மித்ரா – தீபு ஹரி

0 comment

“People don’t have ideas, ideas have people.” – Carl Jung

மித்ரா இறந்து போயிருந்தாள். ஆனால் அது கனவிலா, நிஜத்திலா என்று தெரியவில்லை. அவளுக்குச் சமீப காலமாக, பல நேரங்களில் தன்னுடைய இருப்பு குறித்து நிறைய சந்தேகங்கள் வருகின்றன. தன்னுடைய இருப்பு என்பது நிஜ உலகத்தில் இருக்கிறதா, இல்லை தான் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உயிரினமா என்ற கடுமையான சந்தேகம் அவளுடைய மூளையை அரித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலான நேரங்களில் அவளால் கனவுக்கும் உண்மைக்குமான வேறுபாட்டை இனம் பிரித்துக் காண முடியவில்லை.

போன வாரத்தில் ஒரு நாள் லிஃப்ட்  வேலை செய்யாமல் போன அன்று, அவள் படிகளில் கீழிறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று அவள் நின்று கொண்டிருந்த படியைத் தவிர மற்ற படிகள் எல்லாம் உருகி அவள் கண்ணெதிரே குழம்பிய வெள்ளித் திரவம் போல ஓடிக்கொண்டிருந்தது. அவள் பயந்து போய் கைப்பிடிச் சுவரை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு மேலே திரும்பிப் போய் விட எத்தனித்த போது, அங்கேயிருந்த லிஃப்டும் படிகளும் வீடுகளும் கூடக் காணாமல் போயிருந்தன. இவள் நின்று கொண்டிருந்த படி ஒன்றுதான் அவ்வளவு பெரிய கட்டிடத்தில் எஞ்சியிருந்தது. ஆனால் அது கனவில்லை என்பதைப் பிற்பாடு தெரிந்து கொண்டாள்.

இரண்டாவதாக நடந்த இன்னொரு சம்பவத்தின் பிறகு தான் அவளுக்குத் தன்னுடைய மனநலத்தைப் பற்றிய சந்தேகம் அதிகமாகியது. அன்று மித்ரா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். திடீரென அவளுடைய அறைச் சுவர்களின் சிறு சிறு துளைகளின் வழியே தண்ணீர் கசிய ஆரம்பித்து, முடிவில் அது ஒரு பெரிய கடலாக மாறியது. திகைப்பூட்டும்படியான அத்தகைய நீலத்தை, அத்தனை நிச்சலனமான நீரைத் தன் வாழ்நாளில் அவள் கண்டதில்லை. அவளுடைய கட்டில் அந்தக் கடல் மீது மிதந்து கொண்டிருக்கிறது. அதற்கு சிறிது தொலைவில், வெளிர் நிறத்தில் சிவப்பு வரிகளோடிய ஒரு பெரிய தாமரை. அது மிதந்து மிதந்து அவளருகே வருகிறது. கடலில் எங்கிருந்து இவ்வளவு பெரிய தாமரை வந்ததென்று அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது. அவள் திகைத்துக் கொண்டிருக்கும் போதே, நிர்மலன், மித்ராவும் அவனுமாய் D-ஸ்டோரில் மாமிசம் நறுக்கவென்று ஆசை ஆசையாய் வாங்கி வந்த பளபளப்பான பெரிய கத்தியை, அவளுடைய வயிற்றுக்கு நேர் மேலே உயர்த்தியபடி நிற்கிறான். அந்தக் கத்தி, மித்ராவுக்கும், மித்ராவின் வயிற்றில் இறங்குவதற்கும் இடையில் கால் நொடி கால அவகாசமே இருந்தது.

அவள் திடுக்கிட்டு எழுந்த போது அறையில் யாருமில்லை. ரிமோட்டை எடுத்து ஏசி குளிரை மட்டுப்படுத்தி விட்டு அவள் வெளியே சென்ற போது, நிர்மலன்  ஹாலில் அமர்ந்து தன்னுடைய மடிக்கணினியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தான். அவனருகே துண்டுகளாக நறுக்கப்பட்ட பச்சை ஆப்பிள் ஒன்றும், அதே பெரிய ஜெர்மன் தயாரிப்புக் கத்தியும் இருந்தது. அரவம் கேட்டுத் தலை உயர்த்தியவன் மித்ராவைப் பார்த்துப் புன்னகைத்தான். மித்ரா சிறிய பதட்டத்தோடு அவனைப் பார்த்து புன்னகைக்க  முயற்சித்து, அவசரமாக அறைக்குத் திரும்பினாள். அன்றைக்குப் படுக்கும் முன் அறைக் கதவை கவனமாகத் தாழிட்டுக் கொண்டாள்.

அலுவலக இடைவேளையில், மித்ரா, மதியிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்ட போது, அவன் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பினான். “சும்மா கண்டதையும் யோசிக்காதே, உன்னைக் கொல்ல என்ன மோட்டிவ் இருக்கு நிர்மலனுக்கு?” என்று சமாதானம் கூறினான். மேலும் ஒரு பிரபலமான மனநல மருத்துவர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு, தன்னால் இந்த வார இறுதியில் அவரிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்க முடியும் என்றும், மித்ரா விரும்பினால் அவளை அங்கே அழைத்துப் போவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கூறினான். மித்ரா ஒரு புன்னகையோடு அதை மறுத்துத் தலையசைத்தபடி தன்னுடைய கேபினுக்குத் திரும்பினாள். அவளுடைய படுக்கையறையில் சிறிய சிறிய காமெராக்களைப் பொருத்தி நிர்மலன் அவளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதையும் அவளுடைய முகநூலையும் வாட்ஸப் செயலியையும் அவன் உளவு பார்த்துக் கொண்டிருப்பதையும் பற்றி அவனிடம் சொல்லாதது குறித்து அவளுக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. யார் கண்டது? இப்போது இவன் கூட அவனுடைய ஆளாக மாறியிருக்கலாம். தான் அலுவலகத்தில் என்ன செய்கிறோம், யார் யாரிடம் பேசுகிறோம், எங்கே போகிறோம் என்பதை எல்லாம் இப்போது நிர்மலனுக்குச் சொல்வது இவனாகக் கூட இருக்கலாம். மித்ராவுக்கு திடீரென்று தன்னைச் சுற்றி இருக்கிற எல்லோர் மேலும் சந்தேகம் வந்தது. தன்னை இவர்கள் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருப்பது போலவும், தனக்கு எதிராக ஏதோ செய்ய அனைவரும் திட்டமிடுவது போலவும் உணர்ந்தாள். அது அன்றைய நாள் முழுவதும் அவளுடைய அமைதியைக் குலைத்தபடி இருந்தது.

“All are lunatics, but he who can analyze his delusion is called a philosopher.” – Ambrose Bierce

மித்ராவுக்கு முதலில் இதெல்லாம் கனவா, நிஜமா என்பதைக் கண்டறிய முடிந்துவிட்டாலே தன்னுடைய பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்று நம்பினாள். அதற்காக எடுத்த உடனேயே எந்த மருத்துவரிடமும் ஆலோசனை பெற அவள் விரும்பவில்லை. முக்கியமாக மதி பரிந்துரை செய்த அந்த மருத்துவரின் மேல் அவளுக்கு சிறிது கூட நம்பிக்கை இல்லை. அவர்களை விட தனக்கே அதிகம் தெரியும் என்று உறுதியாக நம்பினாள். எனவே, ஆன்லைனில் அவளுடைய பிரச்சினையைக் குறிப்பிட்டு, அதற்கு ஏதாவது தீர்வு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று வேலை நேரம் போக மற்ற நேரங்களிலெல்லாம் தீவிரமாகத் தேடத்  தொடங்கினாள். அப்போது அவளுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன.

பல வேளைகளில் அவளுக்கு வருவது கனவுதான் என்றாலும், சில வேளைகளில் அவளுக்கு வருவது auditory மற்றும் visuval hallucination என்று சொல்லப்படும் மனோவியல் சம்பந்தப்பட்ட பிரசினைகள் என்பதைத் தெரிந்து கொண்டாள். தன்னை யாரோ சதாசர்வ காலமும் கண்காணிப்பதைப் போல தான் உணர்வது delusion எனப்படும் மனப்பிரமையில் ஒரு வகை என்பதையும் அறிந்து கொண்டாள். அவள் கனவில் அடிக்கடி வருகிற பச்சை நிற பலூனும், சலனமற்ற நீரில், பிற்பகல் வெயிலில் மிதந்தபடியே இருக்கும் தாமரையையும், நள்ளிரவில், கிசுகிசுப்பான குரலில் தன்னிடம் பேசும் எண்ணற்ற குரல்களையும் நினைத்த போது அவளுக்கு பயமாக இருந்தது. புத்தகங்களிலும் வெப்சைட்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும், பல பிரிவுகளும், உட்பிரிவுகளும் கொண்ட  மனோவியல் சம்பந்தப்பட்ட முக்கால்வாசிப் பிரசினைகள் தனக்கும் இருக்கிறது என்று நம்பத் தொடங்கினாள். இனிமேலும் தள்ளிப் போடுவது எந்த வகையிலும் தனக்கு நல்லதாக முடியாது என்பதை உணர்ந்து பல பேர் பரிந்துரைத்திருந்த நல்ல மருத்துவமனை ஒன்றையும், அதில் பணிபுரிகிற சிறந்த மருத்துவர் ஒருவரையும் கண்டுபிடித்து அந்த வார ஞாயிறன்று சந்திக்க முன்பதிவு செய்து கொண்டாள்.

***

மேடவாக்கத்தில், மரங்களடர்ந்த, உள்ளொடுங்கிய தெருவொன்றில், அந்த மருத்துவமனை அமைந்திருந்தது. மித்ரா உள்ளே போன போது வரவேற்பறையில் இரண்டு பேர் மட்டுமே காத்துக் கொண்டிருந்தனர். அந்த இடம் முழுவதும் மிகத் தூய்மையாகவும், மிக அமைதியாகவும் இருந்தது. மித்ரா நீண்ட வரவேற்பு மேசைக்குப் பின்னே மெல்லிய நீல வண்ணத்தில் சேலை அணிந்து தன்னைப் பார்த்துச் சினேகமாக புன்னகைத்த அந்தப் பெண்ணை நோக்கி நகர்ந்து, தன்னுடைய பெயரையும், தான் சந்திக்க பதிவு செய்திருக்கும் மருத்துவரின் பெயரையும் குறிப்பிட்டாள். அந்தப் பெண் கோப்பு ஒன்றை எடுத்து மித்ராவின் வயது, வேலை, அவளுடைய பிரச்சினை சம்பந்தமான சிறிய குறிப்பு எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு அதை அவளிடமே கொடுத்து, மருத்துவரின் அறைக்குள் அனுப்பினாள்.

உள்ளே நுழைந்து வெகு நேரமாகியும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஒரு மணிநேர ஆலோசனைக்கு அந்த மருத்துவமனையில் ஆயிரத்து ஐநூறு வாங்கினார்கள். அங்கே முதல் முறை சென்றிருக்கிறோம் என்றால் அதற்குத் தனியாக மூவாயிரம் ரூபாய். இவ்வளவு பணத்தைக் கொடுத்து விட்டு தான் ஏன் எதுவும் பேசாமல் உட்கார்ந்து இருக்கிறோம் என்று மித்ராவுக்கே திகைப்பாக இருந்தது.

“நீங்கள் உள்ளே வந்து அரைமணி நேரமாகி விட்டது. நீங்கள் உங்களுடைய பிரச்னையைச் சொன்னால் தான், உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று என்னால் யோசிக்க முடியும்” என்று மறுபடியும் கூறி மித்ராவை நோக்கிப் புன்னகைத்தார் மருத்துவர்.

மித்ரா மீண்டுமொருமுறை உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, “எனக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. எதுவும் பேசாமல் இங்கேயே இப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டும் போல இருக்கிறது” என்றாள்.

மருத்துவர் அவளை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இங்கே தங்குவதற்கு அறைகள் இருக்கிறதா? எனக்குத் தொடர்ந்து உறங்க வேண்டும் போல இருக்கிறது. எந்தத் தொந்தரவும் இல்லாமல், யாரோடும் பேசாமல், கனவுகள் காணாமல், எதையும் செய்யாமல், எதைப் பற்றியும் யோசிக்காமல், நல்ல தூக்கம் ஒன்று தூங்க வேண்டும் போல இருக்கிறது. உங்களிடம் கனவுகள் வருவதைத் தடுக்கிற மாத்திரைகள் இருக்கிறதா?  உங்களால் என்னைத் தூங்க வைக்க முடியுமா?”

அதன் பிறகு அவள் அவரிடம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியபடியே இருந்தாள்.

***

மித்ரா மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டும் வைத்துக் கொண்டு, தானாகத் தேடி வாங்கிய உறக்க மாத்திரைகளையும் இருமல் மருந்து புட்டிகளையும் எடுத்துக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தாள். எந்த பிரச்சினையும் இல்லாமல் உறங்க, தான் பரிந்துரைத்திருக்கிற மாத்திரைகளே போதுமானது என்றும் இனி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் உறக்கத்திற்காக எந்த மருந்தையும் உபயோகப்படுத்தக் கூடாது என்றும் சொல்லியிருந்தார். மித்ரா அவர் பரிந்துரை செய்திருந்த மருந்துகளோடு கூடவே மாலை வேளைகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பயிற்சி செய்தாள். அது அவளுக்கு சிறிது ஆசுவாசத்தை அளித்தது. நீண்ட நாட்கள் கழித்து, தான் நிம்மதியாக உறங்குவதை மித்ரா உணர்ந்தாள். அவள் எப்போதும் விரும்புகிறபடியே அது எந்தக் கனவுகளுமற்ற உறக்கமாக இருந்தது.

Reality is just a crutch for people who can’t handle drugs.” – Robin Williams

Pink Floyd-ன் ‘uncomfortably numb’ அறை முழுவதும் நிரம்பி இருந்தது. மித்ரா கலவியின் உச்சத்தில் இருப்பவளைப் போன்று கண்களை மூடி இருந்தாள். இமைகளை பிரிக்க முடியாத அளவிற்கு அவளுக்கு கிறக்கமாக இருந்தது. நாவு தாகத்தில் உலர்ந்து போய் தண்ணீரைத் துழாவின. இசை முடியாமல் நீண்டு கொண்டே இருந்தது. கடவுளே, கடவுளே, இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்த இசை எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது? என் தலைக்குள்ளிருந்தா, இல்லை வெளியிருந்தா? நான் எங்கேயோ விழுந்து கொண்டிருக்கிறேனா? விழவில்லையா? பின்னே? மிதக்கிறேனா? சரி ஏன்? எதற்கு? எங்கே? கேள்விக்குறிகள் அந்த அறை முழுவதும் மாரிக்கால ஈசல்களைப் போல பறந்தன. மித்ரா தலையைப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. நிச்சயமாக இந்த இரவு முடிவதற்குள் தன்னுடைய தலை சுக்கு நூறாய் வெடித்து, தான் இறந்து விடப் போகிறோம் என்று தீவிரமாக நம்பினாள். அப்போது ஒரு பெரிய ஓலம் ஒரு இசைக்குறிப்பைப் போல தொடர்ந்து அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கத் தொடங்கியது. அவள் கால்களை நெஞ்சோடு சேர்த்து அழுத்திக் கொண்டு இரு கைகளாலும் தன் காதுகளை இறுகப் பொத்திக் கொண்டு, தான் இறக்கப் போகும் நேரத்திற்காகக் காத்திருந்தாள்.

***

இந்த முறை நிர்மலனும் அம்மாவும் உடன் வந்திருந்தார்கள். மித்ரா மருத்துவரின் அறைக்குள் நுழைந்தவுடன் நேராகச் சென்று அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். தன்னை எங்கேயும் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் இங்கேயே ஒரு அறையை ஒதுக்கிச் சாப்பாடு, மாத்திரை எல்லாம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளும்படியும் அவரிடம் வேண்டினாள். இடையில் ஐந்து தவணைகளாக அவள் ஏன் வந்து தன்னைப் பார்க்கவில்லை என்று அவர் கேட்ட போது, மித்ரா, அவள் மாத்திரையைப் போட்டுக் கொண்டு உறங்கும் போது, நிர்மலனோ, அம்மாவோ தன்னைக் கொலை செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கிறது. எனவே மாத்திரைகளைத் தவிர்த்து விட்டு விழித்திருக்க வேண்டியதாயிற்று என்று வருத்தத்தோடு கூறினாள்.

மருத்துவர் மித்ராவை வெளியே அனுப்பிவிட்டு அவளுடைய அம்மாவை அழைத்தார். அவள் அச்சமும் பரிதவிப்புமாக உள்ளே வந்து அமர்ந்து அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தாள். அவளுடைய குடும்பத்திலும் சரி, அவளுடைய கணவரின் குடும்ப வழியிலும் சரி, இது போன்ற மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கும் இருந்ததில்லை என்று தெரிவித்தாள். வேறு ஏதாவது குறிப்பிட்டுச் சொல்லும்படியான விஷயங்கள், அவளை பாதிக்கிற மாதிரி எப்போதாவது நடந்திருக்கிறதா என்று கேட்ட போது, அப்படி எதுவும் இல்லையென்றும், சிறு வயதில் இருந்தே யாருடனும் அதிகம் பேசாத குழந்தையாகவும், விளையாடாத குழந்தையாகவும் தான் அவள் வளர்ந்தாள் என்றும், அதுவும் மித்ராவுடைய தந்தை மித்ரா சின்னப் பெண்ணாக இருக்கும் போதே ஒரு விபத்தில் இறந்து விட்டதால், நாங்களும் ரொம்ப அதிகமாக வெளியில் போவது வருவது இல்லை, அவளையும் பாதுகாப்புக் கருதி ஒன்பதாவதில் இருந்தே விடுதியில் விட்டுத்தான் படிக்க வைத்தோம் என்றாள். பிறகு நினைவு வந்தது போல், ஒரே ஒரு முறை மட்டும், கல்லூரியில் படிக்கும் சமயத்தில், மித்ரா தொலைபேசியில் தன்னை அழைத்து, தொடர்ந்து ஒரு மாதமாக உறங்க முடியவில்லை என்று அழுததாகவும், தானும், தன் தம்பியும் போய் அவளை அழைத்து வந்து, கோவிலுக்கெல்லாம் கூட்டிப் போய் ஒரு வாரம் கழித்து சரியான பின், திரும்ப விடுதிக்கு அனுப்பி வைத்ததாகவும் சொன்னாள்.

***

மித்ரா, கார்த்திகா சொன்னபடி, ஞாயிறன்று காலையே வீட்டிலிருந்து கிளம்பி சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து விட்டாள். நேரம் ஆக ஆக அவளுக்குப் பதட்டமாக இருந்தது. வந்து விடுவாளா? இல்லை ஏதாவது காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்து விடுவாளா? இரண்டு முழு ரிங் போன பிறகும் அவள் பதிலளிக்கவுமில்லை. திரும்பக் கூப்பிடவுமில்லை. பேசாமல்  நித்யாவையும் ரஞ்சனியையும் போல நாளைக்கே வந்திருக்கலாம் எனப் பலவற்றையும் யோசித்தபடி அவள் படுத்துக் கொண்டிருந்தாள். யாரோ வரும் அரவத்தைத் தொடர்ந்து செருப்பைக் கழற்றி விடும் ஒலி. மித்ரா ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் எழுந்து அமர்ந்த போது, கார்த்திகா தடாலெனக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். மித்ரா சந்தோசமாகக் கூச்சலிட்டபடியே எழுந்து ஓடி அவளைக் கட்டிக்கொண்டு “கிடைச்சுதா? கொண்டு வந்தியா?” என சந்தோசம் கலந்த பதட்டத்தோடு அவளிடம் கேட்ட போது, அவள் சிரித்துக் கொண்டே அவள் கைப்பையை திறந்து, இரண்டு முழு அட்டை மாத்திரைகளை எடுத்து அவள் முகத்துக்கெதிரே ஆட்டிவிட்டுப் படுக்கையில் விசிறினாள். “இன்னிக்கு சீக்கிரம் சாப்டுட்டு ரூமுக்கு வந்துடலாம்” என அவள் சிரித்துக் கொண்டே சொன்ன போது , மித்ரா அவளை இழுத்து தன் மொத்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும்படியாக முத்தமிட்டு விட்டு, படுக்கையில் கிடந்த மாத்திரைகள் மீது ஆசையாக விழுந்தாள்.

Where does a thought go when it’s forgotten?” – Sigmund Freud

“பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம் தான் எங்களுடையது” என்று பதிலளித்தான் நிர்மலன். செக்ஸைப் பொறுத்தவரை அதில் அவளுக்கு அதீத ஆர்வமோ அல்லது அதீதமான வெறுப்போ எப்போதும் இருந்ததில்லை. மிக இயல்பாக திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இருக்கும் ஆர்வம் தங்களுக்கும் இருந்தது என்றும் அதில் பெரிய சிக்கலொன்றும் இருந்ததில்லை என்று தெரிவித்தான்.

இந்தப் பிரசினைகள் எல்லாம் எப்போது ஆரம்பித்தது என்று கேட்ட போது, திருமணம் முடிந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு, தான் பனிரெண்டு நாட்கள் அலுவலக விஷயமாக வெளியூர் சென்ற போது தான் இதெல்லாம் தொடங்கியது என்றான்.

ஊர் திரும்ப வெறும் மூன்று நாட்களே இருந்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவில் மித்ரா தொலைபேசியில் அழைத்து, “நிர்மலன் நீ ரொம்ப நல்லவன் தான். ஆனாலும் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நாம் ரொம்பத் தவறான முடிவை எடுத்துவிட்டோம். நீ நான் நினைக்கிற மாதிரியான ஆள் இல்லை. இதோ இப்போது கூட ஒரு பறவையாக மாறி இந்த மொட்டை மாடிச் சுவரில் இருந்து விர்ரென்று பறந்து போய் விட நினைக்கிறேன். நீ இப்படியெல்லாம் எப்போதாவது நினைத்திருக்கிறாயா? இல்லையென்றால் நாம் கண்டு முடித்த பிறகு கனவுகள் எல்லாம் எங்கே போகின்றன என்றாவது யோசித்திருக்கிறாயா?” என்று ஏதேதோ கேட்டாள். எனக்கு ரொம்ப பயமாகி விட்டது. இத்தனை நாட்களில் அவள் ஒருமுறை கூட இப்படிப் பேசியதில்லை.

நான் பதறிப் போய் அவளிடம், “இப்போது நீ எங்கே  இருக்கிறாய்? உன் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டதை எல்லாம் அவள் பொருட்படுத்தவே இல்லை. “ஆனால் உனக்குத் தெரியுமா? இப்படியெல்லாம் மௌனி யோசித்திருக்கிறார், பிராய்ட் யோசித்திருக்கிறார். ஆனால் என் விதி நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டேன்” என்று சொல்லிச் சிரிக்கிறாள். யோசித்துப் பாருங்கள் நான் குர்கானில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அவசரத்துக்கு விமானத்தில் கூட உடனடிப் பதிவு செய்து வர முடியாது. பக்கத்துக்கு வீட்டிற்கு அழைத்தால் அவர்களும் வீடு பூட்டி இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். அவளுடைய நண்பர்களில் சிலருக்கு அவள் எங்கே போனாள் என்று தெரியவில்லை. சிலர் என்னுடைய அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. அவள் வீட்டிற்கோ, என் வீட்டிற்கோ அழைத்துச் சொல்லவும் எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குச் சென்னை புறப்பட இருந்த விமானத்தில் பதிவு செய்துவிட்டு, அந்த இரவு முழுவதும் என் கண்ணெதிரே நேரம் நொடி நொடியாக நகர்ந்து கொண்டிருந்ததை மனம் நடுங்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலையில் அழைத்தால் எதுவுமே நடக்காத மாதிரி, “ஏன் இப்போவே வர, அதான் இன்னும் மூணு நாள் இருக்கில்லே” என்கிறாள். இரவு பேசிய ஒரு வார்த்தை கூட அவளுக்கு நினைவில்லை. இப்படி ஒன்று நடந்தது என்பதை அறியாதவள் போலவே என்னிடம் பேசினாள்.

***

மதி நான்கு முறை அழைத்திருந்தான். மித்ரா தொலைபேசியை சைலண்ட் மோடில் வைத்து விட்டு இன்னும் மூன்று நாட்களில் முடித்துக் கொடுத்தாக வேண்டிய ஒரு கட்டுரைக்காக சில புத்தகங்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள். தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்ந்து, மீண்டும் புத்தகத்தைப் பிரிக்கும் முன், எதேச்சையாக தன்னுடைய மொபைலை எடுத்து அவள் பார்த்த போதுதான் அவன் அவ்வளவு முறை அவளை அழைத்திருந்தது தெரிந்தது. அவள் திரும்ப அழைத்த போது, மதி லெனோராவும், ப்ரவீனும் இன்னும் அரை மணிநேரத்தில் வந்து விடுவார்கள் என்றும், நீயும் கண்டிப்பாக வர வேண்டும். உனக்குப் பிடித்த மாதிரியான ஒன்றை நான் வைத்திருக்கிறேன். நீ அதை நிச்சயம் விரும்புவாய் என்றும் கூறிச் சிரித்தான். மித்ராவிற்கு அவன் எதற்காக அழைக்கிறான் என்பது அவன் பேச ஆரம்பித்த போதே தெரிந்து விட்டது. ஆனால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனால் கேட்டதிலிருந்து அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நிர்மலனும் வீட்டில் இல்லை. வர இன்னும் மூன்று நாட்கள் ஆகும். போய்விட்டுத் தான் வரலாமே என்று நினைத்துக் கொண்டு பரபரப்பாக உடை மாற்றினாள்.

***

லெனோரா இந்த முறை எந்த மாத்திரையையும் ஆல்ஹகாலில் கலந்து முயற்சிக்க வேண்டாம் என்று உறுதியாகக் கூறிவிட்டாள். அவளுக்கு போனமுறை வினோத் சுய நினைவு தப்பி ஆறு மணிநேரங்கள் விழிக்காமல் கிடந்தது பயத்தை ஏற்படுத்தி விட்டது. மித்ராவுக்கும் வினோத்துக்கும் இதில் பெரிய விருப்பம். என்ன மாத்திரையை எவ்வளவு டோஸ் எடுத்தால் யூஃபாரிக் மனநிலை (Euphoric) வரும், எந்தெந்த ஜெனிரிக் மருந்துகளில் எவ்வளவு சதவிகிதம் ஓப்பியாய்ட் வகை மருந்துகள் சேர்த்தப்பட்டு இருக்கிறது என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்வதில் ஒரு பெரிய சுவாரஸ்யம். இருமல் மருந்துகள், மன அழுத்தத்தைக் குறைக்கத் தயாரிக்கப்படும் மாத்திரைகள், வலி நிவாரணிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இல்லிஸிட் ட்ரக்ஸ் (llicit Drugs) எனப்படும் பல நாடுகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் இந்தியாவில் எந்தெந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளில் எவ்வளவு சதவிகிதம் பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் இருவருக்கும் புள்ளிவிவரமாகத் தெரிந்திருந்தது. சென்னையில் மருத்துவரின் பரிந்துரைகள் எதுவும் இல்லாமல் கேட்கும் மருந்துகளைக் கொஞ்சம் அதிக விலைக்குக் கொடுக்கும் சில கடைகளையும் இவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஒரு முறை சிகரெட் பழக்கத்தை விடுவதற்காக கொடுக்கப்படும் மாத்திரைகளை உபயோகித்த போது, அது கொடுத்த மனக்கிளர்ச்சியில் மித்ரா கலவிக்கு நிகரான போதையை இது தனக்கு அளிப்பதாக டீபாய் மீது ஏறி நின்று அறிவித்தாள்.

***

குர்கானில் இருந்து திரும்பி வந்த ஓரிரு வாரங்களுக்குப் பிறகு மித்ராவின் நடவடிக்கைகளால் கலவரப்பட்டு அவளைப் பெண் மனநல ஆலோசகர் ஒருவரிடம் அழைத்துக் கொண்டு சென்றதாக நிரம்லன் குறிப்பிட்டான். இரண்டாவது முறை சென்ற போது, மித்ரா அந்தப் பெண்ணிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இவ்வளவு முட்டாள்தனமான மனநல ஆலோசகர் ஒருவரைத் தன்னுடைய வாழ்நாளில் தான் சந்தித்ததில்லை என்று கூறி, தான் அவருடைய படிப்புச் சான்றிதழ்களைப் பார்த்தாக வேண்டும் என்று சண்டையிட்டதாகவும், அதற்குப் பிறகு அவளிடம் வர மறுத்து விட்டதாகவும் கூறினான்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒரு பெரிய சண்டைக்குப் பின், போஸ்ட் மேரேஜ் கவுன்சிலிங் போய்ப் பார்க்கலாம் என்று அவளே அழுதபடி அவனிடம் சொல்லி, தன்னை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவனுக்குப் பீட்டர் பான் சின்ரோம் இருப்பதாகத் தான் சந்தேகப்படுவதாகக் கூறி, அதிலிருந்து வெளிவர அவனுக்கு அவர் தான் எப்படியாவது உதவ வேண்டும் என்று கூறியதாகவும், இருவரிடமும் பேசிப் பார்த்த மருத்துவர், அவளுக்கு அதிக மருந்துகளும், ஆலோசனையும் வழங்கியதால் “அவர் ஒரு மட்டமான male chauvinist நிர்மலன். அவரிடம் திரும்பப் போவதை பற்றி மறந்து விடு” என்று தான் திரும்ப அடுத்த பதினைந்து நாட்களில் அழைத்த போது கடுமையாகப் பேசி மறுத்து விட்டதாகவும் கூறினான்.

அதன் பின் நெடுநேரம் உரையாடி முடித்து அவளை மீண்டும் உள்ளே அழைத்துச் செல்ல நிர்மலன் வெளியே வந்த போது, மித்ரா அந்தப் பெரிய அமைதியான வரவேற்பறையில் தன்னுடைய பெயர் திரும்ப அழைக்கப்படுவதற்காக, அவள் அம்மாவின் தோளில் தலை சாய்ந்தபடி காத்திருந்தாள்.