நிலம் சிந்தும் குருதி – There Will Be Blood (2007)

0 comment

1

தன்னை எவ்விரைவில் ஒரு கலைஞன் தீர்த்துக் கொள்கிறானோ, உண்மையில் அங்கிருந்தே அவன் கலைஞனாகத் தொடங்குகிறான். பவுல் தாமஸ் ஆண்டர்சனின் முதல் நான்கு படங்களும் தன்னைத் தீர்த்துக் கொள்ள அவருக்குப் பயன்பட்டன. அத்தகைய படங்களிலுமே ஒரு பிறிதொன்றிலாத தன்மையை முன்வைத்து அழகிய பயணங்களை மேற்கொண்டிருப்பார். Hard Eight, Boogie Nights, Magnolia, Punch Drunk Love நான்கிலும் அதை உணர முடியும். Boogie Nights திரைப்படத்தில் அவர் போர்னோ திரைப்பட உலகின் அதீத கொந்தளிப்புகளைத் தாளாது அணுகும் பாத்திரப் படைப்புகள் மூலம் கட்டமைத்து அதற்குள் நிகழும் உணர்ச்சிகளின் – மூலக்கூறுகளின் மோதல்களையும் சலனங்களையும் நிகழச் செய்து பரிசோதித்திருப்பார்.

கிளர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் போர்னோ படங்கள், காட்சிகளின் பின்புலத்தில், படமாக்கும் விதத்தில், அப்படி இருப்பதில்லை. மாறாக சில சமயங்களில் குரூரம் மிகுந்த, சில சமயங்களில் சுவையற்ற, சில நேரங்களில் அலுப்பூட்டகூடிய ஒரே வகைக் காட்சிகளை உருவாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட நிலைகளைச் சந்திக்க வேண்டி இருப்பதை யதார்த்தமாக முன்வைத்தில் சபாஷ் பெற்றிருப்பார். Punch Drunk Love திரைப்படத்தில் அதுவரை யாரும் பார்க்காத Adam Sandler-ஐ ஒரு நிலையற்ற மனங்கொண்ட யுவனின் காதலை செய்ய வைத்துக் காட்டியதும், அத்திரைப்படத்தில் ஒளியூட்டல் மற்றும் வண்ணச் சட்டகங்களின் தேர்வு ஆகியவையும் அப்படியான பரிசோதனை முயற்சிகளே.

Punch Drunk Love, 2002

ஆண்டர்சனின் முக்கியமான திரைப்படமாக Magnolia இன்றளவும் வெகுசன சினிமா ரசிகர்களால் ஆர்ப்பரிக்கப்படுகிறது. வணிக ரீதியான திரைக்கதையில் ஹைபர்லிங்க் எனப்படும் வகையில் பின்னலமைப்பு கொண்ட ஒன்பது கதைகளை முன்வைத்து உணர்ச்சிகளை பேசிப் பார்க்கும் திரைப்படம் அது. ஆனால் நான் இந்த நான்கு படங்களையும் ஆண்டர்சன் தன்னைத் தீர்த்துக் கொள்ள யத்தனித்த முயற்சிகளாகவே கருதுகிறேன்.

அப்படி வரும் வெறுமையில் ஒரு பறவை சாம்பலாகும் அல்லது ஃபீனிக்ஸாகி விடும்! ஆண்டர்சன் இரண்டாம் வகை. ஆண்டர்சன் தனது ஐந்தாவது படமான There Will Be Blood-ற்குப் பின்னர் ஸ்டான்லி குப்ரிக்கின் மறைவால் ஏற்பட்டிருந்த காலி இடத்தை நிரப்பும் தகுதியுடைய படைப்பாளராக உருவாகிறார். அது கலைத்தன்மை கொண்ட படங்களிலும் ஒரு வெகுசன ஈர்ப்பினை ஏற்படுத்தும் வகை திரைப்படங்களாக உருவாக்கும் திறன் என்று கொள்ளலாம். அதைத் தொடர்ந்து அந்தக் கருத்தினையே The Master, Inherent Vice, Phantom Thread ஆகிய படங்கள் ஆண்டர்சனை ஒரு மாஸ்டர் என்று ஊர்ஜிதம் செய்கின்றன.

பவுல் தாமஸ் ஆண்டர்சனின் ஆசிரியர்கள் பற்றிய சில கதைகள் சுவாரஸ்யமாகத் தோன்றுவதுண்டு. தன் மானசீக குருவான ஸ்டான்லி குப்ரிக்குடன் 1999ஆம் ஆண்டு Eyes Wide Shut படமாக்கும் செட்டில் அவர்கள் பேசிக் கொண்டதற்கு Tom Cruise காரணமாகிறார். அப்போது அவர் Magnolia (1999) விலும் நடித்திருக்கிறார். மேலும் John Huston, Martin Scorsese, Jonathan Demme ஆகிய இயக்குநர்களைத் தன் ஆதர்சமெனக் குறிப்பிடும் ஆண்டர்சனுக்கு இன்னுமொரு மேதை ஆசானாக இருந்திருக்கிறார். தொண்ணூறுகளில் எமெர்சன் கல்லூரியின் ஆங்கில் விரிவுரையாளர் – பின்னாட்களில் அமேரிக்காவின் மகத்தான எழுத்தாளர் என அறியப்பட்ட டேவிட் ஃபாஸ்டர் வாலேஸ் ஒரு மாணவனுக்குள் சிறு தீயை விதைக்கிறார். அம்மாணவன் தேடல்களின் வழியைப் பெருக்கி தன் கலைப்பூர்வமான படைப்புகளை முன்னிருத்தி மெல்ல பின்னாளில் அமேரிக்காவின் மகத்தான திரைப்பட இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். “நான் முதன் முதலில் விரும்பிய ஆசிரியர்“ என்று வாலஸைக் குறிப்பிடும் ஆண்டர்சன் தான் ஏன் கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை என்ற கேள்விக்கு “அவர் கல்லூரியிலிருந்து வெளியேறி விட்டாரே” என்று பதிலிறுக்கிறார்.

பவுல் தாமஸ் ஆண்டர்சனின் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமான There Will Be Blood பற்றிய பார்வை இது.

2

திரைப்படங்களின் முதற்காட்சியிலேயே பிரமித்துச் சொல்லசைவுகளிழந்து சிறுத்து நிற்கும் தருணங்கள் வாய்ப்பதரிது. என் திரை ரசனையில் 2001- A Space Odyssey (1968) திரைப்படத்தில் மனிதருக்கு முந்தைய குரங்கு மூதாதையரின் ஆயுதமறியும் காட்சியும், The Turin Horse (2011) ஒற்றைக்கை புரவியோட்டி நரகமென நகரும் பாதையில் ஓட்டிச் செல்லும் குதிரைவண்டிக் காட்சியும் அத்திரைப்படங்களின் அசாத்தியத் தன்மையை முன்வைக்கும் பிரயத்தனம் கொண்டவை. அதேயளவு காத்திரமான இன்னொரு காட்சி எனில் There Will Be Blood-இல் நில சர்வே துறையில் பணியாற்றி வரும் ஒரு பணியாள் (Daniel Plainview) தனியனாய் ஒரு வன்நிலத்தின் பள்ளத்தில் இறங்கி இன்னுமின்னுமென அகழ்ந்து கற்களை பெயர்த்தெடுக்கும் காட்சி! நிலத்தின் மெளனம்; சூழலின் தொலைவு ஏற்படுத்தும் மெளனம்; பாறைகளை விட தடித்த இவ்விரண்டு கணங்களும் ஒன்றிணைந்து இரவு பகல்களின் மேல் ஏற்றிவிடும் பித்தம். இவற்றின் முன் பதிலைத் தேடி முட்டும் ஒருவன். தன் நிலையையும் தன் நிலையிலிருந்து விலகி தெறிக்கும் சுவடுகளின் பதிவுகளும் ஏற்படும் களமது. ஏழு நிமிடங்கள் நகரும் இக்காட்சியின் இயல்பும் அது முன்வைக்கும் அசாவாமை கொண்ட பாத்திரத்தின் அறிமுகமும் இத்திரைப்படத்தைப் பற்றிய முகப்பு மட்டுமின்றி மிகச்சிறந்த முகப்புக் காட்சி. அது பார்வையாளரை நோக்கி கிட்டத்தட்ட அறைகூவலிடுவது.

அடுத்த ஏழு நிமிட காட்சியில் ஒரு சிறிய குழுவுடன் ஒரு எண்ணெய் கிணற்றினை அகழ்ந்து அதிலிருந்து வெற்றிகரமாக எண்ணெய் வெளியேற்றும் ஒரு அமைப்பைச் சுட்டும் காட்சி. இவ்விரு காட்சிகளிலும் டானியல் காட்டும் வேறுபாடுகள் அதீத நுட்பம் வாய்ந்தவை. முதல் காட்சியில் தனித்த பணியாள், இரண்டாவது காட்சியில் ஒரு அணித்தலைவன். அக்கணமே ஒரு நல்ல நடிகனிலிருந்து ஒரு மகத்தான நடிகன் வேறுபட்டு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதம் தெளிவுபடும். பதினான்கு நிமிடங்களுக்குப் பிறகுதான் அதுவரை உரையாடல்கள் எதுவுமே நிகழவில்லை என்ற உண்மை உரைத்தது. ஆனால், ஒளியும் நாயகனின் விழிகளும் இசையும் இணைந்து எத்தனை வார்த்தைகளைப் பேசிவிட்டிருக்கின்றன.

3

நம் காலத்தின் இராட்சத நடிகன் டேனியல் டே லிவிஸின் ஆற்றல் குன்றா நடிப்பினை இத்திரைப்படத்தில் எவ்விதமும் குற்றிச் சொல்லிட முடியாது. இத்திரைப்படத்தின் முதன்மையான தொழில்நுட்பமே அவரது நெற்றிச் சுருக்கங்களும், கம்பீர மொழித்தொனியும், அசாத்திய உணர்வுச் சித்திரங்களும் தான். அவரது ஆற்றலிலிருந்து வெளிப்படும் எரியே டேனியல் ப்ளெயின்வியூ போன்ற ராக்கெட்டுகளை நகர்த்த உந்து.

கவிதையின் ஆழ்பொருள் தேடி தியானிக்கும் தனியன் போல நிலத்தடி எண்ணையின் மீது ஒரு மந்திரப்பொருளின் ஈர்ப்ப அடைவதாகட்டும், கடவுள்களையும் அதன் வரங்களையும் சாபங்களையும் நம்பி, மூடநம்பிக்கைகளின் பிடியில் இருந்தவாறே தன் அடிகளை முன்னெடுக்கும் ஈலை சண்டேவை கொடிய விலங்கென மனதால் வெறிப்பதாகட்டும், சத்யம் இல்லாத எவரையும் வெறுக்கும் நிலைப்பாடாகட்டும், தன் முகத்தையே முகமூடியாக்க டானியல் டே லிவிஸால் இயல்வது ஒரு பெரும் தாவல் தான்.

டானியல் ப்ளெயின்வியூவிற்கு மெய்வருத்தலும் அதில் பெற்ற கூலியும் புரிகிறது. அதனால் தன்னை முன் வைக்கிறான். இருப்பினும் அவனும் முதலீட்டுவாத அமைப்பின் ஏதோவொரு விழியறியா பிடியில் சிக்குண்டே கிடக்கிறான். கத்தும் ஆழியின் பதறும் அலைகளுக்கும் ஏதோவொரு கோடு இடப்பட்டு இருக்கிறது. அத்தகைய பலமின்மையிலும், பலத்திலும் ஊசலாடும் கதாபாத்திரப் படைப்பு அநாயசமாக வந்திருக்கிறது.

படத்தில் நிலத்தின் குருதியென ஓடும் எண்ணெயை அங்குலமங்குலமாய்க் கண்டு திகைக்க முடிகிறது. தேடி வந்து கண்டறியும் போது கசிவின் சாந்தம், எதிர்பாராத தருணங்களில் சினத்தின் வெடிப்பு, பாத்தியிடப்பட்ட இடங்களில் ஒழுக்கென நகரும் வரிசை, மனித உடல்களில் தன்னை ஒட்டிக் கொண்டு திலகமிட்டு அவர்களை அசுரர்களாகவும், அழுக்கென மாறி அவர்களைக் கடையர்களாகவும் மாற்றும் எண்ணெயின் பரிமாணங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன.

ஒரு காட்சியில் துளைப்பான் இடப்பட்ட கேணியில் திடுமென ஆட்டம் கொடுத்து மேலெழும்பி வரும் வாயு, சுற்றி கட்டப்பட்டிருக்கும் மர யந்திரங்களை அறைகிறது. மாடத்தில் படுத்திருக்கும் சிறுவனின் மீது அது விசையோடு கடக்கிறது. அதை ஒரு பல்லவியென அனுப்பிப் பின் ‘பகல்வானை இருளாக்குகிறேன் பார்’ என்ற வீரியத்துடன் கோபுரமென எண்ணெய் கூச்சலுடன் கரும்பேயென எழுகிறது. எண்ணெயுறிஞ்சும் யந்திரங்களையும் அதை நிர்ணயித்து வைத்திருக்கும் கோபுரத்தையும் நனைத்து எரிக்கத் துவங்குகிறது. தீயின் செந்நா தொடர்ந்து பகலும் இரவுமென கிடைத்தவற்றையெல்லாம் எரிக்கிறது. மொத்த அமைப்பையே வெடி வைத்துத் தகர்த்து அந்தத் தீயின் நடனத்தை ஆற்றுப்படுத்த வேண்டியதாகிறது. இரவில் பற்றிக் கொள்ளும் தீ இருள்வானை வெளிச்சமாக்குகிறேன் என்று எண்ணெய் சொல்லும் பதில்!

டேனியலின் பரிமாணங்களும் அத்தகையதே. முதல் பகுதியில் தன் அழுத்தத்தையும் வெப்பத்தையும் வெளிக்காட்டாமல் ஒரு தேர்ந்த வணிகனென தொழில் செய்ய முனையும் காட்சிகளாகட்டும், தான் வாங்கிய நிலத்தினடியில் எண்ணெய் சமுத்திரமே இருப்பதை எண்ணி மகிழும் தருணங்களாகட்டும், இன்னும் உக்கிரம் கொண்டு தன் தளைகளைக் கிழித்து விட்டு வெளியெறும் ருத்ர தாண்டவமாகட்டும், எண்ணெய்க்கு போட்டியான ஒரு வெளிப்பாடு! தான் இல்லாத தருணங்களில் கூட தன்னை நினைக்க வைக்கும் அளவிற்கும் டேனியலின் ஆக்கிரமிப்பு இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஆண்மையும், அலைவற்ற நிலைப்பும், கம்பீரமும், கண்ணீரும் கூட இப்படி யாரும் செய்ததில்லை என்பது எவருக்கும் எளிதில் உணர்வது இயல்வதே. இன்னும் சொன்னால் தனக்கான எல்லைகளைத் தானே விரித்துக் கொள்ள இந்த ப்ளெயின்வியூவின் பார்வை டேனியலுக்கு உதவியிருக்கிறது. ஆண்டர்சன் – டேனியல் லீவிஸ் இணையின் சமீபத்திய திரைப்படமான Phantom Thread-இல் Woodcock ஆக இன்னும் நடிப்பில் உச்சம் அடைந்திருக்கிறார் டானியல்.

கூடவே Paul Dano-வின் துணையும் சிறப்பாகவே வந்திருக்கிறது. தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொண்ட டானியலுக்கு எதிராகத் தனக்கு வாய்ப்பு கிடைத்ததும் ஆலயத்தில் அமர வைத்து பாவமன்னிப்பு தரும் காட்சியில் மிரட்டியிருக்கிறார் டானோ! இறுதிக் காட்சியில் தானொரு போலி தீர்க்கதரிசி, கடவுள் என்பது மூடநம்பிக்கை என்று சொல்லும் போது வரும் தவிப்பையும் டானியலின் கோரப்பிடியில் சிக்கி அல்லாடுவதையும் மிகச் சிறப்பாகவே செய்திருப்பார். ஒருவகை பார்வையில் இவ்விரண்டு கதாபாத்திரங்களின் தொடர்ந்த அகங்காரம் பற்றிய முன்பின்னோட்டங்கள் தான் இத்திரைப்படத்தின் சரடாக நிகழ்கின்றன. அதிலிருந்து விரித்தெடுக்க பல மானுட கோணங்கள் உண்டாகின்றன.

4

Robert Elswit-ற்கு அழகென்பதைப் பற்றி ஒரு தெளிவிருக்கிறது. விழிகள் அழகின் கலைக்கருவி அதைப் பயன்படுத்த வைக்கும் ஈர்ப்பு மையம் என ஒளி அவர் கைகளில் இலகுவாகத் திகழ்ந்திருக்கிறது. Daniel Day Lewis உடன் இத்திரைப்படத்திற்காக இரண்டாவது ஆஸ்கார் விருதினைப் பெற்றவர் Robert Elswit ஆவார். தளத்திற்குள் இருக்கும் வற்றிய கேணிகளாகட்டும், அங்கிருந்து அண்ணாந்து பார்க்கையில் கண்களை விழுங்கும் சூரிய வெளிச்சமாகட்டும், இரவிலும் பகலிலும் உயர்ந்தெரிந்து கொடியசைக்கும் தீயாகட்டும், மனிதர்களுக்கும் அவரது வாழ்வில் விளையாடும் எண்ணெய்க்கும் இடையேயான இயக்கத்தின் வேகமாகட்டும் எல்லாம் வெகு சிரத்தையுடன் சாதிக்கப்பட்டுள்ளன.

ஓவியத்தின் தாள் இப்படியிருக்க அதில் வரையப்படவிருக்கும் வண்ணங்களைக் கறாராகக் கரைத்து வைக்கும் கரைப்பானாக இசை இருக்கிறது. ஜானி க்ரீன்வுட்டின் இசை அடிவயிற்றில் நீர்ப்பாலங்களிடை ஓடும் இரயில்களின் தடதடப்பை உறுதி செய்வன. மெளனங்களின் வழியேயும் கழுத்தினை இறுக்கும் எபிலெப்டிக் இசைத் துண்டுகளின் வழியேயும் இந்தக் கதை இன்னும் உயரமாய் எழுகிறது.

உதாரணமாய், தன் சகோதரனாக வந்து சேர்ந்திருக்கும் ஒருவன் போலியானவன் என அறியும் தருணம் ஒரு கடற்கரைக் காட்சியில் வரும். அங்கு மணலில் முழுவெயிலில் டானியல் அமர்ந்திருப்பதும், அருகே அரை நிழலில் தன் உண்மையைப் பாதி வெளிப்படுத்தியவாறு அமர்ந்திருக்கும் ஹென்ரியின் அமர்வும் மூர்ச்சையாக்கும் காட்சியாக்கம். அங்கொலிக்கும் அத்தகைய இசையுடன் இணைந்து கொண்டு ஏற்படுத்தியிருக்கும் நுட்பம் கலையுச்சம்.

5

Upton Sinclair எழுதிய Oil எனும் நாவலின் மீது கட்டமைக்கப்பட்ட தளர்தழுவல் இத்திரைப்படம். இரண்டு குடும்பங்களின் இடையேயான மோதலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டு, முழுதுறாமல் சலிப்பு கொண்டிருக்கும் போது, Eric Schlosser (இத்திரைப்படத்தின் Co-executive Producer) ஏற்கனவே உரிமம் பெற்று வைத்திருந்த Oil நாவலினை வாசித்துக் கொண்டிருந்த ஆண்டர்சன் அது தந்த தெளிவாலும் உந்துதலாலும் அலைவுற்று மெல்ல வேறொரு திரைக்கதையை வந்தடைகிறார். அது அவர் எழுதிக் கொண்டிருந்த திரைக்கதைக்கு வடிவத்தையும், There Will Be Blood என்ற உன்னத படைப்பின் அடிப்படையையும் உண்டாக்கித் தந்து விட்டிருக்கிறது.

Oil நாவலில் அது வெளிவந்த கால கட்டத்தை முன்வைக்கும் படி கம்யூனிச இறையெண்ண கருத்து முரண்களையும் பூசல்களையும் ஆசிரியர் முன்வைத்திருப்பார். ஆண்டர்சன் தன் காலத்தையும் கணக்கிற்கொண்டு ஒரு முதலாளித்துவ பாத்திரம் இறைநம்பிக்கையாளர் பாத்திரம் இரண்டையும் முதன்மைப்படுத்தி இருக்கிறார். இரண்டு பாத்திரங்களை மட்டும் கணக்கில் கொள்ளாது இரண்டு சித்தாந்தங்களையும் பொருத்திப் பார்ப்பவர்களுக்கு இன்னும் சில ஆழ்ந்த சத்தியங்கள் வெளிப்படும். ‘நான் உன்னுடைய பானத்தை அருந்துவேன்’ (I Drink Your Milkshake) என்று இறுதிக்காட்சியில் வெளிப்படுத்தப்படுவது உலக மதங்களின் கைப்பிடிகளிலிருந்து அதிகாரத்தை மக்களை தான் உறிஞ்சிக் கொள்வேன் என முதலாளித்துவம் மதத்தின் முன் கொக்கரிக்கிறது எனவும் கொள்ள முடியும். யுவால் நோவா ஹராரி உலகின் மிக வெற்றிகரமான மதம் முதலாளித்துவம் தான் என்கிறார்.

குறிப்பாக அமெரிக்காவின் இன்றைய சச்சரவுகளுக்கும் முரண்களுக்கும் அடிப்படையாக மதங்களின் இடையீடும், முதலாளித்துவத்தின் தீங்கு தரும் பக்கங்களும் தான் இருக்கின்றன. அவற்றின் கதை மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் இங்கு சொல்லப்படும் யதார்த்தம் பல படங்களுக்கு எட்டாக் கனியாகவே போய் விடுகின்றன அல்லது மேலோட்டமான பொழுதுபோக்காக நின்றுபோய் விடுகின்றன.

6

H.W. வுடன் டானியல் கொள்ளும் அன்பின் தருணங்கள் கவித்துவமானவை. செவிடான தன்னை தொலைவில் அனுப்பி மீண்டும் நெடுநாள் கழித்து சந்திக்கையில் டானியலை ஓங்கி அறையும் H.W. வும் ‘போதும் போதும்’ எனச் சொல்லும் டானியலும் அருகிலிருக்கும் மலைகளிரண்டும் தன் மீது முளைத்துள்ள மரங்களைக் கைகளென அசைத்துக் கொள்வதற்கு நிகர். இதைக் காணத்தான் காட்சிப்படுத்தத்தான் சினிமா இருக்கிறதோ என்றெண்ணம் கொண்டேன். அதே H.W. தன்னிலை விளக்கமாக தான் மெக்சிகோ சென்று  தனக்கென புதிய எண்ணெய் கிணறு துவங்கப் போவதாக சொல்லும் காட்சியில் சட்டென வளைவெடுத்து ‘அப்ப நீயும் எனக்கொரு போட்டியாளன்’ என்று ஆத்மார்த்தமாகச் சொல்லும் காட்சி டானியல் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட எத்தனை சிடுக்கான, அழகான வளைவு!

தான் கண்டடைந்த துறையில் தன்னை முழுதளித்தவனுக்கு எதுவும் இரண்டாம் நிலைக்குத் தானாகவே சென்று விடுகிறது. டானியல் ப்ளெயின்வியூவிற்குத் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சாக்குகளும், மன்னிப்புக் கோரல்களும், ஆபரண மொழியும் கடும் எரிச்சலைத் தருகிறது. அது மெல்ல அவனை இறுக்கத்தின் குகைக்குள் தள்ளுகிறது. அத்தனிமையை வெல்ல அவனிடம் அங்கும் அந்த ஆட்டிப்படைக்கும் தொழில் முன்நிற்கிறது. அதைத் தொடரத் தொடர மேலும் தனியனாகிறான். மேலும் வைரமென இறுகி விடுகிறான். அத்தனை இறுகி நிற்கும் வைரத்தின் ஒளியைக் கண்டு எளியோர் இரந்து நிற்கையில் மெல்லக் கீறி அவர்களைக் காயப்படுத்துகிறான். ஒளியை எதிரொலித்து அவர்களது கண்களைக் கூசச் செய்கிறான். அவர்கள் பயங்கொண்ட தருணம் பார்த்து தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான், கடவுளென!

”நான் மக்களிடம் அவர்களது கொடிய குணங்களையே காண்கிறேன்” என்று முதல்முறை தன் மனதை வெளிச்சொல்லும் டானியல் ஆண்டாண்டுகளாக மெல்ல தன் வெறுப்பை வளர்த்து வந்ததையும் குறிப்பிடுகையில் யேசுவின் எதிர்ப்புள்ளியில் நிற்க வைத்துப் பார்க்க வேண்டிய பார்வைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. யேசு தன் சிலுவையேற்றத்தில் ‘ஏழு இறுதி கூற்றுகள்’ வழங்குகிறார். அவற்றில் இறக்கும் தருவாயில் சொல்லப்பட்ட “I am Finished” என்பதும் ஒன்று. அது சோக அர்த்தத்தில் வழங்கப்படாமல், பிறரது பாவங்களைச் சுமந்து அன்பின் கொடியை உயரப் பிடித்த தன் கடமை முடிவுற்றது என்ற மனநிறைவைக் குறிக்கும் பொருளிலேயே வழங்கப்படுகிறது. டானியல் ஈலையுடன் உரையாடும் இறுதிக் காட்சியில் ஈலைக்குச் சிலுவையின் வலியைத் தருகிறார். அவனைச் சிறியவனாக்கி தன்னைப் போலி தேவதூதன் என்று சொல்ல வைத்து அவன் முன் சன்னதமெழ ஆடி அவனைப் பலியும் கொள்கிறார். அங்கு ‘I am Finished‘ என்று மனநிறைவு கொள்ளும் தருணம் வருகிறது.

திரைப்படத்தில் பெயர் திரையில் ஒளிருகையிலேயே ஆகமத்தின் எழுத்துரு வடிவில் வருவதும், மலையினைக் குடைந்து தன்னிலிருந்து தானே தச்சனாக அவதரிப்பதும், நூற்றாண்டு வெறுப்பின் தனிமையில் முழுக்கத் தன்னை தோய்த்துக் கொள்வதும், செவியிழந்த தன் வளர்ப்பு மகனுக்கு செவியை மீண்டும் தர அதிசயங்கள் செய்ய இயலாமல் தவிப்பதும், இறுதியில் கடவுளாகவே மாறி தன் கடமை முடிப்பதும் என டானியல் அமெரிக்கப் பின்னணியின், நவீன அமேரிக்கத்தனத்தின் யேசுவாக உருவாக்கப்பட்டது இத்திரைப்படத்தில் விரித்தெடுக்கப்பட வேண்டிய இழைகளில் ஒன்று.

நீலக்குறிஞ்சி என There Will Be Blood 2007-இல் வெளியானது. இரண்டு மணி நேரம் 38 நிமிடங்களில் ஒரு தருணம் கூட சாதாரணமான ஒன்றாகிப் போய்விடாதவற்றால் நிறைந்திருக்கும் ஒரு அரிய மலரிது. நம் விழிகளில் பறவையென முன்னின்று விண்ணிலும் நிலத்திலும் குருதி கொப்பளிக்கும் கனவுகளையும், கருமை பின்னணியில் வெறுப்பின் பாதை ஊடாகவே வந்து மின்னும் அன்பின் வெளிச்சத்தையும் பரிசளித்திருக்கும் செம்படைப்பு இது. அது மலர்ந்து பன்னிரண்டாண்டுகள் முடிவுறும் தருவாயில் இருக்கிறது. இன்னும் அதுவே இன்னொரு குறிஞ்சியாகவும் இருக்கிறது.