சிறுதுளை

0 comment

1

திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும் மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும் சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உச்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வறண்ட தொனியில் இருந்தது.

திருவின் அம்மா தனபாக்கியம் வீட்டை ஒட்டி நீண்டிருந்த வெளிக்குந்தில் அமர்ந்திருந்தார். படலையிலிருந்து கூப்பிட்டதைக் கேட்காமல் சூடை மீனை வயிற்றுப் பக்கமாகக் கீறி, நீரிலிட்டு அலசிச் சுத்தம் செய்வதைப் பார்த்த மொறீஸுக்கு கடும் சினம் வந்தது. பொறுமையிழந்த மொறீஸ் படலையைத் தள்ளித் திறந்து வீட்டினுள் அடாத்தாக நுழைந்தான். இருவர் படலையைத் தள்ளித் திறந்து உள்ளே வருவதைப் பார்த்த தனபாக்கியம் மீனரிந்த சிறு கத்தியுடன், கைகளை சீலைத்தலைப்பில் துடைத்தபடி படலைப் பக்கம் வந்தார்.

ஏறு நெற்றியும், மிதப்புப் பல்லுமாக இருந்த மொறீஸ் சின்னவனை வீட்டின் பின்னால் கவனிக்கும்படி இரகசியமாகக் கைகளால் சைகை செய்து விட்டு, தனபாக்கியத்திடம் மிதப்புப் பல்லில் சிரித்தபடி ‘திருவைத் தேடி வந்திருக்கிறோம், தயவுசெய்து அவனைக் கூப்பிடுங்கள்’ என்றான். தனபாக்கியத்திற்கு சரியாக விளங்கவில்லை, அவர் தனது தலையை இடது பக்கமாகத் திருப்பிக் குனிந்து கைகளை சேலைத்தலைப்பில் துடைத்தபடி இன்னும் கூர்ந்து கேட்டார் ‘அம்மா தாயே நாங்கள் இயக்கம். உங்கள் மகனைத் தேடி வந்திருக்கிறோம்’ தனபாக்கியத்திற்கு இயக்கம் என்றதும் மகனைத் தேடி வந்திருக்கிறோம் என்றது நன்றாகக் கேட்டது. ‘ஓம் ஓம் பொடியள் நீங்கள் சுவாமி அறைக்கும் வரலாம் குறையில்லை, மோனை இல்லை அவன்ரை தேப்பனையும் தேடி வரலாம் குறையில்லை என்ர அவரை இரண்டு வரியமா நானும் தேடுறன்’ என்று மெதுவாகச் சொன்னார். தனபாக்கியத்தின் சினம் முழுவதுமாக வடிந்து விட்டிருந்தது. அவருடைய பதில் மொறீஸுக்கு சினத்தைத் தந்தது. ‘அம்மா நாங்கள் எல்லாருமே வீட்டுக்கு நாலுபேரைத் துலைச்சுப் போட்டுதான் வந்திருக்கிறம். சின்னவன்ரை தம்பியைத் தாட்ட இடத்தில் புல்லும் முளைச்சிருக்காது’. ‘ஓம் ஓம் மெய்தான் பிள்ளையள் எண்ட அவரும் துலைஞ்சுதான் போனார் மோன் சுடலையடி தோட்டத்திற்குப் போயிருக்கிறான்’  என்றார். தனபாக்கியம் சுடலையடி என்றதும் மொறீஸ் உதடுகளில் சிரிப்புடன் ‘சுடலையடித் தோட்டத்தில் மகனுக்கு என்ன அலுவல்?’ என்றான். தனபாக்கியத்திற்கு அது விளங்கவில்லை. திரும்பவும் தலையை குனிந்து காதைத் தீட்டினார். ‘அம்மா ஆளை கையோட கூட்டி வரச்சொல்லி ஓடர். ஆள் இல்லாமல் போகேலாது’

‘ஏன் மோனை சிரமப்படுறியள் அவன் வந்ததும் கையோடை கூட்டிட்டு வாறன்.’

‘அம்மா தாயே நாங்கள் கம்யூனிஸ்டுகளை மட்டுமில்லை அவர்களுடைய  தாய்மாரையும் நம்புவதில்லை’ தனபாக்கியத்திற்கு மொறீஸ் சொன்னது நன்றாக விளங்கினாலும் கம்யூனிஸ்ட் என்பது துண்டாக விளங்கவில்லை.

திருவைக் கம்யூனிஸ்ட் என்றால் தோழர் லெனின் ஏற்றுக்கொள்ள மாட்டார். திரு எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்து கட்சி வேலை செய்தவரில்லை. தோழர் லெனின் ஏற்றுக்கொள்வாரா என்பது பிரச்சினையில்லை. திருவை இயக்கம் கம்யூனிஸ்ட்டாக அழைத்துச் செல்ல வந்திருக்கிறது. இயக்கத்தின் துல்லியமான புலனாய்வுக் கட்டமைப்பு, கடினப் பயிற்சி பெற்ற தீவிர வேவுக்காரர்கள் – கொப்பியும் கையுமாத் திரிந்து துல்லியமாகக் குறிப்பெடுத்துக் கொள்வது. சின்னக் கடுதாசிக் கசக்கலையும் பத்திரமாக மடித்து வைத்திருப்பது. அதன் உச்சமாக அப்போது ஊரில் பிரபலமான புலனாய்வாளனாக அறியப்பட்ட சின்னத்தங்கம் ( அதிர்ந்து பேசாத ஆழ்ந்த பளுப்புக் கண்கள், ஒட்ட நறுக்கிய மீசை) புலனாய்விற்காகக் கச்சிதமாக வேடமிட்டு உருமாறிச் சிறு துளைகளினுடாகவும் ஒழுகிச் செல்லும் கலையை ஆயுதப் பயிற்சிக்காக தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் திறம்படக் கற்று வந்திருந்தான். அவன் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ‘மேக்கப் மேனாக’ இருந்த வேலுவிடம் கற்றிருக்கலாம் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். சின்னத்தங்கம் இந்தியாவில் நின்றிருந்த போது எம்ஜிஆருடன் எடுத்த புகைப்படத்தையும் பலருக்கு காட்டியிருக்கிறான்.

சின்னத்தங்கத்தை துல்லியமாக வேடமிட்டு உருமாறி துளைகளூடாக நுழைந்துச் செல்லும் அபாரமான ஆற்றல் ரெலோவை இயக்கம் அழித்த நாளில் இயக்கத்திடமிருந்து காப்பாற்றி இருந்தது. இயக்கம், ரெலோவின் முகாமை மூன்று பக்கமாகச் சுற்றி வளைத்து மூர்க்கமாகத் தாக்கிய போது முதலில் நெஞ்சில் காயப்பட்டு இறந்தவன் போலவும், பிறகு இயக்கப் பொடியன் போலவும் –  சின்ன விரலின் தடிப்பிலிருந்த கண்ணாடிக் குப்பியைக் கழுத்தில் இருந்த ஓம் முருகன் பென்ரனுக்குப் பதிலாக கறுப்பு நூலில் கட்டி- வேடமிட்டு இயக்கத்தின் கொடூரமான முற்றுகையுள்ளிருந்து வெற்றிகரமாக உயிருடன் வெளியேறியிருந்தான். யாரும் தப்பிச் செல்ல முடியாதிருந்த இயக்கத்தின் இறுக்கமான முற்றுகையைச் சின்னத்தங்கம் தன்னுடைய வேடமிட்டு உருமாறும் அபாரமான திறமையால் உடைத்து வெளியேறியது இயக்கத்திற்கும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவன் இயக்கத்துடன் சேர்ந்து இன்னும் துல்லியமான புலனாய்வாளனாக ஆகிப் போனான்.

சின்னத்தங்கம் தன்னுடைய மீசையை ஒட்ட மழித்து, இளநிலை இராணுவக் கப்டன் போல வேடமிட்டு, பலாலி இராணுவப் படைத்தளத்தினுள் நுழைந்து அதன் முன்னரங்கப் பாதுகாப்பு முட்கடவைகளில் துளையிட்டுத், தீவிர கண்காணிப்பை கவனமாக உடைத்து, படைத்தளத்தின் இதயம் வரை ஊடுருவிச் சென்று, உள்ளே சோம்பலாகத் தூக்கத்திலிருந்த இராணுவத்தினருடன் கலகலப்பாகப் பேசிப் பம்பல் அடித்து மதியம் மீனும், சோறும் அவர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு இராணுவத்திற்கு சந்தேகமே இல்லாமல் திரும்பி வந்திருந்தது புலனாய்வின் அடுத்தக் கட்டமான வேவு பார்ப்பதினதும், வேடமிடுவதினதும் உச்ச ஆற்றலாக  பேசப்பட்டது. அவன் திரும்பி வரும் வழியில் பலாலியின் இதயம் வரை ஊடுருவிச் சென்றதன் அடையாளமாக இராணுவத்தின் சில காக்கி நிற உள்ளாடைகளைக் கையோடு எடுத்து வந்ததும், அதைத் தன் தீரத்தின் அடையாளமாக – முறியடிப்புச் சமரில் –  சாகும் வரை நெஞ்சுக் கோல்சருள் முலைப்புடைப்புப் போல அடைந்து வைத்திருந்ததும் சுவாரசியமானது. அதை விடச் சுவரசியமானது சின்னத்தங்கம் திரும்ப குட்டியப்புலம் வழியாக இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் நுழைந்த போது அவனை வழிதவறி வந்த தீயூழ் இரணுவம் எனப் புலிகளின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்த கதை.

கைது செய்த சின்னத்தங்கத்தை பெரிய முகாமிற்கு அனுப்பாமல் ஆள் மாறி ஆள் எல்லையிலேயே கட்டி வைத்து அடித்தார்கள். இரண்டு கைகளையும் பின் பக்கமாக நைலோன் கயிறால் இறுக்கமாகக் கட்டி அவன் முன்னால் சிவந்த செம்பாட்டு மணலைக் குவித்து துவக்கால் மண்ணைச் சமப்படுத்தி அதில் பலாலியின் உள் வரைபடத்தை வரைந்து காட்டச் சொன்னார்கள். இரண்டு நாட்களும் இயக்கத்தின் அத்தனை கொட்டன் அடிகளையும், துப்பாக்கிப் பிடியின் இரும்புக்  குத்துகளையும் தாங்கியபடி மனதை வேவுப் புலியாகவும், உடலை இராணுவமாகவும் உருமாற்றிச் சின்னத்தங்கம் தன்னுடைய கால்களால் பலாலியின் உள் வரைபடத்தை இண்டு இடுக்கும் விடாமல் வரைந்து காட்டிய பின்னர்தான் தன்னுடைய வேடத்தைக் கலைத்தான். ‘அடேய் சின்னத்தங்கமே நீ பிறவி வேவுக்காரன்டா’ என்று குட்டியப்புல எல்லைக் காவல் வீரர்கள் அவனை ஆதுரமாகத் தழுவிக் கொண்டார்கள். இப்படியான தீரமான புலிகளின் புலனாய்வுத் துறை வீரனான சின்னத்தங்கம் திருவைக் கையோடு அழைத்து வர ஆட்களை அனுப்பி இருக்கிறான்.

மொறீஸும், சின்னவனும் மருதங்குளத்தின் பழைய கல்மேடையில் திருவிற்காகக் காத்திருந்தனர். சின்னவன் சுண்ணாம்புக் கல்மேடையின் குளிர்மையில் துவக்கை வான் நோக்கிப் பிடித்தபடி வீதியை கூர்ந்து கவனித்தபடி இருந்தான். மொறீஸ் போதிப்பிள்ளையார் கோயிற் பக்கமாக பார்த்தபடி இருந்தான். காயப்போட்ட குரக்கன் குடில்களினோடே வீதியில் இந்திய இராணுவ வாகனங்கள் நிரையாகச் சென்றபடி இருந்தன. இந்திய இராணுவத்தின் இலகு காலாட்படையும் சிறிய ரக சுடுகலன்களுடன் வீதியில் அடிக்கொருவராக நீளமான பச்சைக் கோடு போல நின்றிருப்பதும் தூரத்தில் தெரிந்தது. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் இருவரும் ஊன்றிக் கவனித்தபடி இருந்தனர். தாகமெடுத்த போது சின்னவன் துவக்கை பின்பக்கமாக கொழுவியபடி குந்தியிருந்து இரண்டு கைகளாலும் குளத்து நீரை மெண்டு குடித்தான். சேறு மணக்கும் மருதங்குளத்தின் வற்றிய நீரில் அல்லிக்கொடியின் அழுகல் வாசனை வந்தது.

மதியச் சமையல் முடித்த தனபாக்கியம் குத்தரிசிச் சோற்றையும் சூடைமீன் சொதியையும், கத்தரிக்காய் தீயலையும் இரண்டு தட்டில் நிரம்பப் போட்டு அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தார். கல்மேடையைச் சுற்றி விரிந்திருந்த சின்ன நீள்சதுரத் துண்டு வயல்களைப் பார்த்தபடி  நீண்ட நாட்களின் பின்னர் இருவரும் சாப்பிட்டார்கள். சின்னவன் இரண்டாம் முறையும் சோறும் சொதியும் கேட்டு வாங்கினான். மஞ்சள் சொதியில் நறுக்கிப் போட்டிருந்த புளிப்பு மாங்காய்த் துண்டுகள் நல்ல சுவையாக இருந்தன.

நிலமிருண்ட போது திரு அகலகரியல் சைக்கிளில் மஞ்சள் ரொபின் மிசினுடனும் தோட்டத்திற்கு நீர் இறைக்கும் கருத்த பிளாஸ்ரிக் வயருடனும் வந்தான். அவனுடைய கால்களில் செம்பாட்டு மண் அப்பி உலர்ந்திருந்தது. பாதங்கள் நீரில் நின்று நீர்த்தவளையின் அடிவயிற்றின் வெளுப்பில் இருந்தது. அப்படியே திருவை இருவரும் அழைத்துச் சென்றனர். திரு அவர்களின் அழைப்பிற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் நடந்து சென்ற அழுக்கு வழித்தடத்தை கவனமாகப் பின் தொடர்ந்து சென்றான். குட்டையான நாயுருவிப் பற்றைகள், இருண்ட குச்சு ஒழுங்கைகளுடாக நடந்து சென்றபோது கைவிடப்பட்ட உடைந்த வீடுகளையும், கழுத்துக் கயிறு அறுத்து விடப்பட்டிருந்த பருமனான மாடுகளின் மணி ஓசைகளையும் மட்டுமே அவர்கள் கேட்டனர். மக்கள் ஊர்மனைகளைக் கைவிட்டு விட்டு மறைந்து சென்று விட்டிருந்தனர்.

அந்த நீண்ட பயணத்தில் ஒரே ஒரு முறை மட்டும் சின்னவன் திருவுடன் கதைத்தான். அவனால் நம்ப முடியாமலிருந்த புதிரை அறிந்து கொள்ளும் விருப்பே அவன் உரையாடலில் தெரிந்தது. இத்தனை பேர் இருக்க சின்னத்தங்கம் ஏன் திருவைத் தெரிவு செய்தான் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருவிடம் அதற்கான பதில் இருக்கும் என்பதையும் சின்னவன் நம்பவில்லை என்றாலும் அவை குறித்தே திருவுடன் பேசினான். இந்திய இராணுவத்தின் நெருக்கமான முற்றுகையைக் கடந்து திரு சுடலையை ஒட்டியிருந்த வயலிற்குச் சென்று வருவதை இருமுறை கேட்டு உறுதிசெய்த பின் தன்னுடைய தலையைப் பலமாக இரு முறையாட்டி சென்று வந்ததை நம்புவதாகத் திருவிடம் சொன்னான். முடிவில் சின்னத்தங்கம் தான் மட்டும் அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைத் தேடிவிட்டதாக மின்னல் சின்னவனின் முளையில் வெட்டி மறைந்தது.

ஆனால் மொறீஸ் அதுகுறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. அவன் திருவை சின்னத்தங்கத்திடம் அழைத்துச் செல்லும் வழியை இருளில் தீவிரமாகத் தேடியபடி முன்னால் விரைந்து சென்றபடி இருந்தான். ஒளிப்பொட்டுகளே இல்லாத அந்த இருளில் ஒவ்வொருவரையும் அசையும் நிழல் உருவங்களாக மட்டுமே அவர்களால் அருகில் உணர்ந்து கொள்ள முடிந்தது. மூவருக்குமிடையில் கனத்த மெளனமும் இருளுமே அதிகமும் இறுகிக் கிடந்தன. இறுகிய இருளைக் கிழிப்பது போல  ஒழுங்கைகளின் ஒவ்வொரு  திருப்பத்திலும் மொறீஸ் நின்று நிதானித்து மெல்லிய சீழ்க்கை ஒலித்தான். சின்னவனும், திருவும் விட்டு விட்டு ஒலிக்கும் மெல்லிய நீண்ட சீழ்க்கை ஒலியை இருளினுள் பின் தொடர்ந்து சென்றனர்.

2

சின்னத்தங்கம் தன் நெஞ்சுக் கோல்சர், துணிப் பைகள் எல்லாம் கவனமாகச் சலித்துத் தேடியதில் கைத்துப்பாக்கியின் ஒரு குண்டு மட்டுமே மிச்சமிருந்தது. தப்பிச் செல்வதற்கு இன்னும் கொஞ்சம் ஆயுதங்களாவது  வேண்டும். சாப்பாட்டு முகாமின் நடுவிலிருந்த இலுப்பை மரத்தின் கிழக்குப் பக்கமாக கால்களினால் அடிமேல் அடிவைத்து நடந்தால், சரியாக இருபதாவது அடியில் நிலத்தைக் கிளறினால் பொலித்தீன் பைகளில் சுற்றிப் பாதுகாக்கப்பட்ட  ஆயுதங்கள் கிடைக்கும் என்பதை சின்னத்தங்கம் நினைவுகூர்ந்து சொன்னான். அவர்களுக்கு முன்னரே அந்த ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தால், சாப்பாட்டு முகாமிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் வீதியைக் குறுக்கறுத்து சுடலையை ஒட்டியிருக்கும் வயல் வெளிகள் கடந்து குட்டைப் பற்றைகளில் தூக்கணாங்குருவிக் கூடுகளும், சவுக்கு மரங்களும் அடர்ந்திருக்கும் சதுப்புநிலத் தரவையினுள் இறங்கி விட்டால், சதுப்பு நிலக் குட்டைப் பற்றைகளின் இலைமறைவுகளில் புதைந்திருக்கும் பூவரசம் இலைநரம்பு போன்ற ஒற்றையடிப் பாதைகளை இழை பிடித்து அங்கிருந்து எங்கும் அவர்களால் தப்பிச் சென்றுவிட முடியும்.

இந்திய இராணுவம் அவர்களை மீன் வலைபோல ஊடறுத்திருந்தது. தங்கள் தாக்குதல் அணிகளிலிருந்து முற்றிலுமாகச் சிதறித் தனித்திருந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல மக்கள் கைவிட்டுச் சென்ற ஊர்களையும், இடிந்த பெருங்கட்டிடங்களையும் மிகக் கவனமாகக் கடக்க வேண்டி இருந்தது. வலையின் முடிச்சுக்களில் இராணுவத்தை எதிர்கொள்ளமால் நழுவிச் செல்ல இருண்ட அறைகளிலும், மரங்களிலும், நிலத்தின் பொந்துகளிலும் சொற்ப உணவுகளுடனும் பகலில் மறைந்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் மறைந்திருக்கும் பாடசாலையின் பெண்கள் கழிவறைக்கு அருகிலிருந்த அறையினுள் கால் வைக்க இடமில்லாமல் பழைய விவசாயச் சாமான்கள் நிரம்பியிருந்தன. கைப்பிடி உடைந்து துருப்பிடித்த தெருவலை மண்வெட்டி, நெழிந்த பிக்கான், எரு மூடைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டப் பயற்றம் விதைகள், துருப்பிடித்த சிறிய கத்திகள், மரக்கலப்பையின் உடைந்த துண்டுகளுடன் கொஞ்சம் உரப்பைகளும், ஏராளம் சிலந்தி வலைகளுடனும் இருந்த அறையுள் சின்னவன் எரு மூட்டைகளின் மேல் துருப்பிடித்த கத்தியின் கூரைக் கைகளால் தடவியபடி படுத்திருந்தான். மொறீஸ் கிழக்கு மூலையில் உரப்பையை விரித்து சுவரோடு சாய்ந்து இருந்தான். சின்னத்தங்கம் யன்னல் அருகில் வைக்கோலை பரப்பி அதன் மேல் உரப்பையை விரித்துப் படுத்திருந்தான்.

மூன்று நாட்களின் முன்னர் சாப்பாட்டு முகாம் வந்து சேர்ந்த போது முகாம் முற்றிலுமாக எரிக்கப்பட்டிருந்தது. கல் கட்டிடங்கள் கரிப்பிடித்து எரிந்து முறிந்த தீராந்திகளுடன் இருந்தன. இலுப்பை மரம் கரிய கோடாகவே எஞ்சியிருந்தது. நிலம் விதைப்பு வயல் போல் உழப்பட்டிருந்தது. நிலத்திலிருந்து புகை மெல்லிய கோடாகவும் சுருள் சுருளாகவும் விரிந்து பரவியபடி இருந்தது. சில இடங்களில் இன்னமும் சின்ன வெடிச் சத்தத்துடன் கொப்பிளம் போல நிலம் வெடித்துப் பிளந்து கொண்டிருந்தது. கருகிய நிலத்தினுள் இண்டு இடுக்காகத் தேடியும் ஆயுதங்கள் ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

பின் வளவில் மயிர்களுடன் கருகிய முழு ஆட்டு மாமிசம் மட்டும் கிடைத்தது. சின்னவன் ஆட்டின் கால்களில் பிடித்து தொடைப் பக்கமாகப் பிய்த்து எடுத்தான். இளம் சூட்டுடன் ஊன் வழிய நன்றாக வெந்த இறைச்சியின் வாசனையுடன் ஆட்டின் மெச்சை வாசனையும், மயிர் கருகிய வாசனையும் கலந்து வந்தது. ஆட்டின் இரண்டு கொழுத்த தொடைகளையும் உரப்பையில் பொதிந்து எடுத்துக் கொண்டான். மூன்று நாட்களும் பசிக்கும் போது துருப்பிடித்த கத்தியால் ஊன் வழியும் வெந்த இறைச்சியை வெட்டி உண்டுவிட்டு பாடசாலைக் கிணற்றில் நீரை அள்ளி வயிறுமுட்டக் குடித்தார்கள்.

சின்னவனும் மொறீஸும் புறப்பட்டுச் சென்றதும் சின்னத்தங்கம் அறையில் தனித்திருந்தான். மீதமிருந்த ஒற்றைக் குண்டை கைகளில் ஏந்திப் பார்த்தபடி படுத்திருந்தான். குமரி இருட்டுப் பிரியாத அதிகாலையில் சிவந்த கண்களுடன் முழித்திருந்த சின்னத்தங்கம் யன்னலின் துருப்பிடித்த கம்பிகளில் காறி உமிழ்ந்தான். உலர்ந்த தொண்டையிலிருந்து சளியும் கோழையும் கலந்த எரு யன்னலைத் தாண்டி விழுந்தது. எருவின் தடித்த வாசனையை முகர்ந்து நாசியில் எருவே படிந்திருந்ததை நினைத்த போது கசப்பாக இருந்தது. இருளைக் கிழித்தபடி பின் பக்கமாக சீழ்க்கை ஒலி கேட்டது. யன்னல் இருளினுள் நன்றாகக் கூர்ந்து பார்த்தான். மொறீஸுடைய மெல்லிய சீழ்க்கையைக் கண்டுகொண்டதும் கசப்பு மறைந்து துடியாக உற்சாகம் பிறந்தது. மைதானத்தைச் சுற்றி அவனிடம் வந்து சேரக் குறைந்தது அய்ந்து நிமிடங்களாவது ஆகும். அதற்குள் அவன் தயாராகிவிட வேண்டும்.

மொழுகுத் திரியைக் கொழுத்தி தெருவலை மண்வெட்டியின் கைப்பிடியில் வைத்தான். மெல்லிய ஒளியில் வைக்கோலில் விரித்திருந்த உரப்பையின் ஓரமாக ராணுவச் சப்பாத்தை வைத்தான். நீரில் ஊறிக் குறண்டியிருந்த கால் விரல்களிலிருந்து இறுக்கமான சப்பாத்தைக் கழற்றியதும் காற்தசைகள் நெகிழ்ந்தன. குதிப்பக்கமாகக் கிழிந்திருந்த காலுறையை உரிந்து சப்பாத்துகளின் மேல் வைத்தான். முரட்டுத் துணியில் தைத்திருந்த வெளிறிய பச்சை ஜீன்சை உரிந்து மடித்து உரப்பையின் நடுவில் வைத்துவிட்டுத் தன் அழுக்குப் படிந்த நீல ரன்னிங்-ஷோட்ஸை எலாஸ்டிக்கில் இழுத்துச் சரி செய்து கொண்டான். அழுக்கு நிற ரீ-சேட்டை மடித்து ஜீன்ஸின் மேல் வைத்தான். பாரம் இல்லாத கைத்துவக்கை ரி-ஷேட்டின் மேல் வைத்துவிட்டு தலைமுடியைக் கலைத்து விட்டான்.

அய்ந்து நிமிடங்களின் பின்னர் அவர்கள் அறையினுள் நுழைந்த போது சின்னத்தங்கம், மெல்லிய ஒளியில் யன்னலின் சட்டத்தில் கொழுவியிருந்த உடைந்த கண்ணாடித் துண்டில் முகம் பார்த்தபடி நனைந்த மஞ்சள் வேரினை முகத்தில் தேய்த்தபடி இருந்தான். அவனது முகத்தில் மஞ்சள் நீர்ப்படலம் ஈரலிப்பாக இருந்தது. திரு வலது கால்களில் ஒட்டி உலர்ந்திருந்த செம்பாட்டு மண்ணைக் காலால் உருத்தினான்.

சின்னத்தங்கம் தனது தாடையைத் தடவியபடி சின்னவனுடனும், மொறீஸுடனும் தடித்த குரலில் கட்டளைகள் கொடுத்தான். முடிவில் ‘விடியப்போகிறது, நீங்கள் புறப்படுங்கள், சனத்தோடு சனமாக கரைந்து விடுங்கள். போகும்போது மறக்காமல் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டி திறப்பை யன்னலூடே எறிந்து விட்டுச் செல்லுங்கள்’. சின்னவனும், மொறீஸும் துண்டுக் கண்ணாடியை சலனமில்லாமல் பார்த்தார்கள். சின்னத்தங்கம் ‘ம்ம் வெளிக்கிடுங்கள்’ என்று உறுமலான குரலில் இரைந்தான். இருவரும் குண்டுகள் இல்லாத துவக்கை உரப்பையில் சுற்றித் தோள்களில் கட்டிக் கொண்டனர். உலர்ந்த விதைகளில் கொஞ்சத்தை பைகளில் நிரப்பி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். கதவு வெளிப்பகமாகப் பூட்டப்பட்டு திறப்பு உருவி எடுக்கப்படும் சத்தம் கேட்ட பின்னரே சின்னத்தங்கம் திருவின் பக்கமாகத் திரும்பினான். மெழுகுத் திரியின் இருண்ட ஒளியில் அவனுடைய முகம் மஞ்சளாக ஒளிர்ந்தது. உதடுகள் தடித்துக் கறுத்து இருந்தன. காதுகளின் ஓரங்களில் கற்றையான தடித்த கோரை முடிகள் அச்சம் தருவதாய் இருந்தன. பழுப்பு நிறக் கண்கள் சிவந்தும் புறாக்குஞ்சின் இரைப்பையாய் உப்பியுமிருந்தது.

3

கண் விழித்த போது ஓர்மை தவறி நிர்வாணமாய் இருந்தான். ஆழமாக மூச்சை இழுத்த போது நெஞ்சுத் தசைகள் வலித்தன. காற்றில் மூத்திர வாசனை வந்தது. மெல்லிய வலி தலையிலிருந்து உடல் முழுவதும் ஊர்ந்து சென்றது. பாதி உடைந்திருந்த மேற்கூரையில் கண்களைக் குவித்தபடி அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தான். துண்டு வானம் இள நீல நிறத்தில் தெளிவாக இருந்தது. செந்நிற அலகுக் கொக்குகள் இள நீலப் பின்னணியில் பறந்து சென்றன. மேற்சுவரில் வெண்கட்டிகளால் ஆண்குறிகளும், பெண்குறிகளும் அலங்கோலமாக கிறுக்கப்பட்டு அழுக்கும், தூசும் படிந்திருந்தன. அவனால் தன் உடலைக் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. தசைகள் முறுகிய நார்க்கயிறு போல இறுகிக் கிடந்தன. காய்ந்த குருதி வயிற்றில் கெட்டியாகிச் சொரசொரப்பாக உறைந்திருந்தது. கண்களைத் தாழ்த்தி சுற்றிப் பார்த்தான். கழிவறையின் உடைந்த மலக்குழியும், அழுகிய இறைச்சித் துண்டுகளுமே இருந்தன. சிதறிக் கிடக்கும் இறைச்சித் துண்டுகளில் கண்ணாடி இழைபோல மினுங்கும் சிறு புழுக்கள் உயிர்த்துடிப்புடன் உடலைக் குறுக்கி நெளிந்தன. புழுக்களின் உயிர்த்துடிப்பில் கண்களைக் குவித்து நழுவும் ஓர்மையை நினைவில் இருந்து எடுத்து வர முயன்றான். அவனது நினைவுகளில் இருண்ட போர்வையால் போர்த்தியது போன்று எல்லாம் இருண்டு இருந்தன. நினைவுகள் அழிக்கப்பட்டது போலவும், நினைவுகளே இல்லாத வெறுமையான அறையாகவும் அவனது ஓர்மை இருந்தது. அவனால் எதையும் புரிந்து கொள்ளவோ, கிரகித்து அறிந்து கொள்ளளோ முடியவில்லை. சிரமப்பட்டுக் கைகளை ஊன்றி எழுந்த போதும் நிலத்தில் வலிமையாகத் தன்னிரு கால்களை ஊன்றி நிற்பதற்கு அதிக நேரம் எடுத்தது. கழிவறையின் சுவரைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வெளியே வந்தான். பச்சைப் புதர்கள் மண்டிய உடைந்த கட்டிடங்கள் மட்டுமே அங்கிருந்தன. உடைந்த கட்டிடங்களின் நுனிகளில் மெல்லிய பசிய போர்வை போன்ற தளிர் இலைகள் சடைத்துப் படர்ந்திருந்தன.

அவனால் மிக மெதுவாகவே நடக்க முடிந்தது. முட்புதர்களினுள் வெறும் கால்களை கவனமாக வைத்த போது கால்களில் தைத்த முட்களின் வலிகளை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. நினைவுகளைப் போலவே வலியும் கறுப்புப் போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டது. இடையில் கழிவறைச் சுவரைப் பிடித்தபடி தன்னை நிறுத்தி மூச்சை ஆழமாக உள் இழுத்த போது பேய்த்தனமாக வலித்தது. மூச்சை இழுக்கும் போது நரம்புகளில் ஊர்ந்த வலியை அவனால் நன்றாக உணர முடிந்தது. வலிக்கும் இடத்தைச் சரியாகத் தொட்டு அடையாளப்படுத்த முடியவில்லை. அது அழிந்த நினைவுகளிலிருந்து எழும் வலியாகவும், ஆதி உயிர் மூச்சின் வலியாகவும் அவனிடம் எஞ்சியிருந்தது.

புதர் மூடிய கட்டிடங்களைச் சலித்துத் தேடியதில் அறையில் கொஞ்சம் உடுப்புக்களும் ஒரு துப்பாக்கியும் கிடைத்தது. கிடைத்த தொழதொழப்பான தடித்த பச்சை ஜீன்சை அணிந்து கொள்ள அவன் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. அழுக்கும் வியர்வையுமாயிருந்த ரி-ஷேட் அவனுடலோடு ஒட்டி அளவானதாக இருந்தது. தடித்த காலுறைகளையும், குதியுயர்ந்த, கால்களை இறுக்கும் இராணுவச் சப்பாத்தையும் அணிந்த போது அவனால் இயல்பாய் எழுந்து நிற்க முடிந்தது. மெல்லிய பச்சை இரும்புக் கவசமாக அவனுடலை பச்சை உடைகள் பாதுகாப்பாய் போர்த்தியிருந்தன. துவக்கை எடுத்து இடுப்பிற் செருகிக் கொண்ட பின் இலகுவாக நேராக நிமிர்ந்து நடக்கவும் முடிந்தது.

புதர்ப் பற்றைகள் மூடியிருந்த கட்டிடங்களை விலத்தி கல் வீதிக்கு வந்த போது அங்கே கால் வைக்கவே இடமில்லாமல் பழைய ’லீகல்’ அளவுக் காகிதங்களும் பிறப்புச் சான்றிதழ்களும் சுக்கலாகக் கிழித்து வீசப்பட்டிருந்தன. சோகையான காற்றிலும் வேலிகளிலும் கிழித்து வீசப்பட்டிருந்த காகிதக் குப்பைகள் எழுத்துகளாகவும், மொழியாகவும் அலைந்தபடி இருந்தன. அவனால் அந்த எழுத்துகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறு சிறு சுக்கலாக மீதமிருந்த காகிதங்களில் நெளியான கோடுகளாகவே தன் நினைவுகளில் எழுத்துகளைப் பதிய முடிந்தது. இன்னும் சில அடிகள் காகிதக் குப்பையினுள் எடுத்து வைத்த போது வலி நரம்புகளினூடே நெஞ்சில் பரவுவது அவன் ஓர்மையில் துலங்கி வந்தது. அவன் இடது கைகயால் நெஞ்சைப் பிடித்த போது பச்சை ரிச்சேட்டில் இரத்தம் ஊறி கைகளில் சிறு ஓடையாகி வழிந்தது. அழுக்குப் ரிசேட்டை தூக்கிய போது நெஞ்சிலிருந்து இரத்தம் துடித்துப் பாய்ந்தோடியது. கைகளால் நெஞ்சை இன்னும் அழுத்தமாக அழுத்திய போது இதயத்தின் மேலாக ஒரு துப்பாக்கி குண்டு வழுக்கிச் செல்லக் கூடிய சிறு வட்டத் துளை இருப்பதை அவன் விரல்கள் கண்டன. விரல்களில் வழிந்த சிவந்த இரத்தம் சிறு ஓடையாகிப் பச்சை ஜீன்சை நனைத்து, குதி உயர்ந்த முரட்டு ராணுவச் சப்பாத்துகளில் ஊறி, நிரம்பி அவன் தன் ஓர்மையில் நெளி உருவங்களாகப் பத்திரப்படுத்தியிருந்த மொழியின் மீது சிவந்த திரவமாகப் படர்ந்தது.