நெருஞ்சிக் கனவுகளைச் சுமக்கும் வெள்ளை முகமூடிக்காரர்கள்: மைக்கேல் ஹனகேவின் திரைப்படங்கள்

0 comment

1

ஒரு வணிக இயக்குநரின் மிகச்சிறந்த திரைப்படம் என்று குறிப்பிடப்படும் ஒரு படம் எதிர்பார்த்ததைப் போலவே பல வணிக இயக்குநர்களை உருவாக்கும். அந்தத் திரைப்படத்தின் ஏறத்தாழ அப்பட்டமான மறுவார்ப்பையும் அதை விட தரம் சற்றே குறைந்த படைப்பையும் அவர்கள் எடுத்துத் தள்ளுவார்கள். இது ஒரே பொம்மையைப் பெயரை மாற்றி விற்கும் இயந்திரத்தனமான செய்கையை ஒத்தது. அதன் நோக்கம் சுய பொருளாதார முன்னேற்றம் மட்டுமே. சிலர் அதற்கென தொழில்நுட்ப வித்தைகளையும் சேர்த்திருப்பார்கள். உதாரணமாக கிறிஸ்டோபர் நோலனைப் பார்த்து இந்தியா முழுவதும் சம்பாதிக்கப்பட்ட வியாபார கோடிகளைப் பொருத்திப் பார்க்கலாம்.

ஆனால் கலைப் படைப்பாளிகளிடமிருந்து உருவாகும் படைப்பாளிகளின் தலைமுறை வேறுபட்டது. அது விழிக்கு எளிதில் புலப்படாதது. காரணம் மூலத்தில் உந்தப்பட்டவர்கள் உருவாக்கும் கதைகள் மூலத்திற்கு நிகராகவோ அல்லது மூலத்தை விடவும் சற்று மேம்பட்ட தரத்துடனோ, அல்லது மூலத்தின் நாடியை மட்டும் பிடித்துணர்ந்து அங்கிருந்து முற்றிலும் வேறொரு மெய்மையை நோக்கியோ உருவாக்கப்பட்டிருக்கும். அந்த மூலத்தினை உருவாக்குபவர்கள் கலை மேதைகளே! அதைப் பின் தொடர்வதும் படைப்பாளிகளே! அவர்களது படைப்பு தன்னையும் கடந்து செல்லும், விரித்துக் கொள்ளும் ஆற்றலையும் சேர்த்தே தன்னகத்தே முன்னவர்களது படைப்புகள் வைத்திருக்கும்.

ஆஸ்திரிய இயக்குநர் மைக்கேல் ஹனகேவின் பல படங்கள் முக்கியமானவை. அது எழுப்பி இருக்கும் இயக்குநர்களின் வரிசையும் அதேயளவு முக்கியமானது. Caché திரைப்படத்தின் கூறுமுறை திருப்பங்களை மறைத்து வைத்துக் கதை சொல்லும் முறைக்கு எதிரானது. அது திருப்பங்களை முன்னரே சொல்லிவிட்டு அதற்கான காட்சியினைப் பின் வைக்கிறது. இது பார்வையாளரது மனதில் எதிர்நோக்கிய விளைவை இருமடங்கு ஏற்படுத்துகிறது. இதே கூறுமுறையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறொரு கதைக்களத்தை Incendies திரைப்படத்தில் Denis Villenueve உருவாக்கி இருப்பார். Funny Games-இல் ஹனகே செய்ததை Dogtooth-இல் யோர்கோஸ் லாந்திமோஸும், The White Ribbon-இல் ஹனகே செய்ததை Cold War-இல் Pawel Pawlikowski-யும் செய்திருப்பார்கள். ஆனால் முற்றிலும் வேறொன்றாக இவை ஒவ்வொன்றும் தனித்துவம் பெற்றிருக்கும். நான் சொன்ன அனைவரும் உலகளவில் முக்கியத் திரைப்பட ஆளுமைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களே.

கலைப்படங்கள் உயிருள்ள நாய்க்குட்டியை உருவாக்கி பரிசளிப்பது. அதன் நினைவுகள் தீராதவை. என்றோ வேறொரு நாய்குட்டியின் மொத்தத்தில் அதன் சாயல்கள் மட்டும் தெரியும். இது என் பார்வை. CJ Holmes தனது Psychology and Scientific Method என்ற நூலில் கலைப் படைப்புகளுக்கு நான்கு அடிப்படைக் கூறுகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்கிறார். அவை, பிறிதொன்றிலாத தன்மை, ஒருமை, முடிவின்மை, கலையமைதி.

திரைப்படங்களைக் கவிதையாக எடுத்துவிடும் மேதைகள் உண்டு. முதன்மையானவரும் முதலில் அதைச் சாத்தியப்படுத்திக் காட்டியவரும் தார்க்கோவ்ஸ்கி தான். பின்னர் பலர் அப்பாதையில் பயணித்துச் சற்றே அத்தளத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இத்தகைய கவித்துவக் காட்சிகளை திரைக்கதையில் வாசித்துப் பார்த்தால் இன்னும் வேறொரு வகைச் சிலிர்ப்பு எழும். திரைக்கதை வெறும் குறிப்புகள் கொண்ட முன்வடிவம் என்றும் அதை ஒரு சூத்திரத்திற்குள் அடக்கி விட்டேன் பார், இவ்வளவுதான் என்றும் வித்தை காட்டி வகுப்பெடுத்து பேரம் செய்கிறார்கள். அது அப்படி அல்ல, மாறாக ஒரு இலக்கிய பிரதி. சிலர் அதைச் செய்தும் இருக்கின்றனர். அவர்களது திரைப்படங்களே கவிதைத்தனத்துடன் விரிகின்றன. மைக்கேல் ஹனகேவின் திரைக்கதைகள் அத்தகைய தீர்மானத்துடன் இருக்கின்றன. மைக்கெல் ஹனகேவினுடைய இவ்விரண்டு திரைக்கதைகள் மட்டுமே ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. ஒன்று அமெளர், மற்றொன்று தி வொயிட் ரிப்பன்.

உண்மையின் நிழலைத் தேடித் திரையை நோக்கும் எவருக்கும் வணிக நோக்குடன் பார்வையாளர்களின் பணத்தைத் திருடுவதற்காக எழுதப்படும் திரைக்கதைகளுக்கும் நேர்மையான மனித உணர்ச்சிகளின் படுதல்களைச் சொல்ல முனையும் மேதைகளுக்குமான வேறுபாடு எளிதில் புரிந்து விடும்.

ஹனகேவின் Funny Games-ற்குப் பிறகே அவர் வெகுவாக அறியப்பட்டார் எனினும் 2012 ஆம் ஆண்டில் வெளியான Amour திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் விருதினை வென்ற பின்னர் தான் பெரிதும் அறியப்படுகிறார். வன்முறையின் ஆதியூற்று, நிறுவனங்களின் நம்பகத்தன்மை, சக மனிதர்களின் மீது கொள்ளப்பட வேண்டிய நம்பிக்கை அவநம்பிக்கைகள் ஆகிய தளங்களை விரிவான பேசுபொருளாக்கும் முக்கியமான திரைப்படங்களாக The Piano Teacher, Funny Games, Caché, The White Ribbon, Amour ஆகியவற்றை மறுசிந்தனைக்கிடமின்றி குறிப்பிட முடியும். அவற்றுள் மிக முக்கியமான திரைப்படமாகிய The White Ribbon பற்றி மட்டுமே இக்கட்டுரை மீளாய்வு செய்கிறது.

2

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அஞ்சி இருங்கள் – குரான்.

சிறகுகளின் ஆயிரமாண்டு தொடர் படபடப்பிலிருந்து தான் பறவையின் உந்தியெழும் திறன் உருவாகிறது. அந்நினைவெழுப்பலின் குறியீட்டினைத் தான் பிறந்த எந்தவொரு சிசுவின் பிரயத்தனங்களிலும் கண்டு இன்புறுகிறோம். எங்கிருந்தோ பெற்ற ஞானம் பற்றிய அறிவுத் துணுக்குகளையெல்லாம் சேகரித்து வைத்து அதனை வினையூக்கியாய் கனல வைக்க ஆயிரமாண்டு பழக்கம் தேர்ந்து பின் நடனமிடும் மானுட அகப்பாதங்களின் இயக்கங்கள் திரண்டு மூச்சிறுகி ஒரு துளி ஞானத்தைப் பிரசவிக்கும் தருணங்கள் தான் நம்மை நாம் மீறும் அசகாய சக்தி.

அந்த ஞானத்துளி இயல்பாகவே ஒத்தத் தளத்தில் பயணிக்கும் மனங்களுக்கு மட்டுமே புலனாகிறது. அதனை மானுடம் மொத்தத்திற்கும் பயன்படுத்திட வேண்டுமென்ற ஆசை அம்மனக் கூட்டங்களில் உலவும் எதோவொரு மனதிற்குக் கிளை விடுகிறது. ஞானத்தினை குறியீடுகளாக்கி ஆண்ட்ராய்ட் செல்பேசிக்குள் சுருக்குவது போல எளிய வடிவில் பெரிய குழுவிற்குப் பரிசாக வழங்கிச் செல்கிறது.

பொக்கிஷத்தை எக்காலத்திலும் சரிவர பயன்படுத்தியேயிராத வரலாறு கொண்ட பெரும்பான்மைக் கூட்டம் அர்த்தங்களைத் தவிர்த்து விட்டு குறியீட்டின் வடிவமைப்பின் மேலேயே ஈர்ப்பு கொள்ளத் துவங்குகிறது. வடிவங்களுக்குள் ஆறுதலும் ஆசுவாசமும் தேடும் மனது ஈர்ப்பை மென்மேலும் போதையாக்கிப் பின் வெறியாக்கிக் கொள்கிறது. காலத் தீயில் குறியீடுகள் சுடப்பட்டு இன்னும் எல்லோருக்குமான அழகான வடிவத்தில் ஆபரணமாக்கப்பட்டு விடுகிறது. பெருகிக் கிடக்கும் மனித கும்பலின் முடிவிலா இருள்மனங்கள் திடீரெனத் திரண்டு வந்து நிறுவனங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

அந்நிறுவனங்கள் வருவாயினைத் தேவனாகப் பார்க்கும் இயல்பினைத் தானாக பெற்றுவிடுகின்றன. தானாக என்ன தானாக, பகுதிப் பொருட்களாக இருக்கும் மானுடர்களின் இச்சைவெறிகளின் தொகுப்பு தானே அந்நிறுவனம். அங்கு அந்த ஆதியில் பூத்த ஞானத்துளி வஞ்சிக்கப்படுகிறது, கண்கள் மறைக்கப்பட்டதைக் கூட பொருட்படுத்தாமல் கண்ணீர் சிந்திக்கொண்டே இருக்கும் அத்துளி, தான் தோன்றிய பிரபஞ்சத்தில் இணைந்து விட ஏக்கம் கொள்கிறது. மானுடத்தை வாழ வைக்கப் பிறந்த தன் பெயராலேயே மானுடச் சுடுகாட்டிற்கு விழா நடந்திடும் வேடிக்கையைப் பார்த்து தீக்கண்ணீர் சொரிகிறது. நீள்காலத்தின் ஒரு புள்ளியில் நலிந்து அந்நிறுவனங்கள் தடமில்லாமல் போய்த்தான் விடுகின்றன. ஆனால் அதற்குள் சுடுகாட்டின் மேலேயே அடுத்த கோபுரங்கள் எழுப்பப்பட்டு விடுகின்றன. கருவறையின் விழியறியா புள்ளியில் மீண்டும் மறைத்து வைக்கப்பட்டு விடுகிறது ஞானத்துளி!

சுவிஷேசங்கள் அழகான ஆழமான பொருளுடைத்தவை தான். அதன் மீதெழுப்பப்பட்ட மதத்தினால் மாண்டவர்களின் மண்டையோடுகளைக் கணக்கிடத் தான் எண்கள் உண்டா. கம்யூனிசத்தின் கொள்கைகள் மானுடத்தை உயர்த்தப் பிறந்த சொற்களின் கருத்துகளின் கோர்வை. ஆனால், நிஜத்தில் கம்யூனிசத்தால் நடந்த படுகொலைகள் ஏழு இலக்கத்தைத் தொடும். இவ்வளவு ஏன் சமாதானத்தின் மூலத்தில் எழுந்த புத்தமத நிறுவனங்களால் ஏற்பட்ட மானுட அழிவுகளை எப்படிப் புரிந்து கொள்வது. பொருளெண்ணங்களை பூட்டி வைத்துவிட்டு ஆபரண மோகம் கொள்வதில் விளைகிறது மானுட இருளின் ஆழ வேர்விட்ட மரம். வித்யம் ஞானம் மதம் ஆபரணம்; வித்யம் தெளிவு மதம் போதை.

3

ஜெர்மனியின் ஏச்வாட் என்ற கற்பனை நகரத்தில் புனையப்பட்ட சம்பவங்களின் தொகுப்பு ஒரு கதைசொல்லியின் குரலில், அவை நிகழ்ந்த நெடுநாட்களுக்கு பிறகு மங்கிய நினைவின் நதியில் நகரும் புனையின் போக்கில் சொல்லப்படுகிறது. தொன்றுதொட்டு வாய்பேச்சின் மூலமும் நீதிக்கதைகளின் மூலமும் சந்ததிகள் வழியே கடத்தப்படும் கதைகளின் தன்மையுடனேயே இதுவும் முன்வைக்கப்படுவதாலேயே அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியின் தூண்டிலில் அலைவுறுகிறது.

நகரத்தில் நிகழும் அசம்பாவிதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றிற்கென கிளைவிட்டுத் தொடர்ந்து துர்சம்பவங்களை ஏற்படுத்துகின்றன. அதில் தானறிந்தும் அறியாமலும் ஊரார் காரணமாகி விடுகின்றனர் அல்லது தொடர்புபடுத்தப் படுகின்றனர். தினசரி வாழ்க்கையின் நிலைப்பாட்டினை குலைக்கும் அவை அங்கிருக்கும் மக்களின் கூட்டு மனத்தின் மீது பரவும் காற்றின் வழியே விழியறியா வண்ணம் தொடர்ந்து சஞ்சலங்களை ஏற்படுத்துகின்றன.

அந்நகரில் அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும் மருத்துவர் குதிரைப் பயணத்தில் சந்திக்கும் விபத்தும், மறுநாளே விவசாயி ஒருவரது நலிந்த மனைவி இறக்கும் விபத்தும் வெறும் துவக்கப் புள்ளிகள் தான் என்பதை அறிந்து தெளிவுற அந்த நித்திய நாடகத்தில் பங்கு கொண்ட எவராலும் முடியவில்லை. தொடரும் துர்சம்பவங்கள் அதை நுட்பமாய் அணுகும் எவருக்கும் மேலும் மேலும் குழப்பங்களையே பதிலாகத் தருகின்றன.

கண்டிப்பான பாதிரியார் தன் பிள்ளைகளுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தர அவர்கள் இன்னல்களைச் சரியான முறையில் சகிக்கவும் கையாளவும் கற்க வேண்டும் என முறைப்படுத்துகிறார். அவரது நடவடிக்கைகள் அகண்ட தெரு இருக்கையில் கூட கோடு வரைந்து அதிலேயே நடக்க வேண்டும் என்பது போன்றது. தொடர்ந்து நீதி போதனைகளைச் செய்து, இறை அச்சத்தை விளைவித்து நல்வழிப்படுத்த முனைகிறார். ஆனால் இயற்கையின் வருடல்கள் தன் உடலிலும் மனதிலும் தூண்டும் சிறகின் தவிப்பைக் குழந்தைகள் உணராமல் போய்விடுவதில்லை.

நன்மை செய்ய விரும்பும் கண்டிப்பான பெற்றோர் மறந்து விடுவது இந்த ஒன்றைத் தான். குழந்தைகளின் மனம் நேரடியாய் பொய்களைப் புரிந்து கொண்டு விடும். தவறுகள் செய்தால் சாமி கண்களைப் பிடுங்கும் என்பது போன்ற பொய்களைக் குழந்தைகள் நம்பும் என்பது பெரியவர்களது அறியாமை. குழந்தைகள் பொய்களினால் சூழப்பட்ட உலகைக் கண்டு உண்மையை வெளிப்படுத்தத் தயங்கி தன்னுலகின் இடுக்குகளின் வழியே ஒரு நாற்காலியைக் கண்டமர்கிறார்கள். பலருக்கும் அது கடும் வன்மம் பயிற்றுவிக்கும் புதைமணல். அதைக் கண்டுகொள்ள வேண்டிய கண்களுக்கு, குறிப்பாக மதக்கோட்பாடுகளே சர்வலோக நிவாரணி என்ற எண்ணமுடைய பெற்றோர்களுக்கு நிறக்குருடே எஞ்சுகிறது.

மகளிடம் தன் மனைவியின் சாயலைப் பார்ப்பதாகச் சொல்லும் தந்தை, ஒழுக்கங்களைத் தொடர்ந்து உச்சாடனம் செய்யும் தந்தை, பிற பிள்ளைகளுக்காக மனவலியைப் பொறுத்துக் கொள்ளும் விவசாயி, மங்கொலாய்டு மகனை வைத்துக் கொண்டு அண்டை வீட்டில் பணிபுரியும் பெண் இவர்களோடு நகரத்தில் உள்ள குழந்தைகள் சிறுவர்கள் என அத்தனை பேரிடமும் ஒரு திரிபுற்ற வேடம் தோற்றமளிக்கிறது.

வெள்ளை ரிப்பன் ஒன்று தவறு செய்யும் சிறுவர்களின் கைகளில் மாசின்மையை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் வண்ணம் கட்டப்படுகிறது. அதுவே மைய உருவகமும் பொருத்தமான தலைப்புமாகிறது. அதன் கடுமை தாளாமலே வேடத்தின் செறிவு பெருகுகிறது.

4

படத்திற்குக் கருப்பு வெள்ளை வெகுவாய் பொருந்தி இருக்கிறது. முதல் உலகப் போரின் வாயிலில் நின்றுகொண்டு பல்லிளித்துக் கொண்டிருக்கும் ஜெர்மானிய நகரத்தை அது மேலும் நம்பகத்தன்மை கொள்ளச் செய்கிறது. அது மட்டுமின்றி படத்தில் அமைதியின் கோடுகளும் கருப்பு வெள்ளையின் முரணும் நிகழும் திகைப்பூட்டுதல்களுக்கு வெகுவாய் தெளிவான எல்லைக் கோடுகளை வரைந்து விடுகின்றன. இன்னும் குறிப்பாக கருப்பு வெள்ளை இக்கதையின் தன்மையோடு இணைந்து பார்வையாளர்களின் அகத்தில் பயத்தின் கோர்வையைக் கற்பனை செய்து கொள்ள வைக்கிறது. நேரடியாக அதீத வன்முறை காட்சிகளோ, பீதியூட்டும் ஒலியமைப்புகளோ இல்லாவிட்டாலும் அத்தகைய உணர்வுகளை மனதிற்குள் ஏற்படுத்தி விடுகிறது. இத்திரைப்படம் 2000ற்குப் பிறகு வெளியான சிறந்த கருப்பு வெள்ளை படங்களுள் ஒன்று என்பது பார்த்த எவருக்கும் திண்ணமாகப் புலனாகும்.

கருப்பு வெள்ளையால் உருவாகி இருக்கும் நிதானம் இயக்குநரின் கூற்று மற்றும் மேதமை. இதை முன்னோடியாக எடுத்துக் கொண்டு இன்று வரை சிறந்த திரைப்படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. உதாரணமாக பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் Cold War-ஐச் சொல்லாம்.  நேரடியாகச் சொல்லாமலேயே ஒரு போர் பற்றிய திரைப்படத்தைச் சொல்லிவிடுவது சாகசச் செயல்.

5

தி வொயிட் ரிப்பனில் நிகழும் விந்தைகள், சம்பவங்கள், மனவோட்டங்கள், மனவிருளின் ஊர்தல் என அத்தனையையும் திரைக்கதையாகப் படிக்கையில் இன்னும் நெருக்கமாக உணர முடியும்.

ஒரு நல்ல நூலுக்கென்று ஒரு சிறப்பு அல்லது தகுதி இருக்கிறது. அந்த நூலினை முழுமையாகப் பூர்த்தி செய்த பின்னர் வரும் உணர்வு பற்றி நான் கூற முற்படவில்லை; மாறாக அதன் பகுதிப் பொருட்களை, பற்றிச் சொல்ல முனைகிறேன். ஒரு சிறந்த நூலின் ஏதோவொரு பகுதியை தற்செயலாகத் திறந்து பார்த்தால் பீறிடும் ஒருதுளி வெளிச்சம் லேசரின் செறிவுடன் அடிக்கும் அல்லது தேன் குழையும் காட்சி ஒன்று தவழ்ந்து நம்மை நோக்கி வரும்.

இதை ஒரு சிறந்த திரைக்கதைக்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு திரைக்கதை வாசிக்கப்படும் போது அதில் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சியை வாசிக்கையில் அதனளவிலேயே ஒரு முழுமையும், தனித்திசை நோக்கிச் செலுத்தப்பட்ட தோட்டாவின் விசையும் காணப்படின் அது சிறந்த திரைக்கதை என துணிபிட முடியும். இத்திரைக்கதையிலும் அத்தகைய அனுபவத்தைப் பெற முடியும். ஒரு காட்சி குழந்தைகளின் மரணத்தைப் பற்றிய உளவோட்டங்களிலிருந்து உருவாகும் பெருவியப்பைப் பற்றிச் சொன்னால், அடுத்தக் காட்சி குழந்தைகளின் ஒரு மரியாதையின்மையிலிருந்து மரியாதையான பண்பிற்குக் கணத்தில் மாறும் விந்தையையும் சொல்லி விடுகிறது. இரண்டும் தனித்தனியே அதனளவில் குழந்தைகளின் நடத்தைகளைப் பற்றி முழுமையான மனச்சித்திரத்தைத் தந்து விடுகின்றன. ஒரு தருணம் பசிக்கு வாடும் வாய்களை நிரப்பிடத் தவிக்கும் ஏழையின் கனவுகளைச் சொல்லும் போதே, மற்றொரு காட்சி பணத்தில் கொழிக்கும் செல்வச் சீமாட்டி தன் மகன் மீது கொள்ளும் பரிதவிப்பையும் சொல்லி விடுகிறது.

இப்படித் தனித்தனியாக வெடித்துக் கிளம்பும் கதைகள் ஒன்றோடொன்று மோதி முழுமையான ஒரு தொகுவிசையினை நோக்கி நம் மனதை இழுத்துச் செல்கிறது. அவ்விசையால் திறக்கப்படும் கதவிற்கு அப்பால் உறைந்திருந்த மனம் சட்டென உருகி வழிந்தோடும் மாயம் நிகழ்கிறது.

படத்தின் இறுதிக் காட்சிகளில் முதல் உலகப்போர் எனும் காட்டுத்தீயினைத் தூண்டிய அக்கினிக் குஞ்சான ‘ஆர்ச் டியூக் பெர்டினாண்டின் செராஜிவோ படுகொலை’ பற்றிய குறிப்பு வருகிறது. காலக்கோட்டில் கதை நகரும் பிடிப்பு மிகத் தெளிவான அதேசமயம் உறுத்தலற்ற குறிப்புகளுடன் தொடர்ந்து வருகிறது. கதைகூறி வெகு காலத்திற்குப் பிறகு இக்கதையைச் சொல்லி “இன்றைய நிலைக்கான மனித அமைப்பினைப் பற்றிய விதைகள் விதைக்கப்பட்ட காலத்தைப் பற்றிய கதை” என்னும் குரல் நம்முள் விழுகிறது. முதல் உலகப் போரின் ஆரம்பத்தில் பதின்வயதில் இருந்த சிறுவர்களால் பின்னர் நாஜிப்படைகள் உறுதியடைந்து இரண்டாம் உலகப்போரின் அளவிடா வன்மங்களின் கடலைகளை ஏற்படுத்தியதாய் ஒரு மறைமுகக் கருத்து உருவெடுக்கிறது.

நல்ல திரைக்கதையின் மற்றுமொரு தனித்துவம், அது பதில்களைத் தராமல் கேள்விகளை எழுப்பும். பதில்களைத் தந்து ’திருநீறு பூசிக்கொள் பேய் வராது’ என்பது போன்ற மழுப்பல்களைச் செய்வது வணிக சினிமாவின் நோக்கம். பார்வையாளர்கள் மனதில் சரியான கேள்விகள் எழுந்தால் இன்றைய தமிழ் சினிமாவில் புழங்கும் வர்த்தகநரிகளின் உணவு என்னாகும்? ஹனகே தனது எல்லா திரைப்படங்களையும் போலவே இத்திரைக்கதையிலும் முடிவிலாத மானுட நடப்புகளையும் விளைவுகளையும் தீராத சங்கிலித்தொடர் உணர்வுகளால் நிகழும் வரலாற்றுச் சலனங்களையும் கேள்விகளாக மட்டுமே முன்வைக்கிறார். பல சம்பவங்களுக்கும் அதை செய்தவர் யார் என்ற பதில் சொல்லப்படாமலேயே செல்கிறது. ஆனால், பார்வையாளரது ஊகத்திற்கு இடமிருக்கவே செய்கிறது, குழந்தை கேட்கும் கதையைப் போல.

கதைகூறியின் சொற்களில் செராஜிவோ படுகொலைக்குப் பிறகு “போர் என்ற சொல்லை முதலில் சொன்னவர் எவரென்று தெரியவில்லை; ஆனால் நிச்சயம் இத்தகைய போர் நிகழும் என்று நினைத்து சொல்லி இருக்க மாட்டார்” என்று ஒரு வாக்கு வருகிறது.

அந்த காலத்திலெல்லாம் ஒளிமயமான பொருளாதார வாழ்க்கை இருந்ததோ இல்லையோ மனிதர்கள் அறத்தின் பால் நடத்தை கொள்ளும் பண்புடையவர்களாக இருந்தார்கள் என்று சொல்லும் நினைவேக்க மாந்தர்களுக்கு உண்மையைச் சொல்லி கேலி செய்யும் திரைக்கதை. உண்மையில் நாளைய வன்முறை என்பது, இன்று இன்ன இன்ன சித்தாந்தங்களால் தீமையின் ஜுவாலையை வென்று விட்டதாகச் சொல்லி குருதிக்கனவுகளை வலிந்து சிறிய பைக்குள் அடைத்து விட்டு உள்ளிருந்து திமிறிக் கொண்டிருக்கும் ஓநாய்க்குத் தீனியிடுவது போன்றது. துரதிருஷ்டவசமாக தலைமுறைகளுக்கும் அத்தகைய நெருக்குதல்களே நலம் பயக்கும் என்று மதத்தோலால் நெய்த கயிறுகளைக் கொண்டு கழுத்திறுக்கி விடுகிறார்கள்.

6

மன அழுத்ததின் வெயிலில் பார்வையாளர்கள் சிதைந்து விடாமல் காக்கும் வண்ணம் ஒரு சில இடங்களில் சற்றே நிழலைப் போல இத்திரைப்படத்தில் வருவது இரு உறவுகளின் காட்சிகளே. பள்ளி ஆசிரியர் எவாவிடம் கொள்ளும் காதல். எவாவின் வெட்கமும் மாசற்ற தன்மையும் ஒரு ஆறுதல் தான். இன்னுமொரு அழகான உறவு ஃப்ளோரியனுக்கும் அவனது கண்டிப்பான பாதிரி தந்தைக்கும் இடையே நிகழும் உரையாடல் காட்சிகள். அடிபட்ட சிறுபறவையினைத் தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்து பின் தயங்கி வெளியெடுத்து தன் தந்தையிடம் அதை வளர்க்க அனுமதி பெறும் காட்சி. தனக்கு அப்படியே அந்த மழலையை அள்ளி எடுக்க வரும் திணவைக் கட்டுபடுத்தி தந்தையாய் நிலைப்புடன் அனுமதி அளிப்பார் தந்தை. அற்புதமான காட்சிகளுள் ஒன்று! எவாவும் ஃப்ளோரியனும் அக்கொடும் உலகில் மாசின்மையையும் அமைதியையும் நினைவூட்டும் வெள்ளை ரிப்பன்கள்.

பிடித்த காட்சிகள் என்று எதைச் சொல்வது எதை விடுவது என்ற எண்ணம் வரும்போதே மனம் தளும்பி தள்ளாட்டம் கொள்கிறது. குறைந்தது ஐம்பது தருணங்களிலேனும் நேர்மையான பதிவுகளுடனும் அழகியலுடனும் நிறைந்திருக்கிறது இத்திரைப்படம். கலைப்படமே எனினும் இத்திரைப்படத்தின் புதிர்த்தன்மை வெகுசன பார்வையாளர்களையும் ஈர்த்துக் கொள்ளும் திறன் பெற்றது. நிர்வாணத்தின் சத்தியத்தை அல்லது சத்தியத்தின் நிர்வாணத்தை அகப்படுத்திக் கொண்ட கண்கள் மட்டும் பார்வையாளருக்கு இருந்துவிட்டால் முழுமையாக ரசிக்கலாம்.