வருவிருந்து – ரா. கிரிதரன்

by ரா.கிரிதரன்
0 comment

காக்ஸ்டன் அரங்கில் குழுமியிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்களின் கண்களில் ஒரு நிமிடம் தங்கிவிட்டு அடுத்தப் பார்வை பார்ப்பதற்குள் விறுவிறுவென கடைசி வரிசையில் உட்கார்ந்த சில நிமிடங்களில் பசிக்கத் தொடங்கியது. பெரும் பாரமாய் கிடந்த என் பையைப் பிடித்திருந்த விரல்களில் வியர்வை பிசுபிசுப்பு. அரங்கின் நுழைவாயிலிருந்து நிழலடித்த கடைசி வரிசைக்கு வருவதற்குள் ஒரு யுகத்தைக் கடந்திருந்தேன். விலை உயர்ந்த செம்மறி ஆட்டுத் தோல் உடுப்பு மேலாடையை மறைத்திருந்தது. கழுத்தை இறுகப்பிடித்த பட்டையைக் கழற்றி வைக்கலாம் என நினைத்து அரங்கிலிருந்தவர்களின் விதவிதமான பட்டைகளைப் பார்த்து அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

லிவர்பூல் வீதி அருகே கடந்து சென்ற குதிரை வண்டியின் சத்தம் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அடிவாங்கிய அந்தக் குதிரையின் கண்களில் தெரிந்தது அலட்சியமா வேதனையா? தரையடி ரயில் நிலையத்தின் வாசலை அடைத்து நின்ற சாரட்டுகளைத் தாண்டிச் செல்வது குதிரைக் கொட்டகைக்குள் நுழைவது போலிருந்தது. குதிரையின் அழுக்கேறிய உடல் வாசம் சூடாக என்னைச் சுற்றிக் கொண்டது. மூச்சை அடக்கி ரயில் நிலையத்துக்குள் நுழைந்ததும் மூத்திர வாடை அதை நிரப்பியது.

காக்ஸ்டன் அரங்கில் லண்டன் நகரின் அரச குடும்பத்தின் பெண்கள், வைட்ஹால் உயரதிகாரிகளின் வீட்டுப்பெண்களின் உடலசைவுகள் மிரட்சியளித்தன. தயங்கி வரும் பூனை போல வாசல் நுழைபவர்களைப் பார்த்து நின்றாலும் தெருவில் நிலையற்று அலையவும் மனம் ஒப்பவில்லை. சர்ஃபரேஜ் பேரவை எனும் வரவேற்பு அட்டைக்குக் கீழே – “பெண்களுக்கு ஓட்டுரிமை – சொத்துரிமை – சுதந்திரம்” எனக் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சில நொடிகள் வழிதவறி நின்றபடி வீட்டுக்குச் சென்று விடலாம் என நினைத்த போது சாலையில் கூட்டம் அதிகமாவதைக் கண்டு உடனடியாக அரங்கில் நுழைந்தேன். உயரமான உத்தரங்களில் நீண்டு தொங்கிய மின் விளக்குகள். சுவர் முழுவதும் அலங்காரமாகப் பெரிய சட்டகங்களில் ஓவியங்கள். எதன் மீதும் இடித்துக் கொள்ளக்கூடாது என்பதான கவனத்துடன் ஒதுங்கி நடந்த போது கூட்டத்தைப் பார்த்ததும் மூச்சு அடைத்தது. அரங்கிலேயே மிகவும் அழுக்கான ஆடையுடன் பராரியாக இருப்பவள் நான் தான். என் நிறத்தில் வேறு யாரும் இருப்பதாகத் தெரியாதது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

‘ஏண்டி கல்லூரியிலிருந்து நேராக நாடக ரிகர்சலுக்குப் போயிடுவியா?’

‘ஆமாம், இந்த வாரம் மாலையில் தான் ரிகர்சல்’

காலையில் நடந்த உரையாடல் சற்றே குரூரத் திருப்தி அளித்தது. பொய் சொல்வதை என் மனமும் நானும் ஒரு ஆட்டம் போடுவது போல கவனித்திருந்தேன். அப்பாவும் அம்மாவும் நடத்திய வாக்குவாதம் பெருக்கெடுத்து ஓடும் நதியின் நடுவே நிற்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. இந்தியாவிலிருந்து வந்தவருக்கு இருந்த இயல்பான ஜாக்கிரதை உணர்வை அம்மா இயல்பாகத் தாண்டிச் செல்வதை இன்றைய உரையாடலும் தொட்டுச் சென்றது. இருவரும் ஒரே சூழலில் இந்தியாவில் வளர்ந்து இங்கிலாந்து வந்தவர்கள் என்பதை நம்பமுடியாத வகையில் இருவரது பார்வைகளும் என் மீது முட்டி நிற்கும். அப்படிப்பட்ட கணங்களில் அவர் ஆங்கிலத்திலிருது வங்காள மொழியின் நூதனப் பிரயோகங்களை உச்ச ஸ்தாயியில் பேசுவதைக் கவனித்திருக்கிறேன். வாக்குவாதம் சீக்கிரம் முடியப் போவதற்கான குரல் உயர்த்தல்கள் எழும் கட்டம்.

தனியாக ரயில் ஏறியதிலிருந்து வைட்ஹால் பகுதிக்கு வரும் வரை துரத்திய பார்வைகளை உதாசீனப்படுத்தினாலும் உள்ளுக்குள் மிகத் தீவிரமாக ஏதோ ஒன்று வதைத்துக் கொண்டிருந்தது. ரெண்டு வாரத்துக்கு முன்னர் கல்லூரிக்கு வந்திருந்த ஒரு வெள்ளைப் பெண் கொடுத்த துண்டுச் சீட்டைப் படித்தது முதல் காக்ஸ்டன் கூட்டத்தில் பங்கெடுக்கும் வேகம் ஜூரம் போல தொற்றிக் கொண்டது. இரவுகளில் நட்சத்திரங்களை கவனிப்பதிலும், நாடகத்துக்கான பாடல்களை எழுதுவதிலும் ஒரு மன விலகல் உருவாகியிருந்தது.

“ஆண்களுக்கு நிகரான தினக்கூலியைப் பெண்களுக்கு வழங்குதற்கான சட்டத் திருத்தங்கள்”

அரங்கத்தில் விசில் ஒலி. ஒருசேரப் பெண்களின் கூச்சல் கைத்தட்டல்களுக்கு இடையே பச்சை உடையணிந்த நடுத்தர வயதுடைய பெண்ணொருத்தி பேசத் தொடங்கினாள். கிறீச்சிட்ட ஒலிவாங்கிச் சத்தம் குறைந்ததும் சீராக திடமாக அவளது குரல் ஒலிக்கத் தொடங்கியது.

கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் பேச்சு. மெல்ல நான் இலகுவானேன். கால்களை நீட்டி வைத்து முதுகை நாற்காலியோடு சேர்த்து உட்கார்ந்து கொண்டேன். மேடையிலிருந்தவளின் குரல் அச்சமூட்டும் விதத்தில் உச்சமடைந்தது. ஆனால் அதில் ஒரு ஆசுவாசம் தோன்றியது. அவளது ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கீழிருந்தோர் பலத்த ஓசையுடன் நாற்காலியைத் தட்டினார்கள். எந்த நிமிடமும் போலீஸ் நுழைந்து கூட்டத்தின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தும், அமைதியாக இருங்கள் என முன் வரிசையிலிருந்து சத்தம் வந்தது. அதை அடக்கும் பிற குரல்களும் எழுந்தன.

“பள்ளிக்கூடங்கள், சேவைக் குழுக்கள், மருத்துவச் செவிலிகள், ஏன் இன்று பார்லிமெண்டில் பேசிக்கொண்டிருக்கும் மினிஸ்டர்களின் கோட்சூட் பித்தான்கள் வரை நமது பங்களிப்பு உண்டு. அவர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கப்படுகிறது. ஜனநாயக சமூகம் என்றாலே உயிருள்ள அனைவருக்கும் சம உரிமை என்பது தான் அர்த்தம். கடைசியாக நான் அகராதியைப் பார்த்த போது கூட அந்த அர்த்தத்தை ஆண்கள் மாற்றவில்லை. ஓட்டுரிமை இல்லாது, குறைவான ஊதியம் பெற மட்டுமே தகுதியுள்ளவர்கள் தொழிற்சாலைக்கு வருவதை நிறுத்தவும் தடை போடட்டும். இருபதாம் நூற்றாண்டு தொடங்கி விட்டது. நம் விடியலும். ஐரோப்பிய நாகரிகம் எனப் பறைசாற்றும் அறிஞர்களும் முழு அறிஞர்கள் அல்ல. தங்களுக்குச் சாதகமானவற்றை மட்டும் கிரேக்க ஜனநாயகத்திலிருந்து பிய்த்து எடுத்து இதுதான் நாங்கள் உலகுக்குச் சொல்லும் மானுட சமத்துவம் என்கிறார்கள். ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் நவ நாகரிகத்தை போதிக்கும் உரிமை இருப்பதாக இவர்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்புக்கும் பங்கம் வந்துவிட்டதை நாம் தினசரி பார்க்கிறோமே. ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கப் பெண்களுக்கும் ரோம நாட்டுப் பெண்களுக்கும் இருந்த உரிமை சமத்துவம் கூட நமக்கு இல்லை என்பதை இந்த ஜனநாயகம் வெட்கத்தோடு சிந்திக்க வேண்டும்.”

என் ஆரம்பத் தடைகள் மறைந்து கூட்டத்தின் ஆரவாரத்தில் மறைந்து கொண்டேன். பேச்சின் ஒவ்வொரு வரியும் மயிர்கூசச் செய்தது என்றாலும் இக்கூட்டத்துக்கு அப்பா வந்திருந்தால் இந்நேரம் வெளியேறி இருப்பார் எனும் நினைப்பும் கூடுதல் சந்தோஷத்தைத் தந்தது. இது ஒரு வரலாற்றுத் தருணம். பெண் சமத்துவத்தை மீட்டெடுக்கும் நூற்றாண்டு, வெறும் தொடக்கம் மட்டும் தான் இன்னும் செல்ல வேண்டிய தூரம் மைல்கணக்கில் உண்டு என மேடைப் பேச்சை வாய் முணுமுணுத்தது. கூட்டத்தின் முடிவில் ஏதோ ஒரு அசையமுடியாத மாற்றம் குடியேறப் போகிறது. அரங்கிலிருக்கும் ஒவ்வொருவருடனும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் சம்பந்தம் உண்டு என்பது போலவும் சர்க்கரைக் கட்டியை எறும்புகள் கூட்டமாகத் தூக்கிச் செல்வது போல அனைவரும் ஒரே சக்தி என்பது போலவும் தோன்றியது.

பேசி முடித்தவள் கீழிறங்கியதும் அரங்கத்தின் மூலைகளிலிருந்து பலவித உற்சாகக் குரல்கள் எழும்பின – ப்ராவோ, நோ ரைட்ஸ் நோ கோ-ஆபரேஷன், டீட்ஸ் நோ வேர்ட்ஸ் எனச் சின்னச் சின்னக் கூட்டமாக கோஷங்கள் தொடங்கின. எம்மா, எம்மா எனும் கூக்குரல் ஓங்கத் தொடங்கியது. கீழிறங்கிய எம்மா தன்னுடன் சிலரை கைகோர்த்துக் கொண்டு காக்ஸ்டன் அரங்குக்கு வெளியே நடக்கத் தொடங்கினார். சலசலப்பு அடங்குவதும் பின்னர் ஒரு கோஷமாகச் சேருவதுமாகக் கூட்டம் வெளியேறத் தொடங்கியது.

கோஷங்களின் உக்கிரத்தில் என் மனம் பின்னிக்கொண்டிருந்தது. உருப்பெறாத கனவு போல இது ஒருப்பக்கம் தெரிந்தாலும், ஏதோ ஒன்று என்னையும் இவர்களையும் பிணைத்து விட்டது. ஆனால் அப்படி வெள்ளையர்களோடு ஒன்றாக நினைக்கும்படியான நிலைமை உண்டா? அம்மா இதை நேரடியாகக் கேட்காவிட்டாலும் அப்பாவுடனான வாக்குவாதத்தில் இதற்கான பதிலைச் சொல்லாமல் மெளனமாக என்னைப் பார்த்திருந்தாள். ஏதோ ஒரு மன்றாடல் அதில் தெரிந்தது. பிரிக்க முடியாத கொடியொன்று எங்கள் மூவருக்கும் அப்போது இருந்தது. எத்தனை தூரமாக நாங்கள் இருந்தாலும்.

ஒரு முடிவெடுத்தவளாய் கூட்டத்தினரோடு வெளியேறத் துடிப்பவர்களை விட்டு விலகி நடக்கத் தொடங்கினேன். ஹாலின் பேச்சொலி இன்னும் காதுகளில் சுற்றிக் கொண்டிருந்தது. நாடகக் காட்சிகளாக அக்கூட்டம் என்னுள் நிரம்பத் தொடங்கியது. ஜோன் ஆஃப் ஆர்க், ஜான்சி ராணி வரிசையில் எம்மா பற்றியும் சமூக நாடகக் காட்சிகளைக் கற்பனையில் எழுதத் தொடங்கினேன். தன்னிச்சையாக வைட்ஹால் நோக்கிச் செல்லும் கூட்டத்தைப் பின் தொடர்ந்தேன். எம்மாவின் வார்த்தைகளை அசைபோட்டுப் பார்த்ததில் கிரகித்துக் கொண்டவை குறைவானவையே என்ற எண்ணம் தோன்றியது. நடைமுறைத் தேவைக்காக பொம்மலாட்டம் போல கழிக்கும் இன்றைய பெண்களைப் பற்றிய சிந்தனை எல்லாரிடமும் மாற வேண்டிய அவசியத்தை எம்மா வலியுறுத்தினாள். ஆண்களுக்கும் பெண்களுக்குமான அடிப்படை உணர்வுத் தேவைகளைத் தாண்டி இன்றைய தலைமுறையினர் பொதுப்படையாகச் சிந்திக்க வேண்டியவற்றின் அவசியத்தைப் பற்றின அவளது பேச்சு அம்மாவையும் பாட்டியையும் நினைவூட்டியது. நான் கவனித்த வரை அம்மாவின் உள்ளுணர்வுகள் வலிமை மிகுந்தவை. அப்பா அவசரத்தோடு எடுக்கும் முடிவுகளின் தாத்பரியத்தை அம்மா மெளனமாக மடைமாற்றும் தீவிரமானத் தருணங்கள் பல உண்டு.

வைட்ஹால் வரை ஐநூறு பேருக்கும் மேலான பெண்களின் கூட்டம் தெருக்களை அடைத்தபடி சென்றது. அகலமான பட்டிகளைப் பிடித்தபடி கோஷங்களை உரக்கக் கத்தியபடி பார்லிமெண்டை நோக்கி நடந்தனர். கடை ஊழியர்களும், குதிரை வண்டிக்காரர்கள் பாதை ஓரத்தில் கூடி நின்றனர். சிலரது கேலியும் சிரிப்பும் ஆங்காங்கே பெண்களுடன் சலசலப்பாக மாறியது. சற்று விலகி நடந்த நான் பாதை ஓரத்தில் நடந்த அமளியைப் பார்த்து கூட்டத்தினரோடு இணைந்து கொண்டேன். அறிக்கைத் தாள்கள் என்னிடம் திணிக்கப்பட்டன. பாதையோரம் சைக்கிளில் நின்றிருந்த சில வெள்ளை இளைஞர்கள் கையில் கிடைத்தவற்றை கூட்டத்துள் எறிந்தனர். பதிலுக்கு  வானத்தில் எழும்பிப் பறந்த தாள்கள் அவர்கள் மீது சரிந்து குவிந்தன. கைகளைக் கோர்த்தபடி முன்னால் சென்றிருந்த எம்மா குழுவினரை நோக்கி போலீசார் குதிரையில் விரைந்தனர். நாலாப்பக்கமும் வீறிடல்களும் கூச்சலும் அதிகரித்தன. அமளியையும் மீறி என்னுடைய நாடகத்தில் இப்படி ஒரு காட்சி அமைக்கலாம் எனும் அசட்டு எண்ணம் வந்தது.

கூட்டத்தின் விளிம்பில் நடந்து கொண்டிருந்த நான் விறவிறுவென நடுப்பகுதிக்கு விரைந்தேன். இந்த ஆர்பாட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை. காக்ஸ்டன் அரங்கிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருக்க வேண்டும். உள்ளுணர்வுத் தூண்டுதலால் எடுக்கப்படும் தீர்மானங்களை நம்பும் அப்பாவின் குணம் எனக்கும் வந்துவிட்டதோ எனும் நினைப்பில் ஒரு கணம் அதிர்ந்தேன். கூட்டம் என்னவோ முன்னால் நகர்ந்தபடிதான் இருந்தது. பெண்களின் சமூக அரசியல் கழகம் எனும் அட்டைகள் நடைபாதையில் எதிர்க்கோஷம் போட்டவர்கள் மீது வீசப்பட்டன. நிரந்தரமாகக் குழுமிவிட்ட கூட்டத்தினரில் தனித்துச் செயல்படுபவர்களாக யாரும் இல்லை.

கூச்சலைக் கேட்கமாட்டாது ‘உஃப் உஃப்’ என போலீசாரின் குதிரைகள் கட்டுப்பாடற்றுத் திமிறின. கூட்டத்தில் ஏற்பட்ட சலனங்கள் அதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டாலொழிய வெளியிலிருந்து வரும் எந்தத் தடுப்பும் கலைக்காது எனத் தோன்றியது. போலீசார், கடை ஊழியர்கள், பாதசாரிகள் என அனைவரையும் பாரபட்சமில்லாமல் எதிர்த்தது. கூட்டத்துக்கென்று தனி உயிர்ச்சக்தி வந்துவிட்டது போல தடுப்பாரைத் தாண்டி பேருடலாக அது முன்னகர்ந்தது.

‘சக்தியின்றி சிவனும் சவம்’ என நான் நாடகத்தில் எழுதிய வரியை நினைத்துக் கொண்டதும் திடுக்கிட்டேன். கூட்டத்தினரின் அசைவுகளைத் தொடர்ந்தாலும்  மனம் சக்தியின்றி சிவனும் சவம் என ஏதோ ஒரு தாள லயத்தில் சொல்லிக் கொண்டே இருந்தது. ஒருவிதத்தில் அதை முணுமுணுப்பதும் நல்லது எனத் தோன்றியது.

வழியில் செயிண்ட் மார்டின் தேவாலயத்தில் மேலும் ஒரு கூட்டம் எங்களோடு இணைந்து கொண்டது. தலைக்குக் கட்டப்பட்ட துணியை நீக்கித் தங்கள் கையால் ஆட்டியபடி அக்கூட்டம் கோஷத்தில் கலந்து கொண்டது. முக்கால்வாசிப் பெண்கள் நடுத்தர வயதைக் கடந்தவர்களாக இருந்தனர்.

“விதிவசப்படி நடக்கட்டும்”, அப்பா அடிக்கடி சொல்வதை நினைத்துப் பார்த்தேன். இதுவும் விதிப்படிதான் நடக்கிறதா அப்பா? கூட்டத்தினரோடு கூட்டமாகச் செல்லும் என் மீது பிறரது கவனம் குறைந்து விட்டதை நினைத்துக் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. எப்போதும் எங்கேயும் என்னைக் கண்காணித்து நிற்பது போல சுற்றி வரும் பார்வை இல்லாதது கோஷத்தில் இணைந்த எனது குரலில் குதூகலத்தை அதிகமாக்கியிருந்தது.

பெரும் பிரவாகமாக நதிச்சுழல் போல கூட்டம் சென்றது. ஆழ்நதிச் சுழல்கள் கரைமகடுகளை ஒன்றும் செய்வதில்லை. ஆனாலும் புரட்டிப் போடப்பட்டது போலத் துடிக்கும் பாதசாரிகளை கூட்டத்தினர் வெறுப்போடு பார்த்தனர். காய்கறிச் சந்தைகளில் ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியுமாகக் கடந்து செல்பவர்கள் கல்லெறிபவர்களாக மாறி நின்றனர். அரசாட்சி பற்றி ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அளித்த எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு க்ளோப் நாடக அரங்கிலிருந்து லண்டன் டவர் நோக்கிப் பொதுமக்கள் படையெடுத்ததனர் எனப் படித்திருந்தேன். நம்ப முடியாதிருந்த நிகழ்வாக அதை என் ஆசிரியர் வர்ணித்திருந்தார். கதைகளும் கட்டுக்கதையும் உண்மை நிகழ்வுகளுக்கு நிகராக சரித்திரத்தை ஆக்கிரமிப்பதற்கு காரண காரியத் தொடர்புகளை உருவாக்கும் கலைஞனின் வாழ்வில் தேட வேண்டும் என்பது நாடகத்தின் அரிச்சுவடு. எது என்னை இக்கூட்டத்தை நோக்கி உந்தித் தள்ளியது? கூட்டத்துக்கு வந்திருந்ததில் ஏற்பட்ட புரட்சி மனப்பாங்கு மனதில் பளுவாக ஏறியது.

வைட்ஹால் தெருவை அடைத்து நின்றன குதிரைப் படைகள். குதிரை மீதிருந்த வீரர்களுக்குப் பின்னால் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்து நின்றனர். அப்பெரிய குழுமத்தைப் பார்த்ததும் எம்மாவின் குழுவினர் சிறிது தூரத்தில் நின்று விட்டனர். திருப்பத்தில் இருந்ததால் ஊர்வலம் நின்றதுக்கான காரணம் தெரியாது பாரத்தைச் சுமந்து வரும் குதிரை வண்டி நின்றது போல பெண்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி நெருங்கினர். முன்னால் நடப்பது தெரியாது பின்னாலிருந்து கூட்டத்தை முன்னுக்குத் தள்ளினர். எம்மாவுடன் கைக்கோர்த்து நின்றவர்களின் கத்தலும் கூட்டத்தின் சலசலப்பில் கரைந்து போனது. நிறுத்த முடியாத பிரவாகம் போல முண்டியடித்தபடி கூட்டம் குதிரை அணிவகுப்பை நெருங்கியது.

வளைவிலிருந்து திரும்பி எதிரே நின்றிருந்த போலீஸை கூட்டம் கவனிப்பதற்குள் நிலைமை கைமீறிப் போனது.

குதிரைகள் கூட்டத்துக்குள்ளே புகுந்தன. சிதறி ஓடிய கூட்டத்தினர் குதிரைகளுக்குப் பயந்து அருகே தோண்டப்பட்டிருந்த தரையடி ரயில் சுரங்கத்துள் விழுந்தனர். வேடிக்கைப் பார்த்து நின்ற வேலையாட்கள் தங்களை நோக்கி ஓடிவந்த கூட்டத்தினரைப் பார்த்து கல்லுடைக்கும் மோட்டார் இயந்திரங்களை நிறுத்தாமல் சிதறினர். குதிரைகளும் கட்டுப்பாடு இழந்து விட்டனவோ எனத் தோன்றுமளவுக்கு கலைந்து போன கூட்டத்தைத் துரத்திச் சென்றன. சில குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிப் பாய்ந்து நின்ற இடத்திலேயே நாலாப்புறமும் சுற்றின. போலீஸாரே நினைத்தாலும் அவற்றை அடக்குவது கஷ்டம் எனத் தோன்றியது.

பாதையோரம் வரிசை கட்டியிருந்த கடைகளுக்கு மத்தியில் இருந்த சூதாட்டக் கிடங்கின் கதவு மறைப்பில் நான் புகுந்து கொண்டேன். பயத்தில் எனது கைப்பையை நழுவ விட்டிருந்தேன். கையில் பிடித்திருந்த குடையும் காணாமல் போயிருந்தது. பலமாக மூச்சு வாங்கியது. நடந்ததை முழுவதுமாக உள்வாங்க முடியவில்லை. உயிர்ப்பயம் உடனடியாகத் தொற்றிக் கொண்டு படபடப்பை அதிகப்படுத்தியது. வெளியே தலைகாட்டாமல் மறைப்புக்குள் பதுங்கிய என்னுடன் இரண்டொரு பெண்களும் சேர்ந்து கொண்டனர். உடல் பருமனான ஒருத்தியின் கணுக்காலிலிருந்து ரத்தம் பொங்கியது.

“கடவுளே, என்ன நடந்தது, என்ன நடந்தது”, எனத் திரும்பத் திரும்ப கத்திக்கொண்டே இருந்தாள். அவளது கை கால்கள் தன்னிச்சையாக உதறிக் கொண்டிருந்தன. இரு கைகளையும் சேர்த்து அவளை அணைத்துக் கொண்டவளின் விரல்கள் ஜில்லிட்டிருந்தன.

இயல்பாக இருந்தவள் போலத் தெரிந்த மற்றவளின் கண்கள் எங்கோ குத்திட்டு இருந்தன. “சச் எ ஷேம், சச் எ ஷேம்”, எனத் தலையாட்டி முணுமுணுத்தாள். சிவந்த கன்னங்களில் அவளறியாது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. உதவிக்கு யாரும் வராதது அதிர்ச்சியாக இருந்தது.

கூட்டத்தினரின் கூச்சலும், போலீஸாரின் சத்தமும் குறையாதிருந்தது. வேகமாக திசை மாறி ஓடும் குதிரைகளின் சத்தமும் ஆக்ரோஷமானப் பிளிறலும் கேட்டன. அவர்களது மறைவிடத்துக்கு வெளியே யுத்த களன் போல கதறல்களும் வீறிடல்களும் கேட்டன.

என் மீது முழு பாரத்தைப் போட்டு அமர்ந்திருந்த பருமனானப் பெண்ணை நான் நகர்த்த முற்படவில்லை. அங்கே என்னை விட வயதான பெண்களுக்கு இல்லாத உந்துசக்தி எனக்குக் கிட்டியது. என் கவனங்களும் உணர்வுகளும் கூர்மை அடைந்திருந்ததை உணர முடிந்தது. அம்மாவிடமும் அப்பாவிடமும் நடந்ததை ஒன்றுவிடாமல் முழுமையாகச் சொல்லிவிட முடியும் என உடனடியாகத் தோன்றியது. அடுத்து செய்ய வேண்டியது தெளிவாகத் தெரிந்தது. வெளியே தலையைத் தூக்கி எட்டிப்பார்த்தேன். கடைகளுக்குப் பக்கத்தில் வேடிக்கை பார்த்து நின்றவர்கள் கலைந்திருந்தார்கள். கேளிக்கை முடிந்திருந்த அரங்கம் போல அப்பகுதி காலியாக இருந்தது. கைப்பைகளும், குடைகளும், துண்டு அறிக்கைகளும், கற்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. தெருவின் மறுபக்கத்தில் குதிரையில் அமர்ந்திருந்த போலீஸார் கூட்டத்தில் வந்த பெண்களை வளைந்திருந்தார்கள்.

“தயவு செய்து எட்டிப் பார்க்காதே பெண்ணே”, என்றாள் பருமனானப் பெண்

சிறுபெண்ணின் மடியில் முழுவதுமாகச் சரிந்திருப்பதை அப்போது தான் கவனித்தாள் அவள். என் கைகள் அவளை இழுத்துப் பிடித்திருந்தன. “நாம் என்ன குற்றம் செய்து விட்டோம்? எதற்கு ஒளிந்துகொள்ள வேண்டும்? அருகில் யாருமில்லை. எழுந்து வெளியே செல்லலாம்”, குரலில் தெரிந்த தீவிரம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

பருமனானப் பெண் கண்விரித்து அவளைப் பார்த்தாள். விடுவித்துக் கொள்ள முயன்றவள் பலகீனமான முட்டியை மடக்க முடியாததால் மீண்டும் என் மீது சரிந்தாள். மற்றொருவள் சலனமற்று தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றாள். தாங்கி நடந்து சென்றவள் அருகிலிருந்த கடை வாசலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். மடக்கியிருந்த அவளது கைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

பருமனானப் பெண்ணைத் தூக்கித் தாங்கும்போது அவளது உடையிலிருந்து வெளிப்பட்ட வாடை சட்டென என்னைத் தாக்கியது. வாசனைத் திரவியத்தைத் தாண்டி அவளது தொடைப்பகுதி ஈரமாகியிருந்தது.

“என் ரெண்டு மாதக் குழந்தைக்கு யாருமே எஞ்ச மாட்டார்கள்”, எனக் கதறத் தொடங்கினாள்.

அவளது வெள்ளை நிற மேலாடை முழுவதும் மணல் அப்பியிருந்தது. தரையடி பள்ளத்திலிருந்து எழுந்து வந்தவள் போல தலைமுடியிலும் மண் துகள்கள்.

“ஒன்றுமில்லை. அதிர்ச்சிதான்.. மெல்ல நடந்து வாருங்கள், கடைக்குள் தண்ணீர் கிடைக்கும்”, எனக் கைத்தாங்கலாக அவளை நகர்த்திச் சென்றேன்.

தூரத்திலிருந்து ஒரு போலீஸ் குதிரை இவர்களை நோக்கி வருவதைப் பார்த்தனர். ஒன்றும் செய்ய முடியாது. நிதானமாக நடைபாதைக்கு வந்தனர்.

கடைக்குள் ஒரு சிறுமி தனியாக நின்றிருந்தாள். பத்து வயதிருக்கலாம். அவளது கண்களில் பயம் அப்பியிருந்தது. எங்களைப் பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாத அழுகை.

“அம்மா, அம்மா”, என்பதைத் தவிர அவளது வாயிலிருந்து ஒன்றும் வெளிப்படவில்லை.

நீண்ட மேஜை மீது பருமனானப் பெண்ணைப் படுக்க வைத்த பின் மடமடவென பார்வையைச் சுழற்றி நீர் இருக்கிறதா எனத் தேடினேன். நாளிதழ்கள் அடுக்கப்பட்டிருந்த மரதடுப்புக்கு அருகில் டிரம்.

தாள்களின் கட்டைப் பிரித்து சிலவற்றை நீரில் நனைத்து அப்பெண்ணின் காலைச் சுற்றினேன். அவளது கதறலைப் பொருட்படுத்தாது எனது கழுத்துத் துணியினால் அப்பகுதியைக் கட்டினேன். காலைத் தூக்கி மேஜையின் நீட்டத்தில் வைத்தவள் சிறுமியை அருகே அழைத்து அணைத்துக் கொண்ட போது தனது கைமுட்டிப் பகுதியில் சதை பிய்ந்திருப்பதைக் கவனித்தாள். அச்சிறு பெண் என் கைவிரலைத் தன்னிச்சையாகப் பிடித்துக் கொண்டாள்.

பருமனானப் பெண்ணின் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த எனது துணி மெல்ல நிறம் மாறத் தொடங்கியது.