ஒன்று போலவே இருக்கும் கோகோ கோலா பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலவெளியில் இருக்கின்றன என ஜான் கேஜ் சொன்னதை, ஒவ்வொரு முறை கோகோ கோலா பாட்டிலைக் கையில் எடுக்கும் போதும் யோசிக்கிறேன். இதற்கு முற்றிலும் எதிர்த்தளத்தில், உலகின் எந்த மூலையிலும், கோகோ கோலா பாட்டிலைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் ஒரே காலவெளியில் இருப்பார்கள். இந்தக் காலவெளி உலகமயமாக்கம் உருவாக்கியது. சென்னை நகரவாசியையும், சியோல் நகரவாசியையும் ஒன்றாக இணைக்க முடிகிற சாத்தியம் கோக்கிற்கு மட்டுமே உண்டு. நமது உள்ளங்கைகள் கோக்கைத் தழுவும் ஒவ்வொரு முறையும் நாம் ஒரு கண்ணாடி பாட்டிலின் வழியாக முதலாளித்துவக் கொண்டாட்டத்தின் (Capitalist Carnival) ஒரு பகுதியைத் தழுவுகிறோம்.

ஓர் உணர்வின் சில்லிடும் உடலாக குளிர்பதனப் பெட்டியிலிருந்து நமது கைகளுக்குத் தாவும் ஒவ்வொரு கோக்கும் நாம் உடலற்ற ஒன்றைத் தீண்டும் இன்பத்தை அளிக்கும். புகையைக் கையில் பிடிக்க முனைவதைப் போல, முதலாளித்துவம் தனது உற்பத்திப் பொருட்களின் வழியாக அளிக்கும் நிறைவுணர்வை நாம் ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைந்திருக்கும் கருந்திரவத்தின் ஊடாகக் காண்கிறோம். முதலாளித்துவம் மனிதர்களுக்கு அளிக்கும் ஒரு வெற்று வாக்குறுதியை நம்மால் கோக் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. தேவையே இல்லாத ஒன்றைத் தவிர்க்க முடியாமல் ஆக்குவதே முதலாளித்துவத்தின் சாராம்சம். பொருட்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றாலும் பொருட்களின் வழியாக மதிப்பும் உருவாகிறது. நமது காலத்திலோ பொருட்களின் வழியாக மதிப்போடு சேர்ந்து குறியீடுகளும் உருவாகின்றன.

ஆண்டி வரோலின் கோகோ கோலா

கொஞ்சம் உங்கள் நினைவுகளில் இருந்து காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட நாட்களில் ஒலித்த குரல்களை ஒலிக்க விடுங்கள். அவை இந்தியா அடகு வைக்கப்பட்டு விட்டது, விற்கப்பட்டு விட்டது என்று அந்நாட்களில் கூக்குரலிட்டன. அந்தக் குரல்களுக்கு வயது இன்றைக்கு ஒரு தலைமுறைக் காலம். இந்தியா, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, அரை சோசலிச – அரை முதலாளித்துவத்தின் கூட்டு உலோகத்தினாலான வெளிப்புறக் கதவுகளை உடைத்து, மேற்கிலிருந்து வந்த டாலர் அன்னையின் பாதங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்த ஆரம்ப ஆண்டுகளில், எனது தலைமுறையினர் பதின் பருவத்தில் நுழைந்தோம். கோக் உடனான எனது இருபத்தைந்து ஆண்டுகள் மூன்று கட்டங்களாகக் கழிந்துள்ளது.

முதல் கட்டத்தில், அறிமுகம் செய்யப்பட்ட நாட்களில் கோக்கைத் தாவி ஏற்றுக் கொண்ட இளைஞர்களில் ஒருவனாக, பழைய இந்தியாவின் சலிப்பூட்டும், பொருட்களற்ற வெற்றிடத்திலிருந்து எங்களை மீட்டுச் செல்லும் வாகனங்களாக சாலை தோறும் திரிந்த சிவப்பு நிற கேன்டர் வண்டிகளைக் கண்ணுறும் போதேல்லாம் தந்தையர்களின் காலமல்லாத வேறொன்று நமது கண்களுக்கு முன்னே நகர்கிறது என்கிற உணர்வே மெலெழுந்திருந்தது.

ஏ.ஆர். ரஹ்மானும் எம்.டிவியும் ஸ்டார் டிவியும் Bass வசதியுடைய இசை ஒலிபரப்புக் கருவிகளும் கட்டிடம் எழுப்பும் வீடியோ விளையாட்டும் கோகோ கோலாவும் கரிஷ்மா இருசக்கர வாகனமும்  A-Z என அழைக்கப்பட்ட காதுகளுக்கு மேலே பக்கவாட்டில் படிக்கட்டுகளைப் போலச் செய்து கொள்ளும் சிகையலங்காரமும் இல்லாமல் போயிருந்தால், அப்படியொரு கலவையான பாப் கலாச்சாரத்திற்குள் நாங்கள் நுழைய வாய்ப்பில்லாது போயிருந்தால் எங்கள் பதின்பருவம் பழைய இந்தியச் சாலையோர புளியம்பழங்களாக உலுக்கப்பட்டிருக்கும். இந்நாட்டின் அதிவிநோதம் என்னவென்றால் காலமளவு பழமையுள்ளதாகக் கருதப்படும் சாதி அடுக்குகளில் ஓர் அசைவை உண்டாக்கிய மண்டல் கமிசன் பரிந்துரை அமலாக்கத்திற்கு அடுத்து உடனடியாக உலகமயமாக்கல் நிகழ்ந்தது.

இந்தியாவில் ஒவ்வொரு கதவும் உடைத்துத் திறக்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இந்தியா டுடே அட்டையில் எரிந்த இளைஞனின் புகைப்படம் போல ஒரு  புகைப்படமும் உலகமயமாக்கத்திற்கு எதிராக எரிந்திருக்கவில்லை. சுதேசிப் பொருளாதாரத் தரப்பார் யாரும் கோகோ கோலாவிற்கு எதிராக தங்கள் உடலை எரித்துக் கொள்ளவில்லை. நம்மைப் பொருத்த வரையில் நவ காலனியாதிக்கம் என்று சொல்லப்பட்ட தாராள மயமாக்கலை விடவும் இட ஒதுக்கீடே அதிகம் எதிர்க்கப்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. நான் இட ஒதுக்கீடும் உலகமயமாக்கலும் என்னவென்றே தெரியாத பருவத்தில், கோகோ கோலா மூடி திறக்கப்பட்டு நாவில் பரவும் திரவத்தின் குளிர்ச்சியில் இலயித்திருந்தேன்.

ஆரம்பத்தில் கோகோ கோலாவை எதிர்ப்பதென்பது இடதுசாரிகளின், பாரதிய மஸ்தூர் சங்க உறுப்பினர்களின் பிரச்சாரப் பணி. நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்த பாரதிய மஸ்தூர் சங்க உறுப்பினரான தொழிலாளர் ஒருவர் என்னிடம் கொடுத்தத் துண்டுப் பிரசுரத்தில் கோகோ கோலாவை அருந்தக் கூடாதென்று இருந்தது. விவேகானந்தரின் பழைய மாணவனாகவே அப்போதும் இருந்திருந்தால் அந்தத் துண்டுப் பிரசுரத்தை வீட்டில் கண்ணாடிச் சட்டமிட்டு அன்றாடப் பிரார்த்தனையாக வாசித்த பிறகே வீட்டை விட்டு வெளியேறியிருப்பேன். தாராளவாத ஜனநாயகம் இல்லையென்றால் உலகமயமாக்கல் சாத்தியமில்லை. சுதந்திரச் சந்தை என்பது தேசியவாதத்திற்கு நிச்சயம் எதிரானது, ஆனால் அது தேசியவாத எல்லைகளால் அணைகட்டப்படாத சர்வதேசக் கனவுகள் ஓடும் ஆற்றின் மற்றொரு கரை. இந்தியா உலகமயானதின் கால் நூற்றாண்டு முடிவில் நாம் அதனை தீவிரமாக விவாதித்திருக்கிறோமா?

அதன் பொருளாதாரப் பலன்கள் கண்கூடாகத் தெரிந்தாலும் கலாச்சாரத் தளத்தில் அது உண்டாக்கியிருக்கும் மாற்றங்களை (முக்கியமாக உடைவுகளை) கோட்பாட்டுத் தளத்தில் அலசியிருக்கிறோமா? கோகோ கோலாவின் அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் உலகமயமாக்கல் எனும் செயல்முறைக்குள் நுழைந்து இந்த நாடு என்னவாக மாற்றமடைந்திருக்கிறது எனச் சிந்திக்கத் தேவையில்லாதவர்கள். தனியார் பள்ளியில் கல்வி கற்றவர்களான அவர்களின் பள்ளிக்கு எதிரே கோகோ கோலா பெட்டிகள் அடுக்கப்பட்டிருப்பதை பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள். கோக் குடிப்பது அவர்களுக்கு ஒரு கனவல்ல. ஆனால் எனது பதின்பருவத்தில் அதனை அருந்துவதென்பது கனவின் திரவ வடிவத்தை அருந்துவதற்கு ஒப்பானது.

கோக் எடு, கொண்டாடு

இரண்டாம் கட்டத்தில், ஓர் அசட்டு இடதுசாரியாக இருந்த போது சில காலம் கோக் அருந்தாமல் தவிர்த்திருக்கிறேன். அருந்த மாட்டோம் கோக் / பெப்சி எனும் வாசகங்கள் பதிந்த டி-சர்ட்டுகள் அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். கோகோ கோலா நிறுவனத்தினர் மற்ற குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களை வாங்கி, உடைத்து எவ்வாறு அவற்றின் விநியோக இணைப்புகளை முறிக்கின்றனர் என்பதை விவாதித்த ஒரு சிறுகதை காலச்சுவடில் வெளிவந்தது இப்போதும் நினைவிருக்கிறது. யார் எழுதியது என்பது மறந்து போயிருந்தாலும் கோக்கின் காரணமாக நினைவு வைத்திருக்கிறேன். கோகோ கோலா ஏற்கனவே ஒருமுறை இந்தியாவில் இருந்து ஜனதா ஆட்சியில் துரத்தப்பட்டிருக்கிறது. ஜனதா என்றாலே எனக்குக் கிழவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். நவீன இந்தியாவிற்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பிருந்திருக்கிறதா? ஐபிஎம் நிறுவனத்தையும் அவர்கள் வெளியேற்றியிருக்கின்றனர். கோக்காவது போகட்டும், யாராவது கணிப்பொறி அறிவியலை வெளியேற்றும் முட்டாள்தனமான முடிவை எடுப்பார்களா? ஜெயசங்கர் திரைப்படமொன்றில் கோகோ கோலா பாட்டிலைப் பார்த்ததும் எனக்கு ஜனதாக் கட்சியினர் மீது வெறுப்பே வந்தது. ஒரு குளிர்பானத்தை விரட்டி விட்டு அவர்களால் இளநீரைப் பதிலீடு செய்ய முடியவில்லை, மாறாக உள்ளூர் குளிர்பானங்களையே முன்வைத்தார்கள்.

காமராஜர் நினைவில்லத்தில் அவர் சவரம் செய்த ரேசர் வைக்கப்பட்டுள்ளது. அது ஜில்லெட் நிறுவனம் தயாரித்த ரேசர். சுதேசி பேசிய காங்கிரஸ் கிழவர்களும் ஜில்லெட்டில் தான் சவரம் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஒருவேளை, அந்நிய நிறுவனங்களுக்கு இணையாக இந்திய நிறுவனங்களும் எழுப்பப்படுவதற்கான கால இடைவெளியில் அவர்கள் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம். ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த கூர் மழுங்காத பிளேடை நாம் உற்பத்தி செய்ய அனுமதித்திருந்தால் ஒருவனுக்கு ஒருத்தி எனும் இந்தியக் கலாச்சார விழுமியத்திற்கு இணையாக ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க ஒரே பிளேடு எனும் சாத்தியமும் உருவாகியிருக்கும்.  ஒருவேளை தன்னிறைவு என்பதே மிகக் குறைவான பொருட்களின் மூலமாகத் தான் சாத்தியமாகுமோ என்னவோ? தேசியவாதம் குறித்து மரியோ வர்கோஸ் யோசா எழுதியிருப்பதை இங்கே தருகிறேன்.

`It is the easiest thing in the world to play the nationalist card to whip up a crowd, especially if that crowd is made up of poor and ignorant people who are looking to vent their bitterness and frustration on something or someone.  Nothing better than the pyrotechnics of nationalism to distract these people from their real problems, to prevent them from seeing who are their real exploiters, by creating a false illusion of unity.  It is not by chance that nationalism is the most solid and widespread ideology in the so-called Third World.’

இரண்டாம் கட்டத்தின் பின்பகுதியில் மீண்டும் கோகோ கோலாவிற்குத் திரும்பினேன். அன்றாடம் உணவகங்களில் உணவருந்திய பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆண்டுகளாவது மதிய உணவோடு கோக் அருந்தும் பழக்கம் இருந்தது. ஒரு பஃபே முழுக்க இருந்த உணவு வகைகளை உண்டு முடித்ததும் சில்லென ஒரு கோக்கை அருந்தி அடைந்த நிறைவின் மதிப்பை அவ்வளவு எளிதாக விவரிக்க முடியாது. ஒரு கோக் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு புத்தகம் வாசிப்பதென்பது சாதாரணமான ஒன்றல்ல, அது விளம்பரங்களின் வழி கட்டமைக்கப்பட்ட ஒரு தகுதி.

வாசிப்பவர்கள் ரொம்பவே குறைவான நமது மாநிலத்தில் கோகோ கோலாவின் துணையோடு புத்தகங்கள் வாசிப்பவர்களை அவதாரப் புருஷர்களாகவே கருத வேண்டும். நம்மில் பலரும் பலநிற, பலவித உடைகள் அணிந்த பல பிரபலங்கள் சேர்ந்து பாட்டிலின் முனையில் ஊதி, அதனைத் தட்டி ஆடும் அதன் ஆரம்பக்கட்ட விளம்பரத்தை இன்னும் மறந்திருக்க மாட்டோம். இந்தியாவின் முதல் பின்நவீனத்துவ விளம்பரம் அது எனச் சொல்லலாம். கோகோ கோலாவைப் போலவே பின்நவீனத்துவத்திற்கும் அமெரிக்க மூலத் தோற்றமுண்டு. பாருங்கள், பின்நவீனத்தும் என்பது எப்படிச் சலிப்பூட்டும் ஒரு சொல்லாக மாறிவிட்டது. ஆனால் கோகோ கோலா? கோக், முதலாளித்துவம் உற்பத்தி செய்த பொருட்களிலே ஒரு ஜாஸ் இசைத்துணுக்கு என்று சொன்ன நாட்களும் உண்டு.

கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையை நீலத்திலிருந்து சிவப்பாக மாற்றியதே கோகோ கோலா நிறுவனத்தினர் என்கிறார் எட்வர்டோ காலியானோ. எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் பரிசுகளையும் வாழ்த்துகளையும் வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் போலவே தற்போது கோகோ கோலா அதன் டின்களில், விளம்பரங்களில் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறது.  ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் அளவுக்கு அதிகமாக ஊண் உணவு உண்பவர்களிடம் ஒரு கோகோ கோலா பாட்டிலைக் கொடுங்கள், அவர்களுடைய இரைப்பையின் கொள்ளளவை அதிகரித்து, செரிமானச் சக்தியைப் பெருக்குவதற்காக அதற்கு நன்றி சொல்வார்கள். சிக்கன் செட்டிநாட்டோடு, சீரக சம்பா அரிசி பிரியாணியோடு கோகோ கோலா கலப்பதைக் காட்டிலும் ஒரு சர்வதேசத் தாராளவாதம் எதுவும் உண்டா?

எந்தப் புதிய பொருளையும் மதுரையில் அறிமுகம் செய்வார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.  மதுரைச் சந்தை என்பது உடனடியாக ஒன்றை ஏற்றுக் கொள்ளும் அல்லது புறக்கணித்து விடும்.  ஒரு பொருளுக்கான வரவேற்பையும் புறக்கணிப்பையும் அதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.  மற்ற ஊர்ச்சந்தைகள் அதிகக் காலமெடுத்துக் கொள்ளும். ஆகவே தான் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் தங்கள் துவக்க விழாவை அங்கே நிகழ்த்துகின்றன. அதே மதுரையில் தான் சாட் மசாலா சேர்த்து கோகோ கோலா அருந்துவதை பரிசோதித்துப் பார்த்தேன். குமிழியிடும் கோலாவில் சாட் மசாலாவைச் சேர்த்ததும் கொஞ்சமாகப் பொங்கி அடங்கியதும் சற்றே காரமான திரவத்தை அருந்துவது ஒரு summer retreat. கோகோ கோலாவுடனான இரண்டாவது கட்டம் அத்தோடு முடிந்தது.

கோகோ கோலாவிற்கு ஒரு நெருக்கடி வந்தது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாக அதில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக. ஆனால் அமீர்கான் உடனே கிளம்பிப் போய் கோகோ கோலா தொழிற்சாலையில் பார்வையிட்டு அதன் சார்பாக வாதிட்டார். அந்த விளம்பரத்தில் உண்மையில்லை என்று ஒதுக்குவது விளம்பரங்களின் தர்க்கத்திற்கு எதிரானது. உண்மை என்பது எப்போதுமே அடிமுடி காணப்பட முடியாதது. ஜான்சன் அண்ட் ஜான்சன், மேகி, கோல்கேட் பற்பசை என சர்வதேச நிறுவனங்களின் பொருட்கள் தொடர்ந்து சந்தேகிக்கப்படுவதைப் போல இந்தியப் பொருட்கள் எதுவுமே இதுவரை சந்தேகிக்கப்பட்டதில்லை. நமது பிள்ளையார்கள் பால் குடிப்பதைப் போல அவையும் சாதுவானவை என்று நம்ப வேண்டியது தான்.

அப்போதும் நான் கோகோ கோலா அருந்துவதை விட்டுவிடவில்லை. பாட்டிலில் இருந்து டின்னிற்கு மாறியதும் நிச்சயம் நான் அமெரிக்க வீதிகளில் ஒன்றில் வசிப்பவனாகவே உணர்ந்தேன். ஒரு டின் பியரை அருந்துவதென்பது எப்படிப்பட்டதொரு இலட்சியக் கனவென்று தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களில் வசிப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலனோர் கோகோ கோலா டின்களுக்கு பெரிய மதிப்பளிப்பதில்லை என்பதில் எனக்கு வருத்தமே.

தாராளவாதம், சுதந்திரச் சந்தை என்பது ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி என்றே கருதுகிறேன்.  இது இடதுசாரிகள், கலாச்சார வலதுசாரிகள் இருவருக்குமே உவப்பான ஒன்றாக இருக்காது.  கோகோ கோலா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகப்புப்பட்டகமாக இருக்கலாம் – நாம் ஏகாதிபத்தியம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதாக இருந்தால். சே குவேரா, மச்சு பிச்சுவின் சிகரத்தை அடைந்ததும், கோக் விளம்பரம் இல்லாத ஓர் இடத்தை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறார். இன்னுமொரு முறை கோக் இந்தியாவில் தடை செய்யப்படும் காலமும் வரக்கூடும். தேசியவாதிகள் சுதந்திர தினக் கொண்டாட்ட உணர்வினை அந்த நாளுக்கு அளிப்பார்கள்.

அமெரிக்காவே இப்போது தேசியவாதத்திற்குள்ளாக தனது உடலைச் சுருட்டிக் கொள்ள முனைகிறது என்றாலும், அது சாதாரணர்களுக்கே தனது வாயிலை அடைக்கிறது.  தொழில்நுட்பவியலாளர்களுக்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு அது என்றுமே இல்லையென்று சொல்லாது கதவு திறக்கும் என்றே நினைக்கிறேன். தேசியவாதம் என்று இங்கே சொல்லப்பட்டால் Nativism என்று அங்கே சொல்கிறார்கள்.  இரண்டு சொற்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப வேறுபாடு என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தாராளவாத வர்த்தகம் வன்முறையையும், போரையும் குறைக்கும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் இது முற்றிலும் சரியான வாதமா என்று யோசித்துப் பார்க்கப்பட வேண்டியது. கோகோ கோலா கட்டுரையின் வரம்புகளுக்கு வெளியே இருப்பவை இவை.

கோகோ கோலா அருந்தாமலிருப்பதென்பது தேசப்பற்று என்று அசட்டுத்தனமாக நம்பிய காலமும் அதை அருந்துவது ஒரு கலாச்சாரத்திற்குள் நுழையும் தகுதி என்று நம்பிய காலமும் முடிந்து, இன்றோ உடல்நலம் பேணுவதற்காக அதை அருந்தாமலிருக்கிறேன். மெள்ள மெள்ள எனது அன்றாட நுகர்விலிருந்து நான் கோகோ கோலாவை வெளியேற்றி விட்டேன். ஆனால் ஜீரோ கலோரி கோலாவை அந்நிறுவனம் அறிமுகம் செய்ததும் நிச்சயமாக மகிழ்ந்தேன். நாம் இன்று உடலநலப் பரிந்துரைகளில் கோகோ கோலா உட்பட அனைத்துக் குளிர்பானங்களையும் ஒதுக்கச் சொல்வதில் வந்து நிற்கிறோம். முக்கியமாக Keto உணவு முறையில் ‘ஏமாற்று நாளில் (Cheat Day)’ கூட கோக் அருந்தப்படக் கூடாது.

உடல்நலத்தைப் பொருத்த வரையில் ஓர் எளிய சூத்திரம் என்னவென்றால், குழந்தைகளுக்கு அல்லது சிறுவர்களுக்கு எவையெல்லாம் ஒத்துக் கொள்ளாதோ அவை பெரியவர்களுக்கும் நல்லதல்ல. குளிர்பானங்களும் அவற்றில் ஒன்று. கோக் உட்பட எல்லாக் குளிர்பானங்களும் உடல்நலக் கேடு என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதே சமயம் ஆறு அல்லது எட்டு மணிநேரம் ஒரேயிடத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்ப்பதை விடவும் ஒரு டயட் கோக் எவ்வாறு பாதிப்பானது என்று யாராவது விளக்கிச் சொன்னால் மகிழ்வேன். அதன் வயதின் காரணமாகவோ, அல்லது எனது வயதின் காரணமாகவோ இப்போது கோகோ கோலா முன்பு அளித்த உணர்வை அளிப்பதில்லை.

இந்த மூன்றாவது கட்டத்தில் தேசியவாதம், தாராளவாதம் போன்ற கதையாடல்களின் மீது சலிப்பும் விலகலும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே இன்று அடுத்தக் கட்டத்திற்கு நகராமல் இருப்பதாகவே படுகிறது. இரும்புத் திரைகள் மீண்டும் விழத் துவங்கியுள்ளன. தாராளவாதம் உருவாக்கிய கலாச்சார உடைவிலிருந்து அதற்கான எதிர்வினையாக தேசியவாதம் மேலோங்கியுள்ளது. இந்த புதிய தேசியவாதம் உற்பத்தி, விநியோக முறையில் முதலாளித்துவத்தை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டு, மறுமுனையில் அது உருவாக்கி அளித்த தாராளவாத பூர்ஷ்வா ஜனநாயகத்தின் கலாச்சார கருத்துருக்களை மறுக்கிறது. இது ஒரு வகையில் தேசியவாதத்திற்குள்ளேயே எழுந்து வளர்ந்த நவீனத்துவத்திற்கும் எதிரானது.

மீண்டும் ஒருமுறை மரியோ வர்கோஸ் யோசா சொல்வதைக் கேட்போம்.

`This widespread internationalization of our lives is perhaps the best thing that has happened in the world to date.  Or, to be more precise, because the progress towards this goal is not irreversible – nationalists could interrupt it- the best thing that could happen. Through this process, poor countries will become less poor, since they will fit into markets where they can use their comparative advantages to good effect, and prosperous countries will achieve new levels of scientific and technological development.  And more important still, democratic culture – the culture of sovereign individual and civil and pluralist society, the culture of human rights and the free market, of private enterprise and the right to criticize, the culture of decentralized power – will grow stronger where it already exists and will extend to countries where now it is a mere caricature or a simple aspiration.’ – Nationalism and Utopia கட்டுரையில்.

விமர்சிப்பதற்கான உரிமையும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரமும் என்கிற யோசாவின் கற்பனைக்கு எதிராக அடக்குமுறையும், விமர்சனத்தை ஒடுக்குதலும் பரவலாகியிருக்கிறது. இன்று அருந்தும் ஒரு கோகோ கோலாவில் சுதந்திர உணர்வேயில்லை. அது வெறுமனே நமக்கு நன்கு பழகிய ஒரு திரவமாக நமது எல்லைகளுக்குள் புழங்குகிறது. தாராளவாத கனவும் அதனோடு தாற்காலிகமாக சரிந்து போகும். உலகமயமாக்கலால் அதிகம் பயனடைந்தவை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் என்பதற்கும் மேலாக ஆசியாவின் மூன்றாம் உலக நாடுகளான சீனாவும், இந்தியாவுமே அதிகப் பயனை அடைந்திருக்கின்றன.

“A History of the World in 6 Glasses” புத்தகத்தில் பீர், வைன், தேனீர், காபி, சாராயத்துடன் கோக்கும் எப்படியெல்லாம் வரலாறைக் கட்டமைத்தது என்பதை டாம் ஸ்டாண்டேஜ் சுவாரஸ்யமாக விவரிக்கிறார். ஒருவகையில், சீனா விளைவித்துப் பரவலாக்கிய தேனீருக்குப் பிறகு எழுநூறு கோடி மக்களையும் ஒரே கோட்டில் இணைக்கச் சாத்தியமுள்ள ஒரே பொருள் கோகோ கோலா. கூடிய விரைவில் அது சரியத் துவங்கலாம். அப்போது எழுதப் போகும் இரங்கல் கட்டுரையில் எப்படியெல்லாம் எமது தலைமுறையின் பாப் கலாச்சாரத்தில் அது ஓர் அங்கமாக செயலாற்றியது என்று விவரிக்க முனைவேன். விடைபெறு கோகோ கோலா, நீ அளித்த பிம்ப பாவனைகளில் இப்போது நான் மகிழ்ந்திருக்கவில்லை. உடல், சந்தையாவதற்கு எதிராக இன்றுமே போராடிக் கொண்டிருக்கிறது. நான் உடல்நலத்தைப் பேண வேண்டிய வயதிற்குள் நுழைந்து விட்டேன்.