வனாந்தரத்தின் குரல்

0 comment

ஆலன் கின்ஸ்பெர்க்கின் (Allen Ginsberg) ‘ஊளை ‘பற்றி தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் யாராவது பேசுவதுண்டு. பீட் தலைமுறை எனப்படும் அவரோடு சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய ஆர்வம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டதுமுண்டு. ஊளை சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்தது. வில்லியம் பரோஸ் பற்றி நாகார்ஜுனன், சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள், மொழி பெயர்த்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் ஜாக் கேராக் இன்னொரு முக்கியமான ஆளுமை. அவர் பற்றி அதிகம் இங்கு பேசப்படவில்லை. அவரது ‘DHARMA BUMS’ முக்கியமானதொரு நூலாகும். பொதுவாக, இவர்களின் படைப்புகளில் வரும் கட்டற்ற பாலுணர்வு மற்றும் வன்முறைக்காகத் தான் அவர்கள் இங்கே வாசிக்கப்பட்டார்கள்.

அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அமெரிக்காவில் எழுந்த தனி மனித உரிமைகளுக்கான எழுச்சியில் விளைந்தது பீட் இயக்கம். போர் எதிர்ப்புணர்வு, முதலாளித்துவ எதிர்ப்புணர்வு, பாலியல் விடுதலை, மத நிறுவன எதிர்ப்பு, போதை மருந்துகளுக்கான விழைவு போன்றவை இந்த இயக்கத்தின் அடிப்படைகள். பிறகு இது நிறுவன மதம் சாராத ஆன்மீகத் தேடல், ஜென், பாலியல் சமத்துவம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு என்றும் விரிந்தது. உலகப் போர் முடிந்ததும் தோன்றிய இருத்தலியல் வாதம் போன்ற நம்பிக்கையிழப்பு தத்துவங்களுக்கு நேர் எதிரான ஒரு பார்வை இதில் இருந்தது. கம்யூனிசம் போன்ற திரள் தீர்வுகளையும் புறக்கணித்து தனி மனிதனுக்கு அதிக சுதந்திரம் வழங்குவதின் மூலமாகவே உலகின் தீமைகள் தீர்க்கப்பட முடியும் என்று நம்பியது என்றாலும் அயன் ராண்ட் போன்ற ‘உச்ச மனிதன்களைப்‘ பற்றிய நம்பிக்கை எதையும் இந்த இயக்கம் கொண்டிருக்கவில்லை. மனிதன் இயற்கையின் ஒரு அங்கம்தான், அவன் இயற்கைக்குத் திரும்புதலே பொன்வழி என்ற எமெர்சன் – தொரோவுக்கு மிக நெருக்கமான ஒரு சிந்தனைப் பள்ளி.

கின்ஸ்பெர்க், கர்ஸோ, ஜாக் கேராக்

ஜாக் கேரோக்கின் தர்மா குண்டர்கள் நாவலின் கதாநாயகன் கேரி ஸ்னைடர். சான் ஃபிரான்சிஸ்கோவில் பிறந்தவர். பீட் இயக்கத்தின் அப்பா என்று அழைக்கப்பட்ட கென்னெத் ரெக்சொத்துக்கு நெருக்கமானவர். உண்மையில் இந்தக் குழுவிலிருந்து வந்தவர்களில் ஜென், சூழலியல், சூழலியல் இலக்கிய விமர்சனம், பெண்ணியம் போன்ற விஷயங்களில் ஆழ்ந்து சென்றவர் கேரி தான். ’Deep Ecology’ என்ற சொல்லை வழங்கியவர். இறுதிவரை இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தவர்.

கேரி ஸ்னைடர், 1958

அவரது கவிதைகளும் ‘Practicing the Wild‘ போன்ற நூல்களும் இயற்கை  சார்ந்த அவரது ஆன்மீகத் தேடல்களை வெளிப்படுத்துகிறவை. கேரிக்கு கவிதை என்பது அதன் வாய்மொழி வடிவில் தான் இசையை இழக்காமல் இருக்கிறது என்பது போன்ற நம்பிக்கைகள் உண்டு. அவர் தொடர்ச்சியாகப் பல கலாச்சாரங்களின் வாய்மொழி வரலாறுகளைப் பதிவு செய்துகொண்டே இருந்தார்.

கேரி ஸ்னைடர் தமிழில் அதிகம் அறியப்படாத முக்கியமான ஒரு ஆளுமை. அவரது கவிதை ஒன்று …

வனாந்தரத்தின் குரல்

தடித்த கிழவன் இரவில் தனது படுக்கையில் இருந்து கொண்டு
பின்னாலிருக்கும் புல்வெளியில்
கொயோட்டே ஓநாய்
பாடுவதைக் கேட்கிறான்.
இவ்வளவு காலமும்
அவன் தோண்டிக்கொண்டும்
மரங்களை வெட்டிக்கொண்டும்
பண்ணைகளை செதுக்கிக் கொண்டும் இருந்து விட்டான்.
கத்தோலிக்கன். கலிஃபோர்னியன்.
அவனது எண்பதாவது வயதில்
கொயோட்டேவின் ஊளையைக் கேட்கிறான்.
அவன் நாளை கொயோட்டேவின் கால்களில்
இரும்புக் கண்ணிகளைப் பூட்டும்
அரசுப் பொறி வைப்பவனை அழைப்பான்.
தாங்கள் காதலிக்கத் துவங்கியிருந்த இசையை
எனதிரு மகன்களும் இழப்பார்கள்.

***

குருவாகவும் சுவாமிகளாகவும் மாறிவிட்ட
பழைய போதைத் தலைவர்கள்
மாமிசம் உண்பதை விட்டுவிட்டு
தாழ்ந்துவிழும் கண்களுடன் தவம் செய்கிறார்கள்.
கொயோட்டே ஓநாய்கள் மற்றும் கழுகுகளின்
வடஅமெரிக்க வனங்களில் அமர்ந்து கொண்டு
அவர்கள் இந்தியா பற்றியும் காமமில்லாத
உச்சங்கள் பற்றியும் கனவு காண்கிறார்கள்.
வனங்களில் பாலுண்ணிகள் போலத் துருத்தி நிற்கும்
எரி எண்ணையினால் கணப்பூட்டப்பட்ட
கோள வீடுகளில் உறங்குகிறார்கள்.
இப்படியாக அவர்கள்
கொயோட்டேக்களின் பாடல்களை மூடிவிட்டார்கள்.
அவர்கள் வனாந்தரத்தின் குரலை அஞ்சுகிறார்கள்.
அவர்கள் சுற்றுப்புறத்தில் மிகவும் உயரமான
கன்னி தேவதாரு மரங்களை எல்லாம்
‘மரங்கள் முழுக்க பூச்சிகள் உள்ளன’
என்று சொன்ன மரவெட்டியிடம் விற்றார்கள்.
அரசாங்கம் இறுதியில்
ஒரு முழு யுத்தத்தைப் போரிட தீர்மானித்து விட்டது.
தோல்வி அமெரிக்க குணமல்ல.
அவர்கள் புடைத்த தலையலங்காரங்கள் செய்துகொண்டிருந்த
தங்கள் பெண்களுடன் வானத்தில் உயர்ந்தார்கள்.
போர்க்கப்பல்களின் பீரங்கிப் பொத்தான்களில்
நகப் பூச்சை விட்டபடி
அதன் பிறகு அவர்கள் நிலத்திற்கு வரவேயில்லை.
ஏனெனில் அது
கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாகவும் அழுக்காகவும் இருந்தது.
ஆகவே அவர்கள் குண்டு போட்டார்கள்.
குண்டு போட்டார்கள்.
ஒவ்வொரு தினமும்…
பூமி முழுக்க…
சிட்டுக் குருவிகளைக் குருடாக்கி…
ஆந்தைகளின் செவிப்பாறைகளை உடைத்துச் செவிடாக்கி…
மான்களின் குடல்களை
அதிரும் அழுக்குப் பாறைகளுக்கு மாலையிட்டு…
வானத்தில் இருக்கும் இந்தச் சிறப்பு நகரங்களில் இருக்கும்
எல்லா அமெரிக்கர்களும்
வெடி மருந்துகளையும் விஷங்களையும்
ஆசியா முழுக்கக் கொட்டினார்கள்
பிறகு வட அமெரிக்காவில்…
பூமிக்கு எதிரான ஒரு போர்.
அது முடிந்ததும் அங்கே எந்த இடமும் இருக்காது
கொயோட்டெ ஓநாய் ஒளிந்துகொள்ள…
முடிவாக
கொயோட்டெ எப்போதும் உங்களுக்குள் இருக்கிறது
என்று நான் சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் அது உண்மையல்ல.

***