நாமும் அஜ்னபி தான் – மானசீகன்

by மானசீகன்
0 comment

அது ஓர் அரையாண்டு சமூக அறிவியல் தேர்வு என்று நினைக்கிறேன். ஒரு தமிழாசிரியர் தேர்வுக் கண்காணிப்பாளராக வந்திருந்தார். தேர்வறைகளில் எதையாவது உளறுவதே அவர் வழக்கம். சுற்றிச் சுற்றி வந்தவர் என் மேப்பைப் பிடுங்கிப் பார்த்தார். ‘ஏண்டா பாய்! இப்டி தப்பா எழுதி இருக்க?  சவூதி அரேபியா  இங்கயா இருக்கு? தப்பா போட்ருக்க’ என்று சொல்லிக் கொண்டே மேப்போடு  வகுப்பறையின் மத்திக்குச் சென்று விட்டார். எல்லோரிடமும் அதைக் காட்டிக் கொண்டே ‘பார்த்தியாடா, பாய் தப்பா எழுதிருக்கிறதை? இந்தியாவ தப்பா எழுதுனா கூட ஒரு நாயம் உண்டு. நீ சவூதியவோ பாகிஸ்தானையோ தப்பா எழுதலாமா? அது ரெண்டும் தானே ஒங்க தாய் நாடு? ஹ்ஹென்னு’ எனச் சிரித்தார். ( சீமான் சிரிக்கும் அதே சிரிப்பு ) வேறு சிலரும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். எனக்குக் கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் வந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல் ஒரு பிரமை.

இப்போதாவது தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து ஒரு தேசத்தை வெறுக்கக் கூடாது என்கிற புரிதல் இருக்கிறது. அந்தக் குழந்தைப் பருவத்தில் நான் பாகிஸ்தானைக் கடுமையாக வெறுத்தேன். சவூதி பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. என் நிறமோ, உருவமோ, நடை உடை பாவனையோ பாகிஸ்தானுக்கோ சவூதிக்கோ எந்த விதத்திலும் பொருந்தப் போவதில்லை. அப்போதே அந்தத் தமிழாசிரியரை விட பலமடங்கு சிறப்பாகத் தமிழில் பேசுகிற  ஆற்றல் பெற்றிருந்தவன் நான். அப்படிப்பட்ட நான் ஏன் பாகிஸ்தான்காரனாக, சவூதிக்காரனாக நினைக்கப்பட வேண்டும்? இது என் தேசம் இல்லையா? இந்த மண்ணில் எனக்குப் பங்கு இல்லையா? நான் மேடைகளில் ஏறி முழங்குகிற மொழி எனக்கு அந்நியமானதா? என் முன்னோர்களில் எவரோ ஒருவர் என்னிடம் கேட்காமல் மாறிய மதம் என்னை அந்நியனாக்கி விடுமா? சாமிகள் வானங்களில் இருப்பதாகத் தானே சொல்கிறார்கள்? அவற்றின் மீதான நம்பிக்கை பூமியில் வாழும் மனிதர்களை எப்படிப் பிரிக்கிறது? என் சான்றிதழில் எழுதியிருக்கும் ‘இந்தியன் – தமிழன்’ என்ற வாசகங்கள் நிஜத்தில் எனக்குச் சொந்தம் இல்லையா?

தாள்களில் இருந்த கேள்விகளை மனதில் எழுந்த கேள்விகள் மறக்கடித்தன. மனதின் பாரத்தால்  எதை எதையோ கிறுக்கி வைத்தேன். எனக்குப் பிடித்தமான வரலாறும் குடிமையியலும் கூட  என்னைக் கை விட்டன. அந்த அரையாண்டுத் தேர்வில் நான் 30 மதிப்பெண் மட்டுமே. ( வழக்கமாக 95-க்கு மேல் எடுப்பேன். புவியியலை கடம் போட்டாவது எழுதி விடுவேன். மேப் டிராயிங்கில் மட்டுமே மார்க் குறையும் ). சமூக அறிவியல் வாத்தியார் ‘ஏன் மார்க் கம்மி?’ என்று திட்டினார். அவரிடம் இதை அப்படியே சொன்னேன். ‘காரணம் சொல்லாம ஒழுங்கா படி’ என்று உட்கார வைத்து விட்டார். அந்த வலியை அவரால் உணர முடியவில்லை. சொந்த நாட்டிலேயே அகதியாக உணர்ந்த நிமிடங்களின் சாட்சியாய் அந்த ரேங்க் கார்டு நெடுநாட்கள் என்னோடு இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘அஜ்னபி’ நாவலைப் படித்த போது அந்த ஆசிரியர் தான் நினைவுக்கு வந்தார். அரபியில் அஜ்னபி என்றால் ‘அந்நியன்’ என்று பொருள். சவூதியில் இருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தம்மை அந்நியராக உணர்வது தான் நாவலின் மையம்.  இந்த நாவலை அவருக்குத் தந்து படிக்கச் சொல்ல வேண்டும் என்கிற உணர்வோடு அவரைப் பற்றி விசாரித்தேன். இறந்து விட்டாராம். கல்லறை இருந்திருந்தால் கண்டிப்பாக  அங்கேயாவது வைத்து விட்டு வந்திருப்பேன். எரிக்கிற ஜாதி போல. சாம்பலையே கரைத்து முடித்திருப்பார்கள். எனக்குத் தோன்றிய எண்ணங்களை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். அவரே பூமிக்கு ‘அஜ்னபியாகி’ விட்ட பிறகு நான் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்?

வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் குறித்த புனைவுச் சித்திரங்கள் புதுமைப்பித்தனிலிருந்தே தொடங்குகின்றன. துன்பக்கேணியே அதன் தொடக்கம். ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ அந்த வாழ்க்கையின் சில துளிகளை சாகசமும் பகடியும் கலந்து முன் வைத்தது. அதன் தொடர்ச்சியாக ‘அஜ்னபியைக்’ கூறலாம் தான். ஆனால் இந்த நாவல் சவூதியைக் களமாகக் கொண்டிருந்தாலும் சத்தமில்லாமல் சர்வதேச அரசியலைப் பேசுகிறது. கட்டுப்பாடுகளும் இறுக்கமும் நிரம்பிய சமூகத்தின் வாழ்வியலை பகடியான மொழியோடு பயணித்துக் கொண்டிருக்கிற மீரான் மைதீனின் உச்சம் இந்த நாவல் தான்.

மீரான் மைதீன் ‘மஜ்னூன்’ என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார். மஜ்னூன் என்றால் பைத்தியம் என்று பொருள். லைலா – மஜ்னூன் கதையில் மஜ்னூனின் இயற்பெயர் கயஸ். காதல் பறிக்கப்பட்டதால் கயஸ் மஜ்னூனாகிறான். சவூதி அரேபியாவில் சகல விதமான சித்ரவதைகளையும் அனுபவிக்கும் ஒருவன் தன் மனைவிக்கு எழுதிய கடிதமாக அந்தச் சிறுகதை எழுதப்பட்டிருக்கும். அந்தக் கதை முழுவதும் குப்பைத் தொட்டி ஒரு கதாபாத்திரத்தைப் போல அவனைத் துரத்திக் கொண்டேயிருக்கும். இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில் நிறைய சம்பாதித்து இங்கே வசதியாக வாழுகிறார்கள். அங்கே தீவிரவாதிகளோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று இந்துத்துவவாதிகள் பலரின் பொதுப்புத்தியில் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தின் மீது ஓங்கி அறைந்த கதை மஜ்னூன். இந்த நாவலும் கூட ஒரு அர்த்தத்தில் கயஸ் மஜ்னூனாகிற கதை தான். சிறுகதையில் வெளிநாட்டு வாழ்வின் துயரங்களை மட்டுமே சித்திரித்த மீரான் மைதீன் நாவலில் தத்துவார்த்த பின்னணியோடு சவூதி வாழ்க்கையை படைத்திருக்கிறார்.

தோப்பில், மீரான், ஜாகிர் ராஜா, சல்மா ஆகியோரின் சிறுகதைகளும் நாவல்களும் வெளிநாட்டுக்கு போனவனின் குடும்பத்தின் துயரங்களைப் பேசின. பெரும்பாலும் அவை பெண்களின் துயரங்களாகவே இருந்தன. ‘அஜ்னபி’ அங்கு வாழ்கிறவர்களின் அக, புற உலகங்களை விரிவாகப் பேசியிருக்கிறது.

இந்த நாவலில் கதாநாயகன் என்று யாருமில்லை. அஜ்னபிகள் தான் கதாநாயகர்கள். ஆனால் அரபிகள் ஒற்றைப்படையான பார்வையில் வில்லனாக்கப்படவில்லை.

இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்நிலையும் பண்பாடும் ஏன் சமயப் புரிதலும் கூட ஒரே மாதிரி இல்லை. இந்த நாவலில் வரும் தமிழ் முஸ்லிம் ஃபைசல், மலையாள முஸ்லிம் நாசர், ஏமன் முஸ்லிமாக வரும் கபீல், புல்லாங்குழல் வாசிக்கத் தெரிந்த டிரக் டிரைவரான ஆப்கன் முஸ்லிம், சூப் கடை வைத்திருக்கும் பாகிஸ்தானி முஸ்லிம், துவைஜி என்கிற கொடுமைக்கார அரபு முஸ்லிம், ஹைபா என்கிற அன்பான அரபு முஸ்லிம் என்று பலரும் வருகிறார்கள். அவர்களுக்கிடையே அரபுப் பெயரைத் தவிர வேறு எந்தப் பொதுத்தன்மையும் இல்லை. சொல்லப் போனால் ஃபைசலுக்கும் பிரபுவிற்கும் தான் பொதுத்தன்மைகள் நிறைய இருக்கின்றன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் குறித்த இந்தியர்களின் மனப்பதிவு நிஜமானதில்லை. இந்தியர்கள் குறித்து அவர்களிடமும் அப்படிப்பட்ட பிம்பங்களே கட்டமைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு ஏன்? ஒரே நாட்டில் வசிக்கும் தமிழர்களும் மலையாளிகளும் பரஸ்பரம் வைத்திருக்கும் மனப்பதிவு என்ன? மயக்கும் மோகினிகளாக மலையாளப் பெண்களை கற்பனை செய்யும் தமிழர்களும் திருடர்களாக, குளிக்காதவர்களாக தமிழ் ஆண்களை நினைத்து வைத்திருக்கும் மலையாளிகளும் தேசியக் கொடியேற்றி ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டிருக்கிறோமே? கலாச்சார வேறுபாடுகளின் அழகைப் பேசிய மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர் கூட அதனை தூய காதலின் புரிதலாக மட்டும் தானே சுருக்கி விட்டது? ஆனால் அஜ்னபி யானையைப் பிடித்து செம்பில் அடைத்து வைக்க முயற்சிக்கவில்லை. சவுதியில் அஜ்னபிகள் உணரும் அடையாளச் சிக்கலை ரொமாண்டிசைஸ் செய்யாமலும் ஏதோ ஒரு மெல்லுணர்வுக்குள் கரைத்து விடாமலும் யதார்த்தமான பாணியிலேயே விவாதித்திருக்கிறார்.

கையில் முறையான விசா இல்லாமல் தாயிப் நகரில் ஒரு பாகிஸ்தானியின் சூப்புக் கடையில் போலிசுக்கு தெரியாமல் வேலை செய்யும் ஃபைசலுக்கு உடன் பேசுவதற்கு தமிழ் நண்பர்கள் இல்லை. குடும்பத்தோடு தொடர்பு கொள்ள முடியாது. அப்போது அவனுக்குத் துணை இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் கிழிந்து போன பழைய பேப்பர் துண்டு மட்டுமே. அந்த பேப்பர் துண்டில் இருப்பது, ‘ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கான விளம்பரம் மற்றும் பனிரெண்டு ராசிகளுக்கான பலன்’. ஆனால் ஃபைசலுக்கு அது வெறும் பேப்பர் துண்டல்ல. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே அனுமன் கட்டியதாக நம்பப்படும் பாலத்தைப் போல வறண்ட அரபுப்  பாலையிலிருந்து தன் பிறந்த மண்ணுக்கு கட்டப்பட்ட அரூபமான பாலம்.

சூப் கடை முதலாளியாக வரும் பாகிஸ்தானி இந்தியனான ஃபைசலைச் சீண்டிக் கொண்டேயிருக்கிறான். பகத்சிங் பற்றிப் பேச்சு வரும் போது ‘அவன் உங்கள் நாட்டு வீரன் அல்ல. நம்முடைய நாட்டு வீரன். அப்போது நாம் ஒரே நாட்டுக்காரர்கள் என்பதை நினைவில் வை’ என்று கோபமாகச் சொல்கிறான். ஆனால் பிரிகிற போது இந்தியாவைப் பற்றி மிக உயர்வாகப் பேசுகிறான். கிரிக்கெட் வீரர்களின் மைதான உரசல்கள், இருநாட்டு அரசியல்வாதிகளின் அறிக்கைப் போர்கள், ஒரு யுத்தம், சில ஆக்கிரமிப்புகள், தீராத தலைவலியான காஷ்மீர் ஊடுருவல், எல்லைப் பதட்டங்கள் இவற்றின் வழியாகவே பாகிஸ்தானியர்களை மதிப்பிடும் நமக்கு இந்த நாவலின் சித்திரங்கள் வேறொரு பார்வையை அளிக்கக் கூடும்.

இக்காமா, கபீல் இல்லாமல் வாகனத்தில் வரும்போலிஸிடம் ஒரு தமிழன், பாகிஸ்தானி, எத்தியோப்பியன், ஆப்கானிஸ்தானி, அபிசீனியன் எல்லோருமே சிக்கிக் கொள்கிறார்கள். அனைவரும் இஸ்லாமியர்கள். ஆனால் அரபி போலிஸைப் பொறுத்தவரை எல்லோரும் அஜ்னபிகளே. அந்த அபிஸீனியன் கோபமாகச் சொல்கிறான். ‘இவர்கள் எங்களிடமிருந்து வரலாற்றைத் திருடிக் கொண்டவர்கள்’. அரபிகளை ஒற்றைப்படையாகவே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு இந்தத் தகவல் கண்டிப்பாக அதிர்ச்சியளிக்கும் வாசகம் தான். அங்கும் கறுப்பு அரபிகளை வெள்ளை அரபிகள் வெறுப்பதை மீரான் படைத்துக் காட்டியிருக்கிறார். தெருவில் கறுப்பு அரபுச் சிறுவர்களுக்கும், வெள்ளை அரபுச் சிறுவர்களுக்கும் இடையே கல் சண்டை நடக்கும். ஆனால் அஜ்னபிகள் வந்து விட்டால் இருவரும் சேர்ந்து ‘அஜ்னபிகளை’ குறி வைப்பார்கள் என்பதாக மீரான்  எழுதியிருக்கிறார். ‘அஜ்னபிகள்’ எல்லோரும் கொடுமைப்படுத்தப்பட வேண்டிய அடிமைகள் என்று கருதும் துவைஜி, அந்த மனநிலைக்கான குறியீடாகவே நாவலில் படைக்கப்பட்டிருக்கிறான்.

சமயச் சடங்குகளுக்கான குறியீட்டு இடங்கள் இருப்பதால் சவுதியை உலகளாவிய  இஸ்லாத்திற்கான அடையாளமாக சிலர் முன் வைப்பதுண்டு. ஆனால் நிஜத்தில் சவுதி அமெரிக்காவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்பதற்குச் சான்றாக ஏராளமான சித்திரங்கள் நாவலெங்கும் காணக் கிடைக்கின்றன. எல்லா ஹராமும் அமெரிக்கர்களின் கேம்புகளுக்கு சர்வ சாதாரணமாக வருகின்றன. அமெரிக்கர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இதனால் கோபமடையும் மதகுருக்கள் தங்கள் ஆத்திரத்தைத் தொலைக்காட்சி டிஸ்களை சுட்டும் அஜ்னபிகளை அடித்தும் தீர்த்துக் கொள்கிறார்கள். நிலவுடைமை சமூகத்தில் மதம் அரசின் அங்கமாக இருந்தது. கார்ப்பரேட் யுகத்தில் மதம் சத்தமில்லாமல் ஓரம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும் அது விளிம்பில் இருப்பவர்களை ஒடுக்குவதையும் நவீன அரசுகள் அவற்றைக் கண்டும் காணாமல் ‘மய்யமாக’ நடந்து கொள்வதையும் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் நமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அதன் தடங்களை இந்த நாவலிலும் காண முடிகிறது.

இஸ்லாமியர்களில் இன்னொரு பிரிவினரான ஷியாக்கள் அரசாங்கம், மதகுருக்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரம்பினராலும் கடுமையாக ஒடுக்கப்படுவதையும் அவர்கள் தங்களைப் பொதுவெளியில் மறைத்துக் கொண்டு ரகசிய குழுக்களாக இயங்கி வருவதையும் இந்த நாவல் சித்திரித்திருக்கிறது. ‘ஒற்றைப்படையான இஸ்லாம்’ என்று பிறர் கட்டமைத்து வெறுப்பு அரசியலை வளர்ப்பதும், இஸ்லாமியர்களும் தம்மை அவ்வாறே கருதிக்கொண்டு மண்ணின் கலாச்சாரங்களைப் புறக்கணிப்பதும் எவ்வளவு அபத்தமானது என்பதை இந்த நாவலின் பல காட்சிகள் எடுத்துரைக்கின்றன.

காமம் இந்த நாவலெங்கும் ஒரு சர்ப்பத்தைப் போல் சீறிக் கொண்டிருக்கிறது. மனைவியை விட்டுப் பிரிந்தோ, உரிய பருவத்தில் திருமணமாகாமலோ தனித்திருக்கும் ஆண்களின் நினைவுகளில், உரையாடல்களில் அதுவே ஏறி அமர்ந்திருக்கிறது. டோக்கன் கதையும் அறையில் பேசப்படும் பாலியல் கேலிகளும் அடுத்தவர்களின் அந்தரங்கக் கடிதங்களை ரகசியமாகப் படிப்பதும் மிஷிரி நடிகையின் குலுக்கலைத் தொலைக்காட்சியில் ரசிப்பதும் ஃபைசலின் வருங்கால மனைவியின் புகைப்படத்தை ‘சரக்கு கொள்ளாம்டே’ என்று வக்கிரமாகக் கூறுவதும் நாவலெங்கும் காமத்தின் பேரிரைச்சலாகவே சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. அதன் உச்சமாக, ஃபைசல் அறையில் இருக்கும் போதே மனைவியிடம் செக்ஸ் சாட் செய்து கொண்டே நிர்வாண பொம்மையின் மீது ஏறும்  மம்மக்கண்ணின் வக்கிரம் காட்டப்பட்டிருக்கிறது. ‘பர்தாவால் முகத்தை மூடிய விழிகளின் அசைவுகளே உடலெங்கும் ஆயிரம் உணர்வுகளைப் பாய்ச்சி விடுவதாக’ ஃபைசல் உணர்கிற இடம் முக்கியமானது. பெண் உடலை ஒரு இடம் கூட மிச்சம் வைக்காமல் மூடி வைத்து விட்டால் ஒழுக்கத்தின் கொடியை உயரப் பறக்க விட்டு விடலாம் என்கிற அசட்டு நம்பிக்கைக்கு எதிரான சிறு கல் இது. கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டிலும் தொலைபேசி வாயிலான செக்ஸ் உரையாடல்கள் நிகழ்கின்றன என்பதற்கு நாள் முழுவதும் செக்ஸ் சாட் செய்து போலிஸில் சிக்கிக் கொள்ளும் கருத்தான் காதர் சாட்சியாக இருக்கிறான்.

இந்தோனேஷியப் பெண்ணான அரூஷாவுடன் ஃபைசலுக்கு ஏற்படும் உடலுறவு அவனுக்குள் குற்ற உணர்வாகவே நீடிக்கிறது. மீரான் எப்போதும் உடலுறவு சார்ந்த சித்திரிப்புகளில் ஆதாம் – ஏவாள் தொன்மத்தைப் பயன்படுத்துவார். இந்த நாவலிலும் அதே சித்திரிப்பு இடம்பெற்றிருக்கிறது. ‘சொர்க்க வெளியேற்றம்’ என்கிற புள்ளியை மையமாகக் கொண்டு ஆதாம்- ஏவாள் தொன்மம் காமம் சார்ந்த குற்ற உணர்வை நம்மைச் சுற்றி ஒரு வட்டமாக வரைந்து விடுகிறதோ என்று அவரது சித்திரிப்புகள் யோசிக்க வைக்கின்றன. வரம்புகளை மீறிய உறவில் கூட அவளுடைய  ஒழுக்கம் குறித்து அடிக்கடி மனதளவில் சந்தேகம் கொள்கிற ஃபைசலின் ஆண் மனம் மீரானால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

இந்த நாவலில் ஒரு ‘சபை’ வருகிறது. குமரி இக்பால் தான் அதன் மையம். ஆனால் அது ஜெயகாந்தனின் ஒற்றைக் குரல் சபை அல்ல. ஒரு அறிவாளி தன்னை வலிந்து முட்டாளாக, விதூஷகனாக உருமாற்றி சபையை சிரிப்பால் நிரப்பும் உரையாடல்களால் நிரம்பிய ‘சபை’. வெள்ளிக்கிழமை சவூதியில் பொது விடுமுறை. நம்முடைய நகரங்களின் சனிக்கிழமை இரவுகளின் இடத்தை அங்கு வியாழன் இரவுகள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் பார்களோ, சீட்டாட்ட விடுதிகளோ, டிஸ்கொதெ கிளப்புகளோ இல்லாத தேசத்தில் தங்கியிருக்கும் அறையே சகலமுமாகிறது. மது, சீட்டாட்டம் தடை செய்யப்பட்ட நாட்டில் அவை அறைகளில் ரகசியமாய் நிரம்பி வழிகின்றன. வக்கிரங்களும் வசைகளும் மட்டுமே நிரம்பியிருக்கும் சபையை இக்பால் வேறொன்றாக உருமாற்றுகிறார். ஒருபோதும் படம் எடுக்க வாய்ப்பேயில்லாத இக்பால் படம் எடுக்கப் போகிறேன் என்று ஒரு கற்பனையை வலிந்து உருவாக்கி கதை சொல்லி எல்லோரையும் கலகலப்பாக்குகிறார். உதவி இயக்குநராக, நடிகராக தமிழ்த் திரைப்படங்களின் ‘ஸ்டோரி  டிஸ்கஷனில்’ கலந்து கொண்ட அனுபவம் மீரான் மைதீனுக்கு இந்தச் சம்பவங்களை இயல்பாக  எழுதுவதற்கு உதவியிருக்கிறது.

குமரி இக்பால் இரு கதைகள் சொல்கிறார். ஒரு கதைக்கு ரஜினி தான் ஹீரோ. ரஜினி பள்ளிவாசல் மோதியாராக வருகிறார். தொழுகை நடத்தும் அசரத்து தான் வில்லன். பள்ளிவாசல் ஹவுள் நீரில் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. மதகுரு கோபத்தில் ரஜினிக்கு பத்வா கொடுக்கிறார். ‘நீயே ஒரு படுவா. நீ எப்டி கொடுப்ப பத்வா?’ என்கிற பஞ்ச் டயலாக்கோடு படம் தொடங்குகிறது. இந்த ‘ஸ்டோரி டிஸ்கஷனில்’ படத்தின் கதை மாற்றப்படுகிறது. ரஜினி படத்தில் மார்க்கக் கல்யாணம் செய்து வைக்கும் ஓசாவாக வருகிறார். தவறாக அறுத்ததால் அறுந்து போய் காற்றில் பறந்து வரும் குஞ்சை கேட்ச் பிடித்து ஓர் நொடியில் ஊசி வைத்துத் தைத்து தன் விரைவான ஸ்டைலில் அதே இடத்தில் பொருத்துகிற ஓசா மலுக்காக ரஜினியின் எண்ட்ரி திட்டமிடப்படுகிறது. ‘பஞ்சு நூலெடுத்து குஞ்சிய தச்சவனே’ என்று ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க ‘அவன் தான் மலுக்கு, இவன் தான் மலுக்கு’ என்று கோரஸ் வேறு. நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கும் இந்தச் சித்திரிப்புகள் வழி ஒரே நேரத்தில் சினிமாவையும் சடங்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் மதரீதியான மனோநிலையையும் மீரான் போட்டுத் தாக்கியிருக்கிறார்.

எண்ணெய் வளத்தால் மஞ்சக் குளித்துக் கொண்டிருக்கும் சவூதியின் அரபிகள் மதப் பழமைவாதத்திற்கும் கார்ப்பரேட் அரசியலுக்கும் நடுவே ஊடாடிக் கொண்டிருக்கும் தத்தளிப்பை மீரான் மைதீன் பல இடங்களில் அம்பலப்படுத்தியிருக்கிறார். மரபான இஸ்லாத்தில் உருவம் ஹராம். ஆனால் துணிக்கடைகளுக்கு விளம்பரத்திற்காக பெண் பொம்மைகள் வைத்தாக வேண்டும். அதனால் தலையில்லாத முண்டங்களாக பெண் பொம்மைகள் பெரிய மார்புகளோடு, பருத்த பின்புறங்களோடு, அபாயகரமான அல்குல் வளைவுகளோடு சகல கடைகளிலும் நின்று கொண்டிருக்கின்றன. ஷரிஅத் சட்டத்தையும் வியாபார நுணுக்கத்தையும் ஒரே நேரத்தில்  காப்பாற்றி விட்டார்களாம். அதிலொரு பொம்மையை கடத்தி வந்து தான் தன் இரவு வக்கிரத்துக்கு மம்மக்கண் பயன்படுத்திக் கொள்கிறார்.

பணமே வாழ்க்கையாகிப் போன எந்திரச் சூழலாலும் உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்காததாலும் அஜ்னபியாக சந்திக்கும் அவமானங்களாலும் அவர்களின் நட்பும் போலியாகவே இருக்கிறது.  தொலைபேசி வாயிலாகக் கேள்விப்படும் நண்பர்கள் வீட்டு மரணங்கள் மட்டுமே அவர்களுக்குள் இருக்கும் மனுஷ உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வருகின்றன. நாசரின் வாப்பா மரணம் அதற்கான உதாரணமாக நாவலில் வருகிறது. மரணத்தின் பயங்கர விஸ்வரூபம் அவர்களது வாழ்வை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் எவரும் விடை தேட முயல்வதில்லை. தற்காலிகமான கண்ணீரையும் கருணையையும் போதுமானதாகக் கருதி மீண்டும் புதைகுழிக்குள் இறங்கி விடுகிறார்கள்.

கைது செய்யப்பட்ட ஒரு அஜ்னபியோடு இரு போலிஸ்காரர்கள் பாலை மணல்வெளியில் தொழுது விட்டு கையேந்தும் சித்திரம் நாவல் கண்டடையும் தரிசனங்களில் ஒன்று. அரபியின் பிரார்த்தனையும் அஜ்னபியின் பிரார்த்தனையும் ஒன்றா? யாருடைய அல்லாவிடம் அவர்கள் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றெழும்பும் கேள்விகள் முக்கியமானவை.

நாவலில் ஒரு மெல்லிய இழையாக தத்துவம் உடன் வருகிறது. இஸ்லாமிய சமய மரபின் ஆன்மீக சாராம்சமான சூஃபியிசம் உறுத்தல் இல்லாமல் இந்த நாவலை நகர்த்திச் சென்றிருக்கிறது. குமரி இக்பாலின் உரையாடல்கள் இந்த ரசவாதத்தைச் செய்கின்றன. ( மீரான் மைதீன் சவுதியில் வேலை பார்த்தவர். ஒருவேளை அவர் தான் குமரி இக்பாலோ? ) ‘ஆதமிண்டே அபு’ என்கிற மலையாளப் படத்தின் கருவுக்கு அடிப்படையான ‘துன்னூன் மிஸ்ரி’ என்ற சூஃபியின் கதையை மீரான் மைதீன் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியிருக்கிறார். சில நேரங்களில் டோஸ் கூடி விடுவது நாவலின் பலவீனம். ஆனால் அறியப்படாத கதைக்களன் எல்லா பலவீனங்களையும் நேர்செய்து விடுகிறது.

தேசத்தைப் பொறுத்தவரை அந்நியனாக உணர்தல் என்பதைத் தாண்டி மனிதர்கள் தன் ஆன்மாவிற்கு அந்நியமாக இருக்கிறார்கள் என்கிற இடத்தை நோக்கியே நாவல் பயணிக்கிறது.

இறைவன் ஒருவன். மார்க்கம் ஒன்று என்கிற ஒருமைகளால் பன்மைப் பார்வையை வஹாபியம் நிராகரிக்கிறது. அதை விமர்சித்துக் கொண்டே மேற்குலகமும் இந்துத்துவமும் இஸ்லாமியர்களை அதே ஒற்றைப்படைத்தன்மையுடனே கட்டமைக்கிறது. ‘ஏகத்துவம் என்பது ஒன்றின் பெயரால் மற்றமைகளை நிராகரிப்பதல்ல. சகலமும் அந்த ஒன்றின் பிரதிபலிப்புகளே என்று நம்புவதே ஆகும்’ என்ற அப்துல் ரகுமானின் கருத்தை இந்த நாவலை வாசிக்கும் போது மீண்டும் நினைத்துக் கொண்டேன் .

ஃபைசலுக்கு வலி நிவாரணியாகத் தொடங்கி குற்ற உணர்வில் முடிவடையும் அரூஷா குறித்த பிம்பம், ஜாஸ்மினின் புகைப்படத்தால் கலைக்கப்படுகிறது. பிறகு அதுவும் கலைந்து போக ஃபிர்தௌஷா பானு என்கிற பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு அவன் தனக்குள் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்கிறான் ( முன்னம் அவனது நாமம் கேட்டேன் ). அந்த நம்பிக்கையே அவன் பயணத்திற்கான உந்துசக்தியாய் இருக்கிறது. எல்லாம் ஒன்றுதான். ஆனால் வெவ்வேறு ரூபங்களில் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால் தான் கொடும் பாலையிலிருந்து நாமும் ஃபைசலைப் போல் வீடு திரும்ப முடியும். அதுவரை நம் அகத்திற்கு நாமும் ‘அஜ்னபி தான்.’