அறையில் பூரண அமைதி நிலவியது. இராமநாதன் சன்னலருகே அமர்ந்திருந்தார். வேட்டி மட்டுமே உடுத்தியிருந்தார். மெலிந்த அவரது உடம்பில் பூணூல் நிலையான ஓர் உறுப்பைப் போன்று ஒட்டிக் கிடந்தது. அவர் எதையோ ஆலோசனை செய்து கொண்டிருந்தார். ஆலோசனைக்கு நடுவே மெதுவாக ஏதோ முணுமுணுத்தவாறு நடுங்குகின்ற தனது கை விரல்களால் கால் முட்டிகளில் தாளமிட்டார்.
இராமநாதனுக்கு முன் அமர்ந்திருந்த இளைஞரும் மௌனமாகவே இருந்தார். ஆனால் அவரது மௌனம் அதிகம் பேசப்படுவதாகவே அமைந்திருந்தது. இராமநாதன் கூறப்போகும் பதிலுக்காக அவர் ஆவலோடு காத்திருந்தார். ஒரு வார்த்தை- அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதாக ஒரு வார்த்தை- அதற்காக அவர் காத்திருந்தார்- ஒரு திவலை நீருக்காகக் காத்திருப்பதைப் போல.
ஆனால் இராமநாதன் ஒன்றும் பேசவில்லை.
இளைஞர் ஆவலுடன் இராமநாதனின் முகத்தைப் பார்த்தார். ஆனால் குனிந்து உட்கார்ந்திருந்த இராமநாதனின் முகம் அவரது பார்வைக்கு முழுவதுமாகத் தெரியவில்லை.
இளைஞரின் கையில் அப்போதும் அவரது கம்பெனியின் பெயரும் முத்திரையும் பொறிக்கப்பட்ட கவர் இருந்தது. அந்தக் கவரை இரண்டு கைகளிலும் ஏந்தித் தட்சிணை கொடுப்பதைப் போல இராமநாதனுக்கு முன் பவ்வியமாக நீட்டிக் கொண்டு நன்றியுணர்வும் மரியாதையும் அன்பும் ததும்பிய குரலில் அவர் கூறிய வார்த்தைகள் அப்போதும் காற்றில் தேங்கி நின்றன. ஆனால் அதையெல்லாம் கேட்ட பிறகும் ஒன்றும் பேசாமல் தன்னுள்ளே இலயித்ததைப் போல இராமநாதன் உட்கார்ந்திருந்தார்.
இன்னொரு முறை வேண்டுகோள் விடுப்பதற்கான மனத்துணிவு அந்த இளைஞரிடம் இல்லை.
இராமநாதனைப் பற்றி அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.
அதனால் தான் இரண்டு மாதங்களுக்கு முன்புகூட அவரது கம்பெனியின் மேனேஜிங் டைரக்டரும் டெக்னிகல் டைரக்டரும் இராமநாதனைப் பார்த்து விட்டு வருமாறு அவரிடம் கேட்டுக்கொண்ட போது கூட அவர் கூறினார்: “சார் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது…”
அதைக் கேட்டு மேனேஜிங் டைரக்டர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த போது அவர் மேலும் கூறினார்:
“அவர் இங்கிருந்து சென்றதற்கான காரண காரியங்களையும் எண்ணிப் பாருங்கள்”
டெக்னிகல் டைரக்டர் புதிதாக வந்தவர். ஒன்றும் புரியாமல் மேனேஜிங் டைரக்டரின் முகத்தைப் பார்த்தார்.
மேனேஜிங் டைரக்டர் முதலில் எதுவும் பேசவில்லை. பின்னர் திடீரென்று அவர் டெக்னிகல் டைரக்டரிடம் கேட்டார்:
“நீங்கள் இராமநாதனுடன் பழகியிருக்கிறீர்களா?”
“இல்லை- ஒருமுறை நான் அவரைப் பார்த்திருக்கிறேன் அவ்வளவுதான்- அதுவும் இந்தியாவில் அல்ல. பிரஷர் வெஸல்களைப் பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கெடுப்பதற்காக ஹனோவர் சென்றிருந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு. அமெரிக்கா இங்கிலாந்து ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் நிறையப்பேர் வந்திருந்தனர். பலரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தனர். ஒருவரது கட்டுரை மட்டுமே பலரது கவனத்தையும் ஈர்த்தது; ஒருவர் மட்டுமே அனைவரது மரியாதைக்கும் பாத்திரமானார்- அவர் இராமநாதன். அன்று எனக்கு ஏற்பட்ட பெருமிதமும் மகிழ்ச்சியும்… ஓர் இந்தியப் பொறியாளன் என்ற முறையில்… ஆனால் அதன் பிறகு அவருடன் பழகுவதற்கான அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை…”
“அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கெல்லாம் வாய்த்தது.” கடந்த காலத்தை நினைவுகூர்ந்து சேர்மன் கூறினார்: “இராமநாதனைப் பொறுத்தவரை சம்பளம் ஒரு பொருட்டே இல்லை. வேலை தான் முக்கியம். இங்கிருந்த போது இரண்டு முறை ‘வேல்டுபாங்கி’லிருந்து அவருக்கு ஆஃபர் வந்திருந்தது. வரியில்லாத உயர்ந்த சம்பளம்; மற்றும் பல சலுகைகள். ஆனால் இரண்டு முறையும் இராமநாதன் அதை நிராகரித்து விட்டார். ஒருமுறை மறுபரிசீலனை செய்வதற்குக் கூட இடங்கொடாமல் அவர் கூறினார்: ‘ஒன்றிற்குப் பலமுறை வெளிநாடு சென்றிருக்கிறேன். படிப்பதற்காகவும் வேலைக்காகவும். இனியுள்ள காலம் இங்கேயே கழியட்டும். அப்புறம் சம்பளம்- என் ஒருத்தனுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?’
மேனேஜிங் டைரக்டர் சட்டென்று நிறுத்தினார்.
அவர் அப்போது அங்கே அந்த அறையில் இராமநாதன் அருகில் அமர்ந்திருப்பதைப் போலவே உணர்ந்தார்.
அவர் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் டெக்னிகல் டைரக்டர் கூறினார்: “இராமநாதன் இங்கிருந்து சென்றதற்கான காரணத்தை நீங்கள் சொல்லவில்லையே.”
கனவு கண்டு திடுக்கிட்டுத் திடீரென்று விழித்து எழுவது போல மேனேஜிங் டைரக்டர் அவர்களைப் பார்த்தார். அவரது முகத்தில் தன்னைத் தானே நிந்திக்கின்ற ஒரு புன்னகை படர்ந்திருந்தது. அவர் கூறினார்:
“இராமநாதன் இங்கு வந்த சந்தர்ப்ப சூழலையும் நான் உங்களுக்குச் சொல்லவில்லை அல்லவா?”
டெக்னிகல் டைரக்டர் கூறினார்: “எனக்கொன்றும் தெரியாது…”
மேனேஜிங் டைரக்டர் கூறினார்:
“எனக்குத் தெரியும்… அன்றைக்கு நான் தான் டெக்னிகல் டைரக்டர்… அன்றைய மேனேஜிங் டைரக்டர்… அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வேண்டாம்… இப்போது நம்மிடையே இல்லாத ஒருவரைப் பற்றி பேசுவது சரியல்ல. இந்த நிறுவனம் இன்றைய நிலையை அடைவதற்கு அவரும் பங்காற்றியிருக்கிறார். அப்புறம் எல்லோருக்கும் தவறு நேர்வது இயல்புதானே. அதனால்… சரி அது போகட்டும்… இராமநாதனைப் பற்றியல்லவா பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வளர்ச்சியின் போதுதான் இராமநாதன் இங்கே வந்தார். வந்தார் என்று சொல்வது முழுவதும் சரியாக இருக்காது. அவர் இங்கே அழைத்து வரப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இராமநாதனின் பணி முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. ஆனால் இங்கிருந்த பலரை விடவும் அதிகமான சம்பளம் அவருக்குத் தான் கொடுக்கப்பட்டது. அதனால் மேனேஜ்மெண்டுக்கு இலாபமே தவிர நஷ்டமொன்றும் இல்லை. இரண்டாம் கட்ட திட்டப் பணியின் கால அளவு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டும் தான். இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இராமநாதன் தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்திருந்தார். பணி முடிந்தவுடனே இராமநாதன் இங்கிருந்து சென்றிருப்பார். ஆனால் அதற்கிடையே தொடங்கப்பட்டிருந்த மூன்றாம் கட்ட வளர்ச்சிப் பணியும் அவருடைய பொறுப்பில் தான் விடப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் மேனேஜ்மெண்டின் விருப்பம் மட்டுமல்ல, வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளரின் அழுத்தமும் இருந்தது. சாதாரணமாக இராமநாதன் எங்கேயும் நீண்ட நாட்கள் பணிபுரிய மாட்டாரல்லவா? ஆனால் இங்கே எதனாலோ அப்படி நிகழ்ந்து விட்டது. வேண்டுமென்றால் அவர் தனது சம்பளத்தையும் பிற சலுகைகளையும் உயர்த்தி வழங்குமாறு கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படியெல்லாம் கோரவில்லை. நான் முதலிலேயே சொன்னேனல்லவா? அவருக்குப் பணம் ஒரு பொருட்டே அல்ல…”
மேனேஜிங் டைரக்டர் நிறுத்தினார். சற்று நேரம் பழைய நினைவுகளிலூடே தனியாகச் சஞ்சரித்த பின் மனதிலிருந்து ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைப்பவரைப் போன்று மீண்டும் தொடர்ந்தார்:
“இராமநாதன் ஒரு சிறந்த பொறியாளர். நல்ல மனிதர். ஒருவேளை அதையெல்லாம் என்னை விட இதோ உட்கார்ந்திருக்கிற குமாரால் மிகவும் நன்றாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் குமாரும் அவரது நண்பர்களும் தான் ஆரம்பம் முதல் அவருடன் பணியாற்றியவர்கள், பழகியவர்கள்…”
தான் கூறியது சரிதானே என்பதைப் போல் அவர் முன்னால் அமர்ந்திருந்த இளைஞரைப் பார்த்தார்.
இளைஞரான குமார் ஒன்றும் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினார்.
மேனேஜிங் டைரக்டர் மீண்டும் கூறினார்:
“இராமநாதன் இந்நிறுவனத்திற்கு ஆற்றிய பங்களிப்பைப் பற்றிப் பலரும் பேசுவார்கள். இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் திட்டப் பணிகளைக் குறித்த காலத்திற்கு முன்னரே முடித்து சாதனை நிகழ்த்தியது, அதுவரையிலும் இறக்குமதி செய்து கொண்டிருந்த உதிரி பாகங்கள் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டது ஆகியன பற்றியெல்லாம் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் நான் சொல்வேன் இராமநாதனுடைய எதார்த்த பங்களிப்பு இதொன்றும் இல்லை. இராமனதனுடைய எதார்த்தமான பங்களிப்பு இளைஞர்களான பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் நிறைந்த ஒரு திறமையான குழுவை வார்த்து எடுத்தது தான்- எந்த இக்கட்டான சூழலையும் எதிர்கொள்ளக்கூடிய இளைஞர்கள் அடங்கிய ஒரு…”
மேனேஜிங் டைரக்டர் மீண்டும் நிறுத்தினார். பின்னர் தான் கூறியது சரிதானே என்பதைப் போல் இளைஞனைப் பார்த்தார். முதலில் ஒன்றும் பேசாமலிருந்த இளைஞரிடம் திடீரென்று உற்சாகம் புகுந்து கொண்டது. அவர் கூறினார்:
“சார் நீங்கள் கூறியது ரொம்பவும் சரி. எனது அனுபவத்தைச் சொல்கிறேனே… அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறிய நான்…”
அவரிடமிருந்து வார்த்தைகள் பிரவகித்தன. தன்முன் அமர்ந்திருப்பவர்கள் தன்னை விட அனுபவம் மிக்க பொறியாளர்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் கலங்கிய மனத்துடன் பழைய கதைகளையெல்லாம் கூறத் தொடங்கிய அவரது பேச்சிற்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் இடையிடையே கேள்விகள் கேட்காமல் டெக்னிகல் டைரக்டர் அவரையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். மேனேஜிங் டைரக்டரும் குமார் கூறுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
குமார் பேசி முடித்த போது பெருமழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி.
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை.
சில நிமிடங்களுக்குப் பிறகு டெக்னிகல் டைரக்டர் கேட்டார்:
“இராமநாதன் இங்கிருந்து சென்றதற்கான காரணத்தை நீங்கள் சொல்லவில்லையே.”
மேனேஜிங் டைரக்டர் கூறினார்:
“சரிதான். ஆனால் அதைப்பற்றி எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ப்ராஜெக்ட் முடிவதற்கு முன் இராமநாதன் ஏன் சென்றார் என்று இதற்கு முன்பும் என்னிடம் நிறையப்பேர் கேட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குப் புரியும்படியாக நான் ஒருபோதும் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் சொல்கின்ற பதில் அல்லது என்னால் சொல்ல முடிந்த பதில் நமது மதிப்பை நமது நிறுவனத்தின் மதிப்பைக் குலைத்து விடும். ஆகையால் நான் எப்போதும் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவேன். ஆனால் இப்போது…”
அவர் திடீரென்று நிறுத்தினார். பின்னர் சிறிது நேரம் ஆலோசித்து விட்டுச் சொன்னார்:
“இராமநாதனைப் பற்றிய எனது கருத்தை நான் முதலிலேயே தெளிவாகச் சொல்லி விட்டேனல்லவா. ஒரு நீதிபதியாக இருந்து தீர்ப்பு கூற விரும்பவில்லை. இராமநாதனைப் போன்ற ஒருவரைப் பற்றி அவதூறு கூறுமளவிற்கு நான் ஒன்றும் விவேகமற்றவனும் இல்லை. இருந்தாலும் சில நேரங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது- இராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஓர் அநாகரீகம் தலைதூக்கியிருந்ததோ? அவர் ஒருபோதும் பிறருக்கு அஞ்சியதில்லை. அவர்களுக்கு முன் தலைகுனிந்து நின்றதுமில்லை. முக்கியமாக உயர் அதிகாரிகளுக்கு முன். அதுவும் நல்லது தான். ஆனால் நம்முடைய சமூகத்தில் சிலவற்றை பார்க்கவில்லை கேட்கவில்லை என்றும் பாவிக்க வேண்டாமா? ஓரளவிற்காவது விட்டுக் கொடுக்க வேண்டாமா? ஆனால் இராமநாதனைப் பொறுத்தவரை விட்டுக்கொடுத்தல் என்பது துளியும் இல்லை. தும்பையைத் தும்பை என்று தான் சொல்ல வேண்டும் என்கிற பிடிவாத குணம் அவருடன் பிறந்தது தானோ என்று பலமுறை எனக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு சாதாரண வெல்டருடன் அமர்ந்து அவருக்கு வேலை கற்றுக்கொடுப்பதில் ஆனந்தமடைகின்ற அவர், உயர்பதவி வகிக்கின்ற அமைச்சர்களுடனும் சேர்மேனுடனும் செக்ரட்டரியுடனும் கண்டிப்புடன் நடந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். சில வேளை அவர்கள் கூறுவது தவறாக இருக்கலாம். அவ்வாறிருக்க அவர்களது முகத்திற்கு நேராகக் கைநீட்டி அதைச் சொல்லியே தீர வேண்டுமா? ஆனால் இராமநாதன் அப்படிச் சொன்னார். ஏதாவதொரு காரணத்தால் அவரால் அதைச் சொல்ல முடியாமல் போனால் அதற்காக அவர் மனம் வருந்தியிருக்கிறார். ஒருவேளை என்னுடைய இந்தப் பார்வை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போதும் அப்படித் தான் தோன்றியிருக்கிறது…
…இராமநாதன் மற்றவர்களிடமிருந்து விலகியே வாழ்ந்தார். தனி மனிதன்; குடும்பம் இல்லை. மற்றவர்கள் கிளப்புகளுக்கும் கெஸ்ட் ஹவுஸ்களுக்கும் சென்று குடித்தும் சீட்டாடியும் டவுண்சிப்பில் வம்புகள் பேசியும் பொழுதைப் போக்கியபோது இராமநாதன் வீட்டில் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தும் கர்நாடக சங்கீதம் கேட்டும் மாலைப் பொழுதுகளைக் கழித்தார். அப்படியெல்லாம் அல்லாதவர்களை மிகவும் ஏளனமாகவே மதிப்பிடுவார் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது சரியென்று நான் நினைக்கவில்லை. ஒருபோதும் எனக்கு அப்படியானதோர் அனுபவமும் ஏற்பட்டதில்லை. அவர் அவருக்கு விருப்பமானதை மட்டுமே செய்திருந்தார் என்று தான் நான் சொல்லுவேன்.”
அவர் பேசுவதை நிறுத்தி விட்டு இளைஞரைப் பார்த்தார்.
“குமார் என்ன சொல்கிறீர்கள்?”
குமார் தலையை மட்டுமே ஆட்டினார்.
அவர் தொடர்ந்தார்:
“குமார்தானே இராமநாதனுடன் மிக நெருக்கமாகப் பழகினீர்கள், அதனால் தான் நான் உங்களிடம் கேட்டேன். சரி அது போகட்டும்- மேனேஜிங் டைரக்டருடன் ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு தானே ராஜினாமாவில் போய் முடிந்தது. ஒருவேளை அதற்கு முன்பே ஏதாவது உரசல் இருந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது… அன்றைக்கு அந்தச் சம்பவம் நடக்கும் போது மேனேஜரின் அறையில் இராமநாதன் மட்டுமல்லாமல் நானும் பெர்சனல் மேனேஜரும் இருந்தோம். இராமநாதனுக்குக் கீழ் பணிபுரிகின்ற ஒரு பொறியாளருக்குப் பதவி உயர்வு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தை. இராமநாதன் எவ்வித விகாரத்தையும் வெளிக்காட்டவில்லை. ஆனால் அவரது வார்த்தைகள் மிகவும் கூர்மையாக இருந்தன. இராமநாதன் சொன்னார்: ‘எனக்கு இவர் வேண்டாம். இவரை இந்தப் பதவியில் வைத்துக் கொண்டு வேலை செய்வதற்கும் நான் தயாராக இல்லை. இவர் யாருடைய உறவினராகவும் இருக்கலாம். அதனாலேயே அவர் நல்ல பொறியாளராக ஆகிவிட முடியாது. நான் ஒருவருக்குப் புரமோஷன் கொடுக்க வேண்டுமென்று கூறுகிறேன். நீங்களோ யாதொரு தகுதியும் இல்லாத இன்னொருவருக்கு கொடுக்க வேண்டுமென்கிறீர்கள், இதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது…’
அப்போது மேனேஜிங் டைரக்டர் இராமநாதனிடம் கூறினார்:
“இராமநாதன் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்கிற பிரச்சனையே எழவில்லையே. நீங்கள் சிபாரிசு செய்யலாம். ஆனால் யாருக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று மேனேஜ்மெண்டு தான் முடிவெடுக்கும். இதுபோன்ற விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு முன் பலவற்றையும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது…”
இராமநாதனுடைய வார்த்தைகள் அப்போது அறையில் முழங்கின. வார்த்தைகளின் உச்சத்தினால் அல்ல; அவற்றின் ஆற்றலினால்:
“நீங்களும் உங்கள் ஆலோசனையும்… அது எனக்குத் தேவையில்லை.”
அவ்வாறு கூறிய அவர் மேசை மேல் இருந்த பேடிலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்தெடுத்து அதில் நான்கு வாக்கியங்களை எழுதி மேனேஜிங் டைரக்டருக்கு முன்னர் வைத்தார். அவரது முகத்தில் ஏளனமிக்க சிரிப்பு நிறைந்திருந்தது. அதன்பிறகு எதுவுமே நடக்காதது போல் அறையிலிருந்து வெளியேறினார்…
… நாங்கள் அனைவரும் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தோம்.
இராமநாதனின் ஒப்பந்த காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டிற்கும் மேலாக உள்ளது. அப்போதுதான்… நான் முதலிலேயே சொன்னேனல்லவா- இதெல்லாம் நடந்திருக்கக் கூடாது; ஆனால் நடந்துவிட்டது.”
அந்தக் கசப்பான நினைவுகளிலிருந்து அவர் முக்தியடைய முயற்சிப்பதைப் போலத் தோன்றியது.
அப்போது டெக்னிகல் டைரக்டர் கூறினார்:
“இராமநாதன் செய்தது சரியென்று நான் சொல்ல மாட்டேன். அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது…”
இளைஞர் என்னவோ சொல்வதற்கு முனைந்த போது அதற்கு இடங்கொடுக்காமல் மேனேஜிங் டைரக்டர் கூறினார்:
“சரியும் தவறும் ஒருபுறம் இருக்கட்டும். இனி நாம் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இப்போது நாம் செய்ய வேண்டியது இந்தக் கம்ப்ரஸரை உடனே தயார் செய்து உலையை மீண்டும் இயக்க முடியுமா என்று பார்ப்பது தான். புதிய கம்ப்ரஸர் வருவதற்குக் குறைந்தது எட்டு மாதங்களாவது ஆகும். அதுவரை தொழிற்சாலையை இழுத்து மூடுவதென்பது எண்ணிக் கூடப் பார்க்க முடியாத காரியம். அதனால் தான் உடைந்த சிலிண்டரை வெல்டிங் செய்து கம்ப்ரஸரை இயக்க வேண்டுமென்று சொல்கிறேன். அதிலுள்ள சிரமங்களை எல்லாம் புரிந்து கொள்ளாமல் நான் இதைச் சொல்லவில்லை. இது போன்ற கம்ப்ரஸரை இதற்கு முன்பு யாரும் வெல்டிங் செய்து சரியாக்காமல் இருந்திருக்கலாம். அதனால் நம்மாலும் முடியாது என்று சொல்லி விட முடியாது…”
இளைஞர் என்னவோ சொல்ல முன்வந்த போது மேனேஜர் மீண்டும் தொடர்ந்தார்:
“குமார், உங்களது சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் கடந்த சில நாட்களாக இரவுபகல் பாராமல் முயற்சித்து வருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இடுக்கியிலிருந்து வந்த கனடியன் வல்லுனராலும் லெய்லண்டிலிருந்து வந்த பிரிட்டீஷ் வல்லுனராலும் நமக்கு உதவ முடியவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் அதற்காக..? நாம் இனிமேல் முயற்சிக்காமல் இருக்க முடியுமா? தொழிற்சாலையை இழுத்து மூடிவிடத் தான் முடியுமா? தொழிலாளர்களை லே-ஆஃப் செய்ய முடியுமா? குமார் இதெல்லாம் ஒருபோதும் முடியாது. எங்காவது ஒருவழி இருக்கும். நான் உங்களைப் போல ஒரு தொழில்நுட்ப வல்லுனன் இல்லை. ஆனாலும் எனக்கென்னவோ இது நம்மால் முடியுமென்றே தோன்றுகிறது- அதனால் தான் நான் சொல்கிறேன்- இராமநாதனை எப்படியாவது கண்டுபிடியுங்கள். இந்த நிமிடம் முதல் உங்களது வேலை அது மட்டும் தான். இதற்காக நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். நான் உங்களுக்கு எல்லா விதத்திலும் பக்கபலமாக இருப்பேன்.”
அவர் நிறுத்தினார்.
அதன்பின் அறையில் அமைதி நிலவியது.
இறுதியில் அவர் தனக்குத் தானே கூறுவதைப் போல் சொல்லிக் கொண்டார்:
“இப்படியொரு மனிதர்- இப்போது எங்கிருக்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாது!- பம்பாயிலா? கல்கத்தாவிலா? தில்லியிலா? யாரறிவார்?- நைஜீரிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு ஒரு கன்சல்டண்டாக சென்றதைப் பற்றி சிலருக்குத் தெரியும். அது இங்கிருந்து பம்பாய் சென்று இரண்டு மாதம் கழித்து நிகழ்ந்தது. பின்னர் நைஜீரியாவிலிருந்து லிபியா சென்றாராம். லிபியாவிலிருந்து திரும்பி வந்த பின் என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது. நான் பலரிடமும் விசாரித்துப் பார்த்தேன். லிபியாவுக்குச் செல்லும் முன் பம்பாய் வீட்டை ‘டிஸ்போஸ்’ செய்திருந்தாராம். இப்போது எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது… அவரைப் போன்ற ஒருவர் திடீரென்று ஒருநாள் யாருமறியாமல் மறைந்து விடுவதென்பது… எனக்குப் புரியவில்லை.”
அப்போதுதான் இளைஞரான குமார் பேசினார்:
“சார் நான் முயற்சி செய்கிறேன், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியாது…”
அவ்வாறு சொன்ன போதிலும் அவரது மனம் அமைதியற்றதாகவே இருந்தது. அப்போது அவரது மனதில் சிலிண்டர் உடைந்த மூவாயிரம் குதிரைசக்தி கொண்ட கம்ப்ரஸரோ குழப்பம் நிறைந்த அதன் வெல்டிங் பகுதிகளோ இல்லை…
அவர் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை நினைத்துப் பார்த்தார்:
காலை நேரம். பம்பாய்க்குச் செல்லும் முதல் விமானத்தில் இராமநாதனை வழி அனுப்புவதற்காகக் குமாரும் நண்பர்கள் சிலரும் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். அனைவரும் இளைஞர்கள். இராமநாதனுடன் பணிபுரியும் வாய்ப்புப் பெற்ற அதிர்ஷ்டசாலி இளைஞர்கள். அவர்கள் துயரத்துடன் காணப்பட்டனர். அவர்களது உள்ளத்தில் கோபம் நிறைந்திருந்தது. ஆனால் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
பிரிவதற்கான நேரம் வந்த போது அவர்களில் யாரோ அழுதுவிட்டனர். அப்போது அவர் கூறினார்: “ச்சே! நீங்கள் என்ன சிறு குழந்தைகளா? அழுமளவிற்கு இங்கே என்ன நடந்துவிட்டது?”
விடைபெறுகின்ற இறுதி நிமிடம்…
இராமநாதன் கூறினார்: “என்னால் உங்களுக்குக் கடிதம் எழுத முடியுமென்று தோன்றவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நீங்கள் உறுதியாக நம்பலாம்- நீங்கலெல்லாம் எப்போதும் என் மனதில் இருப்பீர்கள்…என்றென்றும்…”
அந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டு குமார் மீண்டு ஒருமுறை மேனேஜரிடம் கூறினார்: “நான் முயற்சிக்கிறேன்…”
இந்த முயற்சி தான் ஒருசில நாட்களில் அவரை மெட்ராஸில் கொண்டு போய்ச் சேர்த்தது. மெட்ராஸ் பாரிஸ் கார்னரில். பாரிஸ் கார்னருக்கு சென்று சேர்ந்ததோ பெங்களூர் எம்.ஜி.ரோடு வழியாக. ஆம் கெஸ்ட்கவுஸில் வேலை செய்திருந்த சிங்காரத்தை பெங்களூர் எம்.ஜி.ரோட்டில் தற்செயலாகச் சந்தித்தார் குமார். கிளப்புக்கும் கெஸ்ட் ஹவுஸுக்கும் எப்போதாவது மட்டுமே செல்கின்ற இராமநாதனைப் பற்றிய செய்தி சிங்காரத்திடமிருந்து கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு குமாருக்கு இல்லை. ஆனால் சிங்காரம் கூறினார்:
“அந்த வெல்டிங் செய்வாரே சாமி, அவர்தானே?- அவர் இப்போ மெட்ராஸில தம்புசெட்டி தெருவிலோ பாரிஸ் கார்னரிலோ எங்கேயோ கடை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். எனக்கும் சரியாத் தெரியாது.”
அவரால் அதை நம்ப முடியவில்லை!
இராமநாதன்- பொறியாளர் இராமநாதன்- மெட்ராஸ் பாரிஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் ஒரு ‘கடை’ நடத்துகிறாரா?
கடை..?
ஆனால் சிங்காரத்திடமிருந்து அதிகமான தகவல்கள் கிடைக்கவில்லை.
இருந்தாலும் சந்தேகித்துத் தயங்கி நிற்கவில்லை.
ஒருமுறை சென்று தேடியிருந்தார்.
மீண்டும் குமார் மெட்ராஸ் சென்றார்.
பல மணிநேரம் அலைந்து நடந்த பின்னரும் இராமநாதனைப் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. அவர் விசாரித்த பொறியியல் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இராமநாதனைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளனர், ஆனால் அவர் மெட்ராஸில் இருக்கின்ற விவரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இறுதியில் ஊருக்குத் திரும்பலாம் என்று முடிவெடுத்த நிலையில் இராமநாதன் தானாகவே அவர்முன் தோன்றினார்!
கடவுளே அனுப்பியது போல!
பாரிஸ் கார்னரிலிருந்து கேத்தலிக் செண்டருக்குச் செல்கின்ற குறுக்கு வழியின் முனையில் இனி என்ன செய்வதென்ற சிந்தனையோடு நின்றிருந்த போதுதான் அந்தக் கேள்வி காதில் விழுந்தது:
“குமார் நீ இங்கே என்ன செய்கிறாய்?”
ஒரு நிமிடம் அவர் ஸ்தம்பித்துப் போனார்.
பின்னர் எல்லாவற்றையும் சரியாகப் பார்த்தார்: இரண்டு பெரிய கட்டிடங்களுக்கு நடுவில் அவற்றின் நடைவழி என்று தோன்றுமளவிற்கு மிகச்சிறிய ஓர் அறை. அதன்முன் ‘பிரதி எடுத்துக் கொடுக்கப்படும்’ என்றொரு போர்டு. அறையில் ஒரு ‘ஜெராக்ஸ்’ இயந்திரம். சில நாற்காலிகள், ஒரு மேசை…
அங்கே இராமநாதன் புன்னகையுடன் அவரைப் பார்த்தவாறு நிற்கிறார்.
தான் காண்பது கனவா என்று சந்தேகப்பட்டு நின்றபோது இராமநாதன் கேட்டார்:
“நீ என்ன இங்கே…”
அவர் பதற்றத்துடன் கேட்டார்:
“சார் இங்கே…?”
“நான் இப்போது ஓய்வில். வேலையெல்லாம் விட்டுவிட்டேன். எங்காவது சென்று தனிமையில்… அப்படி நினைத்துத் தான் இங்கே வந்தேன். ஆனால் இங்கே வந்த பிறகு இதுதான் யோகம். இது என்னுடையதல்ல. எனது நண்பர் ஒருவருடையது. உடல்நலமின்றி அவர் இப்போது மருத்துவமனையில் படுத்திருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கே வருகிறேன்… இதிலும் மனநிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அவ்வாறு நிறைவு தராத நற்செயல்தான் ஏது?”
இராமநாதன் அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.
குமார் எதையோ ஆலோசித்தவாறு நின்றார்.
இராமநாதனுக்கு முன்னர் கேள்வி கேட்பதற்கான ஆற்றலை இழந்த ஒரு பள்ளி மாணவனைப் போல் நின்றார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் தான் வந்த விஷயத்தைக் கூறத் தொடங்கினார். மிகக்கவனமாக அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இராமநாதன் ஒருகட்டத்தில் சொன்னார்: “வேண்டாம் இதையெல்லாம் இங்கு நின்று பேச வேண்டாம். வீட்டில் போய் பேசலாம் வா”-
வீடு நகரத்திற்கு வெளியே இருந்தது.
அவர்கள் செய்த வேலையைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டாரேயன்றி வீடு செல்லும் வரையில் இராமநாதன் அதிகம் பேசவில்லை, ஆலோசித்தவாறே இருந்தார்.
வீட்டுக்கு வந்தவுடன் இராமநாதன் கூறினார்:
“முதலில் நீ வந்த விஷயத்தைக் கூறு- அதன்பிறகு குளித்து விட்டுச் சாப்பிடலாம்.”
அவர் பிரீப்கேசைத் திறந்து வரைபடங்களையும் புகைப்படங்களையும் எடுத்து இராமநாதனுக்கு முன் பரப்பினார். அதன்பின் தாங்கள் அதுவரைச் செய்த வேலையைப் பற்றி விளக்கினார். இராமநாதன் இடையிடையே அவரிடம் கேள்விகள் கேட்டார்; அவ்வப்போது ஆலோசனையில் ஆழ்ந்து அறையில் அங்குமிங்குமாக நடந்தார். சட்டென்று குனிந்து வரைபடத்தில் என்னவோ எழுதினார், குறித்தார். தனக்குத்தானே…
இறுதியில் குமார் எல்லாம் சொல்லி முடித்தவுடன் ஒரு பரிகாரம் கண்டாற்போல் இராமநாதன் கூறினார்:
“குமார் நீங்கள் சரியாகத் தான் செய்திருக்கிறீர்கள்.”
அதைக் கேட்டவுடன் அவர் வியப்படைந்தார்.
நாங்கள் செய்தது சரிதானா?
இவர் என்ன சொல்கிறார்?
இராமநாதன் கூறினார்: “முழுவதும் சரியல்ல. சரியாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே எழுந்திருக்காதே. இருந்தாலும் ஓரளவு சரிதான். உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தாலும் முதலில் நானும் இதைத் தான் செய்திருப்பேன். பரவாயில்லை, நாம் அதைச் சரியாக்கி விடலாம்…”
இராமநாதன் புன்னகைத்தார்.
குமார் ஆச்சரியத்துடன் தனது மேலதிகாரியைப் பார்த்தார்.
அவர் நினைத்தார்: ‘உடம்பு தளர்ந்தாலும் இவருடைய மனது இப்போதும் பழைய…’
இராமநாதன் ஒரு காகிதத்தை எடுத்து அதில் வரைந்து கொண்டு கூறினார்:
“…கீழ்பகுதியில் சிறிய எலக்ரோடினால் வெல்டிங் செய்ய வேண்டும். மேலே சற்றுப் பெரியது… அவ்வாறு ப்ரீன் செய்கின்ற போது கவனிக்க வேண்டியது… ஸ்ட்ரெஸ் ரிலீவ் செய்யும் போது ஒன்றை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்- அதாவது…”
இராமநாதன் சொல்லி முடிக்கவும் குமார் ஒரு புதிய வெளிச்சத்தைக் கண்டடைந்தது போல் உணர்ந்தார்.
இராமநாதன் மீண்டும் கூறினார்: “நான் உறுதியாக நம்புகிறேன், இந்த முறை நீங்கள் சரியாகச் செய்வீர்கள். எந்தப் பதற்றமும் வேண்டாம்…”
அது போலவே நடந்தது.
இன்று. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இராமநாதனுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். இரண்டாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களின், உயரதிகாரிகளின் நன்றியையும் அன்பையும் தெரிவிப்பதற்காக. அவரது கையில் சேர்மேன் கொடுத்தனுப்பிய கடிதம் உள்ளது- நிறுவனம் இராமநாதனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதை எடுத்துரைக்கும் கடிதம். அத்துடன் நிறுவனம் கன்சல்டேஷன் கட்டணமாக இராமநாதனுக்கு வழங்குகின்ற பெரியதோர் தொகைக்கான காசோலையும் உள்ளது…
அறை அவ்வளவு பெரியதொன்றும் இல்லை. அறையில் அதிகம் பொருட்களும் இல்லை. அங்கே அதிகமாக இருந்தவை புத்தகங்களும் மாத இதழ்களும் தான். அதிகமான புத்தகங்கள் பொறியியல் சம்பந்தமானவை; அது போலவே மாத இதழ்களும்…
இவற்றைத் தவிர அவர் ஏற்கனவே பார்த்திருந்த இரண்டு பொருட்களும் அறையில் இருந்தன. க்ராண்டிங்கின் ஒரு ஸ்பூல்டைப் டேப்ரிகார்டரும், கறாடின் ரிக்காடு பிளேயரும் இரண்டும் மிகவும் பழையவை.
இராமநாதன் எதையோ ஆலோசித்தவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் ஏதாவது சொல்வாரென்று குமார் ஆவலுடன் காத்திருந்தார்.
குமார் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டார். இனியும் சொல்வதற்கான தைரியம் அவருக்கு இல்லை.
சேர்மேன் கொடுத்தனுப்பிய கடிதமும் காசோலையும் அடங்கிய கவர் அவரது கையிலேயே இருக்கிறது…
மூச்சு முட்டுகின்ற மௌனத்திலிருந்து அவருக்கு விடுதலை வழங்கி இராமநாதன் மெதுவாகக் கூறினார்:
“குமார், நீ என்னை ஓரளவிற்குப் புரிந்து வைத்திருப்பாய் அல்லவா? நான் ஒருபோதும் பணத்திற்காக வேலை செய்ததில்லை. செய்த வேலைக்குப் பணம் வாங்கியிருக்கிறேன். ஆனால் அதுவும் பணத்திற்காக வேலை செய்வதும் வெவ்வேறானது. மேலும் நான் வேலை செய்வதிலிருந்தெல்லாம் ஓய்வு பெற்று விட்டேனென்று ஏற்கனவே உன்னிடம் சொன்னேனல்லவா? எல்லாவற்றிற்கும் ஒரு காலமிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற வேலை செய்வதற்கான காலமெல்லாம் கழிந்து விட்டது. வெல்டிங்கும் பிரஷர்வெஸல்களும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பது எனக்கு முன்னரே தெரியும். ஆனால் அன்று அதற்கான காலம் வந்திருக்கவில்லை. வாழ்க்கையில் நான் விரும்பியதையெல்லாம் சாதித்திருக்கிறேன்- ஒன்றைத்தவிர. சிறுவயதில் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் என் அப்பாவின் நிர்பந்தம் காரணமாக அது நடக்கவில்லை. நான் தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பது உங்களுக்கத் தெரியுமோ என்னவோ? சங்கீதம் கேட்டுத்தான் நான் குழந்தைப் பருவத்தில்…”
அவர் ஆச்சரியத்துடன் அந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இராமநாதன் மீண்டும் கூறினார்:
“பழைய வேலையை நான் விட்டுவிட்டேன் என்று சொன்னேனல்லவா? ஆனால் உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் வரலாம். ஆனால் அதற்கு அர்த்தம் நான் பணம் வாங்கிக் கொண்டு எனக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன் என்பதல்ல. அப்புறம், குமார் நான் யாருக்காகப் பணம் வாங்க வேண்டும்? என் மனைவிக்காகவா? பிள்ளைகளுக்காகவா?”
என்னவோ நினைத்துக் கொண்டதைப் போல அவர் நிறுத்தினார்.
ஏதாவது பேசுவதற்கு அவருக்கு வார்த்தைகள் இல்லை.
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் இராமநாதனின் வாழ்க்கை பயனற்று சூனியமாகி விட்டதென்று அவர் கேள்விப்பட்டிருந்தார்.
அதன்பிறகு இராமநாதன் தனக்குத் தானே கூறிக் கொண்டார்:
“எல்லாவற்றுக்கும் கால நேரம் உண்டல்லவா…”
இராமநாதனின் குரலில் துயரத்தின் சாயல்கூட அப்போது வெளிப்படவில்லை.
அவர் புறப்படுவதற்கான நேரம் வந்தது.
இராமநாதன் கூறினார்:
“நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம். நான் இங்கு தான் இருப்பேன்…”
அவர் சாலைக்கு நடந்தார். அவரது மனதில் அநேக நினைவுகள் சுழன்றன. சிறிது தூரம் நடந்த பிறகு திரும்பிப் பார்த்தார். இராமநாதன் வராந்தாவில் இல்லை.
அவருக்குப் பிடிபடாத ஏதோவொரு கர்நாடக இராகத்தின் மதுரமான அலைகள் இராமநாதனின் அறையிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தன.