சொல்லும் அதே ஆண்கள் தங்கள் இரட்டை வேடம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக முட்டாக்கை எடுக்கச் சொல்லும் சித்திரம் மிக முக்கியமானது. இலங்கையில் முகத்தை மூடச் சொல்லி வலியுறுத்திய சர்வ வல்லமை பொருந்திய ஜமாத்துல் உலமா சபை, குண்டு வெடிப்பிற்குப் பிறகு ‘முகத்திரையை அகற்றுங்கள்’ என்று சிங்கள அரசாங்கத்தின் அதே குரலில் கட்டளை பிறப்பித்திருப்பதை தோப்பிலின் சித்தரிப்போடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பெண்களின் உடை விஷயத்தில் முற்போக்கோ பிற்போக்கோ என்னவாக இருந்தாலும் அது ஆண்களால் அவர்கள் வசதிக்கேற்பவே தீர்மானிக்கப்படுகிறது என்கிற குறிப்பை தோப்பில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தன் நாவலில் படைத்துக் காட்டியிருக்கிறார்.
‘துறைமுகம்’ நாவலில் வரும் காசிம் ஒரு காந்தியவாதி. நவீனத்தை அவன் காந்தியின் வழியாகவே உணர்கிறான். கட்டாய மொட்டையடித்தல், கல்வியறிவின்மை, குழந்தைத் திருமணம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை முறியடிப்பதற்கு அவன் காந்தியத்தையே தனக்கான கை விளக்காகக் கொள்கிறான். இது இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை அரிதான சித்திரம் என்றே சொல்லலாம். ஜின்னா மற்றும் காயிதே மில்லத்தின் முஸ்லீம் லீக், திமுக போன்ற இயக்கங்களுடனும் அரிதாக இடதுசாரிகளுடனும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதே தொண்ணூறுகளுக்கு முந்தைய தமிழ் முஸ்லீம்களின் பொதுவழக்காகும். இஸ்லாமியனாகப் பிறந்து நவீனத்துவத்தை நோக்கி நகர்கிற ஒரு காந்தியனின் சித்திரம் மிக மிக முக்கியமான ஒன்று.
தோப்பிலின் படைப்புகளில் இடைவிடாமல் ஒலிக்கும் பெண்ணியக் குரலை அவரது நுட்பமான வாசகர்கள் கண்டுணர்ந்திருப்பார்கள். ‘நாம வீட்டு மிருகம். ஊமைப்பிராணி. நமக்கென்ன சுதந்திரமிருக்கு? ஒரு குஷ்டரோகியின் கையிலிருக்கும் தாலிக்கு கழுத்தை நீட்டிக் கொடுக்கச் சொன்னா கழுத்தை நீட்டிக் கொடுக்கவும் அவர் படுக்கை அறையில் அவரோடு படுத்து தன் ஜென்மங்களை பாழ்படுத்த விதிக்கப்பட்ட அனுசரணையுள்ள மிருகம்’ என்கிற குரல் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குச் செய்யும் அவலம் நிரம்பிய உபதேசம் மட்டுமே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறாறுக் கொடுமையின் இன்னொரு சாட்சி. உலகெங்கும் நீடித்த பால் பயங்கரவாதத்திற்கு ‘உள்ளேன் ஐயா’ என்று கையைத் தூக்கிக் காட்டும் இன்னொரு அடையாளக் குரல். சமீபத்தில் முகநூலெங்கும் பேசுபொருளான ‘இஸ்லாமிய ரோஜாக்களுக்கான’ அறிவுரைகளின் சாரம் இதுவன்றி வேறென்ன? அதைத் தான் மீரானும் மாறாத துயரமாகச் சாடியிருக்கிறார்.
‘சாய்வு நாற்காலி’ நாவலில் நூர்கண்ணு முதலாளி மைனிமார்களின் சாதாரணக் கிண்டலுக்கும், ‘ஏன் மாட்டு வண்டில வந்தீஹ? சொல்லியிருந்தா குதிரை வண்டி அனுப்பியிருப்பேனே?’ என்ற மாமனாரின் யதார்த்தமான கேள்விக்கும் கூடக் கோபப்பட்டு மூன்று திருமணங்களைச் செய்கிறார். அவருடைய மகன் ‘அதபுப் பிரம்பால்’ ஒரு பெண்ணையே அடித்துக் கொலை செய்கிறார். சகலத்தையும் தொலைக்கும் அகமது கண்ணு மனைவியை நாயை விட கேவலமாக நடத்துகிறார். இந்த சித்திரங்களை தோப்பில் தன் நாவல்களில் வெறுமனே வரையவில்லை. அடையாளம் காட்டியிருக்கிறார். இந்தக் கறைகளை நீக்கிய பிறகு உங்கள் லட்சியக் கனவுகளை ஸ்தாபித்துக் கொள்ளுங்கள் என்று கர்ஜிக்கிற சீர்திருத்தக்காரனின் ஆதங்கம் அது.
கிறிஸ்தவத்தைப் போல இஸ்லாம் வைதீக மரபின் சாதியை உள்வாங்கவில்லை என்றாலும் கூட மனிதர்களின் மனவெளியில் சாதியடுக்கு உருவாக்கிய பார்வைகளை அந்த மதத்தாலும் வெல்ல முடியவில்லை. பெரும்பாலான தமிழக இஸ்லாமியர்களிடையே அவர்களுக்கே தெரியாத ஒரு இடைசாதி மனநிலை உண்டு. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாரம்பர்யமான ஊர்களில் உள்ள பணக்காரக் குடும்பத்தினருக்கு பிராமணர் அல்லாத உயர்சாதி மனநிலை இருக்கும். இவற்றின் தடங்களை தோப்பிலின் நாவல்களில் காணலாம். கடலோரத்தில் முதலாளிகளாக வாழும் சாயபுகள் மீனவ இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் ஒரே தட்டில் வைத்து நோக்குகிற சித்திரம் ‘கூனன் தோப்பில்’ இடம் பெற்றிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சில தலைமுறைகளுக்கு முன்பு நாடார் சமூகத்திலிருந்து மதம் மாறிய குடும்பத்திலிருந்து பவுரீன் பிள்ளை உப்பாவின் குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வந்தவளை ‘நிக்கொப் பெத்தாம்மா களீக்காலெயிலெ இருந்து கொளச்செ வரெ மொலையெ தொறந்திட்டு நடுத்தெரு வழி ஓடுனது தெரியாதாக்கும்’ என்று அவள் நாத்தனார் ஏசுகிறாள். இந்த ஏசலுக்குப் பின்னால் நாடார் பெண்களை முலையறுத்த வரலாறு இருக்கிறது. அதுமட்டுமல்ல, தம்மைப் பிள்ளைகளோடு நிகழ்ந்த அரேபியக் கலப்பால் உருவான இனமாகக் கற்பனை செய்து கொண்டு இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிறகும் அவர்களை நாடார்களாகவே கருதி கீழ்நிலையில் வைத்துப் பார்க்கும் வருண மனநிலையும் வெளிப்பட்டிருக்கிறது. அந்த உண்மையை தோப்பில் திரை விலக்கிக் காட்டும் அரிய தருணமே இந்த உரையாடல்.
மீரானின் மிக முக்கியக் குறைகளாக நான் இரண்டு விஷயங்களைப் பார்க்கிறேன்.
ஒன்று, பாத்திரங்கள் வழி அவர் உருவாக்கும் கருப்பு வெள்ளைச் சித்திரம். நிலபிரபுத்துவம் X கல்வி, மதப்பழமைவாதம் X சீர்திருத்தவாதம், சுரண்டல் முதலாளித்துவம் X காந்தியம், ஜமாத் அமைப்பு X தனிநபர் சீர்திருத்தவாதம் என்கிற இருமைகளை உருவாக்கி அதற்கேற்ப பாத்திரங்களை உருவாக்குகிறார். ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம் போன்ற இரு நாவல்களிலும் இப்படிப்பட்ட சித்திரங்களே இடம் பெற்றிருக்கின்றன. அதனால் அவை சண்டை மற்றும் டூயட் காட்சிகள் இல்லாமல் இறுதியில் நம்பியாரே வெல்லும் எம்ஜிஆர் படங்களைப் போல் முடிந்து விடுகின்றன. தோப்பிலின் மிகப்பெரிய பலமான பாத்திர உரையாடல்களில் வெளிப்படும் வட்டார மொழியே நாவல்களை முக்கியமானவைகளாக மாற்றுகின்றன. அப்படிப்பட்ட இருமைகளை உருவாக்காத வேறு இரு நாவல்களான கூனன் தோப்பும் அஞ்சுவண்ணம் தெருவும் நாடகத்தனமான காட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த நாவல்களிலும் வட்டார மொழியே நாவலின் பலவீனங்களை ஈடு செய்கின்றன.
கறுப்பு வெள்ளைச் சித்திரங்களோ, நாடகத்தனமான காட்சிகளோ இன்றி தேர்ந்த கலையமைதியுடன் எழுதப்பட்ட நாவலாக நான் ‘சாய்வு நாற்காலியை’ மட்டுமே குறிப்பிடுவேன். நிலப் பிரபுத்துவத்தின் வீழ்ச்சியை ஒரு குடும்பத்தை மையமாக வைத்துக் கொண்டு நனவோடை உத்தி வழியாக கதையைச் சொல்லி மிகச் சிறந்த கலையனுபவத்தைத் தருகிற நாவல் அது மட்டும் தான். தோப்பிலின் படைப்புகளில் புற உலகச் சித்தரிப்புகள் துல்லியமாக இருந்தாலும் காலகட்டத்தைக் குறிப்பிடும் சித்திரங்கள் மிக மிகக் குறைவு. ‘சாய்வு நாற்காலி’ நாவலில் கூட கடந்த கால வரலாறான திருவிதாங்கூர் சமஸ்தானச் சண்டையை வர்ணிப்பதில் காட்டும் அக்கறையை அவர் அகமது கண்ணு முதலாளி வாழும் நிகழ்கால வரலாற்றைச் சித்தரிப்பதில் காட்டவில்லை. வரலாற்றின் அரவங்களற்ற தனித்தீவில் தன் கதாபாத்திரங்களை சமய அடையாளங்களோடும் தொன்மங்களோடும் கடத்திக் கொண்டு போய் ‘ம்… வாழ்ந்து காட்டுங்கள்’ என்று மீரான் ஆணையிட்டதைப் போலவே அவர் நாவல்கள் நிகழ்ந்து முடிகின்றன.
அவருடைய இன்னொரு பலவீனம், சூஃபிகள் குறித்த சித்தரிப்பு. போலியான சூஃபிகளை அடையாளம் காட்டுவது தவறென்று நான் கருதவில்லை. கண்டிப்பாக படைப்புகளில் அவை நிகழ வேண்டும். ஆனால் தன் சமயத்தின் ஆன்மீக சாரமான சூஃபியிசத்தை அவர் வெறுமனே தட்டையான கறுப்பு வெள்ளைப் பார்வையிலேயே அணுக முயன்றிருக்கிறார். இன்றைய சூழலில் அவருடைய நாவல்களின் பல பகுதிகளை வஹாபியர்கள் தாராளமாக தங்கள் கருத்துகளை நிலைநாட்ட எடுத்துப் பயன்படுத்தி விட முடியும் ( சமகாலத்தில் நிறைய பெரியாரியர்கள் அதே அளவுகோலில் சூஃபியிசத்தை அணுகுவதாலேயே மறைமுகமாக வஹாபியிசத்திற்கு துணை போகின்றனர் ) அதற்காக அவரை வஹாபிய மனநிலை கொண்டவர் என்று கூறிவிட முடியாது. மாறாக, அவர் சூஃபியிசத்தை அற்புதங்கள், தர்ஹா, மாந்த்ரீகம் என்கிற அளவிலேயே மேம்போக்காக புரிந்து வைத்திருந்தார். அதன் மூலமாக நிகழும் மானுடத் தவறுகளை அடையாளம் காட்டியே வஹாபியர்கள் சூஃபியிசத்தை பழமைவாதமாகக் கட்டமைத்து நவீன மனங்களை வென்றெடுத்தனர்.
தெரிந்தோ தெரியாமலோ தோப்பிலின் படைப்புலகமும் அதே திசை நோக்கி நகர்ந்திருக்கிறது. முல்லாயிசத்திற்கும் சூஃபியிசத்திற்குமான வேறுபாட்டையும் கூட அவர் சரிவர விளக்கவில்லை. ‘துறைமுகம்’ நாவலில் சகல அயோக்கியத்தனங்களையும் செய்யும் இப்னு ஆலிசம் தன்னை அஜ்மீர் காஜாவின் சிஷ்யனாக அடையாளப்படுத்திக் கொள்கிறான். டெல்லி அதிகாரத்தை எதிர்த்து மக்களின் ஞானியாக வாழ்ந்த அஜ்மீர் காஜாவுக்கும் இப்னு ஆலிசமிற்கும் இடையிலான வேறுபாட்டை தோப்பில் சொல்ல முனைவதே இல்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகு வஹாபியர்களின் அட்டகாசங்கள் அளவுக்கு அதிகமாக பொதுவெளியை ஆக்கிரமித்தன. அவருடைய ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவல் 2000திற்க்குப் பிறகு ‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் வெளிவருகிறது. அந்த நாவலில் சமகாலப் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. வஹாபிகளைப் பற்றி தோப்பில் முதன்முதலாக வாய் திறக்கிறார். ஆனால் அவர் இரு சிந்தனைப் பள்ளிகளின் மோதலாக மட்டுமே வஹாபியர்கள் பத்தாண்டு கால அட்டகாசங்களைக் கடந்து செல்கிறார்.
முல்லாக்கள் மற்றும் ஜமாத்தினர் ஆகியோருக்கும் வஹாபிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இந்த மண்ணின் பண்பாட்டு வெளியும், நல்லிணக்கமும் அடித்து நொறுக்கப்பட்டதையோ அதற்கான தீர்வாக இந்த இரண்டையும் கடந்த சூஃபியிசம் மட்டுமே இருக்க முடியும் என்பதையோ அவர் பதிவு செய்யவேயில்லை ( ஒருவேளை அவருக்கே கூட அதுகுறித்த அக்கறையின்மை இருந்திருக்கலாம்). ‘கூனன் தோப்பு’ நாவலில் ஒரு காட்சி வரும். வாலை மஸ்தான் தர்ஹாவில் சகலரும் வேண்டிக் கொள்வார்கள். வாப்பாவிடம் பல தடவை எடுத்துச் சொல்லியும் டவுசர் கிடைக்காமல் கிழிந்த டவுசரோடு உலா வரும் பீர் மாபெரும் ஞானியான வாலமஸ்தானிடம் ‘வாப்பா எனக்கொரு நிக்கர்’ என்று வேண்டுகிறான். சகல புனிதங்களையும் கலைத்துப் போட்டு மானுடத் தேவை குறித்துப் பேசும் இந்த சித்தரிப்பு மிக முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவருடைய படைப்பு வெளியில் ஆன்மீகம் இந்தப் புள்ளியை விட்டுத் தாண்டுவதே இல்லை என்பதுதான் பிரச்சினை.
இனவரைவியல் நாவல்களில் கடந்த கால பண்பாட்டுப் பெருமிதங்களும் நிகழ்காலச் சீரழிவுகளும் பேசப்படும். அந்த முரணியக்கத்தின் நடுவே மானுடப் பாத்திரங்களைத் தாண்டி விஸ்வரூபமெடுத்து நிற்கும் வரலாற்றுப் பெருவெளியில் கண்ணுக்குப் புலனாகாத ஒரு சூட்சம சக்தி ஒரு அலையாக மேலெழுந்து சகலத்தையும் வாரி தனக்குள் சுருட்டிக் கொள்ளும். அவருடைய படைப்புகளில் வரலாற்றின் கொந்தளிப்பும் இல்லை. அந்தப் பேரலையின் கருணையுமில்லை. சீர்திருத்தக்காரனின் விவரணைகளுடன் கூடிய துல்லியமான ஆவேசம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. சர்ச்சுகளுக்குள் அடைபடாத இயேசுவின் கருணை, மதம் பார்க்காமல் சகலருக்கும் பாலூட்டும் கடலம்மாவின் கறுத்த மார்பு, உள்ளூர் தேவதையின் கையசைப்பு, கடலில் மிதக்கும் மோசேயின் கைத்தடியின் அசைவு, மன்னர்களின் வாளுக்கு அஞ்சாத சூஃபிக்களின் பாடல் இவற்றை அறியாமலே பல நவீனத்துவர்கள் வரலாற்றின் மீதான தங்கள் தீர்ப்பை எழுதி விடுகின்றனர். அவர்களில் தோப்பிலும் ஒருவர்.
தான் விமர்சிக்கும் அதே புழுதியில் முளைத்தெழுந்த ரோஜாவை நுகர்கிற போது தான் படைப்பாளி இருமைகளைத் தொலைத்து தன் படைப்புக்குள் தொலைந்து போகிறான். தன் சமூகத்தின் அவலங்களைக் கண்டு கொதித்த நிஜமான சீர்திருத்தக்காரர் தான் தோப்பில். ஆனால் அவர் அங்கேயே தீர்விருப்பதைத் தவறவிட்டவர். ஒரு கலாச்சாரத்தின் நவீனம் என்பது மரபின் மற்றொரு முகம் மட்டுமே என்பதை அவர் உணராமலே இயங்கினார். நவீனத்தையும் தாண்டி பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் நடனத்தின் தாள லயத்தை அவர் கேட்கவே இல்லை. அவர் மருந்தாகக் கண்ட கல்வியையும் பகுத்தறிவையும் வைத்தே இன்னொரு கொடும் நோய் இங்கே பரப்பப்படுவதை கண்ணால் கண்ட பிறகும் பேசாமலிருந்தார். (ஆனால் அவருடைய முக்கியமான சிறுகதைகள் வேறுவிதமான தன்மைகள் கொண்டவை. அவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்)
இஸ்லாமிய மரபிலிருந்து பின்- நவீனத்துவ கதை சொல்லிகள் சிலர் இப்போது தோன்றியிருக்கிறார்கள். இன்னும் பலர் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் எல்லோரும் தாண்ட வேண்டிய எல்லைக் கல்லாய் தோப்பிலின் படைப்புகள் தான் நம் கண் முன்னே நின்று கொண்டிருக்கின்றன. காலம் கடந்து நவீனத்துவம் உருவாக்கிய அந்தக் கடைசிப் படைப்பாளி தான் இஸ்லாமிய சமூகத்தின் முதல் நவீனப் படைப்பாளி. இந்த முரணே அவர் இருப்பிற்கான நியாயத்தை கூடுதலாக முன்மொழிகிறது. இன்னும் சில வருடங்களுக்காவது அவரே அந்தக் எல்லைக் கல்லாய் நிற்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆம், நாம் அங்கிருந்து தான் தொடங்க முடியும்.