நான்கு ஆண்டுகள் என்பது எவ்வளவு பெரிய காலம்? மிக நீண்டது? ஆம். ஒரு தனி மனிதனின் வாழ்வில் அது மிக நீண்ட காலம்.
சரி, ஒரு நாட்டின் வரலாற்றில்?
ஒரு சீர்திருத்தத்தின் வரலாற்றில்?
கடந்த ஜனவரியில் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஒப்புதல் ஆகியிருக்கும் “No Detention Policy (all pass)”-க்கு எதிரான மசோதாவை ஆதரித்தவர்கள் உட்பட, பள்ளிகளில் கல்வித்தரம் கடந்த 10 ஆண்டுகளில் அதலபாதாளத்திற்குச் சரிந்திருப்பதாகக் குறைபடும் அனைவரும் அதற்கு அடித்தளமாகக் கொண்டிருக்கும் ASER (Annual Survey of Education Report) அறிக்கை தான் நீங்கள் கீழே காண்பது.
(2006 லிருந்து இதுவரை 89 முறை பாராளுமன்றத்தில் ASER அறிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
http://img.asercentre.org/docs/Home/Homepage/aserinparliament2019july.pdf )
2008 ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்களில் 53 சதவிகிதத்தினருக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிக்க முடிந்திருக்கிறது. தற்போது 2018 ஆம் ஆண்டில் அது 44.2 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. சரி. இதற்கு இடைப்பட்ட காலத்தில் கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தம் என்ன?
2010 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தான் அது. வறுமை, அருகாமையில் பள்ளிகள் இல்லாமை, கழிவறை உள்ளிட்ட உட்கட்டமைப்பில் போதாமைகள், தேர்வையும் ஆசிரியரையும் மையப்படுத்தியிருக்கும் மரபார்ந்த கற்றல் சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் இடைநின்றிருந்த / ஒருபோதும் பள்ளிக்கே சென்றிராத மாணவர்களின் குறைகளைச் சரிசெய்யும் படியான நெறிமுறைகளைப் பரிந்துரைத்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், எட்டாம் வகுப்பு வரை தனது வயதுக்குரிய வயதில் கற்கும் உரிமையை மாணவர்களுக்கு வழங்குவதன் பொருட்டு ஆண்டுத் தேர்வுகளையும் அது தடை செய்தது. இவை எல்லாவற்றின் விளைவாக 2011-12-ல் 5.62 ஆக இருந்த இடைநிற்றல் விகிதம் 2013-14-ல் 4.34 ஆகக் குறைந்து 2018-19-ல் 2.8 ஆகப் படிந்துள்ளது.
சரி. இப்போது மீண்டும் கல்வித்தரம் சார்ந்த புள்ளிவிவரத்திற்குச் செல்வோம். 2008ல் 53% ஆக இருந்த கல்வித்தரம், 2010ல் 50% ஆகக் குறைந்து, 2012ல் 41% ஆகச் சரிந்துள்ளது. அதன் பிறகு என்ன நடந்துள்ளது? அது மெள்ள மீண்டும் மேலேறத் துவங்கி 2016ல் 41% ஆக உயர்ந்து 2018ல் 44% ஆக தொடந்து வளர்ச்சிப் பாதையில் நீடிக்கிறது.
அதாவது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் நான்கு ஆண்டுகளில் கல்வித்தரத்தில் ஏற்பட்ட சரிவானது அடுத்த நான்கு ஆண்டுகளில் சரியாகி நேர்மறையான மாற்றங்கள் ஏற்படத் துவங்கியுள்ளன. ஒரு மிகப்பெரிய சீர்திருத்தமானது தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நான்கு ஆண்டுகள் காலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது சொல்லுங்கள்.. நான்கு ஆண்டுகள் என்பது எவ்வளவு பெரியது?
ஆனால் இந்தக் குறுகிய காலத்திற்கான தரவுகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வி சார்ந்து வேறென்ன முடிவுகளெல்லாம் எடுக்கப்பட்டு விட்டன?
1. தேர்வுகளற்ற வகுப்பறைகளே கல்வித்தரம் சீர்குலைவதற்கான காரணம் என்ற வாதங்களின் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் ‘No detention policy’க்கு எதிரான மசோதாக்கள் ஒப்புதல் ஆகியுள்ளன.
2. அதனைத் தொடந்து ஒடிஸாவில் எட்டாம் வகுப்பிலும் பஞ்சாபில் ஐந்தாம் வகுப்பிலும் பின்தங்கும் மாணவர்களை இந்தக் கல்வியாண்டு முதல் ஆண்டுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அதே வகுப்பில் தக்கவைக்க அந்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக 2019 மே மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் கல்விக்கொள்கை வரைவானது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளை மாற்றி அமைக்க (8வது அத்தியாயம்) பரிந்துரைக்கிறது.
கற்றல் விளைவுகள் (Learning outcomes) அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என தன் முன்னுரையிலேயே குறிப்பிடும் கல்விக்கொள்கை வரைவானது, பள்ளிக் கட்டணம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், கற்றல் முறைகள், மைதானங்கள் சார்ந்து கல்வி நிறுவனங்களுக்கு என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளைத் தளர்த்தி உள்ளூர்த் தேவைகள் மற்றும் இடர்ப்பாடுகளுக்கேற்ப முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பள்ளிகளுக்கே வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. இதற்கு நேர்மாறாக மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் ஒரே மாதிரியான கற்றல் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என வற்புறுத்துகிறது.
நிறுவனங்களுக்கான தாராளமயமும் மாணவர்களுக்கான கெடுபிடியுமாகிய இந்த இரண்டு போக்குகளுமே மீண்டும் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பது திண்ணம். தவிர அதிகாரங்களைப் பள்ளிகளுக்கே வழங்கி விட்டால் எந்த நியதிகளின் அடிப்படையில் அரசு அவற்றைக் கண்காணிக்கும்? ஏற்கனவே மிக மோசமான உட்கட்டமைப்புகளுடன் செயல்படும் தனியார் பள்ளிகளை இது ஊக்குவிக்காதா?
இதுமட்டுமல்லாமல், அருகாமைப் பள்ளி (1 கி.மீக்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீட்டருக்குள் ஒரு நடுநிலைப் பள்ளி, 5 மற்றும் 7 கி.மீட்டருக்குள் முறையே ஒரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி) என்னும் தற்போதைய நடைமுறைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக Composite school என்னும் ஒருங்கிணைந்த பள்ளியைப் பரிந்துரைக்கிறது.
மூன்று வயதிலிருந்தே பள்ளிக் கல்வி என்னும் இதன் பரிந்துரையையும் இருப்பிடத்திலிருந்து எங்கோ தொலைவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தையும் தொடர்புறுத்திப் பார்த்தால் இதிலிருக்கும் அசாத்தியங்கள் நமக்கு விளங்கும்.
1. அரசியல், சமூக, இயற்கைப் பேரிடர் விளைவுகளால் இடம்பெயரும் மாணவர்கள் புதிய இருப்பிடத்தில் பள்ளியின் அங்கமாகிக் கற்க அனுமதிக்கும் தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு இணையான தொலைநிலைக் கல்வியை (Open schooling) கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. இத்தகைய இளம் மாணவர்களைத் தொலைநிலைக் கல்வி மூலம் கற்பிக்கும் விழிப்புணர்வோ வீட்டில் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் அடிப்படைத் திறன்களோ அவர்களது பெற்றோருக்கு இருக்குமா? இடம்பெயராத மாணவர்களும் கூட இதைப் பயன்படுத்திக் கொண்டு குழந்தைத் தொழிலாளராக, வீட்டில் தம்பி தங்கை பராமரிப்பிற்காக உபயோகப்படுத்தப்பட மாட்டார்களா?
2. ஒவ்வொரு மாணவனும் தரமான தகுதிபெற்ற ஆசிரியர் மூலம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்னும் கட்டாயக்கல்வி உரிமை நெறிமுறைக்கு மாற்றாக மெல்லக் கற்கும் மாணவர்களைப் பிரித்து உள்ளூர் தன்னார்வலர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது கல்விக்கொள்கை. முறையான பணியாளர்களான ஆசிரியர்களால் கற்பிக்க முடியாத அடிப்படை விஷயங்களை கற்பித்தல் சார்ந்த எவ்வித பயிற்சிகளும் பெறாத, பள்ளியின் பால் எவ்வித கடமைகளாலும் பிணைக்கப்படாத ஒரு தன்னார்வலரால் எவ்வாறு கற்பிக்க முடியும்? மேலும் மாணவர்களின் பாதுகாப்பும் இதனால் கேள்விக்குள்ளாகாதா?
3. மாணவர்களது தனித்திறனை ஊக்குவிக்கும் விதமான விளையாட்டு முறைக் கற்பித்தலே நடைமுறையில் பெரும் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கையில் மூன்று வயது முதலே உள்ளூர் தொழில்கள் சார்ந்த அறிமுகத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தி தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும் என்னும் கல்விக்கொள்கையின் பரிந்துரை எந்த அளவிற்குச் சாத்தியமாகும்? தவிரவும், குலத்தொழில் என்னும் சீர்கேட்டை நோக்கி மீண்டும் சமுதாயம் பயணப்பட இது வழிவகுக்காதா?
4. ஒவ்வொரு மாணவனும் தனித்துவமானவன், அவன் சுமையின்றிக் கற்க வேண்டும் என்னும் தற்போதைய நடைமுறையைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான திறனறித் தேர்வினைப் பரிந்துரைக்கிறது கல்விக்கொள்கை. ஆண்டு இறுதியில் நடத்தப்படும் ஒரே ஒரு தேர்வுத்தாளின் மூலம் தனித்தன்மைகள் நிறைந்த மாணவர்கள் அனைவரது திறனையும் மதிப்பிடுவது சாத்தியமற்றது என்னும் காரணத்தாலேயே தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation) நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் தொய்வுகளைக் களையத் திட்டமிட வேண்டுமே தவிர இதற்கு மாற்றாக மாநிலம் முழுமைக்குமான ஒரே தேர்வென்பது சரியான திறனறித் தேர்வாக இருக்காது. போக, இத்தேர்வுகள் பள்ளிகளுக்கிடையேயும் பெற்றோர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி கட்டணத் தனியார் பயிற்சி மையங்களை அதிகரிக்கவே வழிவகுக்கும். அத்தோடு இத்தேர்வுகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு தொடர்ந்து தங்களது பள்ளியிலேயே கற்பிப்பதில் பள்ளிகள் தயக்கம் காட்டும். இதுவும் இடைநிற்றலையே அதிகரிக்கும்.
சுதந்திரத்திற்குப் பின்னர் வகுக்கப்பட்ட அனைத்து கல்விக்கொள்கைகளும் தீட்டப்பட்ட திட்டங்களும் 100% எழுத்தறிவு என்னும் நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கின்றன. அத்தகைய தீவிர முயற்சிகளால் தான் 2018ல் நம்மால் 97.8% பள்ளிவயதுக் குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டுவர முடிந்திருக்கிறது. அருகாமைப் பள்ளிகள் உட்கட்டமைப்பு, மாணவர் மையக்கற்றல் போன்ற முன்னெடுப்புகளே அதைச் சாதிக்க உதவியிருக்கின்றன. இச்சூழலில் வெறும் நான்கு ஆண்டுகால தரவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தரத்திற்காக நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடக் கூடாது. ஒரு மாணவன் பள்ளியில் ஓர் அங்கமாக இருப்பதை உறுதி செய்தல் என்பது அவன் கற்றல் திறன் அனைத்தையும் பெற்றுவிட்டான் என்று உறுதி செய்வதை விட முக்கியமாகும். பள்ளி வயதில் பள்ளியின் ஓர் அங்கமாக சக வயதினருடன் இருக்க முடிவதென்பது நாம் அவர்களுக்கு வழங்கும் சலுகை அல்ல. அது அவர்கள் உரிமையாகும். அது ஒருபோதும் பறிக்கப்படக் கூடாது.
தவிர, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கூறுகளைப் பள்ளிகள் உள்ளீர்த்து தரத்தினையும் தக்கவைக்கத் தொடங்கியிருக்கும் இக்காலகட்டத்தில் மீண்டும் புதிய திட்டங்களை பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்துவது மாணவர் எண்ணிக்கை மட்டுமல்லாது கல்வித்தரம் சார்ந்த பின்னடைவுகளை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
3ம் வகுப்பு முதலே பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த பள்ளி வளாகங்கள், 3,5,8 வகுப்புகளுக்கு மாநில அளவிலான ஒரே தேர்வு மற்றும் அதற்கிணையான தொலைநிலைக் கல்வி, தன்னார்வலர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல், பள்ளிகளுக்கே அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கையின் பள்ளிக்கல்வி சார்ந்த பரிந்துரைகள் மறுபரிசீலனை செய்யப்படுதல் வேண்டும். அதுவே தரம் சார்ந்தும் எண்ணிக்கை சார்ந்தும் நம் மனித வளத்தை மேம்படுத்துவதில் பலன் தரும்.