இருள் – கலைச்செல்வி

by கலைச்செல்வி
0 comment

கானகத்தின் இடைவிடாத ஒலிகள் தான் உறக்கத்தைக் கலைத்தன என்றால் அது பொய்யாகி விடும். ஓலைப்பாயில் ஒருக்களித்திருந்த உடலை புரட்டிக் கொண்டேன். இருளும் கூடவே வந்தது. காற்று காட்டுப்பன்றியின் உறுமலாய் ஓலமிடுவதை புறஅசைவுகளில் உணர முடிந்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன். சுரைபுருடையிலிருந்த நீரை எக்குதப்பாக வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டதில் புரையேறிக் கொண்டது. மணிராசன் இருளில் அசைந்து வருவது ஒலிகளால் தெரிந்தது. அவன் நீட்டிய கஞ்சாத்துாள்களால் நிரப்பப்பட்ட பீடியை உதட்டில் பொருத்தி இழுக்கத் தொடங்கிய போது வேறு ஏதேனும் வேண்டுமா என்றான். வேண்டாமென்பது போல மௌனமாக இருந்தேன். காத்திருந்தது போல அவன் நகர்ந்து செல்வது தெரிந்தது. ஓலைப்பாய்க்கு கீழ் பரப்பப்பட்டிருந்த தருவைப் புல்லின் தைல வாடை திடீரென்று அதிகரித்து விட்டது போல உணர்ந்து, அதைத் தொண்டையைச் செருமி சமப்படுத்திக் கொண்டேன். பதினோரு பேர் என்பதால் நெருக்கலாகத் தான் படுத்திருந்தோம். மணிராசன் கட்டையைப் போல கிடந்தான். உறங்கியிருக்க மாட்டான் என்று நினைத்த போதே சிறு சன்னமான உறக்கவொலி அவனுள்ளிருந்து எழுந்தது. எங்களைப் பொறுத்தவரை உறக்கமும் விழிப்பும் உடனுக்குடன் சாத்தியப்படும். சமீபமாக அது என்னிடமிருந்து நழுவிக் கொண்டிருந்தாலும், இன்று முழுவதுமாக தொலைந்திருந்தது.

“பதியாளுங்களுக்கு சமாதானமா போறதுல விருப்பமிருக்குங்க எசமான்…” மணிராசன் சமீபத்தில் இந்த நல்ல செய்தியை தெரிவித்திருந்தான்.

”பதிக்காரனுங்ககிட்ட கெடுபுடி காட்ட வேணாம்…“ இதற்கு அச்சாரமான முதல் உத்தரவை பிறப்பித்த போது நாங்கள் பளபளத்த காடுகளுக்கிடையிடையே முட்டுமுட்டாக தெரிந்த பதிகளின் கூரைகளைப் பார்த்தபடி பாறைகளில் அமர்ந்திருந்தோம். புதர்களிருந்த உக்கிலுப்பறவைகள் தம் சிவந்த மணிக்கண்களால் என்னை நோக்கின. சிறிதும் பெரிதுமான பதிகள் நிறைந்த பகுதி என்றாலும் எங்களுக்கெதிரே அவர்கள் அதிகம் தென்படுவதில்லை. அவர்களின் வயல்களில் விளைந்திருந்த மக்காச்சோளப் பயிரின் ஓலைகள் பசும்வாள்களாக காற்றை வெட்டிக் கொண்டிருந்தன. வானம் கருக்கத் தொடங்கும் அறிகுறிகளுடன் தலைக்கு மேல் பரவிக் கிடந்தது. அயினி மரத்தின் தாழ்ந்த கிளைகளில் காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. செந்தலைக் கிளிக்கூட்டம் சிறகுகளை விரித்து சீராகப் பறந்தன.

”அதற்கென்ன அவசியம்..?“ என்றான் மருதய்யன். மலைச்சரிவுகளில் கனத்துத் தொங்கும் தேனடைகளை எடுக்கவோ விற்கவோ கூட என் அனுமதிக்காக காத்திருக்கும் பதிவாசிகளுடன் நட்பு பாராட்டுவதற்கு அவசியம் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை.

“நட்பும் ஒரு வழிமுறை தானே..” அவர்களை உற்று நோக்கினேன். மணிராசன் புருவத்தை உயர்த்தி, பிறகு மீண்டும் அதனிடத்தில் வைத்தான். அவன் கண்கள் கூரியவை.

”ஆனால் அவர்கள் நம் மீது கொள்ளும் பயம் தானே நமது முதலீடு..?“

”அவை எல்லா காலங்களுக்கும் பொதுவானவையல்ல..” என் உத்தரவுகள் விவாதத்துக்குள்ளாகும் கோபத்தோடு பதிலளித்தேன்.

தீர்மானமாக ஒலித்த என் குரலில் பலவீனம் இருந்ததை அவர்கள் கவனித்திருப்பார்களோ என்ற படபடப்பு அடங்க நெடுநேரமாயிற்று. உடல் பலமிழக்கும் போது மனதில் பலவீனம் வந்து விடுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு எழுவது கூட அதனால் தானோ…? படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தேன். பூச்சிகளின் ஒலிகள் ஒன்றுகூடி பெருத்த ரீங்காரமாய் ஒலித்தன. அருவி வழிவது பெருமரக்கிளை முறிவது போன்றிருந்தது. பச்சையிலைகளின் மணம் காற்றில் பரவிக் கிடந்தது. பாம்பு ஏறாமலிருக்க குடிசையின் கங்குகளில் கட்டியிருந்த மண்ணெண்ணெய் துணியிலிருந்து மணம் கசிந்து கொண்டிருந்தது. மெல்லிய நிலவொளியில் வானம் ஆரஞ்சுநிற மேகங்களுடன் விரிந்திருக்க, மலைக்காற்று மரங்களுக்கிடையே புகுந்து கொண்டதில் நட்சத்திரங்கள் கூட நடுங்கிக் கொண்டிருந்தன. போர்த்தியிருந்த போர்வை முதுகுப்புறத்தில் சிறகு போல விரிய, நான் குளிரில் கைகளை ஒடுக்கி உடலோடு வைத்துக் கொண்டேன். சமீபமாகத் தான் உடலில் இத்தனை நடுக்கம். உச்சியில் ஒளிர்ந்த சிவந்த கோள்களை துணைக்கழைத்துக் கொண்டேன்.

நான் இந்த உத்தரவைப் பிறப்பித்த போது உச்சீரன் கிழங்கு பிடுங்கச் சென்றிருந்தான். மாத்தய்யனும் உச்சீரனும் புட்டம்மையை முன்பின்னாக கட்டியவர்கள். மணிராசனின் உறவு ஆட்கள். ஆம்.. என்னைத் தவிர எல்லாருமே உறவுக்காரர்கள் தான். இரு கைகள் நிறைய தொங்கவிட்டிருந்த கிழங்குச் செடிகளிலிருந்து கிழங்குகளைச் சீவனும் காத்தானும் உச்சீரனோடு சேர்ந்து வேகமாக பிரித்தெடுத்து, வெற்றுச் செடிகளை துார எறிந்தனர். ஊட்டமான செடிகள் வாடுவதற்கு நேரம் பிடிக்கும். சிலவை மண் பொதபொதப்பில் அப்படியே வேர் பிடித்து வளர்ந்தும் விடலாம். புதரில் தெரிந்த அசைவுக்கு நான் விறைத்துக் கொண்ட போது மர அறுப்புக்கான ஆட்கள் என்றான் மணிராசன். அவனுக்கு எல்லாமே அத்துப்படி. வயதாக ஆக கூடி விடும் அனுபவம் வேறு.

வனத்தின் மீது இருள் நிழல் போல கவிந்திருந்தது. இருள் எனக்குப் புதிதல்ல என்றாலும் அதன் மீது பசிய போர்வை போர்த்தி அடக்க வேண்டும் போலிருந்தது. உணவகத்தில் வேலை செய்த நாட்களில், வீடு வந்து சேரவே இரவு பன்னிரெண்டாகி விடும். வீடு என்றால் முதலாளியின் வீடு. மீந்துபோன சரக்கு அட்டைப் பெட்டிகளையும் மளிகை சாக்குகளையும் சைக்கிளி்ல் கட்டிக்கொண்டு நானும் முதலாளியும் வீடு வந்து சேரும் போது ஊர் கண் திறக்க முடியாத உறக்கத்தோடு தட்டுத்தடுமாறி எழுந்து முதல் மூத்திரம் அடித்திருக்கும். இருள் தான் எனினும் வெளிச்சமான இருள். முதலாளி வியாபாரம் குறித்து ஏதேதோ பேசியபடியே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவார். நான் பாதி உறக்கத்திலேயே நடப்பேன். என்னைத் தவிர்த்து வேலையாள் யாருமி்ல்லை. அதிக ஆட்களும் பிரச்சனை தான். பிறகு ஒவ்வோர் ஆளுக்கும் தனித்தனி வயிறு வேறு வாய்த்து விடும். அவற்றை நிரப்பும் போராட்டத்தில் எல்லா தந்தைகளுக்கும் வெற்றி கிடைப்பதில்லை. தோல்வியடைந்த தகப்பனின் மகனாக இருப்பதை விட ஊரை விட்டு ஓடிவந்து மளிகைக் கடையில் வயிறு வளர்க்கும் பத்து வயது சிறுவனாக இருப்பதையே நான் விரும்பினேன்.

கால் எதிலோ தட்டிக்கொள்ள அதிர்ந்து, பின் தெளிந்தேன். காட்டு சேம்பின் இலைகள் இருளில் யானையின் காதுகளைப் போல அசைந்தன. காற்று பெரியதாக வீசத் தொடங்க, எங்கோ இறந்துகிடந்த காட்டுப்பன்றியின் உடல்வாடை சகிக்கவியலாமல் வீசியது. அன்று கொம்பன் இறந்து கிடந்த போது மொத்த வனமுமே இப்படித்தான் நாறிக் கிடந்தது. காடே செழிக்குமளவுக்கு மாமிசம். பொக்கையாகக் கிடந்த உடலில் வால் மட்டுமே சேதமில்லை. நாங்கள் தான் கொம்பனை வீழ்த்தியிருந்தோம். எனக்கும் கொம்பனுக்கும் ஆதிக்கணக்கு ஒன்றிருந்தது. வழுக்குப்பாறையின் உச்சியிலேயே மூச்சையடக்கிக் கொண்டு அமர்ந்திருந்த இரவு அந்தக் கணக்கை அறியும். அது முன்னிரவு கவியும் நேரம். மர லோடு ஏற்றி விட்டதற்கான பணம் இடுப்பில் கட்டிக் கிடந்த உற்சாகத்தில் மேலேறிக் கொண்டிருந்தோம். திடீரென்று இருள் முளைத்து நின்றதும் அதற்கு காதுகள் முளைத்துக் கிடந்ததும் நாங்கள் எதிர்பாராதவை.

மறுநாள் விடியலில் பாறையிலிருந்து இறங்கும் போது மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். ”நமக்கு ஆயுசெல்லாம் கெட்டி எசமானே..” என்றான் மணிராசன்.

”வடக்கமா எறங்கிருக்குமோ..?” என்றேன். வட திசையில் பெரும்மொந்தையாய் கிடந்தது கொம்பனின் சாணம்.

“வுட்டுருந்தா நேத்து ராத்திரி நம்ம மேலதான் எறங்கியிருக்கும்..” என்று சிரித்தான் மணிராசன். ”மூங்கீ காடெல்லாம் எடுத்துட்ட கோவம் அதுங்களுக்கு.. ஒருவேள அந்தக் கணக்கை தீத்துக்கலாம்னு வந்துருக்குமோ..” என்றனர். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

இருள் கண்களுக்கு பழகிப் போக, கானகம் விரியத் தொடங்கியது. சரிவுகளிலிருந்த பதிகளின் குடிசைகள் கருநிழல்களாக தென்பட்டன. யானைகளையும் பெருங்காட்டையும் இச்சிறுகுடிசைத் தடுப்புக்குள் தடுத்து விட முடியாது என்பதை இவர்கள் உணராமலில்லை. ஆனால் நம்பிக்கையும் பரஸ்பர புரிதலும் துணிவை உருவாக்கி விடுகிறது. அத்துணிவில் தான் அவர்கள் அயர்ந்த உறக்கம் கொள்கின்றனர். அவர்களின் அன்பைப் பெறுவதற்கு முன் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும். தேனடைகளை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்று உத்தரவை அதற்காகவே பிறப்பித்திருந்தேன்.

பதிகள் இறுக்கம் தணிந்து இலகுவாக மாறத் தொடங்கியதாக சேதி சொன்னார்கள்.

காய்ந்த சருகுகளின் மீது விழுந்த மூத்திரத்தின் ஒலி பாம்பின் அசைவை நினைவூட்டியது. கிணறு வெட்டப்போகும் தருணங்களில் கருங்கல் இடுக்குகளில் அவை அசைவின்றி பதுங்கிக் கிடக்கும். மளிகைக் கடைக்கும் கிணறு வெட்டும் தொழிலுக்கும் இருப்பது போலின்றி, கருப்புக்கல் குவாரிக்கும் கிணறு வெட்டும் தொழிலுக்கும் சம்பந்தமிருந்தது. இரண்டுக்கும் ஒரே முதலாளி தான். குவாரி, வனமாக இருந்த போது பேதனின் உரிமையிலிருந்தது. மணிராசன் அந்தப் பதியைச் சேர்ந்தவன் தான். பிரியாணியும் சீமைச் சாராய பாட்டில்களும் மணிராசனை எட்டப்பனாக்கி விட, பேதன் அதே இடத்தில் குடும்பத்தோடு கல்லுடைக்கும் தொழிலாளியாக மாறிப் போனான். நான் கொத்துக்காரனாகிப் போனேன்.

பயறும் அரிசியுமாக காய்ச்சிய கஞ்சி நீராக வெளியேறியதில், வயிறு பசியில் இறைந்தது. அன்று உச்சீரனுக்கும் அதிகமாகப் பசித்திருக்க வேண்டும். சுள்ளிகளைக் கொண்டு பரபரப்பாக தீயுண்டாக்கி, அதில் கிழங்குகளைப் பொசுக்கத் தொடங்கினான். கிழங்கின் மணம் காற்றில் பரவத் தொடங்கியது. உடனடியாகத் தீயையும் புகையையும் ஏன் கிழங்கின் மணத்தையும் கூட அடக்கியாக வேண்டும். தாமதம் எங்களின் இருப்பிடத்தைக் காவலர்களுக்கு காட்டிக் கொடுத்து விடும். தொலைவிலிருந்த மலைக்கப்பால் சூரியன் பளிச்சென்று துலங்கியது. மலைகளை சதுரமாகவோ செவ்வகமாகவோ வடிவமைத்துக் கொள்ளும் கடவுளர்களான எங்களின் முன் முக்கோண மலைகள் அச்சத்தோடு நின்று கொண்டிருந்தன. மணிராசன் எதையோ சொல்ல எல்லோரும் வெடித்துச் சிரித்தனர். எனக்கு நீர்வேட்கை ஏற்பட்டது. அருகிலிருந்த பள்ளத்தில் பத்தடி ஆழத்தில் நீரிருந்தது. மழை குறைவு தான். மழை பொழியாத காலங்களில் வனமே கருகி சாம்பல் போலிருந்தாலும் உள்ளடுக்குகள் சூரியனின்றி குளிர்ந்து கிடக்கும். பெருங்குடுவைகளைப் போல கூடுகளை அமைத்துக் கொண்டு வாழும் எறும்புகளுக்காக எறும்புத் தின்னிகளின் நடமாட்டம் அதிகரித்த நாளொன்றில் தான் மூங்கில் எடுத்துப் போவதற்கான ரகசிய சாலைகளை ஏற்பாடு செய்திருந்தோம். சாலைகள் என் ஊருக்கான வழியை நினைவுப்படுத்தின. பிரதான போக்குவரத்து சாலையிலிருந்து பிரிந்து வரும் பாதையில் ஊர் இருந்ததாக ஞாபகம். ஊரின் கிழக்கெல்லையிலிருக்கும் ஆலமரத்தில் முனி தங்கியிருப்பதாகவும் ஆண் பிள்ளைகளை அது பிடித்துக் கொண்டு விடும் என்ற நம்பிக்கையாலும் வீடு எங்களை அங்கு அனுமதிக்கவில்லை.

வனமே வீடான போது அது புதிதாக இருந்ததை விட புதிராக இருந்ததில், அதை அவிழ்ப்பதற்கான மெனக்கெடல்களை வலிந்து செய்யத் தொடங்கினேன். யானைகளுக்காக பறித்த வட்டமான குழியில் முகப்பை உருவாக்கி, நுழைவதற்கான வாயிற்படிகளை அமைத்து, அதை அடைவதற்கான சுற்றுக்குழியை வெட்டினேன். சிறு சன்னல்களை அமைத்தேன். இரண்டுக்குமான இணைப்பாக வட்ட வடிவிலான சுரங்கப் பாதையை உருவாக்கி, அருகிலிருந்த ஓடை நீரை மூங்கில் குழாயின் வழியாக குழிக்குள் விழச் செய்து குளித்து மகிழ்ந்திருக்கிறேன். உடையாத மூங்கில்களால் பரண்வீடு கட்டி குடி புகுந்தேன். காட்டோடையின் உக்கிரமான நீர்ப்பெருக்கில் மரப்பாலம் அமைத்தும் அருவிகளின் ஓட்டத்தோடு கலந்துமாக எங்களை மறைத்துக் கொண்டே ஓடுவதிலும் சிலிர்ப்பிருந்தது. காட்டிக் கொடுக்கும் பதிகளுக்கு தீயிடுவதும் எங்கள் போக்குப்பாதையை சுலபமாக்கும். மணிராசனின் குடும்பம் அந்தத் தீயில் தான் வெந்து போயிருந்தது. மணிராசன் அடிக்கடி தன்னுடைய பதிக்கு போய் வருவதாக உச்சீரன் அன்று கூறினான். உச்சீரன் எனக்கு அணுக்கமானவன். ஆனால் யாரையும் நம்புவதிற்கில்லை.

”எல.. ஒன் தெம்புக்கு மளியக்கடயில பொட்டணம் மடிச்சுட்டு கெடந்த பாரு.. அதத்தான்டா என்னால தாங்க முடியில..” என்பார் முதலாளி. அப்போதெல்லாம் திடகாந்திரமாக இருந்தார்.

”பொட்ணமெல்லாம் மடிக்கில.. அரிசி மூட்டை, தேங்கா மூட்டையெல்லாம் யாரு துாக்குனது..?” கொஞ்சம் ரோஷமாக சொல்லுவேன். குவாரி பொறுப்பு முழுவதையும் நான் எடுத்துக் கொண்ட போது, தொழில் வசப்பட்டிருந்தது. பத்து லோடு அரளையை ஐந்து லோடு என்று சொன்னாலும், முதலாளி ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். உடம்பு படுத்தியபாட்டில் அவரால் என்னை எதிர்த்துக் கொள்ள முடியாது.

குளிர் வருத்தத் தொடங்கியது. குடிசைக்குள் செல்ல முனைந்தேன். நடந்த போது ஆயுதங்கள் புதைந்த இடம் செயற்கையாய் சப்தமிட்டது. ஆயுதங்களின் ஒலியையும் தானியங்களின் ஒலியையும் எங்களால் மட்டுமல்ல, காவலர்களாலும் பிரித்தறிய முடியும். மூங்கில் சந்தனமாகவும் தந்தமாகவும் விலங்குகளின் தோலாகவும் வியாபாரம் பெருகிய போது பழத்தைக் குடையும் வண்டு போல வனத்தைக் குடைந்து கொண்டே அலைந்தோம். கூடவே துப்பாக்கிகளையும் துாக்கிக் கொண்டோம். துாக்கவியலாத ஆயுதங்களைப் பூமிக்கடியில் புதைத்துக் கொண்டோம்.

உச்சீரன் சுடச்சுட நீட்டிய கிழங்கில் ஒட்டியிருந்த மண்ணை உதிர்க்கும் போதே தோலும் பிரிந்து கொண்டு வந்தது. இலையில் தேனை வழித்துக் கொண்டு அதில் கிழங்கைப் பிரட்டி உண்டோம். சூ..மந்திரகாளி போட்டது போல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த இடம் தடயங்களேயின்றி மாறியிருந்தது. கடந்தவைகளின் தடயமேதுமின்றி பதிவாசிகளால் மாறி விட முடிவது அத்தனை எளிதல்ல என்பதை அறிவேன். ஆனால் மாற வேண்டும். இளக்கமும் இணக்கமும் அவர்களை அன்பும் பாதுகாப்பும் கொண்டவர்களாக மாற்றி விடும். என் கூட்டத்தாரிடமிருந்து பாதுகாப்பு. சுனையிலிறங்கி நீர் அருந்தி விட்டு வந்தேன். நான் கூறியதைக் குறித்து அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கக் கூடும். விவாதிக்கட்டும். பதிகளில் இணக்கமான சூழல் உருவான பிறகே தலைவன் இறங்கி வர வேண்டும். அது தான் நம்பிக்கையை உருவாக்கும். நம்பிக்கை அன்பாகவும் பின்பு அடைக்கலமாகவும் மாறி விடும்.

சோளக்காட்டையொட்டி நடக்கத் தொடங்கினோம். இந்தமுறை விளைச்சல் குறைவு தான். எங்களுக்குச் செலுத்த வேண்டிய தானியங்களின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு தாராளம் காட்ட வேண்டும். அளவுக்கு மிஞ்சி தானியங்கள் சேர்ந்து விடும் போது அதை பூமிக்குள் வைத்துப் பாதுகாக்கும் உத்தியை எல்லோருமே அறிந்திருந்தனர். தானியங்களை யானைகள் மோப்பம் பிடித்து விடக் கூடாது. மணிராசன் மேலுக்கு மூன்றடிக்கு மட்டுமே பள்ளமிடுவான். உள்ளுக்குள் செல்லச் செல்ல அது பானை போல விரிந்து பதினைந்து அடி வரை ஆழமாகும். மளமளவென்று உட்சுவர்களில் செம்மண் பூசி இலைதழைகளை வெட்டிப்போட்டு தீயுண்டாக்கி அதில் தானியங்களை கொட்டி வைக்கும் போது முளைப்பு ஏற்படாது. சில சமயங்களில் பிசகியும் போவதுண்டு. தீயை மோப்பம் பிடித்து எங்களை அணுகிய காவலர்கள் இருவரை அப்போது சுட வேண்டியதாயிற்று. மணிராசன் நடையில் விரைவு கூட்டியிருந்தான். அவனுக்கென்று தனி எண்ணங்களும் ஆசைகளும் உருவாவதையும் கடம்பனும் சீரனும் அவன் தடமொற்றுவதையும் நான் அறிந்திருந்தாலும், அதை காட்டிக் கொண்டதில்லை.

இருள் தன் ராட்ச சக்கரங்களைப் பெருக்கிக் கொண்டேயிருந்தது. மரங்களும் அருவிகளும் விலங்குகளும் பதிகளும் அதன் கைகளுக்குள் அகப்பட்டுக் கொண்டே வந்தன. குடிசையை நோக்கி அதன் கைகள் எப்போது வேண்டுமானாலும் நீளத் தொடங்கலாம். இப்போது வீசிய காற்றில் கொம்பனின் வீச்சமும் கலந்திருந்தது. அன்று அது மணிராசன் அடித்திருந்த குண்டுகளோடு ஆங்காரமாக பிளிறிக் கொண்டே ஓடியது. அந்த ஒலியைக் கொண்டே கொம்பன் அதிக நேரம் தாக்கு பிடிக்காது என்றான் மணிராசன். உண்மை தான். நாலைந்து சரிவுகளைக் கடந்து பெருமலையைப் போல சரிந்து கிடந்தது. கொம்பனின் கொம்புகள் விலையுயர்ந்தவை. தந்தத்தாலான யானைப் பொம்மையை முதலாளி வீட்டு வரவேற்பறையில் கண்டிருக்கிறேன். இது அசல். அசலுக்கான மதிப்பு மிக அதிகம். உற்சாகம் பீறிட வெற்றிக் கூச்சலிட்டோம். பீனாச்சியை ஒலிக்கச் செய்து தப்பையில் தாளமிட்டோம். கஞ்சாப் புகை பனியோடு சேர்ந்து படலமாக மேலெழும்ப உற்சாகத்தோடு விடிய விடிய ஆடிக் கொண்டேயிருந்தோம்.

மானின் இறைச்சி வயிற்றுக்குள் ஏதோவொன்றாக இறைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பான காலை நேரத்தில் மணிராசன் மிகுந்த உற்சாகத்திலிருந்தான். ”நீங்க எதிர்ப்பார்த்த காலம் கனிஞ்சு வருதுங்க எசமானே…” என்றான். அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரபரத்தது நினைவுக்கு வந்தது. உள்ளே யாரோ நீர் அருந்தும் ஒலி கேட்டது. காதுகளை துல்லியமாக்கிக் கொண்டேன். சுரைபுருடையை மணிராசன் தான் அலுங்காமல் தரையில் வைப்பான். ஆயுதங்களின் ஒலியெழும்பாது மெல்ல அடியெடுத்து வைத்தேன். ஆயுதங்களுக்கு ஆள் பேதமில்லை. அவற்றுக்கு மத்தியில் உறக்கம் கொள்வது, அத்தனை பாதுகாப்புமில்லை. ஏதோ சரசரக்க உடல் விரைத்துக் கொண்டது. முயலாக இருக்க வேண்டும். அரவம் கண்டு புதருக்குள் பாய்ந்திருக்கலாம்.

மெல்ல படுக்கையில் சாய்ந்து கொண்டேன். உறக்கமில்லை என்றாலும் உடலில் அசதி இருந்தது. இதே மாதிரி கூடாரங்களுக்குள் நிறைய பெண்களுடன் படுத்திருக்கிறேன். அவர்களின் மிரட்சி அப்பிய முகங்களின் மீது எப்போதுமே எனக்கு லயிப்பிருந்ததில்லை. அது மானை அடித்து குழிக்குள் வீழ்த்தும் போது எழும் பார்வை. கொழுத்த மானொன்றை சீரன் அடித்திருந்தான். அனலிலேயே போட்டு வைத்தால் ஒருநாள் முழுக்க எங்களால் வயிராற உண்ண முடியுமளவுக்கு ஊட்டமான மான். நொறுக்கிய மிளகாயும் உப்பும் பூசிக் கொண்டு கறி வெந்து கொண்டிருந்தது.

”கறிக்கெல்லாம் பஞ்சமில்லையே..?” என்றேன். பதியாட்கள் வயிறு முட்ட உண்ண வேண்டும்.

”ஆறேழு அலையுதுங்க.. எல்லாந்தாராளந்தான்..” என்றான் மணிராசன். இப்போதெல்லாம் எஜமான் என்ற சொல்லை அடிக்கடி மறந்து விடுகிறான். அவரைக் காய்களையும் கத்தரிக்காயையும் அரிந்து கொட்டி மூடி விறகை அடுப்புக்குள் தள்ளினான். தானே நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக அவன் சொன்னபோது தான், அருகிலிருக்கும் பதிகளுக்கு நானும் செல்ல வேண்டுமாய் முடிவெடுத்துக் கொண்டேன். எதிர்ப்பார்ப்புகள் துடிப்புகளாக இதயத்தை நிறைக்க, நேற்று அதிகாலையிலேயே கிளம்பியிருந்தேன்.

காது வரை அடித்த குளிர் திடீரென்று வெக்கையாக மாறி உடலை நனைக்க, எழுந்து அமர்ந்து கொண்டேன். என் குரலுக்கு, நேற்று அவர்களும் அப்படியாகத் தான் எழுந்து வந்தனர். உடைகளில்லாத உடலைச் சற்றுமுன் அனுபவித்துக் கொண்டிருந்த இன்பம் அப்படியே துன்பமாக மாறியதை மறைக்க முயன்று பதைத்து, கைகள் இரண்டையும் தொழுது நின்றனர்.

இருள் குவியலாகப் படுத்துக்கிடந்த மணிராசனைக் கொல்ல வேண்டுமாய் தோன்றியது.

ஆனால் அதற்கான வலு என்னிடம் இருப்பதாக நான் உணரவில்லை.