து கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் ஓர் இத்தாலிய உணவகம். மரமும் செடியும் செறிந்திருக்கும் பச்சைத் தோட்டத்துக்கு நடுவே மண் சுவரால் கட்டி எழுப்பப்பட்ட சிறு சிறு குடிசைகளின் கூடுகையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவற்றின் நடுவே சிறியதொரு குளம். செந்நாரை ஒன்று குளத்துக்குள் தன் நீண்ட அலகினைக் கவிழ்ப்பதும் நிமிர்வதுமாயிருந்தது. அன்று பகல் முழுவதும் வெயிலின்றி மூடாரமிட்டிருந்த வானமும் கடற்காற்றில் ஏறியிருந்த குளுமையும் அவ்விடத்தை இன்னும் இரம்மியமாக்கியிருந்தது. அந்தச் சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாமல் அதற்கு முற்றிலும் எதிரான ஒரு நிலையில் அவன் மனது, மீராவைப் பற்றிய நினைவுகளை ஒவ்வொன்றாக மீட்டி எடுத்துப் படுத்திக்கொண்டிருந்தது. முழுதாகப் பதிமூன்று வருடங்கள் கடந்து போயிருந்தன. அவளை முற்றிலுமாக மறந்துவிட்டதாய் நம்பிக் கொண்டிருந்த அவனுக்கே அவளைப் பற்றி எழுந்து வந்த சித்திரங்களின் துல்லியத்தைத் தாள முடியவில்லை.

அந்தக் கீழ் நாடி மச்சம், குளித்த தலையின் ஈரம் சொட்டி நனைத்திருக்கும் ஜாக்கெட், கோபக் கனலின் தகிப்பில் அவளுதட்டின் மேல் அரும்பி நிற்கும் வியர்வை, மோகப் பொழுதுகளில் அவன் மார்பில் கவியும் அவ்விளமுலைகளின் வெம்மை, முட்டி குவித்து அழும் கணங்களில் குலுங்கும் அவள் முதுகு , எல்லாவற்றுக்கும் மேலாக எதிரேயிருப்பவரை ஊடுருவித் துளைக்கும் அந்தக் கண்கள்!

கடந்த ஒரு வாரமாகவே அவன் புதிய வேலை எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. மனதினை ஓரிடத்தில் குவியச் செய்யவதற்கு பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலையை முடிப்பதற்குள்ளாகவே போதும் போதுமென்றாகி விட்டது. அவனுடைய வேலையை இயந்திரகதியில் செய்து விட முடியாது. மனம் ஓரிடத்தில் குவிய வேண்டும். அதே நேரத்தில் கற்பனை வானமென விரிய வேண்டும். அவன் வரையும் ஒவ்வொரு வரைபடமும் அவனளவில் ஒருவகை தியானம்.

ஓவியத்தின் மேலிருந்த பித்து, கணிதத்தில் இளங்கலை முடித்த அவனை பெருமைமிக்க ஒரு பன்னாட்டு நிறுவனமொன்றில் வரைபடக்கலை நிபுணனாகக் கொண்டு வந்து நிறுத்தியது. அப்படியாகக் கழிந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி அதையே ஃப்ரீலான்சராகச் செய்யத் தொடங்கினான். வீட்டுக்குள்ளேயே அலுவலகம். யாருடைய சாட்டைச் சொடுக்குக்கும் கட்டுப்பட்டுச் சுழன்று ஆட வேண்டிய நிர்ப்பந்தமற்ற சுதந்திர வாழ்வு. சமயங்களில் பத்து மணி நேரமெல்லாம் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் வேலை செய்திருக்கிறான். அந்தத் துண்டுப் பிரசுரத்தைப் பார்த்த கணத்திலிருந்து, பத்து நிமிடங்கள் கூட சேர்ந்தாற் போல அவனால் உட்கார முடியவில்லை.

O

ன்று வீட்டு வாசலில் பொத்தென்று வந்து விழுந்த பேப்பர் கட்டின் சத்தம் கேட்டுத் தான் கண் விழித்தான். ஹாலில் ட்யூப் லைட் அணைக்கப்படாமல் எரிந்து கொண்டிருந்தது. மெல்லிய சத்தத்தில் டி.வி ஓடிக்கொண்டிருந்தது. டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த சிகரெட் அணைக்கும் ட்ரே நிரம்பி வழிந்தது. சோபாவிலேயே படுத்துத் தூங்கி விட்டிருந்தான். ஒரு பக்கமாய் படுத்திருந்ததில் வலதுபக்கத் தோளும், கழுத்தும் இறுகிப் போய் வலித்தன.

எழுந்து சென்று டி.வி-யை நிறுத்தினான். எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து விட்டான். ஆஷ்-ட்ரேயைச் சுத்தம் செய்து வீட்டைப் பெருக்கினான். கிழிக்கப்படாமல் விடப்பட்டிருந்த தினசரியைச் சரிசெய்யும் போது தான் கவனித்தான். அன்று அவன் பிறந்த நாள். ஆம், நாற்பதாவது பிறந்த நாள்.

நாற்பது ஆண்டுகள். நானூற்று எண்பது மாதங்கள். பதினான்காயிரத்துச் சொச்சம் இரவுகள், பகல்கள், இன்னல்கள், இத்யாதி இத்யாதி. நினைக்க நினைக்கச் சலிப்பாக இருந்தது.

மொபைலை எடுத்துப் பார்த்தான். எந்தச் சமூக வலைத்தளத்திலும் உறுப்பினன் கிடையாது. மருந்தெனக் கூட ஒரு வாழ்த்துச் செய்தியில்லை. ஒரே ஒரு வாழ்த்து கூட வரப்பெறாத அளவுக்கு எல்லோருடைய ஞாபகங்களிலிருந்தும் தான் துடைத்தெறியப்பட்டு விட்டேனா என்ற கேள்வி கிடந்து உழற்றியது. தன்  மீதே அவனுக்குக் கழிவிரக்கம் மண்டிப் பெருகியது.

காபி போட்டு எடுத்துக் கொண்டு சோஃபாவுக்கு வந்தான். எதையும் செய்யப் பிடிக்காத மனச்சோம்பல். நாற்பது ஆண்டுகளை நானூறாய் உணரச் செய்தவை மீராவைப் பிரிந்த இந்தக் கடைசி பதிமூன்று ஆண்டுகள். விரிந்த மனவெளியெங்கும் தனிமையின் நிழல் படிந்த பதிமூன்று ஆண்டுகள். ஒரு நாளினை மற்றொன்றோடு வேறுபடுத்தி நினைவில் வைப்பதற்குக் கூட உதவாத, சலனமற்ற நதியைப் போன்று ஓடிக் கடந்த பதிமூன்று ஆண்டுகள். ஜன்னல்கள் சாத்தப்பட்ட நீண்ட தூர இரயில் பயணத்தின் பகலைப் போல வெறுமை கூடிய வாழ்வின் பதிமூன்று ஆண்டுகள். தன்னைச் சுற்றி அவன் வரைந்து கொண்ட வட்டத்தின் விட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வந்து கடைசியில் தனித்ததொரு புள்ளியாக மட்டும் நிலைத்து விட்ட இன்றைய நாளில் கொண்டு நிறுத்தியிருக்கும் இப்பதிமூன்று ஆண்டுகள்.

நினைவுச் சிடுக்களிலிருந்து மீள்வதற்காக, டீப்பாயின் மேலிருந்த பேப்பர் கட்டினைப் பிரித்தான். பளபளப்பான காகிதத்தில் உள்ளேயிருந்து அந்தத் துண்டுப் பிரசுரம் விழுந்தது. அதன் தலைப்பும் வெகு நேர்த்தியான வடிவமைப்பும் அவன் கவனத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தியது.

வாடகைச் சொந்தங்கள் – நிரப்பப்படாத உங்கள் வாழ்வின் சில பக்கங்களை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுங்கள். ஒரு கையெழுத்து, ஒரு கவிதை, சில குறிப்புகள், சிற்சில புள்ளிகள். இப்படி ஏதேனும் ஒன்றால் நிரப்பித் தருகிறோம். நீங்கள் தவறவிட்ட வாழ்வியல் தருணங்களை நாங்கள் மீட்டுத் தருகிறோம்.”

O

து ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம். அதற்கான சமிக்ஞைகள் அவர்களின் அலுவலகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது. மிகச் சிறப்பாக உட்கட்டட வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. பழைய மகாபலிபுரம் சாலையில் ஐ.டி. கம்பெனிகள் நிறைந்திருந்த ஒரு பல்லடுக்கு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்தது அந்த நிறுவனம்.

இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒன்றிருக்கும் என்பதை அவன் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. ஒரே நேரத்தில் பதற்றமும் ஆர்வமும் தொற்றிக் கொண்டது. ஜப்பானுடையதைப் போலிருந்த ஒலிச்சேர்க்கை மெலிதாக ஒலிக்க விடப்பட்டிருந்தது. அறையின் நடுவில் சலசலக்கும் நீருற்று. ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த உள்வீட்டுத் தாவரங்கள், போன்சாய் மரங்கள். கமழும் லாவண்டர் மணம் என்று எல்லாம் சேர்த்து அவ்விடத்துக்கு ஒரு பிரத்யேக புத்துணர்வை அளித்தன.

அந்தத் துண்டுப் பிரசுரம் மந்திரத்தால் கட்டப்பட்டவனைப் போல் அவனைக் கட்டி இழுத்துக்கொண்டு அங்கே நிறுத்தியிருந்தது.

அவன் உள்ளே நுழைந்ததும் அங்கே போடப்பட்டிருந்த கண்ணாடியாலான பெரிய டேபிளுக்கு அந்தப் பக்கம் இருந்த பெண்மணி வாஞ்சையாகப் புன்னகைத்தார். அட்சர சுத்தமான ஆங்கிலத்தில் அவனை எதிரேயிருந்த இருக்கையில் அமரும்படி கோரினார்.

“வணக்கம். உங்களுடைய பெயர்?”

சொன்னான்.

அம்மா, அப்பா, சொந்த ஊர், பார்க்கும் வேலை, வசிக்கும் இடம் என ஒவ்வொன்றாய்க் கேட்டு அவருக்கு முன்னிருந்த ஆப்பிளின் மடிக்கணினியில் குறிப்பாக எடுத்துக் கொண்டார்.

“எங்களுடைய நிறுவனம் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?”

சொன்னான்.

“மிக்க மகிழ்ச்சி. சொல்லுங்க நித்தில். நாங்கள் உங்களுக்கு எவ்விதம் உதவ முடியும்?”

அவனுக்கு எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. வனம் தப்பி வந்த காட்டு விலங்கைப் போல் விழித்துக் கொண்டிருந்தான். பேசாமல் ஒன்றுமில்லை என்று சொல்லி எழுந்து போய் விடலாமா என்று யோசித்தான்.

“நித்தில்.. நீங்க எதையோ நினைச்சு தயங்குறீங்கன்னு நினைக்கிறேன். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். எங்களுடையது ஒரு சேவை நிறுவனம். ‘சூம் கார்’ பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா? அவர்களைப் போலத் தான் நாங்களும். என்ன அங்கே காரினை வாடகைக்கு எடுக்கிறீர்கள். இங்கே உங்களுக்கு வேண்டிய உறவுகளை, நட்புகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளப் போகிறீர்கள். அவ்வளவுதான்” என்று புன்னகை மாறாமல் மெதுவாக தன் தோள்களைக் குலுக்கினாள்.

அவள் வெகு சாதாரணமாக இதைக் கூறிக் கொண்டிருந்த போது, ‘இது சரியாக வருமா?’ என்று மனதுக்குள் கூட்டிப் பெருக்கி வகுத்துக் கொண்டிருந்தான். அவளே தொடர்ந்தாள்.

“நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கூகிளில் எங்களைப் பற்றித் தேடித் தெரிந்து கொண்டிருக்கலாம். இருந்தாலும் நான் மீண்டும் சொல்கிறேன். இங்கே நீங்கள் அம்மா, அப்பா, மகள், மகன், பேரன், பேத்தி, கணவன், மனைவி என்று பல்வேறு உறவுகள், நண்பர்கள், சுற்றத்தவர்கள் எனத் தேவைப்படும் யாரொருவரையும் தேவையான நேரத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். ஏற்கனவே இது போன்ற நிறுவனங்கள் ஜப்பான், அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பிரபலமானவை. நாங்களும் கூட ஜப்பானிலிருக்கும் நிறுவனம் ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கிறோம். எங்களுடைய முதல் கிளை ஆறு மாதங்களாக பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னையிலும், கொச்சினிலும் கிளைகளைத் தொடங்கியிருக்கிறோம். இந்த ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே எங்களிடத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சேவை பெற்றிருக்கிறார்கள். இன்றைய எந்திரமய வாழ்வின் தேவை அப்படியிருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் ஒவ்வொருவரும் இதனை வேலையாக இல்லாமல் சேவை என்பதாகக் கருதியே செய்து வருகிறோம். இங்கு இருப்பவர்களில் பலரும் முறையாக மனோ தத்துவம் படித்தவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள். பணம் எங்கள் குறிக்கோள் கிடையாது. இதில் அதெல்லாவற்றுக்கும் மீறிய ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது. அதனால் உங்களுக்கு எந்தவித குழப்பமோ தயக்கமோ தேவையே இல்லை”

அவள் மறுபடியும் புன்னகைத்தாள்.

“எனக்கு மனைவியாக ஒருவர் வேண்டும்!” இப்படியொரு அபத்தமான கேள்வியை முன் பின் அறியாத ஒருவரிடம் கேட்பதற்கு தமிழை விட ஆங்கிலம் வசதியாக இருந்தது.

“ஓ.. நிச்சயமாக” என்றாள்.

தன் பக்கமிருந்த ‘டேப்ளட்’ போலிருந்த கருவி ஒன்றை எடுத்து நீட்டி சில விபரங்களை நிரப்பித் தருமாறு கேட்டாள்.

அதில் அவன் விரும்பும் மனைவியின் நிறம், உயரம், எடை என்று தொடங்கி அவளுக்குப் பிடித்தது பிடிக்காதது என்பது வரை ஒவ்வொன்றாக நிரப்ப வேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவள் தன்னிடத்தே கொண்டிருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க நினைவுகள், சம்பவங்கள், அவளைச் சந்திக்க விரும்பும் காரணம் என ஏதேனுமிருந்தாலும் குறிப்பிடச் சொல்லிக் கேட்டது.

அவன் ஒன்றையும் விடாமல் எல்லாவற்றையும் நிரப்பினான். கிட்டத்தட்ட அவன் அறிந்த மீராவை முழுவதுமாக அதில் கொண்டு வைத்திருந்தான்.

அந்தக் கருவியை கையில் வாங்கிப் புரட்டியவள், “நீங்கள் இரண்டு மணி நேரச் சேவை வேண்டும் என்று கோரியிருக்கிறீர்கள் இல்லையா?” என்றாள்.

“ஆமாம்”

“மகிழ்ச்சி. ஆனால் உடனடியாகச் சந்திக்க இயலாது. எங்களுக்குக் குறைந்த பட்சம் ஒரு வாரமாவது தேவைப்படும். இந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரமே என்றாலும் கூட அதைச் சிறப்பானதாக ஆக்க நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால் தான் ஒரு வாரம். உங்களுக்குச் சரியென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை மாலை நான்கு மணி போலச் சந்திப்பினை ஏற்பாடு செய்யவியலும்.”

அதை மறுப்பதற்கு அவனிடத்தில் எந்தக் காரணமும் இல்லை. சரியென்று தலையாட்டினான்.

O

து தூக்கமா, விழிப்பா என்று பிரித்துணர முடியாத அளவிலேயே முந்தைய நாள் இரவு கழிந்தது. மீரா வருகிறாள். இல்லை மீராவாக ஒருத்தி வருகிறாள். உண்மையில் மீராவே வந்தாலும் கூட அவள் மீராவைப் போல் தான் இருக்க முடியும். மீண்டும் அந்த மீராவாக இருக்க முடியாது.

சொன்னதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே அங்கே வந்து விட்டான். சிப்பந்திகளின் ஓய்வு நேரமாக அது இருக்கக்கூடும். தேவையென்றால் மட்டும் அழைப்பதாகக் கூறிப் போகச் சொன்னான். எதிரேயிருந்த அச்சிறுகுளத்தில் பிரதிபலித்த செந்நாரையினையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது குளத்தினுள் மீனைப் பிடிப்பதும் பின்னர் அதனை நீரில் விடுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தது.

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? இத்தனை வருடங்கள் கழித்து பார்த்ததும் அவள் என்ன கேட்பாள்? வழக்கமான சம்பாசணையைப் போல் ‘எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்பது இவர்களிடையே எத்தனை அபத்தமாய் இருக்கும்?

அவன் மனதை மொய்த்துக் கொண்டிருந்த கேள்வி ஈக்களை உணவகத்தின் வாசலில் வந்து நின்ற ஓலா கார் ஒன்றின் சத்தம் கலைத்தது. அதிலிருந்து பெண் ஒருத்தி இறங்கினாள். பக்கத்திலிருந்த காவலாளி ஒருவரிடம் விசாரித்து விட்டு அவன் அமர்ந்து கொண்டிருந்த குடிலை நோக்கி வந்தாள்.

“ஹலோ நித்தில். நான் மீரா!” என்று கூறி கைக்குலுக்க தன் கையை அவனருகே நீட்டினாள். குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த தன் கையை அவனும் நீட்டினான்.

உட்காரச் சொன்னான். அவனுக்கு வாய் உலர்ந்து நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அவள், அவனுக்கு நேர் எதிரே இருக்கும்படி அமர்ந்து கொண்டாள்.

வந்தவளுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். கிட்டத்தட்ட மீராவினுடைய வயது. அவளை விடச் சற்று உயரம். அதே போன்ற கோதுமை நிறம். ஒற்றை நாடி. தன்னையறியாமல் வந்தவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். மீராவுக்கு விருப்பமான ‘பீச்’ வண்ணத்தில் ஒரு குர்தியும், வெள்ளை நிற லெக்கின்சும் அணிந்திருந்தாள். தலையைப் பின்னாமல் முடியின் ஒற்றைக் கற்றையை இழுத்து லேசாக முடிந்து மீதியை விரித்து விட்டிருந்தாள்.

அவள் வந்ததும் சிப்பந்தி வந்தான்.

“காஃபி சொல்லட்டுமா?” என்றாள். சரி என்பதாக இவன் தலையாட்டினான். அவள் சொன்னாள்.

உதடும் தொண்டையும் உலர்ந்து போயிருந்தது. கிளாசில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரே மிடறாகக் குடித்தான்.

காதலித்துக் கொண்டிருந்த மூன்று ஆண்டுகளிலும் சரி, சேர்ந்து வாழ்ந்த ஒன்றரை ஆண்டுகளிலும் சரி, வெளியே எப்போது சாப்பிடச் சென்றாலும் அவள் தான் ஆர்டர் செய்வாள். வேண்டும் வேண்டாம் என்று தலையசைப்பது மட்டுமே அவனுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படியான சின்னச் சின்ன முடிவுகளிலிருந்து வாழ்க்கையையே மாற்றிப் போட்ட பிரதான முடிவுகள் உட்பட அனைத்தையும் அவளே தீர்மானித்திருந்தாள். அதை இங்கேயும் தொடர்ந்தாள்.

சொற்களே இல்லாத மொழியினைப் பேசுபவர்கள் போல ஒருவரை ஒருவர் பார்ப்பதும் பின்னர் ஆளுக்கொரு பக்கம் திரும்பிக் கொள்வதுமாய் இருந்தனர். அவளைப் பார்த்ததும் பேழையில் அடைத்த பாம்பினைப் போல அவன் மனம் சுருண்டு கொண்டது.

இருவருக்குமிடையே நிலைபெற்றிருந்த மவுனத்தை அவளே கலைத்தாள்.

“எப்படி இருக்க நித்தில்?”

அவள் முகத்தைப் பார்க்காமல் குளத்தில் இரை தேடிக் கொத்திக் கொண்டிருந்த அந்தச் செந்நாரையைப் பார்த்தவாறே பதில் கூறினான் – “ம்.. இருக்கேன்.”

“கொஞ்சம் முடியெல்லாம் நரைக்க ஆரம்பிச்சுடுச்சு இல்ல” என்றாள் மெலிதாக சிரித்தபடி.

தவிப்பின் சிறு சாயல்கூட அவளிடம் தென்படவில்லை. நிறம் கூடியிருந்தாள். சிரிக்கும் போது அந்தக் கீழ் நாடி மச்சம் அவளை இன்னும் அழகாகக் காட்டியது. வருடங்கள் அவளிடத்தே பெரிய மாற்றம் எதையும் கொண்டுவந்து விடவில்லை. ஆனால், எதுவுமே நடக்காதது போல இந்தப் பதிமூன்று வருடங்களை முழுதாக முழுங்கி விட்டு இப்படியொரு அசட்டுத்தனமான கேள்வியை அவளால் எப்படிக் கேட்க முடிகிறது? இயல்பாக நடிக்க முயற்சிக்கிறாள். அதைச் சிறப்பாகவும் செய்கிறாள்.

அவன் திரும்பத் திரும்பத் தனக்குள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். அதற்காக இங்கே வரவில்லை. சில விசயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக அவளிடம் ஒரே ஒரு மன்னிப்பும் கேட்டுவிட வேண்டும். அவ்வளவு தான். இது மட்டும் நடந்துவிட்டால் போதும். பின்பு, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடலாம்.

அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அவளைப் பார்த்து கசப்பாகச் சிரித்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டி விடாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டான்.

அவர்களுக்கிடையில் நேரம் ஒரு நத்தையென ஊர்ந்து கொண்டிருந்தது.

காபி வந்தது. அவனுடையதை எடுத்துக் கொடுத்தாள். அப்போதும் கவனித்தான். பின்னர் அவளுடைய காபியினை எடுத்துக் குடிக்க ஆரம்பித்த போதும் கவனித்தான். அவள் தன் இடக்கையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு நிமிடம் உடல் மொத்தமும் சிலிர்த்து அடங்கியது. மிகவும் இளகி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தான்.

“எக்ஸ்யூமீ.. மீ..மீரா.. எனக்கு சிகரெட் பிடிக்கணும். இரண்டு நிமிசம்”

“ஓ யெஸ்.. நோ ப்ராப்ளம்”

அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான். சற்றுத் தள்ளி வந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். கை இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. கையிலிருந்த வியர்வை பட்டு சிகரெட் நனைந்தது. உள்ளங்கைகளை பேண்ட்டில் அழுத்தத் துடைத்துக் கொண்டான். இங்கே வந்திருப்பவள் மீராவைப் போலி செய்கிறாள். தான் மீராவைப் பற்றி கூறியிருந்த தகவல்களை வைத்தே இதைச் செய்கிறாள். கொஞ்சம் மீராவின் ஜாடையிலும் இருக்கிறாள். அதுவரை பரவாயில்லை. ஆனால், மீராவுக்கு இடக்கைப் பழக்கம் உண்டு என்பதை நான் எந்தக் குறிப்பிலும் சொல்லவேயில்லை. அப்படியிருக்க எப்படி இவள் அதையும் பிரதிபலிக்கிறாள்? மீராவைப் பற்றித் தேடி அறிந்திருப்பார்களோ? அப்படியானால் அவள் இப்போது என்ன செய்கிறாள் எங்கேயிருக்கிறாள் என அத்தனையும் இங்கே வந்திருப்பவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும், இத்தனை நுணுக்கமாக எப்படி கவனிக்க முடியும்? அப்படிக் கவனித்தாலும் இத்தனை இயல்பாக இடதுகைப் பழக்கத்தை கொண்டு வர முடியுமா? இல்லை இது தற்செயலான ஒற்றுமையாகத் தான் இருக்க வேண்டும். வேறொன்றுமில்லை. ஆம்! அப்படித்தான் இருக்கும். அப்படி நினைத்துக் கொள்வது மட்டுமே அப்போதைக்குக் கொஞ்சம் ஆசுவாசமளித்தது. அதன் பின் மிகக் கூர்மையாக அவளை அவதானிக்கத் தொடங்கினான்.

அவன் குடிலுக்குள் திரும்பி வந்தான். மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் நுழைந்ததும் அதை அணைத்து உள்ளே வைத்தாள். இப்போது அவன் ஆரம்பித்தான். “உனக்கு நாம கடைசியாப் பார்த்த நாள் ஞாபகம் இருக்கா?”

“ஓ..இருக்கே”

“அன்னைக்கு நீ உன் ப்ரெண்ட் ராமோட கல்யாணத்துக்கு கிளம்ப ரெடியாயிட்டு இருந்த”

“ரிசப்சனுக்கு”

“ஓ.கே. ரிசப்சனுக்கு. அன்னைக்கு நான் வரலைன்னு சொன்னதும் சரி போகுதுன்னு விட்டிருக்கலாம் நீ”

“எனக்காக என் கூட வந்திருக்கலாம் நீ”

“கமான்.. மறுபடியும் அங்க இருந்து தொடங்க வேண்டாம்.”

“கரெக்ட்… ப்ளீஸ் லீவ் இட்”

“ஒரு வேளை அன்னைக்கு அப்படி ஒரு சண்டை நடக்காம இருந்திருந்தா?”

“இன்னைக்கு இப்படி ஒரு சந்திப்பு நடக்காமப் போயிருக்கும்”. இதைச் சொல்லிவிட்டு அவள் மெதுவாகச் சிரித்தாற் போலத்தான் தெரிந்தது அவனுக்கு. மீராவினுடையதைப் போன்ற அழுத்தமான அதே இகழ்ச்சிரிப்பு. அவனுக்குச் சுருக்கென்றிருந்தது.

மறுபடியும் – மவுனம் –இடைவெளி – நத்தை.

ஒவ்வொரு முறையும் உறைந்து போன மவுனத்தை அவளே உடைத்தாள். “சரி நான்தான் கோவிச்சுக்கிட்டுப் போயிட்டேன். என்னை வந்து பார்க்கணும்னு தோணலியா உனக்கு? உடனே வர வேண்டாம். ஒரு வாரம். ஒரு மாசம். ஒரு வருசம். ஏன் இந்தப் பதிமூணு வருசத்துல ஒரு தடவக்கூட உனக்கு அப்படித் தோணவே இல்லியா?”

“…..”

“நித்தில் நான் உங்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்.”

“இல்ல.. முதல்ல அந்தச் சண்டைய நான் ஒரு பெரிய விசயமாவே எடுத்துக்கல.. நீயே எப்படியும் திரும்பி வந்துடுவன்னு நினைச்சேன்.”

“பெரிய விசயமில்லன்னா நீ இறங்கி வந்திருக்கலாமே? மாட்டே.. எனக்குத் தெரியும். இவ வேற எங்க போயிடப் போறான்னு நினைச்சுட்ட இல்ல?”

“அப்படியில்ல..”

“இல்ல.. அப்படித்தான்”

“சொல்லப்போனா உனக்காவது போகுறதுக்கு உங்க வீடு இருந்தது. நம்ம கல்யாணத்துல நடந்த அத்தனைப் பிரச்சனைகளையும் மீறி உன்னை ஏத்துக்கிட்ட உங்க அப்பா அம்மா இருந்தாங்க இல்லியா?”

“நீ வந்து பார்த்தியா? நித்திலோட இருந்தா என் லைஃப் நல்லாருக்கும்ன்னு நம்புறேன்ப்பா.. இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுருக்குன்னு கல்யாணத்துக்குச் சம்மதம் கேட்டு நின்ன அதே முகத்தோட உன் கூட கோவிச்சுக்கிட்டு அங்க போயி நிப்பேன்னு எதிர்பாத்தியா?” இதைச் சொல்லும் அவளின் குரலில் ஏறியிருந்த கடுமை அவனை என்னவோ செய்தது. இது மீராவே தான். அவளுடைய கண்கள் இப்படித் தான் எரிக்கும். அவள் கேள்விகளின் வெம்மை இப்படித் தான் சுடும். எதற்காக இத்தனை நாள் அஞ்சி ஓடினானோ, எந்தக் கண்களைப் பார்ப்பதற்குக் கூசி ஒதுங்கினானோ அதே கண்கள். எதிரேயிருப்பவரை ஊடுருவித் துளைக்கும் அதே கண்கள். அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவர்களுக்கிடையே இருந்த பதிமூன்று ஆண்டுகள் அந்த காபி டேபிளின் முன் முற்றிலுமாய் கரைந்து ஒழுகிக் கொண்டிருந்தது.

இன்னும் பதினைந்தே நிமிடங்கள். இப்போதைக்கு இதைக் கடந்து ஓடிவிட்டால் போதுமென்று இருந்தது அவனுக்கு.

அதன் பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. மொபைலில் அவளுடைய அலாரம் அடித்தது. அதை எடுத்து அணைத்தாள். அவளின் மேலுதட்டில் வியர்வை அரும்பியிருந்தது. காபிக்கான பணத்தை எடுத்து வைத்தாள். தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். இப்போது கிளம்பும் போதும் அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் சொல்லிக் கொள்ளவில்லை.

குளத்துக்குப் பக்கத்திலிருந்த அந்த தனித்த செந்நாரை சிலையின் மேல் பறந்து வந்த காகமொன்று எச்சமிட்டுப் போனது.