சுவை

0 comment

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரிலிருந்து நானூற்றைம்பது கிலோ மீற்றர் தொலைவில் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கூனபரா நகரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள திறந்தவெளிச் சிறையின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள வோகன் குடியிருப்பு தொகுதியிலுள்ள 37 ஆவது இலக்க சிறிய அறையில் செய்யாத குற்றத்துக்காக நான் அடைக்கப்பட்டிருந்தேன்.

அது எனது முதலாவது இரவு. தூக்கம் வரவில்லை. பத்து மணியளவில் கண்ணயர்ந்திருப்பேன் என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரத்திலேயே திடுக்கிட்டு எழும்பிப் பார்க்கும் போது அவ்வளவு நேரமும் ஏன் தூங்கினேன் என்பதையும்விட எப்படி என்னால் தூங்க முடிந்தது என்பதுதான் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. வெளியில் மெதுவான தூறலுடன் கூடிய மழை துமித்துக் கொண்டிருந்தது. கூரையில் அது எழுப்பிக் கொண்டிருந்த மெல்லிய சத்தத்தை வைத்துத் தான் அந்த வேகத்தைக் கூட ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. வேறு வழியிருக்கவில்லை. எனக்குப் பக்கமாக கட்டிலோடிருந்த ஜன்னல் கண்ணாடி மிகவும் தடித்தது. வெளியில் எரிந்து கொண்டிருக்கின்ற மின்குழிழ் ஒன்றின் வெளிச்சம் மிகவும் கசங்கிய நிலையில் உள்ளே விழுந்து கொண்டிருந்தது. அவ்வளவுக்கு தடித்த கண்ணாடி. திறக்கவே முடியாது. அறைக்கதவு அதைவிட இறுக்கமாக மூடிக் கிடக்கிறது.

இந்த மழையை யாராவது உள்ளே அழைத்து வர முடியாதா? உள்மனது சாதுவாக ஊஞ்சலாடிப் பார்க்கிறது.

மழை சீரான வேகத்தில் பெய்து கொண்டேயிருந்தது.

கண்களை விழித்துக் கொண்டாலும் கட்டிலில் இருந்து எழுவதற்கோ சற்று அசைந்து கொள்வதற்கோ அல்லது தலையணைக்கு பக்கத்தில் நேற்றிரவு தூங்கும் வரை வாசித்து விட்டு வைத்த “புளியமரத்தின் கதை” மீதியைப் படிப்பதற்கோ கூட மனம் உந்தவில்லை. நான் அசைந்தால் அந்தச் சத்தம்; எனக்குக் கீழே தூங்கிக் கொண்டிருப்பவனை நிச்சயம் தொந்தரவு செய்யும்.

இது இருவர் மாத்திரம் தூங்கக்கூடிய – ஒரே இணைப்பில் தொடுக்கப்பட்டிருக்கும் – ஒன்றின் மீது ஒன்றாக அமைக்கப்பட்டுள்ள – தனித்தனிக் கட்டில். நேற்று மதியம் காவலர்கள் இருவர் இந்த அறையில் என்னைக் கூட்டிவந்து விட்டுச் செல்லும்போது இப்போது கீழே தூங்கிக் கொண்டிருப்பவன் தான் என்னை மேல் கட்டிலை உபயோகப்படுத்தும்படி கூறியிருந்தான்.

அவனது தலைமுடி இயல்பாகவே சுருண்டு இருந்தது. தேகம் முழுவதும் கருமை. நிச்சயம் கலப்பற்ற ஆப்பிரிக்கன். உடம்போடு ஒட்டியிருந்த ரீசேர்ட் விஸ்தீரணமான அவனது நெஞ்சுத் தசைகளை வெளிக்கிளப்பிக் கிளப்பி காட்டிக் கொண்டிருந்தது. தனியாக இங்கிருக்கும் பலரில் ஒருவனாக – கடின உழைப்பாளியாக – தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளும் கை நரம்புகள் புடைத்துப்போய் வெளியில் தெரிந்தன.

சிறையிலிருப்பவர்களின் முகத்தில் குற்ற உணர்ச்சியை தேடுவதெல்லாம் சுத்த அபத்தம். அவ்வளவு கொடூரமானவனாக எந்த ரேகையும் அவனில் தென்படவில்லை. முதன் முதலாக அவனைப் பார்த்த போது முகத்தை முக்கால்வாசி கீழே போட்டவாறு லேசாகச் சிரித்தான். இல்லை, சிரிக்க முயற்சித்தான்.

இப்போது எனக்குள் இன்னொரு யோசனை. சிலவேளை நல்லவனாக இருப்பானோ? பிறகு என்னை நினைத்து உள்ளே சிரித்துக் கொண்டேன். சிறையிலிருப்பவன் எவன் நல்லவன். ச்சீ என்னைப் போல சிலவேளை நல்லவனாக – அப்பாவியாக – சூழ்நிலைக் கைதியாக – உள்ளே வந்திருக்கக் கூடுமல்லவா?

அவன்தான் முதலில் ஆரம்பித்தான்.

“எவ்வளவு காலம்?”

“மூன்று மாதங்கள்”

சொன்ன பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை அல்லது அவ்வளவு நாட்களுக்கு நான் அவனோடு அந்த அறையில் தங்கப் போகிறேன் என்ற அசௌகரியமாகக் கூட உணர்ந்திருக்கலாம். இரண்டில் ஒன்று தான்.

வாசலிலேயே எனது பொதியை வைத்துவிட்டு காவலர்கள் சென்றுவிட, காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தேன். எனக்கு முன்னமே அவன் உள்ளே சென்று எனக்காக காத்து நின்றவன், ஒரு சிறிய விருந்தோம்பலுக்காக தன்னைத் தயார்படுத்தியவன் போல வெறுமையான மேல் கட்டிலில் விரித்துப் போடப்பட்டிருந்த ஓரிரு ஆடைகைள எடுத்து கீழுள்ள தனது படுக்கையில் போட்டுக் கொண்டான்.

அந்த அறையில் எதையும் காண்பித்துத் தான் தெரிய வேண்டும் என்ற தேவையெதுவும் இருக்கவில்லை. எல்லாம் அந்தந்த இடங்களில் தங்களுக்குரிய முக்கியத்துவத்தை காண்பித்துக் கொண்டிருந்தன.

அறையின் ஒரு மூலையில் கேத்தலுடன் சில குவளைகள் வரிசையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அடுத்த மூலையில், உடைகளை மடித்து வைக்கும் இடம். சிறிய மர அலமாரி. இன்னொரு மூலையிலிருந்த மேசையில் பழங்கள் கூடையில் வைக்கப்பட்டிருந்தன. அதிலொரு மேசைக் கடிகாரம். தொடையளவு உயரத்தில் காணப்பட்ட சிறிய பிரிட்ஜ் அந்த அறையை சற்று வசதியான இடமாக காண்பித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிலும் மிக முக்கியமாக அந்த அறை சுத்தமாக இருந்தது. அவனது காலுறைகள் கூட மடித்து சப்பாத்துக்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த விதம் அறையின் சுத்தத்தை மாத்திரமல்லாமல் அவனது சுத்தம் பத்தமான குணத்தையும் காண்பித்தது. என்னிடம் அதை கோரி நிற்பதும் புரிந்தது. மொத்தத்தில் அந்த அறைக்கான எந்த மேலதிக விளக்கங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை.

அடுத்து என்ன பேசலாம் என்று யோசித்தவாறு மேல் சட்டையைக் கழற்றிய போது, அவன் மேசையிலிருந்த தோடம்பழமொன்றை எடுத்து அதன் தோலை நேர்த்தியாக சீவிக் கொண்டிருந்தான். வளையம் வளையமாக கத்தியின் வழியே நீண்டு கொண்டு சென்ற தோலை குப்பைத் தொட்டியில் போட்டான். பழத்தை அழகாகப் பிரித்து இரண்டு சுளைகளை தனியாக எடுத்தான்.

அடுத்து அதை சாப்பிடுமாறு என்னைக் கேட்கப் போகிறான் என்பது எனக்குப் புரிந்தது. எடுத்த எடுப்பில் அதை வாங்கி சாப்பிடுவதன் மூலம் அவனுடனான நட்பை ஆரம்பித்துக் கொள்ளலாமா?

இது தொடர்பான முடிவை நீராடிக் கொண்டே எடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் குளியலறையை நோக்கிச் சென்றேன். கதவில்லை. மறைப்புக்கு திரைச்சீலை மாத்திரம் தான். கடவுளுக்கும் குற்றவாளிகளுக்கும் மறைப்புக்கு திரைச்சீலைகளே போதுமென்று இந்த சமூகம் முடிவெடுக்கிறது போல. மனிதர்களுக்குத் தான் கதவுகள் தேவைப்படுகின்றன. இழுத்துவிட்டு உள்ளே சென்று கடவுளின் குழந்தையானேன்.

சிறைநீர் தலையில் ஆசீர்வாதம் செய்து கொண்டு உடலில் வழிந்தோடியது. ஆசுவாசமாக இருந்தது. இன்னொரு வகையில் சொல்வதானால், வந்து விழுந்த துளிகளின் வேகம் இப்போது தான் நீராடுவதைப் போன்ற உணர்வைத் தந்தது.

இங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு நான்கு நாட்களாக அடைத்து வைத்திருந்த மற்றச்சிறையில் நீராடுவதற்கான நேரம் மூன்று நிமிடங்களாக மாத்திரம் மட்டுப்படுத்தபட்டிருந்தது. அந்த நூற்றியெண்பது நொடிகளுக்குள் சுழன்றடித்து நீராடி முடித்து விடுவதில்தான் குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரது திறமையும் தங்கியிருப்பதாக சிறைச்சாலை நிர்வாகம் நம்புகிறது. வந்து விழுகின்ற துவாலைகளின் வேகமும் கூட மிகவும் நிதானமாகவே இருக்கும். குழந்தைகள் சிறுநீர் கழிப்பது போல அந்தத் துவாலைகளின் வேகம் மிகவும் களைத்துப் போயிருக்கும். அந்தத் துவாலைகள் உடலில் விழுவதை உணரும் போது நாங்களும் குழந்தைகளாகவே மாறிவிட்டது போலிருக்கும். ஆனால், அதைவிட கோபமாக இருக்கும். நூற்றி எழுபதாவது நொடியிலிருந்து இரண்டு தடவைகள் நின்று நின்று அந்த நீர்த்துவாலையின் வேகம் குறையும். அதுவே எமது நீராடலை நிறைவு செய்ய வேண்டிய அலாரமாகவிருக்கும். மூன்றாவது நிறுத்தம் நிரந்தரமாகி விடும். துவாயில் கையை வைத்துக் கொண்டு வெளியேற வேண்டியது தான்.

ஆனால், இந்தக் குளியலறை பரவாயில்லை. குழந்தை கொஞ்சம் வயதுக்கு வந்துவிட்டதைப் போலிருந்தது. ஆசை தீர நீண்ட நேரம் நீராடக் கூடியவாறு தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. வீட்டில் குளித்த பின்னர் முதல் தடவையாக நிறைவானதொரு குளியலை திருப்தி கொண்ட உணர்வோடு அந்த அறையில் எனது முதலாவது செயற்பாடு இனிதே நிறைவடைந்திருந்தது.

குளியலறையிலிருந்து வெளியில் வந்து பார்த்த போது, சிறிய தட்டொன்றில் இரண்டு துண்டு தோடம்பழச் சுளைகளை வைத்து விட்டு மிகுதியை தான் எடுத்துக் கொண்டு அவன் அறையை விட்டு வெளியேறிருந்தான் என்பது தெரிந்தது. அந்த இரண்டு சுளைகளும் எனக்குத்தானா அல்லது தனக்காக சேமித்து வைத்துவிட்டுச் சென்றவையா என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அவற்றை அவன் எனக்காக வெட்டி வைத்துவிட்டுச் சென்றிருந்தால் திரும்பி வந்து பார்க்கும்போது அதை நான் சாப்பிடாததை கண்டு என்ன நினைப்பான்? எனக்குத் திமிர் என்று எண்ணிவிட்டால்?

இனிக்கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் பேசுவது என்று முடிவுக்கு வந்துவிடலாம் போலிருந்தது.

வெளியில் உள்ளவர்கள் மத்தியில் தான் ஏற்றத்தாழ்வெல்லாம். மயானம், சிறையெல்லாம் சமத்துவ பூமி. இங்கு யார் யாரைப் பார்த்து பயப்படவேணும். மனம் தத்துவம் சொன்னது.

அன்று பிற்பகலிலோ அல்லது அதற்குப்பிறகு என்றுதான் நினைக்கிறேன். நிச்சயமாக இரவுணவுக்குப் போவதற்கு முதல்தான் அறைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கதிரையிலிருந்தவாறு அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். தேனீரை இரண்டாவது தடவையாக உறிஞ்சி எடுத்துக் கொண்டதொரு சிறிய இடைவெளியில் தானொரு கொலைக் குற்றவாளி என்று அவன் கூறினான்.

மலைகளின் முகடுகளில் அமைந்திருந்த அந்த சிறைச்சாலையின் மேற்கிலிருந்து வீசுகின்ற பின்னேர பனிக்காற்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குளிரத் தொடங்கியிருந்தது.

“உள்ளே போகலாம்”  என்றான்.

அறையில் இருவரும் சேர்ந்திருந்து தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்தோம். தலைப்புச் செய்திகள் முடிவடைந்த பின்னர், ஆஸ்திரேலியாவின் எங்கோ ஒரு இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பிலான செய்தி போனது. அந்தச் செய்தியை அவன் எப்படிப் பார்க்கிறான் என்று அவனுக்குத் தெரியாமல் அவனைப் பார்த்தேன். எந்த மாற்றமும் தெரியவில்லை.

இரவுணவுக்குப் போய் வந்து பேசிக் கொண்டிருக்கும் போதுதான் நடந்த சம்பவங்களை விலாவாரியாக கேட்கத் தொடங்கினேன். அவன் தனது போதைப் பொருள் வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து தனது சுயசரிதையை சொல்லத் தொடங்கியிருந்தான்.

தன்னைத் தொடர்ந்தும் அலுப்படித்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளையின போதைப் பொருள் கடத்தல்காரனோடு ஒருநாளிரவு வாக்குவாதம் வந்தது என்று சொன்னான். அன்று தனது குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த போது பழைய கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தனக்குத் தொந்தரவு தந்து கொண்டிருந்த காரணத்தினால் சமையலறை லாச்சியிலிருந்த மரக்கறி வெட்டும் கத்தியை எடுத்து அவனது இடப்பக்க நெஞ்சில் செருகி விட்டதாகச் சொன்னான்.

ஒரு குற்றத்தை இவ்வளவு வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் யாரும் என்னிடம் சொல்லிக் கேள்விப்பட்டதே இல்லை. அவன் சொல்லி முடித்த போது எனக்குள் என்னை நானே கொலை செய்தது போலிருந்தது. வாழ்வைக் கொண்டாடுவது என்பது இதுதானா என்று மனம் அப்போது தான் புதிதாக ஒரு கேள்வியைக் கேட்பது போலிருந்தது. மனிதன் தனது வெற்றிகளையும் சாதனைகளையும் மாத்திரமல்லாமல் குற்றங்களையும் அதிலிருந்து மீண்டு கொள்வதற்கான முயற்சிகளையும் கூட நிறைவோடு ஏற்றுக்கொள்வது தான் முழுமையான கொண்டாட்டமா?

பிறகு வைத்தியசாலை, பொலீஸ், நீதிமன்றம் என்று தான் போய் வந்த பாவப் பயணங்களைப் பற்றி வரிசையாக சொல்லிக் கொண்டு போனான்.

அப்போது எனக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான். அதாவது, அப்படியொரு உண்மைச் சம்பவத்தை – சம்பந்தப்பட்ட தரப்பின் முன்னாலிருந்து – கேட்பதற்குரிய உயர்ந்த மனத்திடம் எனக்குள் வந்துவிட்டதை எண்ணி நிறைவடைந்து கொண்டேன்.

அதன் பிறகு தனது காதலைப் பற்றிச் சொன்னான். தனது மனைவியைப் பற்றிச் சொன்னான். மகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தான். தனது முன்னாள் காதலி ஒருத்தி தற்போது கம்போடியாவிலிருப்பதாகவும் அவள் இன்னமும் தன் மீது அளவுகடந்து அன்பு கொண்டிருப்பதாகவும் போதைப் பொருள் வியாபாரத்துக்கு இடைஞ்சலாக இருந்தாள் என்று தான் கழற்றி விட்டதாகவும் சொன்னான். அவள் கடைசியாக பிரியும்போது துயரம் தாங்க முடியாமல் தனது கையை வெட்டிக் கொண்டாள் என்றும் அந்த இரத்தம் அன்று தனக்கெதுவும் செய்யவில்லை என்றும் தான் கொலை செய்ததிலிருந்து தான் கத்தி – இரத்தம் என்றாலே இப்போது பதற்றமடைந்து விடுவதாகவும் சொன்னான்.

தன்னுடைய இன்னொரு காதலி வேறொருவனை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதாகச் சொல்லிவிட்டு கன்னத்தின் ஒற்றைச் சதையை சாதுவாக ஒதுக்கி ஒரு சிரிப்பை உதிர்த்தான். திருமணமாகி அவளுக்கொரு ஒரு மகனும் இரண்டு மகள்மாரும் இருப்பதாகச் சொன்னான். அவள் இந்நாட்டின் பொலீஸ்காரன் ஒருவனைத் தான் திருமணம் செய்திருப்பதாகச் சொல்லி விட்டு, அவளது முதலாவது மகனுக்கு அப்படியே தனது முகச்சாயல் என்றான்.

பிறகு என்னைப் பார்த்தான். நான் அறையின் வெளியில் பார்த்தேன்.

அவனோடு ஒரே ஒரு நாளிருந்து பேசியது, பெரும் யுகமாக இந்த இராத்திரியில் எனக்கு முன்பாக எழுந்து நின்று அவனை என்னுள் உரையாடிக் கொண்டிருந்தது.

தன்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே சென்ற அவன் எனக்கு இப்போது மிகவும் நெருக்கமாகத் தெரியத் தொடங்கினான். அதனை என்னால் பரிபூரணமாக உணர முடிந்தது. இருந்தாலும் அவனுக்கும் எனக்கும் இடையில் இந்த அறையில் ஏதோவொன்று தடுத்துக் கொண்டிருப்பதாக மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அவனை என்னால் முழுயைமாக உணர்வதற்கு அது தடையாக இருந்தது. அவனது கண்களை பார்த்துப் பேசுவதற்குக் கூட அது தடுத்தது.

படுப்பதற்கு முன்னர்கூட தான் துவைத்து வைத்திருந்த தலையணை உறையை என்னிடம் தந்து நிம்மதியாக உறங்கும்படி கூறினான். இரவுணவு சாப்பிடும் போது தான் எடுத்து வந்திருந்த கேக் துண்டொன்றை எனக்காக வெட்டித் தந்தான். எனக்காகவே இந்த அறையில் இவ்வளவு காலமும் காத்திருந்தவன் போல எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறான். இரவு குளித்துவிட்டு வந்து எனது படுக்கையில் அலங்கோலமாக போட்ட துவாயை எடுத்துச் சென்று அறையின் முன்னாலிருந்த கொடியில் நேர்த்தியாக காயப்போட்டிருந்தான்.

பின்னர், பெரிய குவளையொன்றெடுத்து அதில் பால் வார்த்து சூடாக்கித் தந்தான்.

ஆனால், நித்திரைக்குப் போகும் போதிருந்த சிறு அமைதி இப்போது எனது மனதிலிருந்து முற்றாக நீங்கியிருந்தது. இந்த நடுநிசியில் அவன் மீண்டுமொரு கொலைகாரனாக தெரியத் தொடங்கினான். கீழ் கட்டிலில் அவன் தூங்க நான் மேலுள்ள படுக்கையில் கிடந்தது, நீண்ட பெரும் அடுப்பொன்றின் மீது படுத்திருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

நேரம் போகப் போக வெளியில் பெய்து கொண்டிருந்த மழை எனக்குப் பெரும் இரைச்சலாகவும் அந்நியமானதொரு உணர்வையும் தருவதாகயிருந்தது. ஏன் என்று புரியவில்லை.

தீடீரென்று வெளியே மின்னலொன்று வெட்டியது. எரிந்து கொண்டிருந்த மின்குமிழின் வெளிச்சத்திலும் பார்க்கப் பிரகாசமானதொரு வெளிச்சம் வெளியில் வீழ்ந்து தெறித்தது. இப்போது மழை இன்னமும் வேகமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. கூரையின் மீது விழும் சத்தம் ஆக்ரோஷமாகவிருந்தது. வானம் தனது கூந்தலை மலை முகடுகளில் அடித்து துவைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.

அப்போது, கட்டிலில் படுத்திருந்தவாறே மிக மெதுவாக உடலை சரித்துப் பார்த்தபோது, மூலை மேசையிலிருந்த கடிகாரம் ‘ஒரு மணி நாற்பது நிமிடங்கள்’ – என்று காட்டியது. அந்தக் கடிகாரத்தின் வெளிச்சத்தில் அருகிலிருந்த தட்டில் இரண்டு தோடம்பழச்சுளைகள் வைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.

இது மாலையில் வெட்டிய தோடம்பழத்துண்டுகள் அல்லவா? அவற்றை நான் உண்ணவில்லை என்பது இப்போது தான் புரிந்தது. அதை அவன் பொருட்படுத்தவே இல்லையா அல்லது அவற்றை உண்டுவிட்டு, புதிதாக எனக்கு இரண்டு சுளைகளை வெட்டி வைத்திருக்கிறானா?

இப்போது எனது தலைக்குள் சுற்றிக் கொண்டிருந்த குழப்பங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருந்தது. என்னுள் அகால அன்பை ஊற்றுகின்ற ஒருவனின் மனம் புரியாத அரவணைப்பையும் அதனை நிராகரிப்பதற்கு வழிதேடுகின்ற போது என்னுள் ஓடுகின்ற அலைக்கழிவையும் உணரும் போது, எழுந்து சென்று கொஞ்சத் தூரம் ஓடிவிட்டு வந்து படுக்கலாமா என்று தோன்றியது. உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று குத்துச்சண்டைப் பையை நானாக நினைத்துக் கொண்டு நானே ஓங்கிக் குத்தலாமா என்றும் மனமுந்தியது.

பிறகு நித்திரையாகி விட்டேன்.

மீண்டும் எழுந்து அந்தத் தோடம்பழச் சுளைகளின் நினைவோடு முன்பு போலவே சற்று உடலைச் சரித்து கீழே பார்த்த போது தான் அவளை முதன் முதலாகக் கண்டேன்.

கண்கள் மூடியிருந்தன. அவளது உலர்ந்த உதடுகள் மேசையிலிருந்த கடிகார வெளிச்சத்தில் அப்படியே தெரிந்தன. அவை ஒளிபட்டுத்தெறிக்க மறுத்த கண்ணாடி போல அசாதாரணமாக உலர்ந்து போயிருந்தன. தரையில் கிடந்த அவள் மீது அவன் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் உன்னதத்தின் உச்சத்தை அவள் வாய் திறந்து பருகிக் கொண்டிருந்தாள். அவன் அவளது இடது கழுத்துக்குள் தலை புதைத்தபடிக் கிடந்தான். அவளது கைகள் அவனது முதுகை வளைத்திருந்தன. அப்போது ஏதோ ஒரு உள்ளுணர்வோடு அவள் கண்களை மெல்லிதாக திறந்தவள், எனது கண்களை நேராக பார்த்தாள். நான் திடுக்குற்றேன். ஆனால், அவ்வளவு எளிதாக அவளின் பார்வைக்கு அஞ்சுவதில்லை என்ற உறுதியோடு அவளது கண்களை வெட்டாமல் பார்த்தேன்.

இவள் இந்த சிறைவாசலில் நான் கொண்டுவந்து இறக்கப்படும் போது எனது விலங்குகளை அவிழ்த்து வாகனத்திலிருந்து இறக்கி அழைத்து வந்த காவலதிகாரிக்கு அருகில் வந்து கொண்டிருந்தவளே தான். அது அவளது கண்களின் வழியாக தெரியத் தொடங்கியது.

அவள் தனது உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்து என்னை உற்றுப் பார்த்தாள். அவ்வாறு தன்னை எனக்கு ஒப்புவிப்பதில் எனக்கு ஏதோ ஒரு திருப்தியைத் தருவதாக அவள் எண்ணுவதாக அந்தப் பார்வையிருந்தது. அதில் ஒரு உண்மை கசிந்து கிடப்பதாக எனக்குள்ளும் ஒரு உணர்வு ஒப்புக்கொண்டது.

இதயம் வேகமாக துடித்தபடியிருந்தது.

இப்போது அவள் தனது ஒற்றைக் கண்ணை மூடியபடி என்னை பார்த்தாள். அது குறும்பாக எனக்கு தெரியத் தொடங்கியதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். மெலிதாகப் புன்னகைத்தாள். இரு கண்களையும் அகலத் திறந்துவிட்டு மீண்டும் ஒற்றை விழியை மூடியபடி சிரித்தாள். பின்பு விடாமல் ஒற்றைக் கண்ணாலேயே பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஒரு சில நொடிகளில் கடிகார வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் விளையாடுகின்ற விளையாட்டு போலானது. இவ்வாறு எங்கள் மூன்று கண்களும் விளையாடியபடியிருந்த ஒரு கணத்தில் – என் பார்வையால் அவளை விழுங்கிவிட முடியாத ஒரு நொடியில் – எனது புன்னகையொன்று தவறி அவள் மீது சத்தமின்றி விழுந்தது. அப்போது, அவளது இடக்கழுத்துக்குள்ளிருந்து அவனது தலை கொஞ்சம் பிரிந்து அவளது முகத்தை நோக்கி வந்தது. நான் சத்தமின்றி மீண்டும் படுக்கையில் மெதுவாக சரிந்து திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

இப்போது எனக்கு உண்மையிலேயே அந்த அறையில் மூவர் இருப்பது உறுதியாகிப் போனது. அதை விடவும், அந்த ஒரு கணத்தில் இது சிறைச்சாலை என்ற உணர்வும் தூரமாக கலைந்து போனது.

சிறிது நேரத்தில், எதுவுமே தெரிந்து கொள்ளாதவன் போலவும் தெரிந்து கொள்ள விரும்பாதவன் போலவும் நான் கண்களை மூடிக்கிடக்க, என்னைவிட அதிக நடிப்போடு தனது சீருடைகளை மிக மெதுவாக அணிந்து கொண்டு பதுங்கிப் பதுங்கி அவள் அறையை விட்டு வெளியேறும் சத்தம் கேட்டது.

அதற்குப் பிறகு எனக்கு நித்திரையே வரவில்லை.

கீழிருந்து மெல்லிய குறட்டையொலி வரத்தொடங்கியிருந்தது. மீண்டும் மெதுவாக உடலைச் சரித்து மூலை மேசையை பார்த்த போது கடிகார முள் நான்கரை மணியைக் காட்டியது. இப்போது அதன் வெளிச்சத்தில் தெரிந்த அந்தத் தட்டில் தோடம்பழச் சுளைகளை காணவில்லை.

அடுத்த நாள், எனக்கு அந்தச் சிறை புதியதொரு அனுபவத்தை கொடுக்கும் இடமாகத் தெரிந்தது. எனது அறைக்குள் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களுக்கு நான் சாட்சியாகி விட்ட பெரிய அனுபவம் சிறிய பயத்தையும் கொடுத்தது. அன்று முழுவதும் அவள் அந்தச் சிறை வளாகத்தில் எங்காவது தெரிகிறாளா என்று தேடித் திரிந்து பார்த்தேன். இரவுதான் வேலைக்கு வருவாள் என்ற புரிந்துணர்வோடு மதியம் அறைக்கு வந்தபோது, அவன் எதுவுமே செய்து கொள்ளாதவன் போல சிறைச்சாலையின் புதிய அனுபவங்களை ஓரிரு கேள்விகளில் கேட்டான். நானும் அவனைப் போலவே அப்பாவியாக பதில் சொல்லிக் கொண்டேன்.

இப்போது இந்த இரண்டு வாரச்சிறை எனக்குப் பல புதுப்புது அனுபவங்களைச் சொல்லித் தரத் தொடங்கியிருந்தது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்யத் தொடங்கியிருந்தது.

அவளை இப்போதெல்லாம் பகல் வேளைகளிலும் அடிக்கடி கண்டு உற்றுப் பார்க்கத் தொடங்கினேன். அவளது உடல் அவளின் அனைத்து அங்கங்களுக்கும் பாகுபாடில்லாத கொள்ளளவுகளை இயற்கையாகவே பகிர்ந்தளித்திருந்தது. வேகமாக நடந்து செல்லும்போது அவள் சுருக்கென்று திரும்புகையில் அவளது கழுத்தின் கீழ் கவனமின்றி விடப்பட்டிருந்த சில முடிக்கற்றைகள் கழுத்தின் இடதுபுறமிருந்த ஒரு மச்சத்தை மறைத்துக் கொண்டிருப்பது கூட இப்போது எனக்கு தெரியத் தொடங்கியது. தனக்கு ஒப்பனையே தேவையில்லை என்ற திமிரும்கூட அவளின் அழகுக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தது. அசகாயமான உயரமும் பாகைமானி வைத்துப் பார்த்தால்கூட வளைவு கண்டுபிடிக்க முடியாத அவளது நிமிர்ந்த நடையும் அவளை இந்தத் தொழிலுக்குத் தேர்ந்தெடுத்த மேலதிகாரிக்கு உடனடியாகவே முடிவெடுப்பதற்கு நிச்சயம் உதவியாக இருந்திருக்கும். எப்போதும் கைத் தொலைபேசிகளை தங்களது பின் பொக்கெட்டில் வைத்து கண்களை அது நோக்கி கவர்ந்திழுக்கும் வெளிப்பெண்களோடு ஒப்பிடும் போது, இவளது நடை அதற்கான தேவையெதுவும் இல்லாமலேயே சமூகத்துக்கு ஆபத்தானதாக அமைந்திருந்தது.

கடிகார வெளிச்சம் காண்பிக்கும் அழகைப் பகலோடு ஒப்பிடுவதும் அதற்காக அடிக்கடி குளியலறைப் பக்கம் சென்று வருவதும் அடுத்தடுத்த நாட்களில் எனக்கு மிகுந்த களைப்பு தரும் அன்றாட கடமைகளில் ஒன்றாக மாறிப்போனது.

ஆனால், அவளோ என்னை தெரியாதவள் போலவே கடந்து செல்வாள். அவளை அருகில் கடந்து செல்கின்ற போதும் கூட அவளது முகத்தில் எந்த மாற்றத்தையும் காண முடிவதில்லை. அதுபோல என்னுடன் அறையிலிருப்பவன், பகலில் ஆங்காங்கே அவளைப் பார்க்கின்ற தருணங்களையும் தவறாமல் அவதானித்தேன். அப்போதும்கூட அவள் எந்த பிரக்ஞையுமற்றவளாக திரிவாள். பகல்வேளைகளில் கைதிகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக மூன்று வேளை மணியடிக்கும். அறைகளின் வெளியே வந்து கைதிகள் தங்கள் அடையாள அட்டைகளுடன் நிற்க வேண்டும். இரண்டு காவலாளிகள் கையில் இடாப்போடு ஒவ்வொரு அறையின் முன்பாகவும் வந்து நின்று முகத்தைப் பார்த்து இடாப்பில் சரி போடுவார்கள். அப்போது தான் அவளது கண்களை பகலில் நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிட்டும். சுருக்கென்று எறிந்த தன் பார்வை என்னில் பட்டுத்தெறிக்கும் போது அதனை மீண்டும் தன் கண்களாலேயே ஏந்தியபடி திரும்பிச் செல்வாள். இடப்பக்க மச்சத்தை யாரும் காணாமல் நான் மட்டும் ரசித்துவிட்ட திருப்தியோடு கீழே பார்ப்பேன்.

போகப் போக அவளின் ஊடாக இந்தச் சிறையை இரவும் பகலும் கண்டு களிப்பது என்பது விசித்திரமானதொரு அனுபவமானது.

இந்தச் சிறையின் எல்லா சுவைகளும் இப்போது பழகிப் போயின. அந்த தோடம்பழச் சுளைகள் போல. தோடம்பழச் சுளைகளுக்காக அந்தச் சிறையின் அத்தனை கைதிகளும் தங்களுக்குள் தவம் கிடப்பார்கள். அந்தச் சுளையும் அதன் சுவையும் இந்தச் சிறையை எவ்வளவு அடர்த்தியாக ஆக்கிரமித்திருக்கிறது என்பதை எண்ணி அவ்வப்போது ஆச்சரியமடைவேன். அந்தச் சுளைகள் மாத்திரமில்லையென்றால் இங்கு அனைவரும் பிணம்தான்.

இப்போதெல்லாம் கருமேகம் திரண்டு கூரையே இடிந்து விழுகின்றளவுக்கு அடைமழை பொழிந்தாலும் அது அவளது உதடுகளை விட பெரிதாக ஈரலிப்பெதையும் எனக்குள் தந்துவிடவில்லை. குளிப்பதற்காக உள்ளே சென்றுவிட்டு, கண்ணாடியில் என்னை நானே ஒற்றைக் கண்ணால் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொள்வதை மறைப்பதற்காகவே குளியலறை திரைச்சீலையை அப்போதெல்லாம் ஒற்றைக்கையால் இறுக்கிப் பிடித்துக் கொள்வேன்.

இரவில் அவன் ஊற்றித்தரும் பாலை எதுகாரணம் கொண்டும் நானாக ஊற்றிக் குடிப்பதில்லை என்பதிலும் அவன் தட்டில் வைக்கும் தோடம்பழச் சுளைகளை ஏதுகாரணம் கொண்டும் எடுத்துண்பதில்லை என்பதிலும் மிகக் கவனமாக இருந்தேன்.

அன்று காலை வழமைக்கு மாறானதொரு நேரத்தில் சிறைச்சாலையே அதிரும் வண்ணம் அலாரமடித்தது. மலைகளில் மோதி அது காற்றில் கிளர்த்திய சத்தம் கண்ணுக்கெட்டிய தூரம் அனைத்தையும் அபாய அலைவரிசையில் குலுக்கியெறிந்தது. வெட்ட வெளியில் புல் பிடுங்குவதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் அவரவரின் அறைகளுக்குள் சீருடை தரித்த காவலாளிகள் கலைத்துக் கொண்டிருந்தார்கள். குறுக்கும் மறுக்கும் காவலாளிகள் ஓடித்திருந்தது அசம்பாவிதமான சமிக்ஞைகளை வெளிப்படுத்திய வண்ணமிருந்தன. அப்போது, சீருடையும் வேறுடையும் அணிந்த சில அதிகாரிகள் சிறைச்சாலையின் மேற்குப் புறமிருந்த ஆற்றை நோக்கிச் செல்லும் குறுகிய ஓடையின் மூலையில் ஓடிப்போய் குவிந்தார்கள்.

கைதிகள் மிகவேகமாக தங்கள் அறைகளின் உள்ளே தள்ளப்பட்டு அடைக்கப்பட்டார்கள். கடைசி அறை என்ற காரணத்தினால், காலாளிகள் வந்து என்னையும் உள்ளே தள்ளிப் பூட்டும் வரைக்கும் வெளியில் நின்று விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது தூரத்தில் சீருடையணிந்த காவலாளி ஒருவரை அவரது இரண்டு கைகளிலும் மடக்கிப் பிடித்தபடி பொலீஸார் கூட்டிச் செல்வது தெரிந்தது. அந்தக் காவலாளி திமிறினார். இருந்தாலும் கூட ஓடிவந்த இன்னும் இரண்டொரு அதிகாரிகள் அவர் மீது தம்மாலான முழு பாரத்தையும் போட்டு, அவரைக் குனிய வைத்தபடி தரதரவென்று இழுத்துச் சென்றார்கள்.

ஆனால், அவரை எனக்கு இப்போது நன்றாகத் தெரிந்தது. என்னை இந்த சிறைச்சாலைக்கு வாகனத்தில் அழைத்து வந்த காவலாளியேதான். என்னை இந்த அறைவரைக்கும் அழைத்து வந்து எனது பொதியை தந்துவிட்டுச்சென்றவரேதான். தலைமுடியும் இமைமுடியும் நரைத்த இளைய தோற்றம் கொண்ட அந்த அதிகாரி இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்.

எதுவும் புரியாத கைதிகள் அறைகளின் உள்ளே தள்ளியடைக்கப்பட்ட பின்னரும் கதவுகளின் கீழ் நீக்கல்களினால் குனிந்திருந்து புதினம் பார்த்தார்கள். சிலர் காவலர்களுக்கு எதிராகக் கத்தினார்கள். என்ன நடக்கிறது என்பதை அறிய அவர்களும் அங்கலாய்த்தார்கள்.

காவலாளிகள் கைதிகளை அவரவர் அறைகளுக்குள் வேக வேகமாக போட்டு அடைத்தபடி வந்துகொண்டிருந்தார்கள். அலாரம் தொடர்ந்து அலறியபடியிருந்தது.

எனது அறைக்காரன் எங்கே என்று அப்போதான் எனக்குச் சாதுவாக யோசனை பிறந்தது.

அப்போது, ஓடோடி வந்து தனது அறையினுள் நுழையவிருந்த பக்கத்து அறைக் கைதியிடம் –

“என்ன நடந்தது என்று தெரியுமா? ஏன் எல்லோரையும் அறைக்குள் போகச் சொல்கிறார்கள்?” – என்று கேட்டேன்.

“பெண் காவலதிகாரி ஒருவரின் சடலமொன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டபடி சிறைச்சாலை வளாகத்துக்குள் மீட்டிருக்கிறார்களாம். சந்தேகத்தில் அவளுடைய சக அதிகாரியைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள்” – என்றான் அவன்.

“உள்ளே போ, உள்ளே போ” – என்று தோளில் பிடித்து உள்ளே தள்ளிய அதிகாரியின் பலத்தினால் துள்ளிக்கொண்டு எனது அறைக்குள் வந்தேன்.

இப்போது எனக்கு அந்த அலாரச் சத்தத்திற்கு மேலாக மூளைக்குள் இன்னொரு அலாரமடிப்பது போலிருந்தது. இதயம் வேகமாகத் துடிப்பது எனக்கே உணரக் கூடியதாக இருந்தது.

எனது அறைக்குரியவன் எங்கே என்று திரும்பிப் பார்த்த போது, அது எனக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்தது. அவன் மேலே உள்ள எனது கட்டிலில் படுத்திருந்தான். குழம்பிப் போனேன்.

‘ஒருபோதும் எனது கட்டிலில் படுப்பதில்லையே. இன்றைக்கு ஏன் இவன்…..’ – என்று யோசித்தவாறு காலணியைக் கழற்றினேன்.

அவனது வழக்கமான மெல்லிய குறட்டையொலி கேட்டது. அது அவனது தூக்கத்தை உறுதி செய்தது.

அவன் எனது கட்டிலில் தூங்கியிருக்கிறான் என்பதற்காக, நான் அவனது கட்டிலில் படுப்பது முறையாகாது என்று எண்ணியபடி தரையிலேயே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்தேன்.

சிறைச்சாலையிலேயே கொலையா? அதுவும் பெண் காவலாளியா? என்று யோசித்தபடி கண்களை மூடினேன்.

மனம் ஏதோ ஒன்றை உள்ளுணர்வினால் உணர்த்துவதற்கு எத்தனித்த போதும் அதனை வலுக்கட்டாயமாக மறுத்தேன். எனக்குப் பிடிக்காத ஒரு முடிவை என்னால் நிராகரிக்க முடியும் என்ற எனது முழு சக்தியையும் அந்த நினைப்பின் மீது பிரயோகித்தவாறு கண்களை இறுக்கி மூடினேன்.

இப்போது அலாரச் சத்தம் ஓய்ந்தது. சப்பாத்துக் கால்கள் அறையின் வெளியே கண்டபடி ஓடித் திரிவது கேட்டது. கைதிகள் எல்லோரும் கிட்டத்தட்ட அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டு விட்டார்கள் என்பது வெளியில் நிலவிய பூரண அமைதியில் தெரிந்தது. அமைதிக்கும் ஒரு சத்தம் உண்டு என்பது அப்போது பிரத்யேகமான ஒரு அலைவரிசையில் எனக்கு மாத்திரம் கேட்டது.

மெல்ல கண்களைத் திறந்த போது மேல் கட்டிலில் படுத்திருந்தவன் தனது உடலை பக்கவாட்டாகச் சரித்து கீழே குனிந்து ஒற்றைக் கண்ணால் என்னையே பார்த்தபடியிருந்தான்.